ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும், எகிப்தின் தலைநகருமான கெய்ரோவுக்கு 50 கிமீ தொலைவிலிருந்தது தர்ஹான் கல்லறைப்பகுதி. இங்குதான் எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தை சேர்ந்தவர்களின் நெக்ரொபொலிஸ் எனப்படும் அலங்காரமான மிகப்பெரிய கல்லறைகள் இருந்தன. பிரிட்டிஷ் எகிப்தியலாளரும், நவீன தொல்லியல் துறையின் தந்தை என்றழைக்கப்படுபவருமான ஃப்ளிண்டர்ஸ் பேட்ரி 1 1912, 1913 ஆகிய வருடங்களில் தர்ஹானில் இருமுறை ஆய்வுகள் நடத்தினார். அகழ்வாய்வுகளில் கிடைத்தவற்றில் விலையுயர்ந்தவைகளை தவிர பிறவற்றை பெட்டியிலிட்டு, இங்கிலாந்தின் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்தார். எதிர்கால ஆய்வுக்கான பொருட்கள் இருந்த அந்த பெட்டியை பல வருடங்களுக்கு யாரும் திறக்கக்கூட இல்லை. 1942ல் பேட்ரியும் இறந்துபோனார்.
64 வருடங்கள் கழித்து, 1977ல் அந்த பெட்டி திறக்கப்பட்டபோது, பழைய ஆடைகளை ஆய்வு செய்பவரான ஷெய்லா ஸாண்டி அதிலிருந்து மண்மூடிய துணி மூட்டை ஒன்றை எடுத்து பிரித்தார். அது கத்தியால் கிழிக்கப்பட்ட, மூன்று லினன் துணிகளை, கைகளால் தைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட v கழுத்தும், நீண்ட கைகளும், கொண்டிருந்த ஒரு மேல்சட்டை. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட அந்த லினன் சட்டையே நமக்கு கிடைத்தவற்றில் உலகின் மிகப் பழமையான உடை.
அந்த ஆடையின் கீழ் ஓரங்களில் ’ஹெம்’ எனப்படும் மடிப்புத் தையல்கள் இல்லாததால் உடையின் நீளத்தை யூகிக்க முடியவில்லை. ஆனால் அளவுகளை வைத்து பதின்பருவத்தினர் அல்லது ஒல்லியான ஒரு பெண்ணின் உடையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த லினன் துணி கிபி 3482 லிருந்து 3102 க்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டது. எனினும், இதன் தொன்மை குறித்து பல சர்ச்சைகள் எழுந்தபடியே இருந்தன. 2015 ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரேடியோ கார்பன் கணக்கிடும் துறை இந்த லினன் உடையின் 2.24 மி கிராம் மாதிரியை எடுத்து கணக்கிட்டு இதன் காலம் கிபி 3482-3102 க்கு இடைப்பட்டது தான் என்று உறுதியாக தெரிவித்தது.
தொல்லியல் ஆய்வு கண்டுபிடிப்புக்களில் இயற்கை லினன் நாரிழைகளாலான இந்த உடை இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் கிட்டத்தட்ட முழுமையாகவே கிடைத்திருப்பது அசாதாரணமானது என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. தர்ஹான் உடை என அழைக்கப்படும் (Tarkhan Dress) அந்த லினன் உடை லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ’’பேட்ரி எகிப்து தொல்லியல் அருங்காட்சியகத்தில்’’ லினன் நாரிழைகளின் காலத்தை கடந்த நீடித்த உழைப்பின் சாட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து உலக நாடுகளிலும் ஆடை மற்றும் அணிகலன்களின் வடிவம், அவை உருவாக்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் வண்ணங்களை காலநிலை தான் தீர்மானிக்கிறது. எகிப்தின் ஆடைகள் அப்பாலையின் அதி வெப்ப மற்றும் வறண்ட வானிலையுடன் நேரடியாக தொடர்பில் இருந்தன. குளிர்ச்சியாகவும், உறுதியாகவும் இருந்த லினன் ஆடைகளே எகிப்தில் பெரும்பான்மையினரின் விருப்ப ஆடைகளாக இருந்தன. பண்டைய எகிப்தின் சித்திரங்களில் தூய வெள்ளை இடையாடைகளுடன் ஆண்களையும், உடல் முழுதும் சுற்றப்பட்டிருக்கும் இறுக்கமான வெண்ணிற ஆடைகளில் பெண்களையும் காணமுடியும், அவை யாவும் லினன் ஆடைகளே!
நைல் நதி எகிப்தின் நாகரிக வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. வருடா வருடம் நைல் நதியில் வரும் வெள்ளம், வண்டலை கொண்டு வந்து நிலத்தில் சேர்த்து, மண் வளத்தை அதிகரித்தது. எனவே எகிப்தின் மக்களுக்கு தேவையான பணப்பயிர்களும், உணவுப்பயிர்களும் வளமான அந்த நதிக்கரையோரத்தில் பயிராகின.
குறிப்பாக லினன் நாரிழைகளை கொடுக்கும் ஆளி பயிர்களின் சாகுபடி அங்கு செழித்திருந்தது. லினன் நார்கள் எகிப்தின் எல்லாமாக இருந்தது என்றே சொல்லலாம் மீன்பிடி வலைகளிருந்து, உடைகள், மம்மிகளை பலமுறை சுற்றி கட்டும் துணிகள் என, பிறப்பிலிருந்து இறப்புவரை மட்டுமல்ல இறப்புக்கு பின்பான வாழ்வின் சாத்தியங்களை ஆழமாக நம்பிய எகிப்தியர்களின் மறுவாழ்விலும் லினன் துணிகள் இருந்தன. மறுவாழ்விற்கு தேவையான ஆடை ஆபரணங்களும் கல்லறைகளில் வைக்கப்படும்.. அப்படித்தான் அந்த புத்தம் புதிய லினன் உடை அந்த தர்ஹான் கல்லறையில் வைக்கப்பட்டு இருக்கக் கூடும்.
எகிப்தியர்களின் விருப்பமான நிறம் வெள்ளைதான். வெண்ணிற லினன் ஆடைகளின் விளிம்புகளில் வேறு சில வண்ணங்களும் காணப்பட்டன.கம்பளியின் உபயோகம் இருந்தது எனினும் அது விலங்குகளிலிருந்து கிடைத்ததால் தூய்மையற்றதாகக் கருதப்பட்டது, மத குருக்கள் கம்பளிகளை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. பருத்தி உபயோகம் ஒரளவுக்கு இருந்தாலும் அதைக்காட்டிலும் தூய்மையானது என்னும் நம்பிக்கையில் பண்டைய எகிப்து முழுவதும் லினன் தான் அதிக பயன்பாட்டில் இருந்தது. லினன் பயிரான ஆளி சாகுபடியும் எகிப்தில் பிரதானமாக இருந்தது.
குடிமக்களில் ஆண்கள் ஷெண்ட்டி எனப்படும் (schenti) இடுப்புத்துணியும், பண்டிகை காலங்களில் கொசுவம் வைத்த, கைகளில்லாத மேல்சட்டையும் லினன் துணிகளில் அணிந்தார்கள். உயர்குடியினருக்கான ஷெண்ட்டியில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இடுப்பு துணிக்கு மேல் உயர்தர லினனில் குட்டை பாவாடை போன்ற உடையையும் வீட்டுக்கு வெளியே செல்கையில் அணிந்தார்கள்..
மார்பகங்களை மறைக்கும் அளவுக்கு அகலமான தோள்பட்டைகளால் இணைக்கப்பட்டிருந்த, பாதம் வரை நீண்ட, உடலை கவ்வி பிடிக்கும் ஒற்றை லினன் ஆடையை பெண்கள் அணிந்திருந்தார்கள்
உடைகளுக்கு மட்டுமல்லாது எகிப்தியர்கள் பாலையின் வெப்பத்திலிருந்தும் புழுதிப்புயல் களிலிருந்தும் முகத்தையும் தலையையும் பாதுகாக்க அணியும் பொய் தலைமுடி (Wig) தயாரிப்பிலும் லினன் இழைகளை உபயோகித்தார்கள். லினன் நாரிழைகள், கத்தரிக்கப்பட்ட கூந்தல் இழைகள் மற்றும் கம்பளி இழைகளில் பசை தடவி பின்னல்களைப்போல பின்னி சடைசடையாக தொங்கும் பொய்க்கூந்தல் தலையணிகளை அணிந்தார்கள் .விழாக்களின் போது அணிய அலங்காரங்களுடனும், மிக சிறப்பான விழாக்களுக்கு சுருள் சுருளான இழைகளுடனும் தலையணிகள் இருந்தன. ஆண்களுக்கென்று சதுரமாக நெற்றியை மறைத்து பக்கவாட்டில் சரியும் பட்டை பட்டையான லினன் தலையணிகளும் இருந்தன.
அரசகுடியினரின் ஆடைகள் இவற்றை போலத்தான் இருந்தன என்றாலும் அவற்றில் பிரத்தியேக குலமுறை சின்னங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தது. உயர்குடியினர் லினன் மேலாடைகளுடன் எடைமிகுந்த, உலோகங்களாலான, கற்கள் பதிக்கப்பட்ட அணிகலன்களையும் அணிந்தார்கள்
பொதுமக்கள் சிறப்பான நிகழ்வுகளுக்குப் போகையில் மட்டும் லினன் உள்ளிட்ட பல தாவர இழைகளால் உருவான செருப்புக்களை அணிந்தார்கள். அரசகுடியினருக்கான செருப்புக்களின் நுனி மேல் நோக்கி வளைந்திருக்கும் . லினன் பூச்சிகள் மற்றும் கிருமிகளுக்கும் எதிரானது என்பதால் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த எகிப்தியர்களின் பிரியத்துக்குரியதாகியது. லினன் ஆடைகள் எத்தனை வெண்மையோ அத்தனை தூயது என்றும் எகிப்தியர்கள் நம்பினார்கள்.
எகிப்தில் மதகுருக்கள் லினன் மட்டுமே அணிய வேண்டும் என நெறிகள் இருந்தன. கல்லறை சுவரோவியங்களிலும் சிற்பங்களிலும் லினன் துணிகள் ஆளி நாரிழைகளிலிருந்து உருவாவதை சித்திரமாக தீட்டி இருக்கிறார்கள்.
கிபி 1922 ல் திறக்கப்பட்ட டூடன் காமன் கல்லறையில், மம்மியை இறுக்கமாக சுற்றி இருந்த, பல நூறு மீட்டர் துணிகள், திரைச்சீலைகள் மற்றும் கைக்குட்டைகளும் லினன் இழைகளால் செய்யப்பட்டிருந்தது. அத்தனை ஆயிரமாண்டுகளுக்கு பிறகும் அவை எந்த சேதமும் இல்லாமல் இருந்தன,
2500 வருடங்களுக்கு முன்பான காபுலி என்னும் அம்மோன் குலகுருவின் மகளின் கல்லறையிலும் அப்படியே இருந்தன மம்மியின் லினன் துணி சுற்றுக்கள். லினன் உற்பத்தி மற்றும் ஆளி சாகுபடி நுட்பங்கள் எகிப்திலிருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கும் ஐரோப்பாவிற்கும் அறிமுகமானது.
ஆடைகளுக்கான நூலிழைகளின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. சீனாவின் பட்டுப் புழுக்களிலிருந்து, இன்கன் காலத்துக்கு முன்பு வரையிலான (pre-Incan) பெருவின் பருத்தி வரை தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் சான்றுகளைத்தும், தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆதி மனிதன் இயற்கையைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியதை காட்டுகின்றன. ஆதிமனிதனின் முக்கிய கண்டுபிடிப்புக்களில் முதன்மையானவைகளில் லினன் நாரிழைகளும் இருக்கின்றன.
வேட்டைச்சமூகத்தில் தோலாடைகளும், இடம்பெயரும் நாடோடிகளானபோது விலங்கு ரோமங்களிலாலான கம்பளியாடைகளையுமே அணிந்திருந்தவர்கள், ஓரிடத்தில் தங்கி தேவைப்பட்ட உணவுப் பயிர்களை சாகுபடி செய்யத் துவங்கிய காலத்தில், முதன் முதலில் பயிரிட்ட தாவர நாரிழைப் பயிர் ஆளியே.
பல இயற்கைப் பொருட்களிலிருந்து நூலிழைகள் எடுக்கபட்டதற்கான சான்றுகள் கிடைத்திருப்பினும் அவற்றில் மிக மிக பழையதும் இன்றியமையாததுமாக லினனே இருக்கிறது
அகழ்வாய்வுகளில், ஜார்ஜியாவில் 36000 வருடங்களுக்கு முன்பிருந்த, சாயமேற்றப்பட்ட லினன் இழைகள் ஒரு குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கிபி 80000 த்தை சேர்ந்த ஆளி செடிகளின் தண்டுகள், விதைகள் மற்றும் இழைகள் சுவிஸ் ஏரியினடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன
துருக்கியின் கிழக்கு பகுதியில் 9000 வருட பழமையான நெய்யபட்ட லினன் துணி மனித எலும்பால் செய்யப்பட்ட ஒரு ஆயுதத்தின் கைப்பிடியை சுற்றி இருந்தது..இத்தாலியின் தூரின் நகரில் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்க லினன் துணித் துண்டு இயேசுவின் உடலைக் கல்லறையில் மூடியிருந்த போர்வை என பல லட்சக்கணக்கானவர்களால் நம்பப்பட்டு வழிபடப்படுகிறது.ஆணி கிழித்த மற்றும் குருதி காய்ந்த தடங்களுடன் இருக்கும் லினனால் ஆன இந்த புனித உடற்போர்வை இயேசு வாழ்ந்து இறந்த கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று கூறப்படுகிறது.
ஆதிமனிதனின் ஆளி சாகுபடி இப்போதிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வட ஆப்பிரிக்காவில் துவங்கி இருக்கலாமென்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்’
லினன் குறித்த முதல் எழுத்துபூர்வமான குறிப்புகள் கிபி 1450 சேர்ந்த பைலோசின் (pylos) கற்செதுக்குகளில் கிடைத்துள்ளன. அவற்றில் லினன் கிரேக்க மொழியில் லி- நோ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (li-no).. லினனை மிக புனிதமானதாக கருதிய யூதர்கள், இதை கம்பளியுடன் கலக்கலாகாது என வகுத்திருந்தனர்.
இஸ்ரேலிய பழங்குடிகள் தங்களது கூடாரங்களையும், வழிபாட்டுத்தலங்களின் திரைச்சீலைகளையும் லினன் துணிகளில் உருவாக்கியிருந்தார்கள்.
பண்டைய நாகரிகங்களில் நிலத்திற்கருகே வாழ்ந்த அனைவரும் ஆளி சாகுபடி செய்திருந்தனர், .குறிப்பாக எகிப்தில் 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆளி சாகுபடியும் லினன் உற்பத்தியும் இருந்தது.
ஆளி விதை மற்றும் நாரிழை செடிகளின் சாகுபடி ரஷ்யாவில் கிபி 2000 த்தில் அறிமுகமானது.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல தொன்மையான நாகரிகங்களில் லினன் ஆடைகள் புழக்கத்தில் இருந்தன பல காப்பியங்களில், வரலாற்று நூல்களில் லினன் நாரிழைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பண்டைய இந்திய நூல்களில் லினன், பட்டு, கம்பளி மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளைக் குறிக்க க்ஸௌமா, கௌசியா, அவிகாயோ மற்றும் கர்பசா என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. மிக மென்மையான லினன் துகுலா என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராமனின் தாயார் கெளசல்யை பூஜைகளின் போது லினன் உடைகள் அணிந்திருந்தது, சீதையின் திருமணப்பரிசுகளில் லினன் ஆடைகள் இருந்தது, மணப்பெண்ணை வரவேற்க தசரதனின் மனைவியர் லினன் ஆடைகள் உடுத்தி இருந்தது,, ராவணனின் பிரேதம் லினன் துணியால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது ஆகியவை வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் அஸ்வமேத யாகம் செய்கையில் லினன் ஆடைகள் உடுத்தி இருந்தார் என்றும், வங்கம், தாமிரலிப்தி, புண்டரம் மற்றும் கலிங்க நாடுகளிலிருந்து அவருக்கு பட்டு, கம்பளி மற்றும் லினன் ஆடைகள் பரிசாக வழங்கப்பட்டதும் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணர் மஞ்சள் சாயமேற்றப்பட்ட லினன் துணியாலான இடையாடையை அணிந்திருந்ததையும் சொல்கின்றது பாரதம்
கிபி 500 ல் எழுதப்பட்ட அன்றாட வாழ்வின் நியதிகளை சொல்லும் ’க்ருஹ சூத்ர கண்டிகை” குழந்தைகள் கல்வியை துவங்கும்போது சணல் அல்லது லினன் துணியாலான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும் என்கிறது.
பௌத்தமும் பல்வேறு பிரிவினருக்கான ஆடைகளில் மான்தோல், பட்டு, கம்பளி, மரவுரி, வைக்கோல் மற்றும் லினன் ஆகியவற்றை குறிப்பிடுகிறது. காசி மன்னர் 500 லினன் போர்வைகள் புத்தருக்கு பரிசளித்திருக்கிறார்.புத்த துறவிகள் லினன் துணிகளை பரிசாக பெற்றுக்கொள்ள அனுமதி இருந்திருக்கிறது.
2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெளத்த நூல்களின் தொகுப்பான ’திவ்ய வதனம்’ லினன் மற்றும் கம்பளி ஆடைகளை பற்றி குறிப்பிடுகிறது. 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று கணிக்கப்படும் பழமையான ’லலித் விஸ்தாரம்’ என்னும் கெளதம புத்தரின் வாழ்க்கை குறித்த சமஸ்கிருத நூலொன்று ’பாண்டு துகுலா’ என்று லினனை குறிப்பிட்டிருக்கிறது.
விவசாயமும் ஆடை நூலிழை வணிகமும் பெரும் பங்காற்றிய மௌரிய சாம்ராஜ்யத்திலும் ஆளி அதிகம் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அர்த்தசாஸ்திரம் லினன் நாரிழைகளை நெய்தல், அவற்றின் மிருதுத்தன்மை, சந்தைப்படுத்துதல் மற்றும் அவற்றிற்கான வரிகள் ஆகியவற்றை குறித்து விரிவாக சொல்கிறது.
ரகுவம்சத்தில் காளிதாசர் லினன் ஆடைகளின் மென்மையை சொல்லி இருக்கிறார். குமார சம்பவத்தில் மண நிகழ்வுகளில் உயர்குடியினர் லினன் ஆடைகளை அணிந்ததை குறிப்பிட்டிருக்கிறார்.
மெகஸ்தனிஸ் இந்தியர்கள் எழுதும் தாளாகவும் லினன் துணிகளை பயன்படுத்தியதையும், யுவான் சுவாங் ஹர்ஷவர்த மன்னர் லினன் ஆடைகள் அணிந்திருந்ததை குறிப்பிட்டிருக்கின்றனர்.
லினன் நாரிழைகள் மட்டுமல்ல, பண்டைய இந்தியர்களுக்கு ஆளி விதையின் மகத்துவமும் தெரிந்திருந்தது.
சுஸ்ருத சம்ஹிதை நீல மலர்களிலிருந்து கிடைக்கும் உமை, பார்வதி, க்ஸௌமா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் ஆளி விதை இருமல் நிவாரணி, ஈரலை பாதுகாக்கும் என குறிப்பிடுகிறது.. மேலும் பச்சிளம் குழந்தைகளை லினன் படுக்கைவிரிப்பில் படுக்க வைப்பதின் நன்மைகளையும் சொல்கிறது சுஸ்ருத சம்ஹிதை. பருத்திக்கு முன்பே ஆளி இந்தியாவில் இருந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் வேத காலத்திலிருந்தே இருக்கிறது.
மனிதனின் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் தங்கள் கரங்களை பதித்திருக்கும் ஏழு தேவதைகள் தூய வெண்ணிற லினன் ஆடைகள் அணிந்திருப்பார்கள் என்கிறது விவிலியம்
1 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் மிக உயர்ரக லினன் துணிகள் நெய்யபட்டன அந்த தரம் இன்றும் வரையில் தொடருகிறது. ஃபோனிசியர்கள் அயர்லாந்திலிருந்து ஆளி சாகுபடி முறைகளையும் லினன் உற்பத்தியையும் தங்கள் நாட்டுக்கு கொண்டு வந்தனர்.
12ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பாவின் பிற பகுதிகளை காட்டிலும் ஸ்பெயினில் லினன் மிக அதிகமாக உற்பத்தியானது. 12 ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸும் இத்தாலியும் மேசைவிரிப்புக்களுக்காக அதிகம் லினன் துணிகளை உற்பத்தி செய்ய துவங்கினர்.அதற்கு முன்பு வரை உயர்குடி விருந்துகளில் திவான்களிலும் திண்டுகளிலும்,சாய்ந்தபடி அமர்ந்திருந்தனர். பிறகு உயர்ந்த மேசைகளில் நாற்காலிகளில் அமர்ந்து உண்ணும் வழக்கம் உருவாகி பரவலாக விரும்பட்ட போது மேசை விரிப்பாக லினன் பயன்படுத்துவது பெரிய கெளரவம் என கருதப்பட்டது.. மேசை விளிம்புகளின் கீழே தொங்கும் லினன் துணிகளை கைகளை துடைக்கவும் உபயோகப்படுத்தினர்.அப்போது உயர்குடியினருக்கான ஆடம்பர அடையாளமாகவே லினன் கைக்குட்டைகளும், மேசைவிரிப்புக்களும், துவாலைகளும் இருந்தன
15 ஆம் நூற்றாண்டில் லினன் நாரிழைகளை பிரித்தெடுக்கும் நூற்பு ராட்டைகள் வந்தன,அதற்கு 2 நூற்றாண்டுகளுக்கு பிறகு கால்களால் மிதிக்கும் இயந்திரம் வந்தது. 18ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தில் அதிக லினன் உற்பத்தியும் வணிகமும் நடைபெற்ற நகரமொன்றிற்கு லினனொபோலிஸ் என்றே பெயர்(“Linenopolis”) . 19 ஆம் நூற்றாண்டில் இயந்திர நூற்பு கண்டு பிடிக்கபட்ட பின்னர் லினன் உற்பத்தி பெருகியது. உள்ளாடைகளிலிருந்து பூத்துவாலைகள் வரை லினனிலேயே தயரானது.இயந்திர நூற்புக்கு பின்னர், உயர்குடியினருக்கானதாக மட்டும் இருந்த லினன் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்தது.
20 ஆம் நூற்றாண்டில் தேய்த்து அழகாக மடிக்கப்பட்ட லினன் கைக்குட்டையை சூட் பாக்கெட்டில் நுனி தெரியும்படி வைத்துகொள்வது உன்னத உடையணியும் ஆண்களின் பெருமைக்குரிய வழக்கமாக இருந்தது
பண்டைய பல நாகரீகங்களில் வில்லின் நாண்களும், புத்தக அட்டைகளும் லினொதொராக்ஸ் (linothorax.) எனப்படும் கவசஉடையும் கூட லினன் துணியால் செய்யப்பட்டது. 1923ல் ஜெர்மன் நகரமான பியெல்ஃபெல்டில் (Bielefeld) நாணயத்தாள்கள் லினன் துணியால் உருவாகி இருந்தன. இப்போது அமெரிக்காவின் நாணயத்தாள்கள் 25% லினன் 75% பருத்தியால் உருவானவை.
லினன் மிகப்பழமையான நெய்பொருட்களிலொன்று. ஆளி செடிகளின் தண்டுகளிலிருந்து எடுக்கப்படும் இழைகளே லினன் எனப்படுகின்றன.லினம் உசிடாஸிஸிமம் (Linum usitatissimum) .என்பது லினெசி குடும்பத்தை சேர்ந்த ஆளி விதைச்செடி (Flax seed plant) . ஆளி வடஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பாவை தாயகமாக கொண்டது. L. angustifolium எனும் காட்டுப்பயிரிலிருந்து உட்கலப்பின முயற்சிகள் மூலம் பெறப்பட்டது இந்த ஆளி பயிர்.
இதன் அறிவியல் பெயரான Linum usitatissimum என்பது ’’பல உபயோகங்கள் கொண்ட லினன்’’ என்று பொருள்படுகிறது. கிரேக்க Linon- லினோனிலிருந்தே ஆங்கில லினன் -Linen வந்தது இது இதன் அறிவியல் பெயரான லினம்- Linum என்பதை குறிக்கிறது. ஆளியின் தண்டுகளில் நேராக அமைந்திருக்கும் லினன் நாரிழைகள் குறித்த சொல்லே பிற்பாடு நேர்கோட்டை குறிப்பிடும் லைன்- Line என்னும் சொல்லானது.
லினன் நாரிழைகள் பருத்தி மற்றும் பிற தாவர இழைகளை காட்டிலும் உறுதியும், நீடித்திருக்கும் இயல்பும், நீளமும் கொண்டது. இதன் இணைப்பெயர்: L. Crepitans. ஆளி பயிர் விதைகளுக்காகவும் நாரிழைகளுக்காகவும் தனித்தனியான கலப்பினங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நடந்த கலப்பின முயற்சிகளுக்கு பிறகே இருவிதமான ஆளி பயிர்கள் கிடைத்தன
இழைப்பயிர்கள் இடைவெளி குறைவாக, கிளைகள் அதிகம் வளராவண்னம் நெருக்கமாக வளர்க்கப்படும். விதைப்பயிர் தாராளமாக நன்கு கிளைத்து மலரும் படி வளர்க்கப்படும். நார்பயிரில் குறைவான விதைகளும், விதை பயிர்களில் முதிராத, தரமற்ற நார்களும் கிடைக்கும். நாரிழைக்கான ஆளி உயரமாகவும், எண்ணெய் பயிர் குட்டையாகவும் இருக்கும்.வருடாந்திர பயிரான ஆளி 30 லிருந்து 100 செ மீ உயரம் வரை வளரும் .
ஆளியின் அடர் பச்சை, காம்புகளற்ற சிறிய இலைகள் மாற்றடுக்கில் பளபளப்பான தண்டுகளில் அமைந்திருக்கும்.ஒரு செடியில் 80 லிருந்து 100 இலைகள் வரை இருக்கும். .தளர்வான ரெசீம் அல்லது சைம் மஞ்சரிகளில் கொத்துக்கொத்தாக வான் நீலத்தில் நீண்ட காம்புகளுடன் ஐந்திதழ்கள் கொண்ட இருபால் மலர்கள் இருக்கும்.வெள்ளை, ஊதா, மற்றும் இளஞ்சிவப்பு மலர்கள் கொண்ட கலப்பின வகைகளும் ஆளியில் உண்டு.இம்மலர்கள் அதிகாலையில் மலர்ந்து வெயிலேற துவங்கிய சிலமணி நேரங்களிலேயெ வாடி உதிர்ந்துவிடும்.மலரமுது நிரம்பியிருக்கும் இம்மலர்களிலிருந்து அக்குறைந்த காலத்தில் தேனீக்கள் ஒரு ஹெக்டேருக்கு 15 கிலோ வரை தேன் சேகரித்து விடும். இப்படியான ஒரே தாவரத்திலிருந்து பெறப்படும் (unifloral honey) தேன் பல மருத்துவ உபயோகங்கள் கொண்டது.
5 அறைகள் கொண்ட உலர் வெடிகனி, 10 முட்டை வடிவ பளபளப்பான பொன்னிற எண்ணெய் நிரம்பிய விதைகளை கொண்டிருக்கும்.உண்ணக்கூடிய ஆளி விதைகள் அமெரிக்காவில், ஃப்ளேக்ஸ் விதைகள் (flaxseed) என்றும் ஐரோப்பாவில் லின் விதைகள் என்றழைக்கப்படும்(linseed).
. தண்டுகளில் லினன் நார்கள் மையப்பகுதியை சுற்றிலும் நீளவாக்கில் கற்றைகளாக அமைந்திருக்கும். லினன் நார்கள் தண்டுகளில் உரியத்தில் (Phloem) அமைந்திருக்கும் (bast fibres). லினன் துணிகளின் தரமும் மென்மையும் ஆளி பயிரின் வாழிடம் மற்றும் அறுவடை முறையை பொறுத்து மாறுபடும்.
ஆளி நாரிழைகள் 2-36 இன்ச் நீளமும், 12-16 மைக்ரோமீட்டர்கள் விட்டமும் கொண்டிருக்கும். குட்டையான இழைகள் உறுதியான துணிகளை நெய்யவும், நீளமானவை மிருதுவானவற்றை நெய்யவும் பயன்படுகின்றன.
ஆளி எல்லாவித நிலங்களிலும், வளரும் இவற்றிற்கு மிகக்குறைந்த அளவே உரங்களும் நீரும் தேவைப்படும்..பயிரிடபட்ட நிலத்தில் சத்துக்கள் எல்லாம் ஆளி உறிஞ்சிவிடுவதால் பின்னர் பல்லாண்டுகளுக்கு நிலம் தரிசாகவே விடப்படும்..ஒரு நிலப்பகுதியில் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் ஆளி சாகுபடி செய்யப்படுவதில்லை. குறைந்த பட்சம் 7 வருட இடைவெளியில் ஆளி பயிரிடுகையில் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கிறது
அதிக மனித உழைப்பை கோரும் ஆளி சாகுபடி 100 நாட்களில் முடிந்துவிடும், மார்ச் ஏப்ரலில் விதைக்கப்பட்டு, தண்டு பழுத்து மஞ்சள் நிறமாகும் ஆகஸ்ட் மாதத்தில் அறுவடை செய்யப்படும்.பெரும்பாலும் கைகளால் நிலத்தின் மட்டதுக்கு வெகு அருகிலிருக்கும் அடித்தண்டு கைகளால் அறுக்கப்படும்.
அறுக்கப்பட்டபின் கட்டைகள் மீது செடிகளை மெல்ல அடித்து உதிர்க்கும் முறையில் விதைகள் பிரிக்கப்படும். நார்ச் செடியில் விதை முற்றும் முன்பே அறுவடை நடக்கும்.
பின்னர் இலைகளும் உதிர்க்கப்பட்டபின்னர், தண்டுகளில் நார்களை ஒன்றுடன் பிணைத்திருக்கும் பெக்டின் என்னும் வேதிப்பொருளை பிரித்தெடுக்க சில வாரங்கள் அவை ஓடும் நீரில் அல்லது தொட்டிகளில், குட்டைகளில் தேங்கி இருக்கும் நீரில் அமிழ்த்தியோ அல்லது பனிநீரில் நனையவோ செய்யப்படுகிறது சூழலில் நிறைந்திருக்கும் பாக்டீரியாக்கள் பெக்டினை சிதைத்து நார்களை தளர்த்தி பிரிக்கின்றன. சூழல் மாசு குறித்து கவலையற்றவர்கள் சோடா உப்பு மற்றும் ஆக்ஸாலிக் அமிலம் ஆகிய வேதிப்பொருட்களை உபயோகித்தும் நார்களை பிரிக்கிறார்கள்.
மேற்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவில் மாலையிலிருந்து அதிக பனி பொழிவும் மிதமான பகல் வெப்பமும் இருக்கும் காலங்களில் பனிநீரில் நனைய வைத்து ஆளி தண்டுகளிலிருந்து நாரிழைகள் பிரித்தெடுக்கப்படும். (Dew retting). சுமார் 8 வாரங்கள் பெரும் புல்வெளிகளில் நனைய வைக்கப்டும் ஆளி தண்டுகள், சீரான நார் பிரிதலுக்காக வாரம் ஒரு முறை புரட்டி போடப்படும். பனியில் நனைந்த தண்டுகளில் இருந்து கிடைத்த நூலிழைகளால் நெய்யப்படும் லினன் துணிகள் சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும்.
அடுத்ததாக இரு உலோக உருளைகளின் நடுவில் ஊற வைத்த ஈரமான தண்டுகளை செலுத்தி நார்கள் கவனமாக தண்டின் பிற சதைப்பகுதியிலிருந்து விடுவிக்கப்படும். இது பெரும்பாலும் ஆகஸ்ட் டிசமப்ர் மாதங்களில் நடைபெறும் பிறகு பிரித்தெடுக்கப்பட்ட நார்கள் வெயிலில் காய வைக்கப்பட்டோ அல்லது வெப்பமாக்கபட்டோ உலரவைக்கப்பட்டு நெசவுக்கு தயாராக்கப்படுகின்றது.
பெருகி வரும் லினன் சந்தையின் போட்டிகளுக்கேற்ப பல நாடுகளில் பிரத்யேக சாகுபடி மற்றும் அறுவடை முறைகளை கையாளுகிறார்கள்.பயிர் முற்றுவதற்கு முன்னரே அறுவடை செய்கையில் இளம் தண்டுகளின் நார்கள் மிக மிருதுவாக இருப்பதை அறிந்துகொண்டு, விதைகள் உருவாகும் முன்பே அறுவடை செய்யும் முறையை இன்று வரை கையாளும் அயர்லாந்தில் ஆளி விதைகள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன.
லினன் துணி உற்பத்தியின் போது வீணாகும் துண்டு லினன் இழைகளை காகிதமாக்கி பென்சில்வேனியாவின் எஃப்ரடாவில் உபயோகிக்கிறார்கள்.
லினன் இழைகள் குளிர்ச்சியும் மென்மையுமானவை. துவைக்க துவைக்க இவை மேலும் மிருதுவாகும். இழுவைத்தன்மை குறைவானதால் நாளடைவில் இழைகள் நீண்டு விடாமல் இருக்கும். இவை பருத்தியை காட்டிலும் மூன்று மடங்கு உறுதியானவை. லினன் துணிகளை பூச்சி அரிக்காது, இவற்றில் புழுதி படியாது, கிருமிகள் தங்காது குளிர்ச்சியானது,
பருத்தி துணிகளை போல் நீரை உறிஞ்சி எடை அதிகமாகாமல், ஈரத்தை விரைவில் உறிஞ்சி, விரைவில் ஆவியாக்கும் தன்மை உடையது லினன். இந்த காரணத்தால் தான் பாய்மரக்கப்பல்களின் பெரும் பாய்கள் கெட்டியான லினன் படுதாக்களால் உருவாக்கப்பட்டிருந்தன.
லினன் துணிகள் கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், குளிரில் வெப்பமாகவும் வைக்கும். கித்தான், தர்ப்பாய், கோணி, விரிப்பு முதலிய முரட்டுத்துணி முதல் கைக்குட்டை, சட்டைத்துணி முதலிய மெல்லிய வகை துணி வகைகள் வரை லினனால் தயாரிக்கப்படுகிறது.லினன் நாரிழைகளின் இடையிடையே காணப்படும் நுண்முடிச்சுக்களே இவற்றை பிற தாவர இழைகளிலிருந்து வேறுபடுத்துகிறது இம்முடிச்சுக்களே லினனின் பிரத்யேக தரத்திற்கும் காரணமாக இருக்கிறது.
இயற்கை லினன் தந்த, சாம்பல் கலந்த வெண்மை மற்றும் பழுப்பு ஆகிய நிறங்களில் இருக்கும் சலவை (bleach) செய்யப்பட்ட லினன் பிரகாசமான தூய வெண்ணிறம் கொண்டிருக்கும்
முறையாக உருவாக்கப்பட்ட லினன் துணிகள் உடலின் வியர்வையை உடனே உறிஞ்சிக்கொள்ளும் இதனால்தான் இது லாஞ்சரி (lingerie) உள்ளிட்ட பெரிதும் விரும்பப்படும் உள்ளாடைகளை உருவாக்க பயன்படுகிறது. விரைப்பான நூல் இழைகளால் உருவாக்கப்படுவதால் லினன் ஆடைகள் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் சாத்தியங்கள் மிகக் குறைவு.
லினன் நார்களின் இழுவை தன்மை குறைவு என்பதால் திரும்ப திரும்ப ஒரே இடத்தில் லினன் ஆடைகள் மடிக்கப் படும்போது அந்த இடங்களில் உடையும், அதாவது கிழியும் சாத்தியம் உள்ளது
கைகளாலும், சலவை இயந்திரங்கள்கொண்டும் இவற்றை சலவை செய்யலாம், உலர் சலவையும் நீராவி சலவையும் செய்யலாம். துவைக்கயில் கொதிநீர் உபயோகிக்க கூடாது, லினன் துணிகளை முறுக்கி பிழியக்கூடாது. இவற்றை வெயிலிலல்லாது நிழலில் உலர்த்துதல் மேலும் நல்லது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆளி பயிராகிறது. சத்து நிறைந்த ஆளி விதைகள் உண்ணப்படுகின்றன. ஆளிவிதையின் எடையில் 36% இருக்கும் ஆளி விதை எண்ணையும் பல பயன்களை கொண்டது. ஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி உள்ளது. ஆளி விதையின் நார்ச்சத்து வால்நட்டில் இருப்பதை விட 5 மடங்கு அதிகம்.
ஆளி விதையின் உமியில் இருக்கும் எண்ணெய் உற்பத்தியில் கிடைக்கும் ஆளி கோந்து (Flaxseed gum (FG)) திரவ உணவுகளை அடர்த்தியாக்க பயன்படுகிறது. சமீபத்திய ஆய்வுகள் நீரிழிவு மற்றும் இதயநோய்களுக்கு ஆளி விதை கோந்து நல்ல மருந்தாக இருக்கும் என்கிறது
ஆளி விதை எண்ணெய் உணவில்லாத பிற பல உபயோகங்களையும் கொண்டுள்ளது இவை பறவைகளுக்கான உணவாகவும் பயன்படுகிறது. .ஹாலந்தில் உற்பத்தியாகும் ஆளி விதைகள் உயர்தரமானவை.
லினன் துணிகளின் உபயோகங்கள் கடந்த 30 வருடங்களில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. பருத்தியுடன், பட்டுடன், பிற செயற்கை இழைகளுடன் லினன் கலக்கப்பட்டு ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. மிகப்பிரபலமான லினன் பைனாப்பிள் என்னும் நூலிழை அன்னாசி செடியின் இலை நார்களை லினன் நார்களுடன் கலந்து தயாரிக்கப்படுவது.
உலகின் மிக மிருதுவான உயர்தர லினன் பெல்ஜியத்திலிருந்து கிடைக்கிறது இவை மேசை விரிப்புகள் பூந்துவாலைகள் மற்றும் கைக்குட்டைகளுக்காக உபயோகமாகிறது.இத்தாலியும் உயர்தர லினன் துணிகளை உருவாக்குகிறது
ஐரிஷ் லினனும் உறுதியானதுதான் என்றாலும் மாறுபடும் காலநிலைகளால் தரம் எப்போதும் ஒரே போல் இருப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு அங்கிருந்து பெறப்படும் லினன் துணிகள் மீது பொதுவாக வைக்கப்படுகிறது
குறைந்த தரமுள்ள லினன் துணிகள் ரஷ்யாவிலிருந்தும், மத்திம ரகங்கள், பால்டிக் பிரதேசங்களிலிருந்தும் கிடைக்கின்றன.
ஜெர்மனி பிரான்ஸ் மற்றும் செக் குடியரசு ஆகியவை குறைந்த அளவில் லினனை தயாரித்து, அவர்களின் சொந்த தேவைக்காக மட்டும் உபயோகப்படுத்துகிறார்கள்
கைக்குட்டைகள், அன்றாடம் அணியும் உள்ளாடைகள், மேசை விரிப்புக்கள், கோடைக்கால ஆடைகள் என்று லினன் இப்போது உலகெங்கிலும் பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. எனினும் லினன் என்னும் பெயர் பருத்தி, சணல் துணிகளிலும் பொறிக்கப்பட்டிருப்பதால் கவனமாக தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது. முன்பு லினனால் மட்டுமே உருவான பல உடைகள் இப்போது பெயரில் மட்டும் லினனை கொண்டிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.லினனாக்குதல் (linenising) என்பது காகிதம், துணி அல்லது பருத்தியை லினனின் இயல்புக்கு கொண்டு வருவதை குறிக்கின்றது. அதாவது போலி செய்வது .
2018 ன் சர்வதேச வணிக புள்ளிவிவரங்கள் தற்போதைய லினன் ஏற்றுமதியில் முன்னணி நாடு சீனா ($732.3 million) தொடர்ந்து இத்தாலி ($173.0 M ), பெல்ஜியம் ($68.9 M ) மற்றும் இங்கிலந்து ($51.7M ) என்கிறது.
ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் 1849 ல் எழுதிய ’’தி ஃப்ளேக்ஸ்’’ என்னும் தேவதைக்கதை ஆளியிலிருந்து நாரிழைகள் பெறப்படுவதை மிக அழகாகச் சித்தரிக்கிறது. நீல மலர்களுடன் வயலில் நின்றிருந்த தான் எப்படி ஒரு புத்தகத்தின் தாளாக மாற்றமடைந்து மனிதனுக்கு அறிவைத் தந்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு ஆளிச்செடி வயலிலிருந்து தான் பயணித்த சாலைகளையும், வந்து சேர்ந்த நூற்பாலையையும், பின்னர் புத்தகமானதையும் சொல்வதுபோல் எழுதப்பட்ட இந்த கதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்குமானது.
வேருடன் பிடுங்கப்பட்டு, நீரில் அமிழ்த்தி, அடித்து, கசக்கி ,பிழிந்து நாரெடுத்து, இயந்திரங்களில் சிக்கி நூலாக நெய்யப்பட்டு பின்னர் துணியாகி, தாளாகி இறுதியில் அறிவை அளிக்கும் நூலாக ஆளிச்செடி மாறி இருப்பதை சொல்லும் இந்த கதையில் நமக்கும் பல படிப்பினைகள் இருக்கிறது.2
1.. Flinders Petrie archaeologist – archaeology (age-of-the-sage.org)
2.Hans Christian Andersen: The Flax (gilead.org.il)
3. ஆளி பயிரின் வரலாறு தோற்றம், பரவல், சாகுபடி, பயன்கள், லினன் உற்பத்தி குறித்து விரிவாக அறிய : The Biology of Linum usitatissimum L. (Flax) – Canadian Food Inspection Agency (canada.ca)