மாயன் கீரை
கி மு 2600 ல் தோன்றிய மாயா நாகரிக மக்களின் உணவு பெரும்பாலும் வேட்டை விலங்குகள், கீரை, பூச்சிகள் மற்றும் கிழங்குகளாகவே இருந்தது. அகழ்வாய்வுகளில் கிடைத்த அவர்களின் எலும்புகளில் நடைபெற்ற ஆய்வுகள் அவர்கள் அதிகம் மக்காச்சோளமும் மான்கறியும் இலையுணவுகளையும் எடுத்துக் கொண்டதை காட்டுகிறது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தொல்குடியினரின் உணவுகள் குறித்த ஆய்வுகள் மாயன்கள் புரதச்சத்துக்காக உணவில் சேர்த்துக்கொண்ட மரக்கீரை ஒன்றின் முக்கியத்துவத்தை குறித்து தெரிவிக்கிறது.19.4% – 24.8% புரதச்சத்து கொண்டிருந்த பயறு வகைகளையும் அவர்கள் உணவில் இருந்தது என்றாலும் மாயன்களின் உணவில் பிரதான இடம்பெற்றிருந்த மரக்கீரையின் புரத அளவு 30 % இருந்தது
சாயா மரக்கீரை, கீரைமரம் என்று அழைக்கப்படும் இதன் அறிவியல் பெயர் நிடோஸ்கோலஸ் அகோனிடிஃபோலியஸ் (Cnidoscolus aconitifolius)
பிற வழங்கு பெயர்கள்:
English: tree-spinach; Spanish: chaya, chayamansa,cabbage-star
Swedish: chaya;
Unknown: chaya col, chaykeken, kikilchay
tree-spinach
French: manioc bâtard;
மாயன் கீரை என இப்போது பெயர் பெற்றிருக்கும், உலகின் பல இடங்களிலும் வளர்க்கப்படும் இந்த கீரை வருடம் முழுவதும் கீரையை அளிக்கிறது. மிக எளிதாக இவற்றை பயிர் செய்ய முடியும். இவற்றில் பூச்சி/ நோய்த் தாக்குதல் மிக குறைந்த அளவே இருக்கும். மாயன் கீரை மரம் அனைத்து காலநிலைகளிலும் செழித்து வளரும், வறட்சியையும் தாங்கிக்கொள்ளும். இம்மரம் மிக அழகிய தோற்றம் கொண்டது இவற்றின் கீரையை கால்நடைகளுக்கு தீவனமாகவும் அளிக்கலாம்.
பார்ப்பதற்கு மரவள்ளிக்கிழங்கு செடியை போலிருக்கும் இக்கீரை மரம் சமீப காலங்களில் மிக அதிக கவனம் பெற்றிருக்கிறது.
மாயன்களின் காலத்து கீரை வகை கடல் மட்டதுக்கு வெகு உயரத்தில் அதிக கூர்மையான முட்களுடன் இருந்தது. 1944ல் தாவரவியலாளர் ரோஜெர் (Rogers McVaugh-1909 – 2009) மாயன் கீரைமரத்தின் காட்டுமூதாதையான Chaya brava என்னும் முட்கள் கொண்ட வகையிலிருந்து முட்களற்ற கலப்பினமான Chaya mansa வை உருவாக்கினார்,
மான்ஸா என்பதற்கு லத்தீன மொழியில் வீடு என பொருள் இந்த கீரையை வீடுகளில் வளர்க்கலாம் என்பதற்காக அப்பெயர் வைக்கப்பட்டிருந்தது. 1918ல் முட்கள் கொண்ட, முட்களற்ற மாயன் கீரை வகைகள் இரண்டுமே கியூபாவுக்கும் ஃப்ளோரிடா வுக்கும் மெக்சிகோவிலிருந்து அறிமுகமானது. பின்னர் அங்கிருந்து உலகமெங்கும் இக்கீரை வகை பரவியது
Mala Mujer, கெட்ட பெண்மணி என்ற வழங்கு பெயரில் மெக்சிகோவில் அதன் முட்கள் கொண்ட வகையும் சாயா மான்ஸா என்பது முட்களற்ற வகையுமாக உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது வளர்க்கப்படுகிறது.
மாயன்கீரையில்:
- முட்களற்ற வகை Cnidoscolus chayamansa
- முட்கள் கொண்டது Cnidoscolus aconitifolius
நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை சேர்ந்த இவை சுமார் 15 அடி உயரம் வரை விரைவாக வளரும் எனினும் அடிக்கடி கத்தரித்து 2 அடி உயர அடர்ந்த புதராக வளர்க்கையில் கீரைகள் அதிகம் கிடைக்கும். கோடைக்காலத்தில் சிறு வெண்ணிற மலர்கள் தோன்றி வால்நட் போன்ற கனிகள் பிற்பாடு உருவாகும். இவற்றின் சதைப்பற்றான தண்டுகளில் வடியும் வெண்ணிற பால் போன்ற திரவம் சரும அழற்சியை உண்டுபண்ணும்.தண்டுகள் மூலம் இவை எளிதில் வளர்க்கப்படுகிறது. இவற்றின் இலைகளும் இளம்தண்டுகளும் உண்ணப்படுகின்றன.
இக்கீரையில் புரதம் கால்சியம் இரும்பு சத்துக்கள் A மற்றும் C வைட்டமின்களும் நிறைந்திருக்கிறது
மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்க உணவுகளில் பிரதான இடம்பெற்றிருக்கும் மிக அதிக சத்துக்களை கொண்டிருக்கும் மாயன் கீரையை ஒருபோதும் சமைக்காமல் உண்ணக்கூடாது இவற்றில் இருக்கும் உடலுக்கு கேடுவிளைவிக்கும் ஹைட்ரோ சயனிக் அமிலம் (hydrocyanic acid) கீரைகளை வெப்பமூட்டி சமைக்கையில் மட்டும்தான் வீரியமிழக்கும்.Blanching எனப்படும் கொதிநீரில் சில நிமிடங்கள் மூழ்கவைத்து பின்னர் சமைப்பதும் நல்லது.
இக்கீரையின் வேதிப்பொருட்கள் அலுமினியத்துடன் வினைபுரிவதால், இக்கீரையை ஒருபோதும் அலுமினிய பாத்திரங்களில் சமைக்க கூடாது.
ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் இக்கீரை உணவிற்கு உண்டு 20 நிமிடங்களுக்கு குறையாமல் இவற்றை வேகவைக்க வேண்டும். பிற கீரை வகைகள் அனைத்தையும் காட்டிலும் சுவையும் சத்துக்களும் மாயன்கீரையில் பலமடங்கு அதிகமாக இருக்கிறது.
மாயன்கீரையை குறித்த காணொளி;https://youtu.be/0f8-m0kPGxk?si=dKdUK_hGI6Tvcgpr