அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

Page 23 of 40

ஆக்கிரமிப்பு தாவரங்கள்

லந்தனா கமாரா

 ஒரு பிராந்தியத்தில் இயற்கையாக தோன்றியிராத, ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பகுதியில் பல்கிப்பெருகி, இந்த புதிய வாழ்விடங்களில், பூர்வீக பல்லுயிர் பாதிப்பு, பொருளாதார இழப்புக்கள் , மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற தாவரங்களே  ஆக்கிரமிப்பு தாவரங்கள்.(Invasive plants).

  உணவுப் பொருட்கள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் இறக்குமதியாகும் போது அவற்றுடன் கலந்து இப்படியான ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகள் தவறுதலாக ஒரு புதிய சூழலுக்கு அறிமுகமாகும்.. பல  சந்தர்ப்பங்களில், அலங்கார, மலர் வளர்ப்பு அல்லது விவசாய பயன்பாடுகளுக்கு வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட  தாவரங்களும் ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறிவிடுவதுண்டு

 உதாரணமாக வெப்பமண்டல அமெரிக்க புதர் லந்தானா (Lantana camara லந்தனா கமாரா) 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு அலங்கார தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது; இது இப்போது கிராமங்கள், விளைநிலங்கள், நகர்புறங்கள், அடர் காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு  தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக  பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’  Phenotypic plasticity  எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய  வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.. பெரும்பாலும், மனிதர்களாலும், சாலைப் போக்குவரத்து, மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றினால் ஆக்கிரமிப்பு தாவரங்கள்  பல்கிப் பெருகுகின்றன.

 .2015 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் ,  குரோமோலேனா ஓடோராட்டா, லந்தானா மற்றும்  தோட மரமாக அறிமுகமான குடை மரம் எனப்படும் மீசோப்சிஸ் எமினி (Siam weed Chromolaena odorata, lantana and umbrella tree Maesopsis eminii) ஆகியவற்றினால்  அச்சூழலின் இயல் தாவரங்களுக்கு உண்டாகியிருக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகள் கண்டறியபட்டது. இது சமீபத்திய ஒரு முக்கிய உதாரணம்

குடை மரம்

2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு  ஆய்வு இந்தியாவில் மட்டும் சுமார் . 200 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்கள்  உள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக இந்தியாவையும் சுட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்ட லந்தானாவுடன், பார்த்தீனியம், சியாம் களை, மெக்ஸிகன் பிசாசு (ஏகெரடினா அடினோஃபோரா-Ageratina adenophora ) மற்றும் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா- Prosopis juliflora) ஆகியவை இந்தியாவின் மிகவும் மோசமான ஆக்கிரமிப்புகளில் சில. வெங்காயத்தாமரை (ஐக்கோர்னியா கிராசிப்ஸ்- Eichhornia crassipes) பல உள்நாட்டு நீர் நிலைகளை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது., பொன்னாங்கண்ணி கீரை போலவே இருக்கும்  அலிகேட்டர் களையான  (ஆல்டர்னான்திரா பிலாக்ஸீராய்டெஸ்-Alternanthera philoxeroides) இந்தியாவில் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களை  வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது. இவற்றில் மிக குறிப்பிட்டு சொல்லும்படியான உலகளாவிய இடையூறுகளை கொடுத்துக் கொண்டிருப்பது பார்த்தீனியம் களைச்செடி

உலகளவில், ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது. சில ஆக்கிரமிப்பு களைகள் உள்ளூர்  பொருளாதாரத்தை எதிர்மறையாகவும் பாதிக்கலாம்.  

இக்களைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வழங்கக்கூடும் என்றாலும், விவசாயத்தில் விளைச்சலைக் குறைக்கின்றன, . சில ஆழமான வேரூன்றிய ஆக்கிரமிப்பு களைகள் மண்ணிலிருந்து  ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளுகின்றன. இன்னும் சில பயிர்களை தாக்கும் பூச்சி இனங்களுக்கு உணவுகளை வழங்குகின்றன.

அலிகேட்டர் களை

  மேய்ச்சல் நிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல களைகள் பூர்வீக தீவன தாவரங்களுடன் போட்டியிடுகின்றன, மேய்ச்சல் நிலங்களில் ஆக்கிரமிப்பு களைகளிலிருந்து தீவன இழப்பு அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.  மகரந்தச் சேர்க்கை களில் இடையூறு மற்றும் பழ உற்பத்தியில் இழப்பு ஆகியவையும் இவற்றின் ஆக்கிரமிப்பால் எற்படுகின்றன.

 காலநிலை மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்பு தாவர  இனங்களால் உண்டாகி இருக்கும்  சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் பெரும்பாலும் சர்வதேச அளவில் இல்லாமல் உள்நாட்டு அளவில் தான் கவனிக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த செயல் திட்டம் கொண்டு வரப்பட்டால் இவற்றை மெல்ல மெல்ல குறைக்கவும் அழிக்கவும் முடியும்

வெங்காய தாமரை

“காகித மலர் – ழ்ஜான் பாரெ”

ழ்ஜான் பாரெ[1]

இன்றிலிருந்து ஏறத்தாழ  250 வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 1, 1766 அன்று  பாரிஸின்  ரோஷ்ஃபோர் துறைமுகத்திலிருந்து பூடேஸ் என்னும் கடற்படை கப்பலும்[2] அதற்கு தேவையான எரிபொருள்கள் மற்றும் உணவுகளுடன் இன்னொமொரு சிறிய கப்பலான இட்வாலும்[3]  இணைந்து  ஒரு புதிய தேடல் பயணத்தை துவங்கின.

102 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்ட இட்வால், 480 டன் எடை கொள்ளும்; எட்டு அதிகாரிகள் மற்றும் 108 பணியாளர்கள் அதிலிருந்தனர்.

பூடேஸ் மிக உயரமான பெரிய  விரைவுக் கப்பல், அதை துறைமுகங்களில் நிறுத்துகையில்,  கட்டிவைக்கவே  25 மைல்களுக்கு மேல் கயிறு தேவைப்பட்டது. 

அப்போது ஃப்ரான்ஸின் கடற்படை கப்பல் பயணங்களில் பெண்கள் பயணிக்க சட்டப்படி தடை இருந்ததால், இரண்டு கப்பல்களிலும் சேர்த்து  400 ஆண்கள் மட்டும் இருந்தனர். .இந்த பயணத்தின் தளபதி , ஒரு சிறந்த விஞ்ஞானி, கணிதவியலாளர், சிப்பாய், மீகாமன், இராஜதந்திரி மற்றும் ஃப்ரான்ஸின் அரசரான பதினைந்தாம் லூயியின் நண்பருமான ’’லூயி ஆன்ட்வான் டு பூகென்வீயெல்.’’[4]

 “இண்டீஸ் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகளுக்கு இடையில் உள்ள நிலங்களை‘ ஆராயுங்கள், நமது சேகரிப்புக்களும் கண்டுபிடிப்புகளும்  மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்  மேலும் ஃப்ரான்சுக்கு பயனுள்ளதாக இருக்கும் எதையும் கையகப்படுத்த வேண்டும்,’’  இதுவே பூகென்வீல்ல கப்பல் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பயணத்தின் துவக்கத்தில் சொன்னது.

இந்த பயணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, (1756─1763) ல் நடந்த பிரெஞ்சு-(அமெரிக்க)இந்தியப் போரில், ஃப்ரான்ஸ் வட அமெரிக்காவில் தனது நிலப்பரப்பை இழந்திருந்தது. இங்கிலாந்துடன் நடந்த போர்களின் போது இழந்த பெருமைகளை மீண்டும் பெற  விரும்பிய ஃப்ரான்ஸ், உலகெங்கிலும் பயணம் செய்வதற்காகத் துவக்கிய பல கடற்பயணங்களில் இதுவே முதலாவது. தென் பசிஃபிக் பகுதியில் காலனித்துவ புறக்காவல் நிலையங்களை நிறுவுவதும் இப்பயணத்தின் ஒரு ரகசிய குறிக்கோளாக இருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கடல் பயணங்களை மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருந்தது.  சென்று சேரவேண்டிய இடத்தை அடைவதில்  நிலவிய  நிச்சயமற்ற தன்மையும், உணவுப் பற்றாக்குறை, விபத்து, நோய் மற்றும் கடல்கொள்ளை ஆகியவற்றின் அச்சுறுத்தல்களும்  எப்போதும் இருந்தன.

கடற்படை கப்பல் பூடேஸ்

13ஆம் நூற்றாண்டில் இருந்துதான் புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடல்சார்வியல், வானிலை ஆய்வு ஆகியவற்றிற்கான முன்னெடுப்புக்களுக்காகக் கடற்பயணங்கள்  அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டன.

அறிவியல் ஆய்வின் புதிய சகாப்தம் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான்  தொடங்கியது,  அறிவியல் சங்கங்களை நிறுவி, இயற்கை வரலாற்றாசிரியர்கள்,  பத்திரிகைகளில் வெளியிட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள்  பெரும் புகழை பெறத் துவங்கியிருந்த காலமும் அதுதான். என்வே உலகின் ஆராயப்படாத பகுதிகளின் தாவரங்களையும் விலங்குகளையும் கண்டுபிடித்து ஆய்வு செய்ய பிற நாடுகளைப் போலவே  ஃப்ரான்ஸும் விழைந்தது.

பயணத்தின் மற்றொரு குறிக்கோள், ஃப்ரெஞ்சு தோட்டங்களுக்கான உணவுப் பயிர்கள், மருந்துகள் மற்றும் அழகிய மலர்ச்செடிகளை கண்டுபிடிப்பதாகும். ஏனெனில் தோட்டக்கலை அப்போது வெகு பிரபலமாக இருந்தது.

கம்மர்சன்

இந்த கப்பல் பயணத்துக்குச் சில மாதங்கள் முன்பாக, ஃப்ரான்ஸில் பூங்காவொன்றின் பசுமை போர்த்தியிருந்த  நடைபாதையில் ஓங்குதாங்கான ஆகிருதியுடனிருந்த  தாவரவியலாளர் ஃபிலிபேர் கம்மர்சனிடம்[5] அவரது உதவியாளரா[6]ன ஒல்லியான உயரமான  ‘பாரெ’ ஆயிரமாவது முறையாக கேட்டார் ‘’நீங்கள் உறுதியாகத்தான் சொல்லுகிறீர்களா? பிடிபட்டால் இருவருமே சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருக்கிறீர்களா?’’

கம்மர்சன் பதிலுக்கு, ’’இல்லை, பிடிபட வாய்ப்பேயில்லை உன்னால் இதை திறம்பட செய்ய முடியும் எனக்ககாக செய்ய மாட்டாயா இதை?” என்றார். பாரெடிடமிருந்து சிறிதும் தயக்கமின்றி பதில் வந்தது’’ நிச்சயம், உங்களுக்காக நான் எதையும் செய்வேன்.’’

பின்னர் சில நாட்களிலேயே  கம்மர்சன் பாரெடிடம், “பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தாவரவியலாளர்கள் என்ற வகையில், என்னுடையதுடன், உன் பெயரையும் உலகெங்கிலும் செல்லப்போகும் ஒரு பயணத்துடன் இணைத்திருக்கிறேன்,”  என்றார்

லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லி

“புகழ்பெற்ற லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லயின் தலைமையில் ஒரு பயணம்,” என்ற பாரெ புன்னகையுடன் கூறினார, “நிச்சயமாக  எனக்கிது ஒரு பெரிய மரியாதை, அத்தகைய பெரிய அட்மிரல் மற்றும் ஆராய்ச்சியாளருடன் இணைந்திருப்பதும், உங்களுடன் பயணிப்பதும்.”

ரோஷ்ஃபோர் துறைமுகத்தில் பூகென்வீல்லயின் தலைமையிலான தேடல் பயணத்தில் பாரெ மற்றும் கம்மர்சன் இணைந்தனர். கம்மர்சன் முதலிலும், கப்பல் புறப்படுவதற்கு சற்று முன்னர் கம்மர்சனுக்கு அறிமுகமற்றவர் போல பாரெடும் வந்து, அவருக்கு அந்தப் பயணத்தில் உதவியாளனாக இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு பயணத்தில் இணைந்தார்.

அவர்கள்  இருவரும்  இட்வாலில் பயணம் செய்யும்படி ஏற்பாடானது. ஏனெனில், கம்மர்சன் கொண்டு வந்திருந்த   தாவரங்களை சேகரிக்கவும், உலரவைத்து பாடமாக்கவுமான ஏராளமான உபகரணங்கள் காரணம். இட்வால் கப்பலின் கேப்டன் ’ஃப்ரான்சுவா செனார்ட் டி லா கிராடாய்ஸ்’, கப்பலில் தனக்கான  கழிப்பறையுடன் இணைந்திருந்த பெரிய அறையை கம்மர்சன் மற்றும் அவரது புதிய “உதவியாளருக்கு” விட்டுக் கொடுத்தார்.

முதல் சில மாதப்  பயணத்தில் சொல்லிக்கொள்ளும்படியான சேகரிப்புக்களும், கண்டுபிடிப்புகளும் இன்றி பயணம் சாதாரணமாகவே இருந்தது, வழியில் பல இடங்களில் கப்பல் கரையணைந்து கொண்டே இருந்தது.

கப்பல் கரை சேரும்போதெல்லாம், நிலப்பரப்பில் கம்மர்சனும், பிற பயணிகளும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு பாரெ துணிந்து சென்றார். அவர்களால் சுமக்க முடியாத பல சுமைகளை  எளிதாக அவர் எடுத்துச் சென்றார். கம்மர்சனுக்கு தேவையான அனைத்தையும் முன்னின்று அதிக அக்கறையுடன் செய்துவந்தார். பெரும்பாலான  கரையணைதல்களில்,  நோய்வாய்ப்பட்டிருந்த கம்மர்சனை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாரெ தானே தாவரங்களை ஆராய்ந்து, குறிப்பெடுத்து,  அவற்றை   உலர்த்தி, பாடமாக்கி, சேகரிப்பதைச் செய்தார்.

கப்பல் ரியோ த ஹனைரோ[7] சென்றபோது, அங்கிருந்த கடுமையான வன்முறை நிறைந்த சூழலில் இட்வால் கப்பலின் பாதிரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அப்படியும் பாரெ அங்கிருந்து  முக்கியமான பல நூறு தாவரங்களை சேகரித்தார்

ஜூன் 21, 1767 இல்  தென் அமெரிக்காவின் ரியோ த ஹனைரோவின் எல்லையில் உள்ள கடற்கரையில், கம்மர்சன்  காலில் இருந்த ஆறாக்காயத்திற்கான பெரிய கட்டுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கடலை ஒட்டி வளர்ந்திருந்த  புதிய பல தாவரங்களை  கத்தரித்து மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்த அழுத்தும் கருவிகளில் வைத்து பாதுகாத்து கொண்டிருந்த பாரெயைப் பார்த்துக்கொண்டிருந்தார்

திடீரென பாரெ  ஒரு கொடியை துண்டித்து கொண்டு வந்து உற்சாகமாய் ’’இங்கே பாருங்கள், இது எத்தனை அழகு,’’ என்று கூவினார்,

பாரெ கொண்டு வந்த பளபளக்கும் இலைகளை கொண்டிருந்த  நீண்ட உறுதியான  கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.

’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract)  எனப்படும் மலரடிச் செதில்கள், உள்ளே சிறிய குச்சிகளைப் போல வெண்ணிறத்தில் இவற்றால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள்,‘’ என்றார் பாரெ.

இளஞ்சிவப்பு மலரடிச்செதில்களால் சுழபட்ட மூன்றூ போகன்வில்லா மலர்கள்

மாணவப் பருவத்தில் பேராசிரியர்கள் உரையாற்றும் போதே குறுக்கிட்டு, பிழைகளை சுட்டிக்காட்டும் அறிவும் துணிவும் கொண்டிருந்த, பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த கம்மர்சனை, அனுபவ அறிவால் பாரெ விஞ்சி நின்ற பல தருணங்களில் அதுவும் ஒன்று. வியந்து போய் ‘’ ஆம் உண்மைதான்,’’ என்ற கம்மர்சன்,  ’’இந்த புதிய தாவரத்திற்கு என்ன பெயரிடலாம்’’  என்ற போது சற்றும் தயக்கமின்றி ’’தேடல் குழுவின் தலைவரின் பெயரைத்தானே வைக்கவெண்டும்,’’ என்றார் பாரெ.

அப்படியே அந்த புதிய தாவரத்திற்கு  பூகென்வீலியா (Bougainvillea brasiliensis ) ப்ராஸிலியன்ஸிஸ்[8]. (இப்போது (Bougainvillea spectabilis) பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்)[9] என்று பெயரிடப்பட்டது.  ”இதை கண்டறிந்தவராக  நீங்களும் உலகெங்கிலும் அறியப்படுவீர்கள்,” என்ற பாரெடிடம்,  “இல்லை அன்பே, இதை நீயல்லவா கண்டறிந்தாய்? எனது கண்டுபிடிப்புகள் என இவ்வுலகம் இனி சொல்லப் போவதெல்லாம் நீ கண்டுபிடித்தவை தானே?’’  என்றார் துயருடன்.

தன் அடையாளத்தை மறைத்து ஆணென வேடமிட்டு அந்த கப்பலில் பயணித்த ழ்ஜான் பாரெ,  கம்மர்சனின் உதவியாளரும் காதலியுமாவார்.  திருமணம் செய்துகொண்டிருக்கவில்லையெனினும் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான், ஆனால் ஒரு வருடத்துக்குள் இறந்து போனான்.

கப்பல் புறப்பட்ட சில நாட்களிலேயே பாரெடைக் குறித்த பல சந்தேகங்களும் வதந்திகளும் உலவத்துவங்கியது. அவரின் மெல்லிய குரல், மீசையில்லா  முகம்,  மொழு மொழுவென்றிருந்த மோவாய், மறந்தும் பிறர் முன்னிலையில் உடைகளை மாற்றாதது, எப்போதும் கம்மர்சனின் அறையிலே தங்கியது என பற்பல விதங்களில் அவர் மீதான் சந்தேகங்களையும், புகார்களையும் பிற பயணிகளும், பணியாளர்களும்   குழுத்தலைவர் பூகென்வீல்லயிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பூகென்வீல்லயோ அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாரெடின் துணிவையும் தாவர அறிவியலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கடின உழைப்பையும் அவரது முக்கிய சேகரிப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் வியந்து பாராட்டியவாறிருந்தார்.

கம்மர்சனும் அந்த புகார்களில்  தனக்கு ஆர்வம் இல்லாதது போலவே காட்டிக்கொண்டார்

தஹிடி தீவில் கரயணைந்த இடம்

1767, ஏப்ரலில் தஹிடி  தீவில் கப்பல் கரையணைந்த போது பாரெடும்[1] , [2] கம்மர்சனும் இறங்கி தீவுக்கு வந்தனர். அப்போது வழக்கத்திலிருந்தது போல ஆண் பயணிகளை நோக்கி ஓடிவந்த தீவுப்பெண்கள் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கையில் ஆண் வேடத்திலிருந்த பாரெடை நோக்கிய தீவின் ஆண்கள் வியப்புடன் ’’ஆ, ஒரு பெண் கப்பலில் வந்திருக்கிறார்,’’ என்றபடியே கூவிக்கொண்டு பெண்கள் தீவுக்கு வருகை தருகையில் செய்யப்படும் மரியாதைகளை செய்யத்  தொடங்கியபோதுதான்  பாரெடின்[3]  குட்டு வெளிப்பட்டது. கண்ணீருடன் தலைகுனிந்து நின்றிருந்த பாரெடை[4]  பூகென்வீல்ல மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்.திரும்ப கப்பலுக்கு வரவழைக்கப் பட்ட பாரெடை[5]  பல வகையிலும் பிற பயணிகள் சித்ரவதை செய்ய முயன்றனர். அவரின் ஆடைகளை உருவவும் பல முறை முயற்சிகள் நடந்தன.

அடுத்துக் கரைசேர்ந்த நியூ அயர்லாந்தில் (இன்றைய பாபுவா நியூ கினி),  இது குறித்து விசாரணை நடந்தது.  பூகென்வீல்ல தன் முன் அப்போதும் ஆண் உடையில் நின்றிருந்த பாரெடிடம்[6]  ’’எப்படி பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் கப்பல் பயணத்தை நீ அடையாளத்தை மறைத்து மேற்கொள்ளலாம்?’’ என்று வினவினார்

’’உடல்நலிவுற்றிருந்த  கம்மர்சனுக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டது, எனக்கும் தாவரங்களுக்கான தேடலே  வாழ்வின் ஆகச்சிறந்த கனவென்பதால் இதற்கு துணிந்தேன்,’’ என்றார் பாரெ. உண்மையில் பூகென்வீல்லவுக்கு பாரெ எப்படி அத்தனை காலம் அந்த கப்பலில் தாக்குப்பிடித்தார்  என்பதே அதிசயமாக இருந்தது. தான் பல தொல்லைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அவற்றை சகித்து கொண்டதாகவும்,  எல்லை மீறிப்போகையில்  உதவிக்காக ஒரு கைத்துப்பாக்கியையும் வைத்திருந்ததையும்  பாரெ அப்போது தெரியப்படுத்தினார்.

’’ஏன் இத்தனை ஆபத்துக்களை சந்தித்து இந்த பயணத்தில்  இணைந்தாய்?” என்ற கேள்விக்கு, ’’ஏன் செய்யக்கூடாது? என்றே பதில் கேள்வி கேட்ட பாரெ, ’’ஒரு பெண் அறிவியலில் ஆர்வம் கொள்ளக்கூடாதா,  ஆய்வுகள் செய்யக்கூடாதா புதியவற்றைக் கண்டுபிடிக்க கூடாதா, ஆண்கள்தான் இவற்றையெல்லாம்  செய்ய முடியும் என்பதற்கு  மாற்றாக இனி என்னை இவ்வுலகம் எடுத்துக்காட்டாக சொல்லட்டுமே,’’ என்றார்.

பூகென்வீல்லவுக்கு  தாவரங்களின் தேடலுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து கடற் பயணத்தை மேற்கொண்ட பாரெ[7] மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. ழ்ஜானுக்கு தண்டனை ஏதும் தரகூடாதென்றே அவர் பரிந்துரைத்தார்.

18 மாதங்கள் அந்த கப்பலில் தனது மார்பகங்கள் வெளியே தெரிந்துவிடாமலிருக்க  பட்டையான லினென் துணிகளால் இறுக்க கட்டிக்கொண்டு, ஆண்கள்  தூக்கும் எடையை காட்டிலும் அதிக எடையைச் சுமந்தபடி பனியிலும், வெயிலும், மழையிலும், கல்லிலும், முள்ளிலும் அலைந்து பல்லாயிரக்கணக்கான புதிய பல தாவரங்களை கண்டுபிடித்த ழ்ஜான் பாரெக்கு அப்பயணம் துவங்கியபோது 26 வயதுதான்.

இந்த கடற்பயணத்தில் கம்மர்சன் பதப்படுத்திய ஒரு தாவரம்

ழ்ஜான் பாரெ ஜூலை 27, 1740 அன்று ஃப்ரான்சின் பர்கண்டி ஃப்ராந்தியத்தில் ’லா காமெல்’ கிராமத்தில் பிறந்தார்[10]. ஞானஸ்நானம் குறித்த அவரது பதிவில்  ஜீன் பாரெ மற்றும் ஜீன் போச்சார்ட் ஆகியோரின் மகளென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றரை வயதில் தாயையும் 15 வயதில் தந்தையையும் இழந்த ழ்ஜான் கல்வி பெறவில்லை என்பதை அவரது தந்தையின் இறப்பு சான்றிதழில் அவரது கையெழுத்து இல்லாததை வைத்து முடிவு செய்யும் வரலாற்றாய்வாளர்கள், பின்னர்  கம்மர்சனே ஜேனுக்கு கல்வியளித்திருக்கலாமென்றும் யூகிக்கின்றனர். எளிய விவசாய குடும்பத்தில்  கல்வியறிவற்ற பெற்றோருக்கு மகளாக பிறந்த ழ்ஜான் அதற்கு முன்பு தனது ஊரிலிருந்து 20 மைலுக்கு மேல் வெளியே பயணித்ததில்லை.

பிரசவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்துவிட்டு  மனைவி இறந்து போன பின்னர், அடிக்கடி உடல் நலிவுற்றுக் கொண்டிருந்த  தாவரவியலாளர் கம்மர்சனுக்கு உதவியாளரான ழ்ஜான் குறுகிய காலத்திலேயே, தனது தாவர வகைப்பாட்டியல் ஆர்வத்தினால், அவரின் காதலியுமாகி ஒரு மகனுக்கும் தாயாகியிருந்தார்.. பாரிஸிலிருந்து கப்பல் புறப்படுமுன்பே கம்மர்சன் தனது முக்கிய சொத்துக்களை ழ்ஜானின் பெயருக்கு உயிலெழுதியும் வைத்து விட்டிருந்தார். கம்மர்சனுக்கும் ழ்ஜானுக்கும் பிறந்த மகன் அப்போதே வளர்ப்புத் தாயிடம் கொடுக்கப்பட்டவன், ஒரு வயதாகுமுன் இறந்து போனான். திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை, அன்றைய ஃப்ரான்ஸில் மோசமானது.

விவசாய பின்னணி கொண்டவராதலால் ழ்ஜானுக்கு கம்மர்சனிடம் உதவியாளராக சேரும் முன்பே ஏராளமான மூலிகைகள், பிற தாவரங்கள் குறித்த நல்ல அனுபவ அறிவிருந்தது. நோயாளியான கம்மர்சனின் மீதிருந்த அன்புக்கு இணையாக தாவரங்கள் மீதும் அன்பு கொண்டிருந்ததால் அவரை இப்பயணத்தில் பிரிய முடியாத ழ்ஜானும் கம்மர்சனுமாகப்[8]  போட்ட இந்த திட்டத்தால் தான் அந்த பயணம் சாத்தியமானது,  அந்த சாகசப் பயணத்தில் இருந்து கிடைத்ததுதான் உலகெங்கிலும்[9]  காணப்படும் பல வண்ண பிரகாசமான மலர்களுடன் கூடிய  அலங்கார செடியான தமிழில் காகிதப்பூச்செடி என அழைக்கப்படும் பூகென்வீலியா.

அங்கிருந்து மொரிஷியசுக்கு சென்ற கப்பல்களிரண்டும் காற்று திசை மாறும் பொருட்டு  நீண்ட நாட்கள் அங்கு காத்திருக்க  வேண்டியிருந்தது. மொரிஷியசில்  கவர்னராக இருந்த, தாவரவியலாளர் பியரி கம்மர்சனின் நெருங்கிய நண்பராதலால்,  அவரும் ழ்ஜானும் தேடல் குழுவில் இருந்து விலகி மொரீஷியசில் தங்குவதாக தீர்மானித்தனர். மொரிஷியஸ் தாவரவியல் பூங்காவின் பொறுப்பை கம்மர்சன் ஏற்றுக்கொண்டார்.

பூகென்வீல்லயும்  இதற்கு சம்மதித்ததால் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு இரண்டு கப்பல்களும் மொரிஷியஸை விட்டு புறப்பட்டன. அதன் பின்னர் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் சிக்கல்களை சந்தித்த கப்பல்களிரண்டிலும் எலிகளும் காவல் நாய்களும் கூட உணவாக்கப்பட்டன, பலர் நோயால் இறந்து போனார்கள். பல சோதனைகளை கடந்து  உயிருடன் இருந்த  பிற பயணிகளுடன் கப்பல்கள் இரண்டும் தட்டுத்தடுமாறி டச்சு ஈஸ்ட் இண்டீஸில்  1769ல்  கரைசேர்ந்து அந்த தேடல் பயணத்தை நிறைவு செய்தன.

மொரிஷியஸில் இருந்து கம்மர்சனுடன் 1770–1772-ல் மடகாஸ்கருக்கும், இன்னும் சில தீவுகளுக்கும் சென்ற ழ்ஜான்மேலும் பல புதிய தாவரங்களைக் கண்டறிந்தார். 1772 வாக்கில் உடல்நிலை மேலும் நலிவுற்று  மார்ச் 1773 இல்  தனது நாற்பத்தைந்தாவது வயதில், அந்த பயணத்தின் கண்டறிதல்களை வெளியிடாமலேயே கம்மர்சன்  இறந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு ழ்ஜான் மொரிஷியஸில் ஒரு மதுபான விடுதி நடத்தினார்.  1774 ஜனவரி 27 ஆம் தேதி, முன்னாள் ஃப்ரான்ஸ் இராணுவ சார்ஜென்ட் ஜீன் டு பெர்னாட்டை மணந்து, அவருடன் ஃப்ரான்சுக்கு திரும்பினார், 22 மாதங்கள் கடற் பயணத்தில் 6000 தாவரங்கள் உள்ளிட்ட  ழ்ஜான் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளின் பொருட்டு, பூகென்வீல்லயின் பெருமுயற்சியால்  அந்த பயணத்திற்குப் பத்து வருடங்கள் கழித்து அவருக்கு ஃப்ரான்ஸ்  கடற்படை அமைச்சகத்திலிருந்து   ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது. முதன் முதலாக தனது கண்டுபிடிப்புக்களுக்கு அரசு ஒய்வூதியம் பெற்ற பெண்ணும் ழ்ஜான்தான்.

கடற்பயணத்தில்  உலகை முதன் முதலில் சுற்றி வந்த பெருமைக்குரிய தாவரவியலாளர் ழ்ஜான் பாரெ  1807 ஆகஸ்ட் 5 அன்று  தனது 67 ஆவது வயதில்  இறந்தார்.

ழ்ஜான் பாரேயின் சாகசப் பயணம் குறித்து உலகம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. கம்மர்சனின் நாட்குறிப்புக்கள்  மற்றும் இட்வாலின்மருத்துவரான ஃப்ரான்சுவா வீவ்[11] எழுதியிருந்த  குறிப்புகள் பெருமளவில் அவரைக்[10]  குறித்து தெரிவித்தன.  பூகென்வீல்லயின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த   நாசாவ்-சீகனின் இளவரசர், பாரெடின் சாதனைகளைக் குறிப்பிட்டு. “அவளுடைய துணிச்சலுக்கான அனைத்துப் பெருமைகளையும் நான் அவளுக்கு கொடுக்க விரும்புகிறேன்,” என்று தனது நினைவுக் குறிப்புகளில் எழுதினார்.மேலும்  “அத்தகைய பயணத்தில் ஒருவர் நிச்சயமாக எதிர்பார்க்கக்கூடிய மன அழுத்தம், ஆபத்துகள் மற்றும் நடந்த அனைத்தையும் எதிர்கொள்ள அவள் துணிந்தாள். அவளது சாகசம், பிரபலமான பெண்களின் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போது கடற்பயணிகளின் உடையாக அறியப்பட்டிருந்த வரிக்கோடுகளிட்ட    உடையும் புரட்சியாளர்களுக்கான சிவப்பு தொப்பியும் கைகளில் தாவரங்களுமாக  இருக்கும் ழ்ஜானின் சித்திரம் கூட அவரைக்குறித்த வாய்வழிச்செய்திகளின் அடிப்படையில் அவரது மறைவுக்கு பின்னர் வரையப்பட்டதுதான்[11] ..

கம்மர்சனுடன் இணைந்து ழ்ஜான் பாரெ கண்டறிந்த  ஆயிரக்கணக்கான தென் அமெரிக்க தாவரங்கள் உலர் தாவரங்களாக (Herbaria) இன்றும் ஃப்ரான்ஸ் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன.

1789 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஏ.எல். டி ஜூஸ்ஸோவின்  புகழ்பெற்ற ஜெனிரா பிளாண்டேரியத்தில், பூகென்வீல்லா பட்டியலிடப்பட்டபோது,  “Buginvilla” என்று தவறுதலாக எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டது. 1930ல் க்யூ  ராயல் தாவரவியல் பூங்கா தொகுத்த புதிய தாவரங்களின் பட்டியல் வெளியாகி அது  சரி செய்யப்படும் வரை இந்த எழுத்துப்பிழை அப்படியே நிலைத்திருந்தது.

பூகென்வீலியாவின் இரண்டு இனங்கள் – பூகென்வீலியா. ஸ்பெக்டாபிலிஸ் மற்றும்  பூகென்வீலியா கிளாப்ரா – 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின. பின்னர்  யூரோப்பிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன; கியூ ராயல் தாவரவியல் பூங்காவிலிருந்து 1923 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களின் பட்டியலில் பூகென்வீலியாவின் பெயரும் இருக்கிறது.

பூகென்வீலியா மேற்கு பிரேசிலிலிருந்து பெரு வரையிலும், தெற்கு ஆர்ஜென்டினாவையும் தென் அமெரிக்காவையும் தாயகமாகக் கொண்ட  பல்லாண்டு தாவரமாகும். நாலு மணிப்பூ எனப்படும் அந்திமந்தாரை, பவளமல்லி ஆகியவை அடங்கிய நைக்டஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தை சேர்ந்த  பூகென்வீலியா 18 சிற்றினங்களை கொண்டது.  இப்போது 300க்கும் மேற்பட்ட உட்கலப்பு (inbreeding) வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. வளர்ந்த முதல் வருடத்திலிருந்து, மூன்று ஆண்டுகளில் மலர்களை அளிக்க துவங்கும், பூகென்வீலியா  வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையது.

பசுமை மாறா பளபளப்பான இலைகளும், உறுதியான கொடித்தண்டும் கொக்கிகளை போன்ற கூர்முட்களையும் கொண்ட  பூகென்வீலியா கொடி 12-15 மீட்டர் நீளம் வரையிலும்  பற்றிப் படர்ந்து வளரும் இயல்புடையது, எனினும் இவற்றை தொடர்ந்து கத்தரித்து, குட்டையாக தொட்டிகளிலும், குறுமரங்களை போலவும் கூட வளர்க்க முடியும். பூகென்வீலியாக்களை  அரிதாகவே நோயும் பூச்சிகளும் தாக்கும். 

பூகென்வீலியாவின் மலரென்பது, மூன்று அல்லது ஆறு பிரகாசமான காகிதம் போன்ற மலரடி செதில்களால் சூழப்பட்டிருக்கும்  மூன்று குழல் போன்ற சிறிய வெண்ணிற மலர்களின் தொகுப்புதான். இதன் கனி மிகச்சிறியது, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். வெள்ளை ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரடி செதில்கள் இருக்கும்.

உலகின் எந்த பகுதியாக இருப்பினும் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ஒரு பூகென்வீலியாவையாவது பார்த்துவிடலாம் என்னும் அளவிற்கு இந்தக் கொடி உலகெங்கும் பிரபலமான, பலரின் விருப்பத்துக்குரிய அலங்காரச் செடியாகி விட்டிருக்கிறது. தோல் அழற்சியை உண்டாக்கும் இதன் இலைச்சாற்றை உலகின் பல பழங்குடியினத்தவர்கள் மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்துகின்றனர்.

இனி இவற்றை அழகான பூக்கள் இருக்கும் ஒரு செடி என்று மட்டும் எளிதில்  கடந்து போகாமல் ழ்ஜான் பாரெடின் [12]  சாகச கடற் பிரயாணத்தின்  பொருட்டாவது நின்று ஒரு கணம் அதன் அழகை ஆராதித்து விட்டே செல்லவெண்டும்.

மலரடிச் செதில்களால் மறைக்கப்பட்டிருக்கும்  பூகென்வீலியா மலர் போலத்தான், 250 வருடங்களுக்கு  முன்னர் இப்போதுகூட பெண்கள் எண்ணிப்பார்க்க முடியாத  ஆபத்துக்களை துணிவுடன் சந்தித்து, பல  புதிய தாவரங்களை தனது காதலனின் பெயரில் பெருந்தன்மையுடன் உலகிற்கு தந்த ஜேனும் தாவரவியல் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறார்.

கம்மர்சனின் மறைவுக்கு பின்னர் அவரின் கண்டுபிடிப்புகள் பலரும் பிரசுரித்தனர். ஆனால் யாருமே ழ்ஜான் பாரெடைக் குறித்து ஒரு வார்த்தையையும் குறிப்பிடவில்லை பிரபல பரிணாமக் கொள்கையை அறிவித்தவரான ’ழ்ஜான் – பாட்டீஸ்ட் லமார்க்’ மட்டுமே ழ்ஜான் பாரெடின்[13]  பங்களிப்பையும் அவரது துணிச்சலையும் குறிப்பிட்டு எழுதிய ஒரே ஒருவர்.

சுமார் 70 தாவரங்கள் இப்போது கம்மர்சனின் பெயரில் இருக்கின்றன. தன் பெயரை,  நண்பர்கள், உறவினர்கள் பெயரை பல தாவரங்களுக்கு வைத்த கம்மர்சன்  காதலின் பொருட்டு உலகில் எந்த பெண்ணும் செய்ய துணிந்திராத  சாகசத்தை செய்தவளான  தன் காதலியின் பெயரை அடர் பச்சையில், ஒரே மரத்தில் பல வடிவங்களில் இலைகளையும், வெண்ணிற மலர்களையும் கொண்டிருந்த  ஒரே ஒரு மடகாஸ்கர் குறுமரத்திற்கு  மட்டும் Baretia Bonafidia என்று வைத்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக  கம்மர்சனின் அறிக்கை பாரிஸ் சென்று சேரும் முன்னே அந்த மரத்துக்கு மற்றொரு பெயர்  (Turraea) வைக்கப்பட்டுவிட்டது. பிரசுர முன்னோடி விதிகளின் படி பாரெடின்[14]  பெயரை அந்த மரத்துக்கு வைக்கமுடியாமலானது[12].

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு 2012 ல் கண்டுபிடிக்கப்பட்ட உருளைகிழங்கு, தக்காளியின் குடும்பத்தை சேர்ந்த  ஒரு தாவரத்திற்கு மட்டுமே Solanum baretiae, என்று பாரெடின்[15]  பெயரிடப்பட்டிருக்கிறது.

2020ல் அவரது 280 வது பிறந்த நாளை  கூகில் டூடுல்  பூகென்வீலியா கொடிகளால் சூழப்பட்டிருக்கும் ழ்ஜானின் புகைப்படத்துடன் சிறப்பித்தது.

The 2010 ல் பாரெடின் சுயசரிதை The Discovery of Jeanne Baret, என்னும் பெயரில் க்லெனிஸ் ரிட்லி[13] யால் எழுதப்பட்டது ஆனால் அந்நூலில் பல கண்ணிகள் விட்டு போயிருப்பதாகவும் பல தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பின்னர் கடந்த 2020 ல் வெளியான டானியெல் க்ளோட்[14] , எழுதிய நூலிலிருந்து ழ்ஜான் பாரெடின் வாழ்வைக் குறித்து நம்பகமான தகவல்கள் ஓரளவுக்கு உலகிற்கு தெரிய வந்திருக்கிறது[15].

கடந்த செப்டம்பர் 2019 இல், 77 வயதான பிரிட்டிஷ் பெண் ஜீன் சாக்ரடீஸ்[16], உலகத்தை தனியாக  கடல்வழியே சுற்றிவந்த முதல்  வயதான பெண்ணாக அறியப்பட்டார். அவர் தான் சந்தித்த சவால்களையும் இடர்களையும் சொல்லித் தான் விடாமுயற்சியுடன் அவற்றை எதிர்கொண்டு பயணத்தை நிறைவு செய்ததாகச் சொன்னதை,  ழ்ஜான் உயிருடன் இருந்து கேட்டிருந்தால் புன்னகைத்திருப்பாளாயிருக்கும்.


பின்குறிப்புகள்:

[1] ழ்ஜான் பாரெ= Jeanne Baret (or) Jeanne Baré

[2] பூடேஸ் = frigate Boudeuse

[3] இட்வால்= Etoile

[4] லூயி ஆன்ட்வான் டி பூகென்வியெல = Louis Antoine de Bougainville

[5] ஃபிலிபேர் கம்மர்சன் =  Philibert Commerson

[7] ரியோ த ஹனைரோ= Rio de Janeiro

[8] பூகென்வீலியா ப்ராஸிலியென்ஸிஸ்= Bougainvillea brasiliensis

[9] பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்= Bougainvillea Spectabilis

[10] பார்க்க: https://en.wikipedia.org/wiki/Jeanne_Baret

[11] François Vivès = ஃப்ரான்சுவா வீவ்

[12] ழ்ஜான் பாரே பற்றியும் இன்னும் சில பெண் அறிவியலாளர் பற்றியும் எழுதப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே காணலாம்: https://sydneyreviewofbooks.com/review/danielle-clode-gabrielle-carey/

[13]  Glynis Ridley: The Discovery of Jeanne Baret: A Story of Science, the High Seas, and the First Woman to Circumnavigate the Globe; Hardcover, 288 pages

Published December 28th 2010 by Crown ; ISBN: 0307463524 (ISBN13: 9780307463524)

[14] In Search of the Woman who Sailed the World by Danielle Clode

Paperback, 352 pages

Published October 1st 2020 by Picador; ISBN: 1760784958 (ISBN13: 9781760784959)

[15] டானியெல் க்ளோட் நிகழ்த்தும் ஓர் உரை- ழ்ஜான் பாரேடின் உலகம் சுற்றும்  பயணம் பற்றியது இங்கே ஓர் விடியோவாகக் கிட்டும்: https://www.youtube.com/watch?v=fethpew18WM&list=PLH6AAKWGOLH2-KnHGl8jZC4m-YBw6d4gA&index=27

[16] Jeanne Socrates உடன் ஒரு பேட்டியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=lTGjhIWcJs8

(சொல்வனத்தில் வெளியான கட்டுரையின் மறுபதிவு)

சின்னஞ்சிறு வயதில் ,

அய்யப்பன் கோவில் அருகில் இருந்த அந்த வாடகை வீட்டில் கழிந்த என் பால்யம் என்றென்றைக்கும் மறக்கவியலாததாகி விட்டிருக்கிறது. இன்றும்கூட  மனது பாரமாகும் நாட்களில் அந்த தெருவுக்கு போய் இப்போது அடையாளம் தெரியமலாகிவிட்டிருந்தாலும அந்த முன்னறையின் பச்சைவண்ணமடித்த கம்பிகளுடனான ஜன்னல்  மட்டும் அப்படியே இருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வருவதுண்டு. அந்த ஜன்னல் என் பால்யத்துக்குள் நான் நுழையும் வாசலாகி விட்டிருக்கிறது.

அந்த வீட்டில் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் வரைதான் இருந்திருக்கிறேன், அம்மா தம்பி விஜியை வயிற்றில் கொண்டிருந்ததால்..3ம் வகுப்புக்கு வேட்டைக்காரன் புதூரிலும், பின்னர்  ராஜா ராமண்ணா நகர்  சொந்த வீடு கட்டப்பட்ட பின்பு அம்மாவுடன் தாராபுரம் போய் செயின்ட் அலொஷியஸில் 4 ம் வகுப்பும் படித்தேன்

ஆனால் அந்த வெங்கடேசா காலனி வீட்டின் அமைப்பு  அப்படியே நினைவில் இருக்கிறது. இரண்டு அறையும் பின்னால் கரி படிந்த விறகடுப்பு டன் கூடிய சமையலறையும்,துவைக்கும் கல்லுடன் கூடிய , கீழே அமர்ந்து , பாத்திரம் கழுவும் இடத்துடன் பின் கதவுடன் முடியும் பெரிய பின் முற்றமும், பின் கதவை திறந்து கொஞ்சம் நடந்தால் தனியே வரிசையாக கட்டப்பட்டிருக்கும்  எடுப்பு பொதுக்கழிவறைகளுமாக 3 குடித்தனங்கள் ஒரே காம்பவுண்டில்.

 இதில் நாங்களும் கமலா அத்தை ராமு மாமா குடும்பம் பக்கம் பக்கமாக இரட்டை வீடுகளில். குருவாயூரப்பன் வீடு மட்டும் எங்கள் இருவரின் வீட்டுக்கு பின்னால் பக்கவாட்டில் திரும்பி கோபித்து கொண்டதுபோல் அமைந்திருந்க்கும். அவன் யாருடனும் அதிகம் ஒட்ட்டியதில்லை.  வீட்டு பெரியவர்களும் அப்படியே. வீட்டு மதில் சுவரும் அடுத்திருந்த ஐயப்பன் கோவில் மதிலும் ஒன்றே. அந்த பால ஐயப்பனும் எங்கள் களித் தோழன்தான்.

எனக்கு எப்படி இது நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை எனினும் துல்லியமாக என்னால் நினைவு கூற முடிந்த ஒரு நினைவென்றால் முன்னறையின் வாசல் நிலையில் அம்மா என்னை மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அறையின் கோடியில் பச்சை இரும்பு மடக்கு நாற்காலியில் அப்பா அமர்ந்து முன்னால் இருந்த மர ஸ்டூலில் சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு டம்ளரில் தண்ணீர், சோப்பு நுரையுடன் ஷேவிங் பிரஷ் சகிதம் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார். நான் அம்மாவின் ரவிக்கைக்குள் இருந்து முலையை எடுத்து அதன் காம்பை திருகி கொண்டிருப்பதை அம்மா புன்னகையுடன் அப்பாவிடம் சுட்டி காண்பிக்கிறார், திரும்பி பார்க்கும் அப்பா மறுமொழி ஏதும் சொல்லாமல் புன்னைகையைபோல எதோ செய்கிறார். 

ஆச்சர்யமாக இருக்கிறது ஏனெனில் ஒரு வேளை  அம்மா எனக்கு 2 வயது வரை முலைகொடுத்திருப்பினும் அந்த நினைவுகள் இன்னும் அழியாமல் இருப்பது விநோதம்தான்.

அந்த வீட்டில் தான் அப்பா கலைக்களஞ்சியம் என்னும் ஒரு கெட்டி அட்டை போட்ட வண்ண புத்தகம் கொண்டு வந்து தந்தார்.கனத்த அதன் அட்டையை திறந்ததும் உள்ளே ஒருகாகித செந்தாமரை மலர் விரியும் அமைப்பு இருக்கும். மனம் அப்போது அப்படி பொங்கி ததும்பும்.என்  சின்னஞ்சிறு கரங்களில் மீள மீள அச்செந்தாமரை மலர்ந்தபடியே இருந்தது.  அட்லஸ் வழியே உலகை முதன் முதலில் பார்த்ததும் அதில்தான். அது அளித்த பரவசம் பின்னர் வேறெதிலும் கிடைத்ததில்லை..

 நேரம் கிடைக்கையில் எல்லாம் அந்த முழு உலக வரைபடத்தையும் பின்னர் அடுத்தடுத்த பக்கங்களில் தனித்தனி கண்டங்களையும் அவற்றின் வழவழப்பையும் தொட்டுத்தொட்டு பார்த்தபடியே இருப்பேன். அங்கெல்லாம் சென்று வந்தது போலவே பெரும் பரவசமளித்த அனுபவம் அது. அப்பா அப்போது பார்த்து வந்த ஆசிரியப்பணியுடன் கூடுதலாக நூலக  பாதுதுகாப்பும் அவர் பொறுப்பில் இருந்ததால் அதைக் கொண்டு வந்திருந்தார்..என் வாழ்வின் முதல் நூல் பரிச்சயமது.கமலா அத்தையின் மகன் ராமுவும் நாங்களும் ஏக வயது எனவே எல்லா விளையாட்டுகளிலும் அவனுமிருப்பான். அவனுடனும் கலைக்களஞ்சியத்தை வாசிப்போம் அல்லது பார்ப்போம். 

கமலா அத்தையின் வீட்டு கூடத்தில் டைனிங் டேபிளுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரம் இருக்கும், அதில் அவ்வப்போது காபிக்கொட்டைகளை வறுத்தரைத்து அத்தை போடும் பில்டர் காபி கமகமக்கும்., அத்தையின் கீழுதட்டின் சின்ன சதைத் திரட்டு அளிக்கும் கவர்ச்சியாலேயே நான் அவர்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தேன்.

 பிரபாவுக்கென அத்தை தயிர்சாதத்தில்  மாம்பழத்தை பிசைந்து ஊட்டுவார். வாசனை அபாரமாயிருக்கும்.  ஒருமுறை அத்தையின் உறவினரான கிளியுடன் விளையாடுகையில் , ஆம் அவள் பெயரே கிளிதான், மூன்று வரிசையில் இருந்த சிவப்பு சி்மெண்ட் பூசப்பட்டு கோடுகள் இடப்பட்டிருக்கும் வீட்டு வாசற் படிகளில் தடுக்கி விழுந்து மித்ரா நாக்கை துண்டித்துக்கொண்டாள், அப்பா அவளை தூக்கிக்கொண்டு அடுத்த தெரு தாமஸ் டாக்டர் வீட்டுக்கு ஓடி நாக்கை தைப்பதற்குள் அவரது வெள்ளை வேட்டி முழுக்க சிவப்பானது, பலமுறை அதே தாமஸ் டாகடரிடம் சின்ன சின்ன விஷக்கடிகளுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறோம். மித்ராவால் அவளது நுனி நாக்கை இப்போதும் முழுதாக மடிக்க முடியும்

வீட்டு வாசலில் எப்போதுமிருக்கும் கனகாம்பர பூச்செடிகள். அம்மா மாலையில் அவற்றை தொடுத்து தலையில் வைத்துக்கொள்வார்.பெரிய பெண்ணானதும் அப்படி நானும் வைத்துக்கொள்ளனுமென்று  ரகசியமாக  மனதில் நினைத்துக் கொள்வேன்.

கமலா அத்தை வீட்டு வாசலில் நின்ற சிவப்பு செம்பருத்தி மரங்களில், பூக்கள் பறிக்க வரும் ஐயப்பசாமி மாலை போட்ட  என்னால் ஊமை மாமா என்றழைக்கப்பட்ட ஊமை பக்தர் ஒருவர் எல்லா வருடமும் தவறாமல் வந்து மலர்களை பறித்துசென்றுவிட்டு, கோவிலிலிருந்து திரும்புகையில் ஒருநாள் கூட தவறாமல் பொங்கலும் புளியோதரையுமாக பிரசாத தொன்னையை என் கையில் கொடுப்பார்.

அந்த தெருவில் தினமணிக்கதிர் பேப்பர் வாங்குவதால் கதிரக்கா என்றழைக்கப்டும் ஒரு பெண்ணின் வீடிருந்தது. அங்கே அநேகமாக தினமும் அந்த பேப்பரை நான் சென்று வாசிக்க வாங்கி வந்து பின்னர் திரும்ப கொடுப்பேன், அந்த கதிரக்காவின் குதிகால் வரை நீண்டிருக்கும் அடர்ந்த கூந்தலை அவரது அம்மா துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து அரப்பிட்டு தேய்த்து கழுவுவார், கூடவே ’’ஆளைக்கொல்லும்டீ  இத்தனை முடி’’ என்று கடிந்து கொள்வார்.

 ’’சீமெண்ணே ’’என்று கூவியபடி அவ்வபோது வாசலில் ஒற்றை மாட்டு வண்டி வரும்.  தகர டின்னில் மண்ணெண்ணெய் வாங்குவது வழக்கம் அப்போது., ஒருநாள் பிரபா உரக்க ’’எங்கம்மா இன்னிக்கு தீட்டு சீமெண்ண வேண்டாம்’’ என்று வீட்டு வாசலிலிருந்தே  கத்த ராமு மாமா பின்னாலிருந்து காதை திருகி உள்ளே கூப்பிட்டு போனார். ‘’திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சீமெண்ன  நாராயணா ’’ என்று கோரஸாக அந்த வண்டி வருகையில் நாங்கள் மூவரும் பாடுவோம்.  கபாலத்தின் கடின ஓடே இல்லாமல் பிறந்த பிரபாவின் தங்கை ப்ரியாவை, வெகு பத்திரமாக கமலா அத்தை பார்த்துக் கொள்ளுவார்.5 வயதான பின்னரே அவளுக்கு சரியானது

அடுத்த தெருவில் பெரும் பணக்கார குடும்பமான சுஜியின் வீடிருந்தது. அதில் இருந்த நிலவறை பெரும் மர்மம் கலந்த வசீகரம் அளித்தது எனக்கு.

மேரி  நிம்மி,பாபு என்னும் ஒரு கிறிஸ்தவ குடும்பமும் நட்பிலிருந்தார்கள்.   அவர்கள் வீட்டிலிருக்கும் இப்போது’’ பெயிண்டர் பிரஷ் குரோட்டன்’’ என நான் தெரிந்து கொண்டிருக்கும் பலவண்ணச் சிதறல்கள் இருக்கும் இலைகளுடனான குரொட்டன் செடியும் நிலவறை அளித்த அதே ஈர்ப்பை அளிக்கும் எனக்கு., 

பெயிண்டர்ஸ் பிரஷ் குரோட்டன்

அம்மா பணிபுரிந்த பெண்களுக்கான அரசு விடுதி  வீட்டின் நேரெதிர் கட்டிடத்தில் இருந்தது, அங்கு நான் அம்மாவுக்கு தெரியாமல் ஹாஸ்டல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட கஞ்சியும் கொள்ளுத்துவையலும்,அதன் பொருட்டு வாங்கிய  அடிகளுமாக நிறைந்திருந்த காலமது. அங்கிருந்த ஒரு சிறு பப்பாளி மரத்தின் உச்சி வரை நான் ஏறி விளையாடுவேன்.  தங்கம்மாவும் நாகம்மாவும் இறங்கச் சொல்லி கூச்சலிடுவார்கள்.ஹாஸ்டலின் வேப்ப மரத்தின் பாதி நிம்மி வீட்டில் நிற்கும். 

 ஹாஸ்டல் சமையல்கார நாகம்மா என்னை மடியில் படுக்க வைத்து சொல்லிய கதைகள் ஏராளம் பெரும்பாலுமவை அவரின் சொந்த வாழ்வின் கதைகள் என்பதை இப்போது உணர்கிறேன் அப்பா அம்மா எனக்கு கதைகள் சொல்லியதே இல்லை ஆனால் நாகம்மாவே என் உலகில் கதைகளை புகுத்தியவர் அவை அனைத்துமே  துயரக்கதைகளானாலுமே.

மிக இளம் வயதிலேயே குறை பட்டுபோன நாகம்மாவின்  கறை படிந்திருக்கும் வெள்ளைச்சேலையின் வாசம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,, கால்களை நீட்டி என்னை படுக்க வைத்து நாகம்மா அடிக்கடி ’’கிங்கிங் கிங்கிங் காணலையே, எங்கயும் காணலியே, எங்கயும் காணலியே வாழமரத்தடியே மாமியார் வீடிருக்க’’ என்று  துவங்கும் பூ வங்கி வரச்சென்ற  தன் கணவனான ஆண் தவளை ஒரு பஸ் சக்கரத்தில் நசுங்கி செத்துப் போனது தெரியாமல் போனவர காணோமே என்று கண்ணீருடன் தேடும் பெண் தவளையின் பாடலை பாடுவார்., எப்போது அதை பாடினாலும் சொட்டு சொட்டாக நாகம்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் வெம்மையை இப்போது சக ஹிருதயளாக உணர்கிறேன்,

 நாகம்மா தன் ஒரே ஆசையாக கருப்பு செருப்புக்களை போட்டுக் கொள்ள விரும்பினார் என்னிடம் விளையாட்டாக எப்போது நான் வேலைக்கு போனாலும் சம்பளத்தில் செருப்பு  வாங்கி தர வேண்டும் என்று சொல்லுவார். ஆய்வு மாணவிக்காக அளிக்கபட்ட சலுகைக்கட்டணம் வாங்கிய முதல் மாதமே நாகம்மாவிற்க்கு செருப்புக்கள் வாங்கினேன். ஆனால் போது அவர் அவற்றை அறிந்துகொள்ள முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் சில நாட்களில் மறைந்துவிட்டார்.

கருப்பு செருப்புகளும், தவளைகளும், வெள்ளைச்சீலையும் எப்போதும் எனக்கு  நாகம்மாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது

 இன்னொரு உதவியாளர் தங்கம்மாவும் என்னை வளர்த்தவரில் ஒருவர். நாகம்மா என் செவிக்குணவளித்தார். தங்கம்மா  வயிற்றுக்கு.

எப்போது என்னை பார்த்தாலும் எனக்கென்று அம்மாவுக்கு தெரியாமல் நான் சாப்பிடும் ஒரு ரகசிய தின்பண்டம் வைத்திருந்து கொடுப்பார்.அதில் தங்கமையின் வியர்வையின் வாசம் இருக்கும். அன்பின் வாசமது

திலேப்பி மீன்களீன் சதையை கீறி அவற்றில் மசாலாவை திணிக்கும் மெலிந்த எலும்பு புடைத்திருக்கும் கரிய தங்கம்மாவின் கைவிரல்கள் வளர்த்த உடலிது.

 முதன் முதலாக  வீட்டுக்கு வாங்கிய ஒரு சின்ன நாய் குட்டியின் கழுத்தில் கயிறு கட்டி ஜன்னலுக்கு உள்ளிருந்து கிணற்றில் தண்ணீர் சேந்துவதுபோல  இழுத்து, அதை தூக்கிட்டு அறியாமல் நான் கொன்றேன். அது ஏன் அசையாமல் என்னிடம் விளையாடாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறதென்பதை முதுகில் நாலு விழுந்த பின்னே தெரிந்துகொண்டேன். எனக்கு தெரியவந்த முதல் மரணம் அது.

எதன் பொருட்டோ எப்போதுமே வீட்டின் சந்தில் நின்றுகொண்டிருந்தது  சிமெண்ட் தள்ளிக்கொண்டு போகும் சிறு வண்டியொன்றூ. அதனருகில் அமர்ந்து நிம்மியும் பிரபாவும் நாங்களும் பேசிய கதைகளில் பெரும்பாலும் ஒரு பெருங்காடிருக்கும் அதனுள் நுழைந்ததுமே கனிகள் செறிந்திருக்கும் பழமரங்களும் அண்டாக்களில் நிரம்பியிருக்கும் எலுமிச்சை சர்பத்துமாகவே இருக்கும். கேட்பாரற்ற அந்த உணவுகளை கற்பனைக்கதைகளில், அள்ளி அள்ளி புசிப்போம் அப்போ்து. 

அங்கமர்ந்துதான் அப்போது எங்களுக்கு தெரிந்த இரண்டு சிற்றுண்டிகளான வாழைப்பழத்துக்கு அடுத்ததான நறுக்கிய தக்காளி துண்டுகளில் சர்க்கரை தடவி சாப்பிடுவோம், அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துளி நீர் ஊற்றி வைத்த  சர்க்கரை டப்பாவில் மறுநாள்  கிடைக்கும் சிறு சர்க்கரை வில்லையளித்த குதூகலத்தை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் எந்த அடுக்கில் கைவைத்தாலும் மகன்களுக்கு கிடைக்கும் பட்டை சாக்லேட்டுகள் அளிக்கவே முடியாது.

 பள்ளியின் ,NCC  ஆபீசரான அப்பா சுவரில் தொங்க விட்டிருக்கும்  கார்க் குண்டுகள் சுடும் வெற்றுத் துப்பாக்கியை கொண்டு எங்களிருவரையும், அந்த அறியா வயதின் தவறுகளின் பொருட்டு  சுட்டுவிடுவதாக சொல்லி மிரட்டுவார். வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வழிய சுவரோடு சுவராக பல்லியை போல அழுந்தியபடி அஞ்சி நின்ற இரு சிறுமிகளை நானே இப்போது அந்த பச்சை கம்பி ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.

’’கண்ணீரும் கனவும்’’ என்று அருணா அவர்களின் இன்றைய பதிவை வாசித்ததும் எனக்கும்  பால்யத்தின் நினைவுகள் கொப்பளித்து கிளம்பியதால் அவற்றை எழுத தொடங்கியிருக்கிறேன். ஜன்னல் வழி பயணம் இன்னும் தொடரும்

சாப்ஸ்டிக்ஸ்

  சாப்ஸ்டிக்ஸ் சச்சின் யார்டி, இயக்கத்தில் அஸ்வினி யார்டியின் தயாரிப்பில் 2019ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தி திரைப்படம். ஒரு புதிய கார் வாங்கிய அன்றே திருட்டு போவது அதை தொலைத்த பெண் மற்றும் அதை தேடி கண்டுபிடிக்க உதவும் ஆண் இருவரின் வாழ்வும், இந்த சம்பவத்தின் பின்னர் அந்தப்பெண் மற்றும். எதிர்நாயகனாக வரும் ஒருவரின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமே கதை. ஆர்டிஸ்ட் என்னும் பெயரில் அபே தியோல் நாயகன்., நாயகி நிர்மாவாக மிதிலா பால்கர்.

கன்னக்குழியழகால் டிம்பி என்றழைக்கப்படும் ஆபே ஒரு குற்றப்பின்னணி உள்ள, சமையற்கலையிலார்வமுள்ள, பலருக்கு பல உதவிகளை திரைமறைவில் சட்டத்துக்கு  புறம்பாக செய்து தரும் சுவாரஸ்யமானவர்.

நிர்மா வெளியூரிலிருந்து நகரத்துக்கு வந்து ஸ்வாமிஜி புகைப்படத்தை தினம் தொட்டுக்கும்பிட்டுகொண்டு அம்மா சொல்லும் முன்னேற்றத்திற்கான முப்பது வழிகளை தினம் மனப்பாடம் செய்து கொண்டு, அலுவலகத்தில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு கனவுகளை நிறைவேற்றும் வழி தெரியாத, தயக்கங்களும் தாழ்வுணர்வுமான ஒருத்தி.

தனது புதிய காரை வாங்கிய அன்றே தொலைக்கும் நிர்மா காவல்துறையினரின் வேகத்தை நம்பாமல் இப்படியான விஷயங்களை திறம்பட செய்து கொடுக்கும் அபேவை நாடுகிறார். அந்த கார் ஒரு வில்லனிடம் இருக்கிறது அவரிடமிருந்து எப்படி அதை திரும்பப் பெறுகிறார்கள் என்பது தான் கதை. 

100 நிமிடங்களுக்கு ஓடும் சிறிய feel good வகை திரைப்படம் இது. அபே முன்னரே அறியப்பட்ட நடிகர் ஆனால் மிதிலா புதியவர். இந்த கதாபாத்திரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பொருந்தி நடித்திருக்கிறார். அவர் அவ்வப்போது அபே செய்யும் குறும்புகளை நிஜமென்று எடுத்துக்கொண்டு அப்பாவியாக, எதிர்வினையாற்றுவதும்,, அபே அவற்றை ரசித்து கன்னக்குழி நிறைய சிரிப்பதுமாக  வரும் காட்சிகள் எல்லாம் அழகு, மற்றும் மிக இயல்பு

புகழ் பெற்ற தியோல் குடும்பத்திலிருந்து இப்படியான எளிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்த முதல் நடிகராக அபே இருப்பதற்கும் பாராட்டுக்கள். ஒரு நடிகராக வணிக ரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களையே வாழ்நாளெல்லாம் தெரிவு செய்து கொண்டிராமல், தனக்கும் ஆத்ம திருப்தி அளிக்கும், பார்வையாளர்கள் அரங்கை விட்டு வெளியேறுகையில் முகம் புன்னகையில் நிறைந்திருக்கும்படியான திரைப்படங்களையும் அவ்வப்போது தேர்ந்தெடுக்கலாம். அபே அப்படி தேர்ந்தெடுத்திருக்கும் படம்தான் சாப்ஸ்டிக்ஸ்.

அபேவுக்கும் நிர்மாவுக்குமான காட்சிகளில் காதலை சொல்லாமல் , மெல்ல மெல்ல ஒரு நட்பு உண்டாகி வருவதை சொல்லி இருப்பது சிறப்பு.. திக்கி திக்கி சீன பாஷையில் பேசிக் கொண்டு பயந்தவளாக வரும் நிர்மா அபேயிடமிருந்து வாழ்க்கை பாடங்கள் கற்றுக்கொண்டு புத்தம் புதிய மனுஷியாகும் அந்த பயணம் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. சீனர்களிடமே சீனாவைப் பற்றி எக்குதப்பாக உளறிக்கொட்டி,  மேலதிகாரியிடம் திட்டு வாங்கும் நிர்மா இறுதிக்காட்சியில் சீன விருந்தாளிகளுக்கு இந்திய கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பதும் சிறப்பு. இப்படி பல எளிய ரசிக்கும்படியான காட்சிகளுக்காகவே இந்த திரைப்படத்தை  பார்க்கலாம்

மிக மெதுவாக படம் நகர்வதும், சுமாரான பின்னணி இசையும் மட்டுமே விமர்சனத்துக்குரியது, அதிலும் கவனம் செலுத்தி இருந்தால் இப்படம் இன்னும் நல்ல உயரங்களுக்கு  சென்றிருக்கும். 

இந்தி திரைப்படத்துக்கான எந்த இலக்கணங்களும்  இல்லாத, திரைப்படம் இது. மசாலா இல்லாமல், ஆபாச காட்சிகள், அபத்த நகைச்சுவைகள், தேவையற்ற நாயக நாயகி புகழாரங்கள்,சாகஸங்களெல்லாம் இல்லாமல் வாழ்வில் பலர் அநேகமாக கடந்து வந்திருக்கும், அல்லது கடக்கவிருக்கும் ஒரு சின்னஞ்சிறிய சம்பவத்தினை அழகாக தொட்டுதொட்டு விரித்து திரைக்கதையாக்கி இருக்கின்றனர். இதுபோன்ற படங்களை நிச்சயம் வரவேற்க வேண்டும்.

 இயல்புக்கு மாறான அதீத சாகஸக்காரர்களாக சித்தரிக்கப்படும் நாயகர்களைக்குறித்த புனைவுக்கதைகளை காட்டிலும், சாமான்யர்களின் வாழ்வில் நடக்க சாத்தியமுள்ள சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அனைவராலும் பார்க்கப்படவேண்டும். நிச்சயம் நம் வாழ்வின் ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர வைக்கும் படம் இது.

டோஃபூ

 

டோஃபூ (Tofu) என்பது சோயா பயிர் விதையிலிருந்து தயாரிக்கப்படும் பாலாடைக்கட்டியினைப்போன்ற ஒரு உணவுப்பொருளாகும்.  இது சோயா தயிரென்றும் பீன்ஸ் தயிர் என்றும் அழைக்கப்படுகிறது. சின்ன சின்ன சதுரங்களாக இவை விற்பனையில் உள்ளன.

சோயா செடி

 சீனா, ஜப்பான், கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் உணவு வகைகளில் டோஃபு தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாகும். இது ஹான் வம்சத்திலிருந்து (கிமு 206 – 220 .)  புழக்கத்தில் இருந்து வருகிறது என்று நம்பப்படுகிறது.

சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் சீனாவிலும் ஜப்பானிலும் டோஃபூ வின்  உபயோகம் இருந்துள்ளது.1770 ல் டோஃபூ வைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்புக்களும், புத்த மத துறவிகள் இதை உணவில் பெரும்பாலும் சேர்த்துக்கொண்டு இருந்ததற்கான  சான்றுகள் கிடைத்துள்ளன.

சோயா விதைகள்

 உலர்ந்த சோயாபீன்கள்  தண்ணீரில் ஊற வைக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, வேக வைக்கப்படுகிறது.  வேகவைத்த கலவையிலிருந்து சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது . சோயா பாலில், கால்சியம் சல்பேட், மெக்னீசியம் குளோரைடு. எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து  அதை தயிராக்கி பின்னர் அதை கெட்டிப்படுத்தி சதுர அச்சுகளில் ஊற்றி டோஃபூ தயாரிக்கப்படுகின்றது.

சோயாபால்

 . டோஃபு உற்பத்தி முறையைப் பொறுத்து  மென்மையான, கூடுதல் மென்மையான, கடினமான மற்றும் குளிர்பதனப்பெட்டிகளில் சேமிக்க தேவையில்லாத  உலர்ந்த டோஃபு ‘வாகவும் சந்தையில் கிடைக்கிறது.

 பல சுவையான உணவுப்பொருட்களைப் போன்ற டோஃபூவும் சீனாவிலிருந்தே உருவானது. 8 ஆம் நூற்றாண்டில், ஒரு சீன சமையல்காரர் தற்செயலாக சோயா பாலை தயிராக்கி இதை கண்டுபிடித்து,  ஒகாபே (Okabe)   என்று பெயரிட்டார். சீன மொழியில் ஒகாபே என்றால் வெள்ளைச் சுவர் என்று பொருள். கெட்டியாக வெள்ளையாக இருந்த டோஃப்ஃபுக்கு இந்தபெயரே வெகுகாலம் இருந்துவந்தது பிற்பாடு 19 ஆம் நூற்றாண்டில்தான்  டோஃபூ என்னும் பெயர் வழங்கப்பட்டது. டோஃபு என்பது ஜப்பானிய மற்றும் சீன மொழிகளில் பீன்ஸ்( beans) என்று பொருள்படும்

இதில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.ரத்தத்தில் ஹீமோகுளோபின்  அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்சிஜனை உடல் முழுவதும் எடுத்து செல்ல பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக உடல் அதிக ஆற்றலைப் பெறுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுக்கவும் இது  உதவும். 

மிகக்குறைவான கலோரியும் அதிக அளவில் புரதம் (6-8%). இரும்புச்சத்து, மெக்னீசியம் கால்சியம்,பொட்டாசியம் உள்ளிட்ட பல தாது உப்புக்களும் அதிகம் கொண்ட இந்த டோஃபு நல்ல வாசனையையும் கொண்டது. டோஃபூ உற்பத்தியின் உபபொருட்களான   ஒகரா (Okara) என்னும் திடப்புரதமும், வே ( Whey)  எனப்படும் நீர்த்த புரதமும் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.. டோஃப்ஃபுவில் மிக முக்கியமான் 8 அமினோ அமிலங்கலும் உள்ளன.

Okara

ஆசிய உணவுகளில் கடந்த 20 ஆண்டுகளாக மிக அதிக அளவில் இடம்பெற்றிருக்க்கிறது இந்த சோயாப்பன்னீரான டோஃபூ,   

உலகில் மிக அதிகமாக உண்ணப்படும் சோயா பொருட்களில் டோஃபூவே முதலிடம் வகிக்கிறது.   ஒரு நாளைக்கு சுமார் 50 டன் வரை   தயாரித்து  ஜப்பான்  உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. 

டெம்ப்பே (Tempeh) என்பதுவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட சோயா விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் புரத உணவாகும். இதில் டோஃபுவை காட்டிலும் அதிக புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறது

Tempeh

 சோயாவில் இருக்கும் ஒரு சில  எதிர் ஊட்டச்சத்துக்கள் (Ant nutritional substances) சோயாவை ஊற வைத்து வேக வைத்த பின்னர் டோஃபூ தயாரிக்கப்படுவதால் டோஃபூவில் இருக்காது.

டோஃபூ ஊறுகாய்

உறைய வைத்த டோஃபூ, , டோஃப்ஃபூ ஊறுகாய்கள்,  சோயா பாலாடை  என பல விதங்களில் அதிக புரதம் இருக்கும் டோஃபூ உணவுகள் கிடைக்கின்றன.

டோஃபூ பாலாடை

சோயாவிலிருந்து மட்டுமல்லாமல் பாதாமில் இருந்து, முட்டையிலிருந்து,கொண்டைக்கடலை, வேர்க்கடலை, மற்றும் எள்ளிலிருந்தும் கூட டோஃப்ஃபூ தயாரிக்கப்படுகின்றது.

பெண்களின் மாதவிலக்கு நின்றுபோகும் சமயத்தில் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் மிக முக்கிய ஹார்மோன் உற்பத்தியும் நின்றுவிடும் எனவே பெண்கள் அப்போதிலிருந்து அதிகம் டோஃபுவை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

 டோஃபூவில் இருக்கும் தாவர ஈஸ்ட்ரோஜன் மனித உடலின் ஈஸ்ட்ரோஜென்னை போலவே செயலாற்றுவதால் மாதவிலக்கு நின்றுபோகும் சமயங்களில் உண்டாகும் உடல் உபாதைகளில் இருந்து விடுபடசோயா உணவுகள் பலனளிக்கும்

உபயோகப்படுத்தாத  டோஃபுவை குளிர்பதனப்பெட்டியில் அல்லது நீரில் சேமித்து வைத்திருக்க வேண்டும்

 அசைவ புரதத்திற்கு மாற்றாக இந்த தாவர புரதமான டோஃபூவை சைவ உணவுக்காரர்கள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

ஒரு நாள், பெருநாள், ஏப்ரல் 6,2021

 தேர்தல் திருவிழா

 தேர்தல் கமிஷன் அறிவிப்பு வந்ததிலிருந்தே  தேர்தல் நடக்குமா நடக்காதா என்று இரு விதமான கருத்துக்கள் வலுவாக  நிலவி வந்தது. பெருந்தொற்று காரணமாக தேர்தல் நடைபெறாது என்றே பரவலாக கருத்து நிலவியது. ஆனால் நான்கு மாநிலங்கள்  மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெறும்  என்று   பிப்ரவரி 11 ம் தேதி இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில்  அறிவித்த பின்னர்தான் பலருக்கு நம்பிக்கையே வந்தது.

தமிழ்நாட்டில். ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வழக்கமான தேர்தல் நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம்  கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெருந்தொற்று காரணமாக வாக்குச்சாவடிகளில் அதிகபட்சமாக 1500 வாக்காளர்கள் மட்டும் என  நிர்ணயிக்கப்பட்டது வாக்குசாவடிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு, அதற்கேற்ப தேர்தல் பணியாளர்களும் அதிகரிக்க பட்டனர். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால்  தபால் வாக்கு அளிக்கும் வசதியும் இம்முறை இருந்தது.

தமிழகத்தில்  234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் களம் கண்டார்கள், இவர்களில் .2  இடைப்பாலினத்தவர்களும் இருந்தார்கள். அதிகபட்சமாக கரூரில் 77 வேட்பாளர்கள், குறைந்த பட்சமாக வால்பாறையில் 6 வேட்பாளர்களும் இருந்தார்கள்

வேட்பு மனு தாக்கலுக்கு,  பரிசீலனைக்கு, திரும்ப பெறுவதற்கான கால அட்டவணைகள் வழக்கம்போலவே வெளியாகின. தமிழகத்தில் வாக்களிக்க தகுதியானோர் இம்முறை   6  கோடியே 28 லட்சம் பேர் இருந்தனர்

கடந்த 50 வருடங்களாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி புரிந்த இரு பிரதான கட்சிகளின் முக்கிய தலைவர்களான செல்வி ஜெயலலிதாவும் கருணாநிதியும்  உயிரோடு இல்லாத சமயத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அனைவராலும் கவனிக்கப்படும் ஒன்றாகவே இருந்தது. கட்சியினருக்கு இது வாழ்வா சாவா என்னும் முனையிலிருந்து நடக்கும் தேர்தலானது

 தேர்தல் கூட்டணி அமைப்பதில் தொடங்கிய இழிபறி சில நாட்களுக்கு நீடித்தது பல எதிர்பாரா கூட்டணிகள் உறுதியானது, சில கட்சிகள் வெளியேறின, சில கட்சிகள் புதிதாக இணைந்தன, பல கட்சித் தாவல்கள் நடந்தன பலருக்கு ஏமாற்றத்தையும், பலருக்கு அதிருப்தியும், சிலருக்கு திருப்தியையும் அளித்தது இந்த தேர்தலுக்கான கூட்டணிகள் .பல திரைப்பிரபலங்கள் இம்முறை களம் கண்டார்கள்.

 தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பே முடித்தாக வேண்டிய பரப்புரை பரபரப்பாக துவங்கியது. தமிழக அரசியல் வரலாறு இதுவரை கண்டிராத அளவில் தேர்தல் பரப்புரைகளில் அனல் வீசியது மிக வித்தியாசமான கீழ்த்தரமான பரப்புரைகள் அநேகமாக எல்லாக் கட்சியிலும் நடந்தது பொது வாழ்வை மட்டுமல்லாது, குடும்ப வாழ்வை, அந்தரங்க வாழ்வை கூட விமர்சித்தார்கள் .வேட்பளர்களுக்கு மக்கள் போட்டுபோட்டுக்கொண்டு ஆரத்தி எடுத்தார்கள் வேட்பாளர்கள் நடனமாடினார்கள். மேடைபோட்டு சினிமா பாடல்களுக்கு நடனங்களை ஏற்பாடு செய்தார்கள்.

சாலையில் வாகன போக்குவரத்தை பல மணி நேரம் ஸ்தம்பிக்க செய்து பிரச்சாரம் செய்தார்கள். முன்னறிவிப்பின்றி ஒரு முக்கிய பிரமுகர் கடலில் குதித்து, மீனவர்களுடன் நீந்தியபடியே அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார், மீன் பிடித்தார். இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தினார்கள். கடைகளை அடைக்க சொல்லி கல்லெறிந்தார்கள். ஆட்சேபணைக்குரிய விஷயங்களை இன்ஸ்டாகிராமில் பதிந்துவிட்டு பின்னர் நான் அதை செய்யவே இல்லை நாசவேலைதான் காரணமென்றார்கள் சில கட்சிகளில் வேட்பாளர்களை வலை வீசி தேடினார்கள்.

மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு பிரமுகர் சிறையிலிருந்து வெளிவந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு பழிதீர்க்க போ வதாக வஞ்சினமெல்லாம் உரைத்துவிட்டு பின்னர் சில நாட்களிலேயே அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளுவதாக அறிவித்தார்.

ஒரு முக்கிய கட்சித்தலைவரின் மகன் பிரச்சாரத்தின் போது கட்சியினருக்கு உண்வளிக்க, சொல்லாமல் கொள்ளாமல் சாலையோர கடையிலிருந்த பிரியாணி அண்டாவையே வண்டியில் தூக்கிகொண்டு சென்றார்.

மிக சுவாரசியமான சில விஷயங்களும் நடந்தது ஒரு முக்கிய வேட்பாளர் தனக்கிருந்த உடல் பிரச்சினைகள் எல்லாம் எடுத்துக் கூறினார் ’’எனக்கு பிபி சுகர் இருக்குது, உடல் எடையே 8 கிலோ குறைந்து நிச்சயமா எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சிருங்க’’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்’

இன்னொருவரோ ’’இத்தனை பாடுபட்டு இந்த தொகுதிகளில் எத்தனை வேலைகளை செய்து இருக்கிறேன் என்னை நீங்கள் வெற்றி பெற செய்யாவிட்டால் இதே தொகுதியில் நான் உயிரை விடுவேன்’’ என்று பிளாக் மெயில் செய்து கொண்டிருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் இன்னொரு வேட்பாளர் ’’எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கலைன்னா சூனியம் வச்சிருக்கேன் ரத்தமா கக்கி செத்துபொயிருவீங்க’’ என்றார். பலரிடம் குலதெய்வங்களின் மீது சத்தியம் வாங்கிக்கொண்டு வாக்குக்கு பணம் அளிக்கபட்டது.

 எல்லா கட்சியினரும் ஏராளமான நலத்திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார்கள் இல்லத்தரசிகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள், மாதா மாதம் உதவித்தொகை உள்ளிட்ட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நலத்திட்டங்கள் மாற்றி மாற்றி வெளியிடப்பட்டு கொண்டே இருந்தன.அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஐம்பதிலிருந்து 59  ஆகி இப்பொழுது 60 ஆகிவிட்டது.

வழக்கமான தேர்தல் ஸ்டைலான மூதாட்டிகளை அணைத்து முத்தமிடுவது, எதிர்பாராமல் வீடுகளுக்குள் நுழைந்து உணவு உண்பது, கைக் குழந்தைகளுக்கு பெயரிடுவது, குழந்தைகளை எடுத்துக் கொஞ்சுவது போன்றவைகளோடு இம்முறை வேறு சில சுவாரசியமான விஷயங்களும் நடந்தன சில வேட்பாளர்கள் பெரும் தொற்றால் பள்ளிகள் இல்லாததால் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர் இன்னும் சிலர் அடி பம்பில் நீர் இறைத்து பெண்களுக்கு குடங்களை நிரப்பிக் கொடுத்தார்கள் இட்லி கடையில் இட்லி வேகவைத்து, இட்லி சாப்பிட்டார்கள், சலவை தொழிலாளி ஒருவருக்கு உதவியாக சில துணிகளை இஸ்திரி போடுவதும் நடந்தது

  சில பல கட்சி தாவல்களுக்குப்  பிறகு ஒரு கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒரு  முன்னாள் முன்னணி நடிகை ’ என்னை சட்டைசபைக்கு  அனுப்புவீர்களா அனுப்புவீர்களா? என்று மழலைத் தமிழில் ஆவேசமாக திரும்பத் திரும்ப கேட்டது ரசிக்கும்படி தான் இருந்தது

  பரப்புரைகளை இப்போது வரும் சினிமாக்களை காட்டிலும் மிக சுவாரசியமாக இருந்ததால் அந்த காணொளிகள் பல லட்சம் பேர்களால்  பார்க்கப்பட்டன ஒரு கட்சியினர் உருவாக்கிய காணொளிகளின் வரிகளில்  திருத்தமும்  கிண்டலும் செய்து செய்து  எதிர்க்கட்சியினரும் அதே வரிகளோடு பழிக்குப்பழி காணொளிகளும் வெளியிட்டார்கள் . பல முக்கிய தலைவர்கள் கண்ணீருடன் இறைஞ்சியதையும் பார்க்க முடிந்தது

 படித்த வாக்காளர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இம்முறை களம் காணும் ஒரு அறிவு ஜீவி என்னும் பிம்பம் உடைய ஒரு பிரபல வேட்பாளர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் நீட் தேர்வு குறித்த ஒரு அடிப்படைக் கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல் ’’தான் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தனது கட்சியினரிடம் கேட்டால் இதை சொல்வார்கள்’’ என்றும் சொன்னார் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த பல இளைஞர்களுக்கு அந்த நேர்காணல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது

 தனது மகளை பிரச்சாரத்தின் போது தெருவெங்கும் நடனமாட விட்டார் ஒரு வேட்பாளர். குடும்பத்தினரையும் அழைத்து வந்து பிரச்சாரத்தில் ஈடுபடச்செய்தார் இன்னொருவர். ஒருவர் மீது ஒருவர் வசைபாடி கொண்டார்கள் புகார் அளித்து கொண்டார்கள் அடித்துக் கொண்டார்கள்

  அரசு ஊழியர்கள் ஆனதால் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை எதிர்பார்த்திருநதோம்,  எனினும் எங்களுக்கும் இந்த தேர்தல் நடைபெறும், நடைபெறாது என்று இரு விதமான கருத்துக்கள் இருந்தது.  தேர்தல் பணிக்கான படிவங்களை பூர்த்தி செய்யச் சொல்லி   கல்லூரி முதலவரிடமிருந்து ஆ்ணை வந்ததும்தான் நாங்களும் தேர்தல் பணிக்கு செல்வது உறுதியானது. 

அரசு ஊழியர்களில் கல்லூரி பேராசிரியர் மட்டுமல்லாது பொது நல வாரியம் மின்சார வாரியம்  என்று பெரும்பாலான அரசு ஊழியர்கள் இந்தமுறை தேர்தல் பணிக்கான அழைக்கப்பட்டிருந்தார்கள் எந்த காரணம் கொண்டும் இதனை தவிர்க்கவே முடியாது என்பது வழக்கம் போலவே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது 

 மூன்று பயிற்சி வகுப்புகள் இருந்தன அவரவர் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவிலேயே வழக்கம்போல பயிற்சிகள் இருந்தன. எந்த தவறும் நிகழ்ந்து விடாமல்  கன்ட்ரோல் யூனிட், யாருக்கு வாக்களித்தோம் என்னும் சின்னத்துடன் கூடிய தாளை ஏழு நொடிகளுக்கு காண்பிக்கும் இன்னொரு இயந்திரம், வேட்பாளரின் சின்னங்கள் அடங்கிய பேலட்பாக்ஸ் ஆகிய மூன்று இயந்திரங்களையும் எப்படி எந்த தவறும் இல்லாமல் இயக்குவது, பாதுகாப்பது , எப்படி பாதுகாப்பாக மாதிரி தேர்தல் நடத்துவது தேர்தல் முடிந்த பின்னர் அவற்றை காவல் அதிகாரிகளின் உதவியுடன் எப்படி முறையாக சீல் வைத்து சமர்ப்பிப்பது என்கின்ற பயிற்சி மூன்று நாட்களும் திரும்பத் திரும்ப எங்களுக்கு அளிக்கப்பட்டது

  எந்த தவறும் வாக்குப்பதிவில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதையே கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொன்னார்கள் எனக்கு கோவையில் சூலூரில் பணியாணை வந்திருந்தது அந்தப் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏதோ ஒன்றில் எனக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருந்தது

 பல தேர்தல்களை இதற்கு முன்னர் நான் பணியாற்றி இருந்தேன் எனினும் கடந்த தேர்தலில் பல கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன நான் பணியாற்றிய குக்கிராமத்தில் தேர்தல் தொடங்கி ஒரு மணி நேரத்திலேயே கன்ட்ரோல் யூனிட் இயந்திரம் கோளாறு இயந்திரத்தை மாற்றி ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் தேர்தலை தொடங்க வேண்டி இருந்தது அதன் பின்னர் யாருக்கு வாக்களித்தோம் என்னும் தாள்களை 7 நொடி காட்டும் அந்த இயந்திரம் இரண்டு முறை பழுதாகி மூன்றாவது இயந்திரம் மாற்ற வேண்டி வந்தது இந்த தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து எதுவும் அறியாத வெளியே வரிசையில் காத்திருந்த கிராமத்தவர்களிடமிருந்து ஏராளமான கண்டனங்களும் வந்தது இரவு ஏழு மணிக்குப் பிறகும் 50 பேருக்கு மேல் வாக்களிக்க காத்திருக்கையில் எதிர்பாராமல் வந்த இடி மின்னலுடன் கன மழையினால் மின்சாரம் தடைபட்டு மீண்டும் வாக்களிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது அதன் பின்னர் வாக்களிப்பதை முடித்து இயந்திரங்களை சீல் வைத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிய பின் மறுநாள் அதிகாலை வீடு திரும்பி இருந்தேன்

 அந்த கசப்பான அனுபவங்களின் பிறகு இந்த முறையாவது வாக்குச்சாவடிக்கு செல்லாத, தேவைப்படும்போது மட்டும் அழைக்கப்படும் ரிசர்வ் பணி எனக்கு  அளிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்னும் நப்பாசையுடன்  நான் சூலூர் சென்றேன் மிகப் பிரபலமான  கல்லூரி வளாகத்தில் காரில் இருந்து இறங்கியதுமே அங்கிருந்து ஒரு பெரிய மரத்தில் ரிசர்வ் என்று எழுதி ஒட்டப்பட்ட அம்புக்குறி கண்ணில் பட்டது. குணா கமல் கோவிலில் லட்டு வாங்க போகும் போது அவரை வழி நடத்தும் அம்புகளைப் போல எனக்கும் இது ஏதோ ஒரு நிமித்தமாயிருக்குமோ என்று மனதில் தோன்றியது.

 எதிர்பார்த்தபடியே நான் உள்ளிட்ட சுமார் 300 அரசு ஊழியர்கள் ரிசர்வ் என்று அறிவிக்கப்பட்டு கல்லூரி வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டோம்

வாக்குச்சாவடி அதிகாரிகளில் யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, வேறு ஏதேனும் எதிர்பாரா நிகழ்வுகளால் அவர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி வந்தாலோ ரிசர்வில்  காத்திருக்கும் நாங்கள் அழைக்கப்படுவோம்.

 ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் என்னைபோன்ற வாக்குச்சாவடி அதிகாரி ஒருவரும் அவருக்கு உதவியாக 3 தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள்

ரிசர்வில் இருந்த  நாங்கள் அனைவரும் ஒரு மிகப்பெரிய கலை அரங்கத்தில் நோய்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சமூக இடைவெளிகளும் இல்லாமல் தங்க வைக்கப்பட்டிரு்தோம்

 காலை பத்து மணிக்கு கலையரங்கு சென்ற அனைவரும் இரவு எட்டு மணி வரை குடிநீரோ தேநீரோ உணவோ வழங்கப்படாமல், எந்த அதிகாரிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் காத்திருந்தோம். 8 மணிக்கு மேல் அங்கு வந்திருந்தவர்களில் சிலர் அதிகாரிகளிடம் அலைபேசியில் அழைத்து சண்டையிட்டபின்பே அருகில் இருக்கும் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்கச் சொல்லி அறிவுறுத்தினார்கள்.

 அங்கும் மிகப் பெரியதோர் கூடத்தில் ஆண்களும் பெண்களுமாய் அனைவருமே ஒரே இடத்தில் இரவு தங்க வைக்கப்பட்டோம் நோய் தொடர்பான எந்த  பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை 10 மணிக்கு மேல் கொங்கு நாட்டின் பிரபல உணவான கோதுமை ரவா உப்புமா அனைவருக்கும் இரவு உணவாக வழங்கப்பட்டது

 தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம் ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று’’ என்றெல்லாம்

  ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி  கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’’ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்’’ என்றார்

 இந்த தேர்தல் பணிக்கு அரசு ஊழியர்களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் விளக்கு அளிக்கப்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் இருந்து கடினமான அறிவுறுத்தல்கள் வந்திருந்தன நான் தங்கியிருந்த இந்த கல்யாண மண்டபத்தில் இருவருக்கு கடுமையான காய்ச்சலும் இருமலும் இருந்தது. ஒரு பெண்மணி சமீபத்தில் ஏற்பட்ட மாரடைப்பினால் ஒரு கையும் காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது அவரும் பணிக்கு வந்திருந்தார் அவர் கழிப்பறை செல்லவும் படிகளில் ஏறவும் நாங்கள் கைபிடித்து உதவ வேண்டி இருந்தது. கணவனும் மனைவியுமாக இருவரும் அரசுப் பணியாளர்கள் என்பதால் இரு குழந்தைகளுடன்  வந்து குடும்பமாக தங்கியிருந்தனர்  இருவர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த வயிற்ரை கைகளால் தாங்கி பிடித்துக்கொண்டபடியே இருந்த  ஒரு இளம் பெண்ணுமிருந்தார் இப்படி ஏராளமானவர்களை கவனிக்க முடிந்தது.

ஒரு பேராசிரியர் ஸ்விக்கியில் அனுப்பாணை பிறப்பித்து சிக்கன் பிர்யாணி வாங்கி சாப்பிட்டுக்கொண்டுபோனில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருக்கையில் அவரது மனைவி அழைக்க இவர் அலட்டிக்கொள்லாமல் ‘’நான்தான் பூத்தில் முக்கிய வேலையில் இருப்பேன் ரெண்டு நாளைக்கு கூப்பிடாதேன்னு சொன்னேன்னில்ல. இப்போ ஒட்டுப்போட ஜனங்க கூட்டமா நிக்கறாங்க, உன்கிடே பேசிட்டு இருக்க முடியுமா’’ என்று கோபமாக கேட்டதும் மறு முனை அவசரமாக துண்டிக்கப்பட்டது. எங்களை பார்த்து கண் சிமிட்டிவிட்டு’’ 1 மாசமா தேர்தல் பணி, தேர்தல் பணின்னு புலம்பிட்டு இப்போ கலயாண மண்டபத்தில் பிரியாணி சாப்டுட்டு இருக்கேன்னு சொல்ல முடியாதில்ல ‘’ என்றார்.

 தேர்தல் பணிக்கு வந்து இருப்பவர்களுக்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், நியாயமான  காரணங்களின் பெயரில் அவர்களுக்கு பணியிலிருந்து விலக்களிக்கவும்  அதிகாரிகளுக்கு நேரமிருக்கவில்லை என்பது மிகப்பெரிய விளைவுகளை பின்னர் உருவாக்கும்  என நான் எதிர்பார்த்தபடியே தேர்தலுக்குப் பிறகு நோய் தொற்று பல மடங்கு ஆகியிருக்கிறது 

 நான் பணிபுரியும் கல்லூரியிலேயே தேர்தல் பணியாற்றி வந்த பல ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது

நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகிலேயே ஒரு ஆரம்பப் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன இங்கிருந்து வாக்குச்சாவடி நிகழ்வுகளை பார்க்க முடிந்தது வாக்குப்பதிவு நடைபெறும்  அறைக்கு முன்பு மட்டுமே சமூக இடைவெளி்யுடனான அடையாளப்படுத்திய  வட்டங்களுக்குள் வாக்காளர்கள் நின்று வாக்களித்தனர்

 வாக்குச்சாவடிக்கு வெளியே இரண்டு சுகாதாரத் துறை அலுவலர்கள்  உடல் வெப்ப பரிசோதனை செய்து  கைகளுக்கு சானிடைசர் களையும் பிளாஸ்டிக்கை உ்றையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிளாஸ்டிக் கையுறைகளை ஓட்டு போட்ட பிறகு அங்கிருந்த குப்பைத்தொட்டியில் கழற்றி போட்டு விட்டு செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது பிளாஸ்டிக் இல்லாத பிரதேசங்களான நீலகிரி போன்ற இடங்களில் இந்த பிளாஸ்டிக் கையுறைகள் கடினமான ஆட்சேபத்திற்கும் கண்டனத்துக்கும் உள்ளானது

 ஆனால் தேர்தல் கமிஷன் இந்த புகார்ளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை வாக்களிக்க நின்ற பத்து பதினைந்து பேரை தவிர வாக்குச்சாவடிக்கு வெளியே அனைவரும் முகக்கவசம் இல்லாமல் தகுந்த சமூக இடைவெளி இல்லாமல் தான் காணப்பட்டனர்

 இவர்களை சொல்வானேன் பரப்புரையின் போது தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும்,  பொது மக்களும், கட்சியினரும் யாருமே சமூக இடைவெளியை, முக கவசம் உள்ளிட்ட முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொஞ்சம்கூட கவனத்தில் கொள்ளவே இல்லை

  தேர்தல் முடிந்து இரண்டாம் நாளிலிருந்து மறுபடியும் அமல்படுத்தப்பட்டிருக்கும் தளர்வுகளுடனான் ஊரடங்கினால் எந்தப் பயனும்  இல்லாத அளவிற்கு பெருந்தொற்று வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது

     வாக்குப்பதிவு பகல் ஒரு மணிவரை மிக மந்தமாகவே நடந்தது மதிய உணவின் போது 50 சதவீதம் மட்டுமே வாக்கு பதிவு நடந்து இருந்து தமிழகம் முழுவதும் 6 மணியிலிருந்து 7 மணி வரை நோய் தொற்று உள்ளவர்கள் வாக்களிக்கும் சமயம் என்பதால் வாக்குச்சாவடி அதிகாரிகள் முழு கவச உடை அணிந்து தயாராக காத்திருந்தனர் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைவான எண்ணிக்கையிலேயே தொற்று உள்ளவர்கள் வாக்களித்தனர்.  பிரபல கட்சி தலைவரின் மகள் மருத்துவ மனையிலிருந்து முழு கவச உடையில் வந்து வாக்களித்தார்.

மிகவும் கவனிக்க வேண்டிய இன்னொன்றும் இந்த தேர்தலில் நடந்து இருக்கிறது. மனநல பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாமா ? என்ற ஒரு கேள்வி எழுந்ததால் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திலிருந்தவர்களில் அரசியல் புரிதல் உடையோர், கட்சிகள், வேட்பாளர்கள், சின்னங்கள் குறித்து தெரிந்தவர்கள் ஆகியன குறித்து மருத்துவ நிபுணர் குழுவினர் பரிசோதனை செய்ததன் அடிப்படையில், 56 ஆண்கள், 28 பெண்கள் என மொத்தம் 84 பேர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வாக்களித்துவிட்டு வரும் போது அவர்களிடம் நிருபர்கள் கேட்ட சமகால பிரச்சனைகளான petrol diesel உயர்வு பற்றிய கேள்விகளுக்கெல்லாம் பொருத்தமான பதிலை கூறினார்கள். வாக்களிக்காமல் இருந்த அந்த 28%பேருக்கு இந்த செய்தி ஒருவேளை குற்றவுணர்வை தருமோ என்னவோ?

https://react.etvbharat.com/tamil/tamil-nadu/city/chennai/mentally-retarted-persons-voted-for-a-first-time-in-assembly-election/tamil-nadu20210406191859062

ஒரு வாக்குச்சாவடியில் முழுக்க பெண்களே பணியிலிருந்தார்கள் அந்த வாக்குச்சாவடி மட்டும் மலர்களாலும் வண்ண வண்ண பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இன்னும் சில சுவாரசியமான மற்றும் வேதனையான விஷயங்களும் நடந்தன.. ஒரு முதியவர் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வெளியே வந்து வாக்குச்சாவடி வாசலிலேயே மாரடைப்பினால் உயிரிழந்தார்.

 பச்சிளம் குழந்தையுடன் வந்த இளம் தாயிடமிருந்து காவலர் குழந்தையை வாங்கி வைத்துக்கொண்டு அவர் வாக்களித்துவிட்டு வரும் வரை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தா. ர் ஆந்திராவில் இருந்து வந்திருந்த சர்க்கரை நோயாளியான காவலர் ஒருவர்  உணவு ஏதும் அளிக்கப்படாததால் மயக்கம் போடும் நிலைமைக்கு வந்து விட்ட பின்னர் வாக்களிக்க வந்த ஒருவர் அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்து திரும்ப கொண்டு வந்து விட்ட மனிதாபிமானமிக்க செயலும் நடந்தது

 பல முதியவர்களும் மாற்றுத்திறனாளிகளும் சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சக்கர நாற்காலிகள் அளிக்கப்படாத வாக்குச் சாவடி ஒன்றில் மாற்றுத்திறனாளியான ஒரு இளம்பெண் படிகளில் தவழ்ந்தே சென்று வாக்களித்தார். ஒரு வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து வாக்களிக்க வந்த பொதுமக்களில் 5 பேர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்

பல வாக்குச்சாவடிகளில் இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு சில மணி நேரம் தடைபட்டது ஒரு பிரபல வேட்பாளர் விவிபேட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்னும் சின்னத்தை 7 நொடிகள் காண்பிக்கும் இயந்திரத்தை சரியாக கவனிக்காமல் தான் வாக்களித்த சின்னம் அதில் வரவில்லை என்று அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கி அவரை சமாதானப்படுத்த சில மணி நேரங்கள் தாமதமானது.

இன்னும் சில இடங்களில் கட்சி சின்னங்களை எதை அழுத்தினாலும் வேறு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே ஓட்டு விழுவதாக புகார்கள் வந்து வாக்குப்பதிவு தடைபட்டது. பல கிராமங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உபயோகிக்க தெரியாமல் பொதுமக்கள் தடுமாறினர் 

குறிப்பாக பேலட் பாக்ஸ் எனப்படும் வேட்பாளர்களின் சின்னங்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருக்கும் அந்த இயந்திரத்தில் எந்த பொத்தானை அழுத்துவது என்று தெரியாமல் சின்னங்கள் ஒட்டப்பட்டு இருக்கும் இடத்தில் அழுத்தியபடி பலர் தடுமாறுவதும் பிறகு அதிகாரிகள் உதவுவதுமாக வழக்கமான குழப்பங்களும் நடந்த வண்ணமே இருந்தன 

உடன் பணியாற்றுபவர்கள் இதுபோன்ற வாக்குச்சாவடி நிகழ்வுகளை அலைபேசியில் பகிர்ந்ததால் கேட்டுக் கொண்டே இருந்தோம் எங்களைப் போலவே பல இடங்களில் ரிசர்வ் தங்கியிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குச் சாவடியில் பணியில் இருந்தவர்களுக்கும்  உணவு குடிநீர் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

 அதிகாலையிலேயே குளித்துவிட்டு மண்டபத்துக்கு வெளியில் ஒரு நாள் முழுவதும் அங்குமிங்குமாக அமர்ந்தபடியே இருந்து பெண்கள் சிறூ குழுவாக குடும்பக் கதைகளை பகிர்ந்து கொண்டும், ஆண்கள் பெரிய குழுவாக வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள் இரவு ஒரு மணிக்கு கூட தூங்குபவர்களை எழுப்பி வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றார்கள் தேர்தல் அன்று மாலை 3 மணி வரை கையில் வெள்ளைத்தாளுடன் அதிகாரிகள் வருவதும் பெயர்களை வாசித்து ஒவ்வொருவராக கூட்டிச் செல்வதும் நடந்துகொண்டே இருந்தது 

 தேர்தல் நேரம் முடிந்தவுடன் கல்யாண மண்டபத்துக்கு அதிகாரிகள் வந்து எங்களுக்கான சன்மானத்தை கவரில் வைத்து கொடுத்து ஒவ்வொருவராக அனுப்பினார் சன்மானமாக அளிக்கப்பட்ட சில நூறு ரூபாய்களை  வாங்கிக்கொண்டோம்

  இந்தியாவில் தேர்தல் என்பது திருவிழாதான் இனி வரப்போகும் ஐந்து ஆண்டுகளுக்கு இத்தனை நெருக்கடியில் இருக்கும் தமிழகம் இனி யாருடைய ஆட்சியின்கீழ் இருக்கப்போகிறது என்பதை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் இந்த பெரும் தொற்று காரணமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக நடக்காததால் நிச்சயம் அதன் விளைவுகள் மிகப் பெரிதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம்

 மேலும் பல தேர்தல்களில் நான் பணியாற்றி இருப்பதால் வாக்குப்பதிவு மிக அதிகமாக நடக்கும் பொழுது அது ஆளும் கட்சிக்கு எதிரான முடிவை கொண்டு வரும் என்றும் தேர்தல் மந்தமாக நடந்தால் இப்போதுள்ள ஆட்சியை நீடிக்கும் என்பது பொதுவாக பணியாற்றும் எங்களின் அனுமானம் இப்பொழுதும்  72 சதவீதம் மட்டுமே மொத்த வாக்குப்பதிவு என்பதால்  நான் அப்படியே தான் அனுமானிக்கிறேன் 

 நான் தங்கியிருந்த இடத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு வீடு வந்து சேர்ந்து உறங்கி எழுந்த பின்னர் ஊடகங்களில் வந்திருந்த காணொளிகள் பெரும் அதிர்ச்சி அளித்தன பிழைகள் ஏதும் நடக்காமல் ஒரே ஒரு ஓட்டு எண்ணிக்கை கூட  குறையவோ கூடவோ இருக்கக்கூடாது , தவறு நடந்துவிடக் கூடாது என்று திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாகச் சொல்லி கடுமையான பயிற்சிகள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன.

 நான் பணிபுரியும் கல்லூரியிலேயே ஒரு மாதத்துக்கு முன்னரே தேர்தல் பணிக்கான இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன அங்கிருந்துதான் அவை தமிழகத்தின் பள்ளிகளுக்கு  எடுத்துச் செல்லப்பட்டன

 ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள் ஒரு கண்டெய்னர் லாரி முழுவதும் வாக்கு இயந்திரங்கள் எந்த ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதும் தேர்தல் கமிஷனால் அமர்த்தப்பட்ட இரு ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் சென்று  அவை சாலையில்  தவறி விழுந்து அங்கு  பொது மக்கள் ஒரு சிறு கும்பலாக கூடி எப்படி இந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இப்படி போலீசாரின் பாதுகாப்பு இல்லாமல் அவர்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று பெரிய சண்டையும் சச்சரவும் ஆன காணொளிகள் பெரும் அதிர்ச்சியை அளித்தது

 அரசு ஊழியர்களுக்கு அத்தனை பயிற்சி  அளித்து அத்தனை சிரமங்களுடன் நாங்கள் பணியாற்றி வந்த பின்னர்  எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் எந்த ஆவணங்களும் இல்லாமல் ஓட்டுப் பெட்டிகள் இப்படி வெளியே எடுத்து வர முடியும் என்றால் எதன் பொருட்டு நாங்கள் இத்தனை பயிற்சி எடுத்துக் கொள்கிறோம் என்று புரியவில்லை 

மே இரண்டாம் தேதி ஓட்டு எண்ணிக்கை இந்த தேர்தலிலும் பறக்கும் படையினரின் கண்காணிப்பையும் மீறி வாக்காளர்களுக்கு பணமும் பரிசுகளும் அளிக்கபட்டிருக்கின்றன. பணம் பத்தும் செய்யும் அறம் ஏதேனும் செய்யுமாவென்று காத்திருந்து பார்க்கலாம்

சுல்தான்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம் சுல்தான். தமிழிலும் தெலுங்கிலும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக  இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது

  ஆக்‌ஷன் த்ரில்லர் என்ற ஜானரில் எடுக்கப்பட்டதாக  சொல்லபட்டிருந்தாலும் கார்த்திக்கு பிடித்தமான, வழக்கமுமான  குடும்ப செண்டிமெண்ட் படம்தான் இதுவும்

தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்

 லால். யோகி பாபு, பொன்வண்ணன் மற்றும் ராமச்சந்திர ராஜு முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இசை விவேக்- மெர்வின் இணை. பின்னணி இசை மட்டும் யுவன் ஷங்கர் ராஜா. ஒளி இயக்கம் சத்தியம் சூரியன், படத்தொகுப்பு ரூபன்.  

நூற்றுக் கணக்கான அடியாள்களுடன் வாழும் தாதா நெப்போலியன், அவர் மனைவி அபிராமி. அபிராமி  விக்ரம் என்கிற சுல்தானை பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார். தாதாவான அப்பாவுடனும் அடியாட்களுடன் வளரும் தாயில்லாப்பிள்ளை கார்த்தி பின்னர் ரோபோடிக்ஸ் படிக்க வெளிநாடு செல்கிறார்.

படிப்பு முடிந்து விடுமுறையில் ஊர் திரும்பும் சுல்தானுக்கு திடீரென நிகழும் அப்பாவின் மரணத்தால், அப்பாவை நம்பியிருந்த அடியாட்களையும், இறக்கும் தருவாயில் பொன்வண்ணன் கிராமத்து  பிரச்சனையை தீர்ப்பதாக அப்பா செய்து கொடுத்திருக்கும்  வாக்கை காப்பாற்றும்  தார்மீகப் பொறுப்பும் ஏற்படுகிறது.

அடியாட்களை திருந்திய குமரர்களாக்கும் முயற்சியில் சுல்தான்  வெற்றி பெற்றாரா, பொன்வண்ணன் கிராமத்து பிரச்சினைகளை அப்பா வாக்கு கொடுத்தபடி அவரால் தீர்க்க முடிந்ததா, என்பதும், இடையில் ஏற்படும் காதலும்தான் மொத்த கதையும்.

 கார்த்தியின்  படங்கள் எல்லாம் தெலுங்கு மொழி மாற்றப் படுவதால் அவருக்கு என்று தெலுங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இது தெலுங்கு பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கிறது. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் அக்மார்க் தெலுங்கு ரகம். ராஷ்மிகாவுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை, அழகாக வருகிறார், சிரிக்கிறார், உதட்டை சுழித்து கொள்கிறார், இனிமையான பாடல்களில் வருகிறார் அவ்வளவே.

 யோகிபாபு சமீபத்திய தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விட்டிருக்கிறார் எந்த திரைப்படம் ஆனாலும், எந்த பட்ஜெட் ஆனாலும் யோகிபாபுவின் அடர்ந்த சுருட்டை முடித்தலை  தெரிகின்றது.

  தெலுங்கு வாசனையுடன் தமிழ் பேசும் அந்த பிரதான வில்லன் ராமச்சந்திர ராஜூ உட்பட பல வில்லன்களின்  அழகாக சுருண்ட அடர்ந்த கேசத்தை பார்க்கையில் எந்த  எண்ணெயை தலையில் தேய்க்கிறார்கள்  இவர்களெல்லாம் என்று கேட்கத் தோன்றுகிறது.

 ஜீப்பும், அடியாட்களுமாக    லோக்கல்  வில்லன் ஒருவர்,  அவருக்கு மேலே 10,000 கோடிகளில் பிசினஸ் செய்யும் கோட் போட்ட,விமானத்தில் வந்திறங்கும் இன்னொரு  கார்ப்பரேட் வில்லன், ஒற்றை ஆளாக அத்தனை பேரையும் அடித்து அழிக்கும் கதாநாயகன், அவர் விரும்பும், சின்ன ரோல் பண்ணும் ஒரு கதாநாயகியுமாக வழக்கமான தமிழ் தெலுங்கு மசாலா கதை தான்.  சமீபத்திய  கார்த்தி அவரது அண்ணன் சூர்யா படங்களை போலவே இதிலும் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.

சுல்தானின் பாதுகாவலராக வரும் பிரம்மாண்ட நடிகர்    ஜன்சீர் முன்பு குழந்தைகளுக்கான ஒரு தொடரில் நடித்தவர் என்பதால் குழந்தைகளுக்கும்  இப்படம் பிரியமானதாகிவிட்டது.  

சுல்தான் என்னும் தலைப்பை இந்து முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனமும் ஆட்சேபமும் தெரிவித்ததால், படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன பின் படக்குழுவினர் திப்பு சுல்தானை குறிப்பிடவில்லை இது ஒரு சாதாரண வழங்கு பெயர் தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள். 

 அனிருத் குரலில் ’’ஜெய் சுல்தான்’’ மற்றும்  ’’யாரையும் இவ்வளவு அழகா’’ பாடல்கள் சிறப்பு. அதிலும் சிலம்பரசனின் குரலில்’’யாரையும் இவ்வளவு அழகா’’ இனிமை.

 கார்த்தி உடல எடையை குறைக்கவேண்டும்.  பல லாங் ஷாட் காட்சிகளில் சிவக்குமாரோ என்றே சந்தேகம் வருகின்றது. ஒரு வருடங்களுக்கு மேலாக  நோய்த் தொற்றினால் மூடிக்கிடந்த திரையரங்குகளில் சமயத்தில் வெளியிடப்பட்டவைகளில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்னும் ரகத்திலான திரைப்படம் சுல்தான்.

குங்குமப்பூவே!

 கிராமங்களால்  சூழப்பட்டிருக்கும்   சிறு  நகர்களில்  மகப்பேறு  மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகளுக்கும் அருகிலிருக்கும் சின்ன  சின்ன  மருந்தகங்களில்  கர்ப்பிணி பெண்கள்  குங்குமச்சிமிழ்  போன்ற  சிறு   பெட்டிகளில்  700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம்  குங்குமப்பூ வாங்கி செல்லுவதை  சாதாரணமாக  காணலாம்.

உண்மையில்  இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் செல்லுவது  குங்குமப்பூவே  அல்ல, அவை பெரும்பாலும்  உலர வைக்கப்பட்ட பீட்ரூட் துருவல்களாகவோ அல்லது சாயமேற்றப்பட்ட பெருஞ்சாமந்தி மலரிதழ்களாகவோ தான் இருக்கும். அரிதாகவே அசல் என்று மேலும் அதிக விலைக்கு  விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைப்பதில்,   குங்குமப்பூவின் சூலகமுடிகளின் அடிப்புகுதி சிறிதளவு இருக்கலாம்

 இப்படி போலிகளை  விற்பதும் வாங்குவதும் முட்டாள் தனம் என்றால்,   கர்ப்பிணிகள்   குங்குமப்பூ  சாப்பிட்டால்  குழந்தை குங்குமப்பூவின்  நிறத்தில் இருக்கும் என்னும் நம்பிக்கை அதைக்காட்டிலும்  முட்டாள் தனமானது.  குங்குமப்பூ  குறித்தும்,  அதன் நன்மைகளை, அதிகம் உட்கொண்டால் உண்டாகக்கூடிய உடல் உபாதைகளை,  ஆபத்துக்களை,  அசலையும்  போலியையும்  பிரித்தறியும் முறைகளையெல்லாம்  அறிந்து கொள்வது  அவசியமாகிவிட்டிருக்கிறது.

குங்குமப்பூ மிகவும் சுவாரஸ்யமான ஒரு தாவரம். இது ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக. அதன்  நிறம், சுவை, மணம், பயன்கள் மற்றும்  அறுவடைக்கு  செலவழிக்கபப்டும் நேரம் ஆகியவற்றின் பொருட்டு   உலக வரலாறு  முழுவதும்  போற்றப்படுகிறது.

 அகழ்வாய்வுகளில் 50 ஆயிரமாண்டுகளுக்கு முன்பு குங்குமப்பூ சாயமேற்றப்பட்ட பொருட்களின் எச்சங்கள் மேற்கு ஈரானில் கண்டறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள் குங்குமப்பூ கலக்கப்பட்ட  பானங்களை மந்திர தந்திரங்களுக்கும் , பூசனைகளுக்கும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர். பண்டைய பெர்சியாவில் தெய்வங்களுக்கும அரச குடும்பத்தினருக்குமான உடைகளனைத்தும் குங்குமப்பூ சாயமேற்றப்பட்டன.

மாவீரர் அலெக்ஸாண்டர் தனது போர் காயங்களுக்கு பெர்ஷியாவின் குங்குமப்பூவை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார்.  கிளியோபாட்ரா  தன்  கன்ன  மேடுகளுக்கு   குங்குமப்பூக்களால் செம்மையூட்டியதையும், ரோமானியர்கள் குங்குமப்பூ இழைகளால் நிரப்பப்பட்ட தலையணைகளில் படுத்துறங்கியதையும், குளியல் தொட்டிகளில் குங்குமபூக்களிட்டு  செஞ்சிவப்பு நீரில்  குளித்ததையும்  வரலாறு  சொல்லுகின்றது.

பாலில் குங்குமப்பூ கலந்து அருந்துவது பாலுணர்வை தூண்டும் என்பதால் புதுமணத் தம்பதிகளுக்கு பல கலாச்சாரங்களில் இப்பானம் அளிக்கப்பட்டு வருகின்றது..

 மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில்  ஒன்றான  குங்குமப்பூ      எனப்படும்  இந்த சாஃப்ரன் (saffron)  குரோக்கஸ் சடைவஸ்  (Crocus sativus),  என்னும்   இரிடேசீயே   (Iridaceae)  தாவரக் குடும்பத்தைச்  சேர்ந்த  பல்லாண்டுத் தாவரம்.   இது  சிவப்புதங்கம்,  (Red Gold)  எனவும்  அழைக்கப்படுகின்றது..  saffron என்னும் பிரெஞ்சு மொழி சொல்லின், வேர் அரபி மொழியில்  ’மஞ்சள்’  என  பொருள்படும்  லத்தீன் சொல்லான safranum என்பதில் இருக்கிறது

 மத்தியதரைக் கடல்   பகுதிகளிலும் அவற்றை ஒத்த , உலர்ந்த கோடைத் தென்றல் வீசும் பகுதியிலும் அதிகமாக வளரும் இவை உறைபனி களையும், குளிர் மிகுந்த  பனிக்கட்டி  மூடியிருக்கும் சூழலையும் தாங்கி வளரக்கூடியவை. 

குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000  ஆண்டுகளுக்கு முற்பட்டது.  காட்டு குங்குமப்பூ- wild saffron,  குரோக்கஸ் கார்ட்ரைட்டியானஸ்  (Crocus cartwrightianus)     செடியை  இனவிருத்தி மற்றும் கலப்பினம் செய்ததன் மூலம்  நீளமான சூலக முடிகளை (Style )  கொண்ட  இப்போது  அதிகம் பயிரிடப்படும் Crocus sativus  செடி  உருவாக்கப்பட்டது.  முன்னூறு அல்லது  நானூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  அரேபியாவிலும்  ஸ்பெயினிலும்  துவங்கிய குங்குமப்பூ சாகுபடி   பின்னர்  மெதுவாக  ஈரான்,   இந்தியா,  ஸ்வீடன்  நாடுகளுக்கு பரவியது.   

குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருட்களை கொண்ட, தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர் பாய்ச்சப்பட்ட,   சுண்ணாம்பு  நிறைந்த களி மண்  வகைகள் (clay-calcareous)  உகந்தவை.  நல்ல  சூரிய ஒளியில்  அவை மிகச்சிறப்பாக  வளர்வதால்,  சூரிய ஒளியை  நோக்கி சரிவாக  அமைந்த  நிலப்பகுதிகளில்  பாரம்பரியமான  மேட்டுப்பாத்தி  முறையில் இச்செடிகள் பயிர் செய்யப்படுகிறது   

குங்குமப்பூ சாகுபடிக்கு வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் மிக உகந்தவையாகும்.  இவற்றின் இள ஊதா நிறப் பூக்கள்  முளைக்கும் திறன் உள்ள  விதைகளை  உருவாக்குவதில்லை  அதனால்  நிலத்துக்குக்  கீழே இருக்கும்  பழுப்பு  நிறமான  4.5 செ.மீ   அளவுள்ள   குமிழ்  போன்ற  தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து நட்டு வைப்பதன் மூலம் இவற்றை பயிரிட முடியும்.. ஒரு கிழங்கை உடைத்து, பிரித்து நடுவதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட  புதிய தாவரங்களைப் பெறலாம்

கோடை காலத்தில்  உறக்க  நிலையில்  உள்ள தண்டுக்கிழங்குகள்,  இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இவை அக்டோபர் மாதத்தில்,பல மென் வரிகளைக்  கொண்ட சாம்பல்  கலந்த ஊதா நிறமுடைய  பூக்களை  உருவாக்கும்..  பூக்கும்  காலத்தில்  இந்தத்  தாவரங்களின்  சராசரி உயரம் 30 சென்டி மீட்டருக்கும்  குறைவாக  இருக்கும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழைப் பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை  ஊக்குவித்து அதிகமாக்குகிறது

இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடை மிக வேகமாக நடக்கும்.

 3 அல்லது 4 நாட்கள் வரையே   உதிராமல்  இருக்கும்  மலர்களை கைகளால் பறித்து,  கூடைகளில் சேகரித்து,  குறிப்பிட்ட வெப்ப நிலையிலிருக்கும் அறைகளின் கூரையிலிருந்து தொங்க விடுவார்கள். மலர்கள் உலர்ந்ததும் சூல் முடிகள்  கவனமாக  பிரித்தெடுக்கப்படும்.  இந்த தயாரிப்புக்களே ஏறக்குறைய ஒரு வாரகாலம் நடக்கும்

ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகள் உடைய சூல் தண்டுகள்  (style)   உருவாகின்றன . அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ  அளவில்  கருஞ்சிவப்பு  நிறமுள்ள  சூலகமுடிகள் (stigma)  காணப்படுகின்றன.  பூ  என  பொதுவில்  அழைக்கப்பட்டாலும்  உண்மையில் இந்த  சூல் முடிகளே  குங்குமப்பூ  என  அறியப்படுபவை.  தனித்த   உலர்ந்த  சூலகமுடியின்.  நீளம் சுமாராக 20 மி.மீ இருக்கும்.

 குங்குமப்பூவின், உலர்ந்த வைக்கோல் போன்ற மணத்திற்கும், நிறத்திற்கும், சுவைக்கும் மருத்துவ குணங்களுக்கும் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்களும் பல ஆவியாகாத செயல்மிகு வேதிக் கூறுகள் உள்ளன.

 இவற்றில் ஜியாஸேந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள்  ஆகியவை  முக்கியமானவை.  குங்குமப்பூவின்  தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு  நிறத்திற்கு   ஆல்ஃபா (α) குரோசினும்.   கசப்பான சுவைக்கு  குளுக்கோசைட்டு  பிக்ரோகுரோசினும் காரணமாகும்.  உலர்ந்த குங்குமபூவில்  65%  கார்போஹய்ட்ரேட்டுக்களும்,   6% கொழுப்பும்,  11% புரதமும் இருக்கும்.. உலர்ந்த குங்குமப்பூவை, வளிமண்ட ஆக்ஸிஜனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு  காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்

 150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் மட்டுமே  கிடைக்கின்றன.  ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள்  தேவைப்படுகின்றது.  இது ஒரு கால்பந்து  மைதானத்தின்  பரப்பளவில்  மேற்கொள்ளப்படும்   பயிரிடுதலுக்குச் சமமானது மேலும் 150,000 பூக்களை கைகளால்  பறிப்பதற்கு  நாற்பது  மணிநேரம்  வேலை செய்ய வேண்டியுள்ளது.

 பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே  தரமான புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.

உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. ஸ்பேனிஷ் சுபீரியர்’ (Spanish Superior) என்றும், ‘கிரீம்’ (Creme)  என்றும்  வணிகப்பெயர்களைக்  கொண்ட வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை

அதிக சாஃப்ரானல்,, வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் ,அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது இத்தாலியின் “அக்குய்லா” குங்குமப்பூ (zafferano dell’Aquila),  மற்றொன்று   காஷ்மீரி  “மாங்ரா”  அல்லது “லசா” குங்குமப்பூ (crocus sativus kashmirianaus).   குங்குமப்பூவில்  முதல்தரம்  சாகி,  என்றும் இரண்டாம்தரம்  மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சா என்றும் அழைக்கப்படுகின்றது

ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்.  ஈரான் உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது  நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து இயற்கை உரமிட்டு வளர்க்கப்படும் பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் கிடக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron)  சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.

நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 2 லட்சம் இந்திய ரூபாய்கள்).  

இந்திய குங்குமப்பூ

குறிப்பிடத்தக்க சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம்  கொண்ட காஷ்மீர்  குங்குமப்பூ  வகை  உலகின்  அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது . இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூ சாகுபடிக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள  குங்குமபூ நகரமென்றூ அழைக்கபடும் பாம்போர் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது.  இந்தியாவில் குங்குமப்பூ பயிரடப்படும் சுமார் 5,707 ஹெக்டேர் நிலபரப்பில்  ஆண்டுக்கு 16 ஆயிரம் கிலோ குங்குமப்பூ கிடைக்கின்றது. இதில்  4,496  ஹெக்டேர்கள்    ஜம்மு  காஷ்மீரில்  மட்டும் இருக்கின்றது.  

உலகெங்கிலும் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட உணவு வகைகளும் பானங்களும் இனிப்புக்களும் வெகு பிரபலம், காஷ்மீரில் குங்குமப்பூ, பட்டை, ஏலக்காய் கலந்து நறுக்கிய  பாதாமினால் அலங்கரிக்கபட்ட கெவா ( kehwa ) என்னும்  பச்சைத்தேநீர் வெகு பிரசித்தம்

kehwa

சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும்உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குங்குமப்பூ ஆஸ்த்மா, இருமல், தூக்கமின்மை, இதய நோய் மற்றும் சருமப்பாதுகாப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

1959ல் மரகதம் என்னும் திரைப்படத்தில் அரிதான, விலைமதிப்பற்ற, தங்கத்திற்கு இணையான குங்குமபூவுடன் காதலியை ஒப்பிட்டு ஆர் பாலு வரிகளில் ’’குங்குமபூவே’’ என்னும் பாடலை சந்திரபாபு பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் அதற்குப் பிறகு குங்குமப்பூ எந்தப்பாடலிலுமே இல்லையென்றே நினைக்கிறேன். இந்திய தேசியக்கொடியின் மூவர்ணங்களிலொன்றூம், புத்த துறவிகளின் உடைகளும் குங்குமபூவின் காவி நிறமே.

  பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் குங்குமப்பூவில் அதிகம் கலப்படமும் உள்ளது. மாதுளம் தோட்டின் உட்புறமிருக்கும் நார்களையும், சிலவகை  புற்களையும்,  பீட்ரூட் துருவல்களையும் சாயமேற்றியும் , marigold  எனப்படும்  துளிர்த்தமல்லியின்  இதழ்களை காயவைத்தும், கலப்படங்களும்,  குங்குமப்பூ போலிகளும் சந்தைப்படுத்தப் படுகின்றது.

குங்குமப்பூவின் கலப்படத்தை எளிதில் கண்டுகொலலாம். அசல் குங்குமப்பூ ஆழ்ந்த சிவப்பு நிறத்துடன்,   வைக்கோல் அல்லது மண் வாசனையும், மென் கசப்புச்சுவையும்   கொண்டிருக்கும்.  விரல்களுகிடையில்  வைத்து  சில  இழைகளை  நசுக்கி  தேய்க்கையில் விரல்களில் பொன் மஞ்சள் நிறம் படிந்தால், அது அசல் குங்குமப்பூ. தூய நீரில் எளிதில் கரைந்து நிறமிழந்து வெளிறிப்போகாமல்,  நீர்  பொன்மஞ்சளாக  மெல்ல மெல்ல நிறம் மாறூகையில் இழைகள் நிறமிழக்காமலிருப்பதும் அசலே. அசல் குங்குமப்பூவின் ஒவ்வொரு இழையின் நீளமும் ஒரே அளவில் இருக்காமல்  ஒரு நுனி சற்றுப் பெரிதாக இருக்கும்

கர்ப்பிணிகள் குங்குமப்பூ உட்கொண்டால் பிறக்கும் குழந்தையின் சரும நிறம் மேம்படும் (அதாவது சிவப்பாகும்) என்பது எந்த அறிவியல் ஆதாரமுமில்லாத,  தொன்று தொட்டு நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கை. குழந்தைகளின் சரும நிறம் பெற்றோர்களின் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கபடுகின்றது.

குங்குமப்பூவில் இருக்கும் வேதிச்சேர்மங்கள் கருப்பையை சுருங்கி விரியச்செய்யும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துவங்கி  வைக்கும் குணம் கொண்டவை (oxytocic).  எனவே  குங்குமப்பூவை தொடர்ந்து அதிகமாக  உட்கொள்கையில் கருக்கலைப்பும் சிறுநீரக செயலின்மையும் ஒருநாளைக்கு 20 கிராமுக்கு  அதிகமாகையில்  உயிரழப்பும்   கூட  ஏற்படும் ஆபத்துள்ளது. குங்குமப்பூவுக்கு ISO தரக் கட்டுப்பட்டு நிரணயமிருப்பதால் அசலை கண்டறிந்து வாங்கவேண்டும்.(  ISO 3632)

Coming 2 America

Coming 2 America  2021 ஆம் ஆண்டு  வெளியாகியிருக்கும் அமெரிக்க  நகைச்சுவைத் திரைப்படமாகும், இது 1988’ம் ஆண்டின் எடி மர்பி நடித்த coming to America  திரைப்படத்தின் தொடர்ச்சி.  திரைக்கதை ;கென்யா பாரிஸ், பாரி டபிள்யூ. ப்ளாஸ்டீன் மற்றும் டேவிட் ஷெஃபீல்ட் .இயக்கம்; கிரெய்க் ப்ரூவர். கெவின் மற்றும் எடி மர்பி தயாரிப்பு.  எடி மர்பியுடன் முதல் பாகத்தில் நடித்த பலர் இதிலும் அதே பாத்திரங்களின் தொடர்சியாக நடித்திருக்கின்றனர். மிகத்தாமதமான இரண்டாம் பாகம்.

 ஆர்செனியோ ஹால், ஜெர்மைன் ஃபோலர், லெஸ்லி ஜோன்ஸ், ட்ரேசி மோர்கன், கிகி லெய்ன், ஷரி ஹெட்லி, தியானா டெய்லர், வெஸ்லி ஸ்னைப்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஆகியோர்  இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். எடி மர்பியின் மகள் பெல்லா மர்பி அகீமின் இரண்டாம் மகளாக இதில் அறிமுகமாகியிருக்கிறார். Coming to America’வை தழுவி தமிழில் எடுக்கபட்ட மை டியர் மார்த்தாண்டனின் இரண்டாம் பாகம்தான் இது

 படத்தின் விநியோக உரிமைகள் COVID-19 தொற்றால் அமேசான் பிரைமுக்கு விற்கப்பட்டு, மார்ச் 4, 2021’ல்  படம் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியிடப்பட்டது..

மிக எளிய திரைக்கதை. ஜமுண்டாவின் இராணுவவாத அண்டை நாடான நெக்ஸ்டோரியாவால் ஜமுண்டா அச்சுறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறது.  அகீமிற்கு முதல் பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மணமகளின் சகோதரரும், அதன் சர்வாதிகாரியுமான ஜெனரல் இஸி, முன்பு தவறவிட்ட சொந்தத்தை இப்போது மீண்டும் உண்டாக்க, அகீமின் மூத்த மகள் மீகாவை தனது மகன் இடி’க்கு திருமணம் செய்து வைக்கும்படி அழுத்தம் தருகிறார்

ஜமுண்டாவின் இளவரசர் அகீம் ,லிசா மெக்டோவலுடனான அவரது திருமணத்தின் 30 வது ஆண்டு நினைவு நாளில், இறக்கும்  தருவாயிலிருக்கும் தந்தை கிங் ஜாஃப் ஜோஃபர் முன் வரவழைக்கப்படுகிறார். நியூயார்க்கின் குயின்ஸில் அவரது முதல் பயணத்தின்போது அவரறியாமலேயே ஒரு மகனுக்கு தந்தையாயிருப்பதாக  ஜாஃப்பும் அவரது ஷாமன் பாபாவும்  திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்,

 ஒரு ஆண் வாரிசு மட்டுமே அரியணையில் அமர முடியும் என்னும் ஜமுண்டியன் பாரம்பரியம், லிசா மகள்களை மட்டுமே பெற்றிருப்பதால்,  மகனை மீட்டெடுக்க குயின்ஸுக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்தை  அகீமுக்கு ஏற்படுத்துகின்றது..

கிங் ஜாஃப் உயிரிழக்கிறார், அவரது  இறுதிச் சடங்கிற்குப்பின்னர்  அகீம் மன்னரானதைத் தொடர்ந்து, அவரும் செம்மியும் குயின்ஸுக்குப் பயணம் செய்கிறார்கள், அவரது முறைகேடாக பிறந்த மகன் லேவெல் ஜான்சனையும்,.அவரது தாயார் மேரியையும் லேவெல்லின் மாமா ரீமையும் அகீம் ஜமுண்டாவுக்கு அழைத்துச் செல்கிறார், இதனால் குடும்பத்தின் அதிருப்திக்கு அகீம் ஆளாகிறார்

ஜெனரல் இஸி இதை அறிந்ததும் அடுத்த முயற்சியாக  தனது மகள் போபோடோவை லேவெல்லுக்கு மணம் செய்துவக்க முயலுகிறார், ஏழை இளைஞனான லேவெல், ஒரு அரச இளவரசனாக தகுதி பெற, அபாயகரமான சோதனைகளை சந்தித்து வெற்றி பெறவேண்டியிருப்பதும் தன்னை வெறுக்கும் அகீமின் குடுமபத்தினரின் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் ஆளாகவேண்டி இருப்பதும்தான்  கதை.

 லேவெல் படிப்படியாக அகீமின் குடும்பத்தினருடன் ஒரு புரிதலை வளர்த்துக் கொள்வது, சகோதரிகளின் அன்பைப் பெறுவது, சோதனைகளை படாதபாடுபட்டு வெல்வது, எதிர்பாராமல் அவரின் ஒப்பனைக்கலைஞரான மிரெம்பேவுடன் காதல் வயப்படுவது என முதல் பாதியின் இழை அறுபடாமல் இரண்டாம் பாதியை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு போகிறார்கள். கணினி உபயோகக்காட்சிகள் அதிகம் இருப்பது சிறார் திரைப்படம் பார்க்கும் உணர்வ்ய் வருகின்றது

  போபோடோவுடனான  திருமணத்திலிருந்து  விடுவிக்கபட்டு தந்தை அகீமின் ஆசியுடன் காதலியை லேவெல் கரம்பிடிக்கிறார் ஜாமுண்டாவின் பாரம்பரியத்தினை மாற்றி எழுதி, அகீம் தனது மகள் மீகாவை  அரியணையில் ஏற அனுமதிக்கிறார், அச்சுறுத்தலாக இருந்த ஜெனரல் இஸி, ஜமுண்டா இளவரசிகளால் வெல்லப்பட்ட பின்னர்  நட்பு நாடாக  நெக்ஸ்டோரியாவை அறிவிக்கிறார். குயின்ஸில் இருந்து அகீமின் முடிதிருத்தும் நண்பர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் அரண்மனை விருந்துடன் படம் முடிகிறது. இறுதிக்காட்சிகளுக்கு பிறகு படப்பிடிப்பின் துண்டுக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

முதல் பாகத்தில் கணினி உதவியால் வடிவமைக்கப்பட்ட ஜமுண்டா அரன்மணை இந்த பாகத்தில்   ஹிப்ஹாப் பிரபலமான ரிக்  ராஸ் என்னும் செல்வந்தருக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கரில், ஏரியுடன் அமைந்திருக்கும் மாபெரும் எஸ்டேட் மாளிகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 100 நபர்கள் அமரும் வசதியுள்ள மாபெரும் உணவு மேஜையுடன் கூடிய உணவருந்தும் அறையில் படப்பிடிப்புக்கென மாட்டப்பட்ட பிரம்மாண்ட அழகிய  சுவரோவியத்தை ராஸுக்கே படப்பிடிப்புக்குழுவினர் அன்பளிப்பாக வழங்கிவிட்டனர்.

மன்னராக நடித்திருக்கும் 88 வயதான ஜேம்ஸ் ஜோன்ஸ்  வரும் காட்சிகள் தனியாக படம்பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Akeem எனும் தந்தையின் பெயரை திருப்பி போட்டால் வரும் Meekaa வைத்தான் முதல் இளவரசியின் பெயராக  படத்தில் வைத்திருக்கிறார்கள்.

நைஜீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும்  அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றது Coming 2 America. சிங்கத்தின் மீசை முடியை நறுக்கும் காட்சியில், சகோதரனுக்கு உதவும் மீகா  நைஜீரிய தேசியக்கொடியின் பச்சை வெள்ளை நிற உடையணிந்திருக்கும் காட்சி ஏகோபித்த வரவேற்புடன் அங்கு  பார்க்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த சாமுவேல் ஜாக்ஸன் இதிலில்லை.

  தற்போது 58 வயதாகும் எடிமர்பி தன் 75 ஆவது வயதில் இத்திரரைப்படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆடைவடிவமைப்பும் ஆப்பிரிகாவின் ஆபரணங்களும் மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது

 படம் பார்க்கையில் சிரிக்கிறோமென்றாலும்  மனம் விட்டு சிரிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லை,  முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் பெரும்பாலான காட்சிகள் அதன் காப்பியைபோல இருப்பது இப்படத்தின் அசுவராசியங்களுள் ஒன்று. ஆபாசக்காட்சிகள், வசனங்கள் மிக அதிகம்.  அந்த சலூனில்  பேசப்படுபவை நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எடி மர்பி தனது இயல்பான நடிப்பினால்  சரியும் படத்திற்கு முட்டுக்கொடுக்கிறார். ஆனாலும் முதல்  அரைமணி நேரத்திலேயே பார்வையாளர்கள் மீதிப்படத்தை யூகிக்கமுடிகின்றது. இதன் இயக்குனர் கிரெய்க்கும், எடி’யும் இணந்து சென்றஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற  Dolemite Is My Name. திரைப்படத்துடன் coming 2 America வை ஒப்பிடுகையில் ஏமாற்றமே.

பொதுவில் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் சுவாரஸ்யம் குறைவான படமென்றுதான் சொல்லவேண்டும். பார்க்கலாம் வகை திரைப்படம்.அவ்வளவுதான்.  காட்சித்தொடர்ச்சிகளில். இட வலப் பிழைகளும் அகீமின் மகன் , நேர்காணலின்போது சொல்லும் வில் ஸ்மித்தின் அல்லாவுதீன் பற்றிய தகவலின் கருத்துபிழைகளும், சிங்கத்தின் மீசை முடியை வெட்டி எடுக்கும் காட்சியின் தோற்றபிழைகளும் போல பல பிழைகள்  திரைப்படத்தில் இருக்கின்றன.

மூங்கில் மிகை மலர்வு

PC Tharun

                                                                   காடு-1

பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும்  கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் காணவேண்டி அங்கேயே செல்லலாமென  முடிவானது.  ஏமாற்றத்தை தவிர்க்க முன்கூட்டியே கானுலாக்களுக்கும், கபினியாற்றிலும், கழிமுகத்திலுமான படகுப்பயணங்களுக்கும் விண்ணப்பித்தோம். வைரஸ் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்து பயணங்களை தவிர்த்து, அன்னூர்-சத்தியமங்கலம் வழி மைசூர் செல்ல வெறும் 200 கிமீதான் என்பதால்  காரிலேயே செல்ல திட்டமிட்டோம்.

புதனன்று போகிப்பண்டிகையென்பதால், எதிர்வரும் கோடைக்கால நோய்த்தொற்றுகளின் இயற்கைத்தடுப்புகளான வேம்பு மற்றும் மாவின் இலைகள், சிறுபீழை மற்றும் ஆவாரம் மலர்களாலான கொத்துக்களால்  வீடெங்கும் காப்புக்கட்டுதலை முடித்த பின்னர்,  பொள்ளாச்சியிலிருந்து அன்னூர் வழியே பயணத்தை துவங்கினோம். இந்த மாதம் முழுவதுமே  இடைவிடாத மழையானதால், அக்கம்பக்கம் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டு வயல்களும் தோப்புக்களும் நிரம்பி கடவு வழிந்தோடிக்கொண்டிருந்த சாலைகளில் குளிர் நிரம்பியிருந்தது.

அன்னூர் சத்தியமங்கலம் மலைப்பாதையின் 27 கொண்டை ஊசி வளைவுகளும் முன்பு போல் தொடர் சரக்கு லாரி போக்குவரத்தினால் இடைஞ்சல் வராதபடிக்கு நன்கு விரிவாக்கப்பட்டிருந்ததால் எளிதில் மலைஏறி இறங்கினோம்.

 சத்தியமங்கலம் மைசூரு செல்லும் வனச்சாலையின் 40 கிமீ தூரமுமே சாலையென்றே சொல்ல முடியாத வகையில் குண்டும் குழியும் கற்களுமாக இருந்தது. ஆனால் காட்டின் விளிம்பிலும், காடு முழுவதும், பல்லாயிரக்கணக்கான் மூங்கில்கள் பொன் போல் பூத்து நின்றதை பார்த்ததும் பயணத்தின் சிரமமெல்லாம் பெரிதாகப்படவில்லை. மூங்கில்கள் பூப்பது ஒரு அரிய நிகழ்வு அதுவும் ஒருவர் ஒருமுறை பார்ப்பதே அரிது. நான் இரண்டாம் முறையாக பார்க்கிறேன். 2016’ல் தாவர வகைப்பாட்டியல் பயிற்சியின் பொருட்டு சென்றிருக்கையில் கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கு, சைரந்திரி வனத்தில் மூங்கில்பூப்பை முதன்முதலாக பார்த்திருந்தேன்

மூங்கில் பூப்பதென்பது மூங்கில் அழிவதுதான். வாழ்நாளின் இறுதியில் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை பூத்துக்காய்த்து அழியும் Monocarpic வகையை சேர்ந்த மூங்கில்கள்  இப்படி சொல்லி வைத்தாற்போல  ஒட்டுமொத்தமாக 48 லிருந்து 50 வருடங்கள் கழித்து பூத்து பின்னர் ஏராளமான மூங்கிலரிசி எனப்படும் விதைகளை உருவாக்கிவிட்டு மடிந்துவிடும்.

மூங்கிற்சாவு எனப்படும் இந்த நிகழ்வு பெரும் பஞ்சத்தையும் அழிவையும் கொண்டு வருமென்று இந்தியாவின் பலபாகங்களில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால்  ஏராளமான அளவில் உருவாகும் மூங்கிலரிசியை உண்ணும் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணும் விலங்குகள் பல்கிப்பெருகி பிறதானியங்களையும் உண்ணத்துவங்கி, உண்டான உணவுத்தட்டுப்பாட்டினால் இந்தியா சந்தித்திருந்த பல பெரும் பஞ்சங்கள் விட்டுச்சென்ற கோர நினைவுகளால் இப்படியொரு நம்பிக்கையும் அச்சமும் நிலைபெற்று விட்டது. மூங்கிலின் மிகுபூப்பிற்கும் (Gregarious flowering of Bamboo) தொடரும் பஞ்சத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் எந்த தொடர்புமில்லை

 புல் குடும்பத்தை சேர்ந்த தாவரமான மூங்கிலின் 1200 வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. இவற்றில்  24 பேரினங்களின் 138 சிற்றினங்கள் இந்தியாவில் வளருகின்றன. இதில் 3 மட்டுமே அயல் தாவரங்கள் மற்ற அனைத்துமே இயல் தாவரங்கள். உலகெங்கிலுமே மூங்கில் பூப்பென்பது அரிய நிகழ்வுதான்.

 இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் 53 சிற்றினங்களும், அருணாச்சலபிரதேசத்தில் 50 சிற்றினங்களுமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த மூங்கிலின் 50 சவீதத்திற்கும் மேற்பட்ட  வகைகள் விளைகின்றன. இப்பகுதிகளில்  இசைக்கருவிகள், காகிதங்கள், தொப்பிகள். ஆயுதங்கள், மேசை நாற்காலிகள், வீடுகளின் கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்விற்கான 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மூங்கிலினால்தான் செய்யப்படுகின்றன.

 மூங்கில் குருத்தும், மூங்கிலரிசியும்  அம்மக்களின் மிக விருப்பமான முக்கியமான உணவாகும். சாப் ஸ்டிக்ஸ் எனப்படும் உணவுக்குச்சிகளாகவும், எரிவிறகாவும் மூங்கிலே இங்கு  பயன்படுகின்றது. ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானப்பணிகளில் இங்கு விளையும் உறுதியான, நீண்ட கணுவிடைவெளிகளும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும் நெடுமூங்கில்களே சாரம் கட்டப் பயன்படுகின்றன. மூங்கிலின் இலைகளும் கால்நடைத் தீவனமாக பயன்படுகின்றது.

அஸ்ஸாமிய மூங்கிலான Dendrocalamus tulda விலிருந்து செய்யப்படும் புல்லாங்குழல்தான் அங்கு கோவில் விழாக்களில் இசைக்கப்படுகின்றது. இக்குழலிசை துஷ்டசக்திகளை விரட்டுவதாக அங்கு நம்பிக்கை. நிலவுகின்றது

வடகிழக்கிந்தியாவில், மக்களின் வாழ்வுடன் இரண்டறக்கலந்துள்ள மூங்கில் பூப்பதென்பது பெரும் அபசகுனமென்றும், அழிவுக்கான அறிகுறியென்றும்  நெடுங்காலமாகவே நம்பிக்கை நிலவுகின்றது

மிசோரத்தின் மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட முள்ளி மூங்கிலிலிருந்தே (Muli Bamboo)  தொட்டில்களும், கிறிஸ்துவமதம் அதிகம் பரவியிருப்பதால் சவப்பெட்டிகளும் கூட  செய்ப்யபடுகின்றன.

tabasheer

இப்பகுதிகளில் வளரும் Phyllostachys bambusoides எனப்படும்  பிறிதொரு மூங்கில் வகையின் கணுக்களிலிருந்து சுரக்கும் மணலைப்போன்ற சொரசொரப்பான ஒரு வடிதலை சுரண்டி சேகரிக்கப்படும் தபஷீர் (tabasheer) உள்ளூர் மக்களால் பல நோய்களுக்கு  மருந்தாகவும், பாலுணர்வு ஊக்கியாகவும் (Aphrodisiac) பயன்பாட்டிலிருக்கின்றது. தரைமட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளை  அசைத்து, தாளத்திற்கேற்ப அவற்றின் இடைவெளிகளில், மூங்கில் தலையணியுடன் பாரம்பரிய உடையிலிருக்கும் மிசோர மக்கள் ஆடும் செரா (Cheraw) நடனம் உலகப்புகழ்பெற்றது

செரா நடனம்

அஸ்ஸாமிலும் மிசோரத்திலும் மூங்கிலை முழுநிலவன்றும், செவ்வாய் சனிக்கிழமைகளிலும் வெட்டுவது அமங்கலமென்று கருதப்படுகின்றது.

ஏழு சகோதரி மாநிலங்களெனப்படும் இம்மாநிலங்களின்பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் மூங்கில் மிக முக்கிய தாக்கமுண்டாக்கும் ஒரு தாவரமாக இருந்து வருகின்றது, குறிப்பாக மிசோரத்தில் இதன் முக்கியத்துவம் மிக அதிகம். மிசோரம் மாநிலத்தின்  மொத்த நிலப்பகுதியில் 49 சதவிகிதப் பகுதியில் மூங்கில் காடுகள்தான் உள்ளன.

மிசோ மொழியில் மூங்கில் பூப்பதை மௌடம்  என்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய  ஒரு மெளடம் நிகழ்வினைத்தொடர்ந்து பெரும் பஞ்சமும் பல்லாயிரம் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளது.  அதன் பிறகு 1958 ல் மற்றுமொரு மெளடம் நிகழ்வும் தொடர்ந்த பெரும் பஞ்சமும் வந்திருக்கிறது. அக்காலத்தில், அஸ்ஸாமின் கீழ் இருந்த இப்பகுதி  மக்கள் மூங்கில் பூப்பு மற்றும் தொடர் பஞ்சத்துக்கான முன்கூட்டிய நிவாரணம் மற்றும் தடுப்பு ஏற்பாடுகளின் பொருட்டு அரசுக்கு விடுத்த கோரிக்கைகளையும், மூங்கில் பூப்பைக்குறித்த முன்னெச்சரிக்கையையும் மதிக்காத அரசை எதிர்த்து  மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புதான் பின்னர்  மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணிப்போராளியாயிருந்த ’லால்தெங்கா’ தான் மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த’ சோரம்தெங்கா’வே  தற்போது மிசோரம்  முதலமைச்சராக உள்ளார். 

சோரம்தெங்காவின் தலைமையில் மிசோரத்தின் 2006-2007‘லான மூங்கில் பூப்பை ஒட்டி இந்திய இராணுவம் , கொன்ற எலிகளின் வாலுக்கு 2 ரூபாய்கள் என் அறிவித்தும், மூங்கில் பூக்கும் சமயத்தில் தானியங்களை பயிரிடாமல் எலிகள் உண்ணாத இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரடும் பரிந்துரையை அளித்தும்   எலிப்பெருக்கத்தையும் அழிவையும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியது.

இப்பகுதி மக்கள் மூங்கிலை சூடு பண்ணுகையில் கிடைக்கும் எளிதில் எரியும் தன்மையுடைய பிசினை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலிசிக் அமிலம் நிறைந்துள்ள மூங்கிலின் கெட்டியான கணுக்களை மட்டும் நறுக்கி துண்டுகளாக்கி, வறுத்துப்பொடித்து அதிலிருந்து காபியைப்போல ஒரு மணமுள்ள பானம் தயாரித்து அருந்துவதும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவலாக உள்ள ஒரு உணவுப்பழக்கமாகும்.

மூங்கில் மிகுபூப்பு  லாவோஸ்,  மடகாஸ்கர்,  ஜப்பான்  மற்றும்  தென் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கின்றது. சீனாவில் 1980ல்  பசானியா ஃபாங்கியானா (Bashania fangiana) என்னும் மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால், முதன்மை உணவாக மூங்கிலையே எடுத்துக்கொள்ளும்  பாண்டா  (Giant Panda) விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

 சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவிலெல்லாம் மூங்கில் காடுகள் இருக்கின்றதென்றாலும் சீனாவின் மூங்கில் காடுகளே உலகில் மிகப்பெரியவை. ஆந்தோசயானின் நிறமிகள் அடர்ந்துள்ள கருப்பு மூங்கில் உள்ளிட்ட சுமார் 300 மூங்கில் சிற்றினங்கள் சீனாவில் விளைகின்றன. சீனா மட்டுமே ஆண்டுக்கு 57 பில்லியன் ஜோடிகள் உணவுக்குச்சிகளை (Chosticks) தயாரிக்கின்றது. இக்குசிகளில் குழந்தைகளுக்கானவை, தம்பதிகளுக்கான ஜோடிகள், ஒற்றை  மற்றும் மீள் உபயோகத்துக்கானவை என ஏராளமான வகைகள் உள்ளது.   

 ஜப்பானிலும் மூங்கில் மிக முக்கியமான தாவரம். பைனுடன் சேர்ந்து, மூங்கிலையும் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி மற்றும் தூய்மையின் அடையாளமாக கொண்டிருக்கின்றனர். புத்தாண்டுக்கு முன்னதாக வீடுகளின் நுழைவாயிலை பைன் மற்றும் மூங்கில் கிளைகளால் அலங்கரிப்பது, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருமென இவர்கள் நம்புகின்றனர்  ஜப்பானில் சாகனோ மூங்கில் காடுகளின் மூங்கில் தண்டுகளின் இடையே புகுந்து வரும் காற்றின் ஒலியை ஜப்பானிய அரசாங்கம் “பாதுகாக்கப்பட வேண்டிய ஜப்பானின் நூறு ஒலிகளில்” ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.

( https://en.wikipedia.org/wiki/100_Soundscapes_of_Japan)

டேக்கினொக்கொ- (takenoko) எனப்படும் சுவையான சத்தான மூங்கில் குருத்துணவு  ஜபபானில் வெகு பிரபலம். தற்போது மூங்கில் குருத்து உணவுகள் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட உணவகங்களில் கிடைக்கின்றது. ’’பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’’ என்னும் நமது பழஞ்சொல்லுக்கு நிகராக ஜப்பானில் மூங்கில் காடுகளின் சலசலப்பை கொண்டு பழங்சொல்லொன்று, அதே பொருளில் புழக்கத்தில் இருக்கிறது..

மூங்கில் பூக்கும் காலத்தில் எலி பெருச்சாளி போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத்திற்கான கூடுதல் தூண்டலுண்டாகுமென்பதும் இயற்கையின் மற்றுமொரு விநோதம்.

மகாபாரதத்தில் திரெளபதி ஜெயத்ரதனால் இழுத்துச்செல்லப்படுகையில் ’’மூங்கில் பூத்த பின்பு வரும் பஞ்சத்தில் உயிர்கள் அழிவது போல, நீ அழிவாய்’’  என்று சாபமிடுவாள். வெண்முரசிலும் ஃபல்குனையாக இருக்கும் அர்ஜுனனிடம் நாகர்களின் படைவல்லமையை சொல்லும் ஒரு எதிர்தரப்பு வீரன் அவர்கள் மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் போல பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.

பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருப்பினும் ஒரே இனத்தை சேர்ந்த எல்லா மூங்கில்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்படி ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாக பூத்து, அழிகின்றதென்பதை தாவர அறிவியலாலும் விளக்க முடியவில்லை

புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்தை, அவை பழுத்து உதிரும் காலத்தை, பட்டாம்பூச்சிகளின் முதல் பறத்தலின் காலத்தை, வலசைப்பறவைகள் பயணம் துவங்கும் கணத்தை, என  சூழலுக்கும் உயிர்களின் வாழ்வுக்குமான தொடர்புகளின் அறிவியலான Phenology உலகெங்கிலுமான மூங்கில் பூப்பைக் குறித்து ஆய்வுகளை செய்தபடியே இருக்கிறது,  மூங்கில்களின் அடியில் இருக்கும் கிழங்குகளில் (Rhizome) தலைமுறைகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பூக்கும் காலத்தைக் குறித்த கணக்குகள் சரியான நேரத்தில் அதே இனத்தைச்சேர்ந்த அனைத்து மூங்கில்களுக்கும் கடத்தப்படுகின்றன அல்லது  எப்படியோ அனுப்பப்படுகின்றன என்று மட்டுமே இப்போதைக்கு அனுமானிக்கப்பட்டிருக்கின்றது.

Rhizome

இப்படி குறிப்பிட்ட காலஇடைவெளியில் பல்லாயிரம் கிமீ தொலைவிலிருப்பினும்  மொத்தமாக பூக்கும் தாவரங்களான மூங்கில், குறிஞ்சி போன்றவை ‘Plietesials’ எனப்படுகின்றன. இத்தனை  துல்லியமான காலக்கணக்குகளை எவ்வாறு இவை நினைவில் வைத்திருக்கின்றன என்பதெல்லாம் மர்மம்தான். குறிஞ்சியில் 12 ஆண்டுகளுக்கொரு முறையும் 9 ஆண்டுகளுக்கொரு முறையும் மலரும் வகைகளுக்குள் எவ்வித குழப்பமுமில்லாமல் காலம் காலமாக மிகச்சரியாக  பூத்துக்கொண்டே இருப்பதும் தாவரவியலின் அதிசயங்களில் ஒன்று.

எல்லா மூங்கில் இனங்களும் 48-50 வருட இடைவெளியில் தான் பூக்குமென்பதில்லை.  ஜாவா வகையான Schizostachyum elegantissimum , மற்றும்,  Arundinaria wightiana மூங்கில்கள் மூன்று வருடஙகளுக்கொரு முறையும்,  Phyllostachys bambusoides , எனப்படும் சீன மூங்கில் 120 வருடங்களுக்கு ஒரு முறையும்,   Bambusa vulgaris  வகை 150 வருடங்களுக்கு ஒருமுறையும் மலர்ந்து அழியும். பூக்காமலே அழியும் மூங்கில் இனங்களும் உள்ளன

மூங்கிலின் 30’லிருந்து 40 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் கிளைத்த, உலர்ந்த மஞ்சரிகளின் பொன்னிற மலர்களால் நிறைந்திருந்த, அந்தக்காட்டையும, வழியோரங்களிலும் பூத்து நிறைந்திருந்த மூங்கில்களையும் உடன்பயணித்த வாகனங்களில் வந்த ஒருவர் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சாலையோரங்களிலேயெ சாதாரணமாக தென்பட்ட புள்ளிமான் கூட்டங்களையும், யானைகளையுமே வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இனி இவ்வழியில் மற்றுமொரு மூங்கில் மிகுபூப்பை காண இன்னும் 50,60 வருடங்கள் ஆகுமே, இப்படி தவற விடுகிறார்களே இவ்வரிய நிகழ்வை என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது.

மூங்கில் மலர்கள்

பொதுவாகவே காட்டுயிர் என்றாலே அது பெரும்பாலானவர்களுக்கு விலங்குகள் மட்டும்தான் புலி, சிங்கம், மான், யானை ,கரடிதான். Wild life என்பது flora and fauna இரண்டும் தான் என்பதே பலருக்கும் தெரிவதில்லை

தாவரங்களைக்குறித்த அறிதலும் அபிமானமும் உலகெங்கிலுமே மிகக் குறைவாகவே இருக்கின்றதென்பது என் அபிப்பிராயம். மூங்கில்களைக்குறித்தும் அப்படித்தான். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாஸ்து மூங்கில் / அதிர்ஷ்ட மூங்கில் என அழைக்கப்பட்டு  சிறு கிண்ணங்களில் வளர்க்கப்படும் தாவரம்., மூங்கிலே அல்ல. சீனா மற்றும் தாய்வானில் வளர்க்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அஸ்ப்ராகேசியே குடும்பத்தை சேர்ந்த டிரசீனாதான் மூங்கிலென்று விற்பனை செய்யப்படுகின்றது. . Dracaena sanderiana  என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இவற்றின் கணுக்களும் கணு இடைவெளிகளும் மூங்கிலைப்போல இருப்பதால் இவை மூங்கிலென்று அழைக்கப்படுகின்றன.

lucky bamboo

மூங்கில்கள் இப்படி பூத்தபின்பு அம்மலர்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பெண் மலர்கள் கருவுற்று விதைகள் உண்டாகி அவை உதிர்ந்து பின்னர் புதிய மூங்கில்கள் உருவாகி, நிலைத்து வளர எப்படியும் 7லிருந்து 9ஆண்டுகள் ஆகிவிடும். அது வரையிலும் மூங்கில் குருத்துக்களையும் பசும் இலைகளையும் விரும்பியுண்ணும் அக்காட்டின் யானைகளும் காத்திருக்க வேண்டியதுதான்.

சத்தியமங்கலம் சாலையில் பழுத்துதிரும் பொன்மஞ்சள் இலைகளும் நெடிதுயர்ந்த மலர் மஞ்சரிகளுமாக இருந்த  மூங்கிலின் அடர்ந்த புதரொன்றினருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலைகவிழ்ந்தபடி, அசையும் துதிக்கை நுனியை பார்த்தபடிக்கு வெகுநேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. என்ன நினைத்து கொண்டிருந்தன அல்லது என்ன பேசிக்கொண்டிருந்தன அப்பேருயிர்களிரண்டும்? இயற்கையின் பல்லுயிர்களுக்கிடையேயான பகிர்வாழ்வின் மர்மங்களும் ரகசியங்களும் மனிதர்களால் அறிந்துகொள்ளவே முடியாதவை. அறியாக்கரங்களால் வரையப்பட்ட ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது அக்காட்சி.

 ஒரு கையளவு சாலையில் உதிர்ந்துகிடந்த மூங்கில் நெல்மணிகளை மட்டும் சேகரித்துக்கொண்டேன். வீடு திரும்பியதும் அவற்றை உடைத்து வைக்கப்போகும் மூங்கிலரிசி பாயஸத்தில் இயற்கையின் அரிய சுவையும் பயணத்தின் இனிய சுவையும் கலந்திருக்கும்.

மூங்கில் அரிசி

இன்னும் 60 வருடங்கள் கழித்து என் மகன்கள் அவர்களின் பேரப்பிள்ளைகளுடன் இவ்வழியே வருகையில் மீண்டுமொரு மூங்கில் பூப்பை பார்க்கும்படி அருளப்படுவார்களாக என்றெண்ணியபடி  பயணத்தை தொடர்ந்தேன்!

« Older posts Newer posts »

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑