1975-ன் மிகக்குளிரான ஒரு மாலை அது. ஜப்பானியர்களின் பிரியத்துக்குகந்த கபுகி கலைஞரும் கபுகி பரம்பரையின் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த வருமான ’பேண்டோ மிட்ஷுகோரோ’ டோக்கியோவின் “Living National Treasure,” என்னும் உணவகத்துக்குள் சென்றார். உணவகத்தில் இருந்த அனைவரும் அவரை பாரம்பரிய முறைப்படி எழுந்து குனிந்து வணங்கினார்கள்.
அவர் ஜப்பான் முழுவதும் பிரபலமான ஒரு கலைஞர். தனது 7வயதிலிருந்தே கபுகி கலையில் ஈடுபட்டிருப்பவர். கபூகி என்பது ஜப்பானிய பாரம்பரிய நடனமும் மேடை நாடகமும் இணைந்த ஒரு கலை. பகட்டான ஆடைகளும் ஆபரணங்களும் ஒப்பனைகளையும் கொண்ட அது இந்தியாவின் கதகளி, யஷகானக்கலைகளுக்கு இணையானது.
அந்த உணவகம் ஜப்பானில் தடை செய்யப்பட்டிருந்த, நஞ்சு நிறைந்த ஃபுகு மீனின் ஈரலில் செய்யபப்டும் fugu kimo, என்னும் உணவுக்குப் பிரசித்தி பெற்றது. அன்று மிட்ஷுகோரோ அவரது மேடைகளில் காண்பிக்கும் தைரியத்தை உணவுத்தேர்ந்தெடுப்பிலும் காட்ட நினைத்தாரோ என்னவோ ஒரு முறை ஃபுகுமீன் ஈரலை வாங்கி சுவைத்தவர் மீண்டும் அதையே கொண்டு வரச் சொன்னார்.

அது ஆபத்தை உண்டாக்குமென உணவக ஊழியர்கள் எச்சரித்த போது தனக்கு TTX எனப்படும் ஃபுகுமீனின் நஞ்சுக்கு எதிரான நோயெதிர்ப்பு இருப்பதாக சொன்னார். இரண்டாம் முறையும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் கேட்டு நான்கு முறை ஃபுகுவின் ஈரல் உணவைச் சாப்பிட்டார்.
ஒரு தட்டில் இருந்த நஞ்சு பலரைக்கொல்லும் அளவுக்கு வீரியம் கொண்டது அவரோ நான்கு தட்டுக்கள் வாங்கி உண்டிருந்தார்.
ஃபுகு நஞ்சூட்டலின் துவக்க அறிகுறியாக அங்கேயே அவருக்கு நாக்கும் உதடுகளும் ஊசி குத்தியதைப்போல சிலிர்த்து முகம் லேசாக மரத்துப்போனது.
விடுதி அறைக்குத் திரும்பிய மிட்ஷுகோரோ முழு நினைவில் இருக்கையிலேயே தசைச்செயலிழப்பும் பக்கவாதமும் உண்டாகியது. பேசவும் கைகால்களை அசைக்கவும் முடியாமல் அத்தனை ஆயிரம் முறை மேடைகளில் நடித்து ஜப்பானியர்களின் மனம் கவர்ந்த அவர் அன்று உடலே சிறையாகி கைகால்கள் அசைவின்றி இருந்த 8 மணி நேரத்துக்குப்பின் உயிரிழந்தார்.

விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஈரலை அளித்த சமையல் கலைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவரது ஃபுகு சமைப்பதற்கான உரிமம் குறிப்பிட்ட வருடங்களுக்கு ரத்துசெய்யப்பட்டது. ஆனால் ஜப்பான் ஒரு மாபெரும் கலைஞரை அவர் மரணத்தைச் சுவைக்க விரும்பியதால் இழந்தது.
ஜப்பானில் அன்றிலிருந்து இன்றுவரை மிட்ஷுகோரோவின் மரணம் பெரும் எச்சரிக்கைப் பாடமாகவே அருக்கிறது. புதிய உணவுகளைத்தேடிச்செல்லும் சாகசக்காரர்களுக்கு மிட்சுகோரோவின் கதை எப்போதும் சொல்லப்படுகிறது
உலகெங்கிலும் உணவுக்கலாச்சாரம் என்பது சுவையான முரண்பாடுகளால் ஆனது. முறையாக சமைக்கப்படாத்தால், சரியான இடத்தில் சேமிக்கப்படாததால், கலப்படத்தால் என உணவு நஞ்சாகிறது. கிளாஸ்ட்ரிடியம் பொட்டுலினம் போல ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவிலிருந்து உயிரைக் கொல்வதுமுண்டு.
ஆனால் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே அந்த உணவுகளை விரும்பி உண்பது என்பதும் உலகில் இருக்கிறது.
மரவள்ளிக்கிழங்கிலிருக்கும் வேகவைத்தால் நீங்கும் சயனைடுக்கு இணையான நஞ்சு, உண்னும் காளானைப் போலவே இருக்கும் அமடாக்ஸின் நஞ்சைக் கொண்டிருக்கும் உலகின் மிக மோசமான் விஷக்காளானான டெத் கேப் காளான், ஆப்பிள் மற்றும் செர்ரி பழங்களின் நஞ்சு கொண்ட விதைகள், முழுமையாக பழுக்காவிட்டால் ஹைபோகிளைசின் A என்னும் நஞ்சைக்கொண்டிருக்கும் ஜமைக்காவின் தேசிய உணவான அக்கிப்பழம், பக்கவாதத்தை உண்டாக்கும் நஞ்சை ஈரலில் கொண்டிருக்கும் கிழக்கு ஜப்பான் கடலில் கிடைக்கும் மீனான கிம்ச்சிஜ்ஜி, கொரிய உணவுகளில் பிரபலமான, உயிருடன் இருக்கையிலேயே துண்டுகளாக்கப்பட்டு துள்ளத்துடிக்கச் சாப்பிடுகையில், தொண்டையில் ஒட்டிக்கொண்டு உயிரைப்போக்கும் ஆபத்தான சானாகிச் ஆக்டோபஸ் என இந்தப்பட்டியல் நீண்டது.
உலகம் முழுவதும், மிக நுணுக்கமான தயாரிப்பு இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கக்கூடிய உணவுகளும் உண்டு. அவற்றின் தனித்துவமான சுவைகளுக்காகவும் ஆபத்தை சந்திக்கும் சாகசத்துக்காகவும், மனிதர்கள் விரும்பி உண்ணும் அபாயகரமான உணவுக்கு எடுத்துக்காட்டுதான் ஜப்பானின் ஃபுகு (Fugu) மீன்.
கடலால் சூழப்பட்ட ஜப்பனில் பண்டைய காலத்திலிருந்தே கடலுணவுகளின் அனைத்துவிதங்களையும் அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஜப்பானில் கடல் உணவுகள் வெறும் உணவாக அல்ல, வாழ்க்கை முறையின் ஒரு அவசியமான பகுதியாகக் கருதப்படுகின்றன. சுமார் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்தத்தீவு நாடு, பசிபிக் பெருங்கடல், ஜப்பான் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் போன்ற வளமான நீர்நிலைகளில் இருந்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல் உயிரிகளைக் கொண்டிருக்கிறது. இந்தக்கடல் உயிரியல் வளங்கள் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மிக முக்கியமாக இருக்கிறது.
உலகெங்கிலும் இருக்கும் 350 வகையான கோளமீன்களில் 35 வகையான ஃபுகு (Fugu) மீன்கள் ஜப்பானிய கடல்களில் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை நச்சுமீன்களே. ஜப்பானில் மட்டுமே 22 வகையான ஃபுகு மீன்கள் உண்ணப்படுகின்றன, இவை மிக அதிகப் புரதம், மிகக்குறைந்த கலோரி, ஏராளமான நுண் தாதுக்களும் வைட்டமின்களும், அபாரமான சுவையும் கொண்டிருப்பவை.
அதிர்ஷ்டம் என்று பொருள் கொண்ட Fuku என்றும் வழங்கு பெயர் கொண்டிருக்கும் ஃபுகு மீன் ஜப்பனியர்களுக்கு அதிர்ஷடமீனாகவும் இருக்கிறது.
ஃபுகுவிற்கு pufferfish, porcupine fish, blowfish என்னும் ஆங்கிலப் பெயர்களுண்டு.

இது ஒரு விலையுயர்ந்த ,மிகச்சுவையான உணவாகக் கொண்டாடப்பட்டாலும், ஃபுகு மீனின் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளில் டெட்ரோடோடாக்சின் என்ற சக்திவாய்ந்த நரம்பு நஞ்சு நிறைந்துள்ளது. சயனைடை விட 1200 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த விஷம், சரியான முறையில் அகற்றப்படாமல் மீனை உட்கொண்டால் சில நிமிடங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கொடிய விஷம் இருந்தும், இதன் அபாரமான சுவையினால் ஃபுகு, உலகின் மிகவும் விரும்பப்படும், அதே சமயம் மிகவும் ஆபத்தான உணவுகளில் ஒன்றாகத் இருக்கிறது.
ஃபுகு எனப்படும் இந்த மீன் puffer fish எனப்படும் உடலை பலூன் போல் தேவைப்படுகையில் உப்பச்செய்யும் கோளமீன் வகையயைச் சேர்ந்தது. இதன் உடல் பாகங்களில் குறிப்பாக தோல் கண்கள் ஈரல் மற்றும் சினைப்பையில் tetrodotoxin என்னும் நரம்புகளை செயலிழக்க செய்யும் கடும் நஞ்சு இருக்கிறது. இந்த நஞ்சுக்கு இன்றைய தேதி வரை முறிமருந்தேதும் இல்லை.
இதை சாப்பிட்டவருக்கு பக்கவாதம் உண்டாகி பின்னர் மரணம் சம்பவிக்கும். நஞ்சு உடலிலிருந்து இயற்கையாக நீங்கும் வரை சிகிச்சையளிக்கப்பட்டால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும்.
ஜப்பானில் மிக அதிக அளவிலும், கொரியாவிலும் சீனத்திலும் ஓரளவுக்கும் இந்த மீன் உணவு பிரபலமாக இருக்கிறது. இம்மூன்று நாடுகளிலுமே ஃபுகு மீனை சமைக்கவும் கையாளவும் உரிமம் பெற்ற சமையல் நிபுணர்கள் மட்டுமே சமைக்க முடியும் என்னும் சட்ட ரீதியான கட்டுப்பாடு இருக்கிறது. ஃபுகு உணவை தயாரிக்க உணவகங்களும் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
வரலாற்றுக்காலத்திலிருந்தே கிழக்காசியாவின் பிரபலமான உணவாக ஃபுகு இருந்து வருகிறது. ஜப்பானில் சுமார் 2300 ஆண்டுகளாக பிரபல உணவாக இருக்கும் ஃபுகு கொரியா மற்றும் சீனாவிலும் பண்டைய காலத்திலிருந்தே விரும்பி உண்ணப்படுகிறது.
ஜப்பானியக் கடற்கரைக் கிராமங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஃபுகு உணவாக பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாக மீனின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன, ஜோமோன் வம்ச ஆட்சிக் காலத்தில் 2,300ஆண்டுகளுக்கு முன்னர் ஃபுகுவின் நஞ்சால் அதை உண்ணத் தடைச்சட்டம் இருந்திருக்கிறது.
அடிக்கடி பல பேரரசர்களின் காலத்தில் இம்மீனை உண்ணத் தடைச்சட்டம் கொண்டுவரப்படுவதும் பிற்பாடு அதன் சுவையில் மயங்கிய பேரரசர்கள் தடையை நீக்குவதும் ஜப்பபான் வரலாறெங்கும் காணப்படுகின்றது. மெஜ்ஜி வம்ச ஆட்சியில் (Meiji Era 1868– 1912), இளவரசர் ஹிரோபுமி ஃபுகுவின் சுவையில் மயங்கி ஒரு சில பிராந்தியங்களில் மட்டும் தடைச்சட்டங்களை நீக்கினார்.
இதைப்போலவே சீனாவிலும் கொரியாவிலும் கூட தடைச்சட்டங்கள் போடப்படுவது, விலக்கப்படுவது மீண்டும் யாராவது ஃபுகுவை உண்டு உயிரிழக்கையில் தடைச்சட்டம் இயற்றப்படுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.சீனாவில் சோங் வம்ச ஆட்சியின் போது அரசு அங்கீகரித்த மூன்று சுவையான உணவுகளில் ஃபுகு மீனுணவும் இருந்தது.
கேப்டன் ஜேம்ஸ் குக்கின் இரண்டாம் கடற்பயணத்தின் போது அவரும் அவரது நண்பர் ஜோஹானும் காலிடோனியாவில் ஃபுகு மீன் ஈரலைச் சாப்பிட்டு ஏறக்குறைய மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டார்கள். இந்தத்தகவல் உலகெங்கும் ஃபுகுவின் பெயரை மேலும் பரிச்சயமாக்கியதே ஒழிய அதன்மீதான அச்சத்தை அதிகமாக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
ஜப்பானில் டோக்குகவா (Tokugawa Shogunate-1603–1868), காலத்திலிருந்துதான் ஃபுகுவை நஞ்சு நீக்கி சமைக்கவும் உண்ணவுமான முறையான வழிமுறைகள் உருவாகின.
1888-ல் தான் முதல் ஃபுகு ஒழுங்குமுறை உணவகமான ஷன்பான்ரோ (Shunpanro_ ஷிமோனோசெக்கி நகரில் திறக்கப்பட்டது ஃபுகு உணவுண்பதில் ஒரு பெரும் திருப்பு முனையாகக் கருதப்பட்டது, இதே நகர்தான்,
ஃபுகு மீனின் உடலில் இந்த Tetrodotoxin நரம்பு நஞ்சு (TTX) உருவாவதில்லை. ஃபுகு மீனின் உணவுச்சங்கிலியில் இருக்கும் நஞ்சுதான் அதன் உடலில் சேமிக்கபப்டுகிறது. நீரில் இருக்கும் Vibrio, Pseudomonas, மற்றும் Shewanella ஆகிய பாக்டீர்ய பேரினங்களில் இந்த நஞ்சு காணப்டுகிறது. இந்த பாக்டீரியாக்களை மிதவை உயிரினங்கள் புழுக்கள் ஆகியவை உண்கின்றன.
இந்தச் சிற்றுயிர்களை உண்ணும் நத்தைகள், நட்சத்திர மீன்கள் மற்றும் சில மெல்லுடலிகளின் உடலில் இந்த நஞ்சு சேர்கிறது. அவற்றை உண்ணும் ஃபுகுவின் ஈரல், தோல், சினைப்பை, குடல், கண்கள் ஆகியவற்றில் இந்த நஞ்சு மிக அதிக அளவில் சேமிக்கப்படுகிறது. TTX நஞ்சு ஃபுகு மீன்களில் மட்டுமல்லாது நீல வளைய ஆக்டோபஸ்கள், சில வகை நண்டுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றிலும் இருக்கிறது.
இதன் பொருட்டுத்தான் ஜப்பானில் பண்ணைகளில் மிதவைக்கூண்டுகளில் ஃபுகு வளர்க்கப்படுகிறது. ஜப்பானின் ஃபுகு வல்லுநர்களில் ஒருவரும் கடல் நஞ்சு நிபுணருமான டமயோ நொகுச்சி 2000-திலிருந்து 2008- வரை 7000 பண்னை ஃபுகுமீன்களில் ஆய்வு செய்து அதில் ஒன்று கூட நஞ்சுகொண்ட மீனில்லை என்று நிரூபித்தார்.
எனவே ஃபுகு பண்ணையாளர்கள் பண்னை மீன்களின் ஈரலை உணவாக அளிக்க உரிமம் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தாலும் பண்ணை மீன்களின் ஈரலில் நஞ்சில்லை என்பதற்கான போதுமான ஆய்வுகளும் ஆதாரங்களில்லை எனவே ஃபுகுவின் ஈரல் விற்கப்படுவதை அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறது தேசிய ஃபுகு கூட்டமைப்பு. பண்ணைகளில் இருந்து கிடைக்கும் ஃபுகுவின் விலை 2023 நிலவரப்படி ஒரு கிலோ 50 அமெரிக்க டாலர்கள்.
ஜப்பானில் 1958-லிருந்து ஃபுகுவை சமைக்க உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகியது. ஃபுகு மீனின் நஞ்சு நீக்கி சமைப்பதற்கான மூன்று வருட பயிற்சியுடன் கூடிய கல்வியைக் கற்றவர்களுக்கு மட்டுமே ஃபுகு மீன் உணவை கையாள, சமைக்க, பிறருக்கு அளிக்க, உணவகங்களில் பணியாற்ற உரிமம் அளிக்கப்படுகிறது. செய்முறைத்தேர்வில் ஒருபகுதி ஃபுகுவின் நச்சுப்பாகங்களை நீக்கி சமைத்து அதை சமைத்தவரே சாப்பிட வேண்டும். 35 % மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.
கொரியாவிலும் ஃபுகுவிற்கென பிரத்யேகமான படிப்பை படித்து முடித்தால்தான் உரிமம் கிடைக்கும். அங்கு 60% மதிப்பெண்கள் கட்டாயம்.
சீனாவிலும் இதே கட்டுப்பாடுகள் உள்ளன என்றாலும் 2017-லிலிருந்து ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் ஃபுகு மீன்களின் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக fugu hiki எனப்படும் ஃபுகு மீனுக்கெனவே இருக்கும் மிகக்கூர்மையான கத்தியைப் பயன்படுத்துதல், அந்தக் கத்தியை பிற கத்திகளுடன் சேர்க்காமல் தனியே வைத்திருத்தல், நீக்கப்பட்ட நஞ்சு கொண்ட பாகங்களை தனியே பிரித்து வைத்து முறையாக அப்புறப்படுத்துதல் மற்றும் நஞ்சுள்ள பாகங்களை நீக்குவதை ஆவணப்படுத்துதல் ஆகியன பொதுவான விதிகளாக இருக்கின்றன

சீனாவில் ஃபுகுவை சமைப்பதற்கான உணவகங்களுக்கான உரிமம் 2003-லிருந்தும், வீடுகளுக்கு ஃபுகு வாங்கிக்கொள்வதற்கான் தனிப்பட்ட உரிமம் 2017-லிருந்தும் அளிக்கப்படுகிறது.
ஐரோப்பா மொத்தமாகவே ஃபுகு உபயோகத்தைச் சட்டப்படி தடை செய்திருக்கிறது விதிவிலக்காக சுவிட்ஸர்லாந்தில் மட்டும் தனிநபர் இறக்குமதிக்கான உரிமம் வழங்கப் பட்டிருக்கிறது
2003 நிலவரப்படி அமெரிக்காவில் 17 உணவகங்கள் மட்டுமே ஃபுகு மீன் உணவுகளைத் தயாரிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் உரிமம் பெற்றிருக்கின்றன. இதில் நியூயார்க்கில் மட்டும் 12 உணவகங்கள் இருக்கின்றன. ஜப்பானைப் போலவே ஃபுகு சமைப்பதில் படித்துச் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இங்கும் சமையல் கலைஞர்களாக இருக்கிறார்கள்.
அக்டோபர் 2012-லிருந்து வேறெங்காவது உரிமம் பெற்ற சமையலற்கலைஞரால் நஞ்சு நீக்கப்பட்டு அனுப்பப்பட்ட ஃபுகுவை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம் என்னும் அனுமதி ஜப்பானிய உணவகங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனை சட்டங்கள் ஒழுங்குமுறைகள் இருந்தும் ஜப்பானில் ஆண்டுக்கு 20 பேர் ஃபுகு நஞ்சூட்டலால் மரணமடைகின்றனர். இதற்கான காரணங்கள்:
- அவர்களுக்கு ஃபுகு நஞ்சிற்கு உடலெதிர்புச்சக்தி இயற்கையாகவே இருக்கிறது என்று நம்புவது.
- மிகத்தேர்ந்த, அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணரும் தவறு செய்வதற்கான சாத்தியமிருப்பதை நினைவில் கொள்ளாதது.
- சரியாக ஃபுகு மீனை அடையாளம் காணத் தெரியாமல் நஞ்சற்றது என ஃபுகுவை எண்ணி சமைத்துச் சாப்பிடுவது.
- சுத்தமாக முறையாக நஞ்சு கொண்ட பகுதிகளை நீக்காமலிருப்பது.
இறப்பவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஏனெனில் அவர்களுக்கு கடலில் கிடைக்கும் ஃபுகுவை வீட்டுக்குக் கொண்டு வந்து சமைத்துச் சாப்பிடுகையில் நஞ்சை முழுக்க நீக்கி இருக்க மாட்டார்கள்
ஃபுகுவை சட்டத்துக்கு புறம்பாக சுவைப்பது என்பது மரணத்தை சுவைப்பது போலத்தான் எனினும் ஜப்பானியர்களுக்கு ஃபுகுவின் மீதான மோகம் குறைந்தபாடில்லை எனவே கள்ளச்சந்தை ஃபுகு வணிகமும் ஜப்பானில் நீண்டகாலமாக இருக்கிறது.
உருகி நகரில் சட்டத்தின் கண்ணில் இருந்து மறைந்து அல்லது சட்டம் கண்டும் காணமலும் விட்டுவிடுவதால், ஃபுகு ஈரல் பல உணவகங்களில் கிடைக்கிறது. அவர்களின் மெனுவில் வெளிப்படையாக இது இருக்காது எனினும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுதான் இந்த உணவகங்களின் கொள்கை.
2018-களின் துவக்கத்தில் கேமோகரி நகரின் மீன் சந்தையில் ஈரல் நீக்கப்பட்டிருக்காத ஐந்து ஃபுகு மீன் (yorito fugu) பொதிகள் விற்கப்பட்டது தெரியவந்தது. ஜப்பான் முழுவதும் இதைக்குறித்த எச்சரிக்கை சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கான அறிவிப்புக்களை அளிக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் வாயிலாக தொடர்ந்து வெளியானதில் ஐந்தில் 3 பொதிகள் திருமபக்கிடைத்தன.
ஃபுகு உணவு மிக அதிக விலைகொண்டதாக இருக்கக் காரணம் அதைத் தயாரிக்கும் வழிமுறைகளும் அதன் பிரத்யேக சுவையும்தான். ஒரு கிலோ ஃபுகு 7-லிருந்து 10 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டிருக்கிறது. ஃபுகு அப்படியே பச்சையாகவும், சமைத்தும், ஆவியில் வேகவைத்தும், வாட்டியும், புகைத்தும், வறுக்கப்பட்டும், பொறிக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. ஃபுகுவின் சதை மட்டுமல்லால் அதன் துடுப்புகளும் வாலும் விரும்பி உண்ணப்படுகிறது.
பலவகையான ஃபுகு உணவுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன.
- ஃபுகுவில் செய்யப்படும் உணவுகளில் மிகபிரபலமானது டெஸ்ஸா ( Tessa) எனப்படும் ஷஷிமி.
ஷஷிமி என்பது சமைக்காமல் மீனை மிக லேசான, ஒரே அளவுள்ள சீவல்களாகச் செதுக்கி அப்படியே சோயா சாஸ் அல்லது வஸாபி அல்லது இஞ்சி ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிடுவது. மிக அழகாக மலரிதழ்களைப் போல தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு பரிமாறப்படும் ஷஷிமி, ஃபுகு மட்டுமல்லாது எல்லா வகை மீன்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
- மில்ட் எனப்படுவடுது கிரில் செய்யப்பட்ட ஆண் ஃபுகுமீனின் விதைப்பை (மெல்லிய் சவ்வால் சூழப்பட்டிருக்கும் விந்து நீர்) இது ஃபுகு உணவில் மிக ஆடம்பரமானதும் மிக விலையுயர்ந்ததுமாகும்.
- ஃபுகு காரா-அகே (Fugu Kara-age) என்பது எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஃபுகு.
- ஃபுகு கிரெ ஸாகே (Hire-zake) . இது ஸாகே அரிசிமதுவுடன் இணைந்து உண்ணப்படும் ஃபுகுவின் துடுப்புப்பகுதி.
- ஃபுகு சிரி எனப்படுவது (Fugu-chiri) -காய்கறிகளுடன் கலந்து உண்ணப்படும் ஃபுகு.
- யுபிகி (yubiki) என்பது நஞ்சு மிக அதிகமாக இருக்கும் முட்களை நீக்கி விட்டு தோல் துண்டுகளை தோலில் இருக்கும் சாலடில் கலந்த உணவு.
- ஜப்பானின் ஹாகுசான் நகரில் ஃபுகுவின் சினைமுட்டைகளை மூன்று வருடகாலம் உப்பிலிட்டு ஊறுகாயாக்கி நஞ்சு நீங்கியதும் உணவாகச் சமைத்துப்பறிமாறும் உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் நஞ்சு முழுக்க நீங்கியதை பரிசோதித்த பின்னரே அது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜப்பானில் இந்த உணவு வேறெங்கும் கிடைப்பதில்லை.
மிக மிக அதிக நஞ்சு கொண்ட ஃபுகுவான டோரா ஃபுகு (tora fugu) தான் ஃபுகு மீன்களிலேயே மிக அதிக விலை கொண்டது. ஃபுகுவின் துடுப்புக்களில் நஞ்சில்லை என்பதால் மிக அதிகம் உண்ணப்படுவது இந்தப்பகுதிதான்.
பல உணவகங்களில் நீரில் நீந்திக்கொண்டிருக்கும் புத்தம் புதிய ஃபுகுவை வாடிக்கையளர்கள் மேசையில் அமர்ந்த பின்ன்ர் தயாரித்துக் கொடுப்பதும் உண்டு.
ஜப்பானின் ஃபுகு மையமான ஷிமோனோசெக்கி நகரில் ஒவ்வொரு பிப்ரவரியிலும் ஃபுகு திருவிழா நடைபெறுகிறது. அதுவரையிலும் ஜப்பானியர்கள் உண்ட ஃபுகுவின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளுக்குப் பின்னர் ஏராளமான ஃபுகுமீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படுகின்றன. உலகிலேயே ஃபுகு அதிகமாகப்பிடிக்கப்பட்டு, நஞ்சு நீக்கப்படுவது இங்கு மட்டும்தான்.
இந்த ஃபுகு உணவு பருவகால உணவாகவும் இருக்கிறது.. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரை கடலில் கிடைக்கும் இவை உணவகங்களில் தயாரிக்கப்படுகிறது; டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தை எதிர்கொள்ள அதனைச் சேமிப்பதால், மீனில் கொழுப்பு அதிகமாக இருக்கும், இதனால் அந்த மாதங்களில் ஃபுகு மிகச் சுவையானதா இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஜப்பானிய உணவகங்கள் இந்தக்காலத்தில் ஃபுகு உணவை சிறப்பான மதிப்புடன் அணுகுகின்றன.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வசந்தகாலம் ஃபுகு மீனின் இனப்பெருக்கக் காலமாகையால் அவற்றின் உடலில் அதிக நச்சுத்தன்மை இருக்கும் எனவே அந்தக் காலம் ஃபுகு உணவுகளை தயாரிக்க உகந்த பருவமாகக் கருதப்படுவதில்லை.
சீனாவிலும் ஜப்பானிலும் ஃபுகுவின் சுவைகுறித்து கவிதைகளும், சொலவடைகளும், வட்டார கிண்டல் வழக்குகளும், பழமொழிகளும் உள்ளன. அதில் பிரபலமானவை:
ஃபுகுவை சாப்பிடுபவன் முட்டாள் ஃபுகுவை சாப்பிடாதவனும் முட்டாள்.
ஜப்பானில் ஏதேனும் ஒரு செயலைச்செய்ய விரும்பி அதன் ஆபத்துகளைக் குறித்து தயக்கம் கொண்டிருப்பவர்களை
’’’ஃபுகுவும் சாப்பிடனும் உயிரும் போகக்கூடாதாமா’’ என்று கேலி செய்வார்கள், ” (“Fugu wa kuitashi inochi wa oshishi” ).
நஞ்சுள்ள மீனைச்சாப்பிட்டால் பிழைக்க வழியே இல்லை என்பது ஜப்பானில் “Ataru to, ippatsu de shinu” — அதாவது’’ ஒரே குண்டு தான் உயிர் போய்விடும் என்று குறிப்பிடுவார்கள்.
ஜப்பான் குடும்பங்களில் தங்களது கொள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டன் அல்லது ஏதாவது ஒரு முன்னோர் ஃபுகுவின் நஞ்சால் உயிரிழந்த துயரக்கதைகளும், ஃபுகுவின் நஞ்சிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்னும் வீரக்கதைகளும் வழிவழியாக சொல்லப்படுவதுண்டு. ஜப்பானில் ஃபுகு உண்டு தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. 1690-களிலேயே ஜப்பானில் வசித்த ஜெர்மானிய மருத்துவர் எஞ்செல்பெர்ட் (Engelbert Kaempfer), இதை பதிவு செய்திருக்கிறார்.
ஜப்பானில் டோக்கியோவிலிருக்கும் டேகேஃபுகு (Takefuku) என்னும் உணவகமும் ஒஸாகாவிலிருக்கும் ஜுபோரயா (Zuboraya) என்னும் உணவகமும் ஃபுகு பீன் உணவுகளுக்கு உலகப்பிரசித்தி பெற்றவை.
ஃபுகுவின் பதப்படுத்தப்பட்ட உடலுக்குள் விளக்கெரித்து அலங்காரம் செய்வது, ஃபுகுவின் தோலில் கைப்பை பொம்மைகள் ஆகியவற்றைச் செய்வதெல்லாம் ஜப்பானில் பிரசித்தம். தூய வெண்ணிறத்தில் இருக்கும் ஃபுகுவின் சதைப்பகுதியில் மிக அழகிய சிற்பங்களையும் செய்கிறார்கள் ஜப்பானிய ஃபுகு சமையல் கலை வல்லுநர்கள். ஃபுகு
BBC யின் ஒரு ஆவணப்படம் கடலில் டால்ஃபின்கள் ஃபுகு மீன் கூட்டத்துக்கு வெகுஅருகில் நெடுநேரம் சுற்றித்திரிந்து அவற்றை வாயில் கவ்வி விளையாடி ஃபுகுவின் தோலில் இருக்கும் நஞ்சினால் லேசாக போதை ஏற்றிக் கொண்டு திரும்பிச்செல்வதைக் காட்டுகிறது.
ஆவணப்படத்தின் இணைப்பு
கடல் வாழ் உயிரினங்கள் இப்படி போதை ஏற்றிக்கொள்வது இதில்தான் முதன்முதலில் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஆபத்தானதும், மிக விலையுயர்ந்ததும், அந்தத் தீவுநாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்திருப்பதுமான ஜப்பானின் ஃபுகு உணவு, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருக்கும் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் அந்த நிலப்பரப்பின் வளங்களையே முற்றிலும் சார்ந்திருப்பதையும், அதைக்கொண்டே அந்தச் சமூகத்தின் கலாச்சாரம் வடிவமைக்கப் பட்டிருப்பதையும் காட்டும் முக்கியமான உதாரணமாக இருக்கிறது.












