லோகமாதேவியின் பதிவுகள்

Tag: கற்றாழை

சோற்றுக்கற்றாழை-Aloe vera

ஆஃப்பிரிக்காவின் வடக்குப்பகுதியில் தோன்றிய ஆலோ வீரா (Aloe vera)  உலகெங்கிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நோய் தீர்க்கவும் அழகை மேம்படுத்தவும் அலங்காரச்செடியாகவும் பயன்பட்டு வருகின்றது. இதன் 360 சிற்றினங்களில் 130 மட்டுமெ ஆப்பிரிக்காவில் தோன்றியவை. மற்றவை கலப்பின வகைகள்.

 இதன் சதைப்பற்றான இலைகளினுள்ளிருக்கும் கெட்டியான சாறு பல்வேறு மருத்துவ குணங்களுடையது. கெட்டியான இந்த சாற்றினாலேயே இது சோற்றுக்கற்றாழை என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் இது பிள்ளைக்கற்றாழை.

உலகின் பல நாடுகளில் இந்த தாவரம் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு மருந்துகளும், அழகு சாதனப்பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சோற்றுக்கற்றாழையின் மருத்துவக்குணங்கள் பண்டைய எகிப்து மற்றும் சீனாவில்  பெரிதும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது. மாவீரர் அலெக்ஸாண்டர் தனது குருவான அரிஸ்டாட்டிலின் வழிகாட்டுதலின் பேரில் சொகோட்ரா (Socotra) தீவுகளை கைப்பற்றியதே அங்கு செழித்து வளர்ந்திருந்த இந்த கற்றாழைகளுக்காவே என்கின்றது வரலாறு.

நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும்

எகிப்தின் பேரழகிகள் நெஃப்ரிடியும்  கிளியொபாட்ராவும் (Nefertiti and Cleopatra) சருமப்பொலிவிற்கு இதன் சாற்றை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்கள் இதனை ’’அழியாத்தாவரமென்றார்கள்’’, கிரேக்கர்கள் இதை உலகின் எல்லாப்பிணியையும் போக்கும் மாமருந்தென்றார்கள். மெசாபடோமியாவில்  கிறிஸ்துக்கு 2200 வருடங்களுக்கு முன்பே  சோற்றுக்கற்றாழையின் பயன்கள் இருந்ததை அகழ்வாய்வில் கிடைத்திருக்கும்  களிமண் பலகைகள் தெரிவிக்கின்றன.

கொலம்பஸ் தனது கடற்பிரயாணங்களில் கப்பலுக்குள்ளேயே தொட்டிகளில் இந்த செடியை வளர்த்தி, உடனிருந்தவர்களின் காயங்களுக்கும், நோய்களுக்கும் சிகிச்சையளித்திருக்கிறார். 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பேனிஷ் துறவிகள் சோற்றுக்கற்றாழையை பலவிதங்களில் மருந்தாக பயன்படுத்தி , அதன்  பயன்களை பலருக்கும் தெரியப்படுதினார்கள், மாயன்கள் இதை  ”இளமையின் ஊற்று” என அழைத்தார்கள்.

புனித வேதகாமம் சிலுவையிலிருந்து எடுத்த கர்த்தரின் உடலை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் பதப்படுத்தியதை சொல்கின்றது.  சோற்றூக்கற்றாழையைக் குறித்து 5 இடங்களில் வேதகாமத்தில் குறிப்பிடபட்டிருக்கின்றது.

நைல் நதிக்கரையோரம் அமைந்திருந்த பண்டைய எகிப்து நகரமான தெபெஸிலிருந்து, 1858ல் கண்டெடுக்கப்பட்ட, கிறிஸ்து பிறப்பிற்கு 1,550 வருடங்கள் முன்பு எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படும் எகிப்தியர்களின் மருத்துவநூலான  “papyrus of Eber”  ல்  சோற்றுக்கற்றாழைகளின் பல பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நூல் தற்போது ஜெர்மனியின் ஜெர்மனியின் லெய்ப்ஸிக் (Leipzig)  பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. எகிப்தியர்கள் சோற்றுக்கற்றாழையை கடவுளாக வழிபட்டதோடல்லாது, புனிதச்சின்னமாகவும் கருதினார்கள். இறந்த உடல்களை மம்மிகளாக்குதல் என்னும் பதப்படுத்துதலுக்கும் சோற்றுக்கற்றாழையை அதிகம் பயனபடுத்தி இருக்கிறார்கள்.

ஜப்பானில் மருத்துவருக்கு வேலையில்லாமல் செய்யும் தாவரமென்றே இதற்குப் பெயர். அங்கு இந்த ஜெல்லை தயிரில் கலந்து சாப்பிடுவதுண்டு.

இஸ்லாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதங்களில் பயன்படும் இந்த கற்றாழையை அற்புதச் செடி (Miracle plant) என்றே குறிப்பிடுகின்றது. ஷார்ஜாவில்  2014ல் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும், சோற்றுக்கற்றாழை, கருஞ்சீரகம், எலுமிச்சம்புல், அத்தி, ஆலிவ் உள்ளிட்ட  50  மருத்துவ தாவரங்களுக்கென்றே ஒரு பிரத்யேக பூங்காவை உருவாக்கி இருக்கிறார்கள்.

1800 களிலிருந்து இதன் உலகளாவிய பயன்பாடு மருத்துவத்துறையிலும் அழகுசாதனத்துறையிலும் மிகப்பெரும் அளவில் துவங்கியது.1944ல் ’A bomb’ அணுகுண்டு வீச்சில் காயம்பட்ட ஜப்பானிய வீரர்கள் கற்றாழைச்சாற்றை தடவியே விரைவில் நலம்பெற்றார்கள்.  இதன் தாவர அறிவியல் பெயரான Aloe vera வில் Aloe  என்பது கசப்புத்தன்மையுடைய பளபளக்கும் பொருள் என்னும் பொருள்படும் ‘’Alloeh’’  என்னும் அரபிச்சொல்லிலிருந்தும் இதன் சிற்றினப்பெயராகிய vera என்பது கிரேக்கமொழியில் ‘’True’’ உண்மையான என்னும் பொருளையும் கொண்டது. இதன் அறிவியல் பெயரையே உலகெங்கிலும் பொதுப்பெயராகவே வழங்கும் அளவிற்கு இது புழக்கத்தில் இருக்கும் ஒரு தாவரமாகிவிட்டிருக்கிறது.

பாரம்பரிய மருத்துவமுறைகளின் தாய் எனக்கருதப்படும் ஆயுர்வேதத்தில் சோற்றுக்கற்றாழை ‘Ghrita- kumari” எனப்படுகின்றது. பெண்களின் நலனுள்ளிட்ட இதன் பல்வேறு  பயன்களை  இம்மருத்துவ முறை விளக்கமாக சொல்லி இருக்கிறது.. பல்வேறு நோய்களுக்கும் இதிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கின்றது

பூஞ்சைத்தொற்று, பேக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் இந்த சோற்றுக்கற்றாழையில் மனித உடலுக்கு மிக அத்யாவசியமான 8 முக்கிய அமினோ அமிலங்களும் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும், பிற முக்கிய சத்துக்களும்  நிறைந்துள்ளது

 உலகெங்கிலும் வளரும் இந்த தாவரத்தின் பேரினமான Aloe பல சிற்றினங்களை உள்ளடக்கியது.  3அல்லது 4 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் இத்தாவரம் அதிகபட்சமாக 21 சதைப்பற்றான இலைகளை உருவாக்கி 30-70செமீ உயரம் வரை வளரும். இதன் சாற்றில் ஏறக்குறைய 200 வகையான முக்கிய வேதிப்பொருட்கள் உள்ளன. முக்கோண வடிவில் இருக்கும் சதைப்பற்றான இலைகள் விளிம்புகளில் கூரான பற்களைப்போன்ற அமைப்பை கொண்டிருக்கும் இவை அஸ்போலேடேசியே (Asphodelaceae) குடும்பத்தை சேர்ந்தவை. சிவப்பும் மஞ்சளுமான சிறு மலர்கள்  செடியின் மத்தியிலிருந்து உருவாகும் நீளமான ஒற்றைத்தண்டின் நுனியில் கொத்தாக இருக்கும். இலைச்சோறும், மஞ்சள் நிற இலைப்பிசினும் புற்றுக்கட்டிகளை அழிப்பது, ஜீரணத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை.

 இவற்றில் கொடிபோல படருவது, மரம்போல வளருவது, மிக சிறியது, குறுகிய இலைகள் கொண்டது,செந்நிறமானது என பல அழகிய வகைகள் காணப்படுகின்றன.

சோற்றுக்கற்றாழையின் பயன்கள்

சருமப்பாதுகாப்பு

புற்றுநோயை தடுக்கும்

மலமிளக்கி

கேச வளர்ச்சியை ஊக்குவிக்கும்

உடலை குளிர்விக்கும்

வயிற்று உபாதைகளை குணமாக்கும்

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

புண்களை ஆற்றும்

நோயெதிர்ப்புச்சக்தியை கொடுக்கும்

 நல்ல முதிர்ந்த இலைகளை செடியின் கீழ்பகுதியிலிருந்து வெட்டி எடுக்கலாம். ஒரு சமயத்தில் 3 அல்லது 4 இலைகளை இப்படி எடுக்கலாம். நன்கு கழுவி மேல்தோலை கத்தியால் பிளந்து உள்ளிருக்கும் சோறு போன்ற பிசுபிசுப்பான கண்ணாடிபோல பளபளக்கும் ஜெல் பகுதியை எடுக்கவேண்டும்

இதிலிருந்து வடியும் மஞ்சள் நிறபிசினை வடியவிட்டு ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியே எடுத்து உபயோக்கிக்கலாம்.

நேரடியாக உடலின் மேற்புறத்திலோ அல்லது கேசத்திலோ இந்த ஜெல்லை தடவலாம் அல்லது இதை நன்கு கழுவி நொங்கு போன்ற இதன் சதையை சாப்பிடலாம், ஜூஸ் போல தயாரித்தும் அருந்தலாம். பலநாட்களுக்கு இவறை குளிர்பதனப்பெட்டியில் சேமித்தும் வைக்கலாம்

  மாறிவரும் வாழ்வுமுறைகளாலும் மருந்துகளின் பக்கவிளைவுகளினாலும் தாவர மருந்துப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கிலும் இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் சோற்றூக்கற்றாழையின் தேவை  அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. உலகளவில் தாய்லாந்து சோற்றூக்கற்றாழை ஜெல் தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருகிலோ கற்றாழை ஜெல்லின் விலை சுமார்  100 லிருந்து 250 ரூபாய்கள் வரை இருக்கும். பொடியாகவும் ஜெல்லாகவும் சாறாகவும் கழுவி சுத்தம் செய்யப்பட்ட துண்டுகளாக்வும் சந்தையில் இவை கிடைக்கின்றன. வீட்டில் தொட்டிகளில் மிக எளிதாக இவற்றை நல்ல சூரிய ஒளி இருக்கும் இடங்களில் மிககுறைந்த நீரூற்றி வளர்க்கலாம்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் பெரிதாக எந்த பராமரிப்புச்செலவுமின்றி 20 லிருந்து 30 டன் எடையுள்ள கற்றாழைகளை வளர்த்து 5 அல்லது 6 லட்சம் லாபம் பார்க்கலாம்.அரிதாக சிலருக்கு சோற்றுக்கற்றாழை ஒவ்வாமையை உண்டாக்கும்.

கள்ளிக்கற்றாழை- Agave

 பாலைக்கற்றாழை அல்லது கள்ளிக்கற்றாழை பேரினமான   Agave என்பது சுமார் 200 சிற்றினங்களை கொண்ட  அஸ்பராகேசியே (Asparagaceae) (துணைக்குடும்பம் அகேவேசியே _ (Agavaceae), குடும்பத்தை சேர்ந்தது. அமெரிக்காவின்  வறண்ட பகுதிகளில் தோன்றிய இவற்றில் 150 சிற்றினங்கள்  மெக்சிகோ மற்றும் கரீபியன் கடற்கரைப்பகுதிகளில்   காணப்படுகின்றன. 12 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றி உலகெங்கிலும் பரவியிருக்கலாம் என்று தாவரவியலாளர்களால் கருதப்படும் இந்த கள்ளிக்கற்றாழைகள் மிகுந்த பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

இப்பேரினத்தைச்சேர்ந்த பல தாவரங்களிலிருந்து மதுபானங்கள், நார், வலை, கைவினைப்பொருட்கள் எரிபொருட்கள் ஆகியவை பெறப்படுகின்றன. பல தாவரங்கள்  அலங்காரச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன.  53 சிற்றினங்களிலிருந்து பல வித மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றது.

கள்ளிக்கற்றாழைகளின்  சதைப்பற்றுடன் கூடிய வாள் போன்ற இலைகள் ரோஜா மலரிதழ்களைப்போல அடுக்கடுக்காக அழகாக அமைந்திருக்கும். இலைகள் 2லிருந்து 3 மீட்டர் நீளமிருக்கும். பெரும்பாலானவை இலைகளின் விளிம்புகளிலும் நுனியிலும் கூரிய முட்களிக்கொண்டிருக்கும். இதன்காரணத்தாலேயே இவை கள்ளிக்கற்றாழைகள் எனப்பெயர்பெற்றன.

இலைகள் இளம்பச்சை, அடர் பச்சை, சாம்பல், நீலம், வெள்ளி மினுங்கும் பச்சை, நீலச்சாம்பல் என பல வண்ணங்களில் இருக்கும். இலைகளின் விளிம்புகளில் வேறு வண்ணமிருப்பவையும், வரிகள் உள்ளவையும் உண்டு   பெரும்பாலான கள்ளிக்கற்றாழை வகைகளில் இலைகளினடியிலிருக்கும் கிழங்குகளிலிருந்தே புதிய தாவரங்கள் முளைக்கும்

கள்ளிக்கற்றாழைகள் அனைத்துமே ஒரு முறை பூத்துக்காய்த்தபின் மடிந்துவிடும் monocarpic வகையை சேர்ந்தவை. அதிகபட்சமாக 35 வருடங்களே இவை உயிர்வாழும். இலையடுக்குகளின் மத்தியிலிருந்து வளரும் 9-12 மீட்டர் உயரம் வரையிருக்கும் தண்டுகளில், இளம்பச்சை பழுப்பு, சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண மலர்க்கொத்துக்கள் உருவாகும். 6 இதழ்களுடன் இருக்கும் மலர்களில் இனிப்புச்சுவையுள்ள சாறு நிறைந்திருப்பதால் பூச்சிகள், தேன்சிட்டுக்கள் பட்டாம்பூச்சிகள் , அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் ஆகியவற்றை கவர்ந்திழுக்கும்.

கற்றாழை இலை முள்

மெக்சிகோ முழுக்கவே இக்கள்ளிக்கற்றாழைகள் பரவியுள்ளதால் இவற்றின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மெக்சிகோவின் பழங்குடியினர் தொன்றுதொட்டே அறிந்திருந்தனர். கயிறுகள், பிரஷ்கள், செருப்புக்கள், பாய்கள், போன்றவறை இச்செடிகளின் இலைநாரிலிருந்து தயாரிக்கும் வழக்கம் மெக்சிகோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது.

Sisal எனப்படும் இலைகளின் நாரை நுனியிலிருக்கும் ஊசிபோன்ற முள்ளுடனேயே உருவி எடுத்து ஊசியும் நூலும் போல உபயோகப்பபடுத்தும் பழக்கமும் அவர்களுக்கு இருக்கின்றது. இலைகளை செதுக்கி விட்டு அன்னாசிப்பழம்போன்ற  அடிப்பகுதியை நெருப்பில் வாட்டியும், அரைத்தபின்னர் சமைத்தும் உண்ணும் வழக்கமும் உண்டு. இந்த அடிப்பகுதியில் நிறைந்திருக்கும் மாவுச்சத்தைத்தான் நொதிக்க வைத்து மது பானமாக்குகிறார்கள்.

 மலர்ச்சாற்றை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவார்கள். Agave syrup எனப்படும் இந்த கற்றாழைத்தேன் மிக பிரபலமான சர்க்கரை மாற்றுப்பொருளாக உலகெங்கிலும் உபயோகத்திலிருக்கின்றது. இலைசாற்றில் நஞ்சிருப்பதால் சமைக்காமல் உண்ணுவது ஆபத்தானது

ஒருவித்திலை (Monocot) வகையைச்சேர்ந்த  கள்ளிக்கற்றாழைகள்    அனைத்துமே மிக மெதுவாக வளரும் இயல்புடைய பல்லாண்டுத்தாவரங்கள்

சோற்றுக்கற்றாழையும் கள்ளிக்கற்றாழையும்

பொதுவாகவே Aloe  எனப்படும் சோறறுக்கற்றாழைகளையும் இந்த கள்ளிக்கற்றாழையான Agave களையும் ஒன்றென குழப்பிக்கொள்ளுபவர்கள் உண்டு. நம் அனைவருக்கும் மிகவும் தெரிந்த மருத்துவப்பயன்கள் ஏராளம் கொண்டிருக்கும் சோற்றுக்கற்றாழை Aloe vera,.

 தரிசு நிலங்களிலும் வேலியோரங்களிலும் ரயில் தண்டவாள ஓரங்களிலும் மாபெரும் பச்சை ரோஜாஇதழ்களை போல வளர்ந்திருப்பவையே Agave பேரினத்தைச்செர்ந்த கள்ளிக்கற்றாழை வகைகள்.

சோற்றுக்கற்றாழையான Aloe ஆப்பிரிக்காவின் சஹாரா பாலையின் தென்பகுதியில் தோன்றியவை. கள்ளிக்கற்றாழையான Agave  மெக்சிகோவில் தோன்றியவை.  இரண்டு வகைச்செடிகளுமே சதைப்பற்றான , கூர் நுனிகளை உடைய, விளிம்புகளில் முட்கள் இருக்கும் இலைகளையும் இனிப்பான திரவத்தைச் சுரக்கும் மலர்களையும், கொண்டிருந்தாலும், இவை இரண்டும் வேறு வேறு தாவரக்குடும்பங்களை  சேர்ந்தவை Agave, Asparagaceae குடும்பம் Aloe ,  Asphodelaceae குடும்பம்.

Agave ,இலைகளின் அளவிலும் முட்களின் நீளத்திலும் Aloe வை விட பெரியது. Agave வின் சாறு நச்சுத்தன்மை கொண்டது, Aloe வின் சாறு உண்ணத்தக்கது மருத்துவ குணங்களுடையது, இப்படி இரண்டிற்கும்  நிறைய வேறுபாடுகள் உள்ளன

கள்ளிக்கற்றாழையின் முக்கியமான சில வகைகள்;

நரிவால் கற்றாழை-Fox Tail Agave- Agave attenuata

வெள்ளி நிறம் மினுங்கும் இளம்பச்சையில் ரோஜா இதழ்களைப்போல அடுக்கில் அமைந்திருக்கும் இந்த கற்றாழை மிக அழகிய தோற்றமுள்ளது. மேலும் பிற கற்றாழை வகைகளைப்போல இலையின் ஓரங்களில் முட்களும் இல்லாதது. பச்சையும் மஞ்சளும் கலந்த இதன் நீண்ட மலர்க்கொத்துக்கள் நரிவாலைப்போல உயரமான தண்டில் அமைந்திருப்பதால்  இப்பெயர் பெற்றிருக்கும் இவை தோட்டங்களில் அழகுச்செடியாக வளர்க்க மிகவும் ஏற்றது

கரீபியன் கற்றாழை-Carribean Agave- Agave angustifolia

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த கற்றாழை இளம்பச்சையில் வெண்ணிற ஓரங்களுடன் நீண்ட வாள் போன்ற உறுதியான,  விளிம்புகளில் உறுதியான முட்களை கொண்டிருக்கும் இலைகளைக்கொண்டது. அடர்ந்த இலை அமைப்பினுள்ளிருந்து 10அடி உயரமுள்ள மலர்த்தண்டு உருவாகி அதன் உச்சியில்  இளம் பச்சைநிற கிளைத்த  மலர்கொத்துக்கள் உருவாகும். இவற்றை தோட்டங்களின் ஓரங்களில் வளர்க்கலாம். இச்செடியின் இலைகள் இணைந்திருக்கும்

அன்னாசிப்பழத்தைபோன்ற heart  எனப்படும் அடிப்பகுதியிலிருந்து  மெஸ்கல் (mezcal) என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது. முட்டை வடிவ இலைநுனியில் கூரான ஊசிபோன்ற அமைப்பிருக்கும்

நீலக்கற்றாழை- Blue Agave- Agave tequilana

நீலக்கற்றாழை

மெக்ஸிகோவின் டெக்யூலா நகரில் எரிமலை மண்ணில் வளரும் இந்த நீலக்கத்தாழைச்செடிகளிலிருந்து, அந்நகரின் பெயருடைய  ’’டெக்யூலா’’ என்னும் மதுபானம் தயாரிக்கப்படுகின்றது.
 (Tequila). டெக்யூலா தயாரிக்க கற்றாழையின் இலையடியில் அன்னாசிப்பழம் போன்ற வடிவை வெட்டி தயாராக்கும் முறை  அங்கிருக்கும் பழங்குடியினரால் மட்டுமே செய்யப்படுகின்றது.

‘Heart ‘ எனப்படும் இலைகளின் அடிப்பகுதி

பெயருக்கேற்றபடி நீலப்பச்சையில் அகலமும் நீளமும் உடைய வாள்போன்ற உறுதியான இலைகளின் ஓரங்களில் கூரிய முட்களை உடைய இந்த கற்றாழை 5 வருடங்களானபின்பு அழகிய மஞ்சள் நிற மலர்க்கொத்துக்களை உருவாக்கும்

நூற்றூக்கற்றாழை- American  Century Agave-Agave Americana

 குட்டையான, மிகக்கூரிய நுனிகளையும் இளமஞ்சள்பட்டைகள் உள்ள ஓரங்களையும் கொண்டிருக்கும் இலைகளைக்கொண்ட, பெருங்கள்ளி வகைச்செடியான இந்த கற்றாழையின் மலர்கள் தேன்சிட்டுக்களை வெகுவாக கவரும். தோட்டக்கலைத்துறை விருதுகள் பலவற்றை பெற்றிருக்கும் மிக அழகிய தோற்றமுள்ள கற்றாழை இது. உலகெங்கும் அதிகம் அலங்காரச்செடியாக வளர்க்கப்படும் கற்றாழையும் இதுவே. மலர்கள் நீள மூக்கு வவ்வால்களாலும், தேன்சிட்டுக்களினாலும் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.நூற்றூக்கற்றாழை என அழைக்கப்பட்டாலும் இவை 35 வருடங்கள் வரையே உயிர் வாழும்.

திமிங்கல நாக்குக்கற்றாழை-. Whale’s Tongue Agave -Agave ovatifolia

உட்புறம் குழிந்த,  கிண்ண வடிவில்,  திமிங்கல நாக்கைப்போன்ற அழகிய இலைகளில் நுனியில் 25 செமீ நீளமுள்ள  ஊசிபோன்ற  நீட்சி இருக்கும். இளம்பச்சை நிற இலைகளின் மத்தியிலிருந்து உருவாகும் தண்டில் மலர்க்கொத்து  வர 10 ஆண்டுகளாகும். பசுமஞ்சள் நிற மலர்கொத்து மிக அழகியதாக இருக்கும்.  மிக அழகிய   இக்கற்றாழைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படும். செடியின் மத்தியிலிருந்து உண்டாகும் உயரமான தண்டிலிருந்து அழகிய மஞ்சள் நிற மலர்கொத்துகள் உண்டாகும்.

இதன் அடித்தண்டை வெட்டினால் சுரக்கும் இனிப்பான திரவத்தை நொதிக்க வைத்து  புல்க்யூ (Pulque) என்னும் மதுபானம் தயரிக்கப்படுகின்றது.

pulque பானம் தயாரிக்க கற்றாழைத்தண்டின் சாறு பாரம்பரிய முறையில் சேகரிக்கப்படுகின்றது

பிட்டா (pitta) எனப்படும் இலைநார்கள் கயறு, பாய், கெட்டியான துணிகள் ஆகியவற்றை உருவாக்கபயன்படுகின்றது. இதன் நார்களைக்கொண்டு எம்பிராய்டரி செய்யபட்ட தோல்பொருட்கள்  பிடெடோ piteado எனப்படுகின்றன.

உலர வைக்கப்படும் கற்றாழை நாரானா’ பிட்டா’
piteado belt

ஆக்டோபஸ் கற்றாழை- Octopus Agave- Agave vilmoriniana (கணவாய் கற்றாழை)

இக்கற்றாழைச்செடிகள் 1899 ல் ஜோசஃப் நெல்சன் ரோஸ் என்பவரால் மெக்சிகோவின் கெளடாலஜரா  நகரில்  கண்டறியபட்டது.

  நீண்ட ரிப்பன்களைப்போன்ற நுனி வளைந்து சுருண்டிருக்கும் இலைகள் எண்காலி எனப்படும் ஆக்டோபஸின் உணர்கொம்புகளைப்போல இருப்பதால் இவற்றிற்கு ஆக்டோபஸ் கற்றாழை என்றே பெயர் வந்தது. இவை  10 வருடங்களில் 40 அடி உயரமுள்ள தண்டில் மஞ்சள் நிற மலர்கொத்துக்களை உருவாக்கும். 18 ஆம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் வாழ்ந்த வில்மோர் என்பவர் உலகின்  பலநாடுகளிலிருந்து மரங்களின் விதைகளை  வரவழைத்தவர். இவரது பெயர் ஃப்ரான்ஸின் வரலாற்றில் மிக முக்கியமான இடம்பெற்றிருக்கின்றது. இவரை கெளரவிக்கும் பொருட்டே இந்த கற்றாழைக்கு வில்மோரியான் என்று பெயரிடப்பட்டது.

இதன் இலைகளில் நுரைக்கும் தன்மையுள்ள வேதிப்பொருளான saponin  இருப்பதால், மெக்சிகோவின் சில பகுதிகளில் வெட்டி உலர்த்தபட்ட நார்களுக்குள்  சோப்புதுண்டங்களை வைத்து துணி துவைக்கும் பிரஷ்கள் செய்யப்படுகின்றன. (brush with built-in-soap) பல பூங்காக்களில் இவை  அலங்காரச்செடிகளாக வளர்க்கப்படுகின்றன.

விக்டோரிய மகாராணி கற்றாழை- Queen Victoria Agave -Agave victoriae-reginae

கற்றாழைகளிலேயெ அரிதான இந்த வகையை தொட்டிகளிலும் வளர்க்கலாம். மகுடம் போன்ற அமைப்பில் மிக நெருக்கமாக செருகப்பட்டது போல  இலைகள் அமைந்திருப்பதால் விக்டோரிய மகாராணியின் பெயரால் இக்கற்றாழை அழைக்கப்படுகின்றது

.

தூரிகையால் தீட்டியதுபோல இலைகளின் ஒரத்தில் மெல்லிய  வெள்ளைக்கோடு காணப்படும். மெக்சிகோவின் சிக்குவாஹுவன் பாலையில் (Chihuahuan Desert) இவை பரவலாக  காணப்படும். பச்சை மற்றும் பழுப்பு நிற மலர்கள் கொத்தாக இலைகளின் நடுவிலிருந்து உண்டாகும் தண்டின் நுனியில் காணப்படும்

நூல்கற்றாழை -Thread –leaf Agave- Agave filifera

சிறிய வகை கற்றாழையான இதில் தளர்வான அடுக்குகளாக அமைந்திருக்கும் இலைகளுடன் இலைமொட்டுக்கள் உரிக்கும் நூல் போன்ற இழைகள் நூலகண்டை பிரித்து போட்டதுபோல காணப்படும். இளம்பச்சையில் உலோகப்பளபளப்புடன் காணப்படும் இச்செடி அதிகபட்சமாக 3 அடி வரையே வளரும்.

 இலைகளின் அடியில் இருக்கும்  மொட்டுக்களிலிலிருந்து புதிய செடிகள்  முளைக்கும். தொட்டிகளில் வளர்க்க ஏதுவானது இந்த கற்றாழை Royal horticultural society வழங்கும் தோட்டக்கலைத்துறை விருதையும் பெற்றிருக்கிறது இந்த அழகிய கற்றாழை. பிரகாசமான மஞ்சளும் சிவப்புமான மலர்களுடன் மலர்கொத்து உண்டாகும்.

கடற்கரைக்கற்றாழை-Coastal Agave- Agave shawii

மிகமிக அரிதான இந்தக்கற்றாழை மிஸவ்ரி தாவரவியல் பூங்காவை உருவாக்கிய   Henry Shaw என்பவரை கெளரவிக்கும் விதமாக shaw Agave எனப்பெயரிடப்பட்டது. நகரமயமாக்களில்  பெருமளவில் அழிந்துபோய்விட்ட இவை  தற்போது கலிஃபோர்னிய கடற்கரைகளில் மட்டுமே காணப்படுகின்றன. மிக மெதுவாக வளரும் இயல்புடைய இதன் இலைகள் 50 செமீ அளவில் முட்டை வடிவில் அமைந்திருக்கும். இலை விளிம்புகளில் ரம்பம் போல முட்கள் அமைந்திருக்கும். இலைகளின் மத்தியிலிருந்து தோன்றும் உயரமான மலர்காம்பிலிருந்து ஊதாவண்ண  இலைச்செதில்களால் (Bracts) சூழப்பட்ட மஞ்சள் – சிவப்பு மலர்கள் உருவாகும். இவை மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும் இயல்புடையவை

இரட்டை மலர்க்கற்றாழை – Twin flower Agave -Agave geminiflora

மெக்ஸிகோவின் 32 மாநிலங்கலில் ஒன்றான  நயாரிட்டில் (Nayarit)  மட்டுமே காணப்படும் இவ்வரிய வகைக்கற்றாழை குட்டையானது   2 அடி வரை வரையே வளரும். 12 அடி உயுர மலர்த்தண்டின் இருபுறமும்  வரிசையாக  இளஊதாமஞ்சள் நிற மலர்கள் தோன்றுவதால் இக்கற்றாழைக்கு இந்தப்பெயர் வந்தது.. ஒரு செடியில்  60 செமீ நீளமுள்ள 100 லிருந்து 200 இலைகள் அடுக்கடுக்காக அமைந்திருக்கும்,

இலை விளிம்புகளின் நார்கள் நூலிழைகளைப்போல உரிந்து வந்து இலைகளின் அடுக்குகளுக்குள் சிக்கி இருப்பதும் அழகாக இருக்கும்

மலைக்கற்றாழை-Mountain Agave-Agave Montana villarreal

நீலக்கற்றாழையைப்போலவே இதன் இலைகள் இருக்கும் ஆனால் இளம்பச்சை நிறத்தில் அதிக சதைப்பற்றுடன்  இருக்கும்.  இலைகளின் ஓரங்களில் லவங்கபட்டையின் அடர் சிவப்பில் கோடுகள் இருக்கும்.

10 வருடங்களுக்கு பிறகு 20 அடி நீள மலர்த்தண்டு உருவாகி  பிரகாசமான மஞ்சள் நிற மலர்கள் உண்டாகும். இக்கற்றாழை 4 அடி உயரம் வரை வளரும். எந்த நோயும் இந்த கற்றாழையை தாக்காது. இது கற்றாழைகளின் அரசி என அழைக்கப்படுகின்றது. இனிப்புச்சுவை உள்ள இதன் மலர்களை உள்ளூர் மக்கள்  சாப்பிடுவதுண்டு. மலர்கள் வண்ணத்துபூச்சிகளை அதிகம் கவரும். இலைச்சாறு பட்டால் தோல் அழற்சியை உண்டாகும்.

பெருங்கற்றாழை-Agave salmiana ferox-Feroceous/Giant Agave

11 அடி உயரம் வரை வளரும் இந்தக் கற்றாழை அடர்பச்சை நிறத்தில் அகன்ற உறுதியான இலைகளைக் கொண்டது. இலைகள் ரோஜா இதழ்களைப்போல அடுக்கடுக்காக ஆனால் தளர்வாக அமைந்திருக்கும். இலைகளின் விளிம்புகளில் மிகக் கூரிய   8 செமீ நீளமுள்ள பெரிய முட்கள் அமைந்திருக்கும். 15லிருந்து 25 வருடங்களில் நீண்ட மலர்த்தண்டின் நுனியில் பசுமஞ்சள் நிற மலர்களை உருவாக்கும். இவற்றை தொட்டிகளிலும் வளர்க்கலாம்.

ஒரு சில மென்மையான இலைகளைக்கொண்டிருக்கும் வகைகளைத்தவிர பிற கள்ளிக்கற்றாழைகள் அனைத்திற்குமே நல்ல சூரிய ஒளி தேவைப்படும். அதிகமாக நீர் ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும். மணற்பாங்கான இடங்களில் செழித்து வளரும். வாடிய இலைகளை வெட்டுகையில் ஆங்கில ‘v’ வடிவத்தில் இலையின் கீழ்பகுதி இருக்கும்படி வெட்டவேண்டும். இல்லாவிடில் அடித்தண்டு உலர்ந்துவிடும்.

மதுபானங்களுக்காக கள்ளிக்கற்றாழைகளை ’ஜிமாதர்’கள் (jimador) எனப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த  திறமையானவ்ர்கள், (Coa ),கோவா எனப்படும் நீண்ட கைப்பிடியின் நுனியில் வட்ட வடிவ மிகக் கூரான கத்தியை உடைய உபகரணத்தால் இலைகளை பாதுகாப்பாக  செதுக்கி அடித்தண்டை எடுப்பார்கள்.

கள்ளிக்கற்றாழைகளின் புகைப்படங்களை பார்க்க; https://www.shutterstock.com/search/agave

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑