லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 1 of 6)

வாசனை!

 தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வாரமே தேர்தல் அதிகாரியாக பணியாற்ற வேண்டிய விண்ணப்பங்கள் கொடுத்துவிட்டார்கள், நான்  அப்போதே பூர்த்தி செய்து  கொடுத்து விட்டேன். தேர்தல் பணி கடுமையானதாகத் தான் இருக்கும் அடிப்படை வசதிகள் அற்ற பள்ளிக்கூடங்களில் கவுன்சிலர்களின் அலப்பறைகளுக்கு மத்தியில் அதிகாலையிலிருந்து சரியான உணவோ தேநீரோ கூட இல்லாமல் பணி புரிந்திருக்கிறேன்.  நான் மட்டுமல்ல பலரும் அப்படித்தான் எனினும்  நான் ஒருபோதும் எந்தக்காரணம் கொண்டும்  தேர்தல் பணியை மறுதலித்ததோ அன்றி பொய்க்காரணங்கள் சொல்லி தவிர்த்ததோ கிடையாது 

அரசுப்பணியினால் மட்டுமே என்வாழ்க்கை இத்தனை கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நொடியும் நினைவில் கொண்டிருக்கிறேன். எனவே அரசுப்பணி சார்ந்த எதுவும் எனக்கு அதிமுக்கியமானவைகள்தான்.

ஆனால் அரசியல் குறித்தான அறிதல் எனக்கு மிக மிக குறைவுதான் அதில் அத்தனை சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை அரசியல்வாதிகளிடம் எனக்கு பரிச்சயம் இல்லை செய்தித்தாள்களும் தொலைக்காட்சியும் இல்லாததால் அரசியல் மாசுபடாத வீடு இது.

 இதற்கு சமீபத்திய உதாரணம் இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. செல்வேந்திரனும் குறளரசியும் கல்லூரிக்கு வந்திருந்தனர்.  அவர்கள் வருவது முன்பே எனக்கு தெரியும் என்பதால் அவர்களை வரவேற்க  முதல் தளத்திலிருந்து கீழிறங்கி வந்தேன்.

 முதல்வர் அறையின் முன் இருக்கும் வரவேற்பறையில் தொலைவில் செல்வேந்திரன் குறளரசி இன்னும் சிலர், அவர்களுக்கு மத்தியில் தொலைவிலிருந்தே முக்கியஸ்தர் என்று அறிந்து கொள்ளும்படியான மற்றொருவரும் இருந்தார்கள். நல்ல உயரமும் நிறமுமாக பொள்ளாச்சியின் பெரும்பாலான மருத்துவர்களை போன்ற தோற்றம் அவருக்கு, உன்னதமான உடைகள். 

செல்வேந்திரன் என்னை பார்த்ததும் அவரிடம் ’’இவங்கதான் நான் சொல்லிட்டு இருந்த லோகமாதேவி’’ என்று துவங்கி என்னை குறித்து பெருமையாக சொல்லி அறிமுகம் செய்து வைத்தார். பதிலுக்கு அவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றெண்ணிக் கொண்டிருக்கையில் அப்படி செல்வேந்திரன் செய்யாதது எனக்கு ஆச்சர்யமளித்தது. 

மறந்திருப்பாராக இருக்கும் என நினைத்துக்கொண்டு நானே ’’தம்பி இவர் யாரு?’’ என்றேன். அந்த இடமே மயான அமைதியானது சில நொடிகளுக்கு. அந்த முக்கியஸ்தர் சுதாரித்துக் கொண்டு  தன்னை’’நான் பொள்ளாச்சியின்  MP ஷண்முக சுந்தரம் ’’என்று அறிமுகப்படுத்தி கொண்டார்

தர்மசங்கடமாகத்தான் இருந்தது எனினும் என் மீது பிழையொன்றும் இல்லை எனக்கு அவரை தெரிந்திருக்கவில்லை அன்றுதான் முதன் முறையாக பார்க்கிறேன்.

அரசியலில் என் அறியாமையை எண்ணிக்கொண்டிருக்கையில்  வேட்டைகாரன் புதூர் கிராமத்தில் நானிருந்த இரண்டு வருடங்களும் பெரியதுரையும் நினைவுக்கு வந்தார்கள். அம்மாவின் பணி மாறுதல்களின் போதெல்லாம் நானும் மித்ராவும் ஊர் ஊராக பந்தாடப்படுவோம்.

அப்படி எல்கேஜி யூகேஜி பொள்ளாச்சி புனித லூர்தன்னை கான்வென்ட்டில், 1ம் வகுப்பு வேட்டைக்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2 வது மீண்டும் புனித லூர்தன்னை மடிக்கு வந்த நாங்கள் 3வது மீண்டும் வேட்டைக்காரன்புதூர் பள்ளிக்கே திரும்பினோம். 4ம் 5ம் தாராபுரம் செயிண்ட் அலோசியஸ் கான்வென்ட்.

  களைப்பும் சோர்வும் அழுக்கு உடைகளும் பசியுமாக   பூட்டிய வீட்டுக்கதவுக்கு வெளியே  மணிக்கணக்காக காத்திருக்கும் வயதை அடைந்திருத்தால் 6லிருந்து பொள்ளாச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும்  தொடர்ந்து படித்தோம்

அந்த 2 வருடங்கள் கிராமத்தில் ஆத்தா அப்பாருவுடன் இருந்தது உண்மையிலேயே பொற்காலம்.

பொள்ளாச்சி வீட்டில் ஏகத்துக்கும் அடக்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. எப்போது நினைத்தாலும் அச்சமூட்டும் இளமைப்பருவம் அங்குதான் கழிந்தது. ஆனால் நேர்மாறாக வேட்டைக்காரன்புதூர் வீட்டில் மகிழ்ந்திருந்தேன்

என் தோழி குஞ்சி அவளது இளைய சகோதரர்கள் பெரிய துரை மற்றும் சின்ன துரை, நான்  எங்கள் நால்வர் கூட்டணி வெகு பிரபலம் அப்போது. அவர்கள் வீடு வளவில் இருந்ததால் அவர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ளக்கூடாது என்று பலமுறை கண்டிக்கப் பட்டிருக்கிறேன் என்றாலும் நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. உள்ளே ஒரு மீறல் துளிர்த்திருந்த காலம் அது.

மித்ரா எங்களுடன் சேர்ந்ததில்லை அவள் அப்போதே சாதிப் பற்றினால் பீடிக்கப்பட்டிருந்தாள்.

குஞ்சியும் சகோதரர்களும் பள்ளிக்கு செல்லவில்லை ஒரு தோட்டத்தில் அவர்கள் குடும்பமே வேலை செய்தது. என் விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த மாலைகளிலும்  நால்வருமாக வேட்டைகாரன்புதூரை அங்கும் அங்குலமாக சோதித்தறிந்திருக்கிறோம்.

அரசியலுக்கு வருகிறேன்.

பெரியதுரை சின்னதுரை இருவருமே  சாம்பல் வண்ணத்தில் அரைகால் சட்டை அணிந்து  மட்டுமே என் நினைவுகளில் இன்னும் இருக்கிறார்கள். மேல்சட்டையுடன் அவர்களை என்னால் நினைவு கூற முடியவில்லை குஞ்சி அவளது அப்பாவின் பழைய சட்டையும் பாவாடையுமாய் இருப்பாள்.

எங்களின் விளையாட்டுகளில் ஒன்று  அரசியல் உரை.பெரியதுரை ஒரு பழந்துணியை வெற்றுத்தோளில் துண்டாக அணிந்துகொள்வான்.ஒரு சிறு பாறை மீது அவன் நிற்க  நாங்கள் மூவரும் கீழே தரையில் அமர்ந்து கொள்வோம்.  அவனது கைமுஷ்டியை மைக் போல மடக்கி வாயருகில் பிடித்துகொண்டு பிரசங்கத்தை ’’ தாய்மார்களே! வாக்காளப்பெருமக்களே’’ என்பதற்கு பதிலாக தாயையும் சகோதரியையும் குறிப்பிடும் கிராமத்தின் ஆகக்கேவலமான கெட்ட வார்த்தைகள் இரண்டைச்சொல்லி துவக்குவான். அப்போது சிரிப்பாகத்தான் இருந்தது எனக்கு. 

இப்போது நினைக்கையில் 10 அல்லது 12 வயதிருக்கும் அந்த சிறுவனின் நகைச்சுவை உணர்வு வியப்பளிக்கிறது. கூடவே அவனுக்கு அரசியல் குறித்த ஞானமும் இருந்திருக்கிறது போல.

வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையிலிருந்தவர்களின் முகமுழியே வேண்டாம் என்றுதான் பெரும்பாலும்  நினைப்பது ஆனால் சந்திக்க விரும்பும் வெகு சிலரில் பெரிய துரை என்னும் நண்பன் இருக்கிறான்.

பெரிய துரை எனக்கு அறிமுகம் செய்த சாகசங்களில் முக்கியமானது நிலத்தில் பதிந்திருக்கும் பெரும்கற்களை புரட்டி அவற்றினடியில் இருக்கும் சிற்றுயிர்களை கலைத்து ஓடச்செய்வதும் ஆராய்வதும்.அதை நான் பலமுறை தனித்தும் செய்துவந்தேன்

ஒருக்கில் நான் மட்டும் ஒரு பரந்த மைதானத்தில் செடிகொடிகளின் மறைவில் என்னால் தூக்கவே முடியாத பெரிய தட்டையான கல்லை சிரமப்பட்டு தூக்கி அதனடியில் இருந்த ஏராளமான சில்லறைக்காசுகளை கண்டேன். அவற்றில் என் சிறு கைகளில் எடுத்துக்கொள்ள முடிந்த அளவு எடுத்துக்கொண்டு வந்து ஆத்தாவிடம் கீழே கிடந்ததாக சொல்லிக் கொடுத்தேன். ஆத்தா காசுகளை அஞ்சறைப்பெட்டியில்  வைத்துக்கொண்டார்

அடுத்த வாரமும் அப்படியே கொண்டு வந்தபோது ஆத்தா சந்தேகத்துடன் என்னை விசாரித்தார். நான் ஒரேயடியாக கீழேதான் கிடந்தது என்று சாதித்தேன். உண்மையை சொன்னால் கற்களை புரட்டியதற்காக அடிகிடைக்கும் என தெரிந்திருந்தேன்

  பின்னர் என்னை ராமராஜ் சித்தப்பா தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை அறியாமல் மீண்டும் நில வங்கியிலிருந்து சில்லறைகளை எடுத்தபோது சித்தப்பா அவற்றை முழுவதுமாக  வாரி எடுத்து லுங்கியில் கட்டிக்கொண்டு வீடு வந்தார். அங்கே குண்டு விளையாடும் பையன்கள் சேர்த்துவைத்த காசுகள் அவை என்பதை பிற்பாடு தெரிந்துகொண்டேன்.

 வேட்டைகாரன்புதூர் பள்ளிக்கூடமும் என் அழியாத நினைவுகளில் இருக்கிறது. சிறிய ஓட்டுக்கட்டிடம் கேட்டை திறந்தால் ’ப’ வடிவ அறைகளுடன் கட்டிடமும் ஒவ்வொரு அறையின் முன்பும் நெட்டிலிங்க மரங்களும் ஒரே ஒரு வகுப்பறையின் முன்னால் மட்டும் வேம்பும் நிற்கும். நடுநாயகமாக தலைமை ஆசிரியர் அறை, வாசலில் சூரிப்பழங்களும் இலந்தை பழங்களும் வேகவைத்த மரவள்ளி கிழங்கும் விற்கும் ஒரு பாட்டி. 

இந்த 2024 புத்தாண்டன்று அந்த வழியே கோவிலுக்கு சென்றேன். அதே கட்டிடம் ஒரு மாற்றமுமில்லாமல் இருந்தது. வேம்பு மட்டும் இல்லை. 3 வது படிக்கையில் என் ஆராய்ச்சியெல்லாம் எப்படி நெட்டிலிங்கமரம் இலைகளை உதிர்க்காமல் அப்படியே நின்றமேனிக்கு நிற்கிறது. வேம்பின் இலைகள் மட்டும் மஞ்சளாகி கொட்டிக்கொண்டே இருக்கிறது என்பதில் தான் இருந்தது . அதற்கு உடம்பு சரியில்லை என்று ஒரு எண்ணம் இருந்த்தால் வேம்பின் மீது பெரும் பரிவுமுண்டாகி இருந்ததும் தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது.

என் 1ம் வகுப்பின் ஒரே ஆசிரியை சரஸ்வதி எனும் பெயருடன் இருந்ததும் தற்செயலல்ல.அவர் அப்போது ஒய்வு பெறும் வயதில் இருந்திருக்கலாம், எனக்கு அவரை மூதட்டியாகத்தான் நினைவு கொள்ளவே முடிகிறது. வகுப்பில் பாடம் என்பது சிலேட்டில் அவர் ’அ’ என்று முழு சிலேட்டையும் அடைத்து எழுதிக்கொடுக்க அந்த ’அ’ வின் மீது மீண்டும் மீண்டும் சுவையான சிலேட்டுப்பென்சிலால் நாங்களும் ’அ’ எழுதிக்கொண்டே இருப்பதுதான். 

அப்பாரு தினம் காலை எனக்கும் மித்ராவுக்கும் சில்லறை காசுகள்,கொடுப்பார் 1 அல்லது 2  பைசாக்கள். அதில் திண்பண்டங்கள் வாங்கிக்கொள்வோம்

அப்பாரு ஊர்த்தலைவர் என்பதால் பள்ளியில் சகோதரிகளான எங்களுக்கு பள்ளியில் நல்ல மரியாதையும் இருந்தது

3 ம் வகுப்பில் இருக்கையில் ஆண்டு விழாவுக்கு ஒரு நடனம் ஆட (தலைமையாசிரியரின் போதாத காலம்) எங்களிருவரையும் தேர்வு செய்தார்கள்,இடுப்பை வெடுக் வெடுக்கென வெட்டிக்கொண்டு அவ்வப்போது இடுப்பில் இருந்து ஒரு கையை மட்டும் எடுத்து மேடையில் இருக்கும் காந்தியின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி ‘’காந்தி தாத்தா நம் தாத்தா’’ என்ற பாடலுக்கு நடனம் ஆட பயிற்சி அளிக்கப்பட்டது.

 வெடுக் வெடுக் என்று ஆட்ட இடுப்பு என்னும் ஒரு பாகம் எனக்கு இல்லாமலிருந்ததுதான் நடனப்பயிற்சியின் பெரும் சிக்கலாக இருந்தது. புஷ்டியாக பூரிப்பாக ஒரே  சதைத்திரட்சியாகத்தான் இருப்பேன் அப்போது. மித்ரா கொஞ்சம் சமாளித்துக்கொண்டு ஆடினாள். ஆண்டுவிழாவில் ஆடிய நினைவிலில்லை. பயிற்சியில் மூச்சுவாங்கிய என்னிடம் தலைமைஆசிரியர் கடுப்பில்’’ நீங்க ரெண்டு பேரும் லலிதா பத்மினின்னு நினச்சு கூப்பிடலை டேன்ஸ் ஆட உங்ககிட்டதான் கவுன் இருக்குன்னு கூப்பிட்டேன்’’ என்று திட்டியதும், நடனப் பயிற்சியும் மட்டும் நினைவில் இருக்கிறது. பள்ளி பிரேயர் போதும் அருமையான ஒரு பாடல் பாடுவோம்

’’அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே

அச்சமற்ற தூய வாழ்வு வாழ வேண்டும் நாட்டிலே 

இன்பமான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும்

அன்பினாலே அருவி செய்து ஆடவேண்டும் வீட்டிலே!’’ 

என்று துவங்கும் பாடலது.

வீட்டிலிருந்து நடந்து வரும் தொலைவில்தான் பள்ளிக்கூடம். சமயங்களில் அப்பாருவுடன் கூண்டு வண்டியிலும் வருவோம். அப்பாரு பிரபல குதிரை மற்றும் மாட்டுவியாபாரி சந்தைகளுக்கு போனால் பலநாட்கள் கழித்துத்தான் வீடு வருவார் அப்படி  வரும்போது அகாலங்களில் பள்ளிக்கு வந்து திண்பண்டங்கள் கொடுத்து கொஞ்சிவிட்டு செல்வதும் உண்டு

பள்ளியில் மிகப்பெருமையான வேலை என்பது ஆசிரியர் வந்தவுடன் தலைமை ஆசிரியர்  அறையிலிருந்து வருகைப்பதிவேடு எடுத்து கொண்டு வருவதுதான். அது ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்கு அளிக்கப்படும். நான் அந்த வேலையை கெஞ்சிக் கேட்டு வாங்குவதுண்டு. 

ஒருநாள் அப்படி  அந்த வேலையைவாங்கி சிட்டாக பறந்து சென்று தலைமை ஆசிரியரிடம் அந்த நோட்டை வாங்கிக்கொண்டு திரும்பி நடந்து வருகையில் அப்பாரு எதிர்பாராமல் பள்ளிக்கு வந்திருந்தார். நான் வகுப்பில் இல்லாமல் மைதானத்தில் தனியே இருந்ததையும் என் கையில் இருந்த அந்த நோட்டையும் பார்த்த அவர் பொங்கி ’’என்ற பேத்தி என்ன உனக்கு பியூனா’’ என்று அன்றைக்கு என் வகுப்பாசிரியரை ஏகத்துக்கும் கடிந்துகொண்டார். பிறகெப்போதும் எனக்கு அந்த வேலை கொடுக்கப்படவே இல்லை. 

மூன்றாவதில் தமிழுக்கென்று ஒரு ஆசிரியர் இருந்தார் அவர் வகுப்பில் அவ்வப்போது முந்தைய வகுப்பின் பாடங்களில் கேள்வி கேட்பார் பதில் சொன்னால் அப்போதே எழுந்து வீட்டுக்கு போகலாம்.  அவர் வகுப்புக்களில் என் பைக்கட்டை கைகளால் முன்கூட்டியே பிடித்துகொண்டு நான் துடிப்புடன் அமர்ந்திருப்பேன் . எப்படியும் அவர் கேட்கும் எந்தக் கேள்விக்கும் எனக்கு பதில் தெரியும். அப்படி பலநாட்கள் பதில்சொல்லி விட்டு பைக்கட்டை மித்ராவிடம் கொடுத்துவிட்டு நான் பெரிய,சின்ன துரைகளுடன் ஊர்சுற்ற கிளம்பி இருக்கிறேன்.

அதுபோன்ற நாட்களில் மட்டுமல்ல எப்போதும் நான் என் பள்ளிக்கு பையை எடுத்துச்சென்றது இல்லை அது எப்போதும் மித்ராவின் வேலை அவளே எனக்கும் சேர்த்து எடுத்துகொண்டு வருவது எழுதப்படாத விதியாக என்னால் சமைக்கப்பட்டிருந்தது.   ஒரு நாள் கோபித்துக்கொண்டு ’’நான் எதுக்கு உனக்கு  வேலை செய்யனும் நீயே எடுத்துட்டு வா’’ என்று தெருவில் மித்ரா என் புத்தகப்பையை (அதாவது சிலேட்டுப்பை) வைத்துவிட்டாள். நான் கிஞ்சித்தும் கவலைப்படாமல் என்  ஊர் சுற்றும் வேலையை பார்க்க சென்று விட்டேன் பின்னர் வீட்டில் கிடைக்கவிருக்கும் அடிகளை எண்ணி பயந்து  அழுதுகொண்டே அவளே எடுத்து கொண்டு வந்தாள்

அந்த பள்ளியின் வேறு வகுப்பின் ஆசிரியை ஒருவர் ஒருநாள் என்னிடம் அவர் மதிய உணவு சாப்பிட்ட பித்தளை தூக்குப்போசியை கொடுத்து கழுவித் தர சொன்னார். அந்த அவமானத்தை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.நான் ஒருபோதும் அப்படியான வேலைகளை மட்டுமல்ல எந்த வேலைகளையுமே  வீட்டில் செய்ததே இல்லை

  ஆனால் ஆசிரியர் என்பதால் மறுக்கவும் முடியவில்லை வாங்கி அதை குழாயடியில் அலசிக் கழுவினேன். கழுவுகையிலேயே என் மனம் எல்லா திட்டங்களையும் தீட்டியது.  நானே வலிய அவரிடம்  ’’டீச்சர் இதை வீட்டில் கொண்டு போய் கொடுத்துறட்டுமா’’ என்றேன். அவர் மகிழ்ந்து சரி என்றார் அந்த ஆசிரியை வீடு எனக்கு தெரியும் (எனக்கு தெரியாத வீடுகள் சந்துகள் பொந்துகள் ஏதும் அங்கு இல்லை) காமாட்சியம்மன் கோயில் பின்புறத்தில் ஒரு சிறு இருளடைந்த வீடுஅது  கண் தெரியாத அவரின் மாமியார்  வாசல் திண்ணையில் ஒரு குச்சியுடன் அமர்ந்திருப்பார், சத்தம் கேட்டால் குச்சியை முன்னால் நீட்டி தட்டி யாரு? என்பார்.

நான் அந்த தூக்குப்போசியின் மூடியை கழற்றி வைத்துக்கொண்டு அடிப்பாத்திரத்தை மட்டும் அவர் முன்னால் ஓசையெழ வைத்துவிட்டு ’’டீச்சர்  தூக்குப்போசியை கொடுத்துட்டு வர சொன்னாங்க’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

ஆத்தாவிடம் அந்த  மூடியைகொடுத்து வழக்கமான பொய்யான’’ கீழே கிடந்தது’’ என்பதை சொன்னேன். விலைக்குப்போட பழைய பொருட்களை சேர்த்து வைத்திருக்கும் அட்டாலியில் ஆத்தா அதை வீசியெறிந்தார்கள்

 என்னிடம் நூற்றுக்கணக்கான முறை தூக்குப்போசியின் மூடி எங்கே என்று கேட்ட அந்த ஆசிரியருக்கு  ஒரே பதிலாக ’’பாட்டிட்ட கொடுத்துட்டேன்டீச்சர்’’ என்பதையே சொல்லிக்கொண்டிருந்தேன். பணி ஓய்வு பெறும் வரை அவர் மாணவர்களிடம் எந்த வேலைகளையும் ஏவியிருக்க மாட்டார். 

இதுபோன்ற எனது செயல்கள்  வீட்டினரால் ‘’திண்ணக்கம்’’ என்னும் இப்போது வழக்கொழிந்து விட்டிருக்கும் சொல்லால் அவ்வப்போது குறிப்பிடப்படும்.

 புகையிலை வாசத்துடன் அப்பாருவின் கருப்பு கம்பளிக்குள் பொதிந்துகொண்டு  அவர் சொல்லும் மகாபாரதக் கதைகளை கேட்டது, வறுத்த ஈசல் உருண்டையுடன் கருப்பட்டிகருப்பு காப்பியை மேலெல்லாம் வழிய குடித்தது , வீட்டுக்குள் வெளிச்சம் வர ஓட்டில் ஓரிடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியின் வழியே தரையில் இறங்கி இருக்கும் வெளிச்ச சதுரத்தில்  தட்டை வைத்துக்கொண்டு மித்ராவுடன் சண்டையிட்டுக்கொண்டு சாப்பிட்டது   என ஏராளம் நினைவுகள் மலரும் அவ்வப்போது.

கள்ளிப்பழத்தை முட்களுடன் வாயிலிட்டு நாக்கெல்லாம் முள்குத்தி வாயை மூடமுடியாமல் திறந்த படியே அலறிக்கொண்டு வீடுவந்து மேலும் அடிவாங்கியது, வேப்பமுத்துக்களை படிப்படியாக  பொறுக்கிச்சேர்த்து காசாக்கியது,  ஆத்தா களை எடுத்த காட்டில்  மதிய உணவின் போது   மல்லிகை அரும்புபோலிருந்த பச்சைமிளகாய்ப்பிஞ்சை  பறித்து கடித்துக்கொண்டு பழஞ்சோற்றை  கரைத்து குடித்தது, சூரிப்பழங்களின் கொட்டைகளை உடைத்து உள்ளே எண்ணெய் தடவினது போல மினுங்கும் விதைகளை  எடுப்பது, சீனி புளியங்காயின் கருப்பு விதைகளை காயமில்லாமல் உரிப்பது, எருக்கம் பூக்களின் அரும்புகளை ஓசையெழ அழுத்தி வெடிக்கச் செய்வது, வாரா வாரம் வியாழக்கிழமைகளில் ஆத்தா சாணி மெழுகும் வாசலுக்கு  நீலக்கரையிடவென்று அவுரிச்செடிகளை பறித்தரைத்து சாயமெடுத்தது,  அத்தைகளுடன் பருத்திபறித்தது,  இரட்டைஜடையில் ஊதா டிசம்பர் பூக்களை சூடிக்கொண்டது,  மஞ்சள் நிற  (Hibiscus glanduliferus) மலர்களை  நீரில் கசக்கி எண்ணையாக்கி கொட்டங்குச்சியில் சோறாக்கி விளையாடியது ( எப்போதும் சின்ன துரை வாயில் வண்டி ஓட்டிக்கொண்டு அலுவலகம் போகும் அப்பா ரோல்தான் செய்வான், அலுவலகம் போகும் முன்னர் நானோ குஞ்சியோ  கொட்டாங்குச்சிகளில் மண் நிரப்பி ஆக்கி வைத்திருப்பதை ’’என்னடி சோறாக்கி இருக்கே’’ என்று காலால் தவறாமல் எத்துவான்) என வேட்டைக்காரன்புதூரில் தான் எனக்கு தாவரங்களுடனான அணுக்கமும் துவங்கியது

அப்பாருவின் பெயர் மயில்சாமி என்பதால் ஆத்தா ம, மை என்னும் வார்த்தைகளை சொல்லமாட்டார். அப்போது மைதா வந்திருந்தது,  ஆத்தா அதை ரக்கிரிப்பொடி என்பார்.

அம்மாவும் அப்பாவின் பெயர் அழுக்கு ராஜ் என்பதால் அழுக்கு என்றே சொன்னதில்லை ’’துணியை கசக்காதே வீணாப் போயிரும் போட்ட துணியெல்லாம் துவைக்கப் போடு’’ இப்படி அழுக்கு என்பதை சொல்லாமல் தவிர்த்தே பேசுவார். கணவன் பெயரை சொன்னால் அவருக்கு ஆயுசு குறையும் என்னும் நம்பிக்கை ஆத்தாவுக்கு இருந்ததில் வியப்பில்லை ஆனால்   அப்பாவின் மன அழுக்குக்களையெல்லாம்  முற்றாக அறிந்திருந்த அம்மாவுக்கும்  இருந்ததுதான் நம்ப முடியவில்லை. அம்மா விரும்பியபடியே அப்பாவை நிறையாயுளுடன் விட்டுவிட்டு மறைந்துவிட்டார். 

இன்றென்னவோ பழைய நினைவுகள், வேட்டைகாரன்புதூர் வாசனைகள். 

திருவண்ணாமலை!

சென்ற வாரம் முதன்முதலாக திருவண்ணாமலை சென்றிருந்தேன் ஒரு வேள்வியில் கலந்து கொள்ள.புதுச்சேரியும் திருவண்ணாமலையும் என் கனவுப்பயணங்களின் பட்டியலில் இருந்தவை. புதுச்சேரிச் கனவு முன்பு (2017 ல்) நனவானது.மறக்கமுடியாததுமானது.

ஒரு சிறுகதை பட்டறை. கடற்கரை அருகில் இருந்த ஒரு தங்குமிடத்தில்.

கரும்பாறைகள் நிறைந்திருந்த , தூரத்தில் சிவப்பும் பச்சையுமாக விளக்குகள் ஒளிர மெல்ல  நகர்ந்து கொண்டிருந்த பெருங்கப்பல்களும், விளிம்புகளில் வெள்ளி பூசிக்கொண்டு துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த ஏராளமான சிற்றலைகளுமாக  அந்த கடற்கரை  அடிக்கடி கனவுகளில் வந்து கொண்டிருக்கிறது.

மணக்குள விநாயகர் கோவில் நடை திறக்கும்வரை காத்திருக்கையில் சாலையோர மரங்களில் பறித்த மரமல்லியும் பவளமல்லியும், பூஜைக்கென அத்தெருவில் தயாராகிக்கொண்டிருந்த அந்த குட்டி யானை,பனானா ஸ்ப்ளிட் ஐஸ்கிரீம், பழைய புத்தகக்கடை, அழகான வீடுகள் நிறைந்த நேர்த்தியான தெருக்கள், முதல் பானிபூரி, (முதல் குமட்டலும்) அங்கு வாங்கிய இளஞ்சிவப்பில் வான் நீல கரையிட்ட பருத்திப்புடவை  (அதை கோவிட் பெருந்தொற்று முடிந்த சமயத்தில் யாசகம் கேட்டு வந்த ஒரு நிறை சூலிக்கு அளித்தேன்) இரவு ஊர் திரும்புகையில் பெய்த பெருமழை எல்லாம்  எல்லாம் நினைவிருக்கிறது. 

இப்போது பட்டியலின் அடுத்த இடம் திருவண்ணாமலை. அகரமுதல்வன் அழைத்ததால் அந்த வாய்ப்பு கிடைத்தது.

மறக்க முடியாத பல அனுபவங்கள் அங்கு.அந்த பெருவேள்வி குறித்து ஒரு பதிவு எழுதினேன் வந்த உடனேயே.

மேலும் சில துண்டு துண்டான சுவாரஸ்யங்களும் இருந்தன அப்பயணத்தில். ஏராளமான வெளிநாட்டவர்கள் அங்கிருந்தார்கள். அழுக்கான அழுக்காக ஒரு அமெரிக்க இளைஞன்,  தலைமுடி அழுக்கு, தோளில் மாட்டியிருந்த துணிப்பை மகா அழுக்கு, சட்டையும் கால்சராயும்  துவைத்தல் என்பதை கண்டிருக்கவேயில்லை.  அவன் என்னைக்கடந்து செல்கையில் எதிரே வந்தஒரு கருப்பு நாயிடம் சிநேகிதமாய் ’ஹாய்’ என்றான். ஆனால் நாய் அவனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் அவசரமாக எங்கோ விரைந்தது.

அடர்நீல ஸ்லீவ்லெஸ் பனியனும் குட்டைப்பாவடையுமாக நடந்துவந்து கொண்டிருந்த ஒரு ஐரோப்பிய இளைஞியிடம், அவர் கடந்துசென்ற ஆட்டோவிலிருந்த ஓட்டுநர் ’’ஹாய் மேம்!’’ என்றார் தோழமையுடன், அவரும் அழகாக புன்னகைத்து கையசைத்து விட்டு சென்றார். முன்பே பரிச்சயமானவர்கள் போல !

காருக்காக சாலையோரம் காத்திருக்கையில்  இளநீர்க்கடைக்கு  மனைவியுடன் வந்த மற்றுமோர் அமெரிக்கர் அந்த இளநீர்க்கார அம்மாவிடம் good water? என்று கேட்டார். அந்த நல்ல தாட்டியான உடம்பும், காம்பஸ் வைத்து வரைந்ததுபோல  வட்டமான முகத்தில் பெரிய பொட்டுமாக இருந்த அந்த அம்மா இயல்பாக ’very good water’ என்று விட்டு அடுத்தாக அவரிடம் from where? என்றார். நான் புன்னகையுடன் அந்த இடத்தை கடந்தேன்.

திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளால் அதன் கலாச்சாரமும் பண்பாடும் எத்தனை இன்ஃப்ளுயன்ஸ் ஆகியிருக்கிறது என்பது வியப்பளித்தது. இப்படி இவர்களை எல்லாம் கவனித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருக்கலாமென்று தோன்றியது.

பூரணாகுதி!

டிசம்பர் கடைசி வாரத்தில் ஒரு நாள் அகரமுதல்வனிடமிருந்து  அழைப்பு. பேசிக்கொண்டிருக்கையில் தான் திருவண்ணாமலையில்  இருப்பதாகவும்,ஒரு வேள்விக்கான இடம் தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். வேள்வி எனும் சொல்லையே நான் காதால் யார் சொல்லியும் அதுவரை கேட்டிருக்கவில்லை 

வெண்முரசில்  பாஞ்சாலி தோன்றியதாக சொல்லப்படும் துருபதனின் வேள்வியிலிருந்து அஸ்தினாபுரத்தில், இந்திரப்பிரஸ்தத்தில் நிகழ்ந்த ராஜசூய வேள்விகள் மகா புருஷமேத வேள்வி வரை விலாவாரியாக வாசித்தறிந்திருக்கிறேன், எனினும்  யாரும் ’வேள்வி’ என சொல்லிக் கேட்டதே இல்லை. ஆர்வமாக அதை குறித்து விசாரித்தேன் விளக்கமளித்தார் ’’வருகிறீர்களா தேவி’’? என்றும் கேட்டார்?

அகரமுதல்வன் மீது எனக்கு பெருமதிப்பும் அன்பும் எப்போதுமுண்டு. நான் பிரமித்து பார்த்துக்கொண்டிருக்கும் வெகுசிலரில் அகரனும் ஒருவர்.  நான் அது  வரையிலும் திருவண்ணாமலைக்கு சென்றதில்லை. கிரிவலம், பெருஞ்சோதி ஏற்றுதல், இளையராஜா, ரமண மகரிஷி, துறவிகள், ஜெயமோகன் என்று அத்தலத்துடன் தொடர்புடைய சில விஷயங்கள் மட்டுமே துண்டு துண்டாக என் நினைவுகளில் இருந்தன. மேலும் வேள்விகளை அத்தனை தீவிரமாக வாசித்தவளாகையால் அதைப் பார்க்க வேண்டும் என விரும்பினேன். 

எல்லாவற்றைக்காட்டிலும் ’’வருகிறீர்களா தேவி?’’ என்பதை ஒரு தெய்வ விளி என்றே எடுத்துக்கொண்டேன், ஒரு திருத்தலத்திற்கு வருகிறாயா? என்றென்னிடம் எப்போது கேட்கப்பட்டாலும் கேட்பது தெய்வமென்றே நம்புவேன்.  தம்பியும் நானுமாக கலந்து கொள்வதாக சொன்னேன்.

5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு முந்தின நாள் தான் பணியில் இணைந்திருந்த புதிய ஓட்டுநருடன் நல்ல மழையில் புறப்பட்டு திருப்பூர் சென்று விஜியை அழைத்துக்கொண்டு  திருவண்ணாமலை நோக்கி பயணித்தோம்.  ஊரை நெருங்கும் முன்னரே குறிஞ்சி பிரபா  அவ்வப்போது அழைத்து எங்கிருக்கிறோம் என கேட்டுக்கொண்டார். குறிஞ்சிப்பிரபாவையும் நான் அன்றுதான் முதன் முதலாக சந்திக்கவிருந்தேன். அவர் பெயர் மட்டுமே எனக்கு பரிச்சயம்.

அழைப்பிதழில் அதீனா ஹோட்டலுக்கு முன்பாக வேள்வி நடைபெறும் என்றிருந்ததால் நேரே அங்கேயே சென்றோம். அதீனா ஹோட்டலுக்கு எதிர்புறம் ஒரு பிரம்மாண்டமான வண்ணமயமான கோவிலிருந்தது. வழக்கம் போல் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.  தம்பி விஜி சொல்லித்தான் அது அசல் கோவிலல்ல, கோவிலைப்போன்ற அமைக்கப்பட்டிருக்கும் வேள்விப்பந்தலென்று.

என் மனதில் இருந்த வேள்வி என்னும் சித்திரத்துக்கு மிக பொருத்தமான ஒரு பந்தல் அங்கிருந்தது. மாபெரும் பந்தல் அது. மிக சிறப்பாகவும் மிக கவனமுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேள்விச்சாலையும் அப்படியே!

காரில் இருந்து இறங்க இறங்கவே  குறிஞ்சி பிரபா அறிமுகப்படுத்திக்கொண்டார்.  உற்சாகமான இளைஞர். அவரைப்போலவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பணியாற்றிக்கொண்டிருந்த பலரையும் அங்கு பார்த்தேன். வேள்வியை நிகழ்த்தும் தன் மாமனிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.  

ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து சூழ்ந்திருந்த துடியான இளைஞர்களிடம் என்னவோ கவனமாக சொல்லிகொண்டிருந்தவர் குறிஞ்சி பிரபா என்னைக்காட்டி ஏதோ சொன்னதும் நான் அவரருகில் செல்லும் முன்பு அவராக எழுந்துவந்து ’’நான் குறிஞ்சி செல்வன் வாங்க’’ என்று வரவேற்றார். குறிஞ்சி என்பது ஒருவேளை குடும்பப்பெயராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.  

உடனேயே  ’’அம்மாவுக்கு ஒரு சேர் போடுங்கப்பா’’ என்று பிறரை பணித்தார். பின்னர் நாங்கள் தங்குமிடம் குறித்து தகவல் சொல்லிவிட்டு பிற வேலைகளை பார்க்கச்சென்றார்.

வேள்விக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. குறிஞ்சி பிரபாவிடம் பேசிக்கொண்டிருக்கையில் தான் அம்மகத்தான மனிதரைக் குறித்து அறிந்து கொள்ளத் துவங்கினேன். அவர் தன் தாய்மாமன் என்றும் ஜப்பானில் தொழில்செய்பவரென்றும் ஜோதிடக்கலை வல்லுநரென்றும் இந்த வேள்வியை பல வருடங்களாக பெருஞ்செலவில் பொதுநன்மைக்காக நடத்திக்கொண்டிருக்கிறார் என்றும் சொன்ன பிரபா மாமனின் பெயரான குறிஞ்சியைத்தான் தன் பெயருக்கு முன்னர் வைத்து கொண்டிருக்கிறார்.

தான் அணிந்திருந்த கருப்புச் சட்டையை தொட்டுக்காட்டி ’’இந்த சட்டையை நான் போட்டுகிட்டு இங்கே உட்கார்ந்திருக்கேன்னா அது மாமாவால்தான்’’ என்றார்.

வியப்பாக இருந்தது. அகரமுதல்வனிடம் இதை சொல்லுகையில்  ’’பிரபா மட்டுமல்ல அவரது ஊருக்கு போனால் அந்த கிராமமே அவர் பெயரைத்தான் தன் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டுருக்கும். அத்தனைக்கு உணர்வுபூர்வமான பிணைப்பை தன் சுற்றத்தாருடன் கொண்டவர் அவர்’’ என்றார்.

நேற்றும் இன்றும் இருநாட்களாக அவ்வேள்வியில் கலந்துகொண்டது என் வாழ்வின் ஆகச்சிறந்த அனுபவம் என்றால் திரு குறிஞ்சி செல்வன் அவர்களை  அறிந்துகொண்டது அதற்கிணையான அனுபவம். 

இத்தனை வருட வாழ்வில் கீழ்மைகளை  மிக அருகிலென பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் மானுட மனம் செல்லும் உச்சங்களை, அகவிரிவுகளை இப்படி அரிதாகவே காண்கிறேன். திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் எளிமை, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கவனம், வருபவர்களை ஒன்றுபோல அவர் கவனித்த விதம், அத்தனை பெரிய நிகழ்வில் மிக நுண்மையாக  ஒவ்வொன்றையும் நோக்கிக் கொண்டிருக்கும் அவரது  கூர்மை என வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.  சினிமாத்துறை உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள்  அவரது அழைப்பின் பேரில் வேள்வியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். மாபெரும் நிகழ்வது.

வெண்முரசு வழியே நான் அறிந்திருந்த வேள்விகளிலொன்றை அப்படியே அச்சு அசலாக நேரில் கண்டேன். மிகச்சிறப்பான வேள்விப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பகுதியில் உட்கூரை அலங்காரங்கள் வண்ணமயமான துணிகளில்  மலர்வடிவில் அமைந்திருந்தது. வேள்வி நடைபெற்ற இடங்களில் உலோகக் கூரை, புகை உள்ளே நிறையாத  உயரத்தில் புகை வெளியேறுவதற்கான தேவையான இடைவெளிகளுடன் கச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது. வேள்விப்பந்தலை அமைத்தவரை சந்தித்த போது, கோவிலென்றே எண்ணி கன்னத்தில் போட்டுக்கொண்டதை அவரிடம் சொன்னேன். நாற்காலிகள் போதுமான அளவில் காத்திருந்தன. 

எல்லாவேளையும் மிகச்சிறப்பான  உணவு  மனமுவந்து பரிமாறப்பட்டது.

சோளப்பொறியும் ஐஸ்கிரீமும் குழந்தைகளுக்கென வெளியே கிடைத்தது. ஏறக்குறைய என் வயதிலிருந்த ஒருவர் மூன்று சோளப்பொறி கூம்புகளை ஒரே சமயத்தில் வாங்கி மகிழ்ந்து சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்தேன். விழாக்கள் அனைவருக்குள்ளிருக்கும் குழந்தைகளை வெளியே கொண்டு வந்துவிடுகிறது

திரு குறிஞ்சி செல்வன் அவர்களின் மானசீகமான ஆயிரம் கைகளாக அங்கி பலநூறு  இளையோர் இயங்கிக்கொண்டிருந்தனர். அவரைக்குறித்து பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அவரது சுற்றத்தார் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையும் அன்பும் ஆச்சரியமளித்தது

சில ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலில் குடும்பத்தில் ஒரு தொழில் துவங்கினோம். அதற்கு எனது மூத்த சகோதரரும் பெருந்தொழிலதிபருமானவரையும் அழைத்திருந்தேன். அவரிடம் நிதி உட்பட எந்த உதவியும் நாங்கள் கேட்டிருக்கவில்லை. அவரின் தங்கை குடும்பத்தின் முதலடியின் போது  மூத்தவராக அவரது ஆசிகளும்  உடனிருக்கட்டும் என விரும்பினேன். துவக்க நிகழ்வன்று  அவர் மட்டும் வந்திருந்தார். ’’அண்ணா, அண்ணி வரலையா? என்னும் சம்பிரதாயமான என் கேள்விக்கு இதுக்கெல்லாம் நான் வந்ததே பெரிது’’ என்றார். குன்றிப்போனேன்.

ஆறவே ஆறாமல் பச்சைக்குருதி வீச்சத்துடன் இருந்த அக்காயத்துக்கு குறிஞ்சி செல்வன் எப்படியோ  அன்று மருந்திட்டார். மறுபிறவி என்னும் சாத்தியம் இருப்பின் அவருக்கு சகோதரியாக பிறக்க வேண்டும். இப்படியோர் கனிந்த அன்பில் திளைத்திருக்க வேண்டும்

குடும்ப மூத்தவராக உயர்ந்தநிலையில் இருக்கும் ஒருவர்  சொந்த பந்தங்களுக்கும் பிறருக்கும் என்ன செய்யவேண்டுமோ அதை மனமுவந்து செய்துகொண்டிருந்தார்.

வேள்வி மிக பிரம்மாண்டமாக, மிகச் சிறப்பாக நடந்தது. சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலின் தீக்‌ஷிதர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருந்து வேள்வியை நடத்திக்கொடுத்தனர். வேள்வித்தலைவராக இருந்தவர் அதற்கென்றே பிறந்து வளர்ந்தவர் போல நல்ல  உயரமும் ஆகிருதியும் தேஜஸும் கணீர் குரலுமாக பொருத்தமாக இருந்தார். அவ்வேள்வியை ஒரு நிகழ்த்துகலையைபோல நம்மமுடியாத  அளவிற்கான சிரத்தையும்  ஈடுபாடுமாக செய்து முடித்தார்.

பூரணாகுதியின் போது சொல்திகழ்ந்த அவரது குரலும் எரிகுளத்தில் இடப்பட்ட பொருட்களும் சிவகோஷங்களும் ஒரு நடனம் போன்ற அவரது கையசைவுகளுமாக  உடல்மெய்ப்புக்கொண்டது.

அவரை மானசீகமாக பலமுறை வணங்கிக்கொண்டேன்.வேள்விச்சாலை மிகச்சரியாக இறைஉருவங்களும் கர்ப்பகிரஹமுமாக தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அம்மன்களின் புடவைக்கட்டு அனைத்துப்பெண்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.அதுவும் அந்த தாமரை மலர் நிறத்தில் கரையிட்ட வெண்பட்டு அமோகமாக இருந்தது.

வேள்வியின் துவக்கத்தில் பொற்கதவுகள் திறக்கப்பட்டு முழுஅலங்காரத்திலிருந்த கடவுளுக்கு தீபாராதனை காட்டப்பட்ட போதும் உடல் மெய்ப்புகொண்டது

தீக்‌ஷிதர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக வேள்வியை நடத்தினார்கள். வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் ’’வேள்வி என்பது நாவை பழக்குவதல்ல நெஞ்சை பழக்குவது என்று’’ அதை நேரில் கண்டேன்.வேதங்களுக்கு நெஞ்சைபழக்கியவர்கள் அனைவருமே.

27 நட்சத்திரங்களுக்கும் ஐம்பெரும் பூதங்களுக்குமாக நாற்கோண வடிவிலான 32  எரிகுளங்கள், வேள்வித்தலைவருக்கான விளிம்புகளில் செந்தாமரை இதழ்கள் வரையப்பட்டிருந்த மாபெரும் வட்டவடிவிலுமாக  மொத்தம் 33 எரிகுளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேள்வியை நிகழ்த்துபவர்கள் அமர சிறு புல் பாயிலிருந்து, உள்ளே அனல் கொண்டிருக்கும் சமித்துகள் நெய்க்கிண்ணங்கள், கருங்காலிக்கட்டையில் செய்யப்பட்ட கரண்டிகள் எல்லாம் சரியான நேரத்துக்கு எந்த பிசகுமின்றி கிடைக்கும்படி, விடுபடல்கள் இன்றி தயராக வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் காலை பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சிறப்பு பூசையில் கழுத்தில் அணிவிக்க வேண்டிய மலர்மாலைகள் இரவே ஈரத்துணியில் சுற்றப்பட்டு தெர்மாகோல் பெட்டிகளில்,அடுக்கி வைக்கப்பட்டன.

எரிகுளங்களின் நான்கு திசைகளிலும் வேள்விக்கு எத்திசையிலிருந்தும் தடங்கல்  வரக்கூடாதென்பதற்காக வைக்கப்பட்ட தர்ப்பையிலிருந்து எல்லாம் எல்லாம் மிகச்சரியாக பிழைக்கான வாய்ப்பேயில்லை என்றபோதிலும் சிறு கவனக்குறைவு கூட இல்லாமல் முறையாக நடந்தது.

மேளதாளங்களும் வாண வேடிக்கைகளும் இருந்தன. மிகச்சரியாக மிக முறையாக வேள்விக் கொடி ஏற்றப்பட்டது. வெண்முரசுக்குள் நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது எனக்கு.

வாணவேடிக்கையை கழுத்து வலிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்.2 நாட்களும் இசைக்கச்சேரிகள் கலைநிகழ்ச்சிகளும் இருந்தன

மேளக்காரர்கள் ஓய்வெடுக்கையில் அவர்களுக்கு ஐஸ்கிரீம்கள் கிண்ணங்களில் அல்ல பெட்டிபெட்டியாக கொடுக்கப்பட்டது. கைவலிக்க அத்தனை நேரம் வாசித்த அவ்விளைஞர்கள் சிறுவர்களைப் போல குதூகலித்துக்கொண்டு அதை சாப்பிட்டார்கள்

உணவை அளிப்பதைவிட அதை மனமுவந்து அளிப்பது முக்கியம் குறிஞ்சி செல்வன் உணவை மட்டுமல்ல அனைத்தையுமே மனமுவந்தே அளிக்கிறார். 

சென்னை சென்றிருந்த போது அவருக்கு சொந்தமான விமலம் மெஸ்ஸில் சாப்பிட்ட ரசம் இன்னுமே மனதில் ஏக்கம் நிறைந்த நினைவாக இருக்கிறது அப்படியொரு சுவையான ரசத்தை நான் சாப்பிட்டதே இலை.  எங்கள் குடும்பங்களில் எனக்கு நன்றாக சமைப்பவள் என்னும் பெயருண்டு. //தேவி கைகழுவின தண்ணியில் கருவேப்பிலை கிள்ளிப்போட்டா கூட ரசம்னு ஊத்தி சாப்பிடலாம்// என்னும் ஒரு பேச்சு கூட உண்டு. ஆனால் எனக்கு விமலம் ரசம் அத்தனை பிடித்திருந்தது

வேள்விக்கொடி ஏற்றுகையில்  வேடசெந்தூர் வீட்டிலிருந்து  கொண்டு வந்திருந்த அப்போதுதான் அரும்பத்துவங்கி இருந்த முத்து முத்தான புன்னை மலர்களையும் கொடுக்க வாய்த்திருந்தது.

வேள்வியை நடத்தியவர்கள் தக்‌ஷன் அளிக்காமல் விட அவிர்பாகம் போன்ற  புராணக்கதைகளையும்  நாதஸ்வர வாசிப்பில் என்ன ராகம் வாசிக்கப்படுகிறது அது யாருக்கு பிரியமானது போன்ற தகவல்களையும் ஸ்லோகங்களின் பொருளையும் சொல்லிக்கொண்டே இருந்தது மிகச்சிறப்பு. அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததன் முழுமையான சித்திரத்தையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருந்தது.

குபேர பூஜையின் போதும் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குபேரன், அவர் மனைவி சித்ரகலா, அவர் நிதியை கொடுத்து வைத்திருந்த சங்க, பதும நிதிப் பெண்கள், நவநிதிகள், அஷ்டலஷ்மிகள், அவர்களின் இயல்புகள் அந்த யாகத்தினால் என்னென்ன பயன்கள் என அனைத்தையும் மிக தெளிவாக சொல்லிச்சொல்லியே வேள்வி நிகழ்த்தப்பட்டது.

மனிதத்திரள் அங்கிருந்தது. ஆயிரக்கணக்கில் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலிலிருந்தும் இருந்தோம் எனினும், எங்கும் யாரும் யாரையும் கடிந்துகொள்ளவோ தாழ்வாக நடத்தவோ ஏன் முகத்தில் ஒரு சுணக்கத்தை காட்டவோ கூட இல்லை. முழு மரியாதையுடன் ஒவ்வொருவரும் நடத்தப்பட்டார்கள்.

பந்தியில் என்னுடன் அமர்ந்து  எழுந்திருக்க மறுத்து சலம்பிக்கொண்டிருந்த ஒருவரைக்கூட பவுன்சர்கள் பொறுமையுடன் கையாண்டார்கள்.

அத்தனை கூட்டத்தையும் நெரிசலோ இடர்பாடுகளோ சிறு மனக்கசப்போ இன்றி வெற்றிகரமாக நடத்துவதென்பது சாதாரணமல்ல.

அகரமுதல்வனின் ஆகுதி நிகழ்வுகளின் கச்சிதத்தை ஒழுங்கை எப்போதும் வியந்திருக்கிறேன். அது குறிஞ்சி செல்வன் போன்றோரிடமிருந்து அளிக்கப்பட்டதும் அகரன் போன்றோர் பெற்றுக்கொண்டதும் என்பதை இங்கு அறிந்துகொண்டேன் அது ஒரு மரபுத்தொடர்ச்சிதான்.

பூரணாகுதி நடைபெறும் முன்பாக குறிஞ்சிபிரபா என்னை அழைத்துச்சென்று எரிகுளங்களின் அருகே அமர்ந்திருந்த அவரது சகோதரிகள், அண்ணி ஆகியோருடன் அமரச்செய்தார்.  புகையினால் கண்களும் நெகிழ்வினால் மனமும் கசிந்து அமர்ந்திருந்தேன்.திரு குறிஞ்சி செல்வனுடன் இருப்பவர்கள் அனைவரும் அவராகவே இருந்தார்கள் அவரின் கனிவின் அலையில் நனையாதவர்களை நான் பார்க்கவே இல்லை.

அவரின் ஏராளமான ஜப்பானிய நண்பர்கள்  வந்திருந்தனர். அவர்களும் கர்மசிரத்தையுடன் நிகழ்வுகளில் கலந்துகொண்டார்கள் இந்திய பண்பாட்டின் மீது பக்திமார்க்கத்தின் மீது இவ்வேள்வி அவர்களுக்கு எத்தனை உணர்வுபூர்வமான பிடிப்பை உண்டாகி இருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

ஜப்பானிய பெண்களில் பலர் புடவை உடுத்தி கொண்டிருந்தனர். அதிலொருவரின் சீஸ் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த இரத்தச்சிவப்பு புடவை பல பெண்களை பெருமூச்சு விட வைத்தது

அவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன பூஜையின் பொது சொல்லப்பட்ட மந்திரங்களை முழுஉடலே செவியாகி உள்ளம் குவித்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

திரு குறிஞ்சி செல்வனை குறித்து சொல்லப்பட்டவற்றில் விருந்தினர்கள் நிகழ்வு முடிந்து கிளம்பிச்செல்லுகையில் எப்போதும் அவர் ’’இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து போகலாம்’’ என்று சொல்லுவதை குறிப்பிட்டார்கள். மனிதர்களின், உறவுகளின் அருகிருப்பில் எத்தனை மகிழ்பவராக இருந்தால் இதை சொல்லக் கூடும்? உலகேயொருகுடி என்கிறது  நம் மரபு அந்த ஒற்றைச் சொல்லே இவரை செலுத்துகிறது போலும்.

நிகழ்வின் போது ஒரு தண்ணீர் பாட்டிலை நான் நாற்காலியின் அடியில் வைத்திருந்தேன் என் முன்னால் அமர்ந்திருந்த ஒரு சிறுவன்  வெகு இயல்பாக அந்த பாட்டிலில் இருந்து நீரருந்திவிட்டு மீண்டும் மூடி வைத்தான். அந்த தண்ணீர் யாருடையது என்னவென்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லை தாகமெடுக்கையில் அருகிலிருந்ததை எடுத்து குடித்தான் அவ்வளவே.

குறிஞ்சி செல்வனும் அப்படித்தான் நற்செயல்களை எதையும் எண்ணாமால் தாகமெடுக்கையில், நீரருந்துவதைப்போல வெகு இயல்பாக செய்துகொண்டிருக்கிறார்.

இவ்வேள்வியில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியம் என்று நினைக்கிறேன். அஷ்டலஷ்மிகளில் யார் யாருக்கு என்ன என்ன சக்திகள்.  யாருக்கு யார் துணையாக வேண்டும் என்று ஒரு பெரியவர் மைக்கில் வேள்வியின் போது கதையொன்றை சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் எனக்கு துணையாக அந்த 8 பேரில் தைரிய லஷ்மியை வேண்டிக்கொண்டேன் இனி மீதமிருக்கும் காலங்களில் எனக்கு நிகழவிருக்கும் நல்லவைகளையும் அல்லவைகளையும் சந்திக்கும் துணிவை  அவள் அளிக்கட்டும்.

மகன்களுடன் அலைபேசி அந்த இரவோடிரவாக எல்லாவற்றையும் சொல்லிச்சொல்லி இருவரும் எந்த நிலையில் இருந்தாலும் அந்தந்த நிலையில் பிறருக்கு குறிஞ்சி செல்வனைப் போலவே மனமுவந்து உதவி, அனைவரையும் அரவணைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னேன்.

அவர் மனைவியின் பெயர் விஜயலஷ்மி எத்தனை பொருத்தம்? வெற்றியும் செல்வமும் அவருடன் வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறது?

அவர் பெயரும் தான்  குறிஞ்சி, அரிதான, பலரால் பார்க்க முடியாத உலகின் வெகுசிறப்பான மலர்களில் ஒன்று ஆனால் பார்க்க எளிய நீல நிற கனகாம்பரம் போலிருக்கும், மிக பொருத்தமான பெயர் அவருக்கு.

உணவுப்பந்தியில் நிறுத்தப்பட்டிருந்த பெருமூங்கில்கள் ஒன்றில் தளர்ந்திருந்த சணல் கயிற்றை அங்கு மேற்பார்வையில் இருந்த ஒர் கரிய இளைஞன் அவிழ்த்து  இறுக்கி கட்டினான் யாரும் அவனை அதைச்செய்யும்படி கேட்டுக்கொள்ளவில்லை. அவனாக செய்தான். 

கூட்டத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை அளித்துகொண்டிருந்த ஒருவர் ஒரு முதியபெண்மணியிடம் ஒரு பாட்டிலை கொடுத்துவிட்டு ’’போதுமா இன்னொரு பாட்டில் வேணுமா? ’’என்று கேட்டார் 

வாண வேடிக்கை பார்த்து கால்கடுக்கவே எங்கேனும் அமர இடம்  தேடிக்கொண்டிருந்தேன், அங்கிருந்த ஒரு இளைஞன் ஒரு பெட்டியை காட்டி ’’அதில் உட்காந்துக்கங்க’’ என்றான்

எல்லாருமே எனக்கு குறிஞ்சி செல்வனாகத்தான் தெரிந்தார்கள், அவர்தான் அவர்களும்.

பூரணாகுதியின் பிறகு வேள்வி நிறைவில்  இந்திரன் வந்து அமைவதாக ஐதீகம் . இந்திரனுடன் குறிஞ்சி செல்வனின் சகதாபமும் இறையென அதில் எழுந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வேள்வி முடிந்ததும்  தூறலாக மென் மழை பொழிந்தது இதற்கு சான்று.

அங்கு இறைவன் அனல் வடிவானவன். அனலால் சூழப்பட்டவர்களின் உள்ளங்களிலிருந்து சிறுமை மறைகிறது என்கிறது மகாபாரதம். எப்பேற்பட்ட நற்செயல் இந்த வேள்வி?   

வேள்விகளெல்லாம் மாமனிதர்கள் நடத்துவது. எனினும் மகாபாரதம் எளிய மானுடரின் அன்றாட செயல்களில் ஐந்தை ஐந்துவேள்விக்கு நிகர் என்கிறது அவற்றில் ஒன்றான கற்பித்தலை 20 ஆண்டுகளாக செய்துகொண்டிருப்பவளாக இந்த வேள்வியின் பயன் அல்லது புண்ணியம் எனக்கும் கிடைத்திருக்குமேயானால் அது என் குடும்பத்தாரையும் கடந்து,  மேலும்  நீண்டு என் மாணவர்களையும் தொட்டருளட்டும்  என வேண்டிக்கொண்டேன். 

குறிஞ்சி செல்வனுக்கும் அகரமுதல்வனுக்கும் குறிஞ்சி பிரபாவுக்கும்  என் அன்பும் நன்றியும்.

பெயர்கள்

 ஜெ அவர்களின்  தளத்தில் வெளியான ‘ பெயர்கள் ‘ பதிவை  சில மாதங்களுக்கு முன்பு வாசித்தேன்.  நவீனப்பெயர்களான ரினீஷ், துமேஷ், ஜிலீஷ் ரமேஷ் குமெஷில்  வாய் விட்டுச்சிரித்து, செட்டியார்கள் வருமானம் என்று பெயரிடுவதில் சிரிப்பை அடக்க சிரமப்பட்டென், இடுப்பில் தாயத்து மட்டுமணிந்த குஷ்பூவை வாசிக்கையில் குபீரென் சிரித்து  ஓட்டுனரே திடுக்கிட்டுத்திரும்பிப் பார்த்தார்.

’பெரும்பன்னி’  என்பது உயர் சாதியினர் விளிம்பு நிலை மக்களுக்கு  இட்ட பெயராயிருக்கலாமென்பதையும்  ’கும்பிடெறேன் சாமி’ என்று  தலித் ஒருவர் உயர் சாதியினர் கூப்பிட சங்கடப்படட்டும் என்று வைத்துக்கொண்ட பெயரும் நிறைய யோசிக்க வைத்தது.
நான் முனைவர் பட்ட ஆய்விலிருக்கையில் அந்த பல்கலையின்

துணைவேந்தரின் பெயரிலிருந்த ஒரு அலுவலகப்பணியாளரை பெயர் மாற்றி பேபி என்றழைத்ததையும், மெஸ்ஸில் இரவு எங்களு/க்கு ஒரு தம்ளர் பால் தருவதன் பொருட்டு வாசலில் காத்திருக்கும் அக்காவை, வேண்டுமென்றெ ’’பாலக்கா ’’என அழைத்ததையும்,கொழும்புவில் இருந்த சில வருடங்களில்

கேட்ட மிக அழகிய தமிழ் பெயர்களையும் நினைவு கூர்ந்தேன்

 தருண் பிறந்த போது சரணுக்கு ரைமிங்காக தருண் என பெயரிட நான் பெரிதும் விரும்பினேன் ஆனால் சரண் அப்பாவோ ராகுல் என்றே பெயரிட முடிவு செய்தார். பின்னர் இரண்டுபேருக்கும் பொதுவாக ராகுல் தருண் என்றே வைத்தோம். நான் எப்போதாவது அவனை முழுப்பெயரிட்டு ‘’ ராகுல் தருண் ‘’ என்றழைத்தால்அரண்டு போய்’’ ஏம்மா கோபமா இருக்கியா ?என்று கேட்பான். ஆம் கோபமயிருக்கையில் கூப்பிட ராகுல் , பிரியத்திற்குரிய பெயர் தருண்!!!

எங்கள் வீட்டில் தோட்டம் எல்லாம் சுத்தம் செய்ய உதவும் பெண்ணின் பெயர் ஓவியா,  நல்ல கருப்பாய் அழகிய கருங்கல் சிற்பம் போல இருப்பாள், தெரிந்தே வைத்திருப்பார்கள் போல.

என்னுடன் பணி புரியும் ஒரு பேராசிரியர்  மகனுக்கு ’பியாரி மக்ரே’ என்று பெயரிட்டிருக்கிறார்.கேட்டதற்கு ரஷ்ய புரட்சியாளர் பெயரென்றார் அடுத்து பிறந்த மகனுக்கும் என்னவோ பெயர் சொன்னார் என் சிற்றறிவிற்கு அதை  நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை

எங்கள் கல்லுரி முதல்வர் தமிழ்த்துறையை சார்ந்தவர், அவர் மனைவி ஆங்கிலத்துறை ,ஒரெ மகள் ’மொழி

ஒவ்வொரு வருடமும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வருகைப்பதிவேட்டில் அழகிய வித்தியாசமான பெயர்கள் இருக்கும் சரியாக உச்சரிக்க கண்ணாடியை துடைத்துப்போட்டுக்கொண்டுதான் வகுப்பிற்கு செல்வேன்

சென்ற விடுமுறையில்  சரணை  விடுதியிலிருந்து அழைத்து  வந்தேன்.

வழக்கம் போல இந்த பெயர்களைபற்றிய  பதிவைச் சொல்லிக்கொண்டிருந்தேன்

அவன் பள்ளியில் அவனுடன்  படிக்கும் ’’ தண்ணீர்மலை, தீர்த் , அனுபவ் அகர்வால், துளிர்’’  பற்றியெல்லாம்  அவன் சொன்னதும் வியப்பாக இருந்தது. ஐஷ்வர்யா முல்லாமாரீ’  எனும் பெண்ணுக்கு ஏன் தமிழ் பசங்க எல்லாம் தன் அப்பா பெயரைச்சொல்லி கிண்டல் பண்ணுகிறார்கள் என்று   தெரியாவிட்டாலும்    இவன்களை எங்கு பார்த்தாலும் ஒரே ஒட்டமாய் ஓடிவிடுவாளென்றும்  சொல்லிக்கொண்டிருந்தான்

தவமாய் தவமிருந்து  இரண்டு பெண்களுக்கு பிறகு  ஒரு   மகனை பெற்றெடுத்த என் பெற்றோர் எனக்கும் அக்காவிற்கும் லோகமாதேவி , சங்கமித்ரா என்று சுருக்கமாக பெயரிட்டு விட்டு அவனுக்கு மட்டும்

 ’விஜயரகுனாத பாஸ்கர சேதுபதி தொண்டைமான் பூபதி காளிங்கராய சுப்ரமணிய சுந்தர வடிவேல்  எனப்பெயரிட்டு அவன் மீதான் பிரியத்தை காட்டி  இருக்கிறார்கள் அவன்  திருமண் அழைப்பிதழிலும்  கூட இப்படியேதான் அச்சிட்டோம்

  பாரதியார் பல்கலையில் மொழியியலில், நீலகிரி தோடர்கள்,  படுகர்கள்  பெயர்களில் ஆய்வு செய்த என் தோழியுடன் 97ல் கள ஆய்விற்கு  நானும் சென்றிருந்த  போது ஒரு வீட்டில்  3 பெண்குழந்தைகளுக்கு  வயலெட், ஆரன்ஞ், மற்றும் ரோஸ் என்று பெயரிட்டிருந்தார்கள்,  அங்கிருந்த அக்குழந்தைகளின் பாட்டன் என்  பெயரைக்கேட்டு விட்டு லோகமாதேவி என்பது  மிக புராதானமாயிருக்கிறது என்று  அபிப்ராயபட்டார், வயலட்டிற்கு இது புராதானம்தான்.

வெண்முரசில் சமீபத்தில் வாசித்த மென்மொழி என்னும் பெயர் என்னவோ மிக பிடித்து விட்டது. என் பெயரையே அப்படி மாற்றிக்கொள்ளலாமா என்று கூட நிறைய யோசித்தேன் பின்னர் இந்த வலைப்பூவிற்கு  பெயராக  வைத்துக்கொண்டேன்

பின்னும் ஆசை அடங்காமல் சரண் தருணிடம் அவர்களூக்கு பிறக்கும் பெண்களுக்கு மென்மொழி என்று பெயரிட வேண்டும் என சத்தியம் வாங்கிக்கொண்டிருக்கிறேன்.கல்லூரியில் ஒரு பேரசிரியையின் மகளின்இரட்டைக்குழந்தைகளுக்கு ஹாசினி ,பாஷினி என்ப்பெயரிட்டேன்.

இப்படி என்பிரியத்திற்கு உகந்த பல பெயர்கள் உண்டு ஹைமாவதி, தாம்ரா, அதிதி, ஸ்துதி,…………………

 நிறைய சிந்திக்க வைத்த பதிவு இது

கேரளம்

பொள்ளாச்சிக்கு வெகுஅருகில் தான் கேரளா இருக்கிறது. இங்கிருந்து கொழிஞ்சாம்பாறை வண்ணாமடைக்கெல்லாம் உள்ளூர் பேருந்துகள் இயங்குகின்றன. ஓணத்துக்கு விடுமுறையும்  எங்களூருக்கு உண்டு. கல்லூரியிலும் கேரள மாணவிகள் கணிசமாக இருக்கிறார்கள்.  பாலக்காட்டுச்சாலையில்தான் கல்லூரி என்பதால் கல்லூரி வாசலில் கேரளப் பேருந்துகள் நின்றுசெல்லும்.

 தாவரவியல்  சுற்றுலாவுக்கும் அடிக்கடி வயநாடு, திருச்சூர், கொச்சி என்று நாங்களும் போவதுண்டு

எனக்கு கேரளா மீதான சாய்வு அதிகமுண்டு  மலையாளம் பேசவும் கேட்கவும் பிரியப்படுவேன். வேடசெந்தூர் வீடும் கொஞ்சம் கேரள பாணியில் தான்  இருக்கிறது ஏராளம் செடி கொடி மரங்களும் வீட்டு முகப்புச் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் கதகளி முக மரச்சிற்பமும், வீட்டைச்சுற்றிலும் கல்விளக்குகளும் மாலைநேரங்களில் விளக்கேற்றலுமாக,

சமீபத்தில் இருநாட்கள்  தருணுக்காக கேரளா செல்ல வேண்டி வந்தது. 50 நாட்கள் காடுறையும் பயிற்சியின் போது பெருமழையில் தனது காமிராவுடன் நனைந்தான் அதில் காமிரா லெனஸில் நீர்புகுந்து பூஞ்சை தொற்று உண்டாயிருந்தது

முன்பும் இப்படி ஆகும் போது கோவையிலிருந்து சென்னைக்கு அனுப்பி சரி செய்வது வழக்கம். இம்முறையும் அப்படியே அனுப்பினான், எனினும் கட்டணம் 16 ஆயிரம் ஆகும் என்றார்கள். திரும்ப வாங்கிக் கொண்டு  புகைப்படக்கலையில் இருக்கும் தன் நண்பர்களிடம் விசாரித்தான்.  விஷ்ணு என்னும் மணவிழாக்களை புகைப்படம் எடுக்கும் தருணின் மலையாளி நண்பன் திருச்சூரில் நியாயமான கட்டணத்தில் சரிசெய்பவர்கள் இருக்கிறார்கள் என்றதால் லென்ஸை கொடுக்கவும், சரிசெய்து வாங்கவும் என இருமுறை திருச்சூர் சென்றோம்

பொள்ளாச்சியில் இருந்து  2 மணி நேரத்தில் செல்ல நல்ல அகலமான தேசிய நெடுஞ்சாலை   NH 544, (முன்பு   NH 47) இருப்பதால் சுகமான பயணம்.  இருவரும் பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டு சென்றோம்.தருணின் பிரியப்பட்ட ’’படே அச்சே லகத்தே ஹே’’ எனக்கும் பிடித்திருந்தது பலமுறை கேட்டோம். 

’’ஹம் தும் கித்னே பாஸ் ஹே

கித்னே தூர் ஹே சாந்த் சித்தாரே’’

திருச்சூரில் நுழையுமுன் மெர்சி, செயிண்ட் தாமஸ் உள்ளிட்ட பல பெண்கள் கல்லூரிகளையும் சில உயர்நிலைப்பள்ளிகளையும் கடந்தோம். இப்போது பருவத்தேர்வுகள் நடப்பதால் 12 மணிவாக்கில் ஒருவர் கைகளை ஒருவர் பிடித்துக்கொண்டும், அண்ணனோ அப்பாவோ முன்னால் அமர்ந்திருக்க இருசக்கரவாகனங்களில் பின்னால் அமர்ந்துகொண்டும் பேருந்துக்காக காத்துக்கொண்டுமிருந்த பல அழகிகளை கண்டோம். தருண் முகம் மலர்ந்து விகசித்து நிறைந்து காரோட்டினான் . 

தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளித்த, அலையலையான கூந்தலுடன் (சிற்றலைகள்) சேச்சிகள் கைப்பையுடன் பேருந்துக்காக காத்திருந்தனர். தினக்கூலிக்கு செல்லும் பல பெண்கள் தோளில் துண்டும் நைட்டியுமாகவே சென்றார்கள். இதை சில வருடங்களாகவே கேரளத்தில் பார்க்கிறேன். தமிழ்நாட்டில் அப்படி ஆண்களின் சட்டையை புடவைக்கு மேலே போட்டுக் கொள்கிறார்கள் சமீபகாலமாக.

வழியெங்கும் ஏத்தம் பழங்களும் அவற்றின் சிப்ஸ்கடைகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றிற்கு இணையாகவே கிரில் சிக்கன் கடைகளும் முளைத்திருக்கின்றன.

சந்தடியான மிக குறுகிய ஒரு கடைத்தெருவில் லென்ஸ் கடை இருந்தது. காரை நிறுத்த தேடித்தேடி ஒரு இடம் கண்டுபிடித்தோம்.பிடரி வரை வழியும் கேசமும், ஒற்றைத்தோடுடைய செவியனும் ஒல்லியான ஒல்லியுமாக தருணின் நண்பன் விஷ்ணு காத்திருந்தான்ன் . லென்ஸ்காரரும் அவனுமாக மலையாளத்தில் சம்சாரித்தனர் ( யே ஞான் வைல்ட்லைஃப் இல்லியா.ஞான் கல்யாணமா, தே ஆ புள்ளியா வைல்ட் லைஃப்) 

லென்ஸ் தூய்மையாக்கப்பட்டு சிலநாட்களில் கிடைக்கும் என்று சொல்லபட்டபின்னர்  நாங்கள் புறப்பட்டோம்

விஷ்ணு எங்களை பிரபல திருச்சூர் பூரம் விழா நடக்கும்  வடக்குநாதர் (சிவன்)  அம்பலத்துக்கு அழைத்துச் சென்றான்

 

புராணங்கள் அக்கோவில் பரசுராமரால் உருவாக்கப்பட்டது என்கிறது. சங்கரரின் பெற்றோர் வடக்குநாதர் முன்பாக செய்துகொண்ட பிரார்த்தனைகள் பேரில்தான் அவர் பிறந்தார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலுக்கு எதிரில் இரு தேவி ஆலயங்கள் உள்ளன.பார மேட்டு காவு பகவதியும் திருவெம்பாடி பகவதியும் அருள்பாலிக்கிறார்கள். 

சிவராத்திரியின் போது கோவிலில் லட்ச தீபம் ஏற்படுமென்று சொன்னான் விஷ்ணு. பூரம் விழாவின் போது நூற்றுக்கணக்கில் அலங்கரிக்கபட்ட யானைகள் நிற்கும் இடமும் வலிய மற்றும் சிரிய வெடிகள் வெடிக்கப்படும் பரந்த வெளியும் புல் பரவிக் காணப்பட்டது.

வாகைமரங்கள் வெகுதூரம் கிளைகளோடி நின்றது, அதனடியில் காரை நிறுத்தினோம்.

கேரளாவின் மேற்கு பார்த்த சிவாலயங்களில் இதுவுமொன்று. அடுத்தமுறை அதிகாலை வரவெண்டும் என நினைத்துக் கொண்டேன்

அன்று வார இறுதிஎன்பதால் கோவிலை சுற்றிலும் நல்ல கூட்டம். கார்களும் பைக்குகளும் ஏராளம் நின்றன. பல காதல் ஜோடிகள். அருகிலிருக்கும் பள்ளியின் சிறுமிகள் பள்ளிச்சீருடையில்  தத்தமது காதலர்களுடன் அமர்ந்து ஐஸ்கிரீம் சுவைத்துக்கொண்டிருந்தனர். 

உச்சிவேளை என்பதால் கோவில் நடை அடைத்திருந்தது. சாத்திய நடையையும் , பெருமதில்களுக்கு பின்னிருந்து கரும்பாறையென தெரிந்த யானை முதுகுகளையும் கோவில் கூரையின் உயரத்துக்கு இருந்த வெண்கல சுற்றடுக்கு விளக்கு கம்பத்தையும் மட்டும் பார்த்தோம்.

பலர் வெட்டியாக அமர்ந்துகொண்டும், லாட்டரி சீட்டுக்கள் விற்றுக்கொண்டுமிருந்தனர். இரு வயசாளிகள் ஒரு கல்திட்டில் அமர்ந்து மும்முரமாக செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர். இருவருக்கும் முள்முள்ளாக தாடி, அழுக்கு வேட்டி பழுப்பேறிய சட்டை ஆனால் உற்சாகமாக காய்களை நகர்த்தி கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தது மகிழ்சியளித்தது. ஏற்ற இறக்கங்களுடன் வாழ்வை ஏறக்குறைய வாழ்ந்து முடித்து,  மீதமிருக்கும் வாழ்வை இப்படி  பொருள் கொண்டதாக மாற்றிக்கொண்டு விடுபவர்களை எனக்கு பிடிக்கும்.

எங்களூரில் அரசமரத்தடி விநாயர்கோவில் கல்திட்டில் வீட்டிலிருந்து ஏறக்குறைய துரத்தப்பட்ட ஊர்கவுண்டரும் இன்னும் சிலரும் அரிதாக ஓரிருசொற்கள் பேசிக்கொண்டு வந்துபோகும் பேருந்துகளை வேடிக்கை பார்த்தபடிக்கு சிலைகளை போல சாப்பாட்டு நேரத்துக்கு அழைப்பு வரும்வரை  நாளெல்லாம் அமர்ந்திருப்பார்கள். அவர்களை அப்படி பார்ப்பது துயரளிக்கும்

வடக்குநாதர் கோவிலுக்கெதிரே இருந்த கிளைச்சாலையில் நல்ல உணவகங்கள் அடுத்தடுத்திருந்தன அவற்றில் அக்‌ஷயாவுக்கு சென்றோம் மிக்சுவையான கப்பையும் மீன்கறியும் கிடைத்தது

பிரியாணியை அரிசிச்சோறு தனியாகவும் மசாலா தனியாகவும் இறைச்சி தனியாகவும் அடுக்கடுக்காக வைத்து தருகிறார்கள்.  நல்ல   சுத்தமான உணவகம். 

கல்லாவில் கண்ணாடிப் பெட்டியில் பழம்பறிகள் காத்திருந்தன மிருதுவாக பொன்மஞ்சளில் மினுங்கிக்கொண்டு (கன்னிப் பெண்ணின் கன்னம் போல் -ஜெ)

அவற்றில் இரண்டை வாங்கிக்கொண்டேன். அவ்வபோது சிறுமழை தூரலாக பெய்வதும் உடனே இளவெயிலடிப்பதுமாக இருந்தது.  2 மணிக்கெல்லாம் வெயில் முதுகை அறைந்தது தமிழகத்தை விட கேரளத்தில் வெயில் உக்கிரமாக இருந்தது.

பாலக்காடு வனப்பகுதியில்  பணிசெய்யும்  யானைசிவா அவனது ஆசிரியை என்பதால் ஒரு பிரத்யேக விஷயத்துக்கென அனுமதி வாங்கி என்னை  அழைத்திருந்தான். எனவே திருச்சூரிலிருந்து பாலக்காடு சென்று அங்கு மாலை வரை இருந்துவிட்டு ஊர் திரும்பினோம் வழியெங்கும் லண்டானா, கம்யூனிஸ்ட் பச்சை செடிகள் ஏராளமாய் பரவி இருந்தன.

அங்கு  கிடைத்த அந்த அனுபவத்தை சிவாவின் பணி நிமித்தம் பொதுவெளியில் பகிரமுடியவில்லை அது ஒரு அற்புதமான அரிய அனுபவம். அன்பு அதுவும் கள்ளமற்ற தூய அன்பு அதில் திளைத்தது என என் வாழ்வில் மறக்கவே மறக்க முடியாத இனிய அனுபவம். டாப்ஸ்லிப் யானைப்பாகன்  (கல்பனா) பழனிச்சாமியின் மனைவி சாந்தி அங்கிருந்தார் அவரளித்த எலுமிச்சை இலை கிள்ளிப்போட்ட அருமையான கட்டஞ்சாயா குடித்தோம்

வீடுவர பின்னிரவானது. பழம்பறியும் பானைத்தண்னீருமாக இரவுணவு முடித்தேன். 

நேற்று லென்ஸ் சரியாகிவிட்ட தகவல் வந்ததால் மீண்டும் இன்று திருச்சூர். இம்முறை அதிகாலை ஐந்துமணிக்கே புறப்பட்டோம், காலை 7 30க்கு கோவிலில் இருந்தோம் அந்நேரத்துக்கே கோவிலில் ஓரளவுக்கு கூட்டம் இருந்தது

 மிக மிக அழகிய, மிகப்பழைய மிக தூய்மையாக பராமரிக்கப் படும் கோவில்.  நியதிகள் எழுதிவைத்திருக்கும் நீல நிற போர்டுகளை தவிர யாருமே எந்த கெடுபிடிகளையும் செய்யவில்லை. மிக அமைதியாக இருந்தது வளாகம். கார்த்திகை மாத மென்பதால் கருப்புச் சேலையும் கருப்பு வேட்டியுமாக சபரிமலைக்கு மாலையிட்ட பலருமிருந்தனர்,

அங்கே  வேண்டிக்கொண்டால் தேர்வில் நல்ல மதிப்பெண் வரும் என்னும் நம்பிக்கை இருப்பதால் மாணவ மாணவிகள் அதிகமிருந்தனர்

பல கேரள கோவில்களைப்போலவே மேல்சட்டை, லுங்கி அணிந்து வர இங்கும் அனுமதியில்லை. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும் அனுமதி இல்லை

கோவிலை சுற்றுகையில் அர்ஜுனன் வில்லுக்குழி என்று ஒரு தீர்த்தம் இருந்தது அதை பச்சைவலையிட்டு மூடிவைத்திருந்தனர். வலையின் கிழிசல் வழி எட்டிப் பார்த்தோம் நீண்டவிழி போல அல்லது வில்போன்ற வடிவ பாறைக்குழியில் நீர் நிறைந்திருந்தது. அதன் ஒரு நுனியில் பிரகாசமான நட்சத்திரவடிவ  மஞ்சள் மலர்களுடன் ஒருசிறுசெடி இருந்தது.

 அந்த தீர்த்தத்தில் கைகால்களை தூய்மைசெய்தபின்னரே கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்னும் வழக்கம் முன்பிருந்து பிற்பாடு அவற்றை பாதுகாக்க இப்படி மூடி வைத்திருப்பதாக பின்னர் கேட்டறிந்தேன். 

மிக தொன்மையான மிகமிக அரிய ஒவியங்கள் சுவர்களெங்கும் இருந்தன நல்ல தடித்த உருவத்துடன்  குட்டையான நீலக்கண்னன் ஒரு பாறையில் அமர்ந்து குழலூத மல்லிகைமலர்ச்சரம் சுற்றிய கொண்டையிட்ட பேரிளம்பெண்கள் சிலர் அவனை தோளுக்கு பின்னிருந்து குனிந்து பார்க்கும் சித்திரம் வசீகரமாயிருந்தது,அனைத்து ஓவியங்களும் அடிப்பக்கம் விளக்குப்புகையால் அழிந்தும் சேதமுற்றும் இருந்தன,

சுற்றும் வழியெங்கும் விளக்கேற்றும் சிறு பள்ளத்துடன் இரண்டடியில் தரையில் பதிக்கப்பட்ட கல்தூண்கள் இருந்தன. கல்பாவையரும் ஆங்காங்கே இருந்தனர்.  முன்வாசலின் மாபெரும் வெண்கல விளக்குகளிலிருந்து  கல்தூண் பள்ளம் எல்லாமே கண்ணாடிபோல் மழைநீர் தெங்கி இருந்தது

சுவற்றில் புடைப்பாக செதுக்கப்பட்டிருந்த ஒரு கல்பாவையின் கைவிளக்குக்குழியின் நீர்பரப்பில்  நீலவானம் தேங்கி இருந்தது.

பச்சை பூக்களிட்ட வெள்ளை புடவையும் பச்சைரவிக்கையுமாக ஒரு அம்மை சுற்றி வந்து கொண்டிருந்தார். வெகுநாட்களாக அப்படி புடவை எடுக்க நினைத்திருந்தேன். அவரிடம் நேரே சென்று அதுபோன்ற  புடவை எனக்கும் வேண்டும் எங்கு கிடைக்கும் என்று கேட்டேன்.  செட் சாரி என்று கேட்டால் எங்கும் கிடைக்குமென்றார். அந்த புடவை அவருக்கு மிக அழகாக இருப்பதையும் சொன்னேன்

கருப்புபுடவையில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை புதுவெண்ணெயின் நிறத்திலிருந்தார். எலுமிச்சம்பழம் போன்ற அவரது சிறுகொண்டையில் துளசி சூடியிருந்தார்.சச்சதுரமாகவும் நல்ல வட்டத்திலும் தனித்தனி சன்னதிகள், சன்னதிகளின் கூரை முகப்பு விளிம்புகளில், படமெடுக்கின்றன வெண்கல நாகங்கள். 

மலையாளத்தில் என்னவோ இடியாப்பம் போல பெயரெழுதியிருந்த போர்டின் பின்னால் மஞ்சள் பூசப்பட்ட கல்தெய்வங்கள் நான்கிருந்தன அவற்றின் அருகிலிருந்த அலரி மரக் கிளைகளில் சபரிமலை சென்று திரும்பியவர்களின் மாலைகள் தொங்கவிட பட்டிருந்தன

 வடக்குநாதர் நெய்லிங்கத்தால் ஆனவர் லிங்கத்தின் மீது பொன்காப்பிட்டிருந்தனர். அவருக்கு பின்புறம் நெய் சிறு மலைபோல் சேர்ந்திருந்தது.

அமர்நாத் பனிலிங்கம் போல வடக்குநாதரின் நெய்லிங்கமும் உலக பிரசித்தம். அந்த நெய்யின் ஒரு துள்ளியை துண்டு வாழையிலையில் செஞ்சந்தனக்குழம்பும் மலர்களும் வைத்து பிரசாதமாக அளித்தார்கள் அந்த நெய் உடல்நோய்களை போக்கும் என்று அங்கு நம்பிக்கை

கோவிலெங்கும் நீளமாக  தொங்கவிடப்பட்டிருந்த சாமந்தி மாலைகள் வாடியிருந்தன.  கழுவப்பட்ட மாபெரும் வெண்கல உருளிகள் கவிழ்த்தும் சாய்த்தும் வைக்கப்பட்டிருந்தன

அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத  வெளிச்சுற்று பிரகார  கல்திண்ணைகளில் பெரிய பெரிய மட்டை அரிசி மூட்டைகளும் கோகுலகிருஷ்ணா அக்மார்க் நெய் தகரடின்களும் அடுக்கி  வைக்கப்பட்டிருந்தன

பச்சைப்பட்டு விரிக்கபட்டிருந்த  துலாபார தராசுகள் ஒழிந்திருந்தன.அந்த தட்டுக்களைம்  தொட்டு வணங்கினார்கள்.

மழைதூறிக்கொண்டே இருந்தது. ஒரு கல்தூணில் கைப்பிடியுடன் ஒரு பனையோலைக்குடை சாத்தி வைக்கப்பட்டிருந்தது

வடக்குநாதரின் பின்புறம் ஸ்ரீ பார்வதி அருள்பாலிக்கிறாள்.

விருஷபன், ராமன், அய்யப்பன், சங்கர நாராயணன், கணபதி என அனைத்து சன்னதிகளிலும் விக்ரகங்களை சுற்றி ‘ப’ வடிவில் பெருஞ்சுடரொளிரும் தீபங்கள் எரிந்தன

அங்கிருக்கும் அனைத்து சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் வழிபாடு நடக்குமென்றார்கள்

நெய் விளக்கேற்றும் பிரார்த்தனை நடந்துகொண்டே இருந்தது. தமிழக கோவில்களில் இருக்கும் தண்ணீர் பாட்டில் மூடியளவுக்கான மைக்ரோ விளக்குகளை போலல்லாமல்  அங்கு விற்பனை செய்யப்பட்ட, சற்றுப்  பெரிய குழிக்கரண்டி நெய் பிடிக்கும் விளக்குகளில் சுத்தமான  பசு மஞ்சள் நெய்யில் பக்தர்கள் தீபமேற்றினார்கள் 

அங்கிருந்த பல மரங்கள் நூற்றாண்டுகள் பழமையானவை. மரங்களை சுற்றிலும் உயரமான அகலமான மேடை அமைக்கப்பட்டிருந்தது; ஒரு அரசமரத்திற்கு சந்தான கோபாலகிருஷ்ண மரம் என்று பெயர்ப்பலகை இருந்தது .

வழக்கமாக லத்தீன அறிவியல் பெயர்களே பரிச்சயமாயிருந்த எனக்கு இந்தப்பெயரும் அந்த மரமும் பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது. சுற்றத்துவங்குகையிலேயே எனக்கு வலதுபுறம் இளஞ்சிவப்பு தளிரிலைளுடன் இருந்த ஒரு மரத்தை பார்த்திருந்தேன். அதை எனக்கு அடையாளம் தெரியவில்லை.இலைகள் பளபளத்தன. அதே யோசனை உள்ளே ஓடிக்கொண்டிருந்தது பொதுவாக செம்புநிறத்தில் தளிரெழுவதுதான் வழக்கம். இந்த மரம் என்னவாக  இருக்குமென யோசித்துக்கொண்டே வந்தேன்

சட்டையில்லாமல் வேஷ்டியின் ஒரு நுனியை தூக்கிபிடித்துக்கொண்டு வந்த தருண் மலையாளிகளைப்போலவே இருந்தான். ரோமாபுரியில் ரோமானியனாகத்தானே இருக்கனும்?

சுற்றி முடிக்கையில் அருகில் வந்தபோதுதான் அம்மரம் அதுநாள் வரைநான் பார்த்தேயிருக்காத பார்க்க பெரிதும் காத்திருந்த அசோகமரமென்று அதன் தீக்கொழுந்துகளை போன்ற ஆரஞ்சு மஞ்சள் மலர்கள் கொண்ட மஞ்சரிகளை கொண்டு அறிந்தேன். பரவசத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தருணிடம் நூறுமுறையாவதுது ’’அசோகமரம்டா’’ என்று சொல்லியிருப்பேன். மகிழ்ச்சியில் மரத்தடியில் கொஞ்சம் நேரம் அமர்ந்திருந்தேன், மலர் மஞ்சரிகள் ஒன்றிரண்டு தான் இருந்தன. 

அம்மரத்தை குறித்து அதழில் ஒரு பதிவும் முன்பு எழுதியிருந்தேன். 

 கர்ப்பகிருக வாசல் மணி பாற்கடலைகடைந்த வாசுகி என்று ஐதீகம் எனவே அதை பிரதோஷ மாலைவேலைகளில் தலைமை நம்பூதிரி மட்டுமே ஒலிக்க செய்வாராம் அன்று பிரதோஷம் எனவே மாலை அது ஒலித்திருக்குமாயிருக்கும்.

நந்தி  சிவனின் நேரெதிரே இல்லாமல் சற்று விலகி  தனி மண்டபத்தில் இருந்தது

இத்தலத்தின் வடக்குநாதரையும் பார்வதியையும் பரசுராமர் பிரதிஷ்டை செய்தாரென்றும், கணபதி ராமர் சங்கரநாராயணன் திருவுருவங்களை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தாரென்றும் சொல்லப்படுகிறது.

அனைத்து விக்ரகங்களும் பொற்காப்பிடப்பட்டிருந்தன. பெருவிளக்குகளின் சுடரொளியில் அப்பொன்னும் நெருப்பென சுடர்ந்தது.

கோவிலின் அமைதி தவிர்க்கமுடியாமல் தமிழக கோவில்களின் கூச்சல்களை நினைக்கவைத்தது. பெருங்கற்கள் பதித்த தளம் கோவிலைச்சுற்றிலும். பல கற்களில் நெடுஞ்சாண்கிடையாக பலதிசைகளில் விழுந்துவணங்கும்  மேலாடையின்றி அரையாடை மட்டும் அணிந்த ஆண் சிலைகள் சிறியதாக செதுக்கப்பட்டிருந்தது

வடக்குநாதர் சன்னதியில் சபரிமலைக்கு மாலையிட்டிருந்த ஒரு அம்மை ’’சுவாமியே சரணம் அய்யப்பா’’ என்று பக்திமேலிட கூவினார், சரிதானே சபரிமலைக்கு மாலையிட்டால் மாலையிட்டவரும் பிறரும் அய்யப்பன் தானென்றால் வடக்குநாதனும் ஐயப்பன்தானே அவருக்கு?

எங்கும் தீபாராதனைதட்டு நீட்டப்படவில்லை. விருப்பப்பட்டவர்கள் சன்னிதியின் படிக்கட்டில் ரூபாய்களை வைத்துச்செல்கிறர்கள்.  பிரகாரத்தின் விருஷபன் என்னும் கடவுள். அப்பெயரை முதன்முதலில் பார்க்கிறேன் அங்கு மூன்று முறை கைதட்டி வணங்குகிறார்கள்

ஆங்காங்கே நெற்றுத்தேங்காய்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன.

ஏராளமான செம்மந்தாரை மரங்கள் மலர்கொண்டிருந்தன. கல்தரையெங்கும் அதன் தாமரையிதழ்களை ஒத்த இளஞ்சிவப்பிதழ்கள் சிதறிக்கிடந்தன. பெருமரங்களின் பாசம்பிடித்த கிளைகளில் ஆர்கிடுகள் மண்டிக்கிடந்தன.

ஸ்ரீ மூலஸ்தானம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த மகிழமரம் முகப்பிலேயே இருந்தது.அதை சுற்றிவிட்டே பிரகாரத்தை சுற்றத் துவங்குகிறார்கள். அதுதான் தலமரமாயிருக்கும் என நினைத்தேன்.

 தாழ்ந்த கூரைகொண்ட மண்டபத்தின் கல்பாவியதிண்ணையின் தரையில் சற்று அமர்ந்துவிட்டு கோவிலைவிட்டுப் பிரிய மனமில்லாமல் புறப்பட்டோம்

கோவிலின் வெளிவாசலிலும் பெரும் வெண்கலவிளக்கு கம்பமிருந்தது, பலசுற்றுத்தட்டுக்களை கொண்டிருந்த அவ்விளக்கின் அடியில் ஒரு ஆமை வடிவம் தாங்கிக்கொண்டிருப்பது போல அமைந்திருந்தது.

கோவிலுக்கு வெளியே புதுமணத்தம்பதிகளின் போட்டோஷூட் நடந்துகொண்டிருந்தது  கிளிப்பச்சை பட்டுடுத்தி கைகளில் விரிந்த தென்னம்பாளையை  பிடித்துக்கொண்டிருந்த மணப்பெண் கொள்ளையழகு. 

 ’’தருண் ஒரு கேரளா பெண்ணை பாரேன்’’ என்றேன் ’’பார்க்கலாம் பார்க்கலாம்’’ என்றான் அமர்த்தலாக

 இந்த வீட்டில் மாலை வேளையில் செட்டு முண்டுடுத்தி அகலக்கண்னில் பட்டையாய் மையெழுதிக்கொண்டு  அலையலையான கூந்தலில் மலர்சூடிக்கொண்டு வெண்கல விளக்கேற்றும் மருமகளை மணக்கண்ணில் ஆசையாக பார்த்துக்கொண்டேன.

உணவகங்களில் பதிமுகப்பட்டையிட்டு இளஞ்சிவப்பிலும் சீரகமிட்ட பழுப்பிலும் வெதுவெதுப்பான நீரருந்த தந்தார்கள். இப்படி தமிழகத்துக்கென்று பிரத்யேக அடையாளங்கள் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்தேன்.யானை, தென்னை, தென்னம்பாளை,  பதிமுக தண்ணீர், சீரகவெள்ளம் தேங்காயெண்ணய் தேய்த்து குளித்த கூந்தல், செட்டுப் புடவை பனையோலைக்குடை, மட்டைஅரிசி, லாட்டரி, பழம்பறி  நேந்திரம்பழம் என்று இங்கு ஏராளம் இருக்கிறதே. 

கோவிலுக்கு எதிரே சிவா பரிந்துரைத்திருந்த உணவகமான ’பாரத்’தில் காலையுணவு, புட்டும் கடலைக்கறியும்  நல்ல சுவையிலும் தரத்திலும் இருந்தது.

வழியில் ஒரு மாபெரும் பதாகையில் குருதிச்சிவப்பில் உடைகளும் ஆபரணங்களுமாக பகத் ஃபாஸிலும் நஸ்ரியாவும் ஐஸ்கிரீம் விளம்பரமொன்றில் காட்சியளித்தார்கள்  

அங்கிருந்து கல்யாண் சில்க்ஸ் சென்று  கருப்பில் மலர்கள் வரையப்பட்ட வெள்ளை செட் புடவை எடுத்தேன்.விலை தமிழ்நாட்டை விட பல மடங்கு குறைவு. இந்த கல்யாண் சில்க்ஸ் காரர்கள் ஏன் கோவையில் மட்டும் கொள்ளைவிலை வைத்து விற்பனை செய்கிறார்கள் என்று ஆதங்கமாக இருந்தது. செட் புடவைக்கு துணையாக நாவல் பழநிறப்புடவையொன்றையும் எடுத்தேன்.

கேரளா ஆண்கள் அணியும் தொள தொள ஜீன்ஸ் ஒன்று தருணும் எடுத்துக்கொண்டான்

. பின்னர் கேரளா  பயணத்தை முழுமையாக்க லாட்டரி சீட்டும் . லாட்டரியில் கோடிகள் பரிசு விழுந்தால் வேலையை ராஜி வைத்துவிட்டு மீதமிருக்கும் நாளெல்லாம் வாசித்துக்கொண்டு எழுதிக்கொண்டு தாவரங்களை தேடிபயணித்து கொண்டிருமிருக்கும் பகல் கனவிற்குபின்னர் சரணை அழைத்து பரிசு கிடைத்தபின்னர் முதல்வர் அறைக்குச்சென்று ராஜி வைப்பதை பற்றி எப்படி பேசப்போகிறேன் என்று சொல்லிக்காட்டினேன். அவன் சிரிக்காமல் இப்படியேதான் நாவிதராக  நடித்த கவுண்டமணி நம்பியார் வீட்டில் லாட்டரி பரிசு விழுந்ததும் பேசுவார் என்றான்.

கசைத்தெருவை கொஞ்சம் சுற்றினோம்.பலகாலத்துக்கு பிறகு அடர்மஞ்சள் சாமந்தி மாலையிடப்பட்டிருந்த புட்டபர்த்தி பாபாவின் கட் அவுட் ஒன்றை வழியில் பார்த்தேன்

தமிழகத்தை விட இங்கு அழகிய டிசைன்களில் நைட்டிகள்விற்பனையிலிருந்தன.  ரத்தச்சிவப்பில் அதிகம் இருந்தன. கேரளத்தின் சீஸ் நிறப்பெண்களுக்கு அந்த சிவப்பு  எடுப்பாக இருக்கும்.

பிறகு சுத்தமாக்கப்பட்டிருந்த லென்ஸ் வாங்கினோம். 16 ஆயிரங்கள் ஆகுமென்று சென்னையில் சொல்லப்பட்ட அது வெறும் 800 ரூபாய்களில் சரிசெய்யப்பட்டு கிடைத்தது. (கேமரா லென்ஸ் பிரச்சனைகளுக்கு அணுகவும் கேமரா சிட்டி திருச்சூர்).

அங்கிருந்து தோட்டதுக்கு வைக்க  கூரையிட்ட இரும்பு ஊஞ்சல் வாங்கலாமென்று திருச்சூரின் பிரபல புள்ளோக்காரன் பர்னிச்சர்ஸ் போனோம்

 வரவேற்ற பெண்ணிடம் கார்டன் ஸ்விங் வேண்டுமென்றேன் அவளுக்கு மனசிலாகவில்லை, ஊஞ்சல் வேணும் என்றேன். ஓ ஊஞ்சாலா வரு’’ என்று மாடிக்கு அழைத்து சென்றாள். எனக்கு தேவையான மூவர் அமரும் ஊஞ்சல் அங்கு இல்லாததால் திரும்பினோம்.  பிரமாண்டமான கடை மரச்சாமன்கள் உன்னதமாக இருந்தன. கோவையைக்காட்டிலும் இங்கு நன்றாக இருக்கின்றது விலையும் பரவாயில்லை

அருகிலேயே மற்றொரு புள்ளோக்காரன் கடை, மற்றொரு பிரம்மாண்டம் சகோதரர்களாம் ஒருவருக்கொருவர் போட்டிபோலிருக்கிறது.ஒரு கடையில் 24 ஆயிரம் சொல்லப்பட்ட ஒரு ஊஞ்சல் மற்றொரு கடையில் 19 ஆயிரம். 

மீண்டும் பாலக்காடு . வழியில் தருணின் பிரேக் அப் கலெக்‌ஷன் பாடல்கள் கேட்டோம்.அவனது பிரியத்துகுகந்த ’’எங்கிருந்தாலும் வாழ்க’’ வை பலமுறை,

 ’இங்கே ஒருவன் காத்திருந்தாலும் 

இளமை அழகை பார்த்திருந்தாலும் 

சென்ற நாளை நினைத்திருந்தாலும் 

திருமகளே நீ வாழ்க!’

காட்டில் ஒரு நீண்ட நடைசென்றேன். முந்தின நாள் இரவு மானை துரத்தி வந்தபோது பதிந்திருந்த சிறுத்தையின் கால்தடங்கள் மழைச்சேற்றில் கூடவே வந்தன. வட்டகண்ணிகளின் இலைகளில்  எறும்புகள் துளையிட்டிருந்தன,  கம்யூனிஸ்ட் பச்சையுடன் மிக்கானியா ஆக்ரமிப்பும் அங்கு அதிகமிருந்தது

 மிக்கானியா

கம்யூனிஸ்ட் கட்சி கேரளமெங்கும் பரவியதுபோல் அச்செடியும் பரவியதால் கம்யூனிஸ்ட் பச்சை என்று பெயர் வந்தது என்று நானும் சிவாவும் பேசிக்கொண்டோம்

ஒரு சிற்றாறு காட்டின் குறுக்கே ஆழமற்று ஓடியது. ஆற்றில் இறங்கி குளிர்ந்த நீரில் ஆற்றின் போக்கிலெயே கொஞ்சம் நடந்தேன். சீறுமீன்கள் காலடியில் மொய்த்தன, ஆற்றின் நடுவிலிருந்த பாறையொன்றின் மீதமர்ந்து காத்திருந்த கருந்தலை மீன்கொத்தியொன்று  சரேலென்று பாய்ந்து லாவகமாக  தன் சிற்றலகால் ஒரு மீனை கொத்தி விழுங்கிச் சென்றது அத்தனை மீன்களிலொன்றைக்கூட தன் இருகைகளால் பலமுறை முயன்றும் தருணால் பிடிக்கவே முடியவில்லை. இயற்கையின் கணக்குகள் அத்தனை சீக்கிரம் பிடிபடுவதில்லை,

வேங்கைமரத்தின் இறகுக்கனிகள், காட்டுகுருமிளகின் வால்போன்ற மஞ்சரிகள், காட்டுத்திப்பிலிச்செடியின் இதயவடிவஇலைகள், பெயர் தெரியாத பல செடிகளை பார்த்தவாறே நடந்தேன்,நீரில் மிதந்துவந்த தான்றிக்காய்களை  சேகரித்தேன். எங்கெங்கிருந்தோ யானைகளின் பிளிறலும் மயிலகவலும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு கிலுகிலுப்பை செடியின் மலர்களில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன

காட்டின் நடுவில் மீண்டும் அசோக மரமொன்றை கண்டேன் அருகிலிருந்த பெருமரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கிளைகள் ஒடிந்து சேதமுற்றிருந்தது எனினும் அழகாக இருந்தது.ஒரே நாளில் இரண்டு மரங்கள்

அத்தனையடர்ந்த காட்டில் அப்படி நெருக்கமாக இருந்துவிட்டு அங்கிருந்து புறப்படவே எனக்கு மனமில்லை. வனக்காவலர்களில் பல பெண்கள் இருந்தனர் பின்ஸி, அஸ்வதி, சந்தியா, நித்யா என அவர்களின் பெயர்களை கேட்டுக்கொண்டேன்

பெண்கள் வேலையில் இருப்பது எனக்கு பிடிக்கும் அதுவும் இப்படி வன காவலர்களாக சீருடையில் இருந்தவர்களை பார்க்க அத்தனை பிடித்திருந்தது. காட்டிலிருந்த பழங்குயின பெண்ணொருருவர் அவருக்கென்று சேகரித்திருந்த சுருளிக்கீரையை எனக்களித்தார். அரிய உணவு. எங்கும் கிடைக்கவே கிடைக்காதது. அதைக்குறித்து தனியே ஒரு பதிவு எழுத வேண்டும்

ஆற்றிலிருந்துஒரு சிறுகல்லை நினைவுக்காக எடுத்துக்கொண்டு அதே பகிர்ந்துகொள்ள முடியாத அன்பில் மீண்டும் திளைத்து மனமின்றி புறப்பட்டேன்

பாலக்காடு பொள்ளாச்சி நெடுஞ்சாலையில்  ஒரு விளம்பர பலகையில் நெற்றி அகன்ற, கேசமிழந்த உடல்பருத்த சுரேஷ் கோபி இருந்தார். அயினிப் புளிக்கறியில் செம்பமூட்டு ஆச்சியிடம் ஆசான் கேட்டதுபோல ’இப்படி கோலங்கெட்டு போனிங்களே’ என்றதற்கு ’வயசாச்சுசில்ல’ என்றார்.காலம்தான் எத்தனை இரக்கமற்றது?

வழியெங்கும்  அழகிய சிவப்பு ஓட்டுக்கூரைகளுடன் அழகிய மரங்களடர்ந்த வீடுகள்.மா பலா வாழை நெல்லி இல்லாத வீடுகளே இல்லை கேரளத்தில். மாமரங்கள் அனைத்துமே மலர்ந்திருந்தன

நாட்டு மரங்களில் செந்துருவின் நிறத்தில் கிளைத்த மஞ்சரிகளும். கலப்பின மரங்களில் பசுமஞ்சள் மலர்களுடன் கூம்பு மஞ்சரிகளும் இருந்தன. எல்லா மலர்களும் சிறுபூச்சிகளும் ஈக்களும் எறும்புகளும் மொய்த்தன. இப்போது மகரந்தச்சேர்க்கை   நடந்துதான் கோடையில் கனிகளை உருவாகும்

மதிய உணவு  நெடுஞ்சாலையில் ஒரு சைவ உணவகத்தில். வல்லரிச்சோறும் ஊதா தட்டைக்காய் துவரனும் பிரமாதமாக இருந்தது 

சாலையின் ஒரு திருப்பத்தில் ஒரு அழகிய பெண் ஸ்கூட்டியில் எங்களை கடந்துசென்றாள், தருண் ’’எண்ட ஸ்டேட்டு கேரளமானு எண்ட சி எம் விஜயனானு’’ பாடலை ஒலிக்கச்செய்தான்.

மழை ஓய்ந்திருந்த பின்னிரவில் வீடு திரும்புகையில் புன்னை மரக்கிளைகளுக்கிடையில் நிலவு காத்திருந்தது. நீண்ட நிறைவான நாள்.

ப்ரொபெஷனல்?

சமீப காலங்களில் கொரியர் அனுப்புவது, வாங்குவது என்பதெல்லாம் பெரும் தொல்லை தரும் விஷயமாகிவிட்டிருக்கிறது.  கோவிட் தொற்றுக்கு பிறகுதான் இப்படி . அதற்கு முன்பு சரியாகத்தான் இருந்தது. சரணும் தருணும் நானுமாக நிறைய பொருட்களை வாங்குவதும் அனுப்புவதுமாக இருப்போம். வீட்டில் யாரும் இல்லாதபோது பேக்கரி செல்வம் வாங்கி வைத்து பின்னர் கொடுப்பதுண்டு ஆனால் இப்போது அப்படி இல்லை, எப்படியோ யாரோ வேடசெந்தூர் என்னும் இக்கிராமம் இனிமேல் non service area என்று முடிவு செய்துவிட்டார்கள். 

உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது, சிறிய உலகம், உலகம் உள்ளங்கைகளில் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம் அதுவும் இந்த வேடசந்தூர் கிராமம் தூங்கா நகரமாகி அதிகாலை வரையிலும் பேக்கரிகள் லாரிடிரைவர்களுக்காக நடை திறந்து உயிர்ப்புடன் இருக்கிறது. மருத்துவமனை ஒன்றை தவிர மற்ற எல்லா வசதிகளுமே இருக்கிறது கடந்த பத்து வருடங்களில் மிக வேகமாக வளர்ந்திருக்கும் இந்தப் பகுதி எப்படி திடீரென்று ’’நான் சர்வீஸ் பகுதி’’யானது என்பதும் தெரியவைல்லை.

சரி வீட்டுக்கு வருவதுதான் கஷ்டம் கல்லூரி முகவரிக்கு அனுப்ப சொல்லலாம் என்றால் அங்கும் சிக்கல். கல்லூரியின் வாசலில் நின்று கொண்டு என்னை அழைப்பார்கள் நான் அப்போது வகுப்பிலோ அல்லது மீட்டிங்கிலோ இருந்தால் டெலிவரி செய்யாமல் திரும்பி போவதும், விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும் என்ன அழைத்து கல்லூரிக்கு பார்சல் வந்திருக்கிறது என்ன செய்வது  என கேட்பதுமாக ரகளையாக இருக்கிறது

பார்சல்களை, தபால்களை அனுப்புவதும் முன்பு கல்லூரிக்கு அருகிலேயே ப்ரொபெஷனல் கொரியரின் கிளை இருந்ததால் வீட்டுக்கு திரும்பும் வழியில் அனுப்பிவிட்டு வர வசதியாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்றிருக்கையில் அந்த கடையின் உரிமையாளர் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து உடல்நலமின்றி இருந்தது அதிர்ச்சியளித்தது எதிர்பார்த்ததுபோல் கடை இப்போது இல்லை.

பொள்ளாச்சியின் ப்ரொபெஷனல் கொரியரின் தலைமை அலுவலகம் விசித்திரமாக  ஒரு மிகக் குறுகிய சாலையின்  இறந்த முனையில் அமைந்திருக்கும். அந்தச் சாலை அந்த தலைமை அலுவலக கட்டிடத்துடன்  முடிவடைவதால் அங்கு காரில் சென்றால் காரை  திருப்பி எடுக்க முடியாது எனவே நெடுந்தூரம் நடந்து செல்லவேண்டும் அல்லது காரை திருப்ப  படாத பாடு படவேண்டும். 

 சமீபத்தில் சென்னை நண்பரொருவருக்கு ஒரு சிறிய பொதியை வேறொரு கொரியர் சேவை மூலம் அனுப்பி அது அவருக்கு 10நாட்களுக்கும் மேலாக போய்ச்சேராமல் இழுத்தடித்து அவருக்கும் செலவும் சிரமமும் உண்டாகியது. எனக்கும் கொரியருக்கும் நேரம் சரியில்லை போலிருக்கிறது. 

சமீபத்தில் வெண்ணிலாவின் சென்னை  வீட்டிலிருந்து எனக்கொரு பார்சல் வந்திருந்தது. திங்கட்கிழமையன்று  ’’வீட்டுக்கு அனுப்ப முடியாது தலைமை அலுவலகம் வந்து வாங்கிக்கொள்ளவேண்டும் காலை 9- இரவு 8 மணிக்குள்’’ என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. 

கல்லூரி விடுமுறையில்  ஃப்ளூ விலிருந்து மீண்டு ஓய்வில் இருந்தேன். தருணை அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சிக்கு இதற்கென்று சென்றபோது அன்றைய பகல் வேலை நேரம் முடிந்து இரவு வேலைக்கான ஒரு நபர் மட்டும் இருந்தார். அவர் நான் போனபோது சாவகாசமாக வீட்டில் யாருடனோ அலைபேசிக்கொண்டிருந்தார் என்னை அசிரத்தையாக கவனித்து என்னவென்று கேட்டார் நான் தகவல்சொல்லி குறுஞ்செய்தியை காட்டிய போது அதை சரியாக கூட பார்க்காமல் ’’சென்னையா இன்னும் வந்திருக்காது நாளைக்கு வாங்க’’ என்றார்

நான் பொறுமையை இழக்காமல் எனக்கு தகவல் வந்தபின்னர் தான் வந்திருக்கிறேன் என்றதும் கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவர் போனை அணைத்திருக்கவில்லை எதிர்முனை உயிருடனேயே இருந்தது. ’’போன் மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு வராதீங்க நாங்க போன் பண்ணி கூப்பிட்டு சொன்னாதான் வரணும்’’ என்று உபரிதகவல் வேறு கொடுத்தார் . என்ன ஒரு பொறுப்பில்லாத்தனம்?

அவர் நெடுநாட்களாக இரவுப்பணியில் வேலைஏதுமில்லமால்  சுகமாக இருந்திருக்கிறார் இப்படி என்னைப்போல துரதிர்ஷ்டசாலிகள் வந்தால் விரட்டிவிடுவதும் வழக்கமாயிருக்கிறது. 

இப்படி பொறுப்பற்றவர்கள் எந்த நிலையில் எந்தப்பணியிலிருந்தாலும் பலருக்கு பெரும் சிக்கல்கள் ஆபத்துக்கள் உண்டாகும்

அந்த அசிரத்தை திலகத்திடம் பேசிக்கொண்டிருக்க முடியாமல் கசந்துபோய் வீடு திரும்பினேன்

மீண்டும் எனக்கு அதே குறுஞ்செய்தி 2 நாட்களாக வந்துகொண்டிருந்தது கூடுதலாக 3 நாட்களில் வாங்காவிட்டால் அனுப்பியவருக்கே திரும்ப அனுப்பிவிடுவோம் என்று அச்சுறுத்தல் வேறு.

எனவே இன்று காலையே புறப்பட்டு போனோம் இரவு அதே அசிரத்தை ஆசாமி இருந்தால் என் பொறுமை எல்லைதாண்டும் சாத்தியமிருந்ததால் காலையில் போவதே உசிதம்  என்று பட்டது.

மிகச்சரியாக காலை 9 மணிக்கு போனபோது அங்கு கதவு திறந்திருக்கவில்லை வாசலில் ஸ்டூலில் ஒரு பெரியவர் கொரியர்கள் அனுப்ப வந்தவர்களுக்கென  பணியிலிருந்தார்

நான் விவரம் சொன்னதும் ’’10 மணிக்குத்தான் வருவாங்க காத்திருங்க’’ என்றார்

தெள்ளத் தெளிவாக காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என்று செய்தி வந்திருந்தது.

பொறுமையாக காத்திருந்தேன். உடன் மேலும் சிலர் வந்து காத்திருந்தார்கள். மருந்துபார்சலுக்காக  இரண்டாவது நாளாக காத்திருந்த ஒரு பெரியவர் முன்பு இதே ப்ரொபெஷனல் கொரியர் அதன் சேவைக்கு புகழ்பெற்றிருந்ததை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

9.30க்கு ஒரு பெண்மணி தோளில் ஹேண்ட்பேக்கும் கையில் மதிய உணவுப்பையும் காதில் செல்போனுமாக மெல்ல நடந்து வந்தார் அவரது  சாவகாசமான உடல்மொழியிலேயே அவர் அங்குதான் பணிபுரிகிறார் என்பது தெரிந்தது. வந்தவர் கதவை திறக்காமல் கட்டிடத்தின் பின்புறம் சென்று மறைந்தார். பின்னர் 10 மணிக்கு மீண்டும் காட்சியளித்து கதவை திறக்க முற்பட்ட போது அவருக்கு மீண்டும் போன் வந்தது. போனில் பேசிக்கொண்டே (சாப்பிட்டீங்களா? பாப்பா போயிட்டாளா? ம் ம் ம் அதான் சொன்னேனில்ல ம் சரி அதுக்கென்ன  ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்) 

தருண் பொறுமையிழந்து உள்ளே சென்றதும் போனை அணைக்காமலேயே கண்களால் என்ன காரியம் என்று வினவினார் நான் அலைபேசி குறுந்தகவலை காட்டியதும் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து போனில் பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் என் எண்ணை தட்டச்சிப் பார்த்தார். பார்சல் அங்குதான் திங்கட்கிழமையிலிருந்து காத்திருக்கிறது என்றது கணினி

போனில் பேசுவதை நிறுத்தாமலேயே. அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தவரிடம் சென்னையிலிருந்து  வாட்ஸ் ஆப்பில் அனுப்பட்டிருந்த பார்சல் புகைப்படத்தை காட்டியதும் ’’பேரு என்ன லோகமாதேவியா?’’ என்று 8 வது முறையாக கேட்டுவிட்டு உள்ளே சென்று 10 நிமிடங்களில் பார்சலை கொண்டு வந்தார். அப்போதும் போனில் பேசிக்கொண்டேதான் இருந்தார்  எதிர்முனைக்கு உம் கொட்டியவாறே என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.

பெருமூச்சுடன் வாங்கிகொண்டு காருக்கு வந்தேன்

இப்படி அசட்டையாக சோம்பேறிகளாக எப்படி இவர்களால் இருக்க முடிகிறது?  

முன்பு ஸ்டேட்பேங்கில் எங்கள் சம்பளம் போடப்படும் அப்போதும் இப்படித்தான் சம்பந்தப்பட்டவர் இருக்கைக்கு வரவே 11மணியாகும் பின்னர்  கம்பிக்கு வெளியே காத்திருப்பவரை அவர் நிமிர்ந்துபார்க்க 12 மணி ஆகும் நிமிர்ந்துபார்த்துவிட்டு அவர் காபி குடிக்க போய்விட்டு திரும்பி வருவதற்குள் 10 20 வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள் மெத்தனமென்றால் அப்படி ஒரு மெத்தனமாக பணி செய்வார்கள்  இதை திண்ணக்கம் அல்லது தடித்தனம் என்பார்கள் இங்கெல்லாம். அதன்பிறகு கல்லூரி வளாகத்திலேயே இப்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுவதால் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.

ப்ரொபெஷனல் கொரியர் தொலைபேசி எண் மற்றும் வாடிக்கையாளர் சேவை என் இரண்டையும் குறித்துக்கொண்டு வந்து இப்போது வரை அழைக்கிறேன் யாரும் எடுக்கவில்லை

இப்படியான பணியாளர்களை மாற்ற வேண்டும் அல்லது கண்டிக்கவாவது வேண்டும். இல்லாவிட்டால் ப்ரொபெஷனல் என்னும் பெயரையாவது  அசிரத்தை, அசட்டை, அல்லது மெத்தன கொரியர்  சேவை என்று  மாற்றி வைக்க வேண்டும்

ஒரு நாள்

(தொடர்)

25 வருடங்கள் ஆகிவிட்டதா? மலைப்பாக இருக்கிறது . நான் இன்னும் அந்த சிவப்பு செங்கல் அடுக்கி கட்டப்பட்டிருந்த பிரிட்டிஷ் காலத்து கட்டிடத்தில் வெளிப்புற சுவரோரம் காயங்களுடன் நெற்றியில் வழிந்த ரத்தத்துடன் என்னருகில் மதில்மீதேறிக்கொண்டிருந்த ஒரு கொடியின் இதயவடிவ இலைகளை பொருளின்றி பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளாகவே இருக்கிறேன்.

புது தில்லியின் அந்த நெடுஞ்சாலையின் நடுவில் கிடந்த என்னை அங்கு கூடிய கூட்டத்தில் இருந்தவர்களும் மதுவும் தூக்கி வந்து அமரசெய்திருந்தனர். அன்று நடந்ததெல்லாமே அப்படியே சட்டம் சட்டமாக மனதில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது.

தனித்து நீண்ட பல இரவுகளில் அடிக்கடி எடுத்து அவற்றை என் முன்னே பரப்பி ஒவ்வொன்றாக பார்ப்பது வழக்கமாகி இருந்தது..ஒவ்வொரு காட்சியும் தனித்தனியே துலங்கித் தெரியும் எப்போது நினைத்துக்கொண்டாலும். அப்படியொரு உச்சதருணங்களால் நிறைந்த நாளது.

அந்த நாள் அந்த விபத்திற்கு சற்றும் தொடர்பில்லாமல் வெகு ரம்மியமாக துவங்கி இருந்தது. வெள்ளையில் அடர்நீல மலர்கள் செறிந்திருந்த பிறந்த நாளுக்கென எடுத்திருந்த ஷிஃபான் புடவை உடலை தழுவிக்கொண்டிருந்தது. அன்றைய தினம் என்னவோ நிகழும் என்னும் எதிர்பார்ப்பில் மனமும் மலர்ந்திருந்தது.

உடனிருந்த தோழிகளுக்கும் விஷயம் தெரிந்திருந்ததால் மொத்தத்தில் எங்கள் அறையே மலர்ந்திருந்தது. மல்லிதான் பிறருக்கு சொல்லி இருப்பாள்

பல்கலைக்கழகத்தில்ஆய்வுமாணவிகளுக்கான கடிதங்கள் போடப்படும் பெட்டி இருக்கும் இடத்தில் நான் தவமிருப்பதும் அடிக்கடி எனக்கு கடிதம் வருவதும், துறையின் எதிரிலிருக்கும் பெருங்கொன்றையின் அடியில் இருக்கும், மதியம் அங்கு விற்கப்பட்ட ஆரஞ்சு, கொய்யாக்களின் கார நெடி வீசும் மரபெஞ்சில் அமர்ந்து நான் கடிதங்களை படிப்பதும் மாய்ந்து மாய்ந்து பதில் எழுதுவதும், கனவு மிதந்த கண்களுமாக என்னுடன் இருந்த அனைவருக்கும் சேதியை சொல்லி இருந்தது,

போதாதற்கு சென்ற முறை தில்லி சென்று திரும்புகையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் வசிக்கும் வீணா அக்காவுக்கு கொடுக்கும்படி அவர் கொடுத்திருந்த ஒரு பார்சலை கொடுக்க போகையில் உடன் மல்லிகாவும் வந்திருந்தாள். அங்கிருந்து கிளம்புகையில் வீணாக்காவின் மாமியார் எனக்கு தலைவாரி பின்னலிட்டு பிச்சிப்பூ சரம் வைத்துவிட்டார்கள். வீணாக்கா என்னை நெட்டி முறித்து ’’நாங்களே பார்த்தாலும் உன்னைப்போல ஒருத்தி எங்க நாணாவுக்கு கிடைக்கமாட்டா உங்க வீட்டில் ஒத்துப்பாங்களா‘’என்று நேரடியாக கேட்டே விட்டார். நான் திகைத்து ’’அவர் வந்து பேசறேனிருக்கார்’’என்றேன். ’’அவன் பேசறது இருக்கட்டும் உனக்கு இஷ்டமா?’’ என்றார். திணறி மூச்சடைத்து திக்கித் தடுமாறி ’ஆம்’ என்றேன்

மல்லி மேற்கொண்டு அங்கு ஏதும் கேட்கவில்லை எனினும் வெளியில் வந்ததும் ’’என்னடிது? அப்பா ஒத்துக்கவே மாட்டாரே ?’’ என்றாள். நான் அஞ்சிகொண்டிருந்த ஒன்றை அவள் எடுத்து என் முன்னே வைக்கிறாளே என்று ஆத்திரமாக இருந்தது அவள் மீது. ’’பார்க்கலாண்டி’’ என்று மட்டும் சொல்லி இருந்தேன்.

எதிர்பாராமல் மது அதிகாலையில் அந்த தங்குமிடத்துக்கு பியூஷுடன் வந்து அவராகவே செய்து என் பெயரை க்ரீமில் எழுதியிருந்த சிறிய வட்ட கேக்கை கொண்டு வந்தது தாங்கமுடியாத சந்தோஷத்தை அளித்தது. எத்தனை முயன்றும் அதை என் முகத்தில் மறைக்கவே முடியவில்லை நான் ததும்பிக்கொண்டிருந்தேன்.

அவர் மாலை என்னை கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக விஜி மிஸ்ஸிடம் அனுமதி கேட்டதும் அப்படித்தான், நம்ப முடியவில்லை. விஜிக்கோ அவரை அத்தனை பிரியம் தில்லி வரும் போதெல்லாம் மது மது என அவர் புகழ்பாடிக்கொண்டே இருக்கும் என்ன நினைத்ததோ அவர் கேட்டதும் உடனே சரிஎன்றது.

நான் அன்றைய கருத்தரங்கில் என்னவோ பேசினேன் என்னவோ சாப்பிட்டேன் என்னவோ பதிலளித்தேன். எனது கடைசி ஆய்வறிக்கைஅது உதவித்தொகையாக அமைச்சகம் எனக்கு கொடுத்திருந்த 6 லட்சரூபாய்களுக்கான கணக்குகளையும் சமர்ப்பித்தேன். எதிலும் கவனமாக இல்லாத என் இளமனம் மாலை செல்லப்போகும் கோவிலில் முன்பே போய் காத்திருந்தது. அங்கே நடக்குமென மனம் விழைந்த ஆயிரமாயிரம் விஷயங்களை மனதுக்குள் நடத்தி நடத்தி ஒத்திகை பார்த்த்து.

மற்றொமோர் எதிர்பாராமையாக கருந்தரங்கு நடந்த இடத்துக்கே என்னை அழைத்த்துச்செல்ல மது வந்தார். நான் மாலை விடுதிக்கு போய் குளித்து புறப்படலாமென்றிருந்தேன். ஆனால் அவருக்கும் காத்திருக்க முடியவில்லையோ என்னவோ அங்கேயே வந்தார். விஜியிடன் அனுமதி பெற்று கண்களால் புன்னகைக்கும் தோழிகளிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அந்த பைக்கில் நான் அன்றுதான் முதலும் கடைசியுமாக ஏறி அமர்ந்தேன். என் கைகளில் இங்கிலாந்தில் இருந்து பாப் கொண்டு வந்து பரிசளித்த அழகிய பச்சைப்பூக்கள் இருக்கும் இரண்டு மடிப்பாக மடித்துக்கொள்ளும் சாம்பல் நிற பர்ஸ் இருந்தது.அதற்குள் என்னை எபோதைக்குமாக கைவிட்ட குட்டி விநாயகர் சிலையுமிருந்தது.

மாலையாயிருந்ததால் சந்தடி மிகுந்திருந்தது தில்லி தெருக்களில். ’’என்னை வேணும்னா பிடிச்சுக்கோ’’ என்றபோது வெட்கி மறுத்துவிட்டு சீட்டின் பின்னிருந்த ஒரு கம்பியை பற்றிக்கொண்டேன். முதன்முதலில் தில்லி வந்தபோது மதுவுடன் வன அமைச்சக இயக்குநரை சந்திக்க சென்றபோது அவ்வளாகமெங்கும் மலர்ந்திருந்த ஏழிலைப்பாலையின் மணம் எங்கிருந்தோ வீசுவதுபோல் இருந்தது.

கொஞ்ச நேரத்தில் ஒரு கோவில் முன்பாக பைக்கை நிறுத்தி இறங்கினோம். தான் முதன் முறையாக கோவிலுக்கு வருவதாக சொன்னார். புன்னகைத்தேன் அவருக்கு நடவுள் நம்பிக்கை இல்லையென்றறிந்திருந்தேன்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளே செல்ல தனித் தனி வழிகள் இருந்தன. நான் எனக்கான வழியில் நுழைந்து உள்ளே கருவறையில் ஆளுயரத்துக்கு வண்ண வண்ண மாலைகளுடன் குழலூதிக்கொண்டிருக்கும் நீலக்கண்ணனை கண்டபோது அவரது வழியில் மதுவும் உள்ளே வந்து என்னுடன் இணைந்துகொண்டார். அவ்வளவாக கூட்டம் இல்லை. ஒன்றிரண்டு பேர் உடனிருந்தனர். பூஜை ஆரத்தியெல்லாம் ஒன்றுமில்லை தட்டில் இருந்த குங்குமப் பிரசாதம் மட்டும் கொடுக்கப்பட்டது. நான் நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல் உள்ளங்கையிலேயே குங்குமத்தை வைத்துக்கொண்டிருந்தேன்.

சந்நிதியின் பக்கவாட்டு வாயில் வழியே வெளியேறி அங்கிருந்து மேலேறிய படிகளில் ஏறி மேலே சென்றோம். கோவிலில் அபப்டி படிகள் இருக்குமென்பதை அப்போதுதான் பார்த்தேன். மேலிருந்த விசாலமான அறையில் பலர் அமர்ந்திருந்தனர். அழகிய வண்ணங்களில் சாளரங்கள் இருந்தன. ஒரு சாளரத்தினருகில் ஒருவர் அமர்ந்து ஆர்மோனியப்பெட்டியை இசைத்துக்கொண்டே ஒரு பஜனை மனமுருகிப்பாடிக்கொண்டிருந்தார்.

என் மனமும் உருகி வழிந்துகொண்டிருந்தது. மற்றுமோர் சாளரமருகே இருவரும் நின்றோம். தில்லியின் தெருக்களில் மெல்ல மெல்ல ஒளிஎழுந்து நகரமே அந்த சாளரம் வழியே ஒளிரத்துவங்கியிருந்தது.

தனது கையிலிருந்த குங்குமத்தை என் கைகளில் கொட்டினார். நான் அதை எடுத்து நெற்றிக்கிட்டுக்கொண்டேன். மது என்னையே பார்ப்பது தெரிந்தது. மனம் அதுவரை இருந்த பதட்டமில்லாமல் நிச்சலனமாய் துடைத்துவிட்டது போலிருந்தது. பஜன் உருகிக்கொண்டே இருந்தது . அந்த பாஷை முழுவதும் புரியவில்லை எனினும்

மீள் மீள

’’போலோ ராம் ராம் ராம், போலோ ஷியாம் ஷியாம் ஷியாம்’’

என மன்றாடிய அக்குரல் என்னுள் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அங்கிருந்து புறப்படுகையில் இருட்டிவிட்டிருந்தது. பைக்கில் ஏறியதும் சட்டெனெ நினைத்துக்கொண்டவர் போல ’’போன இண்டிபெண்டன்ஸ் டேக்கு நா இந்தியா கேட்டில் பரேட் வந்தேனில்லியா அங்கே போலாமா?’’ என்றார். அப்போது நரகத்துக்கு போலாமா என்று கேட்டிருந்தாலும் சரியென்று தலையாட்டி இருப்பேன்.

அங்கே சென்றோம், பைக்கை தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து இந்தியா கேட்டின் முன்பிருந்த பரந்த புல்வெளியில் அருகருகே அமர்ந்தோம். உள்ளிருந்து என் இதயம் அவர் சொல்லப்போவதை கேட்க கணம் கணமாக காத்திருந்தது அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் எனினும் இருவருமே குடும்பம் ஆராய்ச்சி , உன்னதியுடனான ப்யூஷின் காதல் ப்யூஷ் என்றால் அமிழ்தம் என பொருள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். அவர் முழங்கால்களை கைகளால் கட்டிக்கொண்டிருந்தார், நான் கால்களை ஒருக்களித்து அமர்ந்திருந்தேன். இளங்குளிர் ரம்மியமாக இருந்தது. பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர், குழந்தைகளின் கீச்சிடல் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது.

மெதுவாக மது “என்னவோ எண்ட்டே சொல்லனும்னியே என்னது” என்றார் கண்கள் பளிச்சிட. அப்படி அவருக்கு எழுதியிருந்தேன் என்பதே அப்போதுதான் நினைவுக்கு வந்தது

இதயம் பறை போல் துடித்தது காதில் எனக்கே கேட்டது. எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு அடுத்த மாதம் ஆய்வு முடிவதால் வீட்டில் கல்யாண பேச்சு துவங்கிவிடும் இனிமேல் தாமதிக்க காரணமில்லை என்பதையும் அக்கா கணவரின் இடையூறையும் சொன்னேன். அவை குறித்து சமாதானமாக மேலோட்டமாக ஏதோ சொன்னவர் ’’என்ட்டே சொல்லனும்னு இருந்தியேஅது இதுதானா’’ என்றார், கண்களில் பளிச்சிடல் இப்போது இல்லை, குழம்பி இருந்தது, கசப்புடன் ’ஆம்’ என்றேன்.

பின்னரான அமைதி அத்தனை துயரளித்தது இருவருக்கும். சட்டென்ன பேச்சை வீணாக்கா உத்ரா ரேகா அத்திம்பேர் இந்தியா கேட்டின் உள்ளே படிகளில் ஏறிச்செல்லும் வழியென மாற்றியவர் ’’நேரமாயிருச்சே போலமா’’ என்றார்.

மனதை திரட்டிக்கொண்டு ஏமற்றத்துடன் சரி என்று எழுந்தேன். பைக் நிறுத்தப்பட்ட இடம்வரை மெளனமாகவே வந்தோம். பைக்புறப்பட்டு இந்தியா கேட்டின் எதிரிலிருந்த நேர்ச்சாலையில் 300மீ தூரம் கூட வந்திருக்காத போது எதிரே தவறான திசையில் வந்த ஒரு ஜீப் பைக்கில் மோதியதில் நான் தூக்கி வீசப்பட்டேன்.

பலர் கூடி என்னை தூக்கினார்கள், முழங்காலுக்கு கீழ் பலத்த அடிபட்டிருந்த அவரும் ஓடிவந்து என்னை தூக்கி ”ஆர் யூ ஆல்ரைட்” என்று பலமுறை உரக்கக் கேட்டார். எனக்கு வலிதெரியவைல்லை அதிர்ச்சியும் திகைப்புமாக பிரமித்திருந்தேன். ஜீப்பில் இருந்தவர்களிடன் இந்தியில் என்னமோ ஆத்திரமாக பேசிக்கொண்டும் என்னை காட்டி அவளுக்கு எதாவது என்றால் அவள் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்று கேட்டுக்கொண்டு ஜீப்பில் பர்தா அணிந்த பெண்கள் இருப்பதை பார்த்ததும் காலை நொண்டிக்கொண்டே அவ்வபோது என்னை திரும்பி திரும்பி பார்த்தபப்டி, அவர்களை போய்விட்டு மறுநாள் தனது ராணுவ முகாமில் வந்து பார்க்கும் படி சொல்லி ஜீப் எண்ணை குறித்துக்கொண்டு, பைக் சேதமடைந்ததுக்கு அவர்களளித்த 2000 ரூபாய்களை வாங்கிக்கொண்டிருந்தவரை பார்த்துக்கொண்டிருந்த நான் மனதிற்குள் ”லவ்யூ மது” என்று கோடானு கோடி முறை உரக்க கூவிக்கொண்டிருந்தேன்.

தாவரங்கள் காத்திருக்கின்றன

கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்

கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.

பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும்  ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி  அவரவர் குழந்தைகள் காப்பியடித்து  தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர  திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது

சங்கரன் கையேடு

எனவே அடிப்படை அறிவியல் துறைகளில்  சேர்ந்து பயில மாணவர்கள்  தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான  துறைகள் இருப்பதும் அவற்றின்  முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.

தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த  வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண்  பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு  சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.

எமிலியின் ஒவியம்

என் மாணவிகள் பலர்  கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு  அமைப்பு,  வனமரபியல்  மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,

கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு  வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.

J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய  flora of madras presidency யின்  அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே  1817-1911 ல்  Hooker உருவாக்கிய  Flora of British India தொகுப்புக்கள்,  பிலிப், ஃபைசன் 1915 ல்  உருவாக்கிய  பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய  flora of Nilgiri and pulny hill tops,   போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு  1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிலிப் ஃபைசனின் நூல்

தமிழ் விக்கியில் இவர்களை குறித்த  பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது  அனைத்தும் அரிய பதிவுகள்

இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின்  பல மாணவர்களில் முதன்மையானவர்  மா.கிருஷ்ணன்.   

கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமானஆல்பர்ட் பெளர்ன்   மற்றும்  அவரது மனைவி எமிலி டிரீகிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு  தொடர்பு உருவானது.

பௌர்ன்  நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில்   இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும்  இவற்றை  செய்து முடித்திருக்கிறார்கள் .

நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும்  உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து  ஆய்வகத்தை  சமீபத்தில் சுத்தம் செய்தேன்  ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும்  நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள்  பலவற்றை  செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில்  கிடந்தது.

தான்  பயணித்த  இடங்கள்,  கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை  பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த  முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று  தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன்  மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல  உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த  ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன்  ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை  தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்

அன்பில் அழியுமடீ!

நேற்று மாலை  இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை  கடந்தே செல்லவேண்டும்.

இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை.  நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்

எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்

ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று

அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை.  திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்

இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.

 நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது.  ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான்.  நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.

துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்

முன்பே சொல்லப்பட்டிருக்கிறதே

‘’துன்ப நினைவும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ!’’ என்று!

வளமை

நேற்று ஒரு பண்ணை வீட்டின் காணொளிகளையும் புகைப்படங்களையும் பார்த்தேன். பொதுவாக விஷ்ணுபுரம் நண்பர்கள் இப்படி சிறந்த இடங்களுக்கு செல்கையில் அவற்றை அனைவருடனும் பகிர்வார்கள்

அந்த பண்ணை வீட்டின் பேரில் தனித்த பிரியம் கொண்டிருக்கும், அங்கே அடிக்கடி கூடுகைகளுக்கு சென்று வரும் நண்பர்களில் சிலர் வாட்ஸப் குழுமங்களில் அவரது பண்ணையில் யானை வந்து நீரருந்திச்செல்வது, பலாப்பழங்களை பறித்துண்பது போன்ற காணொளிகளை பகிர்வது வழக்கம். நேற்று அப்படி பகிரப்பட்ட காணொளிகளில் கோடைக்கால கனிகளின் பல வகைகள் செறிந்து காய்த்தும் கனிந்தும் இருந்ததையும், அறுவடையையும் பகிர்ந்திருந்தார்கள்.

எனக்கு எப்போதுமே அறுவடை செய்வதும் அதை காண்பதும் பெரும் பரவசமளிப்பவை

அந்த பண்ணை வீட்டின் பிரியர்களில் நானும் ஒருத்தி. தென்னை, மா, பலா, நாவல், முந்திரி கொய்யா உள்ளிட்ட பல பழவகை மரங்களும் மந்தாரையிலிருந்து பல வண்ண மலர்ச்செடிகளும் நிறைந்த பல்லுயிர் பெருக்கில் ததும்பும், முறையாக பராமரிககப்படும் தோட்டம் அது

முதல்  முறை அங்கு சென்றபோது கோடைக்காலமாகையால் பகலில் பெண்கள் குழாம் நாவல் மரங்களை வேட்டியாடினோம், இரவில்  பாலுவே பலாச்சுளைகளை அனைவருக்குமாக அளித்தார்

அங்கு எனக்கு சுவாதீனமுண்டு, அடுப்படியில் தேநீர் தயாரிப்பது மாலை விளக்கு ஏற்றுவது என்று, விஷ்ணுபுரம்  வெறும் இலக்கியம் பேசும் குழுமம் மட்டும் அல்லவே அது ஒரு குடும்ப அமைப்புபோலத்தானே! 

அப்படியான அந்த பண்ணையை நேற்று காணொளியில் பார்க்கையில் நூற்றுக்கணக்கில் மாங்கனிகள் மரத்தடியில் சிதறியும் இறைந்தும் கிடந்தன,பச்சைகாய்களை கொண்ட  தென்னைகள் நிறைந்த குலைகளுடன் நின்றது. பலாவின் பெருங்கனியொன்று கிளையிலிருந்து உதிர மனமின்றி அதிலேயே வெடித்து பிளந்து சுளைகளைக் காட்டி ஆசையூட்டிக் கொண்டிருந்தது.

இது ஒருவேளை என் இடமாக  இருந்திருந்தால், இப்போது இங்கு வேடசெந்தூர் வீட்டில் வெற்றிலைக்கொடியினருகிலேயே  சுணணாம்பும்,  இனிப்பூட்டிய பாக்குத்தூளுமாக அமர்ந்து மனம் நிறைய வெற்றிலை போட்டுக்கொள்ளுவதை போல பலா மரத்தடியில் அமர்ந்தே அச்சுளைகளை உண்டிருப்பேன்.

நேற்று மாலை அப்பா வீட்டில் பலாக்கனிகள் சில முற்றி நம் வீட்டில் விழுந்து உடைந்து சிதறிக்கிடந்தன. மாலை நல்ல மழையும் ஆதலால் வீடெங்கும் அதன் மணம் கமழ்ந்தது ஒருபோதும் நான் அந்த பழத்தை சுவைத்ததில்லை சுவைக்கவும் போவதில்லை. காலை அப்பா என்னிடம் பலாச்சுளைகளை சாப்பிடும்படி சொன்னார், அவர் கண்களை நேராக சந்தித்து ’’எனக்கு பலாப்பழமே பிடிக்காதே’’ என்றேன். 

ஆம், வஞ்சம்தான், அது எனக்குள் கனன்று கொண்டேதான் இருக்கிறது, இது என்னை அறமற்றவளென்று வகுக்குமேயானால் அவ்வாறே ஆகட்டும், அறியட்டும் உலகு  நான் அறமற்றவள் என்று, வஞ்சம் புகையும் கல்நெஞ்சக்காரி என்றும் கூட.  இப்பிறவியில் இவற்றிலிருந்து எனக்கு மீட்சியில்லை. மீட்சியை நான் விழையவும் இல்லை.

மனம் எங்கோ சென்றுவிட்டது பலாவின் மணத்துடன்,இதோ திரும்பி வருகிறேன்

ஆம் அறுவடை, அது எனக்களிப்பது பெரும் நம்பிக்கையை, காயும் கனியும் கீரையும் மலர்களுமாக தோட்டமும் பண்ணையும் வயல்களும் நிறைந்திருப்பதும் அறுவடை செய்யப்பட்டவை குவிந்துகிடப்பதையும் பார்க்கவே எனக்கு பெரும் கிளர்ச்சியண்டாகும்.

அறுவடை என்பது வளமையின் சாட்சி, செழிப்பின் சாட்சி தொடர்ந்து இவ்வுலகில் உயிர்கள் வாழும்  சாத்தியத்திற்கான  உத்திரவாதம்,  எனக்கு வாழ்வை தொடர வேண்டும் என்னும் பிடிப்பையும் பெருவிருப்பையும் அறுவடையும் அறுவடையை காணுதலும் உருவாக்கும்.

நீர் நிரம்பிய கலம் அவற்றில் மிதக்கும் வண்ண மலர்கள் தீபச்சுடரொளி இவைகளும் அப்படித்தான், மலரும் நீருமின்றி வீட்டிலிருந்து ஒருபோதும் பயணத்தை துவக்குவதில்லை, எப்போதும் காரில் ஓரிரு மங்கலங்கள் இருக்கவேண்டும் என்பதை மகன்களுக்கும் உணர்த்தியிருக்கிறேன்

மாலைவேளைகளில் விளக்கேற்றாவிட்டால் மனம் எப்படியோ வெறுமை கொண்டுவிடுகிறது, எவ்விதத்திலும் இருள் அணுகிவிடக்கூடாது என்னும்  ஆழ்மன விருப்பத்தின் வெளிப்பாடாகவும்  இது இருக்கலாம்.

அந்த பண்ணை வீட்டிலிருந்து முதல்முறை திரும்புகையில் கொண்டு வந்த ராம் சீதாப்பழத்தின் விதையினின்றும் ஒரு செடி இளம்பச்சை நீளிலைகளுடன் இங்கு வளர்ந்து நிற்கிறது.

அப்படி ஒரு நஞ்சில்லா நிலமொன்றில் பலவ்ற்றை விளைவித்து மகிழும் விழைவு எனக்குள் பல்லாண்டுகளாக நிறைவேறாமல் காத்திருக்கிறது. அவ்விழைவின் மீச்சிறு வடிவமாகவே வேடசெந்தூர்வீட்டிலும் வகை கனிமரங்களிலும் ஒவ்வொன்று, பாரதியின் காணி நிலம் போல 12 தென்னைகள், மலர்ச்செடிகளும் மூலிகைகளுமாக வைத்து வளர்த்து பசுமையும் செழுமையும் நிரம்பி, வளமை பொங்க வாழ்கிறேன்.

ஊட்டி ஃபெர்ன்ஹில் நித்யா ஆசிரமம் நல்ல மேட்டு நிலத்தில் அமைந்திருக்கும் முழுவதும் மலர்ச்செடிகளாலும் இயற்கை புல்வெளியாலும் சூழப்பட்டிருக்கும் சொர்க்கத்துக்கு இணையான இடம் அது.அங்கு எனக்கு தாளமுடியாததென்றால் குளிர்மட்டுமே மற்றபடி திரும்பிவராமல் இறுதி மூச்சுவரை இருக்க விரும்பும் ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று.

அங்கு ஒரு கோடைக்கால காவிய முகாமின் போது தேவதேவன் அவர்களுடன் ஒரு மாலை நடை சென்றேன், மலர்கள் மலர்கள் மலர்களென்று முழுவதும் மலர்களை பார்த்து அவற்றின்  பெயர்களை தெரிந்துகொண்டு அவற்றின் மணம் நுகர்ந்து கொண்டு அவற்றை பறித்து கையில் ஏந்திக்கொண்டு ஒன்றை தலையிலும் சூடிக்கொண்டு அனைத்தையும் புகைப்படமெடுத்துக்கொண்டு மலர்களால் ஆன நாளாகவே  அமைந்தது அன்று.

அன்று பிற்பகல் ஊர் திரும்பவே எனக்கு மனதில்லை நிர்மால்யாவிடம் அனுமதி பெற்று வட்டத் தலையணைகள் போல் நெருக்கமான  வண்ணச்சிறுமலர்களால் ஆன  ஹைட்ராஞ்சியா  மலர்ப்பந்துகளில் ஒன்றை பறித்துக்கொண்டு பொள்ளாச்சி வந்தேன்

குருநித்யா ஆசிரமத்தின் ஒரு சிறு துண்டையே வீட்டுக்கு கொண்டு வந்தது போல் இருந்தது அம்மலரை பார்க்கையில் எல்லாம். கன்யாகுமாரி கவிதை முகாமிற்கு பிறகும் அங்கிருந்து என் கைக்கடிகாரப்பட்டையில் ஒட்டிக்கொண்டு வீடுவரை வந்த கடற்கரை மணலும் அப்படியான உணர்வை, அவ்விடத்தின் நினைவுகளின் நீட்சியை அளித்தது. அப்படித்தான் இந்த பண்ணை வீட்டு நினைவும். 

ராம் சீதாவும் அங்கிருக்கும் பல மரங்களில் ஒன்றொன்றாக இங்குமிருப்பதுமாக அப்பண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இங்குமிருக்கிறது, பெருமரங்களின் மீச்சீறு போன்சாய் வடிவங்களை போல.

இன்று ஜெ தன் பிறந்தநாளன்று அருணாவுடன் எர்ணாகுளம் சென்று  விட்டு,மழை பெய்திருந்த நாகர்கோவில் திரும்பியதை சொல்லியிருந்தது போலவே நானும் இன்று  நினைவுகளில் பசுமை வழியாகவே சென்று பசுமை வழியாகவே மீண்டேன்

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑