மனிதகுலம் ஏறத்தாழ 6000 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்களை உணவுத்தேவைக்காக நம்பியுள்ளது, இவற்றில் வணிக ரீதியாக சாகுபடி செய்யப்படுபவை 170 பயிர்கள் மட்டுமே. இவற்றிலும் 30 பயிர்கள் மட்டுமே அதிக அளவில் மீண்டும் மீண்டும் சாகுபடி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன ஒப்பீட்டளவில் சிறிய கவனம் கூட அளிக்கப்படாத பல முக்கிய காய் கனி வகைகளை அளிக்கும் ஏராளமான பயிர்கள் உலகின் கவனத்துக்கே வராமல் இருக்கின்றன..
சத்துக்கள் நிறைந்த இத்தகைய உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பயிர்கள் தேசிய அல்லது பிராந்திய அளவில் பிரதானமானவை. அவற்றில் ஒன்றுதான் செள செள காய்.
பூசணிக்காய் குடும்பமான குக்கர்பிட்டேசியின் சுரைக்காய், புடலை, பீர்க்கன், தர்பூசணி, பாகல் போன்றவை அதிகம் புழக்கத்தில் இருப்பவை. அதே குடும்பத்தில் இருக்கும் செள செள எனப்படும் காய் தென் தமிழகத்தில் அரிதாகவே உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.
ஆங்கிலத்தில் cho cho , choko, mirliton, chayote என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் Sechium edule.
இதய வடிவ இலைகளும், பற்றுக்கம்பிச்சுருள்களும், வேர்க்கிழங்குகளும் கொண்ட செள செள ஒரு ஏறுகொடித்தாவரம். ஆண் மலர்கள் கொத்தாகவும் பெண் மலர் ஒற்றையாகவும் தனித்தனியே ஒரே கொடியில் அமைந்திருக்கும். தண்டுகளில் நார் நிரம்பியிருக்கும்.
உணவுக்காக சந்தைப்படுத்தப்படும் செள செள காய்கள் எனப்படுவது இதன் கனிகளே. இவை ஒழுங்கற்ற பேரிக்காய் வடிவில் இளம் பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக கனிகளில் முட்கள் காணப்படும். முட்களின்றியும், அடர்பச்சையிலும், வெளுத்த மஞ்சள் நிறத்திலும், அளவில் சிறிதாகவும் கூட காய்கள் இருக்கும். நீர் நிரம்பிய, சதைப்பற்றான காய்கள் இனிப்புச்சுவையுடைய பெரிய ஒற்றை விதை கொண்டிருக்கும்.
மெக்ஸிகோவை சேர்ந்த பல்லாண்டுத்தாவரமான இதன் ஒரு கொடி வருடத்திற்கு 80லிருந்து 100 காய்களையும் 25 கிலோ வேர்க்கிழங்குகளையும் கொடுக்கும்.
உலகெங்கும் இதன் பல வழங்கு பெயர்கள் புழக்கத்தில் உள்ளன. chayote, christophene, vegetable pear, mirliton, merleton choko ( ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில்), starprecianté, citrayota, citrayote (எக்குவடோர் மற்றும் கொலம்பியா), chuchu (பிரேசில்), machucha, caiota, pipinela (போர்ச்சுக்கல்), chow chow (இந்தியா), cho cho (ஜமைக்கா), Sayote (பிலிப்பைன்ஸ்), güisquil (குவாத்தமாலா), pear squash / iskus(நேபாள்).
இவை சௌசௌ / பெங்களூர் கத்தரிக்காய் / மேராக்காய் / சீமை கத்தரிக்காய்/சொச்சக்காய் என்றும் தமிழில் அழைக்கப்படுகின்றன. Custard marrow என்னும் இதன் ஆங்கிலப்பெயர்களில் ஒன்றுதான் தமிழில் மேராக்காய் ஆகி இருக்கிறது
இதன் அறிவியல் பெயரின் பேரினப்பெயரான ’Sechium’ என்பது வெள்ளரிக்காயை குறிக்கும் பண்டைய கிரேக்கச் சொல்லான ’síkyos’ என்பதிலிருந்து பெறப்பட்டது. சிற்றினப்பெயரான ’edule’’ என்பது உண்ணத்தகுந்த என்று பொருள்படும்.
செள செள உற்பத்தியில் மெக்ஸிகோவும் பிரேசிலும் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகளில் அவகேடோ, தக்காளி மற்றும் காபிக்கொட்டைகளுக்கு அடுத்த படியாக செளசெள அதிகம் விரும்பப்படும் நான்காவது உணவுப்பொருளாக இருக்கிறது.
இது அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும்கொண்ட சுவையான காய்களும்,“Quelites” எனப்படும் இதன் தளிரிலைகளும் “chayotextle” எனப்படும் வேர்க்கிழங்குகளும் இங்கு விரும்பி உண்ணப்படுகிறது
இதன் இலைகளிலும், வேர்க்கிழங்குகளிலும், காயிலும் ஏராளமான கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் பல வைட்டமின்களும் உள்ளன.
இவை வேகவைத்தும், ஊறுகாய்களாகவும், அவித்தும், எண்ணையில் பொரித்தும் உண்ணப்படுகின்றன. காயின் அனைத்துப்பகுதிகளுமே உண்ணத்தகுந்தவை என்பதால் இதன் மெல்லிய தோலையும் விதையையும் நீக்க வேண்டியதில்லை. செள செளெவின் தோல் மற்றும் விதையையும் சேர்த்து சமைத்தும், சமைக்காமல் பச்சையாகவும் உண்ணலாம்
இக்கொடியின் காய் உள்ளிட்ட அனைத்துபாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டவை
இவை சிறுநீர் பெருக்கும், சிறுநீரக கற்களுக்கும் வீக்கங்களுக்கும் எதிராக செயல்புரியும், இருதயத்தை பாதுகாக்கும், குருதிக்கொதிப்பை கட்டுப்படுத்தும் மற்றும் உடலை வலுப்படுத்தும்.
செளசெள முளைவிட்ட காய்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. காய்கள் கொடியில் இருக்கும் பொழுதே அதனுள் இருக்கும் விதை முளைத்துவிடுகிறது. தண்டின் வெட்டுத் துண்டுகளையும் சாகுபடிக்கு பயன்படுத்தலாம்
பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வருங்காலத்திற்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் உணவு அடிப்படையிலான அணுகுமுறைகளில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத இனங்களின் (Neglected and underutilized species-NUS) பரவலான மீள் உபயோகங்கள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன.
செள செள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, அனைத்துக் காலநிலைகளிலும் வளரும் இயல்பு கொண்ட, நோய் எதிர்ப்புதிறன் மிக்க, லாபம்அளிக்கும், உள்நாட்டில் கிடைக்கக்கூடிய எளிதில் வளர்க்க முடியும் பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்வதும், அவற்றின் நுண்சத்துக்கள் நிறைந்த காய்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதும் வருங்காலத்துக்கான உணவுசார்ந்த அணுகுமுறைகளில் மிக முக்கியமானவை.