சென்ற வாரம் முதன்முதலாக திருவண்ணாமலை சென்றிருந்தேன் ஒரு வேள்வியில் கலந்து கொள்ள.புதுச்சேரியும் திருவண்ணாமலையும் என் கனவுப்பயணங்களின் பட்டியலில் இருந்தவை. புதுச்சேரிச் கனவு முன்பு (2017 ல்) நனவானது.மறக்கமுடியாததுமானது.
ஒரு சிறுகதை பட்டறை. கடற்கரை அருகில் இருந்த ஒரு தங்குமிடத்தில்.
கரும்பாறைகள் நிறைந்திருந்த , தூரத்தில் சிவப்பும் பச்சையுமாக விளக்குகள் ஒளிர மெல்ல நகர்ந்து கொண்டிருந்த பெருங்கப்பல்களும், விளிம்புகளில் வெள்ளி பூசிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஏராளமான சிற்றலைகளுமாக அந்த கடற்கரை அடிக்கடி கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது.
மணக்குள விநாயகர் கோவில் நடை திறக்கும்வரை காத்திருக்கையில் சாலையோர மரங்களில் பறித்த மரமல்லியும் பவளமல்லியும், பூஜைக்கென அத்தெருவில் தயாராகிக்கொண்டிருந்த அந்த குட்டி யானை,பனானா ஸ்ப்ளிட் ஐஸ்கிரீம், பழைய புத்தகக்கடை, அழகான வீடுகள் நிறைந்த நேர்த்தியான தெருக்கள், முதல் பானிபூரி, (முதல் குமட்டலும்) அங்கு வாங்கிய இளஞ்சிவப்பில் வான் நீல கரையிட்ட பருத்திப்புடவை (அதை கோவிட் பெருந்தொற்று முடிந்த சமயத்தில் யாசகம் கேட்டு வந்த ஒரு நிறை சூலிக்கு அளித்தேன்) இரவு ஊர் திரும்புகையில் பெய்த பெருமழை எல்லாம் எல்லாம் நினைவிருக்கிறது.
இப்போது பட்டியலின் அடுத்த இடம் திருவண்ணாமலை. அகரமுதல்வன் அழைத்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது.
மறக்க முடியாத பல அனுபவங்கள் அங்கு.அந்த பெருவேள்வி குறித்து ஒரு பதிவு எழுதினேன் வந்த உடனேயே.
மேலும் சில துண்டு துண்டான சுவாரஸ்யங்களும் இருந்தன அப்பயணத்தில். ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கிருந்தார்கள். அழுக்கான அழுக்காக ஒரு அமெரிக்க இளைஞன், தலைமுடி அழுக்கு, தோளில் மாட்டியிருந்த துணிப்பை மகா அழுக்கு, சட்டையும் கால்சராயும் துவைத்தல் என்பதை கண்டிருக்கவேயில்லை. அவன் என்னைக்கடந்து செல்கையில் எதிரே வந்தஒரு கருப்பு நாயிடம் சிநேகிதமாய் ’ஹாய்’ என்றான். ஆனால் நாய் அவனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவசரமாக எங்கோ விரைந்தது.
அடர்நீல ஸ்லீவ்லெஸ் பனியனும் குட்டைப்பாவடையுமாக நடந்துவந்து கொண்டிருந்த ஒரு ஐரோப்பிய இளைஞியிடம், அவர் கடந்துசென்ற ஆட்டோவிலிருந்த ஓட்டுநர் ’’ஹாய் மேம்!’’ என்றார் தோழமையுடன், அவரும் அழகாக புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றார். முன்பே பரிச்சயமானவர்கள் போல !
காருக்காக சாலையோரம் காத்திருக்கையில் இளநீர்க்கடைக்கு மனைவியுடன் வந்த மற்றுமோர் அமெரிக்கர் அந்த இளநீர்க்கார அம்மாவிடம் good water? என்று கேட்டார். அந்த நல்ல தாட்டியான உடம்பும், காம்பஸ் வைத்து வரைந்ததுபோல வட்டமான முகத்தில் பெரிய பொட்டுமாக இருந்த அந்த அம்மா இயல்பாக ’very good water’ என்று விட்டு அடுத்தாக அவரிடம் from where? என்றார். நான் புன்னகையுடன் அந்த இடத்தை கடந்தேன்.
திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் அதன் கலாச்சாரமும் பண்பாடும் எத்தனை இன்ஃப்ளுயன்ஸ் ஆகியிருக்கிறது என்பது வியப்பளித்தது. இப்படி இவர்களை எல்லாம் கவனித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாமென்று தோன்றியது.