கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கி ’வய் நாட் ஸ்டூடியோஸ்’ தயாரித்திருக்கும். ’ஜகமே தந்திரம்’ தனுஷின 40 ஆவது திரைப்படம். தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், Game of thrones புகழ் ஜேம்ஸ் காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.ஒளி இயக்கம் ஸ்ரேயஸ் க்ருஷ்ணா, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்.
கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகளில் வெளியிடமுடியாமல் 2021, ஜூன் 18’ல் நெட்ஃப்ளிக்ஸில் 17 மொழிகளில், 190 நாடுகளில் வெளியானது ஜகமே தந்திரம்.
லோக்கல் தாதாவான சுருளி என்னும் தனுஷ், கடல் தாண்டிய ஒரு பகைவிவகாரத்துக்கு லண்டன் செல்லும் ஒற்றை வரிக்கதையை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.
கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் போகுமளவிற்கு, மதுரையில் பரோட்டாக்கடை நடத்தும் சுருளியின் ரவுடித்தன்ங்கள் பிரபலமாகி இருக்கிறது. சுருளியின் ரவுடித்தனத்தை பார்க்கும் , லண்டன் தாதா பீட்டரின் வலதுகையான ஜான் , லண்டனில் பீட்டருக்கு தொல்லையாக இருக்கும் சிவதாஸ் என்னும் தாதாவை ஒழித்துக்கட்ட மிகப்பெரும் தொகையை கூலியாக பேசி சுருளியை லண்டனுக்கு வரவழைக்கிறார்., . அதை முடித்துக்கொடுத்து பணத்தை வாங்கிகொண்டு, வாழ்க்கையில் ரவுடித்தனத்தை விட்டொழிக்கலாமென்று சுருளியும் ஒத்துக்கொள்கிறான். சிறு மகன் தீரனின் அன்னையான, இலங்கை பாடகி அடிலாவை லண்டனில் சந்தித்து காதலாகிறான் சுருளி.
சொன்னபடியே சிவதாஸை கொல்ல பீட்டருக்கு சுருளி உதவமுடிந்ததா, சிவதாஸ் யார்? ஏன் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்து சுருளியை அழைத்துச்சென்றார்கள்? காதல் நிறைவேறியதா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
சின்ன குழந்தைகளுக்கு சொல்லப்படும் தாதா கதையைப்போல சொல்லப்ட்டிருக்கிறது கதை. படத்திற்கு துப்பாக்கி சண்டை என பெயரிட்டிருக்கலாமென்னும் அளவிற்கு சுட்டுத்தள்ளுகிறார்கள் விதம் விதமான துப்பாக்கிகளில். தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாயக வழிபாட்டில் இளைஞரான கார்த்திக் சுப்பராஜும் நம்பிக்கை கொண்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒற்றை ஆளாக பலரை அடித்து துவம்சம் செய்வது, துப்பாக்கி குண்டுகள் மழையென பொழிந்தாலும் நாயகனுக்கு ஒன்றும் ஆகாதது என வழக்கமான, தமிழ்சினிமா கடந்து வந்த முக்கால் நூற்றாண்டான பாதையிலேயே கார்த்திக்கும் செல்கிறார்.
மீசை, சிரிப்பு ,பாடல்கள் என்று ரஜினியை தனுஷ் நினைவூட்டிக்கொண்டே இருப்பது , முருகேசன் என்னும் பாத்திரம் ஆகியவை கவனிக்க வைக்கி றது. ’’ரகிட ரகிட’’ பாடல் மட்டும் பரவாயில்லை ரகம்
தயாரிப்பு தரப்புக்கும் தனுஷுக்கும் இடையே நெட்ப்ளிக்ஸில் திரையிடுவது தொடர்பான மோதலும், தொடர்ந்து விநியோகஸ்தர் தரப்பிலிருந்து ’வய் நாட்’ ஸ்டியோவிற்கு ரெட்கார்ட் கொடுத்ததுமாக படம் வெளியாகுமுன்னேயே பிரச்சனைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருந்தது.
தனுஷின் நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலமென்றால் திரைக்கதையின் தொய்வு, சொதப்பலான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் மைனஸ். மிகப்பழைய, புளித்துப்போன கேங்ஸ்டர் கதையை மறுபடியும் சொல்லுகையில், அதுவும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளைஞர்கள் சொல்லுகையில் புதிதாக எதேனும் இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் படம் அதே பழைய பாணிதான். இரண்டாம் பாதியில் திரைப்படம் நத்தை வேகத்தில் செல்கிறது. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, ஈழத்தமிழர்கள் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தொடும் படம் நிச்சயம் வேறு ஒரு தளத்தில் இருந்திருக்க வேண்டும்.
புலம் பெயர்ந்த மக்களின் கவிதையொன்றின்’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ என்னும் ஒரு வரி நமக்கு அளிக்கும் உளச்சித்திரத்தை, மனத்துயரை இந்த முழுநீள திரைப்படம் ஒரு சதவீதம் கூட கொடுக்க வில்லை.
கார்த்திக் சுப்பராஜின் படு சுமாரான படமென்று இதை நிச்சயம் சொல்லலாம். மாமனாரின் பேட்ட’யை மருமகனை வைத்து எடுக்க நினைத்து தோல்வியடைந்த படமென்றும் சொல்லலாம்.
Leave a Reply