
பெங்களூரில் தருண் வீட்டில் இருக்கிறேன். 10 நாட்கள் இருப்பதாக உத்தேசம்.முந்தைய நாள் ஹிட் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் 3-ம் பாகம் பார்த்தோம் அதன் வன்முறைக்காட்சிகள் உண்டாக்கிய ஒவ்வாமை தீர இன்னும் நெடுநாட்களாகும். எந்தக் குறிக்கோளுமில்லாமல் கதைக்கும் தொடர்பு இல்லாமல் அல்லது கதையென்ற ஒன்றே இல்லாமல் ரத்தக்களறியாக ஒரு படம். அதன் முந்தைய 2 பாகங்களைப் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை எனக்கு எரிச்சலாகவும் கோபமாகவும் இருந்தது. ரத்தம் நன்றாகத்தெரிய வெள்ளைவெளேரென்ற கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு நானி வரும் இறுதிக்காட்சிகளெல்லாம் எப்படி தணிக்கையில் தப்பித்ததென்றே தெரியவில்லை.
அதற்குப்பிழையீடாக நேற்று லாலேட்டனின் ’துடரும்’ பார்க்கசென்றொம். எளிய கதைக்கரு, அசாதாரணமான திரைக்கதை, திரைப்படத்தின் பெரும் பலமாக இசை, லாலேட்டனின் பிரமாதமான நடிப்பு எனப் பிரமிப்பாக இருந்தது.
டைட்டிலில் காட்டும் புகைப்படங்களிலிருந்து சாதாரணமாகத் தோன்றும் சின்ன சின்ன நிகழ்வுகளெல்லாம் இரண்டாம் பாகத்தில் இணைந்து குற்றமென்னும் ஒற்றைச்சரடில் கோர்க்கப்பட்டு நம் முன்னே விரிகையில் திகைப்பெழுகிறது.
அப்படி இருக்கும், இப்படி இருக்கும் காரில் சாய்ந்து நின்று போன் பேசிக்கொண்டிருக்கும் இளைஞனாயிருக்கும், வொர்க்ஷாப்பில் இருந்த மணியனாயிருக்கும் என்று நம்மை ஏதேதோ யூகிக்கவைத்து கொஞ்சமும் எதிர்பாராமல் மற்றொரு புதிய பரிமாணத்தைக்காட்டி கதை விரிவது மிரட்டலாக இருந்தது. இசை லாலேட்டனுக்கு இணையாகப் பங்களித்திருக்கிறது.
ஒரு காட்சியில் லாலேட்டனின் நிழல் ஜார்ஜின் நிழலுக்கு பின்னால் தோன்றி மெல்ல நெருங்கி வருகையில் இசை ’’சான்ஸே இல்லை’’ என்போமே அதுதான் அதேதான்.
லாலேட்டனை எனக்குப்பிடிக்கும் அவரது ஸ்டைல் குரல் எல்லாமாகத்தான். ஆனால் இதில் அவர் ஒரு கலைஞனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருப்பது அபாரமாக இருக்கிறது. எல்லாம் முடிந்த பின்னர் அந்த சலசலத்தோடும் ஆற்றில் தனது KL4455 கருப்பு அம்பாஸடர் காரை நிறுத்திவிட்டு தளர்ந்து அமரும் காட்சிவரையில் கொஞ்சமும் இறங்காமல் உச்சகட்ட உணர்வு நிலையில் சன்னதம் கொண்டும் பித்தேறியுமே இருக்கிறார்.
இடையிட்டையே காட்சிகளில் தோன்றி சாலையைக் கடந்துசெல்லும் கேரள நாடன் நிகழ்த்துகலைகளின் தெய்வவேடம் பூண்டவர்கள் லாலின் அபோதைய உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார்கள்.
காவல் நிலையத்தின் நிலவறையில் லாலைக்கொல்ல முயற்சி நடக்கையில் வேட்டியில்லாமல் ட்ரவுசரும் முழுக்கைச்சட்டையுமாக அவர் போடும் சண்டையை, நிதானமாக கருப்பு வேட்டியை எடுத்து இறுக்கிகட்டிக்கொண்டு சண்டையை தொடருவதையெல்லாம், புருவம் வரைந்து உதடுகளில் சிகப்பெழுதி உன்னத உடைகள் உடுத்தி அரசியல்வாதியாகும் கனவெல்லாம் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்கதாநாயகர்கள் பார்த்துப் படிக்கவேண்டும்.
ஷோபனாவும் லாலேட்டனும் இணைந்துநடிக்கும் 56 வது படம் இது என்றாலும் ஷோபனாவுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சொல்லப்போனால் லாலைத்தவிர யாருக்குமே இதில் வேலை இல்லை முழுப்படத்தையும் யானையைபோல தானே தாங்கிக்கொண்டிருக்கிறார் லால்.
எதற்கு ஒருசில காட்சிகளில் மட்டும் பாரதிராஜா, போன்ற ஒரு சில கேள்விகள்முதல் பாதியில் எழுந்தாலும் எல்லாவற்றையும் இரண்டாம்பாகம் கனெக்ட் செய்கிறது.

லாலின் மகளாக வரும் பெண் வாயில் பிரஷ் வைத்துக்கொண்டே பேசுவதும், அப்பாவின் சட்டைப்பாக்கெட்டிலிருந்து இயல்பாகப் பணம் எடுத்துக்கொள்ளுவதும், அடுப்படியில் அட்டகாசமாக உட்கார்ந்துகொண்டு கதைப்பதும் அப்படியே சாம்பவியை பார்ப்பதுபோல இருந்தது. அதே வயதில்தான் அந்தபெண்ணும் இருக்கிறாள்.
மனைவி மகள் காவல்நிலையத்தில் இருக்கையில் வழக்கமாக எல்லா மொழிகளிலும் எல்லாக்கதாநாயகர்களும் செய்வதுபோல ’’என் மனைவியை ஒன்னும் செஞ்சுறாதே’’ எனக் கெஞ்சும் வேலையெல்லாம் அறவே இல்லாமல் தான் நினைத்ததை செய்துமுடிக்கும் வரை வெறிகொண்டு இருக்கும் லாலேட்டனின் கதாபாத்திரம் வெகுசிறப்பு.
இறுதியில் கோர்ட் காட்சியில்தான் ஷோபனாவையும் மகளையும் பார்க்கையில் அவர் கண்களுக்கு அவர்கள் அடையாளமே தெரிகிறார்கள். அப்பா என்ன ஒரு நடிப்பு!
மேரியும் ஷோபனாவும் கட்டிக்கொண்டு கதறும் காட்சியில் அவர்களை லாலின் மகளும் கட்டிக்கொண்டு கதறுவாள். அந்தக்காட்சியின் உணர்வுவேகம் தாளாமல் தருண் சட்டென உடைந்து கண்ணீர் விட்டு அழுதான். அவன் அக்காட்சியில் மேரியாக, பவியாக, ஷோபனாவாக எல்லாருமாகவே இருந்திருந்திருப்பான்
யாரேனும் இன்னும் இந்தத்திரைப்படம் பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்து விடுதல் நலம். ஓடிடியில் வருமாயிருக்கும் ஆனால் அந்தக் காடும் மழையும் இடியும் மின்னலும் லாலேட்டனின் சிலைபோன்ற உடலை, உணர்வெழுச்சியை குறிப்பாக இசையை எல்லாம் பெரியதிரையில் பார்ப்பதுமட்டுமே இந்தப் படத்தின் உரியகாட்சி அனுபவத்தை நமக்குக் கொடுக்கும்.நான் மீளமீள இந்தத்திரைப்படத்தைப் பார்க்கவிருக்கிறேன்.
இந்தப்படத்தைப் போலத்தான் திரைப்படங்கள் இருக்கனும் இப்படிப்பட்ட படங்களைத்தான் பார்க்கவேண்டும் என்பதையெல்லாம் தாண்டி இந்தத் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு சிறு பங்காற்றி இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று எனக்கு ஏக்கமாக இருக்கிறது. வாழ்நாளில் பெரும் நிறைவடைந்திருப்பேன் அப்படிஏதேனும் செய்திருந்தால். திரைப்படக்குழுவினருக்கு ஒரு நல்ல தேநீராவது போட்டுக்கொடுத்திருக்கலாம் என்றெண்ணிக்கொண்டேன்
இதை தமிழில் மொழிமாற்றம் பண்ணாமலிருக்கட்டும் எண்ட குருவாயூரப்பா என்று மனதார பிரார்த்தித்துக்கொண்டேன். இந்தப்படத்தின் மொழி வழியே தெரியும் அசல் உணர்வுகளை கொல்லவேண்டி இருக்கும் மொழிமாற்றுகையில்.
நட்பான உடல்மொழியுடன் ஜார்ஜ் சொல்லும் ஹல்லோ நம்மை அப்படி எரிச்சலூட்டுகிறது. திரையரங்கில் பலர் உரக்க காதுகூசும் கெட்ட வார்த்தைகளில் ஜார்ஜையும் பென்னியையும் வசைபாடினார்கள். ஃப்ர்ஹான் ஃபாசிலை முதன் முதலாக திரையில் பார்க்கிறேன். அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிதாக சாயல் ஒற்றுமை இல்லை. ஆனால் நன்றாகவே நடித்திருக்கிறார்

துடரும் படத்தைப்போல படம் எடுப்பது,லாலேட்டனைப்போல நடிக்க முயற்சிப்பது, துடரும் படத்தின் இசையைப்போல இசையைக் கொடுக்க முயல்வதெல்லாம் சாத்தியமே இல்லை தமிழ்ச் சினிமாத் துறையினருக்கு. எனினும் குறைந்தபட்சமாக சவப்பெட்டியின் மீதேறி நின்றபடியும், ரத்தவாடைகொண்ட கார் டிக்கிக்கருகே நின்றுகொண்டும் தொடர்ந்து குரைக்கும் அந்த நாய் கொடுக்கும் உணர்வெழுச்சியில் 100ல் ஒரு பங்கையாவது கொடுக்கும்படியான படங்களை எடுக்க முயற்சிக்கலாம் நமது ஆட்கள். லால் சலாம்!

Leave a Reply