ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera) உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.
இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.
உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில் பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.
எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும் கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில் கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும் களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.
கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன் பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.
புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது. சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.
நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான “papyrus of Eber” ல் சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig) பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.
ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.
இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில் 2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட 50 மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.
1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள். இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’ என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.
பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு பயன்களை இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது
பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும் நிறைந்துள்ளது
உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது. 3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள் செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.
சோற்றுக்கற்றாழையின் பயன்கள்
சருமப்பாதுகாப்பு
புற்றுநோயை தடுக்கும்
மலமிளக்கி
கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்
உடலை குளிர்விக்கும்
வயிற்று உபாதைகளை குணமாக்கும்
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்
புண்களை ஆற்றும்
நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்
நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்
இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.
நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்
மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார் 100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.
இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.
வாசனை மற்றும் மசாலாபொருட்களின் தேசமான,உலகின் மசாலாப்பொருட்களின் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் இந்தியா ( Land of Spices / Worlds Spice Bowl) அனைத்து மசாலாப்பொருட்களின் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனமான ISO பட்டியலிட்டிருக்கும் 109 மசாலாப்பொருட்களில் 75 இந்தியாவில் விளைகின்றது. இந்தியா இவற்றின் உற்பத்தி, உபயோகம் மற்றும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருந்து உலக வாசனைப்பொருட்கள் வர்த்தகத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கா, சீனா, வியட்நாம், வளைகுடா நாடுகள், ஜெர்மனி, மலேஷியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்திய மசாலாபொருட்களை மிக அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. இந்திய மசலாப்பொருட்களின் நறுமணம், தரம் மற்றும் சுவை உலகநாடுகளின் விருப்பத்துக்குகந்ததாக இருந்துவருகின்றது.
வறுத்தும்,அரைத்தும் பொடித்தும் தாளித்தும் பலவிதமானஇயற்கைச் சேர்மானங்கள் சேர்க்கப்பட்டு, உலகெங்கிலும் மிகப்பிரபலமாக உள்ள, அறிவியல் அடிப்படையிலான இந்தியச்சமையலில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் மசாலாபொருட்களின் இடமும் பயனும் மிககுறிப்பிடத்தகக்து. பல மருத்துவ குணங்களும் சத்துக்களும் நிறைந்த இடுபொருட்கள் இந்தியச்சமையலில் நிரந்தர இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் தாளிதம் செய்யும் மசாலாபொருட்களில் மிக முக்கியமானது கடுகு. கடுகு பல வகைப்படும். முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில் கடுகு உபயோகப்படுத்தப்படுகின்றது
கடுகுச்செடிகளின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. ஐரோப்பாவை தாயகமாகக்கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. கடுகில் சுமார் 40க்கும் அதிகமான வகைகள் உள்ளன.
பிரேசிகேசியே குடும்பத்தை சேர்ந்த கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு சிறிய செங்கடுகு பெரிய செங்கடுகு என பலவகைகள் உண்டு. 90 லிருந்து 160 நாட்களுக்குள் முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும் கடுகுச்செடி நீளமான பசும் இலைகளுடன் மென்மையான இளம் பச்சை தண்டுகளுடனும் இருக்கும். 90 செ மி லிருந்து 4 அடி உயரம் வரை இவை வளரும். கூட்டல் குறியைப்போன்ற வடிவில் அமைந்திருக்கும் நான்கு மஞ்சள் இதழ்களுடன் கூடிய அழகிய சிறுமலர்கள் இருக்கும்.
சிலிகுவா (siliqua) என்றழைக்கப்படும் இச்செடியின் காய்களுக்குள்ளே சிறிய கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். கடுகு விதைகள் 1-2 மி மீ அளவில் இருக்கும்
பலநாடுகளில் கடுகு பயிரிடப்படுகின்றது. களைச்செடியாகவும் கடுகுச்செடிகள் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் செழித்து வளரும். வெள்ளைக்கடுகு white mustard (Sinapis alba) வட அமெக்காவின் காடுகளில் இயற்கையாக விளைந்து அங்கிருந்து உலகின் பிற பாகங்களுக்கு சாகுபடி மூலம் பரவியது.
தங்க மஞ்சள் கடுகு oriental mustard (Brassica juncea), இமாலய மலைபிரதேசங்களில் வளர்ந்து பின்னர் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் டென்மார்க்கிலும் சாகுபடி செய்யப்பட்டு பரவலாகியது
கருப்பு கடுகு black mustard (Brassica nigra) அர்ஜெண்டினாவை சேர்ந்தது அங்கிருந்து சிலி, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் சாகுபடி செய்யபட்டு பரவலகியது
நசுக்கப்பட்ட கடுகு சேர்த்த வைனை குறிப்பிடும் லத்தீன் சொற்களான ‘mustum ardens’(burning wines) என்பதிலிருந்தே mustard எனப்படும் ஆங்கிலப்பிரயோகம் வந்தது.
காரசாரமான கடுகு உணவுகளை சாப்பிடுகையில் கண்களில் நீர் வருவதால், பண்டைய கிரேக்கர்கள் கடுகை ‘ கண்ணுக்கு தொந்தரவு தருகின்ற ஒன்று’ ( Si ‘na-pi’ ) என்றழைத்தனர்.
சிந்துச்சமவெளியின் சன்ஹூதரோ பகுதி அகழ்வாய்வில் கடுகின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் கிடத்துள்ளன. உலகெங்கும் கடுகை பிரபலமாக்கிய பெருமை ரோமானியர்களையே சேரும். கடுகை சாகுபடி செய்து ஏற்றுமதியும் செய்துகொண்டிருந்த ரோமனியர்களிடமிருந்து 10 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மடாலயத்தின் துறவிகள், சாகுபடி நுட்பங்களை கற்றுக்கொண்டு அங்கும் சாகுபடியை துவங்கி இருக்கின்றனர்
பாரீஸ் அரசகுடும்பத்தினரின் உணவுகளில் கடுகின் பயன்பாட்டை குறித்த 1292 ன் எழுத்துப்பதிவுகள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் 13 நூற்றாண்டின் மிக முக்கிய கடுகு சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான இடமாக இருந்திருக்கிறது. அங்கு 1336ல் நடைபெற்ற ஒரு விருந்தில் ஒரே நாளில் 320 லிட்டர் கடுகு க்ரீமை உண்டதற்கான வரலாற்றுக்குறிப்பும் உள்ளது
1904 ல் அமெரிக்காவில் நடந்த ஒரு பன்னாட்டு கண்காட்சியில் தான் முதல்முதலாக பிரபல உணவு வகையான ஹாட் டாக்கில் (hot dog) கடுகு சாஸின் சேர்மானம் அறிமுகம் செய்யபட்டு பின்னர் உலகெங்கிலும் பிரபலமாகி இருக்கின்றது.( St. Louis world fair Missouri 1904)
மத வேறுபாடிகளின்றி பல மதநூல்களில் கடுகு குறிப்பிடப்பட்டிருக்கின்றது
புனித வேதகாமத்தில், இயேசு தனது போதனைகளின் போது கூறியதாக மூன்று நற்செய்திகளில் கடுகு குறிப்பிடப்பட்டுள்ளது.
//இஸ்ரேலில் விதைக்கப்பட்ட விதைகளில் மிகவும் சிறியது கடுகே//
// பரலோக அரசாங்கம் என்பது கடுகு விதையைப்போன்றது//
// உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட உங்களால் கூடாத காரியம் ஏதுமில்லை/
”தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்கிறது இஸ்லாம்
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என்கிறது குர் ஆன்.
சங்கத்தமிழர்கள் கடுகினை ஐயவி என்றனர். மணிமேகலை பேய்கள் பயப்படும் பொருட்களில் ஒன்றாக கடுகை குறிப்பிடுகின்றது. போரில் காயமுற்ற வீரனை இரவில் குருதி குடிக்கும் பேய்களிடமிருந்து காப்பாற்ற கடுகுப்புகையிட்டதை சொல்கின்றது புறநானூறு
பிறந்த குழந்தையை பேயணுகாதிருக்க அதன் தலையில் கடுகைஅரைத்து பூசும் வழக்கமிருந்ததை நற்றிணை குறிப்பிடுகிறது.கடுகும் நெய்யும் சேர்த்த குழைத்த சோறு, கடுகன்னம் என்று பண்டைய தமிழர்களால் உண்ணப்பட்டிருக்கிறது.
பழந்தமிழர் இறப்பு சார் நிகழ்வுகளில் இறுதி ஊர்வலத்தின் போது கடுகு சிதறுதல் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பண்டைய இந்தியாவில் கடுகை வீட்டிற்கு வெளியே இறைத்துவிடுவது துஷ்டசக்திகள் வீட்டினுள் நுழையாமலிருக்க உதவும் என்னும் நம்பிக்கை நிலவியது.
கடைக்கண்ணை பாவையர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.‘ – என்பது காதலின் வலிமையைப் பற்றி பாரதிதாசன் பாடியது
’’கடுகுப்பூக்களை பார்த்தல்’’ என்பது ஒர் அதிர்ச்சிக்கு பின்னர் திகைத்து நிற்பதை குறிக்கிறது நேபாளத்தில்
பிரான்ஸில் ’’கடுகு மூக்கில் ஏறிவிட்டது’’ என்பது கோபப்படுதலுக்கு இணை வைத்துச் சொல்லப்படும் ஒரு வாக்கியம்
தமிழிலும் உண்டு கோபமான பேச்சை சொல்லுகையில் ”பேச்சில் கடுகு பொரிந்தது” என்று சொல்லும் வழக்கம்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
போன்ற முதுமொழிகளும் தமிழகத்தில் பிரபலமானவையே!
கடுகை நறுமணமூட்டியாக பயன்படுத்துவதை குறித்து பெளத்த நூல்களும் சொல்கின்றன
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமின் மிகச்சிறந்த உணவு நிபுணரும் ஆடம்பர உயர்தர உணவு வகைகளை உருவாக்கும் கலையை அறிருந்தவருமான ஆபிக்யூஸ் (Marcus Gavius Apicius) என்பவரே இன்று நாம் உபயோகப்படுத்தும் கருங்கடுகின் பல உணவுச்சேர்மானங்களை அவரது சொந்தத்தயாரிப்பாக உருவாக்கினார். அவரது தயரிப்பான கடுகு, உப்பு, வினிகர், ஆல்மண்டுகள், பைன் கொட்டைகள் ஆகியவை சேர்ந்த ஒரு தயாரிப்பு இன்றும் ரோமில் மிகப்பிரபல உணவு வகையாக இருந்து வருகின்றது. ரோமானியர்களின் பிரபல சமையற்கலை நூல்கள் abicius என்னும் பெயரிலேயே உள்ளன.
19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குடும்பத்தொழிலாக கடுகு உணவுகளை தயாரித்த ஜெரோமியா கல்மேன் (Jeremiah Colman) என்பவர் பிரிட்டிஷ் பேரரசின் மீதே கடுகுப்பொடியைத் தூவி நிரப்பினார் என்கிறது வரலாறு அவரது நிறுவன தயாரிப்புக்களான கடுகுப்பொடி வகைகள் அக்காலகட்டத்தில் தண்ணீரிலும், பீரிலும் பாலிலும் கலக்கப்பட்டு, பரவலாக விரும்பி அருந்தப்பட்டன. J.& J. Colman என்னும் அந்நிறுவனம் அப்போதே 200 பணியாட்களை அமர்த்தியிருந்தது. இன்று வரையிலுமே இந்நிறுவனம் கடுகுத்தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றது
வெண்கடுகைவிட (Brassica alba) கருங்கடுகில் (Brassica nigra) தான் காரம் மிகுந்து காணப்படும். மிதமான நறுமணம் உள்ள மஞ்சள்/வெள்ளைக்கடுகு (Sinapis alba) வட அமெரிக்க உணவு வகைகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றது. அடர் காப்பிக்கொட்டை நிறத்திலிருக்கும் கடுகின் சுவை (brown mustard-Brassica juncea)aஉலகெங்கிலும் விரும்பப்படுகின்றது. தங்க மஞ்சள் நிற கடுகுதான் (Oriental mustard-Brassica juncea) கடுகு வகைகளில் முக முக்கியமானது. ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இந்த கடுகின் விழுது பெருமளவில் உபயோகத்தில் இருக்கிறது. இதன் பொடியும் சூப்களிலும் சாஸ்களிலும் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
கடுக்குக்கென்று தனியே சுவை இல்லை. கடுகின் மேல்தோல் அகற்றப்படும் போது மைரோஸினேஸ் எனப்படும் நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. . இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். கடுகு நீருடன் சேர்கையில் அலைல் ஐஸோ தையோனேட் என்னும் காரமான நெடியுடைய வேதிப்பொருள் வெளிப்பட்டு எரியும் நெடி வருகின்றது..
கடுகில் செலினியம், மெக்னீசியம் , உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம் போன்ற, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் இதில் உள்ளன
கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
கடுகுச்செடியின் எல்லாப்பாகங்களுமே பயனுள்ளவை. இந்திய கடுகுக்செடியின் (Brassica juncea) கீரையும் உணவாக பயன்படுகின்றது. முளைவிட்ட கடுகு ஆரோக்கிய உணவில் மிக முக்கியமானது. இதில் அதிக கலோரி ஆற்றலும் நார்ச்சத்தும் ஆண்டிஆக்சிடண்ட்களும், வைட்டமின் K,A,C, கால்சியம், இரும்புச்சத்து பொட்டாஷியம், மேங்கனீஸ் உள்ளிட்ட பல தாவர வேதிச்சேர்மங்களும் நிறைந்துள்ளன கடுகில் மூன்றில் ஒரு பங்கு எண்ணையும் நான்கில் ஒரு பங்கு புரதமும் உள்ளது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன
மிதமான காரமும், நெடியும், கசப்புமான கடுகின் இயல்பு பலவகையான உணவுகளுக்கு பொருத்தமானதாக இருப்பதால் உலகநாடுகளின் விருப்பத்துகுரிய சுவையாகிவிட்டிருக்கிறது
இந்திய சமையலில் கடுகை வறுத்தோ அலல்து சூடான எண்ணெயில் பொரித்தோ, மேல் தோலை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடித்தோ அல்லது அரைத்த விழுதாகவோ அல்லது முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட தையோ உணவில் பயன்படுத்துகிறார்கள்.
கடுகின் மருத்துவப்பயன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தெ அறியப்பட்டிருக்கின்றது. உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பே கடுகு கிரேக்கர்களால் பல்வலிக்கும் ரத்தஓட்டத்தை சீராக்கவும் பசியுணர்வை தூண்டவும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது. பூச்சி, வண்டு கடி , தேள் விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.
வேனல் கட்டிகள் குணமாக கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. முடக்கு வாதம், ரத்தச்சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்த்மாவிற்கு தொடர்ந்து கடுகை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல சிகிச்சையாக இருக்கும்.
இருமலை கட்டுப்படுத்தும், ஜீரணத்தை சீராக்கும், ஒற்றை தலைவலியை போக்கும, விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கடுகை மருந்தாகவோ உணவகவோ எப்படி பயன்படுதினாலும் குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்த வேண்டும்.அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும்..
பிரான்ஸின் கடுகு தலைநகரென அறியப்படும் பர்கண்டியிலுள்ள டீஜான் நகரில் நிலத்திலிருக்கும் பொட்டாசியம் சத்தினால் மிகச்சிறப்பான கடுகு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது பிரான்ஸ் 80 சதவீத கடுகை கனடாவிலிருந்து இறக்குமதி செய்தாலும் டீஜன் கடுகு உலகப்பிரசித்தம்
இங்கிலாந்தின் பிரபல கடுகுத்தயரிப்பான கோல்மான் (Colman’s) ஜெர்மனியின் பாரம்பரிய கடுகு தயாரிப்பான க்யூன்,(Kühne), பிரான்ஸின் அமோரா மற்றும் மெய்லீ Amora (Unilever), Maille , நெதர்லந்தின் மர்னெ (Marne )ஆகியவை உலகப்புகழ் பெற்ற கடுகுஉணவுகள்.
இந்தியாவில் வட இந்தியப்பகுதிகளில் கடுகு அதிகம் விளைவிக்கபடுகின்றது.. மேற்கு வங்கத்தை கடுகு உணவிற்கான மாநிலமென்றெ சொல்லிவிடலாம். கடுகெண்ணை சமையல், கடுகுப்பொடி உபயோகம் என்று சைவம், சைவம் இரண்டிற்குமே கடுகை பிரதானமாக உபயோகபடுத்துவார்கள் இம்மாநில மக்கள். ஜப்பானில் சுஷி மீன் உணவுடன் தரப்படும் காரசாரமான வசாபியைப்போலவே வங்காளத்தின் கடுகு சேர்த்து செய்யப்படும் கசுண்டி எனப்படும் கண்ணில் நீர் வரவழைக்கும் சுவையான உணவு வகை ஒன்று மிகப்பிரபலம். மீனுணவில் கடுகைச்சேர்ப்பது காஷ்மீரி மக்களின் வழக்கம்.
உலகெங்கிலும் சுமார் 700 மில்லியன் பவுண்டு கடுகு ஒரு வருடத்தில் உட்கொள்ளப்படுகின்றது உலகிலேயே கடுகை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது அமெரிக்கர்கள் தான். தேசிய கடுகு தினம் அமெரிக்காவில் ஆகஸ்டின் முதல் சனிக்கிழமையில் கடுகு தொடர்பான கேளிக்கைகளும் விளையாடுக்களும் , உணவுப்பொருட்களுமாக விமர்சையாக கொண்டாடப்படும்
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள, திரட்சைதோட்டங்களுக்கும் வை தொழிற்சாலைகளுக்கும் பிரசித்தி பெற்ற நாபா கவுன்ட்டி (Napa County) பகுதியில் வருடம்தோறும் கடுகுத்திருவிழா மிக விமர்சையாக நடக்கும்.
கடுகு வாயு என அழைக்கப்படும் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, லட்சக்கணக்கணவர்களின் மரணத்திற்கு காரணமாயிருந்த இரசாயன திரவமான Mustard gas என்பதற்கு கடுகுடன் எந்த தொடர்பும் இல்லை காரமான நெடியுள்ளதாலும், மஞ்சள் நிற புகையினாலும் இப்பெயர் வந்திருக்கலாம்
பிராசிகேஸியே குடும்பத்தைச் சேர்ந்த, முட்டைகோஸ் மற்றும் கடுகு வகைகளின் மரபணு மூலத்தையும், உலகெங்கிலும் தற்போதிருக்கும் கடுகுகளின் மரபணுத்தொடர்புகளையும் கணக்கிடும் சுவாரஸ்யமான முறை ’’U முக்கோணம்’’(U triangle) எனபடுகின்றது. இது 1935ல் வூ ஜங் சூன் (Woo Jang-choon) என்னும் கொரிய தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது
அரிதான அருங்காட்சியங்களின் ஒன்றான தேசிய கடுகு அருங்காட்சியகம் அமெரிக்காவின் விஸ்கான்ஸினில் உள்ளது 18986. பேரி லீவென்சனால் (Barry Levenson,) துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தற்போது 60 நாடுகளிருந்து தருவிக்கபட்ட 5,300 கடுகு வகைகள் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது,
கடுகின் வரலாறு மற்றும் அரிய தகவல்களையும் இங்கு அறிந்துகொள்லலாம்.காலை 10 லிருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கும் இங்கு அனுமதி இலவசம். இங்கு இருக்கும் உணவகத்தில் பலதரப்பட்ட கடுகு சேர்க்கப்பட்ட உணவு வகைகள் இலவசமாக சுவைக்கவும் கிடைக்கின்றது
உலகின் மொத்த கடுகு உற்பத்தியில் கனடா முதல் இடத்திலும் , தொடர்ந்து நேபாளமும், மியான்மரும், ரஷ்யா மற்றும் சீனாவும் இருக்கின்றன. இந்தியா இந்த வரிசையில் 10 ஆவது இடத்தில் தான் இருக்கின்றது.
பாலைக்கற்றாழை அல்லது கள்ளிக்கற்றாழை பேரினமான Agave என்பது சுமார் 200 சிற்றினங்களை கொண்ட அஸ்பராகேசியே (Asparagaceae) (துணைக்குடும்பம் அகேவேசியே _ (Agavaceae), குடும்பத்தை சேர்ந்தது. அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் தோன்றிய இவற்றில் 150 சிற்றினங்கள் மெக்சிகோ மற்றும் கரீபியன் கடற்கரைப்பகுதிகளில் காணப்படுகின்றன. 12 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி உலகெங்கிலும் பரவியிருக்கலாம் என்று தாவரவியலாளர்களால் கருதப்படும் இந்த கள்ளிக்கற்றாழைகள் மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.
இப்பேரினத்தைச்சேர்ந்த பல தாவரங்களிலிருந்து மதுபானங்கள், நார், வலை, கைவினைப்பொருட்கள் எரிபொருட்கள் ஆகியவை பெறப்படுகின்றன. பல தாவரங்கள் அலங்காரச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. 53 சிற்றினங்களிலிருந்து பல வித மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றது.
கள்ளிக்கற்றாழைகளின் சதைப்பற்றுடன் கூடிய வாள் போன்ற இலைகள் ரோஜா மலரிதழ்களைப்போல அடுக்கடுக்காக அழகாக அமைந்திருக்கும். இலைகள் 2லிருந்து 3 மீட்டர் நீளமிருக்கும். பெரும்பாலானவை இலைகளின் விளிம்புகளிலும் நுனியிலும் கூரிய முட்களிக்கொண்டிருக்கும். இதன்காரணத்தாலேயே இவை கள்ளிக்கற்றாழைகள் எனப்பெயர்பெற்றன.
இலைகள் இளம்பச்சை, அடர் பச்சை, சாம்பல், நீலம், வெள்ளி மினுங்கும் பச்சை, நீலச்சாம்பல் என பல வண்ணங்களில் இருக்கும். இலைகளின் விளிம்புகளில் வேறு வண்ணமிருப்பவையும், வரிகள் உள்ளவையும் உண்டு பெரும்பாலான கள்ளிக்கற்றாழை வகைகளில் இலைகளினடியிலிருக்கும் கிழங்குகளிலிருந்தே புதிய தாவரங்கள் முளைக்கும்
கள்ளிக்கற்றாழைகள் அனைத்துமே ஒரு முறை பூத்துக்காய்த்தபின் மடிந்துவிடும் monocarpic வகையை சேர்ந்தவை. அதிகபட்சமாக 35 வருடங்களே இவை உயிர்வாழும். இலையடுக்குகளின் மத்தியிலிருந்து வளரும் 9-12 மீட்டர் உயரம் வரையிருக்கும் தண்டுகளில், இளம்பச்சை பழுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண மலர்க்கொத்துக்கள் உருவாகும். 6 இதழ்களுடன் இருக்கும் மலர்களில் இனிப்புச்சுவையுள்ள சாறு நிறைந்திருப்பதால் பூச்சிகள், தேன்சிட்டுக்கள் பட்டாம்பூச்சிகள் , அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் ஆகியவற்றை கவர்ந்திழுக்கும்.
மெக்சிகோ முழுக்கவே இக்கள்ளிக்கற்றாழைகள் பரவியுள்ளதால் இவற்றின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மெக்சிகோவின் பழங்குடியினர் தொன்றுதொட்டே அறிந்திருந்தனர். கயிறுகள், பிரஷ்கள், செருப்புக்கள், பாய்கள், போன்றவறை இச்செடிகளின் இலைநாரிலிருந்து தயாரிக்கும் வழக்கம் மெக்சிகோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது.
Sisal எனப்படும் இலைகளின் நாரை நுனியிலிருக்கும் ஊசிபோன்ற முள்ளுடனேயே உருவி எடுத்து ஊசியும் நூலும் போல உபயோகப்பபடுத்தும் பழக்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இலைகளை செதுக்கி விட்டு அன்னாசிப்பழம்போன்ற அடிப்பகுதியை நெருப்பில் வாட்டியும், அரைத்தபின்னர் சமைத்தும் உண்ணும் வழக்கமும் உண்டு. இந்த அடிப்பகுதியில் நிறைந்திருக்கும் மாவுச்சத்தைத்தான் நொதிக்க வைத்து மது பானமாக்குகிறார்கள்.
மலர்ச்சாற்றை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவார்கள். Agave syrup எனப்படும் இந்த கற்றாழைத்தேன் மிக பிரபலமான சர்க்கரை மாற்றுப்பொருளாக உலகெங்கிலும் உபயோகத்திலிருக்கின்றது. இலைசாற்றில் நஞ்சிருப்பதால் சமைக்காமல் உண்ணுவது ஆபத்தானது
ஒருவித்திலை (Monocot) வகையைச்சேர்ந்த கள்ளிக்கற்றாழைகள் அனைத்துமே மிக மெதுவாக வளரும் இயல்புடைய பல்லாண்டுத்தாவரங்கள்
பொதுவாகவே Aloe எனப்படும் சோறறுக்கற்றாழைகளையும் இந்த கள்ளிக்கற்றாழையான Agave களையும் ஒன்றென குழப்பிக்கொள்ளுபவர்கள் உண்டு. நம் அனைவருக்கும் மிகவும் தெரிந்த மருத்துவப்பயன்கள் ஏராளம் கொண்டிருக்கும் சோற்றுக்கற்றாழை Aloe vera,.
தரிசு நிலங்களிலும் வேலியோரங்களிலும் ரயில் தண்டவாள ஓரங்களிலும் மாபெரும் பச்சை ரோஜாஇதழ்களை போல வளர்ந்திருப்பவையே Agave பேரினத்தைச்செர்ந்த கள்ளிக்கற்றாழை வகைகள்.
சோற்றுக்கற்றாழையான Aloe ஆப்பிரிக்காவின் சஹாரா பாலையின் தென்பகுதியில் தோன்றியவை. கள்ளிக்கற்றாழையான Agave மெக்சிகோவில் தோன்றியவை. இரண்டு வகைச்செடிகளுமே சதைப்பற்றான , கூர் நுனிகளை உடைய, விளிம்புகளில் முட்கள் இருக்கும் இலைகளையும் இனிப்பான திரவத்தைச் சுரக்கும் மலர்களையும், கொண்டிருந்தாலும், இவை இரண்டும் வேறு வேறு தாவரக்குடும்பங்களை சேர்ந்தவை Agave, Asparagaceae குடும்பம் Aloe , Asphodelaceae குடும்பம்.
Agave ,இலைகளின் அளவிலும் முட்களின் நீளத்திலும் Aloe வை விட பெரியது. Agave வின் சாறு நச்சுத்தன்மை கொண்டது, Aloe வின் சாறு உண்ணத்தக்கது மருத்துவ குணங்களுடையது, இப்படி இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன
கள்ளிக்கற்றாழையின் முக்கியமான சில வகைகள்;
நரிவால் கற்றாழை-Fox Tail Agave- Agave attenuata
வெள்ளி நிறம் மினுங்கும் இளம்பச்சையில் ரோஜா இதழ்களைப்போல அடுக்கில் அமைந்திருக்கும் இந்த கற்றாழை மிக அழகிய தோற்றமுள்ளது. மேலும் பிற கற்றாழை வகைகளைப்போல இலையின் ஓரங்களில் முட்களும் இல்லாதது. பச்சையும் மஞ்சளும் கலந்த இதன் நீண்ட மலர்க்கொத்துக்கள் நரிவாலைப்போல உயரமான தண்டில் அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கும் இவை தோட்டங்களில் அழகுச்செடியாக வளர்க்க மிகவும் ஏற்றது
மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த கற்றாழை இளம்பச்சையில் வெண்ணிற ஓரங்களுடன் நீண்ட வாள் போன்ற உறுதியான, விளிம்புகளில் உறுதியான முட்களை கொண்டிருக்கும் இலைகளைக்கொண்டது. அடர்ந்த இலை அமைப்பினுள்ளிருந்து 10அடி உயரமுள்ள மலர்த்தண்டு உருவாகி அதன் உச்சியில் இளம் பச்சைநிற கிளைத்த மலர்கொத்துக்கள் உருவாகும். இவற்றை தோட்டங்களின் ஓரங்களில் வளர்க்கலாம். இச்செடியின் இலைகள் இணைந்திருக்கும்
அன்னாசிப்பழத்தைபோன்ற heart எனப்படும் அடிப்பகுதியிலிருந்து மெஸ்கல் (mezcal) என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. முட்டை வடிவ இலைநுனியில் கூரான ஊசிபோன்ற அமைப்பிருக்கும்
நீலக்கற்றாழை- Blue Agave- Agave tequilana
மெக்ஸிகோவின் டெக்யூலா நகரில் எரிமலை மண்ணில் வளரும் இந்த நீலக்கத்தாழைச்செடிகளிலிருந்து, அந்நகரின் பெயருடைய ’’டெக்யூலா’’ என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. (Tequila). டெக்யூலா தயாரிக்க கற்றாழையின் இலையடியில் அன்னாசிப்பழம் போன்ற வடிவை வெட்டி தயாராக்கும் முறை அங்கிருக்கும் பழங்குடியினரால் மட்டுமே செய்யப்படுகின்றது.
பெயருக்கேற்றபடி நீலப்பச்சையில் அகலமும் நீளமும் உடைய வாள்போன்ற உறுதியான இலைகளின் ஓரங்களில் கூரிய முட்களை உடைய இந்த கற்றாழை 5 வருடங்களானபின்பு அழகிய மஞ்சள் நிற மலர்க்கொத்துக்களை உருவாக்கும்
நூற்றூக்கற்றாழை- American Century Agave-Agave Americana
குட்டையான, மிகக்கூரிய நுனிகளையும் இளமஞ்சள்பட்டைகள் உள்ள ஓரங்களையும் கொண்டிருக்கும் இலைகளைக்கொண்ட, பெருங்கள்ளி வகைச்செடியான இந்த கற்றாழையின் மலர்கள் தேன்சிட்டுக்களை வெகுவாக கவரும். தோட்டக்கலைத்துறை விருதுகள் பலவற்றை பெற்றிருக்கும் மிக அழகிய தோற்றமுள்ள கற்றாழை இது. உலகெங்கும் அதிகம் அலங்காரச்செடியாக வளர்க்கப்படும் கற்றாழையும் இதுவே. மலர்கள் நீள மூக்கு வவ்வால்களாலும், தேன்சிட்டுக்களினாலும் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.நூற்றூக்கற்றாழை என அழைக்கப்பட்டாலும் இவை 35 வருடங்கள் வரையே உயிர் வாழும்.
உட்புறம் குழிந்த, கிண்ண வடிவில், திமிங்கல நாக்கைப்போன்ற அழகிய இலைகளில் நுனியில் 25 செமீ நீளமுள்ள ஊசிபோன்ற நீட்சி இருக்கும். இளம்பச்சை நிற இலைகளின் மத்தியிலிருந்து உருவாகும் தண்டில் மலர்க்கொத்து வர 10 ஆண்டுகளாகும். பசுமஞ்சள் நிற மலர்கொத்து மிக அழகியதாக இருக்கும். மிக அழகிய இக்கற்றாழைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். செடியின் மத்தியிலிருந்து உண்டாகும் உயரமான தண்டிலிருந்து அழகிய மஞ்சள் நிற மலர்கொத்துகள் உண்டாகும்.
இதன் அடித்தண்டை வெட்டினால் சுரக்கும் இனிப்பான திரவத்தை நொதிக்க வைத்து புல்க்யூ (Pulque) என்னும் மதுபானம் தயரிக்கப்படுகின்றது.
பிட்டா (pitta) எனப்படும் இலைநார்கள் கயறு, பாய், கெட்டியான துணிகள் ஆகியவற்றை உருவாக்கபயன்படுகின்றது. இதன் நார்களைக்கொண்டு எம்பிராய்டரி செய்யபட்ட தோல்பொருட்கள் பிடெடோ piteado எனப்படுகின்றன.
இக்கற்றாழைச்செடிகள் 1899 ல் ஜோசஃப் நெல்சன் ரோஸ் என்பவரால் மெக்சிகோவின் கெளடாலஜரா நகரில் கண்டறியபட்டது.
நீண்ட ரிப்பன்களைப்போன்ற நுனி வளைந்து சுருண்டிருக்கும் இலைகள் எண்காலி எனப்படும் ஆக்டோபஸின் உணர்கொம்புகளைப்போல இருப்பதால் இவற்றிற்கு ஆக்டோபஸ் கற்றாழை என்றே பெயர் வந்தது. இவை 10 வருடங்களில் 40 அடி உயரமுள்ள தண்டில் மஞ்சள் நிற மலர்கொத்துக்களை உருவாக்கும். 18 ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் வாழ்ந்த வில்மோர் என்பவர் உலகின் பலநாடுகளிலிருந்து மரங்களின் விதைகளை வரவழைத்தவர். இவரது பெயர் ஃப்ரான்ஸின் வரலாற்றில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கின்றது. இவரை கெளரவிக்கும் பொருட்டே இந்த கற்றாழைக்கு வில்மோரியான் என்று பெயரிடப்பட்டது.
இதன் இலைகளில் நுரைக்கும் தன்மையுள்ள வேதிப்பொருளான saponin இருப்பதால், மெக்சிகோவின் சில பகுதிகளில் வெட்டி உலர்த்தபட்ட நார்களுக்குள் சோப்புதுண்டங்களை வைத்து துணி துவைக்கும் பிரஷ்கள் செய்யப்படுகின்றன. (brush with built-in-soap) பல பூங்காக்களில் இவை அலங்காரச்செடிகளாக வளர்க்கப்படுகின்றன.
விக்டோரிய மகாராணி கற்றாழை- Queen Victoria Agave -Agave victoriae-reginae
கற்றாழைகளிலேயெ அரிதான இந்த வகையை தொட்டிகளிலும் வளர்க்கலாம். மகுடம் போன்ற அமைப்பில் மிக நெருக்கமாக செருகப்பட்டது போல இலைகள் அமைந்திருப்பதால் விக்டோரிய மகாராணியின் பெயரால் இக்கற்றாழை அழைக்கப்படுகின்றது
.
தூரிகையால் தீட்டியதுபோல இலைகளின் ஒரத்தில் மெல்லிய வெள்ளைக்கோடு காணப்படும். மெக்சிகோவின் சிக்குவாஹுவன் பாலையில் (Chihuahuan Desert) இவை பரவலாக காணப்படும். பச்சை மற்றும் பழுப்பு நிற மலர்கள் கொத்தாக இலைகளின் நடுவிலிருந்து உண்டாகும் தண்டின் நுனியில் காணப்படும்
நூல்கற்றாழை -Thread –leaf Agave- Agave filifera
சிறிய வகை கற்றாழையான இதில் தளர்வான அடுக்குகளாக அமைந்திருக்கும் இலைகளுடன் இலைமொட்டுக்கள் உரிக்கும் நூல் போன்ற இழைகள் நூலகண்டை பிரித்து போட்டதுபோல காணப்படும். இளம்பச்சையில் உலோகப்பளபளப்புடன் காணப்படும் இச்செடி அதிகபட்சமாக 3 அடி வரையே வளரும்.
இலைகளின் அடியில் இருக்கும் மொட்டுக்களிலிலிருந்து புதிய செடிகள் முளைக்கும். தொட்டிகளில் வளர்க்க ஏதுவானது இந்த கற்றாழை Royal horticultural society வழங்கும் தோட்டக்கலைத்துறை விருதையும் பெற்றிருக்கிறது இந்த அழகிய கற்றாழை. பிரகாசமான மஞ்சளும் சிவப்புமான மலர்களுடன் மலர்கொத்து உண்டாகும்.
கடற்கரைக்கற்றாழை-Coastal Agave- Agave shawii
மிகமிக அரிதான இந்தக்கற்றாழை மிஸவ்ரி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய Henry Shaw என்பவரை கெளரவிக்கும் விதமாக shaw Agave எனப்பெயரிடப்பட்டது. நகரமயமாக்களில் பெருமளவில் அழிந்துபோய்விட்ட இவை தற்போது கலிஃபோர்னிய கடற்கரைகளில் மட்டுமே காணப்படுகின்றன. மிக மெதுவாக வளரும் இயல்புடைய இதன் இலைகள் 50 செமீ அளவில் முட்டை வடிவில் அமைந்திருக்கும். இலை விளிம்புகளில் ரம்பம் போல முட்கள் அமைந்திருக்கும். இலைகளின் மத்தியிலிருந்து தோன்றும் உயரமான மலர்காம்பிலிருந்து ஊதாவண்ண இலைச்செதில்களால் (Bracts) சூழப்பட்ட மஞ்சள் – சிவப்பு மலர்கள் உருவாகும். இவை மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும் இயல்புடையவை
இரட்டை மலர்க்கற்றாழை – Twin flower Agave -Agave geminiflora
மெக்ஸிகோவின் 32 மாநிலங்கலில் ஒன்றான நயாரிட்டில் (Nayarit) மட்டுமே காணப்படும் இவ்வரிய வகைக்கற்றாழை குட்டையானது 2 அடி வரை வரையே வளரும். 12 அடி உயுர மலர்த்தண்டின் இருபுறமும் வரிசையாக இளஊதாமஞ்சள் நிற மலர்கள் தோன்றுவதால் இக்கற்றாழைக்கு இந்தப்பெயர் வந்தது.. ஒரு செடியில் 60 செமீ நீளமுள்ள 100 லிருந்து 200 இலைகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கும்,
இலை விளிம்புகளின் நார்கள் நூலிழைகளைப்போல உரிந்து வந்து இலைகளின் அடுக்குகளுக்குள் சிக்கி இருப்பதும் அழகாக இருக்கும்
நீலக்கற்றாழையைப்போலவே இதன் இலைகள் இருக்கும் ஆனால் இளம்பச்சை நிறத்தில் அதிக சதைப்பற்றுடன் இருக்கும். இலைகளின் ஓரங்களில் லவங்கபட்டையின் அடர் சிவப்பில் கோடுகள் இருக்கும்.
10 வருடங்களுக்கு பிறகு 20 அடி நீள மலர்த்தண்டு உருவாகி பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள் உண்டாகும். இக்கற்றாழை 4 அடி உயரம் வரை வளரும். எந்த நோயும் இந்த கற்றாழையை தாக்காது. இது கற்றாழைகளின் அரசி என அழைக்கப்படுகின்றது. இனிப்புச்சுவை உள்ள இதன் மலர்களை உள்ளூர் மக்கள் சாப்பிடுவதுண்டு. மலர்கள் வண்ணத்துபூச்சிகளை அதிகம் கவரும். இலைச்சாறு பட்டால் தோல் அழற்சியை உண்டாகும்.
11 அடி உயரம் வரை வளரும் இந்தக் கற்றாழை அடர்பச்சை நிறத்தில் அகன்ற உறுதியான இலைகளைக் கொண்டது. இலைகள் ரோஜா இதழ்களைப்போல அடுக்கடுக்காக ஆனால் தளர்வாக அமைந்திருக்கும். இலைகளின் விளிம்புகளில் மிகக் கூரிய 8 செமீ நீளமுள்ள பெரிய முட்கள் அமைந்திருக்கும். 15லிருந்து 25 வருடங்களில் நீண்ட மலர்த்தண்டின் நுனியில் பசுமஞ்சள் நிற மலர்களை உருவாக்கும். இவற்றை தொட்டிகளிலும் வளர்க்கலாம்.
ஒரு சில மென்மையான இலைகளைக்கொண்டிருக்கும் வகைகளைத்தவிர பிற கள்ளிக்கற்றாழைகள் அனைத்திற்குமே நல்ல சூரிய ஒளி தேவைப்படும். அதிகமாக நீர் ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும். மணற்பாங்கான இடங்களில் செழித்து வளரும். வாடிய இலைகளை வெட்டுகையில் ஆங்கில ‘v’ வடிவத்தில் இலையின் கீழ்பகுதி இருக்கும்படி வெட்டவேண்டும். இல்லாவிடில் அடித்தண்டு உலர்ந்துவிடும்.
மதுபானங்களுக்காக கள்ளிக்கற்றாழைகளை ’ஜிமாதர்’கள் (jimador) எனப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த திறமையானவ்ர்கள், (Coa ),கோவா எனப்படும் நீண்ட கைப்பிடியின் நுனியில் வட்ட வடிவ மிகக் கூரான கத்தியை உடைய உபகரணத்தால் இலைகளை பாதுகாப்பாக செதுக்கி அடித்தண்டை எடுப்பார்கள்.
Sedge, nut grass, coco grass என்றெல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற Cyperus rotundus என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட கோரைப்புல், 92 நாடுகளில் பரவி 52 வகையான உணவு மற்றும் உழவுப்பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளில் மிக முக்கியமானதாகும். ’one of the world’s worst weeds’. என்று குறிப்பிடப்படும் மிகசுவாரஸ்யமான களைச்செடியான இது சைப்பரசியே (Cyperaceae) குடும்பதைச் சேர்ந்தது.
புல்லினத்தைச்சேர்ந்த இக்கோரை தாவரவியலாளர்களால் ஹவாய் தீவுகளில் முதன் முறையாக 1850ல் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
பல்லாண்டுத்தாவரமான இதன் தாயகம் ஆப்பிரிக்கா, விரைவிலேயே இது தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிப்பெருகியது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான அடர் பச்சை நிறத்தில் மூன்று வரிசைகளாக அடிப்பக்கம் இலையுறையுடன் கூடிய நீண்ட இலைகளையுடையது. இளம்பச்சை நிறத் தண்டுகள் முக்கோண வடிவிலிருக்கும்
இவை பெருங்கோரை சிறுகோரை என்று இருவகைப்படும். சுமார் 150 செமீ வரைகூட பெருங்கோரை வகைகள் வளரும். சல்லிவேர்கள் மட்டும் இருக்கும் கிழங்குகளற்ற இந்த பெருங்கோரை வகையைத்தான் வயல்களில் வளர்த்திப்பின் அதை பாயாகப் பின்னுவார்கள்
மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலங்களிலும் பயிர்களுக்கு இடையே களையாகவும் கோரை வளர்ந்திருக்கும்கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாகவும், உட்புறம் வெள்ளையாகவும் இருக்கும். இது மென் கசப்புத்தன்மையுடையது. ஆனாலும் விரும்பத்தக்க நறுமணத்துடனும் இருக்கும். இக்கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.
கோரையின் கிழங்குகள் மண்ணிற்கடியிலும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலுமாக வளர்ந்து ஒரு கிழங்குத்துண்டிலிருந்து சுமார் 600 செடிகள் வரை வளர்ந்து ஒரு குழுவாக அடர்ந்து காணப்படுவதால் Colonial grass என்றே விவரிக்கப்படுகின்றன. கிழங்குகள் சதைப்பற்றுடன் தொடர் சங்கிலிகளை போன்ற வடிவங்களில் இருக்கும். கிழங்குகளின் dormancy period அதிகமென்பதால் மண்ணிற்கடியிலேயே ஆழப் புதைந்திருந்தாலும் 7 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கும் திறனுள்ளவை. நல்ல வளமான மண்ணில் ஒரே வாரத்தில் 20 முதல் 30 லட்சம் கிழங்குகள் வளர்ந்து விடும். கோரை 20 முதல் 90 சதமானம் பயிர்களின் விளைச்சலை குறைத்துவிடும். கோரையை முற்றிலுமாக அழிக்க முடியாது அவ்வபோது கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே பெரும் முயற்சிகளுக்கு பின்னர் சாத்தியம்.
2000 வருடங்களாகவே இக்களை உலகெங்கும் மிக வேகமாக பரவியிருக்கிறது ஆப்பிரிக்காவிலும் சீனாவிலும் உணவு மருந்து மற்றும் நறுமணத்தைலங்கள் தயாரிக்க இக்கோரை பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன கசக்கும் சுவையுடைய கிழங்குகள் பஞ்ச காலதில் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. கோரைக்கிழங்குகளை பன்றிகள் விரும்பித் தின்னும். பண்டைய இந்தியாவில் கோரையைக் கட்டுப்படுத்த பன்றிகளை வளர்த்திருக்கிறார்கள்.ஒரு பன்றி 5 கிலா வரையிலும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து விடுவதால் கோரைகளை இவற்ற்றின் மூலம் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கின்றது
கோரையைப்பற்றிய முதல்குறிப்புக்கள் சீன மருத்துவ நூலில் முதன்முதலில் கிருஸ்துவுக்கு 500வருடங்களுக்கு முன்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது .
மருத்துவப் பயனுடைய கோரைக்கிழங்குகள் பழந்தமிழ் இலக்கியங்களில் முத்தக்காசு எனக்குறிக்கப்பட்டுள்ளன. இதன் இலக்கியபெயர் எருவை, சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் எருமைகளின் காலில் மிதிபட்டு கோரைகள் மடியும் என்கிறது பெரும்பாணாற்றூப்படை
தலைவன்பள்ளத்து நீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளிரும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினைக்கொண்டவன் எனிறாள் தலைவி அகநானூற்றில்,
கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும். மேலும், கான்கீரிட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது
ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் , குறைந்த பட்சம் 20 ஆண்டு வரை, ஆறு மாதத்துக்கு, ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரைப்புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எல்லா வகையான காலநிலையிலும் கோரையை வளர்க்கலாம்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சாய்க்காட்டில் கோச்செங்கட்சோழன் கட்டிய குயிலினும் இனிமொழியம்மை உடனுறை சாயாவனேஸ்வரர் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகின்றது.
தாவரவியலில் களை ,என்பது a right plant in a wring place . இத்தனை செழித்து வளரும், மருத்துவப்பயன்களுள்ள இக்கோரையை கிழங்குகளின் மருத்துவ பயன்களுக்காக தனியே சாகுபடி செய்கிறார்கள் ஆயுர்வேதத்தில் பல முக்கியமான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முஸ்தக் அல்லது முத்தா என்றழைக்கப்படும் இக்கிழங்கில் எண்ணிலடங்கா வேதிச்சேர்மானங்கள் உள்ளதால் பல வகையான நோய்களுக்கு இதிலிருந்து மருந்துகள் பெறப்படுகின்றன
கோரைக்கிழங்கிலும் தாவரத்திலுமுள்ள முக்கிய வேதிப்பொருட்கள்:
களையென கருதப்படும் ஆனால் இத்தனை வேதிப்பொருட்கள் கொண்டிருக்கும் கோரை என்னும் மூலிகை தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
நெல் (rice) என்பது ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத் தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் அரிசி என்னும் உணவாகிறது. உலகில் சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் நெல்லாகும்.
ஆசியாவில்தான் நெல் சாகுபடி முதன்முதலாக கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. Oryza rufipogan என்னும் அறிவியல் பெயருடைய காட்டு நெல்லினத்திலிருந்து ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் உருவாக்கபட்டு பயிரிடப்பட்டன.
இந்தியாவில் Oryza sativa var. indica வும், சீனாவில் Oryza sativa var. japonica வும் சாகுபடி செய்யப்பட்டன.
சங்கப்பாடல்களில் வேகவைத்தபிறகு கட்டைவிரல் தடிமனில் இருந்த ஒரு வகை நெல் உள்ளிட்ட பல நெல்வகைகளை பற்றிய 45 குறிப்புக்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 2 லட்சம் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது நாம் அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டிருக்கிறோம்
நெல் ரகங்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல்வேறு சாதாரண அரிசி வகைகளுடன் நீளமான, மணமுடைய ‘பாஸ்மதி’ அரிசி, நீளமான, சன்னமான ‘பாட்னா’ அரிசி, குட்டையான ‘மசூரி’ அரிசி ஆகிய ரகங்களும் அதிகம் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், சுவையுள்ள சன்ன ரக ‘பொன்னி’ அரிசி பிரபலமானது
நெல்லின் உண்ணமுடியாத Hull/Husk எனப்படும் உமி மட்டும் நீக்கப்பட்டதே மட்டைஅரிசி (Brown rice) மட்டை அரிசியின் மேலடுக்கான Bran எனப்படும் தவிடும் நீக்கப்பட்டதே பச்சரிசி (White rice) புழுங்கல் அரிசி (Par boiled Rice) எனப்படுவது உமி நீக்கும் முன்பாகவே நீராவியில் வேகவைத்து தயரிக்கப்படும் ஒரு வகையாகும்
நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, அதன் உமி மற்றும் தவிட்டு அடுக்குகள் நீக்கப்பட்டு வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைப்பதே “பச்சரிசி” எனப்படுகிறது. நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பிற அரிசி ரகங்களைக்காட்டிலும் இந்த ரகத்தையே அதிகம் விரும்பி உபயோகிப்பார்கள்.
நீரில் ஊறவைத்த நெல்லை, நீராவியிலோ அலல்து கொதிநீரிலோ வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைக்கப்படுவதே ‘புழுங்கல்’ அரிசி . கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், உமியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டதால், ஒரு விதமான வாசம் உடையதாய் இருக்கும்.
அரிசியை இப்படி அவித்து அல்லது புழுங்க வைத்து அதன் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தும் கலை பன்னெடுங்காலமாகவே பிரதான உணவாக அரிசி இருக்கும் பல நாடுகளில் இருந்து வருகின்றது.
புழுங்கல் அரிசி தயாரிப்பில் முக்கியமானவை;
ஊறவைத்தல்-(Soaking) அறுவடை செய்த நெல்லை வெதுவவெதுப்பான நீரில் ஊறவைக்கையில் அதன் ஈரப்பதம் அதிகரிக்கின்றது
நீராவியில் வேகவைத்தல்-(Steaming) நீராவியில் வேக வைக்கையில் நெல்லின் கார்போஹைட்ரேட்டுக்கள் பசை போலாகின்றது. மேலும் நீராவியின் வெப்பத்தில் நெல்லிலிருக்கும் நுண்கிருமிகளும் நீக்கப்படுகின்றன
உலரவைத்தல்; (Drying) ஆலைகளுக்கு கொண்டுசெல்லும் முன்பாக நீராவியில் வேகவைத்த நெல் நன்கு உலரவைக்கப்டும்
அவித்தல் அல்லது புழுங்குதல் முறையின் மூலம், வெளிப்புற உமி, தவிட்டின் வைட்டமின்கள், உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசி மணிக்குள் திணிக்கப்படுவதால், புழுங்கலரிசியின் ஊட்டச்சத்து பச்சரிசியை விட மிக அதிகமாகின்றது.
அவித்த அரிசி லேசான பழுப்பு நிறத்தில், உமி நீக்க ஆலைகளில் அரைபடுகையில் உடையாமல் உறுதியுடனும் இருக்கும்.
வேகவைக்கும் போது பச்சரிசியிலிருக்கும் மாவுச்சத்துக்கள் பசைபோலாகி (Gleatinised) தயாமின் எனும் வைட்டமின் மற்றும் அமைலோஸ் சத்துக்களும் பச்சரிசிலிருந்ததை விட அதிகரிக்கின்றது. பச்சரிசியை விட புழுங்கல் அரிசி குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது
தென்னிந்தியாவில் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே அதிகம் உபயோகத்திலிருக்கிறது. தீட்டப்பட்ட வெள்ளையரிசியை விட தீட்டப்படாத புழுங்கல் அரிசியில் உடலின் ஆற்றலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆனால் மெக்னீஷியம், ஜின்க் போன்ற நுண்சத்துக்கள் பிற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் புழுங்கல் அரிசியில் குறைவு
உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல் வேகவைக்கப்படுகிறது. இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன, அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.
புழுங்குதல் அன்னும் செயலினால் அரிசியின் நார்ச்சத்துக்களும் கால்சியம் பொட்டஷியம் மற்றும் விட்டமின் B-6 ஆகியவற்றின் அளவு பிற அரிசி ரகங்களைக்காட்டிலும் அதிகரிக்கின்றது
உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை 3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும் 2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில் மட்டும் உள்ள தாவரங்கள் 45,000 (7.8%). இவற்றில் 33% தாவரங்கள் இந்தியாவில் பூர்வீகமாக உள்ளவை. இதில் 15,000 பூக்கும் தாவர இனங்களாகும். இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் அரிய தாவரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இமாலய பகுதி உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கச்செறிவு உள்ள பகுதிகள் உலகிலேயே மொத்தம் 34 தான் உள்ளது
உலகின் பூங்கா என்றழைக்கப்படும் இந்தியாவெங்கிலுமே மருத்துவத் தாவரங்கள் செழித்துக்காணப்படுகின்றது. பல்வேறு நாட்டுப்புற மருந்துகளும்,பாரம்பரிய சிகிச்சை முறைகளும் மிகப் பரவலாக புழக்கத்தில் உள்ள இந்தியாவில் மிகத்தொன்மையான காலந்தொட்டே அரிய மருத்துவக்குணங்கள் உள்ள தாவரங்கள் இமாலயத்தில் வளர்கின்றன
பனிசூழ்ந்த என்று பொருள் கொண்ட ’’இமாச்சல’ பகுதி, உலகின் மொத்த தாவர இனங்களின் 10 சதவீதத்தையும் இந்தியாவின் 50 % தாவரங்களையும் கொண்டது. வடகிழக்கு இமாலய பகுதி தாவர சிற்றினங்களின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது.
இமயத்திலிருக்கும் அரிய தாவரங்களிலொன்றான அமலபர்ணி / ஏகாவீரா எனும் பெயரகளில் அழைக்கப்படும் Rheum nobile பனிமூடிய சிகரங்களின் உச்சியில் சுமார் 50,000அடி உயரத்தில் மிக அதிக புற ஊதாகக்திர்வீச்சும் பனிப்பொழிவுமாக இருக்கும் சூழலில் வளரும் ஒரு மருத்துவத்தாவரமாகும். பிரகாசமான தந்த நிறத்தில் கூம்புவடிவ கோபுரம்போல வளர்ந்திருக்கும் 2 லிருந்து 6 அடி வரை வளரும் இத்தாவரம் பளபளப்பான இலைகளை கொண்டது.
இமயமலையிலும், ஆஃப்கானிஸ்தான், திபெத், பூட்டான், பாகிஸ்தான், சிக்கிம் . சீனா மற்றும் மியான்மரில் உயரமான இடங்களில் மட்டும் இத்தாவரங்கள் காணப்படுகின்றன. சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் நகரத்தில் 14,000 அடி உயரத்தில் வளர்ந்திருந்த இத்தாவரத்தின் விசேஷமான வாழிடம், தோற்றம் மற்றும் பண்புகள் குறித்த முதல் ஆய்வுக்கட்டுரை 1855ல் தாவரவியலாளர்கள் ஹூக்கர் மற்றூம் தாமஸ் ஆகியோரால் எழுதி வெளியிடபட்டது.
சிவந்த இலைக்காம்பும் நரம்புகளும் கொண்ட, வட்ட வடிவில் அமைந்திருக்கும் இலைகளும் அவற்றின் மீது உயரமாக கூம்பு வடிவில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியதுபோல தடிமனான இலைச்செதில்களும் அமைந்திருக்கும் சிக்கிம் ருபர்ப் என அழைக்கப்படும் இந்த மருத்துவத்தாவரத்தின் நுனியில் மட்டும் இலைச்செதில்களின் விளிம்புகள் இளஞ்சிவப்பிலிருக்கும்.நுண்ணிய பசும்மலர்க்கொத்துக்கள் இலைச்செதில்களின் உள்ளிருக்கும்.
இச்செடி அசாதாரணசூழலில் வாழும் பொருட்டான பல தகவமைப்புக்களை கொண்டிருக்கிறது. வரிசையாக ஒன்றின் மீதொன்று படிந்திருக்கும் இலைச்செதில் (bracts) அமைப்புக்களினுள்ளே மலர்களையும் கனிகளையும் பொதிந்து வைத்து உறைபனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும், Quercetinflavonoids என்னும் வேதிப்பொருளின் உதவியால் புறஊதாக்கதிர்களை வடிகட்டி, ஒளியை தனக்குள்ளே கடத்தும் அரிய தகவமைப்புக்கொண்ட இந்த தாவரம் இமயத்தின் பல அற்புதங்களில் ஒன்றாகும்.
பாலிகோனேசியே குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரத்தின் வேர்கள் உட்பகுதி அடர் மஞ்சளாக, முழங்கை தடிமனில் 7 அடிஆழம் வரை சென்றிருக்கும்.’’சுக்கா’’ என்றழைக்கப்படும் மெல்லிய அமிலச்சுவையுடன் இருக்கும் இதன் தண்டுகளை உள்ளூர் வாசிகள் உணவாக உட்கொள்ளுகின்றனர். மூங்கில்களைப்போல் உட்புறம் காலியாக இருக்கும் தண்டுகளுக்குள் துல்லிய இனிய சுவையான நீரிருக்கும்
ஜூன்-ஜூலை மதங்களில், மலர்கள் மலர்ந்த பிறகு தனித்தனியே பிரிந்து ஆழ்ந்த சிவப்பு நிறமாகிவிடும் இலைச்செதில்கள், கனிகள் முதிர்ந்தபின்னர் உதிர்ந்துவிடும். அடர் காபிக்கொட்டை நிறத்தில் கொத்துக்கொத்தாக பழங்கள் இலைகளற்ற தண்டுகளில் அழகாக தொங்கிக்கொண்டிருக்கும்.
ஒளியை வடிகட்டி தேவையான ஒளியை மட்டும் தனக்குள்ளே ஊடுருவிச்செல்ல அனுமதித்து இலைச்செதில்களின் உட்புறம் மிதமான வெப்பத்துடன் இருப்பதால், இத்தாவரம் ’’ glasshouse plant ’’ என்றும் அழைக்கப்படுகிறது .
இருபாலின மலர்களில் காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும். கனிகள் ஆகஸ்ட் செப்டம்பரில் முதிர்ந்து விடும். பனிப்பொழிவு மிகுந்த வாழிடமாதலால் மகரந்தசேர்க்கைக்கு தேவையான பூச்சிகளும் இங்கு மிகக்குறைவு அதற்கு தேவையான தகவமைப்பையும் கொண்டிருக்கும் இச்செடியின் 93 % மலர்களில் மகரந்ச்சேர்க்கை நடந்து விடுகின்றதென்பதும் அதிசயமே! Bradysia என்னும் சிறிய பறக்கும் பூச்சி இனங்கள் இச்செடியின் இலைச்செதிலுக்குள்ளிருக்கும் வெப்பத்தில் தங்களது முட்டைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, இந்த உதவிக்கு மாற்றாக இச்செடியின் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றது. இந்த இரு உயிரினங்களும் பரஸ்பரம் உதவியாக இருந்து தொடர்ந்து இப்பகிர்வாழ்வில் இருந்து வருவதும் அதிசயமே. இப்பூசிகளை கவரும் வேதிப்பொருட்களை இச்செடி சுரந்து காற்றில் பரப்புகின்றது.
தாவரபாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் ஜீரணத்தை தூண்டவும் குடற்புழுக்களை நீக்கவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் சேர்ந்திருக்கும் அசுத்த நீரை வெளியேற்றவும் வீக்கங்களை வடியச்செய்து குணமாக்கவும் இவை அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதன் மருத்துவ குணங்களுக்கு இவற்றிலுள்ள Rutin, quercetin 3-O-rutinoside, Guaijaverin, quercetin 3-O-arabinoside, Hyperin, quercetin 3-O-galactoside, Isoquercitrin, quercetin 3-O-glucoside,, quercetin 7-O-glycoside, quercetin , kaempferol glycoside& feruloylester ஆகிய வேதிப்பொருட்களே காரணமாக இருக்கின்றன
டாகா (‘taga’)என அழைக்கபடும் இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயத்தில், அந்தப்பகுதி மக்கள் கம்பளிகளுக்கு சாயமேற்றுகிறார்கள்.
அப்படியான அசாதாரண வாழிடங்களில், அத்தனை உயரத்தில் வளரும் பல தாவரங்கள் பாறைகளின் பின்னே மறைந்தும் தரையோடு தரையாக பரவி வளர்ந்தும், சிற்றிலைகளை மட்டும் உருவாக்கியும், அங்கிருக்கும் மிகக்குறைந்த வெப்பம், கடும் பனிப்பொழிவு மற்றும் அதிக புறஊதா கதிர்வீச்சு ஆகிவற்றிலிருந்து தப்பிக்கும் ஆனால் அமலபர்ணி அப்படியல்ல, தௌந்த தகவமைப்புக்களுடன் நிமிர்ந்து பெரிய முறம்போன்ற இலைச்செதில்களுடன், சிறு கோபுரம்போல எழுந்து 6அடி வரை வளர்ந்து கம்பீரமாக மனிமலையின் உச்சியில் நிற்கிறது.
இந்த தாவரத்தை பொது ஊடகங்களில் சிலர் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மகாமேரு என்று உண்மைக்கு புறம்பான செய்தியை பலஆண்டுகளாக புகைப்படத்துடன் பகிர்ந்தவாறே இருக்கிறார்கள். இது அரியதுதான், இயற்கையின் அதிசயங்களிலொன்றுதான் ஆனால் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் தாவரமல்ல, வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரம்தான். நூற்றுக்கணக்கான் வருடங்களுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரமேதும் இப்புவியில் இல்லை.
சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், கருவிளை, மாமூலி, காக்கட்டான், காக்கரட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதா என பலபெயர்களில் அழைக்கப்படுகின்ற இக்கொடி ஃபேபேசியே குடும்பத்தை சேர்ந்தது. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ எனறழைப்பார்கள். இதன் ஆங்கிலப்பெயர்களாவன; Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea, Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea, மகாபாரதம் இதனை அபராஜிதா என்கிறது, ‘’கார்க்கோடப் பூ” என்கிறாள் ஆண்டாள். அரவிந்த அன்னை இம்மலரை’’ கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார்
சங்குப்பூ காடுகள்.தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. இச்செடியின் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. இதில் வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் அரிதாக வளர்வதுண்டு. வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளுமே மருத்துவப் பயன் கொண்டவை.
சங்குப்பூ ஏறு கொடி வகையை (Climber) சார்ந்தது. இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் அடர்நீல நிறமான மலர்களையும் உடையது. சிறிய நீளமான காய்கள் தட்டையாக இருக்கும். இச்செடியின் பூ நன்றாக விரிந்து மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போல தோன்றுவதால் சங்குப்பூ என்று பெயர் வந்தது. வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட மலர்கள் இருக்கின்றன.
தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும் Clitoria ternatea தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora Voigt செருவிளை எனவும் தமிழ்ப்பெயர்களை கொண்டிருக்கின்றன.
ஆசியாவை தாயகமாக கொண்ட இச்செடி தற்பொழுது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது. கொடி போல் வளரும் இயல்புடைய இவை பற்றிக்கொள்ள துணை இல்லாத இடங்களில் தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவி வளரும். ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் இச்செடி செழித்து வளரும். சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10 தட்டையான விதைகள் இருக்கும். ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.
ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் வகையான இக்கொடியில் 4×3 செமீ அளவில் நன்கு மலர்ந்த மலர்கள் இருக்கும் . மலர் உள்ளிட்ட இச்செடியின் பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்கள் ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides ஆகியவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும் anthocyanins வகையைச்சேர்ந்த delphinidin. என்னும் நிறமியால் உணடானது. மலர்கள் பட்டாம்பூச்சியின் இறகுகளைப்போல அழகுற அமைந்திருக்கும்.
இச்செடி முதன்முதலில் 1678ல் Rumpf என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளரால் Flos clitoridis ternatensibusஎன்று பெயரிடப்பட்டிருந்தது. பிறகு 1800ல் மற்றோரு ஜெர்மானிய தாவரவியலாளரால் இவை டெர்னேஷியா தீவுகளில் கண்டறியப்பட்டபோது மலர்களின் அமைப்பைக்கொண்டு அதே பெயரில்தான் அழைக்கப்பட்டன.
இதன் பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்ப்தால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பை குறிக்கின்றது. ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக ஒரு தாவரத்திற்கு பெயரிடுவது குறித்து தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்துVexillaria,Nauchea போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள் ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் நிலைத்தது. பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’விலிருந்து கொண்டு வந்த செடிகளாதலால் தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் சிற்றினப்பெயராக ternatea என்பதையே வைத்தார்.
இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இச்செடியின் மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும்.
வேகமாக வளரும் இயல்புடைய, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்
குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் சிதம்பர நாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது
பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும். கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது
மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற்றிணை 221/1,2
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறுந்தொகை 110/4
தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற்றிணை 262/1
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/11
உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளன் உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனப்பட்டான். இச்செடியின் வெண்மலர்கள் அரிதாகவே காணக்கிடைப்பதைபோலவே இலக்கியங்களிலும் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது . அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத தென்னிந்தியாவை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant) இருக்கின்றது.
தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் அநேக மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம்
சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களும் விதைகளும் கூட உணவில் சேர்க்கப்படுகின்றது
சீன பரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பலநோய்களுக்கு தீர்வாகும் முக்கியமான மருந்தாக இது உபயோகிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மலர்கள் நினைவாற்றலுக்கும் மனச்சோர்வு நீங்கவும் வலிப்புநோய் தீரவும் தூக்கம் வரவழைக்கவும் கொடுக்கப்படுகின்றது. பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும் சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறது .
மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிபொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று. இச்செடியின் வேர்கள் conjunctivitis. எனப்படும் இமைப்படல அழற்சிக்கு நல்ல மருந்தாகும்
சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் மனதை அமைதிப்படுத்துகின்றது. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தைக் குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்
மலர்களின் சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும் சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும்
தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில் அரிசிச்சோற்றை நீலநிறமாக்க சங்குப்பூச்சாறு பயன்படுத்தப்படுகின்றது
மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும் உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில் dok anchan எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும் நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தில் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பு சங்குப்பூக்கொண்டு செய்யப்படுகிறது.
பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். ஜின் போன்ற பானங்களிலும் கூட இப்போது பலநாடுகளில் இம்மலரைச் சேர்த்து நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது
செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகளால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு நல்ல வரவேற்இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிபோன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)
இறைவழிபாட்டில் இம்மலர் மிக சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. சிவபூஜைக்குரிய மலர்களில் காலை, மதியம், மாலை என படைக்கப்படும் மலர்களின் பட்டியலில் சங்கு புஷ்பம் மதியம் பூஜை செய்யவேண்டிய மலர்கலின் பட்டியலில் இருக்கின்றது
வெண்சங்குபுஷ்பம் சிவனுக்கும், நீலம் விஷ்ணுவுக்கும் உரியது அம்பாளுக்கும் உரியதுதான் நீல சங்குபுஷ்பம். திருமியச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆலயத்தில் சதய நட்சத்திரத்தன்று தாமரை மலருக்குள் சங்குபுஷ்பத்தை வைத்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் மேகநாதனருக்கு அர்ச்சனை செய்வது மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
கோவை கொட்டிமேடு என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஷ்வரி சமேத ஸ்ரீ சங்கநாதருக்கும் சங்குபூஷ்பங்களால் அர்ச்சனை அலங்காரம் ஆகியவை விசேஷமாக செய்யப்படுகின்றது.
இத்தனை அழகிய எளிதில் வளரக்கூடிய சங்குபுஷ்ப செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யபடுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. தற்போது இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன.
ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் ஜெயமோகன் அவர்களின் பான்ஸாய் மரங்கள் குறித்த பதிவையும் வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது. பான்ஸாய் குறித்த வகுப்புக்களிலும் பயிலரங்குகளிலும் அம்மரங்களை வளர்க்கும் நுட்பங்களை சொல்லத்துவங்கும் முன்பே, ஒரு தாவரவியலாளராக இம்முறையில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் இயற்கைக்குக்கு மாறானது இவ்வளர்ப்பு முறை என்றும் சொல்லிவிடுவேன். இலைகளை பரப்பி, கிளை விரித்து மேலுயர்ந்து வரவேண்டிய மரமொன்றை, வேர்களையும் தண்டுகளையும் வளர்நுனிகளையும் தொடர்ந்து கத்தரித்து, மிகக்குறைவாக உணவும் நீரும் அளித்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்த நிமிஷக்கணக்கில் மட்டும் சூரிய ஒளியில் வைத்து, கிளைகளில் கம்பிகட்டி, முறுக்கி, இழுத்து, பிணைத்து என்று இயற்கையான வளர்ச்சியை பலவிதங்களில் கட்டுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அழகாக மேசைமீது வைத்துக்கொள்கிறோம் என்னும் அபிப்பிராயம் மட்டுமே இருந்தது. ஜப்பானியர்கள் குள்ளமென்பதால் அவர்களுன் மரங்களும் குள்ளமாக வளர்க்க விரும்புகிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்,
பற்பல வடிவங்களில், பலநூறாண்டுகள் வளர்ந்த , பழங்கள் செறிந்து பான்ஸாய் மரங்கள், கொள்ளை அழகாக இருப்பினும், எனெக்கென்னவோ அவற்றை பார்த்தால் மகிழ்ச்சியே ஏற்பட்டதில்லை எப்போதும்.
எல்லா விதமான தாவரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தாலும் பான்ஸாயை இதுவரை நான் கல்லூரியைத்தவிர வேறெங்கும் வளார்க்க முயற்சித்ததில்லை.
// குறுகும்போது கூர்கொள்வது ஞானம் //
//எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது//
// நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது. எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலே//
என்று ஜெ சொல்லியிருப்பதை வாசித்தபின்னர் பான்ஸாய் வளர்ப்பை இப்படி ஒரு அழகான கோணத்திலும் பார்க்கலாமென்று அறிந்துகொண்டேன். ஆம் நோக்க நோக்க அந்த மீச்சசிறு வடிவில் மரத்தின் வயதும் வயதுக்கேற்ற பிரம்மாண்டமும் தெரிகின்றது. மிகச்சிறிய பாட்டில் மூடி அளவிலான தட்டுக்களிலும் கூட வளர்க்கப்படும் இவற்றை மீச்சிறு மரங்கள் என்று சொல்வதும் மிகபொருத்தமாக இருக்கின்றது
Once a teacher ,always a learner என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்று ஜெ விடமி
Lupinus texensis, என்னும் தாவர அறிவியல் பெயருடைய Texas bluebonnet அல்லது Texas lupine என்பது டெக்சஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வளரக்கூடிய அழகிய அடர்நீல மலர்களை தரும் தாவரமாகும். இம்மலர்களே டெக்சஸின் மாநில மலராகவும் இருக்கின்றன Lupines எனப்படும் பேரினத்தின், Lupinus subcarnosus, L. havardii, L. concinnus, L. perennis, மற்றும் L. plattensis ஆகிய 5 சிற்றினங்களுமே நீல பொன்னெட் என்றே அழைக்கப்படுகின்றன.
கொத்துக்கொத்தாக தோன்றும் மஞ்சரிகளில் வரிசையாக அமைந்திருக்கும் மலர்களின் இதழ் அமைப்பு பெண்களும் குழந்தைகளும் அணியும் தாடைக்கு கீழ் நாடாவால் இணைக்கப்பட்டிருக்கும் bonnet என்னும் தொப்பியை போலிருப்பதால் இதற்கு blue bonnet என பெயரிடப்பட்டிருக்கின்றது. Buffalo Clover, Wolf Flower என்னும் பெயர்களும் இதற்குண்டு இவை பட்டாணி ,அவரைச்செடிகளின் குடும்பமான Fabaceae (Pea Family) யை சேர்ந்தவை
5-7 பிரிவுகளாக விரல்கள்போல் விரிந்திருக்கும், கூரான நுனிகளையுடைய பசுமைக்கூட்டிலைகளுடனும் , பீன்ஸ் பொன்ற காய்களினுள்ளே 6 அலல்து 7 மிகச்சிறிய மணிகளாக கடினமான மேலுறையுடன் இருக்கும் விதைகளையும் கொண்டிருக்கும் இந்த ஓராண்டுத்தாவரம், அதிகபட்சமாக 3 மீட்டர் உயரம் வரை வளரும்
20லிருந்து 50 செ மீ உயரமுள்ள தண்டிலிருந்து சுமார் 50 அடர் நீல மலர்களையுடைய மிதமான வாசனையுடன் மஞ்சரி உண்டாகும். மஞ்சரியின் நுனியில் மட்டும் தூவெண் நிறத்தில் மொட்டுக்கள் காணப்படும். முதிர்ந்தபின் மலர்கள் ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பூக்கும்பருவம் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை, அரிதாக மே மாதத்திலும் இவற்றைக்காணலாம். புல்வெளிகளிலும் நெடுஞ்சாலை வழியின் சரிவுகளிலும், பயிரிடப்படாத திறந்த வெளிகளிலும் இவை செறிந்து காணப்படும். மிகக்குறைவான நீரும் அதிக சூரிய வெளிச்சமும் நீர் தேங்காத மண்ணும் இவை செழித்து வளர தேவைப்படும்
1901 மார்ச் 7 அன்று டெக்சஸீன் மாநிலமலராக Lupinus subcarnosus என்னும் மற்றொரு சிற்றினமே முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரும்பாலான டெக்சஸ் மக்களின் விருப்பத்தின்பேரில் L.texensis மாநில மலராக மாற்றப்பட்டது. இம்மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும், இவை கொண்டாடப்படுவதற்கும் பிண்ணனியில் ஒரு முக்கியப்பெண்மணி இருந்திருக்கிறார்கள்
’’எங்கு மலர்கள் மலர்கிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையும் மலரும்’’ என்று அடிக்கடி சொல்லும் கல்வியாளரும் இயற்கை ஆர்வலரும் அமெரிக்காவின் 36 ஆவது அதிபரரான லிண்டன் பி ஜான்சனின் (Lyndon B Johnson) மனைவியுமான”Lady Bird” Johnson என்பவரின் முயற்சியால்தான் இன்று டெக்சஸின் நெடுஞ்சாலைகள் பலவண்ன வனமலர்களால் அழகுறக்காணப்படுகின்றது. 1965ல் அவரால் முன்னெடுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட HBA – highway beautification Act என்னும் நெடுஞ்சாலைகளை அழகுபடுத்தும் சட்டத்தின் பின்னரே இந்த செடி மிக அதிகமாக சாலியோர சரிவுகளில் பயிரிடப்பட்டது.
அதன்பின்னரே பொட்டல் வெளிகளெல்லாம் பூத்துக்குலுங்கும் ரம்மியமான இடங்களாகின சலிப்பும் சோர்வும் தரும் நெடுஞ்சாலைப்பயணங்கள் பார்வைக்கு இனிய மலர்களின் காட்சிகளுடன் மிக இனிதான விரும்பத்தக்க பயணங்களாகியது. இதன் பொருட்டு இவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளான presidential Medal of Freedom மற்றும் Congressional Gold Medal, ஆகியவை அளிக்கப்பட்டன. 1982:ல் ஆஸ்டினில் இவரால் உருவாக்கப்பட்ட தேசிய வனமலர்கள் ஆராய்ச்சி நிலையம் பின்னர் 2006ல் டெக்சஸ் பல்கலையுட்ன இணைக்கப்பட்டது..
இவரது வழிகாட்டலின் பேரில் 1932ல் ஜெக் கப்பல்ஸ் (Jac Gubbels) என்னும் புகழ்பெற்ற நிலவடிவமைப்பாளரை டெக்சஸின் நெடுஞ்சாலைத்துறை பணியிலமர்த்தி நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சரிவுகளிலும் வனச்செடிகளை வளர்க்கத்துவங்கினார்கள், இன்றும் வருடத்திற்கு 30 ஆயிரம் பவுண்டுகள் வனமலர்ச்செடிகளின் விதைகளை இத்துறை வாங்குகின்றது
1912ல் பிறந்து பெரும்பாலான நிலப்பரப்புக்களை கொள்ளை அழகாகவும் வண்ண மயமாகவும் மாற்றிய இவர் தனது வாழ்நாளின் பிற்பாதியிலிருந்து மரணம் வரை உடல்நலக்குறைவால் கண் பார்வையின்றி இருந்தது வாழ்வின் முரண்களிலொன்று, 1912ல் பிறந்து 2007ல் தனது 94 வயதில் இவர் மரணமடைந்தார்
டெக்சஸ் மக்கள் அனைவருமே இம்மலர்கள் பூக்கும் பருவத்தில் குடும்பத்துடனும் வளர்ப்பு பிராணிகளுடனும் சென்று மலர்களின் இடையிலும் அவற்றின் பிண்ணனியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர். டெக்சஸ் நகரவாசிகளின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட இம்மலரைக்குறித்தும் அச்செடிகள் வளர்ந்து மலர தயாராகிவிட்டதாவெனவும் கிருஸ்துமஸ் முடிந்த உடனேயே மக்கள் பேசிக்கொள்ள துவங்குவார்கள்
1933 லேயே இம்மலர்களுக்கான பிரத்யேக பாடலொன்றும் டெக்சஸின் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பாடலை இணையத்தில் காணலாம். டெக்சஸின் Chappell Hill என்னுமிடத்தில் இம்மலர்களுக்கான வருடந்திர விழா நடைபெற்று வருகின்றது
காற்று மண் மற்றும் நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை கிரகித்துக்கொள்ளும். எனவே விதைகளிலும் தாவரபாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும் தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளை சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ , அல்லது ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதைஉறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்
இவை பூக்கும் காலத்தில் எங்கெங்கு மலர்கள் அதிகமாக காணப்படும் என்னும் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக GPS சேவைகளும், புகைப்ப்டமெடுக்க வழிகாட்டுதல்களும், மக்கள் கூட்டமாக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி இவற்றை கண்டுமகிழ்வதால் அப்போது பின்பற்றவேண்டிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளும் பரவலாக தெரியப்படுத்தப்படுகின்றன. இப்பருவத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று அழைத்துச்செல்ல பல சுற்றுலா குழுமங்களும் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களில் ,இப்போது 2019ல் தான் இவை மிக அதிகமாக பூத்திருப்பதாக சொல்லப்படுகின்றது .இவற்றின் புகைப்படங்களுக்கென்றே பல இணையதளங்களும் இருக்கின்றன
அயர்லாந்தின் ஷம்ராக் மற்றும் ஜப்பானின் செர்ரி மலர்களுக்கும் ஃபிரான்ஸின் லில்லிகளுக்கும் இங்கிலாந்தின் ரோஜாக்களுக்கும் ஹாலந்தின் ட்யூலிப் மலர்களுக்கும் இணையானதாக சொல்லப்படும் இம்மலரைக்குறித்த கவிதைகளும் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன. இவை பூக்கும் காலத்தில் இவற்றின் சித்திரங்கள் தீட்டப்பட்ட உடைகளும் திரைச்சீலைகளும் அதிகம் விற்பனைக்கு வரும் டெக்சஸுக்கு இம்மலருக்காகவேனும் ஒருமுறை வரவேண்டும் என இந்தியாவிலிருக்கும் அனைவரையும் நினைக்கவைக்கும்படியான பிரமிக்க வைக்கும் அழகினைக்கொண்ட சுவாரசியமான மலர் இந்த blue bonnet.
செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான –Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும். ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர்.
செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும். ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும் வகைக்கேற்றபடி காணப்படும்.
ஜப்பானியர்கள் இதை சகுரா அல்லது ஊமி மரம் (Umi) என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக (sato zakura) சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள் யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை யேசகுரா (yaezakura) என்றூம் அழைக்கப்படுகின்றன. இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862ல் ஜப்பானிலிருந்து வட அமெரிக்காவிற்கு G.R. Hall என்பவர் கொண்டு வந்தபின்னர் அங்கும் இவை வளர்கின்றன.
Prunus serrulata எனப்படும் செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவை தாயகமாக கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம் 26–39 அடி வரை (7.9–11.9 m). வளரும் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரஙகள் எனப்படும் lenticels நிறைந்தும் காணப்படும். இலைகள் ஓரங்களில் பற்கள்போன்ற அமைப்புடன் எதிரடுக்கில் நீள்முட்டை வடிவிலிருக்கும். மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மிமி அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதிலும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன
இம்மரங்கள் வருடா வருடம் பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது.. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாக பூத்துக்குலுங்கி பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தை சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஜப்பானிய வானிலை தகவல் தளத்தில் பல்வேறு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.. ஹனமியின் போது பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். இரவில நடத்தப்படும் ஹனாமி யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும் காலத்தில், நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படுகிறது, இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும் ஓய்வெடுத்தும் மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்,
பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக்காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்
. இங்கு 100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடபட்டுள்ளது. பல நாடன் பாடல்களும் பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் கால்த்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுபுத்தகங்கள், குடைகள், அலங்காரப்பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சகுரா என்று பெயரிடுகிறார்கள்.
ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா, வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன
ஹனாமியின் சிறப்பு உண்வு வகைகள்
“cherry blossom sake,” – சகுரா மலர்கள் மிதக்கும் அரிசி மது
சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேனீர், சோயா பால் மற்றும் கோலா
Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு,பொறித்த காய்கறிகள், போன்றவைகள் இருக்கும் மதிய உணவுப்பெட்டி
Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால் , சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்
sakura mochi எனப்படும் சகுரா இலைகளால் சுற்றி வைக்கபட்டிருக்கும் சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகள்