லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 1 of 5)

அன்பில் அழியுமடீ!

நேற்று மாலை  இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை  கடந்தே செல்லவேண்டும்.

இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை.  நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்

எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்

ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று

அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை.  திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்

இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.

 நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது.  ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான்.  நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.

துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்

முன்பே சொல்லப்பட்டிருக்கிறதே

‘’துன்ப நினைவும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ!’’ என்று!

வளமை

நேற்று ஒரு பண்ணை வீட்டின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். பொதுவாக விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்படி சிறந்த இடங்களுக்கு செல்கையில் அவற்றை அனைவருடனும் பகிர்வார்கள்

அந்த பண்ணை வீட்டின் பேரில் தனித்த பிரியம் கொண்டிருக்கும், அங்கே அடிக்கடி கூடுகைகளுக்கு சென்று வரும் நண்பர்களில் சிலர் வாட்ஸப் குழுமங்களில் அவரது பண்ணையில் யானை வந்து நீரருந்திச்செல்வது, பலாப்பழங்களை பறித்துண்பது போன்ற காணொளிகளை பகிர்வது வழக்கம். நேற்று அப்படி பகிரப்பட்ட காணொளிகளில் கோடைக்கால கனிகளின் பல வகைகள் செறிந்து காய்த்தும் கனிந்தும் இருந்ததையும், அறுவடையையும் பகிர்ந்திருந்தார்கள்.

எனக்கு எப்போதுமே அறுவடை செய்வதும் அதை காண்பதும் பெரும் பரவசமளிப்பவை

அந்த பண்ணை வீட்டின் பிரியர்களில் நானும் ஒருத்தி. தென்னை, மா, பலா, நாவல், முந்திரி கொய்யா உள்ளிட்ட பல பழவகை மரங்களும் மந்தாரையிலிருந்து பல வண்ண மலர்ச்செடிகளும் நிறைந்த பல்லுயிர் பெருக்கில் ததும்பும், முறையாக பராமரிககப்படும் தோட்டம் அது

முதல்  முறை அங்கு சென்றபோது கோடைக்காலமாகையால் பகலில் பெண்கள் குழாம் நாவல் மரங்களை வேட்டியாடினோம், இரவில்  பாலுவே பலாச்சுளைகளை அனைவருக்குமாக அளித்தார்

அங்கு எனக்கு சுவாதீனமுண்டு, அடுப்படியில் தேநீர் தயாரிப்பது மாலை விளக்கு ஏற்றுவது என்று, விஷ்ணுபுரம்  வெறும் இலக்கியம் பேசும் குழுமம் மட்டும் அல்லவே அது ஒரு குடும்ப அமைப்புபோலத்தானே! 

அப்படியான அந்த பண்ணையை நேற்று காணொளியில் பார்க்கையில் நூற்றுக்கணக்கில் மாங்கனிகள் மரத்தடியில் சிதறியும் இறைந்தும் கிடந்தன,பச்சைகாய்களை கொண்ட  தென்னைகள் நிறைந்த குலைகளுடன் நின்றது. பலாவின் பெருங்கனியொன்று கிளையிலிருந்து உதிர மனமின்றி அதிலேயே வெடித்து பிளந்து சுளைகளைக் காட்டி ஆசையூட்டிக் கொண்டிருந்தது.

இது ஒருவேளை என் இடமாக  இருந்திருந்தால், இப்போது இங்கு வேடசெந்தூர் வீட்டில் வெற்றிலைக்கொடியினருகிலேயே  சுணணாம்பும்,  இனிப்பூட்டிய பாக்குத்தூளுமாக அமர்ந்து மனம் நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளுவதை போல பலா மரத்தடியில் அமர்ந்தே அச்சுளைகளை உண்டிருப்பேன்.

நேற்று மாலை அப்பா வீட்டில் பலாக்கனிகள் சில முற்றி நம் வீட்டில் விழுந்து உடைந்து சிதறிக்கிடந்தன. மாலை நல்ல மழையும் ஆதலால் வீடெங்கும் அதன் மணம் கமழ்ந்தது ஒருபோதும் நான் அந்த பழத்தை சுவைத்ததில்லை சுவைக்கவும் போவதில்லை. காலை அப்பா என்னிடம் பலாச்சுளைகளை சாப்பிடும்படி சொன்னார், அவர் கண்களை நேராக சந்தித்து ’’எனக்கு பலாப்பழமே பிடிக்காதே’’ என்றேன். 

ஆம், வஞ்சம்தான், அது எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது, இது என்னை அறமற்றவளென்று வகுக்குமேயானால் அவ்வாறே ஆகட்டும், அறியட்டும் உலகு  நான் அறமற்றவள் என்று, வஞ்சம் புகையும் கல்நெஞ்சக்காரி என்றும் கூட.  இப்பிறவியில் இவற்றிலிருந்து எனக்கு மீட்சியில்லை. மீட்சியை நான் விழையவும் இல்லை.

மனம் எங்கோ சென்றுவிட்டது பலாவின் மணத்துடன்,இதோ திரும்பி வருகிறேன்

ஆம் அறுவடை, அது எனக்களிப்பது பெரும் நம்பிக்கையை, காயும் கனியும் கீரையும் மலர்களுமாக தோட்டமும் பண்ணையும் வயல்களும் நிறைந்திருப்பதும் அறுவடை செய்யப்பட்டவை குவிந்துகிடப்பதையும் பார்க்கவே எனக்கு பெரும் கிளர்ச்சியண்டாகும்.

அறுவடை என்பது வளமையின் சாட்சி, செழிப்பின் சாட்சி தொடர்ந்து இவ்வுலகில் உயிர்கள் வாழும்  சாத்தியத்திற்கான  உத்திரவாதம்,  எனக்கு வாழ்வை தொடர வேண்டும் என்னும் பிடிப்பையும் பெருவிருப்பையும் அறுவடையும் அறுவடையை காணுதலும் உருவாக்கும்.

நீர் நிரம்பிய கலம் அவற்றில் மிதக்கும் வண்ண மலர்கள் தீபச்சுடரொளி இவைகளும் அப்படித்தான், மலரும் நீருமின்றி வீட்டிலிருந்து ஒருபோதும் பயணத்தை துவக்குவதில்லை, எப்போதும் காரில் ஓரிரு மங்கலங்கள் இருக்கவேண்டும் என்பதை மகன்களுக்கும் உணர்த்தியிருக்கிறேன்

மாலைவேளைகளில் விளக்கேற்றாவிட்டால் மனம் எப்படியோ வெறுமை கொண்டுவிடுகிறது, எவ்விதத்திலும் இருள் அணுகிவிடக்கூடாது என்னும்  ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவும்  இது இருக்கலாம்.

அந்த பண்ணை வீட்டிலிருந்து முதல்முறை திரும்புகையில் கொண்டு வந்த ராம் சீதாப்பழத்தின் விதையினின்றும் ஒரு செடி இளம்பச்சை நீளிலைகளுடன் இங்கு வளர்ந்து நிற்கிறது.

அப்படி ஒரு நஞ்சில்லா நிலமொன்றில் பலவ்ற்றை விளைவித்து மகிழும் விழைவு எனக்குள் பல்லாண்டுகளாக நிறைவேறாமல் காத்திருக்கிறது. அவ்விழைவின் மீச்சிறு வடிவமாகவே வேடசெந்தூர்வீட்டிலும் வகை கனிமரங்களிலும் ஒவ்வொன்று, பாரதியின் காணி நிலம் போல 12 தென்னைகள், மலர்ச்செடிகளும் மூலிகைகளுமாக வைத்து வளர்த்து பசுமையும் செழுமையும் நிரம்பி, வளமை பொங்க வாழ்கிறேன்.

ஊட்டி ஃபெர்ன்ஹில் நித்யா ஆசிரமம் நல்ல மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் முழுவதும் மலர்ச்செடிகளாலும் இயற்கை புல்வெளியாலும் சூழப்பட்டிருக்கும் சொர்க்கத்துக்கு இணையான இடம் அது.அங்கு எனக்கு தாளமுடியாததென்றால் குளிர்மட்டுமே மற்றபடி திரும்பிவராமல் இறுதி மூச்சுவரை இருக்க விரும்பும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று.

அங்கு ஒரு கோடைக்கால காவிய முகாமின் போது தேவதேவன் அவர்களுடன் ஒரு மாலை நடை சென்றேன், மலர்கள் மலர்கள் மலர்களென்று முழுவதும் மலர்களை பார்த்து அவற்றின்  பெயர்களை தெரிந்துகொண்டு அவற்றின் மணம் நுகர்ந்து கொண்டு அவற்றை பறித்து கையில் ஏந்திக்கொண்டு ஒன்றை தலையிலும் சூடிக்கொண்டு அனைத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டு மலர்களால் ஆன நாளாகவே  அமைந்தது அன்று.

அன்று பிற்பகல் ஊர் திரும்பவே எனக்கு மனதில்லை நிர்மால்யாவிடம் அனுமதி பெற்று வட்டத் தலையணைகள் போல் நெருக்கமான  வண்ணச்சிறுமலர்களால் ஆன  ஹைட்ராஞ்சியா  மலர்ப்பந்துகளில் ஒன்றை பறித்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தேன்

குருநித்யா ஆசிரமத்தின் ஒரு சிறு துண்டையே வீட்டுக்கு கொண்டு வந்தது போல் இருந்தது அம்மலரை பார்க்கையில் எல்லாம். கன்யாகுமாரி கவிதை முகாமிற்கு பிறகும் அங்கிருந்து என் கைக்கடிகாரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு வீடுவரை வந்த கடற்கரை மணலும் அப்படியான உணர்வை, அவ்விடத்தின் நினைவுகளின் நீட்சியை அளித்தது. அப்படித்தான் இந்த பண்ணை வீட்டு நினைவும். 

ராம் சீதாவும் அங்கிருக்கும் பல மரங்களில் ஒன்றொன்றாக இங்குமிருப்பதுமாக அப்பண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இங்குமிருக்கிறது, பெருமரங்களின் மீச்சீறு போன்சாய் வடிவங்களை போல.

இன்று ஜெ தன் பிறந்தநாளன்று அருணாவுடன் எர்ணாகுளம் சென்று  விட்டு,மழை பெய்திருந்த நாகர்கோவில் திரும்பியதை சொல்லியிருந்தது போலவே நானும் இன்று  நினைவுகளில் பசுமை வழியாகவே சென்று பசுமை வழியாகவே மீண்டேன்

நிலவிரவு!

வழக்கமில்லாத வழக்கமாக இந்த மாதம் இரண்டு முறை வார இறுதிகளில் 3 நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட்டது.

வெள்ளி சனி வீட்டில் ஓய்வாக இருந்தேன். நிறைய பாடல்கள் கேட்டேன்.குறிப்பாக லால் இஷ்க், அர்ஜித் சிங் குரலெல்லாம் தெய்வத்தினருள்தான்.  ராம் சீதா மரத்தடியில் நாளெல்லாம் அமர்ந்திருந்தேன். அதன் இளம்பச்சை நீள் இலைகளின் அடியில் மனமும் உடலும் குளிர்ந்திருந்தது.

 சில தினங்களாக ஏதும் எழுதவேயில்லை, எழுத மனம் குவியவில்லை. தினம் தொகுக்கும், திருத்தும் விக்கியின் பக்கங்களையும் 2 நாட்களுக்கு முன்னர் திருத்தியது மீண்டும் துவங்கவில்லை,கல்லூரியிலிருந்து வந்ததும் கணினியும் கையுமாக இருக்கும் அதே தேவிதானா இது என எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.

ஞாயிறு மாலா இனியா அபியுடன் ஜெகனின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு போக வேண்டி இருந்தது. எனக்கு உண்மையில் கோவையில் மாலை நிகழ்வென்றால் நள்ளிரவில் வீடு திரும்புவதும் மறுநாள்; கல்லூரி செல்வதும் பெரும் சிரமமாகி விடும் எனினும் மாலா மிக விருப்பப்பட்டதால் மாலதியை பார்க்கவென்றே போக நினைத்தேன்.

மாலை 4 மணிக்கு நல்ல எதிர்வெயிலில் புறப்பட்டேன். வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் கூடவே ராமபாண சரம் வைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பிடித்த அடர் தேன் நிற ப்ளெயின் புடவை. இதே போலொரு புடவையை கட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி இறந்த தினம் பல்கலைக்கழகத்துக்கு சென்று வந்தது  நினைவுக்கு வந்தது.

அபிக்கும் இனியாவுக்கும் இரண்டு சரங்கள் தனியே தொடுத்து எடுத்துக்கொண்டேன், மாலதிக்கு கொடுக்க முடியாமலாகிவிட்டது துயரளித்தது. ஆனால் மாலா ஏன் வைத்துக்கொள்ளக்கூடாது?

காரில்  பொதுவாக ஏஸி போட்டுக்கொள்வதில்லை எனினும் வெயில் தாளாமால் போட்டுக்கொண்டேன். பொள்ளாச்சி வருவதற்குள் ராமபாண சுகந்தம் கமழ்ந்தது.  தி ஜாவின் கதையில் வருமே ஸ்வாமி அலமாரியில் முந்தின நாள் வைத்திருந்த ஜாதிமல்லி அரும்புகளின் மணம் மறு நாள் காலையில் மனதை நிறைத்ததும் அந்த மனைவியை இழந்த ஒரு சிறு மகளின் தகப்பனார் உடனே ஒரு திருமணம் செய்துகொண்டுவிடுவாரே!அப்படி ஒரு மயக்கும் நறுமணம்.

கிணத்துக்கடவு வருகையில் மலர்மணம் பித்து பிடிக்க வைத்தது. மனம் கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு மிதந்து பறந்துவிடும் போலானதும் ,ஏஸியை அணைக்க சொல்லிவிட்டு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டேன்.  

என்னவோ அதிசயமாக சாலையில் போக்குவரத்து மிகவும் நீர்த்திருந்தது. கற்பகம் வழியே பைபாஸ் சாலையில் சென்று நிகழ்வு நடைபெறும் அரங்கிற்கு முன்பாகவே வந்து சேர்ந்துவிட்டேன்.  யூ டர்ன் போடுகையில் கடந்த ஜென்னிஸ் கிளப் ஒரு மின்னலை உண்டாக்கியது. அந்த பழங்காலத்திய அரங்கிற்கு முதன் முதலாக வந்திருக்கிறேன்.

மாலதி அரைமணி கழித்து வருவதாக சொன்னதும் பாதியில் இருந்த நைட் ஏக்‌ஷன் தொடரை பார்க்க நினைத்தேன் எனினும் மனம் ஒரு நிலையில் இல்லை எனவே அமைதியாக அந்த மரநிழலில் காத்திருந்தேன்.

ஜெகனும் மாலதியும் ஒரே சமயத்தில் வந்தார்கள் ஜெகன் என்னை கண்டதும் வியப்பாகினான். நான் அவனிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தேன்.இனியா வந்திருந்தாள் அபி  மருத்துவமனையில் கூட்டமதிகமென்பதால் பின்னர் வரவிருந்தாள்.மாலதி என்னை இறுக்க கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டதும் நானும் கட்டிக்கொண்டேன். அரங்கில் அமர்ந்த பின்னரும் மற்றுமொரு முறை மாலா என் கன்னத்தில் முத்தமிட்டு ’’இன்னிக்கு என்னவோ ரொம்ப அழகா இருக்கீங்க’’ என்றாள்

.

ஓரளவுக்கு கூட்டம், எனக்கு தெரிந்த வேண்டிய முகங்களை தேடினேன் யாரும் இல்லை. நிகழ்ச்சியில் நானும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன் பலமுறை. அபியும் வந்துவிட்டாள் .

ஜெகன் ஜெ வின் சில நகைச்சுவைகளை நகலெடுத்தான். கூட்டத்தில் பலவயதுள்ளோரும் இருந்தோம் சிறு குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை. ஆடியன்ஸ் பல்ஸ் என்பார்களே அதை நன்றாக பார்த்து தக்கபடி பேசிய ஜெகன் அந்த கூட்டத்தில் பேசியிருக்க வேண்டாத பெரியவர்களுக்கேயான சிலவற்றை பேசியது எனக்கு உவக்கவில்லை.

அதில் நகைச்சுவை இருக்கலாம் எனினும் அத்தனை அந்தரங்கமான விஷயத்தை தன் சொந்த வாழ்வில் இணைத்து அப்படி பரஸ்யமாக்கியது எனக்கு ஒரு விலகலை அளித்தது, மாலதிக்காக முக மாறுபாடுகளை கவனமாக மறைத்துக்கொண்டேன்

நிகழ்ச்சி முடிய 9 மணியானது, பின்னர் அந்த தீப்பிடித்தது போலான போக்குவரத்து நெரிசலில் அண்ண பூர்ணா சென்று இரவுணவுக்கு பின்னர் புறப்பட இரவு 10 மணிக்கும் மேலானது. அபியை இருசக்கர வாகனத்தில் அனுப்பி விட்டு புறப்பட்டோம். பின்னாலேயே மாலதியும் இனியாவும் அவர்கள் காரில் வந்தனர்

மாலதி கார் ஒட்டிக்கொண்டு வந்தது எனக்கு பெரும் மனநிறைவை அளித்தது.

பைபாஸில் அத்தனை போக்குவரத்து இல்லை. பீளமேடு சாலையில்  வானில் நிலவில்லை,  சின்னியம்பாளையும் கிளைச்சாலையில் திரும்பியதும் என் இடப்பக்கம் பொன்னென முழுநிலவெழுந்தது,

நல்ல குளிர் காற்றில், வானின்  அப்பெரு வெளியில் ஒரு மேகப்பிசிறோ விண்மீனோ இன்றி தன்னந்தனித்திருந்தது நிலவு. முழு நிலவு தோன்றி சிலநாட்களாயிருந்தது,  நீர் பட்டுக்கலைந்த ஓவியம் போல கொஞ்சம் கலைந்திருந்தது. எனினும் கீழ்ப்பகுதியின் பிறை வடிவு மட்டும் கூடுதல் ஒளிகொண்டிருந்தது.

அத்தனை வசீகரமாக அத்தனை பேரழகுடன் அத்தனை தனித்திருந்த நிலவு பெரும் துயரளித்தது.போதாக்குறைக்கு வானொலியில் ’’செந்தாழம்பூவில்’’ பாடிக்கொண்டிருந்தார்  தாஸேட்டன்.

ஷோபாவின் எளிய அழகையும் சரத்பாபுவின் கனவில் மிதக்கும் கண்களையும் அந்த மலைப்பாதை ஜீப் பயணத்தையும் நினைவில் மீட்டிக்கொண்டேன்.

கற்பகம் சந்திப்பில் மாலாவிடம் விடைபெற்றுக் கொண்டேன். ஞாயிறென்பதால் பல கடைகள் அடைத்திருந்தன. பல தெருக்கள் சந்தடியின்றி இருந்தன. என்னவோ ஒரு இனம்புரியாத துக்கம் நெஞ்சில் கல்லைப்போல அழுத்திக்கொண்டிருந்தது

நிலவு என்னையும் நான் நிலவையும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டே பயணித்தோம்.  நிலவை புகைப்படம் எடுத்துக்கொண்டேன், ஒரு மேம்பால வளைவில் கொஞ்சம் முயன்றால் கையில் அள்ளி எடுத்து விடலாம் போல  நிலவு வெகுஅருகில் வந்தது.

சுப்ரமணிய ஸ்வாமி கோவில் வழி வருகையில் நள்ளிரவு 12 மணி ஒரு பூக்கடையின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக பலர் பூத்தொடுத்து கொண்டிருந்தனர்.

அவர்களுக்கும் மலரின் சுகந்தம் மனம் மயக்குமா, மலர் தொடுத்தலை ஒரு தொழிலாக அகாலத்தில் செய்து கொண்டிருக்கையில் அப்படியான இனிமையை மனம் உணருமா?

வால்பாறை சாலையில் ஓரிடத்தில்  வரிசையான விளக்குகள் ஒளிர ஒரு அம்மன் கோவில் விழா நடந்த அடையாளங்கள் மிச்சமிருந்தன, சிம்மவாஹினியை ஒளிரும் பலவண்ண சிறு விளக்குகளால் சாலையோரம்  அமைத்திருந்தார்கள் சற்றுத்தள்ளி இளமுருகனும் வேலும் மயிலுமாக குறுஞ்சிரிப்புடன் ஒளிர்ந்தான,கைகூப்பி வணங்கி  இருக்கிறீர்கள் தானே தெய்வங்களே ?என்று மானசீகமாக வினவினேன் கண் நிறைந்தது.  நெஞ்சின் எடையுடன் தொண்டைக்குழியிலும் ஒன்று அடைத்துக்கொண்டது.

வீட்டுக்கு வரும்வரை நிலவு தொடர்ந்துகொண்டிருந்தது. என் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறதோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்

சரி நிலவாவது இருக்கிறதே என்னுடன் இணைந்து பயணிக்க!

வீடு திரும்பும்அரசமர வளைவிலும் தொடர்ந்த நிலவு மலைவேம்பின் கிளைகளுக்குள் புகுந்து புன்னையின் மின்னிலைகளுக்கு மேல் நின்று கொண்டு விடை கொடுத்தது.

ஏன் இந்த ஒற்றை நிலவு இன்று  இத்தனை துயரளித்தது?

என்னைபோலத்தான் அதுவும், தனித்தது, துயருற்றது, மனதளவில் எங்கோ வெகு தொலைவில் இருப்பது, லேசாக கலைந்திருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்திலாவது மினுங்கலை  மிச்சம் வைத்திருப்பது. களைத்திருந்தேன் எனினும்  இன்றைய நாளை எழுதவிரும்பினேன்.

அத்தனை அமைதியாக  என் முன்னே முடிவற்று நீண்டு கிடந்த  இரவை முன்வாசல் அகல்விளக்கின் சுடரொளி திரைச்சீலை அசைகையில் உண்டான இடைவெளிகளின் வழியே கீறி கீறிச் சென்றுகொண்டிருக்கிறது.

இளையவனா ,மூத்தவனா?

சில நாட்கள் முன்பு அம்மாவின் அண்ணனும் எனது தாய் மாமனும்,  சென்ற மாதம் அம்மா காலமாகும் வரை நாங்கள் பார்த்தே இராதவருமாகிய மருதமுத்து மாமன் வீட்டு திருமணத்தில் அம்மாவின் சார்பாக கலந்து கொண்டேன். எனக்கு அம்மாவின் சாயலே இல்லை நான் அப்பாவை கொண்டிருப்பவள் எனினும் அங்கிருந்த பலருக்கு நான் , 55 வருடங்கள் தன் பிறந்த வீட்டையே பார்த்திராத,  வைராக்கியமாக மின்மயானம் சென்ற அம்மாவை நினைவுபடுத்தி இருப்பேன் போலிருக்கிறது.

பலர் வந்து பேசினார்கள் பலர் தொலைவில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் கைகளை  பிடித்துக் கொண்டும், முகத்தை தடவியும் வாஞ்சையுடன் பேசினார்கள். குற்றவுணர்வில் ஒரு சிலர் கண்ணீர் வடித்தார்கள் 

நான் பொதுவாக பொன்நகைகளில் விருப்பமில்லாதவள், எனக்கான அங்கீகாரம் என் தோற்றத்தில் மட்டும் இல்லை என்று நம்புபவள் மேலும் எனக்கு அணிகலன்களில் அத்தனை விருப்பமும் இல்லை. ஆனால் அன்று நான் அங்கு அம்மாவின் சார்பாக சென்றதால் வழக்கத்துக்கு மாறாக நகைகள் அணிந்திருந்தேன் அவற்றையும் பல கண்கள் கணக்கெடுத்துக்கொண்டன.

மாமன் நடுங்கும் விரல்களால் எனக்கு நெற்றாக உலர்ந்துபோன அடுக்கு நீல சங்குமலர்காய்களை கொடுத்தார். உலர்ந்துவாடி இருந்த அக்காய்களுக்குள் விதைமணிகள் புறாக்கண்களைபோல சிறு குழிவுகளில் அமர்ந்திருந்தன. அவற்றில் உயிர் நிறைந்திருந்தது  பளபபளப்பிலேயே தெரிந்தது. அவற்றில் இருந்து புதிய சந்ததிகள் இனி முளைத்து வருமாயிருக்கும்.

இரவு உணவுக்கு முன்னர் மணமக்கள் அலங்காரம் முடிந்து வர அனைவரும் நெடுநேரம் காத்திருந்தோம். என் பின்னாலிருந்த ஒரு அம்மாள் ’’என் கல்யாணத்தப்போ அதிகமா மஞ்சள் தேச்சுகிட்டேன்  அவ்வளவுதான் இப்ப என்னன்னா ஆளே அடையாளம் தெரியாம பூசி மெழுகி பொம்மையாட்டம் பண்றதுக்கு இத்தனை நேரம் ,கொள்ளை காசு’’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

சுமார் 2 மணி நேரமானபின்னர்  மணமகள் இளஞ்சிவப்பு உடையில் பார்பி பொம்மைபோல மேடைக்கு வந்தார்,

அதன்பின்னர் அரைமணி நேரம் கழித்து மணமகன் வந்தார், காத்திருந்த இடைவெளியில் என் அருகில் இருந்த  ஆத்தா என்னிடம் ஆயிரக்கணக்கான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு அழைப்பு வந்தது, நான் என் அலைபேசியை எடுத்து பேசிவிட்டு அணைத்தேன். என் அலைபேசியின் லாக் ஸ்கிரீனை பார்த்த ஆத்தா அதிலிருந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ’’யாரு கண்ணு, மகனா? என்றார் நான் திகைத்து திடுக்கிட கூட சமயம் கொடுக்காமல் மூத்தவனா இளையவனா?  என்றார்

நான் சமாளித்து  பதில் சொல்லமுயற்சிப்பதற்குள்  ‘’பின்னர் எங்கே காட்டு’’ பாப்போம் என்றார் நான் ஒரு நிமிடம் யோசித்தேன் நிச்சயம் நான் அந்த ஸ்கிரீனில் வைத்திருக்கும் நபரை இங்குள்ளோருக்கு , குறிப்பாய் இந்த ஆத்தாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை   எனவே தைரியமாக எடுத்து காட்டினேன்.

ஆத்தா  பார்த்துவிட்டு  ’’ மூத்தவனா, ராமராஜ் வூட்டு கலியாணத்துக்கு வந்தப்போ இத்துணூன்டு கீரைத்தண்டாட்டம் இருந்தான் இப்போ வெள்ளைகாரனாட்டம் இருக்கானே? என்றார். நான் சிரிப்பை மென்று விழுங்கினேன்

அவரே தொடர்ந்து இப்போ என்ன செய்யறான்? என்றார். ’’வெளிநாட்டில் படிக்கறான்’’ என்றேன்.

’’ஆ அதான்  அமெரிக்கா போன பின்ன மீசை வச்சுகிட்டா இருப்பான், , சரி இருக்கட்டும் விடு பையன் நல்ல மூக்கும் முழியுமா இருக்கான் நம்ம சனத்தில் இவனுக்கு பொண்ணே இல்லை கேட்டுக்கோ’’ என்றார்

பொண்ணா இவருக்கா ஏற்கனவே 4 கல்யாணம் பண்ணிகிட்டவராச்சே என்று மனசில் நினைத்துக்கொண்டேன். அமெரிக்கா இல்லை என்று சொல்ல நினைத்து அதை சொல்லவேண்டாம் என் விட்டுவிட்டேன். ஆத்தாவிற்கு வெளிநாடென்றால் அமெரிக்கா அதை ஏன் மாற்றனும்?

ஆத்தா  தொடர்ந்து நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்து ’’நம்ம ஏரிப்பட்டி பாப்பாத்தி இருக்காளே, உனக்கு நங்கையாதானே,அவங்க  வகையில் ஒருத்தி  அமெரிக்காவில் இருக்கா, என்னமோ பெரிய படிப்பு படிக்கறாளாம், மூக்கும் முழியுமா நல்லத்தான் இருப்பா, நிறந்தான் மட்டு எதுக்கும் சாதகம் வாங்கட்டா ? என்றார்.

நான் ’’இல்லீங்க  ஆத்தா அவன் இன்னும் படிச்சுட்டு இருக்கான் 2 3 வருஷம் போகட்டும்’’ என்றேன் ஆத்தா விட்டால் அப்போதே நிச்சயதார்த்தம் கூட செய்து முடித்திருப்பார்

லாக் ஸ்கிரீனில் இருக்கும் அந்த ஹாலிவுட் நாயகன் பக்கவாட்டில் திரும்பி சிரித்துகொண்டிருக்கும் அந்த புகைப்படத்தை சமீபத்தில்தான் என் அலைபேசியில் தருண்  வைத்து கொடுத்தான், கல்லூரி காலத்திலிருந்து நான் அவரின் ரசிகை.ஆத்தா சொன்னதுபோல மூக்கு ரொம்பவே ஸ்பெஷல்தான் அந்த நடிகருக்கு

நல்லவேளை ஹோம் ஸ்கிரீனில் இருக்கும் புதிய பாதைக்காரரை ஆத்தா பார்க்கவில்லை, பார்த்திருந்தால் இவனாரு இளையவனா? என்று கேட்டு அவனுக்கும் ஒரு பெண்பார்த்திருப்பார்

என் பெயர் லோகமாதேவியல்ல, சரண்-நிறைவு

2005ல் ஒரு வயதான தருணையும் சரணையும் அழைத்துக்கொண்டு விஜியின் திருமணத்தின் பொருட்டு ஒரேயடியாக இந்தியா வந்த பின்னர் அவனை பள்ளியில் சேர்த்தோம். பள்ளி அவனுக்கு எட்டிக்காயாகவே இருந்தது. பள்ளியில் அவன் அலறும் குரல் எனக்கு அடுத்த தெருவை தாண்டும் வரை கேட்கும், நானும் கண்ணீருடன் வீடு வருவேன்.அவனுடன் சேர்ந்து புத்தகங்களுக்கு மணிக்கணக்காக அட்டை போடுவது பளளி பெற்றோர் ஆசிரிய கூட்டங்களுக்கு  கல்லூரியில் அனுமதி வாங்கி அடித்து பிடித்து போவதுமாக  சரணுடன் நெருக்கமாக இருந்த நாட்களவை

 இந்த வேடசெந்தூர் வீட்டை கட்டிக் கொண்டிருக்கையில் கல்லூரி முடிந்து பேருந்தில் மாலை மூவருமாக பொள்ளாச்சியில் இருந்து வேடசெந்தூர் வந்துவிட்டு பின்னர் திரும்ப  இரவு பொள்ளாச்சி வருவோம். பொள்ளாச்சி வீட்டில் இருக்கவே முடியாதபடி நெருக்கடிகள் அளித்தவர்களுக்கு நான் எப்போதும் நன்றி சொல்லுவேன் அத்தனை நெருக்கடிகள் இல்லாதிருந்தால் இந்த வீட்டை கட்டி இருக்கவே மாட்டேன்.

அப்படி ஒருநாள் வேடசெந்தூர் வந்துவிட்டு காரில் விஜியுடன் 14 கி மீ கடந்து பொள்ளாச்சி சென்று,  வீட்டு வாசலில் வண்டியை நிறுத்திய பின்னர் அத்தனை தூரம்  என்னருகில் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த என்னருகில் நின்று கொண்டே பயணித்த சரண் காலடியில் இருந்த ஒரு பெரிய பாம்பொன்று சரேலென வெளியே சீறி பாய்ந்தது. அது விஷம் உள்ளதா இல்லையா என்றெல்லாம் பார்க்க  சந்தர்ப்பமே வாய்க்க விலை.அது சரணை எதுவும் செய்யாமலிருந்தது தெய்வாதீனம்தான்.

விஜி.வண்டி ஓட்டுகையில் அதை பார்த்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்கும் சாத்தியங்களும் இருந்தன

அதுபோலவே ஏதோ ஒரு பரீட்சைக்காக சென்னைக்கு அவனையும் அழைத்துக்கொண்டு போயிருக்கையில் அபயம் அத்தையின் வேளச்சேரி  வீட்டில் முன்பக்கம் சரண் வெகுநேரம் விளையாடிக்கொண்டிருந்தான்.

எதற்கோ அவனை நானழைத்து, அவன் அங்கிருந்து விலகி என்னை நோக்கி நடக்க துவங்கிய மறு நொடி  போர்டிக்கோவில் மேல்பக்கம்  பதித்திருந்த கனத்த ஓடுகள் சில கீழே விழுந்து நொறுங்கின.

அங்கேதான் சரண் அத்தனை நேரம் நின்றிருந்தான்.எனக்கு திகைப்படங்கவே நெடு நேரமாயிற்று

அவனுடன் எதோ தெய்வனுக்ரஹம் இருக்கிறது என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். அவனுடன் மட்டுமல்ல ஆதரவற்றவர்களுடன் எப்போதும் அறியாத்தெய்வமொன்று எப்போதும் துணையிருக்கும், திக்கற்றவர்களுக்கு தெய்வமன்றி வேறு என்ன துணையிருக்கும்?  எங்களுக்கு இருந்தது,  இருக்கிறது. இருக்கும்.

சரண் சாந்தி பள்ளியில் படிக்கையில் 6 அல்லது 7ல் என்று நினைக்கிறேன். அவன் பள்ளியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது மாலை வரும்படி. என்னவாக இருக்கும் எதேனும் புகரா என்று யோசித்தபடியே சென்றேன்

முதல்வரின் அறையில் அமரவைத்து சரண் கலந்து கொண்ட ஒரு போட்டியில் தென்னிந்தியாவில்  முதலிடம் பிடித்ததற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு தங்கப்பதக்கமும் கணிசமான ஒரு தொகைக்கு காசோலையும் வந்திருந்தது

 அந்த போட்டித்தேர்வுக்கும் அதன் பின்னரான 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு வரைக்குமே அலட்டிக்கொள்ளாமல் வீட்டில் தயாராகாமல்தான் சென்றான் பின்னர் மற்றொரு தேசிய அளவிலான போட்டியில் அதே வகுப்பில் தங்கப் பதக்கம் பெற்று மாநில அளவில் சிறந்த  மாணவன் என்னும் சான்றிதழ் சென்னை எஸ் ஆர் எம் கல்லுரியில்  வைத்து ஒரு பெரிய விழாவில் ஒய் எஸ் ராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் எப்போதும் இருக்கும் சின்மயா பள்ளியின் ஆகச்சிறந்த கௌரவ் விருதும் காசோலையும் 12 ம் வகுப்பில் சரணுக்கு வழங்கப்பட்டது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழக  சான்றிதழையும் தங்கப்பதக்கதையும் வைத்துக்கொண்டு  சரண் நின்றிருக்கும் புகைப்படத்தை தினமலர் அலுவலகத்தில் கொடுக்க மகாலிங்கபுரம் வீதிகளில் நான் தன்னந்தனியே  நடந்து சலித்து அலுவலகத்தை  கண்டுபிடித்து அதை அடுத்த நாள் நாளிதழ்களில் வரவழைத்தது.

பின்னர் தருணும் அவனுமாக வாங்கிய  தங்கப்பதக்கங்கள்  எல்லாம் ஒரு வட்டப் பெட்டியில் கொட்டிக்கிடக்கின்றன. சாத்வீகியாக சாந்த ஸ்வரூபியாக இருந்த சரணை குறும்பனாக மாற்றிய பெருமை அவன் இளவல் தருணையே சேரும்.

தருணும் சரணுக்கு இணையாக படிப்பில் சுட்டி  அவனை தினம் மாலை பள்ளியில்  கண்டுபிடித்து காரிலேற்றுதே பெரும்பாடு.

 சரணை குறித்த பதிவென்பதால்  இதில் தருணை குறித்து அதிகம் எழுதவில்லை  அண்ணன் மீது மாளாநேசம் கொண்டவன் தருண், அவன் பள்ளிக்கு செல்ல துவங்கியிருக்காத,  சரண் கேஜி வகுப்புகளுக்கு சென்ற காலங்களில்  தினம் அண்ணன் வரும் ஆட்டோவை மாடியிலிருந்து பார்த்ததும் குதித்து கும்மாளமிடுவான்.

மாலை வீட்டுக்கு வரும் அவனுக்கு ஷூ சாக்ஸ் கழட்டி பணிவிடை செய்வது தினம் தினம் தருந்தான்,சரணுக்கு  உடல்நிலை சரியில்லாத நாட்களில்  நான் மருத்துவமனை செல்ல ஆட்டோவுக்கு போன் பண்ணுகிறென் என்றால் உடனே குட்டி தருண் ஓடிபோய் சரணுக்கு இரண்டு செட்  உடை, தண்ணீர்பாட்டில் ஆகியவற்றை ஒரு பையில் எடுத்து  வைத்து மருத்துவமனைக்கு தயாராகிவிடுவான். லகஷ்மணன் கூட ராமனுக்கு இத்தனை அனுசரணையாக இருந்திருக்க மாட்டான்

சரணை பள்ளியில் ஒரு பையன் அடித்து விட்டான், சரண் தேமே என்று அடி வாங்கிக்கொண்டு வந்தான், ஆனால் மறுநாள் அண்ணனை அடித்தவனை தருண் அடித்து ஒரு புதருக்குள் தள்ளிவிட்டு அந்த விசாரணைக்கு நான்  பள்ளிக்கு விடுப்பெடுத்து செல்ல வேண்டி வந்தது. 

கார் வாங்கிய பிறகு மாலை வேளைகளில் நானே அவர்களை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன் கடைசி பீரியட் வகுப்பு முடிந்ததும் சாக்பீஸ் படிந்த கைவிரல்களும் கலைந்த தலையுமாக  பள்ளிக்கு வரும் என்ன பார்த்து அங்கே முன்கூட்டியே  வந்து அமர்ந்து குடும்ப கதை பேசிக்கொண்டும் டப்பர் வேர் வியாபாரம் செய்துகொண்டும் இருக்கும் மேல்தட்டு பெடிக்யூர் மெனிக்யூர் செய்த ஒப்பனை கலையாத அம்மாக்கள்’’ இதான் சரண் தருண் அம்மா’’ என்று என்னை காட்டி  உயர்வாக பேசிக்கொள்ளுவர்கள்.

பெற்றோராசிரிய  கூட்டங்களில் மூன்று பள்ளிகளிலும் இருவரைக்குறித்தும் ஒருபோதும் ஒரு புகாரும் சொன்னதில்லை.இருவரும் 12 ம் வகுப்பு வரைக்கும் எந்த ட்யூஷனுக்கும் சென்றதில்லை.

இருவரும் மிக சிறுவர்களாக இருக்கையில் தெருமுனையில் மூவருமாக  நின்று போக்குவரத்தை மணிக்கணக்காக  பார்த்துக்கொண்டிருப்போம். கார் ஒருத்தருக்கு, பஸ் ஒருத்தருக்கு, பைக் ஒருத்தருக்கு என்று எங்களுக்குள் பிரித்துக்கொண்டு யாருடைய வண்டி அதிகம் கடந்து செல்கிறதோ அவர்கள் வெற்றியாளர்கள் என்னும் விளையாட்டு விளையாடுவோம். அப்பா அம்மா சகோதர சகோதரிகள் அனைவராலும் கைவிடப்பட்டிருந்த புறக்கணிக்கப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது எனினும் எங்களின் அந்தரங்க வாழ்வை நாங்களே அன்பினால் நிறைத்து  ததும்பிக்கொண்டோம்.

பள்ளி விடுமுறைகளும் கல்லூரி விடுமுறைகளும் வேறு வேறு  சமயங்களில் இருக்குமென்பதல் மகன்களை பெரும்பாலும் வீட்டுக்குள் விட்டு கதவை பூட்டிவிட்டு செல்வேன் ஹால் முழுக்க செய்தித்தாள்களை பரப்பி அதில் உணவை எடுத்து வைத்திருப்பேன் மாலை திரும்ப வந்து மூவருமாக வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பார்ப்போம்.

அப்போதிலிருந்து கல்லூரி பள்ளி விடுதிக்கு போகும் வரை சமையல், துணி துவைத்து காயப்போடுதல், பாத்திரம் தேய்த்தல், அம்மிக்கல்லில் அரைத்தல்,  தோட்ட செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் என்று எதுவாகினும் மூவரும் சேர்ந்தே செய்வோம், எங்களுக்குள் நல்ல புரிதலும் அதனாலேயே உண்டாகியிருந்தது.

அந்த நாட்கள் கனவு போல கலைந்து மறைந்து போய்விட்டது, அக்காலத்தை  நான் இப்போதும் நினைத்து ஏங்குகிறேன். பள்ளிக்கு அவர்கள் வேனில் செல்ல துவங்கிய போது. அவர்களை அனுப்பி விட்டே நான் கல்லூரிக்கு புறப்படுவேன். பள்ளியின் மஞ்சள் நிற வேன் கண்ணுக்கு தெரியும் வரை தாத்தாரப்புச்சி மரத்தின்  புடைத்த வேரில் அமர்ந்து வெண்முரசு கதை கேட்டபடி காத்திருப்பார்கள்.

கண்களில் வெண்முரசு கனவென மிதக்க சரண் வேனில் ஏறிச்செல்வான்

 சின்மயா பள்ளியில் சரணுக்கு துவக்கக்தில் விருப்பமின்றி இருந்தது, அக்காலத்தில்  ஏகத்துக்குமழுகை.பின்னர் சரியாகி சின்மயா இப்போது அவன் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டிருக்கிறது.

மாதா மாதம் அவர்களை  காணச் செல்லும் ஞாயிறுகளில் அதி்காலை எழுந்து அவர்களுக்கு பிடித்ததை சமைத்து  ஓட்டமாக ஓடி பள்ளிக்குச் செல்வேன். கோவை நகருக்கு சிலநாட்களில் செல்வதுண்டு, பலநாட்கள் பள்ளிக்கு வெளியே   சாலையோரம் இருந்த கொடிக்கம்ப படிகளிலமர்ந்து வெண்முரசு கதையை நாள்முழுக்க கேட்டுவிட்டு உணவை காரில் சாப்பிட்டு விட்டு  மாலை பள்ளியில் திரும்ப கொண்டு விட்டு விட்டு  இருக்கிறேன் வெண்முரசு மகன்களுடன்  கூடவே வளர்ந்துவந்தது.

பள்ளி முடித்து கல்லூரிசேர்க்கைக்கு அவனுக்கு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தது. வேலூர் வெய்யில் என்பதால் எனக்குஅவனை அங்கு அனுப்ப பிரியமில்லை. ஆரவல்லி மலைத்தொடரருகில் ஒரு பல்கலைக்கழகத்தில் உபகாரச்சம்பளத்துடன் அனுமதி கிடத்தது அந்த நேர்முகத்தில் சரணிடம்’’ நீ வாங்கிய விருதுகளில் எதை உயர்வாக சொல்லுவாய்’’ என்னும் கேள்விக்கு நான் எந்த வெற்றியை அடைந்தாலும் அது என் அம்மாவின் முகத்தில் உருவாக்கும் புன்னகைக்கு மேலான விருதை இன்னும் தான் பெறவில்லை என்று சொன்னான்.

பல இடங்களில் இடம் கிடைத்தும் அம்ரிதா ஒரு பெருங்காட்டைப்போல் இருந்ததால் அங்கேயே சரண் சேரட்டும் என விரும்பினேன் .

அம்ரிதா கல்லூரியில் விடுதியிலிருந்து வாரமொருமுறை சரண் வருகையில் நான் பேருந்தில் அவன் வரும் வரை தெருமுனையில் காத்திருப்பேன் அவன் வந்ததும்  அவனது பையின் கைப்பிடியை இருவரும் ஆளுக்கொன்றாக பிடித்துக்கொண்டு மெல்ல நடந்து வீடுவருவொம் மீண்டும் ஞயிறு பேருந்துநிலையம் வரை அவனுடன் பேசிக்கொண்டு சென்று 3.30 மணி பேருந்தில் அனுப்பி வைப்பேன்

சரண் என்னைப் போலில்லை நான் எப்போதும் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவள் ஆனால் சரண் தர்க்க ரீதியாகவே எல்லாவற்றையும் பார்ப்பவன். மிகுந்த ஏழை மனம் கொண்டவன் ஆனாலும் வரம்புகளுக்குட்பட்டே அவனது மனம் இயங்கும் இதை பல முறை கண்டிருக்கிறேன்.

அவன் படித்த அம்ரிதா பல்கலைக்கழகத்தில் அசைவம் வளாகத்தில் எங்குமே உண்ணப்படக் கூடாதென்னும் கடுமையான நெறி இருந்தது.ஆனாலும் சில மாணவர்கள் திருட்டுத்தனமாக அசைவ உணவுகளை கொண்டு வந்து விடுதியில் சாப்பிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு பருவம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதும் நடந்தது. சொந்த வாகனங்களில் வருபவர்களை சோதைனையிடமாட்டார்கள் என்பதால் அப்படி வரும் நண்பர்களின் வாகனங்களில் அசைவ உணவுகளை விடுதிக்குள் கொண்டு செல்வதும் நடக்கும். 

நானும் சரணும் ஒரு ஞாயிறு மாலை விடுதிக்கு சரணை கொண்டு விட போயிருந்தபோது நுழைவு வாயிலிலேயே இருக்கும் ரயில்வே கிராஸ் அடைக்கப்பட்டிருந்தது,அப்போது சரணுக்கு பரிச்சயமில்லாத ஒருவன் வந்து சரணிடம் தன்னிடம் அசைவ உணவு இருப்பதாகவும் காரில் ஏறி விடுதி வரை வரட்டுமா என்றும் கேட்டான் சரண் உடனடியாக அதில் அவனுக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டான் அந்த சரண் வயதே இருக்கும் பையன் விலகி சென்று விட்டான். எனக்கு என்னவோ மனக்கஷ்டமாகி விட்டது ’’ஏண்டா அவன் எப்படியும் சாப்பிட போறான் நம்ம காரில் கொண்டு போய் இறக்கி விட்டா என்ன’’ என்றேன்.

’’நாம ஒரு அமைப்புக்குள் இருக்கோம்னா அதன் நெறிகளுக்கு கட்டுப்பட்டு உடன்பட்டுத்தான் அதுக்குள்ள இருக்கனும். அம்ரிதாவில் யாரும் அசைவம் சாப்பிட வேண்டாம்னு சொல்லலை அந்த கேம்பஸில் சாப்பிடாதீங்கன்னுதான் சொல்லறாங்க. ஞாயிற்றுக்கிழமையே  அவன் வரனும்னு இல்லை அவன் நல்லா அசைவம் சாப்பிட்டுட்டு திங்கட்கிழமை காலையில் கூட 9 மணிக்கு முன்னாடி வந்துருக்கலாம், திருட்டுத்தனமா கொண்டு வந்து விடுதியில் சாப்பிடறதும் மத்தவங்களுக்கு இப்படி சாப்பிட கொடுக்கறதும் அமைப்பின் விதிகளுக்கு எதிரானது, இங்கு சொல்லப்படும் கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு மாறா ஒருத்தன் நடக்கும் போது அதில் நானும் பங்கெடுத்துக்கனும்னு அவசியம் இல்லை. நான் அப்படி ஒரு போதும் செய்யவும் மாட்டேன் மேலும் என் பேர் யாரு எது சொன்னாலும் கேட்டுக்கற லோகமாதேவியும் இல்லை சரண் ‘’ என்றான் அவன் சொன்னதின் நியாயங்கள் பிறகு எனக்கு புரிந்தது.

பள்ளியில் ஒரு பெரும் செல்வந்தரின் மகன் ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பள்ளியை விட்டு நீக்கப்பட்டபோதும் அவன் செல்வசெருக்கில் செய்த அந்த தவறை சரணால் மன்னிக்கவே முடியவில்லை. இப்படி பல விஷயங்கள் அவன் ஆளுமையை எனக்கு உணர்த்தி இருக்கின்றன.

சரண் வேர் கொண்டவன் தருண் சிறகு கொண்டவன். ஐரோப்பா செல்லும் முன்பு விமான நிலையத்தில் அவன் கண்ணிருடன் கண்ணாடி தடுப்பிற்கு அப்பால் நின்ற சித்திரம் கண்ணிலேயே இருக்கிறது.

இன்னும் சில வருடங்கள். பின்னர் அவன் நல்ல குடும்ப வாழ்வில் இருப்பதை பார்த்துவிடலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

சரன் தருண் திருமணங்களின் போது விழாவிற்கு வரும் உறவினர்களின் பார்வையில் படும்படி மலர்களும் ரிப்பனும் அமைக்கப்பட்டிருக்கும் உயர்ரக காரும், இடுப்பிலும் கையிலும் ஒட்டியாணம் வங்கியுமாக பொன்னால் ஜொலிக்கும் மருமகளும் எனக்கும் சரணுக்கும் தருணுக்கும் வேண்டியதில்லை காரும் பணமும் வசதியும் எல்லாம் இருந்தும் தோல்வியுற்ற பல தாம்பத்தியங்களை மகன்களும் என்னுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை தாயின் பரிவுடன் அன்புசெலுத்தி பார்த்துக்கொள்ளும் அவர்களைப்போன்ற  ஆண்மகனின் முழு அன்புக்கும் பாத்தியமான,அவர்களின் மனதுக்குகந்த எளிய குடும்பப் பெண் போதும்.

பல வருடங்களுக்கு முன்னர் சரணை மசானிக் மருத்துவர் பரிசோதித்து அவன் நல்ல இயற்கை சூழலில் ஓடியாடி விளையாடினால் போதும் என்று சொன்ன பின்னர் தான் இந்த வீட்டைகட்ட முனைத்தேன். இங்கு வந்ததிலிருந்து படிப்படியாக குணமாகி ஆரோக்கியமான இளைஞனாக இன்று வளர்ந்து 23 வயதை தொட்டிருக்கிறான். சரணையும் தருணையும் வளர்த்திய காலத்து கஷ்டப்பாடுகளனைத்துமே இப்போது கனவென மாறிவிட்டன.

சரண் 11ல் படிக்கையில் நான் பாண்டிச்சேரிக்கு ஒரு சிறுகதை பட்டறைக்கு செல்ல வேண்டி இருந்தது. அதன்பொருட்டு அவன் தலையிட்டு பேசத்துவங்கிய பின்னர் என் பொறுப்பை, என் வாழ்வை முழுக்க அவன் கைகளில் எடுத்துக்கொண்டான். அன்றிலிருந்தே என் சுதந்திரத்தை என்னால் உபயோகிக்க முடிந்தது.எல்லைகளை தாண்டாமல் அவற்றை  உணர்ந்து அதற்குள் என்னால் இப்போது விரும்பும் உயரம் வரை பறக்க முடிந்திருப்பது சரண் மற்றும் தருணால் மட்டுமே.

நான் மகன்களுக்கு உயிர்கொடுத்தேன் என்றால் அவர்களும் என்னை எல்லாவற்றிலும் இருந்து விடுவித்து என்னையும் மீண்டும் புதிதாக பிறக்க செய்திருக்கிறார்கள் சரணும் தருணும்  எனக்கு மகனும் அன்னையும் தந்தையும் நண்பனுமானவர்கள். இருவருக்கும் என் அன்பும் ஆசிகளும் எப்போதும்.

என் பெயர் லோகமாதேவி அல்ல , சரண் -2

சரணுக்கு நான் சொல்லி ச்சொல்லி வசந்த சார் மீது அளவற்ற மதிப்பும் பிரியமும் இருந்தது. இடையிடையே இந்தியா வரும்போதெல்லாம் தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளின் பொருட்டொ சரணுக்கு ஊசி போட வேண்டி வந்தால் ஒருபோதும் வசந்த அதை செய்ய மாட்டார் ’செல்ஸ்’ என்று குரல் கொடுப்பார் செலினாதான் போடுவார்கள்.சரணுக்கு இன்றும் ஊசி என்றால் குலை நடுங்கும்.  ஒரு முறை மைசூரு சென்று வந்த போது வசந்த சாருக்கென சிறு கள்ளிச்செடி வாங்கி வந்து பரிசளித்தான் அதையும் அவன் பரிசளித்த ஒரு குட்டி பொம்மையையும் அவர் தனது மருத்துவமனை மேசையில் பல காலம் வைத்திருந்தார்.

அபுதாபியில் ஒருநாள் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த ஒரு பெண்னின் சகோதரியின் கணவர் காலமாகி விட்டார் என்று கேரளாவிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பிற்கு அந்த பெண் என்னை ’சேச்சி’ என்று கட்டிக்கொண்டு கதறியபோது சரண் அரண்டு போய் ’’என்ன என்ன’’ என்று அழுகையுடன் கேட்டான். ’’இந்த அத்தையின் சொந்தக்காரர் செத்துப்போயிட்டாரம் சரண்’’ என்று நான் சொன்னதும் அவன் என்னைக் கட்டிக்கொண்டு ’’அதான் வசந்த் டாக்டர் இருக்காரில்ல அவர் காப்பாத்துவாரு காப்பாத்துவாரு, அழுகாதே’’ என்று வீறிட்டான். இதை என்றைகாவது வசந்த் சாரிடம் சொல்லவேண்டும் என்றிருக்கிறேன்.

ஒருமுறை ஜெயந்தி கிருஷ்ணசாமி தம்பதிகளுடன் முஸாஃபாவிலிருந்து அபுதாபிக்கு சென்றிருக்கையில் இரவில் கார் கதவின் கண்ணாடி வழியே பிறைநிலவை பார்த்தபடி ’’அம்மா பாதி நிலா இங்கே இருக்கு மீதி நிலா எங்கே இருக்கு’’? என்றான் கவிதையாக.

சுட்டி விகடனில் வரும் சின்ன சின்ன போட்டிகளை அவனுக்கு சொல்லி புரியவைத்து, அவன் சொல்லும் பதில்களை விகடனுக்கு எழுதிப் போடுவேன் அப்படி ஒரு புதிர்ப்போட்டி பதிலுக்கு அவனை ’’குட்டி ஷெர்லக் ஹோம்’’ என்று சொல்லிய ஒரு சான்றிதழ் வந்தது.

விகடன் படித்துமுடித்துவிட்டால் மேலும் கதைகள் கேட்பான் எனவே நானே இட்டுக்கட்டிய கதைகளை தொடர்ந்து சொல்லுவேன். தட்டிக்கொடுப்பதையும் கதையையும் எப்போது நிறுத்தினாலும் விழித்துக்கொண்டு மீண்டும் சொல்லச் சொல்லுவான்.

கணினியில் எளிய விளையாட்டுக்களை என்னுடன் சேர்ந்து என் கைகளின் மீது அவன் சிறு கையை வைத்து அவனும் விளையாடுவான். கணினி அவனுக்கு மிக பரிச்சயமானதும்  பிடித்தமானதுமாகிக்கொண்டிருந்தது.

அருகிலிருந்த  ஏர்போர்ட் பார்க்குக்கு மாலைவேளைகளில் அவனை அவன் தோழிகள் சியா சிது அல்லது நவ்யா ஆகியோரின் குடும்பத்துடன் அழைத்துச் செல்வதுமுண்டு.சியா சிது குடும்பத்தினர் மாப்ளா முஸ்லிம்கள் எங்களுடன் வீட்டை பகிர்ந்துகொண்டிருந்தனர். என்னை ’மூத்தம்மே’ என்றழைக்கும் சியாவுக்கும் சரணுக்கும் மிகபிடித்தமான விளையாட்டு வீட்டில் இருக்கும் பெரிய காலி அட்டைப்பெட்டிகளுக்குள் அமர்ந்துகொள்வது.

முஸாஃபாவில் அப்போதுதான் அமைந்திருந்த கேரிஃபோர் பிரம்மாண்ட மாலுக்கு முதன்முறை சென்றிருக்கையில் அங்கிருந்த கூட்டத்தில் சரண் தொலைந்து போனான் வளாகம் முழுக்க அனைத்து தளங்களிலும் அறிவிப்பு செய்த பின்னர் எங்கிருந்தோ அலமாரிகளுக்கிடையில் விளையாடிக்கொண்டிருந்தவனை  அரபி ஒருவர் கண்டுபிடித்து கொண்டு வந்தார்.

அதே கேரிபோரில் தள்ளுவண்டியில் முன்பக்க கூடையில் சரண் அமர்ந்துகொண்டிருந்த ஒருநாளில் அமைதியாய் கூடையில்நான் எடுத்துப்போடும் பொருட்களை பார்த்தபடி வந்துகொண்டிருந்தவன் ஃபேர் அண்ட் லவ்லி எடுத்துபோடப்பட்டதும் அலறி ’’இது வேண்டாம் வேண்டாம்’’ என அழதுவங்கினான்

அவனை என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவில்லை ’’இது அம்மா முகத்துக்கு போடறதுக்குடா’’ என்றபோது வீறிடுதல் இன்னும் அதிகமானது.. பின்னர் அதை எடுக்கவேயில்லை.

அடுத்த வெள்ளியன்று மாலை சன் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கையில் ஃபேர் லவ்லி விளம்பரம் வந்தது. ஆறே நாட்களில் சிகப்பழகு என்னும் அந்த விளம்பரப்பெண்ணின் முகமாறுபாடுகள் அடுக்கடுக்காக காண்பிக்கப்பட்டபோது சரண் அச்சத்துடன்  ’’அம்மா பாத்தியா அந்த க்ரீம் போட்டா உனக்கும் இப்படி நிறைய மூஞ்கி வந்துரும் அப்புறம் உன்னை பார்த்தா எனக்கு பயமாயிரும்’’ என்றான்.

அவன் பிரியதுக்குரியவளாக ரீமா சென் இருந்தாள். சாப்பிட அடம்பிடிக்கும் சரணுக்கென்றே அவளின் ’’மே மாதம் 98ல்’’ பாடலை பதிவு செய்து வைத்திருந்தேன். ரயில் நிலையத்தில் ரீமா சென் கனத்த தொடைகளை தட்டிக்கொண்டு குதித்தாடதுவங்கினால் சரணும் வாயைத்திறந்து பார்ப்பான் மட மடவென்று சாதம் ஊட்டி முடித்துவிடுவேன்

என் பெயர் லோகமாதேவியல்ல. சரண்-1

 இன்று சரணின் 23 ம் பிறந்த நாள் காலம் எத்தனை வேகமாக ஓடி விட்டது என்று நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. அபுதாபியில்  உஷா என்னும்  அரபி பேசத்தெரிந்த அண்டை வீட்டுப் பெண்ணுடன் அரசாங்க மருத்துவமனைக்கு சென்று  கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு டாக்ஸியில் வீடு திரும்பிய நாள் நேற்று போல நினைவிலிருக்கிறது.

சரண் வயிற்றில் இருக்கையில் அவனுக்கு போஷாக்கான உணவுகள் என் வழியே அளிக்க முடிந்ததில்லை என்னும் மனக்குறை இன்றும் இருக்கிறது என்றும் இருக்கும். இளம் வயதில் அவனது உடல்நிலை சரியில்லாமல் போகும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த குற்ற உணர்ச்சி என்னை கொல்லும்.

தாம்பத்யத்தின் துவக்க கால சிடுக்குகளில் சிக்குண்டு இருந்த காலத்தில் சரண் உருவாகி இருந்தான். படிப்பு, வேலை ,கனவுகள், உற்றார் உறவுகள் என அனைத்தையும் விட்டுவிட்டு கண்காணாத பாலை நிலத்துக்கு வந்த அதிர்ச்சியே விலகாத நிலையில் கர்ப்பம் அதுசார்ந்த உடல் கோளாறுகள் அதீத பசி, சமைக்க முடியாமல் இருந்தது உதவிக்கு மட்டுமல்ல மனம் விட்டு பேசவும் யாரும் அருகில் இல்லாதது பொருளாதார சார்பு, இப்படி பல சிக்கல்கள் என்னை சூழ்ந்திருந்தன. வார இறுதிகளில் வீட்டில் இருப்பவர்களுடன் பேசுகையில் எனக்கு அவர்களிடம் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இருந்ததில்லை. ஆனால் எந்தபூகாரும் இன்றி என்னை எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொடுthதுக்கொண்டு வாழத்துவங்கி இருந்தகாலமது

வயிற்றில் சரண் துடிப்பை உணர ஆரம்பித்த நாட்களில் நான் மெல்ல மெல்ல மாறினேன், எனக்குள் ஒரு உயிர் வளர்வது பெரும் நம்பிக்கையை பொறுப்பை பிடிப்பை வாழ்வின் மீதான விருப்பை மீண்டும் அளித்தது.

 எனக்கு என்னை நம்பி  என் வயிற்றில் ஓருயிர் என்பதுவும் என்னால் ஒரு உயிரை தரமுடியும் என்பதுவும் பெரும் உத்வேகத்தை அந்த சிக்கலான சமயத்தில் அளித்தது

சரணுக்கு நானும் அவன் எனக்கும் பரஸ்பரம் உயிர்கொடுத்துக்கொண்டோம் என்றும் சொல்லலாம்..

அச்சமயத்தில் எனக்கு மிகth தேவையாயிருந்த ஓய்வும்  பொருளாதார  காரணங்களுக்காக உடன் தங்க அனுமதித்திருந்த மற்றொரு  குடும்பத்தினால் முற்றிலும் இல்லாமல் போயிருந்தது. கொடுங்கனவு போலான நாட்கள் அவை.

கிருஷி விஞ்ஞான் கேந்திரா வின் மூலம் கிடைத்திருந்த சணல் ஆய்வு மையத்தின் சயின்டிஸ்ட் பணியை குடும்பத்தினரால் இழந்து கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து , அதையும்  கல்யாணத்தின் பொருட்டு ராஜி வைத்துவிட்டு வந்த இழப்பின் வலி எப்போதும் இருந்த நாட்கள் அவை. கல்யணத்துக்கு முன்பு கல்லூரியில் சேர்ந்த பிறகு  எழுதவும் துவங்கி இருந்தேன். ஆதித்தனார் நினைவு போட்டிக்கென சரக்கொன்றை என்னும் முழுநாவலை கைப்பட எழுதி முடித்து அதை தட்டச்ச காத்திருந்தேன். நான் இழந்த பலவற்றிலதுவும் ஒன்று.

கண்ணில் பசுமையே தட்டுப்படாமல் உள்ளும் புறமும் வெறிச்சோடியிருந்த பாலைவாழ்வு. மணற்புயல்  ஏஸி  அமைப்பின் வழியே வீடங்கும் அடிக்கடி மண்ணை நிறைத்துவிட்டு போகும் அதைச் சரிசெய்யக்கூட தோன்றாமல் மலைத்து போய் களைத்தமர்ந்திருப்பேன்.

குமட்டி வாயுமிழ்ந்துவிட்டு மீண்டும் சமைக்க வருவேன் இது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கெல்லாமே உண்டாவதுதான் எனினும் எனக்கு அருகில் உதவிக்கென  யாருமற்ற நிராதரவான நிலையென்பதால் எல்லாமே அதீதமாக இருந்தது. அப்போது எனக்கு அன்புடன் உதவி செய்ததாக நான் நினைத்த ஒரு பெண் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் தெரிய வந்தபோது தருண் பிறந்திருந்தான். அவள் வீட்டில் நான் கர்ப்ப காலத்தில் ருசித்து உண்ட  உணவின் ஒவ்வொரு பருக்கையும் மனதில் செரிக்கவே இல்லை.பிரசவத்துக்கு இந்தியா வந்தேன்.

விமான பயண தகுதியையும் கடந்து 9 மாதங்கள் முடிந்த நிலையில் போலியாக ஒரு பயண தகுதி சான்றிதழ் வாங்கி ஒரு வழியாக இந்தியாவுக்கு வர விமானபயணம் உறுதியானது.  அங்கு சென்றதிலிருந்து வியர்வை சுரக்காமல் கர்ப்பகால பருமனும் சேர்ந்து எடை கூடி விட்டிருந்தது ஆளும் உருமாறியிருந்தேன். அந்த 9 மாதங்களில் எனக்கு நிகழ்ந்தது ஆளுமைச்சிதைவென்று இப்போது நிதானத்தில் இருக்கையில் அறிய முடிகின்றது. 

என்னையும்  வயிற்றில் இருக்கும் குழந்தையையும் யாரோ எதோ செய்துவிடுவார்கள் என்னும் அச்சம் ஒவ்வொரு நொடியும் பீடித்திருந்தது யாரும் சாப்பிட  எதாவது கொடுத்தனுப்பினால் அவற்றை ரகசியமாக சின்க்கில் கழுவி ஊற்றி விடுவேன்.

கடும் பசியும் சில குறிப்பிட்ட உணவுகளின் பேரிலான பெரு விருப்பமும் அவற்றை உண்ண முடியாத ஏக்கமுமாக கழிந்த அந்த கர்ப்பகால ஆதங்கம் இன்னும் இருக்கிறது.

எப்பாடு பட்டாவது குழந்தையை, துர்கா என்று நான் பேர்  வைத்திருந்த மகளை காப்பாற்ற  வேண்டும் என்று சதா நினைப்பிருக்கும். இந்தியாவுக்கு பயணிக்கையில் அபுதாபி வந்து ராகவன் அகல்யா வீட்டில் தங்கி இருந்தேன் ஒரிரவு. அவர்களது சிறுமகனின் விளையாட்டு கார் பொம்மைகள் இனம்புரியா கிளர்ச்சியை உண்டாக்கின அச்சமயத்தில்

காலை விமானத்தில் தன்னந்தனியே வயிற்று குழந்தையை தடவிக்கொண்டு அமந்திருந்தேன். அம்மா வீட்டுக்கு  வருவதிலும் பெரிய ஆர்வமும் விருப்பமும் இல்லாமல்  இருந்தது, இருந்தும் தாம்பத்தியத்தில் இருக்கவேண்டிய அன்பு பாசம் காதல் இவற்றைக்காட்டிலும் சம்பிரதாயங்கள் முதன்மையாக கருதப்பட்டதால் தாய்வீட்டுக்கு செல்லவேண்டி வந்தது. ஒருவகையில் அந்த பாலையிலிருந்தும் ஓயாத பணிகளிலிருந்தும்  தற்காலிகமாகவேனும் விடுபட்டு வந்தது ஆசுவாசமாயிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதைதான் மீண்டும் நடந்தது

கோவை விமான நிலையத்தில் ஏதோ பழுது காரணமாக விமானம் ஒரு டன் செங்கல்லை போல்  டமாரென்று தரையிறங்கியதும் எனக்கு இடது பக்க முகம் முழுவதும் உணர்ச்சியற்று  மரத்துப்போனதுபோல ஆனது அச்சமயதில் அந்த பக்க பார்வையும் மங்கிவிட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு தான் மீண்டும் பார்வையும் முகமும் சீரானது.

விமான நிலையத்தில் அக்கா அம்மா அப்பா விஜி காத்திருந்தனர். அனைவருக்கும் என் உடல் எடை கூடியிருந்தது பெரும் திகைப்பை உண்டாக்கி இருந்தது.  

எனக்கு  முகத்தில் இப்படி நேர்ந்ததை  சொன்னந்தும் நேராக ஆல்வா மருத்துவமனைக்கே செல்ல முடிவானது.

ஆல்வா முதன்முறையாக நீங்க போய் பாபுவை பாருங்க என்றார்

பாபு என்றது அவரது மகன் மருத்துவர் வசந்தை

நான் வசந்தை குறித்து முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன் எங்களை விட சற்று மூத்தவர் அவரது சகோதரி மித்ராவின் பள்ளித் தோழி.

ஆனால் அவரை ஒருபோதும் சந்தித்ததே இல்லை.அதன்பிறகு பல நூறு முறை சென்று குடும்பத்தில் பலரும் உயிருடன் இருக்கக் காரணமாயிருந்த அம்பராம்பாளையம் மருத்துவமனைக்கு அன்றிரவு தான் முதன் முதலில் சென்றேன்.

வசந்த சார் அறையில் காத்திருந்தார். ஒரு ஸ்கேன் எடுத்து விட்டு அங்கே புதிதாக வந்திருந்த பெண் மருத்துவர் பிரசித் மரியா என்று நினைவு அவரை சந்திக்க சொல்லி ஒரு சிறு குறிப்பை எழுதித்தந்தார்.எதிரில் அமைந்திருந்த அவரின் அறைக்கு நான் அந்த குறிப்புடன்  அறையை விட்டு வெளி வருவதற்குள் மீண்டுமழைத்து அதில் தான் எழுதியிருந்த please see logamadevi my friend என்றிருந்ததை அடித்து  our family friend என்று எழுதிக்கொடுத்தார்.

செலினா என்னும் தாயைபோல் பிற்பாடு பல சந்தர்ப்பங்களில் என்னை கவனித்துக்கொண்ட செவிலியையும் அன்றதாதன் சந்தித்தேன். என்னை பரிசோதித்து விட்டு மருத்துவர் எல்லாம் நலமாக உள்ளது என்றும் ஸ்கேனில் ஒன்றும்  பிரச்சனை இல்லை என்று சொன்னதால் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னும் ஒருவாரத்தில் பிரசவம் ஆகிவிடும்  என்பதை மட்டும் கேட்டுக்கொண்டு வீடு திரும்பினேன்.

வெளிநாட்டில் இருந்து வந்திருந்ததால் பலர் என்னை வந்து பார்த்தார்கள். பலகாரங்கள் பூக்களால் நிறைந்திருந்தது வீடு

ஆசிரியர் ராஜ்குமார் சாரும் அவரது மனைவியும் எனக்கு பலகாரங்கள் வாங்கி வந்திருந்தனர் மாலை அப்பாவுடன் நடந்து போய் ஒரு இளநீரை நான் காசு கொடுத்து வாங்கி குடித்துவிட்டு வருவேன் சிலநாட்கள்

ஈரோடில் சிம்னி என்னும் ஹோட்டலில், வளைகாப்பு அதிலும் எனக்கு நினைவு வைத்துக்கொள்ளும்படியாக ஏதும் இல்லை. குடும்பத்து ஆண்களின் பெருமிதமும் அன்பும் காதலும் அறிவும் பண்பும் பல தலைமுறை தொடர்ச்சியாக வரவேண்டுமல்லவா எனவே எனக்கும்ஆண் குழந்தையாக பிறக்கட்டுமென்று  மடியில்  கொஞ்சம் வளர்ந்துவிட்டிருந்த இந்திரா அக்காவின் மகன் ப்ரதீப்பை அமரவைத்தார்கள்  இன்னும் மணமாகி இருக்காத பாப்பிக்காவை நேரிட்டு பார்க்க சங்கடப்பட்டேன் 

ருக்மணி அத்தை நீ படற பாட்டை பாத்தா இன்னும் ரெண்டு நாளில் பிரசவம் ஆயிரும் போலிருக்கே என்றார்கள்.

 மித்ரா  வழக்கம் போல பல பழைய விஷயங்களை மிகைப் படுத்திக்கொண்டு வழியெங்கும் கதறி அழுது  என்னையும் அழவைத்துக்கொண்டு வந்த அந்த இரவு கார் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு சிக்னலில் கார் காத்திருக்கையில் ஒரு இளைஞன் என்னவோ விற்பனை செய்ய வந்தான், பட்டுப்புடவை , பூவும் நகைகளுமாய் இருந்துகொண்டு  கண்ணீருடன் இருந்த என்னை பார்த்து திகைத்து விலகிச் சென்றான். 

அம்மாஅப்பா  நிறைகர்ப்பிணியாயிருந்த  என்னை எப்படி கவனித்துக்கொண்டார்கள் என்பதை நான் எழுத்திலும் குறிப்பிட விரும்பவில்லை

ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது குனிந்து நிமிர்ந்து வீட்டை பெருக்கினால் சுகப்பிரசவம் ஆகும் சிசேரியனுக்கு செலவும் குறையும் என்னும் அம்மாவின் நிர்தாட்சண்யமான கருத்துப்படி கூட்டி பெருக்கிக்கொண்டிருக்கையில் அந்த ஸ்கேன் ரிப்போர்டை எடுத்து வாசித்தேன் அதில் குழந்தையின் மூளை ரத்த நாளங்களில் ஒன்று விரிவடைந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. என்னிடம் அதை காண்பிக்காமல் வைத்திருந்திருக்கிறார்கள்.

ஈரக்குலை நடுங்குவது என்றால் என்னவென்று  அன்று உணர்ந்தேன் கதறி அழுது வீட்டுக்கு அப்பா விஜி வந்ததும் உடனே வசந்த் டாக்டரை பார்க்கவேன்டும் என ஆர்ப்பாட்டம் செய்து புறப்பட்டேன்.அப்பாவிடம் அப்போது அம்பாஸடர் கார் இருந்தது.

வசந்த சார் பொறுமையாக அன்று விமானம் தரையிறங்கிய அந்த அதிர்வில் இப்படி டைலேட் ஆகியிருக்கும் ஆனாலும் அதுவே சரியாகி இருக்கும் வாய்ப்புமிருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று தைரியம் கூறினார் அன்றிலிருந்து சரண்  நலமுடன் பிறந்த 4 ம் தேதிவரை அச்சம் என்னைநிழல் போல பின்தொடர்ந்தது

.

பிரசவத்துக்கு குறிப்பிட்ட  நாளும் கடந்துவிட்டதால் வசந்த் மருத்துவமனைக்கு வந்து தங்கிவிட சொன்னார்

கருப்பை சுருங்கி விரியும் அறிகுறி இல்லாததால் அதற்கான ஆக்சிடாசின் ஜெல் தடவியும் வலிவரவில்லை. தனா அக்கா உடனிருந்தார்கள் அறுவை சிகிச்சை என முடிவானது அறுவை சிகிச்சையை குறித்தும் முதல் பிரசவம் குறித்தும் எனக்கு சிறிதும் பயமேயில்லை சிசேரியனுக்கு ஆகும் செலவை எண்ணிக்கொண்டிருக்கும் அம்மாவை பார்க்கத்தான் பயமாயிருந்தது.

தலை பாதங்களில் படும்படி  முதுகை வளைத்து உச்சகட்ட வலியை கொடுத்த அந்த ஊசியை முதுகுத்தண்டுவடத்தில் செலுத்தி என் கண்களை கட்டியபின் அவர்களுக்குள் பேசிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்தார்கள். சரணின் அழுகுரல் கேட்டது. செலினா சிஸ்டர் காதில் பையன் என்றார்கள்.

நான் அம்மா ஆகிவிட்டேன் என்று அந்த அழுகுரல் எனக்கு உணர்த்தியது. ஆனால் வேறு ஏதும் நினைக்குமுன்பே மயக்கமானேன்,  பிறகு வெகுநேரம்  கழித்து என்னை ஸ்ட்ரெச்சரில் அறைக்கு தள்ளிக் கொண்டு போகையில் தான் தனாக்கா எனக்களிக்கப்பட்டிருந்த  அறை என் 8 என்பதை  கவனித்து செவிலியரை கடிந்துகொண்டு  வேறு அறை அளிக்க உத்தரவிட்டார்கள்

மயக்கமா உறக்கமா என்று தெரியாமல் சிலமணி நேரம் கழிந்தபின்னரே சரணை காட்டினர்கள் பூப்போல இருந்தான் கைவிரல்களை இறுக்க மூடியிருந்தான் கண்களும் மூடி இருந்தது மிகச்சிறிய சின்னஞ்சிறிய ஓருயிர், பசி பொறுக்கமாட்டான். 

அச்சமயம் ஒரு  அன்னையாகி இருப்பது என்னவென்று பெண்களுக்கு மட்டுமே புரியுமென்று நினைக்கிறேன்.அந்த பொங்கிப்பெருகும் உணர்வை எழுத்தில் கொண்டுவரமுடியாது 

மித்ரா குழந்தையின் கைவிரல்கள், நகம் ஆகியவற்றில் குற்றம் கண்டுபிடித்தாள் எனக்கு அவளை நினைந்து ஆச்சர்யமாக இருந்தது ஆறுமுகம் சார் சொல்லுவாரே  எஜுகேட்டெட்இல்லிட்ட்டெரேட் என்று.  மறுநாளே கொசுக்கடி, வசதிகுறைவான அறையின் உறக்கம் இவற்றின் பொருட்டு மாமா அழைத்து திட்டுகிறாரென்னும் வழக்கமான பொய்யை சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றாள்

அம்மா கணக்குப்போட்டது  போலவும் நான் பயந்தது போலவும் இல்லாமல் 13 ஆயிரம் ரூபாய்களே வசந்த சார்  கட்டணமாக கேட்டிருந்தார். இத்தனைக்கும்நானிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறைக்கும் இடையில் ஒரு கதவு இருந்ததால் அந்த அறையும் எங்களுக்கே வசந்த் சார் அளித்திருந்தார் எனவே இரண்டு அறைகளிலும் வசதியாக தங்கிகொண்டிருந்தோம். வசந்த் என்னும் மருத்துவரை மாமனிதரை குறித்தறிந்து கொள்ள துவங்கிய நாட்கள் அவை.

வீட்டுக்கு வந்தும் ஓய்வின்றி உடனே அபுதாபி புறப்பட ஆயுத்தங்கள் நடந்தன என்னை யாரும் ஏன் பச்சை உடம்புடன், அறுவை சிகிச்சை செய்துகொண்ட உடம்புடன் உடனே போகிறாய்? இத்தனை சிறிய குழந்தையை எப்படி வளர்ப்பாய் என்று கேட்கவில்லை நானும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு இரண்டுமே வாழ்விடங்கள் அல்ல வசிப்பிடங்கள் என்பது தெரிந்திருந்தது.

உன் உடல் முற்றிலும் கட்டுக்குலைந்து மாறிவிட்டிருந்ததைக்கூட வேறொருவர் சொன்ன பின்னர் கவனித்தேன். அதைகுறித்து எனக்கு புகாரெல்லாம் இல்லை நான் அந்த 1 வருடத்தில் எத்தனையோ மாற்றங்களுக்கு உள்ளாகி இருந்தேன் பலவற்றை இழந்திருந்தேன் குறிப்பாக என் சுயசார்பையும் தன்மதிப்பையும் எனவே உடல் மாற்றத்தை  ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை.

சரண் என்று பெயரிடுவதில் ஒரு சிக்கல் வந்தது ஆனால் நான் அந்த பெயர் வைக்க உறுதியாக இருந்தேன்,மருத்துவமனையிலேயெ பிறப்புசான்றிதழ் வாங்க வேண்டி வந்ததால் அப்பொழுதே பெயர் வைத்தாயிற்று.

அதே உடம்புடன் சரணை எடுத்துக்கொண்டு ஈரோடு செல்லும் சம்பிரதாயம் அங்கே தங்க வேண்டிய சம்பிரதாயம் அங்கிருப்பவர்களும் குழந்தையை பார்க்க வேண்டும் என்னும் சம்பிரதாயம்,

 பச்சை உடம்புக்காரிக்கும் பச்சிளம்சிசுவுக்கும் சில செளகரியங்கள் அடைப்படையான வசதிகள் தேவை பயணத்தை   என் உடல் தாங்குமா என்றெல்லாம் யோசிக்க யாருக்கும் நேரமும் மனமும் இல்லை.  காருக்கு எரிபொருள் போடுவதிலிருந்து மருத்துவ செலவு வரை அம்மா அப்பாவையோ சரண் அப்பாவையோ சார்ந்திருக்கும் புதிய  அவல நிலை என்னை கீழானவளாக உணரசெய்து கொண்டிருந்தது.

பத்திய சாப்பாடு, பால் ஊற சிறப்பு உணவு கருப்பை சுருங்க லேகியம் இவை எல்லாம் நான் இன்னும் கதைகளில்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு கிடைக்காதவைகள்  நானிழந்தவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக அளிக்க சரண் வந்திருக்கிறான் என்னும் ஒரே எண்ணம் மட்டும் ஆழப்பதிந்திருந்தது.

 அதே உடம்புடன் பச்சிளம்  சரணை எடுத்துக்கொண்டு கோவைக்கு அலைந்து பாஸ்போர்ட் எடுத்து  அவனுக்கு 21 நாள் ஆகி இருக்கையில் அவனை சரியாக பிடித்துக்கொள்ளக்கூட தெரியாத நான் கோவை  விமான நிலையத்திலிருந்து அபுதாபி சென்றேன்.

விமானத்தில் ஒரு மூத்த பணிப்பெண் அவன் தலையை  சேர்த்து பாதுகாப்பாக எப்படி பிடித்து கொள்வது என கற்றுக்கொடுத்தார்

இருக்கையிண் முன்பாக ஒரு சிறு தொட்டில், கடைகளில் எடை பார்க்கும் சில்வர் ட்ரே போல இருக்கும் அதில் வெல்வெட் போர்த்தப்பட்டிருக்கும், அதை என் முன்னே கொண்டு வந்து  வைத்தார்கள் அதில் சரணை படுக்க வைத்தேன் எனினும் விமானபயணம் எனக்களிக்கும் அச்ச்சத்தில் ஒருவேளை விபத்தேற்பட்டால் சரணும் நானும் தனித்தனியே பிரிய நேரிடும் என்று தீவிரமாக யோசித்து அவனை  மடியில் வைத்துக்கொண்டேன்.அவன் பசியாற்றவும் விமான இருக்கையில் பெரும் சிரமம் இருந்ததுஒருவழியாக  அபுதாபி சென்று சேர்ந்தேன்.

அபுதாபி வாழ்வில் தொடர்ந்த இருளிலும் சிறு சுடராக சரணே ஒளியேற்றிக்கொண்டிருந்தான்.

நல்ல உருண்டை முகமும் சுருட்டை தலைமுடியுமாக வளர துவங்கினான். டுட்டூ என்று எதோ ஒரு கதையில் வாசித்த பெயர் எனக்கு பிடித்து அதையே அவன்செல்லப்பெயராக்கினேன், விஜி அவனை டிப்பு குமார் என்று அழைப்பான்

அவனுக்கு அப்போது  நல்ல உணவுகள் அளிக்க முடிந்தது. தாய் பகை குட்டி உறவென்னும் நம் மரபு வேடிக்கையானது.

ஆனால் ஒரு வயதிருக்கையில அவனுக்கு எதனாலோ ஒவ்வாமை வந்தது எப்போதும் வாயுமிழ்தலும் வயிற்றுப்போக்குமாக இருந்து மெலிந்துபோனான்

அந்த குளிருட்டப்பட்ட வீடா மணற்புயலால் வந்துசேரும் துகள்களா அல்லது உணவா எதுவென்று தெரியவில்லை எனினும் ஒவ்வொருநாளும் அவதிப்பட்டான். ஒவ்வொரு இரவும் நிச்சயம் வாயுமிழ்வான் எனவே அவனுக்கு மூச்சுதிணறிவிடும் என்று பயந்து கண்விழிதுப்பார்த்தபடிக்கே இருப்பேன் எப்போதுமவன் வாயுமிழ்வதை பிடிக்க ஒரு பாத்திரம் படுக்கைக்கு அருகில் இருக்கும்

ஓரிரவு கூட நான் முழுக்க உறங்கி இருக்கவில்லை

 கடற்கரைக்கு சென்று வந்த ஒரு நாள் ஏதோ விஷ பூச்சி கடித்து அவன் கால்களிரண்டும்  வீங்கி இறுகி விட்டது வலியில் துடிதுடித்தான், ஒரு இந்திய மருத்துவர்  உடனே அவனை ஸ்பெலிஷ்டிடம் காட்ட வேண்டும் என்றார். யாருக்கும் அஊ என்னவென்றும் எப்படி குணமாக்குவது என்றும் தெரியவே இல்லை

 இந்தியாவுக்கு எத்தனை முறை போன் முயன்றும் அன்று வசந்த உட்பட  யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, கருத்து நீலம் பாரித்த  கால்களுடன் வீறிட்டு அலறிகொண்டே இருந்த சரணுக்கு ஒரு இளஞ்சிவப்பு லோஷனை தடவியபடி எல்லா கடவுள்களையும் வேண்டிகொண்டு இரவெல்லாம் சுவரில் தலைசாய்த்து மடியில் அவனை போட்டுக்கொண்டு விழிந்திருந்தேன் சரண் அழுதழுது களைத்து உறங்கிப்போயிருந்தான் காலையில் அவன் கால் வீக்கம் வடிந்து தெய்வாதீனமாக முன்பு போல சரியாக இருந்தது,

அவனை கையில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகள் துணி துவைப்பது உட்பட செய்து முடித்து குளிக்கப்போகையில் மட்டும் அவனைச் சுற்றி தலையணை  அமைத்துவிட்டு போவேன். எப்படியோ கண்டுபிடித்து கதற துவங்குவான்.

வீட்டுவேலைகளை  முடித்தபின்னர் அவனை மடியிலிருத்திக்கொண்டு கணினிதிரையில் சுட்டிவிகடனில் சித்திரக்கதைகளை காட்டிக்காட்டி கதை சொல்லுவேன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான்

.

ராய் அவனை உள்ளார்ந்த அன்புடன் சரண் சிங்கே என்றழைப்பார் சரணுக்கு இரண்டு வயதாகும் போது தருண் வயிற்றில்.  அந்த காலகட்டம் மற்றுமோர் கொடுங்கனவு. இந்தியாவுக்கும் அபுதாபிக்குமாக பந்தாடப் பட்டேன். 

கர்ப்பமாக சிறு மகனையும் தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு ஒருநாள்  மதிய வெயிலில் வந்தேன். செயலாளர் இப்போது ஏதும் வேலை தரும்படி இல்லை என்றார். மெல்ல மாடிப்படி ஏறி நான் அமர்ந்திருந்த அறை  லேப் எல்லாம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். லேபில் எனக்கு பதிலாக வந்த கண்ணன் என்பவர் என்னவோ சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்து குளியலறையில் கதறி அழுதேன்.

சரண் ஐந்து வயதாகும் வரை அங்கிருந்தான் அதற்குள் அவனது சிறு சைக்கிளை சைக்கிளுக்கென்றமைக்கப்பட்டிருக்கும் சிறுநடைபாதையில் அவனாக ஓட்டிக்கொண்டு செல்வது  வழக்கமாகி இருந்தது.

1வயது வரை அவன் பேச துவங்கவில்லை பின்னர் மெதுவே மாமா அம்மா அப்பா என துவங்கினான் எப்போதும் புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருப்பதில் பெருவிருப்பம் கொண்டிருந்தான்.

 வண்ணப்புகைப்படங்களை கண்கொட்டாமல் பார்ப்பான் விமான பயணத்தில் கொடுத்த  பஸில் விளையாட்டு அட்டைகளை அறை முழுவதும் பரப்பி வைத்து  அவற்றின் வடிவங்களை பொருத்தி விளையாடுவதும் ஒரு சிறு நடைவண்டியை அதன் பல விளக்குகள் மினுங்க ஓட்டிச்செல்வதும் பிடிக்கும் அவனுக்கு.

இட்லி தட்டில் எஞ்சியிருக்கும் துணுக்குகள்  அவனது விருப்ப உணவு.

தொடரும்

பாஷைப்பாம்பு

PC Tharun

இப்போது தேர்வு கால விடுமுறை எனவே வீட்டிலிருந்தேன் விஷ்ணுபுரம் விழாவில் இருந்து நேற்றுத்தான் திரும்பினேன்.  மதிய உணவுக்கு பின்னர் அலைபேசியில் விழா புகைப்படங்களை  பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென பின் தெருவிலிருந்து தீதி, தீதி’’ என்று அழைக்கும் குரல் கேட்டது

அப்படி யாரும் என்னை இங்கு அழைத்தது இல்லை.

வேகமாக வீட்டை சுற்றிக் கொண்டு சென்று பார்த்தேன் பின் தெருவின்  பேக்கரி செல்வத்தின் வீட்டில்  சில பிஹாரி இளைஞர்கள் வசிக்கிறார்கள் தேர்ந்த சமையல் வல்லுநர்கள். சில நாட்களில் வீட்டு வாசலில் அவர்கள் சமைக்கும் வாசனை தாளமுடியாத பசியுணர்வு அளிக்கும்.சுத்தமாக தமிழ் தெரியாது அவர்களுக்கு.

அவர்களில் ஒருவன் அங்கே மதிலுக்கு பின்னர் எனக்கென  காத்திருந்தான். என்னவென்று விசாரிக்க ’க்யா’?  என்றேன் எனக்கு மிக கொஞ்சமாக சல்மான், அமீர் மற்றும் ஷாருக் கான்கள் கற்றுக்கொடுத்த இந்திதான் தெரியும்.

அவன் அடர்ந்து வளர்ந்து மதிலை தழுவிப் படர்ந்திருந்த அலமண்டா புதர்செடியை  காட்டிக்காட்டி பரபரப்பாக ஏதோ சொன்னான். 

அலமண்டாவும் ராமபாணமும்

நான் புரிந்துகொண்டேன் கொம்பேறி மீண்டும் தலையை காட்டி இருக்கிறது. இவர்கள் முதன்முறையாக பார்க்கிறார்கள், அதுதான் பயந்து அழைத்திருக்கிறார்கள்.

 அந்த புதர் செடியில்  அடிக்கடி ஒரு கொம்பேறி நாகன் வந்து ஓய்வெடுத்துவிட்டு அதுபாட்டுக்கு சென்றுவிடும். தருண் அதை பாஸ்கிங் -Baskingஎன்று விளக்கி இருக்கிறான். சற்று நேரம் கொடியில் உடலைச்சுற்றி  தலையை மட்டும்  வெயிலில் காட்டியபடி கம்பீரமாக வெயில் காய்ந்துவிட்டு பின்னர் சரசரவென்று  செடிகளுக்குள் கரைந்து காணாமல் போய்விடும்.

அலமண்டாவில் எப்போதும் இருக்கும் கொம்பேறி மூக்கன் :புகைப்படம் தருண்

 

முன்பெல்லாம் அச்சப்பட்டுக் கொண்டிருந்தேன் , பின்னர் அது விஷமும், ஆபத்துமற்றது என்று தருண்  கற்பித்த பின்னால் அதுபாட்டுக்கு அதுவும் நான் பாட்டுக்கு  நானும் சேர்ந்தே பின்வாசலில் இருப்போம். சில சமயம் முன்வாசல் மோட்டார் சுவிட்ச் பெட்டிக்குள்ளே வயர்களோடு வயராக சுருண்டு கிடக்கும் நான் சுவிட்ச் போட போனால் ஒரு சம்பிரதாயத்துக்கு பயந்ததுபோல் கொஞ்சமாக உள்ளே சுருண்டு கொள்ளும், அவ்வளவுக்கு மரியாதை இருந்தால் போதுமென்று நானும் கண்டுகொள்ளாமல் இருப்பேன்.

 அந்த பையன்களிடம் ‘’அது ஒன்றுமில்லை பயப்பட வேண்டாம்’’ என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல தெரியவில்லை, ‘’ஸ்நேக் நோ ப்ராப்ளம் வெரி ஸ்மால்’’ என்று கைவிரலை பென்சில் போல காட்டி  சிரித்தேன். அவன் பலமாக தலையாட்டி கைகளை படம் எடுப்பது போல் ஒன்றின்  மீது ஒன்று குவித்து வைத்து காட்டினான்

 பிக் ஒன் ? என்றேன் அதற்கும் அதே கை பொதியும் சைகை. இப்போது எனக்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டிருந்தது. இவன் காட்டும் அளவில் பத்தி கொண்ட பாம்பென்றால் கொம்பேறி அல்லவே. மீண்டும் செடிக்குள் நுழைந்து தேடினேன் .  கொம்பேறியை காணவில்லை ஆனால் சர சரவென்று சத்தம்  மட்டும் கேட்டது. 

அலமண்டா  தண்டுகளின் அதே வண்ணத்தில் அதே அளவில் தான் அதுவும் இருக்கும், எனவே நன்றாக தேடினேன் காணவேயில்லை.

ஒருவேளை  அடுத்திருந்த  ராமபாணம்  மல்லிகை பந்தலில் இருக்குமோ என்று அங்கே சென்று தேடினேன்

அந்த  இளைஞன் பரபரப்பாக என்னிடம் வானத்தை காட்டி அதிலிருந்து அலமண்டாவிற்கு வந்தது போல சைகை செய்து காட்டினான்.

PC Tharun

இப்போது கொஞ்சம் கவலையாகியது.ஏதோ பறவை வானில் இருந்து கொண்டு வந்து பாம்பை போட்டிருக்கிறது போல, அப்படியானால் அது விஷப் பாம்பாகத்தான் இருக்கும்.

PC Tharun

அருகிலே சமையலறை ஜன்னல் வேறு திறந்திருந்தது.மதியம் உண்ட களைப்பில் கண்ணசந்திருந்த  சில பெண்மணிகள்  எழுந்து வந்து கூடி நிற்க துவங்கினர்

 சிலர் நான் எதிர்பார்த்தது போலவே’ இப்படி புதராட்டம் செடிக இருந்தா பாம்பு வராம ‘ என்று துவங்கினர்கள். அய்யோ தருண் இருந்தால் அனைவருக்கும் ஒரு வகுப்பெடுத்திருப்பானே, அவனும் இல்லையே என்று கவலைப்பட்டேன்.

அதுமட்டும் அகப்படவில்லை கண்ணுக்கும் தட்டுப்படவில்லை

நான் பாம்பு படமெடுக்கும்சைகை செய்து எத்தனை பெரிது என்று எப்படியோ அவனுக்கு புரிய வைக்க முயன்றேன். அவன் அதே கைகளை பொதிந்து காட்டும் சைகை செய்தான். தலை வலித்தது.

ஒருவேளை மோட்டார் ரூமில் இருக்குமோ என்று தேடினேன், அங்கும் இல்லை அலமண்டாவின் ஒவ்வொரு தண்டாக பிரித்துப்பிரித்து தேடினேன்’ ‘’மகனைப்போலவே அம்மாவும் பாரு  பயமில்லாம பாம்பை தேடுது’’என்று ஒரு விமர்சன குரல் வந்தது.ஏறக்குறைய ஒரு மணி நேரம் தேடல் தொடர்ந்தது. திடீரென அந்த இளைஞன் ’’சுண்டூ’’ என உற்சாகமாக கத்தியபடி ராமபாண  புதருக்குள் கைகளை விட்டு ஒரு சிறு பழுப்பு நிற புறாவை எடுத்தான்.

 சுண்டூ அவன் வளர்ப்பு பறவையாம்  தீபாவளிக்கு ஊருக்கு போய் திரும்பியவன் அதையும் கூட கொண்டு வந்திருக்கிறேன். இன்று சுண்டு அவனை ஏமாற்றிவிட்டு பறந்து இங்கு வந்து ஒளிந்து கொண்டிருந்திருக்கிறது

சுண்டூவை செல்லமாக அதட்டி கோதுமை மாவு மூட்டைகளுக்குள் இறக்கி விட்டுவிட்டு என்ன பார்த்து கைகளை  கூப்பி மொச்சைகொட்டை பற்களை காட்டி பெரிதாக சிரித்து’’ நமஸ்தே தீதி’’ என்றான்.

PC Tharun

அத்தனை நேரம் எங்களுக்கிடையில் ஒளிந்து விளையாடிய  பாஷைப்பாம்பு அப்போதுதான் காணாமல் போனது.

கடலும், நிலவும் கவிதைகளும் !

கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன்,அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத , மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற வரிகளுக்கு கணிசமான பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் அப்படியான கவிதைகளே அப்பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஒரு காலத்தில் அந்த பத்திரிகையில் என் படைப்பு ஏதேனும் வெளிவர வேண்டும் என்பது என் கனவாக இருந்தது.  எனக்கு கவிதைகளில் நல்ல ரசனை உண்டு ஆகச்சிறந்த கவிதைகள் வாசிப்பவள். எனினும் கவிதை முயற்சிகள் செய்திருக்கிறேனே தவிர நல்ல கவிதையொன்றை இன்று வரை  எழுதவில்லை. அந்த பத்திரிகையில் வந்திருப்பவைகளைப்போல ஒரே நாளில் பல நூறு கவிதைகள் என்னால் எழுத முடியும். எனவே அப்போதே  வெகு சுமாரான சில வரிக்கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். இரண்டு நாட்களில் என் கவிதை பிரசுரிக்க தேர்வான  தகவல் வந்து, இரண்டாவது வாரம் பிரசுரமாகி அடுத்த மாதம் சன்மானத்தொகையும் வந்தது.

ஆனால் அச்சில்  என் பெயருடன் கவிதையை பார்த்ததும் எனக்கு என்னை குறித்தே மிக தாழ்வான அபிப்பிராயம் உண்டானது. ஏதோ உள்ளுண்ர்வின் தூண்டுதலால் அக்கவிதைக்கு பிழை என்றே தலைப்பிட்டு இருந்தேன். எப்போதும் வாட்ஸ்அப் நிலைத்தகவல்களில் என் படைப்புகள் குறித்த  தகவல்களை வைக்கும் நான் இதை ரகசியமாக வைத்துக் கொண்டேன்

போகன் சங்கரின் 

‘’ஒரு தோல்வியை எங்கு வைப்பது என்று தெளிவாக தெரிந்திருந்தும் ஒரு வெற்றியை ஒளித்து வைப்பது’’ என்னும் அருமையான கவிதை ஒன்று இருக்கிறது.

அப்படி அந்த கவிதை பிரசுரத்தை ஒளித்து வைத்துக் கொண்டேன். நல்லவேளையாக எனக்கு தெரிந்த யாரும் இதுவரை அதை பார்க்கவில்லை. எனினும் நல்ல கவிதையொன்றை எழுதும் கொதி அதிகரித்திருந்தது.

மார்ச்சில்  நண்பர் சாம்ராஜ், லக்‌ஷ்மி மணிவண்ணன் மற்றும் ஆனந்த்குமார் நடத்தும் கன்னியாகுமரி கவிதை அரங்கு குறித்து தகவல் சொன்னார்.  அந்த கவிதை பிரசுரமானதன் பிழையீடாக இக்கவிதை அரங்கில் கலந்து கொள்ள விரும்பினேன். மேலும்  சித்திரை முழுநிலவன்று கடற்கரை கவிதையரங்கு என்னும் கற்பனையே வசீகரமாக இருந்தது

கடல் எனக்கு அத்தனை பரிச்சயமில்லை. இத்தனை வயதில் நான் மொத்தமாக நாலோ ஐந்தோ முறை தான் கடற்கரையில் இருந்திருக்கிறேன். சென்னை மெரினா, திருச்செந்தூர்,ராமேஸ்வரம்  என்று. ஆனால் அங்கெல்லாம் சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது போல கூடியிருந்த  ஜனக்கூட்டங்கள் தான் கடலா கடலலையா என்று எண்ண வைக்கும் . கடல்கண்டு  திரும்பிய பின்னரும் எனக்கு நினைவில் கடலோ அலையோ இருந்ததில்லை. உடல் கசகசப்பு, மாங்காய் பத்தை, குதிரைச் சவாரி, பலூன்,  நெரிசல் இவைகளே நினைவிலிருக்கும். நீர்நிலைகளின் அருகில் செல்கையில் உண்டாகும் இனம்புரியா அச்சமும் இருப்பதால் அதிகம் கடலை நெருங்கியதுமில்லை

எனவே கடல், அங்கு நடக்க இருக்கும் கடற்கரை கவியரங்கம் என்று உற்சாகமாக இருந்தது.

எனினும் தனியே அத்தனை தொலைவு செலவது குறித்தும் யோசனையாக இருந்தது. ஆனால் சரணும் தருணும் தனியே போய்த்தான் ஆகவேண்டும் பழகிக்கொள் என்று படித்துபடித்து பாடம் எடுத்தார்கள்.அவர்களின் வற்புறுத்தலின் பேரில் ரயில் இரவுப்பயணத்திற்கென சரணுடன் சென்று எனக்கு பழக்கமில்லாத குர்த்திகளை வாங்கினேன். ஆபத்பாந்தவனாக ஆனந்த் அழைத்து கோவையிலிருந்து கதிர்முருகனும் வருவதாக சொன்னார். இருவரும் இணைந்துசெல்ல முடிவானது.

புறப்படும் அன்று. மாலை கனமழை வீட்டு வாசலில் இருந்து காரில் ஏறுவதற்குள் முழுக்க நனைந்தேன். 8 மணி ரயிலுக்கு மாலை 6 மணிக்கே ரயில் நிலையம் போயிருந்தேன்.

நான் நினைத்துக்கொண்டிருந்தது போலல்லாமல் ரயில் நிற்கும் இடத்தை கண்டுபிடிக்க அத்தனை சிரமமெல்லாம் இல்லை. சரண் போனில் வழிகாட்ட நேராக சென்று குறிப்பிட்ட ரயில் பெட்டியின் எதிரே அமர்ந்து கதிருக்கு காத்திருந்தேன்.

தம்பி கதிர்ருமுருகனும் வந்தார். இரவுணவை இருவருமாக இருக்கையில் அமர்ந்து உண்டோம். கோவிட் தொற்றுக்கு பிறகு இப்போதுதான் ரயிலில் போர்வை கம்பளி எல்லாம் கொடுக்கிறார்கள்.  எங்கள் பெட்டியில் இரு இளைஞர்கள் இருந்தார்கள் மிக உரக்க பேசிக்கொண்டு பாடல்கள் ஒலிக்க செய்து கொண்டுமிருந்தார்கள். இரவு நெடுநேரமாகியும் அப்படியே தொடர்ந்தார்கள்.கதிர் மென்மையாக சொல்லிப் பார்த்தும்  பிரயோஜனமில்லை. பின்னர் டிக்கெட் பரிசோதகரை அழைத்துவந்து கண்டித்த  பின்னர் அவர்கள் அமைதியானார்கள்.முப்பது வயதுக்குள்தான்  இருக்கும் அவர்களுக்கு 

குறிப்பிட்ட நேரத்துக்கு அரை மணி முன்னதாகவே நாகர்கோயில் வந்துசேர்ந்தோம் ரயில் நிலைய வாசலிலேயே எங்களை வரவேற்க இலைகளைக் காட்டிலும் அதிக  மலர்களுடன்  தங்க அரளிச்சிறு மரமொன்று நின்றிருந்தது 

அதே ரயிலிலும் ,சில நிமிட இடைவெளியில் வந்த மற்றொரு ரயிலிலுமாக  சுதா மாமி, மதார், ஆனந்த ஸ்ரீனிவாசன்,நேசன் உள்ளிட்ட பதினைந்து பேர் இருந்தோம் அந்த நேரத்திலேயே ஆனந்தகுமார், லக்ஷ்மி மணிவண்ணன் இருவரும் காரில் வந்திருந்தார்கள் எல்லாருமாக புறப்பட்டு லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின்   கடையருகில் தேநீர் அருந்திவிட்டு அந்த கடற்கரை விடுதிக்கு வந்தோம்.

ஊருக்கு மிக ஒதுக்குப்புறமான விடுதி. அத்தனைஅ ருகில் கடல் இருக்கும் நான் எண்ணி இருக்கவில்லை. முதலில் எனக்கு கடலின் சீற்றம் மனசிலாகவே இல்லை. அருகில் எங்கோ பேருந்துகள் சீறிக் கொண்டு செல்கின்றன என்றே நினைத்தேன் . அத்தனை அருகில் கடலை, அத்தனை நீண்ட தூய மணற் கடற்கரையை, புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை பார்த்ததும் முதலில் திடுக்கிட்டேன் கற்பனையில் நான் நினைத்திருந்ததை காட்டிலும் மிக வசீகரமான கடல் யாருமற்று தன்னந்ததனித்திருந்தது.

அந்த கடற்கரையில் பாறைகள் அதிகம் என்பதால் யாரும் அங்கு குளிக்க இறங்க வேண்டாம் என்று அப்போதிலிருந்தே பலமுறை  எச்சரிக்கப்பட்டோம்.

தனித்தனி குடில்களாக  தங்குமிடம். நானும் சுதா மாமியும் ஒரு குடிலில். அந்த குடிலின் கட்டுமானம் பிரமிப்பளித்தது, மிகச்சிறிய  ஒழுங்கற்ற இடங்களை மிக சமார்த்தியமாக உபயோகித்து அறையை வடிவமைத்திருந்தார்கள். குடிலறையிலும் அரங்கிலும் எங்கெங்கும் மணல் காலடியில் நெறி பட்டது.

.

குளித்து கடல் பார்த்து ,கால் நனைத்து நல்ல உணவுண்டு அமர்வுகளுக்கு தயாரானோம். விஷ்ணுபுரம்  வட்ட நண்பர்கள் பலர் இருந்தார்கள் அவர்களை எல்லாம் எப்போது பார்த்தாலும் ’குடும்பத்தில் எத்தி’ என்று நினைத்து நெஞ்சம் பொங்கும் எனக்கு. 

விஷ்ணுபுரம் இலக்கிய விழாக்களில் பார்த்திருக்காத பலர் இருந்தார்கள். அதிகம் இளைஞர்களும்

சுதந்திர வல்லி , சுதா மாமியுடன்

லக்‌ஷ்மி மணிவண்ணன் அவர்களின் மனைவி மக்களும் வந்திருந்தார்கள் அவர் மனைவி சுதந்திர வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு பறவையுடையதைப் போல மிக இனிமையான குரல் அவருக்கு. பேசப் பேச கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருந்தது

அருண்மொழியும்  வந்துவிட்டார்கள் அமர்வுகள் துவங்கும் முன்பே. .அருணாவை 2017 ஊட்டி காவிய முகாமில் சந்தித்து அறிமுகமாயிருந்தேன். இந்த வருடம்தான் அவரது தொடரை வாசித்து, பின்னூட்டமிட்டு, அடிக்கடி பேசி என்று நெருக்கமாயிருந்தேன். ஜெவையும் அருணாவையும் வெண்முரசையும் கொஞ்சமும் அறியாதவர்களும் இருந்தார்கள் அவர்கள் பல எதிர்பாராத ஆனால்  சுவாரஸ்யமான  கேள்விகள் கேட்டார்கள்.அவற்றிற்கெல்லாம் நான் முன்புபோல பதட்டப்படாமல் கோபித்துக் கொள்ளாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். மனமுதிர்ச்சி மட்டுமல்ல  எனக்கு வயதாகிவிட்டதையும் முதன்முதலாக அப்பதில்களின்  போது உணர்ந்தேன் . ஒரு சிலர் மறக்க முடியாதர்வளாகிவிட்டிருக்கிறார்கள்

அருகில் அருணா பின் வரிசையில் கதிர்முருகண், ஜி எஸ் வி நவீன்

அமர்வுகள் துவங்கும் முன்பு அனைவரும் அறிமுகம் செய்து கொண்டோம் அருணா தான் கவிதைகளை கொஞ்சம் தள்ளி வைத்திருப்பதாக சொன்னார். இளைஞர்களில் இருவர் சிறுவர்களைப்போல 7 அல்லது 8ல் படிப்பார்கள் என்று எண்ணத்தக்க தோற்றத்தில் இருந்தார்கள் எனக்கு எப்போதுமே இலக்கிய கூட்டங்களில் இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும்.

ஆனந்த் சீனிவாசன் மிக இனிமையான, பொருத்தமான சரஸ்வதி துதியொன்றை பாடி அமர்வுகளை துவக்கி வைத்தார்,தாடி இல்லாமல் இருந்த அண்ணாச்சியை வெகு நேரம் கழித்தே அடையாளம் கண்டு கொண்டேன்.

கண்டராதித்தன், சபரி, அதியமான் உள்ளிட்ட பலர் வந்திருந்தார்கள் லக்‌ஷ்மி மணிவண்ணன் மற்றும் கண்டராதித்தன் அமர்வுகள், பின்னர் தேநீர் இடைவேளை அதன் பிறகு போகன் சங்கர் அமர்வு

போகன்

கவிதைகளில் என்ன இருக்கலாம், இருக்கவேண்டியதில்லை, தோல்வியுறும் கவிதைகளின் அழகு என்று மிக விரிவான, வேறெங்கும் கிடைக்கப் பெறாத தகவல்களுடன் அமர்வு களைகட்டி இருந்தது

மதிய உணவு முதன் முதலாக வல்லரிச்சோறுடன் நாகர்கோவில் பக்க உணவு

எனக்கு இந்த முகாம் கலந்து கொண்டதில் பல முதன் முதலாக இருந்தன

அப்படி துவரன், தீயல், வல்லரிச்சோறு, பிரதமன் என்று சிறப்பான உணவு. விஷ்ணுபுர குழுமம் எப்போதும் குடும்பமாக கூடியிருந்தே விழாக்கள் நடைபெறும் என்பதால் இங்கும் விளம்புவதும், இலைபோடுவதும், சுத்தம் செய்வதுமாக பலர் முனைந்திருந்தனர் புதியவர்களும் இதைக்கண்டு இயல்பாக கலந்து புழங்கினார்கள்

கவிழ்ந்து விழுந்த எச்சில் இலைகள் நிறைந்து இருந்த ஒரு பீப்பாயை சிவாத்மா பொறுமையாக நிமிர்த்தி  சரியாமல்  நிற்கவைத்து  கொண்டிருந்தார்,

அருணாவும் சுதந்திராவுமாக எனக்கு நாகர்கோவில், கன்னியாகுமரி உணவு வகைகளின் செய்முறைகள் சொல்லிக்கொடுத்தார்கள் இருவருமாக ஒரு புத்தகம் எழுதினால் பிரமாதமாக இருக்கும். அருணா சக்கையை அரைத்து செய்யும் ஒரு இனிப்பை அவரது வழக்கம்போலான அபிநயத்தில் சொல்லி அங்கே காணாப்புலத்தில் எங்கள் முன்னிருந்த அந்த இனிப்பை ஒரு கரண்டி எடுத்து , ரொட்டியில் தடவி சுவைத்ததை பார்க்கவே நாவூறியது. அவசியம் செய்து பார்க்க போகிறேன் அவற்றை.

மதிய அமர்வுகளில் மதாரும் ஆனந்தும்.  மதார் புதுக்கவிதை தொகுப்புக்களிலிருந்து உணர்வுபூர்வமாக எடுத்துக்காட்டுகளுடன் பேசினார். 

ஆனந்த்குமார் அமர்வு அபாரம் குறிப்பாக அந்த பழங்குடியினரின் மொழிக் கவிதையை அவர் மொழியாக்கம் செய்து, அவர்களின் மொழியிலும் வாசித்தது இன்னும் காதில் ஒலிக்கிறது

’வீழ்ந்து கிடந்த மரக்கொம்பில் உயிர் இருக்கோ இல்லியோ’ என்று துவங்கிய அக்கவிதை, அக்கொம்பில்  முளைக்கும் இருதளிர்களில்  ஒன்றில் அன்பென்றும் மற்றொன்றில் வாழ்வென்றும் எழுதியதாக செல்கின்றது.முகாமில் வாசிக்கப்பட்ட அனைத்திலுமே  அதுவே அபாரமானது

மரக்கொம்பு- சாந்தி பனக்கன்

***காட்டிலொரு மரக்கொம்புமுறிந்துகிடக்கிறது

இறந்துவிட்டதாஉயிர் உள்ளதா?
தினமும் நானதை கடந்து போகிறேன்

ஒரு நாள் அதில்இரண்டிலை தளிர்த்தது

ஓரிலையில் நான் அன்பென்றெழுதினேன்

மற்றொன்றில் வாழ்வென
வேர் நீர் பிடித்து தண்டு உரம் பிடித்து

நீலக்கல் வைத்த ஆகாயம் தொட்டது.
உழுதிட்ட வயலைக் காணதலை நீட்டி நீட்டிகொம்பு மரமானது

மகனொரு ஏறுமாடம் கட்டினான்

மகளொரு ஊஞ்சலிட்டாள்

பறவையொரு குடும்பம்சேர்க்க

இலையொரு நிழல்விரித்தது
நானொரு குடில் கட்டிவேலி நடவும்வேர்கள் எல்லை கடந்தன

அதனால்தான் அதனால்தான்நாங்கள் அதை வெட்டியிட்டோம்

கொண்டுபோக உறவில்லாமல்உதிரம் துடிக்கக் கிடக்கிறது

நேற்று நான் கண்ட கொம்பும்நாளை நான் காண விழைந்த காடும்.-

பணியர் மொழியில்:கோலு கொம்பு- சாந்தி பனக்கன்-காட்டிலொரு கோலு கொம்புஒடிஞ்சு கிடக்கிஞ்சோ.சத்தணோ அல்லசீம உளணோ?ஓரோ நாளு நானவெ கடந்து போஞ்சே,ஒரு நாளுஇரண்டிலே வந்த.ஓரிரெம்பே நானு..இட்ட எஞ்செழுத்தே.பின்னொஞ்சும்பே ஜீவிதனும்வேர் நீர் வச்சுதண்டு தடி வச்சுநீலே கால்லு வெச்ச மானத்தொட்டு.ஊளி இட்ட கட்ட காம.நீலே நீட்டி நீகொம்பு மராத்த.மகனொரு ஏறுமாடம் கெட்டுத்த.மகளொரு ஊஞ்ஞாட்டளு.பக்கியொரு குடும்ப உண்டாக்குத்த.இலயொரு தணலுட்டநானொரு கூடு கட்டிவேலி திரிச்சக்குவேரு அதிரு கடந்தா.அவேங்காஞ்சு அவேங்காஞ்சு வெட்டியுட்டே..கொண்டு போவ குடிப்படில்லடெ..சோரெ புடச்சு கிடந்துளஇன்னலெ நானு கண்ட கோலுகொம்பும்நாளெ ஞான் காமதிரச்ச காடும்

.-சாந்தி பனக்கன் பணியர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர். கேரளத்தின் வயநாடு மாவட்டம் நடவயல் என்னும் ஊரில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்.(தகவல் நன்றி: நிர்மால்யா, ஆவநாழி)

மாலை கதிரணைவை பார்க்க கடற்கரை சென்றோம். கடலுக்குள் மெல்ல இறங்கும் மாபெரும் தீக்கோளம் கண்ட பிரமிப்பு  நீங்கு முன்பே சுதந்திரா சுட்டிக்காட்டியதும் எதிர்திசையில் திரும்பினால் வெள்ளித்தாம்பாளமாக முழுநிலவு மெல்ல எழுந்துகொண்டிருந்தது, உண்மையில் அத்தனை பரவசமாக இருந்தது. நெஞ்சு பொங்குதல் என்றால் என்ன என்று அப்போது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனந்த்குமார்  அங்கிருந்தவர்களுக்கு மணலில்அமர்ந்து சில கவிதைகளை வாசித்து காட்டினார் . குளித்துவிட்டு வீடு நுழையும் ஒருவனுடன் பிரியமான நாய்க் குட்டியை போல தொடர்ந்து நீர்த்துளிகளும், ஈரக்கால்சுவடும் வருவதை சொல்லும் கவிதை. அருமையான இனி ஒருபோதும் மறக்கவியலாத கவிதை அது

sargassum

கடற்கரையில் ஒரு பதின்பருவ மீனவப்பெண் பிளவு பட்ட இதய வடிவில் கடற்கரையெங்கும் பரவி வளர்ந்திருந்த சிறு செடிகளின் இலைகளை சேகரித்துக்கொண்டிருந்தாள். மான் நிறம் பளிச்சிடும் சிறிய கண்கள். எண்ணெய் மினுங்கும் சருமம் கொள்ளை அழகு . பெயர் ஜென்ஸி என்றாள், ஒரு எளிய நைட்டியில் அத்தனை அழகாக ஒருத்தி இருக்கமுடியுமென்பதை யாரேனும் சொல்லி இருந்தாலும் நம்பி இருக்கமாட்டேன். இந்த இலைகளை ஆடுகளுக்கா எடுத்துபோகிறாய்? என்று கேட்டேன் ‘’இல்ல மொசலுக்கு ‘’ என்றாள் புதியவர்களை கண்ட கூச்சத்தில் நாணி இன்னும் அழகானாள். அடிக்கடி திரும்பி பார்த்துக்கொண்டாள்

”’இந்த செடிக்கு என்ன பேரு’’?/என்றென் ’’மாமனுக்கு தான் தெரியும் ‘’என்று சற்று தூரத்தில் சவுக்கு மரங்களுக்கிடையில் தெரிந்த ஒருவரைக்காட்டினாள். காடு நீலி நினைவில் வந்தாள் இவள் கடல்புரத்து நீலி

நிறைய கிளிஞ்சல்கள், கடல் குச்சிகள், சங்குகள் சேகரித்தேன். சர்காசம் என்னும் காற்றுக்குமிழிகளை கொண்டிருக்கும் ஒரு கடற்பாசி உலர்ந்து கரை ஒதுங்கி இருந்தது. இராவணன் மீசை என்னும் ஒரு கடற்கரை மணலை பிணைக்கும் வேர்களை கொண்ட,   கொத்துக் கொத்தாக  புற்களை  கொண்டிருக்கும் புல்வகையை பல வருடங்களுக்குப் பின்னால் பார்த்தேன்.Spinifex littoreus என்னும் அதை எனக்கு ராமேஸ்வரத்தில் காட்டி விளக்கிய  மறைந்த  என் பெருமதிப்புக்குரிய பேராசிரியரை நினைத்துக்கொண்டேன். மலையாளத்தில்  எலிமுள்ளு எனப்படும் இப்புல் C4 மற்றும் CAM ஒளிச்சேர்க்கைகளை  விளக்கும் மிக முக்கியமான பரிணாம வரலாற்றை கொண்டிருப்பவை. இவற்றின் கூரிய விதைகள் காற்றிலும் நீரிலும் பரவி மணலில் குத்தி நின்று  கடற்கரை எங்கும் வளரும்.

ராவணப்புல்

இரவு கவிதை அமர்வில் பல புதியவர்களும் இளைஞர்களும் கவிதைகள் வாசித்தார்கள் பல கவிதைகள் கறாராக விமர்சிக்கப்பட்டன. யாமம், பிரளயம் போன்ற சிக்கலான வார்த்தைகளை தேவையற்று உபயோகிப்பதை குறித்தும் சொல்லப்பட்டது. சிலர் அவர்களுக்கு பிடித்த கவிதைகளையும் வாசித்தார்கள். கவிதைகள் சாதாரணமாக இருந்தாலும் அந்த நான்கு நாட்கள் விடுமுறையில் பொதுவாக இளைஞர்கள் முன்னுரிமை கொடுக்கும் விஷயங்களுக்கு செல்லாமல் கவிதை முகாம் வந்து சாதாணரமாகவேனும் கவிதைகளை வாசிக்கும் இளைஞர்கள் குறித்து  மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

அந்த இளைஞர்கள் நிச்சயம் பேரருவியின் முன் நின்று ஊளையிடமாட்டார்கள் காடுகளில் பீர்பாட்டிலை உடைத்து வீசமாட்டார்கள் ரயிலில், பிற பொது இடங்களில் சகமனிதர்களை  தொந்தரவு செய்ய மாட்டார்கள்  என்னும் உறுதி எனக்கு இருந்தது

கவிதை முகாமின்  முதல் நாள் நிறைவாக பள்ளி மாணவனை போலிருந்த அந்த  துடிப்பான இளைஞன் ஃபிரான்சிஸ் கிருபாவுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதையாக ,

’’சிலிர்க்கச் சிலிர்க்க அலைகளை மறித்து

முத்தம் தரும் போதெல்லாம்

துடிக்கத் துடிக்க ஒரு மீனைப் பிடித்து

 அப்பறவைக்குத் தருகிறது

 இக்கடல்’’

என்பதை வாசித்தார்

கடல்மணல்  காலடியில் நெறி பட்டுக்கொண்டிருந்த, கடலின் சீற்றம்  கேட்டுக் கொண்டிருந்த ஓர் அரங்கில் அக்கவிதை அன்றைய நிகழ்வை முடித்துவைக்க  மிகப்பொருத்தமானதாக இருந்தது.மனம் கனத்திருந்தது.

இரவுணவிற்கு பிறகு அனைவருமாக முன்னிரவில் கடற்கரை சென்றோம் ஆங்காங்கே சிறு குழுக்களாக அமர்ந்து கொண்டு கடல் பார்த்தோம். முழு நிலவின் ஒளி புறண்டெழுந்து மடங்கி, உருண்டு,  பாறைகளில் அறைபட்டு வேகம் குறைந்து தவழ்ந்தபடி கரை நோக்கி  வரும் அலைகளின் நுனிகளை  வெள்ளியாக மினுக்கியது. எனக்கு  கடலே புதிது, அதுவும் இந்த கடல் தூய கடற்கரையுடன் மிகப்புதிது,  சித்திரை முழுநிலவில் இப்படி நிலவொளியில் மினுங்கும் அலைவிளிம்புகளை பார்த்துக்கொண்டிருந்தது  மிகமிக புதியது. காரணமில்லாமல் கண் நிறைந்தது.

முதலில் பேசிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் பின்னர் அமைதியனோம் அனைவருமே அவரவர் கடலுடனும், நிலவுடனும் தனிக்திருந்த கணங்கள் அவை.  கடற்கரையில் விடுதியின் ஏராளமான நாய்கள் திடீரென வெறியேறி ஒன்றுடன் ஒன்று உருண்டுபுரண்டு சண்டையிட்டுக் கொண்டன பின்னர் தனித் தனியே அவையும் அமர்ந்து அமைதியாக கடலை பார்த்துக்கொண்டிருந்தன.  அவை எப்போதும் முழுநிலவில் அப்படி பார்க்குமாயிக்கும். நாங்கள் தான் எப்போதாவது பார்க்கிறோம்.

மனம் துடைத்து கழுவியது போலிருப்பது  என்பார்களே உண்மையில் அப்படித்தான் இருந்தேன். எந்த பராதியும் யார் பேரிலும் அப்போது இல்லை மிகத் தூய தருணம் என் வாழ்வில் அது.  கரையை மீள மீள தழுவிக்கொள்ள யுகங்களாய் புரண்டு வந்துகொண்டிருந்த அலைகளை,  பொழிந்துகொண்டிருந்த நிலவொளியில் பார்க்கையில் என்னவோ உள்ளே உடைந்தும், முளைத்தும் இழந்தும் நிறைந்தும் கலவையாக மனம் ததும்பி கொண்டிருந்தது

.

 எனக்கு ஒருவரிடம் தீராப்பகை இருந்தது. சாதரணமான கோபம் இல்லை மாபெரும் வஞ்சமிழைக்கப்பட்ட. உணர்வில் நான் கொந்தளித்த காலத்தின் கோபம்.

ஜெ நஞ்சு சிறுகதையில் சொல்லி இருந்தது போல அது வெறும் அவமதிப்பல்ல, இளமை முதலே பேணி வந்திருந்த ,என் அகத்தில் இருந்த, நான் என்று எண்ணி வருகையில் திரண்டு வரும் ஒன்று உடைந்த நிகழ்வது, அதன் பின்னால் அந்த நபரின் எண்ணை நான் தடைசெய்து விட்டிருந்தேன். அந்த வீழ்ச்சியிலிருந்தும்  எழுந்துவந்து விட்டிருந்தேன்

அத்தனை வருடங்கள் கழித்து, கவிதை முகாமிற்கு வரும்போது ரயிலில் தடைசெய்யப்பட்டிருந்த அந்த  எண்ணிலிருந்து பலமுறை தவறிய அழைப்புக்கள் வந்திருந்ததை பார்த்தும் பொருட்படுத்தாமலிருந்தேன்

நிலவை கண்டுவிட்டு நள்ளிரவில் குடிலறைக்கு திரும்பிய பின்னர் மீண்டும் வந்த  அழைப்பை எடுத்து எந்த கொந்தளிப்புமில்லாமல் சாதரணமாக பேசிவிட்டு வைத்தேன். நிலவு மேலிருந்து என்னை பார்த்துக் கொண்டிருந்தது. பெரும் விடுதலையுணர்வை அடைந்தேன். முழுவதுமாக அதிலிருந்து என்னை நான் மீட்டுக் கொண்டிருந்தேன்.  என் வாழ்வை நான் மீண்டும் திரும்பி பார்க்கையில் என்னைக்குறித்து நானே பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரு சிலவற்றில் இதுவும் இருக்கும். அந்த நஞ்சை  நான் கடந்து விட்டிருந்தேன்.

வழக்கம்போல கனவும் நனவுமாக இல்லாமல் ஆழ்ந்து உறங்கி அதிகாலை எழுந்தேன் கடலின் இரைச்சல், இடியின் ஒலி, இளமழையின் குளிர்ச்சியுமாக இருந்தது புத்தம் புது காலை

யாரும் எழுந்திரித்திருக்க வில்லை நான் குளித்து தயராகி அந்த அதிகாலையில் கடலுக்கு சென்றேன். பொன்னாவாரை மலர்ந்து கிடந்தது வழியெங்கும்.

முந்தியநாளின் இரவில் நாங்கள் அமர்ந்திருந்த இடங்களில் அப்போது கடல் இருந்தது.நிலவு மிச்சமிருந்தது தூரத்தில்அலைகள்  உயரத்தில் இருந்து கொண்டிருந்தது. கரையோரம் நடந்தேன். அங்கேயே பலமணி நேரம் இருந்தேன்

 நானும் கடலும் மட்டும் தனித்திருந்தோம். எங்களுக்குள் உரையாடிக் கொள்வதுபோல அலைகள் என்னை  தொட்டுத்தொட்டு திரும்பிக்கொண்டிருந்தன. கிளிஞ்சல்களை கொண்டு வந்து அளிப்பதும் பிறகு அவற்றை எடுத்து செல்வதுமாக விளையாடிக்கொண்டிருந்தது கடல்.  மிகச்சிறிய மணல் நிறத்திலேயே இருந்த நண்டுகள் ஊர்ந்துசென்ற புள்ளிக்கோலங்களையும் அலை அழித்தழித்துச் சென்றது.

என்னை தழுவிக்தழுவி ஆற்றுப்படுத்தி. கழுவிக்கழுவி தூயவளாக்க அலைகளை அனுப்பிக் கொண்டே இருந்தது கடல்.

சில பேரலைகள் காலடி மண்ணுடன் என்னையும் சேர்த்து உள்ளே இழுத்தன.  பிரிய   நாய்குட்டிகள் வா வாவென்று நம்மையும்  விளையாட அழைக்குமே அப்படி அலைகள் என்னை  அழைத்தன. ஒரு கட்டத்தில் அந்த அழைப்புக்களை தட்ட முடியாதவளாகி இருந்தேன் ஒரு பித்துநிலை என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.

கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்று முறை கடலுக்குள் இறங்க நினைத்தேன்.  கடலுக்குள் இறங்கி அப்படியே காணாமலாகிவிடுவதை எந்த பயமும் இன்றி விரும்பி எதிர்பார்த்த கணம்அது. எப்படி அவ்விழைவிலிருந்து மீண்டு வந்தேன் என இப்போதும் தெரியவில்லை

அலைகள் வேகம் குறைந்தன, காலடியில் இருந்த .சில சங்குகளில் உள்ளே மெல்லுடலிகள் உயிருடன் இருந்தன.அத்தனை மெல்லிய உடலுக்கு எத்தனை கடின ஓடு? மிகஅருகே வந்த அலையொன்று ஒரு பெரிய வெள்ளை சிப்பியை கொண்டுவந்து தந்தது.

பட்டாம்பூச்சியின் ஒற்றைச்சிறகு போன்ற  அச்சிப்பியின்  மேற்புறத்தில்  ஒரு புள்ளியிலிருந்து துவங்கி அகல விளிம்பு வரை நீளும் நூற்றுக்கணக்கான  மெல்லிய இணை வரிகள் இருந்தன

அந்த வரிகளை அதே அளவில் , அதே இடைவெளிகளில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் தவறில்லாமல் வரைய சில நாட்களாவது வேண்டும் மனிதனுக்கு. எப்படி, எதற்கு ஒரு சிப்பிக்கு இத்தனை ஒரு அழகு வடிவம்?அந்த சிப்பியை மொழுக்கென்று ஒரே வெண்பரப்பாக கூட படைத்திருக்கலாமல்லவா இந்த பேரியற்கை?

இப்படி கோடானுகோடி சிப்பிகளை, கோடானுகோடி வடிவங்களை, உயிர்களை, ரகசியங்களை கொண்டிருந்த கடல் கண்முன்னே இருந்தது. அச்சிப்பியை பத்திரமாக எடுத்துக்கொண்டேன். என் மகன்களை காட்டிலும் முக்கியமென நான் ஒருவேளை யாரையேனும் நினைப்பேனேனெறால் அவளுக்கு அல்லது  அவனுக்கு அதை பரிசளிக்கவிருக்கிறேன்

முகாமிற்கு வந்திருந்த கலியபெருமாள் என்பவர் கடற்கரையில் தனித்திருந்த என்னை தூரத்திலிருந்து படம்பிடித்து பின்னர் அனுப்பினார்.

சரியான முக்கோண வடிவில் ஒரு கல் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டேன்.  மெல்ல மெல்ல ஒவ்வொருவராக  கடல் காண  வந்தார்கள்  சுதா மாமியும் ஜெயராமும் மணல் வீடு கட்டினார்கள் ஜெ சமீபத்தில் சொல்லியிருந்தீர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்குள் இருக்கும் சிறுவர்களை இழப்பதில்லை என்று.

ஜெயராம் மணல்மேட்டில் ஒரு வினாயகர் முகத்தை அமைத்து அதன் தந்தங்களை  நீட்டி  நீட்டி கடலலயை பருகும்படி அமைத்தான் தும்பிக்கை ஒரு மாநாகம்   போல வெகுதூரம் சென்றிருந்தது.

ஜெயராமுடன் நாய்கள் ஓடிப்பிடித்து கடற்கரையில் விளையாடின. திடீரென ஒரு மாபெரும் வானவில் எங்கள் முன்னே எழுந்தது. ஒரு நாளில் எத்தனை பரிசுகள் ? திகைப்பாக  பரவசமாக இருந்தது

அங்கே அமர்ந்திருக்கையில் ஒரு புதியவர் வேள்பாரியையும் வெண்முரசையும் ஒப்பிட்டால் எது சிறந்தது என்னும் கேள்வியை முன்வைத்தார். அப்படி வெண்முரசுடன் ஒப்பிடும் படியான படைப்புக்கள் ஏதும் இல்லை என்று புன்னகை மாறாத முகத்துடன் சொல்லியதோடு அக்காலை இனிதே நிறைவுற்றது.

பின்னர் ஜெ வந்ததும் மேலும் மெருகேறியது அமர்வுகள். அருணா உணர்வுபூர்வமாக முந்தின நாளின் அமர்வுகளை குறித்தும் கவிதைகளை குறித்தும் உரையாற்றினார். அவர் பேசுவதை கேட்பதைக் காட்டிலும் பார்ப்பது மேலும் அழகு கண்களின் உருட்டல், உணர்வு மேலீட்டில் மிகலேசாக திக்குவது,  கம்மலும் தெளிவுமாக கலவையான அவர் குரல், விரல்களின் நாட்டியமும் உடலசைவுமாக  ரம்மியம் எப்போதும் போல

அவரது நினைவாற்றலையும் வாசிப்பின் வீச்சையும் வழக்கம் போலவே பிரமிப்புடன் கவனித்தேன். வெள்ளைப் பல்லி விவகாரம் வெளியிடப்பட்டது.வாங்கி வந்திருக்கிறேன் வாசிக்கவேண்டும்

வெள்ளைப்பல்லி விவகாரம்

பிறகு ஜெவின்  ஆக சிறந்த அந்த  உரை. கவிதைக்கு இன்றியமையாத மூன்று இன்மைகளை பற்றி சொன்னார்.

கூடவே இன்றைய கவிஞர்களின் கவிதைகளில் இருக்கும் மூன்று தேவையில்லாதவைகளையும் விளக்கினார், அந்த பிரபல பத்திரிகையில் வந்த என் கவிதையின் நினைவு வந்து வெட்கினேன் ஊருக்கு வந்ததும் என் இணையப் பக்கத்திலிருக்கும் அதைப் போன்ற அசட்டுக்கவிதைகளையெல்லாம் ஒரேயடியாக நீக்கிவிட முடிவு செய்துகொண்டேன்

அந்த அமர்வுடன் அன்றைய நிகழ்வும் கவிதை முகாமும் முடியவிருந்தன . மதிய உணவிற்கு பின்னர் கலையலாம் என்றும் சொல்லப்பட்டது அனைவரும் இறுதி நிகழ்வில் லக்‌ஷ்மி மணிவண்னன் அவர்களின் உரையை கவனித்துக்கொண்டிருந்தோம் ஜன்னல்வழியே பார்க்கையில் ஆனந்த் ஸ்ரீனிவாசன் உணவுண்ணும் மேசைகளை ஒரு பழந்துணியால் பொறுமையாக ஒருமுறைக்கு பலமுறையாக துடைத்து சுத்தம் செய்துகொண்டிருந்தார்.  கண்ணும் நெஞ்சும் நிறைந்தது இது குடும்பம் இது குடும்பம் என்று மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. அந்த  விடுதியின்  ஆரஞ்சு வண்ண சீருடையிலிருந்த முதல்நாளிலிருந்தே வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த ஒரு துரும்பை கூட எடுத்து போடாத, நான் குந்தாணி என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட அந்த பெண் பணியாளர் அவர் துடைப்பதை ஆர்வமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

.லக்‌ஷ்மி மணிவண்ணன்  நிறைவுரையில் சரஸ்வதி தேவி பலிக்கல்லில் இருபது வருடங்களாவது படுக்கப்போட்டு பலிகொடுத்த பின்னரே நல்ல கவிதை வருமென்றார்.

அப்படியனால் நான் என் அபத்தக்கவிதைகளை அழிக்க வேண்டியதில்லை. இன்னும் 19 வருடங்களில் நிச்சயம் செறிவும் கவிதைக்கணங்களும் நிறைந்த, புரட்சியும் தன்னிரக்கமும், பொய்யுமில்லாத நல்ல கவிதையை என்னாலும் எழுத முடியும்

சிவாத்மாவின் சுருக்கமான இனிமையான பாடலுடன் விழா நிறைவுற்றது

மதிய உணவுக்கு பின்னர் ஒவ்வொருவராக விடைபெற்றுக்கொண்டனர். கடைசியாக கடலை காண சென்றேன் விடைபெற்றுகொள்கையில் என் காலடிச்சுவடை ஒரு பேரலை வந்து அள்ளிச்சென்றது.

என்னை அருணா கன்னியாகுமரி சுற்றி காண்பிப்பதாக சொல்லி இருந்ததால் நான் அனைவரும் புறப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்

லக்‌ஷ்மி மணிவண்ன அவர்களும் ஆனத்குமாரும் ஒய்வொழிச்சலும் உறக்கமும் இன்றி எல்லாவற்றையும் பார்த்து பார்த்து  செய்துகொண்டிருந்தார்கள். ஆனந்த்  சோர்வை காட்டிக்கொள்ளவே இல்லை பம்பரமாய் சுற்றி புறப்பட ஏற்பாடு செய்வது, அங்கிருந்த நாய்களுக்கு அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளாத படிக்கு தனிதனியே உணவிடுவது, எல்லா வேளைக்கும் அந்த குந்தாணி அம்மாவுக்கு அவர் கொண்டு வந்த அனைத்து பாத்திரங்களிலும் நிறைய  உணவை கொடுப்பதுமாக இருந்தார்.

ஆனந்துக்கு விருது என தெரியவந்ததும் அவர் நாய்களுக்கு சோறிட்டதும் அந்த அம்மாளுக்கு அவரளித்த சோறும் அதன் பின்னரே அவர் கவிதைகளும் நினைவுக்கு வந்தன

இவ்விருதை வாங்க மிக பொருத்தமான  கவிஞர், மிகப் பொருத்தமான மனிதரும் கூட 

அனைவரும் சென்ற  பின்னர் நான் அருணா, கதிர் மற்றும் நவீன் கன்னியாகுமரி சென்றோம்.

நல்ல கடைத்தெருவொன்றை அங்கு பார்த்தேன்.பலவித பொருட்கள் சங்கு,  சங்கு வளை, கிளிஞ்சல், சோழி, சங்குகளில் திரைச்சீலை, தொப்பிகள், மலிவு விலை உடைகள் பொம்மைகள் என்று ஏராளம்.  ஒவ்வொன்றாக பார்த்ததே எல்லாவற்றையும் வாங்கியதுபோல மகிழ்ச்சி அளித்தது

முதன்முதலாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டேன் அருணா வாங்கிக்கொடுத்து. நான் நினைத்திருந்தது போல  அது பயங்கர காரமெல்லாம் இல்லை கடலை மாவு தோல் போர்த்திய பசுதான் அது. காந்திமண்டபம் சென்றோம். குமரி முனையில் பாசம் வழுக்கி விடாமல் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நானும் அருணாவும் கால் நனைத்துக்கொண்டோம். 

வள்ளுவர் சிலை, மாயம்மா ஆலயம், காந்திமண்டபம்  என்று ஒவ்வொன்றாக பார்த்தோம்

அருணா எல்லாவற்றையும் புத்தம் புதிதாக பார்க்கும் உற்சாக மனநிலையிலேயே இருக்கிறார். எங்களை யாரேனும் கவனித்திருந்தால்,  கன்யாகுமரியில்  பிறந்து வளர்ந்த நான்  அருணாவை அங்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று  நினைத்திருக்க கூடும் அப்படி எல்லாவற்றையும்  ஒரு சிறுமியின் குதூகலத்துடன் பார்க்கிறார் ரசிக்கிறார். அருணாவே எனக்கு ஓரிரவில் திடீரென வளர்ந்து பெரிதாகிவிட்ட சிறுமியை போலத்தான் தெரிந்தார்.

மேலும் அருணா ஒரு தகவல் சுரங்கம் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார் வள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்குமான படகுச்சவாரி குறித்து கேட்டதும் அந்த இரு படகுகளின்  பெயர்களையும்  சவாரி நேரங்களையும் கூட துல்லியமாக சொன்னார்.  

பிறகு குமரி அன்னை ஆலயம் . திரையிட்டிருந்தார்கள். கூட்டமே இல்லை

சிறப்பு அனுமதியில் முன்னால்  ஒரு இளம் தம்பதியினர் சிறுமகளுடன் அமர்ந்திருந்தனர்.

நீலப்பட்டாடை அணிந்திருந்த அந்த குழந்தை தன் சதங்கைச்சிறுகாலினால் முன்னிருந்த ஒரு கயிற்றை உதைத்துக்கொண்டும் அவள் முன்னே ஒரு வாளியில் கொட்டிகிடந்த செந்தாமரை மொட்டுக்களை  எடுக்க தாவுவதுமாக இருந்தாள். குமரித்துறைவி நினைவுக்கு வந்தது.

திரை விலகி பல சுடராட்டுக்களில் அன்னையும் சிறுமியுமாக கண்ணார தரிசனம் கிடைத்தது.சங்குவளைகள் இரு ஜோடிகள் வாங்கிக்கொண்டேன். வெளியே வந்தோம் வள்ளுவர் சிலை  ஜகஜ்ஜோதியாக விளக்குகளுடன் ரம்மியமாக இருந்தது.

பிறகு சுசீந்திரம். ஓட்டுநர் சந்தேகித்த படி வாகன நெரிசல் இல்லாமல் விரைவில் போய் சேர்ந்தோம் அங்கே காரில் காத்திருந்த ஆனந்த் என்னிடம் ’’அக்கா உங்களுக்கு பழம் பறி வாங்கி கொடுக்க நினச்சிருந்தேன் இந்தாங்க’’ என்று நீட்டினர் குடும்பமல்லாது இது வேறென்ன?

  கோவிலுக்குள் நுழைகையில் தலவிருட்சம் சரக்கொன்றை பொன்னாய் பூத்து நிறைந்திருந்தது வாசலிலேயே. நல்ல தரிசனம் அங்கே. வெளியே போலி முத்து மாலைகளும் பலவித உணவுகளும் விற்றார்கள்.கடலை வறுபடும், கடலை மாவு, வேகும், சோளம் வாட்டும் வாசனை கூடவே வந்தது. பல வண்ண ரப்பர் பேண்ட் களை விற்கும் இரு சிறுமிகள் அங்கமர்ந்திருந்த முழங்கால்களுக்கு கீழ் இரு கால்களையும் இழந்த்திருந்த ஒரு பிச்சைக்காரரிடம் பணத்தை கொடுத்து சில்லறை மாற்றி கொண்டிருந்தார்கள் 

ஒரு நல்ல உணவகத்தில் இரவுணவு .முதன்முதலாக ரசவடை. என்னது ரசத்தில் வடையை போடுவார்களா? என்று முதலில் துணுக்குற்றாலும் சரி சாம்பார் வடை இருக்கிறது தயிர் வடையும் இருக்கிறது இடையில் இருக்கும் ரசத்திலும் இருப்பதுதானே நியாயம் என சமாதானமானேன்

இனிய தோழி அருணா, அவருடன் பழகுகையில் பேசுகையில் எனக்குள் எந்த  தயக்கமும் இல்லை பல்லாண்டுகள் பழகிய உணர்வை அவரால் அவரருகிலிருப்பவர்களுக்கு அளிக்க முடிகின்றது.

 என்னையும் கதிரையும் ரயிலடியில் விட்டுவிட்டு அருணா சென்றார் நினைவுகளின் எடையில் மூச்சு திணறிக்கொண்டு உறக்கமின்றி ரயிலில் இரவு கழிந்தது. காலை கோவையில் கதிரும் நானும் விடைபெற்றுக்கொண்டோம்.  சொந்த தம்பியை காட்டிலும் அன்புடனும் பொறுப்புடனும் என்னுடன் கதிர் வந்தார்

பொள்ளாச்சி வந்து கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு குளிக்கச் செல்ல கைக்கடிகாரத்தை கழற்றினேன். கடிகார பட்டைக்குள்ளிருந்து  மேசையில் உதிர்ந்தது கொஞ்சம் கடற்கரை மணல்

 என்னை வா வாவென்று அழைத்தும் நான் வராததால்,  கடல் தானே கொஞ்சம் என்னுடன் வந்துவிட்டிருந்தது.

ஸ்ரீபதி பத்மநாபாவின் ஒரு கவிதை இருக்கிறது. ஒரு காதலனும் காதலியும் சோடியம் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் நடந்து சென்று ஒரு பேருந்துக்காக காத்து நிற்பார்கள் வழக்கத்துக்கு மாறாக காதலி அவன் தோளில் தலைசாய்த்துக் கொண்டதும் காதலன் இனி காதலைப் பற்றி தான் கவிதை எழுத வேண்டியதில்லை என்று நினைப்பதாய் முடியும் அது

 மனம் முழுக்க   ராவணப்புல்லாக பிடித்து இறுக்கியபடி  நிறைந்திருக்கும் கவிதை முகாமின் இனிய நினைனவுகளே போதும், ஒருபோதும் நல்ல கவிதைகளை  எனனால் எழுதமுடியாவிட்டலும் என்று தோன்றியது.

உங்களுக்கும், லக்‌ஷ்மி மணிவண்னனுக்கும் ஆனந்த்குமாருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்

கிண்ணத்தை ஏந்துதல்

கருத்தரங்குகளில் கலந்து கொள்வதும், ஆராய்ச்சி கட்டுரைகளை பிரசுரிப்பதுமாக பரபரப்பான முனைவர் பட்ட ஆய்வின் இறுதி வருடங்களில் கர்நாடகத்தின் விவசாய பல்கலைக்கழகத்தில் நடந்த  சர்வதேச உணவு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது. நானும் என்னுடன் அதே துறையில் ஆய்வு செய்து கொண்டிருந்த தோழியும் கலந்துகொண்டோம்.    ஹெப்பல் என்னுமிடத்தில் நடந்த அந்த ஆய்வரங்கு அப்போதைய கர்நாடக முதல்வரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆய்வாளர்களும் அரசியலாளர்களுமாக ஆயிரக்கணக்கில் பங்கேற்பாளர்கள்.  முதல் நாள் அமர்வுகள் முடிந்த பின்னர் வருகை தந்திருக்கும் அதி முக்கிய பிரமுகர்களின் விமான பயண சீட்டுக்களுக்கான  கட்டணத்தை திரும்ப  கொடுக்கும் பணிக்கு எங்களை பணித்தபோது ஆர்வமாக ஒத்துக்கொண்டு, 1 மணி நேரத்தில் 6 லட்சம் ரூபாய்களை எந்த குளறுபடியும் இன்றி உரியவர்களுக்கு கொடுத்துவிட்டோம். முதல்வரின் கவனத்திற்கு இந்த விஷயம் போனதும் எங்களிருவருக்கும் அன்றிரவு நடக்க இருந்த பெரும் விருந்துக்கு அழைப்பு விடுத்து  அழைப்பிதழ் அட்டையையும் கொடுத்தனுப்பினார்.

பெங்களூருவின்  பூங்காக்களில்  ஒன்றில் இரவு விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. மாபெரும் உண்டாட்டு அது அங்கேதான் அழகிய வைன் கோப்பைகளை முதன் முதலில் பார்த்தேன்.  முதன் முதலாக மாநில எல்லையை கடந்திருந்த கிராமத்துப் பெண்ணான எனக்கு அந்த கோப்பைகளின் ஒயிலும் வடிவங்களும் பரவச மூட்டியது. பழரச பானங்கள் இருக்கும் பகுதியிலிருந்து தூரத்தில்  வைன் அருந்தி கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் அதுவரை சாதாரண கண்ணாடி டம்ளர்களை மட்டுமே பார்த்திருந்ததால், அந்த மெல்லிய தண்டுகளுடன் கூடிய, பளபளக்கும், பல வடிவங்களில் இருந்த கோப்பைகளின்  தோற்றம்  வசீகரமாயிருந்தது. 

அங்கிருந்து  வந்து பல வருடங்களாகியும்  மனதின் அடியாழத்தில் அவ்வபோது அக்கோப்பைகள் மினுங்கிக் கொண்டேயிருந்து, கல்லூரி பணிக்கு வந்து பல வருடங்களுக்கு பிறகு வைன் நொதித்தலில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு, வைன் நொதித்தலின் வேதிவினைகள் குறித்தெல்லாம் கற்பிக்கும் வாய்ப்பு அமைந்தபோது மீண்டும் அக் கோப்பைகளின் நினைவு மேலெழுந்து வந்தது.

கத்தரிக்கப்பட்ட தண்டுகளிலிருந்து திராட்சைக் கொடிகளை வளர்த்து பழங்களை அறுவடை செய்யும் அறிவியல் மற்றும் கலையான விட்டிகல்ச்சர்- (Viticulture)  தாவரவியலின் பிற துறைகளை போலவே   வெகு சுவாரசியமாக இருந்தது. திராட்சை பழங்களின்  சர்க்கரையே பின்னர் ஆல்கஹாலாக மாறுவதால்,  பழங்களின் brix  எனப்படும் சர்க்கரை அளவை, ஊசி போட்டுக்கொள்ளும் சிரிஞ்சை போன்ற ஒரு எளிய உபகரணத்தால் பழங்களில் குத்தி கணக்கிட்ட பின்னர் திராட்சை தோட்டங்கள்  ஏலம் எடுக்கப்படுகின்றன. இத்துடன் திராட்சைக் கொடிகள் வளரும் மண்ணின் கார அமிலத்தன்மை, வளம்,  அவற்றிற்கு பாய்ச்சப்பட்ட நீரின் நுண் சத்துக்கள்,  பெய்த மழையின் அளவு, அவற்றின் மீது விழுந்திருக்கும் சூரிய ஒளியின் அளவு இப்படி பல காரணிகளும் ஏலம் எடுக்கையில் கணக்கிடப்படுகின்றன. அறுவடையான பழங்களிலிருந்து வைன் தயாரிக்கும் கலை வினாலஜி (oenology) என்றழைக்கப்படுகிறது. இத்துறையில் ஆழ்ந்திருக்கையில்தான்  வைன் கோப்பைகளை குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

 கண்ணாடி பொது வருடத் துவக்கத்துக்கு முன்னர் 4000 ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தும், அதன் உலகளாவிய பெருமளவிலான பயன்பாடு 18ஆம் நூற்றாண்டுக்கு பிறகே இருந்தது. கண்ணாடிக் கோப்பைகளின் வரலாறும்  கண்ணாடியின் பயன்பாடு வந்ததிலிருந்தே இருக்கிறது.

இறந்த விலங்குகளின் கொம்புகளை்க குடிகலன்களாக பயன்படுத்திய ஆதி காலத்துக்கு பிறகு மரக் கோப்பைகளும் தோல்பைகளுமே திரவக்கொள்கலங்களாக இருந்தன.  ப்ளைஸ்டொஸீன் காலத்தில்தான் களிமண் கோப்பைகள் புழக்கத்திற்கு வந்தன. பின்னர் வெண்கலக் காலத்தில் செம்பு உள்ளிட்ட உலோகக் கோப்பைகள் பல வடிவங்களில் இருந்தன. ரோமானியர்கள்  இரட்டை இலையும் ஒற்றை மொக்கும் பொறிக்கப்பட்ட பொன் மற்றும் வெள்ளிக் கோப்பைகளை அறிமுகப்படுத்தினர். பொதுயுகம் 5 ஆம் நூற்றாண்டில் உயர் குடியினருக்கு கண்ணாடிக் கோப்பைகளும்  சாமானியர்களுக்கு மண்குடுவைகளும் என பருகும் கோப்பைகளில் வேறுபாடு  காணப்பட்டது. அதன் பின்னர் பலவிதமான கோப்பைகள் பல வடிவங்களில் பற்பல பயன்பாடுகளுக்கான இருந்தன.. 

 1600’க்கு பிறகு புழக்கத்திலிருந்த சில சுவாரஸ்யமான கோப்பைகளின் பட்டியல்

 • Piggin-சிறிய தோல் கோப்பை
 • Noggin-மரக் குடுவை
 • Goddard-pewter –தேவாலயங்களில் சமய சடங்குகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோப்பைகள்
 • Bombard-உயரமான அலங்கரங்கள் மிகுந்த சீசாக்கள் போன்ற கோப்பைகள்
 • Hanap-கூடைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் அலங்காரமான பெரிய பீப்பாய்கள்.
 • Tappit-இரவு தாமதமாக புறப்பட்டு செல்லும் விருந்தினர்களுக்கு, அவர்கள்  வீட்டிற்கு சென்ற பின்னர்  அருந்த பானம் நிறைத்துக் கொடுக்கும் மூடிகளுடன் கூடிய கோப்பை
 • Fuddling cup- இரண்டு மூன்று சிறு சிறு கோப்பைகளை ஒன்றாக இணைத்த புதிர் வடிவம். இதில் இருக்கும் பானத்தை  சிந்தாமல் அருந்துவது ஒர் விளையாட்டாக இருந்திருக்கிறது
 • Puzzle jug- கழுத்துப்பகுதியில் சிறுதுளைகளிடப்பட்டிருக்கும் கோப்பையான இதில் விரல்களால் துளைகளை மூடியபடிக்கு லாவகமாக  பானம் சிந்தாமல் அருந்தவேண்டும் 
 • Yard glass-  சுமார் 90 செமீ உயரமுள்ள, கைகளில் பிடித்துக் கொண்டபடி அருந்தும் கோப்பை.  .
 • Milk jugs-பசுமாட்டை போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும் வாலே கைப்பிடியாக இருக்கும் பால் கோப்பைகள்
 •  kronkasa- மிக அழகிய மர சித்திர வேலைப்பாடுகளுள்ள ஸ்வீடனின் மரக்கோப்பைகள்
 • Gourd cup- உலர்ந்த சுரைக்குடுவைகள்  மரக்கட்டை கைப்பிடிகளுடன்
 • Toby jugs- மாலுமிகளும், பாதிரிமார்களும் காவலதிகாரிகளும் மட்டும் உபயோகப்படுத்தியவை
 • Rhyton- யுரேஷியாவில் பிரபலமாயிருந்த உலோகங்களால் செய்யப்பட்ட விலங்குகளின் தலையை[போலிருக்கும் கோப்பைகள்
 • விளிம்பில் வெள்ளி வளையம் இருக்கும்   தேங்காய் சிரட்டை மற்றும் நெருப்புகோழியின் முட்டையோட்டு கோப்பைகள்
 • வைனின் சுவையை, தரத்தை சோதிப்பவர்களுக்கான சிறப்பு பீங்கான் கோப்பைகள்
 • அளிக்கப்பட்டிருக்கும் பானத்தில் நஞ்சு கலந்திருக்க வில்லை என்பதை உணர்த்தும் இருபுறமும் கைப்பிடிகள்  வைத்திருந்த கோப்பைகள்.
 • இருகண்ணாடித்தகடுகளை ஒன்றாக  சிறிய தட்டை போல இணைத்த அடிப்பாகத்துடன் கூடிய கோப்பை. கடைசித்துளி பானத்தை அருந்தினால் மட்டுமே இந்த அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு மனிதனின் சித்திரம் புலனாகும்
 • ஒன்றின் மீது ஒன்றாக இரட்டை அடுக்கு கோப்பைகள் தூரதேசம் செல்லவிருக்கும் தோழர்களை வழியனுப்புகையில் கொடுக்கும் விருந்தின்போது பயன்படுத்தப்பட்டது அதில் நட்பை குறிக்கும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்
 • திருமண விருந்துகளில் இரட்டை அடுக்கும் அலங்காரங்களும் கொண்டிருக்கும் வைன் கோப்பைகள் இருந்தன. மேலடுக்கு வைனை மணமகனும், பின்னர் கீழடுக்கில் உள்ளதை மணமகளும் அருந்துவர்
 • இந்திய திருமணங்களில் மாலை மாற்றிக் கொள்ளுதல் போல ஜப்பானிலும் மணமக்கள் மூன்றடுக்கு வைன் கண்ணாடிக் கோப்பைகளை மூன்று முறை மாற்றிக் கொள்ளும் வழக்கம் இருந்தது.அதன் பின்னர் அவ்வடுக்கு கோப்பை மதுவை மணமக்கள் அருந்துவார்கள். 
 • பானங்களில் நஞ்சு கலந்திருந்தால், நிறம் மாறி  அதை அடையாளம் கட்டும் கோப்பைகளும், கொதிநீர் ஊற்றுகளிலிருந்து நரடியாக நீரை பிடித்து அருந்தும் ஸ்பா கோப்பைகளும்,  உள்ளே நிறைக்கப்படும் பானங்க்களுக்கு ஏற்ப நிறம் மாறும் கோப்பைகளும், பேரரசர்களின்  பிரத்யேக பொன்கோப்பைகளுக்கென தனியே காவல்காரர்கள் கூட இருந்தனர்

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்கை வரலாறு மற்றும் புவியியல் நிகழ்வுகளை ஆராய்வதில் கழித்தவரான, ரோம எழுத்தாளரும், வரலாற்றாளரும், தீராப்பயணியும் இயற்கை மெய்யிலாளருமான பிளினி (Pliny -23-79 A.D.)  கண்ணாடி கோப்பைகளின் வரவுக்குப் பின்னர் பொன் மற்றும் வெள்ளிக்கோப்பைகளைத் தவிர்த்து அனைவரும்  கண்ணாடிக்கோப்பைகளையே பெரிதும் விரும்பியதைக் குறிப்பிட்டிருக்கிறார்.  பிளினி, பீனிசிய வணிகர்கள் பொ.யு. மு. 5000 வாக்கில் சிரியாவின் பிராந்தியத்தில் முதல் கண்ணாடியை உருவாக்கியதாக கூறினாலும், தொல்லியல்  ஆதாரங்கள், கண்ணாடி தயாரித்த முதல் மனிதன் பொ.யு.மு. 3500 வாக்கில் கிழக்கு மெசபடோமியா மற்றும் எகிப்தில் இருந்ததாக உறுதியளிக்கிறது.

 பொ.யு.மு. 1ஆம் நூற்றாண்டில், சிரிய கைவினைஞர்கள் ஊதுகுழாய் முறையில் கண்ணாடி உருவாக்குவதை கண்டுபிடித்த பின்னர் கண்ணாடி உற்பத்தி எளிதாகவும், வேகமாகவும், மலிவாகவும் ஆனது. ரோமப் பேரரசில் கண்ணாடி உற்பத்தி செழித்து இத்தாலியிலிருந்து அதன் ஆட்சியின் கீழ் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியது.  பொ.யு. 100’ல் எகிப்திய நகரமான அலெக்ஸாண்டிரியா கண்ணாடி உற்பத்தியின் மிக முக்கியமான மையமாக இருந்தது. தொடர்ந்த  இரண்டாம் நூற்றாண்டில் ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்தில் கண்ணாடிக்குடுவைகளும், வைன் உள்ளிட்ட பானங்களை பருகுவதற்கான கோப்பைகளும் செய்யப்பட்டது.

தொடர்ந்து நிறமற்ற ஒளி உட்புகும் கண்ணாடிகளே உருவாக்கப்பட்டு கொண்டிருக்கையில் நாலாம் நூற்றாண்டில்தான் காடுகளிலிருந்து பொட்டாசியமும், இரும்புச்சத்தும் கொண்ட மணலிலிருந்து பச்சைக் கண்ணாடி தயாரிக்கப்பட்டது. அப்போதிலிருந்துதான் வைன் பாட்டில்களும், வைன் கோப்பைகளும் பச்சை நிறக் கண்ணாடியில் உருவாக்கப்பட்டன.  பானம் ஊற்றப்படும் மேல் பகுதி குறுகலாகவும், நீளமாகவும் செய்யப்பட்டு வந்த கோப்பைகள் காலப்போக்கில்  குறுகிய வடிவிலிருந்து அகலக்கிண்ணங்களாகின. 

உள்ளே  ஊற்றப்படும் வைனின் நிறத்தை பச்சைக் கண்ணாடி மறைத்து விடுவதால் பச்சை தண்டுகளும், நிறமற்ற கிண்ணங்களுடனான கண்ணாடி கோப்பைகள் பின்னர் புழக்கத்தில் வந்தன. குறிப்பாக  Rieslings மற்றும் Gewürtztraminers. இரண்டு வைன் வகைளும் இப்படி பச்சை தண்டுகளை உடைய கண்ணாடி கோப்பையில் மட்டுமே பரிமாறப்பட்டன.

13 ஆம் நூற்றாண்டில் வெனிஸ் கண்ணாடி கோப்பைகளின் உற்பத்தி மையமாக இருந்தது. அப்போதுதான்  கண்ணாடி கோப்பைகளுக்கு பொன்முலாம் பூச்சிடுவதும், சித்திரங்கள் பொறிக்கப்படுவதும் துவங்கியது. 

15 ஆம் நூற்றாண்டில்  இரும்பு ஆக்ஸைடுகளினால் உருவாகும் பச்சை அல்லது மஞ்சள் நிறங்கள் இல்லாத தூய ஒளி ஊடுருவும் கிரிஸ்டல்லோ கண்ணாடி கோப்பைகள், (Cristallo) மாங்கனீஸ் ஆக்சைடு கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் லேட்டிமா எனப்படும் தூய வெண்ணிற பால் கோப்பைகளும், கருப்பு,இளஞ்சிவப்பு மண் நிறங்களிலும் கோப்பைகளும் வடிவமைக்கப்பட்டு பிரபலமாயின.

 பின்னர் கோப்பைகளில் பலவகையான அலங்காரங்களும், சித்திர வேலைப்பாடுகளும் நுண்ணிய அலங்காரங்களும் சேர்க்கப்பட்டு மிக ஆடம்பரமான கோப்பைகள் வடிவமைக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி கோப்பைகள் பெரும்பாலானோரின் விருப்பத்திற்குரியவைகளாக இருந்தன.

16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோப்பையின் தண்டுகளில் திருகு வேலைப்பாடுகள் இருந்த   Air Twist கோப்பைகளும், கண்ணாடி நூலிழைகள் இருக்கும் Opaque Twist கோப்பைகளும் மிகப் பிரபலமாயிருந்தன.  1700களில் ரோமானியர்கள் கண்ணாடிக் கோப்பைகளை செய்யத் தொடங்கினார்கள்.  பிறகு கிண்ணப்பகுதியிலும் தண்டிலும் உள்ளே காற்றுக்குமிழ்கள் இருக்கும் கோப்பைகளும், அலங்காரங்கள் ஏதுமில்லா மெல்லிய கண்ணாடித்தண்டுகளுடன்  கூடிய கோப்பைகளும் 1740’ல் திடீரென  பிரபலமாயின.

 பிரிட்டனில் 1746’ல் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் ஆட்சியில் கண்ணாடி தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரி மிக அதிகமாக இருந்ததால் கண்ணாடி கோப்பைகளின் அளவு மிக சிறியதாக இருந்தது 1811ல் இவ்வரி விலக்கப் பட்டபோது பெரிய அளவிலான கோப்பைகள் மீண்டும் புழக்கத்தில் வந்தன. இங்கிலாந்தில் பெரும்பாலும் 125 மிலி கொள்ளளவுள்ள கோப்பைகளே பயன்பாட்டில் இருந்து வந்தது பலவருடங்களுக்கு பின்னர்தான் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சிறிய அளவிலான கோப்பைகளும் சந்தைக்கு வந்தன  

 துல்லிய ஒளி ஊடுருவும் கண்ணாடி கோப்பைகள் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டன. ஒரே ஒரு அவுன்ஸ் கொள்ளளவுள்ள கோப்பைகள் 19 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டு  ஜோடிகளாக விற்பனை செய்யப்பட்டன.1950ல் தான் தற்போது புழக்கத்தில் இருக்கும் வடிவில் தண்டும் கிண்ணப்பகுதியுமான் கோப்பைகள் சந்தைக்கு வந்தன.

பெரும்பாலான வைன் கோப்பைகள் தண்டுடன் இணைக்கப்பட்ட அகலக்கிண்ணமும் அடியில் வட்டத்தட்டு போன்ற பகுதியும் கொண்டவை ( bowl, stem, and foot). பரிமாறப்பட்ட வைனின் சுவை மணம் இவை அருந்துபவரின் நாசிக்கும் உதட்டிற்கும் மிகச்சரியான கோணத்தில் இருந்தால் மட்டுமே  முழுமயாக சுவையை அனுபவிக்க முடியும், அதன்பொருட்டே ஒவ்வொரு வகையான வைனுக்கும் பிரத்யேக வடிவங்களில் கோப்பைகள் வடிவமைக்கபட்டிருகின்றன.

   எல்லாக்கோப்பைகளுமே அகலமான கிண்ணங்களை கொண்டவையல்ல. குறுகலான நீளமான குழலைபோன்ற கிண்ணப்பகுதிகளைக் கொண்டிருப்பவைகளும், தண்டுகள் இல்லாமல் கிண்ணங்கள் மட்டுமேயான கோப்பைகளும் கூட புழக்கக்தில் உள்ளன.

சிவப்பு வைனுக்கான கோப்பைகள் அகலமான கிண்ண அமைப்பு கொண்டவை. காற்றின் பிராணவாயு சிவப்பு வைனுடன் கலந்து oxidation நடக்க இந்த அகலப்பகுதி உதவுகின்றது

சிவப்பு வைனுக்கான கோப்பைகள் பலவகைப்படும்

Bordeaux glass: இது உயரமான காம்புடன் அகலக்கிண்ணமும், அருந்துகையில் வாயின் உட்புறத்துக்கு நேரடியாக வைனை செலுத்தும்படியும் வடிவமைக்கப்பட்டது

Burgundy glass:   முன்பு சொல்லபட்டிருப்பதை விட அகலம் அதிகமான கிண்ணப்பகுதி கொண்டவை, pinot noir போன்ற துல்லிய சுவையுடைய வைனுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது, இது வைனை நாவின் நுனிக்கு கொண்டு வரும்.

வெண்ணிற வைனுக்கான கோப்பைகளின் அளவுகளும் வடிவங்களும் பல வகைப்படும். குறுகிய நீண்ட மேற்புறமுள்ளவை, அகலமான ஆழம் குறைவான கிண்ணங்களுள்ளவை என்று பலவிதங்களில் இவை உள்ளன. வெண்ணிற வைன் சிவப்பைப்போல அதிகம் oxidation தேவைப்படும் வகையல்ல எனவே மேற்புறம் அகலம் குறைவான வடிவிலேயே இக்கோப்பைகள்  இருக்கும். இளஞ்சிவப்பு வைனும் வெண்ணிற வைனுக்கான கோப்பைகளிலேயே வழங்கப்படுகின்றது.

ஷேம்பெயின் போன்ற மினுங்கும் வைன் வகைகளுக்கு குறுகிய குழல் போன்ற கிண்ணங்கள் இருக்கும் கோப்பைகளே பொருத்தமானவை.  sparkling வைனுக்கான கோப்பைகள் நீளமாகவும் ஆழமான கிண்ணங்களுடையதாகவுமே இருக்கும். இக்கோப்பைகள் demi flute, flute narrow, tall flute & glass என நான்கு வகைப்படும்

ஷெர்ரி கோப்பைகள் நல்ல நறுமணமுள்ள, ஆல்கஹால் அளவு அதிகமான பானஙகளான sherry, port, aperitifs, போன்றவற்றிற்கானவை ஷெர்ரி கோப்பைகளில் copita மிக பிரபலமானது.

பொக்காலினோ கோப்பைகள்  பிரத்யேகமாக சுவிட்ஸர்லாந்தின் அடர் நீல நிற திராட்சைகளிலிருந்து பெறப்படும்  மெர்லாட் வைனுக்கானவை. இவை 200 மிலி மட்டுமே கொள்ளும்

தற்போது வைன் கோப்பைகள் உடையும் சாத்தியங்களை குறைக்க  கண்ணாடியுடன் டைட்டானியம் சேர்க்கப்படுகின்றது .

வைன் சுவைத்தல் என்னும் வைனின் தரத்தை சோதிக்கும் நிகழ்வு கோடிகளில் புழங்கும் வைன் தொழிற்சாலைகளின் மிக முக்கிய நிகழ்வாதலால்  (ISO 3591:1977) ISO  தரக்கட்டுப்பாடு மிகத்துல்லியமாக பின்பற்றப்படும். அந்த சோதனைக்கு உபயோகப்படும் கோப்பைகள் மிகத்துல்லியமான அளவுகளிலும்,வடிவங்களிலும் தயாரிக்கப்படும்.  

பல வடிவங்களில் இருக்கும் வைன் கோப்பைகளின் வசீகர வடிவம் அந்த பானத்தை ரசித்து ருசிப்பதற்கான் காரணங்களில் முக்கியமானதாகி விட்டிருக்கிறது. ஒரே வைனை வேறு வேறு கோப்பைகளில் அருந்துகையில் சுவையும் மாறுபடுகிறது என்று வைன் பிரியர்கள் சொல்லக் கேட்கலாம். வைனை விரும்பும் அளவுக்கே வைன் கோப்பைகளை விரும்புபவர்களும் சேகரிப்பவர்களும் உண்டு.

கோப்பைகளின் விளிம்பு எத்தனை மெல்லியதாக உள்ளதோ அத்தனைக்கு வைனை  ஆழ்ந்து ருசித்து அருந்தலாம்., விளிம்புகள் கூர்மையாக இல்லாமல் மென்மையாக்க பட்டிருப்பது வைனை நாவில் எந்த இடையூறுமின்றி சுவைக்க உதவுகின்றது. கிண்ணப்பகுதியை கைகளால் பற்றிக்கொள்கையில் உடலின் வெப்பத்தில் வைனின் சுவை மாறுபடலாம் என்பதால் கோப்பைகளை எப்போதும் தண்டுப்பகுதியை பிடித்தே கையாள வேண்டும்.

ஒரே கோப்பையில் அனைத்து விதமான வைன்களையும் அருந்தலாம் எனினும் வைனை அருந்துதல் என்பது  தனிமையில் நிலவின் புலத்தில் நனைந்தபடிக்கோ அன்றி  மென்சாரலில் மலைச்சரிவொன்றை நோக்கியபடி கவிதையொன்றை வாசிப்பதை போலவோ மிக நுட்பமான ஒரு அனுபவம் என்பதால் கோப்பைகளின் வேறுபாடு சுவையுடன் தொடர்புடையதாகி விட்டிருக்கிறது.  ஊற்றப்பட்ட வைனை கோப்பையின் உள்ளே மெல்ல சுழற்ற ஏதுவாக கிண்ண பகுதியின் அளவு இருத்தல் அவசியம்

வைன் கோப்பை வடிவமைப்பில்:.

 • எளிதில் கவிழ்ந்துவிடாமல் இருக்க உறுதியான அடிப்பகுதி.
 • கின்ணப்பகுதியை விரல்கள் தொட்டுவிடாத தூரத்தில் பிடித்துக்கொள்ள ஏதுவான நீளத்தில் தண்டுப்பகுதி.
 • வைனை சுழற்றி நுகர்வதற்கு வசதியான அகலத்திலும் ஆழத்திலும் உள்ள கிண்ணப்பகுதி
 • கோப்பையின் உறுத்தும் விளிம்பை உதடுகள் உணராவண்ணம் கவனமாக உருவாக்கப்பட்ட மென் விளிம்புகள்.

இவை நான்கும்  மிக முக்கியமானவை

இப்போது கண்ணாடி கிண்ணங்களை காட்டிலும் உறுதியும், நுட்பமான வேலைப்பாடுகளும் கொண்ட கிரிஸ்டல் கிண்ணங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. தண்டுப்பகுதி இல்லாமல் வெறும் கிண்ணம் மட்டுமே இருக்கும் சாசர் போன்ற கோப்பைகளும் பயன்பாட்டில் இருக்கின்றன என்றாலும் தண்டுகள் உள்ளவையே மிக அதிகம் பேரின் விருப்பத்துக்கு உகந்தவை

வைன் பிரியர்களின் ஏகோபித்த கருத்து கோப்பைகளின் வடிவத்திற்கும் வைனின் ருசிக்கும் தொடர்பிருக்கிறது என்பதுதான் எனினும் இப்படிச் சொல்லுபவர்களுக்கும் அதன் அடிப்படையை சொல்லத் தெரி்வதில்லை. இதற்கு அறிவியல் ஆதாரமும் இல்லைதான். எனினும் வைன் கிண்ணங்களின் வடிவத்திற்கும் வைனின் சுவைக்குமான. குறிப்பாக ஆண்களின் சுவைக்கான தொடர்பு உளவியல் காரணங்களைக் கொண்டது என்று சொல்லலாம்

வைன் கோப்பைகளின் வடிவத்திற்கான சுவாரஸ்யமான பின்னணிக்கு வரலாம். அறுவடை குறைவு, பசி, பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு இவற்றால் தவித்த மக்களின் மன்றாட்டுக்கு பதிலாக  ’’ரொட்டி இல்லை என்றால் அவர்கள் கேக் உண்ணலாம்’’ என்று பதிலளித்ததாக சொல்லப்படும் பிரஞ்சு புரட்சியின் போது கில்லட்டில் தலை துண்டித்து கொல்லப்பட்ட   மேரி அண்டோய்னெட் (1755-1793, (16ஆம் லூயிஸி ன் மனைவி) என்னும் சீமாட்டியின் மார்பகங்களின் வார்ப்பிலிருந்து உருவாக்கப்பட்ட தண்டுப்பகுதிகளற்ற வைன் கோப்பைகள் வெகு பிரசித்தம், என்றும் அவரது மார்பின் மெழுகு அச்சுக்களிலிருந்தே வைன் கோப்பைகள் அப்போது தயாரிக்கப் பட்டதாகவும், வைனை அக்கோப்பைகளில் அருந்துபவர்கள் அனைவரும் மேரியின் ஆரோக்கியதிற்கென அருந்துவதாகவும் நம்பிக்கை நிலவியது

15 ஆம் லூயிஸ் காதலியான ட்யூ பொம்பாதோர்  (1721-1764): தன் காதலின் சாட்சியாக தன் மார்பகங்களின் மீது பித்துக்கொண்டிருந்த லுயிஸூக்கு  மார்பின் மெழுகு வார்ப்பை எடுத்து  தயாரிக்கப்பட்ட கோப்பைகளிலேயே ஷாம்பெயின் பரிமாறினாராம்

இதே போன்ற மார்பக மெழுகு வார்ப்பு கோப்பை கதையே நெப்போலியனே திகைக்கும் அளவிற்கான  ஷேம்பெயின் செலவு கணக்குகள் கொண்டிருந்த நெப்போலியனின் மனைவியான பேரரசி ஜோஸ்பினுக்கும் சொல்லப்படுகின்றது

இரண்டாம் ஹென்றியின் காதலியான டயானாவின் (1499-1566): இடது மார்பகத்தின் வடிவிலான கோப்பைகளில் மார்பகங்களின் சித்திரங்களும் வரையப்பட்டிருந்ததாக சொல்லபடுகின்றது

Helen of Troy புகழ் ஹெலெனின் அழகிய மார்பகங்களின் வார்ப்புக்கள் அவளது கணவர் மெனிலாஸ் எடுக்கப்பட்டு அவருக்கான வைன் கோப்பைகளை வடிவமைத்துக்கொண்டாரென்கிறது மற்றுமொரு கதை.

இவ்வாறு பெண்களின் மார்பக வடிவே வைன் கோப்பைகளின் ஆதார வடிவம் என்பதற்கான கதைகள் ஏராளம் இருப்பினும், உண்மையில் தண்டுப்பகுதி அற்ற அகலக்கிண்ண கோப்பைகளை  17 ஆம் நூற்றாண்டில் ஒரு துறவியே கண்டுபிடித்தார். 1663’ல் இங்கிலாந்தில் கண்ணாடி கோப்பைகள் தண்டுகளின்றி உருவாக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்களும் உள்ளன. அக்காலகட்டத்தில் மேற்சொன்ன எந்த காதலிகளும் இருக்கவில்லை.

ஆயினும் எப்படியோ வைன் அல்லது வைன் கோப்பைகளின் வரலாற்றில் மார்பக வடிவங்கள் குறித்து பல கதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அரச குடும்பத்து  விருந்துகளில், எந்த இளம் பெண்ணின் மார்பகங்கள் காலி வைன் கோப்பைகளுக்குள் கச்சிதமாக பொருந்துகிறதோ அவர்களே இளவரசர்களுடன் நடனமாட தெரிவு செய்யப்பட்டனர் என்கிறது மற்றொரு கதை

 இங்கிலாந்தின் சூப்பர் மாடலாகிவிட்டிருக்கும் அழகிய மார்பகங்களுக்கு சொந்தக்காரியான  கேத்தரினை (Katherine Ann Moss) அறியாத இளைஞர்கள் இங்கிலாந்தில் இருக்கவே முடியாது. தன் திறந்த மேனியை ப்ளேபாய், வேனிட்டி ஃபேர், போன்ற சஞ்சிகைகளில் ஏராளமாக வெளியிட்ட  பெருமைக்குரியவரான இவரின் மார்பகங்களின் வடிவில் லண்டனின் புகழ்பெற்ற உணவகம் வைன் கோப்பைகளை வடிவமைத்திருக்கிறது. அவரின் மார்பக அளவான் 34 என்பதுதான் உணவகத்தின் பெயரும். வைன் கோப்பை வரலாற்றின் பக்கங்களில் உண்மையும் இருக்கிறதென்கிறது இச்சம்பவம்.

ஒருவேளை வழங்கப்பட்ட வைனின் சுவையோ தரமோ சரியில்லை என்று புகாரளிக்கும் வாடிக்கையாளர்களை புளகாங்கிதப்படுத்தி வாயை அடைக்க செய்யப்பட்ட  வியாபார யுத்தியோ என்னவோ?

  பெண்களின் மார்பக மாதிரியில் வைன் கோப்பைகள் வடிவமைக்க பட்டதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் இல்லைதான் என்றாலும்,  மார்பகங்கள் மீதான ஆண்களின் மையலுக்கு வைன் கோப்பை வடிவங்களும் காரணமாக இருந்திருக்கும் என்பதை மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

வரலாற்று நாயகர்களில் பலருக்கு திரண்ட மார்பகங்கள் உள்ள பெண்களைக்காட்டிலும்  கச்சிதமான சிறிய மார்பகங்களுள்ள பெண்களே பிரியத்துக்கு உகந்தவர்களாயிருந்திருப்பதை அறிந்திருக்கிறோம்

இவ்வாறு  புனைவுகளும், வதந்திகளும், கற்பனைக் கதைகளும், ஆதாரபூர்வமான உண்மைகளும் பின்னிப்பிணைந்து நமக்கு காட்டுவது  என்ன?  ஆண்கள் மார்பகங்கள் மீதான ஈர்ப்பில்தான் அந்த வடிவத்திலிருக்கும் கிண்ணங்களில்  போதையூட்டும் பானங்களை அருந்துகின்றார்களா? அல்லது பெண் என்பவள் வெறும் சதைத்திரளே, பெண்கள்,ஆண்களை மகிழ்விக்கும் பொருட்டே பிறவியெடுத்திருக்கின்றனர் என்றெண்ணும் ஆணின்  ஆதிக்க மனோபாவத்தைத்தான் இக்கதைகள் நமக்கு காட்டுகின்றனவா? அருந்தியதும் தூக்கி வீசலாம், உடைக்கலாம், வேறு வேறு வடிவங்களில் இருக்கும் கோப்பைகளை முயற்சிக்கலாம். சலிப்பின்றி ஒன்றிலிருந்து இன்னுமொன்று தேடிச்செல்லலாம். போன்ற வேறேதேனும் காரணங்கள் இதன் பின்னனியில் இருக்குமா?

  அன்னை  முலையருந்துதல் என்னும் குறியீடு பலவகைகளில் புராணங்களில் சொல்லப்பட்டிருப்பதை பார்க்கலாம்.

எகிப்திய புராணங்கள் அன்னையிடம் முலையருந்தும் ஆண்மகவுக்கே ஆட்சிசெய்யும் அதிகாரமும் வலிமையும்  கிடைக்குமென்கிறது

 ஹெர்குலிஸ் ஹெராவின் சம்மதமின்றி அவள் முலையருந்தியே கடவுளானார் என்கின்றது ரோமானியப்புராணம். கோபமுற்ற ஹீரா முலைகளை கிழித்தெறிகையில் சொட்டிய துளிகளே பால் வெளியெங்கும் இப்போது மின்னி கொண்டிருக்கிறதாம். ஹெராவின் முலையருந்தியதாலே அவர் ஹெர்குலிஸ் எனப்பட்டார்.

 Tiber ஆற்றில் விடப்பட்டு, ஓநாய் முலையளித்து காப்பாற்றிய  இரட்டையர்களான ரோமுலஸும் ரீமஸுமே ரோமனிய பேரரசை நிறுவினர் என்கிறது ரோமானிய புராணங்கள் 

இப்படி பெண்ணினத்தின் முலைகள் புராண காலத்திலிருந்தே ஆட்சியின் அன்பின் சக்தியின் தெய்வீகத்தனமையின் குறியீடாகவே கருதப்பட்டும் நம்பப்பட்டும் வந்திருக்கிறது,

15 ஆம் நூற்றாண்டின் நூலான Tristan de Nanteuil, நடுக்கடலில் தன் பச்சிளம் சிசுவுக்கு பாலூட்டமுடியாமல் வருந்திய இளம்தாயொருத்தி கன்னிமேரியை வேண்டிகொண்டதும் மார்பகங்களில் பால் வெள்ளமெனப்பெருகியதை சொல்கின்றது.  யாலோமின் ’’மார்பகங்களின் வரலாறு’’ நூல்   கன்னி மேரியின் முலைப்பாலானது தேவகுமாரனின் குருதிக்கு இணையாகவே புனிதமானதாகவும்,  பல அற்புதங்களை நிகழ்தியதாகவும்  குறிப்பிடுகின்றது.

 ஐரோப்பாவின் தேவாலயங்கள்  அனைத்துமே கன்னி மேரியின்  முலைப்பால் பொடியை பாதுகாத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இறக்கும் தருவாயில் மாமனிதர்களின் உதடுகளில் வீழும் அன்னைத்தெய்வதின் முலைப்பால் துளிகளால் அவர்கள் உயிர்மீண்ட பல கதைகளை நாமும் கேட்டிக்கிறோமே.

பேரரசர் சார்லிமேக்னி கன்னி மேரியின் முலைப்பால் துளிகள் அடங்கிய தாயத்தை அணிந்துகொண்டே போர்களுக்கு சென்றார் என்கின்றது மற்றோரு கதை

பெத்லஹேமில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் செல்லும் பால் குகை தேவலயமான Milk grotto வில்தான் கன்னிமேரி குழந்தை இயேசுவுக்கு முலையளிக்கையில் பால் துளிகள் கீழே சிந்தியதாக தொன்மையான நம்பிக்கை நிலவுகிறது

 கிரேக்க புராணங்கள்  (mastos)  மாஸ்டோஸ் எனப்படும் மார்பகங்களைப்போலவே முலைக்காம்புடன் கூடிய கிண்ணம்போன்ற அமைப்பிலிருக்குமொரு வைன் கோப்பையை பற்றிச்சொல்லுகின்றது இரட்டைக் கைப்பிடிகளுள்ள இக்கோப்பை அன்னை தெய்வங்களுக்கான  பூசனைகளின் போது மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது

 ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வாளரான அட்ரியானி மேயர் ‘’வைன் கோப்பைகளும் மார்பகங்களும்’’ என்னும் ஆய்வுக்கட்டுரையில் மார்பக வடிவுக்கும் அளவுக்கும் வைன்கோப்பை வடிவமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு நேரடியானது என்று குறிப்பிடுகிறார்.

 பல சமூகங்களில் இந்த மார்பக வடிவ விருப்பம் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றது. 1983ல் அமெரிக்காவில் துவங்கப்பட்ட கவர்ச்சிகரமான சிக்கன உடையணிந்து தாராளமாக மார்பகங்களை காட்டிக்கொண்டு இருக்கும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் Breastaurants தொடர் உணவகங்கள் இன்றும் வெகு பிரபலம். குழந்தைகளின் பால் பாட்டில்களிலுள்ளதைப்போலவே நிப்பிள்களுடன் இருக்கும் பீர் டின்கள், Boob Tube beer bong,எனப்படும் முலைவடிவ பீர் உறிஞ்சும் உபகரணங்கள், பெண்களின் உள்ளாடையைப்போலவே வடிவமைக்கப்ட்ட வைன் பாட்டில்களின் அலமாரிகள் என வைனும் மார்பக வடிவங்களும் ஒன்றுடனொன்று தொடர்புடையதாகவே தான் இருந்து வருகிறது.

”நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும்,இந் நொய்து இலங்கை
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும், என் பின் பிறந்தாள்
மூக்கு அறவும், வாழ்ந்தேன் ஒருத்தி முலைக் கிடந்த
ஏக்கறவால்; இன்னம் இரேனோ, உனை இழந்தும்?”

 கம்பராமாயணத்தின் இவ்வரிகளுக்கு பெரும்பாலான உரைகள் சீதையின் முலையின் மீதான் விருப்பத்தினால் வேண்டியவர்களை இழந்து தங்கையின் மூக்கு அறுபட்டு இருப்பதாக ராவணன் வருந்துவதாகவே இருக்கும் ஆனால் சமீபத்தில் ஒரு காவிய முகாமில் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் இவ்வரிகளுக்கு வெகு சிறப்பானதொரு பொருள் அளித்தார். /ஒருத்தி முலைக்கிடந்த ஏக்கறவால்// என்பது ’ஒரு அன்னையின் முலைஅருந்திய உறவால்’ என்றார். அது மிகப்பொருத்தமல்லவா? அத்தகைய உன்னத உறவல்லவா அன்னைக்கும் மக்களுக்கும் இருப்பது. அதனுடனொப்பிட முடியாத சிற்றின்பங்களலல்லவா நம்முன்னே கொட்டிக்கிடப்பவை?

பச்சிளம் சிசுவாக அன்னை முலையருந்தியதிலிருந்து, மதுக் கோப்பைகள் வரையிலான பயணத்தில்,  கோப்பையின் வடிவங்களில் இருக்கும் அடிப்படை உளவியலலை நோக்குகையில்  ஆண்கள் விலகி வெகுதூரம் வந்துவிட்ட அன்னைமையின் மீதான் ஈர்ப்பாகவே  அது இருக்க முடியும்

 அன்னை முலையருந்திய நாட்கள் அளித்த பாதுகாப்புணர்வின் ஆழ்மன ஏக்கத்தையே  வைன் கோப்பைகளின் வடிவங்களில் தீர்த்துக் கொள்கிறார்களா ஆண்கள்?

 __________________________________________________________________________________________

« Older posts

© 2023 அதழ்

Theme by Anders NorenUp ↑