ஆகஸ்ட் 11, 2024  No Comments

சென்னை காட்பாடி இரவு ரயிலில் நிர்மலாவும் அவரது கணவரும்  கையில் வைத்திருந்த ஒரு சிறிய பெட்டியுடன் ஏறினார்கள். பெட்டியில் ஐஸ் துண்டங்களுக்கு மத்தியில்  ரத்த மாதிரிகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சீரம்   80 சோதனைக்குழாய்களில்  பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை வேலூர் போய்ச் சேர்ந்த இருவரும் அங்கிருந்து ஆட்டோவில் வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு (CMC) சென்றனர்.

அங்கு  வைராலஜி துறையின் இயக்குநர் ஜேகப் (Jacob T John) அவர்களுக்காகக் காத்திருந்தார். நிர்மலா கொண்டு வந்திருந்த  மாதிரிகளைச் சோதனை செய்ய உதவிக்கு ஜார்ஜ் பாபு மற்றும் எரிக் சைமோஸ் (P George Babu and Eric Simoes) ஆகியோரை அனுப்பினார்.

அப்போது சென்னையில் ELISA சோதனை செய்யும் ஆய்வகங்கள் இல்லை எனவேதான் நிர்மலா வேலூர் வந்திருந்தார்.  காலை 8.30-லிருந்து சோதனைகள் ஆரம்பமாகின. நிர்மலாவின் கணவர் ஆய்வகத்துக்கு வெளியே பொறுமையாகக் காத்திருந்தார். மூவரும் மும்முரமாக ஆய்வைத் தொடர்ந்தனர். மதியம் மின்சாரம் தடைப்பட்ட போதுதான்  ஒரு சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு ஆய்வகத்திலிருந்து வெளியே சென்று  அனைவரும் தேநீர் அருந்தினார்கள். 

தேநீர்க் கடையிலிருந்து திரும்பி ஆய்வகத்துக்குள் முதலில் நுழைந்து, 80  மாதிரிகள் இருந்த அந்த  ELISA சோதனையின் தட்டுப் போன்ற அமைப்பின் மூடியை மெல்ல தூக்கிய ஜார்ஜ் பாபு, அதிர்ந்துபோய் உடனே அதை மூடினார். 

நிர்மலா அதன் அருகே சென்றதும் ’’விளையாடாதீர்கள் எடுக்க வேண்டாம்’’ என்று  ஜார்ஜ் பாபு எச்சரித்தார். ஆனால் அதற்குள் அதில் 6 மாதிரிகள் மஞ்சள் நிறமாகி இருந்ததை  நிர்மலா  பார்த்துவிட்டார். இந்த ஆய்வின் துவக்கத்திலிருந்தே இதை ஆரம்பிக்கக் காரணமாயிருந்த Dr.சுநீதியும், Dr நிர்மலாவும் இந்த முடிவுகள் இப்படி வராது என்றே நினைத்திருந்தனர். ஆனால்  அந்த 6 மாதிரிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருந்த பேராபத்தை அடையாளம் காட்டி இருந்தன.

பின்னர்  வந்த சைமோஸ் இதை அறிந்ததும் இயக்குநரை அழைக்க ஓடினார்.  அடுத்த நிமிடம் இயக்குனர் ஜேகப் அங்கே வந்தார். அந்த 6 மாதிரிகளும் அவர்கள் அனைவரின் முகத்திலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தன.

ஜேகப் நிர்மலாவிடம் அப்போதுதான் ’’இந்த ரத்த மாதிரிகளை எங்கிருந்து எடுத்தீர்கள்’’? என்று கேட்டார்.

நிர்மலா அவற்றைச் சென்னையின் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடமிருந்து பெற்றதை சொன்னார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜேகப் நிர்மலாவிடமும் அவரின் கணவரிடமும் அந்தச் சோதனையின் முடிவுகள் குறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வரை ரகசியம் காக்கும் படி அறிவுறுத்தினார்.

அவர்கள் இருவரும் அதிர்ச்சி நீங்காமலேயே சென்னை திரும்பினார்கள். சென்னை வந்த உடனேயே நிர்மலா சுநீதியை சந்தித்து 6 மாதிரிகள் நிறம் மாறியதை தெரிவித்தார்.

ஆபத்தை உணர்ந்து கொண்ட சுநீதி உடனடியாக அந்த 6 பெண்களிடமும் மீண்டும் ரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, அவற்றை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றார். அமெரிக்காவில் அந்த ரத்த மாதிரிகளில்  நடந்த  Western Blot ஆய்வு இந்தியாவில் எய்ட்ஸ் அறிமுகமாயிருப்பதை  உறுதி செய்தது.

உடனடியாக அந்த  முக்கியமான செய்தி அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கும் தமிழக சுகாதார அமைச்சர் எச்,வி ஹண்டேவுக்கும் தெரிவிக்கப்பட்டது. எச்,வி ஹண்டே தமிழக சட்டசபையில்  இதை அறிவித்தபோது பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சுநீதியும் நிர்மலாவும் இருந்தனர்.

38 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை சுநீதி, நிர்மலா என்னும் இந்த இரு பெண்களும் தான் முதலில் கண்டறிந்தவர்கள்.

1981, 82-ல்தான் எய்ட்ஸ் இருப்பது உலகுக்கு தெரியவந்தது.   அதிகாரபூர்வமாக   எய்ட்ஸ் தொற்று இருப்பது 1981, ஜூன் 5 அன்று அட்லாண்டாவில் இயங்கும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. 

18981-ல் லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவமனையில் ஐந்து ஓரினச் சேர்க்கையாளர்களான இளைஞர்கள் அரிய வகை நிமோனியா மற்றும் சருமப்புற்றுக்காகச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். (Pneumocystis pneumonia (PCP) &  Kaposi’s sarcoma) அவர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக மிகக் குறைவாக இருந்தது.   மேலும் சில  மருத்துவமனைகளிலும் இப்படியான சிகிச்சைக்கு தொடர்ந்து இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டபோது,  இந்த உடல்நிலை பிரத்யேகமாக  ஓரினச் சேர்கையாளர்களுக்கானது எனக் கருதப்பட்டு GRID-Gay related immune disease  என்று  பெயரிடப்பட்டது. எனினும் தொடர்ந்த 18 மாதங்களில் எல்லாத் தரப்பினருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டன. 

எனவே  1982, ஜூனில்  இது பாலுறவின் வழி பரவும் நோய் அறிகுறிகளின் தொகுப்பு (Syndrome) எனக் கண்டறியப்பட்டு அந்த ஆண்டு ஆகஸ்டில் இது எய்ட்ஸ் என  நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தால் பெயரிடப்பட்டது.

1983-லிருந்து  ஃபிரான்ஸின் பாஸ்டர் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களால் ஆராயப்பட்டு, LAV, HTLV-III, ARV  ஆகிய பெயர்களில்  எய்ட்ஸ் வைரஸ் குறிப்பிடப்பட்டது. ஆனால்   வைரஸை இனங்காணும் சர்வதேச அமைப்பு அந்தப் பெயர்களை நிராகரித்து எய்ட்ஸ் உருவாக்கும் வைரஸுக்கு  HIV என்னும் பெயரை இறுதியாகப் பரிந்துரைத்தது.

பிறகு உலகெங்கும் எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருந்தார்கள். எய்ட்ஸ் 1930-1950-களிலேயே இருந்ததும் முதல் எய்ட்ஸ் நோயாளி காங்கோவைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் என்பது முன்பே  வேறொரு நோயின் பொருட்டு எடுக்கப்பட்டு சேமிப்பில் இருந்த அவரது ரத்த மாதிரியிலிருந்து  பின்னர் உறுதி செய்யப்பட்டது.

1960-களில் மேற்கு ஆப்பிரிக்காவில் HIV-2 வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. 

1983-க்கு பிறகு அடுத்தடுத்து உலகின் பல நாடுகளில்  எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைகளும் மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளும் முழுவேகத்தில் நடந்தன.

1985-ல் HIV வைரஸ் கண்டுபிடிப்பதற்கான சோதனையான ELISA (ELISA) பெருநகரங்கள் பலவற்றில் பயன்பாட்டுக்கு வந்தது. ரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் ரத்த வகைகளிலும் இந்த சோதனைமூலம் நோய்க்கிருமியைக் கண்டறிய முடிந்தது. 

உலகெங்கிலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால்   பாதிக்கப்பட்டிருப்பதும் எய்ட்ஸ் ஒரு உலகளாவிய தொற்று (Pandemic) என்பதும் உறுதியானது. ஆனால் இந்தியாவில் எய்ட்ஸ் அப்போது கண்டறியப்பட்டு இருக்கவில்லை.

1984. 85-ல் உலகில் எய்ட்ஸ் தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கையில் இந்தியாவிலும்  எய்ட்ஸ் இருக்குமா என்னும் ஆய்வுகள் மும்பை மற்றும் பூனேவில்  நடத்தப்பட்டன, ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவில் எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்தன.

அப்போதுதான் 1985-ல் மருத்துவரான நிர்மலா   மருத்துவர் சுநீதியிடம் தனது நுண்ணுயிரியல் மேற்படிப்பின் ஆய்வுக்காக இணைந்திருந்தார். சர்வதேச சஞ்சிகைகளில் உலகின் பிற நாடுகளில் பரவிருந்த எய்ட்ஸ் குறித்து வாசித்தறிந்திருந்ததால், இந்தியாவிலும் எய்ட்ஸ் இருக்குமா என அறிய விரும்பிய சுநீதி ’Surveillance for Aids in Tamil Nadu’ என்னும் தலைப்பில் சென்னையில்  எய்ட்ஸ் இருக்கிறதா என்று நிர்மலாவிடம் ஆய்வு செய்யச் சொன்னார்.

38 வருடங்களுக்கு முன்னர் பக்தி, கூட்டுக்குடும்பம், பாலியல் ஒழுக்கம் இவற்றுக்கெல்லாம் உதாரணமாக இருந்த இந்தியாவில் எய்ட்ஸ் வருவதற்கு சாத்தியமே இல்லையெனக் கருதப்பட்டது.

அப்போது 32 வயதாக இருந்த பள்ளி செல்லும் இரு குழந்தைகளின் தாயான நிர்மலா ஒரு பாரம்பரிய இந்துக்குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது கணவர்  நிர்மலாவை அந்த மருத்துவ ஆய்வில் ஈடுபடச் சொல்லி  ஊக்குவித்தார். 

நிர்மலாவும் அந்த ஆய்வைத் தொடங்கும்போது இந்தியாவில் எய்ட்ஸ் இருக்கும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று என்றுதான் நம்பி இருந்தார்.

இந்திய நாளிதழ்கள் அப்போது எய்ட்ஸ் என்பது   கட்டட்ற்ற பாலியல் சுதந்திரமும், ஓரினச் சேர்க்கையாளர்களும் நிறைந்த   மேற்குலகின் நோய் என்றுதான் குறிப்பிட்டன.

மேலும் சில பத்திரிக்கைகள் அப்படி ஒருவேளை இந்தியாவுக்கு எய்ட்ஸ் வருமேயானால் அதற்குள் அமெரிக்கா அதற்குச் சிகிச்சையளிக்க மருந்தைக் கண்டுபிடித்து விடும் என்றும் எழுதின.

மும்பையிலும் புனேவிலும் நடந்த சோதனைகள் அங்கு எய்ட்ஸ் இல்லை என்று தெரிவித்ததால் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் எய்ட்ஸ் வர வாய்ப்பே இல்லை என்று தான் நம்பப்பட்டது.

இந்த ஆய்வுக்காக ஆப்பிரிக்க மாணவர்கள்,  போதை அடிமைகள்,பாலியல் தொழிலாளிகள் மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இளைஞர்களிடமிருந்து  200 ரத்த மாதிரிகள் நிர்மலா சேகரிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டது. 

ஆனால் அது நிர்மலாவிற்கு அத்தனை எளிதாக நடக்கவில்லை.  இந்த ஆய்வுக்கு முன்பு நிர்மலா நாய்கள் மற்றும் கொறித்துண்ணிகளுக்கு உண்டாகும் பாக்டீரிய நோயைக் குறித்து ஆய்வு செய்திருந்தார். எய்ட்ஸ் குறித்து அவருக்கு எதுவும் அப்போது தெரிந்திருக்கவில்லை. 

மும்பை போன்ற நகரங்களில் இருப்பதுபோலப் பாலியல் தொழிலுக்கென்று குறிப்பிட இடம் சென்னையில் இல்லை. எனவே  நிர்மலா சென்னை அரசுப் பொது  மருத்துவமனைக்குப் பால்வினை நோய்களுக்குச் சிகிச்சை பெற வரும் பாலியல் தொழில் செய்யும் பெண்களைத் தேடிச் சென்றார். 

மருத்துவமனைக்கு வந்த   பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் நட்பும் கொண்ட நிர்மலா அவர்களின் உதவியுடன் பாலியல் தொழிலுக்காகக் கைதுசெய்யப்பட்டு, அவர்களில் பெயில் தொகை கட்ட வசதி இல்லாதவர்கள் திருந்தி வாழ்வதற்காகச் சேர்க்கப்பட்டிருக்கும் (vigilance home) அரசுக் காப்பகத்தில்  இருந்த பெண்களைச் சந்தித்தார்.

நிர்மலா எய்ட்ஸ் ஆய்வுக்கான ரத்த மாதிரிகளைப் பல இடர்பாடுகளுக்கு மத்தியில்  சேகரித்தார்.  அந்தப் பெண்கள் காப்பகத்திலிருந்து மொத்தம் 102 மாதிரிகளைச் சேகரித்த நிர்மலா ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரிகளுக்காகச் சென்னை சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கும் பலத்த முயற்சிக்குப் பிறகு  21 ஓரினச்சேர்க்கையாளர்களின் ரத்த மாதிரியைப் பெற்றார்.

ஒரே ஊசியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொள்ளும் போதை அடிமைகளை நிர்மலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் ஒரு ரத்ததான நிகழ்ச்சிக்கு வந்திருந்த 9 வெளிநாட்டு மாணவர்களிடமிருந்து பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸுக்கான பரிசோதனைக்காக  ரத்த மாதிரி தேவைப்படுகிறது என்று உண்மையைச் சொல்லி ரத்தம் பெற்றுக்கொண்டார்.

ரத்த மாதிரிகளை சேகரிக்க நிர்மலா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் அங்கு வந்து விடுவார். நிர்மலாவை அரசுக்காப்பகத்தில்  அவரது கணவர் ஸ்கூட்டரில் கொண்டு வந்து இறக்கிவிடுவார். 80-களில் சென்னை போன்ற   பெருநகரில் தமிழ்க்குடும்பத்தின் திருமணமான பெண் இப்படியான ஆய்வில் ஈடுபட்டிருந்ததும், அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் உறுதுணையாக இருந்ததும் அரிதினும் அரிது.

மூன்று மாதங்களில் நிர்மலா தேவையான ரத்த மாதிரிகளைக் கையுறையோ வேறு எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாமல் சேகரித்தார்.  ரத்தம் அளித்த பெண்களிடம் நிர்மலா எய்ட்ஸுக்கான ஆராய்ச்சியைக் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அந்தப் பெண்களுக்கும் எய்ட்ஸ் குறித்து அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பால்வினை நோய் சிகிச்சைக்கென நிர்மலா ரத்தம் சேகரிக்கிறார் என்றே நினைத்துக் கொண்டிருந்தனர். 

ஒருவேளை நிர்மலா எய்ட்ஸ் குறித்து சொல்லி இருந்தாலும் படிப்பறிவற்ற அந்த ஏழைப் பெண்களுக்கு அதைப் புரிந்து கொண்டிருக்க முடியாது.

எய்ட்ஸின் தீவிரம் அறியாத நிர்மலா, சேகரித்த ரத்த மாதிரிகளைத் தனது வீட்டில் குளிர்ச்சாதனப்பெட்டியில் வைத்திருந்து பின்னர் சுநீதியிடம் கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

சுநீதியின் கணவர் சாலமன்   இதயம் மற்றும் நுரையீரல் சிறப்பு மருத்துவர். அவர் உதவியுடன் சுநீதி ஒரு சிறிய ஆய்வகத்தை உருவாக்கி இருந்தார் அந்த ஆய்வகத்தில் நிர்மலா சேகரித்த ரத்த மாதிரிகளின் சீரத்தை பிரித்தெடுத்து சுநீதி சேமித்து வைத்திருந்தார். அவற்றைத்தான்  வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரிக்கு நிர்மலாவும் அவரது கணவரும் கொண்டு சென்றனர்.

வேலூர் ஆய்வகத்தில் எலிஸா சோதனையில்  மஞ்சள் நிறமாக மாறி    எய்ட்ஸ் இருப்பதை காட்டிய அந்த 6 மாதிரிகளை மீண்டும் இரண்டு முறை நிர்மலா சோதித்து உறுதிப்படுத்திய பிறகுதான் சென்னை திரும்பிச் சுநீதியை சந்தித்தார்.

இரு பெண் ஆய்வாளர்களும் பலரின் கண்டனங்களையும் கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டார்கள். பலர் அப்படி எய்ட்ஸ் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை என்றார்கள். ஆய்வு தவறாகச் செய்யப்பட்டிருக்கிறது என்றும்  பலர் கருத்து தெரிவித்தார்கள்.

பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான் என்றாலும் மகாராஷ்டிர தோல் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால்   ’எப்படி ஒரு வட இந்தியப் பெண் தமிழகப் பெண்களின் ஒழுக்க குறைவினால் நோய் வந்ததாகத் தெரிவிக்கலாம்’ என்றும் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. மருத்துவப்படிப்பு முடித்தபின்னர் சிகாகோவிலும் லண்டனிலும் பணியாற்றி விட்டே சுநீதி சென்னை மருத்துவ கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில்  1973-ல் இணைந்தார்.  அவரது ஆய்வின் நோக்கம்  பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றுவதுதான் என்பது அப்போது பலரால் புரிந்து கொள்ள பட்டிருக்கவில்லை  

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைவர் நிர்மலாவிடன் ’’நீங்கள் கண்டுபிடித்திருப்பது கடலின் மேற்பரப்பில் தெரியும் பனி மலையின் உச்சியை மட்டும்தான், பேராபத்தை நாம் இனி வரும் காலங்களில் சந்திக்கவிருக்கிறோம்’’ என்றார்.

பொதுமக்களுக்கும் அரசுக்குமிருந்த அதே அதிர்ச்சி இதை வெளிக்கொண்டு வந்த இரு பெண்களுக்கும் இருந்தது. உடனடியாக நாடு தழுவிய எய்ட்ஸ் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு நிகழ்வுகள்  1900-லிருந்து 2000 வரை ஒருங்கமைக்கப்பட்டன. அதன் முடிவுகள் எய்ட்ஸ்  என்னும் பெருந்தொற்று இந்தியாவின் மூலை முடுக்குகள் எங்கும் பரவி இருந்ததை உறுதிப்படுத்தின.

மேலும் சில வாரங்கள் காப்பகங்களுக்கும் சிறைச்சாலைக்கும் சென்று ரத்த மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வைத் தொடர்ந்து நடத்திய நிர்மலா 1987-ல் Surveillance for Aids in Tamil Nadu -தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கண்காணிப்பு என்னும் தனது ஆய்வேட்டை சமர்ப்பித்து அதற்கான் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றார். பின்னர் சென்னை கிண்டியில் அமைந்துள்ள  கிங் நோய்த்தடுப்பு மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தடுப்பூசி ஆராய்ச்சிப் பிரிவில் இணைந்து பணியாற்றி 2010-ல் பணி ஓய்வு பெற்றார். 

தகுந்த நேரத்தில் எய்ட்ஸ் இருப்பதை கண்டுபிடித்துப் பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் உயிரைக் காப்பாற்றிய இத்தனை முக்கியமான ஆய்வுக்கான  அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்காததில் வருத்தம் இல்லையா? என்று கேட்கப்பட்டபோது நிர்மலா ‘’நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள் இப்படி அங்கீகாரங்கள் குறித்தெல்லாம் யோசித்ததில்லை சமுதாயத்துக்கு ஏதோ ஒன்றை செய்யமுடிந்த மகிழ்ச்சியே எனக்குப் போதும்’’ என்றார்.

அச்சமயத்தில் ஒரு சில நாளேடுகள் நிர்மலாவையும் சுநீதியையும் குறிப்பிட்டு  கட்டுரை வெளியிட்டது. சுநீதிக்கு கெளரவ டாக்டர் பட்டமும், தமிழகத்தின்  எய்ட்ஸ் அமைப்புகள் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையும் பிற்பாடு அளிக்கப்பட்டது. சுநீதியின் மறைவுக்குப் பிறகு தான் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ அளிக்கப்பட்டது. சுநீதியும் நிர்மலாவும் மருத்துவ வரலாற்றிலும்  பொது சமூகத்திலும் பின்னர் மறக்கப்பட்டார்கள்.  

நிர்மலா சேகரித்த  6 ரத்த மாதிரிகளில் ஒன்று 13 வயதே ஆன ஒரு சிறுமியுடையது. கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு இருந்த அந்தச்  சிறுமி இந்த ஆய்வு முடிவுகள் வெளியான சில மாதங்களில் நோய் முற்றி மரணம் அடைந்தாள்.

அந்த முதல் 6 பெண்களில் நூரி என்னும் திருநங்கையும் இருந்தார் அவர் அந்த முடிவுகளுக்குப் பிறகு எப்படி எய்ட்ஸ் வந்தது என்னும் விசாரணையில் தாங்கள்  கடுமையாகத் தண்டிக்கப்பட்டதை இப்போதும் கசப்புடன் நினைவுகூறுகிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் முகமது என்னும் பெயரில் இருந்த நூரி தனது 4-வது வயதிலிருந்தே தனக்குள் பெண்மையை உணரத் தொடங்கி இருந்தார். அவரது பெண்மை உணர்வை, நடவடிக்கைகளைச் சரியாக்க அவரின் அப்பா  கடும் வன்முறையைப் பிரயோகித்தார். 13 வயதில் அந்த வன்முறையின் குரூரத்தை தாங்க  முடியாமல் சென்னைக்கு ஓடி வந்த நூரி பிழைக்க வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்குத் தள்ளப் பட்டார்.

 நூரியின் அந்த இருள் நிறைந்த நாட்களின் ஒரே வெளிச்சக்கீற்றாக ஒரு ராணுவ வீரரின் காதல் இருந்தது. முறையாகப் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக மாறிய நூரி அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த மகிழ்சியும் அதிக காலம் நீடிக்கவில்லை அவரது கணவர் அந்தமான் பகுதிக்குப் பணி மாற்றம்  செய்யப்பட்டபோது நூரி அவருடன் செல்லாமல் சென்னையில் தங்கிவிட்டார் 

அப்போதுதான் சுநீதியின் ஆய்வுக்கென நூரியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. நூரி தனக்கு எய்ட்ஸ் இருப்பது தெரியவந்த அந்த 1987-ன் ஜுலை 22-ம் , நாளை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்கிறார்.  

அதிகபட்சமாக இன்னும் இரண்டு வருடங்கள் தான் உயிர் வாழ முடியும் என்னும் செய்தியும் பேரிடியாக அவர்மேல் அப்போது விழுந்தது. மனம் உடைந்து போனவரைத் தேற்றி அரவணைத்துக் கொண்டது  உஷா ராகவன் என்னும் மருத்துவர்.  சிகிச்சை எடுத்துக்கொண்ட  நூரியை தையல் வேலையில் சேர்த்து  மாதம் 750 ரூபாய் வருமானம் கிடைக்க வழி செய்தார் உஷா ராகவன்

உஷா ராகவனுடன் இணைந்து நூரி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். ஒரு மருத்துவமனையில் உதவியாளராக இருந்த   நூரி அங்கு பணிபுரிந்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்   தானே சொந்தமாக எய்ட்ஸ்  நோயாளிகளின்   நலனுக்காக     2001 அக்டோபர் 10 அன்று  South India Positive (SIP) Network என்னும் அரசு சாரா அமைப்பை  முறையாகப் பதிவு செய்து உருவாக்கினார். 

அந்த அமைப்பின் மூலம் இன்று வரை நூரி எய்ட்ஸ் இருப்போருக்கு ஆரோக்கிய வழிகாட்டல், சிகிச்சை, கைத்தொழில் பயிற்சி மற்றும் நிலையான  வருமானத்துக்கு உதவி பலரை பாலியல் தொழிலிருந்தும் மீட்டிருக்கிறார்.

எய்ட்ஸினால் இறந்து போன தனது மூன்று தோழிகளான  செல்வி, இந்திரா  மற்றும் பழனி ஆகியோரின் நினைவாக ஒரு அறக்கட்டளையையும் நூரி உருவாக்கி இருக்கிறார். 

மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் நூரி இப்போது தென்னிந்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பின் தலைவராக இருக்கிறார். நூரியின் 2 அறைகள் மட்டும் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான அலுவலகம் முழுக்க எய்ட்ஸ் தினத்திலும் சர்வதேச மகளிர் தினத்திலும் திருநங்கயர் தினத்திலும்  அவருக்கு  அளிக்கப்பட்ட பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் பரிசுகளும் நிறைந்திருக்கிறது.

நூரிக்கு 2005-ல் வந்த ஒரு தகவல் அவரது சேவை அமைப்பை மேலும் விரிவாக்கியது. குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தை கிடப்பதாகச் செய்திவந்தவுடன் நூரி  அங்கு சென்று, பிறந்து 2 நாட்களாயிருந்த அந்தப்பெண் குழந்தையை எடுத்துக்கொண்டார். அதனருகில் இருந்த கடிதத்தில் அதன் தாய்க்கு எய்ட்ஸ் இருந்த தகவல் எழுதப்பட்டிருந்தது.

இளமைப்பருவம் என்ற ஒன்று இல்லாத தன் வாழ்க்கையின் பிழையீடாக அந்தக் குழந்தையை நன்றாக வளர்க்க முடிவு செய்த நூரி உடனடியாக எய்ட்ஸ் இருக்கும் குழந்தைகளுக்காக ஒரு அமைப்பையும் உருவாக்கினார். குழந்தைகள் நல அமைப்புடன் இணைந்து செயல்படும் இந்த அமைப்பு  200-க்கும் அதிகமான குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை  பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கிறது.  

அவர்களில் பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்கிறார்கள். அவர்களின் குழந்தைகளும் பேரக்குழந்தைகளுமாக நூரி ஒரு மகிழ்ச்சியான தாயும், பாட்டியும், கொள்ளுப்பாட்டியுமாக வாழ்கிறார்.

இப்போது எய்ட்ஸுக்கான சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வாழ்நாளை நீட்டிக்கும் மருந்துகளும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது உச்சத்தை தொட்டிருந்த எய்ட்ஸ் இருப்போரின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்திருக்கிறது. கடந்த 25 வருடங்களில் எய்ட்ஸ் சிகிச்சை. தடுப்பு மற்றும் விழிப்புணர்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும்  எய்ட்ஸ் சிகிச்சை  பெறுவோர் கண்ணியக்குறைவாக நடத்தப்படுவதும் அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

2009-ல் ஒரு நேர்காணலில் சுநீதி எய்ட்ஸ் இருப்பவரைக் கொல்வது வைரஸ் மட்டுமல்ல இந்தச் சமூகம் அவர்களை நடத்தும் விதமும்தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் எய்ட்ஸ் வரலாறை சுநீதிக்கு முன்னும் பின்னுமென இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். 

அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு சுநீதி இந்தியாவின் முதல்  எய்ட்ஸ் ஆலோசனை மற்றும் சோதனைக்கான தன்னார்வ அமைப்பைச் சென்னை மருத்துவக் கல்லூரியில் துவங்கினார். 1988-93 வரையில் எய்ட்ஸ் வைரஸ்குறித்த கல்வி, சிகிச்சை மற்றும் விழிப்புணர்வில் இந்த அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது  1993-ல் சுநீதி சொந்தமாக லாபநோக்கமற்ற  Y. R. Gaitonde Centre for AIDS Research and Education (YRGCARE) என்னும் அமைப்பைச் சென்னையில்   தோற்றுவித்தார். 

2015-ல் தனது 76-வது வயதில் கணையப் புற்று நோயினால் சுநீதி  மறைந்த பிறகு அவரது மகனும் மருத்துவருமான சுனில் சாலமன் அதை நிர்வகித்துத் தாயின் சேவையைத் தொடர்ந்து செய்கிறார். 

இந்த அமைப்பு எய்ட்ஸ் இருப்போரின் பள்ளிக்கல்வி,  நோய்த் தடுப்பு, சிகிச்சை, நிதியுதவி, வழிகாட்டுதல் இவற்றோடு எய்ட்ஸ் இருப்போருக்கான திருமண தகவல் மையத்தையும் நடத்துகிறது. இதுகுறித்து 2017-ல் வெளியான ஆவணப்படம் Lovesick பெரும் கவனம் பெற்றது.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் கூடத் தயங்கும் மறுக்கும் உலகில் சுநீதி அவர்களுக்கிடையே  மண உறவை அமைத்துக் கொடுத்தார். 3 பேருடன் துவங்கிய இந்த அமைப்பு இந்தியாவின் 28 மாநிலங்களில், பரவி விரிந்து ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் இந்திய அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து எய்ட்ஸ் நோய்த் தடுப்பு சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. 2022-ல் அகார் வளர்ப்பு ஊடகத்தில் உருவங்கள் அமைக்கும் போட்டியில் சுநீதியின் உருவம பரஸ்மிதா என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தது. உலக அறிவியல் தளத்தில்  இந்திய நுண்ணுயிரியல் முக்கியமான இடத்திற்கு  கொண்டு வந்த சுநீதிக்கு இந்த அகார் ஊடக உருவ அமைப்பு பொருத்தமான கெளரவம் தான்.

2011-க்குப் பிறகு எய்ட்ஸ் தொற்றும் வேகம் வெகுவாகக் குறைந்திருந்தாலும், இப்போது இந்தியாவில் சுமார் 24 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் இருக்கிறது.

இவர்களில் 77%த்தினருக்கு தங்களுக்கு HIV தொற்று இருப்பது தெரிந்திருக்கிறது  65%த்தினர் எய்ட்ஸுக்கான சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர்  55%த்தினரின் உடலில் இருக்கும் HIV  வைரஸின் அளவு குறைக்கப்பட்டு அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது

HIV மற்றும் எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் குறிக்கோளான 2025-ல் சிகிச்சை, உடலின் வைரஸ் அளவை குறைப்பது மற்றும் எய்ட்ஸ் குறித்த அறிதலை தொற்று இருப்பவர்களுக்கு உண்டாக்குவது  ஆகிய மூன்றிலும் 95%த்தை எட்டுவது என்னும் குறிக்கோளை நோக்கித்தான்  இந்தியாவும் பயணிக்கிறது. 

சுநீதி இந்தியாவில் எய்ட்ஸ் இருப்பதை அப்போது கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பாலியல் தொழிலாளிகளும், பிராத்தல் அமைப்புக்களும், லட்சக்கணக்கில் வெளிமாநிலங்களில் வீட்டைப்பிரிந்து வேலை செய்வோரும் லாரி ஓட்டுநர்களுமாக எய்ட்ஸ் இந்தியாவில் பெருகி மாபெரும் அழிவைக் கொண்டு வந்திருக்கும் 

இப்போது எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்களை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்தாலும் தொற்று உண்டாகும் வேகம் மிகக்குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு நிச்சயம் சுநீதி மிக முக்கியமான பங்களித்திருக்கிறார். நூரி சொல்வது போலச் சுநீதி அறிவியல் உலகின் முக்கியமான கண்டுபிடிப்பை மட்டும் செய்யவில்லை, ஆயிரக்கணக்கில் எய்ட்ஸ் தொற்றுக்காளானவர்கள் ஆரோக்கியமாக வாழவும் கற்றுக்கொடுத்தார்,

அறிவியல் கண்டுபிடிப்புகள் சாதனைகள் என்றால் மேரி க்யூரியைத் தவிர வேறு பெண்களின் நினைவு வருவதே இல்லை. அப்படி  வளர்ப்பு ஊடகங்களில் பயன்படும் அகார் அகாரை கண்டுபிடித்த ஃபேனி ஹெஸ்ஸி, DNA-வின் வடிவத்தை முதன் முதலில் கண்டுபிடித்த ரோஸலிண்ட், சூழியலை தனது ஓவியங்களில் முதன்முதலாகச் சித்தரித்த மரியாசிபில்லா போன்றோரின் நீண்ட வரிசையில் சுநீதியும் நிர்மலாவும் இருக்கிறார்கள்.

எய்ட்ஸ் இருப்போருடன் கைகுலுக்கவும் கண்ணீர் துடைக்கவும் தயங்கிய காலத்தில் அவர்களுக்குத் தொடர்ந்து வாழ நம்பிக்கை அளித்த சுநீதி, தனக்கு எய்ட்ஸ் இருந்தும் அதனுடன் போராடிக்கொண்டே தன்னைப் போன்றோருக்காகச் சேவை செய்யும் நூரி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு முக்கிய ஆய்வைச் செய்த நிறைவுடன் தனது வாழ்வை அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிர்மலா ஆகியோரை  தமிழ்நாட்டிலேயே பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதும்.  இவர்களைத் தாமதமாக அறிந்துகொள்வதற்கான பிழையீடாகவும் தான் இந்தக் கட்டுரை உருவா கியது.

 .

மேலதிக தகவல்களுக்கு: