ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்திருக்கும் தமிழ்ப் படம் சுல்தான். தமிழிலும் தெலுங்கிலும் ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக இந்த திரைப்படம் வெளியிடப்பட்டது
ஆக்ஷன் த்ரில்லர் என்ற ஜானரில் எடுக்கப்பட்டதாக சொல்லபட்டிருந்தாலும் கார்த்திக்கு பிடித்தமான, வழக்கமுமான குடும்ப செண்டிமெண்ட் படம்தான் இதுவும்
தெலுங்கு கன்னட மொழி திரைப்படங்களின் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா இதில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார்
லால். யோகி பாபு, பொன்வண்ணன் மற்றும் ராமச்சந்திர ராஜு முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இசை விவேக்- மெர்வின் இணை. பின்னணி இசை மட்டும் யுவன் ஷங்கர் ராஜா. ஒளி இயக்கம் சத்தியம் சூரியன், படத்தொகுப்பு ரூபன்.
நூற்றுக் கணக்கான அடியாள்களுடன் வாழும் தாதா நெப்போலியன், அவர் மனைவி அபிராமி. அபிராமி விக்ரம் என்கிற சுல்தானை பிரசவித்துவிட்டு இறந்துவிடுகிறார். தாதாவான அப்பாவுடனும் அடியாட்களுடன் வளரும் தாயில்லாப்பிள்ளை கார்த்தி பின்னர் ரோபோடிக்ஸ் படிக்க வெளிநாடு செல்கிறார்.
படிப்பு முடிந்து விடுமுறையில் ஊர் திரும்பும் சுல்தானுக்கு திடீரென நிகழும் அப்பாவின் மரணத்தால், அப்பாவை நம்பியிருந்த அடியாட்களையும், இறக்கும் தருவாயில் பொன்வண்ணன் கிராமத்து பிரச்சனையை தீர்ப்பதாக அப்பா செய்து கொடுத்திருக்கும் வாக்கை காப்பாற்றும் தார்மீகப் பொறுப்பும் ஏற்படுகிறது.
அடியாட்களை திருந்திய குமரர்களாக்கும் முயற்சியில் சுல்தான் வெற்றி பெற்றாரா, பொன்வண்ணன் கிராமத்து பிரச்சினைகளை அப்பா வாக்கு கொடுத்தபடி அவரால் தீர்க்க முடிந்ததா, என்பதும், இடையில் ஏற்படும் காதலும்தான் மொத்த கதையும்.
கார்த்தியின் படங்கள் எல்லாம் தெலுங்கு மொழி மாற்றப் படுவதால் அவருக்கு என்று தெலுங்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் இது தெலுங்கு பாதி தமிழ் பாதி இரண்டும் கலந்த கலவையாக தான் இருக்கிறது. அதிலும் சண்டைக்காட்சிகள் எல்லாம் அக்மார்க் தெலுங்கு ரகம். ராஷ்மிகாவுக்கு பெரிதாக வேலை ஒன்றும் இல்லை, அழகாக வருகிறார், சிரிக்கிறார், உதட்டை சுழித்து கொள்கிறார், இனிமையான பாடல்களில் வருகிறார் அவ்வளவே.
யோகிபாபு சமீபத்திய தமிழ் படங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக விட்டிருக்கிறார் எந்த திரைப்படம் ஆனாலும், எந்த பட்ஜெட் ஆனாலும் யோகிபாபுவின் அடர்ந்த சுருட்டை முடித்தலை தெரிகின்றது.
தெலுங்கு வாசனையுடன் தமிழ் பேசும் அந்த பிரதான வில்லன் ராமச்சந்திர ராஜூ உட்பட பல வில்லன்களின் அழகாக சுருண்ட அடர்ந்த கேசத்தை பார்க்கையில் எந்த எண்ணெயை தலையில் தேய்க்கிறார்கள் இவர்களெல்லாம் என்று கேட்கத் தோன்றுகிறது.
ஜீப்பும், அடியாட்களுமாக லோக்கல் வில்லன் ஒருவர், அவருக்கு மேலே 10,000 கோடிகளில் பிசினஸ் செய்யும் கோட் போட்ட,விமானத்தில் வந்திறங்கும் இன்னொரு கார்ப்பரேட் வில்லன், ஒற்றை ஆளாக அத்தனை பேரையும் அடித்து அழிக்கும் கதாநாயகன், அவர் விரும்பும், சின்ன ரோல் பண்ணும் ஒரு கதாநாயகியுமாக வழக்கமான தமிழ் தெலுங்கு மசாலா கதை தான். சமீபத்திய கார்த்தி அவரது அண்ணன் சூர்யா படங்களை போலவே இதிலும் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
சுல்தானின் பாதுகாவலராக வரும் பிரம்மாண்ட நடிகர் ஜன்சீர் முன்பு குழந்தைகளுக்கான ஒரு தொடரில் நடித்தவர் என்பதால் குழந்தைகளுக்கும் இப்படம் பிரியமானதாகிவிட்டது.
சுல்தான் என்னும் தலைப்பை இந்து முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனமும் ஆட்சேபமும் தெரிவித்ததால், படப்பிடிப்பின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டன பின் படக்குழுவினர் திப்பு சுல்தானை குறிப்பிடவில்லை இது ஒரு சாதாரண வழங்கு பெயர் தான் என்பதை தெளிவுபடுத்தினார்கள்.
அனிருத் குரலில் ’’ஜெய் சுல்தான்’’ மற்றும் ’’யாரையும் இவ்வளவு அழகா’’ பாடல்கள் சிறப்பு. அதிலும் சிலம்பரசனின் குரலில்’’யாரையும் இவ்வளவு அழகா’’ இனிமை.
கார்த்தி உடல எடையை குறைக்கவேண்டும். பல லாங் ஷாட் காட்சிகளில் சிவக்குமாரோ என்றே சந்தேகம் வருகின்றது. ஒரு வருடங்களுக்கு மேலாக நோய்த் தொற்றினால் மூடிக்கிடந்த திரையரங்குகளில் சமயத்தில் வெளியிடப்பட்டவைகளில் குடும்பத்துடன் பார்க்கலாம் என்னும் ரகத்திலான திரைப்படம் சுல்தான்.
கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு நகர்களில் மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகளுக்கும் அருகிலிருக்கும் சின்ன சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணி பெண்கள் குங்குமச்சிமிழ் போன்ற சிறு பெட்டிகளில் 700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம் குங்குமப்பூ வாங்கி செல்லுவதை சாதாரணமாக காணலாம்.
உண்மையில் இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் செல்லுவது குங்குமப்பூவே அல்ல, அவை பெரும்பாலும் உலர வைக்கப்பட்ட பீட்ரூட் துருவல்களாகவோ அல்லது சாயமேற்றப்பட்ட பெருஞ்சாமந்தி மலரிதழ்களாகவோ தான் இருக்கும். அரிதாகவே அசல் என்று மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைப்பதில், குங்குமப்பூவின் சூலகமுடிகளின் அடிப்புகுதி சிறிதளவு இருக்கலாம்
இப்படி போலிகளை விற்பதும் வாங்குவதும் முட்டாள் தனம் என்றால், கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை குங்குமப்பூவின் நிறத்தில் இருக்கும் என்னும் நம்பிக்கை அதைக்காட்டிலும் முட்டாள் தனமானது. குங்குமப்பூ குறித்தும், அதன் நன்மைகளை, அதிகம் உட்கொண்டால் உண்டாகக்கூடிய உடல் உபாதைகளை, ஆபத்துக்களை, அசலையும் போலியையும் பிரித்தறியும் முறைகளையெல்லாம் அறிந்து கொள்வது அவசியமாகிவிட்டிருக்கிறது.
குங்குமப்பூ மிகவும் சுவாரஸ்யமான ஒரு தாவரம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக. அதன் நிறம், சுவை, மணம், பயன்கள் மற்றும் அறுவடைக்கு செலவழிக்கபப்டும் நேரம் ஆகியவற்றின் பொருட்டு உலக வரலாறு முழுவதும் போற்றப்படுகிறது.
அகழ்வாய்வுகளில் 50 ஆயிரமாண்டுகளுக்கு முன்பு குங்குமப்பூ சாயமேற்றப்பட்ட பொருட்களின் எச்சங்கள் மேற்கு ஈரானில் கண்டறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள் குங்குமப்பூ கலக்கப்பட்ட பானங்களை மந்திர தந்திரங்களுக்கும் , பூசனைகளுக்கும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர். பண்டைய பெர்சியாவில் தெய்வங்களுக்கும அரச குடும்பத்தினருக்குமான உடைகளனைத்தும் குங்குமப்பூ சாயமேற்றப்பட்டன.
மாவீரர் அலெக்ஸாண்டர் தனது போர் காயங்களுக்கு பெர்ஷியாவின் குங்குமப்பூவை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார். கிளியோபாட்ரா தன் கன்ன மேடுகளுக்கு குங்குமப்பூக்களால் செம்மையூட்டியதையும், ரோமானியர்கள் குங்குமப்பூ இழைகளால் நிரப்பப்பட்ட தலையணைகளில் படுத்துறங்கியதையும், குளியல் தொட்டிகளில் குங்குமபூக்களிட்டு செஞ்சிவப்பு நீரில் குளித்ததையும் வரலாறு சொல்லுகின்றது.
பாலில் குங்குமப்பூ கலந்து அருந்துவது பாலுணர்வை தூண்டும் என்பதால் புதுமணத் தம்பதிகளுக்கு பல கலாச்சாரங்களில் இப்பானம் அளிக்கப்பட்டு வருகின்றது..
மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ எனப்படும் இந்த சாஃப்ரன் (saffron) குரோக்கஸ் சடைவஸ் (Crocus sativus), என்னும் இரிடேசீயே (Iridaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பல்லாண்டுத் தாவரம். இது சிவப்புதங்கம், (Red Gold) எனவும் அழைக்கப்படுகின்றது.. saffron என்னும் பிரெஞ்சு மொழி சொல்லின், வேர் அரபி மொழியில் ’மஞ்சள்’ என பொருள்படும் லத்தீன் சொல்லான safranum என்பதில் இருக்கிறது
மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் அவற்றை ஒத்த , உலர்ந்த கோடைத் தென்றல் வீசும் பகுதியிலும் அதிகமாக வளரும் இவை உறைபனி களையும், குளிர் மிகுந்த பனிக்கட்டி மூடியிருக்கும் சூழலையும் தாங்கி வளரக்கூடியவை.
குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. காட்டு குங்குமப்பூ- wild saffron, குரோக்கஸ் கார்ட்ரைட்டியானஸ் (Crocus cartwrightianus) செடியை இனவிருத்தி மற்றும் கலப்பினம் செய்ததன் மூலம் நீளமான சூலக முடிகளை (Style ) கொண்ட இப்போது அதிகம் பயிரிடப்படும் Crocus sativus செடி உருவாக்கப்பட்டது. முன்னூறு அல்லது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவிலும் ஸ்பெயினிலும் துவங்கிய குங்குமப்பூ சாகுபடி பின்னர் மெதுவாக ஈரான், இந்தியா, ஸ்வீடன் நாடுகளுக்கு பரவியது.
குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருட்களை கொண்ட, தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர் பாய்ச்சப்பட்ட, சுண்ணாம்பு நிறைந்த களி மண் வகைகள் (clay-calcareous) உகந்தவை. நல்ல சூரிய ஒளியில் அவை மிகச்சிறப்பாக வளர்வதால், சூரிய ஒளியை நோக்கி சரிவாக அமைந்த நிலப்பகுதிகளில் பாரம்பரியமான மேட்டுப்பாத்தி முறையில் இச்செடிகள் பயிர் செய்யப்படுகிறது
குங்குமப்பூ சாகுபடிக்கு வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் மிக உகந்தவையாகும். இவற்றின் இள ஊதா நிறப் பூக்கள் முளைக்கும் திறன் உள்ள விதைகளை உருவாக்குவதில்லை அதனால் நிலத்துக்குக் கீழே இருக்கும் பழுப்பு நிறமான 4.5 செ.மீ அளவுள்ள குமிழ் போன்ற தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து நட்டு வைப்பதன் மூலம் இவற்றை பயிரிட முடியும்.. ஒரு கிழங்கை உடைத்து, பிரித்து நடுவதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட புதிய தாவரங்களைப் பெறலாம்
கோடை காலத்தில் உறக்க நிலையில் உள்ள தண்டுக்கிழங்குகள், இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இவை அக்டோபர் மாதத்தில்,பல மென் வரிகளைக் கொண்ட சாம்பல் கலந்த ஊதா நிறமுடைய பூக்களை உருவாக்கும்.. பூக்கும் காலத்தில் இந்தத் தாவரங்களின் சராசரி உயரம் 30 சென்டி மீட்டருக்கும் குறைவாக இருக்கும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழைப் பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை ஊக்குவித்து அதிகமாக்குகிறது
இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடை மிக வேகமாக நடக்கும்.
3 அல்லது 4 நாட்கள் வரையே உதிராமல் இருக்கும் மலர்களை கைகளால் பறித்து, கூடைகளில் சேகரித்து, குறிப்பிட்ட வெப்ப நிலையிலிருக்கும் அறைகளின் கூரையிலிருந்து தொங்க விடுவார்கள். மலர்கள் உலர்ந்ததும் சூல் முடிகள் கவனமாக பிரித்தெடுக்கப்படும். இந்த தயாரிப்புக்களே ஏறக்குறைய ஒரு வாரகாலம் நடக்கும்
ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகள் உடைய சூல் தண்டுகள் (style) உருவாகின்றன . அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ அளவில் கருஞ்சிவப்பு நிறமுள்ள சூலகமுடிகள் (stigma) காணப்படுகின்றன. பூ என பொதுவில் அழைக்கப்பட்டாலும் உண்மையில் இந்த சூல் முடிகளே குங்குமப்பூ என அறியப்படுபவை. தனித்த உலர்ந்த சூலகமுடியின். நீளம் சுமாராக 20 மி.மீ இருக்கும்.
குங்குமப்பூவின், உலர்ந்த வைக்கோல் போன்ற மணத்திற்கும், நிறத்திற்கும், சுவைக்கும் மருத்துவ குணங்களுக்கும் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்களும் பல ஆவியாகாத செயல்மிகு வேதிக் கூறுகள் உள்ளன.
இவற்றில் ஜியாஸேந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள் ஆகியவை முக்கியமானவை. குங்குமப்பூவின் தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு நிறத்திற்கு ஆல்ஃபா (α) குரோசினும். கசப்பான சுவைக்கு குளுக்கோசைட்டு பிக்ரோகுரோசினும் காரணமாகும். உலர்ந்த குங்குமபூவில் 65% கார்போஹய்ட்ரேட்டுக்களும், 6% கொழுப்பும், 11% புரதமும் இருக்கும்.. உலர்ந்த குங்குமப்பூவை, வளிமண்ட ஆக்ஸிஜனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்
150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள் தேவைப்படுகின்றது. இது ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் பயிரிடுதலுக்குச் சமமானது மேலும் 150,000 பூக்களை கைகளால் பறிப்பதற்கு நாற்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.
பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே தரமான புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.
உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. ஸ்பேனிஷ் சுபீரியர்’ (Spanish Superior) என்றும், ‘கிரீம்’ (Creme) என்றும் வணிகப்பெயர்களைக் கொண்ட வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை
அதிக சாஃப்ரானல்,, வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் ,அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது இத்தாலியின் “அக்குய்லா” குங்குமப்பூ (zafferano dell’Aquila), மற்றொன்று காஷ்மீரி “மாங்ரா” அல்லது “லசா” குங்குமப்பூ (crocus sativus kashmirianaus). குங்குமப்பூவில் முதல்தரம் சாகி, என்றும் இரண்டாம்தரம் மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சா என்றும் அழைக்கப்படுகின்றது
ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள். ஈரான் உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து இயற்கை உரமிட்டு வளர்க்கப்படும் பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் கிடக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron) சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.
நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 2 லட்சம் இந்திய ரூபாய்கள்).
இந்திய குங்குமப்பூ
குறிப்பிடத்தக்க சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம் கொண்ட காஷ்மீர் குங்குமப்பூ வகை உலகின் அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது . இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூ சாகுபடிக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள குங்குமபூ நகரமென்றூ அழைக்கபடும் பாம்போர் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் குங்குமப்பூ பயிரடப்படும் சுமார் 5,707 ஹெக்டேர் நிலபரப்பில் ஆண்டுக்கு 16 ஆயிரம் கிலோ குங்குமப்பூ கிடைக்கின்றது. இதில் 4,496 ஹெக்டேர்கள் ஜம்மு காஷ்மீரில் மட்டும் இருக்கின்றது.
உலகெங்கிலும் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட உணவு வகைகளும் பானங்களும் இனிப்புக்களும் வெகு பிரபலம், காஷ்மீரில் குங்குமப்பூ, பட்டை, ஏலக்காய் கலந்து நறுக்கிய பாதாமினால் அலங்கரிக்கபட்ட கெவா ( kehwa ) என்னும் பச்சைத்தேநீர் வெகு பிரசித்தம்
kehwa
சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும்உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குங்குமப்பூ ஆஸ்த்மா, இருமல், தூக்கமின்மை, இதய நோய் மற்றும் சருமப்பாதுகாப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
1959ல் மரகதம் என்னும் திரைப்படத்தில் அரிதான, விலைமதிப்பற்ற, தங்கத்திற்கு இணையான குங்குமபூவுடன் காதலியை ஒப்பிட்டு ஆர் பாலு வரிகளில் ’’குங்குமபூவே’’ என்னும் பாடலை சந்திரபாபு பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் அதற்குப் பிறகு குங்குமப்பூ எந்தப்பாடலிலுமே இல்லையென்றே நினைக்கிறேன். இந்திய தேசியக்கொடியின் மூவர்ணங்களிலொன்றூம், புத்த துறவிகளின் உடைகளும் குங்குமபூவின் காவி நிறமே.
பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் குங்குமப்பூவில் அதிகம் கலப்படமும் உள்ளது. மாதுளம் தோட்டின் உட்புறமிருக்கும் நார்களையும், சிலவகை புற்களையும், பீட்ரூட் துருவல்களையும் சாயமேற்றியும் , marigold எனப்படும் துளிர்த்தமல்லியின் இதழ்களை காயவைத்தும், கலப்படங்களும், குங்குமப்பூ போலிகளும் சந்தைப்படுத்தப் படுகின்றது.
குங்குமப்பூவின் கலப்படத்தை எளிதில் கண்டுகொலலாம். அசல் குங்குமப்பூ ஆழ்ந்த சிவப்பு நிறத்துடன், வைக்கோல் அல்லது மண் வாசனையும், மென் கசப்புச்சுவையும் கொண்டிருக்கும். விரல்களுகிடையில் வைத்து சில இழைகளை நசுக்கி தேய்க்கையில் விரல்களில் பொன் மஞ்சள் நிறம் படிந்தால், அது அசல் குங்குமப்பூ. தூய நீரில் எளிதில் கரைந்து நிறமிழந்து வெளிறிப்போகாமல், நீர் பொன்மஞ்சளாக மெல்ல மெல்ல நிறம் மாறூகையில் இழைகள் நிறமிழக்காமலிருப்பதும் அசலே. அசல் குங்குமப்பூவின் ஒவ்வொரு இழையின் நீளமும் ஒரே அளவில் இருக்காமல் ஒரு நுனி சற்றுப் பெரிதாக இருக்கும்
கர்ப்பிணிகள் குங்குமப்பூ உட்கொண்டால் பிறக்கும் குழந்தையின் சரும நிறம் மேம்படும் (அதாவது சிவப்பாகும்) என்பது எந்த அறிவியல் ஆதாரமுமில்லாத, தொன்று தொட்டு நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கை. குழந்தைகளின் சரும நிறம் பெற்றோர்களின் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கபடுகின்றது.
குங்குமப்பூவில் இருக்கும் வேதிச்சேர்மங்கள் கருப்பையை சுருங்கி விரியச்செய்யும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துவங்கி வைக்கும் குணம் கொண்டவை (oxytocic). எனவே குங்குமப்பூவை தொடர்ந்து அதிகமாக உட்கொள்கையில் கருக்கலைப்பும் சிறுநீரக செயலின்மையும் ஒருநாளைக்கு 20 கிராமுக்கு அதிகமாகையில் உயிரழப்பும் கூட ஏற்படும் ஆபத்துள்ளது. குங்குமப்பூவுக்கு ISO தரக் கட்டுப்பட்டு நிரணயமிருப்பதால் அசலை கண்டறிந்து வாங்கவேண்டும்.( ISO 3632)
Coming 2 America 2021 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும், இது 1988’ம் ஆண்டின் எடி மர்பி நடித்த coming to America திரைப்படத்தின் தொடர்ச்சி. திரைக்கதை ;கென்யா பாரிஸ், பாரி டபிள்யூ. ப்ளாஸ்டீன் மற்றும் டேவிட் ஷெஃபீல்ட் .இயக்கம்; கிரெய்க் ப்ரூவர். கெவின் மற்றும் எடி மர்பி தயாரிப்பு. எடி மர்பியுடன் முதல் பாகத்தில் நடித்த பலர் இதிலும் அதே பாத்திரங்களின் தொடர்சியாக நடித்திருக்கின்றனர். மிகத்தாமதமான இரண்டாம் பாகம்.
ஆர்செனியோ ஹால், ஜெர்மைன் ஃபோலர், லெஸ்லி ஜோன்ஸ், ட்ரேசி மோர்கன், கிகி லெய்ன், ஷரி ஹெட்லி, தியானா டெய்லர், வெஸ்லி ஸ்னைப்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஆகியோர் இதில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். எடி மர்பியின் மகள் பெல்லா மர்பி அகீமின் இரண்டாம் மகளாக இதில் அறிமுகமாகியிருக்கிறார். Coming to America’வை தழுவி தமிழில் எடுக்கபட்ட மை டியர் மார்த்தாண்டனின் இரண்டாம் பாகம்தான் இது
படத்தின் விநியோக உரிமைகள் COVID-19 தொற்றால் அமேசான் பிரைமுக்கு விற்கப்பட்டு, மார்ச் 4, 2021’ல் படம் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியிடப்பட்டது..
மிக எளிய திரைக்கதை. ஜமுண்டாவின் இராணுவவாத அண்டை நாடான நெக்ஸ்டோரியாவால் ஜமுண்டா அச்சுறுத்தலுக்கு ஆளாகிக்கொண்டே இருக்கிறது. அகீமிற்கு முதல் பாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மணமகளின் சகோதரரும், அதன் சர்வாதிகாரியுமான ஜெனரல் இஸி, முன்பு தவறவிட்ட சொந்தத்தை இப்போது மீண்டும் உண்டாக்க, அகீமின் மூத்த மகள் மீகாவை தனது மகன் இடி’க்கு திருமணம் செய்து வைக்கும்படி அழுத்தம் தருகிறார்
ஜமுண்டாவின் இளவரசர் அகீம் ,லிசா மெக்டோவலுடனான அவரது திருமணத்தின் 30 வது ஆண்டு நினைவு நாளில், இறக்கும் தருவாயிலிருக்கும் தந்தை கிங் ஜாஃப் ஜோஃபர் முன் வரவழைக்கப்படுகிறார். நியூயார்க்கின் குயின்ஸில் அவரது முதல் பயணத்தின்போது அவரறியாமலேயே ஒரு மகனுக்கு தந்தையாயிருப்பதாக ஜாஃப்பும் அவரது ஷாமன் பாபாவும் திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்துகிறார்கள்,
ஒரு ஆண் வாரிசு மட்டுமே அரியணையில் அமர முடியும் என்னும் ஜமுண்டியன் பாரம்பரியம், லிசா மகள்களை மட்டுமே பெற்றிருப்பதால், மகனை மீட்டெடுக்க குயின்ஸுக்கு திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்தை அகீமுக்கு ஏற்படுத்துகின்றது..
கிங் ஜாஃப் உயிரிழக்கிறார், அவரது இறுதிச் சடங்கிற்குப்பின்னர் அகீம் மன்னரானதைத் தொடர்ந்து, அவரும் செம்மியும் குயின்ஸுக்குப் பயணம் செய்கிறார்கள், அவரது முறைகேடாக பிறந்த மகன் லேவெல் ஜான்சனையும்,.அவரது தாயார் மேரியையும் லேவெல்லின் மாமா ரீமையும் அகீம் ஜமுண்டாவுக்கு அழைத்துச் செல்கிறார், இதனால் குடும்பத்தின் அதிருப்திக்கு அகீம் ஆளாகிறார்
ஜெனரல் இஸி இதை அறிந்ததும் அடுத்த முயற்சியாக தனது மகள் போபோடோவை லேவெல்லுக்கு மணம் செய்துவக்க முயலுகிறார், ஏழை இளைஞனான லேவெல், ஒரு அரச இளவரசனாக தகுதி பெற, அபாயகரமான சோதனைகளை சந்தித்து வெற்றி பெறவேண்டியிருப்பதும் தன்னை வெறுக்கும் அகீமின் குடுமபத்தினரின் நம்பிக்கைக்கும் பாசத்துக்கும் ஆளாகவேண்டி இருப்பதும்தான் கதை.
லேவெல் படிப்படியாக அகீமின் குடும்பத்தினருடன் ஒரு புரிதலை வளர்த்துக் கொள்வது, சகோதரிகளின் அன்பைப் பெறுவது, சோதனைகளை படாதபாடுபட்டு வெல்வது, எதிர்பாராமல் அவரின் ஒப்பனைக்கலைஞரான மிரெம்பேவுடன் காதல் வயப்படுவது என முதல் பாதியின் இழை அறுபடாமல் இரண்டாம் பாதியை முடிந்தவரை சுவாரஸ்யமாக கொண்டு போகிறார்கள். கணினி உபயோகக்காட்சிகள் அதிகம் இருப்பது சிறார் திரைப்படம் பார்க்கும் உணர்வ்ய் வருகின்றது
போபோடோவுடனான திருமணத்திலிருந்து விடுவிக்கபட்டு தந்தை அகீமின் ஆசியுடன் காதலியை லேவெல் கரம்பிடிக்கிறார் ஜாமுண்டாவின் பாரம்பரியத்தினை மாற்றி எழுதி, அகீம் தனது மகள் மீகாவை அரியணையில் ஏற அனுமதிக்கிறார், அச்சுறுத்தலாக இருந்த ஜெனரல் இஸி, ஜமுண்டா இளவரசிகளால் வெல்லப்பட்ட பின்னர் நட்பு நாடாக நெக்ஸ்டோரியாவை அறிவிக்கிறார். குயின்ஸில் இருந்து அகீமின் முடிதிருத்தும் நண்பர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளும் அரண்மனை விருந்துடன் படம் முடிகிறது. இறுதிக்காட்சிகளுக்கு பிறகு படப்பிடிப்பின் துண்டுக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.
முதல் பாகத்தில் கணினி உதவியால் வடிவமைக்கப்பட்ட ஜமுண்டா அரன்மணை இந்த பாகத்தில் ஹிப்ஹாப் பிரபலமான ரிக் ராஸ் என்னும் செல்வந்தருக்கு சொந்தமான சுமார் 300 ஏக்கரில், ஏரியுடன் அமைந்திருக்கும் மாபெரும் எஸ்டேட் மாளிகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. 100 நபர்கள் அமரும் வசதியுள்ள மாபெரும் உணவு மேஜையுடன் கூடிய உணவருந்தும் அறையில் படப்பிடிப்புக்கென மாட்டப்பட்ட பிரம்மாண்ட அழகிய சுவரோவியத்தை ராஸுக்கே படப்பிடிப்புக்குழுவினர் அன்பளிப்பாக வழங்கிவிட்டனர்.
மன்னராக நடித்திருக்கும் 88 வயதான ஜேம்ஸ் ஜோன்ஸ் வரும் காட்சிகள் தனியாக படம்பிடிக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருக்கின்றன. Akeem எனும் தந்தையின் பெயரை திருப்பி போட்டால் வரும் Meekaa வைத்தான் முதல் இளவரசியின் பெயராக படத்தில் வைத்திருக்கிறார்கள்.
நைஜீரியாவிலும் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றது Coming 2 America. சிங்கத்தின் மீசை முடியை நறுக்கும் காட்சியில், சகோதரனுக்கு உதவும் மீகா நைஜீரிய தேசியக்கொடியின் பச்சை வெள்ளை நிற உடையணிந்திருக்கும் காட்சி ஏகோபித்த வரவேற்புடன் அங்கு பார்க்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் வந்த சாமுவேல் ஜாக்ஸன் இதிலில்லை.
தற்போது 58 வயதாகும் எடிமர்பி தன் 75 ஆவது வயதில் இத்திரரைப்படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆடைவடிவமைப்பும் ஆப்பிரிகாவின் ஆபரணங்களும் மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது
படம் பார்க்கையில் சிரிக்கிறோமென்றாலும் மனம் விட்டு சிரிக்கும்படியான காட்சிகள் எதுவும் இல்லை, முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் பெரும்பாலான காட்சிகள் அதன் காப்பியைபோல இருப்பது இப்படத்தின் அசுவராசியங்களுள் ஒன்று. ஆபாசக்காட்சிகள், வசனங்கள் மிக அதிகம். அந்த சலூனில் பேசப்படுபவை நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எடி மர்பி தனது இயல்பான நடிப்பினால் சரியும் படத்திற்கு முட்டுக்கொடுக்கிறார். ஆனாலும் முதல் அரைமணி நேரத்திலேயே பார்வையாளர்கள் மீதிப்படத்தை யூகிக்கமுடிகின்றது. இதன் இயக்குனர் கிரெய்க்கும், எடி’யும் இணந்து சென்றஆண்டு வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற Dolemite Is My Name. திரைப்படத்துடன் coming 2 America வை ஒப்பிடுகையில் ஏமாற்றமே.
பொதுவில் முதல் பாகத்தை ஒப்பிடுகையில் சுவாரஸ்யம் குறைவான படமென்றுதான் சொல்லவேண்டும். பார்க்கலாம் வகை திரைப்படம்.அவ்வளவுதான். காட்சித்தொடர்ச்சிகளில். இட வலப் பிழைகளும் அகீமின் மகன் , நேர்காணலின்போது சொல்லும் வில் ஸ்மித்தின் அல்லாவுதீன் பற்றிய தகவலின் கருத்துபிழைகளும், சிங்கத்தின் மீசை முடியை வெட்டி எடுக்கும் காட்சியின் தோற்றபிழைகளும் போல பல பிழைகள் திரைப்படத்தில் இருக்கின்றன.
பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும் கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் காணவேண்டி அங்கேயே செல்லலாமென முடிவானது. ஏமாற்றத்தை தவிர்க்க முன்கூட்டியே கானுலாக்களுக்கும், கபினியாற்றிலும், கழிமுகத்திலுமான படகுப்பயணங்களுக்கும் விண்ணப்பித்தோம். வைரஸ் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்து பயணங்களை தவிர்த்து, அன்னூர்-சத்தியமங்கலம் வழி மைசூர் செல்ல வெறும் 200 கிமீதான் என்பதால் காரிலேயே செல்ல திட்டமிட்டோம்.
புதனன்று போகிப்பண்டிகையென்பதால், எதிர்வரும் கோடைக்கால நோய்த்தொற்றுகளின் இயற்கைத்தடுப்புகளான வேம்பு மற்றும் மாவின் இலைகள், சிறுபீழை மற்றும் ஆவாரம் மலர்களாலான கொத்துக்களால் வீடெங்கும் காப்புக்கட்டுதலை முடித்த பின்னர், பொள்ளாச்சியிலிருந்து அன்னூர் வழியே பயணத்தை துவங்கினோம். இந்த மாதம் முழுவதுமே இடைவிடாத மழையானதால், அக்கம்பக்கம் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டு வயல்களும் தோப்புக்களும் நிரம்பி கடவு வழிந்தோடிக்கொண்டிருந்த சாலைகளில் குளிர் நிரம்பியிருந்தது.
அன்னூர் சத்தியமங்கலம் மலைப்பாதையின் 27 கொண்டை ஊசி வளைவுகளும் முன்பு போல் தொடர் சரக்கு லாரி போக்குவரத்தினால் இடைஞ்சல் வராதபடிக்கு நன்கு விரிவாக்கப்பட்டிருந்ததால் எளிதில் மலைஏறி இறங்கினோம்.
சத்தியமங்கலம் மைசூரு செல்லும் வனச்சாலையின் 40 கிமீ தூரமுமே சாலையென்றே சொல்ல முடியாத வகையில் குண்டும் குழியும் கற்களுமாக இருந்தது. ஆனால் காட்டின் விளிம்பிலும், காடு முழுவதும், பல்லாயிரக்கணக்கான் மூங்கில்கள் பொன் போல் பூத்து நின்றதை பார்த்ததும் பயணத்தின் சிரமமெல்லாம் பெரிதாகப்படவில்லை. மூங்கில்கள் பூப்பது ஒரு அரிய நிகழ்வு அதுவும் ஒருவர் ஒருமுறை பார்ப்பதே அரிது. நான் இரண்டாம் முறையாக பார்க்கிறேன். 2016’ல் தாவர வகைப்பாட்டியல் பயிற்சியின் பொருட்டு சென்றிருக்கையில் கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கு, சைரந்திரி வனத்தில் மூங்கில்பூப்பை முதன்முதலாக பார்த்திருந்தேன்
மூங்கில் பூப்பதென்பது மூங்கில் அழிவதுதான். வாழ்நாளின் இறுதியில் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை பூத்துக்காய்த்து அழியும் Monocarpic வகையை சேர்ந்த மூங்கில்கள் இப்படி சொல்லி வைத்தாற்போல ஒட்டுமொத்தமாக 48 லிருந்து 50 வருடங்கள் கழித்து பூத்து பின்னர் ஏராளமான மூங்கிலரிசி எனப்படும் விதைகளை உருவாக்கிவிட்டு மடிந்துவிடும்.
மூங்கிற்சாவு எனப்படும் இந்த நிகழ்வு பெரும் பஞ்சத்தையும் அழிவையும் கொண்டு வருமென்று இந்தியாவின் பலபாகங்களில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் ஏராளமான அளவில் உருவாகும் மூங்கிலரிசியை உண்ணும் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணும் விலங்குகள் பல்கிப்பெருகி பிறதானியங்களையும் உண்ணத்துவங்கி, உண்டான உணவுத்தட்டுப்பாட்டினால் இந்தியா சந்தித்திருந்த பல பெரும் பஞ்சங்கள் விட்டுச்சென்ற கோர நினைவுகளால் இப்படியொரு நம்பிக்கையும் அச்சமும் நிலைபெற்று விட்டது. மூங்கிலின் மிகுபூப்பிற்கும் (Gregarious flowering of Bamboo) தொடரும் பஞ்சத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் எந்த தொடர்புமில்லை
புல் குடும்பத்தை சேர்ந்த தாவரமான மூங்கிலின் 1200 வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. இவற்றில் 24 பேரினங்களின் 138 சிற்றினங்கள் இந்தியாவில் வளருகின்றன. இதில் 3 மட்டுமே அயல் தாவரங்கள் மற்ற அனைத்துமே இயல் தாவரங்கள். உலகெங்கிலுமே மூங்கில் பூப்பென்பது அரிய நிகழ்வுதான்.
இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் 53 சிற்றினங்களும், அருணாச்சலபிரதேசத்தில் 50 சிற்றினங்களுமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த மூங்கிலின் 50 சவீதத்திற்கும் மேற்பட்ட வகைகள் விளைகின்றன. இப்பகுதிகளில் இசைக்கருவிகள், காகிதங்கள், தொப்பிகள். ஆயுதங்கள், மேசை நாற்காலிகள், வீடுகளின் கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்விற்கான 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மூங்கிலினால்தான் செய்யப்படுகின்றன.
மூங்கில் குருத்தும், மூங்கிலரிசியும் அம்மக்களின் மிக விருப்பமான முக்கியமான உணவாகும். சாப் ஸ்டிக்ஸ் எனப்படும் உணவுக்குச்சிகளாகவும், எரிவிறகாவும் மூங்கிலே இங்கு பயன்படுகின்றது. ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானப்பணிகளில் இங்கு விளையும் உறுதியான, நீண்ட கணுவிடைவெளிகளும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும் நெடுமூங்கில்களே சாரம் கட்டப் பயன்படுகின்றன. மூங்கிலின் இலைகளும் கால்நடைத் தீவனமாக பயன்படுகின்றது.
அஸ்ஸாமிய மூங்கிலான Dendrocalamus tulda விலிருந்து செய்யப்படும் புல்லாங்குழல்தான் அங்கு கோவில் விழாக்களில் இசைக்கப்படுகின்றது. இக்குழலிசை துஷ்டசக்திகளை விரட்டுவதாக அங்கு நம்பிக்கை. நிலவுகின்றது
வடகிழக்கிந்தியாவில், மக்களின் வாழ்வுடன் இரண்டறக்கலந்துள்ள மூங்கில் பூப்பதென்பது பெரும் அபசகுனமென்றும், அழிவுக்கான அறிகுறியென்றும் நெடுங்காலமாகவே நம்பிக்கை நிலவுகின்றது
மிசோரத்தின் மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட முள்ளி மூங்கிலிலிருந்தே (Muli Bamboo) தொட்டில்களும், கிறிஸ்துவமதம் அதிகம் பரவியிருப்பதால் சவப்பெட்டிகளும் கூட செய்ப்யபடுகின்றன.
tabasheer
இப்பகுதிகளில் வளரும் Phyllostachys bambusoides எனப்படும் பிறிதொரு மூங்கில் வகையின் கணுக்களிலிருந்து சுரக்கும் மணலைப்போன்ற சொரசொரப்பான ஒரு வடிதலை சுரண்டி சேகரிக்கப்படும் தபஷீர் (tabasheer) உள்ளூர் மக்களால் பல நோய்களுக்கு மருந்தாகவும், பாலுணர்வு ஊக்கியாகவும் (Aphrodisiac) பயன்பாட்டிலிருக்கின்றது. தரைமட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளை அசைத்து, தாளத்திற்கேற்ப அவற்றின் இடைவெளிகளில், மூங்கில் தலையணியுடன் பாரம்பரிய உடையிலிருக்கும் மிசோர மக்கள் ஆடும் செரா (Cheraw) நடனம் உலகப்புகழ்பெற்றது
செரா நடனம்
அஸ்ஸாமிலும் மிசோரத்திலும் மூங்கிலை முழுநிலவன்றும், செவ்வாய் சனிக்கிழமைகளிலும் வெட்டுவது அமங்கலமென்று கருதப்படுகின்றது.
ஏழு சகோதரி மாநிலங்களெனப்படும் இம்மாநிலங்களின்பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் மூங்கில் மிக முக்கிய தாக்கமுண்டாக்கும் ஒரு தாவரமாக இருந்து வருகின்றது, குறிப்பாக மிசோரத்தில் இதன் முக்கியத்துவம் மிக அதிகம். மிசோரம் மாநிலத்தின் மொத்த நிலப்பகுதியில் 49 சதவிகிதப் பகுதியில் மூங்கில் காடுகள்தான் உள்ளன.
மிசோ மொழியில் மூங்கில் பூப்பதை மௌடம் என்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய ஒரு மெளடம் நிகழ்வினைத்தொடர்ந்து பெரும் பஞ்சமும் பல்லாயிரம் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு 1958 ல் மற்றுமொரு மெளடம் நிகழ்வும் தொடர்ந்த பெரும் பஞ்சமும் வந்திருக்கிறது. அக்காலத்தில், அஸ்ஸாமின் கீழ் இருந்த இப்பகுதி மக்கள் மூங்கில் பூப்பு மற்றும் தொடர் பஞ்சத்துக்கான முன்கூட்டிய நிவாரணம் மற்றும் தடுப்பு ஏற்பாடுகளின் பொருட்டு அரசுக்கு விடுத்த கோரிக்கைகளையும், மூங்கில் பூப்பைக்குறித்த முன்னெச்சரிக்கையையும் மதிக்காத அரசை எதிர்த்து மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புதான் பின்னர் மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணிப்போராளியாயிருந்த ’லால்தெங்கா’ தான் மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த’ சோரம்தெங்கா’வே தற்போது மிசோரம் முதலமைச்சராக உள்ளார்.
சோரம்தெங்காவின் தலைமையில் மிசோரத்தின் 2006-2007‘லான மூங்கில் பூப்பை ஒட்டி இந்திய இராணுவம் , கொன்ற எலிகளின் வாலுக்கு 2 ரூபாய்கள் என் அறிவித்தும், மூங்கில் பூக்கும் சமயத்தில் தானியங்களை பயிரிடாமல் எலிகள் உண்ணாத இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரடும் பரிந்துரையை அளித்தும் எலிப்பெருக்கத்தையும் அழிவையும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியது.
இப்பகுதி மக்கள் மூங்கிலை சூடு பண்ணுகையில் கிடைக்கும் எளிதில் எரியும் தன்மையுடைய பிசினை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலிசிக் அமிலம் நிறைந்துள்ள மூங்கிலின் கெட்டியான கணுக்களை மட்டும் நறுக்கி துண்டுகளாக்கி, வறுத்துப்பொடித்து அதிலிருந்து காபியைப்போல ஒரு மணமுள்ள பானம் தயாரித்து அருந்துவதும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவலாக உள்ள ஒரு உணவுப்பழக்கமாகும்.
மூங்கில் மிகுபூப்பு லாவோஸ், மடகாஸ்கர், ஜப்பான் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கின்றது. சீனாவில் 1980ல் பசானியா ஃபாங்கியானா (Bashania fangiana) என்னும் மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால், முதன்மை உணவாக மூங்கிலையே எடுத்துக்கொள்ளும் பாண்டா (Giant Panda) விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவிலெல்லாம் மூங்கில் காடுகள் இருக்கின்றதென்றாலும் சீனாவின் மூங்கில் காடுகளே உலகில் மிகப்பெரியவை. ஆந்தோசயானின் நிறமிகள் அடர்ந்துள்ள கருப்பு மூங்கில் உள்ளிட்ட சுமார் 300 மூங்கில் சிற்றினங்கள் சீனாவில் விளைகின்றன. சீனா மட்டுமே ஆண்டுக்கு 57 பில்லியன் ஜோடிகள் உணவுக்குச்சிகளை (Chosticks) தயாரிக்கின்றது. இக்குசிகளில் குழந்தைகளுக்கானவை, தம்பதிகளுக்கான ஜோடிகள், ஒற்றை மற்றும் மீள் உபயோகத்துக்கானவை என ஏராளமான வகைகள் உள்ளது.
ஜப்பானிலும் மூங்கில் மிக முக்கியமான தாவரம். பைனுடன் சேர்ந்து, மூங்கிலையும் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி மற்றும் தூய்மையின் அடையாளமாக கொண்டிருக்கின்றனர். புத்தாண்டுக்கு முன்னதாக வீடுகளின் நுழைவாயிலை பைன் மற்றும் மூங்கில் கிளைகளால் அலங்கரிப்பது, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருமென இவர்கள் நம்புகின்றனர் ஜப்பானில் சாகனோ மூங்கில் காடுகளின் மூங்கில் தண்டுகளின் இடையே புகுந்து வரும் காற்றின் ஒலியை ஜப்பானிய அரசாங்கம் “பாதுகாக்கப்பட வேண்டிய ஜப்பானின் நூறு ஒலிகளில்” ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.
டேக்கினொக்கொ- (takenoko) எனப்படும் சுவையான சத்தான மூங்கில் குருத்துணவு ஜபபானில் வெகு பிரபலம். தற்போது மூங்கில் குருத்து உணவுகள் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட உணவகங்களில் கிடைக்கின்றது. ’’பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’’ என்னும் நமது பழஞ்சொல்லுக்கு நிகராக ஜப்பானில் மூங்கில் காடுகளின் சலசலப்பை கொண்டு பழங்சொல்லொன்று, அதே பொருளில் புழக்கத்தில் இருக்கிறது..
மூங்கில் பூக்கும் காலத்தில் எலி பெருச்சாளி போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத்திற்கான கூடுதல் தூண்டலுண்டாகுமென்பதும் இயற்கையின் மற்றுமொரு விநோதம்.
மகாபாரதத்தில் திரெளபதி ஜெயத்ரதனால் இழுத்துச்செல்லப்படுகையில் ’’மூங்கில் பூத்த பின்பு வரும் பஞ்சத்தில் உயிர்கள் அழிவது போல, நீ அழிவாய்’’ என்று சாபமிடுவாள். வெண்முரசிலும் ஃபல்குனையாக இருக்கும் அர்ஜுனனிடம் நாகர்களின் படைவல்லமையை சொல்லும் ஒரு எதிர்தரப்பு வீரன் அவர்கள் மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் போல பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.
பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருப்பினும் ஒரே இனத்தை சேர்ந்த எல்லா மூங்கில்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்படி ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாக பூத்து, அழிகின்றதென்பதை தாவர அறிவியலாலும் விளக்க முடியவில்லை
புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்தை, அவை பழுத்து உதிரும் காலத்தை, பட்டாம்பூச்சிகளின் முதல் பறத்தலின் காலத்தை, வலசைப்பறவைகள் பயணம் துவங்கும் கணத்தை, என சூழலுக்கும் உயிர்களின் வாழ்வுக்குமான தொடர்புகளின் அறிவியலான Phenology உலகெங்கிலுமான மூங்கில் பூப்பைக் குறித்து ஆய்வுகளை செய்தபடியே இருக்கிறது, மூங்கில்களின் அடியில் இருக்கும் கிழங்குகளில் (Rhizome) தலைமுறைகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பூக்கும் காலத்தைக் குறித்த கணக்குகள் சரியான நேரத்தில் அதே இனத்தைச்சேர்ந்த அனைத்து மூங்கில்களுக்கும் கடத்தப்படுகின்றன அல்லது எப்படியோ அனுப்பப்படுகின்றன என்று மட்டுமே இப்போதைக்கு அனுமானிக்கப்பட்டிருக்கின்றது.
Rhizome
இப்படி குறிப்பிட்ட காலஇடைவெளியில் பல்லாயிரம் கிமீ தொலைவிலிருப்பினும் மொத்தமாக பூக்கும் தாவரங்களான மூங்கில், குறிஞ்சி போன்றவை ‘Plietesials’ எனப்படுகின்றன. இத்தனை துல்லியமான காலக்கணக்குகளை எவ்வாறு இவை நினைவில் வைத்திருக்கின்றன என்பதெல்லாம் மர்மம்தான். குறிஞ்சியில் 12 ஆண்டுகளுக்கொரு முறையும் 9 ஆண்டுகளுக்கொரு முறையும் மலரும் வகைகளுக்குள் எவ்வித குழப்பமுமில்லாமல் காலம் காலமாக மிகச்சரியாக பூத்துக்கொண்டே இருப்பதும் தாவரவியலின் அதிசயங்களில் ஒன்று.
எல்லா மூங்கில் இனங்களும் 48-50 வருட இடைவெளியில் தான் பூக்குமென்பதில்லை. ஜாவா வகையான Schizostachyum elegantissimum , மற்றும், Arundinaria wightiana மூங்கில்கள் மூன்று வருடஙகளுக்கொரு முறையும், Phyllostachys bambusoides , எனப்படும் சீன மூங்கில் 120 வருடங்களுக்கு ஒரு முறையும், Bambusa vulgaris வகை 150 வருடங்களுக்கு ஒருமுறையும் மலர்ந்து அழியும். பூக்காமலே அழியும் மூங்கில் இனங்களும் உள்ளன
மூங்கிலின் 30’லிருந்து 40 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் கிளைத்த, உலர்ந்த மஞ்சரிகளின் பொன்னிற மலர்களால் நிறைந்திருந்த, அந்தக்காட்டையும, வழியோரங்களிலும் பூத்து நிறைந்திருந்த மூங்கில்களையும் உடன்பயணித்த வாகனங்களில் வந்த ஒருவர் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சாலையோரங்களிலேயெ சாதாரணமாக தென்பட்ட புள்ளிமான் கூட்டங்களையும், யானைகளையுமே வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இனி இவ்வழியில் மற்றுமொரு மூங்கில் மிகுபூப்பை காண இன்னும் 50,60 வருடங்கள் ஆகுமே, இப்படி தவற விடுகிறார்களே இவ்வரிய நிகழ்வை என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது.
மூங்கில் மலர்கள்
பொதுவாகவே காட்டுயிர் என்றாலே அது பெரும்பாலானவர்களுக்கு விலங்குகள் மட்டும்தான் புலி, சிங்கம், மான், யானை ,கரடிதான். Wild life என்பது flora and fauna இரண்டும் தான் என்பதே பலருக்கும் தெரிவதில்லை
தாவரங்களைக்குறித்த அறிதலும் அபிமானமும் உலகெங்கிலுமே மிகக் குறைவாகவே இருக்கின்றதென்பது என் அபிப்பிராயம். மூங்கில்களைக்குறித்தும் அப்படித்தான். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாஸ்து மூங்கில் / அதிர்ஷ்ட மூங்கில் என அழைக்கப்பட்டு சிறு கிண்ணங்களில் வளர்க்கப்படும் தாவரம்., மூங்கிலே அல்ல. சீனா மற்றும் தாய்வானில் வளர்க்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அஸ்ப்ராகேசியே குடும்பத்தை சேர்ந்த டிரசீனாதான் மூங்கிலென்று விற்பனை செய்யப்படுகின்றது. . Dracaena sanderiana என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இவற்றின் கணுக்களும் கணு இடைவெளிகளும் மூங்கிலைப்போல இருப்பதால் இவை மூங்கிலென்று அழைக்கப்படுகின்றன.
lucky bamboo
மூங்கில்கள் இப்படி பூத்தபின்பு அம்மலர்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பெண் மலர்கள் கருவுற்று விதைகள் உண்டாகி அவை உதிர்ந்து பின்னர் புதிய மூங்கில்கள் உருவாகி, நிலைத்து வளர எப்படியும் 7லிருந்து 9ஆண்டுகள் ஆகிவிடும். அது வரையிலும் மூங்கில் குருத்துக்களையும் பசும் இலைகளையும் விரும்பியுண்ணும் அக்காட்டின் யானைகளும் காத்திருக்க வேண்டியதுதான்.
சத்தியமங்கலம் சாலையில் பழுத்துதிரும் பொன்மஞ்சள் இலைகளும் நெடிதுயர்ந்த மலர் மஞ்சரிகளுமாக இருந்த மூங்கிலின் அடர்ந்த புதரொன்றினருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலைகவிழ்ந்தபடி, அசையும் துதிக்கை நுனியை பார்த்தபடிக்கு வெகுநேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. என்ன நினைத்து கொண்டிருந்தன அல்லது என்ன பேசிக்கொண்டிருந்தன அப்பேருயிர்களிரண்டும்? இயற்கையின் பல்லுயிர்களுக்கிடையேயான பகிர்வாழ்வின் மர்மங்களும் ரகசியங்களும் மனிதர்களால் அறிந்துகொள்ளவே முடியாதவை. அறியாக்கரங்களால் வரையப்பட்ட ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது அக்காட்சி.
ஒரு கையளவு சாலையில் உதிர்ந்துகிடந்த மூங்கில் நெல்மணிகளை மட்டும் சேகரித்துக்கொண்டேன். வீடு திரும்பியதும் அவற்றை உடைத்து வைக்கப்போகும் மூங்கிலரிசி பாயஸத்தில் இயற்கையின் அரிய சுவையும் பயணத்தின் இனிய சுவையும் கலந்திருக்கும்.
மூங்கில் அரிசி
இன்னும் 60 வருடங்கள் கழித்து என் மகன்கள் அவர்களின் பேரப்பிள்ளைகளுடன் இவ்வழியே வருகையில் மீண்டுமொரு மூங்கில் பூப்பை பார்க்கும்படி அருளப்படுவார்களாக என்றெண்ணியபடி பயணத்தை தொடர்ந்தேன்!
மசாலாக்களின் உபயோகத்தில் மிகப்பிரபலமான இந்தியச் சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்றான பெருங்காயம் ’ஃபெருலா’ -Ferula என்னும் தாவர பேரினத்தின் பல சிற்றினங்களிலிருந்து பெறப்படுகின்றது. Ferula assafoetida, F. foetida , F. narthex. ஆகிய மூன்று மரங்களிலிருந்தே உலகின் பெருமளவு பெருங்காயம் தயரிக்கப்படுகின்றது. ஈரானில் Ferula suaveolens , Ferula persica மற்றும் மத்திய ஆசியாவில் Ferula galbaniflua ஆகியவையும் வளர்ந்து பயன் தருகின்றன.
இதன் ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida), Ferula asafoetida என்னும் இதன் தாவரப்பெயருக்கு கிரேக்க மொழியில் ’’நாற்றமடிக்கும் பசையை கொண்டிருக்கும் ’’ எனப்பொருள்.
அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம், காயம் ஆகியவையும் பெருங்காயத்தின் பெயர்களே.
English : Devil’s dung, Persian : Angustha-Gandha, French : Ferule Asafoetida, German : Stinkendes steckenkraut, Arabic : Tyib, Haltheeth, Sinhalese : Perumkayam
இம்மரம் கேரட்டின், கொத்துமல்லியின், சோம்பின் குடும்பமான ‘ஏபியேசியே’வை சேர்ந்தது (Apiaceae). சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods) எனவும் இதற்கு பல்வேறு ஆங்கிலப் பெயர்கள் உள்ளன.
பெருங்காய மரங்கள்
பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (ஈரான்). 2 – 7 மீட்டர் உயரம் வரை செடியாகவும், குட்டை மரமாகவும் வளரும் இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம். இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சளிலும். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாகவும் இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு நிறச்சாறு இருக்கும். வேர்கள் கிழங்கை போல கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பற்றுடனும் இருக்கும். தாவரத்தின் எல்லா பாகங்களும் நலல் நெடியுடன் இருக்கும்.
செடி வளர்ந்த 4 ஆண்டுகளுப்பிறகே வேரில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக,மார்ச்- ஏப்ரல் மாதங்களில், தண்டின் அடிப்பகுதியுடன் சேர்ந்த வேர்ப்பகுதியை நறுக்கி, அதை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போல கெட்டியாக வடிந்திருக்கும் பெருங்காயப் பிசினைச் சுரண்டி எடுத்துவிட்டு,மீண்டும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள பிசினை சுரண்டி எடுப்பார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசினை முழுவதுமாக தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் ஒரு செடியின் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசை கிடைக்கும்.. 6 ம் நூறாண்டிலேயெ கிழக்காசியாவிலிருந்து, இன்றைய லிபியாவுக்கு பெருங்காயம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பண்டைய ரோமானியர்கள் பெருங்காயத்தை மருந்துப்பொருளாக உபயோகித்திருக்கின்றனர்.
Dr KT Achaya’ வின் ’’இந்திய உணவுகளின் வரலாறு’’ என்னும் நூல் மகாபாரதத்தில் ஊனுணவில் பெருங்காயம் கலக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. மாவீரர் அலெக்ஸாண்டர் அவரது வெற்றிப் பயணப்பாதைகளில் பெருங்காயத்தை பல இடங்களுக்கு கொண்டு சென்றார் என்கிறது வரலாறு.
பெருங்காய மலர்கள்
வேதியியலில் oleo gum resin எனப்படும் பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. இவற்றுடன் வெங்காயம், பூண்டில் இருக்கும் சல்ஃபரும் மிக அதிக அளவில் இருக்கின்றது. (Resin (40–64%), gum (25%) and essential oil (10–17%)
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும். செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல், மாதவிலக்கு உண்டாக்குதல் போன்ற பல மருத்துவ குணங்களை உடையது. சமைக்காத பொழுது அதிக நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் உருவாக்குகிறது. வெங்கயமும் பூண்டும் உணவில் சேர்த்துக்கொள்ளாத இந்தியாவின் பிராமணர்கள், ஜைனர்கள் போன்ற சமயத்தினரும் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்கின்றனர்
இந்தியாவில் பெருங்காயம் விளைவதில்லை. எனவே . ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது
தில்லியின் தாவர மரபணு வளங்களின் தேசிய பணியகத்தின் ( National Bureau of Plant Genetic Resources-NBPGR), முன்னெடுப்பில் 1963 லிருந்து 1989 வரையிலான காலத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யபட்ட பெருங்காய விதைகளிலிருந்து பெருங்காயம் பயிரிடும் முயற்சி துவங்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது
மீண்டும் 2017லிருந்து இமாலயப் பகுதிகளில் பெருங்காயத்தைப் பயிரிடும் முயற்சியில் சிஎஸ்ஐஆர் மற்றும் இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஐஹெச்பிடி (CSIR &Institute of Himalayan Bioresource, IHBT), NBPGR உடன் இணைந்து ஈடுபட்டுள்ளது.
ஈரானிலிருந்து தருவிக்கபட்ட 6 வகைகளிலான பெருங்காய விதைகளை நோய் தொற்று, வளர்ச்சி, உள்ளிட்ட பலவித சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி கட்டுப்படுத்தப்ப்பட்ட சூழலில் அவற்றை முளைக்க வைத்து, இப்போது 800 பெருங்காய நாற்றுக்கள் இமாச்சலபிரதேசத்தின் லாஹெளல் –ஸ்பிடி பள்ளத்தாக்கில் நடப்பட்டிருக்கின்றன.
கின்னாவுரில் பெருங்கய சாகுபடிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலம்
கடல் மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் குலு, மணாலி மற்றும் கின்னாவுர் மாவட்டங்களிலும் நாற்றுக்கள் சோதனை முயற்சியாக நடப்பட்டிருக்கின்றன. இவை வெற்றிகரமாக வளர்ந்தால், இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியாவில் பெருங்காய வளர்ப்பை பல்லாயிரம் ஏக்கர்களில் விரிவாக்கும் திட்டமும் ICAR க்கு இருக்கிறது
பெருங்காய விதைகள்
பெருங்கயத்தின் விதை உறக்ககாலம் மிக நீளமென்பதாலும், 100ல் இரண்டு விதைகளே முளைக்கும் திறன் கொண்டிருப்பதாலும் இந்திய நிலங்களில் பெருங்காயத்தின் விரிவான சாகுபடி சவாலானதுதான் என்றாலும் இதில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இதை செய்யமுடியுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லடாக் மற்றும் உத்ரகாண்டிலும் சாகுபடியை சோதிக்கும் முயற்சிகளும் தற்போது துவங்கியுள்ளது. லாகூர் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது. .
பெருங்காயத்தின் இரண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றது.பால் பெருங்காயம் எனப்படும் (Kabuli Sufaid- Milky white asafoetida) மற்றும் சிவப்பு பெருங்காயம்.(Lal Asafoetida).
பால் பெருங்காயம்
காந்தாரி பெருங்காயம் என அழைக்கப்படும் ஆஃப்கனிலிருந்து கிடைக்கும் பெருங்காயமே உலகின் மிக தரமான பெருங்காயமென கருதப்படுகின்றது
பொடித்த தூளாகவும், குருணைகளாகவும், வில்லைகளாகவும், கட்டியாகவும் பெருங்காயம் சந்தையில் கிடைக்கின்றது. பெருங்காயப் பசையை நீராவியில் காய்ச்சி வடிகட்டி பெருங்காய எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். அறுவடையான பெருங்காயப்பிசினை அப்படியே நாம் உணவில் சேர்க்க முடியாத அளவிற்கு அதன் காரமும் நெடியும் மிக அதிகமாக இருக்கும். எனவே கட்டியாக இருக்கும் பெருங்காயத்தை பொடித்து கருவேலம் பிசின், கோதுமைமாவு அல்லது அரிசி மாவு சேர்க்கப்பட்டு கூட்டுப் பெருங்காயம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது
ஆஃப்கான் பெருங்காயம்
Ferula வின் galbaniflua என்னும் சிற்றினத்தின் பசை ஊதுவர்த்திக்கள் செய்ய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. உணவுபொருட்களில் மிக அதிகமாக கலப்படம் செய்யப்படுவது பெருங்காயப்பிசினில்தான். கோதுமைக்குப் பதிலாக மைதாவையும். பெருங்காயத்தின் கழிவுகள், களிமண், செம்மண், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றையும் கருவேலம்பிசினுடன் கலந்து வாசனைக்காக பெருங்காய எஸென்ஸ் மட்டும் சிறிது சேர்க்கப்பட்ட, 5 சதவீதம் கூட அசல் பெருங்காயம் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் போலிப்பெருங்காயம் கிராமப்புறங்களில் அதிகம் விற்பனையாகின்றது.
நாம் உபயோகிக்கும் காயம் அசலா, போலியா என எளிதாக வீட்டிலேயே கண்டு பிடிக்கலாம். தரமான கலப்படமில்லா பெருங்காயமானது, கசடுகள் இல்லாமல் நீரில் மூழுவதுமாக கரைந்து நீரை பால்நிறமாக்கிவிடும். சிறு துண்டு பெருங்காய கட்டியை நெருப்பில் காட்டி அது முழுவதும் எரிந்தால் அதுவும் தரமானதே.
கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon – வாட்டர்மெலோன்).இது ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள பச்சையாகவும், உட்புறம் இனிப்பான சிவப்பு சதைப்பகுதி சாறுடனும் காணப்படும். தர்பூசணியில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ஆகியவற்றுடன் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன. எதிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நாடு ஜப்பான்!
ஜப்பானிலும் தர்பூசணிப்பழங்கள் கோடையில் மிக அதிகமாக விரும்பி உண்ணப்படுகின்றன. உருவில் பெரியதாய், உருண்டு வளர்ந்து குளிர்சாதனப்பெட்டியிலும், கடைகளிலும் நிறைய இடத்தை ஆக்கிரமித்து, இடப் பிரச்னை ஏற்படுத்தியதால், ஜப்பானிய விவசாயிகள் வித்தியாசமாக, சதுர வடிவில் அழகிய தர்பூசணியை பயிர் செய்கிறார்கள். டொமொயுகி ஓனோ (Tomoyuki Ono) என்னும் ஜப்பானியப் பெண்ணே 1978ல், முதன்முதலில் இதுபோன்ற சதுர வடிவப் பழங்களை உருவாக்கி சாதனை புரிந்தார். ஒருபுறம் திறந்திருக்கும் சதுர வடிவ கண்ணாடிப் பெட்டியில், தர்பூசணி சிறிய காயாக இருக்கும்போதே உள்ளே வைத்து எளிதாக சதுர வடிவில் விளைவிக்கிறார்கள். இது மட்டுமல்ல; பிரமிட், இதய வடிவ தர்பூசணிகளும் உருவாக்கப்படுகின்றன.
தற்போது விவசாய ஆராய்ச்சியாளர்கள், பல புதிய வகை தர்பூசணி ரகங்களையும் கண்டுபிடித்திருப்பதால், மஞ்சள், வெள்ளை நிறங்களிலும், சுவையான உட்சதை கொண்ட தர்பூசணி பழங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் சந்தைகளில் கிடைக்கின்றன.
2014க்குபிறகு இவற்றுடன் ஐங்கோண் ஆரஞ்சுகளையும் ஜப்பானில் விளைவிக்கிறார்கள். இவை அதிர்ஷ்டம் தரும் என்றும் பரவலாக நம்பிக்கை இருப்பதால் அதிகம் சந்தையில் புழங்கும் பழமாக இருக்கின்றது. ஆரஞ்சுப்பழங்கள் சிறியதாக இருக்கையிலேயே ஐங்கோண் வடிவிலான சட்டங்களை அதன் மீது பொருத்திவிடுவதால் வளரும் மென்மையான கனி சட்டங்களின் வடிவினுள்ளே பொருந்தி ஐங்கோண வடிவிலேயே முதிர்ந்துவிடுகின்றது.
இந்த பழத்தை கையில் வைத்துக்கொண்டால் தேர்வில் வெற்றி பெறும் அதிர்ஷ்டத்தை வழங்குவதாகவும் நம்பிக்கை இருப்பதால் மாணவர்கள் மத்தியிலும் இது வெகு பிரபலம். இதன் ஜப்பானியப்பெயரான ‘Gokaku no Iyokan’ என்பதற்கு தேர்வில் வெற்றிபெறுவதற்கான இனிப்பு வாசனை என்று பொருள்.
இயற்கையான வடிவில் இருக்கும் பழங்களை விட இவ்வித புதுமையான வடிவிலிருப்பவை 5 மடங்கு விலையென்றாலும் புதுமையை விரும்பும் ஜப்பானியர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவற்றை வாங்குகிறார்கள். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் இப்பழங்கள் உள்ளூர் மக்களாலும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வசதியாக இருப்பதாலும், நண்பர்களுக்கு பரிசளிக்கவும் விலையைக்குறித்து கவலைப்படாமல் வாங்குகிறார்கள்.
இயற்கையின் அசெளகரியங்களை ஆபத்துகளையெல்லாம் தங்கள் விடாமுயற்சியாலும் அழகுணர்ச்சியாலும் வென்றுகொண்டே இருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.
‘வெனிலா’ (Vanilla) என்றதும் சுவையும், மணமும் நிறைந்த ஐஸ்கிரீம் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். வெனிலா மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டது. மரம், செடிகளில் பற்றிப் படர்ந்து கொடியாக வளரும். * 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும். * தடிமனான பச்சை இலைகள், மாற்றடுக்கில் அமைந்திருக்கும். * மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும். * ஒற்றை மலர்க்கொத்தில் 100 பூக்கள் வரை வெள்ளை, பச்சை கலந்த நிறத்தில் நறுமணத்துடன் மலரும். * 6 முதல் 9 மாதங்களில் பச்சை நிறக் காய்கள் உருவாகும். * காய்கள் இள மஞ்சள் நிறமாக மாறும்போது, அறுவடை செய்யப்படும். * நீண்ட சதைப்பற்றுள்ள, மணம் மிக்க காய்கள், சிறிய விதைகளைக் கொண்டிருக்கும்.
இனங்கள் ‘வெனிலா பிளானிஃபோலியா’ (Vanilla planifolia) ‘வெனிலா டாஹிடென்ஸிஸ்’ (Vanilla tahitensis) ‘வெனிலா பம்போனா’ (Vanilla pompona) வெனிலா பூக்கள், மெக்சிகோவில் காணப்படும் ‘மெலிபோனா’ (Melipona) தேனீயால் மட்டுமே, இயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்யப்படக்கூடியவை. இந்தத் தேனீ மெக்சிகோவிற்கு வெளியே உயிர் வாழாததால், வெனிலாப் பயிரை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. தாவரவியலாளர் ‘சார்லஸ் பிரான்கஸ் மோரன்’ என்பவர், 1836ஆம் ஆண்டு, வெனிலாவில் சுய மகரந்தச் சேர்க்கை பற்றி ஆய்வு செய்தார். கையால் மகரந்தச் சேர்க்கை செய்யும் எளிய முறை ஒன்று, 12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்பவரால் 1841இல் உருவாக்கப்பட்டது. சீவப்பட்ட மூங்கில் சிம்பைப் பயன்படுத்தி, கட்டை விரலால் மகரந்தத்தை சூலகத்திற்கு மாற்றும் இந்த முறையே இப்போதும் பயன்பட்டு வருகிறது. இதன் மூலம் வெனிலா உலகளாவிய சாகுபடிப் பயிராக மாறியது. வெனிலா காய்கள் அதன் நீளத்தைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகின்றன. பச்சையாகவும், உலர வைக்கப்பட்டும் காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலர் காய்களில் சராசரியாக 2.5 சதவீத வென்னிலின் இருக்கும். பச்சைக் காய்கள் ஒரு கிலோ விலை சுமார் ரூ.3,500; பதப்படுத்தப்பட்டவை கிலோ ரூ.22,500. வெனிலா காய்கள், பிரத்யேக வாசனையுள்ள மூலப்பொருட்கள் நிறைந்தவை. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் என்ற வேதிப்பொருளே இதற்குக் காரணம். உலகில் குங்குமப் பூவிற்கு அடுத்து விலை உயர்ந்ததாக இருக்கும் வேளாண் பயிர் வெனிலா. இது, உணவு வகைகளிலும், அழகு சாதனத் தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெனிலா எண்ணெய், வென்னிலின் ஆகியவை நறுமண சிகிச்சையிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் போதுமானது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில், அளவுக்கு அதிகமாக, சுமார் 30 முறை வரை மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், அங்கு உள்ள இயற்கைச்சூழல் பாதிப்பு அடைகிறது. காற்றின் வழியாகவும், நிலத்தில் கலப்பதன் மூலமாகவும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால்தான், மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது. பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தவுடன் வயல்களில் வேலை செய்வது, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகியவையே புற்றுநோய் ஏற்படக் காரணம். ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் உள்ள ஆச்சார்யா துளசி மண்டல புற்றுநோய் சிகிச்சை, ஆய்வு மையத்தில் இலவசப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, இந்தியாவிலேயே முதன்முதலில் பசுமைப் புரட்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பஞ்சாபின் மால்வா பகுதியில் இருந்து அதிக கேன்சர் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் வரும் ‘பத்தீண்டா’ (Bhatinda) ரயில், இப்பகுதி மக்களால் ‘புற்றுநோய் ரயில்’ என்றே அழைக்கப்படுகிறது. கேன்சர் நோயாளிகள் முற்றிலும் இலவசமாக இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள். சுமார் 350 கி.மீ. ரயிலில் பயணம் செய்து பிகானீரை வந்து அடைபவர்களில், மால்வா பருத்தி விவசாயிகள் 60 சதவீதம். ஐ.நா. அமைப்பு 1983ல் பூச்சிக்கொல்லிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது. உலக அளவில், ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 40,000 பேர் வரை இறக்கின்றனர். பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேரும், இறப்பவர்களில் முக்கால்வாசிப் பேரும் வளரும் நாடுகளில் வாழ்பவர்கள். அதேபோல், 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியின்படி, ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.
பச்சரிசி (ரா ரைஸ் – Raw Rice) நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்கப்படுவதால் கிடைக்கும் அரிசி.
புழுங்கல் அரிசி (பார்பாயில்டு ரைஸ் – Parboiled Rice) நெல்லை நீரில் ஊறவைத்து, நீராவி அல்லது கொதிநீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து உமி, தவிடு நீக்கப்படுவது.
பச்சரிசி * வெள்ளை நிறத்தில் இருக்கும். * ஆலையில் நெல்லை அரைக்கும்போது எளிதில் உடைபடும் தன்மை உடையது. * சமைப்பதற்காக வேகவைக்கும்போது அரிசியிலிருக்கும் மாவுச்சத்துகள் பசைபோலாகி (Gleatinised) விடும். * இதனால், ‘தயாமின்’ (Thiamine) எனும் வைட்டமின், அமைலோஸ் (Amylose) சத்துகள் அதிகரிக்கின்றன.
புழுங்கல் அரிசி * லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். * ஆலையில் அரைக்கும்போது எளிதில் உடையாது. * ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் விகிதம் (Glysemic Index – கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவு. இரத்தத்தில் சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு உகந்தது. * வெளிப்புற உமி, தவிட்டு வைட்டமின்கள், உமியில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசிக்குள் திணிக்கப்படுவதால், ஊட்டச்சத்து அதிகமாகிறது.
புழுங்கலரிசி உபயோகிக்கும் நாடுகள் உலகில், மொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவீத நெல் வேகவைக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இம்முறையை அதிகம் பின்பற்றும் நாடுகள்.
ஆங்கிலப் பெயர்: ‘அமேசான் வாட்டர் லில்லி’ (Amazon Water Lily) தாவரவியல் பெயர்: விக்டோரியா அமேசானிகா (Victoria amazonica)
அமேசான் நீர் அல்லி, ‘நிம்பேயேசியே’ (Nymphaeaceae) எனப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் இருக்கும் அல்லிகளில் மிகப்பெரியது இதுதான். இதன் தாயகம், தென் அமெரிக்கா. அமேசான் நதியில் காணப்படுகிறது. 40 முதல் 50 இலைகளுடன், 12 மீட்டர் அகலத்துக்கு வளரும். அருகில் வேறு தாவரங்களை வளர விடாது. மிக அகன்ற இலைகள் சூரிய ஒளியைத் தடுப்பதால், இதன் அடியில் நீர்ப்பாசிகள்கூட வளர்வதில்லை. இலைகள் 3 மீட்டர் அகலம் கொண்டவை. வட்டவடிவிலான இலையின் ஓரங்கள் மடங்கி, பெரிய தட்டு போல இருக்கும். இலைகளின் அடிப்பகுதியில், கூரிய இளஞ்சிவப்பு நிற முட்கள் இருக்கும். இலைகளைத் தாங்கும் தண்டு உறுதியானது. 8 மீ. நீளம் உடையது. இந்த இலைகள், 30 கிலோ வரை எடை தாங்கும். குழந்தைகள் அமர்ந்தாலும் இலை நீரில் மூழ்காது. இதன் மலர், 40 செ.மீ. நீளம் இருக்கும். இரவில் நறுமணத்துடன் பூக்கும். இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை முடிந்த அடுத்த நாளில் இளஞ்சிவப்பாக மாறிவிடும். பூக்களின் உள்ளிருக்கும் கதகதப்பால், வண்டுகள் இரவு முழுவதும் பூவுக்குள்ளேயே தங்கிவிடும். அடுத்த நாள், உடல் முழுதும் மகரந்தத்தை பூசியபடி, வேறு மலருக்குச் செல்லும். மாறிய பெயர் இந்த அல்லியை, ‘டாடியாஸ் ஹீன்கி’ (Tadeas Haenke) என்பவர் 1801இல் கண்டறிந்தார். அப்போது, ‘யூர்யேல் அமேசானிகா’ (Euryale amazonica) எனப் பெயர் சூட்டினார். 1849இல் இம்மலர், ‘ஜோசப் பாக்ஸ்டன்’ (Joseph Paxton) என்பவரால் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் முதல் மலர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. விக்டோரியா மகாராணியைக் கௌரவிக்கும் விதமாக, இதன் தாவரவியல் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’ (Victoria regia) என மாற்றப்பட்டது.