லோகமாதேவியின் பதிவுகள்

Month: December 2020 (Page 2 of 2)

கொடிமரம்- (த்வஜஸ்தம்பம்)

ஆலயங்களின் வடிவமைப்பு, அவை அமையவிருக்கும் நிலத்தை தேர்ந்தெடுக்கும் நியதிகள், விக்ரகங்களின் வடிவம், கட்டிட அமைப்பில் இருக்க வேண்டிய சமன்பாடுகள், மண்டபம், பிராகாரம், ஆகியவற்றிற்கான நீள, அகல, உயர விகிதங்கள், விமானங்களின் வகைகள், ஸ்தலவிருக்‌ஷங்கள், தீர்த்தங்களை உருவாக்குதல், உற்சவ விக்ரகங்களின் அளவுகள், அம்சங்கள், நித்யபூஜை விதிகள், உற்சவ முறைகள், அர்ச்சகர்கள், ஸ்தபதிகள் ஆகியோரின் தகுதிகள் போன்றவற்றையெல்லாம் நிர்ணயித்து நமக்கு வழிகாட்டுபவையே ஆகமங்கள் எனப்படும்.

 தெய்வ வடிவங்களை அமைப்பதற்கும், தெய்வத்தின் இருப்பிடமான ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் நித்ய பூஜைகளுக்கும், மரபுகளுக்குமான  முறையான விதிகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளையும் சொல்லும்  இந்த ஆகமங்கள் சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள் (வைகானசம், பாஞ்சராத்ரம்) என இருவகைப்படும். கிராமதேவதைகளுக்கான ஆலயங்களை அமைப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் குடும்ப நலனிற்காகவும், வேறு பலன்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய ஜபம், பூஜை, ஹோமம் ஆகியவற்றிற்கும் இந்த ஆகமங்களே வழிகாட்டுகின்றன.  

சில்பசாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், கட்டிடக்கலை ஆகியவையும் ஆகமங்களுக்குள்ளே அடக்கம். அவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் பெரும்பாலான ஆலயங்கள் பாரத நாட்டில் நிர்மாணிக்கப்பட்டன. 

ஆலயம் புருஷாகாரம் என்கிறது இந்த ஆகமங்கள், அதாவது மனித உடலின் அமைப்பை போன்றதே ஆலயங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பும்.  ஒரு ஆலயமென்பது  மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பதுபோல் கட்டப்படுகிறது.

 உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு ஜீவாத்மா உறைவது போல, ஆலயத்தை இருப்பிடமாகக் கொண்டு பரமாத்மா விளங்குகிறார். தோல், குருதி, ஊன், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்கிலம் ஆகிய ஏழுவகைத் தாதுக்களால் மனித உடல் அமைந்திருப்பது போல, கருங்கல், வெண்கல், செங்கல், மணல், சாம்பல், நீர், சுண்ணாம்பு எனப்படும் ஏழு வகைப் பொருள்களால் ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  

ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்குமிடமாகவும், கொடி மரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடிமரம் முதுகுத்தண்டாகவும், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கின்றன. உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று ஆகமங்கள்  சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம்  அமைக்கப்படுகிறது. 

மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. முதுகெலும்பின் நடுத்தண்டு மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை இருப்பதுபோல கொடிமரமும் மூலலிங்கத்தின் மட்டத்திலிருந்து ஸ்தூபியின் அளவு வரை இருக்கும். கொடிமரத்துக்கு வீணா தண்டம், மேரு தண்டம் என்னும் பெயர்களும் உண்டு. குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக எழுவது போல் கொடி மரத்தில் இடபக் கொடி ஏற்றப்படுகையில்தான் கோவில்  விழாக்கள் துவங்குகின்றன.

கொடிமரம்  இந்துக்கோவில்களில் பலிபிீடத்திற்கு  அருகே,  கருவறைக்கு முன் நிறுவப்பட்டிருக்கும். இதற்கு சமஸ்கிருதத்தில் துவஜஸ்தம்பம் என்று பெயர். த்வஜ- என்றால் கொடி, ஸ்த- ம்ப-  என்றால் தூண். இதை நிறுவுவதற்கும், வணங்குவதற்கும், சமயச் சடங்குகளும், நியம நியதிகளுமுள்ளன.

மரத்தினால் செய்யப்பட்டு  பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகத்தகடுகள் வேயப்பட்டிருக்கும் கொடிமரங்கள் விருக்ஷ சாஸ்திரத்தின் அடிப்படையில்  முதிர்ந்த உயரமான ஒற்றை மரத்தில் செய்யப்படுகின்றன. சந்தனம், தேவதாரு, செண்பகம், தேக்கு வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்துதான் கொடி மரங்கள் தயாரிக்கப்படுகின்றன. வைரம் பாய்ந்த செண்பகம், வில்வம், மகிழம்  போன்றவற்றிலிருந்து கொடிமரங்களை உண்டாக்குவது உத்தமம் , அதாவது அதிக பலன்களை இம்மரம் பக்தர்களுக்கு அளிக்கும், நன்கு விளைந்த  பலா, மா ஆகியவற்றிலிருந்து கொடிமரங்கள் செய்வது மத்திமம், அதாவது குறைவான பலன்களை அளிக்கும், உறுதியான கமுகு பனை ஆகிய மரங்களிலிருந்து கொடிமரங்களை உருவாக்குவது அதமம், அதாவது மிக சொற்ப பலனையே தரும் என்கின்றது ஆகமங்கள். மரத்தின் மேலே வேயப்பட்டிருக்கும் உலோகப்பட்டைகள் கொடிமரத்தை இடி, மின்னல் மழை, வெயிலிலிருந்து காக்கும்,

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காதபடியும்,கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்படியுமே அமைக்க்கப்படும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைந்திருக்க வேண்டும்  என்பதற்கும் விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும்,  கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படிதான் எங்குமே நிறுவப்படும். பெரும்பாலான சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகிய மூன்றும் மூலவரை  நோக்கியே அமைக்கப்படுகின்றன.

கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்களின் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற குறியீடாக திகழ்கிறது.  அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் பத்ரபீடம் எனப்படும் அடிப்பகுதி, படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும். 

கொடிமரத்தின் தண்டு எனப்படும் நீண்ட உருளை வடிவ உயர்ந்த தூணின் உச்சியில்  மேகலை எனப்படும் மூன்று குறுக்குச் சட்டங்கள் கருவறை தெய்வத்தை நோக்கி இருக்கும்படி அமைந்திருக்கும். இதை ஏர் பலகை, திருஷ்டிப் பலகை என்றும் அழைப்பார்கள்  இதில் சிறு சிறு மணிகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு வேறுபட்டு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள்.  

எல்லா கொடிமரங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை சிலவற்றில் தீபமேற்றும் பிறைகள்  அமைந்திருக்கும். சில பீடங்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்திருக்கும் சிலவற்றில் சதுரபீடத்தின் நான்கு பக்கங்களிலும் புடைப்புச்சிறபங்களாக தெய்வங்கள் வீற்றிருப்பதும் உண்டு.

 சில கொடிமரங்கள் கருங்கல்லிலும் கூட உருவாக்கப்படுகின்றன.ஆனால்  நரம்போட்டமில்லாத விரிசலில்லாத உறுதியான  ஒற்றைக்கல்லால் மட்டுமே உருவாகியிருக்கும். இப்படியான கல்கொடிமரங்களை அதிகம் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் காணலாம். நார்கோண, அறுகோண, எண்கோண உருளைப்பகுதிகளும் உண்டு.

 பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானக் கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவ‌ர்மீது பாய்ச்சும். இந்த பிரபஞ்ச சக்தியை அப்படியே நேரடியாக  ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியைமாற்றி கருவறைக்கு முன்னின்று கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாய்ச்சும் எனப்படுகின்றது.

சைவ வைணவ கோவில்களின் கொடிமரங்களுக்குள் வேறுபாடுகளும் இருக்கும். சிவாலயங்களில் கொடிமரத்தின் உச்சியில் நந்தியும் வைணவாலயங்களில் சுதர்சன சக்கரமோ அல்லது ஹனுமான் உருவமோ பொறிக்கப்பட்டிருக்கும்.

கம்போடியகோயில் கொடிமரம்

இவை மாறாத விதிகளல்ல, பல கோவில்களில் கருவறை தெய்வத்திற்கு உகந்த பல உருவங்களும், துணைதெய்வங்களும், வாகனங்களும் கொடியிலும், கொடிமரத்திலும், பீடத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். உச்சியில் கலசங்கலும் வேலும் அமைந்திருக்கும் கொடிமரங்களும் உண்டு. கேரளகோவில்களில் கம்போடியக்கோயில்களில்  தமிழகக்கோயில் கொடிமரங்களினின்றும் வேறுபட்ட உச்சிப்பகுதிகளைக்கொண்ட கொடி மரங்களை காணலாம்.

குருவாயூர் கோயில் கொடி மரம்

சிலபெருமாள்கோயில்களில் கருடனும், அம்பாள்  ஆலயங்களில் சிம்மமும், முருகர் ஆலயத்தில் மயிலும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகமும், துர்கை ஆலயத்தில் சிம்மமும், சாஸ்தாவிற்கு குதிரையுமாக, கொடிமரத்தின் மேற்புறத்தில் கொடிச் சின்னங்கள்  பொறிக்கப்பட்டிருக்கும்.

மூல விக்ரகம், உற்சவ விக்ரகங்களைப்போலவே ஒர் கோவிலின் சக்தி மையமாக கொடிமரமும் விளங்குகின்றது, அதனாலேயே கோவிலில் நுழையுமுன்னர் கொடிமரத்தை வணக்கிவிட்டு உள்ளே நுழைகிறோம்.

 கொடிமரத்தை வணக்குவது, வலம் வருவதுமட்டுமல்ல, பார்ப்பதே புண்ணியமென்கின்றது சாஸ்திரங்கள். கருவறை குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கான சேவைகளில்  பெரும்பாலானவை கொடிமரத்திற்கும் செய்யப்படுகின்றன. சில கோவில்களில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஆகாசதீபத்தை கொடிமரத்தில் ஏற்றும் வழக்கமும் உண்டு.  கொடிமரமில்லா கோவில்களில் உற்சவங்களும் நடைபெறாது

 ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து வகையான லிங்கங்கள் இருப்பதாக ஐதீகம் 1. விமானம்- ஸ்தூல லிங்கம்; 2. கர்ப்பக்கிரகம்-சூக்ஷ்மலிங்கம்; 3. பலிபீடம்-அதிசூக்ஷ்மலிங்கம்; 4. கொடிமரம்-காரணலிங்கம்; 5. மூலலிங்கம்-மஹாகாரணலிங்கம்.

 துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரம்,நந்தி,பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது என்றும் சொல்லபடுகின்றது.

சோற்றுக்கற்றாழை-Aloe vera

ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera)  உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.

 இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.

உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில்  பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.

நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும்

எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில்  கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே  சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும்  களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன்  பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை  ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.

புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது.  சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான  “papyrus of Eber”  ல்  சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig)  பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.

ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.

இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில்  2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட  50  மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.

1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள்.  இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe  என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’  என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.

பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு  பயன்களை  இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது

பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும்  நிறைந்துள்ளது

 உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது.  3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள்  செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

 இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

சருமப்பாதுகாப்பு

புற்றுநோயை தடுக்கும்

மலமிளக்கி

கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்

உடலை குளிர்விக்கும்

வயிற்று உபாதைகளை குணமாக்கும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

புண்களை ஆற்றும்

நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்

 நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்

இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.

நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்

  மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார்  100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.

மனதின் விழைவு

அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் செப்டம்பர் 14, 2018ல் வெளியான மனதின் விழைவென்னும் பொருள் கொண்ட இந்தித்திரைப்படம் மன்மர்ஜியான்.  தயாரிப்பு Eros International, Phantom Films மற்றும் Colour Yellow. அபிஷேக் பச்சன், விக்கி கெளஷல் மற்றும் தாப்ஸி பன்னு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில். திரைக்கதை கனிகா, இசை அம்ரித் திரிவேதி, படத்தொகுப்பு ஆர்த்தி பஜாஜ், ஒளி இயக்கம் சில்வெஸ்டர் பொன்சேகா; இந்தியாவில் மட்டும் 1500 அரங்குகளிலும், வெளிநாடுகளிலும் ஒரே சமயத்தில் வெளியிடப்paட்ட இப்படம் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது.

முதன் முதலாக விக்கி கெளஷல், விக்கி என்னும் பெயரிலேயே வருகிறார், முதன்முறையாக படு கிளாமராக தாப்ஸி , முதன் முறையாக அபிஷேக் சர்தார் பாத்திரத்தில், முதன் முதலாக அனுராக் தானெழுதாத  திரைக்கதையை இயக்கியிருக்கிறார்.

மூன்று நபர்களுக்கிடையேயான முக்கோணக்காதல் கதையை பார்த்திருக்கிறோம், இதுவும் அப்படித்தான் ஆனால்  காதல் காமம் கல்யாணமென்னும் புதிய முக்கோணத்தை சொல்லும் படமிது. காதலின் நிறங்களை சொல்லும் “Grey Waala Shade”, பாடலிலேயே இயக்குநர் கதையை கோடிட்டு காட்டிவிடுகிறார். இந்தப்பாடலே, படம் கொடுக்கவிருக்கும் கலாச்சார அதிர்ச்சிகளுக்கும்,  மரபு மீறல்களுக்கும் நம்மை தயார் செய்துவிடுகிறது. படமும் அப்படியேதான். காதலைக்குறித்தும், காதலைச்சொல்லும் சினிமாவை குறித்தும் இதுநாள் வரை நமக்கிருந்த பார்வையையும்  எண்ணங்களையுமே மொத்தமாக கலைத்துவிடுகிறது. புறாக்கள், கடிதங்கள், நண்பர்கள் வழியே வளர்ந்து, பின்னர் மின்னஞ்சல் முகநூல் என்று பரிணாம் வளர்ச்சி அடைந்துகொண்டே வந்த காதல் இதில் டிண்டரின் தாக்கத்தை சொல்லுகின்றது.

கதவுக்குப்பின்னே மறைந்து கொள்ளுவது, கால்விரல்களால் தரையில் கோலம்போடுவது, காதலனின் பேரைக்கூட சொல்லாமலிருப்பது, முகத்தைப்பார்க்கமலேயே காதலிப்பது, காதலுக்காக உயிரைவிடுவது என்றெல்லாம் பார்த்த பல நூறு படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் காதலென்பதைக் குறித்த மனச்சித்திரத்தின் மீது பெரிய சுத்தியலால் ஒரேயடியாக அடித்து நொறுக்குகிறது இந்தப்படம்.

கட்டிபிடித்தலும் ஆழ்ந்தமுத்தங்களுமாக மொட்டைமாடிக்கு ரகசியமாக வரும்  காதலன் விக்கியும் , வீட்டுப்பெரியவர்கள் கதவை உடையும்படி தட்டினாலும்  திறக்காமல் துணிந்து காதலனுடன் நெருக்கமாக இருக்கும் தாப்ஸியுமாக படம் அதிரடியாக துவங்குகிறது

ரூமியாக தாப்ஸி, விக்கியாகவே விக்கி,ராபியாக அபிஷேக்.  தாப்ஸியின் பாத்திரம் மிகச்சிக்கலானது. தீவிர காதலில் விக்கியுடன் இருக்கிறார். உண்மையில் அவர்களுக்கிடையே இருப்பது காட்டாறைப்போல அவர்களை இழுத்துச்செல்லும் கட்டற்ற, இளமையின் வேகத்தில்  காதலென்னும் போர்வையில் இருக்கும்  காமம்தான்

.பெற்றாரை இழந்த, உறவினர்களின் ஆதரவில் இருக்கும்,  ஹாக்கி விளயாடும், எல்லைகளை மிகசுலபமாக தாண்டும், வேலிகளை உடைக்கும், கருக்கலைப்பு செய்துகொள்ளும், கணத்துக்குகணம் முடிவுகளை மாற்றிக்கொள்ளும், ஆவேசமான காதலில் இருப்பது, காதல் கைகூடவில்லையெனில்  உடன் இன்னொரு அப்பாவியை  கல்யாணம் செய்துகொள்ளுவதென்று இந்த யுகத்தின் இளைஞியாக கலவர கேரக்டர் ரூமியுடையது.

காதலுக்கும் காமத்திற்கும் இடையிலிருக்கும் கோட்டை முற்றிலுமாக அழித்துவிட்டு எல்லா விதிகளையும், நெறிகளையும், கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் மீறும், இதயமும், ஹார்மோன்களும் சொல்லுவதை மட்டுமே பின்பற்றும் பஞ்சாபி பெண்ணாக  ரூமி. அவளுக்கு காதலனும் வேண்டும் கணவனும் வேண்டும். காதலனுடனும்  கோபம், கணவனுடனும் கோபம், ஆனால் இருவருடனும் காமம் கொள்கிறாள்

 அவளின் துடிப்பும் உற்சாகமும், துள்ளலும், வேகமும், கோபமும் நம்மையும் தொற்றிக்கொள்ளும். ரூமிதான்  முழுப்படத்தையும் ஆள்கிறார். நிச்சயமாக தாப்ஸியின் மிகச்சிறந்த படங்களில் இதை முதலாவதாக சொல்லிவிடலாம்.

அபிஷேக்கின் ராபி பாத்திரமும் புதிர்தான். திருமணத்துக்கு பிறகும் முன்காதலை நினைத்துக்கொண்டே இருக்கும், முன்காதலனுடன் தொடர்பிலும் , உடலுறவிலும் இருக்கும் மனைவியையும் மனதார நேசிக்கிறார் அவளை எந்த கேள்வியும் கேட்பதில்லை மெளனமாகவே இருக்கும் ’’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’’ என்னும் மனநிலை கொண்ட, எப்போதும் புன்சிரிப்புடனிருக்கும் ஏறக்குறைய துறவி கேரக்டர்.   விமான நிலையத்தில் வந்து தலைப்பாகை அணிந்து கொள்ளும் சமத்து சர்தார்.  பதிவிரதைபோல இவர் பத்தினி விரதர்.

எந்த கட்டுப்பாடுகளும், ஒழுங்கும், குறிக்கோளும், திடசித்தமும் இல்லாத காதலனாக விக்கி. அவரது சிகை அலங்காரமே சொல்லிவிடும் அவரது பாத்திரத்தின் இயல்புகளை.

இருவருக்குமே ரூமியின் மீது கண்மூடித்தனமான காதல். காதலனும் சரி கணவனும் சரி ரூமியின் கட்டற்ற வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். ராபி, விக்கி இருவருக்குமான பாத்திரப்படைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

நிலையிலா மனம் கொண்டிருப்பதில் மட்டும் ரூமியுடன் ஒத்துபோகிறான் விக்கி. இருவரும் பெண்டுலம் போல முன்னும் பின்னுமாக உசலாடிச்கொண்டெ இருக்கிறார்கள் படம் நெடுகவே!

 ஒரு நல்ல அக்மார்க் கணவனாக ராபியின் பாத்திரத்தை காட்டியிருப்பதாக திரைக்கதை சொன்னாலும் பார்வையாளர்களுக்கு ’’அடப்பாவி இப்படியும் ஒரு ஏமாந்தவன் இருப்பானா’’ என்றே அங்கலாய்க்க தோன்றுகிறது. அன்புக்கும் எல்லைகள் உண்டே!. மனைவிக்கு சுதந்திரம் கொடுப்பது வேறு, அவள் மனைவியாகவே இல்லாமலிருக்கையிலும் சுதந்திரம் கொடுப்பதென்பது முற்றிலும் வேறு. ’’மெளன ராக’த்தை மாய்ந்து மாய்ந்து  இன்னும் பேசும் நமக்கெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுக்கின்றது இத்திரைப்படம்.. விட்டுப்பிடிப்பதற்கும், ஒரேயடியாக விட்டுவிடுவதற்குமான  வேறுபாடு மிக முக்கியமல்லவா?

ரூமியின் இரட்டை  மனதின் குழப்பங்களையும், கணவன் காதலன் என  இருதிசைகளிலும் இருக்கும் ரூமியின் விழைவுகளுக்கும் குறியீடாக பாடல்களிலும் காட்சிகளிலும் இரட்டைச்சகோதரிகள் இடையிடையே வருவது நல்ல உத்தி. இரட்டை சகோதரிகள் ப்ரியங்கா ஷா, பூனம் ஷா இருவரும்  B fusion எனப்படும் பரதநாட்டியம், பாங்ரா, பாலிவுட் நடனம் இவற்றின் கலவையை  ஹிப்ஹாப்’புடன் கலந்து ஆடுகிறார்கள்.

பத்துப்பாடல்கள். எல்லாமே அருமை குறிப்பாக, காதலனுடன் மனைவி நெருக்கமாக இருப்பதை ராபி, நேரில் பார்த்தபின்பு வரும்  ’’ஹல்லா’’ மனதை உருக்குகின்றது.

  இதில்  வரும் மூன்று பாத்திரங்களுமே மரபை, சம்பிரதாயங்களை, இல்லறமென்னும் அமைப்பின் அடிப்படைகளை அல்லது கற்பிதங்களை கேள்வி கேட்கின்றன, கேலி செய்கின்றன.

திரைப்படம் பார்த்தபின்பு  இப்படியான விஷயங்கள் சாதாரணமாக நடைபெறும் காலம் வெகுதூரத்தில் இல்லையென்பதையும் நாம் உணரமுடியும். நிச்சயம் இது பெரியவர்களுக்கு மட்டுமேயான திரைப்படம்.

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑