தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரமே தேர்தல் அதிகாரியாக பணியாற்ற வேண்டிய விண்ணப்பங்கள் கொடுத்துவிட்டார்கள், நான்  அப்போதே பூர்த்தி செய்து  கொடுத்து விட்டேன். தேர்தல் பணி கடுமையானதாகத் தான் இருக்கும் அடிப்படை வசதிகள் அற்ற பள்ளிக்கூடங்களில் கவுன்சிலர்களின் அலப்பறைகளுக்கு மத்தியில் அதிகாலையிலிருந்து சரியான உணவோ தேநீரோ கூட இல்லாமல் பணி புரிந்திருக்கிறேன்.  நான் மட்டுமல்ல பலரும் அப்படித்தான் எனினும்  நான் ஒருபோதும் எந்தக்காரணம் கொண்டும்  தேர்தல் பணியை மறுதலித்ததோ அன்றி பொய்க்காரணங்கள் சொல்லி தவிர்த்ததோ கிடையாது 

அரசுப்பணியினால் மட்டுமே என்வாழ்க்கை இத்தனை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் நினைவில் கொண்டிருக்கிறேன். எனவே அரசுப்பணி சார்ந்த எதுவும் எனக்கு அதிமுக்கியமானவைகள்தான்.

ஆனால் அரசியல் குறித்தான அறிதல் எனக்கு மிக மிக குறைவுதான் அதில் அத்தனை சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை அரசியல்வாதிகளிடம் எனக்கு பரிச்சயம் இல்லை செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் இல்லாததால் அரசியல் மாசுபடாத வீடு இது.

 இதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. செல்வேந்திரனும் குறளரசியும் கல்லூரிக்கு வந்திருந்தனர்.  அவர்கள் வருவது முன்பே எனக்கு தெரியும் என்பதால் அவர்களை வரவேற்க  முதல் தளத்திலிருந்து கீழிறங்கி வந்தேன்.

 முதல்வர் அறையின் முன் இருக்கும் வரவேற்பறையில் தொலைவில் செல்வேந்திரன் குறளரசி இன்னும் சிலர், அவர்களுக்கு மத்தியில் தொலைவிலிருந்தே முக்கியஸ்தர் என்று அறிந்து கொள்ளும்படியான மற்றொருவரும் இருந்தார்கள். நல்ல உயரமும் நிறமுமாக பொள்ளாச்சியின் பெரும்பாலான மருத்துவர்களை போன்ற தோற்றம் அவருக்கு, உன்னதமான உடைகள். 

செல்வேந்திரன் என்னை பார்த்ததும் அவரிடம் ’’இவங்கதான் நான் சொல்லிட்டு இருந்த லோகமாதேவி’’ என்று துவங்கி என்னை குறித்து பெருமையாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். பதிலுக்கு அவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றெண்ணிக் கொண்டிருக்கையில் அப்படி செல்வேந்திரன் செய்யாதது எனக்கு ஆச்சர்யமளித்தது. 

மறந்திருப்பாராக இருக்கும் என நினைத்துக்கொண்டு நானே ’’தம்பி இவர் யாரு?’’ என்றேன். அந்த இடமே மயான அமைதியானது சில நொடிகளுக்கு. அந்த முக்கியஸ்தர் சுதாரித்துக் கொண்டு  தன்னை’’நான் பொள்ளாச்சியின்  MP ஷண்முக சுந்தரம் ’’என்று அறிமுகப்படுத்தி கொண்டார்

தர்மசங்கடமாகத்தான் இருந்தது எனினும் என் மீது பிழையொன்றும் இல்லை எனக்கு அவரை தெரிந்திருக்கவில்லை அன்றுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.

அரசியலில் என் அறியாமையை எண்ணிக்கொண்டிருக்கையில்  வேட்டைகாரன் புதூர் கிராமத்தில் நானிருந்த இரண்டு வருடங்களும் பெரியதுரையும் நினைவுக்கு வந்தார்கள். அம்மாவின் பணி மாறுதல்களின் போதெல்லாம் நானும் மித்ராவும் ஊர் ஊராக பந்தாடப்படுவோம்.

அப்படி எல்கேஜி யூகேஜி பொள்ளாச்சி புனித லூர்தன்னை கான்வென்ட்டில், 1ம் வகுப்பு வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2 வது மீண்டும் புனித லூர்தன்னை மடிக்கு வந்த நாங்கள் 3வது மீண்டும் வேட்டைக்காரன்புதூர் பள்ளிக்கே திரும்பினோம். 4ம் 5ம் தாராபுரம் செயிண்ட் அலோசியஸ் கான்வென்ட்.

  களைப்பும் சோர்வும் அழுக்கு உடைகளும் பசியுமாக   பூட்டிய வீட்டுக்கதவுக்கு வெளியே  மணிக்கணக்காக காத்திருக்கும் வயதை அடைந்திருத்தால் 6லிருந்து பொள்ளாச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும்  தொடர்ந்து படித்தோம்

அந்த 2 வருடங்கள் கிராமத்தில் ஆத்தா அப்பாருவுடன் இருந்தது உண்மையிலேயே பொற்காலம்.

பொள்ளாச்சி வீட்டில் ஏகத்துக்கும் அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. எப்போது நினைத்தாலும் அச்சமூட்டும் இளமைப்பருவம் அங்குதான் கழிந்தது. ஆனால் நேர்மாறாக வேட்டைக்காரன்புதூர் வீட்டில் மகிழ்ந்திருந்தேன்

என் தோழி குஞ்சி அவளது இளைய சகோதரர்கள் பெரிய துரை மற்றும் சின்ன துரை, நான்  எங்கள் நால்வர் கூட்டணி வெகு பிரபலம் அப்போது. அவர்கள் வீடு வளவில் இருந்ததால் அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று பலமுறை கண்டிக்கப் பட்டிருக்கிறேன் என்றாலும் நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. உள்ளே ஒரு மீறல் துளிர்த்திருந்த காலம் அது.

மித்ரா எங்களுடன் சேர்ந்ததில்லை அவள் அப்போதே சாதிப் பற்றினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

குஞ்சியும் சகோதரர்களும் பள்ளிக்கு செல்லவில்லை ஒரு தோட்டத்தில் அவர்கள் குடும்பமே வேலை செய்தது. என் விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த மாலைகளிலும்  நால்வருமாக வேட்டைகாரன்புதூரை அங்கும் அங்குலமாக சோதித்தறிந்திருக்கிறோம்.

அரசியலுக்கு வருகிறேன்.

பெரியதுரை சின்னதுரை இருவருமே  சாம்பல் வண்ணத்தில் அரைகால் சட்டை அணிந்து  மட்டுமே என் நினைவுகளில் இன்னும் இருக்கிறார்கள். மேல்சட்டையுடன் அவர்களை என்னால் நினைவு கூற முடியவில்லை குஞ்சி அவளது அப்பாவின் பழைய சட்டையும் பாவாடையுமாய் இருப்பாள்.

எங்களின் விளையாட்டுகளில் ஒன்று  அரசியல் உரை.பெரியதுரை ஒரு பழந்துணியை வெற்றுத்தோளில் துண்டாக அணிந்துகொள்வான்.ஒரு சிறு பாறை மீது அவன் நிற்க  நாங்கள் மூவரும் கீழே தரையில் அமர்ந்து கொள்வோம்.  அவனது கைமுஷ்டியை மைக் போல மடக்கி வாயருகில் பிடித்துகொண்டு பிரசங்கத்தை ’’ தாய்மார்களே! வாக்காளப்பெருமக்களே’’ என்பதற்கு பதிலாக தாயையும் சகோதரியையும் குறிப்பிடும் கிராமத்தின் ஆகக்கேவலமான கெட்ட வார்த்தைகள் இரண்டைச்சொல்லி துவக்குவான். அப்போது சிரிப்பாகத்தான் இருந்தது எனக்கு. 

இப்போது நினைக்கையில் 10 அல்லது 12 வயதிருக்கும் அந்த சிறுவனின் நகைச்சுவை உணர்வு வியப்பளிக்கிறது. கூடவே அவனுக்கு அரசியல் குறித்த ஞானமும் இருந்திருக்கிறது போல.

வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையிலிருந்தவர்களின் முகமுழியே வேண்டாம் என்றுதான் பெரும்பாலும்  நினைப்பது ஆனால் சந்திக்க விரும்பும் வெகு சிலரில் பெரிய துரை என்னும் நண்பன் இருக்கிறான்.

பெரிய துரை எனக்கு அறிமுகம் செய்த சாகசங்களில் முக்கியமானது நிலத்தில் பதிந்திருக்கும் பெரும்கற்களை புரட்டி அவற்றினடியில் இருக்கும் சிற்றுயிர்களை கலைத்து ஓடச்செய்வதும் ஆராய்வதும்.அதை நான் பலமுறை தனித்தும் செய்துவந்தேன்

ஒருக்கில் நான் மட்டும் ஒரு பரந்த மைதானத்தில் செடிகொடிகளின் மறைவில் என்னால் தூக்கவே முடியாத பெரிய தட்டையான கல்லை சிரமப்பட்டு தூக்கி அதனடியில் இருந்த ஏராளமான சில்லறைக்காசுகளை கண்டேன். அவற்றில் என் சிறு கைகளில் எடுத்துக்கொள்ள முடிந்த அளவு எடுத்துக்கொண்டு வந்து ஆத்தாவிடம் கீழே கிடந்ததாக சொல்லிக் கொடுத்தேன். ஆத்தா காசுகளை அஞ்சறைப்பெட்டியில்  வைத்துக்கொண்டார்

அடுத்த வாரமும் அப்படியே கொண்டு வந்தபோது ஆத்தா சந்தேகத்துடன் என்னை விசாரித்தார். நான் ஒரேயடியாக கீழேதான் கிடந்தது என்று சாதித்தேன். உண்மையை சொன்னால் கற்களை புரட்டியதற்காக அடிகிடைக்கும் என தெரிந்திருந்தேன்

  பின்னர் என்னை ராமராஜ் சித்தப்பா தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அறியாமல் மீண்டும் நில வங்கியிலிருந்து சில்லறைகளை எடுத்தபோது சித்தப்பா அவற்றை முழுவதுமாக  வாரி எடுத்து லுங்கியில் கட்டிக்கொண்டு வீடு வந்தார். அங்கே குண்டு விளையாடும் பையன்கள் சேர்த்துவைத்த காசுகள் அவை என்பதை பிற்பாடு தெரிந்துகொண்டேன்.

 வேட்டைகாரன்புதூர் பள்ளிக்கூடமும் என் அழியாத நினைவுகளில் இருக்கிறது. சிறிய ஓட்டுக்கட்டிடம் கேட்டை திறந்தால் ’ப’ வடிவ அறைகளுடன் கட்டிடமும் ஒவ்வொரு அறையின் முன்பும் நெட்டிலிங்க மரங்களும் ஒரே ஒரு வகுப்பறையின் முன்னால் மட்டும் வேம்பும் நிற்கும். நடுநாயகமாக தலைமை ஆசிரியர் அறை, வாசலில் சூரிப்பழங்களும் இலந்தை பழங்களும் வேகவைத்த மரவள்ளி கிழங்கும் விற்கும் ஒரு பாட்டி. 

இந்த 2024 புத்தாண்டன்று அந்த வழியே கோவிலுக்கு சென்றேன். அதே கட்டிடம் ஒரு மாற்றமுமில்லாமல் இருந்தது. வேம்பு மட்டும் இல்லை. 3 வது படிக்கையில் என் ஆராய்ச்சியெல்லாம் எப்படி நெட்டிலிங்கமரம் இலைகளை உதிர்க்காமல் அப்படியே நின்றமேனிக்கு நிற்கிறது. வேம்பின் இலைகள் மட்டும் மஞ்சளாகி கொட்டிக்கொண்டே இருக்கிறது என்பதில் தான் இருந்தது . அதற்கு உடம்பு சரியில்லை என்று ஒரு எண்ணம் இருந்த்தால் வேம்பின் மீது பெரும் பரிவுமுண்டாகி இருந்ததும் தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது.

என் 1ம் வகுப்பின் ஒரே ஆசிரியை சரஸ்வதி எனும் பெயருடன் இருந்ததும் தற்செயலல்ல.அவர் அப்போது ஒய்வு பெறும் வயதில் இருந்திருக்கலாம், எனக்கு அவரை மூதட்டியாகத்தான் நினைவு கொள்ளவே முடிகிறது. வகுப்பில் பாடம் என்பது சிலேட்டில் அவர் ’அ’ என்று முழு சிலேட்டையும் அடைத்து எழுதிக்கொடுக்க அந்த ’அ’ வின் மீது மீண்டும் மீண்டும் சுவையான சிலேட்டுப்பென்சிலால் நாங்களும் ’அ’ எழுதிக்கொண்டே இருப்பதுதான். 

அப்பாரு தினம் காலை எனக்கும் மித்ராவுக்கும் சில்லறை காசுகள்,கொடுப்பார் 1 அல்லது 2  பைசாக்கள். அதில் திண்பண்டங்கள் வாங்கிக்கொள்வோம்

அப்பாரு ஊர்த்தலைவர் என்பதால் பள்ளியில் சகோதரிகளான எங்களுக்கு பள்ளியில் நல்ல மரியாதையும் இருந்தது

3 ம் வகுப்பில் இருக்கையில் ஆண்டு விழாவுக்கு ஒரு நடனம் ஆட (தலைமையாசிரியரின் போதாத காலம்) எங்களிருவரையும் தேர்வு செய்தார்கள்,இடுப்பை வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு அவ்வப்போது இடுப்பில் இருந்து ஒரு கையை மட்டும் எடுத்து மேடையில் இருக்கும் காந்தியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி ‘’காந்தி தாத்தா நம் தாத்தா’’ என்ற பாடலுக்கு நடனம் ஆட பயிற்சி அளிக்கப்பட்டது.

 வெடுக் வெடுக் என்று ஆட்ட இடுப்பு என்னும் ஒரு பாகம் எனக்கு இல்லாமலிருந்ததுதான் நடனப்பயிற்சியின் பெரும் சிக்கலாக இருந்தது. புஷ்டியாக பூரிப்பாக ஒரே  சதைத்திரட்சியாகத்தான் இருப்பேன் அப்போது. மித்ரா கொஞ்சம் சமாளித்துக்கொண்டு ஆடினாள். ஆண்டுவிழாவில் ஆடிய நினைவிலில்லை. பயிற்சியில் மூச்சுவாங்கிய என்னிடம் தலைமைஆசிரியர் கடுப்பில்’’ நீங்க ரெண்டு பேரும் லலிதா பத்மினின்னு நினச்சு கூப்பிடலை டேன்ஸ் ஆட உங்ககிட்டதான் கவுன் இருக்குன்னு கூப்பிட்டேன்’’ என்று திட்டியதும், நடனப் பயிற்சியும் மட்டும் நினைவில் இருக்கிறது. பள்ளி பிரேயர் போதும் அருமையான ஒரு பாடல் பாடுவோம்

’’அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே

அச்சமற்ற தூய வாழ்வு வாழ வேண்டும் நாட்டிலே 

இன்பமான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும்

அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே!’’ 

என்று துவங்கும் பாடலது.

வீட்டிலிருந்து நடந்து வரும் தொலைவில்தான் பள்ளிக்கூடம். சமயங்களில் அப்பாருவுடன் கூண்டு வண்டியிலும் வருவோம். அப்பாரு பிரபல குதிரை மற்றும் மாட்டுவியாபாரி சந்தைகளுக்கு போனால் பலநாட்கள் கழித்துத்தான் வீடு வருவார் அப்படி  வரும்போது அகாலங்களில் பள்ளிக்கு வந்து திண்பண்டங்கள் கொடுத்து கொஞ்சிவிட்டு செல்வதும் உண்டு

பள்ளியில் மிகப்பெருமையான வேலை என்பது ஆசிரியர் வந்தவுடன் தலைமை ஆசிரியர்  அறையிலிருந்து வருகைப்பதிவேடு எடுத்து கொண்டு வருவதுதான். அது ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்கு அளிக்கப்படும். நான் அந்த வேலையை கெஞ்சிக் கேட்டு வாங்குவதுண்டு. 

ஒருநாள் அப்படி  அந்த வேலையைவாங்கி சிட்டாக பறந்து சென்று தலைமை ஆசிரியரிடம் அந்த நோட்டை வாங்கிக்கொண்டு திரும்பி நடந்து வருகையில் அப்பாரு எதிர்பாராமல் பள்ளிக்கு வந்திருந்தார். நான் வகுப்பில் இல்லாமல் மைதானத்தில் தனியே இருந்ததையும் என் கையில் இருந்த அந்த நோட்டையும் பார்த்த அவர் பொங்கி ’’என்ற பேத்தி என்ன உனக்கு பியூனா’’ என்று அன்றைக்கு என் வகுப்பாசிரியரை ஏகத்துக்கும் கடிந்துகொண்டார். பிறகெப்போதும் எனக்கு அந்த வேலை கொடுக்கப்படவே இல்லை. 

மூன்றாவதில் தமிழுக்கென்று ஒரு ஆசிரியர் இருந்தார் அவர் வகுப்பில் அவ்வப்போது முந்தைய வகுப்பின் பாடங்களில் கேள்வி கேட்பார் பதில் சொன்னால் அப்போதே எழுந்து வீட்டுக்கு போகலாம்.  அவர் வகுப்புக்களில் என் பைக்கட்டை கைகளால் முன்கூட்டியே பிடித்துகொண்டு நான் துடிப்புடன் அமர்ந்திருப்பேன் . எப்படியும் அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் எனக்கு பதில் தெரியும். அப்படி பலநாட்கள் பதில்சொல்லி விட்டு பைக்கட்டை மித்ராவிடம் கொடுத்துவிட்டு நான் பெரிய,சின்ன துரைகளுடன் ஊர்சுற்ற கிளம்பி இருக்கிறேன்.

அதுபோன்ற நாட்களில் மட்டுமல்ல எப்போதும் நான் என் பள்ளிக்கு பையை எடுத்துச்சென்றது இல்லை அது எப்போதும் மித்ராவின் வேலை அவளே எனக்கும் சேர்த்து எடுத்துகொண்டு வருவது எழுதப்படாத விதியாக என்னால் சமைக்கப்பட்டிருந்தது.   ஒரு நாள் கோபித்துக்கொண்டு ’’நான் எதுக்கு உனக்கு  வேலை செய்யனும் நீயே எடுத்துட்டு வா’’ என்று தெருவில் மித்ரா என் புத்தகப்பையை (அதாவது சிலேட்டுப்பை) வைத்துவிட்டாள். நான் கிஞ்சித்தும் கவலைப்படாமல் என்  ஊர் சுற்றும் வேலையை பார்க்க சென்று விட்டேன் பின்னர் வீட்டில் கிடைக்கவிருக்கும் அடிகளை எண்ணி பயந்து  அழுதுகொண்டே அவளே எடுத்து கொண்டு வந்தாள்

அந்த பள்ளியின் வேறு வகுப்பின் ஆசிரியை ஒருவர் ஒருநாள் என்னிடம் அவர் மதிய உணவு சாப்பிட்ட பித்தளை தூக்குப்போசியை கொடுத்து கழுவித் தர சொன்னார். அந்த அவமானத்தை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.நான் ஒருபோதும் அப்படியான வேலைகளை மட்டுமல்ல எந்த வேலைகளையுமே  வீட்டில் செய்ததே இல்லை

  ஆனால் ஆசிரியர் என்பதால் மறுக்கவும் முடியவில்லை வாங்கி அதை குழாயடியில் அலசிக் கழுவினேன். கழுவுகையிலேயே என் மனம் எல்லா திட்டங்களையும் தீட்டியது.  நானே வலிய அவரிடம்  ’’டீச்சர் இதை வீட்டில் கொண்டு போய் கொடுத்துறட்டுமா’’ என்றேன். அவர் மகிழ்ந்து சரி என்றார் அந்த ஆசிரியை வீடு எனக்கு தெரியும் (எனக்கு தெரியாத வீடுகள் சந்துகள் பொந்துகள் ஏதும் அங்கு இல்லை) காமாட்சியம்மன் கோயில் பின்புறத்தில் ஒரு சிறு இருளடைந்த வீடுஅது  கண் தெரியாத அவரின் மாமியார்  வாசல் திண்ணையில் ஒரு குச்சியுடன் அமர்ந்திருப்பார், சத்தம் கேட்டால் குச்சியை முன்னால் நீட்டி தட்டி யாரு? என்பார்.

நான் அந்த தூக்குப்போசியின் மூடியை கழற்றி வைத்துக்கொண்டு அடிப்பாத்திரத்தை மட்டும் அவர் முன்னால் ஓசையெழ வைத்துவிட்டு ’’டீச்சர்  தூக்குப்போசியை கொடுத்துட்டு வர சொன்னாங்க’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஆத்தாவிடம் அந்த  மூடியைகொடுத்து வழக்கமான பொய்யான’’ கீழே கிடந்தது’’ என்பதை சொன்னேன். விலைக்குப்போட பழைய பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் அட்டாலியில் ஆத்தா அதை வீசியெறிந்தார்கள்

 என்னிடம் நூற்றுக்கணக்கான முறை தூக்குப்போசியின் மூடி எங்கே என்று கேட்ட அந்த ஆசிரியருக்கு  ஒரே பதிலாக ’’பாட்டிட்ட கொடுத்துட்டேன்டீச்சர்’’ என்பதையே சொல்லிக்கொண்டிருந்தேன். பணி ஓய்வு பெறும் வரை அவர் மாணவர்களிடம் எந்த வேலைகளையும் ஏவியிருக்க மாட்டார். 

இதுபோன்ற எனது செயல்கள்  வீட்டினரால் ‘’திண்ணக்கம்’’ என்னும் இப்போது வழக்கொழிந்து விட்டிருக்கும் சொல்லால் அவ்வப்போது குறிப்பிடப்படும்.

 புகையிலை வாசத்துடன் அப்பாருவின் கருப்பு கம்பளிக்குள் பொதிந்துகொண்டு  அவர் சொல்லும் மகாபாரதக் கதைகளை கேட்டது, வறுத்த ஈசல் உருண்டையுடன் கருப்பட்டிகருப்பு காப்பியை மேலெல்லாம் வழிய குடித்தது , வீட்டுக்குள் வெளிச்சம் வர ஓட்டில் ஓரிடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின் வழியே தரையில் இறங்கி இருக்கும் வெளிச்ச சதுரத்தில்  தட்டை வைத்துக்கொண்டு மித்ராவுடன் சண்டையிட்டுக்கொண்டு சாப்பிட்டது   என ஏராளம் நினைவுகள் மலரும் அவ்வப்போது.

கள்ளிப்பழத்தை முட்களுடன் வாயிலிட்டு நாக்கெல்லாம் முள்குத்தி வாயை மூடமுடியாமல் திறந்த படியே அலறிக்கொண்டு வீடுவந்து மேலும் அடிவாங்கியது, வேப்பமுத்துக்களை படிப்படியாக  பொறுக்கிச்சேர்த்து காசாக்கியது,  ஆத்தா களை எடுத்த காட்டில்  மதிய உணவின் போது   மல்லிகை அரும்புபோலிருந்த பச்சைமிளகாய்ப்பிஞ்சை  பறித்து கடித்துக்கொண்டு பழஞ்சோற்றை  கரைத்து குடித்தது, சூரிப்பழங்களின் கொட்டைகளை உடைத்து உள்ளே எண்ணெய் தடவினது போல மினுங்கும் விதைகளை  எடுப்பது, சீனி புளியங்காயின் கருப்பு விதைகளை காயமில்லாமல் உரிப்பது, எருக்கம் பூக்களின் அரும்புகளை ஓசையெழ அழுத்தி வெடிக்கச் செய்வது, வாரா வாரம் வியாழக்கிழமைகளில் ஆத்தா சாணி மெழுகும் வாசலுக்கு  நீலக்கரையிடவென்று அவுரிச்செடிகளை பறித்தரைத்து சாயமெடுத்தது,  அத்தைகளுடன் பருத்திபறித்தது,  இரட்டைஜடையில் ஊதா டிசம்பர் பூக்களை சூடிக்கொண்டது,  மஞ்சள் நிற  (Hibiscus glanduliferus) மலர்களை  நீரில் கசக்கி எண்ணையாக்கி கொட்டங்குச்சியில் சோறாக்கி விளையாடியது ( எப்போதும் சின்ன துரை வாயில் வண்டி ஓட்டிக்கொண்டு அலுவலகம் போகும் அப்பா ரோல்தான் செய்வான், அலுவலகம் போகும் முன்னர் நானோ குஞ்சியோ  கொட்டாங்குச்சிகளில் மண் நிரப்பி ஆக்கி வைத்திருப்பதை ’’என்னடி சோறாக்கி இருக்கே’’ என்று காலால் தவறாமல் எத்துவான்) என வேட்டைக்காரன்புதூரில் தான் எனக்கு தாவரங்களுடனான அணுக்கமும் துவங்கியது

அப்பாருவின் பெயர் மயில்சாமி என்பதால் ஆத்தா ம, மை என்னும் வார்த்தைகளை சொல்லமாட்டார். அப்போது மைதா வந்திருந்தது,  ஆத்தா அதை ரக்கிரிப்பொடி என்பார்.

அம்மாவும் அப்பாவின் பெயர் அழுக்கு ராஜ் என்பதால் அழுக்கு என்றே சொன்னதில்லை ’’துணியை கசக்காதே வீணாப் போயிரும் போட்ட துணியெல்லாம் துவைக்கப் போடு’’ இப்படி அழுக்கு என்பதை சொல்லாமல் தவிர்த்தே பேசுவார். கணவன் பெயரை சொன்னால் அவருக்கு ஆயுசு குறையும் என்னும் நம்பிக்கை ஆத்தாவுக்கு இருந்ததில் வியப்பில்லை ஆனால்   அப்பாவின் மன அழுக்குக்களையெல்லாம்  முற்றாக அறிந்திருந்த அம்மாவுக்கும்  இருந்ததுதான் நம்ப முடியவில்லை. அம்மா விரும்பியபடியே அப்பாவை நிறையாயுளுடன் விட்டுவிட்டு மறைந்துவிட்டார். 

இன்றென்னவோ பழைய நினைவுகள், வேட்டைகாரன்புதூர் வாசனைகள்.