அந்தி சாய்ந்து சூரியன் மறைகையில் உலகிலும் பல மாற்றங்கள் நடக்கும். பகலில் விழித்திருக்கும் உயிரினங்கள் உறங்கச் செல்லும். உறக்கம் என்பது உடலின் புறச்செயல்பாடுகள் குறைந்து புலன்கள் அமைதிகொள்ளும் நேரம். உயிரினங்கள் அனைத்திற்கும்  விழிப்பும் உறக்கமும் பொதுவானது எனினும் உறங்கும் நேரமும் கால அளவும் ஒவ்வொரு உயிரினத்திற்கும்  வேறுபடும். 

விலங்குகளில் இரவுலாவிகள் பகலில் உறங்கி இரவில் விழித்திருந்து உணவைத் தேடும். பகல் உலாவிகள் இரவில் உறங்கும். விலங்குகளிலேயே உறக்கமென்பது பலவகையில் காணப்படுகின்றது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக ஒருநாளில் உறங்கும் விலங்குகளும் உண்டு.

மழை உழவாரப் பறவைகள் (ஸ்விஃப்ட்) இடைவெளி இன்றி 6 மாத காலம் வலசை போக பறக்கும் அப்படி பறக்கையிலேயே அவை உண்டு உறங்கும். மூளையின் பாதிப்பகுதி விழித்திருக்கையில்தான் டால்பின்கள் உறங்கும்

கோலா கரடிகள் ஒரு நாளில் 22 மணி நேரத்தை உறங்கியே கழிக்கும். வவ்வால்கள் தலைகீழாக தொங்கியபடியே உறங்கும். 

இப்படி மனிதர்கள், விலங்குகள் உறங்குவது போல தாவரங்களும் உறங்குமா?  விலங்குகளும் தாவரங்களும் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு உயிரினங்கள். அவற்றின் செல் அமைப்பிலிருந்து அவற்றின் வளர்ச்சி உணவு தேடுதல், உணவை எடுத்துக் கொள்ளுதல் இனப்பெருக்கம் என அனைத்துமே தனித்துவமானவை.

தாவங்களுக்கு விலங்குகளைப்போல மூளை என்னும் அமைப்பும் நரம்பு மண்டலமும் இல்லை எனினும் அவற்றிற்கு உயிரியல் கடிகாரத்தின் காலக் கணக்குகள் உண்டு. (circadian rhythm/ biological clock) இக்காலக்கணக்குகளால் தாவரங்கள் இரவிலும் பகலிலும் வேறுபட்ட செயல்பாடுகளையும் இயல்புகளையும் கொண்டிருக்கும்.பகலில் ஒளிச்சேர்க்கையில் சேமித்து வைத்த ஆற்றலை தாவரங்கள் இரவுநேரங்களில்  உபயோகித்துக்கொள்ளும்.

இலையுதிர்காலத்தில் மரங்களின் செயல்பாடுகள் முற்றிலுமாக இருக்காதென்பதால் அக்காலத்தையும்  தாவரங்களின் உறக்க காலமெனக் கொள்ளலாம்.

பெரும்பாலான தாவரங்கள் இரவு நேரத்தில் ஒளி சேர்க்கையை நிறுத்திக்கொண்டு இலைத்துளைகளையும் மூடிவிடும். இரவில்  மகரந்த சேர்க்கை நடைபெறும் தாவரங்களின் வெண் மலர்கள் இரவில் மட்டுமே மலர்ந்து மணம்பரப்பும்.

ஒரு சில தாவரங்கள் இலைகளை உறங்குவது போல் ஒன்றின் மீது ஒன்று சாய்த்து வைத்து அந்தியிலிருந்து காலை சூரியஒளி வரும்வரை வைத்திருக்கும், உதாரணமாக தூங்கு வாகையை சொல்லலாம்.

ட்யூலிப் குங்குமப்பூ போன்ற சில சில தாவரங்கள் மலர்களை இரவில் மூடி வைத்து காலையில் மீண்டும் திறக்கும் 

வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் மலர்களின் உறங்கும் நிலைகளை அடிப்படையாக கொண்டு மலர்க் கடிகாரம் ஒன்றை 1751ல் வடிவமைத்திருந்தார். (Horologium Florae -flower clock)

1880ல் சார்லஸ் டார்வின் தனது The Power of Movement in Plants,  என்னும் நூலில் இலைகளின் உறக்கம் குறித்தும் உறங்கும் இலைகளைக் கொண்டிருக்கும் தாவரங்களையும் விளக்கமாக பல பொருத்தமான உதாரணங்களுடன் குறிப்பிட்டிருந்தார். தாவர உறக்கத்துக்கு உதவும் இலைக்காம்பின் வீங்கிய அடிபகுதி, கணுக்கள் உள்ளிட்ட பல தாவர பாகங்களையும் விளக்கி இருந்தார். அந்நூலில் பட்டணிக்குடும்பமான ஃபேபேசி குடும்பத்தை சேர்ந்த பல தாவரங்களின்  உறக்கத்தையும் டார்வின் விவரித்திருந்தார்

தொட்டாசிணுங்கி செடியின் இலைகள் புறத்தூண்டலுக்கு எதிர்வினையாற்றுவது, thigmonasty / seismonasty எனப்படும். ஒளியை நோக்கி தாவரபாகங்கள் வளர்வது photonasty, இதைப்போலவே இரவில் தாவரங்களின் உறக்கம் போன்ற செயல்பாடுகளை தாவரவியல் Nyctinasty என்கிறது. நைக்டினாஸ்டி என்னும் இச்சொல்லுக்கு இரவு -அசைதல் என்று பொருள். ஒளி மறைந்து இரவு எழுகையில் சில தாவரங்களில் உண்டாகும் அனைத்து செயல்பாடுகளுமே நைக்டினாஸ்டி எனப்படுகின்றன.(nyctinasty)

மால்வேசி,  பேபேசி, ஆக்ஸாலிடேசி, வைட்டேசி குடும்பங்களின் தாவரங்கள் இப்படியான உறங்குதலை போன்ற செயல்பாடுகளை இரவுகளில்  கொண்டிருக்கின்றன.

கிமு 324 லேயே மாவீரர் அலெக்ஸாண்டரின் தளபதிகளில்,ஒருவரான ஆண்ட்ரோஸ்தெனிஸ்( Androsthenes) புளிய மரங்களின் இலைகள் இரவுகளில் உறங்குவதைப்போல கவிழ்ந்துவிடுவதை குறிப்பிட்டு அவை உறங்குகின்றனவா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அக்காலத்திலிருந்தே இதை குறித்த ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.  

இதுபோன்ற உறங்குதல்  நிலத்தாவரங்கள்,பாலைத்தாவரங்கள் மற்றும் நீர் தாவரங்களிலும் காணப்படுகிறது. 

மகரந்தங்களை பாதுகாக்கவும் வெப்பநிலையை சீராக தக்கவைத்துக்கொள்ளவும் தாவரங்கள் உறங்குதலைபோல இலைகளை, மலரிதழ்களை மூடிக்கொள்கின்றன போன்ற கருத்துக்கள் மட்டுமே இப்போது முன் வைக்கப்பட்டிருக்கின்றன எனினும்  இது குறித்து தெளிவான விளக்கமேதும் தாவர அறிவியலில் இன்று வரை இல்லை.

உயிர்க்கடிகரத்தின் அடிப்படையில்தான் தாவரங்கள் வளர்ந்து இலைகளையும் கிளைகளையும் உருவாக்கி  ஒவ்வொரு பருவத்திலும் மிகசரியாக மலர்ந்து கனியளித்து நமக்கு பயனளித்து கொண்டிருக்கின்றன.  இந்த இரவுறங்குதல் என்பது தாவரங்களில் நாமறியாத பலபுதிர்களில் ஒன்று.