
இன்று நவம்பர் 22 , 2025 இந்த வேடசெந்தூர் கிராமத்து வீட்டுக்கு 17 வருடங்கள் நிறைவு. அப்படி ஒன்றும் வேகமாகக் காலம் ஓடிப்போனதாகத் தோன்றவில்லை. துளித்துளியாகத்தான் நகர்கிறது நாட்கள். சரண் தருண் இருவரும் இங்கு வருகையில் மிகச்சிறியவர்கள்.வீடு கட்டுவது அதன் சிரமங்கள், தேவை குறித்தெல்லாம் எதுவும் அறியாத வயது.ஆனால் எந்தப்புகாரும் இல்லாமல் என்னுடன் இரவும் பகலுமாக அலைந்தார்கள்.
அவர்களையும் அழைத்துக்கொண்டுதான் மாலைநேரங்களில் பேருந்தில் இந்த வீட்டு கட்டுமானப்பணிகளைப்பார்க்க வருவேன்.
கல்லூரி முடிந்து நான் வீடு திரும்பி, அவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து திரும்பி பின்னர் மூவருமாக பேருந்துநிலையத்துக்கு நடந்து வந்து பஸ் பிடித்து இங்கு வந்து இறங்கும் போதே இருட்டிவிட்டிருக்கும். எனக்காகச் சலித்துபோய்க் காத்திருக்கும் எஞ்சினியர்களிடம் பேசிவிட்டு மீண்டும் பொள்ளாச்சி வீட்டுக்குத் திரும்ப இரவாகிவிடும். எதேதோ கடைகளில் எதையோ வாங்கிக்கொண்டு வீடுவந்து பொட்டலங்களைப்பிரித்து மூவருமாகச் சாப்பிட்டுவிட்டு உறங்கச்செல்வோம்.

2000-ங்களில் அம்மா சோலையார் டேம் பள்ளியில் தலைமைஆசிரியராக பணியிலிருக்கையில் இந்த வழியே பஸ்ஸில் போகையில் கடலைக்காடாக இருந்த இந்த நிலம் விற்பனைக்கு என்று விளம்பரப்பலகை வைத்திருந்ததை பார்த்திருக்கிறார். எனவே அவர்களுக்கு ஒரு நிலம் வாங்க நினைத்து என்னிடமும் அதைச்சொன்னார்கள் நான் அப்போது அபுதாபியில் இருந்தேன். அந்தகாலத்தில் வீடோ நிலமோ எதைக்குறித்தும் எனக்கு சிந்தனையே இல்லை. சர்வைவல், அதுவே எனக்குப் பெரும் சவாலாக அப்போது இருந்தது.
ஆனால் சரணுக்கு 1 வயது நிறைந்த போது இந்தியா வந்திருந்தேன். வாங்கிய அந்த நிலத்தில் அம்மா வீட்டுக்குப் பாலக்கால் போடும்போது சரண் அவன் பிஞ்சுக்கைகளால் நவதானியங்களை குழியிலிட்டான்.
அப்போது ’’… பக்கத்தில் இருக்கும் நிலத்தை நீ வாங்கு பின்னாடி உபயோகமாகும்…’’ என்று அம்மா சொன்னதும் அந்த நிலத்துக்கு வந்து நின்றேன். சர்க்கரையின்( அவள் பேரே அதுதான்) மாடும் கன்றும் மண்ணில் ஊன்றிய கழியில் கட்டப்பட்டிருந்தது. மாடு மடி நிறைந்து கனத்திருந்தது. செம்பு நிறத்தில், நெற்றியில் விபூதிப்பட்டைபோல ஒரு வெள்ளைத்தீற்றலும்,மைக்கண்களுமாக கன்று நின்ற இடத்திலேயே துள்ளிக்கொண்டிருந்தது. அருகும் கோரையும் அடர்ந்து பரவி கணுக்கால வரை புதைந்தது, இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த சரணுடன் குனிந்து ஒரு கல்லைப்புரட்டிப்பார்த்தேன். புழுக்களும் சிற்றுயிர்களும் இருந்தன. உயிர் நிறைந்திருந்த நிலம்.
அம்மாவிடம் போய் அவர்கள் வாங்கி இருக்கும் அளவுக்கே 11 செண்ட் நானும் நிலம் வாங்க எத்தனை செலவாகும் என்று கேட்டேன். ஒரு தொகை சொன்னார்கள். அதையே இரட்டிப்பாக 22 சென்ட் வாங்கினால் என்ன செலவாகும் என கணக்கிட்டேன். திருமணத்துக்கு வாங்கிய நகைகளில் பாதிக்கு மேல் நான் என் ஆய்வு உதவித்தொகையில் வாங்கியவை மீதி அம்மா செய்தது.அவற்றை அப்படியே விற்றால் 22 சென்ட் வாங்க முடியும் எனத் தெரிய வந்தது. யோசிக்காமல் விற்றேன்.

பொள்ளாச்சி வீட்டில் கீழே குடியிருந்த இரட்டைப் பெண்மக்களின் தகப்பனான ஒருவர் நகைக்கடைக்கே வந்து சந்தைவிலைக்கு நகைகளை வாங்கிக்கொண்டு பணத்தை அங்கேயே கையில் கொடுத்தார் . நிலத்தை வாங்கி பதிவு செய்தேன். பின்னர் அப்பா அம்மா வீடு கட்டி குடிபோகும் போது தருண் வயிற்றில் நிறைமாதம். அவன் பிரசவத்துக்கு இந்தியா வந்திருந்தபோதும் இங்கே வீடுகட்டும் எண்ணமேதும் இல்லை. வேலையிலிருந்து ராஜி வைத்துவிட்டு முழுக்க முழுக்க இன்னொருவரைச் சார்ந்து இருந்த காலமாதலால் வேறு சிந்தனைகள் ஏதுமில்லாமல் இருந்தேன்.
அபுதாபியில் இருக்கவே முடியாத ஒரு கட்டத்தில் தம்பி விஜியின் காதல் திருமணப்பிரச்சனை தமிழ் சினிமாவில் கலப்புத்திருமண கிளைமாக்ஸ் போலவே சுடச்சுட நடந்துகொண்டிருந்தது. அதைச்சாக்காக வைத்துக்கொண்டு அவன் திருமணத்தை நடத்தி வைக்க இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு இந்தியா வந்தவள் பின்னர் அபுதாபிக்கு திரும்பவேயில்லை.

அம்மா வீட்டில் மகன்களுடன் இருக்கையில் 2005-ல் மீண்டும் அதே கல்லூரிவேலை தெய்வாதீனமாக திரும்பக்கிடைத்து அதே நாற்காலியில் அமர்ந்து பல வருடங்களுக்குப்பிறகு நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டேன் .
ஆனால் இரண்டு பெரும் சிக்கல்கள் எழுந்தன. அந்த வீட்டில் இருக்கவே முடியாத நிலை அப்பா என்பவராலும் இன்னொருவராலும் உண்டானது. பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடு அந்நியமாகி இருந்தது. அந்த வீட்டின் கசப்பான நினைவுகள் haunting ஆக இருந்தாலும் வேறு போக்கிடம் இல்லாததாலும் அப்போது அரசு வேலை கிடைத்திருக்கவில்லை சொற்ப சம்பளத்தில் வாடகைக்கு போக முடியாது என்பதாலும் அங்கே 1 வருடம் 8 மாதங்கள் இருந்தேன்.
சரணுக்கு இந்தியா வந்ததிலிருந்தே உடல்நிலை மிகவும் மோசமானது. எப்போதும் வாந்தி, மூச்சுவிட சிரமம் கையும் காலும் ஒல்லிக்குச்சியாக பாவமாக இருந்தான். எத்தனை மருத்துவம் பார்த்தும் சரியாகவே இல்லை. வாரா வாரம் மருத்துவமனையில் அனுமதிப்பேன். கோவையின் எல்லா மருத்துவமனைகளிலும் காண்பித்து யார் என்ன மருந்து சொன்னாலும் கொடுத்து இரவெல்லாம் அவனை தொட்டுத்தொட்டுப் பார்த்துக்கொண்டு தூக்கமில்லாமல் உட்கார்ந்திருப்பேன்.
அற்றைத்திங்கள் அந்நிலவில் எனக்கொரு அக்காள் இருந்தாள். அவளது கணவரின் பி ஹெச் டி மாணவியின் தந்தை மசானிக் குழந்தைகள் மருத்துவமனையின் முன்னாள் தலைவர். அவர் பணி ஒய்வு பெற்றே பலவருடம் ஆகி இருந்தது மிகுந்த தள்ளாமையில் இருந்தார். பி ஹெச் டி வழிகாட்டி என்னும் செல்வாக்கில் எனக்கு அக்காள் கணவர் அவரிடம் ஒரு அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொடுத்தார்.

சரணையும் தருணையும் அழைத்துக்கொண்டுஒரு வாடகைக்கார் வைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அவரது வீட்டுக்கே வரச்சொல்லி இருந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. முழுதாக 2மணிநேரம் சரணுடன் அவர் செலவிட்டார்.அவன் உடைகளைக் களைந்து முழுக்கப் பரிசோதித்தார் அவனுடன் விளையாட்டும் வேடிக்கையும் பேசினார், வீட்டுபின்கதவு வழியாக கூட்டிச்சென்று அவரது தோட்டத்தில் அவனையும் தருணையும் விளையாடச்சொல்லி கவனித்துக்கொண்டிருந்தார்.
விளையாட்டுக்குப் பின்னரும் அவனைப்பரிசோதித்தார். எல்லா முந்தைய மருத்துவப் பரிசோதனைகளையும் பார்த்தார்.இறுதியாக என்னை அழைத்து ’’….கவலைப்பட ஒன்றும் இல்லை மகன் ஆரோக்கியமாக இருக்கான் ஆனால் அவனை வீட்டுக்குள் அடைத்துவைத்து வளர்க்கவேண்டாம், இப்போதுஇருக்கும் வீட்டில் அவனுக்கு சுவாசக்கோளாறு உருவாக்கும் எதுவோ இருக்கிறது, நல்ல இயற்கையான சூழலில் ஓடியாடி வளர்ந்தால் காலப்போக்கில் முழுக்க குணமாகிவிடுவான்…’’ என்றார். அவரது வார்த்தைகளை அப்படியே கெட்டியாகப் பற்றிக்கொண்டேன்.
பொள்ளாச்சி வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் குடியிருந்த போலீஸ் குடியிருப்பு இருந்தது. அன்றாடம் மாலையில் திறந்த சாக்கடையில் செப்டிக் டேங்க் கழிவுகளை வெளியேற்றுவார்கள். எனவே கதவை எப்போதுமே அடைத்தே வைத்திருப்பேன், பயங்கர கொசுக்கடியும் நாற்றமுமாகவே இருந்தது.

மூச்சுக்கோளாறுக்காக சரண் எடுத்துக்கொண்டிருந்த ஸ்டீராய்டுகள் எனக்கு பெரும் கவலை அளித்தன. எனவே எப்பாடு பட்டேனும் இந்த வீட்டைக்கட்டுவது, கட்டுமுன்பே மரம் செடிகொடிகளை நட்டுவைப்பது என்று தீர்மானித்தேன்.
அதன்பிறகு ஏராளமான தடைகள், உள்ளம் தகர்க்கும் பிரச்சனைகள் மூளைச்சலவைகள் பயமுறுத்தல்கள் எல்லாத்தரப்பிலிருந்தும் வந்தன. நான் அசரவே இல்லை. சொல்லப்போனால் அதுவரையிலும் என் வாழ்வு மற்றவர்களால் தீர்மானிக்கப்பட்டது . ஒரு அன்னையாக அந்தக்கணத்திலிருந்து என் வாழ்வை நான் தீர்மானித்தேன்.
துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டே இருப்போம் முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டால் வேறு வழியே இல்லாமல் திரும்பிப் பார்ப்போமல்லவா. அப்படி ஒரு புள்ளி அது.
‘’… நீ ஒரு கிறுக்கு உன் வாழ்க்கையை பாழாக்கறதோட மகன்களின் வாழ்க்கையையும் பாழாக்குகிறாய் அவர்கள் இருவரும் ட்யூஷனோ சிறப்பு வகுப்புகளோ எதுவும் போக முடியாமல் எதிர்காலமே பாழாகும் வெளிநாட்டில் இருந்துட்டு கிராமத்துக்கு வீடுகட்டிபோறேன்னு எவளாவது பைத்தியக்காரி சொல்லுவாளா?…’’ என்று கண்டித்துவிட்டு பாதிச்சாப்பாட்டில் கையை உதறிவிட்டு அதே முன்சகோதரி புறப்பட்டு சென்றாள்.
தம்பியும் ’’….கோவையில் நல்ல செல்வாக்கான ஆர் எஸ் புரம் போன்ற இடத்தில் ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாங்கி தருகிறேன் தயவு செய்து இங்கே வீடு கட்டாதே..’’ என்றான், அத்தனை பேரும் அதேதான் திரும்பத் திரும்பச்சொன்னார்கள்.
உலகமே நகரமயமாக்கலுக்குப் பின்னால் மண்டியிட்டுத் தொழுது செல்கையில் நீ ஏன் கிராமத்துக்கு வருகிறாய் என்ற கேள்வி தொடர்ந்து என்னிடம் கேட்கப்பட்டுக்கொண்டே இருந்தது.
// “பெருஞ்செயல்களுக்கு முன்னால் தெய்வங்களின் எதிர்ப்புகள் எழும் . இயலுமா, பயனுண்டா, இழப்பவை என்னவென்று அறிவாயா, மீள இயலாதென்று எண்ணுக, இதைவிடவும் சிறந்த வழி பிறிதுள்ளது, இயல்வதை ஏற்று அமைவதே சிறப்பு, இன்னும் சற்று பொறுத்தமைக, விளைவுகள் எவையென்று இப்போது உரைக்கமுடியாது, ஊழுடன் பொருதுகிறாயா, மூத்தோர் சொல் கேள், வெற்றாணவம் இது, பெருவிழைவன்றி மற்றல்ல என்னும் பன்னிரு தடைச்சொற்கள் எழும் என்று நூல்கள் சொல்கின்றன// குருதிச்சாரலில் சொல்லப்பட்டிருக்கும் இதை இந்த வீடு கட்டிமுடித்து சில வருடங்கள் கழித்தே வாசித்தேன்.
பிடிவாதமாக வீட்டைக்கட்டினேன். ஒருத்தியாக இரண்டு சின்னக் குழந்தைகளையும் கல்லூரி வேலையையும் பார்த்துக்கொண்டு வீடு கட்டிய கதையை ஒரு நாவல் நிரையாகவே எழுதலாம். சரணும் தருணும் எல்கேஜியிலிருந்து 12 ம் வகுப்பு வரை ட்யூஷனே சென்றதில்லை அதனால் ஒன்றும் கெட்டுபோய்விடவுமில்லை.
வீடு கட்டியதை அப்போது எழுந்த பிரச்ச்சனைகளையெல்லாம் திரும்ப நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இரண்டு இளம் எஞ்சினியர்களின் முதல் புராஜக்ட் இது. அவர்கள் ஏமாற்றியது, அலைச்சல் சோர்வு பணக்கஷ்டம், எல்லாவற்றையும் தாண்டி இந்த வீடு பசுமை நிரம்பி இருக்கப்போகும் காட்சியை, மகன்கள் ஆரோக்கியமாக அங்கே வாழ்வதை அவ்வப்போது எண்ணிப்பார்த்துக் கொள்வேன்.

LIC யில் வீட்டுக் கடன் வாங்கினேன். 2007-ல் கட்டிட வேலைகள் தொடங்கியது
கட்டிடம் எழும்ப எழும்ப ஒவ்வொரு ஸ்டேஜ் முடியும் போதும் புகைப்படம் எடுத்துக்கொண்டு போய் காட்டினால், அடுத்த தவணை பணம் அளிப்பார்கள். கல்லூரியில் அப்போது காலை மட்டும் விடுப்பெடுத்துக்கொண்டு கோவை சென்று, அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து அந்த அலுவலகம் போய் எதிலெதிலோ கையெழுத்துப்போட்டு செக் வாங்கிக்கொண்டு திரும்ப வருவேன். பஸ்ஸில் அமர்ந்திருக்கையில் கடும் பசியில் துறைக்கு வந்து டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிடுவதை நினைத்துப்பார்த்துக்கொண்டே வருவேன். பொள்ளாச்சி வந்து செக்கை பணமாக மற்றி, அந்த எல் ஐசி ஏஜென்ட் வங்கி வாசலில் காத்திருப்பார், அவரது 1 % கமிஷனை வாங்கிக்கொள்ள,அவருக்கு கொடுத்துவிட்டு ஓட்டமாக ஓடி கல்லூரிக்குச் செல்வேன்.
இடையில் வீடு முக்கால் வாசி முடிந்திருந்த ஒரு கட்டத்தில் வாங்கிய வீட்டுக்கடன் போதாமலாகியது. தனலக்ஷ்மி வங்கியில் மேலும் சில லட்சங்கள் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன்.
அங்கு ஒரு குறிப்பிட்ட நாள் வரச்சொல்லி இருந்தார்கள் அது ஒரு வேலைநாள் கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றிருந்தேன். வங்கி மேலாளர் கடன் கொடுப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் என் பொருட்டு யாரேனும் ஒருவர் உத்திரவாதம் தரவேண்டும் என்று சொன்னார். திகைத்துப்போய் அவரது அறையிலிருந்து வெளியே வந்தேன். உலகமே எனக்கு எதிராக இருந்த காலத்தில் யாரைப்போய்க் கேட்பது? எனக்கு வெளிஆட்கள் யாரையுமே தெரியாது அப்போது.
கண் நிறைந்து வங்கியிலிருந்து வெளியே வந்தபோது பின்னாலிருந்து ’’…நில்லும்மா…’’ எனக் குரல் கேட்டது. திரும்பினேன். அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்த கல்லூரியில் கெமிஸ்ட்ரி துறையில் பணியாற்றிய கலாமணி மேடத்தின் கணவர்தான் அழைத்தார். அவர் மேடத்தை காரில் கொண்டு வந்து கல்லூரியில் இறக்கி விடுகையில் என்னைப்பார்த்திருக்கிறார். ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை நான் அவரிடம் பேசியதில்லை, நான் அங்கு பணி செய்கிறேன் என்று மட்டும் தான் அவருக்குத்தெரியும். பெரும் பணக்காரர் கல்குவாரியும் தோப்பும் துரவும் வயலும் வரப்புமாக இருக்கும் குடும்பம் அவர்களுடையது.
‘’…என்ன விஷயம்மா?..’’ என்றார். துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னேன். ’வா’ என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டு மேலாளர் அறைகதவைத் திறந்து உள்ளே சென்று என்னைக்காட்டி ’’…நம்ம பொண்ணுங்க இது, நான் கையெழுத்து போடறேன்..’’ என்று சொல்லி அவரிடம் நீட்டப்பட்ட எல்லா காகிதங்களிலும் அவரது சட்டைப்பாக்கெட்டிலிருந்து பேனா எடுத்து பொறுமையாகக் கையெழுத்துப் போட்டுவிட்டு ’’…கவலைப்படாதே,அதெல்லாம் நல்லபடியா வீட்டைக்கட்டிருவே, பத்திரமா வீட்டுக்குபோம்மா..’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போய்விட்டார். இன்று வரை அவர் பெயர் எனக்குத்தெரியாது.
இப்போது இதை எழுதுகையில்கூட கண் நிறைந்து வழிகிறது.
அப்போது 2008 -ல்அரசுப்பணியும் கிடைத்தது (அதில் நடந்த குளறுபடிகளைச் சொல்லத்துவங்கினால் அடுத்த நவம்பர் வந்துவிடும்.) எனவே புரோபேஷனரி காலத்தில் 2 வருடங்கள் விடுப்பு எடுக்க முடியாது.
கல்லூரிவேலை முடிந்து மகன்களை நடந்துசென்று பள்ளியிலிருந்து அழைத்து வந்துவிட்டு, மீண்டும் மாலை 6 லிருந்து7 வரை கல்லூரியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் எங்கள் கல்லூரியில் நடத்திய முதுகலை தாவரவியல் வகுப்பெடுத்தால் ஒரு வகுப்பிற்கு கணிசமான தொகை சன்மானமாக கிடைக்குமென்பதால் அதற்கும் வாரத்தில் சிலநாட்கள் போகவேண்டி இருக்கும்.
அதன்பின்னர் வேடசெந்தூர் வருவதும் அலைவதுமாக கடும் உடல்சோர்வும் மனச்சோர்வுமான காலமது. வழக்கமாக வரும் ஒரு பஸ்ஸின் நடத்துனர் என் மீது இரக்கபட்டு நிறுத்தத்தைத் தாண்டி வீட்டருகில் எங்களை இறக்கி விடுவார், அவர் முகம் கூட நன்றாக நினைவிருக்கிறது.
எல்லாப்பிரச்சனைகளையும் சந்தித்து சமாளித்தேன். இடையிடையே மரக்கன்றுகள் வாங்கி வந்து வீட்டில் சிமெண்ட் மூட்டைகளுக்கு காவலாக இருந்த ஒரு முதியவருக்கு பணம் கொடுத்து அவற்றை நட்டு வைத்தேன்.
அப்போது எனக்கு ஒரு பெரும் உயிராபத்து உண்டாக்கிய உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக செய்யவேண்டி இருந்த அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டேன் எதுவானாலும் வீட்டைக்கட்டிவிட்டுத்தான் என்று உறுதியாக இருந்தேன். வீட்டை கட்டி முடித்தேன். பிறகுதான் அறுவைசிகிச்சை செய்து கொண்டேன். கிரகப்பிரவேசமும் ஒரு போராட்டமாகத்தான் இருந்தது.
கிரகப்பிரவேசத்துக்கு வந்திருந்த அப்போதைய கல்லூரி முதல்வரும் எனது ஆசிரியருமானவர் கூட சாப்பிட்டுமுடித்து கைகழுவுகையில் ’’…தப்புப்பண்ணிட்டே லோகமாதேவி தனியா ரெண்டு பசங்களோட இந்த காட்டில போய் வீட்டைகட்டியிருக்கியே…’’ என்று கடிந்துகொண்டார்.
ஆனால் அசையவே இல்லை லோகமாதேவி, ஒரே மாதத்தில் பொள்ளாச்சி வீட்டைக் காலி செய்து இங்கு 2008 டிசம்பரில் கல்லூரி விடுமுறைக்காலத்தில் குடி வந்தேன்.
யாரும் பொள்ளாச்சி வீட்டைக் காலிபண்ணவும் உதவவில்லை. நானே சந்தையில் கோணிப்பைகளையும் பெரிய ஊசியும் நூல்கண்டும் வாங்கினேன். இரவு மகன்கள் உறங்குகையில் ஒவ்வொன்றாக சாக்குகளில் பேக் செய்து வைப்பேன்.
கல்லூரிக்குச்செல்லும் வழியில் லாரிகள் நிற்கும் ஒரு இடத்துக்குப்போய் தயங்கியபடி ’’..வீடு காலி பண்ணனும் லாரி வேண்டும்..’’ என்று கேட்டேன். முரட்டு உருவமும் முறுக்கிய மீசையுமாக ஒருவர் வந்து தான் வருவதாகவும் 2000 ரூபாய் ஆகும் என்றும் சொன்னார் மேலும் ஆயிரம் ரூபாய் தருகிறேன் ஏற்றி இறக்கி ஆட்களைக்கூட்டி வந்துச் எய்து கொடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டார்.
அம்மா வீட்டில் மாடியில் இருந்ததால் ஒவ்வொரு பொருளாக மிகுந்த சிரமத்துடன் லாரியில் ஏற்றினோம். உதவிக்கு வராத அப்பா ஒன்றே ஒன்று மட்டும் கடுமையாக சொல்லி இருந்தார். ’’காலி பண்ணறேனு வீட்டை உடைச்சுறாதே’’, எனவே சேமேதும் இல்லாமல் பொருட்களி கீழிறக்கும் பதட்டம் இருந்தது.
அப்போது உபயோகத்திலிருந்த ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டரையும் மானிட்டரையும் கால்களுக்கு நடுவில் வைத்துப் பிடித்துக்கொண்டு இரண்டு பக்கமும் மகன்களை அணைத்துப் பிடித்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் லாரியை பின்தொடர்ந்து வேடசெந்தூர் வந்தேன்.
இதோ இங்கு தொலைக்காட்சியில்லாமல், காற்று மாசு இல்லாமல் மரங்களையும் மகன்களையும் வளர்த்து ஆளாக்கி 17 வருடங்கள் முடிந்துவிட்டது. மகளில்லாத குறையைத் தீர்க்க மகன்களுடன் சாம்பவியும் சேர்ந்து வளர்ந்தாள்.நிலவு பொழிகையில் எத்தனையோ நாட்கள் கயிற்றுக்கட்டிலில் மகன்களை மடியிலிருத்திக்கொண்டு நள்ளிரவு வரை கதை சொல்லி இருக்கிறேன். பாடல்கள் கேட்டுக்கொண்டு, சிரித்து விளையாடி பேசிக்கொண்டு மகன்களுக்கு எந்தக்குறையுமிருக்ககூடாது எனும் கவனத்துடன், அவ்வபோது மரத்தடியில் விறகடுப்பில் அவர்களுக்கு பிடித்தமானதை சமைத்துக் கொடுத்து சாப்பிடச் சொல்லி, மகிழ்ந்து கழித்த ஏராளமான நினைவிருக்கிறது இந்தவீட்டில் எனக்கு.
இந்த வீடு மகன்களுக்கிணையாகவே எனக்கு நிம்மதியையும் ஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துக்கொண்டிருக்கிறது. புன்னை மரம் அறிந்த என் கண்ணீரை மகன்கள் கூட அறிந்திருக்க மாட்டார்கள். இங்கிருக்கும் ஒவ்வொரு இலையும் என்னை அறியும், அவற்றையும் தனித்தனியே நான் அறிவேன்.
வீட்டை இருள் அணுகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் தினமும் வீட்டைச்சுற்றிலும் தீபமேற்றுகிறேன். மாதம் 8 லிட்டர் தீப எண்ணெய் வாங்கும் ஒருத்தி நானாகத்தான் இருப்பேன். வீட்டில் பல இடங்களில் உருளிகளில் நீர் நிறைத்து மலர்கள் நிறைத்து வைக்கிறேன்.
என்னை இங்கேயே புன்னை மரத்தடியில் புதைக்கும்படி மகன்களிடம் சொல்லி இருக்கிறேன். அந்த துண்டு நிலத்தில் பெருஞ்செடிகள் ஏதும் வளர்க்காமல் காலியாக வைத்திருக்கிறேன்.
இது வெறும் கட்டிமல்லவே அல்ல. எங்கு சென்றாலும் வீட்டுக்கு திரும்பும் மனநிலையில் தான் இருப்பேன்.
இந்த வருடம் மேல் மாடி கட்டத்துவங்கி முன்னைக்காட்டிலும் பலகஷ்டப்பாடுகளைச் சந்தித்தும் கட்டி முடிக்க முடியவில்லை.இன்னும் 10% மீதமிருக்கையில் நிறுத்தி வைக்கவேண்டியதாகி விட்டது.
இன்று பால்கனியை மட்டும் முழுமையாக்கி ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சேமிப்போ வேறு வருமானமோ இல்லாத எளிய கல்லூரி ஆசிரியை வீட்டைக்கட்டுவது என்பது அத்தனை எளிதல்ல. மகன்கள் இனி அதை முழுமை செய்துவிடுவார்கள் .
எனக்கு பிடித்தமான ப்ளுமீரியா மலரின் பெயரைத்தான் இன்னும் கட்டி முடிக்க முடியாத வீட்டுக்கு வைத்திருக்கிறேன். விரைவில் முழுமையாக ப்ளுமீரியா மலரவிருக்கிறது.






















































