கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள்  6 பேரை உணவில் சயனைடு கலந்தளித்து கொலை செய்த கேரளாவின் ஜோலி ஜோசப் 2019 ல் கைது செய்யப்பட்டார் .வழக்கு விசாரணையில் இருக்கிறது. கடந்த 2023 டிசம்பர் 22ல்  நெட்ஃப்ளிக்ஸில் இதுகுறித்த ’’கறியும் சயனைடும்’’ என்ற ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. கொலையானவர்களில் இரண்டு வயதுப் பெண்குழந்தையும் உண்டு.1

இப்படி உணவில் நஞ்சூட்டி கொலை செய்வது வரலாறெங்கும் நடந்திருக்கிறது. பிரிட்டனின் முதல் பெண் தொடர் கொலையாளி எனப்படும் மேரி ஆன் காட்டன்,  உணவில் ஆர்சனிக் நஞ்சூட்டி அவளது 4 கணவர்கள், 2 காதலர்கள், 11 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர்களை கொலை செய்தாள்( Mary Ann Cotton 1832-1873).  குற்றம் நிரூபிக்கப்பட்டு மேரி ஆன் தூக்கிலிடப்பட்டார்.  இங்கிலாந்த்தின் மிக கொடூரமான கொலைகளிலொன்றாக கருதப்படும் இவ்வழக்கில் மேரி தூக்கிலிடப்படுகையில் கழுத்தெழும்பு முறிந்தல்ல மூச்சுதிணறியே  அவர் கொல்லப்படவேண்டும் என்பதற்காக தூக்குகயிற்றின் நீளம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டது என்றும் ஒரு பேச்சிருக்கிற்து2.

 

ஆர்சனிக்கை உணவில் கலந்துகொடுத்து கொலை செயவ்து ரோமானிய கிரேக்க அரசுகளில் மிக சாதாரணமாக நடந்தது. அப்போதைய அரியணை போட்டிகளில் வெல்ல போரைக்காட்டிலும் ஆர்சனிக்கே பெரிதும் கைகொடுத்தது. ஆர்சனிக்குக்கு நஞ்சுகளின் அரசனென்றும், அரசர்களின் நஞ்சென்றும் இரட்டைப்பெயருண்டு.

கிரேக்க ரோமானிய வரலாற்றில் நஞ்சூட்டி கொல்லுதல் மிக சாதாரணமாக நிகழ்ந்துள்ளது. கிரேக்கர்களுக்கு நச்சு ஹெம்லாக் செடியைப்போல, ரோமானியர்களுக்கு ஆர்சனிக்  இருந்தது. 

முதல் நூற்றாண்டிலிருந்தே ஆர்சனிக் புழக்கத்தில் இருந்திருக்கிறது என்றாலும் 1250 ல்  இதன் வேதியியல் ரீதியான கண்டுபிடிப்புக்கு  ஆல்பெர்டஸ் மேக்னஸ்  (Albertus Magnus) என்பவரே காரணம். நச்சியலின் தந்தையான பாராசெல்சஸ் (Paracelsus) தனது படைப்புக்களில் ஆர்சனிக் நஞ்சை குறிப்பிட்டிருக்கிறார்.

நெப்போலியனின் மரணத்துக்கே சிறுகச்சிறுக அளிக்கப்பட்ட ஆர்சனிக் காரணமாயிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து சிறுகச் சிறுக அளிக்கப்படுகையில்  அது உயிராபத்தை விளைவிக்கும். ஒரு வளர்ந்த மனிதனை கொல்ல பட்டாணி அளவுக்கு ஆர்சனிக் போதுமானதாக இருக்கும்.

 கிபி 1550ல் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்தின் ஈபர்ஸ் பாப்பிரஸ் மருத்துவநூலில் ஆர்சனிக் நஞ்சாதல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. போரில் நஞ்சூட்டுவதற்கும் ஆர்சனிக் பயன்பட்டிருக்கிறது. முதல் உலகப்போரில் ஜெர்மனி ஆர்சனிக் நஞ்சூட்டுதலை போர் வழிமுறைகளிலொன்றாக கையாண்டிருந்தது. 

உள் நோக்கமற்ற ஆர்சனிக் நஞ்சூட்டுதல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக 1900த்தில் இங்கிலாந்தில் பியர் தயாரிப்பில் உட்பொருட்களில் ஆர்சனிக் இருந்ததால் ஏராளமானோர் ஆர்சனிக் நஞ்சூட்டப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.

1950களில்  ஜப்பானில் குழந்தைகளுக்கான பால்பொடியில் அதிக ஆர்சனிக் இருந்து பாதிப்புண்டானது. பங்களாதேஷில் ஆர்சனிக் இருந்த   நிலத்தடி நீரை பயன்படுத்தியதால்  பெரிய அளவில் ஆர்சனிக் பாதிப்பு உண்டானது

ஆர்சனிக் உணவின் மூலமாக தொடர்ந்து உடலில் சேர்வதால் ஆபத்தை சந்திக்கவிருக்கும் நிலைமை உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

இப்போது பல நாடுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஆர்சனிக் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் ஆசியாவில் ஆர்சனிக் இருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள்தான் புழக்கத்தில் இருக்கின்றன.  

ஆர்சனிக்கை உணவில் கலந்து  கொலை செய்வது சுலபமாக இருந்தது ஏனென்றால் ஆர்சனிக் நஞ்சூட்டப்பட்டதின் துவக்க அறிகுறிகள் அனைத்தும் கெட்டுப்போன உணவினால் உண்டாகும் அறிகுறிகளான வாந்தி, வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்றுவலி ஆகியவைதான். எனவே உணவில் இதை கலந்து கொடுப்பது எளிதாகவும் ஆர்சனிக் கொலை என்று கண்டுபிடிக்க முடியாமலும் இருந்தது .

1836 ல் இங்கிலாந்தின் ஜேம்ஸ் மார்ஷ் (James Marsh) உடலிலிருக்கும் ஆர்சனிக்கை எளிய பரிசோதனைகள் மூலம் கண்டறியும் முறையை கண்டுபிடித்த பிறகு ஆர்சனிக் நஞ்சூட்டுதல்கள் மெல்ல மெல்ல குறைந்து இல்லாமலானது. இந்த பரிசோதனை முறைகளுக்கே மார்ஷ் முறை என்றே பெயர்.

உணவில் ஆர்சனிக் கலந்து கொடுத்து கொலைசெய்த வரலாற்றுக்காலங்கள் போய் இப்போது நாமனைவரும் உண்ணும் உணவிலேயே ஆர்சனிக் இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியூட்டும் கவலையளிக்கும் உண்மை. மனிதசெயல்பாடுகளால் காற்றும் நீரும் நிலமும் மாசடந்து சூழலில் இருக்கும் ஆர்சனிக் போன்ற நஞ்சுகள் நம் உணவுச்சங்கிலியில்  நிரந்தரமாக இணைந்துவிட்டன.

நமது அன்றாட காலை உணவான இட்லி தோசையிலிருந்து, மதிய உணவு,  பொங்கல் பண்டிகையில் புதுப்பானையில் பொங்கும் புத்தரிசி, இறைச்சிச்சாற்றில் வேகவைக்கப்பட்ட  அரிசி உணவான இத்தாலிய ருஸாட்டோ, இந்தோனேஷியாவின் நாசி கோரெங், இலங்கையின் கிரிபாத், சீன ப்ரைடு ரைஸ், மீனும் இறைச்சியும் காய்கறிகளுடன் கலந்து சமைக்கப்பட்ட ஜப்பானிய டோன்புரி, சுஷி  வரை உலகின் பல பகுதிகளில் அரிசி உணவு தான் பல லட்சம் மக்களின் விருப்பத்துக்குகந்த  பிரதானமான  உணவாக இருக்கிறது.

உலக மக்களில்  50 சதவீதத்தினர் அரிசி உணவை  விரும்பி உண்கிறார்கள். உலகின் மொத்த அரிசி உற்பத்தியில் 90 % ஆசியாவில் உற்பத்தி ஆகிறது. ஆசியாவில்தான் உலகின் அதிக அரிசி உணவு உண்ணப்படுகிறது. ஆசியாவின் பெரும்பாலான அரிசி வகைகளில் ஆர்சனிக்  நஞ்சு இருக்கிறது

மனிதனின் மிகப் பழமையான தானிய உணவுகளில் அரிசியும் ஒன்று. அரிசியின் தோற்றம் குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை எனினும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே அரிசி, உணவாக பயன்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சீன  இந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன.

நெல்/அரிசி சீனாவில் தோன்றி சீன ஆற்றுப்படுகைகளில் முதன்முதலில் சாகுபடி செய்யப்பட்டது என்றும்  இமாலய பகுதியின் காட்டுப்புல்லான Oryza rufipogon லிருந்து தோன்றியதுதான் அரிசி அங்கிருந்துதான் சீனாவுக்கு சென்றது என்றும் இரு வலுவான கருத்துக்கள் நிலவுகின்றன.

சீனாவின் சியான் ரென் குகையில்  கிமு 11 000–12 000 காலத்தை சேர்ந்த அரிசியின் தொல்படிவங்கள் கிடைத்திருக்கின்றன. எனினும் கங்கை ஆற்றுப்படுகையில்தான் தொல்காலத்திலேயெ நெல்சாகுபடி செய்யப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க அரிசி சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆப்பிரிக்காவில் சாகுபடியாகிறது

எங்கு தோன்றியது என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும் நெற்பயிர் உலகின் முக்கியமான உணவுப்பயிர்களிலொன்று. மக்காச்சோளம், கோதுமைக்கு அடுத்தபடியாக உலகில் நெல்லே மிக அதிகம் சாகுபடியாகிறது.

உலகின் பெரும்பான்மையான  அரிசி சாகுபடியாகும் ஆசியாவின் கலாச்சாரத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருக்கிறது நெல், நெற்பயிர்,  அரிசி மற்றும் அரிசி உணவு ஆகியவை.

 இந்தியாவில் அரிசி  மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கிறது.  இந்திய மாநிலங்களின் அறுவடை திருநாள் விழாக்கள் பெரும்பாலும் நெற்பயிரை முக்கியமானதாகக் கொண்டே நடக்கின்றன.

அதர்வ வேதம், தைத்ரீய பிராமணம், சதபத பிராமணம், மகாபாரதம் ஆகியவை அரிசியை ,நெல்லை,  அன்னம் என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றன. இந்தியத் திருமணங்களில் மஞ்சள் கலந்து அரிசி அக்‌ஷதை தூவப்படுகிறது. 

கேரளாவில் மணமகள் முதன்முதலில் தான் வாழவிருக்கும் வீட்டுக்குள் நுழைகையில் கால்களால் நெல் நிறைந்த கலனை தட்டிவிட்டு நுழைவது செழுமையின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்திய மாநிலங்கள் பலவற்றில் குழந்தைகளுக்கு முதலுணவாக அரிசிச்சோற்றை அளிப்பது ஒரு மங்கல நிகழ்வாக கோவில்களில் நடைபெறும்.       அரிசிக்கஞ்சியை கொப்புளங்களுக்கு வைத்துக்கட்டுவது, அரிசி கழுவிய நீரில் தலைமுடியை அலசுவது  போன்ற மருத்துவம், அழகுப்பராமரிப்பு சார்ந்த உபயோகங்களும் அரிசிக்கு இருக்கின்றன,  வாய்க்கரிசி என்னும் இறப்புச்சடங்கிலும் அரிசி மிக முக்கிய  இடம் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில்  அரிசி பொன்னியம்மன் என்னும் கடவுளாக வழிபடப்படுகிறது. அன்னலக்ஷ்மி என்பதும் அரிசியின் தெய்வமே. 

அதர்வவேதம் அரிசியை இறப்பே இல்லாத சொர்க்கத்தின் பிள்ளை என்கிறது. சகோதரர்கள் வேகவைத்த அரிசியை போல இணைந்து ஆனால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்னும் ஒரு முதுமொழியும் இந்தியாவில் உண்டு.  இந்தியாவில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் சடங்கின்போது தாலத்தில் பரப்பப்பட்டிருக்கும் அரிசியில் பெயர் எழுதப்படும். வேள்விகளில் அவியளிக்கவும் அரிசி பயனாகிறது.  சீனப்பெருஞ்சுவர் கட்டுமானத்தில் வேகவைத்த அரிசிகஞ்சி பயன்படுத்தப்பட்டது.

ஜப்பானிய அரிசி மதுவான ஸாகேவிற்கென்றெ நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் பிரத்யேகமாக அங்கு சாகுபடியாகிறது.  

இந்தியாவின் மருத்துவ உபயோகங்கள் கொண்ட அரிசி வகைகளான  ’காந்தி பான்கோ’ சட்டீஸ்கரிலும் ( Kanthi Banko), மெஹர், சரய்ஃபூல், தன்வர் ஆகிய ரகங்கள் ஒரிஸாவிலும் (Meher, Saraiphul & Danwar),  அதிக்கயா மற்றும் கரிபட்டா ரகங்கள் ( Atikaya & Kari Bhatta ), கர்நாடகத்திலும் விளைவிக்கப்படுகின்றன. 

செந்நெல்லு, குஞ்சிநெல்லு, எருமக்காரி, கருத்த செம்பாவு போன்ற அரிய  பிரத்யேக நெல் ரகங்கள் கேரளாவில் சில பகுதிகளில் மட்டுமே விளைகின்றன.2022 ன் புள்ளிவிவரம் இந்தியாவில்  46 மில்லியன் ஹெக்டேரில் நெல் சாகுபடியாகிறது என்கிறது.

 நிறங்களைக் கொண்டு அரிசி வெள்ளை, பழுப்பு, கருப்பு, சிவப்பு என என  பலவகைகளாகவும் நறுமணத்தின் அடிப்படையில் கிழக்காசிய பாஸ்மதி, தாய்லாந்தின் மல்லிகை அரிசி, இந்திய மாம்பழ  மற்றும் கடலை வாசனை கொண்டவை, சீரக சம்பா போன்ற மெலிதான நறுமணம் கொண்டவை, இத்தாலிய ஆர்பொரியோ நறுமண ஆரிசி, ஒரு கிலோ 100 டாலர்களுக்கும் அதிகமான விலையில் கிடைக்கும் ஜப்பானிய கின்மீமய்  (Kinmemai) அரிசி என்று அரிசியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வகைகள் உலகெங்கும் இருக்கின்றன. 

அரிசிமணிகளின் அளவு அவற்றின் மாவுச்சத்து, நறுமணம், நிறம் என பல வேறுபாடுகள் இவ்வகைகளில் இருக்கின்றது எனினும்  அரிசியின் அளவை பொருத்தவரை நீள, குட்டை மற்றும் நடுத்தர ரகம் என 3 வகைகளே உள்ளன.

ஆசியாவில்தான் நெல் சாகுபடி முதன்முதலாக  கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. Oryza rufipogan  என்னும் அறிவியல் பெயருடைய காட்டு நெல்லினத்திலிருந்து ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் உருவாக்கப்பட்டு பயிரிடப்பட்டன.  ஒரைஸா சட்டைவாவின் துணை சிற்றினங்களில்   ஒட்டும் தன்மை குறைவாக இருக்கும்   இண்டிகா மற்றும் அதிக ஒட்டும்தனமை கொண்ட  ஜப்பானிகா ஆகியவை உள்ளன.

நெல்    ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத்  தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின்  அரிசி என்னும் உணவாகிறது.  

நெல்லின் அறிவியல் பெயரான  Oryza sativa வில் சட்டைவா என்பது சாகுபடி செய்யப்பட்டது என்பதை குறிக்கிறது. ஒரைஸா என்னும்  சொல், அரிசி என்பதை குறிக்கும் தமிழ்ச் சொல்லிருந்து வந்ததாகவும் தமிழின் அரிசியே ஆங்கில ரைஸ் ஆகவும் கிரேக்க ஒரைஸா ஆனதாகவும் கருதப்படுகிறது. அப்படி இல்லை அரிசியை குறிப்பிடும் ஒரைஸா கிரேக்க சொல்லிலிருந்தே  வந்தது என்னும் கருத்தும் உண்டு.

நெற்பயிரிலிருந்து அரிசி மட்டுமல்லாது தட்டை, வைக்கோல், உமி போன்ற கால்நடை தீவனங்களும், தவிட்டிலிருந்து எண்ணெய் என பல்வெறு பயன்களும் கிடக்கின்றன. அரிசியில் சிறிதளவு புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து ஆகியவையும்  பிரதானமாக கார்போஹைட்ரேட் அல்லது ஸ்டார்ச் எனும் மாவுச்சத்தும் உள்ளது.

புழுங்குதல் (Parboiling)  மூலம் அரிசி மணிகளுக்குள் நெல்மணிகளின் மேலுறையில்  இருக்கும் சத்துக்கள் செலுத்தப்படுகின்றன. பச்சரிசியில் இந்த சத்துக்கள் இருக்காது.3

சங்கப்பாடல்களில்  வேகவைத்த பிறகு கட்டைவிரல் தடிமனில் இருந்த ஒரு வகை நெல் உள்ளிட்ட பல நெல்வகைகளை பற்றிய  குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 2 லட்சம் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது நாம் அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டிருக்கிறோம்  

அரிசியின் சர்க்கரை உயர்த்தல் குறியீடு ( glycemic index )  20 லிருந்து 73 வரை இருப்பதால் ரத்த சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை குறைவாக எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். 

ரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு  பழுப்பு /மட்டை/சிவப்பு அரிசி வெள்ளை அரிசியைக்காட்டிலும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது

 ஆனால், பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே தோன்றிய, ஆசியா முழுவதிலும் சாகுபடியாகின்ற, உலகின் பாதி மக்கள் தொகையின் பிரதான உணவாயிருக்கிற, பல நாகரிகங்களின், தொன்மங்களின், கலாச்சாரத்தின், பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாகி விட்டிருக்கிற அரிசி உணவில் உயர் சர்க்கரை உயர்த்தல் குறியீடு மட்டும்தான் ஆபத்தா? என்றால் இல்லை அதைக்காட்டிலும்  ஆபத்து அரிசி உணவில் இருக்கிறது.

நமது அன்றாட உணவில்  ஏதோ ஒரு வடிவில் கட்டாய இடம் பிடித்திருக்கும் அரிசி உணவில் ஆர்சனிக் நஞ்சு(arsenic -As)) இருக்கிறது. தொடர்ந்து அரிசி உணவை உண்ணுவதால் உடலில் சேர்ந்துவிடும் ஆர்சனிக் தீங்கு விளைவிக்கிறது.

ஆர்சனிக்  மண்ணிலும் நிலத்தடி நீரிலும் காற்றிலும் இருக்கும் ஒரு மாசு. ஆர்சனிக் பூச்சிக்கொல்லி, நிறமிகள், தளவாடங்கள், கண்ணாடி, ஆடைகள்,  தோல்பதனிடுதல் மற்றும் மருந்து உற்பத்தி ஆகிய தொழிற்சாலைகளின் கழிவுகளில் காணப்படும் ஒரு நஞ்சு. ஆர்சனிக் கொண்டுள்ள பூச்சிக்கொல்லிகளும் ரசாயனங்களும் உலகநாடுகள் பலவற்றில்  தடை செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் சூழலில் சேர்ந்திருக்கும் ஆர்சனிக் சுமார் 9000 வருடங்களுக்கு  அச்சூழலில் இருக்கும் என்கின்றன ஆய்வுகள். 4

நிலத்தில் இருக்கும் ஆர்சனிக்   அங்கு சாகுபடியாகும் தாவரங்கள் வழியாக நம் உணவு சங்கிலியில் இணைந்துகொள்கிறது.ஆர்சனிக் கரிம, கரிமமற்ற (organic & inorganic ) என்னும் இருவகைகளில் சூழலில் இருக்கிறது.கரிம ஆர்சனிக்கை காட்டிலும் கரிமமற்ற ஆர்சனிக் கடும் நஞ்சுள்ளது.

உணவில் இருக்கும் ஆர்சனிக்கின் வகை, அதன் அளவு, அதை எடுத்துக் கொள்ளும் நபரின் வயது, உடல்நிலை ஆகியவற்றை பொருத்து அதன் விளைவுகள் இருக்கும்

 நேரடியாக நிலத்திலும் பாசனத்துக்கு உபயோகப்படுத்தும் நீரிலும் ஆர்சனிக் இருக்கும். பல தாவரங்கள் நிலத்தில், காற்றில்  நீரில் இருக்கும் ஆர்சனிக்கை கிரகித்துக்கொள்கின்றன. நெற்பயிரும் புகையிலைப்பயிரும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. புகைப்பிடிப்பதன் ஆரோக்கிய கேடுகளில் ஆர்சனிக்கும்  சேர்ந்து விட்டிருக்கிறது. தக்காளி, கேரட் போன்ற காய்கறிப் பயிர்கள், கீரைகள் ஆகியவையும் ஆர்சனிக்கை எடுத்துக்கொள்கின்றன.  

அமெரிக்காவின் நச்சுப்பொருட்களால் உருவாகும் நோய்க்கான அமைப்பு (Agency for Toxic Substances and Disease Registry) தனது தளத்தில் தீங்கிழைக்கும் பொருட்களுக்கான முன்னுரிமைப் பட்டியலில் ஆர்சனிக்கை முதலிடத்தில் பட்டியலிட்டுள்ளது. புற்றுநோயை உருவாக்கும் பொருட்களின் முதன்மைப்பட்டியலில் ஆர்சனிக்  இருக்கிறது.

ஆர்சனிக் உடலில் அதிக அளவில் சேர்வது ஆர்சனிக் நஞ்சாதல் -Arsenicosis எனப்படுகிறது. இந்த அதிகரித்த ஆர்சனிக் அளவுகள் வாந்தி,வயிற்றுவலி  மூளைக்கோளாறு, இருதயக் கோளாறு மற்றும் புற்றுநோயை உருவாக்கும்.  அதிக ஆர்சனிக் ரத்தசர்க்கரை நோயையும் உண்டக்குகிறது. 5

தொடர்ந்து ஆர்சனிக்  மாசடைந்த நீரை அருந்துவதாலும், ஆர்சனிக் கொண்டுள்ள உணவுப் பொருட்களை உண்ணுவதாலும் உடலில் அதிக அளவில் ஆர்சனிக் சேரும். ஆர்சனிக் மாசுபட்ட இடங்களில் வாழ்வதும் இதற்கு ஒரு காரணமாகும்.

குடிநீர்லிலிருந்து மட்டுமே 200 மில்லியன் மக்கள் உடலில் பாதுகாப்பற்ற அளவுகளில் ஆர்சனிக் சேர்கிறது. மிக அதிக ஆர்சனிக்கை குடிநீரினால் உடலில் கொண்டிருப்பவர்களில் மேற்கு வங்க மற்றும் பங்களாதேஷ் மக்கள்  இருக்கிறார்கள். 

தீவிரமான அளவுகளில் ஆர்சனிக் உடலில் சேர்வது அரிதாகவே நிகழ்கிறது என்றாலும் தொடர்ந்து உடலில் சேர்ந்து கொண்டிருக்கும் ஆர்சனிக் அந்த நிலைக்கு நிச்சயம் இட்டுச்செல்லும். உலக சுகாதார அமைப்பு  ஒரு லிட்டரில் 10  மைக்ரோகிராம்  அளவிலான ஆர்சனிக்  இருப்பது பாதுகாப்பற்றது என்கிறது.

பல நாடுகளில் இருக்கும் இயற்கை கொதிநீர் ஊற்றுக்களும் மிக அதிக அளவு ஆர்சனிக்கை கொண்டிருக்கின்றன.  நீர், காற்று, நிலம், உணவு இந்த நான்கிலிருந்தும் ஆர்சனிக் நம் உடலில் சேரும் வாய்ப்புள்ளது.6

நெற்பயிர் சாகுபடியின் போது வளர்ச்சிக்கு தேவையான கனிங்களை அவை வளரும்  நிலத்திலிருந்து எடுத்துக்கொள்ளும், அப்போது நிலத்திலிருக்கும் ஆர்சனிக் போன்ற நச்சுப்பொருட்களையும் நெற்பயிர் கிரகித்து, நெற்பயிரின் கனியான நெல்மணி உள்ளிட்ட  தாவர பாகங்கள் அனைத்திலும் ஆர்சனிக்கை சேமித்துவைக்கிறது  . மாசடைந்த ஆர்சனிக் போன்ற நச்சுபொருட்கள் இருக்கும் நீர் நெற்பயிரை சுற்றிலும் நெடுநாட்கள் தேங்கி இருக்கும்படி (flodding) நெல்சாகுபடி முறைகள் இருப்பதாலும் பிற பயிர்களைக்காட்டிலும் நெல்லில் ஆர்சனிக் அளவு அதிகரிக்கிறது. 

அரிசியில் இருக்கும் ஆர்சனிக் வகைகள்  arsenite (As (III)), arsenate (As (V)), methylarsonic (MMA), மற்றும்  dimethylarsinic acid (DMA). இவற்றில் ஆர்சனைட்டும் ஆர்சனேட்டும் கரிமமற்ற வகை.  MMA,  DMA இரண்டும் கரிம வகை.

கடந்த சில வருடங்களாகவே இந்திய அரிசியின் ஆர்சனிக் அளவுகள் ஆய்வுக்குரியதாகி இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களில் இந்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் ( 2015/10006 ) கரிமமற்ற ஆர்சனிக் அளவு உணவுக்கான அரிசியில் அதிகபட்சமாக 0.10 mg/kg இருக்கலாமென்கிறது ஆனால் பச்சரிசி புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட அரிசி வகைகளின் ஆர்சனிக் அளவு 0.20 & 0.25 mg/ kg ஆக இருக்கிறது. 

இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்கள் ,பீஹார் விவசாய பல்கழைக்கழகம் மற்றும் பாஸ்மதி ஏற்றுமதி வளர்ச்சிக்கான நிறுவனமான BEDF, ஆகியவற்றுடன் இணைந்து அரிசி வகைகளின் ஆர்சனிக் அளவுகளை ஆய்வு செய்து வருகின்றன.

கடலுணவுகள், கோழி இறைச்சி, ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்கள் என அனைத்திலும் ஆர்சனிக் இருக்கிறது எனினும் அரிசியிலிருப்பதை விட இவற்றில் மிக குறைவாகவே இருக்கிறது.பிற தாவரங்களை காட்டிலும் சாகுபடியின் போது அதிக அளவு நீர் தேவைப்படுவதால் நெற்பயிர் அதிக ஆர்சனிக்கை எடுத்துக்கொள்கிறது. ஆர்சனிக் பல உலக நாடுகளின் நிலத்தடி நீரில் மிக அதிக அளவில் இருக்கிறது. 

எல்லா அரிசி வகைகளிலும் ஆர்சனிக் இருக்கிறதா என்றால் ஆம். மாசுபட்ட நிலத்தில், மாசுபட்ட நீரில்தான் நெல் உலகெங்கிலும் சாகுபடியாகிறது.

 வெள்ளை அரிசியில் மட்டை/பழுப்பு/சிவப்பு  அரிசியில் இருப்பதை காட்டிலும் மிககுறைவாகவே ஆர்சனிக் இருக்கிறது. பழுப்பு அரிசியில் வெள்ளை அரிசியைக்காட்டிலும் 60-80%  அதிக ஆர்சனிக் இருக்கிறது.பாஸ்மதி, மல்லிகை அரிசி வகைகளில் இயற்கையாகவே ஆர்சனிக் அளவு மிக மிக குறைவாக இருக்கிறது. நேபாளம், வட இந்தியா, மற்றும் வடக்கு பாகிஸ்தானில்  காற்றிலும் நீரிலும் நிலத்திலும் ஆர்சனிக்கின் அளவு மிக குறைவு என்பதால் அங்கு  விளையும் நெல் வகைகளில் ஆர்சனிக் நஞ்சு மிகக்குறைவு.7

அரிசியின் ஆர்சனிக் அளவு சோதனைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும். உணவில் ஆர்சனிக் இருக்கலாம் என்று சந்தேகமும் வருத்தமும் கொள்பவர்கள் அவர்கள் பயன்படுத்தும் நீரில் அரிசியில் ஆர்சனிக் அளவை சோதித்துக்கொள்ளலாம். சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனையில் உடலின் ஆர்சனிக் அளவு தெரியவரும்.

அரிசியை  உணவில் முற்றாக தவிர்க்க முடியாது எனினும் எந்த அரிசியை, எப்படி சமைத்து,  எவ்வளவு உண்கிறோம் என்பதில் கவனமாக இருந்தால் பெருமளவு ஆபத்தை தவிர்க்கலாம்.

அரிசியில் ஆர்சனிக்கை நீக்கும் எளிய வழிகள்:

  • நெல் சாகுபடி முறையில் தேவையான மாற்றங்களை செய்யலாம். 
  • ரசாயனங்களை தவிர்த்து இயற்கை விவசாயத்தை பின்பற்றலாம்.
  • அரிசியை ஊற வைத்து பலமுறை கழுவுகையில் சுமார் 10 % ஆர்சனிக் நீங்கும். துளைகள் கொண்ட பாத்திரத்தில் நீரூற்றி கழுவுதல் நல்லது
  • 6 மடங்கு நீர் சேர்த்து அரிசியை வேகவைத்து கஞ்சியை வடிகட்டுகையில் மேலும் 40 -60 ஆர்சனிக்கை நீக்கலாம்.
  • வட இந்திய, இமாச்சல, நேபாள பகுதிகளின் அரிசியை உபயோகிக்கலாம்.
  • நறுமணமுள்ள அரிசி வகைகளை அதிகம் உபயோகிக்கலாம்
  • சிறுதானியங்களில் ஆர்சனிக் இல்லை எனவே அவற்றை அதிகம் உபயோகிக்கலாம். 
  • மழைநீரில் சமைக்கப்பட்ட அரிசி உணவில் மிக மிக குறைவாக ஆர்சனிக் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது என்னும் மழைநீர் சேகரிக்கும் விதம், சேமிக்கும் இடம் ஆகியவை மழைநீரின் ஆர்சனிக்  அளவை நிர்ணயிக்குமென்பதால் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

 பலமுறை கழுவி கஞ்சி வடிக்கையில் அரிசியிலிருக்கும் சத்துக்களும் நீக்கப்படுகின்றன. எனவே அரிசிஉணவுடன் காய்கறிகள் பருப்பு கீரை போன்றவற்றை  சேர்த்துக்கொள்ளலாம். 

பொதுவாகவே உணவுண்ணும் தட்டின் பாதியளவு காய்கறி, பழத்துண்டுகள், கீரை ஆகியவையும் கால்பாகம் புரதத்திற்கான பருப்பு/ இறைச்சியும் மீதமிருக்கும் கால்பாகத்தில் குறைந்த சர்க்கரை உயர்த்தல் குறியீடும் குறைந்த ஆர்சனிக்கும் இருக்கும் நறுமண அரிசியும் இருப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. 

உணவின் மூலமாக உடலில் ஆர்சனிக் நஞ்சு சேர்வது உலகின் தற்போதைய மிக முக்கியமான ஆரோக்கிய பிரச்சனையாகி இருக்கிறது.   மற்ற தானியங்களைக் காட்டிலும் அரிசியில் பத்து மடங்கு ஆர்சனிக் அளவு அதிகமென்பதும் அரிசியே பலரின் பிரதான உணவு என்பதும் கவலைக்குரிய விஷயங்கள். அரிசியில் இருக்கும் கரிமமற்ற ஆர்சனிக் (arsenate & arsenite)  புற்றுநோய் உருவாக்கும் காரணிகளில் ஒன்று.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இருக்கும் இந்தியாவில் அரிசியின் ஆர்சனிக் அளவுகள் துல்லியமாக சோதிக்கப்படவேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.

ஆர்சனிக் நஞ்சினை உடலில் கண்டுபிடிப்பது எளிதானபின்பு, கொலைசெய்யும் பொருட்டான ஆர்சனிக் நஞ்சூட்டுதல் இப்போது இல்லைதான் எனினும் நாம் வாழும் பூமியை முழுக்க மாசுபடுத்தி நஞ்சூட்டியிருக்கிறோம் எனவே உணவில் நஞ்சூட்டும் அவசியமின்றி உணவே நஞ்சாயிருக்கிறது.

பயிர்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவைக்காட்டிலும் பூச்சிமருந்தை உபயோகப்படுத்துபவர்கள், தொழிற்சாலை கழிவுகளை  முறையின்றி,  நீர்நிலைகளில் வெளியேற்றுபவர்கள், ஏன் குப்பைகளை எந்த பொறுப்புமின்றி தெருவில் வீசுபவர்களும் ஜோலி ஜோசப்பும், மேரிஆனும்தான்.

உசாத்துணை

1.Curry and Cyanide: Everything to know about Jolly Joseph, victims, and the case so far (thenewsminute.com)

2. Mary Ann Cotton – Wikipedia

3. புழுங்கல் அரிசி-Parboiled Rice – அதழ் (logamadevi.in)

4.The relation between rice consumption, arsenic contamination, and prevalence of diabetes in South Asia – PMC (nih.gov)

5. Widespread Arsenic Contamination of Soils in Residential Areas and Public Spaces: An Emerging Regulatory or Medical Crisis? (sagepub.com)

6. Arsenic-Contaminated Soil, Hazards of Short-Term Exposure, 1999 Report (wa.gov)

7. Arsenic in brown rice: do the benefits outweigh the risks? – PMC (nih.gov)