2019 ல் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடபட்ட சுரேஷ் பிரதீப்பின் எஞ்சும் சொற்கள் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளைக் குறித்த விமர்சனம்

1.வீதிகள்

முதல்முறை வாசித்தபின்னர், எதையோ  தவறவிட்டது போல, மீள வாசிக்கவேண்டும் என்னும்  உணர்வை எறப்டுத்திய கதை,   கொங்கு பிரதேசத்தில் கேள்விப்பட்டிராத ஊர்களின் பெயர்களினாலேயே புதியதாய் ஒரிடத்திற்கு செல்லும்  கிளர்ச்சியையும்     பதட்டத்தையும்  கதையின் துவக்கம் உண்டாக்கியது. அறிமுகமான இடங்களின் பரிச்சயத்தன்மையினாலும் சில எழுத்துக்களுடன் அணுக்கமுண்டாகும் எனினும் இப்படி மிகப்புதிய கேள்விப்பட்டிராத இடங்களின் பெயர்களுடன் வாசிப்பை துவங்குகையில்  கதையுடன் ஒன்றி புதியதோர் இடத்தில்  வாசிக்கும்  நமக்கே அவை நிகழ்வது போன்ற உணர்வுடன் வாசிக்க முடிகின்றது

    சம வயதிலிருக்கும், உறவுக்காரியான இன்னும் மணமாகாத பிரவீணாவுக்கும், காதல்திருமணத்தின் பின்னர் அன்னையுமாகிவிட்ட  அனிதாவுக்குமான அகப்போராட்டத்தை அழகாக சொல்லும் கதை வீதிகள். ஆச்சர்யமென்னவென்றால் இதுபோன்ற மிகப் பிரத்யேகமான பெண்களுக்கான  உளச்சிக்கலொன்றினை. எப்படி சுரேஷ்பிரதீப் உள்ளபடிக்கே உணர்ந்து எழுதியிருக்கிறார் என்பதுதான்.

பெற்றவர்களிடம்,  மனதிலிருக்கும் குழப்பங்களையும் அசௌகரியங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாத லட்சக்கணக்கான பதின்பருவப்பெண்களில் ஒருத்தி பிரவீணா. மகளின் ஒழுக்கத்திற்கு, நற்பெயருக்கு பங்கம் வந்துவிடகூடாதென்னும் அம்மாவின் அதீத கண்டிப்பை அம்மாவின் வன்மமெனக் கொள்கிறாள் பிரவீணா. சொந்தக்கால்களில் சுயமாக நிற்கத்துவங்கியதும் வன்மத்தை இயன்றவரையிலும் கடுமையாக திருப்பிக்கொட்டுகிறாள் அம்மாவின் மீது.

தாவணி காற்றில் பறக்க சைக்கிளில் செல்லும் சங்கடத்தை அப்பாவிடமும், சுடிதாராக இருந்தால் மாட்டிக்கொண்டு உடன் பள்ளிக்கு கிளம்பலாம், தாவணி அதுவும் சைக்கிளில் செல்வதால் கவனமாக உடுத்திக்கொள்ள  கூடுதல் சமயமாகும் என்பதை அம்மாவிடமும் சொல்லத் தயங்கிய அவளுக்கு வேலைக்கு சென்றதும் பனியனுடன் வீட்டில் இருக்கும் தைரியம் வந்துவிடுகின்றது. அவளின் தங்கை இப்போது

பதின்பருவத்தில், வீடு  பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமலிருக்கையில் பிரவீணா பெரிதும் மாறிவிட்டிருக்கிறாள் அந்த மாற்றத்தை பிறருக்கு தெரியப்படுத்தும் ஆவலும் கொண்டிருக்கிறாள், மேலும்  கசப்பான நினைவுகளால் நிறைந்திருக்கும் பள்ளிக்கால நினைவுகளை முடிந்தவரை மறக்கவே விரும்புகிறாள்.

பள்ளியில் படிக்கையில் ஒருபோதும் சென்றிராத  சாலைச்சுழல்களுக்குள் இப்போது வேண்டுமென்றே செல்கிறாள்.  அம்மாவின் கண்டிப்பு நிறைந்த வீட்டிலிருந்து தப்பித்து, வேலைக்கு வெளியூரில் போய் இருந்தாலும் அவளுக்கு அங்குமிருக்கும் ஒன்றேபோலான வாழ்வு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. மனம் புதிதாய் ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறது ஏதோ ஒன்று அரிதாக புதிதாக பரவசமளிப்பதாக நிகழ வேண்டும் என அவள் மனம் விரும்புகிறது,காத்துக்கொண்டுமிருக்கிறது.

விடுமுறைக்கு வரும் போதெல்லாம் மகள்களை, நுணுக்கமாக சோதிக்கும் பிரவீணாவின் அம்மாவைபோலவே பல அம்மாக்கள் இருக்கிறார்கள். மகளின் மாதாந்திர விலக்கு சரியாக இருக்கிறதா என்பதை பலவகையிலும் அம்மாக்களுக்கு  தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.  வேலை கொடுத்திருக்கும் சுதந்திரத்தை மகள் எத்தனை சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறாள், என்னும் பதட்டத்துடன்தான் பெரும்பாலான மத்தியதர குடும்பத்து பெற்றோர்கள் இருக்கிறார்கள் , வெளியூருக்கு செல்லும் வாய்ப்புக்களற்ற,  அவ்வாழ்வு குறித்தான அறியாமையினால் அலைக்கழிக்கப்படும் அம்மாக்கள் மகள்களிடம் நேரடியாக கேட்கமுடியாத கேள்விகளால் நிறைந்து ததும்பியபடியேதான் இருக்கிறார்கள்.

திருமண வயதில் திருமணத்திற்கு காத்துக்கொண்டிருக்கும் பெண்களின் மனநிலை பிரவீணாவுக்கு இருப்பதைப்போலவேதான்  இருக்கும். திருமணத்திலும் பெரிதாக ஒன்றுமில்லை வாணலிக்குத்தப்பி அடுப்பில் விழுந்த கதை தானென்பதை மணமானபினன்ரே தெரிந்துகொள்ள முடியும் அனிதா தெரிந்துகொண்டதைப்போல!

பிரவீணா, அனிதாவை பார்க்கவும் தவிர்க்கவும் ஒரேசமயத்தில் விழைகிறாள் பார்த்தும் விடுகிறாள். அனிதாவை அழகாக விவரித்திருக்கிறார் கதாசிரியர். புதிதாய் செய்துகொண்ட விருப்பத் திருமணம், அந்தப்பூரிப்பு,குடும்பத்தை எதிர்த்து செய்துகொண்ட காதல் திருமணம் தந்திருக்கும் குற்ற உணர்வு, இளம் அன்னைக்கான குழப்பமான மனநிலை, என அவளை சரியாக,அழகாக, நுட்பமாக காட்டியிருக்கிறார்.

 //எந்நேரமும் பேசும்போது இந்த உறையை கழற்ற முடிவதேயில்லை. ஒரு அழுகைக்கோ புணர்வுக்கோ முன் மட்டும் வார்ததைகள் சற்றே உறைகளை கழற்றிக் கொள்கின்றன.அப்படி கழற்றியதற்காக அஞ்சி வெட்கி மீண்டும் மீண்டும் மேலும் மேலும் உறைகளை அணிந்து கொள்கின்றன//  இது போன்ற சுரேஷின் பிரத்யேக மொழிநடையை  மகிழ்ந்து அனுபவித்தபடியே வாசிப்பை தொடரலாம் 

காதல் திருமணமும் அன்னைமையும் குடும்பச்சிக்கல்களும் குற்றவுணர்வுமாக, அழுத்தத்தில் இருக்கும் அனிதா, துடிக்கும் உதடுகளும் தேங்கியிருக்கும் அழுகையுமாக, இன்னும் மணவாழ்வென்னும் சுழலில் சிக்கிக்கொள்ளாத , இளமையும் அழகும் கொஞ்சமும் குறையாத, சுதந்திரமாக வேலைசெய்துகொண்டிருக்கும்  பிரவீணாவின் முன் எண்ணியிராக்கணமொன்றில் கீழிறங்கிவிடுவதும்,அடுத்த கணம் தன்னை சுதாரித்துக்கொண்டு, அந்த பலவீனத்தை  சாமர்த்தியமாய் குடும்பத்தலைவி, காதல் மனைவி, அன்னை என்னும் போர்வைக்குள் புகுந்துகொண்டு மறைப்பதும், தன்னைவிட பொருளாதார நிலையில் கீழிருந்த அதே பள்ளிக்கால பிரவீணாவை, பிரவீணாவின் முன்னேயே கொண்டு வந்து நிறுத்துவதுமாய்,  வாசித்தவர்களும் புண்பட்டுப்போகும் இடமது. 

அந்த உரையாடலையும்  அப்போதான இரு இளம் பெண்களுக்கிடையேயான  நுண்ணிய மனப்போராட்டங்களையும் அருமையாக அமைத்திருக்கிறார் சுரேஷ்.

முலையூட்டிக்கொண்டிருக்கும் மனைவியை காணும் ஆசை’யின் கண்களில் இருந்த பரிவும் அன்பும் பிரவீணாவென்னும் இளம்பெண்ணை பொறாமை கொள்ள வைக்கும் இயல்பான ஒன்று அது மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது.

திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள்  தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போகனுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு. பிறந்த அந்தக்குழந்தையும், அதன் இளஞ்சிவப்பு பிஞ்சுக்கால்களும். இறுக்க மூடிக்கொண்டிருக்கும் குட்டிக்குட்டி விரல்களுடனான கைகளும் கொழுகொழு கன்னங்களும் இளம் அன்னைக்கான சிறப்புக்கவனிப்பும் பலநாட்கள் இவர்களின் உறக்கத்தை கெடுக்கும்.

நேரெதிராக  திருமணமான பெண்கள்  மணமாகி கொஞ்சநாட்களுக்குப்பிறகு எதேச்சையாக  மணமாகாத தோழிகளை எங்காவது காண நேர்கையில் ஏக்கமாக பார்ப்பதும், அதை மறைக்க மிகைப்படுத்தபட்ட பூரிப்பை உடல்மொழியில் காட்டுவதையும் கதை நினைவூட்டியது.

 கதையின் இறுதிப்பகுதியில் பிரவிணாவின் வரவழைத்துக்கொண்ட துணிவும், அனிதாவின் செயற்கையான செயல்களுமாய் , இருவரும் ஒருவரை ஒருவர் நுட்பமாய்  புண்படுத்துவதும், அகநடிப்பும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. வெகுநாட்களுக்கு மறக்கமுடியாத சுரேஷின் கதைகளில் வீதிகளும் ஒன்று.

2.எஞ்சும் சொற்கள் 

இதில் துவக்கத்திலேயே ஒரு அரசு நலத்துறை அலுவலகத்தின் சூழல் விவரிக்கப்பட்டிருந்தது. முதல் வரியிலேயே  அது ஒரு சிறிய, எந்த கூடுதல் வசதிகளும் அற்ற  நாம் அனைவரும் எப்படியும் சிலமுறை சென்று வந்திருக்கும் அடைசலான ஒரு அரசுஅலுவலக அறை என்பதை ’மேசை நாற்காலிகள்  எடுத்துகொண்டது போக மீதி இடம் மனிதர்கள்  நடமாட’ என்பது போல சொல்லி இருந்ததால், ’அட என்ன சொல்ல வராரு இவர்’ என்று வாசிக்கறவங்களை கவனிக்கவும், விருப்பமுடன் வாசிக்கவும் வைத்தது.ஆபத்தற்றவனாக பெண்களால் எளிதில் அடையாளம் காணப்படுபவனின் பார்வையில் அந்த சிறுகதை எழுதப்பட்டிருந்தது

மதிய உணவுப்பையையும் தோளில் இன்னொரு பையுமாக அந்தப்பெண் பதற்றமாக அலுவலகம் வரும்போதே அவளை பிடித்துவிடும் நமக்கு. 

//திறம்பட வேலை செய்கிறவர்களிடம் ஏற்படும் பிரியம் அங்கு வந்த    எல்லோருக்குமே அவள் மீது இருந்தது//  இந்த வரிகள்  நீண்ட அனுபவத்தின் பேராலேயே எழுதப்பட்டவை என நினைத்தேன். அந்தப்பெண்னை முறைத்த இளைஞனிடமும் அவனை பொருட்டாக எண்ணிய அந்த பெண்ணிடமும் ஒரே சமயத்தில் கதைசொல்லிக்கு ஏற்படும்கோபம், 

//அரசு அலுவலகங்களில் காத்திருக்கும் போது அந்த நாள் வீண்தான் என்ற எண்ணம் எப்படியோ எழுந்துவிடுகிறது// இவையெல்லாம், பல சமயங்களில் நாமும் அரசு அலுவலகங்களில் எதற்காகவோ காத்திருக்கையில்  உணர்ந்தவைகளே!

எஞ்சும் சொற்கள்  சொல்லவருவது என்ன என்று யோசிக்கையில் அது குறிப்புணர்த்தும் சமூக நீதி, அறம், அறிவுரை இவற்றைக்காட்டிலும் கதையில் சொல்லப்படும் நுண் விவரங்கள். ஒப்பு நோக்கல்கள், படிமங்கள், சொல்லாட்சி, மொழியாட்சி, அழகிய காட்சிச்சித்தரிப்புகள் போன்றவையே மிக முக்கியமானது என்று தோன்றியது

குறிப்பாக  சொல்லாட்சி

//இருண்ட இடங்களில் எப்பொதும் உணரப்படும் குளிர்//                

நாயின் நாக்கை இடைநாழிக்கு உவமையாக்கியது, பெரிய வட்டப்பொட்டு நினைவுபடுத்திய உஷா உதுப், பிரேதப்பரிசோதனையின் பிறகு மூட்டை கட்டித்தரப்படும் உடலை மீசையினை வைத்து ஆணென அறிவது, கணவனின் சவத்துடன் வண்டியில் ஏறும் பெண் சித்தப்பாவிடம் அலைபேசியில் பேசும் ஒருசில வரிகளிலேயே அவளின் மொத்த வாழ்வின் அவலத்தையும்  சொல்லிவிட முடிந்திருக்கிறது  போன்றவை வியப்பளித்தது.

சாக்கடை நாற்றத்தில் பசி எடுப்பது, உண்டு ,உமிழ்ந்து, மீண்டும் உண்டு பிண்வறையின் பின்னிருக்கும் கோரைப்புற்களுக்கிடையில் உடல்முழுவதுமாய் பரவிய தூக்கத்தில் ஆழ்வதெல்லாம் மிக அரிதான வாழ்வின் இயங்குநிலைகள். வாசிப்பவர்களும் அதே கணத்தில் இருப்பதாக உணரவைப்பதுபோல இயல்பாக ஆனால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்

அந்த மெலிந்த பெண் தண்ணீர் குடித்தபின் வழிந்து, தாடையில் தயங்கி நின்ற ஒற்றை நீர்த்துளி கதைசொல்லிக்கு தரும் அதிர்வில் சுரேஷ் பிரதீப் எனும் கவிஞர் அடையாளம் தெரிந்தார். எஞ்சும் சொற்கள் என்று எப்போது நினைத்தலும் இந்த நீர்த்துளி நினைவுக்கு வருகிறது.

//நெஞ்சிலிருந்து பதினைந்து முதல் இருபத்தைந்து சென்டிமீட்டர் வரை வயிறு வெளித்தள்ளியிருக்கும்//

இரண்டு பேருடல் கொண்டவர்கள் கட்டிப்புரளும் அளவு பெரிதாக இருந்த மேசையின்//

இதுபோன்ற நுண்ணிய விவரிப்புகள்  சுரேஷின் பிரத்யேக நடைக்கு உதாரணங்கள். சுரேஷ் பிரதீப்பின் கதைகளில்  இவை என்னை பெரிதும் கவர்பவை

//இயல்பான புன்னகை அவருக்கோ அவ்வறைக்கோ அவர் எதிரே அமர்ந்திருக்கும் மானுடவியலாளருக்கோ என் அருகே நிற்கும் ஆதி திராவிட நலத்துறை அலுவலருக்கோ சற்றும் அந்த தருணத்தில் உரித்தானது அல்ல என நான் உணர்ந்த போது நிலைமை கைமீறியிருந்தது// இவ்வரிகளும் அப்படித்தான் மிகுந்த ஆழத்தைத்தொட்டு எழுதப்பட்டவை. சுலபத்தில் இதை எல்லாரும் எழுதிவிட முடியாது. வலுவான ஒரு நாவலை படித்த உணர்வினை அளித்த கதை இது.

 3.பரிசுப்பொருள்

 பரிசுப் பொருளாகட்டும் எஞ்சும் சொற்களாகட்டும் கதைசொல்லியின் வரிகளாக அழகிய தமிழ்படுத்துதல்களும் கதை மாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாக ஆங்கிலமும் வருவது நன்றாக இருக்கிறது, ’’கிளாஸ் மேட் தானே’’?  என்பதுவும் ’’உடற் சமனிலை’’யும் உதாரணங்கள்.

இக்கதையில் விளிம்பு நிலை மக்களின் அன்றாட கணங்கள் ஃபார்ச்சூன் காரின் கருப்புக்கண்ணாடியிலும், உடற்சமநிலையை இழக்க வைக்கும் பேருந்துப்பயணங்களிலுமாக எளிதாக காட்டப்படுகின்றது. தீபாவளிக்கு கனக்கும் பைகளுடன் வீடு வந்துகொண்டிருக்கும் சிவகுமாருக்கும்  மோனிகாவிற்குமான நடையிலும் உரையாடலிலுமே கதையைக்கொண்டுபோயிருப்பதும் நல்ல உத்தி, மோனிகா சொல்லும் பலவற்றில் அவளுக்கு  அங்கீகாரமினமை அளித்திருக்கும் வலியை உணர முடிகின்றது

//என்கூடவெல்லாம் பேசினா தப்பா நினைகக்மாட்டாங்க// , சிவக்கும் முகம், 6 மாதங்களுக்கு முன்னர் அணிந்த அதே உடையின் நினைவில் திடுக்கிடுவது இப்படி.

ஒரு மழை நாளின் தனிமையில் தவிர்க்கமுடியாதபடிக்கு அவளுக்கு கிடைத்த முத்தத்தை அவள் காதலென்றும், அவளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமாகவும் எண்ணிக்கொள்கிறாள்

ஏழ்மையும் அங்கீகாரமின்மையும் திறக்கும் அல்லது பின்னங்கழுத்தை பிடித்துத் தள்ளிவிடும் பல கதவுகளில் ஒன்றுதான் மோனிகா நுழைந்த அக்கதவும்  அதன் பின்னிருந்த இரக்கமற்ற உலகும். பிரபாகருக்கு தேவைப்படும்போதெல்லாம் சேமிப்பையும் உடலையும் அவ்வப்போது தந்துகொண்டிருக்கும் அவள்  கடைசியில் அவனுக்கு அளிக்கும் அந்த  வெல்வெட் பார்சலில் என்ன இருக்குமென்று அறியும் ஆவலை வாசிப்பவர்களுக்கு  ஏற்படுத்தியவாறே இருக்கின்றது தொடரும் உரையாடல்கள்.

அவளுக்கு வந்திருக்கும் பால்வினை நோயைக்கூட யாரும் கவனிக்காததிலும் கூட வருந்தும் அளவிற்கு அவள் அங்கீகரமின்மையில் காயம்பட்டிருக்கிறாள் என்பதில் ஒரு பெண்ணாக எனக்கும் வருத்தமே!

இக்கதையில் எனக்கு உடன்பாடில்லாத ஒன்றென்றால் அது கதையின் முடிவுதான். ஏன் அவள் நீக்கிய கருப்பையை பிரபாகரனுக்கு பரிசாக கொடுத்தனுப்புகிறாள்?

ஏழ்மையிலிருக்கிற, அங்கீகாரமின்மையால் துவண்டுபோகிற, பணிப்புலத்திலும் ஆண்களால் சீண்டலுக்கு உள்ளாகின்ற, பிரபாகர் தன்னை எல்லாவிதமாகவும் உபயோகப்படுத்திக் கொள்வதை முழுமனதுடன் அறிந்திருக்கிற, அதன் பிறகும் அதற்கு வலிய இடம் கொடுக்கிற, கனவுகள் நிறைந்த மொத்தமாக மூன்றே மூன்று உடைகளே இருக்கும், கல்யாணம் பற்றி அடிக்கடி சிந்திக்கும், மோனிகா ஏன் கர்ப்பப்பையை  அவனுக்குபரிசாகக் கொடுக்கணும்?

இவர்களிருவருக்கும் மேலோங்கியிருந்த பாலுணர்வும் அடிக்கடி நிகழ்ந்த உடலுறவும் அன்னைமை தொடர்புடையதல்லவே? எந்த இடத்திலும் மோனிகா அன்னையாக இருக்க விழைந்ததோ, அன்னைமைக்காக ஏங்கியதோ சொல்லப்படவே இல்லையே?

பேருந்துப் பயணத்தில்  குண்டுக்கன்னங்களுடனான ஒரு குழந்தையை மோனிகா பார்த்ததாக ஒரு கோடிட்டு காட்டியிருந்தால், பிரபாகருடன் இருந்த ஒரு இரவின் பின்னால் மோனிகாவின் அம்மா பிசைந்து உருட்டித்தரும் கவளமொன்றினை விழுங்கமுடியாமல்  கண்ணீர் விட்டிருந்ததாகச் சொல்லி இருந்தால், பிரபாகரிடம் அந்தரங்கமாக உரையாடும் போது குடும்பம் குழந்தைபற்றிய ஏக்கமெல்லாம் மோனிகா கொட்டி இருப்பதாக எழுயிருந்தால் கூட இந்த  இந்தப்பரிசுப்பொருளை வாசக  மனம் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆனால் பிரபாகருக்கு அவள் கழற்றிப்போட்ட ஆடை, இவளும் அடிக்கடி கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறாள்.

எந்த விதத்திலும் பொருட்படுத்தப்படாத வேதனையில், உடலுறவுக்கென தன்னை பொருட்படுத்தும், உபயோகப்படுத்தும் பிரபாகருக்கு  கருப்பையை  அளிப்பதற்கு பதிலாக தொற்றக்கூடிய ஒரு நோயை அளித்திருக்கலாம் உடலுறவின் வாயிலாகவே.

 அல்லது இக்கதைக்கு வேறு முடிவுகள்  கூட சாத்தியமாகி இருக்கலாம் ஒரு அன்னையாக பெண்ணாக என்னால் கருப்பையை பிரபாகருக்கு மோனிகா பரிசாக அளிக்கும் முடிவை ஏனோ ஏற்றுக்கொள்ளவே  முடியவில்லை.

நிச்சயம் இதற்கு அதாவது இம்முடிவிற்கு கதாசிரியரிடம் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும் அதனால் தான் கதையின் துவக்கத்திலும் முடிவிலும் பேசப்படுகின்ற ஒரு பொருளான கருப்பையை பரிசளிப்பதை தலைப்பாக வைத்திருக்கிறார்.

எனக்கு இம்முடிவு ஏனோ சஙகடமாகவும் நெருடலாகவும் பொருத்தமின்றியும் இருக்கின்றது. இந்த கருத்து இக்கதைக்கு எதிரே நான் வைக்கும் குற்றச்சாட்டல்ல.  அன்னையும் ஆசிரியையும் வாசகியுமல்லாது வேறெதுவுமல்லாத ஒரு எளிய பெண்ணாக  இது இக்கதையின் முடிவு குறித்தான என் விமர்சனம். 

4.பதினொரு அறைகள்

மனதில் மிக ஆழமான காயத்தையும் வலியையும் உணடாக்கிய கதைகளிலொன்று பதினோரு அறைகள்.

கதையும், கதையில் வரும் சில காட்சிகளும், பாத்திரங்களும், சொற்றொடர்களுமாய் அகத்தை  அசைத்துவிட்டது.மிக பத்திரமாக யாருமறியாமல்  என் மனதின் அடியாழத்தில் வைத்திருந்த ஒன்றினை இக்கதை மிக எளிதாக எடுத்து பிரித்து கலைத்து மீண்டும் அடுக்கி விளையாடிக்கொண்டிருக்கின்றது.

சதீஷின் வீடும், சாத்தான் போல சிரித்துக்கொண்டிருகும்  அவன் அப்பாவின் அம்பாசடர் காரும், கதை சொல்லிக்கு சதீஷின் வீட்டினுள் நுழைய இருந்த தயக்கமுமாக கதை துவங்கிகிறது சிறு நிகழ்வை மனதில் ஊதிப்பெருக்குகிற, கண்காணிக்கப்படுவதால் மனம் சுருங்குகிறவன் கதை சொல்லி.

சிக்கலான கதை. சதீஷின் அப்பாவுடன் பிறழுறவில் இருந்த கதை சொல்லியின் அம்மா, இவனின் அப்பாவை பிரிந்து  அவரையே மணம் செய்துகொள்கிறாள்

அம்முடிவு எடுக்கபட்ட அந்த தினம் ஒரு ஆறு வயது சிறுவனான கதைசொல்லியினால் உணர்வெழுச்சியுடன் சொல்லப்படுகிறது. தொண்டைகுழி துடிக்க ரசம் சாதத்தை பிசைந்துகொண்டிருக்கும் அப்பா, அலட்டிக்கொள்ளாமல் பனையோலை விசிறியை அசைத்தபடி இருக்கும் அம்மா

அன்று மதியம் ஆட்டுக்கறி வேண்டாமென்னும் அச்சிறுவனை உள்ளே அமரவைத்து அடிக்கும் சத்தமோ அழும் சத்தமோ வெளி வரமல் பதினோரு அறைகளைகனன்ம் கன்னமாக இழைக்கும்  அம்மா, பழுத்த கன்னத்துடன் சாப்பாட்டின் முன்னால் அமரும் சிறுவன், உள்ளே நடந்தது என்ன என்று தெரிந்திருந்தும் எதுவும் பேசாமல் அமர்ந்திருக்கும் இரண்டு ஆண்கள் என்று பதட்டமான நிகழ்வுகள் வெகு சாதாரணமாக சொல்லபட்டிருக்கும்.

மகனை திரும்பிக்கூட பார்க்காமல் சதீஷின் அப்பாவுடன்  வண்டியில் செல்லும் அந்த அம்மா பாத்திரத்தின் ஆளூமையும் மனோதிடமும் அதிர்ச்சியூட்டுகிறது.

வளர்ந்து தன் அப்பாவின் மார்பில் எட்டி உதைக்கும், அம்மாவுக்கு பிறந்த சதீஷின் இறுகிய கல்லான முகத்தை வார்த்தைகளால்,முட்டிப்பார்த்து தோற்கும் கதைசொல்லி, மெல்ல சரிந்து வீழத்துவங்கும் சதீஷின்குடும்பம் என்று விரைவாக மாறும் திரைக்காட்சிகளை போல துண்டுக்காட்சிகளை அழகாக இணைத்தும் கோர்த்தும்  கதை காட்டப்படுகிறது.

 கதை சொல்லிக்கும் அவன் அம்மாவுக்கும் நடைபெறும் அகப்பொராட்ங்களை கதாசிரியர் விவரித்திருக்கும் விதம் மிகவும் தேர்ந்த ஒரு மொழிநடையில் அமைந்திருக்கின்றது. வெகு நுட்பமான எழுத்து நடை.

கதை முடிகையில், மதுவும் புகையும், பெண்களுமாக  மூழ்கிப்போன சதீ{க்கு அம்மாவின் கண்ணெதிரிலேயே பதினோரு அறைகள்  கொடுக்கிறான் ,சதீஷ் அப்பாவின் பழைய அம்பாஸடர் காரைப்போலவே சாத்தானாக மனசுக்குள் சிரித்துக்கொண்டிருக்கும் கதை சொல்லி.

வாசித்து முடித்ததும்.  உறிஞ்சும் தாளில் சிந்திய மை போல இந்தக்கதை பரவிப்பரவி  மனதின் அடுக்களிலெல்லாம் நிறைந்து மிகவும் எடைகூடியவளாக உணர்ந்தேன்.

5.மடி 

மற்றுமொரு சுரேஷின் பிரத்யேக நடையிலான கதை.   நுண் அவதானிப்புகள் கதை  முழுவதுமே இருக்கின்றது. அந்த மாணவனை அறிமுகப்படுத்தவேண்டியிருக்கும் அதிருப்தியை காட்டும் ஆசிரியரின் பாவனை, அச்சுருக்கத்தின் மிகைப்படுத்தபட்ட வடிவம்  கதைசொல்லியை நோக்கியும் திரும்பலாம் என்னும் அவதானிப்பு, அப்போது  உருவாகும் அவரை பிராண்ட வேண்டும் என்னும் தவிப்பு, அதன் பொருட்டு  கதைசொல்லி தயாராவதை ஆசிரியர் உணராமல இருப்பது. என்று துவக்கத்திலேயே கதை பிரமாதமாக மனத்தின் உள்ளடுக்குகளுடன்  நுண்ணுணர்வுகளுடன் விளையாடும் ஒன்றாக இருந்தது.

அந்த அறிமுக நிகழவு அபத்தமானது என்பதை உணர முடிந்தது, இது நிச்சயம் சகதாசிரியர்  அனுபவித்தே எழுதியிருக்கவேண்டும். முன்னால் மாணவர் சந்திப்பில் இளம்மாணவர்களுடன் இப்படியான ஒன்றே நிகழும் என கல்லூரியில் இருக்கும் எனக்கு புரிந்து கொள்ளவும் முடிந்தது

//கல்லூரி முதல்வர் இலக்கியத்தின் மீதான் பிடிப்பு இருப்பவர் என்னும் பிம்பம் தேவைப்படுவது//   மிக ஆழமாக  யோசித்து  சொல்லப்பட்டவை இவ்வரிகள். விக்கிபீடியாக்காரனையும் முன்னால்  அழைத்ததில் கதைசொல்லி நிம்மதியிழந்ததும் பொருந்தியது அச்சூழலுக்கு

//முழுதாக தேவையற்றவனும் அவ்வளவாக தேவையற்றவர்களும்//    மிகவும் ரசிக்க வைத்த வரி இது. 

கல்கியை சாணக்கியணை படிக்கும் அந்த  ’’வாசிக்கும்’’  மாணவன் கதைசொல்லிக்கு  அளிக்கும் ’சவுகரியமின்மை’ வாசிக்கும் எனக்கும் வந்தது. ’இப்போ எழுதுறவங்க’ என்னும் பெயர்களை அவன் சொல்லச்சொல்ல  மேலும் பதட்டமடைகிறான் கதை சொல்லி, ’இன்றில்’ வாழவே துவங்காத லட்சக்கணக்கான் இளைஞர்களின் ஒருவனான அவனைப்போல தினம் பலரைபார்த்துக்கொண்டிருப்பதால் கதையுடன் ஒன்ற முடிந்தது இன்னும்

//இளைஞனுக்கு உரிய முட்டாள் தனமான உறுதியும் கனவும் இல்லாதவன்// என்பதும் வசீகரமான வரி. 

//கல்லூரி விடுதி கொடுத்ததும் எடுத்ததும்//

ஆண்களுக்கு விடுதித்தங்கல் பல சுதந்திரங்களை கொடுக்கும், இதில் எடுத்தது என்னவாயிருக்கும் என்று  இன்னும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். என்னவாயிருக்கும் ஒரு ஆணுக்கு விடுதித்தங்கல் எடுத்துக்கொண்டது? என்று யூகிக்க முடியவில்லை

பெண்களுக்கு விடுதி,   தனிமை சுதந்திரம் வரவழைத்துக்கொள்ளும் அதிகாரம் , சிறுமித்தனங்கள் என்று ஏகத்துக்கும் கொடுக்கும்,

அதைபோலவே தன்னை பொருட்படுத்தாமல் நுண்மையாக அவமதிப்பவளை அம்மாவுடன் ஒப்பிட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. கதைசொல்லிக்கும் அவளுக்குமான அந்த உரையாடல் மிக நுட்பமாக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது  விஷமற்றவள்னு  கூட இருப்பவளை  சொல்வதும் சிறப்பு.

அவர்களுக்கிடையேயான உரையாடலின் அடுத்தகட்ட சாத்தியங்களை அவளும் உணர்ந்து இறங்குவது  பின்னர் சீற்றமும் நடுக்கமுமாக பதிலளிக்கையில்  அவள் அழலைன்னாலும்  கதைசொல்லி முன்பு அழுதவர்களை நினைத்துக்கொள்கிறான். விக்னா வேதா என்று பெண்களைப்பற்றிச் சொல்கையில் அவர்களைப் பார்க்கவே முடியும் என்பதுபோல அத்தனை துல்லியமான விவரிப்பு. இருவரின் அழுகையையும் வேறுபடித்தி வேறு சொல்லபப்டுகின்றது. முன்பு உடன் படித்த அழவே அழாத அந்தபெண்ணையும் அப்போதே  சந்திக்கிறான் கதைசொல்லி. இன்னொரு கதையான  ஈர்ப்பில் சொல்லியது போலவே அகவிளையாட்டுக்கள் மூலம் ஆணை  இழுக்கும் பெண் இவளும்.

 ஒரு அணுக்கமான் பெண்ணை அல்லது முன்காமுகியை  சந்திக்கப்போகிறான் கதைசொல்லி என்று துவக்கத்திலேயே எதிர்பார்ப்பிருந்தது. அவள் குடித்திருப்பதும், அறைமாற்றமென்னும் நாடகத்திற்கு பின்னரான விவரிப்புகளிலும் ’மடி’என்று   ஏன் தலைப்பிடப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது

  //அருங்கரங்களால் பாதுகாக்கபப்டும் உணர்வை அடைவது// அப்போது அதை நான் உணர்ந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அந்த பத்தி முழுதுமே மடி என்னும் தலைப்பிட்டதை  சொல்லிக்கொண்டே இருந்தது போலிருந்தது  சொல்லப்போனால்  அவள் அழவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவும் செய்தேன். முதன்முறையாக ஒரு கதையை ஆணின் பார்வையில் பார்த்திருக்கிறேன் என்று கூட நினைத்துக்கொண்டேன்  அவர்கள் இருவருக்குமான உரையாடலில் மெல்ல மெல்ல பலவற்றை தகர்த்து  பரஸ்பரம் அவர்கள் நெருங்குவதும் மிக அழகாக சொல்லபட்டிருக்கிறது.

இவங்க  பேசிட்டே இருக்காங்க, ஆனா நேரில்சொல்லறதும் மனசில் நினைக்கறதும் வேறூ வேறு என்று வாசிக்கையில் புரிந்துகொள்ள முடிகின்றது அப்படி கொண்டு போகப்படுகிறது அவர்களுக்கிடையேயான  உரையாடல்.

 சண்டையிட்டு, பரஸ்பரம் புண்படுத்திக்கொண்டு, சமாதானமாகியும் பதட்டமாகிகொண்டும் இருக்கிறார்கள். எனினும் இவற்றினூடே  ஒருவரை ஒருவர் நெருங்கிக்கொண்டே இருப்பதையும்வாசகன்  உணர முடிகின்றது

அனல்காற்றில் அப்பா இறந்ததை அருண் சொல்கையில் சந்திரா வரவழத்த்துக்கொண்ட சகஜத்தன்மையுடன் பேசுவது குறித்து ஜெயமோகன் சொன்னதை நினைவுபடுத்தியது சில வரிகள்

//ஒரு ஸ்டெப் கூட எடுத்துவைக்கமாட்டேன் எல்லாம் என்னைத்தேடி வரனும்னு நினைக்கறே// இதை சொல்லும் அந்தப்பெண்ணை எனக்கு அடையாளம் காண முடிந்தது அவள் சொல்லவருவதும் முழுவதுமாகப்புரியுது.

’’மெல்லிய குரலில் அசோக் என்றாள்’’ என்று முடியும் பத்தியின் கட்டமைப்பு அசத்துகிறது. ஒரு வாசகியாக மிகப்பிரமிப்புடன் அந்தப்பத்தியை மீள மீள வாசித்தேன். இக்கதையை வாசிக்கையில் சுரேஷ் பிரதீப்பின் எழுத்தும் நடையும் வீச்சும் ஆழமும் முன்னைக்காட்டிலும்  பலமடங்கு உயரம்சென்றுவிட்டது என்று தோன்றியது..

  6.  446 A

இக்கதையை  வாசித்து முடித்ததும் உணர்ந்தது  இவரின் கதைகளில் ஒரே மாதிரியான தன்மை இல்லவே இல்லை என்பதுதான். இதுவரை  வாசித்தவற்றில் கதை சொல்லியின் பார்வையிலேயே கதை நகர்கிறது என்பதைத்தவிர மற்ற எதையும்  பிற கதைகளுடன் ஒப்பிட முடியவில்லை. ஒவ்வொரு கதையும் மிகத்தனித்துவமாகவே

பரிசில் உரையாடல் அதிகம் இருக்கின்றது. எஞ்சும் சொற்களில்  ஒவ்வொரு பத்தியிலும் இருந்த வீச்சு இதில் இல்லாமல் நெகிழ்ச்சியாய் கொண்டுபோயிருக்கிறார்.

பதின்பருவத்து பையன்களின் உணர்வெழுச்சிகளை அழகாக பதிவு செய்கின்றது கதை. பேருந்து எண்ணும், அது கடக்கும் இடங்களின் பெயர்களும் சொல்லப்பட்டிருப்பது கதையின் நம்பகத்தன்மையை அதிகமாக்கி கதையுடன் ஒன்றச்செய்கிறது வாசிப்பவர்களை

அந்த வயதில்  பையன்களுக்கு எதிர்பாலினரின் உடல் மாற்றங்கள் ஏற்படுத்தும் உணர்வெழுச்சிகளையும் குழப்பங்களையும் அழகாக சொல்கிறது கதை,

அந்த கவிதா டீச்சரைக்குறித்து, மயக்கும் விழிகளும் செழிப்பான கன்னங்களுமாய்,  வாசிக்கையில் அழியாத கோலங்கள்  நினைவில் எழுந்தது, பதின் பருவத்தில் டீச்சர் மீது மையல் கொள்ளூவதும் ஒரு அழகிய நினைவுதான், இந்தபருவத்தை தாண்டி வந்த பலருக்கும் புன்னகையை வரவழைத்திருக்கும் வாசிப்பு.

நடிகை  ஷோபாவைப் போலவே சாதாரணமாகதெரியும் ஆனால்அற்புத அழகினை எதோ ஒரு கோணத்தில் எப்படியோ காண்பிக்கும் அழகியாக கவிதாடீச்சரை நான் கற்பனை செய்து கொண்டேன்

’அம்மா’த்தனமான அன்பில் இவனுக்கு ஏற்படும்குற்றவுணர்ச்சியையும் நுண்மையாக புரிந்துகொள்ள முடிந்தது. ஒருசில வரிகளில் ஒரு பெரும் சித்திரத்தையே மறைமுகமாக கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது வாசிப்பு

முந்தய ஒரு கதையில் கணவனின் சவத்துடன் வண்டியில் ஏறும் பெண்ணொருத்தி  யாருடனோ அலைபேசியில் பேசும் ஒருசில சொற்றொடரில் அவளின் முழுவாழ்வையும் புரிந்துகொள்ள முடிந்ததைப் போல

பென்சீனின் அறுகோணம் அவனுக்கு சுடிதாரையும் ஸாண்டல் சோப்பின் நறுமணத்தையும் நினவு படுத்துவது மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

துருவேறிய தூசு நிறைந்த  பேருந்துதான் எனினும் அவனின் இந்த பருவமும் அதில் நிகழ்பனவும், மிக மிக அழகானதால் கதையும் அத்தனை அழகாக போகின்றது

//எரிபொருள் தீராத, ஓட்டுநர் தேவையற்றதாக இப்பேருந்து சென்று கொண்டே இருக்கும். நறுமணம் மிக்க வியர்வை உடையவளாக    லாவண்யா    இப்பேருந்தில் அமர்ந்திருப்பாள். நான் அவளெதிரே காலங்களற்று அமர்ந்திருப்பேன். முதலில் இந்த சாலையும் பின்பு  இப்பேருந்தின் சக்கரங்களும்    மறையும். தொடர்ந்து பேருந்தின் இருக்கைகளும் அதன் உடலும் மறையும். அடுத்ததாக நானும் பேருந்தின் ஓட்டமும் மறையும். பின்னர் அவளும்     மறைவாள். பின்னர் அந்த நறுமணம் மட்டும் காற்றில் என்றுமே இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது தாக்குண்டவனைப் போல அந்த நறுமணத்தை நாசியில் உணர்ந்தான்//

இந்த வரிகளில் சுரேஷ் பிரதீப்பை  அடையாளம் காண முடிந்தது, 

கதை முடிவில் வருத்தமென்றாலும் நரேனின் வளரும் மனதின் எழுச்சிகளும் அவை புனைந்துகொண்ட பலவும் அன்றைய துயரத்தில் எப்படியோ கலைந்து போவதை  உணர முடிந்தது

வாசிக்கும் இளைஞர்களுக்கு  ஒருவேளை இக்கதை விலக்கத்தை அளிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு தன் வாழ்வின்  அழகிய கணங்களை   என்றைக்குமாக இழக்காமல் இருப்பதே முக்கியமெனப்படும்.

7. அபி

அந்தரங்கமான  ஒரு காரணத்தினால் மிகவும் பிடித்த  அபி’யென்னும் தலைப்பில்  கவரப்பட்டு வாசித்த கதை.  ஒரு பகுதி வாசித்தபின்னரே இது non linear narrative  முறையில் எழுதபட்டது என்றுபுரிந்ததால் மீள வாசித்தேன்.

அபி, அச்சு, ஸ்ரீ, சரண்   இவர்கள் நான்கு பேரின்  கதை. அபிக்கும் அர்ச்சனாவிற்கும் இரண்டு வாய்ப்பு தந்திருந்த ஆசிரியர் ஏன் சரணுக்கு அளித்த  ஒரு வாய்ப்புக்கூட ஸ்ரீக்கு கொடுக்கவில்லை என தெரியவில்லை. ஸ்ரீயின் பார்வையிலும் ஒரு பகுதி இருந்திருக்கலாம். மனைவியின் அலைபேசியை சோதிக்காத கணவர்களே இல்லாத உலகம் போலும் இது, எனினும் ஸ்ரீ குறித்து குற்றச்சாட்டாக  ஆக ஏதும் இல்லை இந்தக்கதையில்.  பயிற்றுவிக்கப்பட்ட கண்ணியத்துடனான நல்ல கணவன்,  மனைவியின் தாம்பத்யத்தை மீறீன உறவை  குறித்து தெரிந்ததும் விலகிக்கொள்கிறான் அவ்வளவே!

ஆனால் ஒரு பெண்ணாக எனக்கு இதில் ஸ்ரீயின் கோணம் என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலிருந்தது. இதுபோன்ற தாம்பத்தியத்தை தாண்டிய, மீறின உறவுகள் மிக வெளிப்படையாக அதிகம் தெரியவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  இதற்கு பெரும்பாலும் பெண்களின் அடங்காமை அல்லது அதீத பாலுறவு நாட்டமே காரணமாய் சித்தரிக்கப்படுகின்றது. நல்ல துணையொன்றிற்கான தேடல் பெண்களுக்கும் இருக்குமல்லவா? மேலும், பாலுறவைத்தாண்டிய சந்தோஷங்களை பிறிதொரு இணையிடம் அறிந்துகொண்ட பெண்களும் இருக்கிறார்கள்

வேலிதாண்டுவதென்பது ஆண்களின் பிறப்புரிமையாகவும் , நடத்தை கெட்ட பெண்களே எல்லைகளைத் தாண்டுவார்கள் என்பதுமே காலம் காலமாக நிலவிக்கொண்டிருக்கிறது இங்கு. நடத்தை, அதிலும் நல்ல நடத்தை என்பதற்கான  நிலைப்பாடை   யார் நிறுவியது?

ஏற்பாட்டுத்  திருமணங்கள்,  இனிமேல் அவனும் அவளும் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டு வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தம் அவ்வளவே! பலருக்கு மணவாழ்வை பாதி முடித்தபின்னரே தனக்கு  எல்லாவிதத்திலும் இணையான, காதலும் சாத்தியமாகும் ஒருவரைச்சந்திக்கும் வாய்ப்பே வருகின்றது. முன்பை போலில்லாமல் இப்போது அப்படியான வாய்ப்புகளை பலரும் உபயோகப்படுத்தியும் கொள்கிறார்கள்.  காலம் மாறிக்கொண்டிருக்கையில் அதற்கேற்றபடி வாழ்வுமுறையும்  பெருமளவில் மாறிக்கொண்டிருக்கின்றது அப்படியான மாற்றமொன்றினை இலகுவாக ஆர்ப்பாட்டமின்றி சொல்லும் கதையே இது

ஒரு நல்ல கதை அல்லது நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் சரி இனிஎன்ன?  என்று வாசகன் கேட்காதபடிக்கு இருக்கவெண்டுமென்பார்கள். அபி, ஸ்ரீயின் மனைவி அவளுக்கு சரணுடன் பிறழுறவு, இதை தோழி அர்ச்சனாவும் அறிவாள் கணவனுக்கு தெரிந்து அவன் விலகிவிடுகிறான்,   சரி இனி என்ன?  என்று கேட்டிருக்கலாம் இதை linear  கதையாக ஆசிரியர் எழுதி இருந்தாரென்றால்.

ஆனால் இக்கதையை இப்படி கதாபாத்திரங்களின் கோணங்களில்  மாற்றி மாற்றி வாசிக்கையில்,  அது ஏற்படுத்தும் பாதிப்பில் தான் இருக்கிறது இதன் வெற்றி. கதையை அதில் வரும் பல நிகழ்வுகளை  மனம் அசைபோட்டுக்கொண்டே இருந்தது

அர்ச்சனாவின் தோழமை அருமை. கணவருடன் கொஞ்சிக்கொண்டிருந்துவிட்டு பிரிவுத்துயரில் கண்ணீர் விடும் அபிக்கும் ஆறுதல் அளிக்கிறாள், அலுவலகத்தில் புதிய நட்பை முன்பே யூகித்தும் தடையோ , பாக்கியராஜ் கதைகளில் வரும் பெரிய கண்ணாடி போட்டுக்கொண்டு வரும்  முதிர்கன்னியைப்போல புத்திமதியோ சொல்லாமல் அப்பொழுதும் உடனிருக்கிறாள்.  இந்த நேர்மறைத்தோழமை ஆறுதலாக இருந்தது ஏறக்குறைய அபியின் மனச்சாட்சியைபோல அச்சுவின் பாத்திரம்.

அர்ச்சனாவைப்போல இதை ஆரம்பத்திலிருந்து கவனித்தும், ஸ்ரீயுடனான உறவிலும் சரணுடனான உறவிலும் இரண்டுபேரும் இல்லாத பொழுதிலும் உடனிருக்கும் தோழமை நிஜத்தில் யாருக்கும் கிடைப்பதில்லை. சரணின் முகம் இறுகியிருந்ததைத்தவிர வேறேதும் சொல்லாமலேயே அவன் என்ன சொல்லியிருப்பானென்று வாசகர்களை யூகிக்க வைத்ததும் அருமை

அபி இறுதியில்  ’இருக்கட்டும் ஒரு சேஃப்டிக்கு’ என்னுமிடத்தில் நானும் புன்னகைத்தேன். கதையில் எங்கும் சுரேஷை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. இக்கதை அவரின் முந்தைய எந்தக்கதையையும் நினைவூட்டவில்லை எந்த வரியிலும்  அவரின் பாணி என்று ஒன்றை அடையாளம் காணவும் முடியவில்லை முழுக்க வேறாகவே இருந்தது இக்கதை.

8.வரையறுத்தல்

கதையில் அன்று இன்று என் இருகாலகட்டங்கள் இணைக்கப்படுகின்றது. அன்று எண்ணை காணா பரட்டைத்தலையுடனிருந்த, சாதீய வரையறைகளால் விளிம்புக்கு தள்ளபட்ட குடும்பத்தைச்சேர்ந்த மாலதி இன்று மஞ்சள் நிறமும் செவ்வுதடுகளுமாய் அழகியாய் நீலப்புடவையிலபண்பாட்டு மானுடவியல் கருத்தரங்கில் உரையாற்றும் பேராசிரியை

தனசேகர் குடியானவப்பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போன நிகழ்வையும் அதன்பொருட்டு எரிக்கப்படவிருந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் அவ்வீடுகளிலொன்றில் அன்று வாங்கிவந்த தொலைக்காட்சிப்பெட்டியையும் கதை , பல உரையாடல்களை  கண்ணிகளாய் இணைத்துச்சொல்கிறது

மாலதியின் உரை அபாரம்.

 // உரசல்கள் நடைபெற்றிராத நேற்றோ,உரசல்களுக்கு வாய்ப்பற்ற நாளையோ கற்பனை, இன்றின் உரசல்களை எப்படி எதிர்கொள்வது//

//சாதியின் பாவனைகள் அழித்த புத்தாயிரத்தில் அதன் பங்களிப்பு, பாலுறவுக் கண்காணிப்பு என்னும் எல்லையில் நிற்பது// 

இப்பத்திதான், இதுதான் இக்கதை பேசும்பொருள். அந்த உரையில் இது அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த தொலைக்காட்சிப் பெட்டி ஆன்டெனாவுடன் இணைப்பது என்னும்போது அந்நிகழ்வு நடைபெறும் காலத்தை அறியமுடிகின்றது. சாணி மெழுகிய மண் தரையிலிருந்து கிண்டில் ரீடருக்கு கதை  வாசகர்களை கூட்டி வருகின்றது,

சாதியை இறுதியாக மாலதி அதாவது சுரேஷ் // வரலாற்று அறிவும்,நவீனப்பெருமிதங்களும்,ஜனநாயக மாண்புமில்லாத மக்களால் ஒருவித பெருமிதத்துடன் எண்ணிக்கொள்ளப்படும்  மனப்புனைவு// என்று வரையறுப்பதும் அருமை. உண்மையில் இக்கதையில் மாலதியின் உரையில் மட்டுமே சுரேஷை அடையாளம் தெரிந்தது வேறெங்கும்அவருக்கே உரித்தான அந்த  பிரெத்யேக நடை தெரியவே இல்லை. நிறைய துண்டு துண்டான  சின்ன சின்ன வாக்கியங்கள் இக்கதையில் இருப்பதும் பிற கதைகளுடன் ஒபிடுகையில் புதிது, 

ரோட்டா என்பது லோட்டாவைத்தானே? என்னும் சந்தேகம் வந்தது. துவக்கத்தில் இரண்டாம்பத்தியில் சாமியிடம் சிறுமி மாலதி வேண்டிக்கொள்கையில் மாதேஸ_க்கு ’ஜொரம்’ என்பதை நான் ’காச்சல்’ என்று மாற்றிப்படித்தபோது இன்னும் எனக்குப்பிடித்திருந்தது. எல்லாக்கதைகளிலும் சில வரிகள் அப்படியே காட்சிகளாக மனதில் பதியுமல்லவா? அப்படி எனக்கு இதில்

 //மின்சாரம் துண்டிக்கப்பட்ட அறையில், அலுமினிய விளக்கின் ஒளி பிரதிபலிக்கும் டிவி திரையில் படுக்கச்செல்லும் அம்மாவும் அப்பாவும் தெரிவது// 

கதை வாசிப்பில் உள்ளிருந்து திமிறிக்கொண்டுவரும் நினைவுகளைக் கட்டுப்படுத்தியபின்னர் இக்கதைக்கு வெளியிலிருந்து மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும்

9.ஆழத்தில் மிதப்பவை

இந்தக்கதையை உறவு முறைகளை விளங்கிக்கொள்ளவென்று இரண்டு முறை வாசித்தேன். ‘அபி’யைப்போலவே அனைத்துக் கதாபாத்திரங்களும் கதையை அடுத்தடுத்து சொல்லி கதையை கொண்டுபோகிறார்கள். ராஜாத்திக்கும் சந்தானத்திற்கும் குழந்தை இல்லாததால் ரம்யா தத்தெடுக்கப்பட்டு அவள் மீது எப்படியோ சந்தானத்திற்கு இருக்கும் மன விலக்கத்தின்பொருட்டு அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கிறது, அதில் ஒரு மகன்.அனைவரும் ஒரே வீட்டில்.  ரம்யாவின் காதல், அப்பா மற்றும் ராஜாத்தியின் இறப்பு,  ரமியின் திருமணம், சித்தியின் இறப்புடன் முடிகின்றது

இந்தக்கதைக்களத்தில்  மற்ற எல்லாவற்றையும் விட அக்காவைக்குறித்த தம்பியின் உளக்கணக்குகளை பிரமாதமாக அமைத்திருக்கிறார் சுரேஷ்.

துவக்கத்தில், கூரிய நுனிகொண்ட ஈரத்துண்டிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளைப்பற்றிய விவரணை அபாரம், தொடர்ந்து நீர்சொட்டி மண்ணில் குழிவிழுவதெல்லாம் அழகு விவரிப்பு.

 27 வயதான அழகியான ரம்யாவின் பாத்திரம் மிக மிக  வலுவானதொன்று. மாற்றாந்தாயின் மீது ரம்யாவிற்கு இருப்பது என்ன அன்பா அக்கறையா? தத்தெடுத்ததினால்  அவளின்  அப்பா எனப்படுபவரை மயக்கி கல்யாணம் செய்துகொண்டவளென்னும் வெறுப்பா?   ரம்யாவின் பாத்திரம் புதிரானது,  சித்தியை தம்பியின் அம்மா என்றே விளி எப்போதும். அம்மாவை தற்கொலை முயற்சியினின்றும் காப்பாற்றுகிறாள்,  அடிக்கிறாள், மடியில் படுத்து அழுகிறாள் வேண்டியமட்டும் திட்டுகிறாள் இறுதியில் அவளின் கல்யாணத்தின் மூலம்  அவளின் இறப்பிற்கும் காரணமாகிவிடுகிறாள். கணவருக்கு   மறுமணம் செய்துவைக்கும்  பெரியமனசுக்காரியான ராஜாத்தியம்மாவை போலவே உடல்மொழியை   எப்படியோ    கொண்டும் விடுகிறாள்

மகேந்திரனை உயிரி என்பது, அக்றிணையில் குறிப்பிடுவது, சந்தோஷையே காயப்படுத்துவது,  இறுதியில் ’அப்பா’ வென கதறியபடிக்கு தம்பியை அணைத்துக்கொள்வது, வெகு  நாட்களுக்கு ரம்யா மனதில் இருப்பாள்.

அர்ஜுனை நோக்கி வீசப்பட்ட ஆனால் அவன் காணாமல் விட்ட அக்காவின் அழகிய புன்னகை காப்பியில் இருப்பது கொள்ளை அழகு. ஒரு சின்னக்கதைக்குள் எத்தனை எத்தனை உணர்வுப்போராட்டங்களைச் சொல்லிச்செல்கிறார் சுரேஷ்?

மூத்தவளை அழகு என்னும் மற்றவள் அவள் மாலையில் அலங்கரிப்பதை வெறுப்பது, கணவனை பொருட்படுத்தாத,  படுத்திருப்பவரை எழுப்பி உட்கார வைத்து  ஓங்கி அறையக்கூடச்செய்யும் மனைவி ,அவருக்கான பணிவிடைகளை கழிவறையில்  அமிலம் ஊற்றி சுத்தம் செய்வதுடன் ஒப்பிடுவது, மகேந்திரனை கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் அம்மா செத்துவிடுவாளென்று அக்காவிடம் சொல்லும் தம்பி பெரியம்மாவைபோலவே இருக்கும் அக்காவையும் , அப்பாவையும் தன் அம்மாவையும், மகேந்திரனையும் மனதின் ஆழத்தில் மூழ்கி மூழ்கி எடுத்துப்பார்த்துவிட்டு அக்காவின் மனநிலையிலேயே தானும் அம்மாவிடம் பேசுகிறான்.

அதற்கப்புறம் கதை என்னவோ திடீரென்று முடிந்துவிட்டதைபோல இருந்தது.ஒரே பத்தியில் சில வரிகளில் முடிவென்றாலும் என்னவோ தொலைந்து போனதுபோல. இன்னும் ஒருமுறை அர்ஜுனின் அம்மாவை பேசவிட்டிருக்கலாமோ? ஏதோ ஒரு முடிச்சு அவிழ்ந்து இன்னும் தெளிவாக  முடிவுக்கு முந்தைய இருந்திருக்கலாமோ? அலல்து இந்த சிறு ரகசியம் அல்லது மர்மம்தான் கதையின் நோக்கமா?

இத்தொகுப்பில் உள்ள  கதைகளை வாசிக்கையில்  வாழ்வின் ஒரு கணத்தை அப்படியே ஒரு சிறு துண்டாக வாசகர் முன் வீசி எறியும், இப்போது அனேகம்பேர் எழுதிக்குவிக்கும் சிறிய கதைகளுக்கும், ஒரு முரண், ஒரு மர்மம், ஒரு திறப்பு, ஒரு முடிச்சு, ஒரு புதிர், இப்படி கதையை முடித்துச்செல்லும் சிறுகதைகளுக்கும் உள்ள வேறுபாடு  தெரிகின்றது.  சுரேஷின் கதைகள் முடிந்தபின்னும் என்னவோ பண்ணுகின்றது மனதை. கதையை மறந்து அடுத்த வேலையை பார்க்கமுடியாமல் கதை உள்ளே நிமிண்டிக்கொண்டெ இருக்கிறது. ஏன் செத்துபோனாள் அம்மா, ஏன் அர்ஜுன் அம்மாவிடமே அப்படிச்சொன்னான், ஏன் மகேந்திரன், மகேந்திரனுக்கும் குடும்பத்திற்கும் வேறென்ன வகையில் தொடர்பு,  இப்படி வரிசையாய்  யோசித்துக்கொண்டே இருக்க வைக்கிறது கதை

 10.பாரம்

சுரேஷின்  எழுத்தை வாசிக்கையில் எதிர்பாராமல் ஒருஅதிர்ச்சியை கொஞ்சமும் நினைக்காத இடத்தில் சந்திக்கநேரும் என்பதை அறிந்திருந்ததால், இம்முறை அதற்கு மனத்தை தயாராக்கிக்கொண்டேன்.

 ஆனால் பள்ளிச்சிறுவனொருவனின் களங்கமற்ற உலகினை வாசிக்கையில்  மனதின் முன்தயாரிப்புக்களையெல்லாம் மறந்து அவனை கவனிக்கத் துவங்கினேன்.   துவக்கத்தில் நான் கதைக்கு வெளியிலிருந்து அவனை கவனித்துக்கொண்டிருந்தேன் ஆனால் வயர்க்கூடையை தோளிலிருந்து மாற்றாமல் வந்தால் இன்னது நடக்கும் என்றும் மாற்றினால் அப்பா அம்மாவின் சண்டையும் அதைவிட அவனை வதைக்கும் அம்மாவின் கண்ணீரையும் சந்திக்கவேண்டி  வருமென்பதையும் வாசிக்கையில் நான்  உள்ளே நுழைந்து அவனாக மாறிவிட்டிருந்தேன்.

என் பால்யத்தை நினைவூட்டிய கதை இது.கதிரைப்போல இளம்வயதில் இப்படியான நம்பிக்கைகள் ஏதுமில்லை எனினும் அப்பா அம்மா இரவில் சண்டைப்பிடிக்ககூடாதென்றும்  அம்மாவை அடித்த பிறகு அப்பா எங்களை அடிக்கக்கூடாதென்றும்   மனதிற்குள்ளிருந்த  பெயரோ உருவமோ இல்லாமல்   பொதுவாக சாமி என்று சொல்லிகொண்டும் நம்பிக்கொண்டுமிருந்த ஒன்றிடம் மனமார வேண்டிக்கொள்வது அடிக்கடி நடக்கும். வேண்டுதல்களுக்கு பெரும்பாலும் நியாயம் கிடைக்காத, சண்டையும் வன்முறையும் முடிந்த பின்னால் சட்டையைமாட்டிக்கொண்டு அப்பா நள்ளிரவில் வாசல்கதவைத்திறந்துகொண்டு வெளியேறும் நாட்களில்  அவர் பலமணிநேரத்திற்குப்பின்னர் வீடுதிரும்பும் வரையிலும் அழுதுகொண்டிருக்கும் அம்மாவும், தூக்கமும்  பயமும், அழுகையுமாய் நானும் வாசற்படியில் காத்துக்கொண்டிருக்கும் போதும்  அதே சாமியிடம் வேண்டிக்கொள்வேன் இனி இதுபோலநடக்கவே நடக்கக்கூடாதென்று.  அப்பா குடித்ததில்லை ஆனால் குடியைவிட மோசமான,  தாழ்வுணர்வும் அதை மறைக்க வலிந்து ஏற்படுத்திக்கொள்ளும் முன்கோபமும் வன்முறைப்பிரயோகமும் கொண்டிருப்பவர்.   எனவே நான் கதிராகி கதையுடன் ஒன்றியிருந்தேன்.

களைத்துதிரும்பும் மாலைகளில் காலிவயிற்றில் நிறைந்திருக்கும் அந்த பசியையும்  வாசிக்கையிலேயே உணர முடிந்தது அதில் முன்பரிச்சயம் பலவருடங்களாக இருந்ததால். அப்பா அம்மாவிற்கிடையேயான அந்த உரையாடலை அழகாக அமைத்திருக்கிறார். அபாயகரமான எல்லைக்கு அம்மா உரையாடலை நகர்த்துவதும் அப்பா சங்கடப்படுவதும், கொஞ்சம் கொஞ்சமாக அது கதிர் என்ன நடக்கும் என்றும் என்ன நடக்கக்கூடாதென்றும் பயந்துகொண்டிருக்கிறானோ  அந்த இடம் நோக்கி நகர்வதையும் பின்னர் அதுவே நடப்பதையும் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரங்களின் வாழ்வு எத்தளத்திலியங்குகின்றதென்று வாசிப்பவர்கள் ஊகிக்கிறோமோ அதற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்  வழக்கில் கதிரம்மா பேசுகிறார்கள். //எதார்ந்தாலும் தயங்காம சொல்லுங்க// இதைப்போல.

எல்லாக்கட்டுப்பாடுகளையும் இழந்து கெட்டவார்த்தை பேசிக்கொண்டு சாப்பாட்டை உதைத்து எழுந்திருக்கும் அவரை கண்முன்னேயென பார்க்க முடியும் வாசிப்பவர்கள். ‘ப்ச்’ என்று அப்பா சொன்னதும் அம்மாவின் முகம் ஒருகணம் சுடர்ந்து அணைந்து அவள் காத்திருந்த புள்ளிக்கு அப்பாவை  கொண்டுவந்ததும் அழகாக சொல்லபட்டிருக்கிறது 

அந்த வெள்ளிக்கிழமை வந்த சுதந்திர தினம் பற்றிய விவரணையில் கதிரென்னும் சின்னப்பையனை அத்தனை அழகானவனாக கல்மிஷமில்லாதவனாக காட்டும்போதும் என்னால் யூகிக்கமுடியவில்லை அடுத்து அவனுக்கு வீட்டில் காத்திருப்பதென்னவென்று.

வெள்ளைவேட்டியில் ஆசிரியர்களும் கூடுதல் தலைப்பூவுடன் ஆசிரியைகளும் இருக்கும் அந்நாள் கதிருக்கு தரும் உற்சாகத்தையும், பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியிலேயே நிகழும் அந்த  ஒன்றே போலான நாட்களிலிருந்து வேறுபட்டிருக்கும் பள்ளிநாட்கள்  தரும் பரவசத்தையும் நாம் எல்லாருமே  அந்நாட்களில் அனுபவித்திருப்போம்.

// நெருங்கிக்கடக்கும் போது காற்றில் எழும் புடவை தூவிச்செல்லும் மணம்// அழகுக்கவிதை இவ்வரியும்  வாசிக்கையில் மனம் கண்டுகொண்டிருந்த அக்கணமும்.

ஆனால் அம்மேடைப்பேச்சின் முன்பாக நான் தவறாக யூகித்தேன் கதிர் பதற்றமாகத்தான் பேசுவான் என்று. சரியில்லாத குடும்பச்சூழலில் வளரும் பிள்ளைகளைப்பறிய என் பொதுவான அனுமானத்தில் நான் இந்த தவறை செய்திருக்கலாம். பின்பகுதியில் கதிர் ஒரு நிறுவனத்தலைமைப்பொறுப்பில் வெற்றிகரமானவனாக இருப்பதை இந்த நிகழ்வுடன் தொடர்புபடுத்திக்கொள்ளமுடிந்தது

வயர்க்கூடை இல்லமால் செல்கையில் // வீட்டை மனதிற்குள் கொண்டுவரவே முடியவில்லை// என்றெழுதியிருப்பதை பலமுறை வாசித்தேன். மனதில் நினைப்பதை, தோன்றுவதை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதென்பது அரிது. இந்த ஒரு வரிக்காகவே இக்கதை எனக்கு மிக மிக பிடித்ததொன்றாக இருந்ததென்றும் சொல்லுவேன் கதிரம்மாவிற்கு பிறழ் உறவு இருந்திருக்கும் என்றூம் யூகித்திருக்கவில்லை

ஆனால் வழக்கம்போல எதிர்பாராமல்  கூடை இல்லாமல் வந்ததால் கெட்டது நடந்திருக்கலாம் என்று அஞ்சிக்கொண்டே வரும் அச்சிறுவனை   இரக்கமில்லாமல் இரட்டைக்கொலையை பார்க்கவைக்கிறார் சுரேஷ் அதுவும் அம்மாவின் நிற்காத குருதியும், துடிக்கும் உதடுகளும் , கஷ்டம்.

 கதையில் அவன் பெயர் கதிர் என்பதையே சில பக்கங்கள் கடந்த பின்னரே சொல்வது,  ஆனால் அதற்கு முன்பே அவன் மருத்துவரை பெயரிட்டு அழைப்பது, அவன் மனைவியும் அப்படியே மருத்துவரை அழைப்பது. பிரதான கதாபாத்திரமான  கதிரையே சட்டென கொன்றுவிட்டு கதையைத்தொடரும் துணிச்சல், கதிரின்  இறப்பிற்கு பிறகான  உலகின் உரையாடல். மருத்துவருக்கான மனைவியின் கடிதம் , அதன் வாயிலாக வாசகர்களுக்கு தெரிய வரும் கதிரின் இறப்பு, மருத்துவரின் பார்வையிலும் சிலவற்றைச்சொல்லியிருப்பது இவையெல்லாமே புதிதாகவும் அருமையாகவும் இருக்கின்றது.  வாசிக்கையில  கொஞ்சமாக குழப்பம் வந்த இடங்களென்றால்;

//இல்லை சொர்க்கத்தில் பிணங்களுடனேதான் இவர்கள் வாழ்க்கையைக்கழிக்கணும்// இந்தபத்தி எனக்கு பலமுறை வாசிந்த பிறகே புரிந்தது.

அதன் பின்னால் வரும் ‘வெளிப்பாடுகள்’ பத்தியின் நீளம் அதிகமாவும் சொல்லியிருக்கும் விஷயம் தீவிரமாகவும் இருப்பதால் மீள மீள வாசிக்கவேண்டியிருந்தது, விரைவாக  வாசித்தவாறே  இருக்கும் போது தொய்வு ஏற்பட்டது போல  இருந்தது

அதுபோலவே கதிரின் இறப்பைசொல்லும் கவிதாவின் கடித வரியில் நிகழ்ந்தது என்னவென்று முதலில் புரியவில்லை. கதிர் கார் ஒட்டிக்கொண்டிருக்கும் போது செத்துப்போனார் என்று முதலிலும் பின்னர் சில மீள் வாசிப்பின் பின்னரே அவன் ஓட்டுநர் இருக்கைக்கு ஏற யத்தனிக்கையில்  தோளில் மாட்டியிருக்கும் பையின்  வார் மாட்டி இறந்தானென்றும் புரிந்தது.

பள்ளிக்கூடத்திற்கு தூக்கிச்செல்லும் புத்தகக்கூடையின் சுமையையும் அதை கைமாற்றுவதால் இன்னின்னது நடக்கும் நடக்காதென்று அறியா வயதில் கற்பித்துக்கொண்டதும், ஒரு நாள் அவன் அச்சுமையை மறந்தபோது நடந்த கொலையுமாய் மனம்பிறழ்ந்தவனின் கதையொன்றினை, சுமையை அச்சாக்கியே கொண்டு சென்று, சுமையை ஒருமுறை  அவனாக நீக்குகையில் அவன் மரணிப்பதையும் சொல்லி  பாரம் என்னும் தலைப்பில் இதைவிட எப்படியும் அழகாக அழுத்தமாக சொல்லவே முடியாது 

11.ஈர்ப்பு

 இத்தொகுப்பில் கொஞ்சம் அபாயகரமான கதை என்று ஈர்ப்பை சொல்லிவிடலாம். கம்பிமேல் அல்லது கத்திமேல் நடப்பதுபோன்ற கவனம் பிசகாமல் சொல்லவேண்டிய கதை. ஆனால் எதைப்பற்றியும் கவலையின்றி அசட்டையாக துணிச்சலாக சொல்லபட்டிருக்கிறது.

சாகசங்களால் தோற்ற ஒரு ஆணைக்குறித்த கதை என்கிறார் கதை சொல்லி. துவகக்த்திலிருந்தே // பாலுறவு என்னும் யதார்த்தத்தை கடந்து செல்ல தாய்மை காதல் போன்ற கற்பனைகள் அவளுக்கு உதவுகின்றன// எனபது போன்ற பெண்களை குறித்த மிகத்துணிச்சலான கதைசொல்லியின் கோணத்திலான கருத்துக்களும், கருத்துக்கள் என்னும் பாவனையில் குற்றச்சாட்டுக்களும்  முன்வைக்கபடுகின்றன.

குறிப்பாக சகோதரன் என்னும் ஒரு வட்டத்துக்குள் ஏன் உடன்பிறந்தவனை பெண் நிறுத்துக்கிறாள் என்பதெல்லாம் பேரதிர்ச்சியை கொடுக்கின்றன.

கதை சொல்லியே பெண்ணாகவும் ஆணாகவும் இருந்து மாறி மாறி ஆணையும் பெண்ணையும் குறித்த அப்பட்டமான அந்தரங்க உண்மைகளை தொடர்ந்து சொல்லுவதற்கென்றே எழுதபட்ட கதையோ என்று கூட தோன்றுகிறது வாசிக்கையில். ஏராளம்  அகச்சிக்கல்களோடு,  பெண்களின் மீதான வஞ்சமும் கோபமுமாக, கையறு நிலையில் எழுதபட்ட ஒரு கதையாகவே ஈர்ப்பு எண்ண வைக்கின்றது. ஈர்ப்பு பிழையான புரிதல்களுக்கான வாயப்புகள் அதிகம் கொண்ட கதை

12. மறைந்திருப்பவை

மற்றுமொரு பெண்ணுடலை பிரதானமாகக் கொண்ட கதை

மனநிலை பிறழ்ந்த, உடைகளை அவிழ்த்து வீசிவிடும் தீபாவை  மனைவியை பெற்ற பிராதாப் என்னும்  கணவனும் அம்மு என்றழைக்கபப்டும் தீபாவுமாக  மாறி மாறி கதையை நமக்கு சொல்கின்றனர்.  இதில் தீபாவின் சரும நிறமும் உடலமைப்பும் மேலுதடும் கீழுதடுமாய் விரிவான விவரணைகளின் மூலம் அவள் பேரழகி என்பதை வாசிப்பவர்களும் உணருவோம். புணர்ச்சிக்குப்பின்னரான கனவுகளில், காமம் கிளர்த்திடும் உடலைபெற்ற தீபாவை எப்போதும் அன்னையென காண்கிறான் கணவன்.

தீபா சொல்லும் // நான் அஞ்சிய உன் பேரன்பும்// போன்ற வரிகள்  தீபாவை குறித்த ஒரு திடுக்கிடலை உருவாக்குகின்றன.

ஒரு மழைநாளில் தான் ஈன்ற குட்டிகளில் ஒன்றை சொக்கிய கண்களுடன் ஜுலி  தின்று கொண்டிருப்பதை பார்த்ததிலிருந்து  மாறத்துவங்குகிய தீபாவைத்தான் பிரதாப் மணம் புரிந்துகொண்டிருக்கின்றான்.

//சூழ்ந்த புறத்தை குறைத்துக்கொண்டதால் பலமடங்கு எழுந்துவிட்டிருக்கும் அகம்//என்னும் வரிகளில் மொத்த கதையின் சாராம்சமும் தெரிகின்றது.

தீபா ஜன்னல் கம்பிகளில் உடைகளின்றி செய்துகொண்டிருக்கும் செயல்களையும் அதை காணொளி எடுத்தவனும், அக்காணொளி இணையத்தில் வெளியாவதும் தீபா இறந்துபோவதுமாக சிக்கலான வன்முறையும் வலியும் மனப்பிறழ்வுமான இருவரின் வாழ்வினை  எந்த இரக்கமுமின்றி சுரேஷ் சொல்லியிருக்கிறார்.

அனைத்துக்கதைகளையும் வாசிக்கையில் சுரேஷ் பிரதீப்பின்  நோக்கம் வசகனை வியப்படைய செய்வது மட்டும் அல்ல என்று தெரிகின்றது. கதைகள் இயல்பாக அடுத்த கட்டதுக்கு நக்ர்கின்றன, வாசகமனமும் உடன் பயனிக்கின்றது..

வாழ்வின் இயங்கியலில் இருக்கும்  உறவுகள், பண்பாடு,  குடும்ப வாழ்வின் சிக்கலான பல அடுக்குகள், வன்முறை, பிறழ் உறவுகள் என்று பல முக்கிய  புள்ளிகளை தொட்டுச்செல்லும் கதைகள் இவருடையது.

எல்லாக் கதைகளிலும் வாசகர்கள் தங்களின் அந்தாங்க வாழ்வின் கணங்களையும் நிகழ்வுகளையும் பொருத்திப்பார்க்க முடிகின்றது.இது நம் எல்லாருடைய கதைகளும்தான்.

ஒவ்வொரு கதையையும் வாசித்து முடித்தபின்னர் மனம்  துடைத்து விட்டது போல. சலனமின்றி ஒரு கணமும் அடுக்கடுக்காக நினைவுகள் வந்து படிந்து படிந்து எடை கூடியது போலவும் உணர்கிறேன்.

பல வரிகள் மிக மிக அந்தரங்கமாக என்னை காயப்படுத்தியது, இன்னும் சில வரிகள் கருணையுடன் அணைத்துக்கொண்டு கண்துடைத்தது,  சில நெஞ்சிலேயே எட்டி உதைத்தது சுரேஷின் எழுத்துக்கள்  வாசக மனதை மோதி தகர்த்து, கலைத்து பிறிதொன்றாக  அடுக்குகின்றது. 

கதைகளில் அதிகம் வெளிப்படுவது எழுத்தாளருக்கு  மனிதர்கள் மேற்கொள்ளும் பாவனைகள் மீதான வெறுப்பு. அதிலும் முக்கியமாக தன்னை அன்பானவர்களாக சித்தரித்துக் கொள்வதற்கு மனிதர்கள்   மேற்கொள்ளும் எத்தனங்கள். குடும்பம் கல்யாணம் தாம்பத்தியம் காதல் இவற்றின் மீதெல்லாம்  காலம் காலமாக அடுக்கடுக்காக  போர்த்தப்பட்டு வந்திருக்கும்  புனிதப்போர்வைகளையெல்லாம் இரக்கமின்றி கிழித்து வீசியிருக்கிறார் சுரேஷ்.

 சில இடங்களில் சுரேஷ் சொல்லியிருக்கும் கருத்துகளும் பிரயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளும்  மிக குரூரம்  என்றும் தோன்றியது, ஏனெனில் அப்படி கசந்த அத்தனையும் உண்மை என்பதினால்  

சுரேஷின் கதைகள் பெரும்பாலும் வகுக்கப்பட்ட எல்லைகளில் இருப்பவற்றின் மீது ஆர்வமற்றவையாக சரி தவறு என்று பகுத்தறிய முடியாதவற்றின் மீது விருப்பு கொண்டு நகர்கிறவையாக இருக்கின்றன எஞ்சும் சொற்கள் தொகுப்பிலிருக்கும் எல்லா சிறுகதைகளுமே சுரேஷ் எனும் இளம் எழுத்தாளரின் அகத்தை பிரதிபலிக்கிறது. அவ்வவயதிற்கே உரிய அகச்சிக்கல்களையும்.