இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.
சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.
எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்
. ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.
.. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“
என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.
அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?
கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.
தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.
கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.
ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை
இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.
இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.
..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.
..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..
..நானா, நான் எப்படா சொன்னேன்..?
... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.
..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..
“... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.
வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.
சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.
அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.
அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.
தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.
// இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ
ஜெ தளத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் அவருக்கு வழங்க விருப்பதாக செய்தி வந்ததுமே அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு தக்ஷசீலா பல்கலைக்கழகத்துக்குச் செல்லவேண்டும் என முடிவெடுத்தேன். ஜெ மீது இருக்கும் மரியாதை ஒரு பக்கம், முனைவர் பட்டத்தின் மீது இருக்கும் மரியாதை மறுபக்கம் என எனக்கு இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது.
முனைவர் பட்டத்தின் மீதான வசீகரம் எனக்கு இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்று முதுகலை தாவரவியல் படிப்பில் சேரும் போது முனைவர் பட்ட ஆய்வுகளைக் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. அங்கு சென்று அதைத் தெரிந்துகொண்டு அந்தபட்டத்தின் மீது பித்துப்பிடித்ததை ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்.
நான் முதுகலை வகுப்பில் சேர்ந்து ஒரு வாரத்திலேயே tribal pulse -ல் ஆய்வு செய்த ராஜாராம் என்பவரின் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித்த்தேர்வு நடந்தது. எல்லா மாணவர்களும் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது, என்னவோ மீட்டிங் என நானும் போய் உட்கார்ந்திருந்தேன், அப்போது துணைவேந்தராக ஜெனிடிக் எஞ்சினீயரான மாரிமுத்து இருந்தார்.அவரும் அரங்கில் இருந்தார். ராஜாராம் அண்ணன் அவரது ஆய்வு முடிவுகளை வழங்கினார் நான் அசுவராஸ்யமாக கையில் என்னவோ சாப்பிடக் கொடுத்திருந்தார்கள் அதை பின் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
திடீரென இனிமேல் ராஜா ராம் டாக்டர் ராஜாராம் என அழைக்கப்படுவார் என்று துணைவேந்தர் சொல்ல அனைவரும் பலமாக கைதட்டியதும் பித்துபிடித்தது போலானது. 12ம் வகுப்பு முடிந்ததும் டாக்டருக்கு படிக்க விரும்பினேன்.லட்சக்கணக்கில் செலவாகும் முடியவே முடியாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். பிறகு கால்நடை மருத்துவமாவது படிக்கக்கேட்டேன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் அந்தப்படிப்பு படிப்பவர்கள் காக்கி பேண்ட் ஷர்ட் போடவேண்டும். நம்ம குடும்பத்துப் பெண்கள் பேண்ட் ஷர்ட் போடுவதா என அதுவும் கைவிட்டுப் போனது.
எனவே தாவரவியல் படித்தும் டாக்டர் ஆகலாம் என்பது அன்றிலிருந்து ஒரு ஜுரம் போல என்னைப் பிடித்துக்கொண்டது, பிறகு நான் தென்னை நார்க்கழிவில் ஆய்வு செய்து மூன்றே வருடங்களில் முனைவராகி டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டது தனிக்கதை. இந்தக்கல்லூரியில் வேலைக்குச்சேர்ந்த புதிதில் கையெழுத்திடுகையிலும் பெயருக்கு முன்னால் dr என்று போட்டு அப்போது துறைத்தலைவராக இருந்த ss sir லோகமாதேவி, இங்க வா என்ன சைன் போடும்போதும் இப்படி டாக்டர்னு போடுவியா என்று ஒரு நாள் கடிந்துகொண்டபோதுதான் அது தவறென்று தெரிந்தது.;)
எனவே இந்த விழாவுக்குப் போவதென்று முடிவு செய்து கோவையிலிருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் என்னை அழைத்துப்போவதாகவும் மற்றொருவர் உடன் இணைந்துகொள்வதகவும் சொன்னார்கள். நம்பினேன்.
நவம்பர் விடுமுறைக்காலம் என்பதால் ஒத்துக்கொண்ட ஒரு நிகழ்வுக்காக இடையில் சென்னை செல்லவேண்டி இருந்தது சென்னையிலிருந்து வந்த அன்று கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி. மறுநாள் திண்டிவனம் செல்லவேண்டும். சென்னையிலிருந்தே கோவை நண்பர்களிடம் பேசியபோது கட்டாயம் போகலாம் என்று சொன்னதால் அதைக்குறித்து கவலையில்லாமல் இருந்தேன், ஆனால் அன்று மாலையில், என்னை அழைத்துச் செல்வதாக சொன்னவர் பல்கலைக்கழக நிகழ்வன்றே அவரது தொழில் சார்ந்த ஒரு மீட்டிங் இருப்பதால் அநேகமாக வர முடியாது என்றார். திகைப்பாக இருந்தது அப்படி கட்டக்கடைசியில் சொன்னால் நான் மாற்று ஏற்பாடுகள் கூட செய்யமுடியாது.
உடன் வருவதாகச்சொன்ன மற்றொருவர் நான் அழைத்துக்கேட்ட பின்னர் கேப்பிட்டல் லெட்டரில் NO என்று பதில் அனுப்பினார்.
அத்தனை தூரம் தனியே செல்வதும் தனியே அறை எடுத்துத்தங்குவதும் எளிதல்ல. ஒரே நாள் நிகழ்வுகளுக்கு நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை ஆனால் இது அப்படியல்ல எனவே நிஜமாகவே மனமுடைந்தேன்.
மாலை சரண் தருணிடம் வீடியோ அழைப்பில் பேசும் போது கண்கலங்கினேன். சரண் ’’உனக்கு தனியா போக என்ன கஷ்டம்? நான் ரூம் போட்டுத்தரேன்’’ என்றான், மகன்கள் ஒருபோதும் நான் மனக்கஷ்டப் படுவதை அனுமதிப்பது இல்லை. கூடவே சரண் நான் கோவை நண்பர்களைக் குறித்து குறைப்பட்டுக் கொண்டபோது ’’யாரையும் குறையா சொல்லாத மீ, அவங்களுக்கு என்ன நெருக்கடியோ விடு, நான் உன்னை எப்படியும் அனுப்பறேன் , பாண்டிச்சேரிக்கு போய் அங்கே தங்கிட்டு அங்கிருந்து 1மணி நேரத்தில் அந்தபல்கலைக்கழகம் இருக்கும் போயிட்டு வந்துரு செலவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே உனக்கும், டிரைவருக்கும் தனித்தனியா நல்லரூம் போட்டுத்தறேன்’’ என்றான் சரணின் மனமுதிர்ச்சி எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும்,
நான் தயங்கினேன், உடனே தருண் ’’ மீ நான் 3 நாள் லீவ் போடறேன் இன்னைக்கு நைட் கிளம்பி பஸ்ஸில் பொள்ளாச்சி வரேன் காலியில் நேரத்திலயே புறப்படலாம் நான் உன் கூட வரேன் கவலைப்படாமல் வா ஜாலியா போயிட்டு வரலாம்’’ என்றான். தருண் எப்போதுமே சரணைப்போலவே படிப்பில் அக்கறை கொண்டவன் வருகை 100 சதவீதம் இருப்பதில் மிகக் கவனமாக இருப்பவன் ஆனாலும் 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவே புறப்பட்டான்.
நானும் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வெளியூரிலிருந்து வந்த பேராசிரியர்களுக்கெல்லாம் சன்மானத்தொகையை வாங்கிக் கொடுத்து அவர்களை அனுப்பவே பின்மாலையானது. பின்னர் கார் டயர் சோதித்து பெட்ரோல் டேங்க் நிரப்பி வீடுவந்து சேர்ந்து கைக்குக்கிடைத்த உடைகளை அவசரமாக எடுத்து வைத்து உறங்கச் செல்லும்போது, டிரைவர் அழைத்து தனக்கு காய்ச்சலென்றும் பாண்டிச்சேரி வரமுடியாதென்றும் சொன்னான். அயர்ந்துபோனேன். எத்தனை தடங்கல்கள்
பிறகு 10, 15 ஆக்டிங் டிரைவர்களைக் கேட்டு அலுத்துப்போய் எப்படியோ ஒருவனைப்பிடித்தேன். தருண் டிரைவர் கிடைக்கலைன்னா நானே ஒட்டிட்டுவரேன் என்றான் எனினும் இரவெல்லாம் பயணித்து வந்து மீண்டும் 450கிமீ ஓட்டுவது எளிதல்ல என்பதால் ஒரு டிரைவரை அமர்த்திக்கொண்டேன்.
மறுநாள் காலை நல்ல மழை. 8 மணிக்குப் புறப்பட்டு அருமையான சாலையில் பொறுமையாகப் பிடித்த பாடல்களைக்கேட்டபடி பயணித்து மதியம் 3 மணிக்கு பாண்டிச்சேரி வந்தோம்.
சரண் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலும் அறையும் மிக நன்றாக இருந்தது. நல்ல குளிர், மாலை கடற்கரைக்கு சென்றோம் நானும் தருணும்.
பாண்டிச்சேரி அத்தனை ஜனத்திரள் இல்லாமல் இருந்தது டீக்கடைகளில் துணிக்கடைகளில் சாலைகளில் எங்குமே கூட்டமில்லை, 70-களில் சென்னை இருந்தது போல் என்று நினைத்துக்கொண்டேன். கடற்கரையிலும் கூட்டமில்லை.
கடலைப்பார்த்தபடி ஒரு தம்பதி பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அந்தி சாய்ந்துகொண்டிருந்தது மேகமூட்டமாகவும் இருந்ததால் வானும் கடலும் இணைந்து அவர்களுக்கெதிரே கருநீலத்தில் ஒற்றைப்பெரும் பரப்பாய் விரிந்திருந்தது. தருண் அவர்களை பின்னாலிருந்து அழகாக ஒரு புகைப்படம் எடுத்தான். முகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்ததால் அவர்களிடம் நானும் அவனுமாகப்போய் அதைக்காட்டி அவர்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விட்டு புகைப்படத்தை அழித்துவிடுகிறோம் என்று சொன்னோம் இருவரும் ஒரே குரலாக போட்டோ எங்களுக்கு வேண்டாம் அழித்துவிடுங்கள் என்றார்கள்.
எனக்கு ஒரே ஆச்சர்யம் ’’அத்தனை அழகான புகைப்படம் அது அதைப்போய் வேண்டாம்னு சொல்றாங்களே? என்னை யாராவது இப்படி எடுத்திருந்தா அதை ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி இருப்பேன்’’ என்று புலம்பிக்கொண்டெ வந்தேன் தருண் மெதுவாக ’’இல்லம்மா ஒருவேளை அவங்க கணவன் மனைவியா இல்லாமல் கூட இருக்கலாமில்லையா ஏதோ நிம்மதியா உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க நாம போட்டோ எடுத்திருக்கக்கூடாது விடு’’ என்றான். இந்த மனமுதிர்ச்சியும் ஆச்சர்யமாக இருந்தது.
கடற்கரையில்தான் விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு பெரும் கூட்டமாக பாண்டிச்சேரி வந்திருப்பதை தெரிந்துகொண்டேன், எல்லாருமே கடற்கரையில் இருந்தார்கள். ஜெ அத்தனை நேரம் அங்கே இருந்துவிட்டு அப்போதுதான் புறப்பட்டார் என்றார்கள்.
கடற்கரை முழுக்க கற்பாறைகள் இருந்ததால் கடல்நீரில் கால் நனைக்க முடியவில்லை. கால் நனைக்காமல் பிறகென்ன கடல்? நான் ஆர்வமிழந்து திரும்பலாம் என்றேன். கடற்கரையெங்கும் கொகோலோபா யுவிஃபெரா என்னும் கடல் திராட்சை மரங்கள் நின்றன கூடவே தென்னையும் புன்னையும் பூவரசும் கொஞ்சமாக.
மறுநாள் காலையில் மணக்குளம் விநாயகர் கோவில் போனோம். பிரபலமான கோயில் என்றார்கள். அல்லியும் தாமரையும் அருகும் கட்டுக்கட்டாக விற்றுக்கொண்டிருந்தார்கள். சேவித்துவிட்டு வெளியே வருகையில் கொஞ்சம் செவ்வல்லி மலர்களை வாங்கிக்கொண்டேன். கோவிலுக்கு உள்ளே போகையில் அல்லிகளைக் கொண்டுபோனவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள்.
வாசலில் வெண்பொங்கல் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் தருணும் தங்கி இருந்த ஹோட்டலில் காம்ப்ளிமென்ட் காலை உணவை சாப்பிட்டிருந்தோம். அதிலும் இந்த வாரம் சொல்வனத்துக்கு ஜெ வும் அருணாவும் மேப்பிள் மரங்களுக்கிடையில் நின்றிருந்த புகைப்படங்களைப் பார்த்ததால் உணவு குறித்த தொடருக்கு அடுத்ததாக மேப்பிள் சிரப் பற்றி எழுதலாம் என்று முந்தினநாள் இரவுதான் தருணிடம் சொன்னேன். காலை உணவில் மேப்பிள் சிரப்பும் பேன்கேக்கும் வைத்திருந்தார்கள். நான் முதன்முதலாக அங்குதான் சுவைத்தேன் அதை. எனவே பசிக்கவில்லை.
பொங்கலை தொன்னையில் நிறைத்து அடுக்கி வைத்திருந்தார்கள் அத்தனை வேண்டாம் ஆனால் கோயில் பிரசாதம் சாப்பிடவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றேன்.
பொங்கலைக் கொடுத்துக்கொண்டிருந்த இருவரில் ஒரு பெண் முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு ’’அந்தப்பக்கம் வாங்க’’ என்றார். நான் ’’எனக்கு அத்தனை வேண்டாம் எனவே காலித்தொன்னையை எடுத்துக்கொண்டு கொஞ்சமாக வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி தொன்னையை எடுத்தேன் அவர் மீண்டும் நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்து ’’அந்தப் பக்கம் வச்சிருக்கும்மா’’ என்றர் சிடுசிடுப்புடன் நான் பொறுமை இழக்காமல் எனக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லி ஒரு ஸ்பூன் அளவு வாங்கிக் கொண்டேன். நானும் தருணுமாகச்சாப்பிட்டோம். சுவை அபாரமாக இருந்தது. உணவு அளிப்பவர்கள் கொஞ்சம் மனமுவந்து முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாலென்ன?
பின் அச்சுபிச்சு என்று என்னன்னவோ விற்கும் கடைகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்கெங்கிலும் மதுபானக்கடைகள் இருந்தன வடிசாலைகளும் நிறைய. பெண்கள் எல்லோருமே பேரழகாக, மிகப்பொருத்தமாக அழகிய நவீன உடைகளில் இருந்தார்கள். தருணை விட நான்தான் பெண்களை அதிகமாக வேடிக்கை பார்த்தேன். தருண் பாண்டிச்சேரி போன்ற ஒரு இடத்திற்கு தனது இளமையின் உச்சத்தில் அம்மாவுடன் வரவேண்டி இருந்த துயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி வருந்தினான். ’’இன்னொரு நாள் நண்பர்கள் கூட வந்துக்கோடா இப்ப என்ன பெங்களூருவில் இருந்து பக்கம்தானே?’’ என்று சமாதானம் பண்ணினேன்.
முற்பகல் 11. 45-க்கு 5 கார்களில் பாண்டிச்சேரி நண்பர்கள் இணைந்து பல்கலைக்கழகம் செல்லலாம் என நண்பர் சிவாத்மா தெரிவித்திருந்தார். எனவே குறிப்பிட இடத்துக்கு வந்தோம். அங்கிருந்து எல்ல்லாருமாக பல்கலைக்கழகம் சென்றோம். மாபெரும் கட்டிடங்களால் ஆகி இருந்தது பல்கலைக்கழகம்.
எல்லோருமே குடும்ப விழாவுக்கான மனநிலையில் இருந்தோம். நான் உள்ளே வரும்போது ஜெ வும் அருணாவும் மதிய உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஜெ வுக்கு வாழ்த்துச் சொன்னேன். தருண் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தி தெரிவித்தான்.
எங்கள் அனைவருக்குமே உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டு நிகழ்வு அரங்கிற்கு வந்தோம். முந்தின நாளே அந்தப்பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மகாகவி என்னும் ஒரு பெண் என்னை அழைத்துப் பேசி இருந்தாள். நாங்கள் அவசரமாக இடம்பிடித்து அமர்ந்து கொண்டோம்.விழா சிறப்பாக நடந்தது. ஜெ வரும்போதும் பேசும் போதும் அவரைக்குறித்து ஆவணப்படம் போடப்பட்டபோதும் பட்டம் அளிக்கப்பட்ட போதும் ரஜினி படத்துக்கு ரசிகர்கள் செய்வதுபோல் நாங்கள் கூச்சலிட்டு கைதட்டி கத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் கூட அமைதியாக இருந்தார்கள்.
ஜெ சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசினார். பி டி உஷாவும் இருந்தார் அவரும் சுருக்கமான உரைதான். விழா முடிந்து ஜெ வும் முக்கியஸ்தர்களும் உள்ளே சென்றார்கள். ஜெ கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றார்.
நானும் தருணும் இன்னும் சிலருமாக அவரைச்சந்திக்க அங்கே செல்லமுயன்றபோது ஒரு பெண் குறுக்கிட்டு தடுத்து ’’யாரைப் பார்க்கணும்? என்றாள் நான் ’ஜெ’ வை என்று சொன்னேன். அவரைப்பார்த்து ’’விஷ் பண்ணவா? என்றாள். ‘’ஆம்’’ என்றேன். ’’மேம் அவர் இப்போ கான்ஃபெரென்ஸ் ஹாலில் இருக்கார் அங்கெல்லாம்’’ என்று அவள் சொல்லத் துவங்கையிலேயே உள்ளிருந்து விஷ்ணுபுரம் நண்பர் ஒருவர் வேகமாக வெளியே வந்து என்னிடம் ’’ஜெ எல்லாரையும் உள்ளே வரச்சொல்லறார்’’ என்று கூவினார். திகைத்துப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பெண்னை சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு நானும் மற்றவர்களும் திமு திமுவென உள்ளே போய் ஜெ வை சூழ்ந்துகொண்டோம்
ஜெ உற்சாகமாக இருந்தார். முகம் கொள்ளாத சிரிப்பு வழக்கம் போல. அவருக்கு பொன்னாடை போர்த்துவதும் புகைப்படம் எடுப்பதும் வெடித்துச் சிரிப்பதுமாக டிபிகல் விஷ்ணுபுர கூடுகை அது. ’’எல்லாரையும் உள்ளே வரச்சொல்லுங்க எல்லாரையும் வரச்சொல்லுங்க’’ என்று ஜெவும் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார்.
அந்தப்பல்கலைக்கழகம் இப்படி ஒரு முக்கியஸ்தரைச் சுற்றி இந்தனை பேர் கூட்டமாக நின்று கட்டித் தழுவிக் கொண்டாடுவதை அதுவரையிலும் பார்த்திருக்க மாட்டர்கள் இனியும் பார்க்கப்போவதில்லை. அன்பெனும் பெரு வெளி அது.
பாண்டிச்சேரி நண்பர்கள் சார்பாக ஜெ வுக்கு ஒரு சாக்லேட் மாலை போடப்பட்டது. நான் முதன்முதலாக இப்படி சாக்லேட்டில் மாலை போடுவதைப் பார்க்கிறேன். அந்த மாலையை ஜெ கழற்றிய மறுநிமிடம் நண்பர்கள் அதிலிருந்து சாக்லெட்டுகளை பிய்த்தெடுத்து சாப்பிட்டு எனக்கும் ஒன்று கொடுத்தார்கள்.கட்டற்ற அன்பும் பிரியமும் ஜெ’வை சூழ்ந்திருந்தது.
நான் அவருக்கு பொன்னாடை அளித்தபோது ’’தருண் எங்கே’’ என்று கேட்டு அவனை வரச்சொல்லி இறுகத் தழுவிக்கொண்டார். எனக்கு பெருமிதத்தில் மூச்சடைத்தது.
பிறகு விடைபெற்றுக்கொண்டு அறைக்கு வந்தோம். சிவாத்மா இரவுணவை சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் தருண் அசைவம் சாப்பிட விரும்பினான். சிவாத்மாவுடன் அசைவம் சாப்பிடுவது அத்தனை சரியாக இருக்காது என்பதால் அவரிடம் சொல்லி விட்டு அகரமுதல்வன் பரிந்துரையின் பேரில் மன்னா மெஸ்ஸில் சாப்பிட்டோம். உணவு சுவையாக இருந்ததோடு பரிமாறிய பெண்களும் அத்தனை வாஞ்சையுடன் அருகிருந்து பார்த்துப்பார்த்து பரிமாறினார்கள். என்னவோ உறவினர்கள் வீட்டுக்கு போய்ச் சாப்பிட்டதுபோல் இருந்தது.
தருணை அங்கிருந்தே பெங்களூரு அனுப்பி விட்டு மறுநாள் காலை புறப்பட்டு 3 மணிக்கு வீடுவந்தேன். என்னமோ நானே மீண்டும் ஒரு பெரிய பட்டம் வாங்கினதுபோல பூரித்திருந்தேன்.
இன்று மாலதிக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே வாழ்த்தினேன். என் நட்பு வட்டம் மிகமிகச்சிறியதும் குறுகியதும். கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி யாரிடமும் நெருங்கிப்பழகுவதில்லை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அவர்களையும் நிறுத்தி நானும் கோட்டிற்கு வெளியே நின்று கொள்வதுதான் வழக்கம். அரிதாகவே நான் மிக நெருங்கி நட்பும் அன்பும் கொள்கிறேன்.
கல்லூரியில் மாலதியுடன் மட்டுமே நான் மிகுந்த பிரியமும் நட்பும் கொண்டிருந்தேன். வழக்கமாகவே நான் ஆசிரியர் அறையிலும் அமைதியாக என் வேலை, வகுப்பு. ஓய்வு நேரங்களில் வாசிப்பு என இருப்பேன். வம்பளப்பிலும் கலந்துகொள்வதில்லை. டீ காபி குடிக்க கேண்டீன் போவதே இல்லை. எப்போதாவது என்னைப்பார்க்க விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் கேண்டீன் போய் காபி வாங்கிக்கொடுத்து நானும் குடிப்பதுண்டு இது வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.
ஒருமுறை அப்படி திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு கேண்டீன் போய் காபிக்கு சொல்லிவிட்டு பேராசிரியர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட இடத்தில் அவருடன் அமர்ந்திருக்கையில் மேசையைத் துடைத்து சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் என்னை ‘’.. இங்கெல்லாம் உட்காரக்கூடாதும்மா இது டீச்சர்கள் உட்காரும் இடம்..’’ என்று அதட்டினார்.
பக்கத்து மேசையில் உணவருந்திக்கொண்டிருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் பதறி ’’…ஏய்.ஏய் என்னப்பா இவங்க இங்கே 20 வருஷமா இருக்காங்க . அவங்களைபோயி..’’என்று அவரைக் கண்டிக்க எழுந்தார். நான் சிரித்தபடி அவருக்கு என்னைத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சமாதானம் செய்தேன். அந்த அளவில் தான் நான் கல்லூரி வளாகத்தில் புழங்குகிறேன்.
அப்படி வெகுகாலம் முன்பு எதற்கோ வரலாற்றுத்துறைப் பேராசிரியருடன் கேண்டீனுக்குபோயிருக்கையில் நல்ல கூட்டமென்பதால் ஒருமேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலதியின் எதிரே அதே மேசையில் அமரவேண்டி இருந்தது, மாலதியை வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அறிமுகம் செய்தார், ஹல்லோ சொல்லிக்கொண்டோம்.
மாலதி பணிபுரியும் ஆங்கிலத்துறையில் அன்று யாருக்கோ பிறந்த நாள் எனவே சக ஆசிரியர்களுக்குக் கேண்டீனில் மதிய உணவு ட்ரீட். மாலதிக்கு வகுப்பு இருந்ததால் தாமதமாகத் தனியாக வந்து உணவருந்திக்கொண்டிருந்தாள். மாலதி அழகாக நளினமாக சாப்பிட்டதைப் பார்த்தேன் கூடவே உணவை ரசித்தும் சாப்பிட்டாள்.
(ள் விகுதி நானும் மாலாவும் தோழிகள், இருவருக்கும் சமவயது மற்றும் அன்பினால்)
மிக அழகாகக் கைவிரல் நுனிமட்டும் சாப்பாட்டில் படும்படி மெதுவாக அவ்வபோது உதட்டைத் துடைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஒரு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டாள்.
எனக்குச் சாப்பாட்டை ரசித்துப் பிகுபண்ணிக்கொள்ளாமல் சாப்பிடுபவர்களைப் பிடிக்கும். ’’….சாப்பிடறீங்களா…’’ என்று யாரேனும் கேட்டால் உடனே சரி என்று சொல்லுபவளாதலால், அப்படி என்னைப்போலவே சரி என்பவர்களையும் பிடிக்கும். அந்தக்கணத்திலிருந்து நானும் மாலதியும் தோழிகளானோம். நாஞ்சில் நாடனை ,ஜெவை, சுந்தரராமசாமியைல்லாம் வாசிக்கும் ஒருவரை நான் கல்லூரியில் சந்திப்பேனென்று நினைத்திருக்கவே இல்லை.
சிலநாட்களில் இருவருக்கும் பொதுவான தோழியான (சுதந்திரா அம்மா) உமாவுடன் மாலதியின் வயலூர் தோட்டத்துக்கு போயிருந்தேன். முதுகலைப் பட்டதாரியான மாலதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் தென்னைமரங்களின் நிழலில் கயிற்றுக்கட்டிலைபோட்டுக்கொண்டு அமர்ந்து ஜெ வின் ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அந்தக்காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்மீது அன்று கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அபி நிலாவும் இனிய மதியும் சுதந்திராவும் வாய்கொள்ளாமல் அத்தை அத்தை என்றழைக்கும் மருமகள்களாகினர். சரணும் தருணும் அத்தை மாமாவென்று அவர்களுடன் ஒட்டிக்கொண்டார்கள்.
நாங்களிருவரும் கல்லூரியில் தினமும் பார்த்துக்கொள்வது, மாலதியின் தோட்டதுக்கு நாங்களும், இங்கே வீட்டுக்கு மாலதி குடும்பத்தினரும் அடிக்கடி சென்று வந்துகொண்டும் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வதுமாக இருந்தோம். தாவரவியல் ஆசிரியர்கள் அறைக்கு நேர் கீழே மாலதியின் அறை இருந்தது. சில சமயம் நான் எனக்குக் கீழே மாலா இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொள்வேன்.
மாலதி சுயநிதிப்பிரிவில் பணியாற்றியதால் 10-4pm அவளது பணிநேரம். எனக்கு 9-3pm. பெரும்பாலும் நான் 9 மணி வகுப்பிலிருப்பேன். புத்தம் புதிதாக மாணவர்களைச் சந்திப்பதிலும் அவர்கள் சோர்வடையும் முன்னரே உற்சாகமாகக் கற்பிப்பதிலும் நான் கவனமாக இருப்பேன், டைம்டேபிள் போடும்போதே சொல்லிவிடுவேன் எல்லா முதல் வகுப்பும் எனக்குக் கொடுக்கும்படி.
இன்றுவரையிலும் அது தொடர்கிறது. எனவே 10 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு சாக்பீஸ் கறைபடிந்த கையும் எல்லா வகுப்பிலும் கரும்பலகைக்கு முன்பாக ஃபேன் இருப்பதால் சாக்கட்டித்தூள் படிந்த தலைமுடியுமாக நான் வருகையில் தாவரவியல் துறைக்குப் படியேறும் இடத்தில் மாலதி ’நீட்டாக’ புடவை உடுத்திக்கொண்டு நின்றிருப்பாள். கொஞ்ச நேரம் பேசிவிட்டே இருவரும் பிரிவோம்.
நானும் மாலதியும் சகோதரிகளா என்று கல்லூரியில் பலரும் கேட்கத்துவங்கினார்கள்.
மாலதியின் கைகளில் எனக்குக்கொடுக்கவென்று எதாவது கட்டாயம் இருக்கும். சின்னச்சின்ன டப்பாவில் அன்று காலைச் செய்த சிவப்பரிசிப்புட்டோ எனக்கு (இன்றுவரை செய்யத்தெரியாத) எண்ணெய்க் கத்தரிக்காய்க்குழம்போ, காட்டுக்கீரையோ, காயோ, கனியோ, புத்தகமோ தலைக்குவைத்துக் கொள்ள மலர்ச்சரமோ இருக்கும்.
வகுப்பில்லாதபோது ஆங்கிலத்துறைக்கெதிரில் இருக்கும் சின்னச் சிமெண்டுத்திட்டில் அமர்ந்து பேசுவோம். சில சமயம் நூலகத்தில் சந்திப்பதும் உண்டு. மாலதியின் அம்மா பிரமாதமாகச் சமைப்பவர்கள். சரண் தருணுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்தனுப்புவார்கள். எனக்குபிடித்த கோதுமை மாவில் சர்க்கரையும் கனிந்த வாழைப்பழமும் கலந்து செய்யும் பழப்பணியாரம் அடிக்கடி செய்து கொடுத்தனுப்புவார்கள். வாயில் கரையும் அது.
இன்று வரை மாலாவீட்டில் மிக்ஸி உபயோகப்படுத்துவதில்லை என்பதும் அவர்கள் வீட்டுணவின் அபாரமான சுவைக்குக்காரணம். ஆட்டி ஆட்டி மினுங்கும் பளபளப்பான ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் சமையலறைக்குபின்னால் இருக்கும் நேர்த்தியாகப்பராமரிக்கப்படும் தோட்டம், உருளியில் மிதக்கும் மலர்கள் என்று மாலதியின் வீடு அழகாக இருக்கும்.
கல்லூரியில் மாலதி என்னைப்போலவேதான், நேரத்துக்கு வருவதும் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பெடுப்பதும் வாக்ஸ் பாப்புலை போன்ற கல்லூரி நேரம் முடிந்தபின்னர் செய்யும் வேலைகளையும் மனதார இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதுமாக எந்நேரமும் வேலையாகவே இருப்பாள்.
அரசுவேலை ஆங்கிலத்துறைக்கு வந்தபோது தான் விண்ணப்பிக்கவில்லை என்று மறுத்த மாலதியை நண்பர்கள் வற்புறுத்தி விண்ணப்பிக்கசெய்தோம்.
22 வருடங்களாக அயராது பணியாற்றிய, துறை சார் அறிவில் யாருக்கும் நிகர் கூடச் சொல்லமுடியாத, அந்த வேலைக்கான எல்லாத்தகுதிகளும் இருந்த, ஏராளமான வேலைகளைக் கல்லூரிக்கு அந்தச் சொற்பச் சம்பளத்தைப் பற்றி எண்ணாமல் செய்துகொடுத்த மாலதிக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஆங்கிலத்துறையில் பல இடங்கள் அப்போது நிரப்பப்பட்டன, வெளியிலிருந்து கூட 3 பேர் தேர்வானர்கள். ஒரு தனி மனிதரின் காழ்ப்பால் மாலதிக்கு அரசுவேலை தரப்படவில்லை. அந்தக்காழ்ப்பு மாலதியின் செயலாற்றலால் தான் அவருக்குஉருவானது,
தீச்சொல்லிடும் உரிமை தெய்வங்களுத்தான் இருக்கிறது இல்லையா? சரி போகட்டும்.
மாலதி மனமுடந்துவிடவில்லை நான்தான் பெருங்கோபமடைந்திருந்தேன். மாலா வழக்கம்போல வேலைகளில் மூழ்கி இருந்தாள் ஆனால் ஊழ் என்ற இரக்கமில்லாத ஒன்று இருக்கிறதல்லவா?
கிருஷ்ணமூர்த்தி அண்ணன் சுகவீனப்பட்டதும் மண் மறைந்ததும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது. புங்கைமரங்கள் பூத்து முடிந்திருந்த ஒருநாளில் அதனடியில் கண்ணீருடன் மாலா அதைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாலா அவரை அடிக்கடி அழைத்துக்கொண்டு சிசிகிச்சைக்கெனக் கேரளாசெல்லவேண்டி இருந்தது. கல்லூரி வேலை, மருத்துவச்செலவுகள், கல்யாண வயதிலிருந்த மருத்துவம் படித்துக்கொண்டிருந்த அபி, பள்ளி இறுதியிலிருந்த இனியா, வயதான அம்மா என எல்லாப்பொறுப்பையும் மாலா பார்த்துக்கொண்டாள். கொச்சிக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருநாளில் வழியில் விற்றுக்கொண்டிருந்த சுவற்றில் பதிக்கும் பூந்தொட்டிகளிரண்டை எனக்கென வாங்கி வந்த மாலாவின் அன்பை என்னவென்று சொல்வது?
என் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் என்தரப்பில் என்னுடனிருந்த மாலா, அண்ணன் மறைந்த பின்னர் எந்தப் புகாரும் இல்லாமல் வேலையை ராஜி வைத்தாள். 25 வருட ஆசிரியப்பணியின் அனுபவம், முனைவர் பட்டம், கற்பித்தலில் இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தை மகள்களை விவசாயத்தை முழுமனதுடன் ஏற்க மாலாவுக்கு இருந்த மனக்கட்டி லட்சக்கணக்கான பெண்களுக்கு இல்லை. இப்போது பல ஏக்கர்கள் விரிந்திருக்கும் தோட்டத்தை தான் ஒருத்தியாகபார்த்துக்கொள்கிறாள். காலை 6 மணிக்குத் தோட்டம் சென்றால் இரவுதான் வீடு திரும்புகிறாள்.
நானும் சிலநாட்கள் மாலாவுடன் தோப்பில் இருப்பதுண்டு. சரியாக நேரத்துக்குச் சாப்பிடாமல் விவசாய வேலைகளைப் புதிதாகக் கற்றுக்கொண்டு முழு விவசாயத்தையும் தானே சிறப்பாகச் செய்கிறாள்.
வர்ஜீனியா வுல்ஃபின் படைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்ற மாலா தன் துறைசார் அறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தென்னை மரங்களுக்கு உரமிடுவதும், சாம்பு புற்களைக் களை எடுப்பவர்களை மேற்பார்வையிடுவது, மிளகாய் பறிக்க ஆட்களை ஏற்பாடுசெய்வதும், தோட்டப் பணியாளருக்குமாகச் சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டு போவதுமாக முழுமையாக வேறொரு ஆளுமையாக மாறி இருக்கிறாள்.
நாங்கள் தினமும் பேசிக்கொள்வதில்லை. வாட்ஸ்ஸாப்பிலும் தொடர்பிலில்லை எப்போதாவது பேசிக்கொள்வோம் ஆனால் முந்தினநாள் விட்ட இடத்திலிருந்து பேசுவதுபோல் பேசிக்கொள்வோம். மாலதிக்குப்பின்னர் கல்லூரியில் எனக்கு யாருடனும் தோழமை இல்லை. அவளுக்கான இடம் நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது. அதை மாலதியால் மட்டுமே நிரப்ப முடியும்.
மாலதி இன்று கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள். மகள்களைப் பார்க்கச் செல்லவோ, உரம்வாங்கவோ, வங்கி வேலைகளோ, நல்லதுகெட்டதுக்கோ எங்கு வேண்டுமானாலும் மாலதி யாரையும் சார்ந்திராமல் தனியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சுதந்திரா, அபி, இனியா, சரண், தருண் சாம்பவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஒன்றாக ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறார்கள்.நானும் மாலதியும் உமாவும் மூச்சுலகிலிருந்து இதைமட்டுமே பார்க்க விழைகிறோம்.
பெண்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலையே. மாலா என்னும் பேரழகிக்கு அன்பும் கட்டிமுத்தங்களும்.
பிரிடிஷ் விலங்கியலாளரும், சிம்பன்ஸிகளின் பாதுகாவலரும், மானிடவியலாளருமான ஜேன் குடால் தனது 91 –வது வயதில் நேற்று அக்டோபர் 1, 2025 அன்று லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மரம் நடும் நிகழ்வுக்கான பயணத்திலிருக்கையில் இயற்கையாக மறைந்தார்.
அவரை நினைக்கையில், அவரது காணொளிகளையும் உரைகளையும் கேட்கையில், சிம்பன்ஸிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் எல்லாம் பேரன்னை என்றுதான் என் மனதில் தோன்றும். அன்னைமை அவரது உடல்மொழியில் அப்படி பொங்கிப்பிரவாகிக்கும். உலகில் சிம்பன்ஸிகளை குறித்த மிக நீண்ட கால, மிக விரிவான ஆய்வுகள் செய்த ஒரே ஒருவர் ஜேன்.
ethologist என்னும் ஒரு சொல்லையே அவரைக் குறித்து அறிந்துகொண்ட போதுதான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன். விலங்குகளை, அவற்றின் சமூக கட்டமைப்பை, அவற்றின் உயிர்வாழ்தல், தேவைகள், பரிணாம வளர்ச்சியை எல்லாம் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலேயே அறிந்துகொள்ளும் துறைதான் ethology.
ஜேன் 1960-களில் உலகளாவிய அளவில் இந்தத்துறையில் பிரபலமாயிருந்த ஒரு விலங்கியலாளராக இருந்தார். இவரது சிம்பன்ஸி ஆய்வுகள் விலங்குகள் பற்றிய உலகின் புரிதலையே அடியோடு மாற்றியது.மனிதர்களுக்கு மட்டும் உரியது என்று பலகாலமாக நம்பப்பட்ட பலவற்றை சிம்பன்ஸிகள் அறிந்து கொண்டிருப்பதையும், செய்வதையும் அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.
நீர்நிலைகளுக்கு பெயர் பெற்ற லண்டனின் மிக புராதன, மிக மிக அழகிய நகரமான Hampstead –ல் பந்தயக்கார் ஓட்டுநரான (Morris-Goodall) அப்பாவுக்கும் எழுத்தாளரான (Margaret Myfanwe) அம்மாவுக்கும் பிறந்த ஜேன் அவரது குழந்தைப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த ஒரு சிம்பன்ஸி பொம்மையிலிருந்து தொடங்கிய தனது விலங்குகள் மீதான பேரன்பை வாழ்நாள் முழுக்க தொடர்ந்தவர்.
மனிதரல்லாத முதன்மை உயிரினங்களின் அறிவியலில் ( primatology) உலகளவில் இவரே முதன்மையானவர். சிம்பன்ஸிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஜேன் ‘’ மனிதர்களை விலங்கு உலகிலிருந்து பிரிக்கும் தெளிவான கோடு ஏதும் இல்லை’’ என்றார். 65 ஆண்டுகள் சிம்பன்ஸிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜேன் காலப்போக்கில் மனிதர்களால் இயற்கை வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் ஆபத்தையும், அதற்கு தீர்வு மிக அவசரமாக தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்தும் காலநிலை செயற்பாட்டாளர் ஆகினார்.
1957 –ல் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்திருந்த ஜேன் கென்யாவின் விலங்குகளைக் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருந்தார் . கென்யா செல்ல தேவையான செலவுகளுக்காக ஒரு உணவகத்தில் பரிசாரகராக வேலைசெய்து பொருளீட்டினார். கென்யா சென்று தொல்லியலாளரும் புதைபடிம மனிதவியலாளருமான Dr.லூயி மற்றும் தொல்லியலாளரான அவரது மனைவி மேரியையும் சந்தித்தார். லூயி ஜேனை நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தினார். மனிதப்புதைபடிமங்களின் தேடலில் ஜேனின் பொறுமையையும் அவரது இயற்கை மீதான ஆர்வத்தையும் கண்ட லூயி ஜேனை தான்சானியாவின் கோம்பே காடுகளில் சிம்பன்ஸிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடச் சொன்னார்.
1960 ஜுலை 14-ம் தேதி ஜேன் கோம்பே காடுகளுக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கு பணியாற்றுகையில்தான் சிம்பன்ஸிகளுடனான அவரது பரிச்சயமும் ஈடுபாடும் உண்டானது. லூயி தம்பதிகளுடன் இணைந்து ஜேன் சிம்பன்ஸிகளின் பாதுகாப்புக்கான ஒரு அமைப்பை அங்கு துவங்கினார்.
அந்த அமைப்பிலிருந்து ஆய்வுகளைச் செய்கையில் தான் சிம்பன்சிகள் அது நாள் வரை உலகம நினைத்திருந்ததுபோல் தாவரவுண்ணிகள் மட்டுமல்ல அவை இறைச்சி உண்பதையும், மழைநடனமிடுவதையும், படுபயங்கரமான போர்களில் ஈடுபடுவதையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக புற்றிலிருந்து கரையான்களை எடுத்து உண்பதற்கான கருவிகளை அவை தயாரிப்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
சிம்பன்ஸிகளைப் பற்றிய உலகின் பல தவறான அறிதல்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து உண்மையில் சிம்பன்ஸிகள் மனிதனுக்கு மிக மிக நெருங்கிய உயிரினங்கள் என்பதை ஜேன் தெரிவித்தார். 1963-ல் 29 வயதான ஜேனின் 7500 சொற்களையும், 37 பக்கங்களையும் கொண்ட சிம்பன்ஸிகளைக் குறித்த பல முதல் நிலைத்தகவல்களைக் கொண்ட ஆய்வறிக்கையை நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த கோம்பே காடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரது காதல் கணவர் ஹியூகோ. அந்தக்கட்டுரை சிம்பன்ஸிகளின் வாழ்வை மட்டும் காட்டவில்லை கோம்பே காடுகளில் ஆய்வுகளின் போது ஜேனுக்கு உண்டான நோய்கள், உடல்நலகுறைவு, அதிலிருந்து அவர் மீண்டது, சிம்பன்ஸிகளை நெருங்குவதில் இருந்த சிக்கல்கள், தடைகள், காட்டிலிருந்த கொல்விலங்குகளால் உண்டான ஆபத்துகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை இன்றுவரையிலும் உலகின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சிம்பன்ஸிகளின் இணைசேர்தல், கருவுறுதல், குட்டிகளை ஈனுதல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு புதிய பல உண்மைகளை ஜேன் தெரிவித்தார்.சிம்பன்ஸி அன்னைகள் நாலரை வருடத்திலிருந்து 6 வருடத்துக்கொருமுறைதான் கருத்தரித்து, ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகளை மட்டும் அளிப்பவை, முதல்முறை அன்னைகள் ஆண் சிம்பன்ஸிகளிடமிருந்து குட்டிகளை மறைத்து வைக்கின்றன, அனுபவம் வாய்ந்த அன்னைகளே ஆண் சிம்பன்ஸிகளுக்கு குட்டிகளைக் காட்டுகின்றன போன்ற புதிய தகவல்களை ஜேன் உலகிற்கு சொன்னார்.
தன் மகன் க்ரப்பை வளர்ப்பதற்கான பல படிப்பினைகளை சிம்பன்ஸிகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லும் ஜேனின் மீது அத்தனை பிரியமுண்டாகியது எனக்கு. க்ரப்புடன் அடர் காட்டில் ஆய்வுகளைச் செய்த ஜேன் அவனை காட்டுவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கூண்டில் அடைத்து வைத்திருப்பார். அர்ப்பணிப்புடன் ஆய்வுகளைச் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருபபோம் எனினும் ஜேன் போல மகனை கூண்டில் வைத்துவிட்டு சிம்பன்ஸிகளை ஆய்வுசெய்யும் அர்ப்பணிப்பை நான் வேறெங்குமே கேள்விப்பட்டதில்லை.
அவரது கண்டுபிடிப்புக்களைப்பற்றி சொல்கையில் லூயி ’’சிம்பன்ஸிகளும் மனிதகளைப் போலத்தான் என்பதை ஒத்துக்கொள்ளும் முன்பு நாம் கருவி என்பதையும், ஏன் மனிதன் என்பதையுமே மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.ஜேனின் பங்களிப்பை, கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை உலகம் அவர் கல்விக்கூடத்துப் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கும் என லூயி உணர்ந்திருந்தார் எனவே இளங்கலை படித்திருக்காத ஜேனை கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு ஜேன் முனைவர் பட்டத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் செய்த The Behaviour of Free-living Chimpanzees in the Gombe Stream Reserve என்னும் தலைப்பிலான ஆய்வு விலங்குலகின் பல புதிய கதவுகளை உலகிற்கு திறந்துவைத்தது. இளங்கலை படிக்காமல் கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் ஜேனும் ஒருவர்
அடர் வனங்களில் பலவருடங்களை ஆய்வுக்காகச் செலவழித்த ஜேனின் முதல் கணவர் நேஷனல் ஜியோகிராஃபியின் முதன்மை வன உயிர்ப்புகைப்படக்கலைஞரும் ஜேனின் ஆய்வை படம்பிடிக்க வந்தவருமான ஹியூகோ வான்(Hugo van Lawick.) அவர்கள் காடுகளில் சந்தித்து காதல் கொண்டு 1964-ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது மகன் Grub என்று செல்லப்பெயர்கொண்ட Hugo Eric Louis van Lawick.
ஹுயூகோவுடன் 1974-ல் விவாகரத்தானபின்னர் இரண்டாவதாக 1975-ல் தான்சானிய அரசியல்வாதியும் தான்சானிய தேசியப் பூங்காவின் முன்னாள் இயக்குநருமான டெரெக்கை (Derek Bryceson ) மறுமணம் புரிந்து கொண்டார், டெரெக் 1980-ல் மறைந்தார்.
அதுவரை விலங்கியலாளர்களின் வழக்கமாயிருந்ததைப் போல விலங்குகளுக்கு எண்களை இடுவதில் விருப்பமில்லாத ஜேன் சிம்பன்ஸிகளுக்கு, டெஸ் , ஃப்ளோ, பிஃபி, டேவிட் போன்ற பெயர்களை வைத்தார்.1977-ல் அவரது பெயரிலேயே ஜேன்குடால் நிறுவனத்தை வாஷிங்டனில் துவங்கினார். அந்த அமைப்பு சூழல் பாதுகாப்பு, சூழல் ஆரோக்கியம் மற்றும் வாழிட அழிப்புக்கெதிரான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான உலகளவிய விரிந்த பிரச்சாரத்தையும் அது குறித்த கல்வியையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தது.ஜேன் இந்த அமைப்பின் பொருட்டு வருடத்தின் 300 நாட்கள் அவரது இறுதிநாள் வரையிலுமே தொடர் பயணத்திலிருந்தார். இந்நிறுவனத்தின் 25 கிளைகள் உலகெங்கும் இயங்குகின்றன.
2014 –ல் நியூயார்க் டைம்ஸுக்களித்த நேர்காணலில் ‘’ சிம்பன்ஸிகளுக்காக ஒருவர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து, மிக முக்கிமான செயல்களைச் செய்கிறார் என்பது எனக்கு தொடர்ந்து வியப்பை அளிக்கிறது. அந்த ஒருவர் நான்தான்’’ என்றார்.
அதே நிறுவனத்தின் நீட்சியயாக 1991-ல் பள்ளிக்குழந்தைகளும் பங்களிக்கும் Roots & Shoots, என்னும் அமைப்பையும் சூழல் பாதுகாப்புக்காக உருவாக்கினார் ஜேன். துவக்கத்தில் 12 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களுடன் இருந்த அந்த அமைப்பு இப்போது 75 நாடுகளில் மிகத்தீவிரமான செயல்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2025-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர விருது உள்ளிட்ட மிக உயரிய ஏராளமான விருதுகளையும் ஜேன் பெற்றிருக்கிறார். விலங்குகள் குறித்த அவரது அவதானிப்புகளை பல நூல்களாக எழுதியிருக்கும் ஜேனின் மிகப்பிரபலமான நூல் Reason For Hope: A Spiritual Journey.
அவரது The Book of Hope: A Survival Guide for Trying Times, என்னும் மற்றொரு நூல் உலகின் மிக முக்கியமான 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜேனின் In the Shadow of Man (1971). மற்றும் The Chimpanzees of Gombe: Patterns of Behavior (1986). ஆகிய இரு கட்டுரைகளும் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை.
ஆப்பிரிக்க காடுகளில் ஜேன் நெருக்கமாகச் சந்தித்த மலேரியா, முதலைகள், விஷம் துப்பும் நாகப்பாம்புகள், கொல்விலங்குகள், ராட்சஷ விஷ மரவட்டைகள் ஆகியவற்றையும் சொல்லும் அவரது கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை.அவரது விலங்குலகம் குறித்த பலநூறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் ஜேனின் கண்கள் .வழியாக நமக்கு விலங்குலகைக் காட்டுபவை.
20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மிகப்பிரபலமான இயற்கை அறிவியலாளராக இருந்த ஜேன் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் துறையில் அவரைத்தொடர்ந்து பல பெண்களும் வர காரணமாயிருந்தார் என்பதுவும் அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. அவர்களில் சிம்பன்ஸிகளின் ஆய்வில் பெரும்பங்காற்றிய பெண்களான Dian Fossey, Biruté Galdikas, Cheryl Knott மற்றும் Penny Patterson,ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவரது இறுதிப் பயணத்திட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் காடுகளின் நெருப்பு பிடிக்கும் எல்லைகளில் நெருப்புத் தடுப்பாக 5000 மரங்கள் நடும் நிகழ்வுதான். அவரது மரணத்திற்குப்பின்னர் இன்று நடப்பட்ட முதல் மரம் ஜேன் குடால் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
ஜேன் மீது பெரும் அபிமானம் கொண்டிருக்கும் ஜாஜாவிடம் ஜேனின் மறைவு குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கையில் ஜேன் தனது பாட்டியின் சாயலில் இருப்பதாக சொன்னார் ஜாஜா. இயற்கை வளங்களைத் தொடர்ந்து சுரண்டுகிற, யானை வழித்தடங்களில் பெருநிருவனங்களை அமைக்கிற, பனைமரங்களை செங்கல் சூலைகளில் எரிக்கக்கொண்டு செல்கிற, அரசியல் ஆதாயங்களுக்காக பலநுறு மரங்களை வெட்டுகிறவர்களுகு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடைசி நொடி வரை. இயற்கையின் பாதுகாப்புக்காக உழைக்கும் ஜேன் போன்றவர்கள்தான் நமது சொந்தமாக இருக்கமுடியும். எனக்கும் ஜேன் பேரன்னையாகத்தான் தெரிகிறார்.
நம்பிக்கை மற்றும் மன உறுதிக்கான தூதராக ஜேன் உலகெங்கும் அறியப்பட்டார். அவரது முக்கியச் செய்தியாக ’’நம்பிக்கை கொள்வது என்பது நமது கையில், என் கையில், உங்கள் கையில் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்யமுடியும்’’ எனச் சொன்ன ஜேன் அவரது வாழ்க்கையையே அந்த செய்திக்கான உதாரணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.ஜேனுக்கு அன்பும் அஞ்சலியும்
தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதி பல்லுயிரிய மையத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர் டோன் என்கிற டோனோவன். (Dr. Donovan Kirkwood)
உலகின் அணுக முடியாத, மிகக் கடினமான சூழல்களில் வாழும் தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவும்,அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும், கடுமையான மற்றும் ஆபத்தான பணிகளைக் தாவரவியலாளர்கள் மேற்கொள்வது Extreme Botany எனப்படுகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அரிய தாவர இனங்களைக் மிக ஆபத்தான அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று கண்டறிந்து, சேகரித்து, ex situ conservation எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவற்றை வளர்த்து மீண்டும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுக்கு மாற்றுவதை பல்லாண்டுகளாக டோன் செய்துவந்தார்.
தென்னாப்பிரிக்காவின் பழமையான பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவின் ஸ்டெல்லென்போஷ் பூங்காவின் பொறுப்பாளராக 2018-லிருந்து டோன் பணிபுரிந்து வந்தார். இந்தப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் இயல் தாவரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாவரங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போன்ஸாய் சேகரிப்பு இங்கு மிகப் பிரபலம். ஒரு திறந்தவெளி ஆய்வகமாகவும் செயல்படுகிறது இந்த பூங்கா.
டோன் தேடிச்சென்ற தாவரம்
தென்னாப்பிரிக்காவின் ஓரிடத்தாவரமான Marasmodes undulata என்னும் சூரியகாந்திக் குடும்பம் தாவரமொன்று 1946-க்கு பிறகு 34 ஆண்டுகளாக எங்குமே தென்படவில்லை எனவே அது அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்டிருந்தது. 1980-ல் 300 தாவரங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவின் மலைக்காடுகளில் கண்டுபிடிக்கபட்டு பின்னர் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. எனினும் 2005-ல் அது வெறும் 20 மட்டும் இருந்தது செய்தியான போதுதான் நான் அதைக் குறித்து அறிந்துகொண்டேன்.
2017-ல் 17 ஆக இருந்தன அவை பிறகு அபாயகரமாக 2020ல் உலகில் மூன்றே மூன்று என்னும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில்தான் டோன் அந்த பூங்காவில் பணியேற்றுக்கொண்டார். உடனடியாக அதைக் காப்பாற்றும் முயற்சியில் டோன் ஈடுபட்டார். மூன்றுதான் இருந்தன என்பதால் இயற்கை வாழிடங்களிலிருந்து அவற்றை எடுப்பது அவற்றின் அழிவுக்கு கரணமாகலாம் எனவே லண்டன் கியூ விதை வங்கியிலிருந்த அதன் 90 விதைகளை தருவித்து அதை பல சவால்களுக்கிடையில் வெற்றிகரமாக நூற்றுக்கணக்கில் வளர்த்து, மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் அறிமுகப்படுத்தி டோன் அதைக் காப்பாற்றினார். இப்படி ஏராளமான தாவரங்களை டோன் அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.
இந்த Species recovery என்பது மிக மிகச் சவாலான ஒன்று. ஆனால் டோன் 1.7 ஹெ பரப்பளவு இருக்கும் இந்தச் சிறிய பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் அழிந்துகொண்டிருக்கிற, அபாயத்தின் விளிம்பிலிருக்கிற சிவப்புப்பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 40 சதவீதத்தை காப்பாற்றி அந்தப் பூங்காவில் வளர்த்திருதார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஒரு சிறு குழுவினருடன் தென்னாப்பிரிக்காவின் மிக ஆபத்தான, செங்குத்தான, கரடுமுரடான ஜோங்கெர்ஷோக் மலைத்தொடரில் தென்னாப்ரிக்கவின் கேப் பகுதிக்கு சொந்தமான, உலகில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த Penaea formosa என்னும் தாவரத்தை தேடி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 51 வயதான டோன், கால் இடறி மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரைக்கும் அவர் உடல் கிடைத்ததாக தகவல்களில்லை. எப்பேர்ப்பட்ட இழப்பு .
He slipped, fell, and did not return.
இப்படி வாசித்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரிய தாவரங்களின் புகைப்படங்களையும். அவரது களப்பணியையும், அரிய தகவல்களையும் டோன் பகிரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின் தொடர்ந்த 1500 பேர்களில் நானும் ஒருத்தி.
பூபதி
டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு. இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு.
இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோனும் பூபதியும் எதை மிக முக்கியமானது எனக் கருதினார்களோ அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்தார்கள். இப்படித் தீவிரமான அர்ப்பணிப்புடன் உயிரினங்களை நேசிப்பவர்கள் உயிருடன் இருக்கும் போது உலகம் அவர்களை அறிந்து கொள்வதே இல்லை. டோனோவனின் இறப்பை செய்திகளில் அறிந்துகொண்ட அன்று நான் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கும் தாவரவியல் துறை மாணவர்களிடம் அவரைப்பற்றி கேட்ட்டேன். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை. அவர் இருந்ததும் இறந்ததும் யாருக்குமே தெரியவில்லை.
டோன் தான் நேசித்த தென்னாப்பிரிக்க மண்ணில், அழிந்துகொண்டிருந்த ஒரு தாவரத்திற்கான தேடலில் மறைந்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் தாவரச் செல்வத்தின் எதிர்காலம், ஒவ்வொரு சிறு விதையாக, ஒவ்வொரு அங்குல மண்ணாக, இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும் என அவர் திடமாக நம்பினார்
டோனோவன் இந்தப் பூங்காவின் பொறுப்பேற்றுக்கொண்ட போது இப்படிச் சொன்னார்.
“Most of all, I just want to get people to fall hopelessly in love with plants and nature.”
அவர் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருந்ததைத்தான் செய்தியாகச் சொல்லிச்சென்றிருக்கிறார்.
நான் சீனுவை விஷ்ணுபுரம் அமைப்பை அறிந்துகொண்ட மிக ஆரம்பக்காலத்திலேயே அறிவேன். ஊட்டி ஃபெர்ன் ஹில் குருநித்யா ஆசிரம காவியமுகாமைக் குறித்த அவரது ஒரு பதிவில் ஊட்டியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்ட கதவொன்றை தலையால் முட்டியபடி கதறிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் குறித்து எழுதியதைத்தான் முதலில் வாசித்தேன். அதன்பின்னர் விஜயசூரியன் வீட்டில் மாதாமாதம் நடக்கும் வெண்முரசு விவாதக்கூட்டத்துக்கு பேருந்தில் 7 வது படித்துக்கொண்டிருந்த சரணையும் 5ல் இருந்த தருணையும் அழைத்துக்கொண்டு போய் கலந்துகொண்டம் நாட்கள் ஒன்றில் நேரில் சந்தித்தேன்.
சீனுவின் எல்லாக்கடிதங்களுமே உணர்வுபூர்வமானவை ஒரு வட இந்தியப்பெண் அவளது காதலனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்துதரும் வரைக்கும் காத்திருந்து வாங்கிப்போகும் ஒரு அரசு மருத்துவமனைக்காட்சியைக் குறித்து எழுதியிருந்த பதிவில் அவள் எழுந்துபோனபின்னர் அவள் அமர்ந்திருந்த பாறையில் அவளது காதலின் வெம்மை தகித்தது என்று எழுதியிருந்தார். நான் அதை வாசிக்கையில் என் மேசையில் வைக்கப்பட்டிருந்த ரெக்கார்ட் நோட்டுக்களின் சித்திரங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் கண்ணிலிருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து ஒரு ரெக்கார்ட் நோட்டின் தாள் ஈரமானது. காணாமல் போன ஒரு சிறுமியைக் காப்பாற்றிய தள்ளுவண்டிக் கடைக்காரரைப்பற்றிய பதிவும் அப்படித்தான்.
எப்போதாவது வருடத்துக்கு ஒருமுறை விழாக்களில் சந்தித்துப் பேசிக்கொள்வோம். வாட்ஸாப்பில் அரிதாக தொடர்பிலிருப்போம். என்னை எப்போதும் அக்கா தங்கம் என்றழைக்கும் தம்பித்தங்கம் சீனு.
சரணுக்கு ரீமா சென்னை பிடிக்கும் என்றெழுதி இருந்த ஒரு குறிப்பிற்கு ’’ரசிகன்க்கா சரண்’’ என்று சீனு சொன்னது நினைவிருக்கிறது. நான் சீனுவின் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி இடம் வைத்திருக்கிறேன் என் இதயத்தில், ஆனால் ஒரு போதும் சீனுவிடன் சொன்னதில்லை.
இன்று சீனு என்னை அழைத்து மரங்களின் மறை வாழ்வு மொழியாக்க நூலைக் குறித்து ஒரு விமர்சனம் எழுதி இருப்பதாகவும் அதை என் இணையதளத்தில் பிரசுரித்து அதன் சுட்டியைத் தனக்கு அளிக்கும்படி கேட்டார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இது வரை எனது 13 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.யாரும் ஒரு நூலைக்குறித்தும் எதுவும் எழுதியதில்லை. எனக்கு பெரும்பாலான எழுத்தாளர்களும் ஏராளமான வாசகர்களும் ஸ்நேகிதம்தான்.ஆனாலும் ஸாகே குறித்து ஜெ விற்கு ஒரு சில கடிதங்கள் வந்ததைத்தவிர எனது எந்த நூலும் கண்டுகொள்ளப்படவேயில்லை. நான் அதைக்குறித்து வருந்தவுமில்லை.
தாவரவியல் துறையே கீழானது, பயனற்றது, வேண்டாதது, உலகியல் பொருளியல் வெற்றிக்கு உதவாதது என்னும் அபிப்பிராயம்தான் பொதுவில் எல்லாரிடமும் இருக்கிறது. இதில் நூலைவாசித்து விமர்சனம் எழுதும் அளவுக்கு ஒருத்தரும் மெனக்கெடவில்லை. தாவரவியலைக்குறித்து எழுதுபவளைக் குறித்தும் அப்படித்தான் எண்ணுவார்களாக இருக்கும். நான் என் நூல்களைக் வாசிக்கும்படி கூடக் கேட்டதில்லை யாரிடமும்.
தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரை பல்லாயிரம் அறிவியலாளர்கள் எழுதிய விமர்சனங்களுக்கும் மேலானது. அதைக் கனவில் எழுப்பிக் கேட்டால் கூடச் சொல் சொல்லாக ஒப்புவிப்பேன் மனப்பாடம் ஆகிவிட்டிருக்கிறது. பெரும் கெளரவம் அது எனக்கு.
ஆனால் நான் நூல் விமர்சனம் எழுதுவேன். எனக்கு , தெரிந்தவர்கள்,வேண்டப்பட்டவர்களுக்காக, எனக்கு வேண்டப்பட்ட விஷயங்களை என்னை பாதித்த விஷயங்களைப்பேசிய நூல்களுக்காக, என்னை எழுதச்சொல்லி கேட்பவர்களுக்காக என்று, நூலை வாசித்ததைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு மனமுவந்து அன்புடன் எழுதுவேன். என் அன்பு ஒருபோதும் எதிரொலிக்காகக் செவி கூர்ந்ததில்லை.
எனவே இன்று சீனு நூல் விமர்சனம் எழுதியது அதுவும் மிக நன்றாக எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தத்துறையும் துறைசார்ந்த நூல்களும் என்றைக்கேனும் பேசப்படும் என்னும் நம்பிக்கை இப்போது கொஞ்சம் துளிர்த்திருக்கிறது.
அந்துவன் கூட்டத்தில் பெண் பிறப்பதும் ஆனை குட்டி போடுவதும் ஒன்று என கொங்குப் பகுதியில் பொதுவாக சொல்லப்படுவதுண்டு, அத்தனை அரிது அந்துவன் குலத்தில் பெண்கள் பிறப்பது என்னும் பொருளில். ஆனால் அந்துவன் குலச் செல்வியான என் அம்மாவுடன் மேலும் இரு மூத்த சகோதரிகள் இருந்தனர். மூன்று பெண்களும் 7 சகோதரர்களுமாக 10 குழந்தைகள் கொண்ட பெருங்குடும்பத்தில் பரமேஸ்வரி என்னும் என் அம்மா பத்தாவது செல்லப் பெண்.
நிலபுலன்களுடன் ஓரளவு வசதியாக இருந்த குடும்பம், அம்மா பிறந்த பின்னர் மேலும் செல்வச் செழிப்பானதால் அம்மா கடைக்குட்டி செல்லமாக வளர்ந்தார்.
கடந்த மாதம் அம்மா மறைந்தைக் கேள்விப்பட்டு முதல் முறையாக எங்கள் வீட்டுக்கு வந்தார் அம்மாவின் அண்ணன். அவர் மட்டுமே சகோதரர்களில் உயிருடன் இருப்பவர் இப்போது. கடைசியாக 25 வயது இளம் பெண்ணாகப் பார்த்த தங்கையை, 55 வருடங்கள் கழித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் சவமாக பார்த்த 96 வயதான அவர் மார்பிலறைந்துகொண்டு ”அய்யோ காஃபி குடிச்ச டம்ளரைக் கழுவக் கூடப் போட விடமாட்டோமே, அப்படிச் செல்லமா இருந்தாளே பாப்பாத்தி’’ என்று கதறினார்.
எங்கள் குடும்பங்களில் அனைவருமே நிறம் மட்டுத்தான். அபூர்வமாகவே வெள்ளைத்தோல் கொண்டவர்களை காணமுடியும். கொங்குப்பகுதியில் நல்ல நிறமுள்ள பெண்கள் என்றால் பிராமணப்பெண் என்னும் பொருளில் பாப்பாத்தி என பெயர் வந்துவிடும். பரமேஸ்வரியாகிய அம்மா நல்ல வெளுப்பு என்பதால் பாப்பாத்தி என்று அழைக்கப்பட்டார்.
அப்படிக் கதறிய என் தாய் மாமனை நான் அன்றுதான் முதன் முதலாக பார்த்தேன். அந்தக் கண்ணீரால் கரைக்க முடியாத கடந்த காலமொன்று குளிர்ந்து விறைத்திருந்த அம்மாவின் உடலுக்கும் அவருக்கும் இடையில் நின்றிருந்திருந்தது. இதன் பொருட்டே அவர் இன்னும் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ என்று துக்க வீட்டில் பலரும் பேசிக்கொண்டனர்.
பத்துப் பேரில் மூத்தவரான ஞானம் பெரியம்மாவுக்கு 7 குழந்தைகள். அவருக்கு மூன்றாம் மகன் பிறக்கையில்தான் சில நாட்கள் இடைவெளியில் அம்மாவும் பிறந்திருக்கிறார்கள்.
தாயும் மகளும் ஒன்றாகப் பிரசவிப்பதை, ஏதோ பழைய கதையைச் சொல்லக் கேட்பதுபோல் அம்மா கதையாகச் சொல்லக் கேட்டிருப்போம். அம்மாவின் வாழ்க்கையே புனைவை மிஞ்சும் நிகழ்வுகளால் ஆனதுதான். அக்காள் மகன் துரையும் அம்மாவும் ஒரு சிலநாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள் என்பதால் துரை அண்ணன் அம்மாவை ’பாப்பி சித்தி’ என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்
பெரியண்ண கவுண்டருக்கும், வெள்ளையம்மாளுக்கும் 1942 பிப்ரவரி 20 அன்று அம்மா பிறந்தார். மிகச் செல்லமாக எந்த வீட்டு வேலையும் செய்யாமல், ராணியைப் போலவே வளர்ந்திருக்கிறார்கள். அக்காலத்திய பெரும்பாலான குடும்பங்கள் போலவே அம்மாவின் குடும்பமும் சாதிப்பற்று மேலோங்கிய குடும்பமாக ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்திருக்கிறது.
அம்மா மட்டுமே சகோதர சகோதரிகள் அத்தனை பேரில் பள்ளி இறுதி முடித்து ஆசிரியர் பயிற்சிக்கு சென்றவர்.
அம்மாவின் அப்பா, நான் இப்போது வசிக்கும் இந்த குக்கிராமத்தில் ஒரு பெரிய அரிசி ஆலையில் கணக்கராக இருந்திருக்கிறார். அம்மாவின் ஒரு அண்ணன் பெரும் பொருட்செலவில் இந்தியா முழுவதும் செல்லும் பெர்மிட்டுடன் ஒரு லாரி வாங்கிய போது குடும்பம் எதிர்பாராமல் நொடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் மீண்டு விடலாம் என்னும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். லாரி அடிக்கடி பாம்பே சென்று வந்ததால் அந்த அண்ணன் பாம்பேக்காரர் என்று கிராமத்தவர்களால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
அப்படி பாம்பே சென்ற அவர் ஒருமுறை அங்கே பூரி என்னும் உணவைச் சுவைத்து விட்டு, அந்தப் பதார்த்தத்தைச் செய்யும் முறையையும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் ஊரான வேட்டைக்காரன் புதூரில் அப்போது பூரி அறிமுகமாயிருக்கவில்லை. வீட்டு முற்றத்தில் விறகடுப்பு கூட்டி பலர் முன்னிலையில் பூரியை அண்ணன் செய்து காண்பித்ததை அம்மா கதைபோல நீட்டி நீட்டிச் சொல்லுவார்கள். எப்போது பூரி செய்தாலும் அம்மா விவரித்த அக்காட்சி மனதில் வரும்.
அம்மா இப்படி தன் நினைவுகளிலிருந்து பலநூறு சம்பவங்களை கதை போலச் சொல்லுவார். அக்கதைகளின் கையை பிடித்துக் கொண்டு, தான் ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாத இடங்களுக்கு தன் நினைவில் சென்று கொண்டிருந்திருக்கிறார் என்பது புரிய வெகுகாலமாயிற்று. ஒருபோதும் அக்கதைகள் என் அப்பாவின் முன்னிலையில் சொல்லப்பட்டதில்லை.
அதே கிராமத்தில் மாடுகள், குதிரை மற்றும் யானைகளை வியாபாரம் செய்துவந்த ஒருவரின் வீட்டில் தாயும் குட்டியுமாக யானைகள் வந்திருப்பதை வேடிக்கை பார்க்க 10 வயது சிறுமியாக அம்மா சென்றிருக்கிறார். அந்த பெரிய வீட்டின் முற்றத்தில் தாய் யானை, குட்டிக்கு பாலூட்டி கொண்டிருந்திருக்கிறது. குட்டி பாலருந்துகையில் சிந்திய பால் ஒரு சிறு ஓடைபோல வாசலைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்ததாம். அதை சொல்லுகையில் எல்லாம் அம்மா பத்து வயது சிறுமியாகவே மாறிவிட்டிருப்பார்
பாம்பே அண்ணன் வடநாட்டுப் பயணமொன்று சென்று வந்தபோது ஒரு வைரக்கல்லையும் அக்காலத்தில் சாதாரணக் குடும்பத்தினர் நினைத்துப் பார்க்கவே முடியாத தொகை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு அம்மாவின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப் போயிருக்கிறது. அப்போது பலரும் சொன்னபடியும், நம்பியபடியும் அந்த வைரம் நீரோட்டம் சரியில்லாதது என்றும் அதனால்தான் குடும்பம் நொடித்துப் போனதென்றும் அம்மாவும் நம்பினார்.
அந்த வைரத்தை யாருக்கும் விற்கவும் முடியாமல் பலவருடங்கள் கழித்து மிக மிகச் சாதாரண தொகை ஒன்றிற்கு கொடுத்திருக்கிறார்கள். அப்போது குடும்பம் மீண்டு வர முடியாத அளவிற்கு நொடித்து விட்டிருந்தது
அம்மாவும் ஆசிரியப் பயிற்சி முடிந்து அரசு வேலையும் கிடைத்து ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றத் துவங்கி இருந்தார். வீட்டில் பொருளாதார நிலைமை மாறி இருந்தாலும் வழக்கம்போல செல்லப் பெண்ணாகவே இருந்தார்
இரண்டாவது அக்காவான மீனாட்சி ஒருமுறை அம்மா காபி குடித்த டம்ளரை எடுக்க மறுத்தபோது, கோபித்துக்கொண்டு அக்காவுடன் ஒரு வருடம் அம்மா பேசவே இல்லையாம். இப்போதும் மீனாட்சி பெரியம்மா ’’பிடிவாதக்காரிடி உங்கம்மா’’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்.
இன்னொரு பெரியம்மாவான ஞானம் கடும் சுத்தக்காரர், நாங்கள் சிறுமிகளாய் இருக்கையில் அவர் வீட்டுக்கு வந்தாலே அழத்துவங்கி விடுவோம். தலையில் பேன் பார்த்து, ஒட்ட நகம் வெட்டி, கொதிக்க கொதிக்க சுடுநீர் ஊற்றிக் குளிக்க வைத்து இம்சைப்படுத்துவார். உடலே சிவந்துபோய் ஆவி பறக்கும், குளியலுக்கு பின்னர். அம்மா வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்து போய்க்கொண்டிருந்தது அந்த இரண்டு பெரியம்மாக்கள் மட்டும்தான்.
அத்தனை செல்லமாய் வளர்ந்த அம்மாவுக்குத்தான், அவர் உயிருடன் இருக்கையிலேயே கடைசிக் காரியங்கள் செய்து, 16 ஆம் நாள் கருமாதியும் அவர் வீட்டில் செய்தார்கள்
நொடித்துக்கொண்டு இருந்த குடும்பத்தில் இரு சகோதரிகளுக்கும், நாலு சகோதரர்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. ஒரு அண்ணன் சாமியாராகி விட்டிருந்தார். பாம்பே அண்ணனுக்கு திருமணம் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்திருக்கிறது.
பக்கத்து கிராமமான பூச்சனாரியின் ஜமீன் குடும்பமொன்றில் 6 மகள்கள், அனைவருக்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த ஜமீன் குடும்பத்தில் முன்னெப்போதோ நிகழ்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலையின் போது அக்குடும்பத்தில் இனி ஆண்வாரிசு தங்காது என்றும், பெண்கள் அனைவரும் விதவைகளாகவே இருப்பார்கள் என்றும் சாபம் இருந்திருக்கிறது. அதனால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருந்த பெண்களை அந்த ஜமீன்தார், சாதாரண குடும்பங்களுக்கே கொடுக்க முனைந்தார், அதில் ஒரு பெண்ணான பச்சைநாயகியை அந்த பாம்பே அண்ணன் திருமணம் செய்துகொண்டார்.
பேரழகி அந்த அத்தை. அவரை முதன் முதலில் பார்த்தபோதே அவர் வெள்ளுடையில் விதவையாகத்தான் இருந்தார். தன் கடைசி காலம் வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். பச்சை நாயகி அத்தையின் முதல் மகன் பிறந்த இரண்டாவது நாள் இறந்துபோனான். “பழனி முருகனாட்டம் நீள அகலமா இருந்தானே என் மகன், சுடுகாட்டுக்குக் கொண்டு போறப்போ அவனை கையில தூக்கிட்டு வாசல்வழியா நேரா போக முடியாம, கையை சாச்சுத்தானே கொண்டு போனாங்க’’ என்று அழுவார்கள் அடிக்கடி.
மீண்டும் அத்தை நிறை கர்ப்பிணியாக இருக்கையில் பாம்பே அண்ணன் ஒரு விபத்தில் காலமானார். ஒரு பெண் குழந்தையுடன் அத்தையும் அவரின் ஐந்து சகோதரிகளுமே இளம் விதவைகளாத்தான் இருந்தார்கள்.. அவர்களின் ஆண் வாரிசுகளில் ஒரே ஒருவரைத் தவிர பிறர் அனைவருமே மர்மமான முறையில் அல்லது அகாலமாய் மரணித்தார்கள். அவர்களுக்குப் பிறந்த பெண்கள் நலமுடன் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் ஆண் வாரிசுகள் தங்குவதில்லை. இந்த இணைய யுகத்தில் இது என் குடும்பத்தில் நடப்பதால் மட்டுமே என்னாலும் நம்ப முடிகிறது.
என் அம்மாவை அவர்களின் குடும்பமே மறந்து , கடைசிக் காரியங்கள் செய்து, எங்கள் மகள் இறந்துவிட்டாள் என்று புகைப்படத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து விட்டிருந்தனர். எனினும் பச்சை நாயகி அத்தை தூயவெண் பருத்திப் புடவையுடன் நெற்றி நிறைந்த திருநீறு துலங்க அடிக்கடி வீட்டுக்கு வருவார். 7 குழந்தைகளுடன் விதவையாக இருந்த ஞானம் பெரியம்மா, குழந்தைகளே இல்லாத மீனாட்சி பெரியம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாய் எப்போதாவது அம்மாவுடன் பார்க்கப்போகும் பொள்ளாச்சி சுப்பிரமணிய சாமி கோவில் வாசலில் காவியுடுத்திப் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் சாமியார் அண்ணன், பச்சைநாயகி அத்தை ஆகியோர் மட்டுமே எங்களுக்கு அம்மாவின் குடும்பத்தினருடனான கண்ணிகள்.
மீனாட்சிப் பெரியம்மா அம்மாவுக்கு வலுக்கட்டாயமாக விஷம் அளித்துக் கொல்லப்பார்த்ததை மீனாட்சிப் பெரியம்மாவே சொல்லிச் சொல்லி பலமுறை அழுவார்கள். வஞ்சமெனும் கொடுந்தெய்வம் மனத்தில் குடியேறினால் செய்ய முடிந்த அனைத்தையும் அம்மாவின் குடும்பம் செய்திருக்கிறது.
அம்மாவுக்கு 25 வயதான போது குடும்பம் நொடித்திருந்தாலும் அரசு வேலையும், அழகும், அம்மாவுக்கு நல்ல வரன்களைக் கொணர்ந்து வந்திருந்திருக்கின்றன. எனினும் அம்மா வீட்டினர் ஒரு அரசாங்க வேலையிலிருக்கும் மணமகனே உகந்தவரென்று அபிப்ராயப்பட்டதால் என் அப்பாவை சம்பந்தம் பேச விழைந்திருக்கின்றனர். அம்மாவுடன் ஒப்பிட்டால் பொருளாதார ரீதியாக மிகப் பின்தங்கியவர்கள் அப்பாவின் குடும்பம்.
இரு சகோதரிகள், இரு சகோதரர்களுடன் குடும்பத்தில் மூத்தவராக பல கடமைகள் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தாலும் சென்னையில் படித்து அரசுப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்ததால் அப்பாவுக்கு அம்மாவைக் கொடுப்பதாக வெற்றிலை பாக்கு மாற்றி எளிமையாக இரு குடும்பத்தினர் கூடி திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மிக எளிமையாக மூன்று மாதங்களில் நடந்து முடிந்திருக்க வேண்டிய அம்மாவின் திருமணம் எதிர்பாராமல் பெரும் சிக்கலை சந்தித்திருக்கிறது. யார் பக்கம் தவறென்று சொல்லவே முடியாதபடிக்கு அம்மாவின் மொத்த வாழ்வையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது ஊழ்.
வெண்முரசில் ’’மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்கக் காத்திருக்கிறது ஊழ்’’ என்று சொல்லப்பட்டிருக்கும். ஊழன்றி வேறெதெற்கு இத்தனை வல்லமை இருக்கும்?
அந்த திருமண உறுதிப்பாட்டின் போதுதான் அம்மவுக்கு தெரியவந்திருக்கிறது யானை பாலருந்தி ஓடையாய் பால் வழிந்தோடியது அப்பாவின் வீட்டு வாசலில் என்று. அத்தனை செல்வாக்கோடு இருந்த குடும்பம் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) திருமணத்தைத் தாண்டிய பந்தமொன்றினால் சரிந்திருக்கிறது
அந்தத் தொடர்பு என் தாத்தாவிற்கு அவரது இறுதிக்காலம் வரைக்கும் இருந்தது.
நான் சிறுமியாக இருந்தபோது தாத்தாவுடன் மிகப்பெரிய முற்றமும், விறகு எடைபோடும் தராசும், அடுக்கப்பட்டிருந்த விறகுக்குவியல்களுமாக இருந்த ‘அந்த’ பெரிய ஓட்டு வீட்டுக்கு சென்றது எனக்கு தேசலாய் நினைவிருக்கிறது.
அந்த மாபெரும் தராசுத்தட்டில் உட்கார வைக்கப்பட்டு சிறு துண்டு வெல்லம் எனக்கு அந்த வெற்றிலையால் சிவந்த உதடுகளுடன் இருந்த அம்மாள் அளித்தார்கள். அன்று இரவு என்னைப் பாட்டி ’’அங்கே போவியா போவியா’’ என்று கண்ணீருடன் அடித்தார்கள். அந்த அடிகள் எனக்கானவை அல்ல என்பது புரியவும் பல வருடங்களானது.
பாட்டியின் பிறந்த வீட்டிலிருந்து அனுப்பப்படும் வருஷத்துக்கான நெல்மூட்டை வண்டியும் அந்த விறகுக் கடை வீட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. அப்போதைய வாயில்லாப் பூச்சி மனைவிகளில் ஒருவரான பாட்டி, வீட்டு செலவுகளுக்கென நிலக்கடலை உரிக்கவும் , வேப்பமுத்து பொறுக்கவும், வயல்களுக்குக் கூலி வேலைக்கும் போய்க் கொண்டிருந்தார்
அப்பா படித்து ஆசிரியராகி குடும்பம் நிமிரத்துவங்கி இருந்த நேரத்தில், இந்த சம்பந்தமும், அம்மாவின் அரசுவேலையும் பெரும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், திருமண வயதில் இருந்த இரு அத்தைகளின் எதிர்காலத்திற்கான பிடிமானமாகவும் இருந்திருக்கிறது
நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் கழித்து அம்மாவின் பள்ளியில் நடந்த ஒரு அரசு விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வாக்கான பதவியும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் கொண்டிருந்த ஒருவர் அம்மாவை அந்த விழாவில் பார்த்திருக்கிறார்.
அம்மாவுக்குத் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட விவரம் தெரியாத அவர், அம்மாவின் அழகும் எளிமையும் பிடித்திருந்ததால் தன் குடும்பத்தினருடன் அன்றே அம்மா வீட்டுக்கு சென்று பெண் கேட்டிருக்கிறார் உடனடியாக திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
வேகமாக வீழ்ந்து கொண்டிருந்ததால் எதைப் பற்றிக்கொண்டாவது மேலே ஏறி மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்மாவின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள விரும்பியிருக்கின்றனர். மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு மரத்துண்டு கிடைத்தால் போதும் என்றிருக்கையில் ஒரு சொகுசுக் கப்பலே வந்தது போல, அவர்களுக்கு அனைத்தையும் கடந்து குடும்பம் நிமிர்தல் என்னும் ஒன்று மட்டுமே மிக முக்கியமானதாக தெரிந்திருக்கிறது.
அம்மாவுக்கு வெற்றிலை மாற்றி நிச்சயம் செய்துவிட்டதைச் சொன்னபோதும் மணமகன் வீட்டார் ’ வெறும் உறுதி செய்தலான அந்த நிகழ்வில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, பெண் வீட்டினருக்கு சம்மதமென்றால் உடன் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னபோது அறமென்னும் ஒன்றை அம்மாவின் குடும்பம் மறந்து விட்டிருக்கிறது.
புதிய சம்பந்தமொன்றிற்கு சம்மதம் சொல்லப்பட்டது அம்மாவுக்கு மிகத் தாமதமாகவும், அப்பாவின் குடும்பத்திற்கு மிக மிகத் தாமதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இது தெரிய வந்தபோது நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதிக்கு சரியாக ஒரு வாரம் இருந்திருக்கிறது
இதை அம்மா திகைப்புடன் எதிர் கொண்டிருக்கிறார்கள். அப்பா குடும்பத்தினர் இதில் சீண்டப்பட்டவர்களாகவும், இழிவு படுத்தப்பட்டவர்களாகவும் உணர்ந்திருக்கின்றனர்.
செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தினரின் தலையீடு, திருமணக்கனவில் இருந்த இரு இ்ளம் உள்ளங்களின் கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது.
அப்போது திராவிட கட்சியிலும் கடவுள் மறுப்புக்கொள்கையிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அப்பா தனது நண்பர்களுடன் அம்மா வீட்டிற்குப் பேச்சு வார்த்தைக்குப் போன போது சிறுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.
அம்மா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பலமுறை வீட்டிலிருந்து வெளியேற முயன்று கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார். அப்பா வழித்தாத்தா வறுமையில் இருந்தாலும் ஊரில் நல்ல செல்வாக்கு கொண்டவர். அவரும் இதில் தலையிட்டு உதவியதால், குறித்த நாளுககு முந்தைய இரவு தன் நண்பர்கள் உதவியுடன் அம்மாவை வீட்டிலிருந்து வெளியேறச் செய்து, தன் வீட்டு முற்றத்தில் எளிமையாக மாலைமாற்றி தாலி கட்டி அப்பா திருமணம் செய்துகொண்டார்.
விஷயம் தெரிந்து அந்தப் பெரிய வீட்டினர் எந்த மனவருத்தமும் இன்றி விலகிக்கொண்டனர். ஆனால் அம்மா வீட்டினர் இதில் அவமானப்பட்டு மிக மிகப் புண்பட்டுவிட்டனர். மறுநாளே அம்மாவை இறந்தவளாக அறிவித்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து வீட்டில் முறையாக நீத்தார் சடங்கும் செய்திருக்கிறார்கள்.
கட்டிய புடவையுடன் எளிமையாக அப்பாவின் வீட்டுக்கு வந்த அம்மாவுக்கு இடப்பட்ட முதல் கட்டளையே இனி பிறந்த வீட்டை நினைக்க கூடாது அங்கு போகக்கூடாது என்பதுதான். அதை கடந்த மாதம் மாரடைப்பால், என் தோளில் சாய்ந்து உயிரை விட்ட தனது 82 வது வயது வரை அம்மா கடைப்பிடித்தார்
தனது பெற்றோர் இறந்த செய்தி வந்தபோது கூடத்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.
அந்தத் திருமணம் அப்பாவின் ஆணவத்தின், ஆண்மையின் வெற்றியாக அமைந்தது என்றாலும் ஒரு மிகப்பெரிய சம்பந்தத்தை உதறிவிட்டு அவர்களுடன் இணை சொல்லவே முடியாத இடத்தில் இருந்த தன்னை பரமேஸ்வரி மணம் செய்து கொண்டது அப்பாவை எங்கோ காயப்படுத்தி இருக்கிறது.
வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.
அம்மா ஒரு திருமண உறுதிப்பாட்டினை மீறக் கூடாது என்னும் எளிய அறத்தினால் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க கூடும்.
ஆனால் கடைசிக்கணம் வரைக்கும் ஒரு தென்னிந்தியப் பெண்ணிற்கு உரித்தான அனைத்து குடும்ப வன்முறைகளும், அநீதிகளும் இழைக்கப்பட்டு, உதறிவிட்டு வந்த அந்த உறவை நினைத்துவிடக்கூடாது என்பதற்காக மேலதிகமாக, சித்ரவதையும் செய்யப்பட்டார். அறத்தின் மீது நின்றமைக்காக அம்மா இழந்ததும் பெற்றதும் ஏராளம்
இதை ஒருபோதும் அப்பாவும் அம்மாவும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டதில்லை எனினும் அப்பாவின் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அந்தக் கனல் அவ்வப்போது தழலாடி எங்கள் அனைவரையும் பொசுக்கும்.
அப்பா செய்த அனைத்து இழிவுகளையும் மறு பேச்சின்றி ஏற்றுக்கொண்டு, அவரது எல்லாச் செயல்களுக்கும் மறுப்பேதும் தெரிவிக்காமல் மெளன சாட்சியாக இருந்த அநீதியை அம்மா இறுதிவரை செய்தார். ஒரு போதும் அப்பாவை மீறி ஒரு சொல் அம்மா சொன்னதில்லை, நினைத்ததும் இல்லை
புகுந்த வீட்டின் நான்கு திருமணங்களையும் அம்மா சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார். கழுத்தில், காதில், கைகளில் ஏதும் நகைகள் இன்றி வெறும் கழுத்தாக வந்த அம்மாவுக்கு அப்பா வாங்கிக்கொடுத்த ஒரேொரு பீட்ரூட் கல் நெக்லஸ் பெரும் பிரியத்துக்குரியதாக இருந்தது
கண்ணை விழித்துக் கொண்டு பெரிய பெரிய அடர் சிவப்பு நிற உருண்டைக்கற்களுடன் இருக்கும் அந்த பழமையான நெக்லஸை அம்மா எனக்கு திருமணத்தின் போது கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் கழுத்திலும் வீட்டு அலமாரியிலும் இருந்ததை விட அதிக காலம் அது வங்கியில் கடனாக வைக்கப்பட்டிருந்தது.
அம்மாவின் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகி அம்மாவின் பெற்றோர் இறந்து, நானும் அக்காவும், தம்பியுமாக மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் அம்மாவின் இரு சகோதரிகளும் மெல்ல மெல்ல வீட்டுக்கு வரத் தொடங்கினர்.
கல்யாண பிரச்சனைகளின் போது அம்மா வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிவிட்டதை தெரிந்துகொண்டு வலுக்கட்டாயமாக விஷம் புகட்ட முனைந்த மீனாட்சி பெரியம்மாவும், மகளைப் போல வளர்த்த சின்னத்தங்கையை கொல்ல உடந்தையாக இருந்த ஞானம் பெரியம்மாவும் சொல்லித்தான் எங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தன. மீனாட்சி பெரியம்மா என் பாதுகாப்பில் இருக்கிறார்கள். சுத்தக்காரரான ஞானம் பெரியம்மா பல வருடங்களுக்கு முன்னர் ஒரு வாரம் வெறும் நீர் மட்டும் அருந்தும் கடும் சஷ்டி விரதம் இருந்து, ஏழாம் நாள் சூர சம்ஹாரம் பார்த்துவிட்டு வீடுதிரும்பி பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு புடவைக் கொசுவத்தை சொருகிக்கொண்டிருக்கையில் அப்படியே மாரடைத்து இறந்துபோனார். விழுந்து கிடந்த அவர் கைகளுக்கு வெகு அருகே விரதம் முடித்துவைக்க வேண்டிய முருகனின் தண்டு பிரசாதம் இருந்தது.
பல கஷ்டப்பாடுகளுக்கிடையில் எங்களை வளர்த்தெடுத்தாலும் அப்பாவின் அநீதிகளுக்கெல்லாம் மெளனமாக இருந்தே உடந்தையாக இருந்தார் என்னும் வருத்தம் அம்மாவின் மீது எங்கள் மூவருக்கும் உண்டு.
அம்மா கடைசி நாள் வரை தனக்கு தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டார். விநாயக சதுர்த்திக்கு கொளுக்கட்டைகளை அவராகவே அன்று செய்தார். மறுநாள் செப்டம்பர் முதல்நாள்அன்று இரவு 1 மணிக்கு மூச்சு விட சிரமாயிருக்கிறெதென்று சொன்ன அம்மாவை உடனே காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அவசரமாய் காரில் ஏற வந்த என்னை ’அந்தப் பக்கம் வந்து உடகாரு தேவி’’ என்றார் அம்மா. அதுவே அவரது வாழ்வில் கடைசியாக பேசிய வாக்கியம் என்பது அப்போது எனக்கும் அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. வயோதிகத்தினால் ஏற்பட்ட உடல் நலிவினால் அவ்வப்போது மூச்சுவிட சிரமப்படுவார்கள் அப்படியான ஒன்று தான் என அன்றும் நினைத்தேன்.
20 நிமிட பயண தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அப்பாவையும் அழைத்துக்கொண்டு என் மகன் ஓட்ட, காரில் விரைகையில் கண்களை மூடிக்கொண்டு கார் கூரையிலிருக்கும் சிறு கைப்பிடியை பிடித்துக்கொண்டே வந்த அம்மாவுக்குள் நான் பேசியவை எதுவும் சென்று சேரவே இல்லை.
மருத்துவமனையை நெருங்க 5 நிமிடங்கள் இருக்கையில் கைப்பிடியை விட்டுவிட்டு ஒரு கையால் என் இடது கையை இறுகப் பற்றிக் கொண்டு என் தோளில் சாய்ந்துவிட்டார்கள்.
அவ்வளவுதான். 82 வருட வாழ்வும் 55 வருட தாம்பத்யமும் எண்ணிலடங்கா துயர்களும், வேதனைகளும், அனுபவங்களும், நினைவுகளும் நிறைவுற்றன.
அம்மாவின் இறுதிச் சடங்குகளின் போது அவர்களை அலங்கரித்து எங்கோ தூர தேசத்துக்கு அனுப்புவது போல் தயார்படுத்துவதாக நான் நினைத்துக்கொண்டேன். உறுதியாக மின்மயானத்துக்கு வர மறுத்து விட்டேன். அம்மாவின் அலங்கரித்த தோற்றமே என் மனதின் கடைசி சித்திரமாக இருக்கட்டுமென்று.
சிதை ஏற்றுகையில் சொல்லப்பட்டிருக்கிறது முன்பு சுடுகாடாக இருந்த அங்குதான் அம்மாவின் அப்பாவினுடைய உடல் சாம்பலாக்கப் பட்டிருக்கிறதென்று. இந்த விசித்திரமான வாழ்வு நம்மை அழைத்துச் செல்லும் இடங்களை ஒருபோதும் நம்மால் கணிக்கவே முடிவதில்லை.
குழந்தையாக, கன்னியாக, மனைவியாக, அன்னையாக, முதியவளாக 82 நீண்ட வருடங்கள் வாழ்ந்து மறைந்த அம்மாவை மூன்றாம் நாள் ஒரு சிறு மண் சட்டியில் அஸ்தியாக எடுத்துக்கொண்டு பாரதப்புழா ஆற்றில் கரைத்துவிட்டு, கரையோரம் இருந்த நவ முகுந்தனை தரிசித்து விட்டு அம்மாவின் ஆன்மா சாந்திக்கென வேண்டிக்கொண்டு திரும்பினோம். திரும்பும் பயணத்தில் அனைவரின் மனதிலும் இனி அம்மா வெறும் நினைவாகவே எஞ்சுவார் என்பது ஒரு பெரும் பாறை போல அழுத்திக் கொண்டிருந்தது. வாழ்வென்னும் வதையிலிருந்து விலக்குகையில் இறப்பு ஒரு விடுதலையாகத்தான் இருக்கும்.
பாதி தூரத்தைக் கடந்தபோது கார் ஓட்டிக் கொண்டிருந்த என் தம்பி என்னிடம்’’ நீ கொஞ்ச நேரம் முன்னால் சாமி கும்பிடும் போது அப்படியே அம்மாவின் சாயலில் இருந்தே’’ என்றான். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன் அம்மாவின் இடத்துக்கு காலம் என்னை நகர்த்தி விட்டிருக்கிறது
அம்மாவின் இறப்பு நிகழ்ந்த அந்த வாரம் வீட்டிலிருந்த பெரு மரங்களைத் தறித்துக் கொண்டிருந்தோம். அம்மாவின் இறப்பு, மனத்திலும் வீட்டிலும் உருவாக்கி இருந்த வெறுமையை அத்தனை காலம் பசுமைப் பெருக்கினால் வீட்டை மூழ்கடித்து கொண்டிருந்த மரங்களும் அவற்றின் நிழலும் குளுமையும் இல்லாதிருந்தமை மேலும் அதிகரித்திருந்தது.
மிக எளிய இறப்பு அம்மாவுடையது. ஒரு மலர் உதிர்வதைப்போல உதிர்ந்து விட்டார்கள். இப்போது தினம் அம்மாவை நினைத்துக் கொள்கிறோம். மெல்ல மெல்ல வாழ்வின் இயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் அம்மாவை மெல்ல மறக்கவும் தொடங்குவோம். பின்னர் வருடா வருடம் ஒரு சடங்கு போல நினைவுகூர்ந்து வழிபடுவோம். எனினும் என் தோளில் அம்மாவின் அந்த கடைசிச் சாய்தலின் எடை என் இறுதிக்கணம் வரைக்கும் இருக்கும். இவ்வுலகின் இரக்கமற்ற நெறிகளுக்கும் வஞ்சங்களுக்கும் இடமில்லா மூச்சுலகில் அம்மா அமைதி கொள்ளட்டும்.
48 நாட்கள் கடந்துவிட்டன அம்மா இல்லாமல்.
தறிக்கப்பட்டு வெறுமை சூடி நின்ற மரக்கிளைகளில் செம்புநிறத் தளிர்கள் எழுந்திருக்கின்றன. சருகுகளை உதிரச்செய்யும் புடவியின் அதே நெறிதான் புதுத்தளிர்களையும் எழச் செய்கிறது.
அம்மாவின் ஆசி எங்களுக்கு பரிபூரணமாகக் கிடைத்து, உயிரொளிரும் தளிர்களும் மலர்களும் அவற்றின் குளுமையுமாக வீடு நிறையட்டும்.
துறை சார்ந்த ஒரு நிகழ்வில் உயிரி உரங்களுக்கான சந்தைச்சூழலைக் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் தொடர்ந்த அழைப்புகள் அப்பாவிடமிருந்து. அலைபேசியுடன் என் மனமும் அதிர்ந்துகொண்டே இருந்தது. நிச்சயம் துக்கச் செய்தியாகத்தான் இருக்கும் என யூகித்தேன். அதற்குள் தம்பியிடமிருந்து குறுஞ்செய்தி ’’ஊட்டி அத்தை இன்று (20/8/2024) காலை 7 மணிக்கு தவறிவிட்டார்கள்’’ என்று.
கண்ணீரை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. உரையை முடித்துவிட்டு அரங்கிலிருந்து வெளியே சென்று தம்பியை அழைத்துப் பேசினேன். அத்தையை பார்த்து பல வருடங்கள் ஆகியிருந்தன.
அம்மாவைக் காட்டிலும் எங்கள் மூவர் மீதும் அன்பாக இருந்த ஊட்டி அத்தை சில வருடங்களாகவே படுக்கைதான். தலைநடுக்க நோய் வந்திருந்தது. மறதியும் இருந்தது. பேச்சு குளறுவதால் சைகையில் தான் தொடர்பு கொள்வதல்லாமே. அத்தைக்கு இறப்பு நிச்சயம் விடுதலைதான்.
ஊட்டி மாமா என்றழைக்கப்பட்ட சவுக்கத் அலி மாமா கொரோனா முடிந்த ஒரு ஜூனில் தவறினார். அவரும் இடுப்புக்கு கீழ் அசைவின்றி சில வருடங்கள் கிடையில் இருந்துதான் சென்றார்.
மாமா அத்தை இருவருமே எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். அவர்கள் மாமா அத்தை ஆனதே ஒரு கதைதான்.
60-களின் இறுதியில் திருமணத்துக்கு முன்பு அப்பா உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சிக்கல்விக்காக சென்னை YMCA வில் இருந்தார். அப்போது அந்த கிராமத்தில் இருந்து சென்னை சென்ற சாமான்யர்களில் அப்பாதான் முதல் நபர். அதுவே அப்போது அவருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தாக இருந்தது.
அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் திரு சவுக்கத் அலி என்னும் மிக உயரமும் தாட்டியுமான ஒரு இஸ்லாமியர். அப்பாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. அவரும் இளையவர் அப்போது. இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அப்பா படிப்பை முடிக்கும் சமயத்தில் சவுக்கத் அலி அவர்கள் இந்திராணி என்னும் கிருஸ்துவ பெண்ணொருத்தியை காதல் மணம் புரிந்து கொண்டார்.
இந்திராணி (அத்தை) வீட்டில் மட்டும் பலத்த எதிர்ப்பு. புதுமணத்தம்பதிகள் வேட்டைக்காரன் புதூருக்கு வந்து தங்கிச் சென்றிருக்கின்றனர். அப்பாவுக்கு அரசுப்பணி கிடைத்து,அப்பா அம்மாவின் புரட்சிகரமான திருமணம் நடந்தபோது அதற்கும் அவர்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். இந்திராணிஅத்தைக்கு ஒரு மகள் பிறந்த சில மாதங்களில் அம்மாவுக்கும் மித்ரா பிறந்திருக்கிறாள்.
அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் இந்திராணி அத்தைக்கு கணுக்கால் வரை அடர்த்தியான கூந்தலாம்.. ’’சீவக்கட்டை மாதிரியிருக்கும் அத்தையோட சடை. துணி துவைக்கற கல்லில் பிரிச்சுப்போட்டு ரெண்டு மூணு பேரா சேர்ந்து அலசுவோம், பேனுன்னா பேனு அத்தனை பேன் ஊறும், அலசிக் காய வச்சு தணலும் சாம்பிராணியுமா புகை போட்டு முடிக்கறதுக்குள்ள ஒரு நாளாயிரும்’’ என்பார்கள். மாமாவுக்கு இந்திராணி அத்தையின் கூந்தலின் மீது பித்திருந்ததாம்.
நான் பார்த்ததில்லை அந்த அத்தையை. நான் பிறக்கும் முன்பே மாமா அவரை மணவிலக்கு செய்துவிட்டார். அதுவும் வேட்டைக்காரன் புதூரில் வைத்துத்தான் நடந்திருக்கிறது.
மாமாவுக்கு சென்னை YMCA-விலிருந்து பொள்ளாச்சியில் இப்போது நானிருக்கும் இதே கல்லூரியில் உடற்பயிற்சி இயக்குநராக அரசுப்பணி கிடைத்திருக்கிறது. எனவே மாமா கல்லூரி உரிமையாளரின் விருந்தினர் மாளிகையிலும் அத்தை வேட்டைக்காரன்புதூரிலும் சில காலம் இருந்திருக்கிறார்கள்.
இன்னும் இந்தக் கல்லூரியின் ஒரு அரங்கில் கல்லூரி நிர்வாகக் குழுவினருடன் சவுக்கத் அலி மாமாவும் கோட்டும் சூட்டுமாக கம்பீரமாக நிற்கும் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கிறது.
பிறகு மாமாவுக்கு ஊட்டி லவ்டேலில் இருக்கும் பிரபலமான லாரன்ஸ் பள்ளியில் பணி கிடைத்த போது அவர் மட்டும அங்கே சென்றிருக்கிறார். இந்திராணி அத்தை சென்னையில் இருந்திருக்கிறார்.
லாரன்ஸ் பள்ளி அப்போதிலிருந்தே மிகச் செலவு பிடிக்கும் ஒன்று. அங்கே 5-ம் வகுப்பில் சேர குன்னூரில் இருக்கும் சாந்தி விஜய் என்னும் ஒரு feeding school-ல் படித்திருக்க வேண்டும். அல்லது மிகப்புகழ் பெற்றவர்களின், செல்வந்தர்கள், அரசியல் வாதிகளின் பிள்ளைகளாக இருக்க வேண்டும்.
நான் 5-ம் வகுப்பிலிருந்து 6-க்கு சென்றபோது என் மாமா மகன் 5-ல். தோல்வியடைந்திருந்தான். அவனை அப்போதே 1 லட்ச ரூபாய் கட்டணம் கட்டி எல்லாருமாக ஒரு ஜீப்பில் லவ்டேல் கொண்டுபோய் சவுக்கத் அலி மாமாவின் சிபாரிசில் லாரன்ஸ் பள்ளியில் சேர்த்துவிட்டு ’’படிக்க மாட்டேன் என்னையும் கூட்டிட்டு போங்க’’ என்று அவன் கதறக்கதற விட்டுவிட்டு ஊர் திரும்பினோம். நாங்கள் பொள்ளாச்சி வருவதற்குள் அந்த மாமா மகன் பல பேருந்துகள் மாறி எங்களுக்கு முன்னால் வீட்டுவாசலில் உட்கர்ந்திருந்தது ஒரு கிளைக்கதை
அங்கே மாமா நல்ல செல்வாக்குடன் இருந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த ஒரு செல்வச்செழிப்பான அய்யங்கார் வீட்டுப்பெண் அபயாம்பாள்.
மாமா உடற்பயிற்சி ஆசிரியர், அங்கே அன்றாடம் குதிரை ஏற்றப் பயிற்சி, நீச்சல், பேண்ட் வாத்திய பயிற்சி என்று இருக்கும். மும்பையில் சில காலம் வாழ்ந்த அத்தைக்கு ஷம்மி கபூர் பிடித்தமான நடிகர். மாமா கொஞ்சம் ஷம்மி கபூரும் நிறைய ஜெமினி கணேசனுமாக கலந்து செய்தது போலிருப்பார். தவறாமல் உடற்பயிற்சி செய்து கட்டான உடலும் மிடுக்கான தோற்றமும் கொண்டவரும் கூட.
மூன்று பேருக்கான அசைவ உணவை ஒருவராக உண்பார். தீவிர அசைவ உணவுப்பிரியர். நாய்களென்றால் மட்டும் மிகவும் பயப்படுவார்.அத்தனை திடகாத்திரமான, சராசரிக்கும் கூடுதலான உயரமும், பருமனுமாக இருக்கும் மாமா நாய்களுக்கு பயப்படுவது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.
எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் காலையில் உடற்பயிற்சி முடித்து சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் அவர் எழுந்ததும் கண்கள் ரத்தச்சிவப்பாயிருப்பதைப் பார்க்க நானும் மித்ராவும் காத்துக்கொண்டிருப்போம்.
அபயம் அத்தைக்கு ஷம்மி கபூரின் சாயலில் இருந்த நீச்சலும் உடற்பயிற்சியும் சொல்லிக் கொடுத்த மாமாவின் மேல் தீராக்காதல் உண்டாகி இருக்கிறது. ஒரு சிறுமகளும், வீட்டாரை எதிர்த்துக்கொண்டு இவரை நம்பி வந்த காதல் மனைவியும் இருந்த மாமாவும் அத்தையை விரும்பியது தான் ஆச்சரியம்.
இந்திராணி அத்தைக்கு விஷயம் தெரிந்து பெரும் பிரச்சனை உருவான போது மாமாவும் அத்தையும் வேட்டைக்காரன்புதூர் வந்தார்கள். ஊர்த்தலைவராக இருந்த என் அப்பாருவின் முன்பாக அத்தையை தலாக் செய்தார் மாமா.
அந்த அநீதியை நினைக்க நினைக்க இப்போதும் எனக்கு ஆறவே இல்லை. ஆண்களின் உலகுதான் இது அப்போதும் இப்போதும் எப்போதும்.
இந்திராணி அத்தையையும் கைக்குழந்தையாக இருந்த மகளையும் கோவை ரயில் நிலையத்தில் அப்பாதான் கொண்டு போய் சென்னைக்கு நீலகிரி விரைவு ரயிலேற்றிவிட்டு வந்திருக்கிறார்.
எட்டாவது படிக்கையில் தை மாதம் பொங்கலுக்கு வீடு வெள்ளையடிக்கும் போது பழைய பொருட்கள் இருந்த ஒரு டிரங்குப் பெட்டியில் பொடிப்பொடியான கையெழுத்தில் இந்திராணி அத்தை சென்னையிலிருந்து அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை நானும் மித்ராவும் ரகசியமாகப் படித்தோம் ’’ அவருக்கு இன்னொருத்தியை பிடித்திருந்தது, கல்யாணம் பண்ணிக்கொண்டார், ஆனால் கைக்குழந்தையுடன் தன்னந்தனியே ரயிலேறி திக்குத்தெரியாத எதிர்காலத்திற்கு செல்ல நான் என்ன தப்பு செய்தேன் என்று மட்டும் அந்த இரும்பு இதயம் கொண்ட மனிதரிடம் கேட்டுச்சொல்லுங்கள் அண்ணா’’ என்று எழுதியிருந்தார்கள்..
அந்த வயதில் காதலை, தலாக் என்னும் மணவிலக்கை குறித்த புரிதல் எல்லாம் இல்லாவிடினும் இரும்பு இதயும் கொண்ட மனிதரை நோக்கி கேட்கப்பட்ட அந்த கேள்வி என்னை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்கியது
அந்த பதின்ம வயதிலிருந்துதான் மணவுறவு குறித்தான பெருங்குழப்பம் எனக்கு தொடங்கியது.
பிறகு அபயம் அத்தையை மாமா வேட்டைக்காரன் புதூரிலேயே வைத்து திருமணம் செய்து கொண்டார். அத்தை வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்திருக்கிறது. திருப்பெரும்புதூரின் மிக ஆச்சாரமான பிராமணக் குடும்பப் பெண் ஒருத்தி ஒரு இஸ்லாமியரை அதுவும் இரண்டாம் தாரமாக அதுவும் 25 வயது வித்தியாசத்தில் 70-களில் திருமணம் செய்துகொள்வது என்பது எத்தனை பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். அத்தைக்கு காதல் கண்ணை, மனதை எல்லாம் மறைத்து விட்டது.
அம்மா இந்திராணி அத்தையுடன் கடிதத் தொடர்பில், இருந்தார், பிற்பாடு அந்த அத்தை மறுமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பிறந்தன. மூத்த மகளின் திருமணத்துக்கு அம்மாவுக்கு அழைப்பிதழ் வந்தது அதன் பின்னர் இந்திராணி அத்தை தொடர்பிலிருந்து விலகிவிட்டிருந்தார்.
அம்மாவும் அபயம் அத்தையும் நெருக்கமான தோழிகளாக இருந்தார்கள். அபயம் அத்தைக்கும் நீண்ட கூந்தல். இப்போது நினைக்கையில் வழக்கமாக பெண்களுக்கிருக்காத அந்த உயரமும், பருமனான உடலும், நீளக்கூந்தலுமாக யட்சி என்று நினைத்துக் கொள்கிறேன் அத்தையை.
அபயம் அத்தை பெயரை நூர்ஜஹான் என்று மாற்றிக்கொண்டார். நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல்தான் வெளியே செல்வார்.அவர் வேலை செய்யும் இடத்தில் நூரி மிஸ் என்றே அறியப்பட்டார்.அவரும் உடற்பயிற்சி ஆசிரியராக லவ்டேலில் பிற்பாடு இணைந்துகொண்டார். ஊட்டியில் இருந்ததால் அவர் எங்களின் ஊட்டி அத்தை ஆனார்.
பெரும்பாலான விடுமுறைகளில் நாங்கள் லவ்டேல் செல்வோம் அல்லது மாமாவும் அத்தையும் பொள்ளாச்சிக்கு வந்து விடுவார்கள்
அவர்கள் வராத நாட்களிலும் ஊட்டியிலிருந்து பொள்ளாச்சி வரும் பேருந்தில் ஒரு கூடை நிறைய காலிஃப்ளவரும் கேரட்டும் முட்டைகோஸும் பீட்ரூட்டுமாக சுமார் 10 கிலோ அளவுக்கு பச்சைப்பசேலென காய்கறிகள் அவ்வப்போது அனுப்பி வைப்பார்கள். அப்பா ஆட்டோ பிடித்து பேருந்து நிலையம் போய் அவற்றை எடுத்துக் கொண்டு வருவது நன்றாக நினைவிருக்கிறது. சந்தையில் ஊட்டிக் காய்கறிகள் வாங்குவது ஒரு சிறப்பு அந்தஸ்தாக இருந்த காலம் அது.
.எனக்கும் மித்ராவுக்கும் பூப்பு நன்னீராட்டிச் சடங்கு செய்ததும் ஊட்டி அத்தைதான். எங்கள் இருவரின் திருமணத்தின் போதும் சீர்வரிசைகளை விமரிசையாகச் செய்ததும் அபயமத்தைதான்.
அப்பா அம்மா லோன் வாங்கி பொள்ளாச்சி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு சமயம் கடும் நிதி நெருக்கடி வந்திருக்கிறது. மாமா உதவுவதாகச் சொல்லி இருக்கிறார் எனினும் பணம் வாங்க அப்பாவால் ஊட்டிக்குச் செல்ல முடியவில்லை. மாமா அப்போது எங்கோ வடக்கே ஒரு கூடுகைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்பாவை கோவை ரயில் நிலையத்தில் சந்தித்து நகரும் ரயிலின் ஜன்னல் வழியே மாமா பணம் கொடுத்துச்சென்றார் அப்பா,ஊட்டி மாமா இருவரின் வாழ்விலும் இப்படியான உறவைக்காட்டிலும் நட்பில் இணைந்திருந்த தருணங்கள் நிறைந்திருந்தன.
அப்படிக் கட்டிய அந்த வீடு 2 வருடங்களுக்கு முன்னர் அம்மா இறப்பதற்கு சில வாரம் முன்பு ஒரு இஸ்லாமியருக்கு விற்கப்பட்டது.
அத்தையும் அம்மாவும் லவ்டேல் வீட்டில் சமைப்பதும், ஊட்டிக்கு இந்திச் சினிமாக்களுக்கு போவதும், வீட்டின் எதிரே இருந்த மாபெரும் புல்வெளியில் அமர்ந்து கதை பேசுவதுமாக மகிழ்ந்திருப்பார்கள்.
வழக்கமாக நாங்கள் கோடையில் ஊட்டி செல்லும் போதுதான் மலர்க்கண்காட்சியும் நடக்குமென்பதால் எப்போதும் தாவரவியல் பூங்காவிற்குச் சென்று முழுநாளும் இருப்பது, மாலை எஸ் பி பி, சைலஜா, ஜானகி அகியோரின் இசைக்கச்சேரிகளைச் கேட்பது, மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு சென்று புல்வெளியில் அமர்ந்து சாப்பிடுவது என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
லவ்டேலில் அப்போதுதான் கோன் ஐஸ் கடை முதன்முதலாக வந்திருந்தது. அதுவும் லவ்டேல் வீட்டுக்கு பின்னால் இருந்த யூகலிப்டஸ் மரக்கூட்டமொன்றின் அருகில். தனியே கூம்பு பிஸ்கட்டுகளையும் ஒரு சில்வர் பாத்திரம் நிறைய ஐஸ்கிரீமுமாக வாங்கிவந்து நாளெல்லாம் சாப்பிடுவோம்.
ஊட்டியில் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவோரக் கடைகள் போடுவார்கள், அப்படி ஒரு இளவெயில் பொழிந்துகொண்டிருந்த நாளில் அத்தையும் மாமாவும் எனக்கும் மித்ராவுக்கும் ஸ்வெட்டெர் வாங்கித்தார்கள்.
வான் நீலத்தில் பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்தது எனக்கு, அடர் ஆரஞ்சில் பெரிய பாக்கெட்டுகள் வைத்தது மித்ராவுக்கு. அப்போது பொள்ளாச்சியில் புழக்கத்துக்கு வந்திருக்காத தெர்மோ ஃப்ளாஸ்க் தண்ணீர் பாட்டில்கள் இரண்டும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு பொள்ளாச்சியிலிருந்து நேராக ஊட்டி செல்லும் பேருந்தில் தூங்கி வழிந்து கொண்டே செல்லும் நாங்கள் இருவரும் பர்ளியாறு நிறுத்தத்தில் விழித்துக்கொள்வோம். அங்கிருந்து அத்தைக்கு பிடித்த பிளம்ஸ் பழங்கள் தவறாமல் வாங்கிக்கொண்டுதான் மேலே செல்வோம்.
அத்தை லாரன்ஸ் பள்ளியில் பெண்கள் விடுதியின் வார்டனாகவும் மாமா உடற்பயிற்சி இயக்குநராகவும் பிற்பாடு இருந்ததால் இருவருக்கும் இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதல்தளத்தில் எதிர் எதிராக இருந்த அந்த மரவீடுகளில் ஒன்றை நாங்கள் வரும்போது மட்டும் உபயோகித்தோம்.
அத்தை மாமா இருவருக்கும் அங்கே விடுதியிலேயே உணவு கொடுக்கப்பட்டது. விருந்தினர்களுக்கும் அப்படித்தான். நானும் மித்ராவும் மதிய உணவை பெரிய கேரியரில் சென்று வாங்கி வருவோம். கஸ்டர்ட், ஆம்லெட் உள்ளிட்ட முழுமையான உணவு கொடுப்பார்கள். சமையலறையில் சீருடையணிந்த பணியாளர்கள் முட்டையை எண்ணெயில் உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரிப்பதை வாயைத்திறந்தபடிக்கு கிராமத்துச் சிறுமிகளான நாங்கள் வேடிக்கை பார்ப்போம்.
மாலை வேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்படும். நாங்கள் அனைவரும் அமர்ந்திருக்க வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் பீங்கான் ஜாடியில் கொண்டு வந்த தேநீரையும் வாட்டிய ரொட்டித் துண்டுகளையும் பரிமாறுவார்கள். பீங்கான் கப்புக்களையும் தட்டுக்களையும் அங்கேதான் முதன் முதலில் பார்த்தேன். நான் அங்கே போனால் சாப்பிடும் தூய வெள்ளையில் குழிவான பீங்கான் தட்டின் விளிம்பில் அடர் நீலக் கோடு இருக்கும். அந்தத்தட்டு இப்போது கூட கனவுகளில் அடிக்கடி வருகிறது.
லவ்டேலிலிருந்து திரும்ப பொள்ளாச்சி வந்தால் எனக்கு ஒரு நீண்ட கனவொன்றில் இருந்து விழித்துக் கொண்டது போலவே இருக்கும் அந்த விடுமுறை நினைவுகள்.
ஊட்டிக்கு சில சமயம் மாமா எங்களை பேருந்தில் கூட்டிச்செல்வார், பொள்ளாச்சியிலிருந்து லவ்டேல் போய்ச்சேர பின்னிரவாகி விட்டிருக்கும். அத்தை எங்களுக்கென வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பார்கள். வந்த உடனே சாப்பிட தவறாமல் அசைவம் சமைத்திருப்பார்கள்.
வாழ்நாளில் ஒருமுறை கூட அசைவம் சாப்பிடாவிட்டாலும் இறைச்சிக் கடைகளுக்குப் போய் வாங்கிவருவது சுத்தம் செய்து சமைப்பதிலெல்லாம் அத்தைக்கு ஒருபோதும் ஆட்சேபணை இருந்ததில்லை. அத்தை, மாமாவை மட்டும் விரும்பவில்லை, மாமாவின் விருப்பு வெறுப்புகளை அவரது உற்றார் உறவினரையும் விரும்பினார் அதுதானே உண்மையில் காதல் என்பது!
லவ்டேல் குளிரில் இடைவரை அடர்ந்திருந்த எங்கள் கூந்தலை பிரித்து அண்டாக்களில் சுடுநீர் கொதிக்க வைத்து அரப்புத்தேய்த்து தலைமுடி அலசிக் குளிக்க வைத்த அத்தையின் அன்பை என்னவென்று சொல்வது? அத்தைக்கு குழந்தைப் பேறு இல்லை என்பதைக் குறித்து வருந்தியதே இல்லை அல்லது எங்களுக்கு அவர் வருத்தத்தை காட்டியதில்லை.
மிக அருமையான கள்ளிச்சொட்டுப் போன்ற பால் லாரன்ஸ் பள்ளியில் கிடைக்கும். அவர்களுக்கென்று மாட்டுப்பண்ணை இருந்தது. வாரா வாரம் ஆசிரியர்களுக்கு கோழி முட்டைகளும் பெரிய பெட்டிகளில் கொண்டுவந்து கொடுப்பார்கள். அத்தை சூடான பாலில் இரண்டு முட்டைகளை ஊற்றி அடித்து எங்களை கட்டாயப்படுத்தி குடிக்கச்செய்து பிறகு மாடிப்படிகளில் பத்துமுறை ஏறி இறங்க சொல்வார்கள். ஒரு நாளைக்கு இத்தனை செம்பு தண்ணீர் அருந்தியே ஆகவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவார்கள்.
லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் நிறைய சினிமாப் படப்பிடிப்புகள் நடக்கும் அங்கேதான் நான் கமல் ஸ்ரீதேவி ஆகியோரையும் ஹேமாமாலினி உள்ளிட்ட நிறைய பாலிவுட் நட்சத்திரங்களையும் பார்த்தது.
அத்தையும் அம்மாவும் ஊட்டிக்கு அமிதாப்பின் டான் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாளில் வீட்டில் நானும் மித்ராவும் மட்டும் இருந்தோம். மாலை 6 மணி இருக்கும், அழைப்பு மணி ஒலித்தது கதவை திறந்தால் மிக உயரமான ஒருவரும் உடன் நல்ல கட்டுமஸ்தாக ரோஸ் கலரில் ஒருவருமாக நின்றனர். கையை உருட்டி பந்து போல செய்த அந்த உயரமானவர் ’’ஃபுட் பால் ?’’ என்று கேட்டார்.
மாமா உடற்பயிற்சி ஆசிரியராதலால் வீட்டில் நிறைய பந்துகள் இருக்கும் அதிலொன்றைக் கொடுத்தேன். அந்த உயரமானவர் என் தலையை செல்லமாக தட்டிவிட்டுச் சென்றார். இரவு வீடு திரும்பிய அத்தையிடம் வந்தது அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் என்று சொல்லியிருக்கிறார்கள் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள். அத்தை நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்து ‘’உள்ளே கூப்பிடலையாடி?’’ என்று கேட்டது நினைவிருக்கிறது.
அத்தைக்கு ஷம்மி கபூரை, சசிகபூரை பிடிக்கும் அத்தை சொல்லச்சொல்லக் கேட்டு எனக்கும் சசி கபூரை பிடித்திருந்தது. சசிகபூர், ஜெனிபர் அமரக்காதலை ஓரிரவில் மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில் அத்தை சொல்லக்கேட்டதிலிருந்து அவர் மீது பெரும் பித்து உண்டாகி சசி கபூர் படங்களாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
அத்தை என் தம்பி பிறந்த போது அவனை முறைப்படி தத்தெடுத்துக்கொள்ள விரும்பினார். அம்மாவும் அத்தையும் தோழிகள் என்றாலும் தோழமைக்கும அன்னைமைக்கும் நடந்த போட்டியில அன்னைமைதான் வென்றது. அம்மாவால் அதற்குச் சம்மதிக்க முடியவில்லை.
அத்தை மாமாவின் மண வாழ்வு எப்படி இருந்தது என எனக்கு இளம் வயதில் தெரியவில்லை. அப்போது மாமா என நாங்கள் அழைப்பவர் ஒரு இஸ்லாமியர் என்பதும் அத்தை ஒரு பிராமணப்பெண் என்பதும் தெரியாத வயதில் இருந்தோம்.
ஆனால் நான் கல்லூரியில் படிக்கையில் அத்தையும் மாமாவும் சென்னைக்கு வந்துவிட்டிருந்தனர். மாமாவுக்கு கிண்டி IITயில் பணி, அத்தை அதே வளாகத்தில் இருந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியை. அப்போதெல்லாம் மாலையில் கிண்டி IIT வளாகத்திலிருந்த ஒரு திறந்தவெளி அரங்கில் நாடகமோ இசைக் கச்சேரியோ வார இறுதிகளில் நடக்கும். கிரேஸி மோகன், சோ வையெல்லாம் நான் அங்கே தான் நேரில் பார்த்தேன். மான்கள் திரியும் மயில்கள் விளையாடும் மாவும் பலாவும் செறிந்து காய்த்துக் கொண்டிருந்த அடர்வன வளாகம் அது.
அப்போதெல்லாம் அத்தை என்னுடன் மனம்விட்டுப் பேசி இருக்கிறார்கள்.
இளமை வேகத்தில் கல்யாணம் செய்து கொண்டதையும் வயதுவித்தியாசம் பெரும் பூதமாக இருவருக்குமிடையில் இருந்ததையும் சொல்லி வேதனைப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்தை சேதப்படுத்தி தான் வாழவந்த குற்ற உணர்விலிருந்து அத்தையால் இறுதிவரை விடுபடமுடியவில்லை. மாமாவின் மணஉறவு தாண்டிய தொடர்புகள் குறித்து அத்தைக்கு தெரியவந்தும் அதே வாசல்வழியே வந்தவராதலால் அவர் அதில் ஏதும் செய்ய முடியாதவராக இருந்தார்.
IIT வளாகத்தில் நாடகம் முடிந்த ஒரு ஞாயிறு மாலையில் ஒழிந்துகிடந்த அரங்கத்தின் கடைசி வரிசையில் அமர்ந்து அத்தை என்னிடம் சொன்னவற்றை பகிரவும் மறக்கவும் முடியவில்லை.
மகன் சரணை கைக்குழந்தையாக எடுத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கையில் அத்தையும் மாமாவும் பணி ஓய்வு பெற்று வேளச்சேரியில் வாழ்ந்து வந்தார்கள்.
அங்கே அப்போது பெரும் தண்ணீர்ப்பஞ்சம். நள்ளிரவில் சைரன் ஒலித்துக்கொண்டு தண்ணீர் லாரி வரும். நானும் அத்தையும் குடங்களில் பிடித்து வைத்துவிட்டு நனைந்த உடைகளை மாற்றிக்கொண்டு பின்னர் அதிகாலையில் உறங்கச் செல்வோம்.
அத்தை அப்போது ஏராளமான தெருநாய்களை வளர்க்க துவங்கி இருந்தார்கள். மாமாவுக்கு நாய்கள் என்றால் பெரும் ஒவ்வாமை இருந்தது. அத்தை வளர்த்தவற்றில் பல நாய்களுக்கு சொறி நோய் இருந்தது. அடிக்கடி கால்நடை மருத்துவர் வீட்டுக்கு வருவதும் அத்தை நாய்களுக்கு மருந்து கொடுப்பதுமாக வீடு வேறு ஒரு வடிவம் கொண்டு இருந்தது . எதன் பிழையீடாக அதைச்செய்தார் என்று அத்தைக்கு மட்டும்தான் தெரியும்.
30-கும் மேற்பட்ட நாய்கள் வீடெங்கும் திரிந்த அந்த வீட்டில் மாமா ஒரு அறைக்குள் முடங்கிக்கொண்டோ அல்லது வெளியெ சென்று விட்டு உணவு நேரத்துக்கு மட்டும் வீடு வருவதையோ வழக்கமாக கொண்டிருந்தார்.மாமாவும் அத்தையும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை என்பதையும் கவனித்தேன்.மாமா சைவ உணவும் விரும்பிச்சாப்பிட்டார். கொங்கு சமையலை நான் செய்து கொடுத்த ஒரு நாளில் பாசிப்பயறு கடைசலை நெய் விட்டு ருசித்துச்சாப்பிட்ட மாமா அதன் பெயரென்ன என்னவென்று சில முறை என்னிடம் கேட்டுக்கொண்டார். மனதாரா பாராட்டவும் செய்தார்.
வெறும் நெற்றியுடன் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு வந்ததும் முகம் கழுவி பெரிதாக வட்டக் குங்குமமிட்டு கொண்டிருந்த அத்தை, பாவனைகளும் முகமூடிகளும் போதுமென்று முடிவு செய்து, வீட்டில் சிறு பூஜை அறையில் மாலையில் ஸ்வாமிக்கு விளக்கேற்றி பூஜை செய்தார். எப்போதும் நன்றாக நெற்றிக்கு பெரிதாக சிவப்புக்குங்குமத்தில் பொட்டுவைத்துக்கொண்டார்.
மாமா மறைந்த பின்னர் அத்தையின் அண்ணன் குடும்பத்தினர் அத்தையுடன் வந்து இருந்தார்கள்.
பொள்ளாச்சியிலும் வேட்டைக்காரன் புதூரிலும் புடவையை மடிப்பெடுக்காமல் ஒற்றையாய் தலைப்புப்போட்டுகொண்டு, குளிர் கண்ணாடியும் அணிந்துகொண்டிருக்கும் அத்தையை எல்லோருமே கதாநாயகியை போல்தான் பார்த்தோம்.கணீரென்ற குரல் அத்தைக்கு,
அந்த அத்தை இனி எங்களுக்கு இல்லை அத்தையை கடைசியாக 2009-ல் என் புதுவீட்டுக் கிரகப்பிரவேசத்தில் பார்த்தது, பின்னர் பார்க்க்க கொடுத்து வைக்கவில்லை. நல்லவேளையாக அத்தையின் அந்தத் தோற்றம் மனதில் இருந்து குலைந்துபோகுமாறு நடுக்க நோய் வந்த பிறகு நான் பார்க்கவில்லை. கல்லூரியில் தேசிய தர அந்தஸ்திற்கு குழு வரவிருப்பதால் கடைசியாய் அத்தையின் முகம் பார்க்கக்கூட விடுப்பு எடுக்க முடியவில்லை.
சென்னையில் அன்று மாலை 3 மணிக்கு மின்மயானத்தில் அத்தை எரிந்து சாம்பலானார்கள். அத்தைக்கு பூரி சாப்பிடப் பிடிக்கும் பூரி கொஞ்சம் முறுகலாக இருந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இனி எப்போது பூரி செய்தாலும் அத்தையின் நினைவில்லாமல் சாப்பிட முடியாது. அன்று மாலை வீட்டில் கூடுதலாக விளக்கேற்றினேன்.
சந்திக்கையிலெல்லாம் இறுகக் கட்டிக்கொள்ளும், எப்போது நான் வந்தாலும் திரட்டுப்பால் செய்யும், அலட்சியமாக இருசக்கரவாகனம் இயக்கும் ஊட்டிஅத்தைக்கு என் அன்பும் கட்டிமுத்தமும்.
ஐந்திலும் ஏழிலும் படித்துக்கொண்டிருந்தார்கள் சரணும் தருணும் ஒரு முழுநிலவு நாளில் தென்னை மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் இருந்தபடி யானை டாக்டர் கதையை கேட்கையில்.பள்ளிக்காலங்களில் நாங்கள் கதைகள் படிக்காத கேட்காத இரவுகளே இல்லை. வார இறுதிகளில் முழுநாளுமே கதைகள்தான். வெண்முரசு வாசித்தும் கேட்டுமிருந்த காலங்கள் எங்கள் நினைவுகளில் மிக இனிமையானவை.
யானை டாக்டர் வாசித்து சொல்லிக் கொண்டிருக்கையில் யாரோ குடித்துவிட்டு வீசி எறிந்த உடைந்த பீர் பாட்டில் யானையின் காலில் குத்தி உள்ளே ஏறியதை கேட்டதும் தருண் ’’ உணர்வு மேலிட’’ நான் ஃபாரஸ்ட் ஆஃபீசராகி இவனுங்களை எல்லாம் சவுக்கில அடிக்க போறேன் பாரு ’’என்று சொல்லி கதறி கதறி அழுதான்.
அதன் பிறகான பல ஆண்டுகள் கழிந்து இதோ இன்று மாலை விமானத்தில் டேராடூனில் இருந்து இளங்கலை காட்டியல் படிப்பை நான்கு வருடங்கள் படித்து முடித்த தருண் வீடு திரும்புகிறான்.
இடையில் எந்த கட்டத்திலும் அவன் வேறு படிப்பை குறித்து சிந்திக்கவும் இல்லை. யானைகளில் இருந்த கவனம் மெல்ல ஊர்வனவற்றில் குறிப்பாக பாம்புகளுக்கு திரும்பியிருந்தது. மைசூரில் அறிவியல் ரீதியாக பாம்புகளை கையாள்வது குறித்த ஒரு முக்கிய பயிற்சியை இரண்டுகட்டங்களாக முறையாக இடையில் எடுத்துக் கொண்டான். STORM- scientific training on reptile management என்னும் அந்த பயிற்சிக்கு பிறகு பல பாம்புகளை தருண் பொதுமக்கள் அடித்து கொல்லாமல் காப்பாற்றி இருக்கிறான்.வீட்டில் எங்களுக்கும் விஷம், விஷமற்றவை என பாம்புகளை வேறுபடுத்தி அடையாளம் காணவும், பாம்புகளை கண்டதுமே பீதியடைய தேவையில்லை என்பதையும் கற்றுக் கொடுத்தான்.
ஒருமுறை வால்பாறைக்கு புகைப்படம் எடுக்க எல்லோருமாக சென்று திரும்பி கொண்டிருக்கையில் ஆழியாறு அணைப்பகுதியில் ஒரு இருசக்கர வாகனத்தினுள்ளே புகுந்துவிட்டிருந்த பாம்பை பிடிக்க சிறு கூட்டம் கூடி இருந்தது. காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடிப்போய் அதை வெளியில் மிகுந்த பிரயத்தனத்துக்கு பிறகு தருண் கொண்டு வந்தான்.
பாம்பு வெளியில் வந்த மறு நொடி அங்கிருந்த பருமனான ஒருவர் அதை கால்களால் மிதிக்கச் சென்றார் . தருண் பதறி அவரின் அழுக்குப்பிடித்த கனத்த செருப்புக்கடியே அவன் கைகளை வைத்து அதை தடுப்பதை காரிலிருந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த பாம்பு மீண்டு நழுவிச்சென்று சாலையோரம் மாங்காய் பத்தை விற்கும் ஒரு அம்மாளின் டிவிஎஸ் 50 வண்டிக்குள் புகுந்து விட்டது. அந்த அம்மாள் தருணை கெட்ட வார்த்தைகள்சொல்லி வைது கொண்டே இருந்தார்.
முயற்சியில் சற்றும் மனம் தளராத தருண் சுமார் 3 மணி நேரம் செலவழித்து அந்த விஷமற்ற பாம்பை பிடித்து பத்திரமாக ஆழியாறு வனப்பகுதியில் விட்டபின்னரே வீடு திரும்பினோம்.
அப்படியே சென்ற வருடம் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஆழியாறு அணையின் உபரி நீர் சேகரமாகும் ஒரு அழகிய இடத்திற்கு நண்பர்களுடன் சென்றிருக்கையில் அங்கிருந்த உபயோகத்திலில்லாத ஒரு மீன்வலையில் பல நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த உயிரிழக்கும் அபயகரமான கட்டத்தில் இருந்த ஒரு பாம்பை தருண் கண்டுபிடித்து சாலையில் செல்லும் யார் யாரையோ கேட்டு ஒரு கத்தி வாங்கி மீன்வலையை கிழித்து பல நாட்கள் பட்டினியிலும் கழுத்துப்பகுதியில் காயங்களுமாக இருந்த அதை காப்பாற்றினான்.
அந்த பாம்பை காப்பாற்றும் முன்பு அதன் வாலை அவன் தொட்டபோது உயிரச்சத்தில் இருந்த அந்த பாம்பு அவன் விரலை, ஒரு சிறு குழந்தை எப்படி இறுகப்பற்றிக்கொள்ளுமோ அப்படி சுற்றி வளைத்து பிடித்துக்கொண்டது.
அக்கம் பக்கம் சிறுவர்களுக்கு பாம்புகளை சரியானபடி கையாளுவதை குறித்து கற்றுக் கொடுத்திருக்கிறான்.வீட்டில் இருக்கும் மரங்களிலும் மோட்டார் சுவிட்ச் இருக்கும் பெட்டிகளிலும் இப்போது பாம்புகளை அடிக்கடி பார்க்கிறோம் இருந்தாலும் நாங்களும் அவற்றை பொருட்படுத்துவதில்லை.அவையும் எங்களை கண்டுகொள்வதில்லை. வீட்டில் பல பெட்டிகளில் பாம்புச்சட்டைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.
பாம்புகள் இருப்பதாக தகவல்வந்தால் உடனடியாக நேரில் சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட நண்பர்களை வரவழைத்தோ அவற்றை காப்பாற்றிக்கொண்டிருக்கிறான்
அப்பா வீட்டில் சமையலுக்கு உதவும் மாணிக்கா சென்ற மாதம் செடிகளுக்குள்ளிருந்த பாம்பொன்றை விரட்டிவிட்டு வழக்கம்போல வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தாள்.
தருண் இன்னும் சில நாட்களில் சேரவிருக்கும் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்பிற்கான நேர்காணலில் அவனது கானுயிர் புகைப்படங்கள் இருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை பார்த்த தேர்வுக்குழுவினர் ’’ஒரு காட்டியல் படித்தவனாக இதுவரை என்ன சாதித்திருக்கிறாய்?என்று கேட்டார்கள். ’’ வீட்டில் இருக்கும் ஒரு படிப்பறிவில்லாத பணிப்பெண் பாம்பை பார்த்ததும் பயந்துவிடாமல், அடித்துக்கொன்றுவிடாமல் அதை விரட்டிவிட்டு வேலைபார்க்கும் அளவுக்கு என்னால் முடிந்த சிறு வட்டத்தில் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உண்டாக்கி இருக்கிறேன்’’ என்று தருண் பதிலளித்தான். அவனுக்கு இடம் கிடைத்து விட்டிருக்கிறது.
டேராடூனின் இந்த கல்லூரி காட்டியல் படிப்பு குறித்த அவன் எதிர்பார்ப்புக்களை எல்லாம் முழுக்க தோற்கடித்தது. இப்போதைய பெரும்பாலான கல்லூரி பேராசிரியர்களை போலவேதான் அங்கும் துறைசார்ந்த அறிவும்,பொது அறிவும், பொதுவான அறிவும், கல்வி கூடத்திற்கான கற்பித்தலுக்கான அடிப்படை ஒழுக்கமும் நேர்மையும் இல்லாத ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.ஆனாலும் முயற்சி செய்து இந்த படிப்பை அவன் முடித்துவிட்டான். வகுப்பில் தருண் கேட்கப்போகும் கேள்விகளுக்கான பயத்துடன் வகுப்புக்கு வந்த ஆசிரியர்கள் அங்கே இனி நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள்வார்கள்.
canopy எனப்படும் காட்டுமரங்களின் உச்சி இலைப்பரப்பின் இடைவெளிகள் வழியே நுழையும் சூரியஒளியின் அளவு ஷொரியா ரொபஸ்டா என்னும் ஒரு மரத்தின் வளர்ச்சியில் கொண்டிருக்கும் பங்களிப்பு குறித்த தருணின் காட்டியல் படிப்பிற்கான சிறு ஆய்வும் இளங்கலை படிப்புக்கு ஏற்றதுதான்.
காட்டியல் படிப்பின் ஒரு பகுதியாக மேற்கு மலை தொடர்ச்சி காடுகளில் சுமார் 100 நாட்கள் பயிற்சியில் இருக்கையில்தான் தருணுக்கு காட்டில் பணியாற்றுதல் என்பதின் உண்மை நிலவரம் தெரிந்தது. இரவு ரோந்து பணிக்கு சென்றது, உச்சிக்காட்டில் மலர்ந்திருந்த நீலக்குறிஞ்சியை கண்டது, யானைகளை காத்திருந்து இரவில் பார்த்தது என பல நேரடி கள அனுபவங்கள் அவனை மேலும் செம்மையாக்கின. அவன் மாணவனென்று அறியாமல். காட்டிலாகா அதிகாரியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான் என்று எப்படியோ அங்கிருந்த பணியாளர்கள் நம்பினார்கள். அவனுடன் நான் அக்காட்டுக்கு சென்ற போது அவனுக்கு அளிக்கப்பட்ட மரியாதைகளில் அதை நானும் உணர்ந்தேன்.
பயிற்சி முடித்தபின்னர் வனச்சரக அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க அவனுடன் நானும் சென்றிருந்தேன். ஜீப்பில் உள்ளே செல்கையில் வழியில் இருந்த அரளிச்செடியில் மலர்களை பறித்துக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண் தருணை பார்த்ததும் அவசரமாக தூக்கிச் செருகியிருந்த புடவையை இறக்கிவிட்டுவிட்டு நெற்றியில் கையை வைத்து ஒரு சல்யூட் அடித்தார். தருணுக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை எனக்கு பெருமிதமாக இருந்தது.
தருண் இந்த காலகட்டத்தில் சென்ற காட்டு பயணங்களும் , எடுத்த முக்கியமான கானுயிர் புகைப்படங்களும் responsible wild photography குறித்த அவன் மேடைப்பேச்சுக்களும், அறிவியல் சஞ்சிகைகளில் காட்டுயிர் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் எனக்கு பெருமகிழ்ச்சி அளித்தவை. குறிப்பாக Cicada என்கிற சிள்வண்டுகுறித்த அவனது கட்டுரையின் கவித்துவமான இறுதிப்பத்தி எனக்கு பெரும் நிறைவளித்தது. பிற்காலத்தில் தருணின் அம்மா லோகமாதேவி என்றறியப்படப்போகிறேன் என்பதை சொல்லியவை அக்கட்டுரைகள்.
தருண் கடந்த ஜனவரியில் வீட்டிலிருக்கையில் சிலருடன் காட்டுக்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு பரவி வளர்ந்திருந்த செடிகளை அங்கிருந்தவர்களுக்கு காட்டி இதுதான் கம்யூனிஸ்ட் பச்சை எனப்படும் தாவரம் முன்பு கேரளமெங்கும் பல்கிப்பரவிக் கொண்டிருந்த இதற்கு இப்படி பெயர்வந்தது என்று சொல்லிவிட்டுஅதன் அறிவியல் பெயர் Eupatorium odoratum என்று சொன்னேன்.தருண் இடைப்பட்டு நான் சொன்னது அதன் இணைப்பெயர்தான் ஆனால் புழங்கு பெயர் Chromolaena odorata என்று திருத்தினான்.
பிரேஸில் கடற்கரையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் காலில் கட்டுப்போட்டபடி நாற்காலியில் அமர்ந்திருந்த புகழ்பெற்ற தாவரவியலாளார் கம்மர்சன், போகன்வில்லா கொடியை கொண்டு வந்து காட்டிய ஆண் வேடத்திலிருந்த அவரது காதலியும் உதவியாளருமான ழான் பாரேவிடம் ’’இந்த மலர்கள் தான் எத்தனை அழகு’’ என்றபோது ழான் பாரே ’’வண்ணமயமான இவை மலர்களல்ல அன்பே, மலரடிச்செதில்கள்’’ என்று திருத்தியபோது அடைந்த திகைப்பை நானும் அடைந்தேன்.
தருண் எனது மேம்படுத்தப்பட்ட வடிவம் என்பதில் ஒரு அன்னையாகவும் ஆசிரியையாகவும் மகிழ்கிறேன். முதுகலை படித்து முடித்து ஒரு மாத இடைவெளியில் ஜெர்மனியில் அரசு வேலையில் இணைந்து 22 வருடங்களுக்கு பிறகு நான் இப்போது வாங்கும் சம்பளத்தின் மும்மடங்கு சம்பளம் வாங்கும் , கடினமானது என்று கருதப்படும் எல்லா கணினி சார்ந்த வேலைகளையும் எளிதில் முடித்துவிடும் அதிபுத்திசாலி சரணும் என் மற்றொரு வடிவம்தான் . ஒரு பெண்ணாக மகளாக சகோதரியாக மனைவியாக நான் இழந்த பலவற்றின் பள்ளங்களை ஒரு அன்னையாக நிரப்பிக்கொண்டு, ததும்பி வழிந்துகொண்டு இருக்கிறேன்.
தருண் இனி முதுகலை முடித்துவிட்டு IFS தேர்வு எழுதவிருக்கிறான். அதுவரையிலும் நேர்மையான அதிகாரியாக காட்டில் பணியாற்ற வேண்டுமென்னும் அவனது கனவு கலையாதிருக்கட்டும், உறுதி குலையாதிருக்கட்டும்.நல்வரவு தருண்.
பல வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை முதன் முதலில் வாசித்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் இப்போது நினைவிலில்லை, திரைப்பட வரலாறு குறித்ததென்று தேசலாக நினைவு. ஆனால் அவரது அபாரமான மொழிநடையும் உன்னத ஆங்கிலமும் மனதில் பதிந்துவிட்டது.
ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து பல்கலைக்கழகத்தில் நகரத்து மாணவர்களுக்கிடையில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல ஆங்கிலம் பேசத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலம் கற்கவென்றே ஆங்கிலக் கட்டுரைகளையும் நாளிதழ்களையும் தேடி வாசிக்க துவங்கிருந்தேன். அதன்பிறகு அவரது கட்டுரைகளை தேடத் துவங்கினேன் அதிகம் ஆங்கிலமும் ஒரு சில தமிழ் கட்டுரைகளும் பிற்பாடு கிடைத்தன. அவரது இருமொழிப் புலமை குறித்தான பிரமிப்பு அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. அதன்பிறகு முனைவர் பட்ட ஆய்வு, திருமணம் என்று எதையும் வாசிக்க நேரமில்லாத நீண்ட காலம் கடந்துவிட்டிருந்தது.
அவரது தமிழ் கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அடிக்கடி வரத் தொடங்கிய காலத்தில் நான் கல்லூரியில் பணியாற்ற துவங்கியிருந்தேன். அச்சமயத்தில் அவர் தீவிரமாக தமிழில் பல துறைகள் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். இன்றைக்கு போல தரச்சான்றிதழ் அந்தஸ்திற்காக மெனக்கெட வேண்டிய காலம் இல்லாததால் வகுப்புகளுக்கான இடைவெளிகளில் அப்போது நூலகத்திற்கு செல்ல நேரம் இருந்தது.
தேடித் தேடி அவரது எழுத்துக்களை வாசிக்க துவங்கியிருந்தேன். ஒரு முறை இந்து தமிழ் நாளிதழில் சென்னையின் காணாமல் போகும் நீர் நிலைகளை குறித்து வெளியான அவரது மிகச் சிறப்பான ஒரு கட்டுரையை குறித்து அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே அது திரும்ப வந்து கொண்டிருந்தது. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னர் அனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார்.
மிகச் சிறிய விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் அவர் என்பதற்கான சான்று அதுவும். அத்தனை நுண்மையான பார்வை வாழ்வின் மீதும் சூழலின் மீதும் இருப்பதால்தான் அவரது எழுத்துக்கள் அத்தனை வலிமையாக இருக்கிறது. இந்த நுண்மையான அவதானிப்பு வாழ்வின் எல்லா தளங்களிலுமே அவருக்கு இருக்கிறது. ஒரு புதிய நிலப்பரப்பில் தேநீர் அருந்த போகையிலும் கூட அவருக்கு அருகிலிருந்த மரத்தின் சலசலப்பை கவனிக்க முடிந்திருக்கிறது. அங்கிருந்த அரிய இனமான ஹுலக் வெள்ளைப் புருவக் குரங்கு எனப்படும் வாலில்லா குரங்கை கவனித்து அதை பதிவு செய்கிறார். சூழல் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய மிக முக்கியமான இயல்பு அதுவென்பதை அவரிடமிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்.
அத்தோடு மட்டுமல்லாது அந்த அரிய உயிரினம் அஞ்சல் தலையில் இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். அரசு சில காரணங்களால் அப்போது அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றாலும் இருபது ஆண்டுகள் கழித்து, காட்டுயிர் பாதுகாப்பின் அவசியம் உண்டான பின்னர் ஓர் அஞ்சல் தலையில் அக்குரங்கு இடம்பெற்றது. அவரது கண்டுபிடிப்புக்களை இயற்கையின் அத்யாவசியமான அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அக்கறை அவருக்கு எப்போதும் இருக்கிறது.
வாலில்லா குரங்காகட்டும், அரிய ஆர்கிட் மலராகட்டும், கிளிகளாகட்டும், வாழ்வாதாரம் இழந்த இசை வெள்ளாளர்களாகட்டும் அனைத்து உயிர்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனமே அவரது எழுத்துக்களில் முதன்மையாக தெரியும். கூடவே சரியில்லாத மொழி மாற்றத்துக்கும், குழப்பமான மொழிநடைக்கும் அவரது கண்டனங்களையும் முன்வைக்கிறார். அவரது கம்பீரமான முரட்டு மீசையும் புன்னகைக்கும் கண்களையும் போல சூழல் சார்ந்த பல கட்டுரைகளில் இருக்கும் கரிசனமும் கண்டிப்புமான இந்தக்கலவையும் இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்து. அதன் பிறகு ஜெயமோகன் அவர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டிலும் அவர் மிக முக்கியமான சூழல் பாதுகாப்பு குறித்த உரையை வழங்கினார். தமிழக அளவில், இந்திய அளவில் என்று அவரது பிரபல்யத்தை சுருக்கிவிட முடியாது உலகளவில் அவர் ஒரு மிக முக்கியமான பல்துறை பேராளுமை என்பதை அக்கூடுகைகள் உணர்த்தின.
தியடோர் பாஸ்கரன் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக இயங்கி வரும் துறைகளை கவனித்தாலே பெரும் பிரமிப்பு உண்டாகும். இந்திய திரைப்பட தணிக்கை, திரைப்பட வரலாறு, சூழலியல், காட்டுயிர் பேணல், திரைப்படம், இயற்கை, இந்திய அரசியல் என்று அனைத்துமே வேறுபட்டவை. இப்போது சூழல் இலக்கியம், பசுமை இலக்கிய படைப்புக்கள் நிறைய இருக்கின்றன என்றாலும் தியடோர் பாஸ்கரன் அவர்களே தமிழ் சூழலிலக்கியத்தின் முன்னோடியும் பிதாமகரும் ஆவார்.
தியடோர் பாஸ்கரனின் தாத்தா தில்லைக்கண் ஒரு இந்து. இளமையிலேயே அவர் வீட்டை விட்டு ஓடிவந்து கரூரில் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு கிருஸ்துவ பாதிரியாரின் அரவணைப்பு கிடைத்திருக்கிறது. அவரது பொறுப்பில் இருக்கையில் தான் அவர் கிருஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். தியடோர் பாஸ்கரனின் தாத்தா ஒரு தமிழறிஞரும் கூட. அவர் பல தமிழ் பாடல்கள் எழுதியிருக்கிறார். தனது 50-வது வயதில் அவற்றை வாசித்த தியடோர் பாஸ்கரன் தன்னை இம்மண்ணின் வேருடன் பிணைத்து வைத்திருப்பது தமிழ்தான், தன் முதன்மை அடையளமாக தமிழன் என்பதையே முன்வைப்பேன் என்கிறார்.
வேட்டையில் விருப்பம் கொண்டிருந்த அவரது தந்தை பிரபல வேட்டைக்காரரும் அமெரிக்க அதிபராக இருந்தவருமான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை தனது மகனுக்கும் வைத்தார். தந்தையுடன் வேட்டைக்கு சென்ற நாளொன்றில் ஆற்றுப்பாறையில் தன்னை நிற்க வைத்துவிட்டு துப்பாக்கியுடன் சற்றுத்தொலைவில் அவரது தந்தை காத்திருக்கையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது. தன்னை கழுத்திலும் துப்பாக்கியை நீர்மட்டதுக்கு மேலும் வைத்துக்கொண்டு தன் தந்தை துணிச்சலாக ஆற்றைக்கடந்ததை தியடோர் பாஸ்கரன் நேர்காணலொன்றில் பகிர்ந்திருந்தார். வேட்டைக்காரரான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை மகனுக்கு அவர் வைத்திருந்தால் என்னவோ அவரைப் போலவே இவரும் ஒரு இயற்கை விரும்பி ஆகிவிட்டிருக்கிறார். ஆசிரியர்களான தனது பெற்றோர்களை அந்த நேர்காணலில் நினைவுகூறும் தியடோர் பாஸ்கரன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்த அவர்களைப்போல தான் எதிர்காலத்தில் அப்படி தேவைகளுக்காக உழைத்து வாழ்வை இழந்து விடக்கூடாது என்று முடிவு செய்திருந்ததை பகிர்ந்துகொள்கிறார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு படிக்கையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அவரது கணிதப் பேராசிரியர் கிப்பிள் கல்லூரியை சுற்றி இருக்கும் புதர்க்காட்டில் பறவைகளை காணச்செல்கையில் தியடோர் பாஸ்கரனும் உடன் செல்வது வழக்கம். அவரோடு பறவைகளை காத்திருந்து கண்டது, அவற்றின் பல வகைகளை இனம் கண்டுகொண்டது, அவற்றின் வாழிடத்தை அறிந்து கொண்டதுமாக அந்த அனுபவங்களே தன்னை இயற்கையுடன் இணைத்த புள்ளி என்கிறார் தியடோர் பாஸ்கரன். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அன்றிலிருந்தே விடுதி மாணவர்களுக்கு தனித்தனி அறை என்பதால் அவருக்கு வாசிக்கவும் எழுதவும் நல்ல சுதந்திரமும் தனிமையும் அங்கு கிடைத்து.
அவரது கல்லூரிக்காலத்தில் ஆங்கிலப் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது கிராமத்திற்கு ஜான் என்னும் பிரிட்டிஷ் இளைஞர் வந்தபோது, அவருடன் ஆங்கிலம் பேச வேறுயாரும் இல்லாததால் தியடோர் பாஸ்கரன் அவருடன் பேசிப் பழகி நெருக்கமானார். ஜான் தனது சேகரிப்பில் இருந்த ஷேக்ஸ்பியரின் பல படைப்புக்களின் ஒலிநாடாக்களை இவருக்களித்திருக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து கேட்ட தியடோர் பாஸ்கரனுக்கு இலக்கியமும் நாடகமும் இசையும் அறிமுகமானது. மேலும் ஜான் அளித்த பெர்னாட்ஷா, ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களும் அவரின் ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கின. அந்த வாசிப்பனுபவம் அவரது வாழ்வு குறித்தான அடிப்படையான தேடல்களுக்கு விடையளிக்கவில்லை எனினும் பல புதிய கதவுகள் அவருக்கு அப்போது திறந்தன. அச்சமயத்தில் இறையுணர்விலிருந்து தியடோர் பெருமளவில் விலகிவிட்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்து பெளத்தம் குறித்த நூலை எழுதிக் கொண்டிருந்த ஜான் இப்போதும் நலமாக இருக்கிறார் என்று 2021-ல் தியடோர் பாஸ்கரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்
இவரது பணிச்சூழல்களும் மிக வித்தியாசமானவை. வரலாறு படித்து பட்டம் வாங்கிய இவர் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக பணி புரிந்தார். அப்போது பல ரகசிய, முக்கிய ஆவணங்கள் அவர் பொறுப்பில் அளிக்கப்பட்டிருந்தது. அவர் அவற்றை சரியாக படித்து, தொகுத்து எழுத வேண்டியிருந்தது. ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்கள் தொடர்புடையவைகளும், அங்கு நடந்த விடுதலைப் போராட்டம் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரை குறித்தவைகள், ஆஷ்துரை கொலை வழக்கு போன்ற முக்கிய ஆவணங்களை எல்லாம் தியடோர் பாஸ்கரன் தொகுத்து எழுதினார். இரு வருட ஆவணக்காப்பக பணி முக்கிய ஆவணங்களை கையாள்வது தொகுத்தெழுதுவது ஆகியவற்றில் அவருக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. அந்த அனுபவங்கள் பின்னாட்களில் வரலாற்று பெரும்படைப்புக்களை எழுத அவருக்கு உதவியாக இருந்தன.
பல வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் (1967) அவர் இருக்கையில் அங்கிருக்கும் ஒரு ஏரிக்கு அரிய வகை பறவையினம் இமாலயத்திலிருந்து வரவிருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடனே அவர் அதிகாலையில் புறப்பட்டு அங்கு செல்கிறார். அங்கிருந்த காவலாளி நடராஜனும் இவரும் அமர்ந்து அங்கு வரும் பறவைகளை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் தொலைவிலிருந்து பறவை கூட்டமொன்றின் முழக்கம் கேட்டிருக்கிறது. அவர்கள் முன்னே பனித்திரையை கிழித்துக்கொண்டு வரித்தலை வாத்துகள் (Bar-headed Goose) சாம்பல் நிற சிறகுகளை விரித்தபடி மெதுவாக ஏரியில் வந்து இறங்கி இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனுக்கு அது ஒரு மாயக்காட்சியை போல பரவசமளிக்கிறது. வெகுநேரம் அவற்றை பார்த்துவிட்டு திரும்பிய அவர் ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் அப்பறவைகளை குறித்து வன அலுவலக ஆவணங்களில் தேடி வாசிக்கிறார். பின்னர் முதன் முதலில் 1967-ல் ஹிந்து பத்திரிகைக்கு அப்பறவையை குறித்த கட்டுரையை எழுதி அனுப்புகிறார். சில நாட்களிலேயே அக்கட்டுரை பிரசுரமானது. இக்கட்டுரையுடன் துவங்கி தொடர்ந்து ஹிந்து நாளிதழில் சூழல் இயற்கை காட்டுயிர் பறவைகள் என நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் தியடோர் பாஸ்கரன்.
மற்றொரு சமயம் அவரது காதல் மனைவி திலகாவுடன் குஜராத்தில் ஒரு பயணம் மேற்கொண்டிருக்கையில் வழியில் சாரஸ் பறவை இணையொன்றின் அழகிய நடனத்தை பார்த்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். குஜராத்தில் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் இளம் தம்பதிகளை வாழ்நாளில் ஒரே இணையுடன் வாழ்ந்து மடியும் காதல்பறவைகளான சாரஸ் இணையை காண பெரியவர்கள் அழைத்து செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த பறவைகளின் நினைவாகத்தான் சூழலியல் மற்றும் காட்டுயிர் பற்றி தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சாரஸின் நடனம் (The Dance of the Sarus) என்னும் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தாரால் வெளியிட்டார்.
குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய தபால் துறையில் சேர்ந்தார். தபால் துறை பணி அவருக்கு மிகுந்த நிறைவை அளித்தது. அக்காலகட்டத்தில் பணி நிமித்தம் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மஹராஷ்ட்ரா, மேகாலயா, டெல்லி என தொடர்ந்து பயணித்தது அங்கிருந்து பலதரப்பட்ட மக்களின் வாழ்வின் இயங்கியலையும் இந்தியாவை குறித்த அறிதலையும் அவருக்கு அளித்தது. அச்சமயத்தில் ராஜீவ்காந்தி வாரம் 6 நாட்கள் வேலை என்பதை 5 வேலைநாட்களாக மாற்றினார். வார இறுதியில் முழுக்க இரண்டு நாட்கள் அவருக்கு விரும்பியவற்றை செய்யவும் பயணிக்கவும் கிடைத்தபோது மேலும் படைப்பாற்றலுடன் செயல்பட்டார். தபால் சேவை ஆட்கள் அதிகம் தேவைப்படும் ஒரு இலாகா, எனவே அப்பணியில் இருக்கையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, பல கிராமங்களுக்கு பயணித்தும் கிடைத்த நேரங்களில் எழுதியும் வாசித்தும் தனக்குள்ளிருக்கும் ஆளுமையை வெளிக்கொணர முடிந்தது.
தியடோர் பாஸ்கரன் வங்காள இயக்குநர் சித்தானந்த தாஸின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தை குறித்து சிவ தாண்டவம் என்னும் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு பிறகே அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான சார்லஸ் ஏ. ரையர்சன் அவரை தமிழ் திரைப்பட ஆய்வில் ஈடுபடும்படி ஊக்குவித்தார். இரண்டாண்டுகள் பணி விடுப்பு பெற்றுக்கொண்டு திரைப்பட பகுப்பாய்வு வகுப்பில் சேர்ந்து பல திரைத்துறை குறித்த பல விஷயங்களை அப்போது கற்றுக்கொண்டார். அங்கு அவரது ஆசிரியராயிருந்த பி.கே. நாயர் தியடோர் பாஸ்கரனை புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில் உறுப்பினராக்கினார். அங்கு இரண்டாண்டுகள் பல பழைய திரைப்படங்களை பார்த்த பாஸ்கரன் மீண்டும் தபால் பணியில் சேர்ந்தபோது கல்கத்தாவிற்கு பணிமாறுதல் பெற்றார். கல்கத்தாவிலும் திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.
இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977-ல் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இக்கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு 1981-ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரிக்கும் பல அரிய தரவுகளை கொண்ட இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் மிக அரியதும் மிக மிக முக்கியமானதும் கூட. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுகம் செய்த அவருடைய அடுத்த நூல், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றை மிகச்சரியான வடிவத்தில் அடுத்த தலைமுறையினர் முன்னர் கொண்டு வந்து சேர்த்தவர் தியடோர் பாஸ்கரன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல முக்கியமான புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.
தியடோர் பாஸ்கரன் ஷில்லாங்கில் இருக்கையில் முரசொலி மாறன் ஒரு மாலை அவரை சந்தித்தபோது பொதுவாக சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த உரையாடலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் திரைப்படங்களை குறித்த ஆழமான அறிவை அடையாளம் கண்டுகொண்ட முரசொலி மாறன் அவரது வார இதழில் சினிமாவை குறித்து எழுதும்படி கேட்டுக்கொண்டதோல்லாமல் ஒவ்வொரு தொடருக்கும் 1000 ரூபாய்கள் சன்மானம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படித்தான் சினிமா குறித்து இவர் எழுத துவங்கினார்.
பணி நிமித்தம் மேகாலயாவிலிருந்த போது பங்களாதேஷ் விடுதலைப் போர்ச்சூழலில் தியடோர் பாஸ்கரன் தபால் தந்தி துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். அவருக்கு அப்போது 45 வயது. அப்போது அகர்தலாவில் முன்னணி படைப்பிரிவில் பணி புரிந்தார். அவர்களது குடியிருப்புகளினருகே தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. எந்த சூழலிலும் தியடோர் பாஸ்கரன் படைப்பிரிவுகளின் பல விதங்கள், அவை இயங்கும் விதம் ஆகியவற்றை கற்று கொண்டார்
தேசிய டிஃபென்ஸ் கல்லூரியில் ஒரு வருட படிப்பை முடித்த அவருக்கு அந்த அமைச்சகத்தின் மூலம் பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசின் விருந்தாளியாக சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு நாட்டை குறித்து அறிந்து கொண்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக ஓய்வு பெற்றார்.
பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் ரோஜா முத்தையா நூலகத்தில் இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. மூன்று வருடங்கள் அந்த பணியில் இருந்தவர் மீண்டும் தனது விருப்பத்திற்குகந்த இயற்கையை பேணுதல், காட்டுயிர்களை குறித்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றை தொடர்ந்தார். தற்பொழுது அந்த நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ள அவர் தனது நூல் சேகரிப்பு முழுவதையும் அந்த நூலகத்துக்கே அளித்துவிட்டார்.
பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை ”கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சூழல் குறித்த அறிதலை அளிப்பவற்றுள் மிக முக்கியமான நூல் இது. தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து படைப்புகளும் இன்றியமையாதவை எனினும் சூழல் முக்கியத்துவம் கொண்ட ‘சோலை என்னும் வாழிடம், தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புள்ளெல்லாம், கானுறை வேங்கை, மழைக் காலமும் குயில் ஓசையும்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.
அவரது படைப்புகளில் தரவுகள் மிக துல்லியமாக இருக்கும் புள்ளிவிவரங்கள், பெயர்கள், படங்கள் என்று அனைத்தும் மிகச் சரியாக அமைந்திருக்கும். கச்சிதமான வடிவமைப்பும், ஒழுங்கும் கொண்டிருக்கும் கட்டுரைகள் மிக சுவாரஸ்யமாக துவக்கி ஒரு சொல்லோ ஒரு வார்த்தையோ தேவையற்று இடம்பெறாமல் உருவாகியிருக்கும். பசுமை இலக்கியத்தில் கட்டுரைகளை எழுதும் பயிற்சிகளுக்கு முன்னுதாரணமாக எக்காலத்திலும் சுட்டிக்காட்டப்படும் தகுதி கொண்டவை தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும்.
உயிர்மை இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தியடோர் பாஸ்கரன் அவர்களின் சூழல் குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு சிற்றிதழில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒருவரின் கட்டுரைகள் வருவதிலிருந்தே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். அக்கட்டுரைகளின் தொகுப்பே ’கையிலிருக்கும் பூமி’. சில கட்டுரைகளை கவித்துவமாக துவங்கப்பட்டிருக்கும். கிளிகளை பற்றிய ஒரு கட்டுரை இப்படி துவங்குகிறது: ”நீலவானப் பின்புலத்தில் பனித்திவலைகள் மிதந்து வருவதைப் போன்ற தோற்றம். இருநோக்கியில் பார்த்தபோது அது வெள்ளை நிறக்கிளிகளின் திரள் என்பது புலப்பட்டது”.
நீர்நாய்களுக்காக ஆளியாறு அணையருகே காத்திருப்பது, டாப்ஸ்லிப்பில் புதைக்கப்பட்ட ’ஹியூகோ வுட்’ உயிலை தேடி செல்வது, ஒரு புதிய கிராமத்தில் ஓநாய்களை காண இரவெல்லாம் கயிற்றுக்கட்டிலில் டார்ச் அடித்து பார்த்துக்கொண்டு காத்திருப்பது என்று இயற்கை குறித்த பேரார்வத்தினால் அவர் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் ஆர்வமூட்டுபவை. ஒநாய்களை பார்த்த அனுபவத்தை சொல்லுகையில் ”அவை உணவின்றி மெலிந்திருக்கும் அல்சேஷன் நாய்களைப் போன்ற தோற்றத்துடன்” இருந்ததாக குறிப்பிடுகிறார். இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் நோய்களை குணமாக்கும் மருந்து எனும் நம்பிகைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் குறித்த வருத்தமும் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆட்கொல்லி புலியை குறித்த பதிவில் அறம் எனப்படுவது குறித்தும், இசை வெள்ளாளர்களின் வாழ்வாதாரம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவது குறித்துமான தியடோர் பாஸ்கரனின் கருத்துக்கள் கரிசனமன்றி வேறில்லை. ஒரு கட்டுரையில் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பை குறித்த வருத்தத்தை முன்வைக்கிறார். ஓவியக்கலை போன்ற தொன்மையான அழகியல் பாரம்பரியம் அழிந்து போவதை குறித்து கவலைப்படுகிறார்.
சூழியல் தளத்தில் இவர் உருவாக்கிய பல புதிய தமிழ்ச்சொற்கள் தற்போது புழக்கத்தில் இருக்கிறது. மேலும் பல புதிய சொற்களின் தேவை இருக்கிறதென்றும் அவை உருவாக்காப்பட்டால்தான் மொழி வலுப்பெறும் என்று கருதுகிறார். இவர் உருவாக்கும் மூலச்சொற்கள், தமிழ் வழங்குபெயர்கள், சிறந்த மொழியாக்கங்கள் எல்லாம் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானவை. ஒரு உரையில் ’தேன்சிட்டுவை’ என்கிறார் நாம் ’தேன்சிட்டை’ என்பது தவறென்று அவர் சரியாக உச்சரிக்கையில் தான் தெரிகிறது. இயற்கையை எழுதுபவர்கள் ஒருபோதும் அரசியலை தவிர்க்கமுடியாது, எனினும் இவரது கட்டுரைகள் அறிவியல் பூர்வமானவை மட்டுமல்ல அனுபவபூர்வமானவைகளும் கூட.
மொழியாக்க கட்டுரைகளின் தரம் குறித்து சொல்லுகையில்: ”இயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர் ஆகியவை பற்றிய பட்டறிவு அடிப்படை அளவிலாவது இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.” என்கிறார்.
சங்க இலக்கிய தாவரங்கள், விலங்குகள் என்று பலர் தங்களது வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கங்களிலும் எழுதுகின்றனர் அவற்றில் 90 சதவீதம் எந்த கவனமும், உயிரினங்கள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதப்படுபவை. பலர் முருக்க மரம் என்பதற்கு கல்யாண முருங்கையின் புகைப்படத்தை பலாச மரத்திற்கு பதிலாக வைத்திருக்கிறார்கள். கஞ்சக்கொல்லை என்னும் துளசி வகை கஞ்சாச்செடி என்று சொல்லப்பட்டிருக்கிறது பல வலைப்பக்கங்களில். முக்கியமான சூழல் சார்ந்த விஷயத்தை பிறருக்கு தெரிவிக்கையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக்கறையும் கவனமும் இன்றி எழுதப்படும் கட்டுரைகள் மலிந்து கிடக்கும் இச்சூழலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும் உரைகளும் நூல்களும் மிக முக்கியமானவை. அவரை போல ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்வது, நூற்றுக்கணக்கான நூல்களை வாசிப்பது, பல்துறை ஆளுமைகளுடன் நட்பு கொள்வதெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தாலே இதுபோன்ற பிழைகளை தவிர்க்கலாம்.
தியடோர் பாஸ்கரன் அவரது சகோதரரின் மறைவின் போதும் மகளின் காதல் திருமணத்தின் போது தேவாலயங்களும் மதகுருக்களும் காண்பித்த மற்றொரு முகத்தை கண்டு வருந்தினார். அப்போது ஜே. கிருஷ்ணமுர்த்தியின் எழுத்துக்களும் அறிமுகமானதால் தான் அதுவரை சார்ந்திருந்த மதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். அதன் பிறகு ’’இந்தியாவில் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்பதென்ன’’ என்பதை குறித்த தொடர் கட்டுரைகள் எழுதினார். ஒரு பல்கலைக்கழகம் அந்த கட்டுரைகளுக்காக அவருக்கு DD எனப்படும் doctrine of divinity என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.
மா. கிருஷ்ணன், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் தியடோர் பாஸ்கரனின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியவர் சுவாமி என்னும் ஜென் குரு ஒருவர். இப்போது கொடைக்கானல் மடமொன்றில் இருக்கும் சுவாமியின் பல பயிற்சி வகுப்புகளில் தியடோர் பாஸ்கரன் கலந்து கொண்டிருக்கிறார். ஜென் மதம் தன் அடிப்படை கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை, தன் வாழ்க்கையை பெருமளவில் மாற்றவும் இல்லை எனினும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தை பெருமளவு மாற்றிவிட்டிருக்கிறது என்கிறார் இவர்.
50 வருடங்களாக கூரிய சூழல் எழுத்துக்களை எழுதி வரும் தியடோர் அவர்கள் சமீபத்திய ஒரு மேடை உரையில் வாசகர்கள் ஆர்வமுடன் வாசிப்பதே தன்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது என்கிறார் மிகுந்த பணிவுடன். அவரது பணி, பணிச்சூழல், பயணங்கள், அவர் எழுத்துக்களுக்கென அளிக்கும் கடும் உழைப்பு, அவரது தோழமைகள், அவரது வாசிப்பு, அவரது இத்தனை ஆண்டு கால அயராத எழுத்துப்பணி உள்ளிட பல பணிகள் ஒவ்வொன்றுமே சாதனைகள்தான். அவரது எழுத்துக்கள் வழியே நாம் காண்பது இயற்கையின் தரிசனத்தை தான்.
தியடோர் பாஸ்கரன் உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF – India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்த்தார். பெங்களூரு உயர் கல்விக்கான தேசிய ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கும் தியடோர் பாஸ்கரன். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராகவும் இருந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமாவை போதித்திருக்கிறார். இந்தியாவில், சர்வதேச கல்வி நிலையங்களில் முக்கிய தலைப்புக்களில் உரையாற்றியிருக்கிறார். இந்திய தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராகவும் இருந்தார்.
தற்போது பெங்களூருவின் புறநகர் பகுதியில் இயற்கையின் அமைதியில் எப்போதும் பறவைகளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு வீட்டில் வசிக்கிறார். அன்று ஏரியில், அமைதியான அதிகாலையில் இமாலயத்தில் இருந்து ஒரு தெய்வம் போல வந்து தியடோர் பாஸ்கரன் முன்பாக தரிசனம் தந்து அவர் அயராது எழுத காரணமாயிருந்த அந்த பறவைகளையும், அவற்றிற்கு பிறந்த, இனி பிறக்கப் போகும் பல தலைமுறைகளையும் பணிந்து வணங்குகிறேன்.