திம்மம்மா ஆலமரம் / திம்மம்மா மரிமானு

வெகு உயரத்தில் இருந்து   பார்க்கையில் ஆந்திராவின் அனந்தபூர்  மாவட்டத்தின் ஒரு பகுதி  அடர்ந்த காடு போல தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில்  திம்மம்மா ஆலமரம் என்று உள்ளூர் வாசிகளால் அழைக்கப்படும்  படர்ந்து வளர்ந்திருக்கும் மிகப்பெரிய  ஒற்றை ஆலமரம்தான் அப்படி காடு போல் தோற்றமளிக்கிறது. இந்த மரத்தின் மேல் பரப்பு 19,107 m2 (4.721 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய  ஒற்றை மர இலைப்பரப்பு .

“மரி என்பது ஆல் என்றும் மானு என்பது மரத்தையும் குறிப்பதால் ஆந்திர மக்களால் திம்மம்மா மாரிமானு என்றழைக்கப்படும் இப்பெருமரம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இம்மாபெரும் இலைப்பரப்பின்பொருட்டு 1989ல் இடம் பெற்றிருக்கிறது

இம்மரத்திற்கு சுமார் 550 வருடங்கள் வயதிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. 

இம்மரம் காண்பதற்கு அளிக்கும் வியப்பைப்போலவே மரத்தின் பின்னிருக்கும் தொன்மமும் மிக ஆச்சர்ய மளிக்குமொன்றுதான். 

ஆந்திரமக்களின் வாய்வழிச் செய்திகளின்படி அந்த ஊரில் கி.பி. 1394 ல் வாழ்ந்து வந்த  சென்னக்க வெங்கடப்பா, மங்கம்மா ஆகியோரின் மகள்  திம்மம்மாவை பால வீரைய்யா என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். பாலவீரைய்யா 1434 ல் தொழுநோயால் இறந்தபோது அக்கால வழக்கப்படி  கணவருடன் திம்மம்மாவும் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கணவனும் மனைவியும் இறந்த சிலநாட்களில்  அந்த சிதைச் சாம்பலின் வடகிழக்கு பகுதியிலிருந்து ஒரு ஆலமரம் முளைத்ததாகவும் அதற்கு தெய்வீக சக்திகள் இருப்பதாகவும் அம்மக்களால் நம்பப்பட்டு அதுவே திம்மம்மா மரம் எனப்படுகின்றது 

அங்கு திம்மம்மா தம்பதியினருக்கு  ஒரு சிறு கோவிலும் மரத்தடியில் இருக்கிறது. மத வேறுபாடின்றி இங்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகிறார்கள்.

திம்மம்மாவை வேண்டிக்கொண்டால் நல்ல குடும்ப வாழ்வும் குழந்தைபேறும் கிடைக்குமென்னும் நம்பிக்கை இருப்பதால் புதுமணத் தம்பதியினரின்  கூட்டம் இங்கு அலைமோதுகிறது. தாவரவியல் ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் இம் மரத்தை கண்டு மகிழ்கிறார்கள்

இந்த ஆலமரத்தின் அடியில்   சிவராத்திரி நாளில்  ஜத்ரா என்னும் விழா நடத்தப்படுகிறது. இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

இம்மரத்தில் இரவில் பறவைகள் தங்குவதில்லை என்றும் இம்மரத்திற்கருகில் இருக்கும் எந்த உயிரையும் தாங்கள் தீண்டுவதில்லை என்று நாகங்கள் சத்தியம் செய்திருப்பதாகவும் இம்மரம் குறித்த சில கதைகளும் அங்கு காலம்காலமாக உலவுகின்றன.

இந்த மரத்தை முதன் முதலில் கவனித்து, உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர்மற்றும் ஒளிப்படக் கலைஞரான சத்யநாராயண ஐயர் என்பவர். இவரே பின்னர் கின்னஸ் உலக சாதனை பதிவில் இந்த மரத்தை பதிவு செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டார்.  2017ல் கின்னஸ் புத்தகத்தின் இப்பதிவு திருத்தப்பட்ட மரத்தின் அளவுகளுடன்  மேம்படுத்தப் பட்டிருக்கிறது.

Thimmamma Marrimanu is so large that it holds an entire temple at its centre (Credit: Chris Griffiths)

உலகின் மாபெரும் மரங்களில் இந்தியாவில்  இருக்கும் 7 மரங்களில் திம்மம்மா ஆலும் ஒன்று . 4000த்திற்கும் அதிகமான விழுதுகள் மண்ணில் இறங்கி இம்மரத்தை  மாபெரும் பசும்குவையாக்கி விட்டிருக்கின்றன. சுமார் 20 ஆயிரம் மக்கள் இதன் நிழலில் ஒரே சமயத்தில் இளைப்பாற முடியும் என்னும் அளவிற்கு இம்மரம் பரந்துவளர்ந்திருக்கிறது. இந்தனை நூற்றண்டுகளில் பல இயற்கைசீரழிவுகளை சந்தித்திருந்தும் இம்மரம் சேதமின்றி கம்பீரமாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. 

பொதுவில் ஆலமரம் நீளாயுள் மற்றும் வளர்ச்சியின் குறியீடாக இந்தியாவில் கருதப்படுகின்றது. இந்துமதத்தின் பல புண்ணிய மரங்களைப்போலவே மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மரமும் வழிபடப்படுகிறது எனினும் இப்போது  இந்த மரம் மிகப்பிரபலம் ஆகிவிட்டிருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும்  அங்கு வருவதால் இம்மரத்தின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிட்டிருக்கிறது. பக்தியின் பேரில் இம்மரத்தில் ஆணி அடித்து தொட்டில்கட்டுவதும் பலவண்ண துணிகளை கட்டி விடுவதுமாக அன்றாடம் நூற்றுக்கணக்கில் வழிபாடுகள் நடக்கின்றன. காலப்போக்கில் இவ்வழக்கங்கள் மரத்திற்கு பாதிப்பை உண்டு பண்ணக்கூடும்.

  

 கிராம வன அலுவலர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு இம்மரத்தின் வேர்களை பாதுகாக்க மூங்கில் கழிகளை  நட்டுவைத்தும், மக்கள் கூட்டத்தை ஒழுங்கு செய்து வழிபடும் பாதை அமைத்தும் இம்மரத்தை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கிறார்கள். சமீபத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து இம்மரத்துக்கு கிடைக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன அவ்வாறு அளிக்கப்பட்டால் இம்மரத்தை அழிவிலிருந்தும் இதுபோன்ற பாதுகாப்பின்மைகளிலிருந்தும் நிச்சயம் காப்பாற்ற முடியும்.

Thimmamma Marrimanu has more than 4,000 roots making up its canopy (Credit: Chris Griffiths)

திம்மம்மா  மரம்  பிபிசியின் ‘தி ட்ரீ ஸ்பிரிட்ஸ்’ (29 ஆகஸ்ட் 2017) தொடரின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருக்கிறது.