அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 8 of 39

420

 1971,ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல் பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு  தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டனர். அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம்  பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தை காட்டியது.

ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய அந்த ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர்.

வால்டோஸ் குழுவினர் தற்போது

மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த     நீலகாகிதத்துண்டை வைத்துவிட்டு ஜெஃப்ரி சைக்கிளில் புறப்பட்டு சென்றான்   அந்த காகிதத்தை குழுவின் மற்ற நால்வரும் தனித்தனியே எடுத்துப்பார்த்துவிட்டு அவர்கள் முன்பே பேசி வைத்திருந்ததை போல பள்ளியின் பின்புறம் விரிந்திருந்த காட்டின் தொடக்கத்தில் இருந்த மாபெரும் ஓக் மரத்தடியில்  மிகச்சரியாக மாலை 4. 20 க்கு  சந்தித்தார்கள்

தினந்தோறும் மாலை  4.20க்கு தேடல் பயணத்தை துவங்கிய அக்குழுவின் முயற்சி  இரண்டு மாதங்களில் வெற்றியடைந்து, அங்கு வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளின் இலைகளை போதைப்பொருளாக உருவாக்கி பயன்படுத்தவும் துவங்கிய அவர்கள் தங்களுக்குள் போதைக்கான ரகசிய குறியீடாக   4.20 என்பதை புழங்கினர். பிற்பாடு இந்த நேரம் பிறருக்கும் தெரிந்து 420, 4.20, 4:20 4/20 என்பவை கஞ்சா புகைத்தலுக்கான ரகசிய குறியீட்டு சொல்லாக மாறிவிட்டிருந்தது’

1991லிருந்து கஞ்சா புகைப்பவர்களின் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 20 அன்று 4/20 வது தேதி என்பதை குறிக்க  அமெரிக்க தெருக்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது தொடர்ந்த வருடங்களில்  கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்களையும், அவற்றை கட்டுப்படுத்துவதையும் காவல் துறையும் அதே 4.20 என்னும் என்பதை  சங்கேத குறியீடாக பயன்படுத்த துவங்கினர்

மே 1991ல்  கஞ்சா பயன்பாட்டிற்கான பிரத்யேக மாத இதழான ‘’High times ‘’முதன் முறையாக கஞ்சா பயன்பாட்டிற்கான குறியீட்டு எண்களாக 4.20 என்பதை குறிப்பிட்டது. கஞ்சா பயன்படுத்திய பல ராக் இசைக்குழுக்களும் இந்த எண்களையும் மாலை 4.20க்கு கஞ்சா பயன்படுத்துவதையும் பெருமளவில் பரப்பினார்கள்.

பின்னர் அமெரிக்காவெங்கிலும் கஞ்சா புகைப்பதற்கான நேரம் மாலை 4.20 என  குறிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் இந்த 4.20  கஞ்சா புகைத்தலை கஞ்சா உபயோகிப்பவர்களை, கஞ்சா குற்றங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது.

கஞ்சா புகைப்பவர்களால் நேரிடும் வழிப்பறி உள்ளிட்ட அபாயம் இருக்கும் இடங்களில் 420 என்னும் எச்சரிக்கைப் பலகை காவல்துறையினரால் அப்போதிலிருந்து வைக்கப்படுகிறது. அப்பலகைகள் பெரும்பாலும் திருடப்பட்டு அகற்றப்படுகின்றன

2003ல் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்களுக்கான புதிய சட்டமும்  California Senate Bill 420  என்றே பெயரிடப்பட்டது. 2015ல் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை மனமகிழ்ச்சிக்கு பயன்படுத்துவதை அனுமதிக்கும் சட்டவரைவிற்கான போராட்டமான Initiative 71  என்பதை  முன்னெடுத்த  Adam Eidinger அதில்  வெற்றி பெற்றதும் தனது கார் லைசென்ஸ் எண்ணாக 420 என்பதை வைக்துக்கொள்ள அனுமதி பெற்றார்.

கஞ்சா பயன்பாட்டை குறித்தான பலநூல்களின் தலைப்புக்களிலும் 420 இடம்பெற்றது. 2018ல் டெஸ்லா உரிமையாளர் எலான் மஸ்க்  தனது நிறுவனத்தின் பங்குகளை 420 டாலர்களாக அறிவித்தபோது அவர் கஞ்சா பயன்பாட்டை மறைமுகமாக ஊக்குவிக்கிறார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் எலான் அந்த எண் கஞ்சா பயன்பாட்டுடன் தொடர்புள்ளதாக அமைந்தது தற்செயல் என்று சொல்லி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பொதுவாக கஞ்சாவை பயன்படுத்துவோரும் கஞ்சா என்பதை அறிந்து கொண்டுமட்டும் இருப்போரும் கஞ்சா என்பது ஒரு இலை, இலைப்பொடி இலைப்பசை என்று மட்டுமே நினைக்கின்றனர்.

கஞ்சாப்பயிரென்பது  போதை அளிக்கும் வேதிச்சேர்மானங்களை கொண்டிருக்கும் கன்னாபிஸ் பேரினத்தின் மூன்று சிற்றினங்களான கன்னாபிஸ் சடைவா,இண்டிகா மற்றும் ருட்ராலீஸ் ஆகியவை. கஞ்சா ஆண் பெண் என தனித்தனி செடிகளாக இருக்கும். அரிதாக இருபால் மலர்களும் இருக்கும் கலப்பின வகைகளும் உண்டு.

இவற்றின் இலைகள், உலர்ந்த மலர்கள், தண்டு, மலரரும்பு  பிசின் மற்றும் விதைகள் கஞ்சா மாரிவானா, வீட், டோப் அல்லது பாட் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. உலகின் பல நாடுகளில் கஞ்சா செடியின் பாகங்களுக்கும், கஞ்சா பொருட்களுக்கும் பலவிதமான பெயர்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

கஞ்சா சாகுபடியில் சணப்பை (Hemp) நார்ப்பயிர்கள் தனியாகவும் போதைப்பண்புகள் கொண்டிருப்பவை தனியேவும் சாகுபடி செய்யப்படுகின்றது.

பொதுவாக கஞ்சா செடியிலிருந்து பாங், கஞ்சா, சரஸ், ஹஷீஷ் என்னும் நான்கு வகையான  போதைப்பொருட்கள் கிடைக்கின்றன.

  • பெண் கஞ்சா செடிகளின்  பிசின்  நிறைந்த உலர்ந்த மலர்த்தலை என்னும் மஞ்சரிகள் கஞ்சா எனப்படுகின்றன.   
  • உலர்த்தப்பட்ட இலைகள், இலைப்பொடி, இலைச்சாறு இலைப்பசை உருண்டைகள் பாங் எனப்படுகின்றது. இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும்.   
  • பச்சையாக பிரத்யேக நறுமணத்துடன் இருக்கும் சரஸ் இலை மற்றும் மலர்களின் பிசினை கொண்டு செய்யப்படுகிறது
  • மெல்லிய வளரிகள் கொண்டிருக்கும்  பிசின் நிறைந்த பெண்மலரரும்புகள் நன்கு அழுத்தப்பட்டு பிசைந்து உருவாவது ஹஷீஷ். இது பழுப்பு கருப்பு மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்

10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மனித குல வரலாற்றுடன் நெருக்கமான தொடர்பிலிருக்கும் பல தாவரங்களில் கஞ்சாச்செடியை போல நெருக்கமான கலாச்சார  தொடர்புடையவை  வெகுசில தாவரங்கள் தான்.

கஞ்சா தனது காட்டுமூதாதையான  ஹாப்ஸ் எனப்படும் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய நிலப்பகுதிகளில் 28 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தனித்த தாவரமாக  தோன்றியது.  வளமான மண்ணும் சூரிய ஒளியும் இருந்த இடங்களில் கஞ்சா செழித்து வளர்ந்தது. 

மனிதகுடியிருப்புகள் தோன்றும் இடங்களிலெல்லாம் உடன் சென்று வளரும் “camp follower plants”. என்றழைக்கப்படும் தாவரங்களில் கஞ்சா செடியும் ஒன்று.

கஞ்சாச்செடி  மனிதர்களால் மட்டுமே மிக விரைவாக உலகின் பல இடங்களுக்கு பரவியது. இவற்றின் கனிகள் மிகச்சிறியவை, மேலும் சதைப்பற்றோ சுவையோ இல்லாதவை எனவே விலங்குகளும் பறவைகளும் கஞ்சா செடியின் பரவலில் அதிகம் பங்கெடுக்கவில்லை இவை உருண்டையாக இறகுகள் இல்லாமல் இருப்பவை என்பதால் காற்றில் பறந்து பரவும் சாத்தியமும் இல்லை. 

பெண் செடி

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளாக பல இடங்களுக்கு பெயர்ந்த மனிதர்களுடன் கஞ்சாசெடியின் விதைகளும் பயணித்து பலஇடங்களில் வளரத்துவங்கியது.  இந்த கூட்டுப்புலம்பெயர்தல் மனிதர்களுக்கும் தாவரங்களுக்குமான பகிர்வாழ்விற்கான மிகசிறந்த உதாரணங்களிலொன்று.  

ஒருமையப்புள்ளியில் இருந்து யூரேசியா முழுவதும் கஞ்சா பரவிப் பெருகியதை, இம்மாபெரும் நிலப்பரப்பின் பெரும்பாலான மொழிகளில்  கஞ்சாச்செடியின் பெயரைக்குறிக்கும்  ஒன்றுக்கொன்று வேர்த்தொடர்புடைய சொற்களைக்கொண்டும் அறியலாம்.

சணப்பை

கிரேக்க  ” kannabia ” மற்றும் லத்தீன  ” cannabis “ஆகிய பெயர்கள் சணப்பைக்கான அரேபிய சொல்லான “kinnab”லிருந்து தோன்றியிருக்கலாம்.

ஆங்கிலக்சொல்லான  “assassin”  என்பது ஹஷீஷ் உபயோகித்து போதையேற்றிக்கொள்ளும்  hashishin என்னும் சொல்லில் இருந்தே உருவானது என்றும் சொல்லப்படுகிறது

ஆங்கிலத்தில்  hemp ஜெர்மானிய மொழியில் Hanf ஆகிய இரண்டும் கிரேக்கத்தின் கவாபிக், லத்தீன கன்னாபிஸ், இத்தாலிய கனப்பா மற்றும் ருஷ்யாவின் கொனொப்லியா போன்ற சொற்களின் வேர்கொண்டவை.சணப்பையின் ஆங்கிலச்சொல்லான  hemp பண்டைய ஆங்கிலச்சொல்லான  hænep, லிருந்து வந்தது

அரபியில் இச்செடி qunnab, துருக்கியமொழியில் kendir,  ஜார்ஜிய மொழியில்  kanap’is  என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

ஆண் செடி

மத்திய ஆசியாவின்  அல்தாய் மலைத்தொடர்களில் 12000 ஆண்டுகளுக்கு முன்பு   தோன்றிய கஞ்சா மத்திய ஆசியாவின் நாடோடி இனங்களால் கிமு 700ல் கிழக்கு ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஆங்காங்கே பயிராகிக்கொண்டிருந்த கஞ்சா செடியின் நார் மற்றும் எண்ணெய் உபயோகங்களுக்கு பின்னர் தற்செயலாகவே கஞ்சாவின் போதைப்பண்புகள் தெரியவந்து அதன் சாகுபடி அதிகரித்திருக்ககூடும்.

 யுனானி மருத்துவ முறையை உருவாக்கியவரான கேலன் (Claudius Galen AD 129-199/217) இத்தாலியில் இரவுணவுக்கு பிறகு சிறிய கஞ்சா கட்டிகள் இனிப்புக்களுடன் பரிமாறப்பட்டது வழக்கமாக இருந்ததை குறிப்பிடுகிறார். 

ஒரு காலகட்டத்தில் கஞ்சா உண்பதைக்காட்டிலும் புகைப்பது அதிக போதையளிக்கும் என கண்டறியப்பட்டிருக்க கூடும்.

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெரோடோட்டஸ் (c. 484-c. 425 bc) என்னும் வரலாற்றாய்வாளர் ஈரானிய தொல்குடிகளான சித்தியன்கள் (Scythians) சிறுசிறு நிலவறைகளுக்குள் தவழ்ந்து சென்று அமர்ந்து கம்பளியால் உடலை போர்த்திக்கொண்டு நெருப்பில் கஞ்சாசெடியின் விதைகளை இட்டு அந்த புகையை  நுகர்ந்து மகிழ்ச்சியாக இருந்தததை விவரித்திருக்கிறார். ரோமனிய ஆட்சிக்காலத்தில் கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் இருந்ததை பிளைனி, டயாஸ்கொரிடஸ் கேலன் ஆகியோர் பதிவு செய்திருக்கின்றனர்.

அரேபிய நூல்களின் மொழியாக்கங்களின் வழியே ஐரோப்பா கஞ்சாவின் மருத்துவப்பயன்களை அறிந்து கொண்டது. கிமு 2700 ல் எழுதப்பட்ட உலகின் மிகப்பழமையான சீன மருத்துவ நூலான pen-ts’ao, கஞ்சா செடியின் மருத்துவப்பயன்களை குறிப்பிடுகிறது

பண்டைய இந்தியாவில் கஞ்சா தயாரிப்பான பாங் விருந்தோம்பலின் அடையாளமாக அளிக்கப்பட்டிருக்கிறது. கிமு 10ம்  நூற்றாண்டில் சிந்துச்சமவெளி நாகரிகத்திலும் ஓபியத்துடன் கஞ்சாவும் சாகுபடி செய்யப்பட்டு போதைப்பொருளாக பயன்பாட்டில் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றது. 

சுஷ்ருதர் கஞ்சாவை உடலின் திரவங்களை சமப்படுத்துவதன் பொருட்டும் பாலுணர்வை ஊக்குவிக்கவும் வலிநிவாரணியாகவும் அளித்திருக்கிறார். சித்தர்களில் ஒருவரான கோரக்கர் கஞ்சாவை முதன்முதலில் மனச்சிக்கல்களுக்கு மருந்தாக பயன்படுத்தினார்.

பல எகிப்திய பிரமிடுகளில் கஞ்சாப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இரண்டாம் ராம்சேயின் கல்லறையில் இருந்து கஞ்சா மலர்களின் மகரந்தங்கள் கிடைத்தன.

1253ல் சூஃபி துறவிகள் மிக வெளிப்படையாகவே கெய்ரோவில் கஞ்சாவை சாகுபடி செய்தனர். எகிப்திய அரசு சூஃபியிசம்  மக்களுக்கு அச்சுறுத்தலானது என்று அறிவித்து கஞ்சா வயல்களை முற்றிலுமாக அழித்தது. எனினும் நைல் நதிக்கரையோர விவசாயிகளுடன் உடன்படிக்கை செய்துகொண்ட சூஃபிக்கள் பிற பயிர்களுடன் கலந்து கஞ்சாப்பயிரை சாகுபடி செய்தனர். 

 

1378ல் எகிப்திய அரசு கஞ்சாவுடன் சேர்த்து விவசாயிகளின் அனைத்துப்பயிர்களையும் அழித்தார்கள். கஞ்சா சாகுபடிக்கு உடந்தையாக இருந்த விவசாயிகளை கைது செய்து தலை கொய்தார்கள். எனினும் கஞ்சாவின் தேவை எகிப்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. தொடர்ந்த நூற்றாண்டுகளுக்கு எகிப்தில்  கஞ்சா சட்டவிரோதமாக சாகுபடியானது. இன்று வரையிலுமே கஞ்சா சூபிக்களின் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. 

சீனாவிலும் ஜப்பானிலும் மந்திர தந்திரங்களுக்கெனவும் மருத்துவ சிகிச்சையிலும் கஞ்சா பெருமளவில் பயன்படுத்தபட்டது. சீன மந்திரவாதிகள் கஞ்சா செடியின் தண்டுகளை பாம்புகளை போல் வளைத்து ஆவிகளை விரட்டும் சடக்குகளில் உபயோகித்தனர்  

அஸிரியர்களின் களிமண்கட்டிகளில் கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

புகையிலையுடன் திரும்பி வந்த கொலம்பஸின் இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகுதான் கஞ்சா புகைத்தல் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது

 திபெத்திய தாந்த்ரீக மரபில் கஞ்சா புகைநுகர்வு தீயஆவிகளை விரட்டும் என நம்பிக்கை உள்ளது.

கெளதம புத்தர் 1நாளுக்கு ஒன்று என 6 நாட்களுக்கு கஞ்சாவிதைகளை ஞானம் பெறு முன்பு எடுத்துக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது.

ஆப்பிரிக்க பழங்குடியினரிடம் கஞ்சா புகைக்கும் கஞ்சா பொருட்களை பயன்படுத்தும் வழக்கம் நெடுங்காலமாகவே இருக்கிறது. பசியை தூண்டவும் பல்வேறு சிகிச்சைகளுக்கு, போதைப்பொருளாகவும் வழிபாட்டிலும் கஞ்சா பெருமளவு அங்கு பயன்பாட்டில் இருந்தது . ஆப்பிரிக்க இனக்குழுக்கள் கஞ்சா வழிபாட்டிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

பண்டைய இந்திய கிரேக்க ரோமானிய அசிரிய நூல்கள் பலவற்றிலும் கஞ்சாச்செடியின் மருத்துவ பயன்பாடுகள் கூறப்பட்டிருக்கிறது.  

16ம் நூற்றாண்டில் பிரேசிலுக்கு கப்பலில் வந்த  போர்த்துக்கீசிய அடிமைகள் தங்கள் உடைகளில் தைக்கப்பட்டிருந்த கஞ்சா விதைகளை பிரேஸிலில் விதைத்து அங்கு கஞ்சாவை அறிமுகம் செய்தனர் பிரேஸிலின் நிலத்தில் அடிமைகள் கொண்டு வந்த அனைத்து வகை கஞ்சாவிதைகளும் செழித்து வளர்ந்தது .  

திபெத்திலிருந்து கஞ்சாச்செடி நாடோடிப் பழங்குடியினரால் இந்தியாவிற்குச் கிமு 2000த்தில்  அறிமுகமானது கஞ்சா பரவலில் இந்தியாவின் பங்கு பெரும்பான்மையானது.  

கன்னாபிஸ் இண்டிகா  சிற்றினம் நூற்றாண்டுகளாக இமாலயமலைப்பகுதியிலும் சுற்றுப்புறங்களிலும் இயற்கையாக செழித்து வளர்ந்திருந்தது 

கஞ்சா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவில் சடங்கு, மத, சமூக மற்றும் மருத்துவ பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையது .18ம் நூற்றாண்டில் சீக்கிய குரு கோவிந்த் சிங் மிகக்கடுமையான போர்களுக்கு செல்லும் வீரர்களுக்கு கஞ்சா உருண்டையான பாங் அளித்திருக்கிறார்

இந்தியாவில் கஞ்சா செடியின் உபயோகம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே பக்தி மார்க்கத்திலும் மருத்துவத்திலும் இருந்தது. 

மனிதர்களுக்கும் கஞ்சாச்செடிக்குமான நீண்ட நெடிய உறவை பல நாகரிகங்களின் தொன்மங்களும் உறுதிசெய்கின்றன. இந்திய தொன்மங்களில் கஞ்சா சிவனுடன் தொடர்புடையாதாகவே சித்தரிக்கப்படுகிறது. மகாபாரதத்தில் சிவமூலி என்று கஞ்சா குறிப்பிடப்படுகிறது

ஆலகாலவிஷம் தொண்டையில் நின்றதால் அவதிப்பட்ட சிவனுக்கு வலி நிவரணமாக கஞ்சா பார்வதியால் அளிக்கப்பட்டது என்றும், பாற்கடல் கடையப்பட்ட போது கிடைத்த அமுத்தத்தை சிவன் தனதுடலில் இருந்து உருவாக்கிய கஞ்சாவை கொண்டு தூய்மை படுத்தினாரென்றும்,ன்பாற்கடலில் கிடைத்த அமுதத்தின் ஒரு துளி பூமியில் விழுந்து கஞ்சா செடியானது என்றும் இந்திய தொன்மங்களில் கூறப்படுகிறது, சைவம் சிவனை கஞ்சாவின் தலைவன் என்கிறது

பண்டைய இந்தியாவிலும் இப்போதும் கஞ்சா பொருட்கள் சிவபக்தர்கள் சைவ துறவிகளால் பயனபடுத்தப்படுகிறது.  சிவ வழிபாட்டில் கஞ்சா பரவலாக இந்தியாவெங்கிலும் உபயோகிக்கபடுகிறது  .

கனவுகளில் கஞ்சா செடியை கண்டாலும் பயணங்களுக்கு முன் கஞ்சா வைத்திருப்பவரை  காண்பதும் நல்ல சகுனம் என பண்டைய இந்தியாவில் நம்பப்பட்டது

நவராத்திரியின் போது சிவலிங்கங்கள் பாங்’கால் அபிஷேகம் செய்யப்படுவதும், பட்டினிவிரதம் இருக்கும் சாதுக்களுக்கு விரதம் முடித்து வைக்க பாங் பானம் அளிப்பதும் தொன்று தொட்டு மத்திய மற்றும்  வட இந்தியாவில் இருக்கும் வழக்கம்

 துர்கா பூஜையின் இறுதி நாளன்று வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கஞ்சா கலந்த பானம் அளிப்பது இன்றும் வங்காளத்தில் வழக்கமாக இருக்கிறது. வங்காளத்தின் தாரகேஸ்வரர் ஆலயத்தில்  சிவராத்திரியில் கஞ்சா இலைகளால் சிவனை அர்ச்சனை செய்கிறார்கள்

ஒரிஸா ஜகன்னாதர் ஆலயத்தில் சிவராத்திரியின் போது இறைவனுக்கும் பக்தர்களுக்கும் கஞ்சா அளிக்கப்படுகிறது

இந்தியாவில் பல பாகங்களில் ஹோலி தீபாவளி மற்றும் திருமணம் உள்ளிட்ட விழாக்களில் கஞ்சா பொருட்கள் பயன்படுத்த படுகிறது. மார்வாரிகளும் சிவபூஜையில் கஞ்சாவை உபயோகிக்கின்றன.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவர்கள்  கஞ்சாவிதைகளை பல்வேறு சிகிச்சைகளுக்கு பயன்படுத்தினர். 1840களில ஐரிஷ்மருத்துவரன  வில்லியம் புரூக்  (William Brooke O’Shaughnessy) உள்ளிட்ட பல மருத்துவர்கள்  கஞ்சாவை சிகிச்சையளிக்க பயன்படுத்த துவங்கினர்

1960களில் ஹிப்பி கலச்சாரம் உருவானபோது கஞ்சா மேலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது அவ்விளைஞர்களின் அடையாளமாகவே கஞ்சா புகைத்தல் சித்தரிக்கப்பட்டது.   

 1960களில் கஞ்சா பயன்பாடு உலகெங்கிலுமே அதிகரித்திருந்தது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க  இளைஞர்களின் உதடுகளில் கஞ்சா சிகரெட் புகைந்தது. ஆனால் அறிவியலாளர்களுக்கு அச்சமயத்தில் கஞ்சா குறித்து அதிகம் தெரிந்திருக்கவில்லை

 அப்போது  30 வயதில் இருந்த இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனத்தில் இளம் வேதியியலாளராக பணிபுரிந்த  ரஃபேல் மெக்குலம் ஆர்வமூட்டும் இயற்கைப்பொருட்களுக்கான தேடலில் ஈடுபட்டிருந்தார்.  1964ல் மெக்குலமும் அவரது குழுவும் முதன்முதலாக THC  எனப்படும் Delta-9-tetrahydrocannabinol  மற்றும் cannabidiol என்கிற CBDயையும் கஞ்சா செடியிலிருந்து கண்டறிந்தார்கள்

கஞ்சாவின் வரலாற்றில் கஞ்சாவுகெதிராகவும் கஞ்சா பயன்பாட்டை ஆதரித்தும் சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சமீப காலங்களில்  கஞ்சாவின் மருத்துவ பயன்பாடுகள் பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மருத்துவத்தின் பொருட்டு கஞ்சா சாகுபடியும் சட்டபூர்வமாக தொடங்கப்பட்டிருக்கிறது  

ஆச்சர்யமூட்டும் விதமாக மேற்கில் சமீபத்தில் துவங்கி இருக்கும் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் குறித்த அறிதல் பண்டைய இந்தியாவில் பலநூறாண்டுகள் முன்பே புழக்கத்தில் இருந்திருக்கிறது 

சுவாசக்கோளறுகளுக்கு கஞ்சா தயாரிப்புக்கள் பயன்படுத்தப்பட்டதற்கான குறிப்புக்கள் சுஷ்ருத சம்ஹிதையில் குறிப்பிட்டிருக்கிறது.

பல்வலிக்கு சரஸை வலிக்குமிடத்தில் வைப்பதும் தூக்கமின்மை  மனஅழுத்தம் போன்றவற்றிற்கு கஞ்சா வீட்டு மருத்துவத்திலும் சாதாரணமாக  பண்டைய இந்தியாவில் உபயோகிக்காப்ட்டது கஞ்சா பாலுணர்வு ஊக்கியாகவும்  இந்தியாவில் பெரிதும் பயன்பாட்டில் இருந்தது 

கஞ்சா பலநூறாண்டுகளாக உலகில் வலிநீக்கியாக, வலிப்புகள் குணமாக பசிஉணர்வை தூண்ட பதட்டத்தை குறைக்கவென்று பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்பிரின் போன்ற வலி நிவரணிகளும் தூக்கமருந்துகளும் கண்டறியப்பட்ட பின்னர் கஞ்சாவின் மருத்துவப்பயன்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்தன. தற்போது மீண்டும் கஞ்சா சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுவது பல நாடுகளில் சட்டபூர்வமாக்க  அனுமதிக்கப்பட்டிருக்கிறது

2018,ல் கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்பட்ட Epidiolex,  வலிப்பு நோய்க்கான சிகிச்சைக்கென சந்தைப்படுத்தப்பட்டது

மேலும் மூளைப்பிளவாளுமைச்சிக்கல், புற்றுநோய், பார்கின்சன், OCD போன்றவற்றிற்கும் கஞ்சாபொருட்கள் உலகெங்கிலும் பரவலாக மருத்துவரின் பரிந்துரையுடன்  உபயோகிக்கப்படுகின்றன

கடந்த செப்டம்பர்  2020ல் அமெரிக்கா கஞ்சா பயன்பாட்டிற்கான சட்டங்களையும் கெடுபிடிகளையும் தளர்த்தியது 

THC மற்றும் THCக்கு இணையான செயற்கை பொருட்களை  FDA   புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் சிகிச்சையினால் உண்டாகும் பக்கவிளைவுகளுக்கான மருந்தாக அங்கீகரித்திருக்கிறது

ஆட்டிசம், வலி நிவாரணம், உறக்கம் வரவழைப்பது ஆகியவற்றில் கஞ்சா வேதிப்பொருட்களின் பங்கு குறித்து மேலும் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்தியாவில் முதன்முதலாக CSIR-IIIM ல் கஞ்சா ஆய்வுத்திட்டம் 2023ல் கனடாவைச்சேர்ந்த ஆய்வு நிறுவனத்துடன் கூட்டாக துவங்கப்பட்டு ஜம்முவில் மருத்துவ உபயோகங்களுக்காக கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது. ‘Cannabis Research Project’ of CSIR-IIIM  என்னும் இத்திட்டத்தின் முதன்மை நோக்கம்.  வலிப்பு, புற்று மற்றும் நரம்பு நோய்களுக்கான வலி நிவாரணியாக கஞ்சாவை பயன்படுத்துதல். இத்திட்டத்தில் சாகுபடியாகும் கஞ்சாப்பயிர் ஏற்றுமதித்தரம் வாய்ந்தது 

மனிதகுலத்துடன் பின்னிப்பிணைந்த கஞ்சாவின் பயன்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான  உறவு சிக்கலானதாவே இருக்கிறது

இனி வரும்காலங்களில் , ​​கஞ்சாவின் மருத்துவ உபயோகங்கள் மற்றும் கவனமான கஞ்சா நுகர்வு ஆகியவற்றிற்கான தீவிரமான ஆய்வுகள் தேவைப்படுகின்றது

  போதைப்பொருளாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறியப்பட்டிருக்கும் கஞ்சா முறையான விரிவான ஆய்வுகள் நடந்தால் மனிதகுலத்திற்கு வரப்பிரசாதமாக மாறவும் கூடும்

அகழ் இதழில் வெளியான இக்கட்டுரையின் இணைப்பு

மலமும் கலையும்!

’குருகு’வில்  ஜெயராமின் ’மலம் என்னும் ஊடகம்’  கட்டுரை வந்திருந்தது. சரண்  தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு ’’ஜெயராம் அண்ணா ஊடகங்களை மலம்னெல்லாம் சொல்லி என்னவோ எழுதியிருக்காங்க’’ என்று  எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். மலம் என்னும் சொல்லையே அச்சில் கூட அவ்வளவாக பார்க்காததால் தலைப்பே புரிய சற்று நேரமாகிறது.

மிக சிறப்பான வித்தியாசமான கட்டுரை.  சரணிடம் மாலை கட்டுரை குறித்து விரிவாக பேசப் போகையில் ’அய்யே’ என்றான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு  படுகர் இனத்தவளான  என்  நெருங்கிய தோழி ராஜியின் வீட்டில் ஊட்டியில் இருக்கையில் அதிகாலையில் அவளது அப்பாவின்  உருளைக்கிழங்கு விளையும் வயலில் ஒரு லாரி முழுக்க மனிதக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டியதை பார்த்தபோது எனக்கும் அப்படித்தான்  இருந்தது. அதை என்னால் மறக்கவே முடியவில்லை இன்று வரை உருளைக்கிழங்கும் உண்பதில்லை. ஊட்டியில் கேரட் பீட்ரூட்டுக்கெல்லாம் கூட அதை போடுகிறார்கள் என்றாலும் நான் கண்ணில் பார்த்துவிட்டதால் உருளைகிழங்கு ஒவ்வாமை வந்துவிட்டிருக்கிறது.

பின்னர் இதுகுறித்து வாசித்தேன். இரவுகளில் குடியிருப்பு பகுதிகளில் செப்டிக் டேங்க்’களிலிருந்து சேகரிக்கப்படும் மனித கழிவுகளில் லாரி டேங்கின் மேற்புறம் மண்ணைக்கொட்டி மறைத்து இருள் விலகாதபோதே  வயல்களில் உரமாக போட்டுவிடுவதால் அந்த மனித கழிவு உரத்துக்கு  night soil என்றே பெயர்.

இப்போது கழிவுகளை சேகரித்து மட்க செய்து உரமாக்குகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் அப்படியே untreated  மனிதகழிவுகளும் உரமாக உபயோகத்தில் தான் இருக்கிறது அவற்றில் இருக்கும் நோய்க்கிருமிகள் காய்கறிகளின் தோலில் மறைந்து தங்கியிருக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

மனிதக்கழிவுகளை பண்டைய பல நாகரீகங்களில் இப்படி உரமாக உபயோகித்திருக்கிறார்கள்.

ஏதென்ஸ் நகரில் மாபெரும் ஏரிபோன்று மனித கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை விவசாய நிலங்களுக்கு கால்வாய்களில் அனுப்பப்பட்டன.

அப்படியே சீனா ஹாங்காங் சிங்கப்பூரிலும் முன்பு இப்படி மனித கழிவுகளை மட்கச் செய்யாமல் பயிர் சாகுபடியில் உரமாக பயன்படுத்தப் பட்டது.

ஜப்பானில் மனித கழிவுகளை உலரச்செய்து மலையாக குவித்து வைத்துக்கூட உரமாக விற்பனை செய்யப்பட்டது.ஜப்பனிய அடுக்ககங்களின் உரிமையாளர்களுக்கு இந்த உர விற்பனை ஒரு கூடுதல் வருமானமாக இருந்தது.டோக்கியோவில் இதற்கு  humanure என்று பெயரிருந்தது.

அதிலும்  சத்தான உணவை சாப்பிடும் செல்வந்தர்கள் வாழும் அடுக்ககங்களின் கழிவுகள் விலை உயர்ந்தாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் செயற்கை உரங்கள்  புழக்கத்தில் வந்த பிறகு தான் இந்த கழிவு உரங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்தது. உலகமெங்கிலும் இப்போது 1% மட்டுமே  மல உரம் பயன்பட்டில் இருக்கின்றன.

மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் இப்படி மனிதக்கழிவுகளை உரமாக்குவது பயன்பாட்டில் இருந்தது. ஆஸ்டெக் பழங்குடியினர் மணலையும் மனிதக்கழிவுகளையும் கொண்டு chinampas என்னும் செவ்வக மணல் மேடுகளை உருவாக்கி அவற்றில் பயிர்ச்சாகுபடி செய்து 7 முறை ஒரே பயிரில் அறுவடை செய்துவந்தார்கள்.

நவீன ஜப்பானில் இன்றும் மனிதகழிவுகளை சேகரித்து உரமாகும் வழக்கம் இருக்கிறது.

நான் சிறுமியாக இருக்கையில் என் தாத்தா வீட்டில் கழிப்பறை பக்கெட்டுகளை எடுத்துச்சென்று சுத்தம் செய்து மீண்டும் அதே இடத்தில் வைக்கவென்றே குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தமக்கள் இருந்தார்கள் அவர்களுடன், அவர்களின் குழந்தைகளுடன்  கலந்து பழக எங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது

அவர்களுக்கென்று தனித்த கொப்பரை காபியும் அந்நாட்களில் தயராகும். காலம் மாறி இப்போது மலக்கரைசலை  வயிற்றுக்குள் செலுத்திக்கொண்டு உயிர்பிழைக்கிறோம் சாதி மத பாகுபாடேதுமின்றி.

ஹவாயில் சோதனை விவசாய முயற்சியில் இப்போது மனிதக்கழிவுரங்களில் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. அப்படி மனிதகழிவுரங்கள் கொண்டு விளைவிக்கபட்ட குடைமிளகாய்கள் அங்கு விற்பனைக்கு வந்திருந்த புகைப்படம் இது

மல உம் போலவே மனிதர்களின் சிறுநீரும் அதன் நைட்ரஜன் காரணமாக வயல்களின் தெளிக்கப்படுவதும் பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கிறது.

ஜெர்மனியில் அப்படி இயந்திரம் மூலம் வயலில் சிறுநீர் பாய்ச்சப்படுகிறது

பிலிப்பைன்ஸின் ஸேவியர் பல்கழைக்கழகத்தில் மனிதச்சிறுநீர் கலந்த வயலில் செழிப்பாக கத்தரிக்காய்கள் உள்ளிட்ட பல காய்கறிகள் விளைவிக்கபட்டன. சிறிநீரை சேகரிக்கவென்றே நகரில் பிரத்யேகமாக  urine diversion  கழிப்பறைகள் உள்ளன.

1990களில் இருந்தே மனிதக்கழிவுரங்களை பயன்படுத்துவதற்கான விதிகள், தற்காப்பு நடவடிக்கைகள், எச்சரிக்கைகள் ஆகியவை பலநாடுகளில் அறிவியலாளர்களால் முன்வைக்கப்பட்டன.2006ல் உலகசுகாதார அமைப்பு மனிதக்கழிவுரங்களை பயனபடுத்துவதற்கான முறையான பரிந்துரைகளை, வழிமுறைகளை வெளியிட்டது.

மலம் இப்போது மருத்துவத்துறையிலும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. நுண்ணுயிரியல் துறையில் Fecal microbiota transplantation (FMT) என்னும் ஒரு புதிய சிகிச்சை முறை இப்போது வெற்றிகரமாக பலரை குணமாக்கிக்கொண்டு இருக்கிறது

நம் அனைவரின் உடலிலும் உடலுக்குள்ளும் நுண்ணுயிரிகள் பல இருக்கின்றன. அவற்றில் குடற்பகுதியில் இருப்பவற்றில் பல நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நாம் எப்போதாவது ஆன்டிபயாடிக்குகள் எடுத்துக்கொள்ளுகையில் அவை பெனிசிலின் போல  உடலின் மொத்த நுண்ணுயிரிகளையும் அழிக்கும் அகலக்கற்றை நுண்ணுயிரெதிர்ப்பியானால் நமக்கு மீண்டும் குடல் பகுதியில் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் குழாம் அமைய சிறிது நாட்கள் பிடிக்கும். அவை இருந்தால் மட்டுமே ஜீரணம் சரியாக நடக்கும்

இந்த FMT எனப்படுவது நல்ல ஆரோக்கியமான ஒருவரின் மலக் கரைசலை, நோயுற்ற குறிப்பாக செரிமானக் கோளாறு குடல் தொடர்பான தீவிர சிக்கல்கள் இருக்கும் நோயாளிகளின் குடலுக்குளேயே செலுத்தி அவரது குடலில் அந்த நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை வளர்த்து நோயாளியை குணப்படுத்தும் ஒரு சிகிச்சைமுறை.

இந்த முறையில் உடல்பருமன், இரைப்பை மற்றும் குடல் அழற்சி உள்ளிட்ட பல உடல்நிலைகள்  வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன.

4 ம் நூற்றாண்டில் சீன மருத்துவர் Ge Hong இந்த மலமாற்று சிகிச்சையை பல வயிற்றுக்கோளாறுகளுக்கு முயற்சித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

1958ல் சோதனைமுயற்சியாக சிகிச்சையளிக்கப்பட்ட இந்த மலமாற்ற சிகிச்சையான FMT கடந்த பத்தாண்டுகளில் உலகெங்குமே பல வகையான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.

மற்ற சிகிச்சைகள் பயனளிக்காத போது நோயாளிக்கு இந்த மல சிகிச்சை குறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லி அவர் சம்மதத்தின் பேரிலேயே இதை செய்யவேண்டும் என FDA அனுமதியளிதிருக்கிறது.

இந்த மலசிகிச்சையில் புற்றுநோய்க்கும் ஆட்டிஸத்துகும் கூட சிகிச்சையளிக்கும் பரிசோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன பல நாடுகளில் விந்து வங்கி ரத்த வங்கி இருப்பதைபோல் ஆரோக்கியமான மல டோனர்கள் மல வங்கி என்றழைக்கபப்டும் வங்கிகளில் பெயரை பதிவு செய்துகொண்டு காத்திருக்கிறார்கள் மல மாத்திரைகள் கூட சிகிச்சையில் பயன்பாட்டில் இருக்கிறது.

பன்னிரு படைக்களத்தில் ரம்ப கரம்பர்களின் நோயைகுறித்த அத்தியாயத்தில் சபரர் ’’நோய் என்பதே மருந்துக்கான கோரிக்கை மட்டும்தான். எங்கோ மருந்து உள்ளது.” என்பார் அப்படி நோய்களுக்கு தாவர, ஜங்கம, தாது. நுண்ணுயிரி மருந்துகள் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது மலத்திலிருக்கும் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

மேலதிக தகவல்களுக்கு:

https://www.livescience.com/61044-poop-pills-effective-cdiff.html
https://www.hopkinsmedicine.org/health/treatment-tests-and-therapies/fecal-transplant

கேரளம்

 நானும் தருணுமாக திடீரென்று ஒரு கேரளப்பயணம் திருச்சூர் வரை. தாவரவியல்  சுற்றுலாவுக்கு அடிக்கடி வயநாடு, திருச்சூர், கொச்சி என்று மாணவர்களுடனும் போவதுண்டு. மகன்களுடன் பாலக்காடுக்கும் அடிக்கடி செல்வேன்.

எனக்கு கேரளா மீதான சாய்வு அதிகமுண்டு  மலையாளம் பேசவும் கேட்கவும் பிரியப்படுவேன். வேடசெந்தூர் வீடும் கொஞ்சம் கேரள பாணியில் தான்  இருக்கிறது ஏராளம் செடி கொடி மரங்களும் வீட்டு முகப்புச் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கதகளி முக மரச்சிற்பமும், வீட்டைச்சுற்றிலும் கல்விளக்குகளும் மாலைநேரங்களில் விளக்கேற்றலுமாக,

சமீபத்தில் இருநாட்கள்  தருணுக்காக கேரளா செல்ல வேண்டி வந்தது. 50 நாட்கள் காடுறையும் பயிற்சியின் போது பெருமழையில் தனது காமிராவுடன் நனைந்தான் அதில் காமிரா லெனஸில் நீர்புகுந்து பூஞ்சை தொற்று உண்டாயிருந்தது

முன்பும் இப்படி ஆகும் போது கோவையிலிருந்து சென்னைக்கு அனுப்பி சரி செய்வது வழக்கம். இம்முறையும் அப்படியே அனுப்பினான், எனினும் கட்டணம் 16 ஆயிரம் ஆகும் என்றார்கள். திரும்ப வாங்கிக் கொண்டு  புகைப்படக்கலையில் இருக்கும் தன் நண்பர்களிடம் விசாரித்தான்.  விஷ்ணு என்னும் மணவிழாக்களை புகைப்படம் எடுக்கும் தருணின் மலையாளி நண்பன் திருச்சூரில் நியாயமான கட்டணத்தில் சரிசெய்பவர்கள் இருக்கிறார்கள் என்றதால் லென்ஸை கொடுக்கவும், சரிசெய்து வாங்கவும் என இருமுறை திருச்சூர் சென்றோம்

பொள்ளாச்சியில் இருந்து  2 மணி நேரத்தில் செல்ல நல்ல அகலமான தேசிய நெடுஞ்சாலை   NH 544, (முன்பு   NH 47) இருப்பதால் சுகமான பயணம்.  இருவரும் பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டு சென்றோம்.தருணின் பிரியப்பட்ட ’’படே அச்சே லகத்தே ஹே’’ எனக்கும் பிடித்திருந்தது பலமுறை கேட்டோம். 

’’ஹம் தும் கித்னே பாஸ் ஹே

கித்னே தூர் ஹே சாந்த் சித்தாரே’’

திருச்சூரில் நுழையுமுன் மெர்சி, செயிண்ட் தாமஸ் உள்ளிட்ட பல பெண்கள் கல்லூரிகளையும் சில உயர்நிலைப்பள்ளிகளையும் கடந்தோம். இப்போது பருவத்தேர்வுகள் நடப்பதால் 12 மணிவாக்கில் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக்கொண்டும், அண்ணனோ அப்பாவோ முன்னால் அமர்ந்திருக்க இருசக்கரவாகனங்களில் பின்னால் அமர்ந்துகொண்டும் பேருந்துக்காக காத்துக்கொண்டுமிருந்த பல அழகிகளை கண்டோம். தருண் முகம் மலர்ந்து விகசித்து நிறைந்து காரோட்டினான் . 

தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளித்த, அலையலையான கூந்தலுடன் (சிற்றலைகள்) சேச்சிகள் கைப்பையுடன் பேருந்துக்காக காத்திருந்தனர். தினக்கூலிக்கு செல்லும் பல பெண்கள் தோளில் துண்டும் நைட்டியுமாகவே சென்றார்கள். இதை சில வருடங்களாகவே கேரளத்தில் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் அப்படி ஆண்களின் சட்டையை புடவைக்கு மேலே போட்டுக் கொள்கிறார்கள் சமீபகாலமாக.

வழியெங்கும் ஏத்தம் பழங்களும் அவற்றின் சிப்ஸ்கடைகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றிற்கு இணையாகவே கிரில் சிக்கன் கடைகளும் முளைத்திருக்கின்றன.

சந்தடியான மிக குறுகிய ஒரு கடைத்தெருவில் லென்ஸ் கடை இருந்தது. காரை நிறுத்த தேடித்தேடி ஒரு இடம் கண்டுபிடித்தோம்.பிடரி வரை வழியும் கேசமும், ஒற்றைத்தோடுடைய செவியனும் ஒல்லியான ஒல்லியுமாக தருணின் நண்பன் விஷ்ணு காத்திருந்தான்ன் . லென்ஸ்காரரும் அவனுமாக மலையாளத்தில் சம்சாரித்தனர் ( யே, ஞான் வைல்ட்லைஃப் இல்லியா, ஞான் கல்யாணமா, தே ஆ புள்ளியா வைல்ட் லைஃப்) 

லென்ஸ் தூய்மையாக்கப்பட்டு சிலநாட்களில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டபின்னர்  நாங்கள் புறப்பட்டோம்

விஷ்ணு எங்களை பிரபல திருச்சூர் பூரம் விழா நடக்கும்  வடக்குநாதர் (சிவன்)  அம்பலத்துக்கு அழைத்துச் சென்றான்

 

புராணங்கள் அக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்கிறது. சங்கரரின் பெற்றோர் வடக்குநாதர் முன்பாக செய்துகொண்ட பிரார்த்தனைகள் பேரில்தான் அவர் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலுக்கு எதிரில் இரு தேவி ஆலயங்கள் உள்ளன.பார மேட்டு காவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் அருள்பாலிக்கிறார்கள். 

சிவராத்திரியின் போது கோவிலில் லட்ச தீபம் ஏற்படுமென்று சொன்னான் விஷ்ணு. பூரம் விழாவின் போது நூற்றுக்கணக்கில் அலங்கரிக்கபட்ட யானைகள் நிற்கும் இடமும் வலிய மற்றும் சிரிய வெடிகள் வெடிக்கப்படும் பரந்த வெளியும் புல் பரவிக் காணப்பட்டது.

வாகைமரங்கள் வெகுதூரம் கிளைகளோடி நின்றது, அதனடியில் காரை நிறுத்தினோம்.

கேரளாவின் மேற்குப் பார்த்த சிவாலயங்களில் இதுவுமொன்று. அடுத்தமுறை அதிகாலை வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன்

அன்று வார இறுதி என்பதால் கோவிலை சுற்றிலும் நல்ல கூட்டம். கார்களும் பைக்குகளும் ஏராளம் நின்றன. பல காதல் ஜோடிகள். அருகிலிருக்கும் பள்ளியின் சிறுமிகள் சீருடையில்  தத்தமது காதலர்களுடன் அமர்ந்து ஐஸ்கிரீம் சுவைத்துக்கொண்டிருந்தனர். 

உச்சிவேளை என்பதால் கோவில் நடை அடைத்திருந்தது. சாத்திய நடையையும் , பெருமதில்களுக்கு பின்னிருந்து கரும்பாறையென தெரிந்த யானை முதுகுகளையும் கோவில் கூரையின் உயரத்துக்கு இருந்த வெண்கலச் சுற்றடுக்கு விளக்குக் கம்பத்தையும் மட்டும் பார்த்தோம்.

பலர் வெட்டியாக அமர்ந்துகொண்டும், லாட்டரி சீட்டுக்கள் விற்றுக்கொண்டுமிருந்தனர். இரு வயசாளிகள் ஒரு கல்திட்டில் அமர்ந்து மும்முரமாக செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் முள்முள்ளாக தாடி, அழுக்கு வேட்டி பழுப்பேறிய சட்டை ஆனால் உற்சாகமாக காய்களை நகர்த்தி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தது மகிழ்சியளித்தது. ஏற்ற இறக்கங்களுடன் வாழ்வை ஏறக்குறைய வாழ்ந்து முடித்து,  மீதமிருக்கும் வாழ்வை இப்படி  ஏதோ ஒரு வகையில் பொருள் கொண்டதாக மாற்றிக்கொண்டு விடுபவர்களை எனக்கு பிடிக்கும்.

எங்களூரில் அரசமரத்தடி விநாயர்கோவில் கல்திட்டில் வீட்டிலிருந்து ஏறக்குறையத் துரத்தப்பட்ட ஊர்க்கவுண்டரும் இன்னும் சிலரும் அரிதாக ஓரிருசொற்கள் பேசிக்கொண்டு வந்துபோகும் பேருந்துகளை வேடிக்கை பார்த்தபடிக்கு சிலைகளை போல சாப்பாட்டு நேரத்துக்கு அழைப்பு வரும்வரை  நாளெல்லாம் அமர்ந்திருப்பார்கள். அவர்களை அப்படிப் பார்ப்பது துயரளிக்கும்

வடக்குநாதர் கோவிலுக்கெதிரே இருந்த கிளைச்சாலையில் நல்ல உணவகங்கள் அடுத்தடுத்திருந்தன அவற்றில் அக்‌ஷயாவுக்கு சென்றோம், மிகச்சுவையான கப்பையும் மீன்கறியும் கிடைத்தது.

பிரியாணியை அரிசிச்சோறு தனியாகவும் மசாலா தனியாகவும் இறைச்சி தனியாகவும் அடுக்கடுக்காக வைத்து தருகிறார்கள்.  நல்ல   சுத்தமான உணவகம். 

கல்லாவில் கண்ணாடிப் பெட்டியில் பழம்பறிகள் காத்திருந்தன மிருதுவாக பொன்மஞ்சளில் மினுங்கிக்கொண்டு (கன்னிப் பெண்ணின் கன்னம் போல், கேரளத்தை மேப்பில் பார்ப்பதுபோல -ஜெ)

அவற்றில் இரண்டை வாங்கிக்கொண்டேன். அவ்வபோது சிறுமழை தூரலாக பெய்வதும் உடனே இளவெயிலடிப்பதுமாக இருந்தது.  2 மணிக்கெல்லாம் வெயில் முதுகை அறைந்தது, தமிழகத்தை விட கேரளத்தில் வெயில் உக்கிரமாக இருந்தது.

பாலக்காடு வனப்பகுதியில்  பணிசெய்யும்  யானைசிவா அவனது ஆசிரியை என்பதால் ஒரு பிரத்யேக விஷயத்துக்கென அனுமதி வாங்கி என்னை  அழைத்திருந்தான். எனவே திருச்சூரிலிருந்து பாலக்காடு சென்று அங்கு மாலை வரை இருந்துவிட்டு ஊர் திரும்பினோம் வழியெங்கும் லண்டானா, கம்யூனிஸ்ட் பச்சை செடிகள் ஏராளமாய் பரவி இருந்தன.

அங்கு  கிடைத்த அந்த அனுபவத்தை சிவாவின் பணி நிமித்தம் பொதுவெளியில் பகிரமுடியவில்லை, அது ஒரு அற்புதமான அரிய அனுபவம். அன்பு அதுவும் கள்ளமற்ற தூய அன்பு அதில் திளைத்தது என என் வாழ்வில் மறக்கவே மறக்க முடியாத இனிய அனுபவம். டாப்ஸ்லிப் யானைப்பாகன்  (கல்பனா) பழனிச்சாமியின் மனைவி சாந்தி அங்கிருந்தார் அவரளித்த எலுமிச்சை இலை கிள்ளிப்போட்ட அருமையான கட்டஞ்சாயா குடித்தோம்

வீடுவர பின்னிரவானது. பழம்பறியும் பானைத்தண்ணீருமாக இரவுணவு முடித்தேன். 

நேற்று லென்ஸ் சரியாகிவிட்ட தகவல் வந்ததால் மீண்டும் இன்று திருச்சூர். இம்முறை அதிகாலை ஐந்துமணிக்கே புறப்பட்டோம், காலை 7 30க்கு கோவிலில் இருந்தோம் அந்நேரத்துக்கே கோவிலில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது

 மிக மிக அழகிய, மிகப்பழைய மிக தூய்மையாக பராமரிக்கப் படும் கோவில்.  நியதிகள் எழுதிவைத்திருக்கும் நீல நிற போர்டுகளை தவிர யாருமே எந்த கெடுபிடிகளையும் செய்யவில்லை. மிக அமைதியாக இருந்தது வளாகம். கார்த்திகை மாதமென்பதால் கருப்புச் சேலையும், கருப்பு வேட்டியுமாக சபரிமலைக்கு மாலையிட்ட பலருமிருந்தனர்,

அங்கே  வேண்டிக்கொண்டால் தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் என்னும் நம்பிக்கை இருப்பதால் மாணவ மாணவிகள் அதிகமிருந்தனர்

பல கேரள கோவில்களைப்போலவே மேல்சட்டை, லுங்கி அணிந்து வர இங்கும் அனுமதியில்லை. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை

கோவிலைச் சுற்றுகையில் அர்ஜுனன் வில்லுக்குழி என்று ஒரு தீர்த்தம் இருந்தது, அதை பச்சை வலையிட்டு மூடிவைத்திருந்தனர். வலையின் கிழிசல் வழி எட்டிப் பார்த்தோம் நீண்டவிழி போல அல்லது வில்போன்ற வடிவ பாறைக்குழியில் நீர் நிறைந்திருந்தது. அதன் ஒரு நுனியில் பிரகாசமான நட்சத்திரவடிவ  மஞ்சள் மலர்களுடன் ஒருசிறுசெடி இருந்தது.

 அந்த தீர்த்தத்தில் கைகால்களை தூய்மைசெய்தபின்னரே கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்னும் வழக்கம் முன்பிருந்து பிற்பாடு அவற்றை பாதுகாக்க இப்படி மூடி வைத்திருப்பதாக பின்னர் கேட்டறிந்தேன். 

மிக தொன்மையான, மிகமிக அரிய ஒவியங்கள் சுவர்களெங்கும் இருந்தன. நல்ல தடித்த உருவத்துடன்  குட்டையான நீலக்கண்னன் ஒரு பாறையில் அமர்ந்து குழலூத மல்லிகை மலர்ச்சரம் சுற்றிய கொண்டையிட்ட பேரிளம்பெண்கள் சிலர் அவனை தோளுக்கு பின்னிருந்து குனிந்து பார்க்கும் சித்திரம் வசீகரமாயிருந்தது,அனைத்து ஓவியங்களும் அடிப்பக்கம் விளக்குப்புகையால் அழிந்தும் சேதமுற்றும் இருந்தன,

சுற்றும் வழியெங்கும் விளக்கேற்றும் சிறு பள்ளத்துடன் இரண்டடியில் தரையில் பதிக்கப்பட்ட கல்தூண்கள் இருந்தன. கல்பாவையரும் ஆங்காங்கே இருந்தனர்.  முன்வாசலின் மாபெரும் வெண்கல விளக்குகளிலிருந்து  கல்தூண் பள்ளம் எல்லாமே கண்ணாடிபோல் மழைநீர் தெங்கி இருந்தது

சுவற்றில் புடைப்பாக செதுக்கப்பட்டிருந்த ஒரு கல்பாவையின் கைவிளக்குக்குழியின் நீர்பரப்பில்  நீலவானம் தேங்கி இருந்தது.

பச்சை பூக்களிட்ட வெள்ளைப் புடவையும் பச்சைரவிக்கையுமாக ஒரு அம்மை சுற்றி வந்து கொண்டிருந்தார். வெகுநாட்களாக அப்படி புடவை எடுக்க நினைத்திருந்தேன். அவரிடம் நேரே சென்று அதுபோன்ற  புடவை எனக்கும் வேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்டேன்.  செட் சாரி என்று கேட்டால் எங்கும் கிடைக்குமென்றார். அந்த புடவை அவருக்கு மிக அழகாக இருப்பதையும் சொன்னேன்

கருப்புப்புடவையில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை புதுவெண்ணெயின் நிறத்திலிருந்தார். எலுமிச்சம்பழம் போன்ற அவரது சிறுகொண்டையில் துளசி சூடியிருந்தார்.சச்சதுரமாகவும் நல்ல வட்டத்திலும் தனித்தனி சன்னதிகள், சன்னதிகளின் கூரை முகப்பு விளிம்புகளில், படமெடுக்கின்றன வெண்கல நாகங்கள். 

மலையாளத்தில் என்னவோ இடியாப்பம் போல பெயரெழுதியிருந்த போர்டின் பின்னால் மஞ்சள் பூசப்பட்ட கல்தெய்வங்கள் நான்கிருந்தன அவற்றின் அருகிலிருந்த அலரி மரக் கிளைகளில் சபரிமலை சென்று திரும்பியவர்களின் மாலைகள் தொங்கவிடப் பட்டிருந்தன

 வடக்குநாதர் நெய்லிங்கத்தால் ஆனவர், லிங்கத்தின் மீது பொன்காப்பிட்டிருந்தனர். அவருக்கு பின்புறம் நெய் சிறு மலைபோல் சேர்ந்திருந்தது.

அமர்நாத் பனிலிங்கம் போல வடக்குநாதரின் நெய்லிங்கமும் உலக பிரசித்தம். அந்த நெய்யின் ஒரு துள்ளியை துண்டு வாழையிலையில் செஞ்சந்தனக்குழம்பும் மலர்களும் வைத்து பிரசாதமாக அளித்தார்கள் அந்த நெய் உடல்நோய்களை போக்கும் என்று அங்கு நம்பிக்கை

கோவிலெங்கும் நீளமாக  தொங்கவிடப்பட்டிருந்த சாமந்தி மாலைகள் வாடியிருந்தன.  கழுவப்பட்ட மாபெரும் வெண்கல உருளிகள் கவிழ்த்தும் சாய்த்தும் வைக்கப்பட்டிருந்தன

அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத  வெளிச்சுற்று பிரகார  கல்திண்ணைகளில் பெரிய பெரிய மட்டை அரிசி மூட்டைகளும் கோகுலகிருஷ்ணா அக்மார்க் நெய் தகர டின்களும் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன

பச்சைப்பட்டு விரிக்கபட்டிருந்த  துலாபார தராசுகள் ஒழிந்திருந்தன.அந்த தட்டுக்களையும்  தொட்டு வணங்கினார்கள்.

மழைதூறிக்கொண்டே இருந்தது. ஒரு கல்தூணில் கைப்பிடியுடன் ஒரு பனையோலைக்குடை சாத்தி வைக்கப்பட்டிருந்தது

வடக்குநாதரின் பின்புறம் ஸ்ரீ பார்வதி அருள்பாலிக்கிறாள்.

விருஷபன், ராமன், அய்யப்பன், சங்கர நாராயணன், கணபதி என அனைத்து சன்னதிகளிலும் விக்ரகங்களை சுற்றி ‘ப’ வடிவில் தீபங்கள் பெருஞ்சுடர்கொண்டு ஒளிர்ந்தன.

அங்கிருக்கும் அனைத்து சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் வழிபாடு நடக்குமென்றார்கள்

நெய் விளக்கேற்றும் பிரார்த்தனை நடந்துகொண்டே இருந்தது. தமிழக கோவில்களில் இருக்கும் தண்ணீர் பாட்டில் மூடியளவுக்கான மைக்ரோ விளக்குகளை போலல்லாமல்  அங்கு விற்பனை செய்யப்பட்ட, சற்றுப்  பெரிய குழிக்கரண்டி நெய் பிடிக்கும் விளக்குகளில் சுத்தமான  பசு மஞ்சள் நெய்யில் பக்தர்கள் தீபமேற்றினார்கள் 

அங்கிருந்த பல மரங்கள் நூற்றாண்டுகள் பழமையானவை. மரங்களை சுற்றிலும் உயரமான அகலமான மேடை அமைக்கப்பட்டிருந்தது; ஒரு அரசமரத்திற்கு சந்தான கோபாலகிருஷ்ண மரம் என்று பெயர்ப்பலகை இருந்தது .

வழக்கமாக லத்தீன அறிவியல் பெயர்களே பரிச்சயமாயிருந்த எனக்கு இந்தப்பெயரும் அந்த மரமும் பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது. சுற்றத்துவங்குகையிலேயே எனக்கு வலதுபுறம் இளஞ்சிவப்பு தளிரிலைளுடன் இருந்த ஒரு மரத்தை பார்த்திருந்தேன். அதை எனக்கு அடையாளம் தெரியவில்லை.இலைகள் பளபளத்தன. அதே யோசனை உள்ளே ஓடிக்கொண்டிருந்தது பொதுவாக செம்புநிறத்தில் தளிரெழுவதுதான் வழக்கம். இந்த மரம் என்னவாக  இருக்குமென யோசித்துக்கொண்டே வந்தேன்

சட்டையில்லாமல் வேஷ்டியின் ஒரு நுனியை தூக்கிபிடித்துக்கொண்டு வந்த தருண் மலையாளிகளைப்போலவே இருந்தான். ரோமாபுரியில் ரோமானியனாகத்தானே இருக்கனும்?

சுற்றி முடிக்கையில் அருகில் வந்தபோதுதான் அம்மரம் அதுநாள் வரைநான் பார்த்தேயிருக்காத பார்க்க பெரிதும் காத்திருந்த அசோகமரமென்று அதன் தீக்கொழுந்துகளை போன்ற ஆரஞ்சு மஞ்சள் மலர்கள் கொண்ட மஞ்சரிகளை கொண்டு அறிந்தேன். பரவசத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தருணிடம் நூறுமுறையாவதுது ’’அசோகமரம்டா’’ என்று சொல்லியிருப்பேன். மகிழ்ச்சியில் மரத்தடியில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தேன், மலர் மஞ்சரிகள் ஒன்றிரண்டு தான் இருந்தன. 

அம்மரத்தை குறித்து அதழில் ஒரு பதிவு முன்பு எழுதியிருந்தேன். 

 கர்ப்பகிருக வாசல் மணி பாற்கடலைகடைந்த வாசுகி என்று ஐதீகம் எனவே அதை பிரதோஷ மாலைவேலைகளில் தலைமை நம்பூதிரி மட்டுமே ஒலிக்கச் செய்வாராம் அன்று பிரதோஷம் எனவே மாலை அது ஒலித்திருக்குமாயிருக்கும்.

நந்தி  சிவனின் நேரெதிரே இல்லாமல் சற்று விலகி  தனி மண்டபத்தில் இருந்தது.

இத்தலத்தின் வடக்குநாதரையும் பார்வதியையும் பரசுராமர் பிரதிஷ்டை செய்தாரென்றும், கணபதி ராமர், சங்கரநாராயணன் திருவுருவங்களை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது.

அனைத்து விக்ரகங்களும் பொற்காப்பிடப்பட்டிருந்தன. பெருவிளக்குகளின் சுடரொளியில் அப்பொன்னும் நெருப்பென சுடர்ந்தது.

கோவிலின் அமைதி தவிர்க்கமுடியாமல் தமிழக கோவில்களின் கூச்சல்களை நினைக்கவைத்தது. பெருங்கற்கள் பதித்த தளம் கோவிலைச்சுற்றிலும். பல கற்களில் நெடுஞ்சாண்கிடையாக பலதிசைகளில் விழுந்துவணங்கும்  மேலாடையின்றி அரையாடை மட்டும் அணிந்த ஆண் சிலைகள் சிறியதாக செதுக்கப்பட்டிருந்தது

வடக்குநாதர் சன்னதியில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை ’’சுவாமியே சரணம் அய்யப்பா’’ என்று பக்திமேலிட கூவினார், சரிதானே சபரிமலைக்கு மாலையிட்டால் மாலையிட்டவரும் பிறரும் அய்யப்பன் தானென்றால் வடக்குநாதனும் ஐயப்பன்தானே அவருக்கு?

எங்கும் தீபாராதனைத் தட்டு நீட்டப்படவில்லை. விருப்பப்பட்டவர்கள் சன்னிதியின் படிக்கட்டில் ரூபாய்களை வைத்துச்செல்கிறர்கள்.  பிரகாரத்தின் விருஷபன் என்னும் கடவுள். அப்பெயரை முதன்முதலில் பார்க்கிறேன் அங்கு மூன்று முறை கைதட்டி வணங்குகிறார்கள்

ஆங்காங்கே நெற்றுத்தேங்காய்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

ஏராளமான செம்மந்தாரை மரங்கள் மலர்கொண்டிருந்தன. கல்தரையெங்கும் அதன் தாமரையிதழ்களை ஒத்த இளஞ்சிவப்பிதழ்கள் சிதறிக்கிடந்தன. பெருமரங்களின் பாசம்பிடித்த கிளைகளில் ஆர்கிடுகள் மண்டிக்கிடந்தன.

ஸ்ரீ மூலஸ்தானம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த மகிழமரம் முகப்பிலேயே இருந்தது.அதை சுற்றிவிட்டே பிரகாரத்தை சுற்றத் துவங்குகிறார்கள். அதுதான் தலமரமாயிருக்கும் என நினைத்தேன்.

 தாழ்ந்த கூரைகொண்ட மண்டபத்தின் கல்பாவியதிண்ணையின் தரையில் சற்று அமர்ந்துவிட்டு கோவிலைவிட்டுப் பிரிய மனமில்லாமல் புறப்பட்டோம்.

கோவிலின் வெளிவாசலிலும் பெரும் வெண்கல விளக்கு கம்பமிருந்தது, பலசுற்றுத்தட்டுக்களை கொண்டிருந்த அவ்விளக்கின் அடியில் ஒரு ஆமை வடிவம் தாங்கிக்கொண்டிருப்பது போல அமைந்திருந்தது.

கோவிலுக்கு வெளியே புதுமணத்தம்பதிகளின் போட்டோஷூட் நடந்துகொண்டிருந்தது  கிளிப்பச்சை பட்டுடுத்தி கைகளில் விரிந்த தென்னம்பாளையை  பிடித்துக்கொண்டிருந்த மணப்பெண் கொள்ளையழகு. 

 ’’தருண் ஒரு கேரளா பெண்ணை பாரேன்’’ என்றேன் ’’பார்க்கலாம் பார்க்கலாம்’’ என்றான் அமர்த்தலாக

 இந்த வீட்டில் மாலை வேளையில் செட்டு முண்டுடுத்தி அகலக்கண்களில் பட்டையாய் மையெழுதிக்கொண்டு  அலையலையான கூந்தலில் மலர்சூடிக்கொண்டு வெண்கல விளக்கேற்றும் மருமகளை மணக்கண்ணில் ஆசையாக பார்த்துக்கொண்டேன.

உணவகங்களில் பதிமுகப்பட்டையிட்டு இளஞ்சிவப்பிலும், சீரகமிட்ட பழுப்பிலும் வெதுவெதுப்பான நீரருந்த தந்தார்கள். இப்படி தமிழகத்துக்கென்று பிரத்யேக அடையாளங்கள் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன்.யானை, தென்னை, தென்னம்பாளை,  பதிமுக தண்ணீர், சீரகவெள்ளம் தேங்காயெண்ணய் தேய்த்து குளித்த கூந்தல், செட்டுப் புடவை பனையோலைக்குடை, மட்டைஅரிசி, லாட்டரி, பழம்பறி  நேந்திரம்பழம் என்று இங்கு ஏராளம் இருக்கிறதே. 

கோவிலுக்கு எதிரே சிவா பரிந்துரைத்திருந்த உணவகமான ’பாரத்’தில் காலையுணவு, புட்டும் கடலைக்கறியும்  நல்ல சுவையிலும் தரத்திலும் இருந்தது.

வழியில் ஒரு மாபெரும் பதாகையில் குருதிச்சிவப்பில் உடைகளும் ஆபரணங்களுமாக பகத் ஃபாஸிலும், நஸ்ரியாவும் ஐஸ்கிரீம் விளம்பரமொன்றில் காட்சியளித்தார்கள்  

அங்கிருந்து கல்யாண் சில்க்ஸ் சென்று  கருப்பில் மலர்கள் வரையப்பட்ட வெள்ளை செட் புடவை எடுத்தேன்.விலை தமிழ்நாட்டை விட பல மடங்கு குறைவு. இந்த கல்யாண் சில்க்ஸ் காரர்கள் ஏன் கோவையில் மட்டும் கொள்ளைவிலை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்று ஆதங்கமாக இருந்தது. செட் புடவைக்கு துணையாக நாவல் பழநிறப்புடவையொன்றையும் எடுத்தேன்.

கேரளா ஆண்கள் அணியும் தொள தொள ஜீன்ஸ் ஒன்று தருணும் எடுத்துக்கொண்டான்

பின்னர் கேரளா  பயணத்தை முழுமையாக்க லாட்டரி சீட்டும் . லாட்டரியில் கோடிகள் பரிசு விழுந்தால் வேலையை ராஜி வைத்துவிட்டு மீதமிருக்கும் நாளெல்லாம் வாசித்துக்கொண்டு, எழுதிக்கொண்டு, தாவரங்களை தேடிபயணித்துக் கொண்டிருமிருக்கும் பகல் கனவிற்கு பின்னர் சரணை அழைத்து பரிசு கிடைத்தபின்னர் முதல்வர் அறைக்குச்சென்று ராஜி வைப்பதை பற்றி எப்படி பேசப்போகிறேன் என்று சொல்லிக்காட்டினேன். அவன் சிரிக்காமல் ’’இப்படியேதான் நாவிதராக  நடித்த கவுண்டமணி நம்பியார் வீட்டில் லாட்டரி பரிசு விழுந்ததும் பேசுவார்’’ என்றான்.

கடைத்தெருவை கொஞ்சம் சுற்றினோம்.பலகாலத்துக்கு பிறகு அடர்மஞ்சள் சாமந்தி மாலையிடப்பட்டிருந்த புட்டபர்த்தி பாபாவின் கட் அவுட் ஒன்றை வழியில் பார்த்தேன்.

தமிழகத்தை விட இங்கு அழகிய டிசைன்களில் நைட்டிகள் விற்பனையிலிருந்தன.  ரத்தச்சிவப்பில் அதிகம் இருந்தன. கேரளத்தின் சீஸ் நிறப்பெண்களுக்கு அந்த சிவப்பு  எடுப்பாக இருக்கும்.

பிறகு சுத்தமாக்கப்பட்டிருந்த லென்ஸ் வாங்கினோம். 16 ஆயிரங்கள் ஆகுமென்று சென்னையில் சொல்லப்பட்ட அது வெறும் 800 ரூபாய்களில் சரிசெய்யப்பட்டு கிடைத்தது. (கேமரா லென்ஸ் பிரச்சனைகளுக்கு அணுகவும் கேமரா சிட்டி திருச்சூர்).

அங்கிருந்து தோட்டத்துக்கு வைக்க  கூரையிட்ட இரும்பு ஊஞ்சல் வாங்கலாமென்று திருச்சூரின் பிரபல புள்ளோக்காரன் பர்னிச்சர்ஸ் போனோம்

 வரவேற்ற பெண்ணிடம் கார்டன் ஸ்விங் வேண்டுமென்றேன் அவளுக்கு மனசிலாகவில்லை, ஊஞ்சல் வேணும் என்றேன்.’’ ஓ ஊஞ்சாலா வரு’’ என்று மாடிக்கு அழைத்து சென்றாள். எனக்கு தேவையான மூவர் அமரும் ஊஞ்சல் அங்கு இல்லாததால் திரும்பினோம்.  பிரமாண்டமான கடை, மரச்சாமன்கள் உன்னதமாக இருந்தன. கோவையைக்காட்டிலும் இங்கு நன்றாக இருக்கின்றது விலையும் பரவாயில்லை.

அருகிலேயே மற்றொரு புள்ளோக்காரன் கடை, மற்றொரு பிரம்மாண்டம். சகோதரர்களாம் ஒருவருக்கொருவர் போட்டி போலிருக்கிறது.ஒரு கடையில் 24 ஆயிரம் சொல்லப்பட்ட ஒரு ஊஞ்சல் மற்றொரு கடையில் 19 ஆயிரம். 

மீண்டும் பாலக்காடு சிவாவின் அருவிக்கும் காட்டிற்கும் சென்றோம் . வழியில் தருணின் பிரேக் அப் கலெக்‌ஷன் பாடல்கள் கேட்டோம்.அவனது பிரியத்துகுகந்த ’’எங்கிருந்தாலும் வாழ்க’’ வை பலமுறை,

 ’இங்கே ஒருவன் காத்திருந்தாலும் 

இளமை அழகை பார்த்திருந்தாலும் 

சென்ற நாளை நினைத்திருந்தாலும் 

திருமகளே நீ வாழ்க!’

காட்டில் சிவாவுடன் ஒரு நீண்ட நடைசென்றேன். முந்தின நாள் இரவு மானை துரத்தி வந்தபோது பதிந்திருந்த சிறுத்தையின் கால்தடங்கள் மழைச்சேற்றில் கூடவே வந்தன. வட்டக்கண்ணிகளின் இலைகளில்  எறும்புகள் துளையிட்டிருந்தன,  கம்யூனிஸ்ட் பச்சையுடன் மிக்கானியா ஆக்ரமிப்பும் அங்கு அதிகமிருந்தது

 மிக்கானியா

கம்யூனிஸ்ட் கட்சி கேரளமெங்கும் பரவியதுபோல் அச்செடியும் பரவியதால் கம்யூனிஸ்ட் பச்சை என்று பெயர் வந்தது என்று நானும் சிவாவும் பேசிக்கொண்டோம்

ஒரு சிற்றாறு காட்டின் குறுக்கே ஆழமற்று ஓடியது. ஆற்றில் இறங்கி குளிர்ந்த நீரில் ஆற்றின் போக்கிலெயே கொஞ்சம் நடந்தேன். சீறுமீன்கள் காலடியில் மொய்த்தன, ஆற்றின் நடுவிலிருந்த பாறையொன்றின் மீதமர்ந்து காத்திருந்த கருந்தலை மீன்கொத்தியொன்று  சரேலென்று பாய்ந்து லாவகமாக  தன் சிற்றலகால் ஒரு மீனை கொத்தி விழுங்கிச் சென்றது, அத்தனை மீன்களிலொன்றைக்கூட தன் இருகைகளால் பலமுறை முயன்றும் தருணால் பிடிக்கவே முடியவில்லை. இயற்கையின் கணக்குகள் அத்தனை சீக்கிரம் பிடிபடுவதில்லை,

வேங்கைமரத்தின் இறகுக்கனிகள், காட்டுகுருமிளகின் வால்போன்ற மஞ்சரிகள், காட்டுத்திப்பிலிச்செடியின் இதயவடிவஇலைகள், பெயர் தெரியாத பல செடிகளை பார்த்தவாறே நடந்தேன்,நீரில் மிதந்துவந்த தான்றிக்காய்களை  சேகரித்தேன். எங்கெங்கிருந்தோ யானைகளின் பிளிறலும் மயிலகவலும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு கிலுகிலுப்பை செடியின் மலர்களில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன

காட்டின் நடுவில் மீண்டும் அசோக மரமொன்றை கண்டேன் அருகிலிருந்த பெருமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கிளைகள் ஒடிந்து சேதமுற்றிருந்தது எனினும் அழகாக இருந்தது.ஒரே நாளில் இரண்டு மரங்கள்

அத்தனையடர்ந்த காட்டில் அப்படி நெருக்கமாக இருந்துவிட்டு அங்கிருந்து புறப்படவே எனக்கு மனமில்லை. வனக்காவலர்களில் பல பெண்கள் இருந்தனர் பின்ஸி, அஸ்வதி, சந்தியா, நித்யா என அவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டேன்

பெண்கள் வேலையில் இருப்பது எனக்கு பிடிக்கும் அதுவும் இப்படி வனக் காவலர்களாக சீருடையில் இருந்தவர்களை பார்க்க அத்தனை பிடித்திருந்தது. காட்டிலிருந்த பழங்குடியினப் பெண்ணொருவர் அவருக்கென்று சேகரித்திருந்த சுருளிக்கீரையை எனக்களித்தார். அரிய உணவு. எங்கும் கிடைக்கவே கிடைக்காதது. அதைக்குறித்து தனியே ஒரு பதிவு எழுத வேண்டும்

ஆற்றிலிருந்து ஒரு சிறுகல்லை நினைவுக்காக எடுத்துக்கொண்டு அதே பகிர்ந்துகொள்ள முடியாத அன்பில் மீண்டும் திளைத்து மனமின்றி புறப்பட்டேன்.

பாலக்காடு பொள்ளாச்சி நெடுஞ்சாலையில்  ஒரு விளம்பரப் பலகையில் நெற்றி அகன்ற, கேசமிழந்த உடல்பருத்த சுரேஷ் கோபி இருந்தார். அயினிப் புளிக்கறியில் செம்பமூட்டு ஆச்சியிடம் ஆசான் கேட்டதுபோல ’இப்படி கோலங்கெட்டு போனிங்களே’ என்றதற்கு ’வயசாயி அல்லே மோளே’ என்றார்.காலம்தான் எத்தனை இரக்கமற்றது?

வழியெங்கும்  அழகிய சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் அழகிய மரங்களடர்ந்த வீடுகள்.மா பலா வாழை நெல்லி இல்லாத வீடுகளே இல்லை கேரளத்தில். மாமரங்கள் அனைத்துமே மலர்ந்திருந்தன

நாட்டு மரங்களில் செந்துருவின் நிறத்தில் கிளைத்த மஞ்சரிகளும். கலப்பின மரங்களில் பசுமஞ்சள் மலர்களுடன் கூம்பு மஞ்சரிகளும் இருந்தன. எல்லா மலர்களும் சிறுபூச்சிகளும் ஈக்களும் எறும்புகளும் மொய்த்தன. இப்போது மகரந்தச்சேர்க்கை   நடந்துதான் கோடையில் கனிகள் உருவாகும்.

மதிய உணவு  நெடுஞ்சாலையில் ஒரு சைவ உணவகத்தில். வல்லரிச்சோறும், ஊதா தட்டைக்காய் துவரனும் பிரமாதமாக இருந்தது 

சாலையின் ஒரு திருப்பத்தில் ஒரு அழகிய பெண் ஸ்கூட்டியில் எங்களை கடந்துசென்றாள், தருண் ’’எண்ட ஸ்டேட்டு கேரளமானு எண்ட சி எம் விஜயனானு’’ பாடலை ஒலிக்கச்செய்தான்.

மழை ஓய்ந்திருந்த பின்னிரவில் வீடு திரும்புகையில் புன்னை மரக்கிளைகளுக்கிடையில் நிலவு காத்திருந்தது. நீண்ட நிறைவான நாள்.

ஷின்ரின் – யோகு-வனக்குளியல்.

 

வன சிகிச்சை, நிலச் சிகிச்சை,பசுமை சிகிச்சை, இயற்கை சிகிச்சை என்னும் பெயரால் அழைக்கப்படுவது, உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவிற்கான இயற்கையோடு இணைந்த ஒரு சிகிச்சை. இச்சிகிச்சை வனக்குளியல் என்று பொருள் படும் ஜப்பானிய சிகிச்சையான Shinrin-yoku வை அடிப்படையாக கொண்டது.

பாரசீக பேரரசை தோற்றுவித்தவரான பேரரசர் சைரஸ் 6ம் நூற்றாண்டில் நகரின் மையத்தில் மக்களின் ஆரோக்கியம் மேம்படும் பொருட்டு ஒரு பெரும் பூங்காவை அமைத்தார். இதுவே  பசுமை சிகிச்சையின் தொடக்கமாக கருதப்படுகிறது. 16ம் நூற்றாண்டில்  ஸ்வீடனை சேர்ந்த இறையியலாளரும் மருத்துவருமான  பாராசெல்சஸ்  ’’நோயிலிருந்து குணமடைதல் மருத்துவரிடமிருந்தல்ல, இயற்கையிடமிருந்தே கிடைக்கிறது’’ என்றார். 

1950 களில் உலகெங்கிலும் இயற்கைச் சூழலில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக 1982ல்  ஜப்பானின் மீன்வளம், விவசாயம் மற்றும் வன அமைச்சகத்தின் அப்போதைய தலைவரான தோமோஹைட் அகியாமா ’’வனக்குளியல் ‘’ என்று பொருள் படும் Shinrin-yoku ( shinrin, “forest”, yoku, “bath, bathing” ) என்னும் சிகிச்சை முறையை உருவாக்கி காடுகளை நோக்கி  அதிக அளவில் மக்களை வரச்செய்தார். 

இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதனுடன் இணையச் செய்வதற்கும், தங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் வனங்களை மக்கள் பாதுகாக்கவும் இது வழிவகுக்கும் என அவர் நினைத்தார்

தற்சமயம் உலகெங்கிலும் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் யோகா மற்றும் தியான முறைகளைப்பொல வனசிகிச்சையும் பரவலாயிருக்கிறது.

மிக குறைந்த நேரமாக ஐந்து நிமிடங்களும் அதிகபட்சமாக 120 நிமிடங்களும் இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

 குறிப்பிட்ட காலஅளவு வனச்சூழலில் இருப்பவர்களின் ஆளுமைச்சிக்கல்கள் விலகி,மனழுத்தம் குறைந்து தேக ஆரோக்கியம் கூடுகிறது என்கிறார்கள் இந்த சிகிச்சையை அளிப்பவர்களும் மேற்கொள்பவர்களும்.

இவற்றுடன் வைட்டமின் D  குறைபாடு மற்றும் கூடுதல் உடல் பருமன் ஆகியவையும் இதனால் குணமாகிறது .

சிகிச்சை முறை

  • வனங்களின் விதவிதமான ஒலிகளை மனம் குவித்து செவி கூர்ந்து கவனிப்பது
  • நிலத்தை, மரங்களை இலைகளை கைகளால் தொட்டுக் கொண்டிருப்பது
  • மலர்களையும் இலைகளையும் கனிகளியும் முகர்ந்து வாசனையை அறிந்து கொள்வது
  • வனச்சூழலை, அதன் அழகை ஆழ்ந்து கவனிப்பது
  • சுவாசத்தை கவனித்து தூய காற்றை மகிழ்ந்து அனுபவிப்பது

இந்த சிகிச்சையை இப்படி பொதுப்படுத்த முடியாது, காடுகளில் இருப்பதன் மூலம் மனநிலை மாற்றம் அடைவது என்பது மிக அந்தரங்கமானதும் தனி நபர்களின் மனநிலை சார்ந்துமாகும்,  மேலும் இப்படி காடுகளில் மனிதர்கள் நெருங்கிச் செல்வது இயற்கையின் அழிவிற்கு காரணமாகும் என் இச்சிகிச்சை குறித்து சில விமர்சனங்களும் எழுகின்றன.

உலகின் பல நாடுகளும் இந்த வன சிகிச்சையை அங்கீகரித்து ஆதரவு அளித்து வருகின்றன. ஃபின்லாந்தில் 5 மணி நேரம் வனங்களில் இருப்பது மிக நல்லது என ஆய்வாளர்கள் வலியுறுத்துகிறார்கள்

மொத்த நிலப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு வனங்களால் சூழப்பட்டிருக்கும் ஜப்பானில் இந்த சிகிச்சைக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவில் 2009ல் சிகிச்சைவனமொன்று துவங்கப்பட்டு  பலருக்கும் பயனளித்ததால் 2022ல் சுமார் 30க்கும் மேற்பட்ட சிகிச்சை வனங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மனாழுத்தம் தற்கொலை எண்ணம் ஆகியவற்றிற்கு இந்த வனங்கள் சிகிச்சை அளிக்கின்றன

சமிபத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு பணி சார்ந்த மனஅழுத்தம் நீங்க  இங்கு வனசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

சமீபத்தில் மரணமடைந்த பிரபல புகைப்பட நிபுணர் ஜான் ஐசக் போர்ச்சூழலில் புகைப்படமெடுத்து மனம் கலங்கிய தான் சூரியகாந்தி தோட்டங்களுக்குள் சென்ற பின்னர் மீண்டு வந்ததாக குறிப்பிட்டிருந்தார். கனடாவின் மருத்துவர்களும் பசுமை பரிந்துரையாக மனநல சிகிச்சைகளுக்கு  வனத்தில் நேரம் செலவழிக்க அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.

அமெரிக்க வன அமைச்சகம் இதற்கென பயிற்சி பெற்ற நிபுணர்களைக்கொண்டு அடர் வனங்களில் இரண்டு மணி நேரம்  சிகிச்சை அளிக்கிறது

தமிழகத்தில் இது பன்னெடுங்காலமாக வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒரு சிறு முள் குத்தினால்கூட முள் நீக்குகையில் வலி தெரியாமலிருக்க பச்சையை பார்க்க சொல்லும் வழக்கம் இங்கு இருக்கிறது. பசுமை நிறம் குணமாக்கும் நிறம் என்பது தமிழர்களுக்கு  முன்பே தெரிந்திருக்கிறது

இப்போதைய அடுக்கக வாழ்வில் அனைவருக்கும் வீடுகளில் பசிய செடிகளுடன் கூடிய தோட்டங்கள் வைத்திருக்க முடியாதென்றாலும் அருகிலிருக்கும் காடுகளுக்கு குடும்பத்துடன் சென்று  அங்கு குறிப்பிட்ட நேரம் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

ப்ரொபெஷனல்?

சமீப காலங்களில் கொரியர் அனுப்புவது, வாங்குவது என்பதெல்லாம் பெரும் தொல்லை தரும் விஷயமாகிவிட்டிருக்கிறது.  கோவிட் தொற்றுக்கு பிறகுதான் இப்படி . அதற்கு முன்பு சரியாகத்தான் இருந்தது. சரணும் தருணும் நானுமாக நிறைய பொருட்களை வாங்குவதும் அனுப்புவதுமாக இருப்போம். வீட்டில் யாரும் இல்லாதபோது பேக்கரி செல்வம் வாங்கி வைத்து பின்னர் கொடுப்பதுண்டு ஆனால் இப்போது அப்படி இல்லை, எப்படியோ யாரோ வேடசெந்தூர் என்னும் இக்கிராமம் இனிமேல் non service area என்று முடிவு செய்துவிட்டார்கள். 

உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, சிறிய உலகம், உலகம் உள்ளங்கைகளில் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அதுவும் இந்த வேடசந்தூர் கிராமம் தூங்கா நகரமாகி அதிகாலை வரையிலும் பேக்கரிகள் லாரிடிரைவர்களுக்காக நடை திறந்து உயிர்ப்புடன் இருக்கிறது. மருத்துவமனை ஒன்றை தவிர மற்ற எல்லா வசதிகளுமே இருக்கிறது கடந்த பத்து வருடங்களில் மிக வேகமாக வளர்ந்திருக்கும் இந்தப் பகுதி எப்படி திடீரென்று ’’நான் சர்வீஸ் பகுதி’’யானது என்பதும் தெரியவைல்லை.

சரி வீட்டுக்கு வருவதுதான் கஷ்டம் கல்லூரி முகவரிக்கு அனுப்ப சொல்லலாம் என்றால் அங்கும் சிக்கல். கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு என்னை அழைப்பார்கள் நான் அப்போது வகுப்பிலோ அல்லது மீட்டிங்கிலோ இருந்தால் டெலிவரி செய்யாமல் திரும்பி போவதும், விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் என்ன அழைத்து கல்லூரிக்கு பார்சல் வந்திருக்கிறது என்ன செய்வது  என கேட்பதுமாக ரகளையாக இருக்கிறது

பார்சல்களை, தபால்களை அனுப்புவதும் முன்பு கல்லூரிக்கு அருகிலேயே ப்ரொபெஷனல் கொரியரின் கிளை இருந்ததால் வீட்டுக்கு திரும்பும் வழியில் அனுப்பிவிட்டு வர வசதியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருக்கையில் அந்த கடையின் உரிமையாளர் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து உடல்நலமின்றி இருந்தது அதிர்ச்சியளித்தது எதிர்பார்த்ததுபோல் கடை இப்போது இல்லை.

பொள்ளாச்சியின் ப்ரொபெஷனல் கொரியரின் தலைமை அலுவலகம் விசித்திரமாக  ஒரு மிகக் குறுகிய சாலையின்  இறந்த முனையில் அமைந்திருக்கும். அந்தச் சாலை அந்த தலைமை அலுவலக கட்டிடத்துடன்  முடிவடைவதால் அங்கு காரில் சென்றால் காரை  திருப்பி எடுக்க முடியாது எனவே நெடுந்தூரம் நடந்து செல்லவேண்டும் அல்லது காரை திருப்ப  படாத பாடு படவேண்டும். 

 சமீபத்தில் சென்னை நண்பரொருவருக்கு ஒரு சிறிய பொதியை வேறொரு கொரியர் சேவை மூலம் அனுப்பி அது அவருக்கு 10நாட்களுக்கும் மேலாக போய்ச்சேராமல் இழுத்தடித்து அவருக்கும் செலவும் சிரமமும் உண்டாகியது. எனக்கும் கொரியருக்கும் நேரம் சரியில்லை போலிருக்கிறது. 

சமீபத்தில் வெண்ணிலாவின் சென்னை  வீட்டிலிருந்து எனக்கொரு பார்சல் வந்திருந்தது. திங்கட்கிழமையன்று  ’’வீட்டுக்கு அனுப்ப முடியாது தலைமை அலுவலகம் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும் காலை 9- இரவு 8 மணிக்குள்’’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. 

கல்லூரி விடுமுறையில்  ஃப்ளூ விலிருந்து மீண்டு ஓய்வில் இருந்தேன். தருணை அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சிக்கு இதற்கென்று சென்றபோது அன்றைய பகல் வேலை நேரம் முடிந்து இரவு வேலைக்கான ஒரு நபர் மட்டும் இருந்தார். அவர் நான் போனபோது சாவகாசமாக வீட்டில் யாருடனோ அலைபேசிக்கொண்டிருந்தார் என்னை அசிரத்தையாக கவனித்து என்னவென்று கேட்டார் நான் தகவல்சொல்லி குறுஞ்செய்தியை காட்டிய போது அதை சரியாக கூட பார்க்காமல் ’’சென்னையா இன்னும் வந்திருக்காது நாளைக்கு வாங்க’’ என்றார்

நான் பொறுமையை இழக்காமல் எனக்கு தகவல் வந்தபின்னர் தான் வந்திருக்கிறேன் என்றதும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவர் போனை அணைத்திருக்கவில்லை எதிர்முனை உயிருடனேயே இருந்தது. ’’போன் மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு வராதீங்க நாங்க போன் பண்ணி கூப்பிட்டு சொன்னாதான் வரணும்’’ என்று உபரிதகவல் வேறு கொடுத்தார் . என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்?

அவர் நெடுநாட்களாக இரவுப்பணியில் வேலைஏதுமில்லமால்  சுகமாக இருந்திருக்கிறார் இப்படி என்னைப்போல துரதிர்ஷ்டசாலிகள் வந்தால் விரட்டிவிடுவதும் வழக்கமாயிருக்கிறது. 

இப்படி பொறுப்பற்றவர்கள் எந்த நிலையில் எந்தப்பணியிலிருந்தாலும் பலருக்கு பெரும் சிக்கல்கள் ஆபத்துக்கள் உண்டாகும்

அந்த அசிரத்தை திலகத்திடம் பேசிக்கொண்டிருக்க முடியாமல் கசந்துபோய் வீடு திரும்பினேன்

மீண்டும் எனக்கு அதே குறுஞ்செய்தி 2 நாட்களாக வந்துகொண்டிருந்தது கூடுதலாக 3 நாட்களில் வாங்காவிட்டால் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பிவிடுவோம் என்று அச்சுறுத்தல் வேறு.

எனவே இன்று காலையே புறப்பட்டு போனோம் இரவு அதே அசிரத்தை ஆசாமி இருந்தால் என் பொறுமை எல்லைதாண்டும் சாத்தியமிருந்ததால் காலையில் போவதே உசிதம்  என்று பட்டது.

மிகச்சரியாக காலை 9 மணிக்கு போனபோது அங்கு கதவு திறந்திருக்கவில்லை வாசலில் ஸ்டூலில் ஒரு பெரியவர் கொரியர்கள் அனுப்ப வந்தவர்களுக்கென  பணியிலிருந்தார்

நான் விவரம் சொன்னதும் ’’10 மணிக்குத்தான் வருவாங்க காத்திருங்க’’ என்றார்

தெள்ளத் தெளிவாக காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என்று செய்தி வந்திருந்தது.

பொறுமையாக காத்திருந்தேன். உடன் மேலும் சிலர் வந்து காத்திருந்தார்கள். மருந்துபார்சலுக்காக  இரண்டாவது நாளாக காத்திருந்த ஒரு பெரியவர் முன்பு இதே ப்ரொபெஷனல் கொரியர் அதன் சேவைக்கு புகழ்பெற்றிருந்ததை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

9.30க்கு ஒரு பெண்மணி தோளில் ஹேண்ட்பேக்கும் கையில் மதிய உணவுப்பையும் காதில் செல்போனுமாக மெல்ல நடந்து வந்தார் அவரது  சாவகாசமான உடல்மொழியிலேயே அவர் அங்குதான் பணிபுரிகிறார் என்பது தெரிந்தது. வந்தவர் கதவை திறக்காமல் கட்டிடத்தின் பின்புறம் சென்று மறைந்தார். பின்னர் 10 மணிக்கு மீண்டும் காட்சியளித்து கதவை திறக்க முற்பட்ட போது அவருக்கு மீண்டும் போன் வந்தது. போனில் பேசிக்கொண்டே (சாப்பிட்டீங்களா? பாப்பா போயிட்டாளா? ம் ம் ம் அதான் சொன்னேனில்ல ம் சரி அதுக்கென்ன  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்) 

தருண் பொறுமையிழந்து உள்ளே சென்றதும் போனை அணைக்காமலேயே கண்களால் என்ன காரியம் என்று வினவினார் நான் அலைபேசி குறுந்தகவலை காட்டியதும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து போனில் பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் என் எண்ணை தட்டச்சிப் பார்த்தார். பார்சல் அங்குதான் திங்கட்கிழமையிலிருந்து காத்திருக்கிறது என்றது கணினி

போனில் பேசுவதை நிறுத்தாமலேயே. அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தவரிடம் சென்னையிலிருந்து  வாட்ஸ் ஆப்பில் அனுப்பட்டிருந்த பார்சல் புகைப்படத்தை காட்டியதும் ’’பேரு என்ன லோகமாதேவியா?’’ என்று 8 வது முறையாக கேட்டுவிட்டு உள்ளே சென்று 10 நிமிடங்களில் பார்சலை கொண்டு வந்தார். அப்போதும் போனில் பேசிக்கொண்டேதான் இருந்தார்  எதிர்முனைக்கு உம் கொட்டியவாறே என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.

பெருமூச்சுடன் வாங்கிகொண்டு காருக்கு வந்தேன்

இப்படி அசட்டையாக சோம்பேறிகளாக எப்படி இவர்களால் இருக்க முடிகிறது?  

முன்பு ஸ்டேட்பேங்கில் எங்கள் சம்பளம் போடப்படும் அப்போதும் இப்படித்தான் சம்பந்தப்பட்டவர் இருக்கைக்கு வரவே 11மணியாகும் பின்னர்  கம்பிக்கு வெளியே காத்திருப்பவரை அவர் நிமிர்ந்துபார்க்க 12 மணி ஆகும் நிமிர்ந்துபார்த்துவிட்டு அவர் காபி குடிக்க போய்விட்டு திரும்பி வருவதற்குள் 10 20 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள் மெத்தனமென்றால் அப்படி ஒரு மெத்தனமாக பணி செய்வார்கள்  இதை திண்ணக்கம் அல்லது தடித்தனம் என்பார்கள் இங்கெல்லாம். அதன்பிறகு கல்லூரி வளாகத்திலேயே இப்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுவதால் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.

ப்ரொபெஷனல் கொரியர் தொலைபேசி எண் மற்றும் வாடிக்கையாளர் சேவை என் இரண்டையும் குறித்துக்கொண்டு வந்து இப்போது வரை அழைக்கிறேன் யாரும் எடுக்கவில்லை

இப்படியான பணியாளர்களை மாற்ற வேண்டும் அல்லது கண்டிக்கவாவது வேண்டும். இல்லாவிட்டால் ப்ரொபெஷனல் என்னும் பெயரையாவது  அசிரத்தை, அசட்டை, அல்லது மெத்தன கொரியர்  சேவை என்று  மாற்றி வைக்க வேண்டும்

மாயன் கீரை!

மாயன் கீரை

கி மு 2600 ல் தோன்றிய மாயா நாகரிக மக்களின் உணவு  பெரும்பாலும் வேட்டை விலங்குகள், கீரை, பூச்சிகள் மற்றும் கிழங்குகளாகவே இருந்தது.   அகழ்வாய்வுகளில் கிடைத்த அவர்களின் எலும்புகளில் நடைபெற்ற ஆய்வுகள் அவர்கள் அதிகம் மக்காச்சோளமும் மான்கறியும் இலையுணவுகளையும் எடுத்துக் கொண்டதை காட்டுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தொல்குடியினரின் உணவுகள் குறித்த ஆய்வுகள் மாயன்கள் புரதச்சத்துக்காக உணவில் சேர்த்துக்கொண்ட மரக்கீரை ஒன்றின் முக்கியத்துவத்தை குறித்து தெரிவிக்கிறது.19.4% – 24.8% புரதச்சத்து கொண்டிருந்த பயறு வகைகளையும் அவர்கள் உணவில் இருந்தது என்றாலும் மாயன்களின் உணவில் பிரதான இடம்பெற்றிருந்த மரக்கீரையின் புரத அளவு 30 % இருந்தது

சாயா மரக்கீரை, கீரைமரம் என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் நிடோஸ்கோலஸ் அகோனிடிஃபோலியஸ் (Cnidoscolus aconitifolius)

பிற வழங்கு பெயர்கள்:

English: tree-spinach; Spanish: chaya, chayamansa,cabbage-star
Swedish: chaya;

Unknown: chaya col, chaykeken, kikilchay
tree-spinach

French: manioc bâtard;

மாயன் கீரை என இப்போது பெயர் பெற்றிருக்கும், உலகின் பல இடங்களிலும் வளர்க்கப்படும் இந்த கீரை வருடம் முழுவதும் கீரையை அளிக்கிறது. மிக எளிதாக இவற்றை பயிர் செய்ய முடியும். இவற்றில் பூச்சி/ நோய்த் தாக்குதல் மிக குறைந்த  அளவே இருக்கும். மாயன் கீரை மரம்  அனைத்து காலநிலைகளிலும்  செழித்து வளரும், வறட்சியையும் தாங்கிக்கொள்ளும். இம்மரம் மிக அழகிய தோற்றம் கொண்டது இவற்றின் கீரையை கால்நடைகளுக்கு தீவனமாகவும் அளிக்கலாம். 

 பார்ப்பதற்கு மரவள்ளிக்கிழங்கு செடியை போலிருக்கும் இக்கீரை மரம் சமீப காலங்களில் மிக அதிக கவனம் பெற்றிருக்கிறது.

 மாயன்களின் காலத்து கீரை வகை கடல் மட்டதுக்கு வெகு உயரத்தில் அதிக கூர்மையான முட்களுடன் இருந்தது. 1944ல் தாவரவியலாளர் ரோஜெர் (Rogers McVaugh-1909 – 2009)  மாயன் கீரைமரத்தின்  காட்டுமூதாதையான Chaya brava என்னும் முட்கள் கொண்ட வகையிலிருந்து  முட்களற்ற கலப்பினமான Chaya mansa வை உருவாக்கினார்,

மான்ஸா என்பதற்கு லத்தீன மொழியில் வீடு என பொருள் இந்த கீரையை வீடுகளில் வளர்க்கலாம் என்பதற்காக அப்பெயர் வைக்கப்பட்டிருந்தது. 1918ல்  முட்கள் கொண்ட, முட்களற்ற மாயன் கீரை வகைகள் இரண்டுமே கியூபாவுக்கும் ஃப்ளோரிடா வுக்கும் மெக்சிகோவிலிருந்து அறிமுகமானது. பின்னர் அங்கிருந்து உலகமெங்கும் இக்கீரை வகை பரவியது

Mala Mujer, கெட்ட பெண்மணி என்ற வழங்கு பெயரில் மெக்சிகோவில் அதன் முட்கள் கொண்ட வகையும் சாயா மான்ஸா என்பது முட்களற்ற வகையுமாக உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது வளர்க்கப்படுகிறது.

மாயன்கீரையில்:

  • முட்களற்ற வகை Cnidoscolus chayamansa
  • முட்கள் கொண்டது Cnidoscolus aconitifolius

நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை சேர்ந்த இவை சுமார் 15 அடி உயரம் வரை விரைவாக வளரும் எனினும் அடிக்கடி கத்தரித்து 2 அடி உயர அடர்ந்த புதராக வளர்க்கையில் கீரைகள் அதிகம் கிடைக்கும். கோடைக்காலத்தில் சிறு வெண்ணிற மலர்கள் தோன்றி வால்நட் போன்ற கனிகள் பிற்பாடு உருவாகும். இவற்றின்  சதைப்பற்றான தண்டுகளில் வடியும் வெண்ணிற பால் போன்ற திரவம் சரும அழற்சியை உண்டுபண்ணும்.தண்டுகள் மூலம் இவை எளிதில் வளர்க்கப்படுகிறது. இவற்றின் இலைகளும் இளம்தண்டுகளும் உண்ணப்படுகின்றன.

இக்கீரையில் புரதம் கால்சியம் இரும்பு சத்துக்கள் A  மற்றும் C  வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது

மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க உணவுகளில் பிரதான இடம்பெற்றிருக்கும் மிக அதிக சத்துக்களை கொண்டிருக்கும் மாயன் கீரையை ஒருபோதும் சமைக்காமல் உண்ணக்கூடாது இவற்றில் இருக்கும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் ஹைட்ரோ சயனிக் அமிலம்  (hydrocyanic acid) கீரைகளை வெப்பமூட்டி சமைக்கையில் மட்டும்தான் வீரியமிழக்கும்.Blanching  எனப்படும் கொதிநீரில் சில நிமிடங்கள் மூழ்கவைத்து பின்னர் சமைப்பதும் நல்லது.

இக்கீரையின் வேதிப்பொருட்கள் அலுமினியத்துடன் வினைபுரிவதால், இக்கீரையை  ஒருபோதும் அலுமினிய பாத்திரங்களில் சமைக்க கூடாது.

ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் இக்கீரை உணவிற்கு உண்டு 20 நிமிடங்களுக்கு குறையாமல் இவற்றை வேகவைக்க வேண்டும். பிற கீரை வகைகள் அனைத்தையும் காட்டிலும் சுவையும் சத்துக்களும் மாயன்கீரையில் பலமடங்கு அதிகமாக இருக்கிறது.

மாயன்கீரையை குறித்த காணொளி;https://youtu.be/0f8-m0kPGxk?si=dKdUK_hGI6Tvcgpr

ஒரு நாள்

(தொடர்)

25 வருடங்கள் ஆகிவிட்டதா? மலைப்பாக இருக்கிறது . நான் இன்னும் அந்த சிவப்பு செங்கல் அடுக்கி கட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் காலத்து கட்டிடத்தில் வெளிப்புற சுவரோரம் காயங்களுடன் நெற்றியில் வழிந்த ரத்தத்துடன் என்னருகில் மதில்மீதேறிக்கொண்டிருந்த ஒரு கொடியின் இதயவடிவ இலைகளை பொருளின்றி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளாகவே இருக்கிறேன்.

புது தில்லியின் அந்த நெடுஞ்சாலையின் நடுவில் கிடந்த என்னை அங்கு கூடிய கூட்டத்தில் இருந்தவர்களும் மதுவும் தூக்கி வந்து அமரசெய்திருந்தனர். அன்று நடந்ததெல்லாமே அப்படியே சட்டம் சட்டமாக மனதில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.

தனித்து நீண்ட பல இரவுகளில் அடிக்கடி எடுத்து அவற்றை என் முன்னே பரப்பி ஒவ்வொன்றாக பார்ப்பது வழக்கமாகி இருந்தது..ஒவ்வொரு காட்சியும் தனித்தனியே துலங்கித் தெரியும் எப்போது நினைத்துக்கொண்டாலும். அப்படியொரு உச்சதருணங்களால் நிறைந்த நாளது.

அந்த நாள் அந்த விபத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் வெகு ரம்மியமாக துவங்கி இருந்தது. வெள்ளையில் அடர்நீல மலர்கள் செறிந்திருந்த பிறந்த நாளுக்கென எடுத்திருந்த ஷிஃபான் புடவை உடலை தழுவிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் என்னவோ நிகழும் என்னும் எதிர்பார்ப்பில் மனமும் மலர்ந்திருந்தது.

உடனிருந்த தோழிகளுக்கும் விஷயம் தெரிந்திருந்ததால் மொத்தத்தில் எங்கள் அறையே மலர்ந்திருந்தது. மல்லிதான் பிறருக்கு சொல்லி இருப்பாள்

பல்கலைக்கழகத்தில்ஆய்வுமாணவிகளுக்கான கடிதங்கள் போடப்படும் பெட்டி இருக்கும் இடத்தில் நான் தவமிருப்பதும் அடிக்கடி எனக்கு கடிதம் வருவதும், துறையின் எதிரிலிருக்கும் பெருங்கொன்றையின் அடியில் இருக்கும், மதியம் அங்கு விற்கப்பட்ட ஆரஞ்சு, கொய்யாக்களின் கார நெடி வீசும் மரபெஞ்சில் அமர்ந்து நான் கடிதங்களை படிப்பதும் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதுவதும், கனவு மிதந்த கண்களுமாக என்னுடன் இருந்த அனைவருக்கும் சேதியை சொல்லி இருந்தது,

போதாதற்கு சென்ற முறை தில்லி சென்று திரும்புகையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் வசிக்கும் வீணா அக்காவுக்கு கொடுக்கும்படி அவர் கொடுத்திருந்த ஒரு பார்சலை கொடுக்க போகையில் உடன் மல்லிகாவும் வந்திருந்தாள். அங்கிருந்து கிளம்புகையில் வீணாக்காவின் மாமியார் எனக்கு தலைவாரி பின்னலிட்டு பிச்சிப்பூ சரம் வைத்துவிட்டார்கள். வீணாக்கா என்னை நெட்டி முறித்து ’’நாங்களே பார்த்தாலும் உன்னைப்போல ஒருத்தி எங்க நாணாவுக்கு கிடைக்கமாட்டா உங்க வீட்டில் ஒத்துப்பாங்களா‘’என்று நேரடியாக கேட்டே விட்டார். நான் திகைத்து ’’அவர் வந்து பேசறேனிருக்கார்’’என்றேன். ’’அவன் பேசறது இருக்கட்டும் உனக்கு இஷ்டமா?’’ என்றார். திணறி மூச்சடைத்து திக்கித் தடுமாறி ’ஆம்’ என்றேன்

மல்லி மேற்கொண்டு அங்கு ஏதும் கேட்கவில்லை எனினும் வெளியில் வந்ததும் ’’என்னடிது? அப்பா ஒத்துக்கவே மாட்டாரே ?’’ என்றாள். நான் அஞ்சிகொண்டிருந்த ஒன்றை அவள் எடுத்து என் முன்னே வைக்கிறாளே என்று ஆத்திரமாக இருந்தது அவள் மீது. ’’பார்க்கலாண்டி’’ என்று மட்டும் சொல்லி இருந்தேன்.

எதிர்பாராமல் மது அதிகாலையில் அந்த தங்குமிடத்துக்கு பியூஷுடன் வந்து அவராகவே செய்து என் பெயரை க்ரீமில் எழுதியிருந்த சிறிய வட்ட கேக்கை கொண்டு வந்தது தாங்கமுடியாத சந்தோஷத்தை அளித்தது. எத்தனை முயன்றும் அதை என் முகத்தில் மறைக்கவே முடியவில்லை நான் ததும்பிக்கொண்டிருந்தேன்.

அவர் மாலை என்னை கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக விஜி மிஸ்ஸிடம் அனுமதி கேட்டதும் அப்படித்தான், நம்ப முடியவில்லை. விஜிக்கோ அவரை அத்தனை பிரியம் தில்லி வரும் போதெல்லாம் மது மது என அவர் புகழ்பாடிக்கொண்டே இருக்கும் என்ன நினைத்ததோ அவர் கேட்டதும் உடனே சரிஎன்றது.

நான் அன்றைய கருத்தரங்கில் என்னவோ பேசினேன் என்னவோ சாப்பிட்டேன் என்னவோ பதிலளித்தேன். எனது கடைசி ஆய்வறிக்கைஅது உதவித்தொகையாக அமைச்சகம் எனக்கு கொடுத்திருந்த 6 லட்சரூபாய்களுக்கான கணக்குகளையும் சமர்ப்பித்தேன். எதிலும் கவனமாக இல்லாத என் இளமனம் மாலை செல்லப்போகும் கோவிலில் முன்பே போய் காத்திருந்தது. அங்கே நடக்குமென மனம் விழைந்த ஆயிரமாயிரம் விஷயங்களை மனதுக்குள் நடத்தி நடத்தி ஒத்திகை பார்த்த்து.

மற்றொமோர் எதிர்பாராமையாக கருந்தரங்கு நடந்த இடத்துக்கே என்னை அழைத்த்துச்செல்ல மது வந்தார். நான் மாலை விடுதிக்கு போய் குளித்து புறப்படலாமென்றிருந்தேன். ஆனால் அவருக்கும் காத்திருக்க முடியவில்லையோ என்னவோ அங்கேயே வந்தார். விஜியிடன் அனுமதி பெற்று கண்களால் புன்னகைக்கும் தோழிகளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அந்த பைக்கில் நான் அன்றுதான் முதலும் கடைசியுமாக ஏறி அமர்ந்தேன். என் கைகளில் இங்கிலாந்தில் இருந்து பாப் கொண்டு வந்து பரிசளித்த அழகிய பச்சைப்பூக்கள் இருக்கும் இரண்டு மடிப்பாக மடித்துக்கொள்ளும் சாம்பல் நிற பர்ஸ் இருந்தது.அதற்குள் என்னை எபோதைக்குமாக கைவிட்ட குட்டி விநாயகர் சிலையுமிருந்தது.

மாலையாயிருந்ததால் சந்தடி மிகுந்திருந்தது தில்லி தெருக்களில். ’’என்னை வேணும்னா பிடிச்சுக்கோ’’ என்றபோது வெட்கி மறுத்துவிட்டு சீட்டின் பின்னிருந்த ஒரு கம்பியை பற்றிக்கொண்டேன். முதன்முதலில் தில்லி வந்தபோது மதுவுடன் வன அமைச்சக இயக்குநரை சந்திக்க சென்றபோது அவ்வளாகமெங்கும் மலர்ந்திருந்த ஏழிலைப்பாலையின் மணம் எங்கிருந்தோ வீசுவதுபோல் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு கோவில் முன்பாக பைக்கை நிறுத்தி இறங்கினோம். தான் முதன் முறையாக கோவிலுக்கு வருவதாக சொன்னார். புன்னகைத்தேன் அவருக்கு நடவுள் நம்பிக்கை இல்லையென்றறிந்திருந்தேன்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளே செல்ல தனித் தனி வழிகள் இருந்தன. நான் எனக்கான வழியில் நுழைந்து உள்ளே கருவறையில் ஆளுயரத்துக்கு வண்ண வண்ண மாலைகளுடன் குழலூதிக்கொண்டிருக்கும் நீலக்கண்ணனை கண்டபோது அவரது வழியில் மதுவும் உள்ளே வந்து என்னுடன் இணைந்துகொண்டார். அவ்வளவாக கூட்டம் இல்லை. ஒன்றிரண்டு பேர் உடனிருந்தனர். பூஜை ஆரத்தியெல்லாம் ஒன்றுமில்லை தட்டில் இருந்த குங்குமப் பிரசாதம் மட்டும் கொடுக்கப்பட்டது. நான் நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல் உள்ளங்கையிலேயே குங்குமத்தை வைத்துக்கொண்டிருந்தேன்.

சந்நிதியின் பக்கவாட்டு வாயில் வழியே வெளியேறி அங்கிருந்து மேலேறிய படிகளில் ஏறி மேலே சென்றோம். கோவிலில் அபப்டி படிகள் இருக்குமென்பதை அப்போதுதான் பார்த்தேன். மேலிருந்த விசாலமான அறையில் பலர் அமர்ந்திருந்தனர். அழகிய வண்ணங்களில் சாளரங்கள் இருந்தன. ஒரு சாளரத்தினருகில் ஒருவர் அமர்ந்து ஆர்மோனியப்பெட்டியை இசைத்துக்கொண்டே ஒரு பஜனை மனமுருகிப்பாடிக்கொண்டிருந்தார்.

என் மனமும் உருகி வழிந்துகொண்டிருந்தது. மற்றுமோர் சாளரமருகே இருவரும் நின்றோம். தில்லியின் தெருக்களில் மெல்ல மெல்ல ஒளிஎழுந்து நகரமே அந்த சாளரம் வழியே ஒளிரத்துவங்கியிருந்தது.

தனது கையிலிருந்த குங்குமத்தை என் கைகளில் கொட்டினார். நான் அதை எடுத்து நெற்றிக்கிட்டுக்கொண்டேன். மது என்னையே பார்ப்பது தெரிந்தது. மனம் அதுவரை இருந்த பதட்டமில்லாமல் நிச்சலனமாய் துடைத்துவிட்டது போலிருந்தது. பஜன் உருகிக்கொண்டே இருந்தது . அந்த பாஷை முழுவதும் புரியவில்லை எனினும்

மீள் மீள

’’போலோ ராம் ராம் ராம், போலோ ஷியாம் ஷியாம் ஷியாம்’’

என மன்றாடிய அக்குரல் என்னுள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அங்கிருந்து புறப்படுகையில் இருட்டிவிட்டிருந்தது. பைக்கில் ஏறியதும் சட்டெனெ நினைத்துக்கொண்டவர் போல ’’போன இண்டிபெண்டன்ஸ் டேக்கு நா இந்தியா கேட்டில் பரேட் வந்தேனில்லியா அங்கே போலாமா?’’ என்றார். அப்போது நரகத்துக்கு போலாமா என்று கேட்டிருந்தாலும் சரியென்று தலையாட்டி இருப்பேன்.

அங்கே சென்றோம், பைக்கை தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து இந்தியா கேட்டின் முன்பிருந்த பரந்த புல்வெளியில் அருகருகே அமர்ந்தோம். உள்ளிருந்து என் இதயம் அவர் சொல்லப்போவதை கேட்க கணம் கணமாக காத்திருந்தது அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் எனினும் இருவருமே குடும்பம் ஆராய்ச்சி , உன்னதியுடனான ப்யூஷின் காதல் ப்யூஷ் என்றால் அமிழ்தம் என பொருள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் முழங்கால்களை கைகளால் கட்டிக்கொண்டிருந்தார், நான் கால்களை ஒருக்களித்து அமர்ந்திருந்தேன். இளங்குளிர் ரம்மியமாக இருந்தது. பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர், குழந்தைகளின் கீச்சிடல் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது.

மெதுவாக மது “என்னவோ எண்ட்டே சொல்லனும்னியே என்னது” என்றார் கண்கள் பளிச்சிட. அப்படி அவருக்கு எழுதியிருந்தேன் என்பதே அப்போதுதான் நினைவுக்கு வந்தது

இதயம் பறை போல் துடித்தது காதில் எனக்கே கேட்டது. எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு அடுத்த மாதம் ஆய்வு முடிவதால் வீட்டில் கல்யாண பேச்சு துவங்கிவிடும் இனிமேல் தாமதிக்க காரணமில்லை என்பதையும் அக்கா கணவரின் இடையூறையும் சொன்னேன். அவை குறித்து சமாதானமாக மேலோட்டமாக ஏதோ சொன்னவர் ’’என்ட்டே சொல்லனும்னு இருந்தியேஅது இதுதானா’’ என்றார், கண்களில் பளிச்சிடல் இப்போது இல்லை, குழம்பி இருந்தது, கசப்புடன் ’ஆம்’ என்றேன்.

பின்னரான அமைதி அத்தனை துயரளித்தது இருவருக்கும். சட்டென்ன பேச்சை வீணாக்கா உத்ரா ரேகா அத்திம்பேர் இந்தியா கேட்டின் உள்ளே படிகளில் ஏறிச்செல்லும் வழியென மாற்றியவர் ’’நேரமாயிருச்சே போலமா’’ என்றார்.

மனதை திரட்டிக்கொண்டு ஏமற்றத்துடன் சரி என்று எழுந்தேன். பைக் நிறுத்தப்பட்ட இடம்வரை மெளனமாகவே வந்தோம். பைக்புறப்பட்டு இந்தியா கேட்டின் எதிரிலிருந்த நேர்ச்சாலையில் 300மீ தூரம் கூட வந்திருக்காத போது எதிரே தவறான திசையில் வந்த ஒரு ஜீப் பைக்கில் மோதியதில் நான் தூக்கி வீசப்பட்டேன்.

பலர் கூடி என்னை தூக்கினார்கள், முழங்காலுக்கு கீழ் பலத்த அடிபட்டிருந்த அவரும் ஓடிவந்து என்னை தூக்கி ”ஆர் யூ ஆல்ரைட்” என்று பலமுறை உரக்கக் கேட்டார். எனக்கு வலிதெரியவைல்லை அதிர்ச்சியும் திகைப்புமாக பிரமித்திருந்தேன். ஜீப்பில் இருந்தவர்களிடன் இந்தியில் என்னமோ ஆத்திரமாக பேசிக்கொண்டும் என்னை காட்டி அவளுக்கு எதாவது என்றால் அவள் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக்கொண்டு ஜீப்பில் பர்தா அணிந்த பெண்கள் இருப்பதை பார்த்ததும் காலை நொண்டிக்கொண்டே அவ்வபோது என்னை திரும்பி திரும்பி பார்த்தபப்டி, அவர்களை போய்விட்டு மறுநாள் தனது ராணுவ முகாமில் வந்து பார்க்கும் படி சொல்லி ஜீப் எண்ணை குறித்துக்கொண்டு, பைக் சேதமடைந்ததுக்கு அவர்களளித்த 2000 ரூபாய்களை வாங்கிக்கொண்டிருந்தவரை பார்த்துக்கொண்டிருந்த நான் மனதிற்குள் ”லவ்யூ மது” என்று கோடானு கோடி முறை உரக்க கூவிக்கொண்டிருந்தேன்.

விலக்கப்பட்ட கனி !

விஷ்ணுபுரம்  குழும நண்பர்கள் உலகெங்கிலும் இருப்பதால் அந்தந்த நாடுகளின் சிறப்பான  மலர்கள் செடி,கொடிகளின் புகைப்படங்களை எனக்கு அனுப்புவார்கள். நானும் செர்ரி மலர் கொண்டாட்டங்களை டோக்கியோ செந்திலிடமும், மேப்பிள் இலைகளை பழனி ஜோதியிடமும் வானவில் யூகலிப்டஸ்  புகைப்படங்களை சுபாவிடமும், இலைகளே பொன்னாக பூத்து நிற்கும் ஜின்கோவை ஜெனிவா கணேஷிடமும் புகைப்படங்களாக  கேட்டு வாங்கி கொள்ளுவேன். அவர்களின் கண்களின் வழியே உலகத் தாவரங்களை வேண்டுமட்டும் இப்போது பார்க்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அப்படி சமீபத்தில நண்பர் பெல்ஜியம் மாதவன்-ப்ரியா அவர்களது வீட்டில் ஆப்பிள் மலர்ந்திருக்கும், கனிகள் செறிந்திருக்கும் புகைப்படங்களை  அனுப்பியிருந்தார்கள்.

வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த அழகிய ஐந்து இதழ் கொண்ட சிறு மலர்களும் அடர்சிவப்பு அரும்புகளும் கொத்துகொத்தாக நிறைந்து  மயங்க வைத்தன. இளம்பச்சை ஆப்பிள் கனிகள்  மரங்களில் செறிந்திருந்தன.  அந்த புகைப்படங்கள் என்னை ஆப்பிளின் தாவரவியல் உள்ளிட்ட பிற தகவல்களின் பின்னே செல்ல வைத்தது.  

சமீபத்தில்  கிறிஸ்தவ இறையியல் குறிப்பிடும் விலக்கபட்ட கனியான ஆப்பிள் மீண்டும் பேசுபொருளாயிருந்தது.

ஹார்வேர்ட் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு சொந்தமான ஒரு மரபணு ஆய்வகத்தில் Joe Davis என்னும் ஒரு உயிரிக்கலைஞர் , (bio-artist) விவிலியம் சொல்லிய அதே அறிவு மரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்பொருட்டு , உலகின் மிகபழைய ஆப்பிள் என கருதப்படும்  4000 வருடத்துக்கு முன்பான ஆப்பிளின் காட்டு மூதாதையான M. sieversiiயின்  மரபணுவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.மிகுந்த ஆர்வமூட்டும் செய்தி இது.

மத்திய ஆசியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் உலகில் அதிகம் பயிராக்கப்படும் கனிமரங்களில் ஒன்று. பல நாடுகளில், பல நாகரீகங்களில் ஆப்பிள் மலர் நீளாயுளின், அழகு இளமை காதல் வளமை ஆகியவற்றின் குறியீடாக கருதப்படுகின்றன

 ஆப்பிள் மலரும்போது  பல ஐரோப்பிய அமெரிக்க வீடுகளில் பூச்சாடிகளில் அவற்றை அமைத்து அழகுபடுத்துவதும், திருமண அலங்காரங்களில் பயன்படுத்துவதும் உண்டு . ஆப்பிள் மரங்களில் இலையுதிர்காலம் முடியும் போது இலைகளுக்கு முன்பாக மலர்கள் உருவாகிவிடும் என்பதால் முழுமரமும் மலர் நிறைந்து கொள்ளை அழகுடன் இருக்கும்.  

இத்தனை அழகுடன் இருப்பினும் ஆப்பிள் மரத்தின் இலை தண்டு மற்றும் விதைகளில்  Amygdalin என்னும் நச்சுப்பொருள் இருக்கும். இந்த நச்சுப்பொருள் அதை உண்பவர்களின் உடலில் சயனைடு நஞ்சாக மாறிவிடும். இவை மிக குறைந்த அளவே இருக்கிறது என்றாலும் ஆப்பிள் நஞ்சு கொண்டிருக்கும் மரம் எனும் கவனம் தேவைப்படுகிறது. 

 Malus domestica என்னும் ஆப்பிள் மரம்  பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே Malus sieversii,  என்னும் அதன் காட்டுமூதாதையிடமிருந்து கலப்பினமாக உருவாக்கப்பட்டு இன்றைய கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில்  சாகுபடி செய்யப்பட்டது. காட்டு மூதாதையான M. sieversii மிகச்சிறிய புளிப்பான கனிகளை கொண்டிருந்தது. எனவே அவற்றின் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டு மெல்ல மெல்ல புதிய வகைகள் உருவாகின.அவற்றின் சுவை, அழகிய நிறம், அதிக காலம் சேமித்துவைக்காலம் என்னும் வசதி ஆகியவற்றினால் ஆப்பிள்கள் உலகின் மிக விரும்பப்பட்ட கனிகளில் ஒன்றாக  இருக்கின்றன.

ஆப்பிள்கள் ரோசேசியே குடும்பத்தை சேர்ந்தவை இதே குடும்பத்தில்தான் பேரிக்காய்களும் ரோஜாக்களும் செர்ரிகளும் ஸ்ட்ராபெர்ரிகளும், ப்ளம்களும் இருக்கின்றன. 

விதையிலிருந்து உருவாகும் ஆப்பிள் அதன் இரண்டு பெற்றோரை போலவும் இருக்காது. இதனால் ஆப்பிள்களின் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரக் கணக்கான வகைகள்  உருவாகி இருக்கின்றன. உடல் இனப்பெருக்க முறையில் தண்டுகளிலிருந்தும் ஆப்பிள்கள் பயிராகின்றன.

ஆப்பிள்கள் பல பண்டைய நாகரிகங்களில் ஆதிக்கம் செலுத்தியதை வரலாற்றில் காணலாம்.பல நாகரீகங்களின் நூல்களில் தேவதைக்கதைகளில், காப்பியங்களில், நாட்டுப்புற பாடல்களில்,  தொன்மங்களில் ஆப்பிள்கள் இடம்பெற்றிருக்கின்றன.

 மேற்கத்திய இலக்கியங்களில் மிக அதிகம் குறிப்பிடப்பட்டிருக்கும் கனி ஆப்பிள்தான். பண்டைய கிரேக்க வரலாற்றின் ட்ரோஜன் போரை துவங்கி வைத்ததும் ஒரு ஆப்பிள் தான். பல வருடங்களாக வீட்டை பிரிந்திருந்த ஒடிசெஸ், ஆப்பிள் மரங்கள் சூழ்ந்த  தோட்டத்தில் கழிந்த தனது பால்யத்தை நினைத்து நினைத்து ஏங்குகிறான்.

நார்ஸ் தொன்மங்களில் கவிதையின் கடவுளான இடுனா கடவுளர்க்கு இறவாமையை  அளிக்கும் மந்திர தங்க ஆப்பிள் கனியை அவளது பொறுப்பில் வைத்திருந்தாள்.

கெல்டிக் தொன்மம் ஆப்பிளை என்றும் இளமையுடன் இறவாமல் இருக்க முடியும்  மறு உலகிற்கான கனி என்கிறது. இப்படி ஆப்பிள்களின் மந்திர பண்புகளை கொண்டு ஆண்களை இளம்பெண்கள் வசியம் செய்யும் கதைகள் பல நாட்டுப்புறக்கதைகளில்  உள்ளது.

ஐரிஷ் தொன்மங்களின் மாபெரும் நாயகனான  கோன்லா, ஒரு அழகிய பெண் இறவாமையை அளிக்கும் என சொல்லி கொடுத்த  ஒரு ஆப்பிளால் வசியம் செய்யப்படுகிறான்

ஆர்தரியன் புராணங்களில், ஆர்தர் மன்னருக்கு மிகப்பிரியமான அவலோன் என்னும் ஒரு தீவில் செறிந்து வளர்ந்திருந்த ஆப்பிள் மரங்களின் கனிகள் பல மந்திர பண்புகளை பெற்றிருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது

 பல தொன்மங்களில் ஆப்பிள்கள் ஆசையை தூண்டுதல், இறவாமை, காதல்,  மெய்ஞானம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் கனியாகவே இருக்கிறது . அரேபிய இரவுக் கதைகளிலும் வருகிறது மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு மந்திர ஆப்பிள்.

 பிரபல தேவதைக் கதையான ’’Snow White and the Poisoned Apple’’லில் ஸ்னோ ஒயிட் சூனியக்காரி கொடுத்த நச்சு ஆப்பிளால் மீளா உறக்கத்துக்கு போனபின்பு ஒரு காதல் முத்தமே அவள் எழுப்பும். இந்த பிரபல தேவதை கதை உலகின் பல மொழிகளில் பல கலாச்சாரங்களில் பல வடிவங்களில் இருக்கிறது

ஸ்வீடன் நாடோடிக்கதைகளின் வில்வித்தை நாயகனான வில்லியம் டெல் தன் மகனின் தலையிலிருந்த ஆப்பிளை ஒற்றை அம்பில் வீழ்த்தும் போட்டியில் வெற்றிபெறுகிறான்.வில்லியம்டெல்லும் ஆப்பிளும் என்னும் நாடன் பாடல் வீரத்துக்கான் பாடலாக பலகாலமாக அங்கு பிரசித்தி பெற்றிருக்கிறது.

ஐரோப்பிய நாட்டுப்புற கலாச்சாரத்திலும் ஆப்பிள் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது அங்கு நடைபெறும் ஆப்பிள் அறுவடை கொண்டாட்டங்களின் போது இளம்பெண்கள் நீளமாக சீவப்பட்ட ஆப்பிள் தோலை, தோள்களுக்கு பின்புறம் வீசி எறிவார்கள். அது எந்த ஆங்கில எழுத்தைப்போல விழுந்து வடிவம் கொண்டிருக்கிறதோ,அந்த எழுத்தை முதலாவதாக கொண்டிருக்கும் காதலன் அல்லது கணவன் கிடைப்பான் என்று அங்கு நம்பிக்கை உண்டு.

சேக்‌ஷ்பியரின் ரோமியோ ஜுலியட்டில், ரோமியோவை தனது விலக்கப்பட்ட கனி என்கிறாள் ஜூலியட்.

 ஆங்கில பழமொழியொன்று //ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிளை உண்டால் மருத்துவரே தேவையில்லை என்கிறது. இந்தப் பழமொழி// an apple a day will keep the doctor away//  முதன் முதலாக 1866 ல் அச்சில் வெளியானது.  

பிரபல கவிஞர்களான  Robert Frost, Emily Dickinson, Christina Rossetti,  Dylan Thomas  ஆகியோரும் ஆப்பிள்கள் பற்றி கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பல பிரபல ஓவியர்கள் ஆப்பிளை வரைந்திருக்கிறார்கள். இயற்பியலாளர் ஐஸக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள் புவியீர்ப்பு விசை குறித்த அறிதலை உலகிற்களித்தது.

 நியூயார்க்  நகரின் இணைப்பெயராகவே  பெரிய ஆப்பிள் என்னும் பெயர் இருக்கிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நியூயார்க்கில் பிரபலமாக இருந்த குதிரை பந்தயத்தின் மிகப்பெரிய  தொகையை குறிப்பிட பயன்படுத்தப்பட்ட “The Big Apple” என்னும் குறியீட்டுச் சொல் பின்னர் விரிவடைந்து நியூயார்க்கின் பெயராகவே நிலைத்துவிட்டது.

கிறிஸ்தவ இறையியலில், விவிலியத்தின் ஆதியாகமம், ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனியை உண்டதால் தண்டனைக்கு உள்ளான ஆதாமையும் ஏவாளையும் குறிப்பிடுகிறது.  நூற்றாண்டுகளாக  பல இறையியல் நூல்களில் விலக்கப்பட்ட கனியாக  பெயரற்ற கனியே இருந்து வந்தது

 ஆரம்பகால கிறிஸ்தவ படைப்புகள் இதை கடவுளுக்கு கீழ்படியாததால் கிடைத்த தண்டனை என்பதை  சற்று  விரிவாக சொல்லமுற்பட்டபோது கனி என்று பொதுவாக குறிப்பிடாமல் ஒரு குறிப்பிட்ட கனியின் பெயரை சேர்த்தன. அப்படி பல கனிகள் கிழங்குகள் தானியங்கள் குறிப்பிடப்பட்டு இறுதியில்  அது ஆப்பிளாகி இருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது கனியே அல்ல அது மனம் மயக்கும் ஒரு மது, திராட்சை ரசம் போல என்னுமோர் கருத்தும் அப்போது இருந்தது, வைன் அருந்துவது பாவம் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் அக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கலாம்.

 யூதர்களின் விவிலியமொன்று,  கடவுளின் கட்டளையை கீழ்ப்படியாமையை விளக்கும் அந்த நிகழ்வை இப்படி விவரிக்கிறது

“When the woman saw that the tree was good for eating and a delight to the eyes, and that the tree was desirable as a source of wisdom, she took off its fruit and ate. She also gave some to her husband, and he ate” (Genesis 3:6)

ஹீப்ரூ மொழியில் எழுதப்பட்ட பழைய விவிலியத்திலும் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் என்று குறிப்பிட்டிருக்கவில்லை. பிற்கால ஹீப்ரூ விவிலியத்தில் கனியை குறிக்க  உபயோகப்படுத்தபட்டிருந்த சொல் பெரி “peri”.

விவிலிய ஹீப்ரு மற்றும் நவீன ஹீப்ரூ இரண்டிலுமே பெரி என்பது கனி என்னும் பொதுவான பொருளைத்தான் கொண்டிருக்கிறது குறிப்பிட்ட கனியை அது சுட்டுவதில்லை. ஆப்பிளுக்கான ஹீப்ரூ சொல்லான “tapuach,”  என்பது ஹீப்ரூ மொழியில் உருவான  முதல் ஐந்து விவிலியங்களில் எங்குமே குறிப்பிடபடவில்லை. 

 ரபிஸ்  என்றழைக்கப்படும் விவிலிய மொழியியல்  ஆய்வாளர் மற்றும் மதகுருக்களில் ஒருவர் அது அத்திக்கனியாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைக்கிறார்.ஏனெனில் ஆதாமும் ஏவாளும் கனியை புசித்ததும் தங்களின் நிர்வாணத்தை உணர்ந்து வெட்கி அத்தி இலைகளில் ஆடையணிந்து கொண்டார்கள், எனவே அது அம்மரத்தின் கனியாக இருக்கலாம் என்கிறார் 

ரபிஸ் ஒருவேளை அந்தக் கனி கோதுமை மணியாக கூட இருக்கலாம் என்னும் ஒரு கருத்தையும் சொல்கிறார். ஏனெனில் ஹீப்ரூ மொழியில் கோதுமை மணிகளுக்கான் சொல்  “chitah,”  ஹீப்ரூ மொழியில் பாவம்- sin, என்பதற்கான சொல்”cheit,”  எனவே கோதுமை மணியும் விலக்கப்பட்ட கனி என்னும் சாத்தியங்களின் பட்டியலில் இருக்கிறது என்கிறார்,

 ரபிஸ் அவரது ஆய்வுக்கட்டுரையில் கொஞ்சம் கசப்பு சுவை கொண்ட, சுருக்கங்கள் இருக்கும் மிக தடிமனான தோல் கொண்டிருக்கும் முட்டை வடிவ எலுமிச்சை கனியான  citron என்பதை குறிக்கும் ஹீப்ரூ சொல்லான “etrog” என்பதை சுட்டிக்காட்டி அக்கனி எலுமிச்சை ஆகவும் இருக்கலாம் என்கிறார். யூதர்களின் பண்டிகைகளில் பண்டைய காலத்திலிருந்தே இந்த  எலுமிச்சை கனி முக்கியமான இடம் கொண்டிருக்கிறது

அதைப்போலவே ஏதேன் தோட்டத்தின் இருப்பிடமும் விவாதப்பொருளாகவே  இருக்கிறது. அது துருக்கியிலிருந்து ஓஹியோ வரை என்றும் இல்லை அது வடதுருவம் என்றும் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன

விலக்கப்பட்ட கனி அத்தி, ஆலிவ், திராட்சை,கோதுமை, எலுமிச்சை, ஆப்ரிகாட், வாழை மாதுளை என்றெல்லாம்  மாறி மாறி வந்து கடைசியில்தான்  ஆப்பிளில் வந்து நின்றிருக்கிறது.  விலக்கப்பட்ட கனிகளுக்கான் இத்தனை சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டிருக்கையில் எப்படி அது இறுதியாக ஆப்பிளாயிற்று?  

துவக்க கால இறையியல் படைப்புகளில் விலக்கப்பட்ட கனியானது  வளமையை பெருக்குமென நம்பப்பட்ட மாண்ட்ரேக்  கனியாக கருதப்பட்டது,இதுவே வாழ்க்கை மரம்’’ tree of life’’ எனப்பட்டது. இனப்பெருக்கத்தின் ரகசியங்கள் கடவுளுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இதன் கனிகள் மனிதர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது .பிறகு சாத்தானின் தூண்டுதலால் ஆதிமனிதன் அக்கனியை புசித்து இனப்பெருக்க ரகசியங்களை, காதலை காமத்தை அறிந்து கொண்டான்.

எனவே  கோபம் கொண்ட கடவுளால், அந்த  ஆதி தம்பதியினரும்,  விஷப்பாம்பாக மாற்றப்பட்ட சாத்தானும், சிறு செடியாக மாற்றப்பட்ட  அந்த மாண்ட்ரேக் மரமும் கடவுளால்  சொர்க்கத்திலிருந்து  வெளியேற்றப்பட்டனர்.அதன் பின்னர் அக்காலப் படைப்புகளில் விலக்கப்பட்ட கனி மாண்ட்ரேக் என்னும் சிறு செடியின் கனியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது.

 பொ யு 250–200  ஆண்டுகளுக்கு முன்பான ஆதாமின் ஏழாம் தலைமுறை என கருதப்படும் ஏனோக்குவின் நூலில் கொத்துகொத்தாக திராட்சைகளை போன்ற கனிகள் விலக்கப்பட்ட கனிகளாக சித்தரிக்கப்பட்டன (Enoch 32:4). இது பின்னர் முதல் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது. 

 ஒரு நூற்றாண்டு கழித்தே திராட்சைகளின் இடத்தை அத்தி எடுத்துக்கொண்டது. 

கிறிஸ்துவுக்கு பிறகான முதல் ஆயிரமாண்டு காலத்தில் எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த படைப்பான   Life of Adam and Eve என்னும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரான ஆதாம் ஏவாளின் வாழ்க்கையை சொல்லும் படைப்பிலும் அது அத்திக்கனியென்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்நூல் மொழியாக்கம் செய்யப்பட்ட  கிரேக்க, லத்தீன அர்மீனிய, ஜார்ஜிய, ஸ்லேவினிக் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பல மொழிகளிலும் அப்படியே குறிப்பிடப்பட்டது. முக்கிய கிறிஸ்தவ  இறையியல் எழுத்தாளர்களும் விவிலிய அறிஞர்களுமான அகஸ்டின், தியடோர்  ஆகியோரும் அது அத்தியே என குறிப்பிட்டார்கள்  

அந்நூல்களின் சித்தரிப்பை அடிப்படையாக கொண்டு பல ஓவியங்களும் அதே கனிகளை வரைந்தன.அவற்றில் மிக அதிகம் இடம்பெற்றது அத்தியும் திராட்சையும்தான். சில சித்திரங்களில் அத்திமரத்தில் திராட்சை காய்த்திருந்தது.இன்னும் சில சித்திரங்கள்  மரத்தையோ கனியையோ அடையாளம் கண்டுகொள்ள முடியாத வகையில் வரையப்பட்டிருந்தன.

பிரான்ஸின் வடக்குப்பகுதி நகரமான  லையான்  (Lyon) தேவாலயமொன்றில் சிறியதாக கருப்பு நிறத்தில் ஆலிவ் கனிகளை நினைவூட்டும் கனி வரையப்பட்டிருந்தது

வடக்கு பிரான்ஸில் ஒரு தேவாலயத்தில் 1180–90க்கு  இடைப்பட்ட காலத்தில் வரையப்பட்ட ஒரு சித்திரத்தில் ஏற்கனவே கடிக்கப்பட்டிருந்த ஒரு உருண்டையான கனியை ஆதாம்  உண்ணும் சித்திரம் இருந்தது.அக்கனியில் ஆப்பிளை அடையாளம் காணும் மேற்புற பிளவு தெளிவாக தெரிந்தது.

3ம் நூற்றாண்டின் அலெக்ஸாண்டிரியா திராட்சையே ஆதமும் ஏவாளுமுண்ட விலக்கப்பட்ட கனி என்றார்.  பாரீஸின் வடக்கு புறநகர்ப்பகுதி தேவாலயங்களில் அக்காலத்து ஓவியங்களில் சாத்தானாகிய பாம்பு ஒரு கொத்து திராட்சைகளை வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சித்திரங்கள் இருந்தன.

 4ம் நூற்றாண்டில் (அனேகமாக  A.D. 382ல்) ரோம் நகரில்தான் இந்த ஆப்பிளின் வடிவம் துவங்கி இருக்கக்கூடும். போப் முதலாம் டமஸ்கஸ் , மொழியியலாளரான ஜெரோம் என்பவரிடம் விவிலியத்தை ஹீப்ரூவில் இருந்து லத்தீன மொழியில் மொழியாக்கம் செய்ய பணித்தபோது ஜெரோம் ஹீப்ரூவின் பெரி என்னும் சொல்லுக்கான லத்தீன இணைச்சொல்லாக மாலம் (“malum”) என்பதை உபயோகப்படுத்தினார். லத்தீன மொழியில் மாலம் என்பது சதைப்பற்றான உட்புறமும் ஏராளமான விதைகளையும் கொண்டிருக்கும் கனிகளின் பொதுப்பெயர். ஜெரோம் உபயோகப்படுத்திய மாலம் என்னும் சொல்லின் மற்றொரு இணைப்பொருள் ’’தீமை’’. 

ஜெரோம் அப்பணியை 15 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு செய்தார்.  அவர் கையாண்ட canonical Vulgate எனப்பட்ட பேச்சுவழக்கு லத்தீன மொழியிலான அப்படைப்புத்தான் மாலம் என்னும் தீமைக்கும் கனிக்குமான் ஒரே பொதுச்சொல்லினால் கனியை குறிப்பிட்டு விலக்கப்பட்ட கனி ஆப்பிள் தான் என்னும் விதையை ஊன்றியது

ஜெரோம் மொழியியலாளர் மட்டுமல்ல  ஒரு இறையியலாளர் மிக புத்திசாலியும் கூட . ஜெரோம் வேண்டுமென்றே அதை செய்திருக்க கூடும் என்று மொழியியலாளர்கள் பின்னர் யூகித்தனர். மொழிமாற்றத்தின்போது ஆப்பிளுக்கும் தீமைக்குமான ஒரு பொதுச்சொல்லை, தீமையை கொண்டு வரும் என்பதால்  கடவுளால் விலக்கபட்ட ஒரு கனிக்கு உபயோகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என அவர் நினைத்திருக்கலாம் என்கிறது அவர்கள் தரப்பு.எப்படியாகினும் மாலஸ் ஒரு நாகம் போல மெல்ல ஊர்ந்து வந்து வரலாற்றில் இடம் பிடித்தது ஜெரோமினால்தான்.

ஆனால் மாலஸ் என்பது சதைப்பற்றான எந்த கனியையும் குறிப்பதுதான் எனவே அக்கனி பேரிக்காய் அல்லது அத்தி அல்லது பீச் ஆக இருக்கலாம் என்ற கருத்தும் வலுவாக  பின்னர் எழுந்தது.அதை சொன்னவர்கள் தங்கள் தரப்பு ஆதாரமாக  1508 லிருந்து 1512 க்கு இடைப்பட்ட காலத்தில் சிஸ்டைன் தேவாலய உட்கூரையில் மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த சித்திரத்தில் அத்தி மரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பை காட்டினார்கள் 

எனினும்  அதன் பின்னர் ஐரோப்பாவின் பல கலைவடிவங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாக சித்தரிக்கப்பட்டது. ஜெர்மானிய கலைஞரான  Albrecht Dürer என்பவரின் 1504 ஆண்டின் புகழ்பெற்ற  செதுக்கு சித்திரங்களில் ஆதாமும் ஏவாளும் ஆப்பிள் மரத்தடியில் நின்றுகொண்டிருக்கும் சித்திரத்தை  உதாரணமாக சொல்லலாம்.

அந்த சித்திரம் பிற்பாடு உருவாக்கப்பட பல ஓவியங்களுக்கு அடித்தளமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்தது. உதாரணமாக ஜெர்மானிய ஓவியர்  Lucas Cranach the Elder ன் ஆதாமும் ஏவாளும் சித்திரத்தில் மரத்திலிருந்து  பளபளக்கும் ஆபரணங்களை போல ஏராளமான ஆப்பிள்கள் தொங்கிக்கொண்டு இருந்தன.  

எனவே இது ஒரு மொழியில் ஏற்பட்ட நுண்மையான விளையாட்டு அல்லது தவறு  என்பதை மக்கள் உணரும் முன்னேயே ஆதாமும் ஏவாளும் ஆப்பிளுடன் இருக்கும் சித்திரங்கள் ஏராளமாக உருவாகிவிட்டிருந்தன.

அதே சமயத்தில் எலுமிச்சையும் ஆப்ரிகாட்டும்,மாதுளைகளும்  பல ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டன என்றாலும் ஆப்பிள் மிக அதிக இடமும் முக்கியத்துவமும் ஏற்றிருந்தது’

 12ம் நூற்றாண்டின் வழிபாட்டு நாடகமான Jeu d’Adam ல் பல இடங்களில் விலக்கப்பட்ட கனி என்பதை  மாதுளையை குறிக்கும் “forbidden pom” என்னும் சொற்களே குறிப்பிட்டன. ஜெர்மனியிலும் 10,12 நூற்றாண்டுகளில் விலக்கப்பட்ட கனியாக அத்தி மாதுளை ஆகியவை இடம் பெற்றிருந்தன ஆனால் 13ம் நூற்றாண்டில் அனைத்து கனிகளையும் விலக்கிவிட்டு ஆப்பிள் அந்த  இடத்தில் அமைந்தது 

 அதன் பின்னர் ஆப்பிள் வலுவாக  பிரான்சின் விலக்கப்பட்ட கனியின் இடத்தில் அமர்ந்தது. இங்கிலாந்திலும்  ஜெர்மனியிலும் அத்தனை விரைவில் மாற்றம் வந்திருக்காவிடினும்  பிரான்சின் கலாச்சார தாக்கத்தில்  13ம் நூற்றாண்டின் பின்பகுதியில் அங்கும் ஆப்பிள் அறிமுகமானது.பிரான்சையும் விரைவில் கடந்து  13ம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் அத்தியை நகர்த்திவிட்டு ஆப்பிள்கள் இடம்பெற்றன,

14ம் நூற்றாண்டில்  ஆங்கிலம் பேசுமொழியாக இருந்த அனைத்து பிரதேசங்களிலும் பெரும்பாலான  அத்திகள் ஆப்பிள்களாகியிருந்தன.  . அதன் பின்னர் ஐரோப்பாவின் அனைத்து கலைகளிலும் அத்தி மறைந்து ஆப்பிள் நுழைந்தது

 ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாவதற்கு அச்சு இயந்திரங்களும் ஒரு காரணமாயிருந்தன. 16ம் நூற்றாண்டின் துவக்ககாலங்களில் முக்கிய அச்சு தொழிற்சாலைகள் எல்லாம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்தன. அவை உருவாக்கிய அனைத்து படைப்புக்களிலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாக சித்தரிக்கப்பட்டது.

வடக்கு ஜெர்மனியின் புகழ்பெற்ற கலைஞர்களான Hugo van der Goes, Hieronymus Bosch, Lucas Cranach the Elder, Albrecht Dürer ஆகியோரின் சித்திரங்களில் விலக்கப்பட்ட கனி ஆப்பிளாகவே இருந்தது. 

ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கத்தை பதிப்பத்தாரிடம் 5 பவுண்டுகளுக்கு  1667ல் உரிமம் பெற்று இப்போது 356 வருடங்கள் ஆகின்றன.

அவரது அப்பெரும் படைப்பில் விவிலியத்தின் ஆதிக்கதைதான் பேசுபொருள் . கதாபாத்திரங்களும் நமக்கு தெரிந்தவர்கள் தான் கடவுள், ஆதாம், ஏவாள், பாம்பின் வடிவத்தில் சாத்தான் மற்றும் ஒரு ஆப்பிள்.

கடவுளுக்கெதிரான மனிதனின் முதல் மீறலும்,  உலகிற்கு மரணத்தின் சுவையையும் அழிவையும் கொண்டு வந்த அந்த  விலக்கப்பட்ட மரத்தின் கனியை குறித்தான அறிமுகத்தில் ஜான் மில்டன் இப்படி குறிப்பிடுகிறார்

//Of Mans First Disobedience, and the Fruit

Of that Forbidden Tree, whose mortal taste

Brought Death into the World, and all our woe//

துவக்கத்தில் வெறும் கனி என்று சொல்லும் மில்டன் அந்த 1000 வரி கவிதையில் இரண்டு இடங்களில் ஆப்பிள் என்று குறிப்பிடுகிறார்.

மில்டன் வெறும் எழுத்தாளர் மட்டுமல்ல அவருக்கு பன்மொழிப்புலமை இருந்தது. லத்தீன, கிரேக்க மற்றும் ஹீப்ரூ மொழிகளில் நல்ல புலமை இருந்த அவர் வெளிநாட்டு மொழிகளுக்கான செயலராகவும் பணிபுரிந்தார். அவருக்கு நிச்சயம்  ஜெரோமின் நுண்மையான விளையாட்டு தெரிந்திருக்கும் இருந்தும் அவர் ஏன் ஆப்பிள் என்னும் சொல்லை தேர்வு செய்திருக்க கூடும்?

இதற்கு வரலாற்றாய்வாளர்கள் இருகருத்துகளை சொல்கிறார்கள்’ ஒன்று மில்டன் அக்கனி ஆப்பிள் என்றே நினைத்திருக்கலாம் . இரண்டு மில்டனும் ஆப்பிள்/மாலஸ் என்னும் சொல்லின் பொருளான சதைப்பற்றான விதைகள் நிரம்பிய ஏதோ ஒரு கனி என்னும் பொதுப்பெயரில் கூட அச்சொல்லை உபயோகப்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்’

மில்டனுக்கு பின் வந்த எழுத்தாளர்கள் அச்சொல்லை பிரத்யேகமாக ஆப்பிளை குறிக்கும் சொல்லாகவே உருவகப்படுத்தி பிரபலமாக்கினர்.அதன்பிறகே உலகெங்கிலும் விலக்கப்பட்ட கனியாக ஆப்பிள் நிலைத்துவிட்டது.

கடவுளுக்கு கீழ்படிந்திருந்தால் மற்றுமொரு  நன்மை மரமான வாழ்க்கை மரத்தின் பலன்கள் மனிதனுக்கு கிடைத்திருக்கும் என்பதையே இறையியல் நூல்கள்  விலக்கப்பட்ட கனி என்பதன் மூலம் குறிப்பிட்டன. அது ஒரு குறியீடு என்பதையும் தாண்டி பல நூற்றாண்டுகளாக அக்கனி எது என்பதற்கு  இத்தனை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது வியப்புத்தான்.

 ஏவாளும் ஆதாமும் கீழ்படியாமை, மீறல் ஆகிய பாவங்களின் பொருட்டே பூமிக்கு அனுப்பப்பட்டனர். அக்குற்றத்தை காட்டிலும் நூற்றாண்டுகளாக அது எந்தக்கனி என்பதில் இத்தனை ஆராய்சிகள் செய்யப்பட்டிருக்கிறது.

 மொழியியலோ அழகியலோ தவறான புரிதலோ  ஆலிவிலிருந்து, மாதுளை, அத்தி, கோதுமை, திராட்சை என்று பல வசீகரிக்கும் வடிவங்கள் கொண்டு இறுதியில் ஆப்பிளாயிருக்கிறது விலக்கப்பட்ட கனி. இப்படித்தான் தீமையும் பல அழகிய, வசீகரிக்கும், சபலப்படுத்தும் வடிவங்களில் நம்முன் வந்து நிற்கிறது.

அதிலும் செக்கசிவந்த நிறமும் சதைப்பற்றும் சுவையும் கொண்ட ஆப்பிள் வசீகரமென்றால், முன்பே கடிக்கப்பட்ட ஆப்பிள்  கூடுதல் வசீகரம்தான்.

 சிவப்பு நிறம்கொண்ட ஆப்பிள் ஆசையும் காதலும் நிரம்பி இருக்கும் மனிதனின் இதயத்துக்கான குறியீடாகவும் கருதப்படுகிறது. உலகெங்குமே  ஆப்பிள் வடிவம்  தொழில்நுட்பம், மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களின் அடையாளமாக கருதப்படுகிறது. 

ஜூன் 7 1954 ல் தனது 42வது வயதில் ஆலன் டூரிங் அவருக்கு மிக பிடித்தமான அடர்சிவப்பு ஆப்பிளில் சயனைடை ஊசியில் செலுத்தி அதை கடித்துண்டார் மறு நாள் காலையில் ஒரு துண்டு கடிக்கப்பட்ட ஆப்பிளின் அருகில் அவரது சடலம் கிடந்தது. அதே கடிக்கப்பட்ட ஆப்பிள் தான் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவாக அமைந்திருக்கிறது.

விலக்கப்பட்ட கனி என்பது மாதுளையோ அத்தியோ ஆப்பிளோ திராட்சையோ அல்ல எவையெல்லாம் அறமற்றதோ அவையனைத்துமே விலக்கப்பட்ட கனிகள்தான். 

ஏவாள் அக்கனியை தாணுண்டு ஆதாமுக்கும் அளித்து அவர்கள் சொர்க்கத்தை  இழந்தாலும் உலகை தோற்றுவித்தார்கள், வெண்முரசு நாவல் நிரையின் இமைக்கணத்தில் இந்த  வாழ்வின் சுழற்சியை, தொடர்ச்சியை சிகண்டியும் இளைய யாதவரும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அத்தியாயத்தின் இருவரிகள் சொல்லி விடுகிறது. //ஆணை பெண் உண்கிறாள். அவன் உடலின் பகுதியென்றாகிறாள். அவள் வயிற்றில் அவன் கருவாகிறான்” //

டிகாப்ரியோ மரம்!

மத்திய ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டின் ‘எபோ’ காடுகள் இயற்கை வளம் மிகுந்தவை. மலை யானை, உலகின் மிகப்பெரிய கோலியாத் தவளை மிக அரிய  உலகின் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படும் Red colobuses குரங்குகள் பல அரிய தாவர வகைகள் என பலவற்றின் வாழிடம் இதுதான். உலகின் மழைப்பொழிவில் எபோ காடுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது .

இந்த எபோ காடுகளில் 1500 சதுர கிமீ அளவுக்கு மழைக்காடுகள் எபோ ஆற்றின் அருகில் இருக்கிறது.இங்கு 65 மிக முக்கிய உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன

உலகின் பிற இயற்கை வளங்களைப்போலவே எபோ காடுகளும் கனிம சுரங்கங்களுக்ககவும், சட்ட விரோத விலங்கு வேட்டை மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவற்றால் அழியும் அபாயத்தில் இருந்தது. பல சூழலியல் ஆர்வலர்கள் இந்த பிரச்சனையை  சர்வதேச அளவில் முன்வைத்தபோது எபோ காடுகள் பாதுகாக்கப்பட்ட பூங்காவாக அறிவிக்கப்படும் என்று அரசுத்தரப்பில் 2010ல் சொல்லப்பட்டும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன் பின்னரும் எபொ காடுகளின் 1,300  சதுர கிமீ அளவுள்ள பரப்பின் மரங்கள் வெட்டப்படுவதற்கான உரிமம்  அரசால் வழங்கப்பட்டது. எபோ காடுகளின் உயிரினங்களும் அங்கிருக்கும் தொல்குடிகளுக்குமான மாபெரும் அச்சுறுத்தலாக அது இருந்ததால் எதிர்ப்புகள் வலுத்தன. 

 எனவே அழிவின் விளிம்பில் இருந்த எபொ காடுகளை பாதுகாக்க கேமரூனின் ஆரய்ச்சியாளர்கள் சூழியலாளர்கள் ஆகியோர் இணைந்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பொருட்டு டிகாப்ரியோ உள்ளிட்ட பல பிரபலங்களின் கையெழுத்தை சேகரித்து  அரசுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார்கள் கூடவே எபோ காடுகளின் இயற்கை வளத்தை பட்டியலிட்டு உலகிற்கு அதன் முக்கியத்துவத்தை காட்ட நினைத்தார்கள் அப்படி பட்டியலிடுகையில்தான் அதுவரை அறியப்பட்டிருக்காத ஒரு மரம் கண்டுபிடிக்கப்பட்டது

 சீதாப்பழத்தின் தாவரக்குடும்பமான அனோனேசியை சேர்ந்த, 2022ல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  இம்மரத்திற்கு புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரும் இயற்கை ஆர்வலரும், சூழியல் செயற்பாட்டாளருமான லியோனார்டோ டிகாப்ரியோ வின் பெயரிடப்பட்டிருக்கிறது. 

கேமரூன் நாட்டின் எபோ காடுகளின் பாதுகாப்பில் டிகாப்ரியோ காட்டிவரும் அக்கறையையும் அதை பாதுகாக்கும் அவரது முன்னெடுப்புக்களையும் சிறப்பிக்கும் பொருட்டு அக்காடுகளில் மட்டும் காணப்படும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த மரத்திற்கு Uvariopsis dicaprio என்று அவரது பெயர் இடப்பட்டிருக்கிறது, 

குறிப்பாக அக்காடுகளில் மரம் வெட்டப்படுவதற்கான எதிரான அவரது செயல்பாட்டின் முக்கியத்துவத்தின் பொருட்டே இந்த கெளரவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எபோ காடுகளில் 50க்கும் குறைவான டிகப்ரியோ மரங்கள் மட்டுமே இருக்கின்றன அதுவும் வெறும் 4 சதுர கி மீ பரப்பளவில் மட்டும் இருக்கிறது. பலமுறை எபோ காடுகளில் தேடியும் இவை வேறெங்கும் காணப்படவில்லை.

கடல் மட்டத்திற்கு 850 மீ உயரத்தில்,4 அடி உயரமும் கவிழ்ந்து தொங்கும் மஞ்சள் இதழ்களை கொண்ட ஆண்மலர்களையும் கொண்டிருக்கும் இம்மரம் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் அவசியம் பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் ஒன்றாகி விட்டிருக்கிறது. இக்காடுகளின் மரம் வெட்டும் உரிமம் ரத்தானதில் டிகாப்ரியோவின் பங்கு மிக முக்கிய மானதென்பதால் இம்மரம் அவர் பெயரில் அழைக்கப்படுவது அவருக்கான பொருத்தமான அங்கீகாரம்.

இந்தப் பெயரிடல் கியூ தாவரவியல் பூங்காவின் தாவரவியலாளர் களான  Martin Cheek  மற்றும் George Gosline, ஆகிய இருவரின் பரிந்துரையின் பேரில் நடந்திருக்கிறது.

உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் எட்டு முறை இடம்பெற்ற செல்வந்தர் எனினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இயற்கை பாதுகாப்பில் அக்கறை கொண்டவராகவே இவர் பொதுவெளியில் அறியப்படுகிறார்

திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கும் இவர் 2014ல் தயாரித்த மலை கொரில்லாகளைக் காப்பாற்ற போராடும் நான்கு நபர்கள் குறித்த பிரிட்டிஷ் ஆவணப்படம் ’விருங்கா’ மிக குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு போன்ற பேசு பொருட்களை கொண்ட படங்கள் தயாரிப்பதில் டிகாப்ரியோ ஆர்வம் கொண்டிருந்தார். 

2019ல் புவி வெப்பமாதல் குறித்த  ஆவணப்படமாகிய  Ice on Fire, அவரால் தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து டிகாப்ரியோ சூழலியம் (Environmentalism)  தொடர்பான பல முன்னெடுப்புக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

புவிவெப்பமாதல் உலகின் மிகப்பெரிய சவால் என்று சொல்லும் இவர் மழைக்காடுகள் அழிந்து வருவதையும் வாழிடங்ளை இழந்து பல உயிரினங்களின் இருப்பு கேள்விக்குறியாகவும் கவலைக்குரியதாகவும் ஆகிவிட்டிருப்பது குறித்தும்  தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்

இயற்கை சார்ந்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாட்டின் பொருட்டு லியோனார்டோ டிகாப்ரியோ அறக்கட்டளை ஒன்றையும் (Leonardo DiCaprio Foundation,) 1998ல் நிறுவினார். இந்த அறக்கட்டளை மூலம் வளரும் நாடுகளின் இயற்கை பேணுதலுக்காக நிதியுதவிகள் அளிக்கப்படுகின்றது. 

இத்துடன் சூழலுக்கு இணக்கமான மின் வாகனங்களைத்தான் அவர் பயன்படுத்துகிறார்.

2000த்தில் சூழல் பாதுகாப்பு குறித்த பில் கிளிண்டனுடனான டிகாப்ரியோவின் நேர்காணல் க முக்கியமானது

2007ல் Live earth எனப்படும் மாபெரும் சூழல் விழிப்புணர்வு நிகழ்வையும் நடத்தினார் அதே ஆண்டில் ரஷ்யாவின் வன உயிர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய புலிகளுக்கான் உச்சிமாநாட்டுக்கு 1மில்லியன் டாலர் நன்கொடை வழங்கினார். அந்த மாநாட்டிற்கு பல தடங்கல்களுக்கு இடையில், இரண்டு முறை அவர் செல்லவேண்டிய விமானம் ரத்தாகியும் அவர் முயற்சி எடுத்து கலந்துகொண்ட போது புதின் டிகாப்ரியோவை ’’இவரே உண்மையான் ஆண்’’ என்று புகழ்ந்தார்.

இந்தோனேசியாவின் எண்ணெய்ப்பனை வளர்ப்பினால் காடழிதல் குறித்து கண்டனம் தெரிவித்தது, 2016ல்; அமெரிக்க தொல்குடிகள், அவர்களின் வாழ்விடங்களின், வன உயிர்களின் பாதுகாப்புக்கென  15.6 மில்லியன் டாலர் நன்கொடை அளித்தது, 2017ல்  காலநிலை மாற்றம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பாராமுகக்தை கண்டித்து ஊர்வலம் சென்றது என டிகாப்ரியோவின் சூழல் செயல்பாடுகளை வரிசையாக சொல்லிக்கொண்டெ போகலாம்

சமீபத்தில் கிழக்கு பசிபிக் தீவுக் கூட்டங்களின் பாதுகாப்பிற்கென டிகாப்ரியோ 43 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். அவரும் அவரது அன்னையுமாக பல நன்கொடைகளை சூழியல் சார்ந்த செயல்பாடுகளுக்கென அளிக்கிறார்கள். அவரின் விக்கி பக்கத்துக்குள் சென்றால் இவரது சூழியல் செயல்பாடுகள் குறித்து மேலும் அறியலாம்

டிகாப்ரியாவின் இத்தையக சூழல் சார்ந்த செயல்பாடுகளால் அவரை சிறப்பிக்கும் பொருட்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  மலேசியாவில் மட்டும் காணப்படும் ஒரு வண்டினத்துக்கு  Grouvellinus leonardodicaprioi,  என்றும் டொமினிக் குடியரசின் சிலந்தி ஒன்றுக்கு Spintharus leonardodicaprioi  என்றும் அவரது பெயர் முன்பே வைக்கப்பட்டிருக்கிறது.

டிகாப்ரியோ விற்கு  வாழ்த்துக்கள்!

https://en.wikipedia.org/wiki/Uvariopsis_dicaprio

 மரியா சிபில்லா!

கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னதான அரிய நீல நிற வைரக்கல்லான  ஹோப் வைரம் உள்ளிட்ட பதினான்கு கோடி பல்துறை சார்ந்த பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்மித்சோனியன் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் (Smithsonian National Museum of Natural History) ஒரு மதிய வேளை அது. அறிவியலாளரான சினிச்சி நகஹரா (Shinichi Nakahara) தனது மேசையின் இழுப்பறையை திறந்து அந்த கண்ணாடிப் பெட்டியை கவனமாக எடுத்தார்.1981 லிருந்து  அதனுள் இருந்த பதப்படுத்தப்பட்டிருந்த  பட்டாம் பூச்சியை மீண்டும் கவனமாக ஆராய்ந்தார். 

பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகள் துறையில் வல்லுநரான நகஹராவால் அந்த பட்டாம் பூச்சியை வெகு காலமாக, 2018  டிசம்பர் மாதமான அப்போது வரை இனம் காண முடியாமல் இருந்தது. அந்த அரிய கருப்பு வண்ண ஆண் பட்டாம்பூச்சியின் உடல் பனாமாவில் கிடைத்தது. ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் மாணவன் பாப்லோ (Pablo Sebastián Padrón) அதை கண்டு பிடித்து அதன் உடலை புகைப்படம் எடுத்து நகஹராவுக்கு அனுப்பி அதை இனம் கண்டு சொல்லும்படி கேட்டிருந்தான்.  பின்னர் அது பாடம் செய்து அங்கே சேமித்துவைக்கப்பட்டது. அந்த பட்டாம்பூச்சியை இனம் காண்பது பெரிய சவாலாக அமைந்துவிட்டது நகஹராவுக்கு. மேலும் ஒரு பட்டாம்பூச்சி கிடைத்தால் ஒப்பிட்டு பார்க்க உதவியாக இருக்கும் என அவர் நினைத்துக் கொண்டு காத்திருந்தார்.

பளபளக்கும் கரிய இறக்கைகளும், இறக்கைகளின் விளிம்புகளில் பாலாடை நிறப் புள்ளிகளின் வரிசையும் கொண்ட அந்த பட்டாம்பூச்சி மிக வசீகரமாயிருந்தது. இறகுகள் இணையும் இடத்தில் இருந்த செந்தீற்றல் அதை மேலும் அழகாக்கி இருந்தது.

அதன் உடல் அமைப்பு பட்டாம்பூச்சிகளின் மிகப்பெரிய குடும்பமான பியரிடேவை (Pieridae) சேர்ந்தது என தெரிவித்தாலும் அதன் கருப்பு நிறம் சந்தேகத்துக்கு இடமளித்தது. எனவே நகஹராவும் பாப்லோவும் காத்திருந்தனர். 

Shinichi Nakahara

அதிர்ஷ்டவசமாக, இரண்டு மாதங்கள் கழித்து மிஸிஸிபி பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளரான ஜான் (John MacDonald) பனாமாவிலிருந்து தன்னால் இனம் காணமுடியவில்லை என்னும் குறிப்புடன் ஒரு கருப்பு நிற பட்டாம்பூச்சியின் புகைப்படத்தை நகஹராவுக்கு அனுப்பியிருந்தார்.

புகைப்படத்தில் இருந்த பட்டாம்பூச்சி தன்னிடம் இருந்த அதே கருப்பு பட்டாம்பூச்சியை போலிருந்ததால், நகஹரா, ஜானிடம் அந்த பூச்சி உடலின் ஒரு காலை மட்டும் உடனே  அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். இரண்டின் DNA சோதனைகளையும் செய்து அவை Catasticta  பேரினத்தை சேர்ந்த  மிக அரிய வகை பட்டாம்பூச்சிகள் என்பதை கண்டறிந்தார். 

அதுவரை விவரிக்கவும், கண்டுபிடிக்கப்பட்டும் அடையாளம் காணப்பட்டுமிராத அவற்றின் வேறு மாதிரிகள் எங்கேனும் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறதா என அடுத்த 30 மாதங்களும்  14  பட்டாம்பூச்சி அருங்காட்சியங்களில் தேடிப்பார்த்த போது எங்குமே அவை இல்லை. எனவே  புதிய கண்டுபிடிப்பான அதற்கு பொருத்தமான பெயரை தேடினார் நகஹரா

அத்தனை அரிய பட்டாம்பூச்சிகளான அவற்றிற்கு 17ம் நூற்றாண்டின் பிரபல ஓவியக்கலைஞரும் பூச்சியியலில் பெரும் கண்டுபிடிப்புக்கள் செய்தவரும் பட்டாம்பூச்சிகளில் பேரார்வம் கொண்டிருந்தவருமான  மரியா சிபில்லா மெரியனின் (Maria Sibylla Merian) பெயரை வைக்க முடிவு செய்து அந்தப் பட்டாம்பூச்சிக்கு  Catasticta sibyllae என்று பெயரிட்டார்.

மரியா சிபில்லா அவர் வாழ்ந்த நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் மற்றும் ஓவியக்கலைஞராக அறியப்பட்டவர். 17ம் நூற்றாண்டில் பெண்கள் இருந்த நிலைக்கு மாறாக பல அரிய சாதனைகளை தாவரவியலிலும், பூச்சியியலிலும் செய்தவர்.

17ம் நூற்றாண்டின் பிரபல  தாவரவியல் ஓவியக் கலைஞரான  ஜெர்மெனியை சேர்ந்த மரியா சிபில்லா (1647-1717) மிக இளைய வயதிலேயே கம்பளிப்புழுக்கள், கூட்டுப்புழுக்கள் மற்றும் பூச்சிகளிலும் அவை வாழும், உண்ணும் தாவரங்களிலும்  வெகுவாக  ஆர்வம் கொண்டிருந்தார். மரியாவின் மாமா ஒரு பட்டுப்புழு உற்பத்தியாளர், எனவே அவருக்கு அப்புழுக்களை கவனிப்பதில் இயற்கையாகவே ஆர்வம் உண்டானது

மரியா தனது 11ம் வயதிலிருந்தே ஓவியங்கள் வரையத் துவங்கினார். அவரது பொழுதுபோக்கு இறந்த பூச்சிகளை பாடம் பண்ணுவதில்  அவரது தாய் மாமாவுக்கு உதவுவதும், அவற்றை அலமாரிகளில் அடுக்கி வைப்பதும்தான். எனவே மரியாவிற்கு பூச்சிகளின் உலகில் நல்ல பரிச்சயமுண்டானது, 

ஜான்ஸ்டன் (Jonston) உருவாக்கிய முதல் விலங்கியல் அகராதியை அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அச்சகம் மரியா சிறுமியாக இருக்கையிலேயே வெளியிட்டது. அந்த அகராதியின் அழகிய வண்ணப்படங்களால் மரியா வெகுவாக  ஈர்க்கப்பட்டிருந்தாள். 

மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டில் ஏப்ரல் 2,  1647 ல்  சிற்பியும் பதிப்பக உரிமையாளரும் ஓவியருமான மேத்யூஸுக்கும் (Matthaeus Merian) ஜோஹன்னாவுக்கும் (Johanna Sibylla Heim) பிறந்தார்.  ஜொஹன்னா மெரியனின் இரண்டாவது மனைவி. மரியாவுக்கு 3 வயதாக இருக்கையில் தந்தை மேத்யூஸ் இறந்த பின்னர் ஜோஹன்னா உருவப்பட ஓவியரான  ஜேகப்பை  (Jacob Marrel-1613/14 – 1681)   மணந்துகொண்டார். 

மரியா ஒவியம் வரைவதை அவரது தாய் மறுமணம் புரிந்துகொண்ட பிரபல ஓவியரும் அவளது வளர்ப்புத்தந்தையுமான ஜேகப்பிடமிருந்து  கற்றுகொண்டார் .   

ஜேகப் ஒரு மலர் ஓவியர், உருவ வரைபட நிபுணர் மற்றும் தேர்ந்த சிற்பி.

ஃப்ராங்க்ஃபர்ட்டின் பிரபல உருவ வரைபட நிபுணரான  ஜார்ஜின் (Georg Flegel -1566-1638),   மாணவராக இருந்து ஓவியக்கலையை கற்ற இவர்   Utrecht க்கு 1632 ல் குடிபெயர்ந்தார். அங்கு உயிர் ஓவியக்கலை வல்லுநரான  ஜேனின் (Jan Davidsz. de Heem -1606-1683/4) அறிமுகம் உண்டானது. அக்கலையையும் ஜேகப் கற்றுத்தேர்ந்தார்

ஜேகப்பின் படைப்புக்களில் மிகவும் பிரபலமானவை மேசையின் மீதிருக்கும் கூடைகளில் வைக்கப்பட்டிருக்கும் கனிவகைகளும், பூச்சாடிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மலர்களும் தான். குறிப்பாக கனிகளின் மேற்புறத்தின் நுட்பமான அமைப்புக்களை ஜேகப் துல்லியமாக வரைந்திருப்பார்.

அழகிய உலோகக் கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் பீச், ரத்தினக்கற்களை போன்ற விதைமுத்துக்களை காட்டிக் கொண்டிருக்கும் மாதுளை, தோல் மீதிருக்கும் மெல்லிய வெண்படலத்துடன் காணப்படும் கொத்து கொத்தான திராட்சைகள்  ஆகியவை மிக தத்ரூபமாக வரையப்பட்டிருக்கும்.

ஜேகப்பின் ஓவியங்களில் பூச்சி அரித்த இலைகளும், பழுத்து அழுகிய கனிகளும் காணப்படும். எத்தனை அழகியதாயினும் அழிவு என்பது இயற்கையில் தவிர்க்க முடியாது என்பதை அவரது ஓவியங்கள் உணர்த்தின.

ஜேகப்,  ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பிறந்தார். எண்ணெய் ஓவியங்கள் அவரது தனித்த பிரியத்துக்குரியவையாக இருந்தன. 1641ல் ஜேகப் கேதெரினா எலியட்டை மணந்தார். 1649ல் எலியட் மரணமடைந்த பின்னர் ஃப்ராங்க்ஃபர்ட்டில் வாழ்ந்துவந்த   பிரபல சிற்பியான மேத்யூஸ் மெரியனின் (Matthäus Merian) விதவையான  ஜொஹன்னா சிபில்லாவை (Johanna Sibylla Heimius)  1651ல் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அப்போதுதான் மனைவியின் மகளான மரியாவை தனது மாணவராக்கிக்கொண்டு ஓவியக்கலையை கற்பித்தார்.

அப்போதிலிருந்து  அவர் இறந்த 1681 வரை அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டிலேயே பெரும்பாலும் வாழ்ந்தார்.

ஜேகப்பின் ஓவியங்களில் குறியீடுகள் மிக சிறப்பானவை. மலர்களில் பல்லியோ  பட்டாம்பூச்சிகளோ இருந்தால் அவை உயிர்த்தெழுதலையும், நத்தைகள் சோம்பேறித்தனத்தையும் குறித்தன 

கூரிய இதழ்களுடன் இருக்கும் நீண்ட ஊதா மலர்மஞ்சரிகள் தூய ஆவியை, வாடிய மலர்கள் மரணத்தை,  லில்லிகள் பணிவையும் குறித்தன. ட்யூலிப் மலர்களே அவரின் சிறப்பு ஓவியங்கள் என கருதப்படுகின்றன. ட்யூலிப் மலர்களின் ஓவியங்களும் அவற்றின் விலைகளும் குறிப்பிடப்பட்டிருந்த ஜேகப்பின் நான்கு ஓவியத்தொகுதிகள் மிக புகழ்பெற்றவை. மரியாவும் அவரை போலவே ட்யூலிப்களின் ஓவியங்களை வரைந்தார்.

ஜேகப்பின்  மறைவுக்கு பின்னர் அவரது மகனும் மரியாவின் சகோதருமான கேஸ்பர் மெரியன் மரியாவுக்கு செம்புப் பட்டயங்களில் செதுக்கோவியங்களை வரைய கற்றுக்கொடுத்தார். அக்காலத்தில் ஜெர்மனியில் பெண்கள் ஓவியம் வரைவதும் விற்பதும்  சில நகரங்களில் தடை செய்யப்பட்டிருந்தது.  ஆனால் மரியா வாழ்நாள் முழுவதும் ஓவியங்களை வரைந்தார்

மரியா  சிறுமியாயிருந்த போதிலிருந்து கர்ப்பமுற்றிருந்த போதும் , குழந்தை வளர்ப்பு காலங்களிலும், இல்பேணிக்கொண்டிருக்கையிலும் எப்போதும் வரைந்துகொண்டே இருந்தார்.

மரியாவுடன் ஓவியம் வரைய கற்றுக்கொண்ட ஜேகப்பின் மாணவரான ஜோகன்ஸைத்தான் (Johann Andreas Graff)  மரியா  1665ல்  காதல் திருமணம் செய்துகொண்டார். மரியாவின் கணவரும் கட்டிடக்கலை ஓவியங்களில் வல்லுநர். அவரது 9 பெரிய தாள்களில் வரையப்பட்ட st. பீட்டர்ஸ்  தேவாலயத்தின்  ஓவியம் மிக பிரபலமானது. ஆனால் மரியாவுடையது தோல்வியுற்ற தாம்பத்யம் .  

 1668ல் மரியா அந்நகரின் இளம்பெண்களுக்கு மலரோவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார்,  Jungferncompaney (“Company of Young Misses,”) எனப்படும் திருமணத்திற்கு காத்திருக்கும் மேல்மட்ட குடும்பப்பெண்களின்  அத்தகைய குழுமங்களில் மலர்களின்  ஓவியம் வரையக் கற்றுக்கொடுப்பது, லினென் துணிகளில் இயற்கை சித்திரங்களை எம்பிராய்டரி செய்வது, ஆகிய வகுப்புக்களின் மூலம் மரியாவுக்கு பல செல்வந்தர்களின் சொந்த தோட்டங்களுக்கு செல்ல அனுமதி கிடைத்தது. மேலும் பல பூச்சிகளை தாவரங்களை மரியா வரைய இவை உதவியாக இருந்தன

 பெரும்பாலான் ஐரோப்பிய பூச்சி இனங்களை ஆராய்ந்திருந்த மரியா எப்படி அவை பிறக்கின்றன, வளர்கின்றன,உணவுண்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இறக்கின்றன என்பதை முழுமையாக ஆய்வு செய்து  ஓவியங்களாக ஆவணப்படுத்தினார். 

மரியாவுக்கு புழுக்கள் அழகிய பூச்சிகளாக உருமாறுவதை காண்பதில் பெருவிருப்பம் இருந்தது.  மரியா பூச்சிகளின் இனப்பெருக்க உறுப்புக்களை கவனித்து அவற்றின் ஆண் பெண்  வேறுபாட்டுடன் ஓவியங்கள் வரைந்தார்

பூச்சிகளை குறித்த பயமமேதுமில்லாமல் அவற்றை கைகளில் பிடித்து கவனமாக உற்று நோக்கி பல ஓவியங்களை அவர் வரைந்தார். பல வகையான பூச்சிகளை வீட்டில் பெட்டிகளில் வளர்த்தார்

மரியாவின் வீடு சீசாக்களிலும் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு வளர்ந்த பூச்சிகளாலும் தொட்டிகளில் வளர்ந்த பல வகையான செடிகளாலும் நிறைந்திருந்தது

1679 ல் தனது இரண்டாவது மகள் பிறந்த ஒரு வருடத்தில், இரு வருடங்கள் கூர்ந்து கவனித்து வரைந்த ஓவியங்கள், தகவல்கள் அடங்கிய  ’’கூட்டுப்புழுக்களின் அதிசய உருமாற்றம்’’ என்னும் தனது    Der Raupen wunderbarer Verwandlung (the wondrous transformation of caterpillars  and their curios diet of flowers )  நூலை வெளியிட்டார். அவர் கைகளால் வரையப்பட்ட, பல வண்ணங்களில் இருந்த, வெகு அழகிய, மிக துல்லியமான பூச்சிகள், அவை அமரும் தாவரங்களின் ஓவியங்கள் அறிவியல் இலக்கியத்தின் புது வரவாக கவனம் பெற்றன,

அந்நூலில் பிற பூச்சியியல் நூல்களில் இருப்பதைப்போல செடிகொடிகளின் பின்னணியில் பூச்சிகளை வரையாமல் ஒவ்வொரு பூச்சிக்கும் அவற்றின் வாழிடத்துக்கும், உணவுக்கான தாவரத்துக்குமான தொடர்பையும் காட்சிப்படுத்தினார்.

உண்மையில் உலகின் முதல் சூழலியாளர் மரியாதான்  1683ல் இதன் இரண்டாம் படைப்பையும் மரியா வெளியிட்டார். தாவரங்களுக்கும்  விலங்குகளுக்குமான தொடர்புகளை மரியா அவரது ஓவியங்களில் ஆவணப்படுத்தியிருந்தார்.

லத்தீன் மற்றும் டச்சு மொழிகளில் சூழியல் அடிப்படைகளை தெளிவாக கொண்டிருந்த அந்நூல்கள் ஐரோப்பாவில் பெரும அதிர்வலைகளை எழுப்பியது

1681ல் தந்து வளர்ப்புத்தந்தை ஜேகப் இறந்தபின்னர் மரியா ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு திரும்பி தன் அன்னையுடன் வசித்தார் அப்போதும் பல படைப்புக்களை வெளியிட்டார்

1686ல் தவளைகள் அவற்றின் முட்டைகள், தலைப்பிரட்டைகளின் ஓவியங்களுடன் மரியா வெளியிட்ட ஓவியங்களும் குறிப்புக்களும் அவருக்கு பின்னர் வந்த டச்சு நுண்ணோக்கியலாளரான ஆண்டனி வான் லூவன் காக்கின் (1632-1723)  அதேபோன்ற கண்டுபிடிப்புக்கு   வெகுவாக முன்னால் இருந்தது. மரியாவே முதன் முதலில் இருவாழ்விகளின் இனபெருக்கவியலை ஆவணப்படுத்தியவர் 

1698ல் மரியா  தனது ஓவியங்களை ஏலம் விட்டு பெருந்தொகை பெற்று பூச்சிகளை அவற்றின் வாழ்விடத்துடன் இணைத்து வரையத் துவங்கினார். அதன் பின்னர் மரியா உலகெங்கும் ஒரு தாவரவியலாளராக, பூச்சியியலாளராக ஓவியக் கலைஞராக, இயற்கையியலாலராக அறியப்பட்டார்.

 அக்காலகட்டத்தில் பிரபலமாக  இருந்த  அலங்கார ஓவியங்களைப் போலல்லாமல் தேவையற்ற  வரியோ, வண்ணமோ இல்லாமல் தன் கண்களால் கண்டவற்றை அப்படியே  கைகளால்  வரைந்தார் மரியா 

17ம் நூற்றாண்டின் பழமையான கலாச்சாரத்தளைகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியல் குறித்த  பல ஆய்வுகள் செய்தார், ஆனால் .அக்காலத்தில் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு பெண்களுக்கானதல்ல  என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்

அப்போதிலிருந்து இன்று வரைக்கும் மரியா கலாச்சார தடைகளை உடைத்து வென்று முன்னேறிய பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் கருதப்படுகிறார். மரியாவின் ஓவியங்கள் மிக துல்லியமான அறிவியல் அடிப்படைகளையும் மிகச்சரியான வண்ணங்களையும் கொண்டிருந்தன. ஒவ்வொரு பூச்சிகளையும் அவற்றின் முட்டைப் பருவத்திலிருந்து படிப்படியாக கவனித்து அவற்றின் இறப்பு வரை வரைந்து ஆவணப்படுத்தினார்

ஓவியங்களில்  இருந்த பூச்சிகள், தாவரங்கள் குறித்த இனப்பெருக்கவியல் உள்ளிட்ட பல   மிக விவரமான தகவல்களையும் மரியா எழுதினார் . மரியாவே பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் குறித்து ஓவியங்களில் காட்சிப்படுத்தி ஆவணப்படுத்திய முதல் பெண்மணி.   

 17 வருட மணவாழ்வு 1685ல் விவாகரத்தில் முடிந்த பின் மரியா நெதர்லாந்தின்  (Friesland) மதம்  சார்ந்த  Labadists என்னும் அமைப்பில் தன் சகோதர கேஸ்பருடன்  இணைந்துகொண்டார். அவ்வமைப்பு கிருத்துவம் சார்ந்த பல சேவைகளை செய்து வந்தது. அக்குழுவின் நோக்கமும் நம்பிக்கையும் இயற்கையின் படைப்புகளை நெருங்கி அறிவதன் மூலம் அவற்றை படைத்த கடவுளை அறியலாம் என்பது.  அங்கு மரியா மேலும் ஓவியங்கள் வரையலானார் இரண்டு வருடங்களில் மரியாவின் பல ஓவியங்களின் தொகுதிகள் அவ்வமைப்பின் அச்சுக்கூடத்தில் பிரசுரமாகியது.

அந்த மத அமைப்பில்  அவரது  கணவர்  Graff தானும் இணைந்துகொண்டு மீண்டும் மரியா தன்னுடன் வாழவேண்டுமென பல தகராறுகள் செய்தார். 1692 ல் தாயும் இறந்த பின்னர்  மரியா ஆம்ஸ்டர்டாமுக்கு சென்று  மகள்களுடன் வசித்தார். அங்குதான் பெண்களும் வணிகம் செய்யலாம் என்பதை கண்டுகொண்டார்   அங்குதனது  ஓவியங்களை விற்று கிடைத்த வருமானத்தில் சுயமாக வாழ்ந்தார்.

1698ல் மரியாவும் மகள்களும் ஆடம்பரமான ஒரு வீட்டில் வாழ்ந்தனர்.

ஆம்ஸ்டர்டாமில் மரியாவின் படைப்புகள் நல்ல விலைக்கு போனது. அங்கு அவர் உலகின் பல பாகங்களிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த பாடமாக்கப்பட்ட  பல பெரிய பட்டாம்பூச்சிகள் அருங்காட்சியகங்களின் கண்ணாடிச்சட்டகங்களில் ஊசியால் பிணைக்கப்பட்டிருந்ததை பார்த்தார்.எனினும் அவர் அவற்றை ஒரு போதும் வரையவில்லை. பூச்சிகளை அவற்றின் இயற்கையான வாழிடங்களில் வரையவே விருப்பம் கொண்டிருந்தார்.

1699ல் ஆம்ஸ்டர்டாம் அரசு  மரியாவிற்கும் மகள் டோரதியாவுக்கும் சுரிநாம் செல்ல அனுமதி அளித்தது. அங்கு ஐந்தாண்டுகள் இருப்பதாக பயணத்திட்டம் இருந்த்து எனினும் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு மலேரியா தொற்று உண்டானதால் அவர் ஆம்ஸ்டர்டாமிற்கு திரும்பினார். அந்த  பயணத்திற்கான நிதி திரட்டும் பொருட்டு மரியா தனது 255 ஓவியங்களை விற்றிருந்தார். அப்போது அறிவியல் நூல்களுக்கான மொழியாக லத்தீன் இருந்தது. எனவே மரியா லத்தீன மொழியை கற்றுக்கொண்டார்

அப்போது அதிகம் அறியப்பட்டிருக்காத அறிவியல் ரீதியான தேடலுக்கென மரியா அந்தப் பயணத்தை மேற்கொண்டார். ஜூன் 1699ல்  தனது 52வது வயதில்  மகள் டோரதியாவுடன்     தென்னமெரிக்காவின் சுரிநாமிற்கு மரியா பயணப்பட்டார். அது ஒரு மிக துணிச்சலான பயணம் அதற்கு முன்பு வரை ஆண்களால் அரசியல், பொருளாதார ராணுவ காரணத்துக்காகவே அப்படியான தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில்  அரிய பொருட்களை தேடும் பொருட்டு கடற்பயணம் மேற்கொண்ட ஆண்களில் யாரும் மரியாவை உடனழைத்துச் செல்லவில்லை.

அப்போதைய ஆணாதிக்க உலகில் ஒரு 52 வயது பெண்ணாக அவர் அறிவியல் தேடலுக்கு ஒரு பயணத்தை முன்னெடுத்தது மிகப்பெரிய ஆச்சரியம். தனது ஓவியங்களை விற்றுக்கிடைத்த நிதியை கொண்டே மரியா பயணத்தை செய்துமுடித்தார்.

சுரிநாமில் 2 வருடங்கள் மரியா தன் கைகளில் கிடைத்தவற்றை எல்லாம் சேகரித்தார். தலைநகர் Paramariboவின் பூங்காக்களில், சுரிநாம் ஆற்றின் கரைகளில், கரும்புத் தோட்டங்களில் மட்டுமல்ல அந்த ஆற்றை சிறு படகில் கடந்து மழைக்காடுகளிலும் தனியே பயணித்து அங்கு வாழ்ந்த தொல்குடிகளை சந்தித்து அவர்களிடமிருந்தும் பல பூச்சிகளை பெற்றார். பூச்சி, புழுக்கள் மூலிகைகள் குறித்த தகவல்களை சேகரித்தார்.  தொல்குடியினரும் மரியாவின் மீதான அன்பினால் காடுகளுக்குள் துணையாக வந்து அவரது ஆய்வில் உதவினார்கள்.

சுரிநாமில் இரு அடிமைப் பணிப்பெண்கள் மரியாவிற்கு உதவினர். மரியாவின் அத்தனை புகழுக்கும் இந்த அடிமைபெண்களே காரணம் என சொல்லப்படுகிறது. சில படைப்புக்களில் அவர்களிருவரின் பெயர்களை குறிப்பிடாமல் இரு இந்திய அடிமைப் பணிப்பெண்களுக்கும் தனது நன்றியை மரியா தெரிவித்திருக்கிறார்.

பல மரங்களில் மரியா ஏணியில் ஏறி உயரங்களில் வாழ்ந்த பூச்சிகளை சேகரித்தார்.  மலேரியா காய்ச்சல் வந்ததால் 1701ல் தான் மரியா மீண்டும் ஆம்ஸ்டர்டாமுக்கு திரும்பினார். இந்தப் பயணத்தின் ஆய்வு முடிவுகள் தான் மரியாவின் பெரும்படைப்பான Metamorphosis insectorum Surinamensium

 1705.ல் அவரது மிக பிரபலமான படைப்பான  ’’Metamorphosis Insectorum Surinamensium’’ வெளியானது அந்நூலில் சுரிநாமின் புழுக்கள், தேரைகள், எறும்பு, பல்லி, நாகம், சிலந்திகள் மற்றும் பலவித  பூச்சிகளின் வளர்சிதை மாற்றங்கள் தெளிவாக ஆவணப்படுத்த பட்டிருந்தன

லத்தீன் மொழியில் எழுதப்பட்ட  பல செதுக்கு ஓவியங்களுடன் கூடிய அந்த ஆடம்பரமான வண்ணமயமான  இந்த  நூலிலிருந்த மழைக்காடுகளின், தாவரங்களும், பல்லி பாம்புகள் உள்ளிட்ட பூச்சி இனங்களும் பல நாடுகளின் இயற்கை ஆர்வலர்களின் வீடுகளுக்குள் நுழைந்தன.

மலர்மஞ்சரிகளில் அமர்ந்திருக்கும் நீல பட்டாம்பூச்சிகளும், உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டிருக்கும் அந்துப்பூச்சிகளும், முட்டைகளும் தலைப்பிரட்டைகளும் சூழ இருக்கும் கொழுத்த தவளைகளும், பல இலைகளை தின்று கொண்டிருக்கும் வரிகளுடன் கூடிய கூட்டுப்புழுக்களும், மரங்களின் மீது ஏறிக்கொண்டிருக்கும் எறும்புகளும் இருக்கும் அவரது ஓவியங்கள் தத்ரூபமாகவும் அழகாகவும் மட்டுமல்லாது, அறிவியல் ரீதியாக மிகச் சரியாகவும் இருந்தன. பல ஓவியங்களில் மலரிதழ்களில் பூச்சிகள் உண்டாகிய துளைகளும் பாதி கடிக்கப்பட்ட இலைகளும், இதழ்களே இல்லாத மலர்களும் இருந்தன.

மரியாவின் நூல் ஏதேன் தோட்டம்போல அழகாக உருவாக்கப்பட்டதல்ல, இயற்கையின் விதிக்குட்பட்ட உயிரினங்கள் உள்ளபடிக்கே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன

 மரியா இந்த நூலை வெளியிட்ட போது அவரது சமகால அறிஞர்கள் உயிர்களின் உயிர்களின் தன்னிச்சையான தோற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரிஸ்டாட்டிலின் காலத்திலிருந்து நம்பப்பட்ட ’’உயிர்கள் உயிரற்றவைகளிலிருந்து தன்னிச்ச்சையாக தோன்றின என்னும் கருதுகோளான spontaneous generation விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மரியாவின் படைப்புக்கள் பூச்சிகளின் சிறுவிலங்குகளின் இனப்பெருக்கத்தை துல்லியமாக காட்டின. ஆண்பெண் வேறுபாட்டை இனப்பெருக்க உறுப்புக்களை துல்லியமாக விவரித்த மரியாவின் நூல் அப்போது பெரிய பேசு பொருளாக இருந்தது.

மாமிசம் உண்ணும் பூச்சிகள் அழுகும் இறைச்சியிலிருந்தும், மேலும் பல பூச்சிகள் புத்தகங்களுக்குள்ளிருந்தும், பனித்துளிகளிலிருந்து அந்துப்புச்சிகளும்,  எலிகளும் தேள்களும் பழைய நைந்து போன கம்பளியிலிருந்தும் தோன்றுவதாக  பலர் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கையில் மரியா பூச்சிகளின் இனப்பெருக்கவியலை ஓவியங்களில் ஆவணப்படுத்தினார். 

 மரியா உலகின் பல அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பில் இருந்தார். அவரது படைப்புக்கள் பலநாடுகளின் நூலகங்களில் பெருமைக்குரிய சேகரிப்பாக காட்சிப்படுத்தப்பட்டன. ஜெர்மனியின் மிகப்புகழ் பெற்ற கவிஞரும், பூச்சிகளின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆர்வம் கொண்டிருந்தவருமான  கோத்தி (Goethe) மரியாவை கலைக்கும் அறிவியலுக்குமிடையில் வண்ணமயமாக பயணித்தார் என்று புகழ்கிறார்.

 17ம் நூற்றாண்டில் பெண்கள் எளிதில் செய்துவிடமுடியாத துணிச்சலான பலவற்றை செய்தவரும் அசாதாரணமான அறிவியல் படைப்புக்களை உருவாக்கியவருமான மரியாவின் படைப்புகளின் முக்கியத்துவத்தை அந்த நூற்றாண்டில் பலரறிந்திருகக்வில்லை  

மரியா  ஓவியங்களை வரைய துவங்கி இருக்கையில் அவரது ஓவியங்களில் இருந்த பல பட்டாம்பூச்சிகள் இனம் காணப்பட்டிருக்கவில்லை. மரியாவிற்கு பூச்சிகளை இனங்கண்டு வகைப்படுத்தலில் ஆர்வமில்லை அவரே ஒருமுறை சொன்னது போல அவை எப்படி உருவாகி உருமாறி வாழ்வை முழுமை செய்கின்றன என்பதில்தான் ஆர்வமிருந்தது.  வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் பிற்பாடு மரியாவின் பல படைப்புக்களை பூச்சிகளின் வகைப்பாட்டின்போது உதவியாக வைத்துக்கொண்டார்.  

ஜெர்மானிய விலங்கியலாளர்  Ernst Haeckel  சூழலியல் என்று பொருள்படும்  Oecologie என்னும் சொல்லிலிருந்து ecology என்னும் சொல்லை உருவாக்கியதற்கு இரு  நூற்றாண்டுகள் முன்னரே மரியா சூழலியல் தொடர்புடைய பல நூறு ஓவியங்களை வரைந்திருந்தார்

 பல ஓவியங்களில் மரியா உணவுச்சங்கிலியையும் காட்சிப்படுத்தி இருக்கிறார். 

Metamorphosis நூலின் 18 வது ஓவியத்தில் ஒரு கொய்யா மரத்தின் இலைகளை எறும்புகளும், இலை வெட்டும் பூச்சிகளும் கடித்து தின்றுகொண்டு, தண்டில் ஏறிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில எறும்புகள், சிறு சிலந்தியொன்று, ஒரு கரப்பான்பூச்சியின் அருகில் ஒரு டாரன்டுலா சிலந்தி ஒரு தேன்சிட்டுவை தின்று கொண்டிருக்கிறது,  சினைப்பையுடன் ஒரு டாரண்டுலாவும் காணப்படுகிறது. 

உயிரினங்களின் வாழ்விற்கான போராட்டத்தை,  சார்லஸ் டார்வின் தனது   Origin of Species, வெளியிடுவதற்கு 150 வருடங்களுக்கு முன்னரே மரியா  தனது படைப்புகளில் விவரித்திருந்தார்.

1670 ல் அவர் வெளியிட்ட கேட்டர்பில்லர் நூலில் ஆண் பெண் பட்டாம்பூச்சிகள் கூடி முட்டை இட்டு புழுக்கள் உருவாகின்றன என்பதை முதன்முதலில் எழுதி ஆவணப்படுத்தி இருந்தார்.

மரியாவின் படைப்புகள் பிற அறிவியல் படைப்புகளில் இருந்து மிகவும் வேறுபட்டிருந்தன. உதாரணமாக வாழைமரத்தின் ஓவியத்தில் அவர் அதன் தாவரவியல் பண்புகளுடன் வாழைப்பழத்தின் சுவையையும் விவரித்திருந்தார். ஐரோப்பா அதுவரை அத்தகைய படைப்புகளை கண்டிருக்கதில்லை.

 பனையின் வேரை வெட்டி வேகவைத்து உண்ணலாம் என்னும் குறிப்புடன், அவை ஆர்டிசோக்குகளின் மையப்பகுதியை காட்டிலும் சுவையானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பல ஓவியங்களில்  தாவரங்களின் மருத்துவ இயல்புகளையும் மரியா குறிப்பிட்டிருக்கிறார்.  

1715ல் பக்கவாதம் தாக்கி உடலின் ஒரு பாகம் செயலிழந்தது, அந்நிலையிலும் மரியா ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார்.

மரியாவிற்கு இரு மகள்கள் ஜொஹானா மற்றும் டோரதியா (Johanna Helena Herolt Graff&    Dorotea Maria Hendriks Graff).மரியாவின் மகளான  ஜொஹானாவும் மிகப்புகழ்பெற்ற ஓவியர். ஜொஹானாவின் பல படைப்புகளில் அவளது தாயின் கையெழுத்தையும் காணலாம்’

மரியா ஜனவரி 13, 1717 ல் அவரது 70 வது பிறந்த நாளுக்கு முன்னர் இறந்த போது அவரது இறப்புச்சடங்கிற்கு வந்திருந்த  ரஷ்யப் பேரரசர் முதலாம்  பீட்டர் அலெக்சியேவிச் ரொமானோவின் தூதுவர் மரியாவின் வீட்டில் மீதமிருந்த வண்ணக்கலவைகளை பெரும் விலைக்கு பெற்றுக்கொண்டார்.

மரியாவின் இறப்புக்கு முன்னரே அவரது படைப்புகளில்  ரஷ்ய பேரரசர் பீட்டர் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குபின்னர் அவரது மீதமிருந்த பெரும்பாலான படைப்புக்களை அவரே பெருவிலை கொடுத்து வாங்கிக்கொண்டார்.  

மரியா இறந்தபின்னர் St. Petersburgல் அவரால் உருவாக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில்  ஓவியரான டோரதியாவின் கணவர் ஜார்ஜுக்கு (Georg Gsell) நல்ல பதவியளித்து அரசவை ஓவியராகவும் வைத்துக்கொண்டார். டோரதியாவும் அங்கேயே பின்னர் வாழ்ந்தார்.

மிக சிறப்பான படைப்பாளியாக இருந்தும் உலகால் அங்கீகரிக்கப்படாத ஜேகப் மரணப்படுக்கையில் இருக்கையில் ’’இல்லை நான் முற்றிலும் உலகால் மறக்கப் படமாட்டேன், நான்தான் மரியாவின் தந்தை என உலகம் என்னை நிச்சயம் ஒரு நாள் கொண்டாடும்’’ என்றார், மரியா ஜேகப்பை காட்டிலும் பிரபலமானார்.

மரியாவின் caterpillars நூலின் மூன்றாவது  தொகுப்பை மரியாவின் மறைவுக்கு பின்னர் டோரதியா வெளியிட்டார். அவரது metamorphosis நூல் 18 ம் நூற்றாண்டில் பல  மறுபதிப்புக்கள் வெளியாகி அவர் பெயரை  உலகெங்கும் பரப்பின

சிறப்புக்கள்

மரியாவின்றப்புக்கு வெகுகாலம் கழித்தே அவரது படைப்புக்களின்  முக்கியத்துவம் உலகால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில்தான் மரியாவின் படைப்புகள் மீண்டும்  உலகின் கவனத்துக்கு வந்தன. அவரது பல படைப்புகள் அப்போது சிறப்பு செய்யப்பட்டன

  • 1905ல்  Opsiphanes cassina meriana என்னும் பட்டாம்பூச்சியும் 1967ல்  பட்டாம்பூச்சியின் துணை சிற்றினமொன்றிற்கும் postman butterfly Heliconius melpomene meriana; என்றும் மரியாவின் பெயரிடப்பட்டது.
  • க்யூபாவின் ஒரு அந்துபூச்சிக்கு  Erinnyis merianae என்றும் ஒரு  வண்ணமயமான வண்டினத்துக்கு  Plisthenes merianae என்றும் பெயரிடஒபட்டது. 
  • கும்பிடு  பூச்சியின் பேரினமொன்று  Sibylla என்றும், ஆர்கிட் வண்டினமொன்று Eulaema meriana என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.
  • Argentine black and white tegu (Salvator merianae), என்னும் வளர்ப்பு பிராணியாக வளர்க்கப்படும் பெரிய பல்லி வகைக்கும் அவரது பெயரடிப்பட்டிருக்கிறது.
  • மரியாவின் சிலந்திகள் குறித்த படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு  பறவைகளை பிடித்து உண்ணும் சிலந்தியொன்றிற்கு  Avicularia merianae  என்று பெயரிடப்பட்டது.
  • 2017ல் மற்றுமொரு சிலந்தி Metellina merianae என்று அவர் பெயரிடப்பட்டது 
  • ஒரு தேரை  Rhinella merianae என்றும் ஒரு நத்தை Coquandiella meriana  என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றன
  • ஆப்பிரிக சிறு பறவையினம் இன்றிற்கு Saxicola torquatus sibilla.   எனப்பெயரிடப்பட்டிருக்கிறது.
  • ஒரு தாவர பேரினத்துக்கு  Meriania எனவும், ஒரு தாவர சிற்றினம் Watsonia meriana   எனவும் பெயரிடப்பட்டது.
  • 2009  வெளியான The Year of th Flood   என்னும் நாவலில் மரியா ஒரு துறவியாக காட்டப்பட்டிருந்தார்.
  • மரியாவின் உருவப்படம் ஜெர்மனியின் 500 DM நோட்டில் சித்தரிக்கப்பட்டது
  • அதுபோலவே  0.40 DM தபால் தலையில் அவரது உருவப்படம் சித்தரிக்கப்பட்டு செப்டம்பர் 17 1987ல் வெளியிடப்பட்டது. மரியாவின் பெயரில்  ஐரோப்பாவில் பல பள்ளிகள் இருக்கின்றன,
  • மொசார்ட்டின் கச்சேரிகளில் இசைக்கருவிகளில் மரியாவின் மலரோவியங்கள் சித்தரிக்கப்பட்டன.
  • 2008ல்  பனாமாவின் அரிய கருப்பு பட்டாம்பூச்சியொன்றிற்கு Catasticta sibyllae  பெயரிடப்பட்டது.
  • 2013, ஏப்ரல் 2 ம் தேதி மரியாவின் 366 வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் டூடுல் அவரது  பூச்சிகள், பல்லிகள் தாவரங்களின் ஓவியங்களிலேயே கூகுள் என வடிவமைத்து சிறப்பித்திருந்தது .
  • ஜெர்மெனியின் இரண்டாவது  பெரிய நவீனமயமாக்கபப்ட்ட ஆய்வுக்கப்பலுக்கு   மரியாவை கெளரவப்படுத்தும் விதமாக  RV Maria S. Merian  என்று பெயரிடப்பட்டது
  • 2016ல் மரியாவின், Merian’s Metamorphosis insectorum Surinamensium  மறு பிரசுரம் செய்யபட்டது.
  • 2017ல்  மரியாவின் ஓவியங்கள் குறித்த ஒரு கருத்தரங்கு ஆம்ஸ்டர்டாமில் நிகழ்ந்தது 
  • மார்ச் 2017ல்,  ஓஹியோவின் Lloyd நூலகம் மற்றும்   அருங்காட்சியகத்தில்  மரியாவின் பல ஓவியங்களின் முப்பரிணாம  கண்காட்சியையும், பாடம் செய்யப்பட்ட பல பூச்சிகளின் கண்காட்சியையும்  ஏற்பாடு செய்திருந்தது
  • நியூயார்க் டைம்ஸின் 2017 ஜனவரி இதழில் மரியா உலகின் முதன் முதலாக பூச்சிகளை அவற்றின் வாழிடம் உணவு ஆகியவற்றுடன் வரைந்து ஒரு கூட்டு சூழலியல் தொகுப்பாக ஓவியங்களை வரைந்த முதல் ஆளுமை என ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது

மரியா அசாதாரணமான , மிக ஆர்வமுள்ள, அதிபுத்திசாலியான சுயசார்புள்ள பெண்ணாகவே அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறார்.

மரியா உயிரனங்களுக்கான தொடர்புகளை ஆவணப்படுத்திய முதல் அறிஞரும் கலைஞருமாவார் 

அப்போது உருவாகி இருக்காத சூழலியல் துறையை நிறுவியவரகவும் மரியாவே கருதப்படுகிறார் ஏனெனில் மரியாவின் ஓவியங்கள் உணவுச்சங்கிலி, உயிரினங்களின் ஒன்றுடன் ஒன்றான தொடர்பு, எவ்வாறு அவற்றின் வாழிடம் அவற்றின் வாழ்க்கையில் நேரடியாக செல்வாக்கு செலுத்துகிறது, எப்படி வாழ்விற்கான போராட்டத்தில் வலியவை வெல்கின்றன ஆகியவற்றை  காட்டுகின்றன. இவற்றின் தொகுப்பைத்தான்  இப்போது சூழலியல் என்கிறோம்

 உயிரற்றவைகளிலிருந்து தானாகவே உயிரினங்கள் தோன்றுகின்றன என்னும் கருதுகோளை முதலில் பொய்ப்பித்தவரும் மரியாதான்.

அறிவியலை தங்களது பாதையாக தீர்மானம் செய்யும் பெண்கள் மரியாவை முன்னோடியாக கொள்ளலாம், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பாதையேதும் இல்லாத பிரதேசங்களில் மரியா புதிய பாதைகளையும், அறிவியலுக்கும் கலைக்குமிடையேயான பாலங்களையும் உருவாக்கினார் பூச்சியியலுக்கும் தாவரவியலுக்குமான  தொடர்புகளை கண்டறிந்து ஆவணப்படுத்தினார்.

ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆர்டிஸ் லைப்ரரி அருங்காட்சியங்களில்  லின்னேயஸ், அரிஸ்டாட்டில், சார்லஸ் டார்வின் உள்ளிட்ட 35 ஆண் அறிஞர்களின் படைப்புக்களுடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஓவியங்களில்  M.S.Merian என்னும் பெயரைப்பார்த்தால் கூர்ந்து கவனியுங்கள்,  அறிவியல் வரலாற்றில் மரியா விட்டுச்சென்றிருக்கும் வண்ணச்சுவடுகள் அதில் இருக்கும்.

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑