‘’Mountain between us’’ நேற்று இந்த திரைப்படத்தைப்பார்த்தபின்னர் இதைக்குறித்து (முதன்முறையாக) எழுதலாமென்று தோன்றியது. இதுவரையிலும் பிறர் பல திரைப்படங்களைக்குறித்து எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். ஆனால் எழுதியதில்லை. Salman fishing in yeman காட்டிய மாறுபட்ட பணிச்சூழலில் உருவாகும் காதலையும் Bridges of Madison County யில் அன்னைமைக்கும் அதன் அடியாழத்திலிருந்து எதிர்பாராமல் வெளிப்பட்ட அவளின் பெண்மைக்குமான போராட்டத்தில் வெற்றி பெற்றது யாரென்பதையும் குறித்து எழுத நினைத்தும் எப்படியோ அது முடியாமல் போய்விட்டது. எனினும் நேற்று இந்தப்படம் என்னை அதிகம் யோசிக்கவும் அவசியம் எழுதவும் வைத்துவிட்டது. தனிமையில் , பெருமழை நாளில் எனக்கு பிடித்தமான மகிழம்பூ மணக்கும் என் பிரிய சிவப்புக்கம்பளியில் அமர்ந்து நல்ல குளிரில் பார்த்ததில் இன்னும் இக்கதைக்கு நான் நெருக்கமாகிவிட்டேன்.
சார்லஸ் மார்டினின் நாவலைத்தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விமான விபத்திற்கு பிறகு அசாதாரண சூழலில் உயிர்பிழைப்பது பற்றிய சர்வைவல் டிராமா வகையைச்சார்ந்த இதைப்போலவேயான, Meet-Cute on a Mountain, Alive, லியான் நீசனின் The Grey போன்ற திரைப்படங்களை துவக்கத்தில் நினைவூட்டியதென்றாலும், தொடர்ச்சியாக பார்க்கையில் அவற்றிலிருந்து மிக மாறுபட்டிருப்பதை உணர முடிந்தது.
அறுவைச்சிகிச்சை மருத்துவரான , மூளை என்பது நினைவுகளின், செயல்களின் ஆதாரம் என நம்பும் Ben ஆக Idris Elba வும், உணர்வெழுச்சிகள் தோன்றுவது இதயத்தில்தான் என நம்பும் புகைப்படபத்திரிக்கையாளரான Alex ஆக Kate Winslet ம் கதையின் பிரதான பாத்திரங்கள்
டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில், இடாஹோ ( idaho ) விலிருந்து மறுநாள் நியூயார்க்கில் நடக்கவிருக்கும் தனது திருமணத்திற்கு அலெக்ஸூம் , பால்டிமோரில் முக்கிய அறுவைசிகிச்சை அடுத்தநாள் செய்யவேண்டிய கட்டாயத்திலிருக்கும் பென்’னும் புயலால் அவர்கள் செல்லவிருக்கும் விமானம் ரத்துசெய்யபட்டதால், ஒரு சிறு தனியார் விமானத்தில் டென்வருக்கு சென்று பின்னர் அவரவர் செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லும் திட்டத்துடன் பயணிப்பதில் கதை துவங்குகின்றது.
துவக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் வால்டர் என்னும் விமான ஒட்டியும், இறுதிவரை பெயரிடப்படாத கோல்டன் ரெட்ரிவர் நாயொன்றும், தவிர பரந்து விரிந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு நடுவில் இவர்கள் இருவர் மட்டுமே கதைமுழுக்க வருகிறார்கள்.
விமானம் புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே கீழே திசை மாறிய புயலைக்காணும் இவர்களின் வாழ்வும் விமான ஓட்டிக்கு வரும் மாரடைப்பினால் திசைமாறிவிடுகின்றது. பலநூறு கிலோமீட்டருக்கு மனித சஞ்சாரமோ பசுமையோ இல்லாத “a million miles of pure-ass nature,” என வால்டரால் வர்ணிக்கப்படும் பனிமலைகளுக்கு இடையில் விமானம் விபத்துக்குள்ளாகி இவர்கள் இருவரும் நாயும் பிழைத்துவிட வால்டெர் இறந்துவிடுகிறார்
காயங்களும் சிராய்ப்புகளுமாக பென்’னும் காலில் எலும்புமுறிவுடன் அலெக்ஸூம் , வாழ்வதற்கு அதிகம் சாத்தியமில்லாத , காப்பாற்றப்படும் வாய்ப்புகள் மிக அரிதாக இருக்கும் அசாதரணமான ஒரு சூழலில் முற்றிலும் அறிமுகமில்லாவிடினும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சார்ந்தும் நம்பியும் இருக்கவேண்டிய சூழலில் கதை மிக மெதுவாக நிலக்காட்சிகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் நகருகின்றது
நாட்களும் வாரங்களும் கடந்து ஜனவரியும் பிறந்துவிட்டாலும் காப்பாற யாருமின்றி விபத்துக்குள்ளான விமானத்தின் தொடர்புக்கருவியும் சேதமடைந்த பின்னர், கையிருப்பில் உணவுபொருள்களும் தீர்ந்துகொண்டே வருகையில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள முயல்கிறார்கள், பூசலிட்டும் கொள்கிறார்கள். காத்திருந்தால் உதவிவரும் என்று மூளையை உபயோகித்து பென்’னும் காத்திருக்காமல் நகர்ந்து சென்று கொண்டே இருந்தால் காப்பாற்றப்படலாமென்று இதயத்திலிருந்து அலெக்ஸூம் தீவிரமாக நம்பி முரண்படுகிறரகள்
இயக்குனர் Hany Abu-Assad வசனங்களும் காட்சிமாறுதல்களும் அதிகமின்றியே திரைப்படத்தை நகர்த்திக்கொண்டுபோயிருக்கிறார். பென் மருத்துவராதலால், அலெக்சிற்கு கால்சட்டை மாற்ற, சிறுநீர்கழிக்கவெல்லாம் இயல்பாக உதவுவதும் சிகிச்சையளிப்பதும் மிக அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அவளது தொடைவரையிலும் இருந்த கால்கட்டைப்பிரித்து சோதிக்கும் ஒரு காட்சியில் அலெக்ஸ் பென்’னிடம்’’ நீ ஒரு மருத்துவராக இல்லாவிட்டால் என் அழகிய உள்ளாடையை இப்படி பார்க்க நேர்ந்தது மிக வினாதமாயிருந்திருக்கும் என்கிறாள்’’ சிரித்தபடி
இந்தப்படம் பார்வையாளர்களான நம்மை இப்படி அசாதாரண சூழலில் அன்னியர் ஒருவரை நம்பி உயிர்பிழைக்கவேண்டிய சூழலில் என்ன செய்வோம்? என்று வினவுகிறது. பனிக்குன்றுகளில் கால் சறுக்குவது, விலங்குகளுக்கான பொறியொன்றில் கால் மாட்டுவது, கால்நழுவி சில்லிட்டிருக்கும் நீரில்மூழ்குவது, பனிமலைப்புலியொன்று விமானத்துக்குள்ளேயே தாக்க வருவது, இப்படி நம்மைபதைக்க வைக்கும் திருப்பங்களும் உள்ளது.
Mountain between us , என்று இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது, , உயிர்வாழவேண்டும் என்னும் ஆதார இச்சையும், அவரவர் வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகியிருந்த மாபெரும் பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில் கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது.
எவராலோ கைவிடப்பட்ட வாழ்விடமொன்றில் பென்’னின் தோல்வியுற்ற தாம்பத்தியம் குறித்து அறிந்துகொள்ளும் அலெக்ஸ், பென்னை ஆறுதல் படுத்தும்பொருட்டு சம்பிரதாயமாக தழுவிக்கொள்கிறாள், ஆனால் அத்தொடுகை, அன்னியர்களாய் அறிமுகமாகி கடந்த நாட்களின் நிகழ்வுகளால் அவர்களுக்கிடையில் அவர்கள் உணராததுபோல் அதுவரையிலும் காட்டிக்கொண்டிருந்த காதலை உயிர்ப்பிக்கின்ற்து. அது தோல்வியுற்ற தாம்பத்யம் அல்லஎன்பதை அலெக்ஸ் பிற்பாடு உணர்கிறாள் என்றாலும், அக்கணம் நடக்கும் உறவில் அலெக்ஸ் , அதுவரையிலும் தன்னை பாதுகாத்த, சிகிச்சையளித்து உயிர்ப்பித்த, அபாயங்களிலிருந்து காப்பாற்றிய, பென்’னுக்கு தன்னை, ஒரு சன்மானம்போல ஒரு பரிசைப்போல ஒரு சலுகையைபோல அளிக்கிறாள்
ஆபாசமின்றி அவ்வுறவு மிக கவனமாகவும் அழகாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவள் மீதான காதலுடன் வேட்கை நிறைந்த ஆணாக பென்னும், கனிவுடன் அவனுடனான அப்பனிமலையில் கடந்த நிகழ்வுகளை நினைத்தபடி அலெக்ஸும் உறவுகொள்கிறார்கள் அதன்பிறகு நிறைவுடன் உறங்கும் பென்னை தாய்மையின் கனிவுடன் அலெக்ஸ் அருகிருந்து பார்ப்பதும் புகைப்படமெடுப்பதும் அழகு
பனிக்காற்றில் உலையும் பைன் மரங்களும், முகத்திலும் உடைகளிலும் ஒட்டியிருக்கும் பனிப்பொருக்குகளும் , உலர்ந்த உதடுகளும், வழக்கமான ஒப்பனையின்றி வீங்கிய முகமும் ரத்தக்காயங்களுமாய், எப்போதுமாய் கொட்டிக்கொண்டிருக்கும் பனியும் அதில் கால் புதையப்புதைய இருவரும் நாட்கணக்காக நடப்பதுமாய் வழமையான திரைக்காட்சிகளினின்றும் மிக வேறுபட்ட ஆனால் அழகுக்காட்சிகள்
காப்பாற்றபட்டபின்னர், மருத்துவமனையில் அலெக்ஸின் அறைக்கு ஓடோடி வரும் பென்னின் உடல்மொழியில் காதல் ததும்புகின்றது. அந்த அறைக்கதவைத் திறந்து உள்ளே வரும் அலெக்ஸ் திருமணம் செய்துகொள்ளவிருந்த மார்க்கின் வருகை இடையூறாகவே நமக்கும் அவர்களுக்கும் ஒருசேர தோன்றுகின்றது.
இதயம் என்பது வெறும் தசைத்திரட்சியல்ல, நேசமும் காதலுமாய் நிறைந்துததும்பும் உடலின் உறுப்பென்பதை தான் உணர்ந்ததையும், அலெக்ஸின் மீதான காதலையும் பென் ஒத்துக்கொள்வதும், பென்னை காதலிப்பதனால் அலெக்ஸ் மார்க்கை திருமணம் செய்யமுடியாமல் போவதையும், இருவரையும் உயிருடன் மீட்டெடுத்தது அவர்களுக்கிடையெ முகிழ்த்த காதலின் ஆற்றல்தான் என்பதை இருவருமே உணர்வதும் மன்ஹாட்டன் உணவகத்தில் நடக்கும் இறுதிக்காட்சிகளில் காட்டப்பட்டிருக்கிறது.
இட்ரிஸ் எல்பாவின் கம்பீரமும் இயல்பான உடல்மொழியும் கவருகின்றதென்றால், டைட்டானிக் நாயகியின், பதட்டமும், கோபமும், கனிவும் கலந்த முதிர்ச்சியான நடிப்பு பிரமிக்க வைக்கின்றது
அந்த பெயரிடப்படாத நாயைக்குறித்து பதிவுசெய்தே ஆகவேண்டும். அத்தனைஅழகாக அத்தனை அருமையாக காட்டப்பட்டிருக்கின்றது. உயிர்பிழைத்தபின்னர் மருத்துவமனைப்பணி முடிந்து தன்னந்தனிமையில் ஹால் சோஃபாவில் அமர்ந்து பென் இரவுணவு உண்கையில் , அவரின் அந்த தனிமை பார்வையாளர்களை நெகிழச்செய்யும் கணத்தில், அந்த நாய் அவரின் காலடியில் போய் படுத்துக்கொள்கிறது
யுகம் யுகமாய் பிரபஞ்சத்தை உறைந்துபோகாமல் , வெம்மைப்படுத்தி உயிர்ப்புடனிருக்க வைக்கும் காதலைச்சொல்லும் பல்லாயிரம் கதைகளில் ஒன்றுதான் இதுவும் எனினும் மானிட உறவுகளின் இயல்புகளையும் , அசாதாரண சூழலில் பரிச்சயமில்லா நபர்களுடனான தொடர்பும், பரஸ்பர நம்பிக்கையும், பரிவும் காதலாக மாறுவதையும் பேசும் படம் இது.
Ramin அவர்களின் உறுத்தாத இசையும் நல்ல ஒளிப்பதிவுமாய் 2017 ல் வெளியான இப்படம் மிகப்பிரமாதமானது, நம்பமுடியாத புனைவு, பல தப்பிப்பிழைக்கும் கதைகளைபோலவேயானது, புதிதாக ஒன்றுமில்லை, மோசமான எடிட்டிங் , பனியில் நாயைகொன்றுவிட்டார்கள்(அது வதந்தி), மோசமான கதாபாத்திரத்தேர்வு, என பல்வேறுபட்ட விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தயாரிப்புச்செலவை விட பலமடங்கு வசூலைப்பெற்று வெற்றியடைந்திருக்கிறது, மிக முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது.