திரு ஜெயமோகன் அவர்களின் ‘’அயினிப்புளிக்கறி’’ வாசித்தேன்.கனிந்த முதிர்ந்த காதலின் அழகு மிளிரும் கதை இது
முதலில் கதையை எப்போதும் போல ஒரே ஓட்டமாய் அவசரமாய் வாசித்துவிட்டு பின் நிதானமாய் சில முறை மீள வாசித்தேன். அயினியை தாவரவியலில் நான் இதுவரையிலும் தெரிந்திருக்கவில்லை, ஆதலால் முதலில் அதன் தாவரவியல் பெயரையும் (Artocarpus hirsutus) படங்களையும் பார்த்து அறிந்துகொண்டேன், எப்பொழுதுமே அவரின் எழுத்துக்களில் வரும் உணவு குறித்த வர்ணனைகளை மிக ரசிப்பதுடன் அவற்றில் சிலவற்றை செய்தும் பார்த்துவிடுவேன். இதிலும் அந்த இஞ்சியை சதைப்பதிலும் தாளித்து அது வெண்ணையாய் உருகிவருகையில் இறக்குவதுமாய் அயினிப்பிஞ்சு கிடைத்தால் உடன் செய்துசாப்பிட்டிருப்பேன் . அத்தனை வசீகரித்தது செய்முறையின் விவரிப்பு.
மோகன்லாலின் ஒரு மலையாளப்படத்தில் வீட்டு முன்பு நிற்கும் ஒரு பெரிய பலாமரத்தை வெட்ட ஆட்கள் வருவதும் இளமை முழுதும் துபாயிலிருந்து பணம் சம்பாதித்து குடும்பத்தை மேலேற்றிவிட்டு திருமணம் ஆகாமல் குடும்பத்தினருக்கு பாரமாய் இருக்கும் அவரும், அந்த காய்ப்பு நின்ற பலாவும் ஒன்றெனக்காட்டுவதையும் இந்த கதையை வாசித்ததும். நினைவிற்கு வந்தது.
பணத்திற்காக, அள்ளித்தருகிற அன்னையைப்போன்ற மரத்தை வெட்டவும் ,வளர்த்த அப்பனை அன்னியர் முன்னால் அடிக்கவும் துணிந்த தலைமுறையின் கதையாகவும், சின்ன வயசில் பிடித்த பீடியை மீண்டும் பிடிக்க விரும்பும் 40 வருடத்திற்கு முன்னர் மூத்தவள் கையால் உண்ட அயினிப்புளிக்கறிக்கு ஏங்குபவராகவும், கடவுள் அள்ளித் தந்திருக்கும் கோடிக்கணக்கான ருசிகளில் இளமையில் புளிப்பைஅறிந்துவிட்டு, முதுமையில் இனிப்பையும் ருசிக்க, ஏங்கும் ஆசானின் உள்ளுறங்கும் காதலையும் , தனிமையின் தவிப்பையும் சொல்கிறது இந்தக்கதை
காயில் புளித்தது இன்று கனியில் இனிக்கிறது, முன்பு கடுத்து விலக்கிவைத்துவிட்டு, இன்று கனிந்துமூத்தபின் இனிக்கும் ஆசானின் நேசமல்லவா அயினி?
வெறும் ஒன்பது மாசத்தில் கசந்த ஒன்று இன்று முதிர்ந்து,தனித்து, கனிந்து இனிப்பது அழகு. ’’வாறியாடி’’ ? என்னும் ஒற்றைக்கேள்வியில் முடிந்த அத்தனை வருட பிணக்கும்,பாய்ந்து வேலியைச்சாடி இறங்கும் மூத்தவளின் மனதிலும் இருக்கும் நேசமும், சுவை சரியாக வராத அயினிப்புளிக்கறியாயினும் சுயமாக செய்துசாப்பிட்ட நிறைவை வாசிக்கையில் உணரமுடிந்ததது. இனி ஆசான் கனவிலிருந்ததைப்போலவே திடமாய் இளமையாய் இருக்க முடியாவிட்டாலும், வயசுக்காலத்தில் காற்றும் வெளிச்சமுமாய் அவர் வாழ்வு இருக்கும் அயினிப்புளிக்கறி இனி சரியாகவும் வரும் பின்னால் தொடர்ந்து வருபவளால்!
http://www.jeyamohan.in/102279#.WfyFnzdx3IU
Leave a Reply