ஒரு கருப்பு வெள்ளைப்படம். வெகுகாலம் முன்பு வந்தது. நான் பள்ளியில் படிக்கையில், வீட்டுக்கு தொலைக்காட்சி வந்த புதிதில் பார்த்தது. திரைப்படத்தின் பெயரோ நடிகர்களோ எதுவும் நினைவில் இல்லை, ராஜா ராணி படம் அதுவும் ஒரு அறிவியல் புனைவுக் கதை என்பது  தேசலாக நினைவிருக்கிறது. 

ஒரு கண்ணுக்குத் தெரியாத அரூபக் கதாபாத்திரம்  அந்தப்படத்தில் முக்கியமாக இருக்கும், அது எல்லோரையும் தொல்லை பண்ணிக் கொண்டிருக்கும்.  அதன் அட்டகாசம் நடக்கையில் எல்லாம் ஒருவர் ’’ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள்’’ என்பார். அந்த வசனத்தைத்தான் ஜனவரியில் இந்த வருடத்துக்கான என் பயணம் தொடங்கியதும் எண்ணிக்கொண்டேன். மகனுடன் மனமகிழ்ந்து நீண்ட பயணம், அலைச்சல், பலவித மனிதர்கள், தவிர்க்க முடியாமல் சில கசப்புகள் என்று மீண்டும் தொடங்கி விட்டிருக்கிறது ஒரு புதிய வருடம்.

ஜனவரி முதல் வாரமே  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடும் போர்டில் கலந்துகொண்டு,  முற்பகலில் மீண்டும்  அங்கிருந்து பொள்ளாச்சி புறப்பட்டு,  வழியில்  அமுத சுரபியில் அன்றைய மதிய உணவை ( நான் தான் போணி ) சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்து, தாவரவியல் துறையில் நடந்துகொண்டிருந்த மூலிகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் கலந்துகொண்டு, நன்றி நவில்ந்து, விருந்தினருடன்  புகைப்படம் எடுத்துக்கொண்டு, மறுநாள்  கல்லூரியில் நடைபெற இருந்த பொங்கல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அறைக்குச்சென்று  அவசரமாக தலைவாரிக் கொண்டு மார்கழி மகோத்ஸ்வத்தின் இறுதி விழாவில் ’ஆண்டாள் என்னும் பெருங்காதலி’ என்னும் தலைப்பில் உரையாற்றி, காரில் பாய்ந்து ஏறி வீடு வந்து, மறுநாள் திருச்சியில் அயல் ஆக்கிரமிப்புதாவரங்களை அகற்றுவதாக 12 ஆயிரம் பள்ளிகுழந்தைகள் ஒரே சமயத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்காக செல்லவேண்டி சூட்கேஸில் எல்லாம் எடுத்து வைத்து இரவுணவு தயாரித்து சரணுடன் சாப்பிட்டு, படுக்கப்போகையில் நள்ளிரவாகி இருந்தது. 

மனதுக்குள் ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள் என்றுதான் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சரண் என் உரை மிக நன்றாக இருந்ததாக சொன்னதில் மகிழ்ந்தேன்.. வசிஷ்டர் வாயால்……….

அதிகாலை சரணும், நானும் திருச்சி நோக்கி உடுமலை வழியாக புறப்பட்டோம். வேடசந்தூரில் இருந்து முக்கோணம் செல்லும் வழி எனக்கு எப்போதும் பிரியமானது. முதன்முதலாக பழனியாண்டவர்க் கல்லூரிக்கு அந்த வழியில் பேருந்தில் செல்லும் போது வழியெல்லாம் சூரியகாந்தி பயிரிட்டிருந்தார்கள்.

 ஒரு குழந்தையின் முகம் போல பெரிதாக பிரகாசமான மஞ்சளில் மலர்களுடன் சாலையின் இருமருங்கிலும் உயரமாக, கம்பீரமாக நின்றிருந்த சூரியகாந்திச்செடிகள் வழியெங்கும் உடன்வந்த அந்தப்பயணம் ரம்மியமாக இருந்தது. அதன்பிறகு ஒரு போதும் சூரியகாந்தி அங்கு பயிரிடப்படவில்லை, அவரை, கரும்பு, வாழை என்றுதான் இருந்ததென்றாலும் அன்று மலர்ந்த சூரியகாந்தி மனசில் அப்படியே வாடாமல் நிலைத்து நின்றுவிட்டது.  எனவே அந்தச்சாலை வழியே பயணிப்பது எனக்கு மிகப்பிடித்தமானதொன்றாகி விட்டிருக்கிறது. வழியெல்லாம் எனக்கு மட்டும் அவரைச் செடியில், கரும்பில் எல்லாம் சூரியகாந்தி மலர்ந்திருந்தது.

குளித்தலையில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும  நண்பர்  ஷண்முகம் அவர்கள் வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எனவே குளித்தலை  வழியாகப் பயணித்தோம். 

மேக மூட்டமாக இருந்ததால் புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் மிக அருமையான பயணம். ஸ்பாட்டிஃபையில் குழுவாக இணைந்து கொள்ளும் வசதி இருந்தது எனவே பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி இருவருமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

 நான் ’…..கங்கைக்கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்…..’ கேட்டால், சரண் ’…..ஹே யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலே, ஒன்னப்போல் எவளும் உசிர தாக்கலே…..’ கேட்பான்,  

நான் ’……நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா, அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா….’ கேட்டால், அவன்’ மம்மட்டியானிலிருந்து’’….மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம,உன்ன போல யாரும் இல்ல மாமா …..’’கேட்பான். 

டோல்கேட் பகுதிகளில் ஓய்வறைகள் நன்கு சுத்தமாக பராமரிக்கப்படுவது நெடுஞ்சாலைப் பயணத்தில் ஒரு சௌகரியம். 

ஒரு நெரிசலான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டிருந்தது பலருடன் நாங்களும்  வெகுநேரமாக காத்திருந்தோம். இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் இடுப்புவரை பறந்த கூந்தலுடன் முறையாக ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கொண்டு முன்னால் இருந்தாள். வார்செருப்பிட்டிருந்தாள், பாதங்களின் விளிம்பில் சுற்றிலும் மருதாணி வரம்பிட்டிருந்தது. அந்தப் பாதங்களால் சாலையை உதைத்து உதைத்து மெல்ல முன்னேறினாள்.  தினம் மாபெரும் கரிய சக்கரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நெடுஞ்சாலைக்கு  மருதாணிக்கரையிட்ட அக்கால்களின் அந்த மெல்லிய உதை எத்தனை வசீகரமானதாக இருந்திருக்கும்?

ஸ்ரீ சஷ்டி நாட்டுக்கோழி விருந்து என்று ஒரு கடை பெயர்ப் பலகையைப்பார்த்தேன். வேற பேரே கிடைக்கலையா? 

திண்டுக்கல் மதுரைச்சாலையிலும் ஒரு வேடசெந்தூர் இருப்பதால் வேடசெந்தூரிலிருந்து வேடசெந்தூருக்குச் செல்லும் விசித்திரமன பயணத்திலிருந்தோம், வழியில் மைவாடி, மயிலாடி என்று அழகிய பெயர்களுடன் ஊர்கள் இருந்தன.

மதியம் 12 மணிக்கெல்லாம் குளித்தலை வந்துவிட்டோம். சரணுக்கு குணசீலம் பெருமாள் கோயிலுக்குப் போகவேண்டி இருந்தது.

கையில் வழிபாட்டுக்கு வாழையிலையில் சுற்றிய துளசியும், வாழைப்பழங்களுமாகவே வந்துவிட்ட ஷண்முகம் அவர்களுடன் நேரே  கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்த பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள்  கோயிலுக்கு சென்றோம். 

அன்று சொர்க்கவாசல் திறப்பு என்பதால் நல்ல கூட்டம்.. நடைசார்த்தும் முன்பு கடைசியாக உள்ளே அனுமதிக்கப்பட்டோம். 

இரவெல்லாம் விழித்திருந்ததில் களைத்திருந்த பட்டர்,சுருக்கமாக ஆனால் தெளிவாக செங்கோல் தாங்கி அர்ச்சாவதாரமாக மார்பில் திருமகளுடன்ன்  இருந்த பெருமாளைப் பற்றிச்சொல்லி ஹாரத்தி காட்டினார், வணங்கி வெளியே வந்து சர்க்கரைப்பொங்கல், துளசிப் பிரசாதம், தீர்த்தம் வாங்கிக் கொண்டு, வீட்டில் அவ்வப்போது  வேண்டுதலின்போது மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்த நாணயங்களை உண்டியலில் போட்டுவிட்டு வெளியே வந்தோம். கோயில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் முழுமையாக கோயிலின் சித்திரம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் திருப்தியான தரிசனம்

மனநலம் பாதித்தவர்களுக்கான பிரத்யேக கோயில் இது. எனக்கு இனி எல்லாம் சரியாகிவிடும்.

கோயில் வாசலில் கூட்டமாக ஆடுகள் காத்திருந்து சர்க்கரைப் பொங்கலுக்கு முண்டியடித்தன. இரண்டு கொழுத்த ஆடுகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டேன்.காருக்கடியிலும் இருந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகளை விரட்டிவிட்டு பயணித்தோம், 

வழியெல்லாம் ஷண்முகம் தலபுராணங்களை, வழிபாட்டு முறைகளை, திருத்தல மகிமைகளை, காவிரியின் மணல் கொள்ளையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். நாளொன்றுக்கு 5000 லோடு மணல்  அள்ளப்பட்டது என்பதைக்கேட்கவே மலைப்பாக இருந்தது. 

 வழியெங்கும்  கிளையாறுகளும் கால்வாய்களும்  பெரிய பெரிய வாய்க்கால்களுமாக  நிரம்பித் ததும்பி ஓடிக்கொண்டிருந்தன. நீர்வளம் அப்பிரதேசத்தின் வாழ்வியலை முழுக்க முழுக்கத்  தீர்மானித்திருப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிந்தது. எங்கும்  நெல்லும், வாழையும் பயிராகின. 

நீர் நிறைந்து நின்ற  வயல்களில் பெருங்கோரைகள் ஆளுயரம் வளர்ந்து, பழுப்பில் மலர்க்கொத்துக்களுடன் நின்றன. வேறு பயிர்களுடன் வளர்கையில் அவை களைச்செடிகள் ஆனால் அவையே சாகுபடியாகி பலனுமளிக்கிறது. yes, weeds are right plants in the wrong place.

சாலையோரம் லாரியில் கோரைப்புல்கட்டுக்களை ஏற்றிக்கொண்டிருந்தவர்களிடம் பேசி எப்படி கோரையை பாய் பின்னுவதற்காக மெலிசாகக்கிழிப்பார்கள் என்று செய்து காண்பிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

மஞ்சக்கோரை என்று ஒரு ஊர்ப் பெயரை பார்த்தேன்,

அங்கிருந்து கோரைப்பாய்கள் விற்கும் கடைக்குச்சென்று பந்திப்பாய்கள் வாங்கினேன். 

 இங்கே கொங்குப்பகுதியில்  கோரைப்பாய்கள்கொண்டு வந்து விற்பவர்கள் நான்குமடங்கு விலைசொல்லுவது அப்போதுதான் தெரிந்தது.நல்ல நீளமானப் பந்திப்பாய் 60 ரூபாய் தான். பாயின் ஓரங்கள் ரெக்ஸின் வைத்தது. மெத்தை வைத்துத் தைத்தது,குழந்தைகளுக்கானது என்று பல விதங்களில் பாய்கள் நல்ல தரமானதாக இருந்தன.

கோரை தலவிருட்சமாக இருக்கும்  சாய்க்காட்டில் அருளும் சாயவனேஷ்வரர் கோயிலைக்குறித்து கோரைபற்றிய கட்டுரையில் முன்பு நான் எழுதியதை பற்றிக் காரில் பேசிக்கொண்டே பயணித்தோம். https://logamadevi.in/792

நீர்நிலைகள் அதிகம் இருந்ததால் கோழியிறைச்சிக் கடைகளுக்குப்பதில் ஏராளம் வாத்திறைச்சிக்கடைகளும். பன்றியிறைச்சிகடைகளும்  இருந்தன. வாழையிலை வாழைப்பழங்கள் சாலையோரங்களில் எங்கும் விற்கப்பட்டன.  வேகத்தடைகளில் எல்லாம் முளைத்த தேங்காய்க்குருத்தும் செக்கச்சிவந்த சதைப்பகுதியைக் கொண்டிருக்கும் கொய்யாக்காய்களும் விற்றார்கள்.

ஷண்முகம் அவர்களின் 15 ஏக்கர் விஸ்தீரணமான வாழைத்தோட்டத்துக்குப் போனோம். அந்தப்பிரதேசத்தின் சுவையான ஏலக்கி,  பூவன் போன்ற வாழைகள் தார் விட்டிருந்தன. சில மரங்களில் காய்கள் முதிர்ந்து மஞ்சள் பிடித்து திரண்டிருந்தன.  தூயமல்லி, பொன்னி, பாஸ்மதி என்று நெல்லும் பயிரிட்டிருந்தார்.

அந்தப்பகுதியில் எங்குமே வாழைத்தார் வெட்டியதும், கொங்குப்பகுதியில் செய்யப்படுவதுபோல வாழைமரத்தை அடியோடு வெட்டி தண்டை உரித்தெடுத்து வியாபாரம் செய்வதில்லை. அன்னைமரத்தை அடுத்த சந்ததி வளருகையில் உடன் நிற்க அப்படியே விட்டுவிடுகிறார்கள். மெல்ல அழிந்துகொண்டிருக்கும் அன்னையினருகாமையில் கன்றுகள் செழித்துவளர்கின்றன

புதிதாக இந்த முறையைக் கேள்விப்படுகிறேன்

வாழைக்காய் வியாபாரம் குறித்து வெற்றிகரமான வாழைவியாபாரியான ஷண்முகம்  சொல்லிக்கொண்டிருந்தார். வாழைக்கன்று ஒரு தோட்டத்தில் நட்டுவைக்கப்படுகையிலேயே அதன் விலையை நிர்ணயித்து, விளைந்தபின்னர்  வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது. 12 மாதப் பயிரென்பதால் விளைச்சலின் போது, விலைவாசியின் நிலவரத்தைப்பொறுத்து  லாபமோ நஷ்டமோ அது ஒப்பந்தம் செய்தவர்களுக்குத்தான். ஷண்முகம் ‘….மூணு சீட்டுமாதிரிதாங்க…’ என்றார்.  நூற்றாண்டுகளுக்கு முன்பு ட்யூலிப் மேனியாவும் இப்படித்தான் நிகழ்ந்தது

விவசாயத்தைக்காட்டிலும் பெரும் சூதாட்டம் வேறு இருக்க முடியாது.. ஷண்முகம் இயற்கை விவசாயி எனப்து மகிழ்வளித்தது.

சண்முகம் ஒரு தகவல் சுரங்கம், வழியெங்கும் இருந்த கட்டிடங்கள் கோயில்கள் என்று பலவற்றைக் குறித்து விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்,

மாபெரும் கண்டெய்னர் லாரிகள் நாகப்பட்டினம்-திருச்சிச் சாலையில்  துறைமுகங்களுக்கு சென்றபடியே  இருந்தன. அங்கிருந்து  ரத்னகிரீஷ்வரர் மலைக்கோயில் அடிவாரம் வரை சென்று காரிலேயே கிரிவலம் வந்தோம். நேரம் 2 மணியைத் தாண்டி விட்டிருந்தது.

அந்த மலையில் இன்றும் மண்ணைக் கிளறினால் சிறிதும் பெரிதுமாக ரத்தினங்கள் கிடைக்கிறதாம், மழைக்காலங்களில் ஊர்மக்கள் குச்சியுடன் மலையில் அங்கும் இங்குமாக கிளறிக்கொண்டிருப்பதை பார்க்கலாம் என்றார் ஷண்முகம்.

மலையெங்கும் குரங்குக்கூட்டங்கள் . அங்கு மூன்று குரங்கு ’குரூப்’ இருப்பதாகச் சொன்னார். மலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கூட்டம் மற்றவற்றை அண்ட விடுவது இல்லையாம். குரங்குகளுக்கு அடிக்கடி வாழைப்பழங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகச்சொன்னார்.

குரங்குகள் ஆவலாக வாழைப்பழங்கள் உண்ணும் காணொளிகளையும் பார்த்தேன், 

மீண்டும் ஒரு கோவிலுக்குச்சென்று நடை சார்த்தும் சமயமாதலால் வெளியிலிருந்தே வணங்கிவிட்டு புறப்பட்டோம்.  பல நெல்வயல்களில் சமீபத்திய மழையினால் பொன்னாக விளைந்திருந்த நெற்ப்பயிர்கள் முழுக்கச் சாய்ந்திருந்தன. பலவயல்களில் அறுப்பு நடந்து கொண்டிருந்தது.

வழியெங்கும்  வெள்ளைவெளேரென்று நாரையிறகுபோல நாணல்கள் மென்பூக்குலைகளுடன் நீர்நிலைகளின் கரையோரம் கூட்டமாக நின்றன.

12 மணிக்குப்பிறகு நான் பசி தாங்க மாட்டேனென்பதால் சரண் திரும்பித் திரும்பி என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினான். நான் பயண அனுபவங்களில் திளைத்து பசியை மறக்கடித்துக் கொண்டிருந்தேன்.

ஷண்முகம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தோகைமலையில்  இருந்து உறவினரின் தொலைபேசி அழைப்பு வந்தது.

அன்று மாலை ஊசாத்து இருப்தால் வந்துவிடும்படி கேட்டுக்கொண்டார் எதிர்முனையில் இருந்தவர்.

’…என்னது ஊசாத்து…?’ என்று விசாரித்தேன்,விளக்கினார்.

ஊர்ச்சாட்டுதல்தான் காலப்போக்கில் மருவி ’ஊசாத்து’ ஆயிருக்கிறது

கார்த்திகை தீபம் முடிந்ததும் மழை நிற்க வேண்டும் அதன்பிறகும் மழை தொடர்ந்தால் விவசாயம் பாதிப்பதோடு நீரினால் பரவும் நோய்களும் ஊருக்குள் பரவும் என்பதால்  மழைபோதும் என்பதற்காக நோன்பு சாட்டி ஊரின் நான்கு எல்லயிலும் ஆடு அறுத்து செய்யும் சடங்கு பலகாலமாக நடந்துவருகிறது.

ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டேன்.

மழை வேண்டி யாகம் செய்யும், மழையை நம்பியே வாழும் ஒரு பகுதியிலிருந்து மழை போதுமென்று வேண்டிக்கொள்ளும் நீர்வளமிக்க பகுதிக்கு வந்திருக்கிறேன்

நகருக்குள் செல்லும் வழியில் பல இடங்களில் ஷண்முகம் அவர்களுக்குச்சொந்தமான  பல வீடுகள், காம்ப்ளக்ஸ்கள், கடைகள் அலுவலகங்களைப் பார்த்தோம். நகருக்குள் அவரது பெரிய வீடு இருந்தது. கீழிருந்து பார்க்கையிலேயே  மேல்தளத்தில் இரு படுக்கையறைகளின் பால்கனிகள் உருமால்போல உருண்ட பெரிய வளைவுகளுடன் அலங்காரமாகத் தெர்ந்தன.

தேக்கும் ராஜஸ்தான் மார்பிளுமாக இழைத்து இழைத்துக் கட்டியிருக்கும் வீடு.

 அவரின் இருமகன்களையும்,மனைவியையும் அறிமுகம் செய்து கொண்டோம்

மாபெரும் உணவு மேசையில் கரும்பு, வாழைப்பழச் சீப்பு. மூங்கில் கூடைகளில் காய்கறிகள் எல்லாம் ஒருபக்கம் வைக்கப்பட்டிருந்தன. டிபிக்கல் வளமான விவசாயின் வீடு.

தலைவாழை இலையில் நல்ல ருசியான சைவ சாப்பாடு.  வாழைப்பூ வடை,மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் வறுவல்  அவரைக்காய் பொரியல், கூட்டு, அப்பளம், பாயஸம் என்று விரிவான மெனு. 

புறப்படுகையில் கார் டிக்கியில் ஒரு ஏலக்கி வாழைத்தாரை வைத்துவிட்டு எங்களுடன் ஸ்ரீரங்கம் வந்தார் ஷண்முகம். 

ஸ்ரீரங்கத்திலும் சொர்க்கவாசல் திறபபாதலால் பெருங்கூட்ட நெரிசல் இருந்தது. சாலையே மக்கள் வெள்ளத்தால் நெரிந்தது. கோயில் காளைகளும்  சாலையெங்கும் திரிந்தன.

ஏராளமான சாலையோரக் கடைகளில் மலர்களும், பெரிய பெரிய கூடைகளில் கலவைக்காய்கறித் துண்டங்களும் விற்கப்பட்டன.

ஏகாதசி அன்று கலவைக் காய்ச்சமையல் செய்வார்களாம்.

ஊரெங்கும் ரங்க விலாஸ், ரங்க மாளிகை, ரங்கா டிபன் சென்டர், ரங்கா லாட்ஜ் என்று ரங்க மயம்.  

சிறுமழைதூறிக்கொண்டிருந்தது பக்தர்களின் வரிசை நீண்ண்ண்ண்ண்டிருந்தது.  கோவிலுக்குச்செல்லும் எல்லாச்சாலைகளும் பாதுகாப்புக்கருதி  அடைக்கப்பட்டிருந்தன.  கார் நிறுத்தத்திலிருந்து வெகுநேரமாக சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்திருந்ததால் கூடுதல் கெடுபிடி.

 என்னால் நிச்சயம் அந்த நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாது எனவே வெளியிலிருந்து வணங்கிவிட்டு புறப்பட்டோம். அத்தனை நீண்ட் வரிசையில் நின்றிருந்தால் நிஜமாகவே சொர்க்க வாசலையோ நரகவாசலையோ திறந்து என்னை உள்ளே அனுமதித்திருப்பார்கள்,

 கோயில் அருகில் இருந்த ஒரு காபிக்கடையில் நல்ல டிகிரி காப்பி குடித்கோம், அருமையான கள்ளிச்சொட்டு டிகாக்சன் காப்பி . அங்கிருந்து கார் நிறுத்தத்திற்கு ஆட்டோவில்தான் போகவேண்டி இருந்தது.

பின்னர் நாங்கள் திருச்சியில் தங்கவிருந்த விடுதிக்கு எங்களைக்கொண்டு வந்துவிட்டுவிட்டுத்தான் ஷண்முகம் கிளம்பிச் சென்றார்

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த விடுதியில் அறை எப்படியோ குழப்பத்தில் இல்லாமலாகி இருந்தது.  அங்கிருந்து மீண்டும்  சாலைப்போக்குவரத்து நெரிசலில் நீந்தி நீந்திப் பயணித்து இன்னொரு விடுதிக்குச்சென்று அங்கு பினாயில் வாடையடித்த அறையைப்பார்த்து வெறுத்துபோய்த் திரும்பி மீண்டும் சாலையிலேயே நெடுநேரம் காத்திருந்து மற்றொரு விடுதிக்கு வந்து சேர்ந்தபோது பாதங்களிரண்டும் பூரிபோல வீங்கி இருந்தது.களைத்திருந்தேன்.

தொடரும்