இன்று அரசுக்கல்லூரிகளின் செமெஸ்டர் தேர்வுகளின் பேப்பர்களை, அவை அடுத்தவாரம் திருத்தப்படவிருக்கும் பல கல்லூரிகளுக்குப் பங்கிட்டு அளிக்கும் பணிக்காகப் பாரதியார் பல்கலைக்கழகம் செல்லவேண்டி இருந்தது.
எப்போதுமே எனக்குப் பல்கலைக்கழகம் செல்வது பிடித்தமானது. நான் உலகை அறிந்துகொண்டது. தனித்து வாழ்வை வாழ முடியும் என்னும் நம்பிக்கையைப் பெற்றது, முக்கியமாகத் தாவரவியலையும் இலக்கியத்தையும் கற்றுக்கொண்டது இவற்றோடு வீட்டுப்பிரச்சனைகள், அப்பாவின் அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லாமல் மகிழ்வுடன் கழிந்த 2 ஆண்டுகளும் இங்கேதான். முதல் விடுதித்தங்கலும் இங்கேதான். வயிறு நிறைய சாப்பிட்டதும் இங்கேதான். எனவே கடும் மழையிலும் உற்சாகமாகப் புறப்பட்டுச்சென்றேன்.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்று விட்டதால் முதலில் தாவரவியல் துறைக்குச்சென்றேன். எந்த மாற்றமும் இல்லாத அந்தத் துறை எனக்குப் பழைய நினைவுகளைக் கிளர்த்தியது. நான் இருந்த tribal pulse lab மட்டும் மாற்றமடைந்திருந்தது. நான் படித்த முதல், இரண்டாம் முதுகலை வகுப்புக்களையும் சென்று பார்த்தேன். 10 மணிக்குத்தான் எல்லோரும் வருவார்கள் என்பதால் நானும் என் நினைவுகளும் மட்டுமே தனித்திருந்தோம்.
பேராசிரியர் வி ஆர் கே ரெட்டிஅவரது முதல் ஜெனிடிக்ஸ் வகுப்பில் தன் பெயரை வய்யூரு ராமகோட்டி ரெட்டி என எழுதிக்காட்டிய அந்தப் பச்சை நிற போர்ட் இன்னும் இருந்தது. ரெட்டி விநோதமாக போஸ்டாஃபீஸில் நீளமாக வரிசையாக இருக்கும் ஸ்டாம்களை அப்படியே வால் போல நாக்கில் வழித்து எச்சில்தொட்டு ஒட்டியதை ஒருக்கில் பார்த்தேன்,
அந்த tribal pulse லேப் அங்கே நான் செய்த பழங்குடியினர் உபயோகப்படுத்திய அவரை விதையின் புரத அளவு குறித்த ஆய்வு, எனக்கு மிகக்கடுமையாக ஆய்வைச்சொல்லிக்கொடுத்த சீனியர் அண்ணா சித்துராஜ் , அனாடமி ரெகார்டு சித்திரங்களை மிகச்சரியாக வரையச்சொல்லிக்கொடுத்த விஜயலக்ஷ்மி அக்கா, பிஹெச்டி சேர்க்கை முடிவுகளுக்காக நான் மிக நம்பிக்கையுடன் காத்திருந்த அந்த நோட்டீஸ் போர்ட், அதில் மாலை வெகுநேரக்காத்திருப்புக்கு பின்னர் ஒட்டப்பட்ட பட்டியலில் என் பெயர் தாவர வகைப்பாட்டியலில் இல்லாமல் டிஸ்யூ கல்ச்சரில் இருந்த அதிர்ச்சி. பிஹெச் டி அந்தப்பல்கலைக்கழகத்தில் சேருவதில்லை என்று எடுத்த முடிவு ,அன்று ஊர் திரும்புகையில் பேருந்தில் கதறி அழுதபடி வந்தது எனப் பலவற்றை நினைத்துக்கொண்டேன்.
பல்கலைக்கழகத்துக்கு அப்போது எக்சேஞ் ப்ரோகிராமில் இரு அமெரிக்க இளைஞர்கள் வந்திருந்தார்கள் பீட்டரும், மைக்கேலும். அவர்களுடன் பேசி அவர்களுக்குப் பல்கலைக் கழகத்தை சுமார் 3 மாதகாலம் சுற்றிக்காண்பிக்கவும், கூட இருக்கவும் இந்தியபண்பாட்டை அறிமுகப்படுத்தவும் ’’ஆங்கிலம் சரளமாகப்பேசத்தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?’’ என்று பேராசிரியர் மணியன் வகுப்பில் கேட்டபோது நான் அவசரமாகப் பின்னால் ஒளிந்து அமர்ந்துகொண்டேன்.
அவிலா கான்வெண்ட்டில் படித்த’’ i even think in english’’ என்று அடிக்கடி ஸ்டைலாகச் சொல்லும் ’’ச்சீ தயிர் சாதத்துக்குப்போய் அப்பளாம் தொட்டுக்குவியா?’’ என்று என்னைக் கேலிசெய்யும் பத்மாதான் அவர்களுடன் சென்றாள். பின்னர் மைக் பத்மாவின் மீது மையல் கொண்டுவிட்டிருந்தான் என்று கேள்விப்பட்டோம்.ஆனால் பத்மா எம்பியே அருள் மீது காதலில் இருந்தாள்.
நான் முதுகலை படிக்கையில் நர்மதா மேமிடம் எம்பில் ஆய்வில் இருந்த ஷீலா ரபேக்கா வண்ணமலர் அமரும் அந்த மூலை மேசை அடுத்த லேபில் தெரிந்தது. ஊட்டியைச்சேர்ந்த ஷீலாவும் அவள் காதலித்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பிஹெச்டி நாகராஜும் மருதமலைக்கு கால்நடையாகச்சென்று திரும்புகையில் அந்திசாய்ந்த இருட்டில் சாலையில் நின்றபடி முத்தமிட்டுக்கொண்டிருந்ததை லேப் உதவியாளர் ஏசடிமை அந்தோணிராஜ் சைக்கிளில் அவர்களைக் கடக்கையில் பார்த்துவிட்டு, அப்போது ஹாஸ்டல் வார்டனாக இருந்த பேராசிரியை வனிதகுமாரியிடம் குவார்ட்டஸுக்குப்போய் அப்போதே சுடச்சுட போட்டுக்கொடுக்கையில் தவறுதலாகப் பொள்ளாச்சிப்பெண்ணும் ஊட்டிப்பையனும் என்று சொல்லிவிட்டார்.
மறுநாள் முதல்கட்ட விசாரணைக்கு என்னை அழைத்துவிட்டார்கள். நான் மறுத்து அழுதழுது நெஞ்சு வலிவந்து மயக்கமடையும் நிலைக்குப்போனபோதுதான் ஷீலா ரபேக்காவே வந்து அது நானில்லை அவள் என்று சொல்லி விசாரணையை மடைமாற்றினாள். அதன் பிறகு நாங்கள் தோழிகளாயிருந்தோம். ஷீலாவும் நாகராஜும் கல்யாணம் செய்துகொண்டார்கள் (அவரவர் வீட்டில் பார்த்துவைத்த மாப்பிள்ளையையும் பெண்ணையும்.)
கீழிறங்கி பொட்டானிகல் கார்டனைப்பார்க்கலாமென்று வருகையில் ஒரு டி விஎஸ் 50-யில் வந்த முதியவர் ’’அம்மா நல்லாருக்கீங்களாம்மா?’’ என்றார். எனக்கு அவரைத்தெரியவில்லை எனினும் நலம் என்றேன். ’’என்னைத் தெரியலையாம்மா ? நான்தான் வேட்டையன்’’ என்றார். அப்போதும் எனக்குத் தெரியவில்லை
’’மன்னிச்சுக்குங்க தெரியலை’’ என்றேன். ’’லோகமாதேவிதானே நீங்க? முதல் செட் எம் எஸ்ஸி படிச்சீங்களே இங்கே?’’ என்றார். ஆம் என்றேன்
நாந்தாம்மா அப்போ இந்த சயின்ஸ் பிளாக்குக்கெல்லாம் தண்ணி திறந்துவிடற வேலையில் இருந்தேன். ஒரு நாள் உங்க லேப்பில் தண்ணி வரலைனு நீங்க மெயின் ஆபீஸுக்கு கூப்பிட்டு சொல்லி நான் வாளியில் கொண்டு வந்து வந்து ஊத்தினேனேம்மா?’’ என்றார்
எனக்கு அப்போதும் நினைவு வரவில்லை. ஆனால் தெரிந்ததுபோலவே காட்டிக்கொண்டேன். இப்போது வரை அவர் பல்கலைக்கழகத்தில்தான் எடுபிடி வேலைகள் செய்துகொண்டு இருக்கிறாராம் ’’நான் இங்கதாம்மா சாவேன் எனக்கு வேற இடமே இல்லை இதைவிட்டா’’ என்றார்.
அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் துறைத்தலைவராகி இருப்பதில் அப்படி மகிழ்ந்தார். ’’ஆகாம என்னம்மா? எந்நேரமும் படிப்பீங்களே அப்போ? உதயன் சார் உங்களைப்பத்தி பெருமையா சொல்லுவாரேம்மா’’ என்றார்.உளம் மகிழ்ந்தேன் உண்மையிலேயே.
ஆச்சர்யமாக எல்லாம் நினைவில் வைத்திருந்தார். என்னுடன் படித்த ஒருவனுக்கு வலிப்பு நோய் அடிக்கடி வரும் என்பதைக்கூட சொன்னார். இன்னொரு நண்பன் தீக்குளித்து இறந்துபோனதை அவருக்கு நான் சொன்னேன். திகைத்து ’’அப்படியாம்மா? தனபால் இப்போ இல்லியாம்மா? என்னம்மா இது’’ என்று வருந்தினார்.
’’நீங்க எப்போவுமே போய் உட்கார்ந்துக்குவீங்களே அந்தத் தண்ணித்தொட்டி, அதை இடிச்சுட்டாங்கம்மா’’ என்றார். ஆம் நான் துறையை ஒட்டி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கார்டனில் இருந்த பெருங்கொன்றை மரத்தடித் தண்ணீர்த்தொட்டியின் விளிம்பில் எப்போதும் தனியே பொன்னிற மலர்கள் நீரில் மிதந்துகொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு, எதையாவது நினைத்தபடி துயரில் அமர்ந்திருப்பேன். நான் எழுதியனுப்பிய அசட்டுக்கதையொன்றை ஆனந்தவிகடன் திருப்பி அனுப்பியபோதும் அங்குதான் அமர்ந்து கண்ணீர் விட்டழுதேன்.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு தேர்வுக்கட்டுப்பாட்டு அறைக்கு வந்தேன். எத்தனை வருடங்களுக்கு முன்பிருந்து என்னை வேட்டையன் நினைவில் வைத்திருக்கிறார் என்று ஆச்சர்யமும் மகிழ்ச்சியுமாக இருந்தேன். இதுநாள் வரையிலான என் வாழ்வின் மாபெரும் இந்த நினைவுவலையில் இப்படி எத்தனை எத்தனை கண்ணிகள் ?
அன்பு !