லோகமாதேவியின் பதிவுகள்

Category: தினமலர் (Page 1 of 3)

மயக்கும் சுவை, மணம்!

‘வெனிலா’ (Vanilla) என்றதும் சுவையும், மணமும் நிறைந்த ஐஸ்கிரீம் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். வெனிலா மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டது. மரம், செடிகளில் பற்றிப் படர்ந்து கொடியாக வளரும்.
* 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.
* தடிமனான பச்சை இலைகள், மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.
* மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும்.
* ஒற்றை மலர்க்கொத்தில் 100 பூக்கள் வரை வெள்ளை, பச்சை கலந்த நிறத்தில் நறுமணத்துடன் மலரும்.
* 6 முதல் 9 மாதங்களில் பச்சை நிறக் காய்கள் உருவாகும்.
* காய்கள் இள மஞ்சள் நிறமாக மாறும்போது, அறுவடை செய்யப்படும்.
* நீண்ட சதைப்பற்றுள்ள, மணம் மிக்க காய்கள், சிறிய விதைகளைக் கொண்டிருக்கும்.

இனங்கள்
‘வெனிலா பிளானிஃபோலியா’ (Vanilla planifolia)
‘வெனிலா டாஹிடென்ஸிஸ்’ (Vanilla tahitensis)
‘வெனிலா பம்போனா’
(Vanilla pompona)
வெனிலா பூக்கள், மெக்சிகோவில் காணப்படும் ‘மெலிபோனா’ (Melipona) தேனீயால் மட்டுமே, இயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்யப்படக்கூடியவை. இந்தத் தேனீ மெக்சிகோவிற்கு வெளியே உயிர் வாழாததால், வெனிலாப் பயிரை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.
தாவரவியலாளர் ‘சார்லஸ் பிரான்கஸ் மோரன்’ என்பவர், 1836ஆம் ஆண்டு, வெனிலாவில் சுய மகரந்தச் சேர்க்கை பற்றி ஆய்வு செய்தார். கையால் மகரந்தச் சேர்க்கை செய்யும் எளிய முறை ஒன்று, 12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்பவரால் 1841இல் உருவாக்கப்பட்டது. சீவப்பட்ட மூங்கில் சிம்பைப் பயன்படுத்தி, கட்டை விரலால் மகரந்தத்தை சூலகத்திற்கு மாற்றும் இந்த முறையே இப்போதும் பயன்பட்டு வருகிறது. இதன் மூலம் வெனிலா உலகளாவிய சாகுபடிப் பயிராக மாறியது.
வெனிலா காய்கள் அதன் நீளத்தைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகின்றன. பச்சையாகவும், உலர வைக்கப்பட்டும் காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலர் காய்களில் சராசரியாக 2.5 சதவீத வென்னிலின் இருக்கும். பச்சைக் காய்கள் ஒரு கிலோ விலை சுமார் ரூ.3,500; பதப்படுத்தப்பட்டவை கிலோ ரூ.22,500. வெனிலா காய்கள், பிரத்யேக வாசனையுள்ள மூலப்பொருட்கள் நிறைந்தவை. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் என்ற வேதிப்பொருளே இதற்குக் காரணம்.
உலகில் குங்குமப் பூவிற்கு அடுத்து விலை உயர்ந்ததாக இருக்கும் வேளாண் பயிர் வெனிலா. இது, உணவு வகைகளிலும், அழகு சாதனத் தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெனிலா எண்ணெய், வென்னிலின் ஆகியவை நறுமண சிகிச்சையிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

சூழல் சீர்கேடு: ‘புற்றுநோய் ரயில்’

பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் போதுமானது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில், அளவுக்கு அதிகமாக, சுமார் 30 முறை வரை மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், அங்கு உள்ள இயற்கைச்சூழல் பாதிப்பு அடைகிறது. காற்றின் வழியாகவும், நிலத்தில் கலப்பதன் மூலமாகவும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால்தான், மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது.
பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தவுடன் வயல்களில் வேலை செய்வது, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகியவையே புற்றுநோய் ஏற்படக் காரணம்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் உள்ள ஆச்சார்யா துளசி மண்டல புற்றுநோய் சிகிச்சை, ஆய்வு மையத்தில் இலவசப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, இந்தியாவிலேயே முதன்முதலில் பசுமைப் புரட்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பஞ்சாபின் மால்வா பகுதியில் இருந்து அதிக கேன்சர் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்கள் வரும் ‘பத்தீண்டா’ (Bhatinda) ரயில், இப்பகுதி மக்களால் ‘புற்றுநோய் ரயில்’ என்றே அழைக்கப்படுகிறது. கேன்சர் நோயாளிகள் முற்றிலும் இலவசமாக இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள். சுமார் 350 கி.மீ. ரயிலில் பயணம் செய்து பிகானீரை வந்து அடைபவர்களில், மால்வா பருத்தி விவசாயிகள் 60 சதவீதம்.
ஐ.நா. அமைப்பு 1983ல் பூச்சிக்கொல்லிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது. உலக அளவில், ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 40,000 பேர் வரை இறக்கின்றனர்.
பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேரும், இறப்பவர்களில் முக்கால்வாசிப் பேரும் வளரும் நாடுகளில் வாழ்பவர்கள். அதேபோல், 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியின்படி, ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பச்சை, புழுங்கல் என்பது என்ன?

பச்சரிசி (ரா ரைஸ் – Raw Rice)
நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்கப்படுவதால் கிடைக்கும் அரிசி.

புழுங்கல் அரிசி (பார்பாயில்டு ரைஸ் – Parboiled Rice)
நெல்லை நீரில் ஊறவைத்து, நீராவி அல்லது கொதிநீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து உமி, தவிடு நீக்கப்படுவது.

பச்சரிசி
* வெள்ளை நிறத்தில் இருக்கும்.
* ஆலையில் நெல்லை அரைக்கும்போது எளிதில் உடைபடும் தன்மை உடையது.
* சமைப்பதற்காக வேகவைக்கும்போது அரிசியிலிருக்கும் மாவுச்சத்துகள் பசைபோலாகி (Gleatinised) விடும்.
* இதனால், ‘தயாமின்’ (Thiamine) எனும் வைட்டமின், அமைலோஸ் (Amylose) சத்துகள் அதிகரிக்கின்றன.

புழுங்கல் அரிசி
* லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
* ஆலையில் அரைக்கும்போது எளிதில் உடையாது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் விகிதம் (Glysemic Index – கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவு. இரத்தத்தில் சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு உகந்தது.
* வெளிப்புற உமி, தவிட்டு வைட்டமின்கள், உமியில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசிக்குள் திணிக்கப்படுவதால், ஊட்டச்சத்து அதிகமாகிறது.

புழுங்கலரிசி உபயோகிக்கும் நாடுகள்
உலகில், மொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவீத நெல் வேகவைக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இம்முறையை அதிகம் பின்பற்றும் நாடுகள்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

அல்லி ராணி!

அமேசான் நீர் அல்லி

ஆங்கிலப் பெயர்: ‘அமேசான் வாட்டர் லில்லி’ (Amazon Water Lily)
தாவரவியல் பெயர்: விக்டோரியா அமேசானிகா (Victoria amazonica)

அமேசான் நீர் அல்லி, ‘நிம்பேயேசியே’ (Nymphaeaceae) எனப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் இருக்கும் அல்லிகளில் மிகப்பெரியது இதுதான். இதன் தாயகம், தென் அமெரிக்கா. அமேசான் நதியில் காணப்படுகிறது. 40 முதல் 50 இலைகளுடன், 12 மீட்டர் அகலத்துக்கு வளரும். அருகில் வேறு தாவரங்களை வளர விடாது. மிக அகன்ற இலைகள் சூரிய ஒளியைத் தடுப்பதால், இதன் அடியில் நீர்ப்பாசிகள்கூட வளர்வதில்லை.
இலைகள் 3 மீட்டர் அகலம் கொண்டவை. வட்டவடிவிலான இலையின் ஓரங்கள் மடங்கி, பெரிய தட்டு போல இருக்கும். இலைகளின் அடிப்பகுதியில், கூரிய இளஞ்சிவப்பு நிற முட்கள் இருக்கும். இலைகளைத் தாங்கும் தண்டு உறுதியானது. 8 மீ. நீளம் உடையது. இந்த இலைகள், 30 கிலோ வரை எடை தாங்கும். குழந்தைகள் அமர்ந்தாலும் இலை நீரில் மூழ்காது.
இதன் மலர், 40 செ.மீ. நீளம் இருக்கும். இரவில் நறுமணத்துடன் பூக்கும். இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை முடிந்த அடுத்த நாளில் இளஞ்சிவப்பாக மாறிவிடும்.
பூக்களின் உள்ளிருக்கும் கதகதப்பால், வண்டுகள் இரவு முழுவதும் பூவுக்குள்ளேயே தங்கிவிடும். அடுத்த நாள், உடல் முழுதும் மகரந்தத்தை பூசியபடி, வேறு மலருக்குச் செல்லும்.
மாறிய பெயர்
இந்த அல்லியை, ‘டாடியாஸ் ஹீன்கி’ (Tadeas Haenke) என்பவர் 1801இல் கண்டறிந்தார். அப்போது, ‘யூர்யேல் அமேசானிகா’ (Euryale amazonica) எனப் பெயர் சூட்டினார். 1849இல் இம்மலர், ‘ஜோசப் பாக்ஸ்டன்’ (Joseph Paxton) என்பவரால் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் முதல் மலர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணியைக் கௌரவிக்கும் விதமாக, இதன் தாவரவியல் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’ (Victoria regia) என மாற்றப்பட்டது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பூமியின் நுரையீரல்

உலகின் பெரிய மழைக்காடு அமேசான் மழைக்காடுகள். தென் அமெரிக்காவின் அமேசான் படுகையில் பரவிப்படர்ந்திருக்கிறது. இதன் பரப்பளவு 70 லட்சம் ச.கி.மீ.
இது பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. பிரேசிலில் மட்டுமே 60 சதவீதக் காடுகள் உள்ளன. உலகிற்கு 20 சதவீதம் ஆக்சிஜனைக் கொடுக்கும் இந்த வனப்பகுதி, பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. 350க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களைச் சேர்ந்த, 9 லட்சம் பூர்வகுடி மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.
தங்கச்சுரங்கங்கள், விதிகளுக்குப்புறம்பாக விலங்குகளையும் மீன்களையும் வேட்டையாடுதல், சோயா, யூகலிப்டஸ் விவசாயத்திற்காகக் காடுகளை அழித்தல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் அமேசான் காடு தற்போது அழிந்து வருகிறது. கடந்த 29 ஆண்டுகளில் 40 சதவீதம் அழிந்துவிட்ட அமேசான் காடுகளைப் பாதுகாப்பது மிக அவசியம் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச நிறுவனமான ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ (World Wide Fund for Nature – -WWF) இந்தக் காடுகளைக் காப்பாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறது.

அமேசான் நதி – உலகின் இரண்டாவது நீளமான நதி 4,100 கி.மீ.

உலகில் வாழும் தாவரங்கள், உயிரின வகைகளில் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இங்கு ஆண்டுதோறும் புதிய வகை உயிரினங்கள் கண்டறியப் படுகின்றன. 1999 முதல் 2015 வரையிலான காலத்தில் மட்டுமே இங்கு முன்பு அறியப்படாத 216 தாவரங்கள், 93 மீன்கள், 32 நில நீர் வாழிகள், 20 பாலூட்டிகள், 19 ஊர்வன மற்றும் ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

25 லட்சம் – பூச்சி இனங்கள்
10,000 – தாவர இனங்கள்
2,000 – பறவை இனங்கள்

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பூண்டுகளுக்குத் திருவிழா!

உலகின் மிகத்தரமான பூண்டு உற்பத்தி செய்யும் கலிஃபோர்னியாவின் கில்ராய் (Gilroy) நகரம் ‘உலகின் பூண்டுத் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது. ‘கில்ராய் பூண்டுகள்’ உலகப் பிரசித்தம் பெற்றவை. பூண்டு சாகுபடிக்குத் தேவையான வளமான நிலமும் பொருத்தமான காலநிலையும் இருப்பதால் இங்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இங்கு நடைபெறும் பூண்டுத் திருவிழா, அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகப்பிரம்மாண்டமானதாகும். இசை நிகழ்ச்சி, பூண்டு அழகிப் போட்டி, பேச்சுப்போட்டி, சமையல் போட்டி, கைவினைப்பொருட்கள் விற்பனை, பூண்டு வகைகளின் கண்காட்சி, விற்பனை என பூண்டுத் திருவிழா பல்வேறு அம்சங்களுடன் களைகட்டும்.
பூண்டுத் திருவிழா 1979ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு கலந்த விதவிதமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாகும். உலர்ந்த பூண்டுச்செடியின் இலைகளில் தயாரிக்கபட்ட இருக்கைகள், கைவினைப்பொருட்கள், பூண்டு வடிவக் கூடாரங்கள், பொம்மைகள், பூண்டு பலூன்கள் என எங்கெங்கிலும் பூண்டு மயம்தான்! அத்தனை பார்வையாளர்களுக்கும் இலவசமாக பூண்டு ஐஸ் கிரீம் வழங்கப்படும்.
திருவிழா நடக்கும்போது புகழ்பெற்ற சமையல் நிபுணர்கள், உணவு தயாரிக்கும் முறைகளை செய்து காட்டும் ‘தழல் சமையல்’ (Flame Cooking) இங்கு மிகப்பிரபலம். ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு கோடிப் பார்வையாளர்கள் உலகம் முழுவதிலிருந்து இதில் கலந்துகொள்கின்றனர், பார்வையாளர்களுக்கும் பூண்டுச் சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்படும். இவ்விழாவில் தயாரிக்கப்படும் உணவுகளுக்குத் தேவையான பொருட்கள் அந்தப் பகுதியில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களிலிருந்தே தயாரிக்கப்படும்.
நம் நாட்டிலும் இதுபோல ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம், பண்ருட்டி பலாப்பழம், காஷ்மீர் குங்குமப்பூ என பல சிறப்புகள் இருக்கிறதல்லவா? அவற்றிற்கும் நாம் இப்படித் திருவிழாக்கள் ஏற்பாடு செய்து அவற்றை உலகம் முழுவதும் பிரபலமாக்க முயற்சி செய்யலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கொல்லும் அழகு

சூரியப் பனித்துளி
ஆங்கிலப் பெயர்: ‘கேப் சன்டியூ’ (Cape Sundew)
தாவரவியல் பெயர்: ‘டிரோசெரா கேபன்சிஸ்’ (Drosera capensis)

ஊனுண்ணித் தாவரங்களில் மிக அழகானது ‘கேப் சன்டியூ’. பசுமைமாறாத பல்லாண்டுத் தாவரமான இது 15 செ.மீ. உயரம் வரை வளரும். மெல்லிய தண்டுகளையும், நன்கு வளர்ந்த வேர் அமைப்பையும் உடையது. தண்டில் இருந்து 4 செ.மீ. நீளமும், 1 செ.மீ. அகலமும் உள்ள இலைகள் காணப்படும். இலைகளின் மேற்பரப்பிலும் ஓரங்களிலும் மெல்லிய இழைகளாக சிறு காம்புகள் உள்ள ‘டிரிக்ஹோம்ஸ்’ (Trichomes) எனப்படும் குமிழ்போன்ற சுரப்பிகள் காணப்படும். இந்த குமிழ்ச் சுரப்பிகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் பனித்துளிகளைப்போல நெருக்கமாக இருக்கும். பூக்கும் தண்டுகளில் இருந்து இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும். சிறிதுநேரத்திற்கே மலர்ந்திருக்கும் இந்தப் பூக்களில் பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். வெடிகனியில் மிகச்சிறிய கருப்பு விதைகள் இருக்கும்.
இலைகளில் இருக்கும் குமிழ்ச்சுரப்பிகளில் நொதிகள் (Encymes – என்சைம்ஸ்) நிறைந்த பசையைச் சுரக்கும். இனிப்புச் சுவையும், வாசனையும் உள்ள இந்தப் பசையால் ஈர்க்கப்பட்டு அருகே செல்லும் பூச்சிகள் அங்கேயே ஒட்டிக்கொள்ளும். ஒட்டிய பூச்சிகளின் உடலில் உள்ள சத்துக்களை இந்தச் செடி மெதுவாக கிரகித்து, செரிமானம் செய்துவிடும். மேலும் அதிக பசையைச் சுரந்து பூச்சியின் சத்துக்களை செடியின் பிற பாகங்களுக்குக் கடத்திவிடுகிறது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இது அலங்காரச் செடியாகவும் உலகின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

நான் உயரமான கள்ளி!

யானைக்கள்ளி
ஆங்கிலப் பெயர் : ‘எலிஃபன்ட் காக்டஸ்’ (Elephant Cactus)
தாவரவியல் பெயர்: ‘பகிசிரியஸ் பிரிங்லி’ (Pachycereus pringlei)
வேறு பெயர்கள்: ‘கார்டான்’ (Cardon), ‘மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்’ (Mexican Giant Cactus)

* வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும் தாவரம் கள்ளி. பெரும்பாலும் செடியாக இருக்கும் எனினும், மரமாகவும் வளரும். 127க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
* யானைக்கள்ளி, உலகிலேயே உயரமாக வளரக்கூடிய கள்ளி இனம். மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா (Baja California), சொனோரா (Sonora) பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது.
* பசுமை மாறா வகையான இது, மிக மெதுவாகவே வளரும். சராசரி உயரம் 32 அடி.
* தண்டுகளில் வரி போன்ற அமைப்புகளும் (Ribs — ரிப்ஸ்), சாம்பல் நிறத்தில் வட்டமாக அமைந்துள்ள கூரிய முட்களும் (Areole — ஏரியோல்) காணப்படுகின்றன. அடித்தண்டில் இருந்து கிளைகள் வளரும்.
* வெள்ளை நிறத்தில், இரவில் பெரிதாகப் பூக்கும். வெளவால், பாலைப்பறவைகள் போன்றவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்கும்.
* வேர்களில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை காரணமாக இது மண்ணில்லாத பாறையிலும் வளரும்.
* முட்கள் செறிந்திருக்கும் சிவந்த சதைப்பற்றுள்ள பழம், மெக்சிகோ பழங்குடியினரால் உண்ணப்படுகிறது. தண்டின் சதைப்பகுதி வலி நிவாரணியாகவும், தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது.

சொனோரா பாலைவனப்பகுதியில், 63 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள யானைக்கள்ளி 2007ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தாவரங்களின் தோழன்

 எறும்புகள் ‘ஃபோர்மிசிடே’ (Formicidae) உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. எறும்புகளில் 10,000 வகைகளும், கிட்டத்தட்ட 22,000 சிற்றினங்களும் இருக்கின்றன. தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் உள்ள உறவு மிகச்சிறப்பானது. பயறு வகைத் தாவரங்கள், ஆர்க்கிடுகள், ஆமணக்குச்செடியின் ‘யுஃபோர்பியேசியே’ (Euphorbiaceae) எனப்படும் ஆமணக்குச் செடி குடும்பத் தாவரங்கள் போன்றவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தாவரங்கள் எறும்புகளுடன் நெருங்கிய உறவில் உள்ளவை.
* இந்தத் தாவரங்கள், எறும்புகளுக்குத் தங்குமிடம், உணவு போன்றவற்றை அளிக்கிறது பதிலுக்கு எறும்புகள் தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல், விதைபரவல், மகரந்தச்சேர்க்கை தாவரக்கழிவுகளைச் சுத்தம் செய்தல், சத்துகளை அளித்தல், நோயிலிருந்து காத்தல் என, பல வகைகளிலும் உதவுகின்றன. சில எறும்புகள் இலைகளில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றினை (Fungal Infections — ஃபங்கல் இன்பெக்ஷன்ஸ்) பூஞ்சை இழைகளை உண்பதன் மூலம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துகின்றன.
* எறும்புகளோடு இணைந்து வாழும் இவ்வகைத் தாவரங்கள் ‘மிர்மிகொஃபைட்ஸ்’ (Myrmecophytes) எனப்படும். இந்தத் தாவரங்களில் எறும்புகள் வாழ்வதற்கான ‘டொமேசியா’ (Domatia) எனப்படும் தங்குமிடங்களைக் கொண்டிருக்கும். உள்ளே வெற்றிடங்கள் உள்ள கூரிய முட்கள், வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் உட்புறம், சுருண்ட இலைகளின் ஓரங்கள் ஆகியவற்றில் எறும்புகள் முட்டைகளை இட்டு பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ளும்.
* எறும்புகளுக்குத் தேவையான உணவுப்பொருட்களை இலைக்காம்புகளில், மகரந்தத்துகள்களில், இலை நுனிகளில், தண்டுகளில் சேகரித்து வைத்திருக்கும், நீர்ச்சுரப்பிகளை மலருக்கு வெளியே (Extrafloral Nectaries – எக்ஸ்ட்ராஃபுளோரல் நெக்டரிஸ்) எறும்புகளுக்கென உருவாக்கி வைத்திருக்கும் தாவரக் குடும்பங்களும் உள்ளன.
* பல வகையான பழ மரங்கள், எறும்புகளை பழங்கள் இருக்கும் காலத்தில் மட்டும்கூட வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும். பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காகச் சுரக்கும். மாமரங்களிலும், கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள், இருப்பதைக் காணலாம்.

தெரிந்து கொள்வோம்
ஓடும் வேகம் (மணிக்கு)
யானை – 25 கி.மீ.
சிங்கம் – 80 கி.மீ.
சிறுத்தை – 114 கி.மீ.
புலி – 65 கி.மீ.
மான் – 60 கி.மீ.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

மாவுச் சத்துகளின் வங்கி

மரவள்ளி
ஆங்கிலப் பெயர்கள்: Tapioca – டாபியோகா, Cassava – கசாவா
தாவரவியல் பெயர்: Manihot esculenta – மணிஹாட் எஸ்குலேன்ட்டா
வேறு பெயர்கள் : குச்சிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளி, குச்சி வள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு

மனிதர்களின் உணவுத் தேவையில், கார்போஹைட்ரேட்டைத் (Carbohydrate) தருவதில் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பது மரவள்ளிக் கிழங்கு. இது ‘யூபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியின் வேரில் காணப்படும் கிழங்கு. இதன் தாயகம் தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
மரவள்ளிச் செடி 5 அடி உயரம் வரை வளரும். குட்டையாக வளரும் இனங்களும் உண்டு. நீண்ட நடுத்தண்டும், மெல்லிய குச்சிகளால் ஆன கிளைத் தண்டுகளும் காணப்படும். ஒரு காம்பில் ஈட்டி வடிவ இலைகள் ஏழு இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பூக்கள் சிறியதாக பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். பச்சை நிறக் காய்கள், காய்ந்ததும் வெடிக்கும் தன்மை கொண்டவை. விதை மூலமும் குச்சிகளைப் பதியனிடுவதன் மூலமும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, இரு முனைகளும் கூம்பிய வடிவத்தில் உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்டது. தடிமனான, மண்ணிறம் கொண்ட தோலினால் மூடப்பட்டிருக்கும். மையப் பகுதியில் நீளமான நார் காணப்படும். உட்பகுதி, வெண்மை நிறத்தில் இருக்கும். கிழங்கின் பட்டையில் ‘ஹைட்ரோசையனிக் அமிலம்’ (Hydrocyanic Acid) என்ற நச்சுப்பொருள் உள்ளது. இந்த அளவைப் பொறுத்து, இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகைகள் உள்ளன. முறையாகச் சமைக்கப்படாத கசப்பு மரவள்ளி, ‘கோன்சோ’ (Konzo) என்னும் நரம்பியல் குறைபாடு சார்ந்த நோயை உருவாக்கக்கூடும். கிழங்கில் புரதமோ, பிற சத்துகளோ அதிகம் இல்லை. மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துகள் உள்ளன.
வளரும் நாடுகளில், மரவள்ளி மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வணிகப் பயிராகவும் உள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. ஸ்டார்ச், ஜவ்வரிசி, குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு, கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑