மிக இளம் வயதிலேயே வாசிக்கத் துவங்கியிருந்தேன்.  மிகச்சிறிய வயதிலிருக்கையில், பணிபுரிந்த பள்ளியில் நூலகப் பொறுப்பு அப்பாவிற்கு அளிக்கப்பட்டிருந்தது, அந்த  நூலகத்திலிருந்து ஒரு அகராதியை கொண்டு வந்து கொடுத்தார். அதுவே என் நினைவில் இருக்கும் நான் தொட்டுணர்ந்த  முதல்புத்தகம். அதன் கனத்த அட்டையை திறந்தால் உள்ளிருந்து ஒரு செவ்வண்ண காகிதத் தாமரை, இதழ் இதழாக எழும்பி நிற்கும். அது எனக்கு பெரும் பரவசத்தை அளித்தது. திறப்பதும் மூடுவதுமாகவே இருந்தேன் அப்பாவிடம் பயம் எப்போதும் இருந்ததால் அதை பத்திரமாகவே கையாண்டேன்.

பிற்பாடு லாரன்ஸ் பள்ளியில் பணிபுரிந்த  ஊட்டி மாமா அத்தையுடன் சிங்கப்பூர் உறவினர்களின் குழந்தைகளும் எங்களுடன் விடுமுறையின் தங்க வருவார்கள். ஒரு முறை அந்த சிங்கப்பூர் மாமா எங்களுக்கு வழவழப்பான காகிதங்கள் கொண்ட பெரிய அட்லஸ்  ஒன்றை பரிசளித்தார். அப்போது 6 அல்லது 7ல் இருந்திருப்பேன். அது எனக்கு பெரிய பொக்கிஷமாக இருந்தது பச்சையும் நீலமும் அதிகம் இருந்த அந்த பெரிய புத்தகத்தில் கண்டங்களை நாடுகளை தொட்டுத் தொட்டுப் பார்த்தது அங்கெல்லாம் சென்று வரும் அனுபவங்களை காட்டிலும் கிளர்ச்சி யூட்டுமொன்றாக் இருந்தது. 

அந்த அட்லஸிலிருந்து ஒரு மணம் வீசும் அதை இப்போதும் என்னால் நினைவு கூற முடியும். மூளையில் சிடுக்குகளுக்குள் அந்த மணம் எங்கோ  இன்னும் ஒளிந்திருக்கிறது. 

தாராபுரம் செயிண்ட் அலோசியஸில் படித்துக் கொண்டிருக்கையில்  எம் எல் ஏ பெரியம்மாவின் மாடிவீட்டில் குடியிருந்த சோடா பாட்டில் கண்ணாடி  ராஜா அவன் சேகரிப்பில் இருந்த  காமிக்ஸ் புத்தகங்களை  எங்களுக்கு வாடகைக்கு தருவான். அவனிடம் இப்படி நிறைய வாங்கி படித்திருக்கிறேன். 

மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்தபோது அப்பா இரும்புக்கை மாயாவி, சிஐடி சங்கர் போன்ற கதைப்புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தார், அம்புலிமாமா சில சமயம் வாங்கியதுண்டு. இரும்புக்கை மாயாவி புத்தகத்தின் பக்கங்கள் ஒன்றாக சேரும் இடத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு இருக்கும்.

 அது எனக்கு அந்த புத்தகத்தின் லிப்ஸ்டிக் தடவிய உதடு போல தோன்றும். டயானாவும் மண்டையோடும் டெவிலும் மாயாவியும் அவரது செயற்கை கையும் காட்டுவழியில் அவர் பயணமும் சாகசங்களுமாய் இரவில்  உறக்கமின்றி அப்பயணங்களில் நானும் உடன் இருந்தேன்.

சி ஐ டி சங்கர் சித்திரக்  கதையில்   ஜப்பானிலிருந்து வந்து இந்தியாவின் நதிகளில் ஒரு நச்சுக்களைச் செடியை போட்டு வறண்டு போகச்செய்த நாசகாரர்களை  சங்கர் களையெடுக்கப்போவார். வில்லனின் மாருமோச்சி என்னும்  மகனை சங்கர் மலை உச்சியிலிருந்து கீழே தள்ளி விட்டு கொன்று விடுவார். அது தெரியாத வில்லன் சங்கரிடம்’’ எங்கே என் மகன் மாருமோச்சி என் கேட்பார்’ பதிலுக்கு சங்கர்  ’’அவன் மாடு மேய்க்க போயிருப்பான்’’ என்பார். அதையே  பல நூறு முறை படித்து சிரித்துக்கொள்வோம்.

அது சித்திரக்கதை புத்தகம்  என்பதால் அந்த காட்சிகள் நேரில் கண்ட அனுபவத்தையே எனக்களித்தது. அதிலிருந்து லேசில் விடுபட முடியவில்லை. மேலும் மாடு மேய்த்தல் போன்ற வட்டார வழக்கில் வாசித்ததும் கூடுதல் மகிழ்ச்சியளித்தது.

அது கொடுத்த நம்பிக்கையில்  ( ஒரு போதாத வேளையில்) எங்கள் வீடு இருந்த அந்த தெருவில் இருக்கும் என் வயது சிறுவர்களுக்கு நானே கைப்பட எழுதியும் வரைந்தும் ஒரு கையெழுத்து பத்திரிக்கை நடத்த தலைப்பட்டேன். 

சிஐடி சங்கர் கதையின் அந்த ஒரு விஷக்களையின்   ஏராளமான விதைகள் நீரில் கலந்து பெருகிப் பெருகி நீர் நிலையை வற்ற வைப்பது என்னும் யுத்தி எனக்கு பெரிதும் ஆச்சர்யமளித்தது. (18-ம் நூற்றாண்டில் லேடி ஹாஸ்டிங்ஸ் இப்படித்தான் விளைவுகளை எண்ணிப்பார்க்காமல்  வெங்காயத்தாமரையை ஹூக்ளி நதியில் அறிமுகப்படுத்தினார்) 

 ஏறக்குறைய அதைப்போலவே  (காப்பி) ஒரு காமிக்ஸ் சித்திரக் கதையை உருவாக்கி துணிந்து கையால் படங்களை வரைந்து அதை சுற்றுக்கு விட்டிருந்தேன். செடிகொடிகளின் மீது  ஆர்வம் உண்டாகி இருந்த காலம் அது. வீட்டில் இருந்த கனகாம்பரம் அகத்தி செம்பருத்தி ஆகியவற்றின் மீது பெரும் பிரியம் உண்டாகி இருந்தது.

விடுமுறைகளில்  திப்பம்பட்டி தோட்டத்துக்கு போகும் போதெல்லாம்  தேங்காய் போடுவது, கட்டுச்சேவல் வளர்ப்பது, எங்களது சேவல் சண்டைக்கு போன உடனேயே மாலை வரவிருக்கும் தோற்ற கட்டுச்சேவல்களின் கறிக்கென மசாலா அரைக்கத் துவங்குவது, வாழை அறுவடை முடிந்து  ஊதாக்கூம்புகளாக கிடக்கும் ஏராளமான வாழைப்பூக்களை சாக்கில் கட்டி வயலை சுற்றி பெருக்கெடுத்தோடும் ஆற்றில் வீசுவது, மாட்டு வண்டியின் நடுவில் இருக்கும் பணம் வைத்து கொள்ளும்  ரகசியப் பெட்டி முழுக்க இலந்தைப்பழங்களை நிறைப்பது, நிரம்பி வழியும் காட்டுக்கிணற்றின் நீர்ப்பாம்புகளை அஞ்சிக்கொண்டே பார்ப்பது, வெள்ளம் ஓடும் ஆற்றை கண்களை மூடிக்கொண்டு  வண்டியில் கடப்பது என இயற்கையுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த  காலங்கள் அவை. 

தாவரங்கள் மீது ஆர்வமும்  அன்பும்  அப்போதிலிருந்து பெருகி இன்னுமே அவற்றைக் கற்றுக்கொள்வதில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.

இளங்கலை படிக்கையில் பல கல்விச்சுற்றுலாக்கள் என் யானைப்பசிக்கு போதுமான தீனி போட்டன. முதுகலை நேரடியாக பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்த 5 பேரில் நானும் ஒருத்தியானதால் அங்கு தனியே இருந்த மாபெரும் தாவரவியல் பூங்காவில்  பழியாய் கிடந்து,மேலும் மேலும்   தாவரங்களை நோக்கியே பயணித்தேன்.

இடையில் வாசிப்பும் தொடர்ந்தது. பல்கலைக்கழகத்தில் தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்தேன். அங்கு fine arts clubல் சேர்ந்து அசட்டு கவிதைகள் எல்லாம் எழுதி வாசித்தேன்.அதன் பிறகு எங்கிருந்தோ எழுதவேண்டும் என்னும் கொதி வந்து சேர்ந்தது.

பல கதைகளை எழுதி விகடன் தினமணிக்கதிர் குங்குமம் குமுதம் என்று அனுப்புவேன். தவறாமல் விடுதி விலாசத்துக்கு அவை திரும்பி வரும். ஆனாலும் மனம் தளராமல் எழுதி அனுப்பிக் கொண்டே இருப்பேன்.

பொள்ளாச்சி வீடு இருந்த தெருவின் கடைசியில்  ஒரு பெரும் பணக்காரரின் விவசாய நிலம்  இருந்தது. அங்கே அவ்வப்போது சில  ஏழைச்சிறுவர்கள்  வேலிக்குள் நுழைந்து மாங்காயும் வெள்ளரியும் பூசணியும் வெண்டைக்காய்களுமாக திருடுவது வழக்கம்.

 ஒருக்கில் அங்கு விளைந்திருந்த  பூசணிக்காய்களை திருடி வீடுகளுக்கு விற்று சில்லறைக்காசு பார்த்துகொண்டிருந்த சிறுவனொருவன் எங்கள் வீட்டுக்கும் வந்தான். அப்போது  பல்கலை விடுமுறையில் வீட்டில் இருதேன். அப்பா அந்த பூசணியை பார்த்து அவனை அடிக்க போய் கடுமையாக திட்டி ’’இந்த வயசிலேயே திருடியவன் நாளைக்கு என்ன வேணும்னாலும் செய்வே’’ என ஏசி துரத்தி விட்டார். முன்னங்கைகளில் முள் வேலிக்குள் நுழைந்த காயங்கள் இருந்த அந்தப்பையன்  பூசணிக்காயை வாசலிலேயே விட்டுவிட்டு அழுதுகொண்டே ஓடிபோனான்..

 அவன் போனபின்பு அம்மாவை அழைத்த அப்பா’’பாப்பாத்தி, பூசணிக்காய உள்ளே எடுத்து வை ’’ என்றார்.

அந்த சம்பவம் என்னை என்னவோ செய்தது. ஒரு காயம் அல்லது ஒரு ஆழமான தொந்தரவு உண்டாயிருந்தது உள்ளே. சாம்பல் பூசணி என்று தலைப்பிட்டு அந்த அனுபவத்தை அப்படியே கதையாக எழுதி தினமணிக்கதிருக்கு அனுப்பினேன்.அடுத்த மாதம் ஞாயிறு அன்று என் பெயரில் அந்த கதை பிரசுரமானது.

அச்சில் என் கதையை, என் பெயரை பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதை இப்போதுகூட எழுத்தில் கொண்டு வர முடியாது. பெருமிதம் கர்வம் மகிழ்ச்சி எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான உணர்வு.  மேலும் அந்த  கசப்பான அனுபவம் உண்டாக்கி இருந்த அசெளகரியம் குறைந்தும் விட்டிருந்தது.

பின்னர் முனைவர் பட்ட ஆய்வில் மும்முரமாக  ஈடுபட்டேன் எனினும் வாசிப்பு  தொடர்ந்தது. அனேகமாக தினமும் வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். அப்போது பயணம் அதிகம், பொள்ளாச்சியிலிருந்து கோவை பல்கலைக்கழகம் அங்கிருந்து  கோத்தகிரி வனக்கல்லூரியில் லேப்  நான் வாடகைக்கு எடுத்திருந்த நிலம் தொண்டாமுத்தூரில் இருந்தது அங்கும் அவ்வப்போது சென்று ஆய்வுக்கான தாவரங்களின் வளர்ச்சியை பார்ப்பது என ஒவ்வொரு நீண்டபயணத்திலும் வாசித்துக்கொண்டிருந்தேன்.

 டெல்லி பயணங்கள்,  இந்த  NGM  கல்லூரியில் வேலை  பின்னர் திருமணம்  என்றான பின்னர் அந்த பாலை வாழ்வில் அத்தனை இன்னல்களுக்கிடையில் அவ்வபோது மங்கையர் மலரில் துணுக்குகள் அவள் விகடனில் கவிதை என்றெழுதி அனுப்புவேன்

2 கவிதைகள் விகடனில் வெளியானது அதில் ஒன்று முழுப் பக்கத்துக்கு வந்தது. அபுதாபி வாழ்வின் அவலங்களை அந்த இரண்டே இரண்டு  பிரசுரங்கள் மீட்டெடுத்தது என்றே சொல்லலாம்.

இந்தியா வந்தபின்னர் வேலை தேடுதல், யாரையும் சாராமல் வாழ்வைத் தொடரும் சவால் என் பல கஷ்டங்கள், எழுத்தை மறந்தேன் ஆனால் வாசிப்பும் மகன்களுக்கு கதை சொல்லலும் தொடர்ந்தது. ஜெ வின் எழுத்துக்கள் மித்ரா மூலமாக அறிமுகமானது. அதன் பின்னர் வாழ்க்கை முற்றாக மாறியது. ஒரு சுழல் போல அவரின் எழுதுக்களுக்குள் நாங்கள் மூவரும் மூழ்கினோம்.

பின்னிரவுகளில்  மரத்தடி கயிற்றுக்கட்டிலில் என் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் மகன்களுக்கு  ஜெ வின் கதைகளை வரி வரியாக வாசித்து வாசித்து கதை சொல்லி தூங்க வைத்து ஒவ்வொருவரையாக உள்ளே சென்று படுக்க வைத்துவிட்டு இருவருக்குமிடையில் அக்கதைகளிலிருந்து விலகமுடியாமல் விழித்திருந்த இரவுகள் அனேகம்.

பின்னர் வெண்முரசு.

என் மொத்த வாழ்க்கையும் வெமு வெபி என் இரண்டாக பிரிக்கும் அளவுக்கு அதன் தாக்கம் இருந்தது. நான் முற்றிலும் வேறு ஒருத்தியாய் மாறிப்போயிருந்தேன். என் அகமொழி மேம்பட்டிருந்தது. வாழ்க்கை மிக கண்ணியமானதாக மாறி இருந்தது. ஒரு வலைப்பூ துவங்கி எழுதிக்கொண்டிருந்தேன். தாவரங்களை குறித்து நிறைய நண்பர்களுக்கு கைப்பட பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன்.

அப்போதுதான் 2016ல் தினமலரில் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு தம்பி மாதவன் இளங்கோவினால் கிடைத்தது.  அதில் 4ம் பக்கத்தில் எழுதிகொண்டு இருந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது .பல பள்ளிகளில் என் கட்டுரை வெளியான பக்கத்தை நோட்டீஸ் போர்டில் ஒட்டி வைத்தார்கள்.  தினமலரில் என் போன் நம்பர் வாங்கி நிறைய பேர் அழைத்து பாராட்டியும் ஆலோசனை கேட்டும் தொடர்பு கொண்டார்கள். கல்லூரிகளிலும் கட்டுரைகளை வாசித்தார்கள்.

சமயங்களில் வாரம் 4 கட்டுரைகள் கூட வெளியாகின திரு பொன் வாசுதேவன் கட்டுரைகளை வார்த்தை உச்ச வரம்பிற்குள் எழுத கற்றுக் கொடுத்தார்.

தினமலரில் சன்மானமும் கொடுத்தார்கள். ஏறக்குறைய 3 வருடங்கள் எழுதிய தொகையை கொண்டு ஒரு லேப்டாப் வாங்கினேன்

அதன்பிறகு மேலும் மேலும் எழுதிக்கொண்டே இருந்தேன் இருக்கிறேன்

தமிழில்  தாவரவியலை எழுதுவதில் பலசமயம் பொருத்தமான சொல்லை கண்டுபிடிப்பதே சிக்கலாக இருந்தது.

புதிய சொற்களை தேடிப்பிடித்தேன், சிலவற்றை நானே கொஞ்சம் உருவாக்கினேன்.

வெண்முரசில் dicotyledon  என்பதற்கு ’’ஈரிலை விதை முளை’’ என்னும் சொல்லை வாசித்த போதும், சங்க இலக்கியப் பாடலொன்றில்  அல்லியுமல்லாத புல்லியுமல்லாத மலர்களின் ஒற்றை அடுக்கான tepal/perianth என்பதற்கான அதழ் என்னும் சொல்லை கண்டபோதும்  இவற்றையெல்லாம் தொகுத்து தமிழ் தாவரவியல் அகராதி தயாரித்தால் என்ன என்னும் எண்ணம் தோன்றியது. 

சொற்களை தேடித் தேடிச் சேகரித்தபோது  முடியும் என்னும் நம்பிக்கையும் வந்தது. கடந்த 2022 மே மாதம் என் தளத்தில் அதழ் என்னும் தாவரவியல் அகராதியை தயாரிக்கவிருக்கும் அறிவிப்பை வெளியிட்டேன்.’

இந்த ஒரு வருடகாலமும் அதன்பொருட்டு உழைத்துக் கொண்டே  இருந்தேன்

மாதம் 4 கட்டுரைகள் சொல்வனத்திலும் ஆனந்த சந்திரிகையிலும் எழுதுவது, இல் பேணுதல், பயணம், சமையல், கல்லூரி வேலை, பாடங்களுக்கான முன் தயாரிப்புக்கள், தரச்சான்றிதழ்களுக்கான ஆவணங்களை உருவாக்கும் மென்னியை முறிக்கும் வேலை, ஆய்வு, குடும்ப சிக்கல்கள், கல்யாணம், காதுகுத்து, நல்லது அல்லது என போய் வருவது, அப்பா அம்மாவின் சுகவீனங்களை கவனிப்பது மகன்களின் படிப்பு , தோட்டச் செடிகள் பராமரிப்பது, வாசிப்பு, ஆய்வு கட்டுரைகள் எழுதுவது, அம்மாவின் இழப்பு என மூச்சு விடமுடியாத அளவுக்கு பணிச்சுமை.

எனினும் தினமும் ஆங்கில தாவரவியல் சொற்களை தேடித்தேடி சேர்த்துவைப்பதும்  நேரம்  கிடைக்கையில் தமிழ்சொல்லை பொருத்தமாக எடுத்து எழுதுவதும் தொடர்ந்தது.

எனக்கு ஓய்வு நேரமென்பது மிக குறைந்த அளவே இருந்தது அதிலும் நான் இந்த அகராதி வேலைகளை மட்டுமே பார்த்தேன். இடையில் அரிஸோனா இணைய தளத்தின் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றும் வேலையும் செய்தபோது இந்த அகராதி தயாரிப்பிற்கும் அது உதவியாக இருந்தது.

இதை தனியே செய்ய முடியாது என என்னை உற்சாகம் குன்றச்செய்தவர்கள் பலர்.  அகராதி பணியை குறித்த கடிதம் ஜெ தளத்தில் வந்தபோது பலர் ஊக்கமளித்தார்கள்.

எல் ஆர் ஜி திருப்பூரில் அப்போது பணியில் இருந்த இப்போது தாராபுரம் அரசுக்கல்லுரி முதல்வராக இருக்கும் Dr பத்மா ஒரு கட்டைப்பை நிறைய தமிழ் தாவரவியல் நூல்கள் எடுத்துக்கொடுத்தார். அவற்றை 6 மாத காலம் வைத்திருந்து தகவல்கள் சேகரித்து பின்னர் திருப்பிக் கொடுத்தேன், அ.வெண்ணிலா இப்போது தமிழில் இருக்கும் தாவரவியல் நூல்களை இதற்கென வாங்கி அனுப்பி இருக்கிறார்.

10 ஆயிரம் ஆங்கில தாவரவியல் சொற்களை இது வரை தொகுத்திருக்கிறேன்.

அவற்றில் 2500 சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை  எழுதியாகிவிட்டது

ஆனால் அந்த வேலை தேங்கி கிடப்பதுபோல ஒரு எண்ணம் எனவே நூலாக தொகுக்கும் முன்னர்  இன் வலைதளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை பதிவிடலாம் என்று முடிவு செய்து இப்போது ஆங்கில A வில் இருக்கும் சொற்களுக்கு ஆங்கில விளக்கமும்  இணையான தமிழ் சொல்லுமாக பதிவிட்டிருக்கிறேன்

 இனி தொடர்ந்து பதிவிட்டு z வரை முடித்தபின்னர் பொருத்தமான சிறு படங்களையும் சேர்க்கவிருக்கிறேன்

இதை யாருக்காக எழுதுகிறேன் என்றால், தாவரவியல் ஆர்வம் கொண்டவர்களுக்கு, தாவரவியல் மானவர்களுக்கு, பின்நாட்களில் இப்படி ஒரு ஆங்கில அறிவியல் சொல்லுக்கான பொருத்தமான இணைத்தமிழ்சொல் இந்த அதழ் அகராதியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும்  என்பதற்காக.  எனினும் முதன்மையாக நான் இதை எனக்காகத்தான் செய்கிறேன்.

Agaricas  என்பதற்கு நிலக்குடைக்காளான், adhesive  என்பது பசைமம், african mahogany  தான் சீமை நூக்கு, புற்களுக்கென்றெ இருக்கும் தனித்த அறிவியல் Agrostology, capitulam என்பது மலர்தலை, receptacle தான் பூத்தளம், Apicula என்பதை குறுமென்கூரென்றும், தண்டை தழுவி அணைந்துகொண்டிருக்கும் இலையடிச்செதிலென்றும்  aggregate fruit  என்பதை திரள் கனி என்றெல்லாம் வாசிக்கையில் எனக்குண்டாகும் நல்ல தமிழில் தாவரவியலை கற்றுக்கொள்ளும்  மகிழ்வின் பொருட்டுத்தான் இதை உருவாக்குகிறேன். அதழ் அகராதி நிச்சயம் பிறருக்கும் பெரிதும் பயன்படும்.2024 இறுதிக்குள் 10 ஆயிரம் சொற்களையும் வலையேற்றும் உத்தேசத்தில் இருக்கிறேன்.