லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2017 (Page 3 of 3)

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 

இன்று நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் அதாவது நான் இளங்கலை படித்த தற்போது துணைப்பேராசிரியராகப் பணிபுரிகின்ற கல்லூரியில்,வைரவிழாகொண்டாட்டங்களில் ஒன்றாக முன்னாள் மாணவர்களின் சந்திப்பும்  அப்போது3 சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது  வழங்குதலும் நிகழ்ந்தது  .

விழாவின்பொருட்டு நேற்றிலிருந்தே அத்தப்பூக்கோலம் போடத் துவங்கி இன்றும் காலையில் சென்று அதை மற்ற தோழிகளின் உதவியுடன் முடித்தேன்

அடுத்த முறை பூக்கோலம் போடுகையில் வழமைபோல வட்டமாக conventional design ல், போடாமல் புதிதாய் சிலவற்றை முயற்சிக்க இன்றே பல மாதிரிகள் பார்த்து வைத்துக்கொண்டேன்

என் வாழ்வில் இதுபோல எளிமையான விஷயங்களில் என்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் மனமொன்றி அவற்றை செய்துமுடிக்கவும்  இன்னும் வாய்த்திருப்பதிலும் இயலுவதிலும் மகிழ்கிறேன்

விருது பெற்றவர்களில் ஒருவர் தமிழகவானிலை துறை இயக்குனர் திரு பாலசந்திரன். வெகுநாட்களுக்குப்பிறகு நல்ல மழை பொழிந்த இன்னாளில் அவர் இங்கு வந்திருந்து விருது பெற்றது பொருத்தமாக, மகிழ்வாக இருந்தது

என் வகுப்பு நண்பர்களில் சிலரே வந்திருந்தார்கள் அதுவும் பெருமுயற்சிக்குப்பின்னர். பலர் வரவில்லை  பல காரணங்களின் பொருட்டு

வந்திருந்த நாங்கள், செல்வமணி, செல்வகுமார், கண்ணன், சிவச்சந்திரன், ஜூனியர் சிவச்சந்திரன் (  ஜூனியர் புவனா என்று சொல்வதே பொருத்தம் அப்படியே அம்மாவின் ஜாடை அதே கண்கள் , அதே உடல்மொழி!), டேவிட்,மயில்சாமி, ரவி, மட்டுமே

விழாவில் சிறிது நேரமும்  பின்னர் கல்லூரியை, துறையை சுற்றிப்பார்த்ததுமாய் பொழுது போனது. கல்லூரி அடியோடு மாறிப்போனதுபோல நாங்கள் வெகுவாய் மாறி இருக்கவில்லை. உருவம் மட்டுமே மாறியிருந்தது, உள்ளமும் சுபாவமும் அப்படியே இருந்ததால் இயல்பாய் 28 வருடங்கள் பின்னொக்கி செல்லவும் மகிழ்ந்திருக்கவும் முடிந்தது. வராத சிலரும் நினைவில் எங்களுடன் இருந்தார்கள், அனைவருமாய் அமுதசுரபியில் மதிய உணவு, பின்னர் கோபியை வலுக்கட்டாயமாக பணிபுரியும் இடத்திற்கே சென்று சந்திதோம்,  செல்வமணியின் காரில் மயில்சாமி மற்றும் ரவி என்னை கொண்டுவந்து வீட்டில் சேர்த்துவிட்டு சென்றார்கள், வீட்டில் இருக்கும் பென்சில் மரத்தின் தாவரவியல் பெயர் எனக்குதெரியுமா என ரவி சோதித்து கேள்விகேட்டதும் நான் ‘Acacia auriculiformis’   என சரியாக சொல்லிவிட்டேன். (என்கிட்டேயேவா?)

பல வருடங்களுக்குப்பிறகு நண்பர்களைச்சந்தித்ததில் மகிழ்ச்சி அனைவருக்கும்,

மாறிவரும்காலகட்டமும் அதற்கேற்றாற் போல மாறிவரும் வாழ்வின் இயங்கியலும், வெகுவாய் மாற்றத்துக்குள்ளாகிவிட்டிருக்கும்  உயர்கல்வித்துறைக்குறித்தும், குடும்பத்தைக்குறித்தும், பேராசிரியர்கள்பற்றியும் நிறையப்பேசினோம்

இனி வரும் காலங்களில். அனைவரும் குடும்பநண்பர்களாய் என்றென்றைக்குமாய் தொடரணும் என்றே அனைவரும் விரும்பினோம் அதுகுறித்து நிறைய பேசினோம், அப்படியே நடக்கட்டும்! அனைவரின் சார்பாகவும்  வந்திருந்த அனைவருக்கும் வரமுடியாமற் போனவர்களுக்குமாய் எனதன்புகள் என்றென்றைக்குமாய்!

பின்னர் கணிதத்துறை இந்துமதி மேடம் வீட்டுத்திருமணம், அஸ்ஸாம் மாப்பிள்ளையும் கொங்குப்பெண்ணும், கூடுதல் மகிழ்ச்சி மணமக்களைகண்டதில். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும்  அன்புகளும்.

ayini3

அயினிப்புளிக்கறி

திரு ஜெயமோகன் அவர்களின் ‘’அயினிப்புளிக்கறி’’ வாசித்தேன்.கனிந்த முதிர்ந்த காதலின் அழகு மிளிரும் கதை இது

முதலில் கதையை எப்போதும் போல  ஒரே ஓட்டமாய் அவசரமாய் வாசித்துவிட்டு பின் நிதானமாய் சில முறை மீள வாசித்தேன். அயினியை தாவரவியலில் நான் இதுவரையிலும் தெரிந்திருக்கவில்லை, ஆதலால் முதலில் அதன் தாவரவியல் பெயரையும் (Artocarpus hirsutus) படங்களையும் பார்த்து அறிந்துகொண்டேன், எப்பொழுதுமே அவரின் எழுத்துக்களில் வரும் உணவு குறித்த வர்ணனைகளை மிக ரசிப்பதுடன் அவற்றில் சிலவற்றை செய்தும் பார்த்துவிடுவேன். இதிலும் அந்த இஞ்சியை சதைப்பதிலும் தாளித்து அது வெண்ணையாய் உருகிவருகையில் இறக்குவதுமாய் அயினிப்பிஞ்சு கிடைத்தால் உடன் செய்துசாப்பிட்டிருப்பேன் . அத்தனை வசீகரித்தது  செய்முறையின் விவரிப்பு.

மோகன்லாலின் ஒரு  மலையாளப்படத்தில் வீட்டு முன்பு நிற்கும் ஒரு பெரிய பலாமரத்தை வெட்ட ஆட்கள் வருவதும்  இளமை முழுதும் துபாயிலிருந்து பணம் சம்பாதித்து குடும்பத்தை மேலேற்றிவிட்டு திருமணம் ஆகாமல் குடும்பத்தினருக்கு பாரமாய் இருக்கும் அவரும், அந்த காய்ப்பு நின்ற பலாவும் ஒன்றெனக்காட்டுவதையும் இந்த கதையை வாசித்ததும்.  நினைவிற்கு வந்தது.

பணத்திற்காக,  அள்ளித்தருகிற அன்னையைப்போன்ற மரத்தை  வெட்டவும் ,வளர்த்த அப்பனை அன்னியர் முன்னால் அடிக்கவும் துணிந்த தலைமுறையின் கதையாகவும், சின்ன வயசில் பிடித்த பீடியை மீண்டும் பிடிக்க விரும்பும் 40 வருடத்திற்கு முன்னர் மூத்தவள் கையால் உண்ட அயினிப்புளிக்கறிக்கு ஏங்குபவராகவும், கடவுள் அள்ளித் தந்திருக்கும் கோடிக்கணக்கான ருசிகளில்  இளமையில் புளிப்பைஅறிந்துவிட்டு, முதுமையில் இனிப்பையும் ருசிக்க, ஏங்கும் ஆசானின் உள்ளுறங்கும் காதலையும் , தனிமையின் தவிப்பையும் சொல்கிறது இந்தக்கதை

காயில் புளித்தது இன்று கனியில் இனிக்கிறது, முன்பு கடுத்து விலக்கிவைத்துவிட்டு, இன்று கனிந்துமூத்தபின் இனிக்கும் ஆசானின் நேசமல்லவா அயினி?

வெறும் ஒன்பது மாசத்தில் கசந்த ஒன்று இன்று  முதிர்ந்து,தனித்து, கனிந்து இனிப்பது அழகு. ’’வாறியாடி’’ ? என்னும் ஒற்றைக்கேள்வியில் முடிந்த அத்தனை வருட பிணக்கும்,பாய்ந்து  வேலியைச்சாடி இறங்கும் மூத்தவளின் மனதிலும் இருக்கும் நேசமும்,  சுவை சரியாக வராத அயினிப்புளிக்கறியாயினும் சுயமாக செய்துசாப்பிட்ட நிறைவை வாசிக்கையில் உணரமுடிந்ததது. இனி ஆசான் கனவிலிருந்ததைப்போலவே திடமாய் இளமையாய்  இருக்க முடியாவிட்டாலும், வயசுக்காலத்தில் காற்றும் வெளிச்சமுமாய் அவர் வாழ்வு இருக்கும் அயினிப்புளிக்கறி இனி சரியாகவும் வரும் பின்னால் தொடர்ந்து வருபவளால்!

http://www.jeyamohan.in/102279#.WfyFnzdx3IU

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑