இலங்கைக்கு பலமுறை சென்று வந்த அந்த 6 வருடங்களில் என்னை பெரிதும் ஈர்த்தது அவ்விடத்து உணவுகளே. பெரும்பாலும் கேரளாவின் உணவுகளை ஒத்த சுவையான வகைகள் . அசங்க ராஜ பக்ஷவின் வீட்டில் சுவைத்த வட்டாலப்பமும், மண்சட்டிகளில் கட்டித்தயிரும், அவற்றுடன் கலந்துகொள்ள அளிக்கப்பட்ட மலைத்தேனும், நுவரேலியாவின் மாபெரும் பால்பண்ணையில் கிடைத்த மில்க் ஷேக்கும், ரம்புட்டன் பழங்களும், அசைவ உணவு விடுதிகளில் அனைவருமே ஒரே தட்டில் பல இறைச்சிகளாலான குழம்பை கூடி அமர்ந்து உண்பதுவுமாய் சுவையான நினைவுகள் பல இருக்கின்றன. எனவே ஒரு பன்னாட்டுக்கருத்தரங்கில் இந்த கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றினேன்.
உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது,.
சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன.. உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது..ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் அவர்களது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.
பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட அதே உணவுகளுடன் தான் அவர்களின் சந்ததியினருடன் பயணிக்கிறார்கள்
எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்க்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் அவர்கள் கொண்டு வந்து விடுகிறார்கள். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும் பிறந்து வளர்ந்த ஊரில் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறார்கள்..அப்படி ஈழத்தமிழர்களுடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில் பாரம்பரியம் மிக்க உணவுகள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் உணவுப் பழக்கம் என்று கூறுவதனால்,இலங்கைத்தமிழர் அனைவரும் ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறுவதற்கில்லை. ஏனைய பல சமுதாயங்களின் உணவுப் பழக்கங்களைப் போலவே இவர்களது உணவுப் பழக்கமும், அச்சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பல அடிப்படைகளில், வேறுபடுவதைக் காணலாம். ஆனாலும், இவை அனைத்தையும், ஒன்றாகவே இயங்குகின்ற முழுஇலங்கைச் சமுதாய அமைப்பின் கூறுகளாகப் பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளமுடியும்
இவற்றைவிட நாட்டின் புவியியல் அமைப்பு, வளங்கள், பல்வேறு வகையான வேளாண்மை உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருள் தொடர்பான வணிகம் என்பனவும், நில உடைமை மற்றும் நிலப்பயன்பாட்டு நிலைமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இவற்றுடன், சமய நம்பிக்கைகளும் இன்னொரு முக்கிய காரணியாகும்
காலத்துக்குக் காலம் இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின், வேளாண்மை மற்றும் வணிகம் தொடர்பான கொள்கைகளும் போர் முதலியவற்றினால், ஏற்றுமதி செய்யும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதிருந்த நிலைமைகளும்கூட உள்ளூர் உணவுப் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளன.
இவை பரந்த அடிப்படையில், எல்லாப் பிரிவினரையும் பாதிக்கின்ற காரணிகளாக உள்ளன. அதே வேளை, சமூகப் பிரிவுகள் மட்டத்தில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அடிப்படையாகப் பின்வரும் காரணிகள் அமைகின்றன.
- சமூக அமைப்பு
- தொழில்
- பொருளாதார நிலை
- சமூக அந்தஸ்த்து
- வாழிடச் சூழல்
அன்றாட உணவு வகைகள்
இலங்கைத்தமிழர்களின் முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும்.. அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வருகின்றது.
உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசு, கோதுமையை அறிமுகப்படுத்தியது. இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் இலங்கைத்தமிழர் உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம். பாண் (bread), பிட்டு, இடியப்பம், தோசை என்று அழைக்கப்படும் கோதுமை உணவுகள் முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும். அது மட்டுமன்றி, சிற்றுண்டிகள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், குரக்கன் முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது.
முதன்மை உணவுகள்
இன்றைய தமிழர்கள் இன்னும் அரிசியை தினசரி அல்லது பிரதான உணவாக பொதுவாக மூன்று நேரமும் உட் கொள்கிறார்கள். நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்கா. மல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் இங்கு பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு வகைகளாகவோ இருக்கலாம்.உதாரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி,,தோசை,பிட்டு,இடியப்பம் அல்லது அப்பம் தினசரி காலை அல்லது மாலை உணவாக உட்கொள்கிறார்கள்.
.
அரிசி மாவு,தேங்காய்த் துருவல் கொண்டு பிட்டையும் ,அரிசி மாவினால் இடியப்பம்,அப்பம் தயாரிக்கிறார்கள்.இடியப்பமும் அப்பமும் இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இடைக்காலத்தில்,சமணம் போன்ற சமயங்களின் செல்வாக்கால் அசைவ உணவு அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும்,இன்று அப்படி ஒரு விலக்கப்பட்ட உணவாக தமிழர்கள் மத்தியில் பொதுவாக இல்லை.என்றாலும் விழாக் காலங்களிலும் விரதம் அல்லது நோன்பு காலங்களிலும் இது பொதுவாக தவிர்க்கப்படுகிறது
. முன்னைய காலங்களில்,இரவில் மிஞ்சிய சோற்றை நீரில்,இரவின் குளிர்ச்சியில் ஊறவைத்து அதை காலையில் தயிருடன் கலந்து அல்லது தினைக்கஞ்சியை உண்பார்கள்.இந்த ஆரோக்கியமான காலை உணவு எல்லோராலும் வர்க்க வேறுபாடு இன்றி அன்று உண்ணப்பட்டது.இந்த நடைமுறை இன்று கிராமப்புறங்களில் கூட மறைந்து வருகிறது. ஆனால் இன்று இது காபி மற்றும் தேநீர்களால் மாற்றிடு செய்யப்பட்டுள்ளது இனிப்பு பானங்களில் பாயசம் இன்னும் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறப்படுகிறது.
. தமிழர்களின் பாரம்பரிய உணவு என்பது அவர்களின் மூதாதையர்களால்,பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உணவு தொழில்மயமாக்கலுக்கு முன் உண்ணப்பட்டவையாகும். தமிழினத்தின் அடையாளமாகக் கூட கருதப்படுகிறது.இந்த தொழில்மயமாக்கல் அதிகமாக 19ம் நுற்றாண்டு தொடக்கத்திலேயே பெரும்பாலும் ஆரம்பிக்கப்பட்டது.நகர புறங்களில் இன்று பெருமளவு துருப்பிடிக்காத உருக்கு இரும்பினால் செய்யப்பட்ட முள்கரண்டி,வெட்டும் கருவிகள் போன்ற சாப்பிடுவதற்கும் பரிமாறுவதற்குமான கருவிகள் மற்றும் பீங்கான் பாண்டங்கள் அல்லது மண் பாத்திரங்கள் பாவிக்கப்பட்டாலும், விழாக்காலங்களிலும் கொண்டாட்ட காலங்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறுவது இன்னும் வழமையாகவே உள்ளது.
.
கறிவகைகள்
சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள், இலைவகைகள், மீன், மாமிசம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கப்படுபவை கறிகள் எனப்படுகின்றன. இக் கறிவகைகளைப் பலவகையாகப் பகுத்துக் காணமுடியும். இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு.
- பருப்புக் கடையல்: தோல் அகற்றப்பட்ட, பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றில் ஒன்றைக் குறைந்த நீரில் அவித்துத் தேங்காய்ப் பால், உப்பு மற்றும் சேர்மானங்களுடன், சிறிது நீர்ப்பற்றுள்ளதாகச் செய்யப்படும் கறி இது. சைவச் சாப்பாட்டில் இது முக்கிய இடம் வகிக்கும் ஒரு கறியாகும்.
- குழம்பு: கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு,பூசனிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து, தேங்காய்ப் பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது இது. மிளாகாய்த் தூளுக்குரிய சிவப்பு நிறத்தில், கூழ் போன்ற நிலையில் இருக்கும். உறைப்புச் சுவை கொண்டது.
- வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி): குழம்பு ஆக்குவதற்கான சேர்மானங்களே இதற்கும் பயன்படுகின்றன. ஆனால், கறி கூழ் நிலையில் இல்லாமல் மேலும் வரண்டு, பசை போன்ற கூட்டில் காய்கறிகள் சேர்ந்த நிலையில் இருக்கும். இதுவும் உறைப்புச் சுவை கொண்டதே.
- பால் கறி (வெள்ளைக் கறி): இதுவும் ஒரு வரட்டல் நிலையிலேயே இருந்தாலும், இதற்கு மிளகாய்த்தூள் சேர்க்கப்படுவதில்லை.
- கீரைக் கடையல்: கீரையை அவித்துத் தேங்காய்ப்பாலுடன் கடைந்து செய்யப்படும் இதற்குப் பெரும்பாலும் புளிக்காக எலுமிச்சம் பழச் சாறு சேர்ப்பார்கள்.
- வறை: சேர்மானங்களை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து, சிறிதளவு எண்ணையுடன் சேர்த்து வறுப்பதன் மூலம் கிடைப்பது வறை ஆகும். இலை வகைகள், புடோல் போன்ற சில காய் வகைகள் போன்றவை வறை செய்வதற்குப் பயன்படுகின்றன. சுறா போன்ற அசைவ உணவுகளிலும் வறை செய்யப்படுவதுண்டு.
- துவையல்: பருப்புப் போன்றவற்றைத் தேங்காய்ப்பூவுடனும், வேறு சேர்மானங்களுடனும் சேர்த்துத் துவைத்து ஆக்குவது துவையல்.
- சம்பல்: தேங்காய்ப்பூ, புளி, உப்பு, வெங்காயம் என்பவற்றுடன், மிளகாய் அல்லது வேறேதாவது சேர்த்து அம்மியில் அரைப்பதன் மூலம் அல்லது உரலில் இட்டு இடிப்பதன் மூலம் சம்பல் செய்யப்படுகின்றது. மிளகாய் சேர்த்துச் செய்வது மிளாகய்ச் சம்பல். இஞ்சி சேர்க்கும்போது இஞ்சிச் சம்பல் எனப் பலவகைச் சம்பல்கள் பெறப்படுகின்றன. சிங்கள மொழியில் இதனைச் சம்போல என்பார்கள்.
- பொரியல்:வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றைச் சீவல்களாக்கி எண்ணெயில் நன்றாகப் பொரிப்பதன் மூலம் பொரியல்கள் பெறப்படுகின்றன. அசைவ உணவுகளான, மீன், இறைச்சி என்பவற்றிலும் பொரியல்கள் செய்யப்படுகின்றன.
- சொதி: நீரினால் ஐதாக்கப்பட்ட தேங்காய்ப்பால், உப்பு, வெங்காயம் என்பவற்றைக் கொதிக்கவைத்து, அத்துடன் பழப்புளி அல்லது எலுமிச்சம் சாறு சேர்ப்பதன் மூலம் சொதி ஆக்கப்படுகின்றது.
ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு. எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு.
கறிகள் ஆக்குவதில்,தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். அநேகமாக எல்லாக் கறிகளிலும், தேங்காய்ப்பூவோ, தேங்காய்ப் பாலோ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடும், தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம். தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் சாம்பார் இவர்களின் சமையலில் இடம்பெறுவதில்லை. இதற்குப் பதிலாக தேங்காய்ப் பால், மிளகாய்த் தூள் என்பவற்றுடன் மரக்கறி, மீன், இறைச்சி அல்லது பிற கடலுணவு வகை கலந்து சமைக்கப்படும் குழம்பு பயன்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகம் காணப்படாத இன்னொரு துணைக் கறி வகை சொதி. இது தேங்காய்ப் பாலில் செய்யப்படுகிறது. சோற்றுடன் சாப்பிடும்போது கடைசியாகச் சொதி ஊற்றிச் சாப்பிடுவது வழக்கம்..
துணை உணவு வகைகள்
காலைச் சாப்பாட்டிற்கும், சில சமயங்களில் இரவுச் சாப்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்ற உணவு வகைகள் துணை உணவு வகைகள் அல்லது சிற்றுண்டிகள் எனப்படலாம். இந்த விடயத்திலும் தமிழ் நாட்டுக்கும், இலங்கைத்தமிழருக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது.
- இடியப்பம்: இடியப்பம் முன்னர் அரிசி மாவில் மட்டுமே செய்யப்பட்டது. கோதுமை மாவின் அறிமுகத்தின் பின்னர், தனிக் கோதுமை மாவிலோ, அரிசியுடன் கலந்தோ இடியப்பம் அவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோதுமை மா மலிவான விலையில் கிடைத்ததும், கோதுமை கலந்த இடியப்பம் மென்மையாக இருந்ததும், கோதுமை இடியப்பம் பிரபலமாகக் காரணமாக அமைந்தது. இடியப்பம் பொதுவாகச் சொதி, சம்பல் ஆகியவற்றுடன் உண்ணப்படுகின்றது. எனினும், வேறு சைவ, அசைவக் கறி வகைகளுடனும் இடியப்பத்தை உண்பதுண்டு.
அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு,தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும்,வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை.மேலும் தேங்காய் பாலும் உறைப்பு கூடிய மிளகாய் தூளும் பெரும்பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன்,பல தரப்பட்ட ஊறுகாய் வடகத்துடன் இடியப்பம் உண்ணப்படுகின்றது..
- பிட்டு: பிட்டு அரிசி மாவில் மட்டுமன்றி, குரக்கன் மா, ஒடியல் மா போன்றவற்றிலும், அவிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது, கோதுமை கலந்து அவிக்கப்படுவது உண்டு. பிட்டு எந்தக் கறியுடனும் உண்ணப்படக்கூடியது. பிட்டுக்குப் பால் சேர்த்துப் பால் பிட்டு எனவும், சீனி சேர்த்து சீனிப் பிட்டு எனவும் உண்பது உண்டு.
- அப்பம்: ஒரு நாள் முன்னரே அரிசியை ஊறவைத்து இடித்து நீருடன் கலந்து புளிக்கவிட்டு அப்பம் சுடுவார்கள். வெறுமனே சுடப்படும் அப்பம் வெள்ளையப்பம் என்றும், சுடும்போது நடுவிலே தேங்காய்ப் பால் ஊற்றிச் சுடப்படும் அப்பம் பாலப்பம் என்றும் அழைக்கப்படுகின்றது.
- தோசை: கிராமப் புறங்களிலே சுடப்படுகின்ற தோசை சிறிது வேறுபட்டது. தோசை மாவுக்குச் சிறிது மஞ்சள் சேர்த்துக் கடுகு, மிளகாயும் தாளித்துச் சேர்ப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ளது போல் நீர்த் தன்மை கொண்ட சட்னி இங்கு செய்யப்படுவதில்லை. ஆனால் தோசைக்காக வேறு வகையான சம்பல் தயாரிக்கப்படுகின்றது. செத்தல் மிளகாயைப் (காய்ந்த மிளகாய்) பொரித்து, அத்துடன், புளி, உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொள்வார்கள். இது சிறிது வரண்டதாகவும், உதிர்கின்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
- அவித்த கிழங்கு வகைகள்: மரவள்ளிக் கிழங்கு இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவில் செய்கை பண்ணப்படும் கிழங்கு வகையாகும். கறியாகவும் சமைத்து உண்னப்படும் இக் கிழங்கை அவித்துக் காலை உணவாக உண்பது உண்டு. இக் கிழங்கு குறைந்த வருமான மட்டங்களில் உள்ளவர்களுக்கு மலிவாகக் கிடைக்ககூடிய ஒரு உணவாகும்.
- பாண் (கோதுமை ரொட்டி): இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, மேனாட்டு உணவு வகையான இது, இங்கிருக்கும் தமிழர்களால் பரவலாக உண்ணப்படுகின்ற உணவு வகைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உண்ணுவதற்கான தயார் நிலையிலேயே வருவதாலும், அரச மானியங்கள் மூலமாகப் பாண் மலிவான விலையில் கிடைப்பதாலும் பலரும் இதை விரும்பி உண்கிறார்கள்.
பனம் பண்டங்கள்
பனம் பண்டங்கள் நீண்டகாலமாக இம் மக்களின், சிறப்பாகச் சமுதாயத்தின் மத்தியதர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் உணவுப் பழக்கங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. எவரும் நட்டுப் பராமரித்து வளர்க்காத பனைகள் தாமாகவே வளர்ந்து பயன் தருவதன் மூலம், உணவுக்கான ஒரு மலிவான மூலமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. பனையிலே உணவுப் பொருள்களுக்கான மூலங்களாக இருப்பவை பனம்பழமும், பனங்கிழங்கும் ஆகும். பனம்பழப் பிழிவை வெயிலில் காயவைப்பது மூலம் பனாட்டு ஆக்கி நீண்டகாலப் பயன்பாட்டுக்காக வைத்திருக்க முடிந்ததும், பனங்கிழங்கையும் அவ்வாறே காயவைத்து, ஒடியலாக்கி வருடக் கணக்கில் பயன்படுத்த முடிந்ததும் அவற்றின் உணவுப்பெறுமானத்தை மேலும் அதிகரித்தன.
- ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் உணவு வகைகள் பலவற்றை மக்கள் உணவாகப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் பனம் பொருட்கள் முக்கிய உணவாகப் பயன்படுவது இல்லை. ஒடியல் மாவு, கடலுணவு வகைகள் போன்றவற்றைக் கலந்து செய்யப்படும் ஒரு வகைக் கூழ் இவர்களுக்கே உரிய தனித்துவமான ஒரு உணவு ஆகும். பெரிய பானைகளில் இக்கூழைக் காய்ச்சி, உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் ஒன்றாகக் கூடியிருந்து, பிலாவிலையைக் கோலிக்கொண்டு அதில் கூழை ஊற்றிக் குடிப்பர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இவர்களின் மனத்தில் நீங்காது இடம்பெறக்கூடிய ஒரு விடயம் இது எனலாம்.
- கூழ்” என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.
கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.
1 ) ஆடி மாதப் பிறப்பில் கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக்கூழ் .
2) ஒடியல் கூழ்.
பழவகைகள்
- உள்ளூரில் விளையும் பல பழவகைகளையும் இலங்கைத் தமிழர் உணவாகக் கொள்ளுகின்றனர். மா, பலா, வாழை போன்றவை இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாகவே செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. தோடை போன்ற பழவகைகள் வன்னிப்பகுதியில் செய்கை பண்ணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தப்பட்ட திராட்சையும் இங்கு வெற்றிகரமாக விளைவிக்கப்பட்டது.
- தமிழ் நாட்டில் அதிகம் எலுமிச்சை ரசம்பயன்பாட்டில் இருப்பது போல இலங்கைத்தமிழர்களிடையெ அதிகமும் விளாம்பழ பழரசம் பயன்பாட்டில் உள்ளது
உணவுக்கான மூலப்பொருட்களும் சேர்மானங்களும்
- அரிசி மற்றும் சிறுதானிய வகைகள் – அரிசி, குரக்கன், வரகு, சாமை, தினை
- பருப்புவகை – பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு, உ:ளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
- காய்கறிகள் – கத்தரி, வெண்டி, பயற்றை, வாழைக்காய், அவரை, தக்காளி, முருங்கைக்காய்
- அசைவ உணவுகள் – மீன், இறால், கணவாய், நண்டு, கோழி, ஆடு
- கீரை வகைகள் – முளைக்கீரை, முங்கைக்கீரை, பசளிக்கீரை, வல்லாரை, அகத்திக்கீரை
- எண்ணெய் வகை – நல்லெண்ணை, தேங்காய் எண்ணை
- சுவையூட்டற் பொருட்கள் – உப்பு, பழப்புளி, மிளகாய், எலுமிச்சை, மாங்காய், தேங்காய்
- இனிப்பூட்டற் பொருட்கள் – பனங்கட்டி, சர்க்கரை, சீனி<[3]
- வாசனைப் பொருட்கள் – கடுகு, சீரகம், சோம்பு, கொத்தமல்லி, பெருங்காயம்
இலங்கையில் சைவ உணவு வகைகளை மரக்கறிச் சாப்பாடு என்றும், அசைவ உணவு வகைகளை மச்சச் சாப்பாடு என்றும் குறிப்பிடுவது வழக்கம். இங்குசர்க்கரை என்பது தமிழ்நாட்டில் வெல்லம் என்பதற்கு நிகரானது. அதுபோலத் தமிழ் நாட்டில் சர்க்கரை என்பதையே இலங்கையில் சீனி என்கிறார்கள்
கடல் உணவுகள்
இலங்கையில் தமிழர் பகுதிகள் நீண்ட கடற்கரையைக் கொண்டவை இதனால், மீன், சுறா, நண்டு, கணவாய், இறால், திருக்கை போன்ற பலவகைக் கடலுணவுகள் கிடைக்கின்றன.
இலங்கை தமிழர்கள் அதிகமாக மாமிச உணவுகளை விட கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த கடல் உணவுகளில் அதிகமாக ஆரோக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. மீன் குழம்பு என்று எடுத்துக்கொண்டால் தேங்காய்பால் விட்டு, மிளகாய் தூள் போதுமான அளவு சேர்த்து சமைத்து காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறவர்கள், கூடவே இந்த கடல் உணவுகள் சமைக்கும்போது அதிகமும் பூண்டு சேர்த்துக்கொள்ளுகிறார்கள்
மரபு வழியாக இலங்கைத் தமிழரின் முக்கிய உணவுகள் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. தினை, சாமை, குரக்கன், வரகு போன்ற சிறு தானிய வகைகளும் பயன்படுகின்றன எனினும் இலங்கைத் தமிழரின் உணவு பெரும்பாலும் தென்னிந்திய செல்வாக்குடன் கூடியது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் உணவுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. அத்துடன், இலங்கையை ஆண்ட ஐரோப்பியர்களின் செல்வாக்கும் உண்டு.
.
வளமான,செல்வம் மிக்க குடும்பத்தில் கூட நாளாந்த சாப்பாட்டில் பெரும் வேறுபாடு காணமுடியாது.ஆனால்,விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடைபெரும்பொழுது முற்றிலும் வேறுபாடாக,அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும்.அது மட்டும் அல்ல, அங்கு பரிமாறப்படும் உணவு அவர்களின் செல்வ நிலையை காட்டுவதாகவும் இருக்கும். ஒரு விழா, சடங்கு என்பனை நடை பெரும்பொழுது,பாரம்பரிய முறைப்படி அனைவருக்கும் தலை வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது. வாழை இலையில் உணவு பரிமாறல் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாகவும்,ஆகக் குறைந்தது கட்டாயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக தமிழர் வாழ்விடங்களில் பாவிக்கப்பட்தாகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது
முடிவுரை.
நவீன மருத்துவத்தால் நம் ஆயுளை நீடிக்க முடிந்திருக்கிறதே தவிர, ஆரோக்கியமாக வாழவைக்க முடியவில்லை. நம் முன்னோர்களுக்கு உணவுதான் மருந்து. இதனால் நோய்நொடியில்லாமல் அவர்களால் ஆரோக்கியத்துடன் வாழ முடிந்திருக்கிறது. ஆனால், இப்போது மருந்துதான் உணவு. மூன்று வேளையும் சாப்பிடுகிறோமோ இல்லையோ, தவறாமல் மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். அடுக்களைகளில் சுவைச் சரக்குகளை வைப்பதற்கென முன்னர் அஞ்சறைப் பெட்டிகளை வைத்திருந்தோம். இப்போது, ஐந்து அறைகள் அல்ல, ஏராளமான அறைகளைக்கொண்ட மாத்திரைப் பெட்டிகளைத்தான் வைத்திருக்கிறோம். அதில் விதம் விதமான மாத்திரைகளை நிரப்பி வைத்திருக்கிறோம்.
தமிழர்களுக்கெனத் தனித்துவமான உணவுப் பண்பாடு உள்ளது. அந்த உணவுப் பண்பாட்டைக் கைவிட்டு, பாரம்பரிய உணவுகளில் இருந்து துரித உணவுகளுக்;கு நாம் பெருமளவுக்கு மாறிவிட்டோம். இதுதான், மருந்து மாத்திரைகளுடன் நாங்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாரம்பரிய உணவுகளுக்கு நாம்மீளவும் திரும்ப வேண்டும் நமது அன்றாட உணவில் ஒருவேளை உணவாவது பாரம்பரிய உணவாக இருக்க வேண்டும்.