எருக்கன் செடிகளை, கிராமம் நகரம் என எங்கும் காலி நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் சாக்கடையோரங்களிலும் வெகு சாதாரணமாக காணலாம். இவற்றின் கொழுக்கட்டை போன்ற மொட்டுக்களை விரல்களால் அழுத்தினால் சிறு ஓசையுடன் அவை வெடிக்கும். கிராமங்களில் சிறுவர்களிடையே இது ஒரு விளையாட்டாகவே நடக்கும் .
சொந்த ஊரான வேட்டைக்காரன் புதூர் கிராமத்தில் இருந்த சில வருடங்களில் கைவைத்தியமாகப் பல மூலிகைச் செடிகள் புழக்கத்தில் இருந்ததைக் கவனித்திருக்கிறேன். அவற்றில் எருக்குதான் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
எடுக்கமுடியாமல் ஆழமாக காலில் முள் குத்தினால் எருக்கம்பாலை அந்த இடத்தில் வைத்து, அதை எருக்கின் இலைகளின் மீதிருக்கும் மெழுகுப்பூச்சைச் சுரண்டி மூடிவைக்கும் வழக்கம் கிராமமெங்கிலுமே இருந்தது. அந்த பாலின் வெம்மையில் மேல் தோல் வெந்து, லேசாக அழுத்தினாலே முள் வெளியே வந்துவிடும் சில மணி நேரத்திலேயே. பாம்பு, தேள். குளவி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கும் கடிவாயில் எருக்கிலைவிழுதை வைத்துக் கட்டுவார்கள்.
மிக அதிகமாகப் பார்த்ததென்றால் குதிகால் வலிக்கு, சூடான செங்கல்லின் மீது பழுத்த எருக்கிலைகளை வைத்து அவற்றின் மீது காலை வைத்து எடுப்பதை. இவ்வழக்கம் அங்கு பரவலாக நல்ல நிவாரணம் அளிக்குமொன்றாக இருந்தது. எருக்கஞ்செடியின் குச்சிகள் கருக்கலைப்புக்கும் உபயோகப்பட்டது.
Crown flower plant என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் Calotropis procera என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இந்த எருக்கு பாரம்பரிய மருத்துவ முறைகளில் மிக முக்கியமான தாவரம். வடக்கு ஆப்பிரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இச்செடி உலகெங்கிலும் தற்போது பரவியுள்ளது.
பொதுவாக எருக்கில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனினும் மிக அதிகமாக காணப்படுவது வெள்ளெருக்கான Calotropis procera, (Calotrope) மற்றும் இளம் ஊதா நிறமலர்களுடனான நீல எருக்கு எனப்படும் Calotropis gigantea (Giant calotrope) ஆகிய இரண்டு வகைகள்தான். இவை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகள் மிக நுண்ணியதாக, தாவரவியலாளர்களாலேயே எளிதில் கண்டுபிடித்து விட முடியாதாக இருக்கும். இதழ்களின் ஓரங்களில் மட்டும் அடர் ஊதா நிறம் தொட்டு வைத்தது போலிருக்கும் ராம எருக்கு எனப்படும் ஒரு வகையும் இந்த இரண்டில் ஒன்றுதான் என்று கருதப்படுகின்றது. இவை இரண்டிலிருந்தும் சிறிது வேறுபடும் Calotropisaciaஎன்னும் ஒரு வகையும் சமீபகாலங்களில் பரவலாக காணக்கிடைப்பதாக தாவரவியலாளர்கள் க்ரதுகிறார்கள்.
சமஸ்கிருதத்தில் இது அர்க்கா (Arka) – சூரியனின் கதிர் என்று குறிப்பிடப்படுகின்றது. தன்வந்திரி நிகண்டுவில் சுக்ல அர்க். ராஜ அர்க் மற்றும் ஸ்வேத அர்க்.(Sukla arkah, Raja arkah, and Svetaarkah) என மூன்று எருக்கு வகைகள் குறிப்பிடபட்டிருக்கின்றன.
இரண்டிலிருந்து ஆறு மீட்டர் உயரம் வரை வளரும் இத்தாவரத்தின் வேர்கள் மூன்று மீட்டர் ஆழம் வரை மண்ணில் இறங்கி இருக்கும். வெளிறிய நிறத்தில் இருக்கும் தண்டு உறுதியாகவும், அதன் மரப்பட்டை சொரசொரப்பாக வெடிப்புகளுடன் காணப்படும். அகன்ற சிறு காம்புடன் கூடிய இலைகள் சாம்பல் பச்சை நிறத்தில் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். மெழுகால் செய்தது போல் இருக்கும் எருக்கு மலர்களின் நடுவில் இருக்கும் அழகிய கிரீடம் போன்ற அமைப்பினால்தான் ஆங்கிலத்தில் இது Crown flower என்று அழைக்கப்படுகிறது.
மலர்களின் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகள் ஐங்கோண வடிவில் ஒரு சிறு மேடைபோல் இணைந்து அதனடியிலிருந்து ஐந்து அழகான வளைவுகளுடன் பீடம் போன்ற அமைப்பினால் தாங்கப்பட்டிருக்கும். இதன் தாவரவியல் பெயரில் Calo -tropis என்பது கிரேக்க மொழியில் ’’அழகிய- படகு போன்ற’’ என்னும் பொருளில் இதன் மலர்களின் நடுவில் இருக்கும் அழகிய பீடம் போன்ற அமைப்பை குறிக்கும். (kalos – beautiful and tropos – boat ) procera என்றால் உயரமான, gigantea என்றால் மிகப் பெரிதான என்று பொருள்
பிற மலர்களைப் போல் மகரந்தம் இதில் துகள்களாக இருக்காது. ஐங்கோண மேடை இணைந்திருக்கும் ஐந்து புள்ளிகளிலும் மகரந்தம் நிறைந்த தராசைப் போன்ற இரு பைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.(pollinia). வெடித்துச் சிதறும் இயல்புடைய பச்சை நிற கடினமான ஓட்டுடன் கூடிய கனிகள் சிறிய பலூனை போல இருக்கும். ஏராளமான எடை குறைவான விதைகள் பட்டுபோன்ற இழைகளுடன் உள்ளிருக்கும். இவை வருடம் முழுவதும் பூத்துக்காய்க்கும்.
எருக்கு பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்திய, அரபு, யுனானி மற்றும் சூடான் உள்ளிட்ட பல பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற மருத்துவ முறைகளில் உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
வேதங்களிலும், புராணக்களிலும் பழம்பாடல்களிலும் எருக்கு அதிகம் இடம்பெற்றிருக்கிறது. அதர்வண வேதத்தில் எருக்கஞ் செடியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்கு எருக்கம் பால் வைத்து படைக்கப்பட்டதை நாரத புராணம் குறிப்பிடுகிறது. மன்னர் எருக்கம்பூ மாலை அணிந்து சென்றால் வெற்றி பெறுவார் என்கிறது அக்னி புராணம். சிவமஞ்சரி எனும் நூலில் சிவனுக்கு காலையில் பூஜிக்க சிறந்த மலர் “எருக்கம் மலர்” என்று கூறப்படுகிறது.
அவ்வையார் நல்வழியில்
“வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.” என்கிறார்
சங்க காலத்திலும் இச்செடிக்கு “எருக்கு” என்பதே பெயர்.பல சங்க இலக்கிய புலவர்கள் தங்கள் பாடல்களில் எருக்கஞ் செடியை குறிப்பிட்டுள்ளனர்.
“குறுமுகழ் எருக்காவ் கண்ணி” என நற்றிணையிலும்,
“குவியினார் எருக்கு” எனக் கபிலரும்,
“புல்லெருக்கங்கண்ணி நறிது” எனத் தொல்காப்பியமும் குறிப்பிடுகிறது.
“வாட்போக்கி கலம்பகம்” எனும் நூலிலும் எருக்கம் செடியை பற்றியும் இதன் பால் கொடியது. ஆயினும் மருந்துக்கு பயன்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”
நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று கூறாமல் ஏற்று கொள்வார் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கபிலர் குறிப்பிடுகிறார்.
ஓர் ஆடவன் ஒரு பெண்ணைக் களவுடனோ அல்லது களவின்றியோ அடைய மேற்கொள்ளும் முறையான மடலேறுதலில்,. மடலேறும் தலைவன் எருக்க மாலை, ஆவிரம் பூ மாலை முதலியவற்றை அணிந்து வருவது வழக்கம் என்று
’’மாவென மடலும் ஊர்ப பூவெனக்
( குறுந் – 17 )
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப
பிறிதும் ஆகுப காமங்காழ் கொளினே’’
என்ற சங்கப்பாடல் காட்டுகிறது.
மகாபாரதத்தில் குருக்ஷேத்திரப் போரின் முடிவில் அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கிறார். அது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதும் ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கின் இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர். இன்றைக்கும் ரதசப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை உடலில் வைத்து சூரியனை நோக்கி வழிபடுகிறார்கள்.
மகாபாரதத்தில் உபமன்யு எருக்கம் இலைகளை அறியாமல் உண்டதால்தான் கண்பார்வையை இழந்தார்
திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் தல மரமாக இருப்பது வெள்ளெருக்கு. இத்தலங்களில் விழாக்காலங்களில் வெள்ளெருக்கம் பூவால் சிறப்பு பூஜைகளும் நடக்கும்.
இறை வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் மலர்கள் குறித்த நூலான , ‘புஷ்ப விதி’ யில் தோஷங்களற்ற, ‘நன் மா மலர்கள்’ என குறிப்பிட பட்டிருக்கும் அஷ்ட புஷ்பங்களான ’’புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவட்டை, அரளி, நீலோத்பலம், தாமரை’’ ஆகியவற்றில் எருக்கு உயிரோட்டம் நிறைந்த மலராக கருதப்படுகிறது.
‘’வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை’’.யனான சிவன் எருக்க மலர் பிரியன். சிவன் கோவில்களில் எருக்கம்பூ மாலை சாற்றி வழிபடும் வழக்கம் நம் மரபில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கொங்கு வட்டாரங்களில் அநேகமாக எல்லா விநாயகர் கோவில்களிலும் வெள்ளை எருக்கு மலர் மாலை சாத்தும் வழக்கம் இருக்கிறது, விநாயகர் சதுர்த்தி அன்று இந்த மாலைகளுக்கு மிகவும் தேவை இருக்கும்
ஆறு வருடங்களான எருக்கின் வடக்கு பக்கமாக செல்லும் வேரிலிருந்து விநாயகர் உருவத்தை செய்து விற்பார்கள். வெள்ளெருக்கன் வேர்க்கட்டை வீட்டில் இருந்தால் பூச்சிகள், விஷ வண்டுகள் வராது என்கிற நம்பிக்கையும் தமிழகத்தில் உள்ளது.
கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய எருக்கு, பனிரெண்டு ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட எந்த பாதிப்பும் இன்றி வளர்ந்து, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காய்க்கும் தன்மை கொண்டது
வெள்ளெருக்கம் பூவானது,சித்த மருத்துவத்தின் முக்கிய மருந்து தயாரிப்பான ‘சங்கு பஸ்பம்’ செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றும் வழக்கம் இந்தியாவில் பல கிராம பகுதிகளில் இருக்கிறது.
’’ஏழைக்கு வைத்தியம் எருக்கு’’ என்றொரு முதுமொழியும் உண்டு, சிறிய உடல் நோய்க்கெல்லாம் கூட உடனே மருத்துவரை நாடும் நகர்புற மக்களை போலல்லாமல், கிராமங்களில் கைவைத்தியமாக எருக்கின் பாகங்களை பலவிதங்களில் உபயோகித்துக் கொண்டிருக்கின்றனர்.
மராத்திய இனத்தவர்களின் முக்கிய விழாவான பஞ்ச பல்லவா (Pancha Pallava) எனப்படும் ஐந்து இலைகள் கொண்டு பூஜை செய்யும் முக்கிய விழாவில் எருக்கின் இலைகளும் உண்டு. எருக்கை அவர்கள் ’ரூய்’ (Rui) என்று குறிப்பிடுகிறார்கள்.
சமஸ்கிருதத்திலும் இது அர்க்கா (Arka) – சூரியனின் கதிர் என்றே குறிப்பிடப்படுகின்றது. தன்வந்திரி நிகண்டுவில் சுக்ல அர்க். ராஜ அர்க் மற்றும் ஸ்வேத அர்க்.(Suklarkah, Rajarkah, and Svetaarkah) என மூன்று எருக்கு வகைகள் குறிபிடபட் டிருக்கின்றன.
நவக்கிரக வனங்களில் ஒன்பது கோள்களுக்குமான தாவரங்களில் சூரியனுக்குரியதாக இருக்கும் தாவரம் எருக்குதான். பைபிளை தழுவி எழுதப்பட்ட ஜான் மில்டனின் இழந்த சொர்க்கத்தில் (Paradise lost) Sodom apple என்று குறிப்பிடப்படும் இச்செடியின் பழங்களைத்தான் ஆதாமையும் ஏவாளையும் விலக்கப்பட்ட கனியை சுவைக்க தூண்டிய பின்னர் சாத்தான் புசித்ததாக சொல்லப்பட்டிருக்கின்றது.
திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்கு தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.
பழங்குடியினரில் பல இனங்களில் நோயுற்றவர்களின் தலைமுடியை சிறிது எருக்கஞ்செடியில் கட்டிவிட்டால் நோயை செடி எடுத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.
உயர் இரத்த சர்க்கரை சிகிச்சைக்கு phytotherapy எனப்படும் தாவர மருத்துவத்தில், இரண்டு பாதங்களிலும் உள்ளங்கால்களில் எருக்கிலையின் மேற்புறம் படுமாறு வைத்து அதன்மேல் சாக்ஸ் அணிந்து ஒரு வாரம் நடந்து கொண்டிருந்தால் சர்க்கரை அளவு சீராகிவிடும் என்று சொல்லப்படுகின்றது.
ஜமைக்கா மற்றும் கம்போடியாவில் இன்றைக்கும் பழுத்து வெடிக்கும் எருக்கின் கனியின் உள்ளிருக்கும் விதைகள் வெடித்து பரவ உதவி செய்யும் பட்டுப்போல் மினுங்கும் இழைகளை அடைத்து தலையணை செய்கிறார்கள். எருக்கஞ்செடியின் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் உறுதியான நார் , வில்லின் நாண், மீன்பிடி வலை, ஆடைகள்,போன்றவை தயாரிக்க உதவுகிறது.
கம்போடியாவில் எருக்கஞ்செடியின் குச்சிகளை சிதை எரிக்கையில் உபயோகப்படுத்துகிறார்கள்.
இன்னும் சில பழங்குடியினர் இதன் பாதி பழுத்திருக்கும் காயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி காயின் கடினமான ஓட்டினுள் ஆட்டுப்பாலை நிரப்பி அருந்துவதை பல நோய்களுக்கு சிகிச்சையாக செய்கின்றனர்.
எருக்கின் இளம் தளிர்களை ஒற்றை தலைவலிக்கு பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் உபயோகிக்கின்றனர்.
எருக்கின் தாவர பாகங்களில் இருக்கும் வேதிப்பொருட்களில் உஷரின், கேலோடாக்சின், கேலோட்ரோபின் மற்றும் ஜிஜாண்டின் (uscharin, calotoxin, calotropin, and gigantin) போன்றவை மிகுந்த நச்சுத்தனமை உடையவை. நச்சுத்தன்மை கொண்ட எருக்கின் பாலை அம்பு நுனிகளில் தடவி வேட்டையாடும் வழக்கமும் பழங்குடியினரிடம் இருக்கிறது ’வூடூ’ கலை தோன்றிய மேற்கு ஆப்பிரிக்காவின் ’பெனின்’ நாட்டில் மட்டும் எருக்கின் பால் கலந்து மிக அதிக விலையுடைய உடைய ஆட்டுப்பால் சீஸ் செய்கிறார்கள். காமம் பெருக்கும் (Aphrodisiac) குணத்திற்காகவும் இச்செடி பாரம்பரிய மருத்துவ முறையில் உபயோகிக்கபடுகிறது.
ஹவாயில் 1871 ல் இச்செடி அறிமுகமானது. எருக்கம் மலரில் செய்யப்படும் leis எனப்படும் மலர்மாலைகளும், மலராபரணங்களும், விசிறி, வளையல் போன்றவையும் இங்கு மிகப்பிரபலம். ஹவாய் அரசின் கடைசி மகாராணியான லில்லியொ கலானி (Liliʻuokalani) எருக்கு மலராபரணங்களை வளமை மற்றும் செல்வத்தின் குறியீடாக கழுத்தில் எபோதும் விரும்பி அணிந்து வந்ததால், ஹவாய் கலாச்சாரத்தில் இம்மலர் மாலைகள் மிகச் சிறப்பான இடம் பெற்றிருக்கின்றன.
ஹவாயில் இம்மலர்களின் வெளிஅடுக்குகளை மட்டும் கோர்த்து, உள்ளிருக்கும் கிரீடம் போன்ற அமைப்பை மட்டும், அல்லது முழுமலரையுமே கோர்த்து, அரும்புகளை மட்டும் கோர்த்து என எருக்க மலர் மாலைகளும் ஆபரணங்களும் பல அழகிய நிறங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கும்.
ஹவாயில் உள்ளிட்ட பல தீவுகளிலும், இந்தியாவில் அஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பழங்குடி சமூகத்தில் பரவலாக திருமணம் மற்றும் இறப்பு சடங்குகளில் எருக்கு மலர் மாலைகளை பயன்படுத்துகிறார்கள்.
பிரபல பாலிவுட் மாடலும் நடிகருமான மிலிந்த் சோமன் திருமணத்தில் மணமக்கள் இருவரும் எருக்கு மலரில் மாலைகளும் தலை அலங்காரங்களும் செய்திருந்ததை பார்க்க முடிந்தது. அவரது மனைவி அஸ்ஸாமியப் பெண்.
எருக்கன் இலையை மட்டும் உணவாக எடுத்துக்கொண்டு எருக்கிலையின் அடியில் முட்டையிடும் மோனார்க் வகைப் பட்டுப்பூச்சிகள் தமது வாழ்க்கைச் சுழற்சிக்கு எருக்கையே நம்பியுள்ளன. புறநகர் பகுதிகளில் எல்லாம் நகரம் விரிந்து கொண்டே வருவதால் வெகுவிரைவாக அழிந்து வருகின்றன எருக்கும், மொனார்க் பட்டுப்பூச்சிகளும்.
அரிதினும் அரிதான கெரட்டோ கன்ஜக்டிவிடிஸ் (Crown flower keratoconjunctivitis) எனப்படும் பார்வையிழப்பு எருக்கின் பால் கண்களில் படுவதால் ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் Crown Flower keratitis என்று குறிப்பிடப்படும் இக்குறைபாடு எருக்கு மலர் மாலைகளை மிக அதிகமாக தயார் செய்யும் தாய்லாந்து மற்றும் ஹவாய் பகுதியில் மட்டும் அரிதாக ஏற்படும். மலர்களை பறிக்கையிலோ அல்லது மலர்களை மாலையாக தொடுக்கையிலோ, விரல்களில் ஒட்டியிருக்கும் பால் தவறுதலாக கண்களில் படுவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
எல்லா பாகங்களுமே சிறந்த மருத்துவப் பயன்களை உடைய இச்செடி, கிரேக்க புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் உடல்நலனுக்கான கடவுளான அஸ்கிலிப்பியஸின் பெயரிலான ASCLEPIADACEAE என்னும் குடும்பத்தை சேர்ந்தது இந்த தாவர குடும்பமே Milkweed family எனப்படும்.
பொதுவாக எருக்கு நச்சுச்செடியெனவே கருதப்பட்டாலும், இதன் ஏராளமான மருத்துவ பயன்களை பார்க்கையில் நஞ்செனும் அமுதென்றுதான் இவற்றை கருதவேண்டும்.
உதவிய நூல்கள், உசாத்துணையாக நின்ற ஆதாரங்கள்
- எருக்கம் பாலினால் அரிதாக ஏற்படும் பார்வையிழப்பு குறித்த ஆய்வுக்கட்டுரை;http://www.ksos.in/ksosjournal/journalsub/Journal_Article_1_70
- ஆயுர்வேத மருத்துவத்தில் எருக்கின் உபயோகங்கள்; https://www.planetayurveda.com/library/aak-madar/
- எருக்கின் பாகங்களும் அவற்றின் வேதிப்பொருட்களும் குறித்த ஆய்வுக்கட்டுரை; https://www.researchgate.net/publication/313678937_THE_CONSTITUENTS_AND_PHARMACOLOGICAL_PROPERTIES_OF_CALOTROPIS_PROCERA_-AN_OVERVIEW
- எருக்கின் மருத்துவ உபயோகங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை; https://www.webmd.com/vitamins/ai/ingredientmono-797/calotropis
- தெய்வீக மூலிகை எருக்கு; https://www.vikatan.com/literature/agriculture/99574-
- Textbook of Pharmacognosy and Phytochemistry,Biren N. Shah · 2009 – Page 498
- ஹவாயின் தாவரங்கள்;Hawaii flora – Hawaiian flowers and plants-https://www.to-hawaii.com › flora
- எருக்கின் மகரந்த பைகளை மட்டும் பிரித்தெடுப்பது குறித்த காணொளி; https://www.youtube.com/watch?v=m77NarwPL4w
9. பஞ்சபல்லவா என்னும் மராத்திய விழாவை குறித்த விக்கிபீடியா கட்டுரை; https://en.wikipedia.org/wiki/Panch_pallava
10. சங்க இலக்கியத் தாவரங்கள்-http://www.tamilvu.org › sangailakyathavarankal-PDF.
11.மோனார்க் பட்டுப்பூச்சிகளும் எருக்கும்; https://monarchbutterflygarden.net/milkweed-plant-seed-resources/calotropis-gigantea-giant-milkweed/