நெல் (rice) என்பது ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத் தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் அரிசி என்னும் உணவாகிறது. உலகில் சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் நெல்லாகும்.
ஆசியாவில்தான் நெல் சாகுபடி முதன்முதலாக கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. Oryza rufipogan என்னும் அறிவியல் பெயருடைய காட்டு நெல்லினத்திலிருந்து ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் உருவாக்கபட்டு பயிரிடப்பட்டன.
இந்தியாவில் Oryza sativa var. indica வும், சீனாவில் Oryza sativa var. japonica வும் சாகுபடி செய்யப்பட்டன.
சங்கப்பாடல்களில் வேகவைத்தபிறகு கட்டைவிரல் தடிமனில் இருந்த ஒரு வகை நெல் உள்ளிட்ட பல நெல்வகைகளை பற்றிய 45 குறிப்புக்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 2 லட்சம் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது நாம் அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டிருக்கிறோம்
பாஸ்மதி அரிசி
நெல் ரகங்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல்வேறு சாதாரண அரிசி வகைகளுடன் நீளமான, மணமுடைய ‘பாஸ்மதி’ அரிசி, நீளமான, சன்னமான ‘பாட்னா’ அரிசி, குட்டையான ‘மசூரி’ அரிசி ஆகிய ரகங்களும் அதிகம் பயிரிடப்படுகின்றன. தென்னிந்தியாவில், சுவையுள்ள சன்ன ரக ‘பொன்னி’ அரிசி பிரபலமானது
மட்டை அரிசி
நெல்லின் உண்ணமுடியாத Hull/Husk எனப்படும் உமி மட்டும் நீக்கப்பட்டதே மட்டைஅரிசி (Brown rice) மட்டை அரிசியின் மேலடுக்கான Bran எனப்படும் தவிடும் நீக்கப்பட்டதே பச்சரிசி (White rice) புழுங்கல் அரிசி (Par boiled Rice) எனப்படுவது உமி நீக்கும் முன்பாகவே நீராவியில் வேகவைத்து தயரிக்கப்படும் ஒரு வகையாகும்
நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, அதன் உமி மற்றும் தவிட்டு அடுக்குகள் நீக்கப்பட்டு வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால் கிடைப்பதே “பச்சரிசி” எனப்படுகிறது. நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பிற அரிசி ரகங்களைக்காட்டிலும் இந்த ரகத்தையே அதிகம் விரும்பி உபயோகிப்பார்கள்.
பச்சரிசி
நீரில் ஊறவைத்த நெல்லை, நீராவியிலோ அலல்து கொதிநீரிலோ வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைக்கப்படுவதே ‘புழுங்கல்’ அரிசி . கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், உமியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டதால், ஒரு விதமான வாசம் உடையதாய் இருக்கும்.
அரிசியை இப்படி அவித்து அல்லது புழுங்க வைத்து அதன் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தும் கலை பன்னெடுங்காலமாகவே பிரதான உணவாக அரிசி இருக்கும் பல நாடுகளில் இருந்து வருகின்றது.
புழுங்கல் அரிசி தயாரிப்பில் முக்கியமானவை;
ஊறவைத்தல்-(Soaking) அறுவடை செய்த நெல்லை வெதுவவெதுப்பான நீரில் ஊறவைக்கையில் அதன் ஈரப்பதம் அதிகரிக்கின்றது
நீராவியில் வேகவைத்தல்-(Steaming) நீராவியில் வேக வைக்கையில் நெல்லின் கார்போஹைட்ரேட்டுக்கள் பசை போலாகின்றது. மேலும் நீராவியின் வெப்பத்தில் நெல்லிலிருக்கும் நுண்கிருமிகளும் நீக்கப்படுகின்றன
உலரவைத்தல்; (Drying) ஆலைகளுக்கு கொண்டுசெல்லும் முன்பாக நீராவியில் வேகவைத்த நெல் நன்கு உலரவைக்கப்டும்
அவித்தல் அல்லது புழுங்குதல் முறையின் மூலம், வெளிப்புற உமி, தவிட்டின் வைட்டமின்கள், உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசி மணிக்குள் திணிக்கப்படுவதால், புழுங்கலரிசியின் ஊட்டச்சத்து பச்சரிசியை விட மிக அதிகமாகின்றது.
அவித்த அரிசி லேசான பழுப்பு நிறத்தில், உமி நீக்க ஆலைகளில் அரைபடுகையில் உடையாமல் உறுதியுடனும் இருக்கும்.
வேகவைக்கும் போது பச்சரிசியிலிருக்கும் மாவுச்சத்துக்கள் பசைபோலாகி (Gleatinised) தயாமின் எனும் வைட்டமின் மற்றும் அமைலோஸ் சத்துக்களும் பச்சரிசிலிருந்ததை விட அதிகரிக்கின்றது. பச்சரிசியை விட புழுங்கல் அரிசி குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது
தென்னிந்தியாவில் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே அதிகம் உபயோகத்திலிருக்கிறது. தீட்டப்பட்ட வெள்ளையரிசியை விட தீட்டப்படாத புழுங்கல் அரிசியில் உடலின் ஆற்றலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆனால் மெக்னீஷியம், ஜின்க் போன்ற நுண்சத்துக்கள் பிற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் புழுங்கல் அரிசியில் குறைவு
உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல் வேகவைக்கப்படுகிறது. இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன, அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.
புழுங்குதல் அன்னும் செயலினால் அரிசியின் நார்ச்சத்துக்களும் கால்சியம் பொட்டஷியம் மற்றும் விட்டமின் B-6 ஆகியவற்றின் அளவு பிற அரிசி ரகங்களைக்காட்டிலும் அதிகரிக்கின்றது
உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை 3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும் 2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில் மட்டும் உள்ள தாவரங்கள் 45,000 (7.8%). இவற்றில் 33% தாவரங்கள் இந்தியாவில் பூர்வீகமாக உள்ளவை. இதில் 15,000 பூக்கும் தாவர இனங்களாகும். இந்தியாவின் வடகிழக்கு பகுதி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வடமேற்கு மற்றும் கிழக்கு இமயமலைப் பகுதிகளில் அரிய தாவரங்கள் செறிந்து காணப்படுகின்றன. இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வடகிழக்கு இமாலய பகுதி உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கச்செறிவு உள்ள பகுதிகள் உலகிலேயே மொத்தம் 34 தான் உள்ளது
உலகின் பூங்கா என்றழைக்கப்படும் இந்தியாவெங்கிலுமே மருத்துவத் தாவரங்கள் செழித்துக்காணப்படுகின்றது. பல்வேறு நாட்டுப்புற மருந்துகளும்,பாரம்பரிய சிகிச்சை முறைகளும் மிகப் பரவலாக புழக்கத்தில் உள்ள இந்தியாவில் மிகத்தொன்மையான காலந்தொட்டே அரிய மருத்துவக்குணங்கள் உள்ள தாவரங்கள் இமாலயத்தில் வளர்கின்றன
பனிசூழ்ந்த என்று பொருள் கொண்ட ’’இமாச்சல’ பகுதி, உலகின் மொத்த தாவர இனங்களின் 10 சதவீதத்தையும் இந்தியாவின் 50 % தாவரங்களையும் கொண்டது. வடகிழக்கு இமாலய பகுதி தாவர சிற்றினங்களின் தொட்டில் என்றே அழைக்கப்படுகிறது.
இமயத்திலிருக்கும் அரிய தாவரங்களிலொன்றான அமலபர்ணி / ஏகாவீரா எனும் பெயரகளில் அழைக்கப்படும் Rheum nobile பனிமூடிய சிகரங்களின் உச்சியில் சுமார் 50,000அடி உயரத்தில் மிக அதிக புற ஊதாகக்திர்வீச்சும் பனிப்பொழிவுமாக இருக்கும் சூழலில் வளரும் ஒரு மருத்துவத்தாவரமாகும். பிரகாசமான தந்த நிறத்தில் கூம்புவடிவ கோபுரம்போல வளர்ந்திருக்கும் 2 லிருந்து 6 அடி வரை வளரும் இத்தாவரம் பளபளப்பான இலைகளை கொண்டது.
இமயமலையிலும், ஆஃப்கானிஸ்தான், திபெத், பூட்டான், பாகிஸ்தான், சிக்கிம் . சீனா மற்றும் மியான்மரில் உயரமான இடங்களில் மட்டும் இத்தாவரங்கள் காணப்படுகின்றன. சிக்கிம் மாநிலத்தின் லாச்சென் நகரத்தில் 14,000 அடி உயரத்தில் வளர்ந்திருந்த இத்தாவரத்தின் விசேஷமான வாழிடம், தோற்றம் மற்றும் பண்புகள் குறித்த முதல் ஆய்வுக்கட்டுரை 1855ல் தாவரவியலாளர்கள் ஹூக்கர் மற்றூம் தாமஸ் ஆகியோரால் எழுதி வெளியிடபட்டது.
தாவரவியலாளர் ஹூக்கர் வரைந்த சித்திரம்
சிவந்த இலைக்காம்பும் நரம்புகளும் கொண்ட, வட்ட வடிவில் அமைந்திருக்கும் இலைகளும் அவற்றின் மீது உயரமாக கூம்பு வடிவில் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியதுபோல தடிமனான இலைச்செதில்களும் அமைந்திருக்கும் சிக்கிம் ருபர்ப் என அழைக்கப்படும் இந்த மருத்துவத்தாவரத்தின் நுனியில் மட்டும் இலைச்செதில்களின் விளிம்புகள் இளஞ்சிவப்பிலிருக்கும்.நுண்ணிய பசும்மலர்க்கொத்துக்கள் இலைச்செதில்களின் உள்ளிருக்கும்.
இச்செடி அசாதாரணசூழலில் வாழும் பொருட்டான பல தகவமைப்புக்களை கொண்டிருக்கிறது. வரிசையாக ஒன்றின் மீதொன்று படிந்திருக்கும் இலைச்செதில் (bracts) அமைப்புக்களினுள்ளே மலர்களையும் கனிகளையும் பொதிந்து வைத்து உறைபனியிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும், Quercetinflavonoids என்னும் வேதிப்பொருளின் உதவியால் புறஊதாக்கதிர்களை வடிகட்டி, ஒளியை தனக்குள்ளே கடத்தும் அரிய தகவமைப்புக்கொண்ட இந்த தாவரம் இமயத்தின் பல அற்புதங்களில் ஒன்றாகும்.
பாலிகோனேசியே குடும்பத்தைச்சேர்ந்த இத்தாவரத்தின் வேர்கள் உட்பகுதி அடர் மஞ்சளாக, முழங்கை தடிமனில் 7 அடிஆழம் வரை சென்றிருக்கும்.’’சுக்கா’’ என்றழைக்கப்படும் மெல்லிய அமிலச்சுவையுடன் இருக்கும் இதன் தண்டுகளை உள்ளூர் வாசிகள் உணவாக உட்கொள்ளுகின்றனர். மூங்கில்களைப்போல் உட்புறம் காலியாக இருக்கும் தண்டுகளுக்குள் துல்லிய இனிய சுவையான நீரிருக்கும்
மகரந்தச்சேர்க்கை
ஜூன்-ஜூலை மதங்களில், மலர்கள் மலர்ந்த பிறகு தனித்தனியே பிரிந்து ஆழ்ந்த சிவப்பு நிறமாகிவிடும் இலைச்செதில்கள், கனிகள் முதிர்ந்தபின்னர் உதிர்ந்துவிடும். அடர் காபிக்கொட்டை நிறத்தில் கொத்துக்கொத்தாக பழங்கள் இலைகளற்ற தண்டுகளில் அழகாக தொங்கிக்கொண்டிருக்கும்.
ஒளியை வடிகட்டி தேவையான ஒளியை மட்டும் தனக்குள்ளே ஊடுருவிச்செல்ல அனுமதித்து இலைச்செதில்களின் உட்புறம் மிதமான வெப்பத்துடன் இருப்பதால், இத்தாவரம் ’’ glasshouse plant ’’ என்றும் அழைக்கப்படுகிறது .
இருபாலின மலர்களில் காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும். கனிகள் ஆகஸ்ட் செப்டம்பரில் முதிர்ந்து விடும். பனிப்பொழிவு மிகுந்த வாழிடமாதலால் மகரந்தசேர்க்கைக்கு தேவையான பூச்சிகளும் இங்கு மிகக்குறைவு அதற்கு தேவையான தகவமைப்பையும் கொண்டிருக்கும் இச்செடியின் 93 % மலர்களில் மகரந்ச்சேர்க்கை நடந்து விடுகின்றதென்பதும் அதிசயமே! Bradysia என்னும் சிறிய பறக்கும் பூச்சி இனங்கள் இச்செடியின் இலைச்செதிலுக்குள்ளிருக்கும் வெப்பத்தில் தங்களது முட்டைகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு, இந்த உதவிக்கு மாற்றாக இச்செடியின் மகரந்தசேர்க்கைக்கு உதவுகின்றது. இந்த இரு உயிரினங்களும் பரஸ்பரம் உதவியாக இருந்து தொடர்ந்து இப்பகிர்வாழ்வில் இருந்து வருவதும் அதிசயமே. இப்பூசிகளை கவரும் வேதிப்பொருட்களை இச்செடி சுரந்து காற்றில் பரப்புகின்றது.
தாவரபாகங்கள் பாரம்பரிய மருத்துவத்தில் ஜீரணத்தை தூண்டவும் குடற்புழுக்களை நீக்கவும், சிறுநீர் பெருக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. உடலில் சேர்ந்திருக்கும் அசுத்த நீரை வெளியேற்றவும் வீக்கங்களை வடியச்செய்து குணமாக்கவும் இவை அதிகம் பயன்படுத்தபடுகின்றன. இதன் மருத்துவ குணங்களுக்கு இவற்றிலுள்ள Rutin, quercetin 3-O-rutinoside, Guaijaverin, quercetin 3-O-arabinoside, Hyperin, quercetin 3-O-galactoside, Isoquercitrin, quercetin 3-O-glucoside,, quercetin 7-O-glycoside, quercetin , kaempferol glycoside& feruloylester ஆகிய வேதிப்பொருட்களே காரணமாக இருக்கின்றன
டாகா (‘taga’)என அழைக்கபடும் இதன் வேர்களிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் சாயத்தில், அந்தப்பகுதி மக்கள் கம்பளிகளுக்கு சாயமேற்றுகிறார்கள்.
அப்படியான அசாதாரண வாழிடங்களில், அத்தனை உயரத்தில் வளரும் பல தாவரங்கள் பாறைகளின் பின்னே மறைந்தும் தரையோடு தரையாக பரவி வளர்ந்தும், சிற்றிலைகளை மட்டும் உருவாக்கியும், அங்கிருக்கும் மிகக்குறைந்த வெப்பம், கடும் பனிப்பொழிவு மற்றும் அதிக புறஊதா கதிர்வீச்சு ஆகிவற்றிலிருந்து தப்பிக்கும் ஆனால் அமலபர்ணி அப்படியல்ல, தௌந்த தகவமைப்புக்களுடன் நிமிர்ந்து பெரிய முறம்போன்ற இலைச்செதில்களுடன், சிறு கோபுரம்போல எழுந்து 6அடி வரை வளர்ந்து கம்பீரமாக மனிமலையின் உச்சியில் நிற்கிறது.
இந்த தாவரத்தை பொது ஊடகங்களில் சிலர் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மகாமேரு என்று உண்மைக்கு புறம்பான செய்தியை பலஆண்டுகளாக புகைப்படத்துடன் பகிர்ந்தவாறே இருக்கிறார்கள். இது அரியதுதான், இயற்கையின் அதிசயங்களிலொன்றுதான் ஆனால் 400 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் தாவரமல்ல, வருடத்துக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரம்தான். நூற்றுக்கணக்கான் வருடங்களுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் தாவரமேதும் இப்புவியில் இல்லை.
சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், கருவிளை, மாமூலி, காக்கட்டான், காக்கரட்டான், நீல காக்கட்டான், சங்கங்குப்பி, சங்க புஷ்பி, சுபுஷ்பி, மோஹநாசினி, ஸ்வேதா என பலபெயர்களில் அழைக்கப்படுகின்ற இக்கொடி ஃபேபேசியே குடும்பத்தை சேர்ந்தது. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ எனறழைப்பார்கள். இதன் ஆங்கிலப்பெயர்களாவன; Blue butterfly, Asian pigeon wings, Butterfly pea, Bluebell vine, Blue pea, Kordofan pea & Darwin pea, மகாபாரதம் இதனை அபராஜிதா என்கிறது, ‘’கார்க்கோடப் பூ” என்கிறாள் ஆண்டாள். அரவிந்த அன்னை இம்மலரை’’ கிருஷ்ணனின் ஒளி’’ என்கிறார்
சங்குப்பூ காடுகள்.தரிசு நிலங்கள், வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. இச்செடியின் இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை. இதில் வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் அரிதாக வளர்வதுண்டு. வெள்ளை, நீலம் இரண்டு வகைச்செடிகளுமே மருத்துவப் பயன் கொண்டவை.
சங்குப்பூ ஏறு கொடி வகையை (Climber) சார்ந்தது. இளம் பச்சை கூட்டிலைகளையும், பளிச்சிடும் அடர்நீல நிறமான மலர்களையும் உடையது. சிறிய நீளமான காய்கள் தட்டையாக இருக்கும். இச்செடியின் பூ நன்றாக விரிந்து மலர்ந்திருக்கும்போது, ஒரு சங்கைப்போல தோன்றுவதால் சங்குப்பூ என்று பெயர் வந்தது. வெள்ளை, ஊதா, கருநீலம் மட்டுமல்லாது கலப்பு வண்ணங்களிலும், இளநீலத்திலும் கூட மலர்கள் இருக்கின்றன.
தாவரவியல் வகைப்பாட்டியலில் இத்தாவரம், Clitoria என்ற பேரினத்தினைச் சார்ந்தது. இப்பேரினத்தின் கீழ் 50 க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அடர் நீலநிறப் பூக்களுடன் இருக்கும் Clitoria ternatea தமிழில் கருவிளை எனவும், வெள்ளை நிற மலர்களைக் கொண்ட Clitoria ternatea var. albiflora Voigt செருவிளை எனவும் தமிழ்ப்பெயர்களை கொண்டிருக்கின்றன.
ஆசியாவை தாயகமாக கொண்ட இச்செடி தற்பொழுது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது. கொடி போல் வளரும் இயல்புடைய இவை பற்றிக்கொள்ள துணை இல்லாத இடங்களில் தரையிலேயே அடர்ந்து புதர்போல பரவி வளரும். ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் இச்செடி செழித்து வளரும். சிறிய 4-10 செமீ நீளமே உள்ள இளம்பச்சை பீன்ஸ் போன்ற காய்களில் 6 முதல் 10 தட்டையான விதைகள் இருக்கும். ஆழமாக வளரும் இதன் ஆணிவேர்கள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிறுத்தி மண்ணை வளமாக்குகிறது.
ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் வகையான இக்கொடியில் 4×3 செமீ அளவில் நன்கு மலர்ந்த மலர்கள் இருக்கும் . மலர் உள்ளிட்ட இச்செடியின் பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்கள் ternatins , triterpenoids, flavonol glycosides, anthocyanins , steroids, Cyclic peptide-cliotides ஆகியவை. மலரின் அடர் நீலநிறம் இதிலிருக்கும் anthocyanins வகையைச்சேர்ந்த delphinidin. என்னும் நிறமியால் உணடானது. மலர்கள் பட்டாம்பூச்சியின் இறகுகளைப்போல அழகுற அமைந்திருக்கும்.
இச்செடி முதன்முதலில் 1678ல் Rumpf என்னும் ஜெர்மனியைச் சேர்ந்த தாவரவியலாளரால் Flos clitoridis ternatensibusஎன்று பெயரிடப்பட்டிருந்தது. பிறகு 1800ல் மற்றோரு ஜெர்மானிய தாவரவியலாளரால் இவை டெர்னேஷியா தீவுகளில் கண்டறியப்பட்டபோது மலர்களின் அமைப்பைக்கொண்டு அதே பெயரில்தான் அழைக்கப்பட்டன.
இதன் பேரினப்பெயரான Clitoria என்பது மலர்களின் தோற்றம் பெண இனப்பெருக்க உறுப்பை ஒத்திருப்ப்தால் லத்தீன் மொழியில் பெண்ணின் ஜனன உறுப்பை குறிக்கின்றது. ஆனால் பல தாவரவியலாளர்கள் (James Edward Smith -1807, Amos Eaton – 1817, Michel Étienne Descourtilz -1826 & Eaton and Wright -1840) இத்தனை அப்பட்டமாக ஒரு தாவரத்திற்கு பெயரிடுவது குறித்து தொடர்ந்து பல வருடங்கள் பலவாறு எதிர்ப்பை தெரிவித்துVexillaria,Nauchea போன்ற வேறு பல பெயர்களையும் பரிந்துரைத்தார்கள் ஆனாலும் Clitoria என்னும் இந்தப்பெயர்தான் நிலைத்தது. பலநாடுகளிலும் வட்டார வழக்குப்பெயரும் இதே பொருளில்தான் இருக்கிறது. இந்தோனேஷிய தீவுக்கூட்டங்களிலொன்றான ’டெர்னேஷியா’விலிருந்து கொண்டு வந்த செடிகளாதலால் தாவர வகைப்பாட்டியலின் தந்தையான லின்னேயஸ் சிற்றினப்பெயராக ternatea என்பதையே வைத்தார்.
இச்செடியின் இளம் தண்டுகள், மலர்கள், இலைகள் மற்றும் பிஞ்சுக்காய்கள் ஆகியவை உலகின் பல்வேறு பகுதியில் உணவாக உண்ணப்படுகின்றன. தேனீக்கள் மற்றும் சிறுபூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் இச்செடியின் மலர்கள் பட்டுபூச்சிகள், மற்றும் பறவைகளை வெகுவாக கவரும்.
வேகமாக வளரும் இயல்புடைய, விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் இச்செடி விதைத்த 6 அல்லது 7 ஆவது வாரத்திலிருந்து மலர்களை கொடுக்கத் துவங்கும்
குறிஞ்சிப்பாட்டு, சீவகசிந்தாமணி மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக சொல்லப்படும் சிதம்பர நாத மாமுனிவர் இயற்றிய நடராஜ சதகம் ஆகியவற்றில் சங்குபுஷ்பங்களை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றது
பழந்தமிழ் இலக்கியங்களில் இம்மலர் ’’மணியைப் பார்ப்பது போல நீல நிறத்தில் இருக்கும், மயில்-பீலியின் கண் போல் இருக்கும்., கண்ணைப்போல் இருக்கும். கண்ணைப் போல் மலரும்’’.என்று பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது
மணிப்பூங் கருவிளை – குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
மணி கண்டு அன்ன மா நிற கருவிளை/ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற்றிணை 221/1,2
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறுந்தொகை 110/4
தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற்றிணை 262/1
கண் என கருவிளை மலர பொன் என – ஐங் 464/1
நீர் வார் கண்ணின் கருவிளை மலர – அகம் 294/
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/11
உழவுத் தொழிலால் உடல் கருத்த வேளாளன் உடல் நிறத்தால், “கருவிளை புரையும் மேனியன்’ எனப்பட்டான். இச்செடியின் வெண்மலர்கள் அரிதாகவே காணக்கிடைப்பதைபோலவே இலக்கியங்களிலும் அதிகமாக நீலமலர்களும் குறிஞ்சிப் பாட்டு ஒன்றில் ஒரிடத்தில் மட்டும் வெண்மலர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரும்பைக் குழம்பாக்க இம்மலர்ச்சாறு பயன்படும் என்றும் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
கால்நடைத்தீவனமாகவும் உணவாகவும் மருந்தாகவும் உணவு நிறமூட்டியாகவும் இதன்பயன்பாடுகள் ஏராளமாக இருப்பினும் தென்னிந்தியாவில் இச்செடி வழிபாட்டுக்குரிய மலர்களை கொடுப்பதாகவும், அலங்காரச்செடியாகவும் மட்டுமே கருதப்படுகின்றது . அதன் பிற பயன்களை அவ்வளவாக அறிந்திராத தென்னிந்தியாவை பொருத்தவரை இச்செடி மிக குறைவாகவே பயன்கள் அறியப்பட்டு உபயோகத்திலிருக்கும் தாவரமாகவே (underutilized plant) இருக்கின்றது.
தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூவின் சாறு பயன்படுத்தப்படுகிறது. மலர்களை சூடான அல்லது குளிர்ந்த பானமாக அருந்துவதன் மூலம் இதன் அநேக மருத்துவ பலன்களை எளிதாக பெறலாம். பத்து அல்லது 12 புதிய அல்லது உலர் மலர்களை கொதிநீரில் இட்டு நீர் நீலநிறமகும் வரை கொதிக்கவைத்து வடிகட்டி ஒரு கோப்பை பானம் தயாரித்து அருந்தலாம்
சாலட்களில் மலர்களையும் இளம் இலைகளையும் காய்களையும் பச்சையாகவே உண்ணலாம். உலர்ந்த மலர்களும் விதைகளும் கூட உணவில் சேர்க்கப்படுகின்றது
சீன பரம்பரிய மருத்துவத்திலும் ஆயுர்வேத மருத்துவத்திலும் பலநோய்களுக்கு தீர்வாகும் முக்கியமான மருந்தாக இது உபயோகிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் இம்மலர்கள் நினைவாற்றலுக்கும் மனச்சோர்வு நீங்கவும் வலிப்புநோய் தீரவும் தூக்கம் வரவழைக்கவும் கொடுக்கப்படுகின்றது. பல்லாண்டுகளாகவே பெண் மலட்டுத்தன்மையை நீக்கவும், பால்வினை நோய்களை குணமாக்கவும் சீன பாரம்பரிய மருத்துவம் சங்குபுஷ்பச்செடியை பயன்படுத்துகிறது .
மலர்களில் இருக்கும் Acetylcholine என்னும் வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுகின்றது. தொடர்ந்து அருந்துகையில் நினைவாற்றல் பெருகும். Cyclotides, என்னும் புற்றுநோய்க்கெதிரான வேதிபொருள்களை கொண்டிருக்கும் ஒருசில அரிய தாவரங்களில் சங்குபுஷ்பமும் ஒன்று. இச்செடியின் வேர்கள் conjunctivitis. எனப்படும் இமைப்படல அழற்சிக்கு நல்ல மருந்தாகும்
சாதாரண தலைவலி, கைகால் வலி, அசதி போன்றவற்றிற்கும் சங்குபுஷ்ப பானம் நல்ல நிவரணம் தரும். இப்பானம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
மலர்களின் அடர் நீல நிறம் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் மனதை அமைதிப்படுத்துகின்றது. உணவிலிருக்கும் சர்க்கரை ரத்தத்தில் சேரும் வேகத்தைக் குறைப்பதால் சர்க்கரை நோய்க்கும் நல்ல மருந்தாகின்றது. பாலுணர்வை தூண்டவும் இம்மலர்கள் பலநாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தபடுகின்றது வேர்கள் சிறுநீர் பெருக்கும். பாம்புக்கடிக்கு விஷமுறிவாகவும் இச்செடியை பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்
மலர்களின் சாற்றுடன் உப்புசேர்த்து கொதிக்கவைத்து அந்த நீராவியை காதில் காட்டினால் காதுவலி குணமாகும் இதன் உலர்ந்த இலைகளை மென்று உண்டாலே தலைவலி, உடல்வலி நீங்கும் சுவையை மேம்படுத்த சங்குபுஷ்ப பானத்துடன் தேன், சர்க்கரை, இஞ்சி அல்லது புதினா, எலுமிச்சம்புல், எலுமிச்சச்சாறு சேர்த்தும் அருந்தலாம். எலுமிச்சைச்சாறு சேர்க்கையில் நீலநிறம் இளஞ்சிவப்பாகிவிடும்
தென்கிழக்கு ஆசியாவில் இம்மலர்கள் bunga telang என்னும் பெயரில் இயற்கையான உணவு நிறமூட்டியாக பயன்படுத்தப்படுகிறது, மலாய் உணவுகளில் அரிசிச்சோற்றை நீலநிறமாக்க சங்குப்பூச்சாறு பயன்படுத்தப்படுகின்றது
மலேசியாவின் சில பகுதிகளில் சங்குபுஷ்பத்தின் அரும்புகள் சிலவற்றை அரிசி வேகும்போது சேர்த்து இளநீல நிறமான nasi kerabu. எனப்படும் உணவை தயாரிக்கிறார்கள் தாய்லாந்தில் dok anchan எனப்படும் இந்த மலரிலிருந்து தயாரிக்கப்படும் நீலநிற சர்பத் எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தப்படுகின்றது. தாய்லாந்தில் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பு சங்குப்பூக்கொண்டு செய்யப்படுகிறது.
பர்மாவிலும் தாய்லாந்திலும் மாவில் தோய்த்த இம்மலர்களை பஜ்ஜி போல் பொறித்தும் உண்கிறார்கள். ஜின் போன்ற பானங்களிலும் கூட இப்போது பலநாடுகளில் இம்மலரைச் சேர்த்து நிறம் இளஞ்சிவப்பாக மாறிய பின் பருகும் வழக்கம் இருக்கிறது
செயற்கை உணவு நிறமூட்டிகளின் பக்க விளைவுகளால் இம்மலர்களிலிருந்து எடுக்கப்படும் நிறமூட்டிகளுக்கு நல்ல வரவேற்இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் நிலக்கரி சுரங்கத்தின் சுற்றுப்புறங்களில் தாவரங்கள் அழிந்து மலடாகிபோன மண்ணில் இவற்றை வளர்க்கிறார்கள். (revegetation crop)
இறைவழிபாட்டில் இம்மலர் மிக சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. சிவபூஜைக்குரிய மலர்களில் காலை, மதியம், மாலை என படைக்கப்படும் மலர்களின் பட்டியலில் சங்கு புஷ்பம் மதியம் பூஜை செய்யவேண்டிய மலர்கலின் பட்டியலில் இருக்கின்றது
வெண்சங்குபுஷ்பம் சிவனுக்கும், நீலம் விஷ்ணுவுக்கும் உரியது அம்பாளுக்கும் உரியதுதான் நீல சங்குபுஷ்பம். திருமியச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகையின் ஆலயத்தில் சதய நட்சத்திரத்தன்று தாமரை மலருக்குள் சங்குபுஷ்பத்தை வைத்து அங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் மேகநாதனருக்கு அர்ச்சனை செய்வது மிகச்சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.
கோவை கொட்டிமேடு என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅகிலாண்டேஷ்வரி சமேத ஸ்ரீ சங்கநாதருக்கும் சங்குபூஷ்பங்களால் அர்ச்சனை அலங்காரம் ஆகியவை விசேஷமாக செய்யப்படுகின்றது.
இத்தனை அழகிய எளிதில் வளரக்கூடிய சங்குபுஷ்ப செடியை வீடுகளிலும், தோட்டங்களிலும், பூத்தொட்டிகளிலும் வளர்த்து பயன்பெறலாம். தற்பொழுது பல இடங்களில் இதன் மருத்துவப்பயன்களுக்காக இவை சாகுபடி செய்யபடுகிறது. இதன் உலர்ந்த மலர்களும் மலர்ப்பொடியும் சந்தையில் கிடைக்கின்றது. தற்போது இதன் பலன்களை அதிகம் பேர் அறிந்துகொண்டிருப்பதால் ஆன்லைன் வர்த்தகத்திலும் இம்மலரின் தயாரிப்புக்கள் விற்பனையில் இருக்கின்றன.
ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் ஜெயமோகன் அவர்களின் பான்ஸாய் மரங்கள் குறித்த பதிவையும் வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது. பான்ஸாய் குறித்த வகுப்புக்களிலும் பயிலரங்குகளிலும் அம்மரங்களை வளர்க்கும் நுட்பங்களை சொல்லத்துவங்கும் முன்பே, ஒரு தாவரவியலாளராக இம்முறையில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் இயற்கைக்குக்கு மாறானது இவ்வளர்ப்பு முறை என்றும் சொல்லிவிடுவேன். இலைகளை பரப்பி, கிளை விரித்து மேலுயர்ந்து வரவேண்டிய மரமொன்றை, வேர்களையும் தண்டுகளையும் வளர்நுனிகளையும் தொடர்ந்து கத்தரித்து, மிகக்குறைவாக உணவும் நீரும் அளித்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்த நிமிஷக்கணக்கில் மட்டும் சூரிய ஒளியில் வைத்து, கிளைகளில் கம்பிகட்டி, முறுக்கி, இழுத்து, பிணைத்து என்று இயற்கையான வளர்ச்சியை பலவிதங்களில் கட்டுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அழகாக மேசைமீது வைத்துக்கொள்கிறோம் என்னும் அபிப்பிராயம் மட்டுமே இருந்தது. ஜப்பானியர்கள் குள்ளமென்பதால் அவர்களுன் மரங்களும் குள்ளமாக வளர்க்க விரும்புகிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்,
பற்பல வடிவங்களில், பலநூறாண்டுகள் வளர்ந்த , பழங்கள் செறிந்து பான்ஸாய் மரங்கள், கொள்ளை அழகாக இருப்பினும், எனெக்கென்னவோ அவற்றை பார்த்தால் மகிழ்ச்சியே ஏற்பட்டதில்லை எப்போதும்.
எல்லா விதமான தாவரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தாலும் பான்ஸாயை இதுவரை நான் கல்லூரியைத்தவிர வேறெங்கும் வளார்க்க முயற்சித்ததில்லை.
// குறுகும்போது கூர்கொள்வது ஞானம் //
//எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது//
// நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது. எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலே//
என்று ஜெ சொல்லியிருப்பதை வாசித்தபின்னர் பான்ஸாய் வளர்ப்பை இப்படி ஒரு அழகான கோணத்திலும் பார்க்கலாமென்று அறிந்துகொண்டேன். ஆம் நோக்க நோக்க அந்த மீச்சசிறு வடிவில் மரத்தின் வயதும் வயதுக்கேற்ற பிரம்மாண்டமும் தெரிகின்றது. மிகச்சிறிய பாட்டில் மூடி அளவிலான தட்டுக்களிலும் கூட வளர்க்கப்படும் இவற்றை மீச்சிறு மரங்கள் என்று சொல்வதும் மிகபொருத்தமாக இருக்கின்றது
Once a teacher ,always a learner என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்று ஜெ விடமி
Lupinus texensis, என்னும் தாவர அறிவியல் பெயருடைய Texas bluebonnet அல்லது Texas lupine என்பது டெக்சஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வளரக்கூடிய அழகிய அடர்நீல மலர்களை தரும் தாவரமாகும். இம்மலர்களே டெக்சஸின் மாநில மலராகவும் இருக்கின்றன Lupines எனப்படும் பேரினத்தின், Lupinus subcarnosus, L. havardii, L. concinnus, L. perennis, மற்றும் L. plattensis ஆகிய 5 சிற்றினங்களுமே நீல பொன்னெட் என்றே அழைக்கப்படுகின்றன.
கொத்துக்கொத்தாக தோன்றும் மஞ்சரிகளில் வரிசையாக அமைந்திருக்கும் மலர்களின் இதழ் அமைப்பு பெண்களும் குழந்தைகளும் அணியும் தாடைக்கு கீழ் நாடாவால் இணைக்கப்பட்டிருக்கும் bonnet என்னும் தொப்பியை போலிருப்பதால் இதற்கு blue bonnet என பெயரிடப்பட்டிருக்கின்றது. Buffalo Clover, Wolf Flower என்னும் பெயர்களும் இதற்குண்டு இவை பட்டாணி ,அவரைச்செடிகளின் குடும்பமான Fabaceae (Pea Family) யை சேர்ந்தவை
5-7 பிரிவுகளாக விரல்கள்போல் விரிந்திருக்கும், கூரான நுனிகளையுடைய பசுமைக்கூட்டிலைகளுடனும் , பீன்ஸ் பொன்ற காய்களினுள்ளே 6 அலல்து 7 மிகச்சிறிய மணிகளாக கடினமான மேலுறையுடன் இருக்கும் விதைகளையும் கொண்டிருக்கும் இந்த ஓராண்டுத்தாவரம், அதிகபட்சமாக 3 மீட்டர் உயரம் வரை வளரும்
20லிருந்து 50 செ மீ உயரமுள்ள தண்டிலிருந்து சுமார் 50 அடர் நீல மலர்களையுடைய மிதமான வாசனையுடன் மஞ்சரி உண்டாகும். மஞ்சரியின் நுனியில் மட்டும் தூவெண் நிறத்தில் மொட்டுக்கள் காணப்படும். முதிர்ந்தபின் மலர்கள் ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பூக்கும்பருவம் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை, அரிதாக மே மாதத்திலும் இவற்றைக்காணலாம். புல்வெளிகளிலும் நெடுஞ்சாலை வழியின் சரிவுகளிலும், பயிரிடப்படாத திறந்த வெளிகளிலும் இவை செறிந்து காணப்படும். மிகக்குறைவான நீரும் அதிக சூரிய வெளிச்சமும் நீர் தேங்காத மண்ணும் இவை செழித்து வளர தேவைப்படும்
1901 மார்ச் 7 அன்று டெக்சஸீன் மாநிலமலராக Lupinus subcarnosus என்னும் மற்றொரு சிற்றினமே முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரும்பாலான டெக்சஸ் மக்களின் விருப்பத்தின்பேரில் L.texensis மாநில மலராக மாற்றப்பட்டது. இம்மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும், இவை கொண்டாடப்படுவதற்கும் பிண்ணனியில் ஒரு முக்கியப்பெண்மணி இருந்திருக்கிறார்கள்
’’எங்கு மலர்கள் மலர்கிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையும் மலரும்’’ என்று அடிக்கடி சொல்லும் கல்வியாளரும் இயற்கை ஆர்வலரும் அமெரிக்காவின் 36 ஆவது அதிபரரான லிண்டன் பி ஜான்சனின் (Lyndon B Johnson) மனைவியுமான”Lady Bird” Johnson என்பவரின் முயற்சியால்தான் இன்று டெக்சஸின் நெடுஞ்சாலைகள் பலவண்ன வனமலர்களால் அழகுறக்காணப்படுகின்றது. 1965ல் அவரால் முன்னெடுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட HBA – highway beautification Act என்னும் நெடுஞ்சாலைகளை அழகுபடுத்தும் சட்டத்தின் பின்னரே இந்த செடி மிக அதிகமாக சாலியோர சரிவுகளில் பயிரிடப்பட்டது.
அதன்பின்னரே பொட்டல் வெளிகளெல்லாம் பூத்துக்குலுங்கும் ரம்மியமான இடங்களாகின சலிப்பும் சோர்வும் தரும் நெடுஞ்சாலைப்பயணங்கள் பார்வைக்கு இனிய மலர்களின் காட்சிகளுடன் மிக இனிதான விரும்பத்தக்க பயணங்களாகியது. இதன் பொருட்டு இவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளான presidential Medal of Freedom மற்றும் Congressional Gold Medal, ஆகியவை அளிக்கப்பட்டன. 1982:ல் ஆஸ்டினில் இவரால் உருவாக்கப்பட்ட தேசிய வனமலர்கள் ஆராய்ச்சி நிலையம் பின்னர் 2006ல் டெக்சஸ் பல்கலையுட்ன இணைக்கப்பட்டது..
இவரது வழிகாட்டலின் பேரில் 1932ல் ஜெக் கப்பல்ஸ் (Jac Gubbels) என்னும் புகழ்பெற்ற நிலவடிவமைப்பாளரை டெக்சஸின் நெடுஞ்சாலைத்துறை பணியிலமர்த்தி நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சரிவுகளிலும் வனச்செடிகளை வளர்க்கத்துவங்கினார்கள், இன்றும் வருடத்திற்கு 30 ஆயிரம் பவுண்டுகள் வனமலர்ச்செடிகளின் விதைகளை இத்துறை வாங்குகின்றது
1912ல் பிறந்து பெரும்பாலான நிலப்பரப்புக்களை கொள்ளை அழகாகவும் வண்ண மயமாகவும் மாற்றிய இவர் தனது வாழ்நாளின் பிற்பாதியிலிருந்து மரணம் வரை உடல்நலக்குறைவால் கண் பார்வையின்றி இருந்தது வாழ்வின் முரண்களிலொன்று, 1912ல் பிறந்து 2007ல் தனது 94 வயதில் இவர் மரணமடைந்தார்
டெக்சஸ் மக்கள் அனைவருமே இம்மலர்கள் பூக்கும் பருவத்தில் குடும்பத்துடனும் வளர்ப்பு பிராணிகளுடனும் சென்று மலர்களின் இடையிலும் அவற்றின் பிண்ணனியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர். டெக்சஸ் நகரவாசிகளின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட இம்மலரைக்குறித்தும் அச்செடிகள் வளர்ந்து மலர தயாராகிவிட்டதாவெனவும் கிருஸ்துமஸ் முடிந்த உடனேயே மக்கள் பேசிக்கொள்ள துவங்குவார்கள்
1933 லேயே இம்மலர்களுக்கான பிரத்யேக பாடலொன்றும் டெக்சஸின் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பாடலை இணையத்தில் காணலாம். டெக்சஸின் Chappell Hill என்னுமிடத்தில் இம்மலர்களுக்கான வருடந்திர விழா நடைபெற்று வருகின்றது
காற்று மண் மற்றும் நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை கிரகித்துக்கொள்ளும். எனவே விதைகளிலும் தாவரபாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும் தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளை சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ , அல்லது ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதைஉறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்
இவை பூக்கும் காலத்தில் எங்கெங்கு மலர்கள் அதிகமாக காணப்படும் என்னும் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக GPS சேவைகளும், புகைப்ப்டமெடுக்க வழிகாட்டுதல்களும், மக்கள் கூட்டமாக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி இவற்றை கண்டுமகிழ்வதால் அப்போது பின்பற்றவேண்டிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளும் பரவலாக தெரியப்படுத்தப்படுகின்றன. இப்பருவத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று அழைத்துச்செல்ல பல சுற்றுலா குழுமங்களும் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களில் ,இப்போது 2019ல் தான் இவை மிக அதிகமாக பூத்திருப்பதாக சொல்லப்படுகின்றது .இவற்றின் புகைப்படங்களுக்கென்றே பல இணையதளங்களும் இருக்கின்றன
அயர்லாந்தின் ஷம்ராக் மற்றும் ஜப்பானின் செர்ரி மலர்களுக்கும் ஃபிரான்ஸின் லில்லிகளுக்கும் இங்கிலாந்தின் ரோஜாக்களுக்கும் ஹாலந்தின் ட்யூலிப் மலர்களுக்கும் இணையானதாக சொல்லப்படும் இம்மலரைக்குறித்த கவிதைகளும் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன. இவை பூக்கும் காலத்தில் இவற்றின் சித்திரங்கள் தீட்டப்பட்ட உடைகளும் திரைச்சீலைகளும் அதிகம் விற்பனைக்கு வரும் டெக்சஸுக்கு இம்மலருக்காகவேனும் ஒருமுறை வரவேண்டும் என இந்தியாவிலிருக்கும் அனைவரையும் நினைக்கவைக்கும்படியான பிரமிக்க வைக்கும் அழகினைக்கொண்ட சுவாரசியமான மலர் இந்த blue bonnet.
செர்ரி மரங்கள் ப்ருனஸ் என்னும் பேரினத்தை சேர்ந்தவை. wild செர்ரியான –Prunus avium என்பதே செர்ரி பழங்களுக்காக வளர்க்கப்படும் மரமாகும். ஜப்பானியர்கள் பல நூறு கலப்பின செர்ரி வகைககளை அவற்றின் அழகிய மலர்களின் பொருட்டு உருவாக்கினர்.
செர்ரி வகைகளில் மலர்கள் தூய வெண்மையிலும், இளஞ்சிவப்பிலும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்தும் காணப்படும். ஐந்து இதழ்கள் ஒற்றையடுக்கிலும் பத்திலிருந்து இருபது இதழ்கள் அடுக்குகளிலும் வகைக்கேற்றபடி காணப்படும்.
ஜப்பானியர்கள் இதை சகுரா அல்லது ஊமி மரம் (Umi) என்றழைக்கிறார்கள் ஜப்பானில் உள்ள பலவகையான செர்ரி மரங்களும் மொத்தமாக (sato zakura) சட்டோ சகுரா என்றும், ஒற்றையடுக்கு மலர்கள் யோஷினோ Yoshino (Prunus x yeodensis) என்றும் பல அடுக்குகள் உடையவை யேசகுரா (yaezakura) என்றூம் அழைக்கப்படுகின்றன. இரட்டை அடுக்கு மலர்களுடைய மரங்களை 1862ல் ஜப்பானிலிருந்து வட அமெரிக்காவிற்கு G.R. Hall என்பவர் கொண்டு வந்தபின்னர் அங்கும் இவை வளர்கின்றன.
Prunus serrulata எனப்படும் செர்ரி சைனா, ஜப்பான், இந்தியா மற்றும் கொரியாவை தாயகமாக கொண்டது. இலைகளை உதிர்க்கும் இச்சிறுமரம் 26–39 அடி வரை (7.9–11.9 m). வளரும் மரப்பட்டைகள் மிக மிருதுவாகவும் மூச்சுத்துவாரஙகள் எனப்படும் lenticels நிறைந்தும் காணப்படும். இலைகள் ஓரங்களில் பற்கள்போன்ற அமைப்புடன் எதிரடுக்கில் நீள்முட்டை வடிவிலிருக்கும். மலர்கள் ரெசீம் மஞ்சரிகளில் உருவாகும். சதைப்பற்றான பழங்கள் 8-10 மிமி அளவில் இருக்கும். ஜப்பான் முழுவதிலும் செர்ரி மரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் அரண்மனைகள், கோயில்கள், சரணாலயங்கள் போன்ற பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன
இம்மரங்கள் வருடா வருடம் பூத்துக்குலுங்கும் காலம் ஹனாமி எனப்படும் பூக்காணுதல் விழாவாக ஜப்பானில் 3ஆம் நூற்றாண்டிலிருந்தே பெரும் கொண்டாட்டமாக நிகழ்ந்து வருகின்றது.. இறந்த மூதாதையர்களின் ஆன்மா செர்ரி மலரின் வண்ணங்களில் வாழ்கிறது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். மேலும் நல்ல அறுவடைக்கான கடவுள்களை வயலுக்கு வரவேற்கும் நிகழ்வாகவும் இந்த ஹனாமியை ஜப்பானியர்கள் கருதுகிறார்கள். மிக அழகாக பூத்துக்குலுங்கி பின்னர் சிலநாட்களிலேயே வாடி உதிரும் இவை மனித வாழ்வின் அநித்யத்தை சுட்டுவதாகவும் கருதப்படுகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஜப்பானிய வானிலை தகவல் தளத்தில் பல்வேறு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்.. ஹனமியின் போது பூத்துக்குலுங்கும் செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர்கள் விருந்துபசாரம் செய்வார்கள். இரவில நடத்தப்படும் ஹனாமி யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.
பல நூற்றாண்டுகளாக ஜப்பான் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட சகுராவின் பூக்கும் காலத்தில், நாட்டில் 7 முதல் 10 நாட்கள் வரை விடுமுறை விடப்படுகிறது, இம்மரங்களினடியில் மக்கள் உறவு மற்றும் நட்புக்களுடன் குழுமி உணவுண்டும் கவிதைகள் வாசித்தும் ஓய்வெடுத்தும் மகிழ்ந்து பொழுதைக் கழிப்பார்கள்,
பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக்காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்
. இங்கு 100 யென் நாணயம் செர்ரி மலர்களுக்காக வெளியிடபட்டுள்ளது. பல நாடன் பாடல்களும் பாப் பாடல்களும் சகுராவிற்கென்றே பிரத்யேகமாக ஜப்பானில் உள்ளன. சகுரா பூக்கும் கால்த்தில் கிமானோ என்னும் தேசிய உடையிலிருந்து நோட்டுபுத்தகங்கள், குடைகள், அலங்காரப்பொருட்கள், கைப்பைகள் என பலவற்றிலும் இம்மலர்களின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். டாட்டூ எனப்படும் பச்சைகுத்துதலிலும் ஜப்பான் முழுக்க டிராகன் உருவத்துக்கு அடுத்தபடியாக இம்மலர்களின் வடிவமே உள்ளது. பல பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு சகுரா என்று பெயரிடுகிறார்கள்.
ஜப்பான் மட்டுமல்லாது இந்தியா, சைனா, வாஷிங்டன், கொரியா, ஜெர்மனி, பிரேசில், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ் உள்ளிட்ட உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு காலங்களில் செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன
ஹனாமியின் சிறப்பு உண்வு வகைகள்
“cherry blossom sake,” – சகுரா மலர்கள் மிதக்கும் அரிசி மது
சகுரா மலர்களின் நறுமணத்துடன் தேனீர், சோயா பால் மற்றும் கோலா
Hanami bento – ஹனாமி பெண்டோ எனப்படும் வறுத்த மீன் துண்டு,பொறித்த காய்கறிகள், போன்றவைகள் இருக்கும் மதிய உணவுப்பெட்டி
Finger food எனப்படும் சகுரா கலந்த உணவுகள், நறுக்கப்பட்ட பழத்துண்டுகள் இறால் , சுஷி மீன் மற்றும் சமைத்த காய்கறிகள்
sakura mochi எனப்படும் சகுரா இலைகளால் சுற்றி வைக்கபட்டிருக்கும் சகுராவின் இளஞ்சிவப்பு, பனிப்பொழிவின் வெள்ளை மற்றும் ஒரு நறுமணத்தாவரத்தின் பச்சைநிறம் என மூவண்ணத்தில் இருக்கும் அரிசிச் சோற்று உருண்டைகள்
காலையில் இருந்தே காப்புக்கட்ட செடிகளை சேகரிக்கவும், வீட்டை சுத்தப்படுத்திகொண்டுமிருந்தோம். தோழியும் தங்கையுமான கிறிஸ்டி அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் காப்புக்கட்டுவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன் காப்பு? யாருக்கு கல்யாணம் என்றெல்லாம் கேட்டாள்
அவளுக்கு விளக்கினேன் கொங்குப்பகுதியில் போகி அன்று மாலை காப்புக்கட்டுதல் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருகிறது
இனி வரும் சந்தததிகளுக்கு மட்டுமல்ல இன்றைய இளம் தலைமுறையினருக்கே இதுகுறித்து தெரியாமல் இருக்கிறது
பண்டிகையின்போது வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளையடித்து, தேவையற்ற பொருட்களைக் கழித்து, வீடுகளில் ‘காப்புக்கட்டு’ எனும் மூலிகைக்காப்பான்களைக் கட்டி, தை மாதத்தை வரவேற்பதே தமிழர்களின் தொன்று தொட்ட மரபு. இதன் மூலம் பண்டிகைகளின்போதும் பின்வரும் காலங்களிலும் வீட்டில் இருப்பவர்களின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொண்டனர். இத்தகைய ‘காப்பு’ கட்டுதலில் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி ஆகியவற்றின் தண்டு, இலை, பூ ஆகியவை இருக்கும் எளிய தாவரங்களான இவை, மிகப்பெரும் பலன்களை உள்ளடக்கியுள்ளன என்பது பற்றி நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் தைத்திருநாளை வரவேற்க, தமிழர்கள் வீட்டில் ‘பூ’ காப்புக் கட்டிய பிறகே பொங்கல் கொண்டாட்டம் தொடர்கிறது.
.
இந்த மூலிகைத்தாவரங்கள் அனைத்திலும் ஒவ்வொரு துண்டு இருக்கும் படி சின்னச்சின்ன கட்டுக்களாக (கடைகளில் விற்கும் கொத்தமல்லிகட்டுக்கள் போல) கட்டி வீட்டின் அறைகளின் 4 மூலைகளிலும் புஜை அறையிலும் ஜன்னல்களிலும் மொட்டை மாடியின் மூலைகளிலும், கிணற்றுச்சுவர், அம்மிகல், ஆட்டுக்கல், என அனைத்து இடங்களிலும் செருகி வைப்பதே காப்புக்கட்டுதல் . அடுத்த ஆண்டு போகி வரையிலும் இவை உலர்ந்து அந்த இடத்திலேயெ இருக்கும்
முன்னாட்களில் குப்பைக்குழியில் கூட காப்புக்கட்டி வைத்தனர் விவசாயிகள். குப்பைக் குழி என்பது விவசாயிக்கு உரக்கிடங்கு அல்லவா?
குப்பைக்குழியில் சாணமும் சாம்பலும் தொழுவத்துக்கழிவுகளும் கொட்டப்பட்டு அவை மட்கி உரமாகி பின்னர் மண்ணில் இடுவதால் மண்ணின் வளத்திற்கும் விளைச்சலுக்கும் அடிப்படை என்னும் காரணத்தில் அங்கும் காப்புக்கட்டி வைக்கும் வழமை இருந்தது மதுரையில் சில பகுதிகளில் மாடுகளுக்கும் கழுத்தில் இதுபோல காப்பு மாலை கட்டிப் போடும்வழக்கம் இருக்கிறது
சிறுபீளை
காப்புக்கட்டப்பயன்படுத்தும் அனைத்துத்தாவரங்களுமே வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், பல நோய்களை தீர்க்கும் குணங்களுடன் இருப்பவை அதிலும் இந்த சிறு பீளை நல்ல கிருமி நாசினி. பீளைப்பூவைச் சேகரித்து தலையணைக்குள் அடைத்து வைக்கும் பழக்கம் கூட முன்பிருந்தது தலையில் நீர்கோர்த்து பாரமாக இருக்கையில் இந்த தலையணையை தலைக்கு வைத்துப்படுத்துக்கொள்ளலாம்.. சிறந்த நிவாரணி இது. கோவையின் பீளமேடு இந்த செடி அங்கு செழித்து வளர்ந்ததால் வைக்கபப்ட்ட பெயர் வெண்மையாக பூத்துக்குலுங்கும் சிறுபீளை, தென் மாவட்டங்களில் ‘பொங்கல் பூ’ எனவும் அழைக்கப்படுகிறது
ஆவாரை
சங்க காலத்தில மடல்-மா ஏறி வரும்போது பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கலப்போது காப்புக்கட்டிலும் இருக்கிறது
பாக்டீரியா தொற்றுக்கு எதிரானது இந்தப்பூ கோவையில் ஆவாரம்பாளையம் என்றும் ஒரு ஊர் இருக்கிறது
மாவிலை
வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்.. நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும். இப்படி ஒரு ஐதீகம் இருக்கிறது நம் மரபில்
மாவிலை கரியமில வாய்வை உறிஞ்சிக்கொள்கிறது அழுகிப்போகாமல் காய்ந்து உலரும்ம் தன்மை கொண்டது உலர்ந்தாலும் நல்ல நறுமணம் கொண்டது கிருமித்தொற்றுக்கு எதிரானது
வேம்பு
வேம்பு நமக்கெல்லாம் மிகவும் அறிமுகமான் மூலிகை சிறந்த வைரஸ் எதிர்ப்பு குணம் உள்ளது. தைக்கு பிறகு வரும் கடும் கோடையில் அம்மை போன்ற வைரஸ் தொற்றுக்கள் வருமென்பதால் முன்கூட்டியெ இவை வராமல் தடுக்க காப்புக்கட்டும் போது வேம்பின் இலைகளை கட்டுகிறோம். அதேபோல், காற்றில் பரவும் நோய்கள் எளிதில் பரவாமல் தடுக்க, கோயில் திருவிழாக்கள் தொடங்கும்போது ஊரின் பல்வேறு இடங்களிலும் வேப்பிலைகளைக் கட்டும் பழக்கம் இருக்கிறது
தும்பை இலை:
தும்பை இலையின் வாசம் இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை ஆகியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.. இதுவும் anti viral குணங்கள் நிறைந்தது
பிரண்டை:
‘பிரண்டை’ என்பது தடித்த தசைப்பகுதி நிரம்பிய கொடிப்பகுதியாகும். இதுவும் பல கிருமித்தொற்றுக்களுக்கு எதிரானது
துளசி
அனைவரும் அறிந்த துளசியின் இலைகளில் எளிதில் காற்றில் பரவும் மூலிகை பொருட்கள் உள்ளன பச்சை இலை உடைய துளசி ஸ்ரீதுளசி அதே வேளையில் ராம துளசி என்பது கருநீல நிறம் கொண்டது. துளசி மாடத்தில் இவை இரண்டையும் சேர்த்துத்தான் வளர்க்க வேண்டும்
ஒரிசாவில் சித்திரை, வைகாசி மாதங்களில் துளசிச் செடியின் மேல் பந்தலிட்டு , மேலிருந்து பந்தலின் துளை வழியே நீர் சொட்டு சொட்டாக அச்செடியின் மேல் விழும் வண்ணம் செய்து வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் அவர்கள் தாம் முன்னர் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என நம்புகின்றனர். தாவ்ரங்களில் துளசிக்கும் கனிகளில் எலுமிச்சைக்கும் வேதங்கள் சொன்னால் விளங்கிக்கொள்ளும் சக்தி உள்ளது என்று கூட் சொல்வார்கள்
மார்கழிக் குளிர் முடிந்து தொடங்கும் தை வேனில் காலம் உடலில் உஷ்ணமான நோய்களை உண்டாக்கிவிட்டு விடும். இதையெல்லாம் கணித்தே, நம் முன்னோர்கள் போகியின்போது, ‘காப்புகட்டுதல்’எனும் சடங்கு வைத்து பொங்கலில் வீட்டில் இருக்கும் உயிர்களுக்கு நோய் அண்டாமல் வருமுன் காக்கும் யுக்தியைக் கையாண்டனர்
அறிவியல் பின்புலம் உள்ள நம் தமிழரின் மரபுகளை நாமும் மறக்காமல் அடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தர முயலவேண்டும்
இன்று மார்கழி துவங்கிவிட்டது. பல வீடுகளில் எந்த மாற்றமும் இல்லையெனினும் இன்னும் மரபும் பழமையும் மிச்சமிருக்கும் சில கிராமத்து வீடுகளில் சாணப்பிள்ளையாரும் கோலமும் மரத்தடி பிள்ளையாருக்கு அதிகாலை நீராட்டுமாய் இருக்கத்தான் செய்கிறது. நல்ல வேளையாக நான் இவற்றையெல்லாம் பார்க்க கிராமத்தில் இருக்கிறேன்
சாணப்பிள்ளையாரும் அதில் மலர்களுமான இந்த வழமையில் தாவரவியல் பின்புலம் இருகிறது. அதிகாலையில் குடும்பத்தினர் கோவில்களுக்கு செல்லும் மாதமாகையாலும் அடுத்து தை பிறப்பதாலும் இந்த மாதத்தில்தான் முன்பு பரவலாக திருமணங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போழுது போல அப்போதெல்லம் matrimony . com ல் கொண்டாட்டமாய் திருமணங்கள் நிச்சயிக்கப்படவில்லை. அவையும் இலை மறை காய்மறையாகவே இருந்தகாலம் அது
வாசலில் சாணப்பிள்ளையாருக்கு அருகு வைத்திருந்தால் அந்த வீட்டில் கல்யாணத்திற்கு பிரம்மச்சாரி இளைஞர்கள் இருப்பார்கள், பூசணிப்பூ ,( அது ஒரு unisexual மலர் ) இருந்தால் கல்யாணவயதில் பெண்பிள்ளைகள் இருப்பார்கள், அருகும் பூசணிப்பூவும் சேர்ந்திருந்தால் கல்யாணத்திற்கு மகனும் மகளும் இருக்கிறார்கள், செம்பருத்தி சங்குப்பூ போன்றவை ( மகரந்தமும் சூலகமும் சேர்ந்திருக்கும் bisexual மலர்கள் இவை) இருப்பின் திருமணமான கணவனும் மனைவியுமாய்க் இருகிறார்கள் பெண்ணோ ஆணோ கல்யாண வயதில் அந்த வீட்டில் இல்லை என்று கொள்ளலாம். அதிகாலையில் வீடுகளைக்கடந்து கோவில்களுக்கு செல்பவர்கள் இவற்றிலிருந்து செய்திகளைத்தெரிந்து கொண்டு பின் பேசி முடிவு செய்தால் தையில் திருமணம் நடக்க ஏதுவாக இருக்கும்
தும்பைமலர்களும் அவ்வப்போது இருக்கும் தும்பை வைரஸ் தொற்றைத்தடுக்கும் குணமுள்ளது. பனிக்காலத்தில் அது போன்ற தொற்றுக்கள் பரவாமல் இவை தடுக்கும்
ஸ்டிக்கர் கோலமிடும் இந்த நவநாகரீககாலத்தில் இவற்றை தெரிந்துகொள்ளவாவது செய்யலாம்.
”மார்கழித்திருநாளில் மங்கையர் இளந்தோளில் கார்குழல் வடிவாக கண்ணன் வந்தான்”” என்னும் இந்த பாடலை நினைவு கூறுகிறேன் இந்த. அற்புதமான மாதத்தில்
சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறையில் வர்தாவால் விழுந்த மரங்கள் பற்றி பதிவு செய்திருந்தார்கள்..
Nativity species என சொல்லப் படுகின்ற நம் நாட்டு மரங்கள் பெரும்பாலும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. வேளச்சேரியில் அதிகபட்சம் நம் மரங்கள் தான், அதிகம் பாதிப்படையாத இடம் வர்தாவால்.weak tree என சொல்லப்படும் மாமரம் கூட புயலை தாக்குப்பிடித்திருக்கிறது. அழகிற்காகவும், கண்கவர் மலருக்காகவும், வேகமாக வளர்வதற்காகவும்வளர்க்கப்பட்ட வெளிநாட்டை சார்ந்த மரங்களே காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்துள்ளன!!
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வெளிநாட்டை சார்ந்த மரங்களில் நம் பறவைகளும், அணில்களும், ஏனைய உயிர்களும் கூடு கட்டி வாழாமல், நம் நாட்டு மரங்களில் தான் கூடு வைத்து வாழ்கின்றன..
நம்மாழ்வார் கூறியது போல நிச்சயம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு முருங்கை மரம், ஒரு பப்பாளி மரம், ஓரு கருவேப்பிலை மரம், ஓரு வாழை மரம், இடமிருந்தால் ஒரு வேப்ப மரம் வைக்கலாம். இவை அனைத்தும் நம் உணவு தேவை, சுற்றுச்சூழல், உணவு சங்கிலி, கலாசாரம், மருத்துவம் சார்ந்து பின் விளைவாக கெடுதல்களை தராதது.
இந்த வர்தா சொல்லி சென்றிருப்பது, நம் தேவைக்கான மரங்கள் எதுவோ, அதை தேடி வளர்த்து பயன் பெறுவதுதான். நம் நாட்டின் மரவகைகள் 4500க்கும் மேல்..
கடந்தாண்டு december நல்ல மனங்களையும், மனிதர்களையும் அடையாளம் காட்டியது போல், அந்த december நமக்கான நல்ல மரங்களை அடையாளம் காட்டி சென்றிருக்கிறது..
ஏனென்றால் மரம், ஒரு செல் உயிரி மட்டுமல்ல, ஒரு சொல் உலகம்!!!