கி ராவின் மிச்சக்கதைகள் வெளியீட்டு விழாவில் (June 29, 2021) கலந்துகொண்டு ஜெ ,, நாஞ்சில் சா ர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், விஷ்ணுபுரம் குழும நண்பர்களையும் சந்தித்ததும், நூலைக் குறித்தும் கி.ராவைக் குறித்தும் ஜெ வின் பிரமாதமான உரையைக் கேட்டதுமாக, சென்ற வருட விஷ்ணுபுர விழாவை கொரோனாவால் தவறவிட்டதின் வருத்தமே காணாமல் ஆகிவிட்டது. வீடு வந்த கையோடு புத்தகத்தை வாசித்து முடித்தேன்.
’’மிச்சக்கதைகள்’’ என்ற தலைப்பு கிராவின் வயதை நினைத்து வைக்கப்பட்டிருக்கலாம், இன்னுமவர் எழுதவேண்டுமே என்று நானும் நினைத்தேன். கதைகளை வாசிக்கையில்தான் கி.ராவின் பல கதைகளின் தொடர்ச்சியை போலவும், துண்டு துண்டாக கிடக்கும் அவரது வாழ்வின் பல அற்புதக்கணங்களின் தொகுப்பென்றும் தெரிந்தது, முழுவதுமாக படித்து முடித்ததும் பெரும் பிரமிப்பு உண்டாகியது. அவரது கிராமத்துக்கே வீட்டுக்கே, வாசலுக்கே, தெருவுக்கே என்னையும் கூட்டிச்சென்று விட்டிருக்கிறார். புத்தகத்தை மூடினதும்தான் நான் பொள்ளாச்சிக்கு திரும்பியிருந்தேன். எத்தனை இயல்பான கதைசொல்லல்!
இந்தக்கதைகளை ஒருவர் எழுதி, அவை அச்சிடப்பட்டு, ஒரு புத்தகத்தின் பக்கங்களில் வாசிக்கும் உணர்வே இல்லாமல் கி.ராவுடன் அவர் வீட்டுதிண்ணையில் அமர்ந்து ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாத, ஆனால் வெகு சுவாரஸ்யமான சங்கதிகளை அவர் மனம் விட்டுப் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.
புதுப்புது வட்டாரவழக்கு சொற்களை அதிசயித்து வாசித்து குறித்துக்கொண்டேன். தேங்காய் உடைப்பது குறித்து சொல்லுகையில் பெருவிரலால தேங்கா கண்ண பொத்திகிட்டு நரம்பின்மீது தட்டி கீறல் விட்ட தேங்காயின்//கீறலுக்குள்ளே மேஜைக்கத்தியோட நுனியை விட்டு கத்தியை குத்தி அகலிச்சா, தோ வந்தேன்னு இறங்கிடும் தண்ணி// என்கிறார். கீறலுக்குள் கத்தியை விட்டு விரிசலை பெரிதாக்குவதை அகலிச்சா என்பதுதான் எத்தனை பொருத்தமாயிருக்கிறது.
இதைப்போலவெ பக்கரை, போக்காளி, கால்கள் லத்தாடின, இரிசி, தடபுதல், என்றும் சில சொற்கள் வருகின்றது.
காதோர நரை, லட்சுமிகாந்தன் கொலை, பிராமணாளுக்கு தனி தடுப்பறை இருந்த ஹோட்டல்கள், குழந்தைகளை பெண்களிடம் கொடுத்து கொஞ்சச்சொல்லிவிட்டு, மறைந்திருந்து அவர்கள் கொஞ்சுவதை பார்ப்பது, காணாமல் போன எருமைமாடு, உருண்டை உருண்டையான மணமில்லா மலர்களுடன் தொட்டாச்சிணுங்கி செடிகள், புதுமாப்பிள்ளைக்கு இவர் அந்தரங்கமாக உதவியது, குத்தாலம் , விருந்துக்கு போன இடத்தில் பொண்ணு மாப்பிளைக்கு நடந்த விநோதங்கள், ரசிகமணி ஆண்களின் எச்சில் இலையில் பெண்கள் சாப்பாடு நடக்கவிடாமல் செய்த சம்பவமென்று என ஒவ்வொன்றும் ஒரு ரகம் , ஒவ்வொன்றும் ஒரு சுவை, ஒரு புதுமை.
வெற்றிலைக்கதைகளாக இடையிடையே பாலுறவக்கதைகளும் கலந்து வந்துகொண்டே இருக்கிறது.கஞ்சிகெட்டலு என்னும் பஞ்சகாலத்துக்கிழங்கு, மலைமேலே இலைபோட்டுச்சாப்பிட்டால் குப்பை சேரும் என்று உருவாக்கப்பட்டிருந்த குத்தாலத்தின் திருவோட்டுப்பள்ளங்கள் என்று ஏராளம் அதிசயவிஷயங்களும் இருக்கின்றது,
எதுமாதிரியும் இல்லாத புதிமாதிரியான கதைகள் இவையனைத்துமே. புதுவை இளவேனிலின் புகைப்படங்கள் வெ்கு அற்புதம், கருப்பு வெள்ளையில் காலங்களை கடந்த புகைப்படங்கள். உண்மையில் அத்தனை அருமையான இயல்பான புகைப்படங்களால்தான் கதைகளை கி ரா சொல்லச்சொல்ல கேட்கும் அனுவபவம் வாய்த்ததென்றும் சொல்லலாம்.
பஞ்ச காலத்தில் சாப்பிடப்பட்ட பூண்டைப்போலிருக்கும் அந்த கிழங்கைக்குறித்து அறிந்துகொள்ள நிறைய தேடினேன். 1968ல் journal of agricultural traditions என்னும் சஞ்சிகையில் எழுதப்பட்ட Plants used during scarcity and famine periods in the dry regions of India என்னும் கட்டுரையொன்றில் Ceropegia bulbosa என்னும் செடியின் பூண்டைப்போலிருக்கும் கிழங்குளை பஞ்சகாலத்தில் மக்கள் வேக வைத்து கஞ்சியாக்கி உண்டது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவாகவும் இருக்கலாம் அதன் தமிழ்ப்பெயரைக்குறித்த தகவலை தேடிக்கொண்டிருக்கிறேன்,
கடலைப்போல பெரிய, சின்ன கதைகளில் அடங்காத ரசிகமணி சமாசாரங்களை, இன்னொரு முறை பார்ப்போமென்கிறார் கிரா இதில்.
தளத்தில் மாற்றுக் கல்வி குறித்த பதிவில் ஜெ குறிப்பிட்டிருந்த ”டோட்டோ –சான் ஜன்னலில் சின்னஞ்சிறுமி” புத்தகத்தை வாங்கி வாசித்தேன்.
இருபது ஆண்டுகளாக என் ஆசிரியப்பணியில் வழக்கமான கல்வியின் போதாமைகளை நான் அநேகமாக தினமுமே உணர்கிறேன். சராசரி குடிமகன்களை உருவாக்குவதாக சொல்லப்படும் பொதுக்கல்வியில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய் பல வருடங்களாகி விட்டிருக்கிறது.
பள்ளிக்கல்வியில் மதிப்பெண்கள் வாங்கும்படிமட்டும் தயாரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் மனனம் செய்யப் பழகி, சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த, மூளை மழுங்கடிக்கப்பட்ட மாணவர்களே அதிகம் கல்லூரிக் கல்விக்கு வருகிறார்கள். 12 ஆம் வகுப்பில் முதலிடம் இரண்டாமிடம் வந்த மாணவர்கள் கூட கல்லூரியில் வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்ளத் தடுமாறுவதை பார்க்கிறேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தன் வீட்டில் என்ன நடக்கிறது, தன் ஊரில் உலகில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் குறித்து எந்த அறிதலும் இல்லாமல்தான் 3 வருடங்களும் படித்துப் பட்டமும் வாங்கி வெளியில் வருகிறார்கள். ஆசிரியர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அரைத்த மாவையே அரைக்கிறோம்.
நான் இளங்கலை தாவரவியல் படித்த அதே துறையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியராக சேர்ந்தபோது நான் படித்த அதே பாடத்திட்டம் எந்த மாறுதலுமின்றி நடைமுறையில் இருந்தது. இன்று 20 வருடங்களாகியும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாடத்திட்டத்தை தான் நடத்துகிறோம். நினைத்துப்பாருங்கள் பொள்ளாச்சியை போன்ற பச்சை பிடித்த பல கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் ஓரிடத்தில் நான்கு சுவர்களுக்குள் தாவரவியலை நடத்திக் கொண்டிருப்பதென்பது எத்தனை அநியாயமென்பதை.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சைகஸ் என்னும் ஒரு கீழ்நிலைத் தாவர குடும்பத்தை சேர்ந்த மரமொன்றை குறித்து பாடம் நடத்த வேண்டி இருக்கும் அந்த சைகஸ் பெண் மரமொன்று கல்லூரியில் என் வகுப்பிற்கு பின்புறம் இருக்கிறது. ஆனால் அந்த மரமத்தினருகில் மாணவர்களை அழைத்துச் சென்று மரத்தை அவர்கள் தொட்டு உணர்கையில் பாடம் நடத்த நான் பல படிநிலைகளில் அனுமதி வாங்கவேண்டும். மாணவர்களின் ஒழுங்கு சீர்குலையும் என்றும், வகுப்பில் அமர்ந்திருக்கும் பிற துறை மாணவர்களை அது தொந்தரவுக்குள்ளாக்கும் என்றெல்லாம் எனக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படும் ஆனாலும் நான் ஒவ்வொரு வருடமும் சைகஸ் மரத்தருகில் கூட்டமாக மாணவர்கள் வைத்துக்கொண்டுதான் பாடம் எடுப்பேன். கல்லூரியில் மேலும் பல இடங்களில் சைகஸ் மரங்களை நட்டும் வைத்திருக்கிறேன். இலைகள் செடிகள் கொடிகள் என கைகளால் எடுத்துக்கொண்டு போக முடிந்த அளவில் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டுபோய்க் கூடக் கற்பிக்கிறேன்
அருகம்புல் மண்டிக்கிடக்கும் கல்லூரி வளாகத்தின் ஒரு வகுப்பறைக்குள் அருகை கரும்பலகையில் படமாக வரைந்து கற்றுக் கொடுக்கும் பொதுக்கல்விமுறை தான் இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுக் கல்வி குறித்த தயக்கங்களும் அச்சமும் பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது. விரும்பும் படியான எந்த முறையில் கற்றலை அளித்தாலும் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை
நான் 8 ஆவதில் படிக்கையில்தான் எங்களூருக்கு முதன் முதலில் பிரஷர் குக்கர்கள் புழக்கத்தில் வந்தன. அறிவியல் ஆசிரியை துஷ்யகுமாரி வகுப்பிற்கு குக்கரையும், ஊறவைத்த கடலைகளையும் வீட்டிலிருந்து கொண்டுவந்து, எங்கள் முன்பு அதை விளக்கி வேக வைத்து சுண்டல் செய்து குக்கரின் செயல்பாட்டை விளக்கிய அந்த பாடம் இன்னும் என் மனதில் அப்படியே நினைவில் இருக்கிறது.
குறிஞ்சி மலர்ந்திருந்த ஒரு கல்லூரிக்காலத்தில், தாவர வகைப்பாட்டியல் ஆசிரியருடன் தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் இருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளமாய் மலர்ந்திருந்த குறிஞ்சி செடிகளை பார்த்ததும், காலடியில் இருந்த சிண்ட்ரெல்லா செருப்பென்னும் ஒரு சிறு மலர்ச்செடியை பார்த்ததும் எனக்கு நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. மிக மகிழ்வுடனும், நிறைவுடனும் நான் திரும்ப எண்ணிப்பார்க்கும் கற்றல் என்பது வகுப்பறைக்கு வெளியில் அரிதாக எனக்கு கற்பிக்கபட்டவைகளையே.
டோபியரி என்னும் தாவர உயிர் சிற்பக்கலையை பூங்காக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கம்பிச்சட்டங்களால் விலங்கு, பறவை உருவங்கள் செய்து, வளரும் சிறு செடி ஒன்றின் மீது இதை பொருத்தி வைத்து விடுவோம். செடி வளருகையில் சட்டத்துக்கு வெளியில் வளரும் இலைகளையும் கிளைகளையும் வெட்டி வெட்டி விரும்பிய வடிவில் உயிருள்ள பசுஞ்செடிகளை உருவாக்கும் இந்த முறைதான் இப்போது பொதுக்கல்வியில் இருக்கிறது. மாணவர்களின் தனித்திறன், அவர்களின் விருப்பம், தேவை, நிறைவு, லட்சியம் இவற்றை குறித்தெல்லாம் எந்த அறிதலும், கவலையும் இல்லாமல் எங்கோ, யாரோ, முன்னெப்போதோ முடிவு செய்த பாடத்திட்டங்களை திணித்து, ஒரு சராசரி குடி மகனை உருவாக்கும் முயற்சியில் தான் நாங்களனைவருமே இருக்கிறோம்.
எனவேதான் எனக்கு டோட்டோ சானின் டோமோயி மாற்றுக்கல்வி பள்ளியை அத்தனை பிடித்திருந்தது. முன்பே தீர்மானித்திருக்கும் வடிவிலான ஆளுமைகளாக மாணவர்களை மாற்றும் பணியில் இருக்கும் எனக்கு இந்த பள்ளி அதன் செயல்பாடுகள், அங்கிருக்கும் குழந்தைகள், அவர்களின் மகிழ்ச்சி எல்லாமே பெரும் குதூகலத்தை அளித்தது. கூடவே பெரும் ஏக்கத்தையும்.
இப்படியான கல்விமுறையை எல்லாருக்கும் அளிக்கையில் உருவாகும் ஒரு சமூகத்தை எண்ணி பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஹோம் ஸ்கூலிங் பற்றி கொஞ்சம் பேச தொடங்கி இருக்கிறார்கள். எனினும் அதன் அடிப்படைகளை அறியாத பெற்றோர்களால் அக்கல்வியை முழுமையாக அளித்துவிட முடியாது. டோமோயி போன்ற பள்ளிகளே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.
குருவிகளோடு பேசிக்கொண்டிருந்ததற்காகவும், மேசையறையை அடிக்கடி திறந்து மூடியபடி இருந்ததற்கும், வகுப்பு ஜன்னல் வழியே இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைகேட்டதற்காகவும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி ஒருத்தி, அந்த மாற்றுக்கல்வி பள்ளியின் உயிருள்ள பசுமையான கதவுகள் திறந்து வரவேற்கப்பட்டு நுழைகிறாள்.
அங்கே அவள் பல மணி நேரம் தொடர்ந்து பேசுவதெல்லாம் செவிகொடுத்து கேட்க தலைமை ஆசிரியர் இருக்கிறார். அவளால் உடலூனமுற்றவர்களுடனும் உடல் வளர்ச்சி நின்று போனவர்களுடன் அவர்களைப் புரிந்து கொண்டு அன்புடன் இருக்க முடிகிறது, அவர்களுக்கு அவளாலான உதவிகளை மனப்பூர்வமாக செய்யவும் முடிகிறது.
இப்போதைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதும் விரும்புவதும் போல முழுக்க முழுக்க பாதுகாப்பை மட்டும் அளிக்கும் பள்ளியாக இல்லாமல் சின்ன சின்ன ஆபத்துக்களையும் அவள் அங்கே சந்திக்க வேண்டி இருக்கிறது. மிக பத்திரமான, சுத்தமான இடங்களில் மட்டும் அவள் இருப்பதில்லை, பள்ளியில் கழிவறை குழிக்குள் விழுந்த தொப்பியை அவளாக கம்பியைக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள், உயரமான மரத்தில் ஏணியை கொண்டு, இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிய காலுடன் இருக்கும் நண்பனுடன் ஏறுகிறாள், செய்தித் தாள் கொண்டு மூடப்பட்டிருக்கும் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுகிறாள், கொக்கியில் தானே மாமிசமாக தொங்கி கீழே விழுந்து அடிபடுகிறாள். ஆனால் அவ்வனுபவங்களிலிருந்து அவள் ஆபத்தான சூழல்களை குறித்தும் எப்படி பாதுகாப்பாக இருப்பதென்றும் சுயமாகக் கற்றுக் கொள்கிறாள்.
தங்கள் பிள்ளைகளை மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும், வெயிலில் காய்ந்தால் தலைவலி வரும், பனியில் நின்றால் காய்ச்சல் வருமென்று பொத்தி பொத்தி வளர்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் இப்பள்ளியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிக்கு வெளியே சென்று மகரந்தச் சேர்க்கையை, பட்டாம் பூச்சிகளை, எல்லாம் நேரில் பார்த்து தாவரவியல் கற்றுக்கொள்ளும் டோட்டோசான் அருகில் இருக்கும் தோட்ட உரிமையாளர் ஆசிரியராக வந்தபோது விதைக்கவும், களையெடுக்கவும், கற்றுக்கொள்கிறாள்.
அந்த ரயில் பெட்டி வகுப்பறைகளே வெகு கொண்டாட்டமானதாக இருக்கிறது அவளுக்கு. பள்ளிக்கு வரும் கூடுதல் ரயில் பெட்டி டிரெய்லர்களால் இழுத்து வரப்பட்டு மரப்பாளங்களில் உருட்டி எடுத்து வைக்கப்படுகையில் இயற்பியலையும், சிறுவர்களனைவரும் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்கையிலே, உடலறவியலையும், திறந்தவெளி சமையலின் போதும், தேநீர் விருந்தின்போதும் சமையலையும், விருந்தோம்பலையும்,, சென்காகுஜீ கோயிலுக்கு போகையில் வரலாறையும், பள்ளிப்பாடலை பாடிப்பாடி இசையையும், சபையினர் முன்பு எப்படி அச்சமின்றி பேசுவதென்பதையும், கடலிலிருந்தும் மலையிலிருந்தும் உணவுகளை சாப்பிடுவதால் சரிவிகித சமச்சீர் உணவு கிடைக்கும் என்பதையும், கப்பல் பயணத்தையும், பிறருக்கு உதவி செய்வதையும் இன்னும் பலவற்றையும் கற்றுக்கொண்டே இருக்கிறாள்.
சந்தையில் காய்கறிகள் வாங்கி வணிகத்தை அறிந்து கொள்வது, கூடாரமடித்து தங்குதல், கொதி நீர் ஊற்றுகளில் குளிப்பது. ஆரோக்கிய மரப்பட்டை வாங்குவது, தனந்தனியே ரயிலில் பயணிப்பது என டோட்டோ சானின் பள்ளி வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமாக, அற்புதமாக இருக்கிறது. போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பைகளுக்கு பதிலாக காய்கறிகள் பரிசாக கொடுக்கப்பட்டு, அவற்றை அக்குழந்தைகளின் குடும்பம் உணவாக்குவதும் குழந்தைகளுக்கு கொடுக்கும் மகிழ்ச்சி அளப்பரியதாயிருக்கிறது.
டோட்டோசானும் பிற குழந்தைகளும் பள்ளி மைதானத்தின் மரங்களின் மீதமர்ந்த படி கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி தான் எத்தனை அழகானது. அங்கிருந்து அக்குழந்தைகள் அறிந்துகொள்ளுபவற்றை வெகு நிச்சயமாக வகுப்பறைக்குள் கற்பிக்க முடியாது.
டோட்டா சான் மஞ்சள்நிறக்கோழி குஞ்சுகளிடமிருந்தும், தன் தோழன் ஒருவனிடமிருந்தும், தன் பிரிய நாயிடமிருந்தும், இழப்பின், மரணத்தின், பிரிவின், துயரையும் கூட அறிந்துகொள்கிறாள்
அவளுக்கென அளிக்கப்பட்ட அடையாள அட்டையும், “நீ மிகவும் நல்ல பெண் தெரியுமா” என அடிக்கடி அவளிடம் சொல்லப்பட்டதும் அவளது ஆளுமையில் உருவாக்கிய மாற்றம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பேய்களைக் கொசு கடிப்பதும், இரண்டு பேய்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அழுவதும், பயந்துபோன பேய் கண்ணீர் விடுவதுமாக அந்த தைரிய பரீட்சை வெகு சுவாரஸ்யம்.
அப்பள்ளிக்கு வெளியே போர்ச்சூழல் நிலவுவது குறித்து எந்த அறிதலும், அச்சமும் இல்லாமல் அக்குழந்தைகள் அங்கு வாழ்வின் இயங்கியலை மகிழ்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
குண்டு வீச்சில் அழிந்து போன அந்த பள்ளி அங்கு படித்த அத்தனை மாணவர்களின் மனதிலும், அவர்கள் சொல்லக் கேட்கும் அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் எந்த சேதாரமும் இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறது. தற்போது மிகப் பிரபலமான திரை மற்றும் தொலைக்காட்சி நடிகையாகவும் புகழ்பெற்ற ஜப்பானிய ஆளுமையாகவும் இருக்கும் டெட்சுகோ குரோயோ நாகி என்னும் டோட்டோ சான் தன்னுடன் படித்த தோழர்கள் இப்போது என்னவாக இருக்கிறார்கள் என்னும் குறிப்பையும் இதில் தந்திருப்பது மிக சிறப்பானது.
அவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் மாற்றுக் கல்வி முறையின் நேரடி தாக்கம் இருப்பதை வாசிப்பவர்கள் உணரமுடிகின்றது குறிப்பாக உடல் வளர்ச்சி நின்று போன தாகா ஹாஷி என்னவாயிருக்கிறான் என்பதே அப்பள்ளியின் மாற்றுக்கல்வி முறையின் வெற்றிக்கு சான்றளிக்கிறது.
டோமோயி பள்ளியை உருவாக்கிய திரு.கோபயாஷி போல தேர்ந்த கல்வியாளர்களால் மாற்றுக்கல்வி முறை உலகின் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல மொத்தமாக பொதுக்கல்வி முறையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட முடியாது. ஆனாலும் மாற்றுக்கல்வியின், சில அம்சங்களையாவது பொதுக்கல்வியில் சேர்க்கலாம்.
வகுப்பறைக்கு வெளியேவும் கற்றலை அளிப்பது, மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் காணும் முறைகளை கல்வித்திட்டங்களில் சேர்ப்பது, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக அவர்கள் கருதாமல் இருப்பது போன்றவற்றை நிச்சயமாக செய்யலாம். தற்காலத்துக்கேற்றபடி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியது மிக அவசியமானது.
பெற்றோர்களின் மனநிலையும் வெகுவாக மாற வேண்டி இருக்கிறது. தன் மகள் மருத்துவப்படிப்பு சேரும் அளவிற்கு மதிப்பெண் வாங்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தாயொருத்தியை நானறிவேன். பிற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு கடிந்துகொள்ளும் பல்லாயிரம் பெற்றோர்கள் இங்கே இருக்கிறார்கள்.
குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், சிக்கல்களும் என்னவென்று அறியாத, மருத்துவர்களாலும், பொறியாளர்களால் சமைக்கபட்டிருக்கும் ஒரு பொன்னுலகை குறித்தான தீவிர நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்களில் பலருக்கு மாற்றுக்கல்வி உகந்ததல்ல.
என் மகன் பத்தாவது முடித்த பின்னர், 11 படிக்க பலரால் ஆகச் சிறந்த பள்ளி என பரிந்துரைக்கபட்ட ஹைதராபாதிலிருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். அது ஒரு பள்ளிக்கூடம் கூட அல்ல ஒரு அடுக்ககம். அதன் குளிரூட்டப்பட்ட அறைகளில் அடைத்த ஜன்னல்களுக்கு உள்ளிருந்து பிராய்லர் கோழிகளை காட்டிலும் பாவமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து துரத்தப்பட்டவள் போல நான் வேகமாக வெளியேறினேன். டோமோயி பள்ளியில் முள் கம்பிகளுக்கு அடியில் படுத்தும், தவழ்ந்தும் வெளியேறும் விளையாட்டில் தனது ஆடைகள் மட்டுமல்லாது ஜட்டியும் கூட கிழியும்படி விளையாடும் டோட்டோ சானுக்கு கிடைக்கும் அனுபவங்களைக் குறித்து ஏதும் அறியாமல் IIT கனவுகளில் மூழ்கி இப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவையில் மகன்கள் படித்த பள்ளியும் பொது கல்வி முறையில் மாற்றுக் கல்வியின் அம்சங்களையும் கலந்த கல்விமுறையை தான் கொண்டிருக்கிறது. படிக்க சொல்லி அழுத்தமோ கட்டாயமோ அங்கு எப்போதும் இருந்ததில்லை. சேர்க்கையின் போதே உங்கள் மகன் இங்கு படித்து பொறியாளராகவும் மருத்துவராகவும் ஆகவேண்டும் என உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதற்கானது இந்தப்பள்ளி அல்ல என்று சொன்னார்கள்.
மதிய உணவிற்கு பின்னர் பெரும்பாலான நாட்களில் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதில்லை விடுதி அறையிலேயே இருக்கலாம், இசை கேட்கலாம், மிதிவண்டியில் சுற்றலாம், இசைக்கருவிகள் வாசிக்கலாம், பள்ளி வளாகத்தில் இருக்கும் கோயில்களுக்கோ அல்லது மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகளுக்கோ செல்லலாம், ஆணும் பெண்ணும் இயல்பாக பார்த்து, பேசிக் கொள்ளலாம். இங்கு மட்டும் தான் எனக்கு தெரிந்து KTPI – Knowledge and traditional practices of India என்னும் ஒரு பாடத்தை 12 ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும். இந்திய தொன்மங்கள், இலக்கியங்கள், இதிகாசங்களை இப்பாடத்தில் கற்பிக்கிறார்கள். இந்திய புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கும் கோவில்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள்.
இந்த பள்ளியில் மட்டுமே நான் ஆசிரியர்களின் தோளில் கைகளை போட்டுக்கொண்டு நடக்கும் மாணவர்களை பார்த்திருக்கிறேன்.
ஒரு முறை நான் பள்ளிக்கு சரணுடன் சென்றிருக்கையில் தூரத்தில் இருசக்கரவாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அப்பள்ளியின் முதல்வர் ”சரண் லவ் யூ சரண்” என்று கூச்சலிட்டபடி காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றார்கள். பள்ளிப்படிப்பை முடித்து சில வருடங்களுக்கு பின் ஒரு விழாவுக்கெனெ மீண்டும் பள்ளிக்கு சென்றிருந்த சரணை “looking handsome man” என்றபடி ஒரு ஆசிரியை இறுக்க அணைத்துக் கொண்டார்கள். அங்கே போலி பணிவும் பவ்யமும் இல்லவே இல்லை. டோமோயி பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் மடியிலும், முதுகிலும், தோளிலும் ஏறி தொங்கிக் கொண்டிருப்பதை வாசிக்கையில் நான் அவற்றை நினைவுகூர்ந்தேன்.
நான் மகன்களின் ஆளுமை உருவாக்கம் குறித்து இந்த பள்ளியில் சேர்த்த பின்னர் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. இப்படியான பள்ளியில் கற்றுக்கொள்வது அனைவருக்கும் சாத்தியமில்லை தான். நம் பொதுக் கல்வியில் மாற்றுக்கல்வியின் சாத்தியமான அம்சங்களை சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் அரசியலாளர்கள் யோசித்து, உலகின் பல பகுதிகளில் இருக்கும் மாற்றுக்கல்வி முறைகளை பற்றியெல்லாம் அவர்கள் அறிந்து கொண்டு ஆலோசித்தால், பரிசீலித்தால் மட்டுமே மெல்ல மெல்ல மாற்றம் வரும்.
ஆசிரியர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. இப்புத்தகத்தை நான் மிக மிக நேசிக்கிறேன். எனக்கு தெரிந்து வாசிப்பில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் இதை நான் பரிந்துரைத்தேன், பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று இது. மிகச் சிறிய புத்தகம் ஆனால் இதன் பேசுபொருள் மிக மிக பெரியது.
டோமோயி பள்ளியின் மாணவியும் இந்நூலின் ஆசிரியருமான டெட்சுகோ குரோயா நாகிக்கு ஆசிரியராகவும் அன்னையாகவும் எனது பாராட்டுக்களை தெரிவிக்க அவரது முகவரியை தேடிக்கொண்டிருக்கிறேன்.
வெண்முரசு மீள் வாசிப்பிலிருக்கிறேன். எத்தனை முறை வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிய திறப்புக்கள், புதிய அறிதல்கள் என்று தீராமாலே இருந்துகொண்டிருக்கிறது வெண்முரசு. இம்முறை வேர்களை, இலைகளை மகரந்தங்களை, மரங்களை எல்லாம் குறிப்பாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். முதற்கனலிலிருந்து துவங்கி முதலாவிண் வரையிலுமே பயணிக்கும் மகரந்தங்கள் மிக மிக முக்கியமான நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
முதற்கனலில் எட்டுவகை ஸ்ரீதேவியராக அறியப்படுகிற , விதைகளுக்குள் வாழும் தேவியான விருஷ்டி, வேர்களையும் மகரந்தங்களையும் தானே ஆள்பவள் என்கிறாள். வியாசருக்கு சுவர்ணவனத்தின் பறவை குடும்பத்தின் சிறு குஞ்சொன்று பூவின் மகரந்தத் தொகை போல இருக்கிறது
முதலாவிண்ணில் அழும் சிறுமதலையை மெல்ல தட்டியபடி அன்னை ‘ சிறு கரிச்சான் பைதலே, பாடுக குழலிசையின் இனிமையை. அவன் நீலமலர்க் காலடி படிந்த பூம்பொடிப் பொன்பரப்பே கூறுக, நீ கொண்ட மெய்விதிர்ப்பின் குளிரை’’என்று தாலாட்டுகிறாள்.
மென்முகில் சேக்கையில் துயிலும் சித்ரசேனனை சுற்றி அவன் தேவி சந்தியை பூத்த காட்டிலிருந்து மலர்மணத்தையும் மகரந்தங்களையும் அள்ளிக்கொண்டு வந்து பரப்பி அவன் துயிலுக்குள் இளம் இனிய கனவுகளை எழுப்புகிறாள்..
கிராதத்திலேயே மழையீரத்தில் கொன்றைகளுக்குக் கீழே உருவான கால் குழித் தடங்களில் பொன் பொடி என மகரந்தம் உதிர்ந்து கிடக்கிறது.
வண்ணக்கடலில் ஸ்தூனகர்ணன் ஆலய சுனை நீரை அள்ளி வீசி தன் உடலிலிருந்து மகரந்தப் பொடிகளையும் தேன் துளி களையும் களையும் துரியோதனன் முன்புதான் ஸ்தூனகர்ணன் தோன்றுகிறான்.
இமைக்கணத்தில் அத்ரிமலை முடி நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த சுகரின் முன்னால் எழுந்த விண்ணுரு நூறாயிரம் கோடி இடிகளென எழுந்த பெருங்குரலில் “நானே மாபெரும் அரசமரம். வானில் வேர் விரித்து மண்ணில் கிளையும் விழுதும் இலையும் தளிரும் மலரும் மகரந்தமும் பரப்பி நின்றிருக்கிறேன்” என்று முழங்குகிறது.
.இளைய யாதவனின் விழிகளினூடாக தாமரை இதழ்களுக்குள் வண்டு என.நுழைந்த யமி அதன் மகரந்த மையத்தை அடைகிறாள்.
இளைய யாதவர் விதுரரிடம் அஸ்வதந்த அருமணியை கொண்டு வரச்சொல்லுகையில் விதுரர் செல்லும் அந்த வைப்பறையின் காற்றில் வேப்பிலைச்சருகின் நாற்றமும் தாழம்பூம்பொடியின் மணமும், இருளின் மணமும் கலந்திருக்கிறது.
மாமலரில் முண்டன். மரத்தில் மலர்ந்த அசோகசுந்தரியை பற்றிச் சொல்லும்போது பாற்கடலை விண்ணவரும் ஆழுலகோரும் சேர்ந்து கடைந்தபோது எழுந்த கல்பமரத்தின் அலை வளைவு தண்டாக, நுரைகள் தளிரென்றாக, துமிகள் மகரந்தம் என்று மாற உருக்கொண்டெழுந்ததென்கிறான்
வெண்முகில் நகரத்தில் கிருஷ்ணனுடன் பகடை ஆடி சலிக்கும் சகுனி கற்பனையில் அலையிலெழும் குதிரையில் ஏறி வருகிறது ஐந்து கைகள் கொண்ட ஒரு மலர். அம்மலர் வட்டம் சிலந்திவலை ஆகி, சிலந்தி எட்டு கைகளுடன் நச்சுக்கொடுக்குகளுடன் எழுந்து, புல்லிவட்டமாக சிதர் விரித்து மகரந்தம் காட்டுகிறது
நீர்ச்சுடரில் மகனிடம் எப்படியும் ஒருமுறை பேசத்துடிக்கும் சுபத்ரையின் கண்களில் தெரியும் இரட்டை வெண்புழுக்களில் ஒன்றாக அபிமன்யூ நெளிவது ஒரு தாமரை மலரின் மகரந்த பீடத்தில்தான்
தன்மேல் பெருங்காதல் கொண்ட சச்சியைக்காண சிட்டுக்குருவியென அவளிடம் வந்துகொண்டிருந்த இந்திரன் மீது மணந்ததும் மகரந்தம் தான்
கல்பொருசிறு நுரையில் மலையன் தயை என்னும் சிறுமியுடன் இளையாயாதவரை தேடி மந்தரம் எனும் ஆயர்சிற்றூரை அடைகையில் கடக்கும் காட்டின் தரையையே பொன்னிற விரிப்பாக காட்டுவதும் உதிர்ந்த பூம்பொடிகள் தான்
களிற்றுயானை நிரையில் பாஞ்சாலியின் அறையின் மலர்கள் இதழ்கள் விரித்து, பூம்பொடி நிறைத்து காத்திருந்த ஓவிய மலர் வெளியில் யுயுத்ஸு சிறகு முளைத்த சிறுவண்டென பறந்தலைகிறான்
தீயின் எடையில் அன்னை முறை கொண்டவளை புணர்ந்த ஸ்தூனகர்ணனிடம், ஸ்தூனன் ’’கிருதயுகத்தில் மானுடர் பூம்பொடி படர்ந்திருந்தாலும் மென்சேறு பூசப்பட்டிருந்தாலும் அசையாத பாறைகள் போலிருந்தனர்’’ என்கிறான்.
வெய்யோனில் இந்திரபிரஸ்தத்திற்கு வந்த கர்ணன் அரண்மனைக்கு செல்லுகையில் அவைபுகும் வழியில் காணும் வெண்புரவியின் மென்மயிர் பரப்பில் வெயிலின் செம்மை பூம்பொடி உதிர்ந்தது போல பரவியிருந்தது என்னும் வெகு நுட்பமான இந்த விவரணை கற்பனை செய்து பார்க்கையில் பேரழகாக இருந்தது.
இருட்கனியில் இறந்த வெய்யோனை வணங்கும் அஜர் உரையிடைப்படும் பாட்டில் வரும் துயர் கொண்டிருக்கும் நீலத்தாமரைமலர்.’’என் இதழ்களுக்கு ஒளியாகிறீர்கள். என் பூம்பொடியில் நறுமணம் நிறைக்கிறீர்கள். என் அகக்குமிழில் தேன் என கனிகிறீர்கள்’’ என்கிறது கதிரவனிடம்.
இப்படி பல முக்கியமான தருணங்களில் மகரந்தங்கள் வெண்முரசில் குறிப்பிட பட்டிருக்கிறது.
வீட்டில் ஒரு கத்தி சவுக்கு மரம் இப்போதுதான் மலரத் தொடங்கி இருக்கிறது. இலைகளே தெரியாமல் மரம் முழுவதும் பூத்திருக்கும் மஞ்சள் மஞ்சரிகளிலிருந்து நுண் மலர்களும்,மகரந்த பூம்பொடியும் மழைபோல பொழிந்து வீடும் வாசலும் மஞ்சள் குளித்து கொண்டிருக்கிறது. ’மஞ்சுளா’ என்று மரத்திற்கு பெயரும் வைத்தாயிற்று. ஒரு மரத்திற்கு இத்தனை மகரந்தம் ஏராளம்தான் ஆனாலும் அடுத்த சந்ததிகளை உறுதிசெய்ய, காற்றில் நீரில் பரவும் போது, வீணாய் போகவிருக்கும் மகரந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தேவைக்கும் அதிகமாக, இப்படி ஏராளமாக மகரந்தங்களை உருவாகுகின்றன தாவரங்கள்.
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை என்பது காதல் செய்வதுதான். பிற உயிர்களை போல தன் இணையை தேடி செல்ல முடியாமல், வேர்களால் நிலத்துடன் பிணைக்கப்பட்டு இருப்பதால் தாவரங்களில் இணையைத் தேடி காதலுடன் பயணிப்பது மகரந்தங்களே. ஆண் மரங்களிலிருந்து மகரந்தம் பெண் மரங்களின் மலர்களை தேடி அதிகபட்சமாக 20 கிலோ மீட்டர்கள் வரை பயணிப்பதும், அப்போது பெண் மலர்கள் கருவுறுதலுக்கு தயாராக இருந்து மகரந்தத்தை வாங்கிக்கொள்ளுவதும். காற்றில் கலந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பிற தாவரங்களின் மகரந்தங்களினால் பெண்மலர்கள் சூல் கொள்ளாமலிருக்க தேவையான தடுப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வதும், பலவீனமான மகரந்தங்கள் வந்துசேர்கையில் அவற்றை முளைக்க விடாமல் பெண்மலர்களே அழித்துவிடுவதுமாய் கருவுறுதலின் ஏற்பாடுகளை மலர்கள் அதீத கவனத்துடன், புத்திசாலித்தனமாக மேற்கொள்கின்றன. ’’Pollination Romance’’ என்றுதான் நான் கற்பிக்கையில் குறிப்பிடுவேன்.
தாவரங்களிலும் தென்னையை போல ஒரே பாளையில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியாகவும், செம்பருத்தியைப்போல ஒரே தாவரத்தில் இருபால் மலர்களும், பப்பாளி, ஜாதிக்காய் மரங்களைப் போல ஆண்பெண்மரங்கள் தனிதனியே இருப்பதும் பலருக்கு தெரிவதில்லை.
மலர்கள் கொண்டிருக்கும் மரங்களனைத்தும் கனிதரும் என்று நினைக்கிறார்கள் அப்படி கனி தராதவை மலட்டு மரமென்று வெட்டப்படுகின்றன.
பலர் வீடுகளில் பப்பாளியின் ஆண் மரங்களை அது காய்க்காத மரம் என்று வெட்டி விடுகிறார்கள். ஒரே ஒரு ஆண் மரமாவது, எங்கோ ஓரிடத்தில் இருந்தால் தால் அதன் மகரந்தங்கள் தேடிச்சென்று காதல் கொண்டபின், அந்த ஊரின் அனைத்து பப்பாளி மரங்களும் கனி கொடுக்கும். இங்கு வீட்டில் இருந்த ஆண் மரமொன்றை வெட்டிவிட சொல்லி, தோட்டத்தை சுத்தப்படுத்த உதவும் லக்ஷ்மி சொன்னபோது நான் அவளிடம் இந்த ஆண் பெண் காதல் கதையை விளக்கினேன். முகவாயில் கைவைத்துக்கொண்டு ’’மனுஷங்க மாதிரியே இதிலயும் ஆம்பளை, பொம்பளை இருக்குதுங்களே’’ என்று வியந்தாள்.
உலகின் பூக்கும் தாவரங்களில் 330,000 தாவரங்களுக்கு பாலினப்பெருக்கம் செய்ய மகரந்த சேர்க்கை அவசியமாக இருக்கின்றது. இதன் பொருட்டு மகரந்தங்கள் மிகச் சரியான பருவத்தில் வெளியாகி, அவற்றின் இணையை தேடி பயணிப்பதும், அவற்றை அடையாளம் கண்டுகொள்வதும் , மிக ஆச்சர்யம் அளிப்பவை .இந்த காதலுக்கு நீரும், காற்றும், பறவைகளும் ,தேனீக்களும், குளவிகளும், வண்டுகளும், எறும்புகளும், விலங்குகளும் துணை செய்கின்றன.
பூச்சிகளால் நிகழும் மகரந்த சேர்க்கையும் ஒரு அழகிய கவிதையை போல சொல்லப்பட்டிருக்கிறது
இளைய யாதவர். ப்த்ரரிடம் ” “மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. தான் செல்ல விரும்பும் திசை நோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!”என்கிறார்,
தன் மகரந்த சேர்க்கைக்கான எல்லா வசதிகளும் இருக்கையில், மலர்களின் மெல்லிய அசைவிலேயே மகரந்தம் பெண் மலர்களின் மீது பொழியும் என்றாலும் வீரியமிக்க சந்ததிகளை இம்முறையில் உண்டாக்க முடியாதென்பதை அறிந்து, அயல்மகரந்த சேர்க்கையை விரும்பும் தாவரங்களின் அறிவை என்னவென்று சொல்வது?. இருபால் மலரான செங்காந்தளை பார்த்தால் தெரியும் தன் சூலக முடியில் தனது மகரந்தங்கள் விழுந்துவிடக்கூடாதென்பதற்காக, ஆண் பகுதியிலிருந்து, சூலக முடியினை முடிந்த வரையிலும் தள்ளி அமைத்திருக்கும்
ஆண் பகுதியிலிருந்து மகரந்தம் எளிதில் வெளிவராத சில குறிப்பிட்ட வகை குழல் மலர்களில், வண்டுகள் தங்களது உடலை மலர்களில் வேகமாக உரசி மகரந்தத்தை வெளிவர செய்து தங்கள் உடம்பில் எடுத்துக்கொண்டு போகும் Buzz pollination என்பதுவும் தாவரவியலின் ஆச்சர்யங்களில் ஒன்று. இந்த உரசலின் அலைவரிசை மிகத்துல்லியமாக இருந்தால் மட்டுமே இம் மலர்களிலிருந்து மகரந்தம் வெளியே வரும். உலகின் 9 சதவீத மலர்களில் இந்த உரசல் தேவையாக இருக்கிறது.உரசலின்போது மகரந்தம் வண்டுகளின் உடலின் அடிப்பாகங்களிலும், கால்களுக்கு இடையிலும் பீய்ச்சி அடிக்கப்படுகின்றது, மகரந்த பொடி பூசிய இவ்வண்டுகள் பிற மலர்களில் அமரும்போது எளிதாக காதல் நடக்கின்றது. இந்த பீய்ச்சியடிக்கும் வேகமானது புவி ஈர்ப்பின் வேகத்தைவிட 30 மடங்கு அதிகமென கணக்கிடப்பட்டிருக்கிறது.
இவ்வண்டுகள் அமர்ந்து சென்ற மலர்களின் மீது அடர் மஞ்சள் மகரந்த துணுக்குகள் பொன்முத்தங்களென அமைந்திருக்கும்.நம் கண்ணுக்கு தெரியாத இந்த காதலின் போது ஆண் பெண் தாவரங்கள் தங்களுக்கிடையே சரியான இணையை தேடுவதும், சமிஞ்சை அளிப்பதையும், பின்னர் பிழையின்றி அதே இனத்தின் பெண் மலரை கண்டடைவதையும் குறித்த பல ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
பிற உயிரினங்களில் நடப்பது போலவே ஒன்றுக்கும் மேற்பட்ட மகரந்தங்கள் பெண் மலரில் விழுந்து,அனைத்துமே முளைத்து ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு பெண் முட்டையை அடைந்து விதிக்கப்பட்ட ஒன்றே ஒன்றின் குழல் வெடித்து விந்து வெளியேறி, இணைந்து கருவுறுதல் நிகழ்கின்றது.
மழைப்பாடலில் கர்ணனை கருக்கொண்டிருக்கும் பிருதை அனகையிடம் . நான் குந்தியல்ல, யாதவப்பெண்ணான பிருதை. நான் விழைந்த ஆணின் கருவை ஏந்தியிருக்கிறேன். மலர்கள் மகரந்தங்களை ஏந்துவது போன்றது மங்கையரின் கரு என இளமையிலேயே கேட்டு வளர்ந்தவள் நான். எதற்காக நான் அஞ்சவேண்டும்? எனக்கேட்கிறாள்.
பாலையின் மகரந்தச்சேர்க்கை மற்ற நிலப்பரப்புக்களை விட சிறப்பானதாயிருக்கும். அங்கு வரும் பூச்சிக்களின் எண்ணிக்கை குறைவென்பதால் வரும் பூச்சிகளுக்கு பரிசாக இனிப்புக்களையும் எண்ணெய்த்துளிகளையும் அமினோ அமிலங்களையும் மலர்கள் மகரந்தக்குவையின் மீதே வைத்திருக்கும்.
பாலைப்பெருமலர்வு ( Desert super bloom ) எனப்படும் அரிய தாவரவியல் நிகழ்வில் வழக்கத்துக்கு மாறான மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் போது, முந்தைய மழையில் உருவாகி பாலை மணலில் புதைந்திருக்கும் விதைகள் முளைத்து மிக அதிக அளவில் பாலைத் தாவரங்கள் ஒரே சமயத்தில் மலர்ந்து, மகரந்தம் பரப்பி, சூல்கொண்டு, மீண்டும் ஏராளமான விதைகளை உருவாக்கும். கலிஃபோர்னியா பாலைகளில் பத்து ஆண்டுகளுக்கொருமுறை இம்மலர்வு நிகழும். 1990களுக்கு பிறகே பாலை பெருமலர்வென்னும் இந்த சொல் புழக்கத்தில் வந்தது
எழுதழலில் சந்திரசூடருடன் அரண்மனைக்கு செல்லும் வழியில் தான் இளைய யாதவரின் மைந்தர்களுடன் வளர்ந்ததை நினைவுகூறும் அபிமன்யூ “அவருக்கு எத்தனை மைந்தர்?” என்று கேட்கும் பிரலம்பனிடம் // “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்”// பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.” என்கிறான்
இளையயதவரின் காதல்களுக்கு மகரந்தத்தை ஒப்புமையாக்கி அவரை உளத்தலைவராக ஏற்றிருக்கும் பல்லாயிரம் பெண்களையும், அவரின் பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும், அவர்களின் லட்சம் மைந்தர்களியும் குறிக்கும் இந்த வரி எத்தனை அழகானது!
கார்கடலில் போர் சூழ்கையொன்றை குறித்த விவாதத்தில் கர புஷ்பம் என்றொரு தாமரை சூழ்கையை அஸ்வத்தாமன் இப்படி விவரிக்கிறான் ’’தேன் நாடி வண்டுகள் தாமரைக்குள் வருகின்றன. மையத்திலுள்ள மகரந்தத் தாள்களுக்கு அடியில் வந்தாலொழிய அவற்றால் தேனருந்த இயலாது. அங்கிருந்து அவை எளிதில் பறந்தெழ இயலாமல் தேனும் பூம்பொடியும் தடுக்கும். இதழ்கள் ஒன்றுடன் ஒன்றுகூடி குவிந்து வண்டை சிறைப்படுத்தும். நாம் வகுக்கும் சூழ்கையில் அர்ஜுனன் அல்லது பீமன் விழ வேண்டும்//என்கிறான். மலர்பொறி சூழ்கை அது. தாமரையினுள்ளிருக்கும் மலரமுதை அருந்தி, அங்கிருக்கும், மித வெப்பத்தில் மதிமயங்கி, வண்டுகள் உள்ளேயே இரவெல்லாம் சிறைபட்டு பின்னர் காலையில் வெளியே வருவதை பல பழந்தமிழ்பாடல்கள் குறிப்பிட்டிருக்கின்றன.
இயற்கையிலேயே Trap blossoms எனப்படும் மலர்ப்பொறிகள் தாமரையல்லாத மலர்களிலும் உண்டு. சில கொடித்தாவரங்கள் நெருக்கமாக ஒன்றையொன்று தழுவி கொண்டிருக்கும் மலர் மஞ்சரிகளை கொண்டிருக்கும், அவற்றை தேடி வரும் பூச்சிகளை அந்த மஞ்சரிகளுக்குள்ளேயே சிறிது நேரம் வெளியேற முடியாத வகையில் பிடித்து வைத்துக் கொண்டு, பின்னர் மகரந்தம் அவற்றின் உடல் முழுக்க பூசப்பட்ட பின்னர் அவற்றை விடுவிக்கும்
மலர்களிலிருந்து மலரமுதினை (Nectar) மட்டுமல்லாது மகரந்தங்களையும் பல பூச்சிகள் உண்ணும். சொல்வளர் காட்டில் இளைய யாதவர் பத்ரரிடம் ’’மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டு செல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண் சாரத்தையே அது கொண்டு செல்கிறது, அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது. என்பார்.
ஒரு மரத்தின் நுண்சாரமான மகரந்தத்தில் அபரிமிதமான சத்துக்கள் அடங்கி இருப்பதால் பல நாடுகளில் தேனைப்போலவே மகரந்தங்களும் சேகரிக்கப்பட்டு, மனிதர்களுக்கு உணவாகின்றது. பைனஸ் மகரந்தங்கள் இவற்றில் மிக பிரபலமானது. கொரிய புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஆண்டுக்கொன்றென நீள ஸ்கேல் போன்ற அட்டையில் பொதிந்திருக்கும் Dasik சிறப்பு பிஸ்கட்டுகள் பைன் மகரந்தங்களை கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது.
பூச்சிகளும் மலரமுதுடன் மகரந்தங்களையும் உண்ணும், அவற்றை சேகரித்து கூடுகளுக்கு எடுத்துச்செல்லும். மகரந்தத்தை சேகரிக்கும் கூடை போன்ற அமைப்பினை ( pollen Basket ) பல வண்டுகளும் தேனீக்களும் பின்னங்கால்களில் கொண்டிருக்கின்றன. இன்னும் சில பூச்சி இனங்கள் மகரந்தத்தை சேகரிக்க உடலின் பின் பகுதியில் அடர்ந்த முடி அமைப்பை கொண்டிருக்கும். மகரந்தங்களை உண்ணும் உயிர்கள் Palynivore எனப்படுகின்றன.
தேனீக்களை வளர்த்து தேன் சேகரிப்பவர்கள் தேன் கூடுகளின் பின்புறம் தேனீக்கள் நுழைகையில் அவற்றின் உடலில் இருந்து மகரந்தங்களை மட்டும் பிரித்தெடுக்கும் சல்லடைப் பொறிகளை வைத்திருப்பார்கள்.வளர்ந்த நாடுகளில் பழப்பண்ணை களில் தேவைப்படும் தேனீக்களை பண்ணைக்குள்ளேயே ஆயிரக்கணக்கில் கூடுகளில் வளர்க்கும் கட்டுப்படுத்தப்பட்ட மகரந்த சேர்க்கை நடத்தவென சிறப்பு தொழிநுட்பங்களும் தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றன.
மலருயிரியல் எனப்படும் Floral biology யின் துணை அறிவியலான Anthecology, என்பது மகரந்த சேர்க்கையை, அதற்கு துணைபோகும் உயிரினங்களை, இவற்றிற்கிடையேயான தொடர்புகளை, புரிதல்களை பற்றிய அறிவியல். மகரந்த துகள்களை பற்றிய பிரத்யேக அறிவியல் palynology எனப்படுகிறது.
மகரந்த சேர்க்கையின் முக்கியதுவமறிந்த பல நாடுகளில் இந்த பூச்சிகளின் வழித்தடங்கள் பாதுகாப்படுகிறது முதன் முதலில் மகரந்தவழித்தடங்கள் (pollinator corridors ) என்னும் சொல்லை சூழலியலாளர் ஃப்ளெமிங் (Ted Fleming ) 1993’ல் உருவாக்கினார். வலசை செல்லும் சிறு பறவைகளும் பூச்சி இனங்களும் மகரந்த சேர்க்கை செய்தபின்னர் திரும்பி செல்லும் பயணவழியில் சோர்வடையாமல் இருக்க மகரந்தம் கொண்டிருக்கும் மலர்கள் அவற்றிற்கு கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றை முன்னரே சேமித்து வைத்திருந்து அளிக்கின்றன. காலநிலை மாற்றங்களினால் இந்த மகரந்த வழித்தடங்களில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் மாற்றம் அல்லது சேதம் பல தாவரங்களின் இனப்பெருக்கத்தை நேரடியாக பதிகின்றது.இவ்வழித்தடங்களில் இருக்கும் தாவரங்களும் அவற்றில் அடுத்தடுத்து மகரந்த சேர்க்கையும்,கருவுறுதலும் நிகழும் காலங்களும், அவற்றிற்கு உதவும் பூச்சி இனங்களும் குறித்த ஆய்வுகள் மிக முக்கியமானவை.
இவ் வழித்தடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஆக்கிரமிப்பு தாவரங்களினாலும், பல தாவரங்களின் பருவம் தவறிய மலர்தலினாலும் பல வழித்தடங்கள் நிரந்தரமாக அழிந்துவிட்டதை காட்டுகின்றன. மகரந்த சேர்க்கை இல்லையெனில் கருவுறுதலும், விதை உருவாதலும், அடுத்த சந்ததியும் இல்லாமல் போகிறது.
மகரந்த சேர்க்கைக்குதவும் உயிரினங்கள் மற்றும் மகரந்த வழித்தடங்களின் அழிவு மனிதர்களின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாகும் காலம் வெகு சமீபத்தில் தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்
பல அமெரிக்க பழங்குடியினர்களில் பலிச் சடங்குகளில் பலி விலங்கின் மீது நாம் மஞ்சள் நீர் ஊற்றுவது போல மகரந்தப்பொடியை தூவும் வழக்கம் இருக்கிறது. அரிஸோனா மற்றும் மெக்ஸிகோ பழங்குடியினர் மகரந்தத்தால் பூசப்படுகையில் உடல் புனிமடைவதாக நம்புகின்றனர்.
பெரும்பாலான பூச்சியினங்களுக்கு மஞ்சள் நிறம்மட்டுமே கண்ணுக்கு புலப்படும் என்பதால்தான் மகரந்தங்கள் பொதுவாக மஞ்சளில் உருவாக்கப்படுகின்றன. சில குறிப்பிட்ட வகை பூச்சியினங்ளுக்காக இளநீலம் வெள்ளை பச்சை. சிவப்பு உள்ளிட்ட பல நிறங்களிலும் மகரந்தங்கள் உருவாகின்றன.
பிற உயிரினங்களில் ஆண் பெண்ணை கவர பிரத்யேகமான அழகும், இறகும் ,அலங்காரங்களும், நிறங்களும் கொண்டிருப்பது போலவே, மனிதனின் கண்ணுக்கே தெரியாத மின்னணு நுண்ணோக்கியில் மட்டுமே காணக்கிடைக்கும் மகரந்தங்களும், அவற்றின் மேற்புறத்தில் இருக்கும் அழகிய சிற்பங்களின் நுண் செதுக்கல்களை போன்ற வடிவங்களும், நிறங்களும் இருக்கின்றன. நுண்ணோக்கிகள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் நம்மால் பார்க்க முடியாமல் போயிருக்கும் மகரந்தங்களின் இப்பேரழகை குறித்து சமீபத்தில் நீங்கள் பாலுறவின் ஆன்மீகத்தில் சொல்லியவற்றை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்,
// நீங்கள் ‘பார்ப்பதற்காக’ அல்ல. ஒட்டுமொத்தமாக ஒரு மெய்மையைச் சிற்பமாக்கும் பொருட்டு அவை அங்கே செதுக்கப்பட்டுள்ளன. எவருமே பார்க்கவில்லை என்றாலும் ஆலயம் குறைவுபடுவதில்லை. பாருங்கள், எவருமே பார்க்கமுடியாத இடங்களிலெல்லாம்கூட சிற்பங்கள் நிறைந்திருக்கும். சில ஆலயங்களில் மண்ணுக்கு அடியில்கூட சிற்பங்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவை அந்த ஆலயத்தின் இயல்பான நுண்கூறுகள், அவ்வளவுதான்.அங்கே அவை இருப்பது மனிதனின் தேர்வு அல்ல. மனிதன் விலக்கக்கூடுவதும் அல்ல. அது படைப்பின் பகுதி. இயற்கையின் பகுதி. நன்று தீது என்பதற்கு அப்பாலுள்ளது// எனக்கு மகரந்தங்களின் அழகை காண்கையில் தெய்வ தரிசனமாகவேதான் தோன்றுகிறது.
ஜெ தளத்தில் கொள்ளுநதீமின் கிரானடாநாவலும்அச்சங்களும் வாசித்ததும் கிரானடாவை வாங்க அனுப்பாணை பிறப்பித்தேன். அவரின் நூலறிமுகம் ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை அளித்தது. கிரானடா என்று பெயரிட்டிருக்கப்பட்ட அந்த வீடும், கிரானடா என்னும் பெயரும் வசீகரித்தது. அவர் குறிப்பிட்டிருப்பது போல pomegranate எனப் பெயரிடப்பட்டிருக்கும் மாதுளையின் அறிவியல் பெயர் Punica granatum. இந்த பெயரில் பல மொழிகளின் கலப்பு இருக்கிறது.
லத்தீன மொழியில் pōmum என்றால் ஆப்பிள் grānātum என்றால் விதைகள் செறிந்த என்று பொருள். ’’ஆப்பிளை போலவேயான கனி ஆனால் விதைகள் நிறைந்த’’ என்ற பொருளில் பழைய ஃப்ரென்சு சொல்லான pomme-grenade என்பதிலிருந்தே இந்த லத்தீன் சொல் பெறப்பட்டது…ஆங்கிலத்தில் “apple of Grenada” என்றழைக்கட்ட இக்கனி லத்தீன -granade என்பதை ஸ்பெயினின் நகரான ‘Granada’ வை தவறாக நினைத்திருக்கலாமென்றும் ஒரு கருத்து இருக்கின்றது.Pomegranate என்பதற்கான ஃப்ரென்ச் சொல்லான grenade, மாதுளம் கனிகள் கையெறி குண்டுகளின் வடிவத்தை ஒத்திருப்பதால் வைக்கப்பட்டது என்றும் தாவரவியல் குறிப்புக்கள் உள்ளன.
பல பொருள்கள் கொண்ட லத்தீன grānātum என்பதற்கு அடர் சிவப்பு நிறமென்றும் ஒரு பொருள் இருப்பதால் இது மாதுளங்கனியின் சாற்றின் நிறத்தையும் குறிக்கின்றது..மாதுளையின் நிறத்திற்கென்றே பிரத்யேகமாக balaustine என்னும் சொல் இருக்கின்றது. ’இறப்பின் கனி’ எனப்படும் மாதுளை குறித்த ரோமானிய, கிரேக்க தொன்மங்களும் வெகு சுவாரஸ்யமானவை.. The Color of Pomegranates என்னும் 1969 ல் வெளியான ஒரு ஆர்மினிய திரைப்படம் இசைஅரசனனான 18 அம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆர்மீனிய கவி Sayat-Nova வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.மாதுளைகளின் நாடான ஆஃப்கானிஸ்தானின் கந்தகாரின் அம்மண்ணிற்கே உரிய ஜம்போ மாதுளைகளுக்கு சர்வதேச கிராக்கி இருக்கின்றது.
கொள்ளு நதீமின் இந்த கட்டுரை மாதுளையின் பின்னால் என்னை போகச்செய்துவிட்து
வெண்முரசு நாவல் நிரையின் முதல் வாசிப்பில் முதற்கனலை துவங்குகையில் வெண்முரசின் மொழிச்செறிவு எனக்கு தயக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது, எனினும் துணிந்து அந்த ஆழத்தில் இறங்கினேன் மெல்ல மெல்ல வெண்முரசின் மொழிக்கு என்ன பழக்கப்படுத்திக் கொண்டேன் ஆனால் வண்ணக்கடலுக்கு அடுத்து நீலத்தில் என்னால் உடனே நுழைய முடியவில்லை .
நீலம் அதுவரை நான் பழகியிருந்த வெண்முரசின் மொழிநடையில் இருந்து பெரிதும் மாறுபட்டதாக, வசனகவிதை போல, சந்தங்களுடன் கூடிய பாடலைப் போல என்னை விலக்கி வைத்தது மேலோட்டமாக வாசித்துவிட்டு பிரயாகைக்கு சென்று விட்டேன். ஆனால் ஒரு நிறைவின்மை என்னுடன் ஒட்டிக்கொண்டது. தேர்வுக்கு செல்லும் முன்னால் முக்கியமான பகுதியை படிக்க விட்டுபோன உணர்வு வருமே அதுபோல, பயணத்துக்கு முன்பாக மிகத் தேவையானதொன்றை வீட்டில் மறந்து வைத்து விட்ட உணர்வு வருமே, அதைப்போல பிரயாகைக்குள் முழு நிறைவுடன் என்னால் இறங்கி வாசிக்க முடியவில்லை மீண்டும் நீலத்துக்கு திரும்பினேன்.
மெல்ல மெல்ல அதை அறிந்து கொண்டு நீலத்தை என் மீதள்ளி அள்ளி பூசிக் கொண்டு நீலப்பித்தில் முழுமையாக திளைத்தேன் எனினும், 26 நூல்களில் மீள மீள பலவற்றை வாசிக்கும் நான் நீலத்தை பின்னர் மீள் வாசிப்புக்கு எடுக்கவேயில்லை, வாசிப்பின் போது கூடிய அந்த பித்துநிலை என்னை அச்சுறுத்தியது .
கடலூர் சீனு இன்று நீலம் குறித்த சிறப்பு உரையின் பொருட்டு சொல்முகம் கூடுகைக்கு வந்திருந்தார். சொல்முகம் கூடுகை தொடங்கிய நாளிலிருந்து இன்றைய கூடுகையில் தான் அதிக வாசகர்கள் கலந்துகொண்டிருந்தனர். நிறைய புதுமுகங்கள், அதிலும் இளையவர்களை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஈரோடு கிருஷ்ணன், குவிஸ் செந்தில், மீனாம்பிகை உள்ளிட்ட பலர் நீல உடையில் வந்திருந்தனர். மிகச்சரியாக 10 மணிக்கு நரேன் அறிமுகத்துக்கு பின்னர், சீனு உரையை துவங்கினார். நீலத்தை அவர் தொடவே அரைமணி நேரமாயிற்று இந்திய பண்பாடு, தொன்மம், அரசியலமைப்பு என்று ஒரு பெருஞ்சித்திரத்தை முதலில் விளக்கினார் பண்பாடும், அரசு பரிபாலனமும் ஒன்றையொன்று ஆதிக்கம் செலுத்தியதையும், பகவத்கீதை அதற்கு அடித்தளமாக இருந்ததையும் சொல்லி, கிருஷ்ணனுக்கு அடுத்து, ஷண்மத சங்கிரகம், சங்கரர், தத்துவரீதியாக கீதையை கட்டமைத்தது எல்லாம் விளக்கினார்.
பின்னர் நாராயண குரு, அவரை தொடர்ந்து உலகப்போர் சூழலில் நடராஜ குரு, அவரைத் தொடர்ந்து குரு நித்யா என்று அந்த மரபின் தொடர்ச்சியை, விரிவாக ஆனால் எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொன்னார் இந்த மரபில், எழுத்தையே யோகமாக கொண்ட நீங்கள் வந்து வெண்முரசு எழுதியதை சீனு சொல்ல கேட்கையில் பெரும் திகைப்பு எனக்கு உண்டானது. வெண்முரசின் மீதிருக்கும் பிரமிப்பு மேலும் மேலும் பெருகியபடியே இருந்தது
வெண்முரசின் விதை விஷ்ணுபுரத்தில் இருப்பதை பல உதாரணங்களுடன் அழகாக சீனு விளக்கினார். வெண்முரசென்னும் இப்பேரிலக்கியத்தை வாசிப்பவர்கள் எல்லாம், வெறும் வாசகர்கள் மட்டுமல்ல, இப்பேரிலக்கியத்தின் பங்குதாரர்கள் என்றார். இதை கேட்கையில் உடல் மெய்ப்பு கண்டது. எனக்கு வெண்முரசு முழுவதும் புரிந்தது என்பதே என் இத்தனை வருட வாழ்வின் ஆகச்சிறந்த பெருமையாக, கெளரவமாக நான் எப்போதும் நினைப்பேன் என்னை வெண்முரசின் வாசகியாக எப்போதும் எங்கும் மிகப் பெருமையுடன் முன்வைப்பேன். இன்றைய இந்த கூடுகைக்கு பின்னர் அந்த பெருமிதம் பல மடங்காகி விட்டிருக்கிறது.
வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் அசுரகுல, நாகர்குல வரலாறுகளை சுட்டிக்காட்டி, இந்தியப் பண்பாடு எதைப் பேசுகிறதோ அதையே பேசும் வெண்முரசு, மாமனிதர்களின் வரலாறை காவிய அழகுடன் சொல்லும் பேரிலக்கியத்தின் கூறுகளை கொண்டிருப்பதை விளக்கினார்.
வெண்முரசின் ஒவ்வொரு கதாபாத்திரமும் எந்த அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது எனபதை, நிலையாக இருப்பதற்கு துருவன், நிலையற்றவளாக ஓடிக்கொண்டிருக்கும் கங்கை, பெருந்தன்மையின் வடிவமாக திருதிராஷ்டிரர் ஆகியோரை சொல்லி, ஸ்தாயி பாவம், விஷயபாவம் என்று பெரிய முக்கியமான விஷயங்களையும் எளிமையாக அங்கிருந்த அனைவருக்கும் புரியும்படி விளக்கினார்.
நீலத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கிருஷ்ணர் எப்படி வேறு வேறு ஆளுமையாக வருகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொன்ன சீனுவின். இன்றைய உரையின் சிறப்பான பகுதியாக ராதா மாதவ பாவம், பகவத்கீதை இந்த இரு முனைகளுக்கிடையேயான ஊசலாட்டத்தை அவர் விவரித்ததை சொல்லுவேன்.
மேலும் நீலம் எதை சொல்கிறது என்பதை விட எப்படி சொல்லுகின்றது என்பதை கவனிக்க வேண்டும் என சொல்லியபோது மீண்டும் திகைப்படைந்தேன். வெண்முரசை முழுமையாக வாசித்தவள் என்னும் என் பெருமிதங்களை சீனு உடைத்துக் கொண்டே இருந்தார்.
கம்சனின் குரோதமும் ராதையின் பிரேமையுமாக எப்படி இரு பாதைகளும் கண்ணனையே சேருகின்றது என்பது மிக புதிதான ஒரு திறப்பாக இருந்தது எனக்கு.
பின்னர் கண்ணனின் லீலைகளை படிப்படியாக சொல்லிக்கொண்டு போனார் முதலில் அன்னையிடம் காட்டிய லீலை பின்னர் தோழர்களுடன், பின்னர் கோபியர்களுடன். ராதையின் பிரேமையை, பித்தை சொல்லுகையில் சீனுவின் அன்னையை குறிப்பிட்டார். அவர் மீது பெரும் காதல் கொண்டிருந்த தந்தையின் மறைவுக்கு பின்னர் //அவர் இல்லாத உலகில் தான் எதற்கு வாழவேண்டும் என்னும் உணர்வும், அவர் விரும்பி வாழ்ந்த மிக அழகிய உலகிலிருந்து ஏன் போகவேண்டும் என்னும் உணர்வுமாக// இரு நிலைகளில் ஊசலாடிய அவரது அன்னையின் மனத் தடுமாற்றத்தை சீனு சொன்னது ராதா மாதவபிரேமையை எனக்கு மிகச்சரியாக சொல்லிவிட்டது. மீண்டும் எனக்கு உடல் மெய்ப்பு கொண்டது.
அவரது சொல்லாட்சி பிரமாதமாயிருந்தது இன்றைய உரை முழுவதிலுமே. //ஹளபேடில் கல்லால் வடித்த காளிங்க நர்த்தனத்தை நீலத்தில் ஜெயமோகன் சொல்லால் வடித்திருக்கிறார்// என்றார்.
நீலக்களேபரம், நீலத்தாலான இருட்டிலிருந்து ராதை என்னும் சொல் வருவது இவற்றையெல்லாம் சொல்லுகையில், தெளிவாக உரையை கேட்கும் பொருட்டு மின்விசிறிகள் அணைக்கப்பட்டிருந்த அந்த நிசப்தமான அறையில் சீனுவின் தொடர் உரையில் நீலப்பெருங்கடலலைகள் பெருகிப் பெருகி வந்து எங்களை மூழ்கடித்து, கரைத்து காணாமலாக்கியது.
பெண்பித்தின் மெய்யியல் என்கிறார் நீலத்தை சீனு. வந்து கொண்டிருக்கும் கண்ணனும், காத்திருக்கும் ராதையுமாக இருக்கும் சித்திரம், காத்திருக்கும் கண்ணனாகவும், வந்துகொண்டிருக்கும் ராதையாகவும் தலைகீழானது, அப்போது உடலால் அடையப்படும் இரு நிலையின் போது உணர்வுரீதியாக என்ன நிலைமாறுதலும், நிலையழிவும் உண்டாகின்றது என்பதை சொல்ல விஷ்ணுபுரத்தின் சாருகேசியை உதாரணமாக சொன்னது மிக பொருத்தமாக அழகாக அமைந்தது .
கோபியர்கள் மற்றும் ராதையின் ஊடலை, ஞானச்செருக்கை, ராதையின் அணிபுனைதலில் துவங்கும் கண்ணனின் ராசலீலைகளை எல்லாம் சீனு சொல்ல சொல்ல நான் நீலம் இன்னும் வாசிக்கவில்லை என்று எனக்கு தோன்றியது புத்தம் புதிதாக நீலத்தை, என் முன்னே ஒவ்வொரு பக்கமாக சீனு திறந்து வைத்துக்கொண்டே இருந்தார்
இடையிடையே ராமகிருஷ்ண பரமஹம்சரை, விவேகானந்தரை, பின் தொடரும் நிழலின் குரலை, ஏசுகிறிஸ்துவை, இணைத்தும் விளக்கினார். நீலம் போன்ற பெரும்படைப்பை எப்படி வாசிப்பது என்னும் ஒரு பயிற்சியை சீனு இன்று எங்களுக்கு அளித்தார் என்று சொல்லலாம்.
குழலிசையை, பீலியை, பிரேமையை, குழந்தைகளின், குருதியில் நனைந்த வாளை எல்லாம் சீனு சொல்ல சொல்ல கனவிலென கேட்டுக் கொண்டிருந்தேன். நீலத்தை வாசிக்கையில் வரும் பித்தை சீனு சொல்ல சொல்ல மீண்டுமடைந்தேன். நீலம் அளிக்கும் கற்பனையின் சாத்தியங்களை எப்படி விரிவாக்குவது என்பதை பலமுறை, பலவற்றை உதாரணமாக காட்டி சொல்லிச் சென்றார்.
ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக சரளமாக எந்த தங்குதடையுமின்றி இடையில் நீர் கூட அருந்தாமல், எந்த குறிப்பையும் பார்க்காமல் தன் மனமென்னும் நீலக்கலமொன்றிலிருந்து எடுத்து எடுத்து அளிப்பது போலவும், சீனுவே நீலமென்றாகி தன்னையே எங்கள் முன்னால் படைபப்து போலவும் உணர்வுபூர்வமாக உரையாற்றினார். அவர் முகத்தின் பாவங்கள் அவர் சொல்லும் பகுதியின் உணர்வுகளுகேற்ப குரலின் ஏற்ற இறக்கங்களுடன் ஒரு நடனக்கலைஞரின் முகம் போல இருந்தது. நீலத்தை வேறெப்படி பேச முடியும்?
குடுமியும், தாடியுமாக ரிஷிகுமாரனை போலவும், ரஷ்யஎழுத்தாளரை போலவும் இருந்த, தாடியின் நிறபேதங்களுக்கிணையான நிறத்திலிருந்த உடையணிந்திருந்த, சீனுவின் தேசலான அந்த தேகத்தினுள்ளிருந்து அவரை இத்தனை விசையுடன் எது இயக்குகிறது என்றுதான் யோசனையாக இருந்தது. இடைவேளையிலும் அவர் தேநீர் அருந்தவில்லை
10 நிமிட இடைவேளைக்கு பிறகு நீலம் குறித்த சீனுவின் உரையின் மீதான கலந்துரையாடல் நிகழ்ந்தது.
நீலம் போன்ற இலக்கியத்தை அணுக என்ன தடைகள் இருக்கும் என்பதை முதலில் விவாதித்தோம்
அதன் மொழிச்செறிவு முதல் தடையாக இருக்கலாம் என்றாலும் அந்த மொழிச்செறிவுடன்தான், எந்த குறுக்குவழியுமில்லாமல் அம்மொழியின் ஆழத்தில் இறங்கினாலே நீலம் வாசிக்க முடியுமென்னும் சீனுவின் கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது
பக்தி மரபு வழியே நீலத்துக்கு வரலாம் என்னும் யோசனையும் சீனுவால் முன்வைக்கப்பட்டது ஆழ்வார் பாடல்களை சொல்லி சொல்லி பழகுதல் போல நீலத்தை வாய்விட்டு பாடியும் உச்சரித்தும் கூடு வாசிப்பிலும் மனதுக்கு அம்மொழியை பழக்கலாமென்று உரையாடல் தொடர்ந்தது.
நீலம் முதன்மையாக காட்டுவது காட்சி அனுபவமா? மொழி அனுபவமா? ராதையைவிட கம்சன் ஒரு படி மேலே வைத்து சொல்லப்படுகிறானா? என்றெல்லாம் விவாதம் மிக சுவாரஸ்யமாக தொடர்ந்தது.
ஈரோடு கிருஷ்ணன் நத்தை கொம்புணரும் காலம் பாடலை சொல்லி ’’காலில்லா உடலிலெழுந்த புரவி’’ என நத்தை சொல்லப்படுவதை விளக்கி மொழியின் இனிமையை சுட்டிக் காட்டி, ’மொழிக்கு பின்னரே காட்சி, என்றார்
அடிப்படையில் உணர்வுபூர்வமானவர்களுக்கு நீலம் அணுக்கமானதாகிவிடும் என்ற வாதத்தின் போது, பிற இலக்கியங்களைப் போல காரண காரியங்களின் தொடர்ச்சியை சொல்லி, அந்த சங்கிலியால் நீலம் முன்னகர்த்த படவில்லை, ஒற்றைப் பேருணர்வின் வேறு வேறு பக்கங்களை காட்டும் நூலென்பதால் சந்தங்களுடன் கூடிய பாடல்கள் வாசிப்பிற்கு துணையாகிறது என பாலாஜி சொன்னது அழகான பொருத்தமான விளக்கமாக இருந்தது. சுபாவின் குரல்பதிவுடன் வாசிப்பையும் இணைப்பது நல்ல அனுபவமாக இருக்கிறதென்பது அதை முயன்றவர்கள் சிலரின் கருத்தாக இருந்தது.
சீனு சந்தங்களுடனான பாடல் இல்லாத குமரித்துறைவியும் நீலத்தை போல வேதானென்று சொன்னதும் அழகு. நீலத்தின் குழலிசையின் வேறு வேறு பொருளையும் பேசினோம் அக்ரூரருக்கு கொல்லும் இசையாக, அந்தணர்களுக்கு இடையூறாக, ராதைக்கு பிரேமையின் பித்தெழச்செய்யும் இசையாக இருக்கும் குழழிசை என்று தொடர்ந்த உரையாடல், நீலம் அத்வைதத்திற்கா அன்றி விசிஷ்டாத்வைததுக்கா எதற்கு மிக அருகில் இருக்கிறது என்று நீண்டது. சீனு ரதிவிகாரி குறித்த கேள்விக்கு மிக அழகாக காமத்தில் இணையாமல் காமத்தில் விளையாடுவதை விளக்கினார்.
விவாதத்தில் கம்சனின், சிசுபாலனின் வெறுப்பின் வேறுபாடுகளும் அலசப்பட்டது.. அதீத வெறுப்புக்கும் அதீத விருப்புக்கும் இடையே நின்றாடும் கண்ணனை அனைவருமே உணர்ந்தோம் இன்று.
யோகம், அன்னம், ஞானம், பிரேமம் என பல பாதைகள் வழியே சென்று சேரும் ஓரிடம் குறித்தும், இமைக்கணத்தின் பாஞ்சாலியை, நீலத்தின் ராதையுடன் ஒப்பிட்டும் உரையாடல் தொடர்ந்தது.
மதியம் கூடுகை நிறைவுற்றது. இளங்காற்றில் மேகப்பிசிறுகளின்றி துல்லிய நீலத்திலிருந்த வானை பார்த்தபடி ஊர் திரும்பினேன். ஒரு பேரிலக்கியத்தை எப்படி வாசிப்பது என்னும் அறிதலும், அதன் அழகிய கூறுகளை அருமையாக விவாதித்து அறிந்துகொண்ட நிறைவுமாக மனம் எடை கூடியிருந்தது. கூடவே நீலம் நான் இன்னும் வாசிக்கவில்லை என்னும் உணர்வும் நிறைந்திருந்தது. மீண்டும் நாளையிலிருந்து நீலத்தை வாசிக்க துவங்குகிறேன்.
கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இலவம் பஞ்சு மெத்தை தைத்துக்கொடுக்க பொள்ளாச்சியிலிருந்து மெத்தை கடைக்காரர் வந்திருந்தார். நல்ல சுத்தமான பஞ்சும், நியாயமான விலையும், வீட்டில் நம் கண்முன்னே பஞ்சை அடைத்து தைத்துத்தரும் தொழில் சுத்தமுமாக அவர் பிரபலம் தான் இந்த பகுதிகளில். பெயர் அபு, இஸ்லாமியர் கோவை, திருப்பூர் எல்லாம் கூட வீட்டுக்கே நேரில் சென்று தைத்து கொடுத்துவிட்டு வருவார்.
அன்று இங்கு வீட்டில் வேலை முடிய மதியமாகிவிட்டது எனவே மதியம் சாப்பிட்டு விட்டு போகச் சொன்னேன் மறுத்தவர் 32 வருடங்களாக தனது நண்பரொருவர் தான் தனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவதாகவும் அவர் காத்துக் கொண்டிருப்பார் என்றும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது ஏழாம் கடலின் வியாகப்பனை, அவர் மீதிருக்கும் கோபத்தில் மகனிடம் சீறும் அந்த பெண்ணை என்று மனம் நூறு கதைகளுக்கு சென்றது. அவரிடம் இன்னொரு நாள் இந்த நட்பை குறித்து விரிவாக கேட்க வேண்டும் என இருக்கிறேன்.
ஏழாம் கடல் போல உண்மையாகவே வருடங்கள் தாண்டிய நட்பு இருப்பது பிரமிப்பளிக்கிறது. அத்தனை வருடங்களாக சமைத்து தரும் அந்த வீட்டுப் பெண்ணையும் நினைத்துக்கொண்டேன். குடும்ப உறவுகளே இப்போது பட்டும் படாமல்தான் இருக்கின்றது. சொந்த சகோதரர்களுக்குள்ளேயே சின்ன சின்ன மனஸ்தாபங்கள், வெட்டு குத்துபழிகள் என்று உறவு சீரழிகின்றது திருச்செந்தாழையின் ஆபரணம், அதுகுறித்து எழுதிய ஒரு வாசகியின் குடும்பக்கதை இவற்றை இந்த நட்புடன் பொருத்திப் பார்த்துக்கொண்டேன்.
ஜெ வின்ன் நூறு கதைகளில் ஒன்று நேரில் எழுந்து வந்தது போல் இருந்தது.
2021 க்கான விஷ்ணுபுர விருது விழா கோவையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பது உறுதியானதும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக நானும் மகன்களும் விழாவில் கலந்து கொள்வது குறித்து பேசிக்கொள்ள துவங்கினோம்
இந்த முறை இளையவன் தருணும் டேராடுனிலிருந்து விடுமுறையில் வந்திருந்தான். சரண் மேற்படிப்புக்கான திட்டங்களுடன் இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு விழாவில் கலந்து கொள்ள முடியாதென்பதால் மூவரும் வெள்ளி மாலையே கோவை செல்ல முடிவு செய்து, ராஜஸ்தானி அரங்கின் அருகிலேயே விடுதி அறை ஒன்றை ஏற்பாடு செய்தோம்.
விழா தேதி நெருங்க நெருங்க நோய் தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுவிடுமோ என்னும் அச்சம் இருந்தது. அடிக்கடி செய்திகளை பார்த்து அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். விழா நாயகரான விக்கிரமாதித்யன் அவர்களின் கவிதைகளையும் பிற விருந்தினர்களின் படைப்புகளையும் மூவருமாக கலந்து வாசித்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.
கல்லூரி திறந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாக இருந்தாலும், விழா நடைபெறவிருந்த சனி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் விடுப்பு எடுப்பது குறித்து கவலை இல்லாமல் இருந்தேன். ஆனல் எதிர்பாரா விதமாக விழாவிற்கு இரு நாட்கள் முன்பு சரணுக்கு நல்ல காய்ச்சல் தொடங்கியது.மருத்துவமனை சென்று அது கவலை படும்படியான காய்ச்சல் இல்லை என்பதை உறுதிசெய்தேன். எனினும் வெள்ளிக்கிழமை கல்லூரியில் மனம் ஏதோ இனம்புரியாத சங்கடத்தில் இருந்தது.
கல்லூரி முடிந்து வீடு வந்து தான் நலமாக இருப்பதாகவும் ஆனால் காய்ச்சலுடன் விழாவிற்கு வருவது நோய்தொற்று சமயத்தில் சரியாக இருக்காது என்பதால் வரவில்லை என்றும் சொன்ன சரணை அரைமனதுடன் வீட்டில் விட்டுவிட்டு நானும் தருணுமாக கோவை வந்தோம்.
வெள்ளி இரவு ராஜஸ்தானி அரங்கில் நீங்கள் இருந்த அறைக்கதவை தயக்கத்துடன் திறந்தேன். வழக்கம்போல கட்டிலில் நீங்களும் நாற்காலிகளிலும், தரையிலும் நண்பர்களுமாக அமர்ந்து தீவிர உரையாடல் நடந்துகொண்டிருந்தது.
அப்போதே விழா மனநிலை தொடங்கிவிட்டிருந்தது. அனங்கன், ஜாஜா, சாகுல், சுபா, நிகிதா உள்ளிட்ட பலர் இருந்தார்கள். இரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் புறப்படும்வரை இருந்துவிட்டு பின்னர் விடுதிக்கு சென்றேன். மறுநாள் நிகழ்வு குறித்த எதிர்பார்ப்பும், தனியாக வீட்டில் இருக்கும் மகனின் நினைவிலும் தூக்கமின்றி கழிந்தது இரவு .
சனியன்று அதிகாலையிலேயே , உறங்கும் தருணுக்கு காத்திராமல் விழாவிற்கு புறப்பட்டு விடுதிக்கு வெளியே இருக்கும் ஒரு ஆட்டோவை அழைத்தேன் அந்நேரத்துக்கு அழைத்ததும் பரபரப்பாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜஸ்தானி அரங்கம் என்றதும் கேள்வியுடன் என்னை பார்த்தார். பின்னர் ’’என்னம்மா மார்கழி மாசம், தலைக்கு ஒரு குல்லா போட்டுக்க கூடாதா? இப்படி வரீங்களே ? என்றார். எனக்கு குளிர் உறைக்கவே இல்லை என்பது அப்போதுதான் உறைத்தது. ராஜஸ்தானி அரங்கம் வந்து அங்கே ஆள் நடமாட்டம் இல்லாதிருப்பதில் அவர் குழம்பி, ’’இங்கேதானாம்மா’’ ? என்றார் ஆம் என்றேன். குழப்பத்துடன் அவர் புறப்பட்டு சென்றார்
பனி போர்வை போல மூடியிருந்தது. யோகேஸ்வரனும், உமாவும் விருந்தினர்களுக்கான அறை சாவிகளுடன் வாசலிலேயே காத்திருந்தார்கள்.. உமா அந்த அதிகாலையில் அங்கிருந்தது ஆச்சரியமளித்தது அவளுக்கு சிறு மகள் இருக்கிறாள். மகளை தன் கணவர் பார்த்துக்கொள்வார் என்றாள் அத்தனை தூரத்திலிருந்து அந்த அதிகாலையில் கடும் குளிரில் உமா வந்திருந்தது நெகிழ்ச்சி அளித்தது..
. சென்னையிலிருந்து மதுவும் இன்னும் பலரும் வரத்துவங்கியதும் உமாவும் யோகேஷும் பரபரப்பாக அறைகளை ஒதுக்கி சாவியை கொடுக்க துவங்கினார்கள். யோகேஷ் விருந்தினர்களை வரவேற்க ரயில் நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தார்.
அந்நேரத்துக்கே அனைவருக்கும் தேநீர் வந்திருந்தது. பெட்டிகள் பிரிக்கப்பட்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டு கொண்டிருந்தன. நூற்பு ஆடைகள் இருந்தன. தன்னறத்தினர் சின்ன சின்ன மலர்க்கோலங்களை வாசல் தரையில் அமைத்தார்கள். அவற்றுடன் ஓரிகாமி காகித பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சி வடிவங்களையும் ஆங்காங்கே அமைத்தார்கள்.அத்தனை புதிய புத்தகங்களை பார்க்க பரவசமாக இருந்தது.
திருச்செந்தாழை, நாஞ்சில் நாடன், சோ தர்மன், பாவண்ணன், வசந்த சாய் என்று விருந்தினர்களும் வரத்துவங்கினார்கள். .எதிர்பார்த்தது போலவே விஜயசூரியன் உணவளித்து கொண்டிருந்தார்.
நீங்கள் வழக்கம் போல் குன்றா உற்சாகத்துடன் சுற்றி நிற்பவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்.. அந்த ஆற்றல் என்னை எப்போதும் வியப்படைய வைக்கும் நள்ளிரவு வரை உரையாடிக்கொண்டு, பயணித்துக்கொண்டு இருந்தாலும் அதிகாலையில் புத்தம் புதிதாக மலர்ச்சியுடன் தீவிரமான உரையாடலில் நீங்கள் இருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். உங்களின் அந்த விசை உடனிருப்பவர்களையும் செலுத்திக் கொண்டிருக்கும்.
வரிசையாக 7 பைக்குகளில் இளைஞர்கள் வந்தபோது நான் அவர்கள் இடம் மாறி வந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் அவர்கள் விஷ்ணுபுரம் விழாவிற்கு தான் வந்திருந்தார்கள். இந்த முறை வழக்கத்தை காட்டிலும் அதிக இளைஞர்கள் விழாவில். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் இடத்தில் பணிபுரிபவள் என்பதால் , இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு அதிகாலையில் இலக்கிய பரிச்சயம் உள்ள அத்தனை இளைஞர்கள் வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
அரங்கில் இரம்யா, சுஷீல், கல்பனா, ஜெயகாந்த், ஜெயந்தி , காளி பிரசாத், கதிர்முருகன், குவிஸ்செந்தில், பாலு உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பல நண்பர்கள் விழா தொடர்பான ஏதோ ஒரு முக்கிய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை யாரும் வழிநடத்தவில்லை. ஆனால் எல்லா வேலைகளும் கச்சிதமாக விஷ்ணுபுரம் விழவிற்கே உரிய மாறா ஒழுங்குடனும் மகிழ்வுடனும் நடந்துகொண்டிருந்தன. மேடை இலக்கிய விவாதத்தின் பொருட்டு ஒருங்கிக்கொண்டிருந்தது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரவேற்கப்பட்டு அரங்கில் அமர செய்யப்பட்டனர். உணவு தயாராக இருந்தது அறைகள் காத்திருந்தன, புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன. அரங்கு நிரம்ப துவங்கியது..
கண்ணுக்கு தெரியாத மாபெரும் வலையொன்றினால் இணைக்கப்பட்டிருப்பது போல அத்தனை திசைகளிலும் பணிபுரிந்தவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு விழா அரங்கும், விழாவும் தயாராகிக்கொண்டிருந்தது. அவ்வலையின் மத்தியில் மானசீகமாக உங்களை நிறுத்தியே அனைவரும் பணிபுரிந்தார்கள்.
அஜிதனை, பார்த்தேன் முன்பே அலைபேசியில் பேசி அறிமுகமாகி நட்புடனிருந்த அத்தானி ஆனந்த் மனைவியுடன் வந்திருந்தார், ஆவடியில் இருந்து தேவி, திருச்சியிலிருந்து டெய்ஸி ஆகியோரையும் முதல்முறையாக பார்த்து பேசினேன். விக்கிரமாதித்யன் அரங்குக்குள் நுழைந்தார்.அவரை பார்க்கையில் அவர் ஒரு காட்டுச்செடி என்று மனதில் நினைத்தேன்., மழையும், வெயிலும், புயலும் ,காற்றும் எதுவும் பொருட்டேயில்லாத காட்டுச்செடி.அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு வணங்கினேன். என்னை அவருக்கு தெரிந்திருந்தது.
விழா குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது. இலக்கிய விவாத அமர்வுகள் துவங்கின, வழக்கமாக மேடையை அலங்கரிக்கும் ஜெர்பரா பெருமலர்க்கொத்துகள் இந்த முறை முதல் நாள் அமர்வுகளின் போது வைக்கப்பட்டிருக்க வில்லை. மறுநாள் விழா மேடையில் வழக்கம் போல் அவை இடம்பெற்றிருந்ததை காணொளிகளில் பார்த்தேன்.
விழா அரங்கு வண்ண மயமாக இருந்தது, நல்ல கூட்டம். ஆஸ்டின் செளந்தர் மகளும் புதுமணப்பெண்ணுமான பார்கவி கணவருடன் வந்திருந்தாள். காகித வண்ணத்துப்பூச்சியை தன் சிறு மகளுக்கு எடுத்துக் கொடுத்து ’’பட்டர்ஃப்ளை’’ என்று அவளுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார் ஒருவர். சொல் திருந்தியிருக்காத அவள் ’’டட்டட்டை’’ என்றாள் மலர்ந்து. அந்த பச்சை வண்ண காகித வண்ணத்துப்பூச்சியை பரவசத்துடன் கைகளில் எடுத்துக்கொண்டு தளர்நடையிட்ட அவள் இரு எட்டுக்கள் வைப்பதும் பின்னர் ’’ட ட்டட்டை’’ என்று சொல்லி விட்டு அண்ணாந்து வானில் பறக்கும் மானசீக வண்ணத்துப்பூச்சியை கண்டதுபோல பரவசமடைவதும் பின்னர் மீண்டு சில எட்டுகள் வைத்துவிட்டு டட்டட்டை என்று சொல்லி அண்ணாந்து பார்த்து பூரிப்பதுமாக இருந்தாள்.
இலக்கிய அமர்வுகளின் போது இந்த முறை வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கேள்விகள் வந்ததை கவனிக்க முடிந்தது. பல புதியவர்கள் ஆழமான கேள்விகள் எழுப்பினார்கள். நீங்கள் பெரும்பாலும் ஏதும் கேட்கவில்லை.
மதிய உணவிற்கு பின்னர் செந்தில் ஜகன்னாதன் அமர்வு துவங்கிய போது சரண் கடும் காய்ச்சலும், குறைந்து கொண்டே வரும் ரத்த திட்டுக்களின் எண்ணிக்கையுமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வந்தது. பதற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பினேன். தருணுக்காக அரங்கின் வாசலில் காத்திருக்கையில் திருச்செந்தாழை பார்த்து விசாரித்துவிட்டு ’’கவலைப்படவேண்டாம் சரியாகிவிடும்’’ என்றார்
2 மணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்தேன், விழாவை தவறவிட்டு வர காரணமாயிருந்ததற்கு சரண் பலமுறை அந்த கடும்காய்ச்சலிலும் மன்னிப்பு கேட்ட படியே இருந்தான். கண்ணீருடன் அணைத்துக்கொண்டேன். இரண்டாம் நாள் விழாவை மருத்துவமனையில் இருந்தபடி நண்பர்கள் அனுப்பிய காணொளிகளிலும் புகைப்படங்களிலும் பார்த்துக்கொண்டிருந்தேன். விழா நிறைவில் எடுத்துக்கொள்ளப்பட்ட குழு புகைப்படத்தில் நானும் மானசீகமாக ஒரு ஓரத்தில் நின்றேன். விழாவை தவறவிட்டதன் இழப்புணர்விலிருந்து விழா குறித்த கடிதங்களை வாசிப்பதன் மூலம் மீண்டு வருகிறேன். இதோ ஜனவரி வந்துவிட்டது இன்னும் 10 மாதங்களில் அடுத்த விஷ்ணுபுர விழா வந்துவிடும் என்று இப்போதே மனதை தேற்றிக்கொண்டு, எதிர்பார்க்க துவங்கிவிட்டேன்
அருணாவின் ‘பனி உருகுவதில்லை’ ஆனந்தின் டிப் டிப் டிப், உள்ளிட்ட எந்த புத்தகங்களையும் வாங்க முடியாமல் போனதில் கூடுதல் வருத்தம்
மகன் உடல் தேறி வீடு வந்துவிட்டான். இன்னும் விழா உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கையிலிருந்த காகித வண்ணத்துப்பூச்சியை பார்த்துக்கொண்டு, மனதிலிருக்கும் வண்ணத்துப்பூச்சி பறப்பதை கற்பனையில் கண்டு களித்த அந்த குழந்தையை போல, கலந்துகொண்ட ஒருநாளின் நினைவில் தவறவிட்ட மற்றொரு நாளை கண்டுகொண்டிருக்கிறேன்.
என் தம்பி மகள் சாம்பவி என் இரு மகன்களுடனே தான் வளர்ந்தாள்; மூவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை, கைச்சண்டை, கால் சண்டையெல்லாம் நடக்கும். அப்போதுதான் பேச கற்றுக் கொண்டிருந்த சாமபவி, கோபம் எல்லை மீறி போகும் போது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளுக்கு தெரிந்த கிண்ணம், வெள்ளைப்பூண்டு, சாதம் போன்ற வார்த்தைகளை ’’போடா கிண்ணம், போடா பருப்பு சாதம்’’ என்று பல்லை கடித்துக்கொண்டு வசவைப்போல சொல்லுவாள். வார்த்தைகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் சொல்லும் விதத்தில் அவற்றை கெட்ட வார்த்தை ஆக்கிவிடுவாள் காளியின் திருவண்ணாமலை கதை இப்படி பழசை நினைவுபடுத்தி வாசிக்கையில் புன்னகைக்க வைத்துக் கொண்டே இருந்தது.
வசவை சர்வசாதாரணமாக புழங்கும்,தெலுங்கு பேட் வேர்ட்ஸ் இணையத்தில் தேடும் ரஙகன் ’’டேய் தோத்ரம்’’ என்று நிலைக்கண்ணாடி முன் நின்று நாலு முறை சொல்லிப்பார்த்து அது மோசமான வார்த்தை தான் என்று உறுதி செய்து கொண்டு அத்தனை நாட்கள் புத்தரால் கொடுக்க முடியாத நிம்மதியுடன் உறங்கச்செல்கிறான்
இந்த கதையில் மட்டுமல்ல பழனியிலிருந்து பராசக்தி வரை பத்துக்கதைகளிலும் நமக்கு தெரிந்தவர்களும் நம்மை தெரிந்தவர்களும் நாமும்தான் இருக்கிறோம். கதைமாந்தர்களின் அவஸ்தைகள், தடுமாற்றங்கள், குடும்ப சிக்கல்கள், பணியிட பிரச்சனைகள் வழியே காளி பிரசாத் காண்பிப்பது நம் அனைவரின் வாழ்வைத்தான். வாசிப்போர் கடந்து வந்திருக்கும் பாதைகளில்தான் கதைகள் அவர்களை அழைத்துச் செல்கின்றன.
பழனியிலிருந்து பராசக்தி வரை கதைமாந்தர்கள் வேறு வேறு பெயர்களில் இருக்கும் நாமறிந்தவர்கள் என்பதாலேயே கதைகள் மனதிற்கு அணுக்கமாக விடுகிறது.. நாம் சந்தித்தவர்களும் கடந்துவந்தவர்களும் இனி சந்திக்க விரும்பாதவர்களுமாக கதைகள் நமக்கு பலரை நினைவுக்கு கொண்டு வருகிறது.
அத்தனை அடாவடி செய்த பழனி, 50 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பேர் காயிலை திருடி மாட்டிக்கொண்டதை, அவன் குடும்பம் சிதைந்ததையெல்லாம் கேட்கையில் ஃபேக்டரி இயந்திரங்களின் சத்தத்தில் மண்டை கனக்கும் கதை சொல்லி, பழனி நல்ல நிலைமையில் வீடும் காரும் குடும்பமுமாக இருப்பதை கேட்டபின்பு இரைச்சல் உண்டாக்கிய தலைவலிக்கென போட்டிருந்த தொப்பியை கழட்டிவிட்டு பறவகள் கூடடடையும் சத்தங்களை கேட்டபடி, தூரத்தில் சிறு வெளிச்சம் தெரியும் கோவில் வரை நடக்கும் கதை முடிவு பெரும் ஆசுவாசத்தையும் நிறைவையும் கொடுக்கிறது
எல்லாக்கதைகளிலும் மனிதர்களின் இயல்புகளை அப்படியப்படியே ஏற்றங்களும் இறக்கங்களும் அல்லாடல்களுமாக இயல்பாக காட்டுகிறார் காளி. எதையும் உன்னதப்படுத்தாமல், எதையும் உச்சத்துக்குகொண்டு செல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கூறுமொழி நம்மையும் இயல்பாக கதையோட்டத்துடன் கொண்டுபோய், நம்மையறியாமலே கதைகளுடன் நம் வாழ்வை தொடர்புபடுத்தி பார்க்க வைத்துவிடுகிறது
. பகடிகள் வாய்விட்டு சிரிக்கும் படி இல்லாமல், முகம் மலரும்படி இருக்கிறது, ஆட்டோ இடித்த தகராறு, ரின்ஸ் ஸ்பெனரரால் பழனி அடித்ததும் முடிவுக்கு வருவதும், ஆட்டோக்காரர் தலையை மூடி, அவரே ஆட்டோவை ஓட்டிபோய் அட்மிட் ஆவதும் அப்படியானவற்றில் ஒன்று.
அதைப்போலவே திருவண்ணாமலையின் ’’திருச்சி டம்ப்ளரு’’ ஆர்வலர் கதையில் சம்பத் சொல்லும் குறள், ஷாக் அடிக்கும் போதும் பியூஸ் போகும் சிரித்துக் கொண்டிருக்கும் புத்தர், ’அன்னிக்கு அம்மா நாப்பதுன்னு சொல்லும்பொது ஒன்னும் பேசாம பெண்ணின் இடுப்பை பார்த்துட்டு இருந்தீங்க ’என்று மாப்பிள்ளையிடம் மனசுக்குள் கேட்கும் நீலகண்டன் என்று இயல்பான சின்ன சின்ன பகடிகள் கதை வாசிப்பை கூடுதல் சுவாரஸ்யமாக்குகின்றன
கதைகளில் சொல்லப்படும் சிக்கல்கள், பரிதவிப்புகள், மீள முடியாத பிரச்சினைகளுக்கு மத்தியிலும், கதை மாந்தர்கள் அவர்களுக்கான் அறத்தை மீறாமல் அல்லது மீற முடியாமலிருப்பதையும் காளி காட்டுகிறார். அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காத பழனியின் கதை சொல்லி, ஐந்து வேளை தொழுவதை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், அன்னைபன்றிக்கு கேரட் போடும், பாம்புக்கு பாவம் பார்க்கும் குத்தூஸ்,, ’’அநாதைபொணமா ரோட்டில் கிடக்காம என்புள்ளைய வீட்டில் கொண்டு வந்து சேத்திட்டியெப்பா’’ என்று ரவியிடம் கதறும் ராஜாவின் அம்மா, எத்தனையோ அலைச்சலுக்கு பிறகு,அசட்டு நம்பிக்கையில் தேடிப்போன ஒருவரிடம் வேண்டியது கிடைக்காமல், அந்த கிஃப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறதென்றும் தெரியாமல் வீடு வந்து, கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளி மரக்காலை கன்னத்தில் பளீர் பளீரென அடி வாங்கிய பெண்ணுக்கு சிரித்தபடி கொடுக்கும் கதை சொல்லி, வண்டியிலிருந்து இறக்கி விடுகையில் தனியாக இன்னும் ஒரு ஐநூறு கொடுக்கும் இருதயம் அண்ணன், என்று நெஞ்சில் ஒளி கொண்டவர்கள் கதை முழுக்க வருகிறார்கள்.
இருப்பை தக்க வைத்துக்கொள்ள இடுப்பை நெளித்து ஆடும் அழகு ராணியும், கான்கிரீட் மூடியை மாற்றிய ஸ்ரீஜியும் ஒரே திரையில் தெரிவது, ஸ்கூட்டர் கேவலை சொல்லியிருக்கும் இடம், கேபிள் சுருளையும், கருமையான மலைப்பாம்பில் படுத்திருந்த அழகனையும் கதைசொல்லி பார்க்கும் கணங்கள் என காளி ஒரு கதாசிரியராக செல்லப்போகும் தூரங்களை காட்டும் இடங்களும் உண்டு.
20 வருடங்களுக்கு முன் இருந்த, கோவிலின் பெயரும், கோபுரங்களும், புதிய டைல்ஸும், கடைகளும் எல்லாம் மதிப்பு கூடி மாறிவிட்டிருக்கையில், ரோஜாவையும் தாமரையையும் கொடுத்துவிட்டு பஞ்சாமிர்தத்தை வாங்கி வாயில் இட்டுக்கொள்ளும் குருக்களும், நாப்பது பவுன் நகையை வாங்கிக்கொண்டு வீட்டை சகோதரனுக்கு கொடுத்துவிட்ட நீலகண்டனுமாக சன்னதியில் உமையுடனும் ஈஸ்வரனுடன் நிற்பதில் முடியும் கதையான பூதம் இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்தமான கதை
கழுத்தில் சங்குபுஷ்ப சரமும் உதட்டில் ஒரு சொட்டு தேனுமாக ஈசனை நீலகண்டன் பார்க்கும் காட்சிச் சித்தரிப்பு மனதுக்கு அளித்த சித்திரம் அற்புதமாக இருந்தது.
ஸ்பேனரும் நட்டும், போல்ட்டும், ஸ்பேர் காயிலுமாக கதைக்களம் காளியின் அனுபவக்கதைகள் இவை என எண்ண வைக்கிறது. கதைமாந்தர்களின் இயல்பை விரிவாக சொல்லுவதிலேயே கதையையும் கொண்டு போவதும் சிறப்பு. மொழிநடையும் சரளம்.
புதிய இடங்களில் தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள், நிலுவைத்தொகை வாங்கமுடியாமல் அல்லாடுபவர்கள். இளைய தலைமுறையினரிடம், இழந்த தன் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள போராடுபவர்கள், தேடியவை கிடைக்காமல் ஏமாறுபவர்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்கி விழுபவர்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள், சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள், குடிகாரர்கள். திருடர்கள். அடிப்பவர்கள், அடிவாங்குபவர்கள் என கதைகளில் வரும் மாந்தர்களின் பிழைத்தலுக்கான போராட்டங்களையும், அவற்றிற்கிடையிலும் அவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழக்கிடைக்கும் அரிய கணங்களுமாக கதைகள் மிக சிறந்த நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன.
தாவர வகைப்பாட்டியல் பாடங்களை துவங்கும் முன்பு தாவரங்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஏறக்குறைய ஒரு மாத காலம் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டி இருக்கும். மலர்கள், இலைகள் கனிகள் , அவற்றின் பற்பல வடிவங்களை, வகைகளை சொல்ல வேண்டும். இலைகளின் பரப்பு, காம்பு, வடிவம், விளிம்புகள் இவற்றோடு இலைநுனிகளையும் விளக்க வேண்டி இருக்கும். இலைநுனிகளில் கூர் நுனிகொண்டவை மற்றும் அகன்ற இலை பரப்பிற்கு சிறிதும் தொடர்பில்லாமல் மிக்கூராக கீழிறங்குபவை என்று இரு வகைகளுண்டு. அக்யூட் அக்யூமினேட்(Acute & Acuminate) என்போம் இவற்றை. மிகக்கூராக கீழிறங்கி முடியும் நுனியுள்ள இலைக்கு, அரச இலையை உதாரணமாக காட்டுவேன்.
சாக்கிய அரசின் இளவலாக, வாழ்வின் கசப்புகள் அண்டாது வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் அந்த அகன்ற வெளியிலிருந்து படிப்படியாக கீழிறங்கி மெய்ஞானமென்னும் மிகக்கூரான நிலைக்கு இறங்கி வந்ததை சொல்லும் அரசிலை இளம்பச்சையும் அடர்பச்சையுமாக கூர்நுனியுடன் தம்மம் தந்தவன் நூலின் முன்னட்டையில் இடம்பெற்றிருப்பது நூலின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பொருத்தமாகி விட்டிருந்தது
புத்தரை குறித்து என் அறிதல் என்பது மிக மிக குறைவுதான். சித்தார்த்தன் இளவரசன், மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு துறவியானான் போதிமரமான அரசினடியில் அமர்ந்து ஞானம் பெற்றான் இறப்புக்கு விஷ உணவே காரணம். இவ்வளவுதான் பள்ளிக்காலத்தில் அறிந்திருந்தேன்.திஷயரக்ஷ்தா என்னும் பெயரில் ஒரு தனித்த விருப்பம் இருந்து அதை புனைப்பெயராக கொண்டு ஒரே ஒரு கதை எழுதினேன்
கல்லூரி முதல் ஆண்டில், ஒரு விழாவில் விதிவிலக்கின்றி அத்தனை மாணவர்களும் கவிதை எழுதியே ஆக வேண்டும் என்னும் ஒரு கட்டாயம் வந்தது. தமிழ்த்துறை ஆசிரியர் ஒருவரின் பிடிவாதமது. அதுவும் துறைசார்ந்த ஒரு சொல்லேனும் கவிதையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன்.
கவிதையை எனக்கும், கவிதைக்கு என்னையும் முற்றிலும் பரிச்சயமில்லாத காலமது, ஆனாலும் வளாகத்திலிருந்து தப்பித்து செல்ல வழியில்லாததால்
’’வெட்டிவிடுங்கள் போதி மரங்களை
வீதியில் எங்கேனும் காண நேர்ந்தால்
கட்டிய மனைவியையும்
தொட்டிலில் பிள்ளையையும்
துன்பத்திலாழ்த்தி விட்டு
ஆசையே துன்பத்துக்கு காரணம்
என அடுத்தவருக்கு புத்தி சொல்ல
என அடுத்தவருக்கு புத்தி சொல்ல
இனியொரு சித்தார்த்தன் வருவதற்குள்’’
என்று வாக்கியங்களை மடித்து மடித்து அமைத்து கவிதைபோலொன்றை சமர்ப்பித்தேன். அதில் கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை எல்லாம் எம் ஜி ஆர் பாடலிலிருந்து எடுத்தாண்டது. கவிதைக்கு பரிசு கூட கொடுத்தார்கள்.
பின்னர் புத்தர் மீண்டும் என் வாழ்வில் இடைபட்டது முதன் முதலாக இலங்கை சென்றபோது. அன்று புத்த பூர்ணிமா என்று பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தில் தான் அறிந்துகொண்டேன் விமான நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அரைமணிநேர பிரயாணத்தில் வீடு சேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைகளில் இருந்தோம்.
50 அடிக்கு ஒரு முறை காரை நிறுத்தி இனிப்புக்களை வழங்கிக் கொண்டே இருந்தார்கள் பொதுமக்கள். .துணிகளுக்குள் அமைக்கபட்டிருந்த வண்ண வண்ண விளக்குகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
புத்த பூர்ணிமா இப்படி கொண்டாடப்படுமென்றே அன்றுதான் தெரிந்துகொண்டேன். கொழும்பு வீட்டினருகே ஏரளமான புத்தர் கோயில்கள் இருந்தன. இலங்கை நண்பர் அசங்க ராஜபக்ஷ ஒருமுறை மலை உச்சியில் இருந்த மிக புராதனமான புத்தர் குகை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அனந்த சயன புத்தர். அந்த அரையிருட்டில், சாய்வும் புன்னகை மிளிரும் முகமுமாக புத்தரை கண்டது கனவு போலிருந்தது
அங்கிருப்பவர்களை போலவே வெண்ணிற உடையுடன் வெண் தாமரைகளை எடுத்துக்கொண்டு புத்தர் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் தம்மம் தந்தவன் அளித்த திறப்பை கோவில்கள் எனக்கு அளிக்கவில்லை.
புத்தகத்தை முதலில் நான் கையில் எடுத்தேன் பின்னர் புத்தகமும் காளியின் நிதானமான மொழியாக்கமும் முழுக்க முழுக்க என்னை கையில் எடுத்துக்கொண்டது
வாசித்து முடித்ததும் ’அடடா இன்னும் அதிகம் பேருக்கு இது போய் சேர வேண்டுமே’’ என்பதே முதன்மையாக தோன்றியது..
விலாஸ் சாரங்கின் ஆங்கில வடிவத்தைதான் காளி தமிழில் தந்திருக்கிறாரென்பது முன்னுரை எல்லாம் வாசித்தல் தான் தெரியும் அத்தனைக்கு அழகான அசலான, மொழியாக்கம். வெகு நிதானமாக சொல்லிச் செல்லும் பாணி இந்த நூலின் உள்ளடக்கத்திற்கு மிக பொருத்தமானதாக இருக்கிறது.
மிக புதியதொரு வழியில் புத்தரை, அவர் வாழ்வை, அவருக்களிக்கப் பட்டவற்றை அவரடைந்தவற்றை எல்லாம் அறிந்துகொண்டேன்.
புத்தரின் வாழ்வை சொல்லும் பிறவற்றிலிருந்து தம்மம் தந்தவன் வேறுபடுவது நவீன பாணியில் அவர் வாழ்வை சொல்லி இருப்பதில்தான். புத்தரின் வாழ்வு நிகழ்ந்த காலத்திலும் இப்போதைய காலத்திலுமாக சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கிறது.
புத்தரையும் பிம்பிசாரரையும் வாசிக்கையில் ஷேக்ஷ்பியரும் வருவது, அவ்வப்போது இடைபடும் ,மாரனும் அவன் மைந்தர்களும், சின்ன சின்ன வேடிக்கை கதைகள், பசு துறவி, நாய் துறவி போன்ற கதாபாத்திரங்கள், குழந்தையை பார்த்து அவன் எதிர்காலத்தை கணிக்கும் அஸிதர் சொல்லும் விந்தையான விஷயங்கள், சால மரத்தடியில் நின்றபடியே பிள்ளை பெற்றுக்கொள்ளும் மாயா என்று சுவையான, விந்தையான, புதியதான தகவல்களுடன் நூல் மிக அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது
சால் மரத்தடியில் பிறந்து, அரசமரத்தடியில் ஞானமடைந்து மீண்டும் சாலமரத்தடியில் நிறைந்த புத்தரின் வாழ்வு புத்தம் புதிதாக என்முன்னே நூலில் திறந்து கிடந்தது.
ஆங்காங்கே அடைப்புகுறிக்குள் மேலதிக தகவல்களும் விளக்கங்களும் பிறமொழிப் பொருளும் கூறப்பட்டிருப்பது நூலை புரிந்து கொள்ள இன்னும் உதவுகிறது
தம்மம் தந்தவன் முதன்மையாக புத்தர் என்று நான் அதுவரை கொண்டிருந்த ஒரு பிம்பத்தை உடைத்திருக்கிறது. புலால் உண்னும், சோலைகளை விரும்பும், 12 ஆண்டுகள், இல்லற கடமையை ஆற்றிய, பரிசுகளை, விருந்துகளை மறுக்காத, தான் எந்த அற்புதங்களையும் செய்துவிடவில்லை என்று சொல்லும் புத்தரை நான் இதில்தான் அறிந்துகொண்டேன்
புத்தர் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் சோதனைகள், மயான வாசம், விலங்கு கழிவுகளை உண்பது, அவர் சந்திக்கும் குருமார்கள், பிம்பிசாரன் வாழ்வு , குகையில் புத்தருடன் சந்திப்பு முடிவதற்குள், முடிந்த அரசுப் பதவி என .பிரமிப்பூட்டும் தகவல்கள்.
// உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒன்று, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு பாராட்டுமொன்று என்னுமிடத்தில் அனைத்து மதங்களும் கடவுள் என்னும் கற்பனையை வைக்கின்றன .ஆனால் அதே இடத்தில் நாம் நிதர்சனமாக உணரும் துக்கம் மற்றும் மனக்கிலேசம் ஆகியவற்றை பெளத்தம் வைக்கிறது// இந்த பத்தி இந்நூலின் சாரம்.
புத்தரின் மனவுறுதியை
கம்பீரத்தை, மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருந்ததை, சஞ்சலங்களிலிருந்து முற்றாக விலகி இருப்பதை, இயல்பாகவே அவருக்கு இருந்த அறிவுக்கட்டமைப்பை என தம்மம் தந்தவன் காண்பிக்கும் புத்தர் எனக்கு மிக மிக புதியவர்
200 பக்கங்கள் என்ன்னும் வசதியான பக்க அளவு, மிகப்பெரிய விஷயங்களை எளிமையாக விளக்கும் அழகிய மொழி என கச்சிதமான , சிறப்பான நூல் தம்மம் தந்தவன்
தங்க இடம் கொடுப்பவர் அனைத்தும் தருகிறார்;
ஆனால் தம்மத்தை –
புத்தரின் அருமையான போதனைகளைக் கற்பிப்பவர் –
அப்படிப்பட்டவர் தருவது அமிர்தத்தை.
என்கிறது சுத்த பிடகம்
புத்தர் தன்னை விடுவித்துக்கொண்டு சென்றவைகளையும், அவர் கடந்துசெல்பவைகளையும் அவர் இறுதியாக அடைந்தவற்றையும் சொல்லும் தம்மம் தந்தவன் என்னும் அமிர்தம் தந்த காளிக்கும் அழகிய பதிப்பிற்காக நற்றிணைக்கும் நன்றி
மருத்துவத்துறையில் தாவர மயக்கமூட்டிகளின் வரலாறு குறித்து கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். கட்டுரை தலைப்பாக ’மயக்கமென்ன’ என்று வைக்கலாமாவென யோசித்து அந்த தலைப்பில் வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தேடுகையில் ஜெ வின் மரவள்ளி கிழங்கு மயக்குதல் கட்டுரை கிடைத்தது. எப்படி இதை நான் வாசிக்காமல் இருந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. அடிக்கடி ’மயக்குதல் என்னும் சமையல் முறையை அவர் எழுதி வாசித்திருக்கிறேன் அது என்னவென்று தெரியாமல் இருந்தது.. இந்த கட்டுரை அதையும் இன்னும் பல விஷயங்களையும் சொல்லியது. மிகச் “சுவையான’’ கட்டுரை.
மரவள்ளி தொடர்பான பல நினைவுகளை இந்த வாசிப்பு கிளர்த்திவிட்து. எங்கள் ஊரான பொள்ளாச்சி கேரளாவிற்கு அருகில் என்பதால் மரவள்ளி பயன்பாடு பிற கோவை பகுதிகளை விட சற்று அதிகம்தான். ஆனால் மைய உணவாக இல்லை மாலை வேளைகளில் அல்லது மிக வறிய காலங்களில் சமைக்கப்படும் உணவுதான்.
நான் சிறுமியாக இருக்கையில் பக்கத்து வீட்டில் ஒரு கிருஸ்துவ குடும்பம் இருந்தது. மிக வறுமையில் இருந்தவர்கள் அவர்கள். 5 பிள்ளைகளுடன் 7 பேர் வீட்டில். பெரும்பாலும் அவர்களின் உணவு மரவள்ளிக்கிழங்கில் சமைக்கபட்ட எதோ ஒன்றாகவே இருக்கும். சமயங்களில் என்னுடனும் அதை பகிர்ந்து இருக்கிறார்கள்.
நான் தாவரவியல் இளங்கலை படிக்கையில் இறுதி வருடத்தின் இறுதி செய்முறை தேர்வு பொருளாதார தாவரவியல். ஆய்வக மேசையில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் தாவரப்பொருட்களை பார்த்து, அவை எந்த தாவரத்திலிருந்து பெறப்பட்டவை, என்ன அறிவியல் பெயர், என்ன உபயோகம் என எழுத வெண்டும். அந்த வரிசையில் ஒரு அழிரப்பர் இருந்தது.. எனக்கு அதன் குடும்பம் நினைவில் இருந்தது, ஆனால் பெயர் சந்தேகமாக இருந்தது. Manihot esculenta என்று எழுதி விட்டேன். அப்போது எங்களின் கண்டிப்பான ஆசிரியர் திரு. ஷண்முக சுந்தரம் பரீட்சை முடிந்து வீட்டுக்கு செல்ல அனுமதிக்க மாட்டர் புறநிலை தேர்வாளர் சென்ற பின்பு ஒவ்வொருவராக அழைத்து அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி படு பயங்கரமாக கோபித்துக் கொள்வார். அவர் அழைக்கிறார் என்றாலே அழும் மாணவர்கள் இருந்தோம்.
அன்று என்னையும் வரச்சொல்லி அவர் மேசையின் முன்னால் நிற்க வைத்து பிற மாணவர்களிடம் ’’லோகமாதேவி பின்னாளில் ஒரு பெரிய சயிண்டிஸ்டாக வரப்போறா தெரியுமா’’ என்றார் எனக்கு வெலவெலத்து விட்டது. ’’அவ மரவள்ளிக்கிழங்கிலிருந்து ரப்பர் தயாரிக்கப்போறா’’ என்ற போதுதான் எனக்கு ரப்பருக்கு பதில் மரவள்ளியின் பெயரை எழுதியதும், ரப்பரின் அறிவியல் பெயரும் ஒருசேர நினைவில் வந்தது. ஒருபோதும் மறக்க முடியாததாகிவிட்டது அந்த மரவள்ளி கிழங்கு ரப்பர்.
இலங்கையில் இருக்கையில் அங்கு மரவள்ளிகள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். மாண்டியோக்கா என்பார்கள் அதை அங்கு. கடைகளில் உலர்ந்த மரவள்ளி வற்றல்களும், மாவும் சாக்குசாக்காக இருக்கும். ஒரு விருந்தில் பாலில் வேகவைத்த சோற்றுக் கட்டிகளுடன் மிக சுவையான தேங்காய் பாலில் செய்த மரவள்ளி குழம்பை சாப்பிட்டேன்.. அவித்து தாளித்த மரவள்ளியுடன் தேங்காய் வெங்காயம் கலந்த ஒரு உலர் சம்பலும் அடிக்கடி கிடைக்கும் உணவு அங்கு. அங்குதான் ஒரு அம்மாள் எனக்கு மரவள்ளியை ஒருபோதும் குக்கரில் வேக வைக்க கூடாது என்றும் திறந்த பாத்திரங்களில் வேக வைக்க வேண்டும் என கற்றுக் கொடுத்தார்கள்.
முன்பு வீட்டுத்தோட்டத்தில் மரவள்ளிகளை பயிரிட்டிருந்தேன். அதன் கிழங்குகளுக்காக அருகிலிருக்கும் வயல்களிலிருந்து சாம்பல் வண்ண முயல்கள் வந்துகொண்டே இருக்கும். அவற்றிற்கு என்று நான் தொடர்ந்து பயிரிட்டு கொண்டிருந்தேன். களைத்து வீடு திரும்பும் மாலைகளில் வாசல் கேட்டை திறக்கையில் காலடியில் சிவப்பு கண்களுடன் சாம்பல் வண்ண முயல்கள் விரைந்து ஓடுவது அத்தனை மகிழ்வளிக்கும். பின்னர் பெருச்சாளிகள் கிழங்குகளை தோண்டி குழிபறிக்க துவங்கியதால் அவற்றை பயிரிடுவது நின்று போனது.
மயக்கமென்னவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல மரவள்ளி கிழங்குகள் அமேஸானை சேர்ந்தவைதான். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்குமுன்பு அவற்றின் காட்டுமூதாதைகளான Manihot esculenta ssp peruviana , Manihot escculenta ssp fabellifoliya ஆகியவற்றிலிருந்து இன்று நாம் உண்ணும் வகைகள் உருவாக்கபட்டன. Manihot பேரினத்தில் சுமார் 98 சிற்றினங்கள் உலகெங்கும் இருக்கின்றன.இவற்றில் பிரேசிலில் மட்டும் 40 சிற்றினங்கள் உள்ளன.
உலகின் ஆறாவது முக்கிய உணவுப்பயிரான மரவள்ளிக்கிழங்கில் கலப்பின வகைகள் புதிது புதிதாக கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கின்றன கிழங்குகளின் சத்துக்கள், அளவு மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்க கலப்பின சோதனைஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இலைகளின் டானின் அளவும் கலப்பினங்களில் அதிகரிக்கப்படுகிறது.
.சாகுபடி முறையில் நுட்பமான மாற்றங்கள் செய்தும் கிழங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறார்கள். ஒளி அளவை கட்டுப்படுத்துவதன் மூலம் துரிதமாக அதிக கிழங்குகள் கிடைக்கும் என்பதால், குறைந்த பகல்பொழுதுகளிருக்கும் பருவங்களில் மரவள்ளிகள் பயிரிடப்படுகிறது.
இவற்றில் குறைந்த நச்சை கொண்டிருப்பவைகளும் அதிக நச்சு கொண்டிருக்கும் கசப்பு வகைகளும் இருக்கின்றன.
மானிகாட் என்னும் அறிவியல் பெயரில் Mani oca என்பது பிரேசிலில் ’மரம் போன்ற கிழங்கு’ என்னும் இதன் வழங்கு பெயர். இதுவே அறிவியல் பெயராகவும் ஆனது. esculenta என்றல் மிக சுவையான, உண்ணக்கூடிய என்று பொருள்(latin).. பிரேசிலிய மொழியில் tipi என்றால் கசடு, அடியில் தங்குகிற என்று பொருள். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து மாவாக்கிய பின்னர் எஞ்சும் கசடுகளை குறித்த இச்சொல்லிலிருந்தே (Tapioca )டேபியோக்காவும் வந்தது..
மரவள்ளி கிழங்கு பயிர் பிரேசிலிலிருந்து ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதிகளுக்கு 16 ஆம் நூற்றாண்டில் போர்சுகீசிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவிலும் 18 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களே இதை அறிமுகப்படுத்தினார்கள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் இறுதியில் இவை பெரும்பாலான ஆசிய பகுதிகளில் அறிமுகமாயிருந்தன.
இவற்றில் மலர்களும் அரிதாக உருவாகும், கிளைத்த மஞ்சரிகளில் சிவப்பு தீற்றல்களூடன் பச்சையும் பழுப்பும் கலந்த சிறு மணி வடிவ ஆண் பெண் மலர்கள் தனித் தனியே காணப்படும்.. ஒரே மஞ்சரியில் ஆண் மலர்கள் உச்சியிலும் பெண்மலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படும்.. சிறு கனி (1 செமீ அளவில்) நுண் விதைகளுடன் இருக்கும்
இவற்றின் நச்சுப்பொருளான சையனோஜென்கள் (cyanogens) இளம் இலைகளில் மிக அதிகமாகவும் முதிர்ந்தவைகளில் குறைந்தும் காணப்படும். கிழங்குகளிலும் நச்சின் அளவு அடிப்பகுதியிலிருந்து கிழங்கின் நுனிப்பகுதிக்கு அதிகரித்துக்கொண்டே வரும். கிழங்கின் மையப்பகுதியில் ஒரங்களைவிட நச்சு குறைவாக இருக்கும். வறட்சி, வளம் குறைவான நிலம் போன்ற சூழியல் காரணிகளாலும் நச்சின் அளவு கூடுவதுண்டு
பிற புரத உணவுகளுடன் கலந்து மரவள்ளியை உண்ணுகையிலும் இதன் விஷத்தன்மை மட்டுப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஆப்பிரிகாவில் பூஞ்சைகளைக்கொண்டு நொதிக்க வைத்து நச்சகற்றப்படுகிறது. டான்ஸானியா மற்றும் உகாண்டாவில் குவியல் நொதித்தல் முறையில் நச்சு நீக்கப்படுகிறது தோலுரிக்கப்பட்டு 3 நாட்கள் வெயிலில் உலரச்செய்த கிழங்குகளை பெருங்குவியல்களாக அடுக்கி சாக்குகளால் மூடி வைக்கையில் உள்ளிருக்கும் வெப்பம் வெளியில் இருப்பதைவிட 12 பாகை அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்தில் Neurospora sitophila, Geotrichum candidum and Rhizopus oryzae. போன்ற பூஞ்சைள் கிழங்குகளில் வளரும். சில நாட்களில் கிழங்குகள் வெளியில் எடுக்க்பட்டு பூஞ்சைகள் சுரண்டி எடுக்கப்பட்டபின்னர் மீண்டும் வெயிலில் உலர்த்தி பொடித்து சலித்து சேகரித்து வைத்துக் கொள்கின்றனர். இம்முறையில் நச்சு பெரும்பாலும் நீக்கப்படுகிறது.
வெயிலில் உலர்த்துவது, அதிக அளவு நீரில் வேக வைப்பது ஆகியவை நச்சுநீக்கும் எளிய முறைகள் எத்தனை அதிக நீரில் வேகவைக்கப்படுகிறதோ அத்தனைக்கு நச்சு வெளியேறும்
மரவள்ளிக் கிழங்கிலிருந்து மது வகைகளும் உருவாக்கப்படுகின்றன. பிரேசில் பழங்குடியினர் மரவள்ளிக்ழங்கை வேகவைத்து, வாயிலிட்டு மென்று பின்னர் பெரிய மண்பானைகளில் நொதிக்க வைக்கிறார்கள் மனித எச்சில் கிழங்கின் மாவுச்சத்தை சர்க்கரையாக மாறும் நொதித்தலை துவங்கி வைக்கிறது. பின்னர் அதை மதுவாக்குக்கிறது. இதே முறையில் பண்டைய ஜப்பானில் அரிசி மதுவான சாகேவும் செய்யபட்டுக்கொண்டிருந்து. இந்த மது cauim எனப்படுகிறது. இந்த மதுவை பழங்குடியின பெண்கள் மட்டும் உருவாக்குகின்றனர். வட்டமாக அமர்ந்து வேகவைத்து குளிர்விக்கப்பட்ட கிழங்குகளை வாயிலிட்டு மென்று சிறு சிறு கிண்ணங்களில் துப்பி சேர்த்து ,பின்னர் அவற்றை பெரிய பானைகளில் இடுகிறார்கள்..நொதித்த மதுவை வெதுவெதுப்பாக அருந்துகிறார்கள் இவற்றை பரிமாறுவதும் பெண்களே. இந்த மதுவை ஒரே மடக்கில் அருந்த வேண்டும் என்பதும் அவ்வினத்தின் நியதி..இப்போதும் இந்த மது அமேஸான் பகுதிளில் தயாராகின்றது
இந்த மதுவை தயாரிக்கையில் பானைகளின் அடியில் தங்கும் கசடுகள், வட்டமாக ரொட்டிகளை போல உருட்டி தேய்த்துத் திறந்த அடுப்புக்களில் இருபுறங்களிலும் மீண்டும் மீண்டும் நீர் தெளித்து வாட்டப்படுகின்றன. வாட்டிய ரொட்டிகளில் 35 சதவீதம் ஈரம் இருக்கையில் அவற்றை மரக்கட்டைகளின் மீது மரவள்ளி இலைகளால் பொதிந்து கீழே விழாத அளவிலான உயரத்தில் அடுக்குகிறார்கள். 3 நாட்கள் கழித்து அவற்றில் முழுக்க பூஞ்சை படர்ந்த பின்னர் மூடிய மண் பானைகளில் 1, 2 நாட்கள் வைத்திருந்து கிடைக்கும் மஞ்சள் நிற திரவம் மற்றுமொரு மதுவகையான் tiquira எனப்படுகிறது. இந்த மஞ்சள் கரைசலை உடனடியாகவோ அல்லது உலரச்செய்து தேவைப்படும்போது நீர்ல் கரைத்தும் அருந்துகிறார்கள்.இன்றும் பிரேசில் நகரங்களில் இம்மது கிடைக்கிறது.
கசரி (kasiri ) எனப்படும் மற்றொரு வகை மரவள்ளி மது தென்னமெரிக்காவின் சில பழங்குடியினரால் தயாரிக்கப்படுகிறது . தோல் உரித்த கிழங்குகளை துருவி நீரில் ஊறவைத்து பின் அவற்றை கட்டைகளால் அழுத்தி பிழிந்து கிடைக்கும் சாற்றை காய்ச்சி கொதிக்க வைத்து நொதித்த பின்னர் தயாரிக்கும் மது இது. இவற்றில் எச்சில் உமிழ்வதும் உண்டு. இந்த மதுவை காயஙகளை ஆற்றவும் பயன்படுத்துகிறார்கள்.ஆப்பிரிக்காவிலும் பிரேசிலிலும் கிடைக்கும் இம்பாலா என்னும் மரவள்ளி பீர் மிகவும் பிரசித்தம்
வடக்கு பிரேசிலின் வாய்-வாய் பழங்குடியின மக்கள் இதே எச்சில் நொதித்தலை இருமுறை செய்து கிடைப்பது parakari என்னும் கிழங்கு மது. Sarawi என்பதும் இதே கிழங்கில் உருவாக்கும் வடக்கு பிரேசிலின் மற்றொரு பழங்குடியினரின் (Wapisiana) மது வகை.. nihamanchi என்பது தென்னமெரிக்க ஜிவேரோ பழங்குடியின பெண்களால் உருவாக்கப்படும் மரவள்ளி மது. அரைத்த மரவள்ளி மாவை சமைத்து கூழாக்கி அதில் மென்று துப்பிய கிழங்கையும் சேர்த்து நொதிக்க வைக்கப்படும் இம்மதுவை நீருக்கு பதிலாக அன்றாடம் இவர்கள் அருந்துகிறார்கள் அவசியமேற்பட்டால் மட்டுமே நீரருந்தும் வழக்கம் இவர்களுக்கு இருக்கிறது Masato என்னும் நுரைத்து பொங்கும் மதுவகையும் அமேஸான் பழங்குடியினரால் விழாக்காலங்களில் அருந்தப்படுகிறது, இதுவும் மரவள்ளிக்கிழங்கு மாவில் தயாராவதுதான்.
இந்தியாவிலும் tarul ko மது இந்த கிழங்குகளில்;இருந்து தயாராகிறது. குறிப்பாக சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்க் பகுதிகளில். சிக்கிம் வரும் சுற்றுலா பயணிகள் அவசியம் சுவைத்துப் பார்க்க வேண்டியவைகளின் பட்டியலில் இதுவும் இருக்கிறது.
ஆப்பிரிக்காவின் Casabe ரொட்டிகள், தாய்வானின் குமிழி தேநீர் என உலக புகழ்பெற்ற மரவள்ளிக்கிழங்கு உணவுகள் இப்போது அனைத்து நாடுகளிலும் கிடைக்கின்றன.தென்அமெரிக்காவின் மரவள்ளிக்கிழங்கின் சிச்சா பீரும் புகழ்பெற்றது
தானிய மற்றும் பயறு வகை உணவுகளுக்கு அடுத்ததாக வரும் கிழங்கு உணவுகளில் இதுவே அரசன் என கருதப்படுகிறது. உலகின் பலநாடுகளின் பஞ்சகால பயிராகவும் மரவள்ளிக்கிழங்கு இருக்கிறது. தற்போது 102 நாடுகளில் முக்கிய உணவுப் பயிராகவும், வணிகப் பயிராகவும் மரவள்ளி கிழங்கு சாகுபடியாகிறது.
இன்று முழுவதுமே மரவள்ளிக்கிழங்குகளை பற்றியே வாசித்துக்கொண்டிருந்தேன்.எதிர்பாராமல் ஒரு தகவல் கிடைத்தது. அன்று தவறான பதில் எழுதியதாக ஆசிரியர் கண்டித்த, அந்த ரப்பர் கிழங்கு குறித்த வருத்தம் எனக்கு நேற்று வரை இருந்தது. ஆனால் இதை எழுதும் பொருட்டு வாசிக்கையில்தான் தெரிந்துகொண்டேன் மரவள்ளி கிழங்கின் ஒரு வகையிலிருந்து ரப்பரும் தயாரிக்கப்படுகிறது.
பிரேசிலை சொந்தமாக கொண்ட மேனிஹாட்டின் ஒரு சிற்றினத்திலிருந்து ரப்பரும் உருவாக்கப்படுகிறது. Manihot glaziovii, என்கிற சியரா ரப்பர் மரம் என்றழைக்கப்டும் மரவள்ளிப் பாலிலிருந்து ரப்பர் உருவாக்கப்படுகிறது.( Ceara rubber tree), 1877ல் கியூ தோட்டத்திலிருந்து இந்த ரப்பர் மரவள்ளியின் விதைகள் உலகெங்கும் பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் 1 லட்சம் ஏக்கரில் 1912ல் இந்த ரப்பர் மரவள்ளிக்கிழங்கு பயிரானது, இதிலிருந்து கிடைக்கும் ரப்பரின் அளவு ரப்பர் மரத்தில் கிடைக்கும் ரப்பரை விட மிக்குறைவென்பதால் இது பிரபலம் ஆகவில்லை. பிரேசிலின் சியாரா நகரத்தில் இது மிக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு ரப்பர் தயாராகின்றது. எனவே நான் அன்று அந்த கேள்விக்கான விடையைத்தான் தவறாக எழுதியிருக்கிறேன். தாவரவியல் ரீதியாக அது தவறல்ல என்றும் மகிழ்ந்துகொள்கிறேன்
சுவையான கட்டுரைக்கும் அந்த கட்டுரையால் மரவள்ளிக்கிழங்கு குறித்து மேலதிகமாக தெரிந்து கொண்டதற்குமான நன்றிகளுடன்.