உங்கள் த வெ கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆசிகளும். ஆனால் கட்சிக் கொடியில்  வெற்றிக்கு குறியீடு எனக்கருதி நீங்கள் பொறித்திருப்பது வாகை மலரல்ல ,அது தூங்கு வாகை, சீமை வாகை, பண்ணி வாகை,  செம்பட்டு வாகை,அயல் வாகை என்றெல்லாம் அழைக்கப்படும்  ஒரு அயல் மரத்தின் மலர்.

நம் முன்னோர்கள் வெற்றியின் போது சூடிக்கொண்டதும் அதன் பொருட்டு உருவான வாகை சூடல் என்னும் சொல்லாட்சியும் இம்மலரலினாலல்ல. அது அல்பிஸியா லெபெக் Albizia lebbeck என்னும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட வாகை மரத்தின் அழகிய இளம் பச்சை நிற மலர்கள்.

நீங்கள் வைத்திருப்பது சமன்னா சமன் –Samanea saman என்னும் தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மரத்தின் இளஞ்சிவப்பு  மலர். 

உங்கள் கட்சியின் கொடியை டிகோடிங் செய்து கொண்டிருக்கும் உங்கள் ரசிகர்களில் யாருக்கும் தாவரவியல் தெரிந்திருக்க நியாயமில்லைதான் எனினும் கட்சிக்கொடியின் குறியீடுகளை தெரிவு செய்கையில் நீங்கள் கூகுளை சார்ந்திருக்காமல் தாவரவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம்.

மேலும்  விழாக்களில் நீங்கள் யார் பக்கத்தில் அமர்கிறீர்கள் என்பதும் சமூக வெளியில் உற்று நோக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. சாதீய வன்முறையினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் அருகிலும் திருநங்கை ஒருவரின் அருகிலும் அமர்ந்தது மூலம்  விளிம்பு நிலை  மக்களுக்கான தலைவர் நீங்கள் என்பதை காட்டியிருக்கிறீர்கள். அறிவியல் வெளியில் தாவரவியலும்  அழிவின் விளிம்பில் இருப்பதால்தான்  த   வெ க வின்  கட்சிச்சின்னம் குறித்த பிழையை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.

கொடியின் 28 நட்சத்திரங்கள் குறிப்பிடும் 28 கொள்கைகளை பிற்பாடு அறிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். எனினும் ’’வாகைன்னா வெற்றி, விஜய்னாலும் வெற்றி’’ என ஆர்ப்பரிக்கும் உங்கள் ரசிகர்களுக்கு அது தென் அமெரிக்காவினரின் வெற்றியாகிவிடும் என்பதைச் சொல்லுங்கள். ஏனெனில்  தூங்கு வாகை இந்திய மரமல்ல அது தென் மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அல்பிஸியா லெபெக் தான் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட நமது முன்னோர்கள் சூடிக்கொண்ட வாகைமலரை கொண்ட  மரம். 

எனக்கு அரசியல் நிலைப்பாடோ, அரசியல் குறித்த கூரிய பார்வையோ இல்லை, சுமாரான அல்லது மங்கலான பார்வை தான் இருக்கிறது. (நான் சொல்வது எனக்கிருக்கும் Keratoconus எனப்படும் அரிய  கண் கூம்புக் குறைபாட்டை அல்ல  என்பதை அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.)

நான் சொல்வது பொதுவானஅரசியல் அவதானிப்புப் பார்வையை. ஒரு முக்கிய கட்சிப் பிரமுகரின் சிலையை வீட்டு வாசலில்  எழுப்பி அதை மேற்படி தலைவரே வந்து திறந்து வைக்க அழைப்பு விடுத்து, அவருக்காக இரவுவரை காத்திருந்து அவர் பல வேலைகளில் இதை மறந்து விட்டதால் அவமானத்தால் சிலையை உடைத்து விட்டு அங்கேயே விஷமருந்தி, நிறைமாதக்  கர்ப்பிணியான  மனைவியை  விட்டுவிட்டு உயிரிழந்த  ஒருவரின் கொடிவழியில் வந்தவள் என்னும்  அளவுக்கே அரசியல் பார்வை இருக்கிறது.

ஏன் விஜய் சந்திரசேகர் என்றழைத்தேனென்றால்,  என் சொந்தத் தம்பியின் பெயரும் விஜய்தான் . அவனும் அடிக்கடி நான் பணிபுரியும் கல்லூரிக்கு வருவதால் அவன்தான் புதிய  கட்சி துவங்கி இருக்கிறான் என்று நினைத்து அவன் பின்னாலும் என்னை அறிந்த இளைஞர்கள் திரண்டால்  அவர்களைச் சமாளிக்கும் நல்மேய்ப்பன் அல்ல அவன் என்றுதான் உங்களின் மனஸ்தாபத்தையும் பொருட்படுத்தாமல் சந்திரசேகரையும் பின்னொட்டாகச் சேர்த்தேன். கட்சிக்கொடி வெளியீட்டு விழாவில் உங்கள் பெற்றோரும் முன்வரிசையில் அமர்ந்திருந்ததை உளவுத்துறையினரோடு சேர்ந்து நானும் உற்றுக்கவனித்தேன். மகிழ்ந்தேன்.

எனவே இந்தக் கட்சி கொடிச் சின்னத்தை மாற்றுவது தொடர்பாக உங்கள் முன்பாக இரு வாயில்களைத் திறந்து வைக்கிறேன். 

1. தவறை   ஒத்துக்கொண்டு சின்னத்தைச் சரியான வாகை  மலரைக் கொண்டு மாற்றுதல்.

 உங்கள் ரசிகத் தொண்டர்களுக்கு இத்தவறை மனப்பூர்வமாக    ஒத்துக்கொள்ளும் தலைவனாக உங்கள் தூய  மனதை திறந்துகாட்டும் ஒரு வாய்ப்பாக  இது  அமையலாம்.

2. ஒரு கட்சி தொடங்கப்பட்டால்  அதைகுறித்து எதையும் ஆராயாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு அதில் இணையும் மரபு நமக்கிருப்பதால்   நுண்மையாகக் கட்சிக்கொடியின் சின்னம் தவறாக இருப்பதையெல்லாம் கவனித்திருக்க மாட்டார்கள், எனவே காதும் காதும் வைத்தது போல்  மலரையும் மலரையும் மாற்றி விடுங்கள்.

2026 என்பது  வெகுதூரத்தில் இல்லை , வியாழனுக்கும் வெள்ளிக்கும் இருக்கும்  தூரம்தான். எனவே நாளை த வெ க பெரும்பான்மையாக வாகை சூடி அரியணையில் அமரவேண்டி வரும் போது  உங்களின் எதிர்கட்சியினரும் பிறரும் அதிலிருப்பது அன்னிய தேச மலர் என்பதைக் கண்டுபிடித்துப் பெரும் சிக்கலை உருவாக்கலாம்.

 அப்போது அந்நிய நாட்டு சதி, அன்னிய நாட்டு நிதி என்றெல்லாம் சிக்கல்கள் எழக்கூடும், எனவே  ’’இளைதாக முள் மரம் கொல்க’’ அதாவது… இல்லை வேண்டாம் சுருக்கமாக சொல்கிறேனே தொடக்கத்திலேயே தவறை சரி செய்து விடுங்கள்.

உங்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியவகையில் நானும் நேரடி  அரசியலில் இறங்கி இருக்கிறேன் என்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். பகீரென்கிறது. ஒரு அரசுப்பணியாளராக நான் அரசியலில் ஈடுபடக்கூடாது  என்றுதான் நினைக்கிறேன்

இதைக் குறித்து கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் கேட்டுக்கொள்கிறேன்.அப்படி இது தவறான முன்னெடுப்பென்றால் என் பின்னால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அணி திரளும் என்று நம்புகிறேன்,

நாங்கள்  அணி திரண்டு    போராடி  எங்களுக்கு வரவேண்டிய  பணிமேம்பாட்டு நிதியைக்கூட இதுவரை பெற்றதில்லை என்பதால் அரசு இந்த பிரச்னையையும்   கண்டுகொள்ளாது என்னும் நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

தம்பி, ’’ அரியணை அமர்தல் போல் தீயூழ் பிறிதில்லை’’ என்கிறது வெண்முரசு. கட்சிக்கொடியை அறிவிப்பதன் வழியாக நீங்கள்  அதற்குத் தயாராகவே இருக்கிறீர்கள். அதற்கான மனக்கட்டியை தேவன் உங்களுக்கு அளிப்பாராக!.

உங்கள் கட்சிப்பாடலை கேட்டேன், மிகவும் சுமாராக இருக்கிறது. எழுச்சியூட்டும் படி இருந்தால் நல்லது என்பது என் அபிப்பிராயம்.

  வாகை என்றாலும், வெற்றி என்றாலும்,  விஜய் என்றாலும் ஒன்றுதான் எனவே  ’’ஜெய் விஜயீபவ” என்பதை ஏன் நீங்கள் உங்கள்  கட்சி முழக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது?

சங்கீதாவுக்கும் குழந்தைகளுக்கும் என் அன்பை தெரிவியுங்கள்

 ’’ஜெய் விஜயீ பவ’’

இப்படிக்கு அன்பு அக்கா

லோகமாதேவி