லோகமாதேவியின் பதிவுகள்

Category: நூலறிமுகம்

கடவுள் பிசாசு நிலம்

2022 விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் ஒன்றில்தான்  முதன்முதலில் அகர முதல்வனை கண்டேன். அதற்கு  முன்பு அவரைச் சந்தித்ததில்லை.  ஈர நெற்றியில் திருநீற்றுப் பட்டை துலங்க, நெஞ்சு நிமிர்த்தி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். தொடர் கேள்விகளுக்கு அசராத தெளிவான எதிர்வினைகள், இலங்கை என்று சொல்லப்பட்ட போதெல்லாம், ஈழம்  என்ற கறாரான திருத்தல்கள்,   பொருத்தமான இடங்களில்  சைவத்திருமுறைகளின் கம்பீர முழக்கங்கள், போருக்கு எதிரானவன் என்பதை சொல்லுகையில்  குரலில் இருந்த அழுத்தம் என அந்த அமர்வு முடிகையில் அகரமுதல்வனின் மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது.  அதன்பிறகு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன்.

அவருக்கு என்னை கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற தூரன் விருது விழாவிலேயே தெரிந்திருக்கிறது

முன்பு எப்போதோ ஒரு புலம்பெயர் இலக்கியமொன்றிலிருந்த  பல கவிதைகளில் ’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ எனும் ஒரு வரி என்னை பல காலம் இம்சித்தது. அந்த உணர்வை, அந்த பிரிவின் வலியை, தாய் மண்ணை, அதிலிருக்கும் தாவரங்களை சொந்த பந்தங்களை,  பிரிவதென்பதின் பெருவலியை அந்த வரி எனக்கு சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தது.

திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து 6 வருடங்கள் கொழும்புவில் வசிக்க நேர்ந்த போது நான் கண்ட இலங்கையில் போர்ச்சூழல் தீவிரமாக இருந்தது எனினும் பாதுகாப்பான பகுதியில் இருந்ததால் அதன் குரூரங்கள் எனக்கு முழுக்க தெரிந்திருக்கவில்லை. செய்தித்தாள்கள், பிற ஊடகங்கள் செவிவழிச் செய்திகள் அளித்தவற்றையே உண்மை என கருதினேன்.அவ்வப்போது வேவு விமானங்கள் பருந்தைப்போல வட்டமிடுவதை பார்க்க முடிந்தது.

பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்திருந்தது. ஒரு சுருள் கருவாப்பட்டை வாங்கியபோது அதன் விலை எனக்கு அதிர்ச்சி அளித்தது, ஏன் அத்தனை அதிக விலை? என்று அந்த சிறு கடைக்கரரிடம் கேட்டபோது ’’எல்லாம் போரால்’’ என்றார்.

கொழும்பு வீட்டிற்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து செல்லும் வழியெங்கும் ராணுவ வீரர்கள் மணல்மூட்டை தடுப்புக்கு பின்னால் துப்பாக்கி ஏந்தியபடி நின்றிருப்பார்கள். விசேஷ நாட்களில் வெண் தாமரைகளுடன் புத்தர் ஆலயங்களுக்கு செல்லும் வழியிலும், வீட்டருகிலும் கடைவீதியிலும் எங்கும் ராணுவம் இருந்தது. ஒருமுறை கடைவீதியில் இருந்து வீடு செல்லும் வழியில்  அப்படி ஒரு மணல்மூட்டை தடுப்பின் பின்னர் இருந்த கம்பிவேலி ஒன்றில் செங்காந்தள் கொடி அடர்ந்து படர்ந்து ஏராளமாக மலர்ந்திருந்தது. வழக்கமாக தாவரங்களை கண்டால் உண்டாகும் குதூகலத்துடன் ’’காந்தள் மலர்’’ என்று உரக்க சொல்லி அதை பறிக்க சென்றபோது கடுமையாக குடும்பத்தாரால் கண்டிக்கப்பட்டு வீட்டுக்கு ஏறக்குறைய இழுத்து வரப்பட்டேன். ஒரு மலரின் பெயரை சொல்லியது குற்றமாவென அன்று அது ஒரு பெரும் மனக்குறையாக இருந்தது.

சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த சில முக்கிய புத்தகங்களில் அகரமுதல்வனின்  கடவுள் பிசாசு நிலமும் ஒன்று. அதை வாசிக்கையில்தான் அன்று அச்சூழலில் காந்தளின் பொருள் என்னவாயிருந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. கண்டியின் அழகும், பேராதனை பல்கலைக்கழக தாவரவியல் தோட்டத்தின்  விரிவும், ரம்புட்டான் மரங்கள் அடர்ந்திருந்த அசங்க ராஜபக்‌ஷேவின் அழகிய வீடும், உதய தென்னக்கோனின் நாலுகட்டு வீட்டின் விசாலமும், மஞ்சுள ரணதுங்கவின் வீட்டின் விதைகளில்லா எலுமிச்சைகளும் எனக்கு அளித்திருந்த நிறைவையும் மகிழ்வையும் கடவுள் பிசாசு நிலம் முற்றிலுமாக துடைத்து அழித்ததோடில்லாமல் அக்காலகட்டத்தில் எனக்கிருந்த மகிழ்வை காட்டிலும் பல மடங்கு அதிக குற்ற உணர்வையும் அளிக்கிறது

அப்போதிருந்த இலங்கையின், யுத்தத்தின் உண்மை நிலவரமென்ன என்பதை இத்தனை காலம் கழித்து அகரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன்

முதல் பக்கத்திலேயே //ஒரு பெருவேக அழிவுச் சூழலில் விழுந்து அதிலிருந்து பண்பு நலனால் அல்லாமல் நல்லூழ் காரணமாக மீண்டு வந்தவன்// என்னும் நாஜிகள் சித்திரவதைகளுக்கு உள்ளான இத்தலிய யூதரான  பிரைமோ லெவியின் வரிகள் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வரிகள் அகரனுகும் ஆதீரனுக்கும் முழுமையாக பொருந்துபவை.

போராளிகளுக்கு மரண வீட்டிலும் உணவளிக்கும்  அடைக்கல மாதாவான அன்னையர், வன்முறையை தவிர்க்க வேண்டும் என அன்றாடம் பிரார்த்தனையின் போது சொல்லும்  பள்ளி அதிபர், அம்புலி வளரும் இரவுகளில் சாமியாடி வாக்கு சொல்லும் பூட்டம்மா போன்ற பல வடிவங்களில் இருக்கும் கடவுளரையும்,  மது வெறியில் பைலா பாடல்களை கூச்சலிட்டு பாடிக்கொண்டு, கையறிகுண்டுகளை அப்பாவி சனங்களின் மண்டையோட்டுக்குள் எறியும், பல தந்திரங்கள் செய்து, அமைதி என்னும் போர்வைக்குள் பதுங்கி இருந்த, குருதி வெறி கொண்டிருக்கும் விலங்குகளா,ன அரசின் ஆர்மிக்கார பிசாசுகளையும், குருதியால் சிவந்து,ஓயாது அழுது துயர் புழுதி படிந்திருந்த நிலத்தையும் காணும், படிக்க போகாமல் ’’உந்த ஆர்மிக்காரங்களை கொழும்புக்கு அடிச்சு துரத்த போறேன்’’ என்று சொல்லும் பத்து வயது  ஆதிரனின்  கதையாக விரிகிறது கடவுள் பிசாசு நிலம்

ஒவ்வொரு வரியும் துயரிலும் குருதியிலும் தோய்ந்திருப்பினும் அவற்றையும் தாண்டி கொண்டு கவனிக்கச் செய்கிறது  நூலை உருவாக்கி இருக்கும் அழகு தமிழ் மொழி

போராளியான அண்ணன், வீட்டிற்கு வந்து போய் கொண்டிருக்கும் மற்றொரு போராளி மருதன், அவர் மீது நேசம் கொள்ளும் பின்னர் கால ஓட்டத்தில் போராளியாகும் அக்காள் என ஆதீரனுக்கு குடும்பமே இலங்கையின் போர்ச்சூழலை முழுக்க தெரிவித்துக் கொண்டிருக்கும் அமைப்பாக இருக்கிறது.

ஆர்மிக்காரங்களை எதிர்த்துப் பேசும், எப்போதும் வீடு தங்காமல் சுற்றித் திரிந்து கண்ணில் பட்டவை, காதில் கேட்டவைகளின் மூலம் நாட்டு நடப்பை மேலும் அறிந்து கொள்ளும் ஆதீரனுக்கு இயல்பாகவே போர்க்குணம் உருவாகிறது. போராளியாக வேண்டும் என்று துடிக்கும் ஆதீரனுக்கு அண்ணனின் கைத்துப்பாக்கியின் எதேச்சையான தீண்டல் வேட்கையின் குளிரை உண்டாக்குகின்றது.

பன்னிச்சையடி கிராமத்தின் அத்தனை பேருக்கும் ஆதரவாக, ஆறுதலாக, பற்றிக்கொள்ள பிடிப்பாக, தெய்வமாக இருக்கும் பன்னிச்சை மரமும் ஒருநாள் ஷெல்லடித்து சாம்பலாகிறது. அச்சாம்பலையும் நெற்றியிலிட்டு கொள்ளும் மக்களை, அவர்களின் மரபுகளை, வேர்களை,  வாழ்வின் இயங்கியலை, இடம் பெயருதலை, மரணங்களை, காதலை, நம்பிக்கைகளை, கனவுகளை காட்டுகிறது கடவுள் பிசாசு நிலம்

வாசகசாலைக்கு சென்று வாசிக்கும், போராளிகளோடு நட்பிலிருக்கும், மெல்ல வளர்ந்து வரும், போராளியாக வேண்டும் என ஒவ்வொரு கணமும் விரும்பும் ஆதீரன் பதின்மவயதில் காதல் கொள்கிறான்.

போரை, போராளிகளின் வாழ்வை, குருதியை, குப்பி கடித்தும், வெட்டியும் தூக்கிட்டும்,  கையறிகுண்டிலும் நிகழும் மரணங்களை போரின் துயர்களை, மேலும் பலகொடுமைகளை, இழப்பின் வலியை சொல்லும் அகரனும் அம்பிகையுடனான ஆதீரனின் காதலைச் சொல்லும் அகரனும் ஒரே ஆளுமை என்பதை சிரமப்பட்டுத்தான் நம்ப வேண்டியிருக்கிறது.

பிளவாளுமையாக இருந்தே அவற்றை அகரன்  எழுதியிருக்க முடியும். யுத்தத்தின்  தீவிரத்தை சொல்லும் வேகமும் உணர்வுபூர்வமும் காதலை சொல்லுகையில் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. அம்பிகாவிற்கும் ஆதீரனுக்குமான காதலை சொல்லுகையில் மற்றொரு அழகிய வடிவெடுத்து விடுகின்றது அகரனின் மொழி

தாகம் பெருகிய வழிப்போக்கனின் கையில் கிடைத்த செவ்விளநீர் போல காதல் ஆதீரனை கைகளில் ஏந்திக் கொள்கிறது பெண்ணின் கண் மொழியில் ஆயிரமிருக்கிறது ஆயுத எழுத்துக்கள் என்கிறான் ஆதீரன். கூழாங்கல் போல அடியாழத்தில் கிடந்து, பின்னர் மெல்ல மெல்ல ஒடும் நீரில் மேலேறி வரும் அம்பிகாவை காண்கையில் ஆதிரனுக்கு காதலைச்சொல்லவும் பொருத்தமாக சைவப்பாடல்களே தோன்றுகிறது. அப்பாடல்களை எல்லாம் அகரனின் கணீர் குரலிலேயே கேட்டேன்.

அம்பிகா எனும் கூழாங்கல்லை சுமந்து ஓடும் நதியாகிறான் ஆதீரன். அம்பிகா கூந்தலை சுழற்றுகையில் ஆதீரனின் ஞானத்தின் பசுந்தரையில் விதை வெடித்து செடி எழுகிறது.ஆதீரனால் முத்தமிடப்படும் அம்பிகா மேலும் வடிவு கொள்கிறாள்.

அம்பிகாவுடனான காதலை சொல்லும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு எழுத்தும் இனிப்பில் தோய்ந்திருக்கிறது. இந்த நூலில் அம்பிகா ஆதீரன் பகுதிகளை மட்டும் தனியே வாசிக்க வேண்டுமென்றிருக்கிறேன், நான் வாசித்த  ஆகச்சிறந்த காதல் கதைகளில் ஆதீரன் அம்பிகை கதையுமொன்று

உப்புக்காட்டில் நெடுவல் ராசனுடன் ஆதீரன் செல்லும் உடும்புவேட்டைகள் இதுவரை நான் வாசித்திராத தீவிரத்தன்மை கொண்டிருந்தன. அப்படியொரு வேட்டை குறித்து நான் முன்பெப்போதும் கேட்டிருந்ததுமில்லை

வெயிலில் காய்ந்து நாறும் உடும்பின் தோல்கள், அவற்றால் உருவாக்கப்படும் மேளம், காளி எழுந்து நின்றாடும் நெடுவல் ராசனின் தோள்கள், குப்பைத்தண்ணி வார்த்தல்,சமைந்த பெண்ணுக்கு அருந்த தரப்படும் கத்தரிக்காய் சாறு,  உடன் புக்கை,புட்டும் சொதியும் அப்பங்களும், முசுறு எறும்புகள், மரவள்ளிக்கிழங்கு, மரமடுவங்கள், இதரை வாழைகளும் இலுப்பையடி சுடலைலைக்காடும்,  சம்பா அரிசிச் சோறும் உடும்புகுழம்பும், பச்சை மிளகாய் சம்பலும், பூவரசங்குச்சிகளும்,  பருப்பும், பாகற்காய் குழம்பும், மோர்மிளகாய் பொரியலுமாக நானறிந்திருக்காத இலங்கை  ஆதீரனின் கண்கள் வழியே ஒவ்வொரு பக்கத்திலும் விரிந்து மலர்கிறது. பல் விழும் கனவு  கண்டால் துயர்மிகுந்த ஏதோ நிகழும் என்னும் நம்பிக்கையை போல நமக்கும் பொதுவான சிலவற்றையும் ஆதீரன் மூலமறிய முடிகின்றது.

கணபதிபிள்ளையும், தணிகை மாறனும்,தவா அண்ணனும், பழமும்,  அரிய ரத்தினம் கோபிதனும், பவி மாமனும், தாமோதரம்பிள்ளையும், காந்தியண்ணாவும், அல்லியக்காவும்,  ஓவியனும், கபிலனும்,  ’பட்டாம்பூச்சி’ வாசிக்கும் மருதனும், சலூன் இனியனும்  இலங்கைப்போரின் பல குருர பக்கங்களை காட்டுகிறார்கள். கபிர் அடிக்கும் இடங்களிலிருந்து மனிதர்கள் தொடர்ந்து இடம் பெயருகிறார்கள், எறும்புகள் கூட போரைப்பற்றியே யோசித்துக்கொண்டு மரங்களிலிருந்து கீழிறங்குகின்றன.

நிகழப்போவதை முன்பே யூகிக்கிறாள் பூட்டம்மா, குன்றிமணிகளையும் செங்கற்களையும் அரைத்து மண்ணுக்காய் நஞ்சுண்டு மடிந்த பொன்னாச்சியும் நஞ்சின் மீதியை நிலமுண்ண போகிறது என்கிறாள். வீரச்சாவும், வித்துடல்களும் விழுப்புண்களும் எரிதழல் வெளியில் ஒரு சொல்லைப்போல் அலர்கின்றன.

ஆதீரன் வீட்டிலும் அல்லியக்கா வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் மரணம் அழையா விருந்தாளியாக கதவை திறந்து வந்து கொண்டே இருக்கிறது

அமைதிப் பேச்சுவார்த்தை, சமாதான உடன்படிக்கை எனும் போர்வை களையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு யுத்தம் துவங்கி விடுகிறது.  யேசுதாஸ் குரலில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காதல் கருகிச்சாகிறது. யார் முதலில் வீரச்சாவடைவது என்று பேசிக்கொள்ளும்  இளவெயினியும் பூம்பாவையும் தூரிகையும் பெண்போராளிகளின் உலகை காட்டுகிறார்கள்.

கிபிர் தாக்குதலும்,  ஷெல்லடிப்பும், இயக்கத்தின் பின்னடைவும்,  விழுந்துகொண்டே இருக்கும் வித்துடல்களும்,அதிகரித்துக்கொண்டே இருக்கும் காயம்பட்டவர்களும், ஊரையே மூடும் கந்தகமணமுமாக ஆதீரன் காட்டும் போர்  உச்சம் மனதை கலங்கடிக்கிறது. அந்த மண்ணில் அப்போது வாழ்ந்த ஆதீரன் மீது கனிவும் தனித்த பிரியமும்  பொங்கிப்பெருகிறது.

யுத்தம் அமைதியை விட மேலானது என்று ஆதீரன் எழுதி வைக்கிறான். எளிய மனிதர்களின் பல வாழ்க்கை கணக்குகளை யுத்தம் தன் கோரக்கரங்களால் கிழித்தெறிகிறது.

அம்பிகையின் இறுதிச்சடங்கின் போது ஆதீரனின் தெளிவையும்,  பூட்டம்மா அடிவயிற்றில் மண் வைத்து நீரூற்ற சொல்வதையும், பன்னிச்சை மரத்துடனும் உப்புக்காட்டுடனும் நடுகற்களுடனும் ஆதீரனுக்கிருக்கும் உணர்வுபூர்வமான பந்தத்தையும் மனமும் கண்களும் கலங்க வாசித்தேன்.

அவ்வளவு நடந்தும் பெண்கள் கூந்தலில் காந்தளைச் சூடும் நாள் வரும், நிலம் விடியும் என்று  கதை முடிகின்றது. தூரிகையின் பதுங்கு குழிக்குள் அசைந்தாடுகிறது ஒரு தளிர்.

நேரடியாக யுத்தத்தை சொல்லாமல், யுத்தப் பின்னணியில் அந்நிலத்தை, அம்மனிதர்களின் வாழ்வை, புலம்பெயர்தலின் அவலத்தை சொல்லும் கதை இது. இதில் எத்தனை உண்மை, எத்தனை புனைவு எத்தனை சொல்லாமல் விடப்பட்டவை  என்பது ஆதிரனுக்கும் அகரனுக்கும்தான் தெரியும் எனினும் இந்நூல் ஒவ்வொரு பக்கம் வாசிக்கையிலும் அளித்த துயரம் நூறு சதவீதம் உண்மை.

இத்தனை உணர்வுபூர்வமாக  புலம்பெயர்ந்தவர்களின், யுத்தத்தின் போராளிகளின்,  இயக்கத்தின், காதலின் கதையை வாசித்ததில்லை.அகரனின் மொழி வன்மை திகைக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விழாவில் அகரனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் குடும்பத்துக்கு பரம்பரையாக சொந்தமாயிருந்த  வாள் ஒன்றை அவரது பூட்டம்மா போர்ச்சூழலில் எங்கோ மறைத்து வைத்தாரென்றும் அதை பின்னர் ஒருபோதும் கண்டுபிடிக்க  முடியவில்லை என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்.

அது வேறெங்குமில்லை, யுத்தகாலத்திலான தன் வாழ்வை   இத்தனை கனம் கொண்ட  மொழியில் சொல்லும்  அகரமுதல்வனாகத்தான்  அவ்வாள் கூர் கொண்டிருக்கிறது

அம்மாவின் கண்களை கொண்டிருக்கும் பொன்னாச்சி சொல்லியபடியே அகரனின் கால்கள் இனி சோர்வில்லாது நடக்கட்டும். அகரனுக்கு அன்பும் நன்றியும்.

கஞ்சிக்கிழங்கு

கி.ரா, கஞ்சிக்கிழங்கு- லோகமாதேவி

கி ராவின் மிச்சக்கதைகள் வெளியீட்டு விழாவில் (June 29, 2021) கலந்துகொண்டு ஜெ ,, நாஞ்சில் சா ர் உள்ளிட்ட பல எழுத்தாளர்களையும், விஷ்ணுபுரம் குழும நண்பர்களையும் சந்தித்ததும், நூலைக் குறித்தும் கி.ராவைக் குறித்தும் ஜெ வின் பிரமாதமான உரையைக் கேட்டதுமாக, சென்ற வருட விஷ்ணுபுர விழாவை கொரோனாவால் தவறவிட்டதின் வருத்தமே காணாமல் ஆகிவிட்டது. வீடு வந்த கையோடு புத்தகத்தை வாசித்து முடித்தேன்.

’’மிச்சக்கதைகள்’’ என்ற தலைப்பு கிராவின் வயதை நினைத்து வைக்கப்பட்டிருக்கலாம், இன்னுமவர் எழுதவேண்டுமே என்று நானும் நினைத்தேன். கதைகளை வாசிக்கையில்தான் கி.ராவின் பல கதைகளின் தொடர்ச்சியை போலவும், துண்டு துண்டாக கிடக்கும் அவரது வாழ்வின் பல அற்புதக்கணங்களின் தொகுப்பென்றும் தெரிந்தது, முழுவதுமாக படித்து முடித்ததும் பெரும் பிரமிப்பு உண்டாகியது. அவரது கிராமத்துக்கே வீட்டுக்கே, வாசலுக்கே, தெருவுக்கே என்னையும் கூட்டிச்சென்று விட்டிருக்கிறார். புத்தகத்தை மூடினதும்தான் நான் பொள்ளாச்சிக்கு திரும்பியிருந்தேன். எத்தனை இயல்பான கதைசொல்லல்!

இந்தக்கதைகளை ஒருவர் எழுதி, அவை அச்சிடப்பட்டு, ஒரு புத்தகத்தின் பக்கங்களில் வாசிக்கும் உணர்வே இல்லாமல் கி.ராவுடன் அவர் வீட்டுதிண்ணையில் அமர்ந்து ஒன்றுக்கொன்று சம்பந்தா சம்பந்தமில்லாத, ஆனால் வெகு சுவாரஸ்யமான சங்கதிகளை அவர் மனம் விட்டுப் சொல்லச்சொல்ல கேட்டுக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.

புதுப்புது வட்டாரவழக்கு சொற்களை அதிசயித்து வாசித்து குறித்துக்கொண்டேன். தேங்காய் உடைப்பது குறித்து சொல்லுகையில் பெருவிரலால தேங்கா கண்ண பொத்திகிட்டு நரம்பின்மீது தட்டி கீறல் விட்ட தேங்காயின்//கீறலுக்குள்ளே மேஜைக்கத்தியோட நுனியை விட்டு கத்தியை குத்தி அகலிச்சா,  தோ வந்தேன்னு இறங்கிடும் தண்ணி// என்கிறார். கீறலுக்குள் கத்தியை விட்டு விரிசலை பெரிதாக்குவதை அகலிச்சா என்பதுதான் எத்தனை பொருத்தமாயிருக்கிறது.

இதைப்போலவெ பக்கரை, போக்காளி, கால்கள் லத்தாடின, இரிசி, தடபுதல், என்றும் சில சொற்கள் வருகின்றது.

காதோர நரை, லட்சுமிகாந்தன் கொலை, பிராமணாளுக்கு தனி தடுப்பறை இருந்த ஹோட்டல்கள், குழந்தைகளை பெண்களிடம் கொடுத்து கொஞ்சச்சொல்லிவிட்டு, மறைந்திருந்து அவர்கள் கொஞ்சுவதை பார்ப்பது, காணாமல் போன எருமைமாடு, உருண்டை உருண்டையான மணமில்லா மலர்களுடன் தொட்டாச்சிணுங்கி செடிகள், புதுமாப்பிள்ளைக்கு இவர் அந்தரங்கமாக உதவியது, குத்தாலம் , விருந்துக்கு போன இடத்தில் பொண்ணு மாப்பிளைக்கு நடந்த விநோதங்கள், ரசிகமணி ஆண்களின் எச்சில் இலையில் பெண்கள் சாப்பாடு நடக்கவிடாமல் செய்த சம்பவமென்று என  ஒவ்வொன்றும் ஒரு ரகம் , ஒவ்வொன்றும் ஒரு சுவை, ஒரு புதுமை.

வெற்றிலைக்கதைகளாக  இடையிடையே  பாலுறவக்கதைகளும்  கலந்து வந்துகொண்டே இருக்கிறது.கஞ்சிகெட்டலு என்னும் பஞ்சகாலத்துக்கிழங்கு, மலைமேலே இலைபோட்டுச்சாப்பிட்டால் குப்பை சேரும் என்று உருவாக்கப்பட்டிருந்த குத்தாலத்தின் திருவோட்டுப்பள்ளங்கள் என்று ஏராளம் அதிசயவிஷயங்களும் இருக்கின்றது,

எதுமாதிரியும் இல்லாத புதிமாதிரியான கதைகள் இவையனைத்துமே. புதுவை இளவேனிலின் புகைப்படங்கள் வெ்கு அற்புதம், கருப்பு வெள்ளையில் காலங்களை கடந்த புகைப்படங்கள். உண்மையில் அத்தனை அருமையான இயல்பான புகைப்படங்களால்தான் கதைகளை கி ரா சொல்லச்சொல்ல கேட்கும் அனுவபவம் வாய்த்ததென்றும் சொல்லலாம்.

பஞ்ச காலத்தில் சாப்பிடப்பட்ட பூண்டைப்போலிருக்கும் அந்த கிழங்கைக்குறித்து அறிந்துகொள்ள நிறைய தேடினேன். 1968ல்   journal of agricultural traditions என்னும் சஞ்சிகையில் எழுதப்பட்ட Plants used during scarcity and famine periods in the dry regions of India என்னும் கட்டுரையொன்றில்  Ceropegia bulbosa  என்னும் செடியின் பூண்டைப்போலிருக்கும் கிழங்குளை பஞ்சகாலத்தில் மக்கள் வேக வைத்து கஞ்சியாக்கி உண்டது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுவாகவும் இருக்கலாம் அதன் தமிழ்ப்பெயரைக்குறித்த தகவலை தேடிக்கொண்டிருக்கிறேன்,

கடலைப்போல பெரிய, சின்ன கதைகளில் அடங்காத ரசிகமணி சமாசாரங்களை, இன்னொரு முறை பார்ப்போமென்கிறார் கிரா இதில்.

காத்திருக்கிறேன்

ஜன்னல் சிறுமி

தளத்தில் மாற்றுக் கல்வி குறித்த பதிவில் ஜெ குறிப்பிட்டிருந்த  ”டோட்டோ –சான்  ஜன்னலில் சின்னஞ்சிறுமி” புத்தகத்தை வாங்கி  வாசித்தேன்.   

இருபது ஆண்டுகளாக என் ஆசிரியப்பணியில்  வழக்கமான கல்வியின் போதாமைகளை நான் அநேகமாக தினமுமே உணர்கிறேன். சராசரி குடிமகன்களை உருவாக்குவதாக சொல்லப்படும் பொதுக்கல்வியில் எனக்கு நம்பிக்கை அற்றுப்போய் பல வருடங்களாகி விட்டிருக்கிறது. 

பள்ளிக்கல்வியில் மதிப்பெண்கள் வாங்கும்படிமட்டும் தயாரிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் மனனம் செய்யப் பழகி, சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த, மூளை மழுங்கடிக்கப்பட்ட  மாணவர்களே  அதிகம் கல்லூரிக் கல்விக்கு வருகிறார்கள்.  12 ஆம் வகுப்பில் முதலிடம் இரண்டாமிடம் வந்த மாணவர்கள் கூட கல்லூரியில் வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்டு கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்ளத் தடுமாறுவதை பார்க்கிறேன். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, தன் வீட்டில் என்ன நடக்கிறது, தன் ஊரில் உலகில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் குறித்து எந்த அறிதலும் இல்லாமல்தான் 3 வருடங்களும் படித்துப் பட்டமும் வாங்கி வெளியில் வருகிறார்கள். ஆசிரியர்களும் எந்த மாறுதலும் இல்லாமல் அரைத்த மாவையே அரைக்கிறோம்.  

நான் இளங்கலை தாவரவியல் படித்த அதே துறையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியராக சேர்ந்தபோது நான் படித்த அதே பாடத்திட்டம் எந்த மாறுதலுமின்றி நடைமுறையில் இருந்தது. இன்று 20 வருடங்களாகியும் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே பாடத்திட்டத்தை தான் நடத்துகிறோம். நினைத்துப்பாருங்கள் பொள்ளாச்சியை போன்ற பச்சை பிடித்த பல கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் ஓரிடத்தில்  நான்கு சுவர்களுக்குள் தாவரவியலை நடத்திக் கொண்டிருப்பதென்பது எத்தனை அநியாயமென்பதை.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சைகஸ் என்னும் ஒரு கீழ்நிலைத் தாவர குடும்பத்தை சேர்ந்த மரமொன்றை  குறித்து பாடம் நடத்த வேண்டி இருக்கும் அந்த சைகஸ் பெண் மரமொன்று கல்லூரியில் என் வகுப்பிற்கு பின்புறம் இருக்கிறது. ஆனால் அந்த மரமத்தினருகில் மாணவர்களை அழைத்துச் சென்று மரத்தை அவர்கள் தொட்டு உணர்கையில் பாடம் நடத்த நான் பல படிநிலைகளில் அனுமதி வாங்கவேண்டும். மாணவர்களின் ஒழுங்கு சீர்குலையும் என்றும், வகுப்பில் அமர்ந்திருக்கும் பிற துறை மாணவர்களை அது தொந்தரவுக்குள்ளாக்கும் என்றெல்லாம் எனக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படும் ஆனாலும் நான் ஒவ்வொரு வருடமும் சைகஸ் மரத்தருகில் கூட்டமாக மாணவர்கள் வைத்துக்கொண்டுதான் பாடம் எடுப்பேன். கல்லூரியில் மேலும் பல இடங்களில் சைகஸ் மரங்களை நட்டும் வைத்திருக்கிறேன். இலைகள் செடிகள் கொடிகள் என  கைகளால் எடுத்துக்கொண்டு போக முடிந்த அளவில் வகுப்பிற்கு எடுத்துக்கொண்டுபோய்க் கூடக் கற்பிக்கிறேன் 

அருகம்புல் மண்டிக்கிடக்கும் கல்லூரி வளாகத்தின் ஒரு வகுப்பறைக்குள் அருகை  கரும்பலகையில் படமாக வரைந்து கற்றுக் கொடுக்கும் பொதுக்கல்விமுறை தான் இப்போது அளிக்கப்பட்டு வருகிறது. மாற்றுக் கல்வி குறித்த தயக்கங்களும் அச்சமும் பெற்றோர்களுக்குத்தான் இருக்கிறது. விரும்பும் படியான எந்த முறையில் கற்றலை அளித்தாலும் மாணவர்கள் ஆர்வமாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை

நான் 8 ஆவதில் படிக்கையில்தான் எங்களூருக்கு முதன் முதலில் பிரஷர் குக்கர்கள் புழக்கத்தில் வந்தன. அறிவியல் ஆசிரியை துஷ்யகுமாரி வகுப்பிற்கு குக்கரையும், ஊறவைத்த கடலைகளையும் வீட்டிலிருந்து கொண்டுவந்து, எங்கள் முன்பு அதை விளக்கி வேக வைத்து சுண்டல் செய்து  குக்கரின் செயல்பாட்டை  விளக்கிய அந்த பாடம் இன்னும் என் மனதில் அப்படியே நினைவில் இருக்கிறது. 

குறிஞ்சி மலர்ந்திருந்த ஒரு கல்லூரிக்காலத்தில், தாவர வகைப்பாட்டியல் ஆசிரியருடன்  தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் இருந்து மலைச்சரிவெங்கும் நீலக்கம்பளமாய்  மலர்ந்திருந்த  குறிஞ்சி செடிகளை பார்த்ததும், காலடியில் இருந்த சிண்ட்ரெல்லா செருப்பென்னும் ஒரு சிறு மலர்ச்செடியை பார்த்ததும் எனக்கு நினைவில் இன்னும் பசுமையாக  இருக்கிறது. மிக மகிழ்வுடனும், நிறைவுடனும் நான் திரும்ப எண்ணிப்பார்க்கும் கற்றல் என்பது வகுப்பறைக்கு வெளியில்  அரிதாக எனக்கு கற்பிக்கபட்டவைகளையே.

டோபியரி என்னும் தாவர உயிர் சிற்பக்கலையை பூங்காக்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கம்பிச்சட்டங்களால் விலங்கு, பறவை உருவங்கள் செய்து, வளரும் சிறு செடி ஒன்றின் மீது இதை பொருத்தி வைத்து விடுவோம். செடி வளருகையில் சட்டத்துக்கு வெளியில் வளரும் இலைகளையும் கிளைகளையும் வெட்டி வெட்டி விரும்பிய வடிவில் உயிருள்ள பசுஞ்செடிகளை உருவாக்கும் இந்த முறைதான் இப்போது பொதுக்கல்வியில் இருக்கிறது. மாணவர்களின் தனித்திறன், அவர்களின் விருப்பம், தேவை, நிறைவு, லட்சியம் இவற்றை குறித்தெல்லாம் எந்த அறிதலும், கவலையும் இல்லாமல்  எங்கோ, யாரோ,  முன்னெப்போதோ முடிவு செய்த பாடத்திட்டங்களை திணித்து, ஒரு சராசரி குடி மகனை உருவாக்கும் முயற்சியில் தான்  நாங்களனைவருமே இருக்கிறோம். 

எனவேதான் எனக்கு டோட்டோ சானின் டோமோயி மாற்றுக்கல்வி பள்ளியை  அத்தனை பிடித்திருந்தது.  முன்பே தீர்மானித்திருக்கும் வடிவிலான ஆளுமைகளாக மாணவர்களை மாற்றும் பணியில் இருக்கும் எனக்கு இந்த பள்ளி அதன் செயல்பாடுகள், அங்கிருக்கும் குழந்தைகள், அவர்களின் மகிழ்ச்சி எல்லாமே பெரும் குதூகலத்தை அளித்தது. கூடவே பெரும் ஏக்கத்தையும்.

இப்படியான கல்விமுறையை எல்லாருக்கும் அளிக்கையில் உருவாகும் ஒரு சமூகத்தை எண்ணி பார்க்கையில் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று ஹோம் ஸ்கூலிங் பற்றி கொஞ்சம் பேச தொடங்கி இருக்கிறார்கள். எனினும் அதன் அடிப்படைகளை அறியாத பெற்றோர்களால் அக்கல்வியை முழுமையாக அளித்துவிட முடியாது. டோமோயி போன்ற   பள்ளிகளே நமக்கு இப்போது தேவையாக இருக்கிறது.

குருவிகளோடு பேசிக்கொண்டிருந்ததற்காகவும், மேசையறையை அடிக்கடி திறந்து மூடியபடி இருந்ததற்கும், வகுப்பு ஜன்னல் வழியே இசைக்கலைஞர்களை வரவழைத்து இசைகேட்டதற்காகவும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி ஒருத்தி, அந்த மாற்றுக்கல்வி பள்ளியின் உயிருள்ள பசுமையான கதவுகள் திறந்து வரவேற்கப்பட்டு நுழைகிறாள்.

அங்கே அவள் பல மணி நேரம் தொடர்ந்து பேசுவதெல்லாம் செவிகொடுத்து கேட்க தலைமை ஆசிரியர் இருக்கிறார். அவளால் உடலூனமுற்றவர்களுடனும் உடல் வளர்ச்சி நின்று போனவர்களுடன் அவர்களைப் புரிந்து கொண்டு அன்புடன் இருக்க முடிகிறது, அவர்களுக்கு அவளாலான உதவிகளை மனப்பூர்வமாக செய்யவும் முடிகிறது.

இப்போதைய பெரும்பாலான பெற்றோர்கள் நினைப்பதும் விரும்புவதும் போல முழுக்க முழுக்க பாதுகாப்பை மட்டும் அளிக்கும் பள்ளியாக இல்லாமல் சின்ன சின்ன ஆபத்துக்களையும் அவள் அங்கே சந்திக்க வேண்டி இருக்கிறது.  மிக பத்திரமான, சுத்தமான இடங்களில் மட்டும் அவள் இருப்பதில்லை,  பள்ளியில் கழிவறை குழிக்குள் விழுந்த தொப்பியை அவளாக கம்பியைக் கொண்டு எடுக்க முயற்சிக்கிறாள், உயரமான மரத்தில் ஏணியை கொண்டு, இளம்பிள்ளை வாதத்தால் சூம்பிய காலுடன் இருக்கும் நண்பனுடன் ஏறுகிறாள், செய்தித் தாள் கொண்டு மூடப்பட்டிருக்கும் கழிவுநீர் தொட்டியில் தவறி  விழுகிறாள், கொக்கியில் தானே மாமிசமாக தொங்கி கீழே விழுந்து அடிபடுகிறாள். ஆனால் அவ்வனுபவங்களிலிருந்து அவள் ஆபத்தான சூழல்களை குறித்தும் எப்படி பாதுகாப்பாக இருப்பதென்றும் சுயமாகக் கற்றுக் கொள்கிறாள். 

தங்கள் பிள்ளைகளை மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்கும், வெயிலில் காய்ந்தால் தலைவலி வரும், பனியில் நின்றால் காய்ச்சல் வருமென்று பொத்தி பொத்தி  வளர்க்கும் பெற்றோர்கள் கட்டாயம் இப்பள்ளியைக் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வெளியே சென்று மகரந்தச் சேர்க்கையை, பட்டாம் பூச்சிகளை, எல்லாம் நேரில் பார்த்து தாவரவியல் கற்றுக்கொள்ளும் டோட்டோசான் அருகில் இருக்கும் தோட்ட உரிமையாளர் ஆசிரியராக வந்தபோது விதைக்கவும், களையெடுக்கவும், கற்றுக்கொள்கிறாள்.

அந்த ரயில் பெட்டி வகுப்பறைகளே வெகு கொண்டாட்டமானதாக  இருக்கிறது அவளுக்கு. பள்ளிக்கு வரும் கூடுதல் ரயில் பெட்டி டிரெய்லர்களால் இழுத்து வரப்பட்டு மரப்பாளங்களில் உருட்டி  எடுத்து வைக்கப்படுகையில் இயற்பியலையும், சிறுவர்களனைவரும் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்கையிலே, உடலறவியலையும்,  திறந்தவெளி சமையலின் போதும், தேநீர் விருந்தின்போதும் சமையலையும், விருந்தோம்பலையும்,, சென்காகுஜீ கோயிலுக்கு போகையில் வரலாறையும், பள்ளிப்பாடலை பாடிப்பாடி இசையையும், சபையினர் முன்பு எப்படி அச்சமின்றி பேசுவதென்பதையும், கடலிலிருந்தும் மலையிலிருந்தும் உணவுகளை சாப்பிடுவதால் சரிவிகித சமச்சீர் உணவு கிடைக்கும் என்பதையும், கப்பல் பயணத்தையும், பிறருக்கு உதவி செய்வதையும் இன்னும் பலவற்றையும் கற்றுக்கொண்டே இருக்கிறாள்.

சந்தையில் காய்கறிகள் வாங்கி வணிகத்தை அறிந்து கொள்வது, கூடாரமடித்து தங்குதல், கொதி நீர் ஊற்றுகளில் குளிப்பது. ஆரோக்கிய மரப்பட்டை வாங்குவது, தனந்தனியே ரயிலில் பயணிப்பது என டோட்டோ சானின் பள்ளி வாழ்க்கை ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமாக, அற்புதமாக இருக்கிறது. போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பைகளுக்கு பதிலாக  காய்கறிகள் பரிசாக கொடுக்கப்பட்டு, அவற்றை அக்குழந்தைகளின் குடும்பம் உணவாக்குவதும் குழந்தைகளுக்கு கொடுக்கும் மகிழ்ச்சி அளப்பரியதாயிருக்கிறது.

டோட்டோசானும் பிற குழந்தைகளும் பள்ளி மைதானத்தின் மரங்களின் மீதமர்ந்த படி  கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி தான் எத்தனை அழகானது. அங்கிருந்து அக்குழந்தைகள் அறிந்துகொள்ளுபவற்றை வெகு நிச்சயமாக வகுப்பறைக்குள் கற்பிக்க முடியாது. 

டோட்டா சான் மஞ்சள்நிறக்கோழி குஞ்சுகளிடமிருந்தும், தன் தோழன் ஒருவனிடமிருந்தும், தன் பிரிய நாயிடமிருந்தும், இழப்பின், மரணத்தின், பிரிவின், துயரையும் கூட அறிந்துகொள்கிறாள்

அவளுக்கென அளிக்கப்பட்ட அடையாள அட்டையும், “நீ மிகவும் நல்ல பெண் தெரியுமா” என அடிக்கடி அவளிடம் சொல்லப்பட்டதும் அவளது ஆளுமையில் உருவாக்கிய மாற்றம் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. பேய்களைக் கொசு கடிப்பதும்,  இரண்டு பேய்கள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு அழுவதும், பயந்துபோன பேய் கண்ணீர் விடுவதுமாக அந்த  தைரிய பரீட்சை வெகு சுவாரஸ்யம். 

அப்பள்ளிக்கு வெளியே போர்ச்சூழல் நிலவுவது குறித்து எந்த அறிதலும், அச்சமும்  இல்லாமல் அக்குழந்தைகள் அங்கு வாழ்வின் இயங்கியலை மகிழ்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குண்டு வீச்சில் அழிந்து போன அந்த பள்ளி அங்கு படித்த அத்தனை மாணவர்களின் மனதிலும், அவர்கள் சொல்லக் கேட்கும் அவர்கள் குடும்பத்தினர் மனதிலும் எந்த சேதாரமும் இல்லாமல் நிரந்தரமாக இருக்கிறது.  தற்போது மிகப் பிரபலமான திரை மற்றும் தொலைக்காட்சி நடிகையாகவும் புகழ்பெற்ற ஜப்பானிய ஆளுமையாகவும் இருக்கும்  டெட்சுகோ குரோயோ நாகி என்னும் டோட்டோ சான்  தன்னுடன் படித்த தோழர்கள் இப்போது என்னவாக இருக்கிறார்கள் என்னும் குறிப்பையும் இதில் தந்திருப்பது மிக சிறப்பானது.

டெட்ஸுக்கோ குரோயானகி

அவர்களின் ஆளுமை உருவாக்கத்தில் மாற்றுக் கல்வி முறையின் நேரடி தாக்கம் இருப்பதை வாசிப்பவர்கள் உணரமுடிகின்றது குறிப்பாக உடல் வளர்ச்சி நின்று போன தாகா ஹாஷி என்னவாயிருக்கிறான் என்பதே அப்பள்ளியின் மாற்றுக்கல்வி முறையின்  வெற்றிக்கு சான்றளிக்கிறது. 

டோமோயி பள்ளியை உருவாக்கிய திரு.கோபயாஷி போல தேர்ந்த கல்வியாளர்களால் மாற்றுக்கல்வி முறை உலகின் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும்  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல மொத்தமாக பொதுக்கல்வி முறையை அப்படியே தலைகீழாக மாற்றிவிட முடியாது. ஆனாலும் மாற்றுக்கல்வியின்,  சில அம்சங்களையாவது பொதுக்கல்வியில் சேர்க்கலாம்.

வகுப்பறைக்கு வெளியேவும் கற்றலை அளிப்பது,  மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் காணும் முறைகளை கல்வித்திட்டங்களில் சேர்ப்பது, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக அவர்கள் கருதாமல் இருப்பது போன்றவற்றை நிச்சயமாக  செய்யலாம். தற்காலத்துக்கேற்றபடி பாடத்திட்டங்களை மாற்ற வேண்டியது மிக அவசியமானது.

பெற்றோர்களின் மனநிலையும் வெகுவாக மாற வேண்டி இருக்கிறது. தன் மகள் மருத்துவப்படிப்பு சேரும் அளவிற்கு மதிப்பெண்  வாங்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட  தாயொருத்தியை நானறிவேன். பிற  குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டு  கடிந்துகொள்ளும் பல்லாயிரம் பெற்றோர்கள் இங்கே இருக்கிறார்கள். 

குழந்தைகளின் தேவைகளும், விருப்பங்களும், சிக்கல்களும் என்னவென்று அறியாத, மருத்துவர்களாலும், பொறியாளர்களால் சமைக்கபட்டிருக்கும்  ஒரு பொன்னுலகை குறித்தான  தீவிர நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோர்களில் பலருக்கு மாற்றுக்கல்வி உகந்ததல்ல.

என் மகன் பத்தாவது முடித்த பின்னர், 11 படிக்க  பலரால் ஆகச் சிறந்த பள்ளி என பரிந்துரைக்கபட்ட ஹைதராபாதிலிருக்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். அது ஒரு பள்ளிக்கூடம் கூட அல்ல ஒரு அடுக்ககம். அதன் குளிரூட்டப்பட்ட அறைகளில் அடைத்த ஜன்னல்களுக்கு உள்ளிருந்து பிராய்லர் கோழிகளை காட்டிலும் பாவமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து துரத்தப்பட்டவள் போல நான் வேகமாக வெளியேறினேன். டோமோயி பள்ளியில் முள் கம்பிகளுக்கு அடியில் படுத்தும், தவழ்ந்தும் வெளியேறும் விளையாட்டில் தனது ஆடைகள் மட்டுமல்லாது ஜட்டியும் கூட கிழியும்படி விளையாடும் டோட்டோ சானுக்கு கிடைக்கும் அனுபவங்களைக் குறித்து ஏதும் அறியாமல் IIT கனவுகளில் மூழ்கி இப்படி லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில்  மகன்கள் படித்த பள்ளியும் பொது கல்வி முறையில் மாற்றுக் கல்வியின் அம்சங்களையும் கலந்த கல்விமுறையை தான் கொண்டிருக்கிறது. படிக்க சொல்லி  அழுத்தமோ கட்டாயமோ அங்கு எப்போதும் இருந்ததில்லை. சேர்க்கையின் போதே உங்கள் மகன் இங்கு படித்து பொறியாளராகவும் மருத்துவராகவும் ஆகவேண்டும் என உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதற்கானது இந்தப்பள்ளி அல்ல என்று சொன்னார்கள்.

மதிய உணவிற்கு பின்னர் பெரும்பாலான நாட்களில் வகுப்பறைக்கு செல்ல வேண்டியதில்லை விடுதி அறையிலேயே இருக்கலாம், இசை கேட்கலாம், மிதிவண்டியில் சுற்றலாம், இசைக்கருவிகள் வாசிக்கலாம், பள்ளி வளாகத்தில் இருக்கும் கோயில்களுக்கோ அல்லது மைதானத்தில் விளையாட்டு பயிற்சிகளுக்கோ செல்லலாம், ஆணும் பெண்ணும் இயல்பாக பார்த்து, பேசிக் கொள்ளலாம்.  இங்கு மட்டும் தான் எனக்கு தெரிந்து   KTPI – Knowledge and traditional practices of India என்னும் ஒரு பாடத்தை 12 ஆம் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும். இந்திய தொன்மங்கள், இலக்கியங்கள், இதிகாசங்களை இப்பாடத்தில் கற்பிக்கிறார்கள். இந்திய புராதன சின்னங்கள் இருக்கும் இடங்களுக்கும் கோவில்களுக்கும்  சுற்றுலா அழைத்து செல்கிறார்கள்.

இந்த பள்ளியில் மட்டுமே நான் ஆசிரியர்களின்  தோளில் கைகளை போட்டுக்கொண்டு  நடக்கும் மாணவர்களை பார்த்திருக்கிறேன். 

ஒரு முறை நான் பள்ளிக்கு சரணுடன்  சென்றிருக்கையில் தூரத்தில் இருசக்கரவாகனத்தில் கணவரின் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அப்பள்ளியின் முதல்வர் ”சரண் லவ் யூ சரண்” என்று கூச்சலிட்டபடி காற்றில் ஒரு முத்தத்தை பறக்க விட்டு சென்றார்கள். பள்ளிப்படிப்பை முடித்து சில வருடங்களுக்கு பின் ஒரு விழாவுக்கெனெ மீண்டும் பள்ளிக்கு சென்றிருந்த சரணை “looking handsome man” என்றபடி ஒரு ஆசிரியை இறுக்க அணைத்துக் கொண்டார்கள். அங்கே போலி பணிவும் பவ்யமும் இல்லவே இல்லை. டோமோயி பள்ளியின் மாணவர்கள் தலைமை ஆசிரியரின் மடியிலும், முதுகிலும், தோளிலும் ஏறி தொங்கிக் கொண்டிருப்பதை வாசிக்கையில் நான் அவற்றை நினைவுகூர்ந்தேன்.

நான்  மகன்களின் ஆளுமை உருவாக்கம் குறித்து இந்த பள்ளியில் சேர்த்த பின்னர்  ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. இப்படியான பள்ளியில் கற்றுக்கொள்வது அனைவருக்கும் சாத்தியமில்லை தான். நம் பொதுக் கல்வியில் மாற்றுக்கல்வியின் சாத்தியமான அம்சங்களை சேர்ப்பது குறித்து கல்வியாளர்கள் அரசியலாளர்கள் யோசித்து,  உலகின் பல பகுதிகளில் இருக்கும் மாற்றுக்கல்வி முறைகளை பற்றியெல்லாம் அவர்கள் அறிந்து கொண்டு ஆலோசித்தால், பரிசீலித்தால் மட்டுமே மெல்ல மெல்ல மாற்றம் வரும். 

ஆசிரியர்கள்  நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. இப்புத்தகத்தை நான் மிக மிக நேசிக்கிறேன்.  எனக்கு தெரிந்து வாசிப்பில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் இதை நான் பரிந்துரைத்தேன், பெற்றோர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று இது. மிகச் சிறிய புத்தகம் ஆனால் இதன் பேசுபொருள் மிக மிக பெரியது.

டோமோயி பள்ளியின்  மாணவியும் இந்நூலின் ஆசிரியருமான டெட்சுகோ குரோயா நாகிக்கு  ஆசிரியராகவும் அன்னையாகவும் எனது பாராட்டுக்களை தெரிவிக்க அவரது முகவரியை தேடிக்கொண்டிருக்கிறேன்.

கிரானடா

ஜெ தளத்தில் கொள்ளுநதீமின் கிரானடா நாவலும் அச்சங்களும் வாசித்ததும் கிரானடாவை வாங்க அனுப்பாணை பிறப்பித்தேன். அவரின் நூலறிமுகம்  ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை அளித்தது. கிரானடா என்று பெயரிட்டிருக்கப்பட்ட அந்த வீடும், கிரானடா என்னும் பெயரும் வசீகரித்தது. அவர் குறிப்பிட்டிருப்பது போல  pomegranate  எனப் பெயரிடப்பட்டிருக்கும்  மாதுளையின் அறிவியல் பெயர் Punica granatum. இந்த  பெயரில் பல மொழிகளின் கலப்பு இருக்கிறது.

லத்தீன மொழியில்  pōmum  என்றால் ஆப்பிள்   grānātum என்றால் விதைகள் செறிந்த என்று பொருள்.  ’’ஆப்பிளை போலவேயான கனி ஆனால் விதைகள் நிறைந்த’’ என்ற பொருளில் பழைய ஃப்ரென்சு சொல்லான pomme-grenade என்பதிலிருந்தே இந்த லத்தீன் சொல் பெறப்பட்டது…ஆங்கிலத்தில்  “apple of Grenada” என்றழைக்கட்ட இக்கனி  லத்தீன -granade என்பதை ஸ்பெயினின் நகரான ‘Granada’ வை தவறாக நினைத்திருக்கலாமென்றும் ஒரு கருத்து இருக்கின்றது.Pomegranate என்பதற்கான ஃப்ரென்ச் சொல்லான grenade, மாதுளம் கனிகள்  கையெறி குண்டுகளின் வடிவத்தை ஒத்திருப்பதால் வைக்கப்பட்டது என்றும் தாவரவியல் குறிப்புக்கள் உள்ளன.

பல பொருள்கள் கொண்ட லத்தீன grānātum  என்பதற்கு அடர் சிவப்பு நிறமென்றும் ஒரு பொருள் இருப்பதால் இது மாதுளங்கனியின் சாற்றின் நிறத்தையும் குறிக்கின்றது..மாதுளையின் நிறத்திற்கென்றே பிரத்யேகமாக  balaustine என்னும் சொல் இருக்கின்றது. ’இறப்பின் கனி’ எனப்படும் மாதுளை குறித்த ரோமானிய, கிரேக்க தொன்மங்களும் வெகு சுவாரஸ்யமானவை.. The Color of Pomegranates என்னும் 1969 ல் வெளியான ஒரு ஆர்மினிய திரைப்படம்  இசைஅரசனனான  18 அம் நூற்றாண்டைச்சேர்ந்த ஆர்மீனிய கவி Sayat-Nova வின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.மாதுளைகளின் நாடான ஆஃப்கானிஸ்தானின் கந்தகாரின் அம்மண்ணிற்கே உரிய ஜம்போ மாதுளைகளுக்கு சர்வதேச கிராக்கி இருக்கின்றது.

மாதுளை - தமிழ் விக்கிப்பீடியா

கொள்ளு நதீமின் இந்த கட்டுரை மாதுளையின் பின்னால் என்னை போகச்செய்துவிட்து

பிழைத்தலும் வாழ்தலும்!

ஆள்தலும் அளத்தலும் | Buy Tamil & English Books Online | CommonFolks

என் தம்பி மகள் சாம்பவி   என்  இரு  மகன்களுடனே தான் வளர்ந்தாள்;  மூவருக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை, கைச்சண்டை, கால் சண்டையெல்லாம் நடக்கும்.  அப்போதுதான் பேச கற்றுக் கொண்டிருந்த  சாமபவி, கோபம் எல்லை மீறி போகும் போது முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு அவளுக்கு தெரிந்த கிண்ணம், வெள்ளைப்பூண்டு, சாதம் போன்ற வார்த்தைகளை ’’போடா கிண்ணம், போடா பருப்பு சாதம்’’ என்று பல்லை கடித்துக்கொண்டு வசவைப்போல சொல்லுவாள்.  வார்த்தைகளின் அர்த்தம் தெரியாவிட்டாலும் சொல்லும் விதத்தில் அவற்றை கெட்ட வார்த்தை ஆக்கிவிடுவாள் காளியின் திருவண்ணாமலை கதை இப்படி பழசை நினைவுபடுத்தி வாசிக்கையில் புன்னகைக்க வைத்துக் கொண்டே இருந்தது.

வசவை சர்வசாதாரணமாக புழங்கும்,தெலுங்கு பேட் வேர்ட்ஸ் இணையத்தில் தேடும் ரஙகன் ’’டேய் தோத்ரம்’’ என்று நிலைக்கண்ணாடி முன் நின்று நாலு முறை சொல்லிப்பார்த்து  அது மோசமான வார்த்தை தான் என்று உறுதி செய்து கொண்டு அத்தனை நாட்கள் புத்தரால் கொடுக்க முடியாத நிம்மதியுடன்    உறங்கச்செல்கிறான்

இந்த கதையில் மட்டுமல்ல பழனியிலிருந்து பராசக்தி வரை பத்துக்கதைகளிலும் நமக்கு தெரிந்தவர்களும் நம்மை தெரிந்தவர்களும் நாமும்தான் இருக்கிறோம்.  கதைமாந்தர்களின் அவஸ்தைகள், தடுமாற்றங்கள், குடும்ப சிக்கல்கள், பணியிட பிரச்சனைகள் வழியே  காளி பிரசாத் காண்பிப்பது நம் அனைவரின் வாழ்வைத்தான். வாசிப்போர் கடந்து வந்திருக்கும் பாதைகளில்தான் கதைகள் அவர்களை அழைத்துச் செல்கின்றன.

பழனியிலிருந்து பராசக்தி வரை கதைமாந்தர்கள் வேறு வேறு பெயர்களில் இருக்கும் நாமறிந்தவர்கள் என்பதாலேயே கதைகள் மனதிற்கு அணுக்கமாக விடுகிறது.. நாம் சந்தித்தவர்களும் கடந்துவந்தவர்களும் இனி சந்திக்க விரும்பாதவர்களுமாக  கதைகள் நமக்கு பலரை நினைவுக்கு  கொண்டு வருகிறது.

அத்தனை அடாவடி செய்த பழனி,   50 ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பேர் காயிலை திருடி மாட்டிக்கொண்டதை, அவன் குடும்பம் சிதைந்ததையெல்லாம் கேட்கையில் ஃபேக்டரி இயந்திரங்களின் சத்தத்தில் மண்டை கனக்கும் கதை சொல்லி,  பழனி நல்ல நிலைமையில் வீடும் காரும் குடும்பமுமாக இருப்பதை கேட்டபின்பு  இரைச்சல் உண்டாக்கிய தலைவலிக்கென  போட்டிருந்த தொப்பியை கழட்டிவிட்டு பறவகள் கூடடடையும் சத்தங்களை கேட்டபடி, தூரத்தில் சிறு வெளிச்சம் தெரியும் கோவில் வரை நடக்கும் கதை முடிவு பெரும் ஆசுவாசத்தையும் நிறைவையும் கொடுக்கிறது

எல்லாக்கதைகளிலும்  மனிதர்களின் இயல்புகளை அப்படியப்படியே ஏற்றங்களும் இறக்கங்களும் அல்லாடல்களுமாக இயல்பாக காட்டுகிறார் காளி. எதையும் உன்னதப்படுத்தாமல், எதையும் உச்சத்துக்குகொண்டு செல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் கூறுமொழி நம்மையும்  இயல்பாக கதையோட்டத்துடன் கொண்டுபோய், நம்மையறியாமலே கதைகளுடன் நம் வாழ்வை தொடர்புபடுத்தி பார்க்க வைத்துவிடுகிறது

. பகடிகள்  வாய்விட்டு சிரிக்கும் படி இல்லாமல்,  முகம் மலரும்படி இருக்கிறது, ஆட்டோ இடித்த தகராறு, ரின்ஸ் ஸ்பெனரரால் பழனி அடித்ததும் முடிவுக்கு வருவதும்,   ஆட்டோக்காரர் தலையை மூடி, அவரே ஆட்டோவை ஓட்டிபோய் அட்மிட் ஆவதும் அப்படியானவற்றில் ஒன்று.

அதைப்போலவே  திருவண்ணாமலையின் ’’திருச்சி டம்ப்ளரு’’ ஆர்வலர் கதையில் சம்பத் சொல்லும் குறள்,  ஷாக் அடிக்கும் போதும் பியூஸ் போகும்  சிரித்துக் கொண்டிருக்கும் புத்தர், ’அன்னிக்கு அம்மா நாப்பதுன்னு சொல்லும்பொது ஒன்னும் பேசாம  பெண்ணின் இடுப்பை பார்த்துட்டு இருந்தீங்க ’என்று மாப்பிள்ளையிடம் மனசுக்குள் கேட்கும் நீலகண்டன் என்று   இயல்பான சின்ன சின்ன பகடிகள்  கதை வாசிப்பை கூடுதல் சுவாரஸ்யமாக்குகின்றன

கதைகளில் சொல்லப்படும்  சிக்கல்கள், பரிதவிப்புகள், மீள முடியாத பிரச்சினைகளுக்கு மத்தியிலும், கதை மாந்தர்கள் அவர்களுக்கான் அறத்தை மீறாமல் அல்லது மீற முடியாமலிருப்பதையும் காளி காட்டுகிறார்.  அடுத்தவருக்கு கெடுதல் நினைக்காத  பழனியின் கதை சொல்லி, ஐந்து வேளை தொழுவதை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், அன்னைபன்றிக்கு கேரட் போடும்,  பாம்புக்கு பாவம் பார்க்கும் குத்தூஸ்,,   ’’அநாதைபொணமா ரோட்டில் கிடக்காம என்புள்ளைய வீட்டில் கொண்டு வந்து சேத்திட்டியெப்பா’’ என்று ரவியிடம் கதறும் ராஜாவின் அம்மா, எத்தனையோ அலைச்சலுக்கு பிறகு,அசட்டு நம்பிக்கையில் தேடிப்போன ஒருவரிடம் வேண்டியது கிடைக்காமல், அந்த கிஃப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறதென்றும் தெரியாமல் வீடு வந்து,  கற்கள் பதிக்கப்பட்ட  வெள்ளி மரக்காலை கன்னத்தில் பளீர் பளீரென அடி வாங்கிய பெண்ணுக்கு சிரித்தபடி கொடுக்கும் கதை சொல்லி, வண்டியிலிருந்து இறக்கி விடுகையில் தனியாக இன்னும் ஒரு ஐநூறு கொடுக்கும் இருதயம் அண்ணன், என்று  நெஞ்சில் ஒளி கொண்டவர்கள் கதை முழுக்க வருகிறார்கள்.

இருப்பை தக்க வைத்துக்கொள்ள இடுப்பை நெளித்து ஆடும் அழகு ராணியும், கான்கிரீட் மூடியை மாற்றிய ஸ்ரீஜியும் ஒரே திரையில் தெரிவது, ஸ்கூட்டர் கேவலை சொல்லியிருக்கும் இடம், கேபிள் சுருளையும், கருமையான மலைப்பாம்பில் படுத்திருந்த அழகனையும் கதைசொல்லி பார்க்கும் கணங்கள் என காளி ஒரு கதாசிரியராக செல்லப்போகும் தூரங்களை  காட்டும் இடங்களும் உண்டு.

20 வருடங்களுக்கு முன் இருந்த, கோவிலின் பெயரும், கோபுரங்களும், புதிய டைல்ஸும்,  கடைகளும் எல்லாம் மதிப்பு கூடி மாறிவிட்டிருக்கையில், ரோஜாவையும் தாமரையையும் கொடுத்துவிட்டு பஞ்சாமிர்தத்தை  வாங்கி வாயில் இட்டுக்கொள்ளும் குருக்களும், நாப்பது பவுன் நகையை வாங்கிக்கொண்டு வீட்டை சகோதரனுக்கு கொடுத்துவிட்ட நீலகண்டனுமாக சன்னதியில் உமையுடனும் ஈஸ்வரனுடன் நிற்பதில் முடியும் கதையான பூதம் இந்த தொகுப்பில் எனக்கு மிகப் பிடித்தமான கதை

கழுத்தில் சங்குபுஷ்ப சரமும் உதட்டில் ஒரு சொட்டு தேனுமாக ஈசனை நீலகண்டன் பார்க்கும் காட்சிச் சித்தரிப்பு மனதுக்கு அளித்த சித்திரம் அற்புதமாக இருந்தது.

ஸ்பேனரும்  நட்டும், போல்ட்டும், ஸ்பேர் காயிலுமாக கதைக்களம் காளியின்  அனுபவக்கதைகள் இவை என  எண்ண வைக்கிறது.  கதைமாந்தர்களின் இயல்பை  விரிவாக சொல்லுவதிலேயே கதையையும் கொண்டு போவதும்  சிறப்பு.  மொழிநடையும் சரளம்.

புதிய இடங்களில் தங்களை பொருத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள், நிலுவைத்தொகை வாங்கமுடியாமல் அல்லாடுபவர்கள். இளைய தலைமுறையினரிடம், இழந்த தன் இருப்பை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள போராடுபவர்கள், தேடியவை கிடைக்காமல் ஏமாறுபவர்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்கி விழுபவர்கள், குற்ற உணர்வு கொண்டவர்கள்,  சிற்றின்பத்திலிருந்து  பேரின்பத்தை நோக்கி செல்பவர்கள், குடிகாரர்கள். திருடர்கள். அடிப்பவர்கள், அடிவாங்குபவர்கள் என கதைகளில் வரும் மாந்தர்களின்  பிழைத்தலுக்கான  போராட்டங்களையும்,  அவற்றிற்கிடையிலும்  அவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழக்கிடைக்கும்  அரிய கணங்களுமாக கதைகள் மிக சிறந்த நிறைவான வாசிப்பனுபவத்தை அளிக்கின்றன.

பிழைத்தலும் வாழ்தலும்!


தம்மம் தந்தவன்

தாவர வகைப்பாட்டியல் பாடங்களை துவங்கும் முன்பு தாவரங்களின் வெளிப்புற தோற்றத்தை மட்டும் ஏறக்குறைய ஒரு மாத காலம்  மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டி இருக்கும். மலர்கள், இலைகள் கனிகள் , அவற்றின் பற்பல வடிவங்களை, வகைகளை சொல்ல வேண்டும். இலைகளின் பரப்பு, காம்பு, வடிவம், விளிம்புகள் இவற்றோடு இலைநுனிகளையும் விளக்க வேண்டி இருக்கும். இலைநுனிகளில்  கூர் நுனிகொண்டவை மற்றும் அகன்ற இலை பரப்பிற்கு சிறிதும் தொடர்பில்லாமல்  மிக்கூராக கீழிறங்குபவை என்று இரு வகைகளுண்டு. அக்யூட் அக்யூமினேட்(Acute & Acuminate) என்போம் இவற்றை. மிகக்கூராக கீழிறங்கி முடியும் நுனியுள்ள இலைக்கு, அரச இலையை உதாரணமாக காட்டுவேன்.

சாக்கிய அரசின் இளவலாக, வாழ்வின் கசப்புகள் அண்டாது வளர்க்கப்பட்ட சித்தார்த்தன் அந்த அகன்ற வெளியிலிருந்து படிப்படியாக கீழிறங்கி மெய்ஞானமென்னும்  மிகக்கூரான நிலைக்கு இறங்கி வந்ததை சொல்லும் அரசிலை இளம்பச்சையும் அடர்பச்சையுமாக கூர்நுனியுடன் தம்மம் தந்தவன் நூலின் முன்னட்டையில் இடம்பெற்றிருப்பது நூலின் உள்ளடக்கத்திற்கு மிகவும் பொருத்தமாகி விட்டிருந்தது

புத்தரை குறித்து என் அறிதல் என்பது மிக மிக குறைவுதான். சித்தார்த்தன் இளவரசன்,  மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு துறவியானான் போதிமரமான அரசினடியில் அமர்ந்து ஞானம் பெற்றான் இறப்புக்கு விஷ உணவே காரணம். இவ்வளவுதான் பள்ளிக்காலத்தில் அறிந்திருந்தேன்.திஷயரக்‌ஷ்தா என்னும் பெயரில் ஒரு தனித்த விருப்பம் இருந்து அதை புனைப்பெயராக  கொண்டு ஒரே ஒரு கதை எழுதினேன்

கல்லூரி முதல் ஆண்டில், ஒரு விழாவில் விதிவிலக்கின்றி அத்தனை மாணவர்களும் கவிதை எழுதியே ஆக வேண்டும் என்னும் ஒரு கட்டாயம் வந்தது.  தமிழ்த்துறை ஆசிரியர் ஒருவரின் பிடிவாதமது. அதுவும் துறைசார்ந்த ஒரு சொல்லேனும் கவிதையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன்.

கவிதையை எனக்கும், கவிதைக்கு என்னையும்  முற்றிலும் பரிச்சயமில்லாத காலமது, ஆனாலும் வளாகத்திலிருந்து தப்பித்து செல்ல வழியில்லாததால்

’’வெட்டிவிடுங்கள் போதி மரங்களை

வீதியில் எங்கேனும் காண நேர்ந்தால்

கட்டிய மனைவியையும்

தொட்டிலில் பிள்ளையையும்

துன்பத்திலாழ்த்தி விட்டு

ஆசையே துன்பத்துக்கு காரணம்

என அடுத்தவருக்கு புத்தி சொல்ல

என அடுத்தவருக்கு புத்தி சொல்ல

இனியொரு சித்தார்த்தன் வருவதற்குள்’’

என்று வாக்கியங்களை மடித்து  மடித்து அமைத்து கவிதைபோலொன்றை சமர்ப்பித்தேன். அதில்  கட்டிய மனைவி, தொட்டில் பிள்ளை எல்லாம் எம் ஜி ஆர் பாடலிலிருந்து எடுத்தாண்டது. கவிதைக்கு பரிசு கூட கொடுத்தார்கள்.

பின்னர்  புத்தர் மீண்டும் என் வாழ்வில் இடைபட்டது முதன் முதலாக இலங்கை சென்றபோது. அன்று புத்த பூர்ணிமா என்று பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தில் தான் அறிந்துகொண்டேன் விமான நிலையமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அரைமணிநேர பிரயாணத்தில் வீடு சேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் சுமார்  2 மணி நேரத்துக்கும் மேலாக சாலைகளில்  இருந்தோம்.

50 அடிக்கு ஒரு முறை காரை நிறுத்தி இனிப்புக்களை வழங்கிக் கொண்டே இருந்தார்கள் பொதுமக்கள். .துணிகளுக்குள் அமைக்கபட்டிருந்த வண்ண வண்ண  விளக்குகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

புத்த பூர்ணிமா இப்படி கொண்டாடப்படுமென்றே அன்றுதான் தெரிந்துகொண்டேன். கொழும்பு வீட்டினருகே ஏரளமான புத்தர் கோயில்கள் இருந்தன. இலங்கை நண்பர் அசங்க ராஜபக்‌ஷ ஒருமுறை  மலை உச்சியில் இருந்த மிக புராதனமான புத்தர் குகை கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அனந்த சயன புத்தர். அந்த அரையிருட்டில்,  சாய்வும் புன்னகை மிளிரும் முகமுமாக புத்தரை கண்டது கனவு போலிருந்தது

அங்கிருப்பவர்களை போலவே வெண்ணிற உடையுடன் வெண் தாமரைகளை எடுத்துக்கொண்டு புத்தர் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன்.  ஆனால் தம்மம் தந்தவன் அளித்த திறப்பை கோவில்கள் எனக்கு அளிக்கவில்லை.

புத்தகத்தை  முதலில் நான் கையில் எடுத்தேன் பின்னர் புத்தகமும் காளியின் நிதானமான மொழியாக்கமும் முழுக்க முழுக்க என்னை கையில் எடுத்துக்கொண்டது

வாசித்து முடித்ததும் ’அடடா  இன்னும் அதிகம் பேருக்கு இது போய் சேர வேண்டுமே’’ என்பதே முதன்மையாக தோன்றியது..

விலாஸ் சாரங்கின் ஆங்கில வடிவத்தைதான்  காளி தமிழில் தந்திருக்கிறாரென்பது  முன்னுரை எல்லாம் வாசித்தல் தான் தெரியும் அத்தனைக்கு அழகான அசலான, மொழியாக்கம். வெகு நிதானமாக சொல்லிச் செல்லும் பாணி இந்த நூலின் உள்ளடக்கத்திற்கு மிக பொருத்தமானதாக இருக்கிறது.

மிக புதியதொரு வழியில் புத்தரை, அவர் வாழ்வை, அவருக்களிக்கப் பட்டவற்றை அவரடைந்தவற்றை எல்லாம் அறிந்துகொண்டேன்.

புத்தரின் வாழ்வை  சொல்லும் பிறவற்றிலிருந்து தம்மம் தந்தவன் வேறுபடுவது நவீன பாணியில் அவர் வாழ்வை  சொல்லி இருப்பதில்தான். புத்தரின் வாழ்வு நிகழ்ந்த காலத்திலும் இப்போதைய காலத்திலுமாக சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கிறது.

புத்தரையும் பிம்பிசாரரையும் வாசிக்கையில்  ஷேக்‌ஷ்பியரும் வருவது, அவ்வப்போது இடைபடும் ,மாரனும் அவன் மைந்தர்களும், சின்ன சின்ன வேடிக்கை கதைகள்,  பசு துறவி, நாய் துறவி போன்ற கதாபாத்திரங்கள், குழந்தையை பார்த்து அவன் எதிர்காலத்தை கணிக்கும் அஸிதர் சொல்லும் விந்தையான விஷயங்கள், சால மரத்தடியில் நின்றபடியே பிள்ளை பெற்றுக்கொள்ளும் மாயா  என்று  சுவையான, விந்தையான, புதியதான  தகவல்களுடன் நூல் மிக அழகாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது

சால் மரத்தடியில் பிறந்து, அரசமரத்தடியில் ஞானமடைந்து மீண்டும் சாலமரத்தடியில் நிறைந்த புத்தரின் வாழ்வு புத்தம் புதிதாக என்முன்னே நூலில் திறந்து கிடந்தது.

ஆங்காங்கே அடைப்புகுறிக்குள் மேலதிக தகவல்களும் விளக்கங்களும் பிறமொழிப் பொருளும் கூறப்பட்டிருப்பது நூலை புரிந்து கொள்ள இன்னும் உதவுகிறது

தம்மம் தந்தவன் முதன்மையாக புத்தர் என்று  நான் அதுவரை கொண்டிருந்த  ஒரு பிம்பத்தை  உடைத்திருக்கிறது. புலால் உண்னும், சோலைகளை விரும்பும், 12 ஆண்டுகள், இல்லற கடமையை  ஆற்றிய,  பரிசுகளை, விருந்துகளை மறுக்காத, தான் எந்த அற்புதங்களையும் செய்துவிடவில்லை என்று சொல்லும் புத்தரை நான் இதில்தான் அறிந்துகொண்டேன்

புத்தர் தன்னை வருத்திக்கொண்டு செய்யும் சோதனைகள், மயான வாசம், விலங்கு கழிவுகளை உண்பது,  அவர் சந்திக்கும் குருமார்கள், பிம்பிசாரன் வாழ்வு , குகையில் புத்தருடன் சந்திப்பு முடிவதற்குள், முடிந்த அரசுப் பதவி என .பிரமிப்பூட்டும் தகவல்கள்.

// உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒன்று, அனைத்து உயிர்கள் மீதும் அன்பு பாராட்டுமொன்று என்னுமிடத்தில் அனைத்து மதங்களும் கடவுள் என்னும் கற்பனையை வைக்கின்றன .ஆனால் அதே இடத்தில் நாம் நிதர்சனமாக உணரும் துக்கம் மற்றும் மனக்கிலேசம் ஆகியவற்றை பெளத்தம் வைக்கிறது// இந்த பத்தி  இந்நூலின் சாரம்.

புத்தரின் மனவுறுதியை

கம்பீரத்தை, மனதையும் உடலையும் கட்டுக்குள் வைத்திருந்ததை, சஞ்சலங்களிலிருந்து  முற்றாக விலகி இருப்பதை,  இயல்பாகவே அவருக்கு இருந்த அறிவுக்கட்டமைப்பை என  தம்மம் தந்தவன் காண்பிக்கும் புத்தர் எனக்கு  மிக மிக புதியவர்

200 பக்கங்கள் என்ன்னும் வசதியான பக்க  அளவு, மிகப்பெரிய விஷயங்களை எளிமையாக விளக்கும் அழகிய மொழி என கச்சிதமான , சிறப்பான நூல் தம்மம் தந்தவன்

தங்க இடம் கொடுப்பவர் அனைத்தும் தருகிறார்;

ஆனால் தம்மத்தை –

புத்தரின் அருமையான போதனைகளைக் கற்பிப்பவர் –

அப்படிப்பட்டவர் தருவது அமிர்தத்தை.

என்கிறது சுத்த பிடகம்

புத்தர் தன்னை விடுவித்துக்கொண்டு சென்றவைகளையும், அவர் கடந்துசெல்பவைகளையும் அவர் இறுதியாக அடைந்தவற்றையும் சொல்லும் தம்மம் தந்தவன் என்னும் அமிர்தம் தந்த காளிக்கும் அழகிய பதிப்பிற்காக நற்றிணைக்கும் நன்றி

பெருமாள் முருகனின் கூளமாதாரி

கூளையன் என்னும் மாதாரிச்சிறுவன் பண்ணையக்காரரிடம் வருடக்கூலிக்கு விடப்படுகிறான். ஆடுகளை மேய்ப்பதும் சில்லறைவேலைகளை செய்வதும் பழையதை உண்பதும் வசவுகளை வாங்கிக்கொள்வதுமாக செல்லும் அவலவாழ்வுதான் எனினும் அவனுக்கும் அவனையொத்த அடிமைகளுடன் நட்பும் உறவுமாக ஒரு உலகிருக்கிறது. அவ்வுலகில் அவன் மகிழ்ந்திருக்கிறான். ஆடுகளுக்கு பெயரிட்டு அவைகளுடன் ஒட்டி உறவாடிக்கொண்டு அவைகளுடன் தாய்மொழியில் எப்போதும் பேசிக்கொண்டும் அதட்டிகொண்டும் இருக்கும் எளியவன் கூளையன்

அதிகாலையில் சாணம் அள்ளி, வாசல் பெருக்கி கைபடாமல் துணிசுற்றி மேல்சாதியினருக்கு பால் போசியை கொண்டு சென்று,  பட்டி நீக்கி ஆடுகளை மேய்க்கக்கொண்டு போவது தேங்காய்சிரட்டையில் காபிகுடிப்பது, வசவுகளையும் அடிகளையும் சராமாரியாக வாங்கிக்கொள்வதுமாய்  இருக்கும் கூளையன் என்னும் அறியாச்சிறுவனே கதைநாயகன்

சட்டியில்  கிழவனின் மலமும் மூத்திரமும் அள்ளும் நெடும்பன், சீக்குபண்ணயக்காரியின் கைக்குழந்தையையும் இடுப்பில் வைத்துக்கொண்டு  ஆடுமேய்க்க வரும் செவுடி,அவளின் நோயில் வெளுத்திருக்கும் தங்கை பொட்டி,  எருமைகளையும் மேய்க்கும் வவுறி, கள் தரும் மணி, பூச்சி  நாய், வெயில் மழை இரவு நிலவு மண்ணில் குழிபறித்து விளையாடும் பாண்டி, கிணற்று நீச்சல் பனம்பழம் புளியங்காய் பாறைச்சூட்டில் வறுத்த காடை முட்டைகள், இவர்களாலும் இவைகளாலும் ஆனது கூளையனின் உலகு

நாவல் முழுக்க பரந்துவிரிந்திருக்கும் மேட்டாங்காடும் பண்ணயக்காரர்களின் அழிச்சாட்டியமும்   மாதாரிகளின் அவலவாழ்வும்  விரிவாக அக்களத்திற்கேயான வாழ்வுமுறைகளின் விவரிப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது

மாட்டுக்கறி உண்னும்பொருட்டு  கூளையனுக்கு கிடைக்கும் ஒரு ராத்திரி விடுதலையை இன்னுமொரு நாள் அவனாக நீட்டிப்பது, கிழங்குப்பணத்தை அவனையே வைத்துக்கொள்ள பண்ணயக்காரர் சொல்லுவது இந்த இரண்டு இடங்களே  நமக்கு கொஞ்சம் ஆசுவாசம் தருவதாக இருக்கின்றது முழு நாவலிலும்

பண்ணையக்காரரின் அத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேளாதவன் போலவே இருக்கும் கூளையன் தேங்காய் திருடி எதிர்பாரா பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறான் கிணற்றில் கயிற்றில் கட்டித்தொங்கவிடப்படும் கூளையன் இறுதியில்  பன்ணையக்காரரின் மகன் செல்வத்தை கிணற்று நீரில் முக்கி கொல்வதில் முடிகின்றது கதை

விவசாயம் கூலிவாழ்க்கை, கிராமத்டு வாழ்வு, சாதி வேறூபாடுகள், ஆடுமாடு வளர்ப்பிலெல்லாம் பரிச்சயமுள்ளவர்களால் எளிதில் தொடரமுடியும் கதைஇது

அத்தைய வாழ்வில் அறிமுகம்கூட இல்லாதவர்களால் இந்நாவல் விரிக்கும் களத்தையும் விவரிக்கும் கதையையும் கற்பனையில் சித்தரித்துக்கொள்வது கடினமென்றே எனக்கு தோன்றுகிறது

 மைனாக்களை வேடிக்கை பார்ப்பது, மாட்டுக்கறி இரவிற்கு பிறகு தங்கைதம்பியை பிரிய மனமின்றி  தவிப்பது, பீடி குடித்துப்பழகுவது  ஆமரத்துக்கள் இறக்க கோவணத்தை அவிழ்த்துவிட்டு மரம்ஏறி அங்கிருந்து தெரியும் காட்டைப்பார்ப்பது  பனம்பழங்களை பொறுக்கி கிழங்குபோடுவது புளியம்பழம் உலுக்குவது இரவில் திருட்டுத்தனமாக பார்க்கும் தலைவர் படம் பட்டி ஆடு காணமால் போவது தேங்காய் திருடிமாட்டிக்கொள்வது என ஒரு மாதாரிச்சிறுவனின் வாழ்வை அப்படியே நம்மால் காணமுடியும்

கதையோட்டம் தொடர்ந்து சீராக இருப்பதில்லை சில சமயம் தேங்கி நிற்கிறது, சில சமயம் பீறீட்டு பாய்கிறது சில சமயம் வறண்டும் போகிறது

வளர்த்த வீரனின் கறியை திங்கமறுக்கும் கூளையன் நண்பனாகவும் இருந்து முள்ளுக்குத்தாமல் பழம் பொறுக்க செருப்பை தந்த, பட்டிக்காவலில் அப்பனுக்கு தெரியாமல் மச்சுக்குள் வந்து படுத்துக்கொள்ளச் சொன்ன,  கள்ளிறக்குகையில் துணை இருந்த, பள்ளிக்கூட கஷ்டத்தை கன்ணீருடன் பகிர்ந்துகொண்ட செல்வத்தை கிணற்று நீரில் அறியாமலும் தவிர்க்கமுடியாமலும் முக்கிக்கொல்வதுடன் முடியும் இக்கதை, வாசிக்கையில் பல இடங்களில்  காய்ந்த வயிற்றில் மிளகாய்கள் நீச்சம் போட்டு மிதக்கும் கம்மஞ்சோற்றுக்கரைசல்  இறங்குவது போல் குளுகுளுவென்றும் ஆங்கரமாய் அடிக்கும்வெயிலைப்போல கடுகடுவென்றும்  மாறி  மாறி கூளையனின் வாழ்வை சொல்கிறது, ஆசிரியரே சொல்லியிருப்பதுபோல் சொல்லாத பல கதைகளும் உள்ளது சொல்லப்பட்ட இக்கதையினுள்ளே

நினைவுதிர்காலம் -யுவன்

டிசம்பர் 2019 விஷ்ணுபுரம் விருது விழாவில் ஊர்சுற்றி கானல் நதி மற்றும் நினைவுதிர்காலம் ஆகியவற்றை வாங்கி வந்திருந்தேன். கானல் நதியை பொள்ளாச்சியிலிருந்து கும்பகோணம் வரையிலான ஒரு பயணத்தில்  தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். ஊர்சுற்றியை எனக்கு முன்பே வாசித்திருந்த  நண்பர்களுடன் அதைக்குறித்து அவ்வப்போது பேசிக்கொண்டும் கதையைக்குறித்து சிலவற்றை  விவாதித்துக்கொண்டும்   ஒரு வார இறுதியில்வாசித்தேன். கடந்த திங்கட்கிழமை நினைவுதிர்காலத்தை துவங்கினேன். நேற்று வாசித்து முடித்தேன்.

யாரிடமும் வாசிப்புக்குறித்து பகிர்ந்துகொள்ளக்கூட முடியவில்லை . அப்படி ஒரு நிறைவு எனக்குள்.

எந்த புத்தகம் வாசித்தாலும் கதையும் மொழிநடையும் சில வர்ணனைகளும் வாசிக்கையில் நானே கட்டமைத்துக்கொண்டசில காட்சிகளும் உள்ளே மீள மீள நிகழ்ந்துகொண்டிருக்கும். பின்னர் கதையைக்குறித்து எழுதுவேன் அல்லது யாரிடமாவது பேசுவேன்

நினைவுதிர்காலம் அப்படியல்லாது வேறுபட்ட உணர்வுநிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்கே எதை நம்ப முடியவில்லை என்றால் இந்தக்கதை எனக்கு புரிந்துவிட்டதுதான். இசைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது . கொங்குபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். என் வாழ்வு முழுக்க இசை போன்ற நுண்கலைக்கான exposure எள்ளளவும் இன்றி காடும் தோட்டமும் வீடும் வேலையுமாய் இருந்தது.  தப்பிப்பிழைத்து எப்படியோ கல்லூரியும் பல்கலையும் போய் படித்தேன் என்றாலும் அடிப்படிஅயில் அதே கிராமத்து உழைக்கும் வர்க்கத்து மனுஷிதான் நான்.

இசைக்கும் எனக்குமான தொடர்பென்றால் எப்போதாவது திரையிசைப்பாடல்களை கேட்பதும் ’நல்லாருக்கே’ என்றோ ’சகிக்கலை இந்தப்பாட்டு’ என்றோ சொல்லுவதோடு முடிந்துவிடும். மற்றபடி இசைக்கு என்னையும் எனக்கு இசையையும் துளியும் பரிச்சயமில்லை

இந்தக்கதை முழுக்க, (இதைக்கதை என்று சொல்லலாமாவென்றும் தெரியவில்லை) இசையை , ஒரு இசைமேதையை அவரது உறவுகளை அதன் சிக்கலான பல அடுக்குகளை அவரது வாழ்வு முழுமையை இசையின் பற்பல நுட்பங்களை பல வகையான இசையை இசையாளுமைகளை சொல்லியது.  வாழ்நாளில் பள்ளிப்பருவத்தில் கணேஷ் குமரேஷின் துவக்ககால கச்சேரியொன்றைத்தவிர வேறு இசைதொடர்பான கச்சேரிகளுக்கு கூட போயிறாத என்னை இக்கதை முழுவதுமாக கட்டிப்போடுவிட்டது.

இக்கதை முழுவதையும் என்னால் அனுபவித்து ரசித்து ஆழ்ந்து வாசிக்க முடிந்ததில் எனக்கே ஆச்ச்சர்யம்தான்

ஏறத்தாழ  250 பக்கங்கள் கொண்ட முழுக்கதையையும் நேர்காணல் உரையாடல் வடிவிலேயே கொண்டு வந்திருப்பதும் எந்த இடத்திலும் சிறிதும் தொய்வின்றி கொண்டு போயிருப்பதும் சிறப்பு.

வறட்சியான ஜீவனற்ற கேள்வி பதில்களாக இல்லாமல் சாமார்த்தியமான பொருத்தமான சரியான சுவாரஸ்யமான கேள்விகளும் அதற்கு சற்றும் குறைவில்லாத பதில்களுமாய் துவக்கத்திலிருந்தே கதையுடன் ஒட்டுதல் வந்திவிட்டிருந்தது. மேலும் ஆஷாவையோ திரு ஹரிஷங்கரையோ குறித்து தோற்றம் எப்படியிருக்குமென்று எந்த அபிப்பிராயமும் இல்லாததால் அவர்களைக்குறித்து எனக்குள் ஒரு கற்பனைச்சித்திரம் உருவாகிவிட்டிருந்தது. அவரை  பல இடங்களில் நுட்பமாக வர்ணித்துமிருந்ததால் அவரின் ஆளுமைக்கு எனக்குள் சரியான வடிவமொன்று அமைந்துவிட்டிருந்தது.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அறை அந்த வீடு  அவரின் செல்லப்பிராணிகள் சமையலுக்கு உதவும் பெரியவர் சமையலில் என்ன பதார்த்தங்கள் அதில் அவர் விரும்பி உண்ட இனிப்பு ஒரு விளக்கைபோடுவது அதை  அணைத்து மஞ்சள் விளக்கை போடுவது  பேசிக்கொண்டிருக்கையிலேயே அந்தி மாயம் போல வந்து கவிழ்ந்துவிடுவது,இடையிடையே அவர் ஓய்வறைக்கு செல்வது, ஆஷாவின்  கார் கோளாறாவது, அவ்வப்போது இடையிடும் சில விருந்தினர்கள் அங்கிருக்கும் அலமாரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் என்று விலாவாரியான விவரிப்புக்கள் இருந்ததால் நானும் அந்த அறையில் அமர்ந்திருந்தேன் என்றே சொல்லலாம். எப்பேர்ப்பட்ட ஆளூமை அவர் என்னும் பிரமிப்பு இன்னும் அகலவில்லை

மூத்த சகோதரரின் மீது மனக்குறை இருப்பினும்  மரியாதைக்குறைச்சலோ மலினமான அபிப்பிராயமோ துளியும் அற்றவர். அவரது ஆளுமை எனக்கு அவர் மீது பெரிதும் மரியாதை கொள்ள வைத்தது.

தில்லி சுல்தானின் அரசவையில் ஆஸ்தான பாடகராக இருந்த அவரது முத்தாத்தாவின் கதை மெய்ப்புக் கொள்ள வைத்துவிட்டது. அக்கதையை வாசிக்கையில் வாசிப்பதுபோலவே இல்லை எனக்கு  ஒரு புராதன கருப்பு வெள்ளைத்திரைப்படத்தில் நானும் ஒரு பாத்திரமேற்று அங்கே அக்கச்சேரியில் இசையைக்கேட்டபடிக்கு அமர்ந்திருந்தேன்.

கிராமத்தில் அழியில் எதிர்ப்பட்டவருக்கென ருத்ரவீணை வாசித்த அவரது முன்னோர், கோளாறாகி ரயில் நின்று விட அப்போது புழுதியில் அமர்ந்து அந்த கிழவனாருடன் சேர்ந்து கச்சேரி செய்த அண்ணா, விசிலிலேயே இசைத்த நண்பர், காரணமறியா அவரது தற்கொலை, காணாமலே போன இன்னொரு தோழன் என்று ஒரு புனைவுக்கதையின் எல்லா சுவாரஸ்யங்களும் இருந்தது இதில்.  பல முக்கியமான வேலைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கச்சொன்னது கதை என்னை

தெய்வீகமான முப்பாட்டன்கள்,  நேர்மையையே முக்கியமாக கொண்டிருந்த, தகப்பனார் மாபெரும் இசைமேதையான அண்ணா அவரது சில சறுக்கல்கள், அவர் மீது  இவருகிருக்கும் ஒரு மாற்றுக்கூடகுறையாத மரியாதையும் பக்தியும் ஆஷாவின் அந்தரங்க வாழ்வைக்குறித்துத் தெரிந்துகொண்ட சில விஷயங்களுமாக நினைவுதிர்காலம் என்றென்றைக்குமாய் மனதில் வரி வரியாக நினைவிலிருக்கும் கதைகளொலொன்றாகிவிட்டது

பல பக்கங்களில்  அற்புதமான கவிதைகளை பத்திகளாக கொடுத்திருந்தது போலிருந்தது. பத்திகளின் வரிகளை மடக்கி கவிதைகளாக்குவதைத்தான்  வாசித்திருக்கிறேன் இது முற்றாக எதிராயிருந்தது. உதாரணமாக  கச்சேரி நாளன்று அவரது மனநிலையைப்பற்றி சொல்லும் பத்தியை சொல்லுவேன்

// கச்சேரி நாளில் செவிகளில் ஒருவிதக்கூர்மை அதிகரிப்பது, அதிகாலைப்பொழுதின் நிர்மலமான அமைதியின் பரப்பில் ஒவ்வொரு ஒலியாக சொட்டி குமிழிகளையும் வளையங்களையும் உருவாக்குவது, புத்தம் புதிய காகம், முதன்முறையாக காதில் விழும் சைக்கிள் ஒலி, அந்தக்கணம் தான் பிறந்து உயர்ந்தது போன்ற ஜன்னலோர மரக்கிளை//

அபாரம்

இப்படி பல பக்கங்களில் அடிக்கோடிட்டுக்கொண்டே வாசித்தென்

சத்தியத்தில் அடிக்கோடிட்டு வாசிக்கும்படியான புத்தகங்களை அரிதாகவே கிடைக்கப்பெறுகிறேன்

ஸ்ரீஹரிஷங்கர் அவரது மனைவி ஊர்மிளாவைப்பற்றிச்சொல்லியவற்றை வாசிக்கையில் மட்டும் அங்கெயே மனம் நின்று விட்டது. அவ்வரிகளை மீள மீள வாசிப்பேன். பின்னர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வேறு ஏதேனும் வழக்கமான இல்பேணுதலுக்கு சென்று விடுவேன் மனம் மட்டும் கடுமதுரம் ஒன்றை சாப்பிட்ட தித்திப்பில் நிறைந்திருக்கும் எப்படியாகப்பட்ட பேரன்பு அது என்று சிலாகித்துக்கொண்டேயிருக்கும் மனம்

இருவருமாக கருப்புக்கார் ஒன்றைத்துரத்திச்செல்லும் அந்த கனவிற்கு பின்னர் உங்கள் மனைவியிடன் உங்களுக்கும் அதே போன்ற கனவே வந்ததென்று சொன்னீர்களா என்னும் கேள்விக்கு // பளிங்கு பொன்ற மனம் அது வீணாக கலக்குவானேன் . அவளை பிரியமாக அணைத்துக்கொண்டேன்//  என்கிறார் அறியமால் கண் நிறைந்தது எனக்கு வாசித்ததும்

/ மாயப்பிரசன்னத்தின் வசம் சொந்தக் கவலைகளை ஒப்படைத்துவிட்டு அடைக்கலமாகிவிடும் மார்க்கம் எவ்வளவு இதமாயிருக்கிறது//

 இவ்வரிகளிலும் மனம் சிக்கிக்கொண்டது கொஞ்ச நேரத்திற்கு

ஹிந்துஸ்தானி இசையுலகம் எனக்கு முற்றிலும் பரிச்சய்மற்றது என்பதை விடவும் அந்நியமானது என்றே சொல்லுவேன்.என்னால் இந்தக்கதையுடன் இத்தனை ஆழ்ந்துபோக முடிந்ததின் ஆச்சரயம் இன்னும் நீடிக்கிறது . ஸாரங்கியும் வயலினும் குரலிசையும் மொஹர்சிங்கும் மேண்டலினும் ஜுகல்பந்திகளும்  ராகங்களும் அதில் புகுத்தப்ட்ட புதுமைகளும் மேல் கீழ்ஸ்தாயிகளும் தாளமும் ஸ்வரமுமாக எனக்கு அறிமுகமற்ற ஆனால் மிகவும் வசீகரமான ஒரு உலகிலிருந்தேன் வாசிக்கையிலும் இதோ இப்போதும்

எதேச்சையாக கானல் நதிக்கு பின்னரே நான் இதை வாசிக்கும்படி அமைந்துவிட்டது

கானல்நதி தஞ்செய் முகர்ஜி என்னும் ஆளுமையைபற்றியது. அதில் என்னால் பெரிதாக இறங்க முடியவைல்லை

இப்படி கதையைக்குறித்து எழுதிக்கொண்டேபோனால் கதை வந்திருக்கும் 286 பக்கங்களையும் விட அதிகமக எழுதுவேன் போலிருக்கின்றது. அத்தனைக்கு இக்கதையைக்குறித்துச் சொல்ல எனக்குள் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.. இசையை கொஞ்சமும் அறிந்திராத ஒரு வாசகிக்கு இந்த கதை இத்தனை பரவசமளிக்குமென்றால் அதன் நுட்பங்களை அறிந்தவர்களுக்கு இது எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

மண்ணும் மனிதரும்

’மரளி மண்ணிகே’ என்னும் தலைப்பில் நவீன இந்தியாவின் ரபீந்திரநாத் தாகூர் என்று ராமச்சந்திர குஹாவால் புகழப்பட்ட சிவராம காரந்த் அவர்கள் கன்னடத்தில் எழுதி தமிழில் ’மண்ணும் மனிதரும் ‘ என்ற தலைப்பில்  தி.ப. சித்தலிங்கையாவால்    மொழி பெயர்க்கபட்ட நாவலில்  மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்ந்த காலமும் அவர்களை வாழ்நாளெல்லாம் ஊர்விட்டு ஊர் அலைக்கழித்த சூழலையும் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

1840 தொடங்கி 1940 வரை வாழ்ந்த ஒரு குடும்பத்தையும் அக்குடும்பத்தின் உறவுகளை சுற்றத்தை நட்பை தொடரும் இருதலைமுறைகளை சொல்லுகிறது ’மீண்டும் மண்ணுக்கே’ என்னும் பொருள்படும் தலைப்பில் கன்னடத்தில் எழுதப்பட்ட இந்நாவல்

மிக விரிவான தளத்தில் எழுதபட்டிருக்கும் இந்நாவலின் கதை புரோகிதம் செய்துவாழும் அந்தணரான ஐதாளரின் குடும்பத்தை மையமாக கொண்டிருக்கிறது.  ஐதாளரின் தந்தை சிக்கனம் கருதி நல்ல பெருமழை பெய்யும் காலத்தில் ஐதாளருக்கு  செய்து வைக்கும் கல்யாணத்தில் நாவல் துவங்கி ஐதாளரின் பேரன் ராமனின் கல்யாணத்தில் முடிகின்றது

கழிமுகத்தில் ஒரு சிறு வீட்டைத்தவிர வேறெந்த சொத்துக்களும் இல்லாத புரோகிதம் செய்யப்போகும் இடத்திலேயே அன்றைய உணவை முடித்துக்கொள்ளும்  ஐதாளரும்  கடும் உழைப்பாளியான குழந்தைகள் இல்லா அவரது மனைவி பார்வதியும் சிறுவயதிலேயே கணவரை இழந்து குறைபட்டுபோன ஐதாளரின் சகோதரி சரஸ்வதியுமே  முதல் தலைமுறை மாந்தர்களாக  துவக்கத்தில் வருகின்றனர்.

ஐதாளர் குழந்தையின்பொருட்டு செய்துகொள்ளும் இரண்டாம் திருமணம் அதில் பிறந்து செல்லம் கொடுக்கப்பட்டு திசைமாறிப்போன லச்சன் அவன் மனைவி நாகவேணி ஆகியோர் இரண்டாம் தலைமுறை

கழிமுக வீட்டை விட்டு பெருநகரத்துக்கு  கல்வியின் பொருட்டு இடம்பெயரும் அவர்களின் மகன் ராமன்   மூன்றாம் தலைமுறை  என நீளும் கதையில் 18   மற்றும் 19  ஆம் நூற்றாண்டின் காலச்சூழலை மிக நன்றாக அவதானிக்க முடிகின்றது.

பல்வேறுபட்ட குணச்சித்திரங்கள் உள்ள பாத்திரங்களின் வாயிலாக அன்றைய மாந்தர்களுக்கு மண்ணின் மீதான பெருவிருப்பு இருந்ததையும் பெண்களின் அயராத உழைப்பால் குடும்பங்கள் தலை நிமிர்வதையும் தெளிவாக காணமுடிகின்றது

ஐதாளரின் திருமணத்திற்கு வர துணியாலான குடைபிடிப்பவர்களே ஊரின் பெருந்தனக்காரர்களென்னும் வரியிலிருந்தே அக்காலத்தின் பொருளாதார நிலையை அறிந்துகொள்ளலாம்.

ஏழை அந்தணர் வீடுகளில் உணவுப்பழக்கம் எப்படியென்பதையும் மிக சாதரணமாக சொல்லிச்செல்கிறார் கதாசிரியர் கணவர் புரோகிதம் பண்ணப்போகும் வீட்டில் சாப்பிடுவதால் பெண்களிருவரும் அவடக்கீரை தாளித்தோ அல்லது உருளைகிழங்கோ வெள்ளரிக்காய்களோ இருக்கும் மிக எளிய உணவை ஒரு பொழுது உண்டுவிட்டு இரவில் பிடி அவலை நனைத்து சாப்பிட்டுவிட்டு படுக்கின்றனர்.   கடும் உழைப்புக்கு சற்றும் பொருந்தாத ஏழ்மை.  மாவடு தேடி நல்ல வெய்யிலில் பலகிலோமீட்டர் தூரம் நடந்து கிடைத்த மாங்காய்களை  ஊறுகாய் போடுவதும் சித்தரிக்கபட்டிருக்கிறது. அவர்களுக்கு உதவி செய்யும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சூரனே சொல்லுவதுபோல ’பிராமணர்களுக்கு எதற்கு குறைவென்றாலும் நாக்குக்கு மட்டும் அப்படி  வேண்டியிருக்கிறது’

பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளை நினைக்கவும் முடியாது இக்காலத்துப்பெண்களால் வீட்டைப்பெருக்குவது பற்றுப்பாத்திரங்களை தேய்ப்பது கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் வைப்பது வயலில் வேலை செய்வது வண்டல் மண்ணை அரித்து சட்டி சட்டியாக கொண்டு வந்து சேர்ப்பது நீர்பாய்ச்ச ஏற்றமும்  கபிலையும்  இறைப்பது தினப்படி  வீட்டை மெழுகுவது தோட்டத்தில் விதைப்பது நாற்று நடுவது அறுப்பது புன்னைக்காய்களை சேகரித்து எண்ணை எடுப்பது பால் கறப்பது கடல் நீரைகாய்ச்சி வீட்டு சமையலுக்கு தேவையான  உப்பெடுப்பது வெள்ளத்தில் அடித்து வரும் மரக்கட்டைகளை உயிரைப் பணயம் வைத்து விறகுக்கென சேர்ப்பதென்று முடிவில்லாமல் நீள்கிறது இவர்களின் உழைப்பின் பட்டியல். அசாத்தியமான உடல்வலிமையுடன் மனவலிமையும் உள்ளவர்களாயிருந்திருக்கிறார்கள் அப்போதைய பெண்கள். வெயிலும் மழையும் வெள்ளமுமாய் ஓயாமல் வாழ்வை அலைக்கழித்தாலும் பெண்கள் யாவரும் மூன்று தலைமுறைகளிலுமே புரிதலும் சகிப்புத்தன்மையும் மன்னிக்கும் விசாலமனதும் உளளவர்களாகவே இருக்கிறார்கள்

கணவர் எந்நேரம் வீடுதிரும்பினாலும் எந்த கேள்வியும் கேட்காமலிருப்பது புத்திரபாக்கியத்துக்கென மறுதிருமணம் செய்யும் போதும் எதிர்ப்பின்றி அதை ஏற்றுக்கொள்வது அத்திருமணத்திற்கென்று அப்பளம் இடத்துவங்குவதென்று பெண்கள் அக்காலத்தில் செய்துகொண்டிருந்த வேலைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்த வேதனைகளையும் அவர்களுக்கு நடந்துகொண்டிருந்த அநீதிகளையும் அப்போதைய வாழ்வின் இயங்குமுறைககளாகவே சொல்லிச்செல்கிறது இந்நாவல்

அப்போது வழக்கத்திலிருந்த குறுநிலங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த  பெரிய முதலீடுகள்  இல்லாத விவசாய முறைகளையும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த முடி மணங்கு சேர் கோர்ஜி என்னும் அளவை முறைகளும் கதையில் பல இடங்களில் சொல்லப்படுகின்றன.

எத்தனை ஏழ்மையிலிருப்பினும் அந்தணர்களான அவர்களுக்கு கீழிருக்கும் தாழ்த்தபட்டவர்களோடு இணைந்தே விவசாயம் நடந்திருக்கிறதென்பதும் ஐதாளரின் குடும்பத்திற்கு சூரனும் பச்சியும் செய்யும்  பிரதிபலன் எதிர்பாராத தொடர் உதவிகளிலிருந்து புலனாகின்றது,

இறந்த மாட்டின் சவத்தை பறையர்கள் வந்து எடுத்துச்செல்லும் வழக்கமும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

கழிமுகத்தில் அமைந்திருக்கும் ’’கோடி’’ கிராமமே கதைக்களமென்பதால் அப்பொழுது படகுகளுக்கு மஞ்சி என்னும் பெயரிருந்ததும் பாய்மரப்படகில் ஒரு வகை பத்தொமாரி என்பதும் கோடா என்பது மிகபெரிய பாய்மரப்படகென்பதும் ஐதாளரின் பார்வையில் துறைமுகப்பகுதியை விவரிக்கையில்  குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து  இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்காத பெயர்களையும் விஷயங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்

பிள்ளை இல்லாதவர்கள் சுவீகாரம் எடுத்துக்கொள்வது அப்போதும் நடைமுறையிலிருந்திருப்பதை சரஸ்வதியும் பார்வதியுமாய் ஐதாளரிடம் அதுகுறித்து பேசுவதிலிருந்து தெரிகிறது. எதிர்பாரா விதமாக ஐதாளர் சுவீகாரத்திற்கு முனையாமல் சத்தியபாமையை இரண்டாம் திருமணமே செய்துகொள்வது அந்தப்பெண்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

 இரண்டாவதாக ஒருத்தி தன் வாழ்வில் வரப்போகும் போதும் பார்வதி அவள் கன்னடபிராமணர்களில்   ’கோட’ அல்லது ’சிவள்ளி’ இவற்றில் எந்தப்பிரிவை சேர்ந்தவளென்பதில் கவலை கொள்வதிலிருந்து அப்போது சாதிவேற்றுமைகள் மட்டுமன்றி  குடும்பங்களுக்குள் நுண்ணிய சாதீய அடுக்கின் சிக்கல்களும்  இருந்திருக்கிறதென்பதை அறியலாம்.

திருமண ஊர்வலத்தில் ஒவ்வொருவர் கையிலும் இரண்டு பந்தங்களை கொடுத்து கூட்டம் அதிகமானதுபோல் காட்டுவது பாட்டியன்னம் என்னும் பாட்டிமை அன்று மணமகளுக்கு நடக்கும் சடங்கு  தாசிகள் பொன் பெற்றுக்கொண்டு சலாமிடுவது பெரும் அந்தஸ்தாக கருதப்படுவது  போன்ற விவரணைகளிலிருந்து அப்போதிய திருமணங்களின் போது   நடக்கும் பலவகையான முறைமைகள் வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகின்றது.

 லச்சன் பிறந்த பிறகு அவனை பள்ளிக்கூடம் சேர்ப்பது குறித்தான பிரச்சனையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அவனை சேர்ப்பதென்பது இழிவு என்று பெரியவர்கள் யாவரும் ஒன்றே போல அபிப்பபிராயப்படுவதிலிருந்து தீண்டாமை 18 ஆம் நூற்றாண்டு முடியும் தருவாயிலும் மிகத்தீவிரமாக நிலவி வந்திருப்பதை உணரலாம்.

மெல்ல மெல்ல வட்டிக்கு பணம் கொடுக்கும் வழக்கம் வருவதை, ஆடம்பரத்துக்கு விருப்பப்படும் குடும்பங்கள் பெருகுவதையெல்லாம் சீனப்பன், சீனப்பய்யராக மாறுவதுபோன்ற நுட்பமான கதாபாத்திர மாற்றங்களின் மூலம் சொல்லத் துவங்குகிறார் கதாசிரியர்.

 காட்சிகள் மாறிக்கொண்டே வந்து லச்சன் தட்டுக்கெட்டு திசைமாறி தீய வழக்கங்களுக்கு அடிமையாகி, அவனால் அவன் மனைவியின் உடல்நிலையும் பாழாவதை பார்க்கிறோம், 500 ரூபாய் பணம் கொடுத்தால் மணியக்காரர் பதவி கிடைக்கும் என்னும் வரிகளில்  லஞ்சம் கொடுக்கும் சூழல் 19 ஆம் நூறாண்டில் மெல்ல துவங்கியிருப்பதை உணரலாம்

பீட்ஸா இந்தியக்குக்கிராமங்களிலும் புழக்த்திலிருக்கும் இக்காலகட்டத்தில் நாவலில் காப்பி என்னும் பானம் மெல்ல கலாச்சாரத்துக்குள் நுழைவதையும் பல ஆச்சாரமான குடும்பங்கள் அதை வீட்டுக்குள்ளே  அனுமதிக்காமலிருந்ததையும் வியப்புடன்  வாசிக்க முடிகின்றது.

காலங்கள் மாறி  வருகையில் லச்சனின் மனைவியான நாகவேணி சரஸ்வதியை, பார்வதியை போலல்லாமல் தன்னந்தனியே கணவனின்றியும் வாழ்த்துணிகையில் பெண்களின் மனோநிலையும் மாறிக்கொண்டு வருவதை நாம் அறியலாம்.

 சுதந்திரப்போரட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் ராமன் அப்போதைய சுதந்திர உணர்வெழுச்சி மிக்க இளைஞர்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்

எத்தனையோ க‌ஷ்டகாலங்கள் மாறி மாறி வந்தாலும் மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைப்பெண்களும் அந்த ஓட்டு வீட்டுக்கே திரும்புகிறார்கள் அம்மண்ணே அவர்களை  பிணைக்கிறது வாழ்வுடன் ’’மீண்டும் மண்ணிற்கே’’ என்னும் கன்னட தலைப்பும் ’’மண்ணும் மனிதரும்’’ என்னும் தமிழாக்க தலைப்பும் மிகபொருத்தமாக கதையின் மூன்று தலைமுறை மாந்தர்களையும் நமக்கு காட்டித்தருகின்றது

வேளாண்மையும் தொற்றுநோயின் இறப்புக்களும் ஏழ்மையுமாக முதல் தலைமுறை ஆங்கிலக்கல்வியும் புதிய கலாச்சாரமும் கிடைக்கப்பெறும் இரண்டாம் தலைமுறை  பெருநகரங்களுக்கு கல்வியின் பெயரால் இடம்பெயரும் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ளும் மூன்றாம் தலைமுறை என மாறிவரும் தலைமுறைகளின் மூலம் மாறி வந்திருக்கும் இந்திய சமூக வாழ்வினையும்   சொல்லும் இந்நாவல் இறுதியில்  ராமன் சரஸ்வதி என்னும் அவனின்  பாட்டியின் பெயருடன் துடைப்பமும் கையுமாக வீட்டுப்பொறுப்பை நிர்வகிக்க வல்லவள் என்னும் சித்திரத்தைக் கொடுக்கும் பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்வதுடன் நிறைவடைகிறது.   

இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் குழந்தைக்காக ஐதாளர் மறுதிருமணம் செய்துகொள்ளுவதும் பின்னர்  சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடும் மூன்றாம் தலைமுறைக்காரனான நவீன சிந்தனையுளவனான ராமனும் பிற காரணங்களை விட வீட்டுபொறுப்பில் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக காட்டியிருப்பதும்  காலங்கள் எத்தனை மாறினாலும் பெண்களின் இடமென்று ஆண்கள் நிர்ணயம் செய்துவைத்திருப்பது சமையலறையும் படுக்கையறையும் தானென்பதையும் அன்றும் இன்றும் என்றும் இது ஆண்களின் உலகே என்பதை இந்நாவலும் காட்டும் இடமென்பதாகவும் கொள்ளலாம்

இந்நாவல் நமக்கு அக்காலத்திலிருந்த  சாதீய அடுக்குகள் தீண்டாமை தொற்று நோய்கள் பெண்களின் வாழ்வு முறை ஆண்களின் அதிகாரம் புதுக்கலாச்சாரங்கள் மெல்ல மெல்ல சமுகத்தில் நுழைவது என பலவற்றைச் சொல்கிறது.

சிவரம காரந்தின் பாட்டி தனது தள்ளாத வயதில் விருப்பு வெறுப்புகளின்றி இக்கதையை  அவருக்கு சொல்லியதால் கதையிலும் எந்த பாரபட்சமும் சார்பும் இன்றி கதை மாந்தர்கள்  அனைவரும் நடுநிலையுடன்  சித்தரிக்கபட்டிருக்கின்றனர்

மண்ணும் மழையும் பெண்களும் ஏழ்மையும் இசையும் இயற்கையுமாக அழகிய நாவல் இது. ராமனும்  அவன் தாயும் ஓர் இரவில் பொழியும் நிலவின் புலத்தில் நனைந்தபடி  கடற்கரையில் அமர்ந்திருக்கும் ஒருகாட்சி  சம்சாரம் ஒரு நரகமென்றாலும் அதிலும் ரசிக்கத்தக்க விஷயங்கள் சம்பவங்கள் நிகழ்வுகள் இருக்கும் என நமக்கு இக்கதை உணர்த்தும் ஒரு அழகுச்சாட்சி. அக்காட்சி  ஒரு கவிதையையைப்போல  கதையில் தீட்டப்பட்டிருக்கும்.

ஞானபீட விருது சாகித்ய அகாடமி விருது என பலவற்றைப் பெற்ற அறிஞரான சிவராம காரந்தின் கன்னட மொழிவளத்திற்கு சற்றும் குறையாமல் தமிழில் மிகசிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கும் திரு தி ப சித்தலிங்கையாவிற்கு வாசிக்கும் அனைவரின் நன்றிகளும் கட்டாயம்  உரித்தாகும்

நிலத்தில் படகுகள்

விஷ்ணுபுரம் விழாவில் வாங்கிய ஜேனிஸ் பரியத்தின் ‘ நிலத்தில் படகுகள் ‘’ கதைத்தொகுப்பை இன்று  2 மணிநேரத்தில் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். சமீபத்தில் வாசித்ததில் மிகவும் கவர்ந்த கதைகள்னு இதிலிருக்கும் எல்லாவற்றையுமே சொல்லலாம். வழக்கத்தைக்காட்டிலும் மெதுவாக வாசித்தேன்.

கதைக்களமும், கதாபாத்திரங்களின் பெயர்களும், உணவு வகைகளும், பானங்களும், கலாச்சாரமும், மொழியும், நம்பிக்கைகளும், அவர்களின் இடர்களும், துயர்களும், வாழ்வுமுறையும் மிக வேறுபட்டது நான் இதுவரையிலும் வாசித்தவற்றிலிருந்தும் என் வாழ்வுமுறையினின்றும். அதுவே மிகவும் வசீகரித்தது.  ஜேனிஸ் மண்மகள்தான்.  வாழ்ந்த இடத்தின் ஆன்மாவை இப்படி எழுத்தில் உள்ளபடியே கொண்டுவருவது அவருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. திரு விஜயராகவன் துவங்கி  திரு.சிறில் அலெக்ஸ் வரையில் மொழிபெயர்த்தவர்கள் கதைகளின் ஆன்மாவை கொஞ்சமும் சிதைக்காமல் மெருகேற்றியிருப்பதும் வியப்பளித்தது.

நீர்த்துளிகளைக்கொண்டிருக்கும் கூரிய ஊசியிலைகளுடனிருந்த  பைன் மரஙக்களுக்கிடையிலும், ரோடோடென்ரான் மலர்க்கொத்துக்களை பார்த்தபடிக்கும், வாசற்படிக்கு இருபுறமும் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட்களை கடந்தும், மலைச்சரிவெங்கும் அடுக்கடுக்காக  தெரியும் வயல்வெளிகளிலும்,  வெடிக்க காத்திருக்கும் அடர் ஊதா ஜகரண்டா  மரங்களை தாண்டியும்,  ஷில்லாங்கிலும்,  போம்ரெங் குக்கிராமத்திலும், லிக்குமீரிலும், சந்த்பாரியின்  விஸ்தாரமான தேயிலைத்தோட்டங்களிலும் நடந்துகொண்டும், விடுதிகளில் நூடுல்ஸும், பன்றி இறைச்சியும், கிரீம் பன்களும் சாப்பிட்டுகொண்டும் கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன் அல்லது நானும் அக்கதைகளுக்குள்ளேயே, கனவுகளில் வரும் எண்களிலிருந்து சூதாட்டத்தில் வெற்றிபெறுவதை கணிக்கும் தையல்காரர் சுலைமானாகவும், தங்க மாஸிர் மீன்களை பிடித்துக்கொண்டிருக்கும்  மாமா கின்னாகவும் குளிர்காயும் கரி அடுப்பின் கங்குகள் அணையும் வரை மகனுக்கு பழங்கதைகளை சொல்லிக்கொண்டிருக்கும் அம்மாவாகவும், பயணப்பைக்குள் சிவப்பு சம்பா அரிசியை மறைத்து வைக்கும் பாரிஷாவாகவும், கிராம்பும் சிகரெட்டும் மணக்கும் தோழியாகவும் இன்னும் பலராகவும் இருந்தேன்

முதல்பக்கத்திலிருந்தே கதைகளுக்குள் ஆழ்ந்து மூழ்கிவிட முடிந்தது. மந்திரங்கள், நீர்த்தேவதைகள், விசித்திரமான  நம்பிக்கைகள், குதிரைகள் பாய்ந்துவிழுந்து இறக்கும் ஏரிகள், மணக்கும் தேவதாரு மரங்கள் என பக்கத்துக்குப்பக்கம் மிகப்புதிய நான் இதுவரையிலும் வாசித்து அறிந்திராத பிரதேசங்களில் நடக்கும் கதைகளென்பதால் புத்தகத்தை கீழே வைக்கவே இல்லை

நேரில் விழாவில் சந்தித்து பேசியிருந்ததாலென்று நினைக்கிறேன், பல இடங்களில் ஜேனிஸையும் அவரது பால்யம் மற்றும் பதின்மவயது நினைவுகளையும் என்னால் அடையாளம் காணமுடிந்தது

இஸ்ரேலுக்கு கணவன் விட்டுச்சென்ற இரவில் பள்ளிப்பருவத்து காதலனைதேடிச்செல்பவள் , விடுமுறைக்கு செல்கையில் தனது காதலனை வேறு யாரும் அபகரித்துக்கொள்ளாலிருக்கனும் என்று விசனப்படும்  சிறுமி, புதிய லினன் துணியைபோல மணக்கும் பள்ளித்தோழி, காதலனை சடுதியில் மாற்றிக்கொள்ளும் இன்னொருத்தி, ஒரேயொரு மதியநேர பைக்பயணத்தில் விடுதலையை அறிந்துகொள்ளும் மற்றுமோர் சிறுமி, சாரா கிரேஸ், மெல்வின் என்று ஜேனிஸ்  அறிமுகபடுத்தும் பெண்கள் மிக வசீகரமானவர்கள், இனி என்றும் மறக்கமுடியாதவரகளும் கூட

மந்திரங்களும், நம்பிக்கைகளும், நோயும், கலவரமும், மலைத்தொடர்ச்சிகளும், செழிப்பான மண்ணும், தாவரங்களும், துயரங்களும், காதலும், பிரிவும், மர்மங்களும், முத்தங்களும், இறப்பும் இக்தைகளெங்கும்  தூவியிருப்பது போலிருந்ததுது. இப்படி nativityயுடன் கதைகளை படித்து வெகுகாலமாகிவிடது

எல்லாக் கதைகளுமே மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருகின்றன என்றாலும் ஆகச்சிறந்ததென்று விஷால்ராஜாவின் கதையைச்சொல்லுவேன்

கதைகளுக்குள் ஆழ்ந்துவிட்டதால் வாசித்து முடிந்து சமையலறைக்கு இரவுணவு தயாரிக்கச் செல்கையில் என் வீடே எனக்கு மிகப்புதிதாக தெரிந்தது கதைக்களங்களிலிருந்து  என் மனம் இன்னும் விலகவேயில்லை சமைக்கபிடித்திருந்த  கரண்டி வழவழப்பான செதில்களை உடைய கா பாவாக தோன்றியது,  விளக்கு வெளிச்சத்தில்  ஜன்னல் வழியே கூரிய நுனிகள் கொண்ட பைன் மரமாக  இருந்தது என் பிரியத்துக்குரிய புன்னை

  இக்கதைகளில் வரும், பிடித்துவிட்டால் பிறகு ஒருபோதும் விடவே விடாத நீர்த்தேவதையைப்போல என்னை இந்த கதைகளும்  ஒரேயடியாக பிடித்துக்கொண்டு விட்டன

© 2023 அதழ்

Theme by Anders NorenUp ↑