வாசனை மற்றும் மசாலாபொருட்களின் தேசமான,உலகின் மசாலாப்பொருட்களின் கிண்ணம் என்றும் அழைக்கப்படும் இந்தியா ( Land of Spices / Worlds Spice Bowl) அனைத்து மசாலாப்பொருட்களின் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனமான ISO பட்டியலிட்டிருக்கும் 109 மசாலாப்பொருட்களில் 75 இந்தியாவில் விளைகின்றது. இந்தியா இவற்றின் உற்பத்தி, உபயோகம் மற்றும் ஏற்றுமதியிலும் முன்னணியில் இருந்து உலக வாசனைப்பொருட்கள் வர்த்தகத்தில் மிக முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. அமெரிக்கா, சீனா, வியட்நாம், வளைகுடா நாடுகள், ஜெர்மனி, மலேஷியா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்திய மசாலாபொருட்களை மிக அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. இந்திய மசலாப்பொருட்களின் நறுமணம், தரம் மற்றும் சுவை உலகநாடுகளின் விருப்பத்துக்குகந்ததாக இருந்துவருகின்றது.
வறுத்தும்,அரைத்தும் பொடித்தும் தாளித்தும் பலவிதமானஇயற்கைச் சேர்மானங்கள் சேர்க்கப்பட்டு, உலகெங்கிலும் மிகப்பிரபலமாக உள்ள, அறிவியல் அடிப்படையிலான இந்தியச்சமையலில், குறிப்பாக தென்னிந்திய சமையலில் மசாலாபொருட்களின் இடமும் பயனும் மிககுறிப்பிடத்தகக்து. பல மருத்துவ குணங்களும் சத்துக்களும் நிறைந்த இடுபொருட்கள் இந்தியச்சமையலில் நிரந்தர இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் தாளிதம் செய்யும் மசாலாபொருட்களில் மிக முக்கியமானது கடுகு. கடுகு பல வகைப்படும். முழுவிதையாக, எண்ணெயாக, பொடியாக, அரைத்த விழுதாக என்று பல விதங்களில் சமையலில் கடுகு உபயோகப்படுத்தப்படுகின்றது
கடுகுச்செடிகளின் நீளமான பச்சைக்காய்களின் சிறிய உருண்டை விதைகளே கடுகு எனப்படுகின்றது. ஐரோப்பாவை தாயகமாகக்கொண்ட கடுகின் உலகளாவிய பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது. கடுகில் சுமார் 40க்கும் அதிகமான வகைகள் உள்ளன.
பிரேசிகேசியே குடும்பத்தை சேர்ந்த கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு சிறிய செங்கடுகு பெரிய செங்கடுகு என பலவகைகள் உண்டு. 90 லிருந்து 160 நாட்களுக்குள் முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும் கடுகுச்செடி நீளமான பசும் இலைகளுடன் மென்மையான இளம் பச்சை தண்டுகளுடனும் இருக்கும். 90 செ மி லிருந்து 4 அடி உயரம் வரை இவை வளரும். கூட்டல் குறியைப்போன்ற வடிவில் அமைந்திருக்கும் நான்கு மஞ்சள் இதழ்களுடன் கூடிய அழகிய சிறுமலர்கள் இருக்கும்.
சிலிகுவா (siliqua) என்றழைக்கப்படும் இச்செடியின் காய்களுக்குள்ளே சிறிய கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். கடுகு விதைகள் 1-2 மி மீ அளவில் இருக்கும்
பலநாடுகளில் கடுகு பயிரிடப்படுகின்றது. களைச்செடியாகவும் கடுகுச்செடிகள் ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் தரிசு நிலங்களிலும் சாலையோரங்களிலும் செழித்து வளரும். வெள்ளைக்கடுகு white mustard (Sinapis alba) வட அமெக்காவின் காடுகளில் இயற்கையாக விளைந்து அங்கிருந்து உலகின் பிற பாகங்களுக்கு சாகுபடி மூலம் பரவியது.
தங்க மஞ்சள் கடுகு oriental mustard (Brassica juncea), இமாலய மலைபிரதேசங்களில் வளர்ந்து பின்னர் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் டென்மார்க்கிலும் சாகுபடி செய்யப்பட்டு பரவலாகியது
கருப்பு கடுகு black mustard (Brassica nigra) அர்ஜெண்டினாவை சேர்ந்தது அங்கிருந்து சிலி, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் சாகுபடி செய்யபட்டு பரவலகியது
நசுக்கப்பட்ட கடுகு சேர்த்த வைனை குறிப்பிடும் லத்தீன் சொற்களான ‘mustum ardens’(burning wines) என்பதிலிருந்தே mustard எனப்படும் ஆங்கிலப்பிரயோகம் வந்தது.
காரசாரமான கடுகு உணவுகளை சாப்பிடுகையில் கண்களில் நீர் வருவதால், பண்டைய கிரேக்கர்கள் கடுகை ‘ கண்ணுக்கு தொந்தரவு தருகின்ற ஒன்று’ ( Si ‘na-pi’ ) என்றழைத்தனர்.
சிந்துச்சமவெளியின் சன்ஹூதரோ பகுதி அகழ்வாய்வில் கடுகின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் கிடத்துள்ளன. உலகெங்கும் கடுகை பிரபலமாக்கிய பெருமை ரோமானியர்களையே சேரும். கடுகை சாகுபடி செய்து ஏற்றுமதியும் செய்துகொண்டிருந்த ரோமனியர்களிடமிருந்து 10 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மடாலயத்தின் துறவிகள், சாகுபடி நுட்பங்களை கற்றுக்கொண்டு அங்கும் சாகுபடியை துவங்கி இருக்கின்றனர்
பாரீஸ் அரசகுடும்பத்தினரின் உணவுகளில் கடுகின் பயன்பாட்டை குறித்த 1292 ன் எழுத்துப்பதிவுகள் கிடைத்துள்ளன. பிரான்ஸ் 13 நூற்றாண்டின் மிக முக்கிய கடுகு சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான இடமாக இருந்திருக்கிறது. அங்கு 1336ல் நடைபெற்ற ஒரு விருந்தில் ஒரே நாளில் 320 லிட்டர் கடுகு க்ரீமை உண்டதற்கான வரலாற்றுக்குறிப்பும் உள்ளது
1904 ல் அமெரிக்காவில் நடந்த ஒரு பன்னாட்டு கண்காட்சியில் தான் முதல்முதலாக பிரபல உணவு வகையான ஹாட் டாக்கில் (hot dog) கடுகு சாஸின் சேர்மானம் அறிமுகம் செய்யபட்டு பின்னர் உலகெங்கிலும் பிரபலமாகி இருக்கின்றது.( St. Louis world fair Missouri 1904)
மத வேறுபாடிகளின்றி பல மதநூல்களில் கடுகு குறிப்பிடப்பட்டிருக்கின்றது
புனித வேதகாமத்தில், இயேசு தனது போதனைகளின் போது கூறியதாக மூன்று நற்செய்திகளில் கடுகு குறிப்பிடப்பட்டுள்ளது.
//இஸ்ரேலில் விதைக்கப்பட்ட விதைகளில் மிகவும் சிறியது கடுகே//
// பரலோக அரசாங்கம் என்பது கடுகு விதையைப்போன்றது//
// உங்களுக்கு கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட உங்களால் கூடாத காரியம் ஏதுமில்லை/
”தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்கிறது இஸ்லாம்
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என்கிறது குர் ஆன்.
சங்கத்தமிழர்கள் கடுகினை ஐயவி என்றனர். மணிமேகலை பேய்கள் பயப்படும் பொருட்களில் ஒன்றாக கடுகை குறிப்பிடுகின்றது. போரில் காயமுற்ற வீரனை இரவில் குருதி குடிக்கும் பேய்களிடமிருந்து காப்பாற்ற கடுகுப்புகையிட்டதை சொல்கின்றது புறநானூறு
பிறந்த குழந்தையை பேயணுகாதிருக்க அதன் தலையில் கடுகைஅரைத்து பூசும் வழக்கமிருந்ததை நற்றிணை குறிப்பிடுகிறது.கடுகும் நெய்யும் சேர்த்த குழைத்த சோறு, கடுகன்னம் என்று பண்டைய தமிழர்களால் உண்ணப்பட்டிருக்கிறது.
பழந்தமிழர் இறப்பு சார் நிகழ்வுகளில் இறுதி ஊர்வலத்தின் போது கடுகு சிதறுதல் வழக்கத்தில் இருந்திருக்கிறது. பண்டைய இந்தியாவில் கடுகை வீட்டிற்கு வெளியே இறைத்துவிடுவது துஷ்டசக்திகள் வீட்டினுள் நுழையாமலிருக்க உதவும் என்னும் நம்பிக்கை நிலவியது.
கடைக்கண்ணை பாவையர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்.‘ – என்பது காதலின் வலிமையைப் பற்றி பாரதிதாசன் பாடியது
’’கடுகுப்பூக்களை பார்த்தல்’’ என்பது ஒர் அதிர்ச்சிக்கு பின்னர் திகைத்து நிற்பதை குறிக்கிறது நேபாளத்தில்
பிரான்ஸில் ’’கடுகு மூக்கில் ஏறிவிட்டது’’ என்பது கோபப்படுதலுக்கு இணை வைத்துச் சொல்லப்படும் ஒரு வாக்கியம்
தமிழிலும் உண்டு கோபமான பேச்சை சொல்லுகையில் ”பேச்சில் கடுகு பொரிந்தது” என்று சொல்லும் வழக்கம்.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
போன்ற முதுமொழிகளும் தமிழகத்தில் பிரபலமானவையே!
கடுகை நறுமணமூட்டியாக பயன்படுத்துவதை குறித்து பெளத்த நூல்களும் சொல்கின்றன
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் ரோமின் மிகச்சிறந்த உணவு நிபுணரும் ஆடம்பர உயர்தர உணவு வகைகளை உருவாக்கும் கலையை அறிருந்தவருமான ஆபிக்யூஸ் (Marcus Gavius Apicius) என்பவரே இன்று நாம் உபயோகப்படுத்தும் கருங்கடுகின் பல உணவுச்சேர்மானங்களை அவரது சொந்தத்தயாரிப்பாக உருவாக்கினார். அவரது தயரிப்பான கடுகு, உப்பு, வினிகர், ஆல்மண்டுகள், பைன் கொட்டைகள் ஆகியவை சேர்ந்த ஒரு தயாரிப்பு இன்றும் ரோமில் மிகப்பிரபல உணவு வகையாக இருந்து வருகின்றது. ரோமானியர்களின் பிரபல சமையற்கலை நூல்கள் abicius என்னும் பெயரிலேயே உள்ளன.
19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குடும்பத்தொழிலாக கடுகு உணவுகளை தயாரித்த ஜெரோமியா கல்மேன் (Jeremiah Colman) என்பவர் பிரிட்டிஷ் பேரரசின் மீதே கடுகுப்பொடியைத் தூவி நிரப்பினார் என்கிறது வரலாறு அவரது நிறுவன தயாரிப்புக்களான கடுகுப்பொடி வகைகள் அக்காலகட்டத்தில் தண்ணீரிலும், பீரிலும் பாலிலும் கலக்கப்பட்டு, பரவலாக விரும்பி அருந்தப்பட்டன. J.& J. Colman என்னும் அந்நிறுவனம் அப்போதே 200 பணியாட்களை அமர்த்தியிருந்தது. இன்று வரையிலுமே இந்நிறுவனம் கடுகுத்தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றது
வெண்கடுகைவிட (Brassica alba) கருங்கடுகில் (Brassica nigra) தான் காரம் மிகுந்து காணப்படும். மிதமான நறுமணம் உள்ள மஞ்சள்/வெள்ளைக்கடுகு (Sinapis alba) வட அமெரிக்க உணவு வகைகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றது. அடர் காப்பிக்கொட்டை நிறத்திலிருக்கும் கடுகின் சுவை (brown mustard-Brassica juncea)aஉலகெங்கிலும் விரும்பப்படுகின்றது. தங்க மஞ்சள் நிற கடுகுதான் (Oriental mustard-Brassica juncea) கடுகு வகைகளில் முக முக்கியமானது. ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இந்த கடுகின் விழுது பெருமளவில் உபயோகத்தில் இருக்கிறது. இதன் பொடியும் சூப்களிலும் சாஸ்களிலும் அதிகமாக சேர்க்கப்படுகிறது.
கடுக்குக்கென்று தனியே சுவை இல்லை. கடுகின் மேல்தோல் அகற்றப்படும் போது மைரோஸினேஸ் எனப்படும் நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. . இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்கு காரணம். கடுகு நீருடன் சேர்கையில் அலைல் ஐஸோ தையோனேட் என்னும் காரமான நெடியுடைய வேதிப்பொருள் வெளிப்பட்டு எரியும் நெடி வருகின்றது..
கடுகில் செலினியம், மெக்னீசியம் , உயர்தர கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது. போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம் போன்ற, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் இதில் உள்ளன
கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.
கடுகுச்செடியின் எல்லாப்பாகங்களுமே பயனுள்ளவை. இந்திய கடுகுக்செடியின் (Brassica juncea) கீரையும் உணவாக பயன்படுகின்றது. முளைவிட்ட கடுகு ஆரோக்கிய உணவில் மிக முக்கியமானது. இதில் அதிக கலோரி ஆற்றலும் நார்ச்சத்தும் ஆண்டிஆக்சிடண்ட்களும், வைட்டமின் K,A,C, கால்சியம், இரும்புச்சத்து பொட்டாஷியம், மேங்கனீஸ் உள்ளிட்ட பல தாவர வேதிச்சேர்மங்களும் நிறைந்துள்ளன கடுகில் மூன்றில் ஒரு பங்கு எண்ணையும் நான்கில் ஒரு பங்கு புரதமும் உள்ளது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.
நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன
மிதமான காரமும், நெடியும், கசப்புமான கடுகின் இயல்பு பலவகையான உணவுகளுக்கு பொருத்தமானதாக இருப்பதால் உலகநாடுகளின் விருப்பத்துகுரிய சுவையாகிவிட்டிருக்கிறது
இந்திய சமையலில் கடுகை வறுத்தோ அலல்து சூடான எண்ணெயில் பொரித்தோ, மேல் தோலை அகற்றுகிறார்கள். மேலை நாடுகளில் கடுகை பொடித்தோ அல்லது அரைத்த விழுதாகவோ அல்லது முன்கூட்டியே தயார் செய்யப்பட்ட தையோ உணவில் பயன்படுத்துகிறார்கள்.
கடுகின் மருத்துவப்பயன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தெ அறியப்பட்டிருக்கின்றது. உணவுப்பொருளாக பயன்படுத்தப்படுவதற்கு முன்பே கடுகு கிரேக்கர்களால் பல்வலிக்கும் ரத்தஓட்டத்தை சீராக்கவும் பசியுணர்வை தூண்டவும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது. பூச்சி, வண்டு கடி , தேள் விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.
வேனல் கட்டிகள் குணமாக கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. முடக்கு வாதம், ரத்தச்சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்த்மாவிற்கு தொடர்ந்து கடுகை உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல சிகிச்சையாக இருக்கும்.
இருமலை கட்டுப்படுத்தும், ஜீரணத்தை சீராக்கும், ஒற்றை தலைவலியை போக்கும, விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கடுகை மருந்தாகவோ உணவகவோ எப்படி பயன்படுதினாலும் குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்த வேண்டும்.அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும்..
பிரான்ஸின் கடுகு தலைநகரென அறியப்படும் பர்கண்டியிலுள்ள டீஜான் நகரில் நிலத்திலிருக்கும் பொட்டாசியம் சத்தினால் மிகச்சிறப்பான கடுகு உற்பத்தி செய்யப்படுகின்றது. தற்போது பிரான்ஸ் 80 சதவீத கடுகை கனடாவிலிருந்து இறக்குமதி செய்தாலும் டீஜன் கடுகு உலகப்பிரசித்தம்
இங்கிலாந்தின் பிரபல கடுகுத்தயரிப்பான கோல்மான் (Colman’s) ஜெர்மனியின் பாரம்பரிய கடுகு தயாரிப்பான க்யூன்,(Kühne), பிரான்ஸின் அமோரா மற்றும் மெய்லீ Amora (Unilever), Maille , நெதர்லந்தின் மர்னெ (Marne )ஆகியவை உலகப்புகழ் பெற்ற கடுகுஉணவுகள்.
இந்தியாவில் வட இந்தியப்பகுதிகளில் கடுகு அதிகம் விளைவிக்கபடுகின்றது.. மேற்கு வங்கத்தை கடுகு உணவிற்கான மாநிலமென்றெ சொல்லிவிடலாம். கடுகெண்ணை சமையல், கடுகுப்பொடி உபயோகம் என்று சைவம், சைவம் இரண்டிற்குமே கடுகை பிரதானமாக உபயோகபடுத்துவார்கள் இம்மாநில மக்கள். ஜப்பானில் சுஷி மீன் உணவுடன் தரப்படும் காரசாரமான வசாபியைப்போலவே வங்காளத்தின் கடுகு சேர்த்து செய்யப்படும் கசுண்டி எனப்படும் கண்ணில் நீர் வரவழைக்கும் சுவையான உணவு வகை ஒன்று மிகப்பிரபலம். மீனுணவில் கடுகைச்சேர்ப்பது காஷ்மீரி மக்களின் வழக்கம்.
உலகெங்கிலும் சுமார் 700 மில்லியன் பவுண்டு கடுகு ஒரு வருடத்தில் உட்கொள்ளப்படுகின்றது உலகிலேயே கடுகை உணவில் அதிக அளவில் பயன்படுத்துவது அமெரிக்கர்கள் தான். தேசிய கடுகு தினம் அமெரிக்காவில் ஆகஸ்டின் முதல் சனிக்கிழமையில் கடுகு தொடர்பான கேளிக்கைகளும் விளையாடுக்களும் , உணவுப்பொருட்களுமாக விமர்சையாக கொண்டாடப்படும்
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள, திரட்சைதோட்டங்களுக்கும் வை தொழிற்சாலைகளுக்கும் பிரசித்தி பெற்ற நாபா கவுன்ட்டி (Napa County) பகுதியில் வருடம்தோறும் கடுகுத்திருவிழா மிக விமர்சையாக நடக்கும்.
கடுகு வாயு என அழைக்கப்படும் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட, லட்சக்கணக்கணவர்களின் மரணத்திற்கு காரணமாயிருந்த இரசாயன திரவமான Mustard gas என்பதற்கு கடுகுடன் எந்த தொடர்பும் இல்லை காரமான நெடியுள்ளதாலும், மஞ்சள் நிற புகையினாலும் இப்பெயர் வந்திருக்கலாம்
பிராசிகேஸியே குடும்பத்தைச் சேர்ந்த, முட்டைகோஸ் மற்றும் கடுகு வகைகளின் மரபணு மூலத்தையும், உலகெங்கிலும் தற்போதிருக்கும் கடுகுகளின் மரபணுத்தொடர்புகளையும் கணக்கிடும் சுவாரஸ்யமான முறை ’’U முக்கோணம்’’(U triangle) எனபடுகின்றது. இது 1935ல் வூ ஜங் சூன் (Woo Jang-choon) என்னும் கொரிய தாவரவியலாளரால் உருவாக்கப்பட்டது
அரிதான அருங்காட்சியங்களின் ஒன்றான தேசிய கடுகு அருங்காட்சியகம் அமெரிக்காவின் விஸ்கான்ஸினில் உள்ளது 18986. பேரி லீவென்சனால் (Barry Levenson,) துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தற்போது 60 நாடுகளிருந்து தருவிக்கபட்ட 5,300 கடுகு வகைகள் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றது,
கடுகின் வரலாறு மற்றும் அரிய தகவல்களையும் இங்கு அறிந்துகொள்லலாம்.காலை 10 லிருந்து மாலை 5 மணி வரை திறந்திருக்கும் இங்கு அனுமதி இலவசம். இங்கு இருக்கும் உணவகத்தில் பலதரப்பட்ட கடுகு சேர்க்கப்பட்ட உணவு வகைகள் இலவசமாக சுவைக்கவும் கிடைக்கின்றது
உலகின் மொத்த கடுகு உற்பத்தியில் கனடா முதல் இடத்திலும் , தொடர்ந்து நேபாளமும், மியான்மரும், ரஷ்யா மற்றும் சீனாவும் இருக்கின்றன. இந்தியா இந்த வரிசையில் 10 ஆவது இடத்தில் தான் இருக்கின்றது.