லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2017 (Page 2 of 3)

நன்றிச்செண்டுகள்

கடந்த வருடம் எனக்கும் என் அம்மாவிற்குமாய் தீவிரசிகிச்சை அளித்த ஒரு  மருத்துவருக்கு நான் எழுதிய ஒரு கடிதம்இது.   தவிர்க்க முடியாதபடி மருத்துவத்திற்கு ஆளாகவேண்டியுள்ள  நோயாளிச் சமூகத்தின் பிரதிநிதியாக என் trigeminal neuralgia விற்கு பிறகு  மீண்டும் அவரிடம் குடும்பமாய் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டி இருந்ததால் இரண்டிற்கும் சேர்த்து இந்த நன்றிக்கடிதத்தை கோவை மருத்துவர்  திரு பாலகுமார் அவர்களுக்கு எழுதினேன்.

எனக்கு ஏற்பட்ட வலியை எங்களூரில் பல் வலியென்று கண்டுபிடித்து (?) root canal சிகிச்சைக்கெல்லாம் என்னை தயார் படுத்தினார்கள். பின்னரே நான் அவரிடம் மருத்துவ ஆலோசனைக்காக வந்தேன். 20 நிமிடங்களில் இது ஒரு நரம்பு,  அதன் பாதுகாப்பிற்கென இருக்கும் மேற்பூச்சை இழப்பதால் வரும் கடுமையான வலி  என்னும் மிகச்சரியானதோர் கண்டறிதலுக்கு  வந்து, சரியான ஆலோசனை வழங்கினார். Remarkable diagnosis!!

MRI ,  CT எல்லாம்  எடுக்க சொல்லவில்லை.மிகத்துல்லியமான கண்டறிதல், அதற்கான குறிப்பிட்ட வலிநிவாரணியைப் பரிந்துரைத்தார்.. ஒரு வேளை இதற்கு மேலதிக சில பரிசோதனைகள் செய்ய வேண்டுமெனச்சொல்லியிருந்தாலும் கட்டுப்பட்டிருப்பேன். எனினும் அப்படி சொல்லாமல் எளிமையான முறையில் மிக விலைகுறைந்த   (20 மாத்திரைகள் 11 ரூபாய்கள்) சரியான மருந்துகளை பரிந்துரைத்தார். கோவை தற்போது medical capitol என்று அழைக்கப்பட்டாலும் அங்கும் நோயாளிகளை கசக்கிப்பிழியும் அறமற்ற மருத்துவமனைகளே ஏராளம் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் குடும்ப மருத்துவர் வசந்திற்கு அடுத்து அறத்தின் பேரிலான  நிலைப்பாட்டுடன் சிகிச்சை அளிப்பது இவர்தான்

எனக்குப்பின்னர் வெகு சில நாட்களிலேயே என் பெற்றோர்களுக்கும் சிகிச்சை அதிலும் என் அம்மாவிற்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சர்க்கரை நோயாளியான அம்மாவை 75 வயதிற்கு பின்னரான இந்த இருதய அடைப்பிலிருந்தும் அதன் உடனான சில கோளாறுகளிலிருந்தும் மீட்டெடுத்து உயிரளித்தது மருத்துவ இயலின் எல்லைகள் தாண்டிய ஒரு சிகிச்சை.

அவரிடம் மிகச் சிறப்பானதென்னவென்றால் நம்பிக்கை ஊட்டும்  உடல் மொழி.  அம்மா அப்பாவை மெல்ல தொட்டு அல்லது தட்டியபடி புன்னகையுடன் பேசும் அந்த உடல்மொழியிலேயே  உடல்நிலை பெரும்பாலும்  சீராகிவிடும்., அவ்வப்போது நல்ல தமிழிலும் பேசுகிறார்..

இந்தியாவில்  பெரிய சிக்கல். டாக்டர்களின் ஈகோ   என்பார் ஜெயமோகன். செகண்ட்ஒப்பீனியன் கேட்பதை பெரிய குற்றமாகவே எடுத்துக்கொள்ளும் நிலையில் அவர் மனமுவந்து அம்மாவை அம்மாவின் விருப்பத்திற்குரிய மருத்துவரிடம் காட்டவேண்டுமென்றால் காட்டசொல்லியதையும் நினைவு கூறுகிறேன்.. இரண்டாம் கருத்தை நாடினார் என்பதற்காகவே நோயாளிகளை தண்டிக்கும் டாக்டர்களைப்பற்றி நாம் ஏராளம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  அறத்துடன் திறமையும் பெருந்தன்மையும் சேர்ந்த ஒரு மருத்துவராக அவர் மேல் என் மதிப்பு பலமடங்கு கூடி இருக்கிறது இப்போது.

நோய்களுக்கு சிகிச்சைசெய்யும்போது நோயாளியின் மனதில் உள்ள அவநம்பிக்கையை போக்குவதையும் ஒரு சிகிச்சையாகவேசெய்யவேண்டுமென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், ,.   உடல்நோய்களின் விளைவாக அவநம்பிக்கையிலும் வாழ்வு குறித்த எதிர்மறைசிந்தனையிலும் இருக்கும் நோயாளிகளை. வாழவேண்டுமென்ற விருப்புறுதி நோக்கி தள்ளிச்செல்வது மருத்துவரின் உடல்மொழியே.( ஜெயமோகன்) அதுவே நோய்களுக்கு முதல் மருந்து. அது அவரிடம் இருக்கிறது.

.  என் அம்மாவைப்போல முதுமையில் வலியின் முன் மண்டியிட்டு மன்றாடி   மருத்துவரிடம்   உடலை பலர் ஒப்படைக்கிறார்கள்.    நோய் எனும் அந்த ராட்சத வல்லமைக்கு சரியான  பதில் சொல்கிற ஒரு சில திறன் வாய்ந்த மருத்துவரகளில் அவரும் ஒருவர்.  அம்மா அடைந்த வேதனைகளிலிருந்து அவர்களை விடுவித்து. குணப்படுத்தினார். அவருக்கும் அவருடன் இணைந்திருந்த மருத்துவர்களுக்கும் என் நன்றிகள்.  ஒரு நேர்மையான திறமையான மருத்துவராக தனது பங்கை சரியாக செய்த ஒருவருக்கான நன்றிக்கடிதம் இது.

மருத்துவத்துறையின்  இந்த அறமின்மைக்கு மாற்றாக அவர் வெகு சீக்கிரம் துவங்கப்போகும் சொந்த மருத்துவமனை,    இருக்குமென்பதால் அதற்கு  “அறம் ” என்றே கூட பெயரிட்டுவிடலாம்.

மருத்துவத்துறை பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டநிலையில் எந்த  தகிடு தத்தங்களும் இல்லாமல் எளிய மருந்துகளின் மூலமாகவும் நம்பிக்கையான உரையாடல்களாலும் மாத்திரமே  வியாதிகளைக் குணப்படுத்தும் மருத்துவர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்பதற்கும்  என்னைப்போன்றவர்கள் முற்றிலும் நம்பிக்கையிழக்காமலிருப்பதற்கும்  திரு பாலகுமாரும்,திரு வசந்த் அவர்களுமே காரணம்.  எதிர்காலத்தில்இவரும்  திரு ஆல்வாவாகவே எளிய மக்களின் வாழ்வில் அறியப்படுவார் என்றே நம்புகிறேன், விரும்புகிறேன்,. அவரின் எதிர்கால புதிய சொந்த மருத்துவமனைக்கு என் வாழ்த்துக்களுடனும் ,மீண்டும் அனைத்திற்குமான நன்றிகளுடனும்

லோகமாதேவி

 

 

,

 

 

 

மலையாளமும் தமிழும்

மொழி சார்ந்த பல சிரமங்களுக்கு  திருமணமாகி கொங்கு நாட்டிலிருந்து அபுதாபிக்கு சென்றதும் நான் அனுபவித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இப்போது இருப்பதைப்போல தமிழ் ஆட்கள் இல்லை சுற்றிலும் மலையாளிகளே .எனக்கு பேசவும் யாரும் இன்றி  அவர்கள் பேசுவதும் புரியாமல்   நிலவரம்  ஒரே    கலவரமாக இருந்தது முதல் 6 மாதங்கள்

’’எந்தா சேச்சி கண்ணடை இட்டிருக்குனு?  காழ்ச்சி கொறவுண்டா? , பாங்கு விளிக்குன்ன சப்தம் கேட்டோ?’’ என்றெல்லாம் வேக வேகமாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பேய் முழி  முழித்துக்கொண்டிருந்தேன்  வெயிலடிக்கும் பொழுதுகளில் ’’நல்ல பனி குட்டிக்கு’’ என்பதைக்கேட்டு குழம்பி இருக்கிறேன். பனிபிடிப்பது என்றால் காய்ச்சலென்று தெரிய வெகு நாட்களாகியது

’’இன்னலே’’ என்றால் நான் இன்றைக்கு என்று பலநாட்கள் நினைத்துக்கொண்டிருக்கையில் அதற்கு ‘’நேற்று’’ என்று அர்த்தம என்பதே பல மாதங்கள்  கழித்துத்தான் தெரியவந்தது.

சரண் வயிற்றிலிருந்த போது எனக்கு இனிப்புகள் தர வந்த ஒரு மலையாளி பெண்மணி  ’’ தேவி நல்ல வண்ணம் வச்சுட்டுண்டு’’ என்றதும் நான் நல்ல நிறமாகிவிட்டேன் என்று நினத்து பூரித்துப்போய், பின்னர்  சரண் அப்பா   வண்ணம் வைப்பது என்றால் குண்டாவது  என்று விளக்கமளித்தபின்னர் ஏகத்துக்கும் கவலைப்பட்டேன்

புதியதாய் வாங்கிய இட்லிச்சட்டியில் ’’இன்னும் கொறைச்சு வெள்ளம் வைக்கணும்’’ என்று என்னிடம் சொல்லப்பட்டதை நான் இன்னும்  குறைவாக என்று அர்த்தம் பண்ணிக்கொண்டு மிகக்குறைவாக தண்ணீர்  வைத்து பாத்திரம் கரிப்பிடித்த கதையெல்லாம் நடந்த பின்னர் சுதாரித்துக்கொண்டேன்

காரியமாக தினம் ஏசியானெட்டும் கைரளியுமாகப் பார்த்து பேப்பரும் பேனாவுமாய் களம் இறங்கி  3 வருடங்களில் சரளமாக மலையாளம் பேசவும், மனசிலாக்கவும் முடிந்தது, ஆசான் சுரேஷ் கோபியின் கற்பித்தலில் பல மலையாளக்கெட்டவாரத்தைகளும்  கூட கற்றுக்கொண்டேன்!!!

இப்போது இங்கு கல்லூரியில் கேரளாவிலிருந்து மாணவர்கள் சேர்க்கை என்றால் கூப்பிடு லோகமாதேவியை என்னுமளவிற்கு மலையாளம் அத்துப்படி. கேரளவிலிருந்து வருபவரகளிடம் ‘’ஒண்ணு வேகம் போய் ஃபிஸ் அடைக்கணும்  கேட்டோ, நமக்கு  கோர்ஸினைக்குறிச்சு பின்ன  சம்சாரிக்காம் ‘’ என்பேன் அவர்களும் உடன் பணம் கட்டிவிடுவார்கள்.

ஆனால்  மலையாளம்  அத்தனை இனிமையான மொழி. அந்த பாஷையின் இனிமையிலிருந்து வெளியெற மனசின்றி இன்னும் இன்னுமென பேசிப்பேசி அதிகம் நான் இப்போழுது பேசுவதும் விரும்புவதும் தமிழை விடமலையாளத்திலேயே !

காருண்யமும் ஆனந்தமும்

சரண் பள்ளியில் ஆனந்த உற்சவத்திற்கு அவனுடன் நாங்களும் 3 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அவன் பள்ளிக்கு அருகிலிருக்கிறது காருண்யா.

காருண்யா பல்கலைக்கழகத்திற்கு பலமுறை நான் சென்றிருக்கிறேன் எப்போது அந்த சாலைவழி சென்றாலும் மீண்டும் மீண்டும் செல்ல விரும்பும் ஒரு இடமாகவே இருக்கும் எனக்கு காருண்யாவும் பெதஸ்தாவும்

இந்த முறையும் கணவர் மகனுடன் சென்றேன். வழக்கம் போலவே அங்கு எங்குமே புற்களை மிதிக்காதீர்களென்றோ பூக்களைப்பறிக்காதீர்களென்றோ புகைப்படம் எடுக்ககூடாதென்றோ., எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமான தேவன் இருக்குமிடமாகவே அன்றும் இருந்தது.

தொட்டுவிடலாமெனும் அண்மையில் மேற்கு தொடர்ச்சிமலைத்தொடர்களும்,. முகில் மூடிய மலைமுகடுகளும், நீர்த்துளி ததும்ப செழித்து வளர்ந்திருந்த புல்தரைகளும், பூக்களும் பறவைகளின் கீச்சிடலுமாக அங்கிருந்த சிலமணி நேரமும் நான் இறையின் அண்மையை உணர்ந்தவாரே இருந்தேன்

 

7 காட்சிகளையும் தேவனின் வரலாறையும் கண்டோம். சிலுவை சுமக்கும் காட்சியில் உருகி அங்கேயே கொஞ்சநேரம் நின்றேன். காட்டிக்கொடுக்கும் காட்சியிலும் அப்படியே.

Betrayal அதுதான் யுகம் யுகமாக மானுடத்தை தொடர்ந்துவந்துகொண்டே இருக்கிறது என்று நினத்துக்கொண்டேன். உண்மையில் பெரும் துரோகமென்பது பொதுவில் அனைவரும் நினைப்பது போல படுக்கையில் நிகழ்வதில்லை,நம்பிக்கை துரோகமே மாபெரும் பாவம். ஒருவரின் மேலான நமது உளமார்ந்த நம்பிக்கை முற்றாக அழிக்கப்படுகையில் நாமும் அழிந்தேதான் போகிறோம்  அந்த கணத்தில். ஏற்படும்அந்த விரிசல்கள் மீண்டும் ஒட்டுவதில்லை

தேவன் உயிர்தெழுவதையும் அங்கிருந்த அறிவிப்புபலகையில்  I am alive for ever and ever  எனும் வாசகங்களையும் பார்த்தபடி இருந்தேன் சிலநிமிடங்கள்

மழை இல்லை எனினும் இளவெயிலும் ஈரக்காற்றும் இருந்த்தது. தங்கநிறத்தில் கண்ணாடி இறகுகளுடன்  தும்பிகள் இணை இணையாக பறந்தன அந்த புல்வெளி எங்கும்

தெய்வீகக்ககுளத்தின் அருகில் சிறிதுநேரமிருந்தேன். சிறு சிறு கைவளையல்களாகவும், சில்லறைக்காசுகளாகவும் குளத்தின் அடியில் சேர்ந்திருந்தன நம்மில் பலரின் நம்பிக்கைகள்

ஒரு மூத்த சகோதரி புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டு விவிலியத்தை மடியில் பிரித்துப் படித்தபடி கண்களில் தாரை தாரையாய் நீர்பெருக அமர்ந்திருந்தார்

இன்னுமோர் இளைஞன் முழந்தாளிட்டு முகத்தை அங்கிருக்கும் ஒரு பீடத்தில் புதைத்தபடி இருந்தான் அவன் அழுதுகொண்டிருக்கிறான் என்பதை மெல்ல குலுங்கும் அவன் முதுகிலிருந்து அறிந்தேன்

கீச்சுக்குரலும் உற்சாகமுமாய் கத்தியபடி சில குழந்தைகளுடன் 2 குடும்பங்கள் வந்தன.. இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு இளைஞர்புறவுலகின் தொடர்பிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக கடமையே உருவாக தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்ட்ருந்தார் .

அங்கிருந்த chapel ல் இன்னும் நிறைய மனிதர்கள், பெரும்பாலும் வேண்டுதல்களுடன் மன்றாட்டுகளுடன் துயரங்களுடன் நம்பிக்கைகளுடன் விருப்பங்களுடன்  அழுதும் தொழுதும் கொண்டிருந்தார்கள். என்னிடம் ஒரு சகோதரி வந்து மென்குரலில் எனக்கு ஏதாவது பிரார்த்தனைகளோ வேண்டுதல்களோ இருந்தால் சொல்லலாமென்றார்.

அவரின் கண்களை  புன்னகையுடன் நேராக சந்தித்து எனக்கு வேண்டுதல்களோ குற்றச்சாட்டுக்களோ, ஏன்புகார்களோகூட ஏதுமில்லை என்றேன். எனக்கு அன்று உண்மையில் இறைவனிடன் சொல்லிக்கொள்ள ”நான் அவரைக்கண்டுகொண்டேன்” என்னும் ஒரு சேதியே இருந்தது

அந்த பெண்ணின் கண்ணீரிலும்,, அந்த இளைஞனின் துயரத்திலும், குழந்தைகளின் உற்சாகத்திலும், அந்த நீர்பாய்ச்சிக்கொண்டிருந்த இளைஞனின் கடமைஉணர்விலும்,அங்கிருந்த மரங்களின் பூக்களிலும், பறவைகளிலும்,ஏதோதோ காரணத்தின் பொருட்டு அங்கு வந்திருந்த மனிதர்களின் நம்பிக்கையிலும் அந்த நம்பிக்கைகளின் மறு வடிவாக காலத்தைக்கடந்தபடி நீரின் அடியில் காத்திருக்கும் வளையல்களிலும் நான் இறைவனைக்கண்டேன்

கிருஸ்து எனும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் கடவுளையல்ல நான் அங்கு உணர்ந்தது  எல்லாபடைப்புக்களுக்கும் மூலமான பிரம்மத்தை பெரும் இறையையே கண்டுகொண்டேன்.

அந்த சுவரெழுப்பிக்கட்டப்பட்ட சுண்ணம் பூசிய  சுவர்களுடனிருந்த அந்த பிரார்த்தனைக்கூடத்தில் மட்டுமல்ல , பச்சைபசேலென்ற அந்த தோட்டத்திலும், பலைமுகடுகளிலும் மனிதர்களிலும், பறவைகளிலும் புல் பூண்டுகளிலுமே தேவன் இருந்தார்

காருண்யாவின் வரலாறோ அதன் உரிமையாளர்களின் கதைகளோ அவர்களின் கல்விப்பணியோ எதுவும் எனக்கு ஒரு பொருட்டாகவில்லை அன்று. அந்த இயற்கை நிரம்பி ததும்பி வழிந்துகொண்டிருக்கும் இடத்தை நமக்களித்த அந்த குடும்பத்திற்கு  என் நன்றிகளைத்தெரிவித்துக்கொண்டேன் மானசீகமாய்

அடுத்த 3 நாட்களும் இதற்கு முற்றிலும் வேறானதோர் மனநிலையில் இருந்தேன் ஆனந்த உற்சவத்தில்

பூஜ்யஸ்ரீ ஸ்வரூபானந்தாக்களும் அனுகூலானந்தாக்களும் எங்களுக்கு அனுக்கிரஹமளித்து உய்வித்தார்கள். நல்ல உயர்தரமான துணியில் தயாரிக்கப்பட்ட உன்னதமான, எளிமைக்கும் துறவிற்கும் அடையாளமாகிய காவியை அணிந்திருந்தார்கள்.

முதன்மை ஸ்வரூபானந்தா நிகழ்சியை துவங்க வருகை தரும் முன்பு ஏகத்திற்கும்  பெற்றோர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அலைபேசியை முற்றிலும் அணைத்துவிடவேண்டும், சிறுகுழந்தைகளுடன் வந்திருப்பவரகள் அவை தொல்லை தராமல் சப்தமிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இப்படி பலபல கட்டளைகள்.

அந்த ஸ்வரூபானந்தா மேடையில் இயந்திரமாய் சில வார்த்தைகளைப்பேசிவிட்டு பின் கீழே  கூடைப்பந்து மைதானத்தை அரங்காக மாற்றியிருந்ததால் அங்கு வந்து அமர்ந்தார் அவரின் பாதம் தரையில் படுமுன்பெ அவரின் பாதத்திற்கும் மண்தரைக்குமிடையே ஒரு குட்டிப்பட்டுத்தலையணை வைக்கப்பட்டது

40 வயதைக்கடந்த பெற்றொர்களின் 2800 பேர் இருந்த அந்த பெரும் கூட்டத்திற்குஅவர் அம்புலிமாமா கதைகள் சொன்னார் ஆன்மீகசொற்பொழிவென்ற பெயரில்

மிகுந்த நாடகத்தன்மையுடன் கைகளை அசைத்தபடியும் ஒரு வசதியான ஆசனமொன்றில் அம்ர்ந்துகொண்டே எந்த உணர்ச்சியும் இல்லாதும் அவர் அதைசொல்லிக்கொண்டிருந்தார்.  பூரணகும்ப மரியாதையுடன் அவர் ஒரு அவதார புருஷராகவே நடத்தப்பட்டார். அவரின் அகமொழியாகிவிட்ட அழகான ஆங்கிலத்தில் பேசினார் ஆனால் ஜெயமோஹனின் எழுத்துக்கள் வழி நாமடையும் பரவசமும் உணர்வெழுச்சியும் ஒரு கணமும் அங்கிருந்த யாருக்கும் ஏற்படவேயில்லை.

சொற்பொழிவு (!!!!!) முடிந்தபின்னர் அவரின் காலடியில் மடமடவெனெ விழுந்த யாரயும் அவர் கவனிக்கவும் இல்லை. இயந்திரம் போல கைகள் அருளாசி வழங்கிக்கொண்டிருந்தது.

காருண்யாவில் இறையையும், சுதந்திரத்தயும் ஆனந்தாவில் அவதாரபுருஷர்களையும் ஆசாமிகளையும் விதிகளையும் ஒருசேரப்பார்த்தது நல்ல வித்தியாசமானதோர் அனுபவமாயிருந்தது

 

வர்தா!

  சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறையில் வர்தாவால் விழுந்த மரங்கள் பற்றி பதிவு செய்திருந்தார்கள்..
Nativity species என சொல்லப் படுகின்ற நம் நாட்டு மரங்கள் பெரும்பாலும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாகவில்லை. வேளச்சேரியில் அதிகபட்சம் நம் மரங்கள் தான், அதிகம் பாதிப்படையாத இடம் வர்தாவால்.weak tree என சொல்லப்படும் மாமரம் கூட புயலை தாக்குப்பிடித்திருக்கிறது. அழகிற்காகவும், கண்கவர் மலருக்காகவும், வேகமாக வளர்வதற்காகவும்வளர்க்கப்பட்ட வெளிநாட்டை சார்ந்த மரங்களே காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்துள்ளன!!
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வெளிநாட்டை சார்ந்த மரங்களில் நம் பறவைகளும், அணில்களும், ஏனைய உயிர்களும் கூடு கட்டி வாழாமல், நம் நாட்டு மரங்களில் தான் கூடு வைத்து வாழ்கின்றன..
நம்மாழ்வார் கூறியது போல நிச்சயம் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு முருங்கை மரம், ஒரு பப்பாளி மரம், ஓரு கருவேப்பிலை மரம், ஓரு வாழை மரம், இடமிருந்தால் ஒரு வேப்ப மரம் வைக்கலாம். இவை அனைத்தும் நம் உணவு தேவை, சுற்றுச்சூழல், உணவு சங்கிலி, கலாசாரம், மருத்துவம் சார்ந்து பின் விளைவாக கெடுதல்களை தராதது.
இந்த வர்தா சொல்லி சென்றிருப்பது, நம் தேவைக்கான மரங்கள் எதுவோ, அதை தேடி வளர்த்து பயன் பெறுவதுதான். நம் நாட்டின் மரவகைகள் 4500க்கும் மேல்..
கடந்தாண்டு december நல்ல மனங்களையும், மனிதர்களையும் அடையாளம் காட்டியது போல், அந்த december நமக்கான நல்ல மரங்களை அடையாளம் காட்டி சென்றிருக்கிறது..
ஏனென்றால் மரம், ஒரு செல் உயிரி மட்டுமல்ல, ஒரு சொல் உலகம்!!!

எக்கரையிலும் இல்லா பச்சை!!!!!

 

உங்களுக்கு கிடைத்திருக்கிறதா

களைத்துத் திரும்பும் மாலையில் தோட்டத்து வாயிலில் காத்திருக்கும்

ஏதோ பெயர்தெரியாப்பறவை உங்களுக்கெனெ விட்டுவிட்டுப்போன  பூஞ்சிறகொன்று?

உங்களுக்கு வாய்த்திருக்கிறதா

விசிறி வாழைகளின் கொழுத்த இலை மட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் பாம்பொன்று நீட்டும் பிளவுபட்ட கருநீல நாக்கை காணும் பரவசம்?

உங்களைக்கண்டதும்  காலடியில் நுழைந்து  ஒடியிருக்கிறதா

மரவள்ளிகிழங்குகளை தோண்டித் தின்றுகொண்டிருக்கும்  சாம்பல் வண்ண  முயல்கள்?

நீங்கள் ரசித்திருக்கிறீர்களா

மழை ஓய்ந்த மறுநாள் காலையிலான கழுவித்துடைத்தாற்போன்ற துல்லிய நீல வானை?

பசும் இலைகளின் இடையே  பூத்திருக்கும் செம்பருத்தி மலர்களின் குருதிச்சிவப்பை?

குஞ்சுகளுடன்  தோட்டத்து ஈரமண்ணில் புழுக்களைத் கொத்தித்திண்னும் பெண்மயில்களை?

சின்னஞ்சிரு கைகளில் உதிர்ந்த முருங்கைப்பூக்களை ஏந்தியபடி கொறித்துததின்னும் அணில்களை?

தனித்திருக்கும் முற்பகலில் கேட்டுக்கொண்டேயிருக்கும் ஏதேதோ பறவைகளின் உற்சாகக்கூக்குரல்களை?

கவனித்திருக்கிறீர்களா  தன்னந்தனிமையில்  உங்கள் காலடியில் காலம் நழுவிச்செல்வதை?

பாலெனெப்பொழியும் நிலவில் பனியில் நனைந்தபடி கடந்திருக்கிறீர்களா உறங்காத இரவுகளை?

எனினும் உங்களுக்கு இருக்குமாயிருக்கும்

இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்  பின்னிருந்து இறுக்கிக்கொள்ள கணவனோ நண்பனோ!!

ஞாயிற்றுக்கிழமைகளின் பின் மதியத்தில் கட்டிக்கொண்டு உறங்க  ஒன்றிரண்டு குழந்தைகள்

திங்கள்கிழமைகளின் சிடுசிடுப்பை காட்டிக்கொள்ள கணவனோ மனைவியோ!!!

தீர்ப்பு சொல்லி சமரசம் செய்து வைக்க குழந்தைகளின் சண்டைகளும்

துவைத்து  உலர்த்தி மடித்து வைக்க நிறைய துணிகளும், கண்ணீருக்கெனெ காரணங்களும்,

உங்கள் வருகைக்காய் காத்திருந்து தேனீர் தயாரிக்கும் யாரோவும்

அவரவர்க்கு அவரவர் வாழ்வு

விருப்பங்களும் விழைவுகளும்  நேர்மாறான  நிஜங்களுமாய் !!!

இனிது இனிதா ஏகாந்தம்? அல்லாமல்

இக்கரையின் இச்சைகளின் வழிதெரியும் அக்கரைப்பச்சையா எல்லாம்? லோகமாதேவி

‘’ எல்லா இடமும் ஆண்களுக்கல்ல’’

 

திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்றைய இந்து நாளிதழில் ‘’ எல்லா இடமும் ஆண்களுக்கல்ல’’ என்னும் பதிவினை இட்டிருந்தார். இப்படி’’ பெண் இன்று ‘’ என்னும் பெயரில்  ஒரு துணை இதழ், இந்து நாளிதழுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதையே நான் அறிந்திருக்கவில்லை வேலை நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளிலேயே அதிக பணிச்சுமையுடன் இருப்பதால், நகுலன் சொன்னது போல ’’நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை’’ அல்லவா?

1 மாத விடுமுறையின் ஒரு ஞாயிறென்பதால் இன்று இதை முழுதும் வாசிக்க சமயம் கிடத்தது எனக்கு.

இப் பதிவு எனக்கு மிக பிடித்திருந்தது மட்டுமல்ல ஒரு ஆணாய் இதை தமிழ்ச்செல்வன் சொல்லி இருந்ததில் பெரும் நிம்மதியும் இருந்தது. ஆம் சமையலறைகள் மிகச்சிறியதாய் எப்போதும் இருப்பது  நிச்சயம் தற்செயலல்லவே அல்லதான். எங்களுக்கானதென்று யுகம் யுகமாய் ஒதுக்கப்பட்ட இடம் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்காற்றும் உணவினை நாங்கள் வியர்த்து வழிந்து உருவாக்குமிடம் ஏன் எப்பொழுதும் மிகச்சிறியதாகவே இருக்கவேண்டும்?

Man spreading    குறித்த அவரின் கருத்துக்கள் அனைத்தும் உண்மைதான். சக்தி சக்தி எனச் சொல்லப்பட்டுக்கொண்டே நாங்கள் ஆண்களின் காலடியில் மிச்சமின்றி  தேய்த்து நசுக்கபட்டுக்கொண்டே இருக்கிறோம் என்றென்றைக்குமாய். எங்களுக்கான இடம் எங்கும் இல்லைதான்

8 ஆம் வகுப்பிலிருந்து சமையல் செய்துகொண்டிருக்கும் நான் 10 பேருக்கானாலும் சரி 4 பேருக்கானாலும் சரி மிக விரிவான சுவையான சமையலை 1மணிநேரத்திற்கும் குறைவான சமயத்தில் சமைத்து விட்டு சமையலறையில் இருந்து வெளியெ வந்துவிடுவதை வழமையாகக்கொண்டிருக்கிறேன். எனக்கான தளங்கள் சமையலறைக்கு வெளியிலும் இருக்கிறதல்லவா? பொதுவாகவே எனக்கு விசாலமான வசதியான காற்றோட்டமுள்ள சமையலறைகள் மீது பெரும் காதலுண்டு  நான் பல விடுமுறை நாட்களில் தென்னைமரத்தினடியில் விறகடுப்பில் மகிழ்வுடன் சமைப்பதும் கூட  சின்ன சமையலறையிலிருந்து, வெளியேறி பரந்த வானின் கீழிருந்து  சமைக்கும் சந்தோஷத்தின் பொருட்டுத்தானென்று இன்று இந்த பதிவினை வாசித்தபின்னர் தோன்றுகிறது

பலபெண்களின் சார்பாக இந்த பதிவிற்கு அவருக்கென் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

இதை அதிகம் இன்று நான் பகிர்ந்தும் கொண்டிருக்கிறேன்

இன்னும் இதுபோன்ற பலவற்றை பேசித்தான் ஆகவேணும் அல்லவா?

சந்துகளின் சரித்திரம்

தஞ்சாவூர் கவிராயர் அவர்கள் இன்றைய தமிழ் இந்துவில் சந்துகளின் சரித்திரம் பற்றி சுவையாக பதிவிட்டிருந்தார் அதை வாசித்ததும் எனக்கு இவையெல்லாம்  மீள நினைவிற்கு வந்தது. சந்துகளையெல்லாம் எங்கே நினைவிருக்கும் மனிதர்களுக்கு? எனக்கும் பல சந்துகளின் நினைவு வந்தது இதை வாசித்ததும்

சிறு பெண்ணாய் பள்ளிக்கு சென்று திரும்புகையில் என் சகோதரியிடம் என்புத்தகப்பையை கொடுத்துவிட்டு அந்த குக்கிராமத்தின் பல சந்துகளில் என் பல்லுயிரி ஆய்வினை மேற்கொண்டு என்னைத்தேடி வருமென் தாத்தா பாட்டியிடன் அடிவாங்கியதை முதலில் நினைத்துக்கொண்டேன். அந்த ஆய்வுகளின் போது சந்துகளில் கிடக்கும் பெரிய பெரிய கற்களையெல்லாம் புரட்டி அதனடியில் இருக்கும் ஜந்துக்களை ஆராய்வது என் பொழுதுபோக்கு, அப்படி ஒன்றினை அரும்பாடுபட்டு புரட்டி அதனடியில்  கோலி விளையாடி யாரோ சேர்த்து வைத்திருந்த குவியல்  குவியலாக பெருந்தோகையாக இருந்த காசுகளையெல்லாம் மகிழ்வுடன் அள்ளிக்கொண்டு வந்ததும் நினைவிற்கு வந்தது.

பதின்பருவத்தில் உடன் படிக்கும் துணிச்சல் தோழிகள் சந்துகளில் காதலனைச்சந்திப்பார்கள், காதலனே இன்றியும அந்த சந்துகள்  மற்ற எங்களுக்கு பெரும் கிளர்ச்சியளிக்கும் இடங்களாகவும் இருந்தன அப்போது

ஒரு மாலை நேரத்தில்  பொள்ளாச்சியில் அப்போதிருந்த சப்ஜெயிலொன்றிலிருந்து தப்பித்த ஒரு குற்றவாளி நாங்கள் பள்ளியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் சந்து சந்தாக ஒடித்தப்பிக்க முன்றான் காவலர்கள் அவன் பின்னடியே துரத்தியதும் முதல் முதலாக துப்பாக்கி சத்தத்தைக்கேட்டதும் அப்பொழுதுதான்

கணிதம் சரியாகப்புரியாததால் ஒரு சந்தினுள் இருக்கும் டுடோரியல் கல்லூரிக்கு கூட்டமாய் சென்று  வந்து  பத்தாம் வகுப்பில் எப்படியோ தேர்ச்சி பெற்றது, படித்துமுடித்து வேலையில் சேர்ந்ததும்  கோவையில் பூரா மார்க்கெட்டில் சந்து சந்தாய் திரிந்து அச்சிலி பிச்சிலி சாமான்களெல்லாம் மகிழ்வுடன் சம்பளப்பணத்தில் வாங்கியது என்று பலவற்றை இன்று என் மகன்களுடன் இந்தப் பதிவினைப்பார்த்த பின்னர் பகிர்ந்துகொண்டேன்

இதுவா ரகசியம்?

 

சில வாரங்களுக்கு முன்னர் பிரபல புலனாய்வுப்பத்திரிக்கை ஒன்றில்   சில கோடிகள் செலவில் பள்ளிப்பெண்களுக்கான சானிடரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் குறித்த ஒரு பதிவு வந்திருந்தது. அதற்கான புகைப்படத்தில் சில பெண்கள் சீருடையில் அந்த இயந்திரத்தினின்றும் நாப்கின்களை எடுக்கிறார்கள். அவர்கள் முகத்தை முழுவதுமாக மறைத்து வெளியிட்டு இருக்கிறார்கள். ஏன்?
பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் கூட முன்வந்து சமுதாயத்தில் முகம் காட்டி நீதி பெறும் இந்த நாளில், பாலியல் தொழிலிருந்து மீண்டு வந்த ஒரு பெண் தன் கடந்து வந்த பாதையை புத்தகமாக வெளியிட்டிருக்கும் காலத்தில், நாப்கின் எடுத்து உபயோகிப்பது இன்னும் மறைக்கப்பட வேண்டிய விஷயமா? வெகு ஜன ஊடகங்களே இதிலிருந்து இன்னும் வெளி வரவில்லையெனில் எப்படி மற்றவர்களிடம் இதற்கான் புரிதலை எதிர்பர்க்க முடியும்?  மாதவிடாயென்பது, தவிர்க்க முடியாத, பெண்கள் எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்றென   ஆண்களின் உலகம் அறிந்து கொள்வதெப்போது?

சானிடரி நாப்கின் விற்கும் பன்னாட்டு கம்பெனியே பெயரை whisper என்று தானே சொல்லிகொள்கிறது/? இது ரகசியமாய் இருக்க வேண்டியது ஆனால் பூப்பு நன்னீராட்டு விழாவிற்கு தெருவடைத்து   பந்தலிட்டு அழைப்பிதழ் கொடுத்து, ஊரெங்குமாய் போஸ்டர் அடித்து, முரசறிவிக்காத குறையாக  அந்த இளம் பெண்  உடல் ரீதியாக கருத்தரிப்புக்கு தயாராகிவிட்டதை அனைவருக்கும் அறிவித்துக் கொண்டாடி மகிழலாம் இல்லையா? என்ன முரண் இது?

மருத்துவ இயலின் படி  ஒவ்வொரு மாதமும், கருத்தரிப்பிற்காக, கருப்பையின் உள் மடிப்புகளில் (endometrium), ஒருவேளை அந்த முதிர்ந்த முட்டை கருவாகுமேயானால், அதற்கு போதிய ஊட்டச்சத்தை வழங்குவதற்காக போதிய இரத்தம் கருப்பையின் உட்புற மடிப்புக்களில் தேங்கி இருக்கும்

விளம்பரங்களில் வருவது போல ஒரு சில சொட்டுக்களல்ல இந்த மாதவிடாய் குருதிப்போக்கென்பது. பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம் மடிப்புகளில் உள்ள  இழையங்களும்,  நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் சேர்ந்து  வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. உடன் சிலருக்கு கடும் வலியும் தசைப்பிடிப்பும் கால் குடைச்சலும்  கூட இருக்கும். இந்நிகழ்வு மாதந் தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது.

 

பெரும்பாலான பெண்கள் மாதவிடாயின்போது 50 மி.லி. வரை உதிரம் இழக்கிறார்கள். ஒரு பெண் தன்  வாழ்நாளில் சுமார் 3,500 நாட்கள் மாதவிடாயில்  இருக்கிறாள்
இந்த நாட்களில் தங்கள் உள்ளாடைகள் கறைபடாதிருக்கவே அணையாடை அல்லது அடைப்பான்  எனப்படும் நாப்கின்களை உபயோகிக்கின்றனர். உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளைப்போலவேதான் மாதவிலக்கு உதிரமும்  தூய்மையற்றது.  கசியும் தன்மை கொண்ட அதனை கட்டுப்படுத்தவும் முடியாது

 

சூடாயியம், இந்து  இசுலாமிய மற்றும் பல்வேறு மதங்கள் மாதாந்திர சுழற்சியில் இருக்கும்  பெண்களை பல நிகழ்வுகளிலும் தடை செய்து அவர்கள் அப்போது தனித்து இருக்க வேண்டுமெனவே வலியுறுத்துகிறது

மாதவிலக்கு நாட்களில் இவ்வாறு விலக்கபப்டுவதும், இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு தனிமை எல்லாம் சேர, பெண்களும் இந்த நாட்களை பெரும்பாலும் வெறுக்கிறார்கள்.

இவற்றுடனேதான் பெண்கள் இந்த ஆண்களின் உலகில் எல்லா துறையிலுமே முன்னடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். உயிரியல் ரீதியாக பலவீனமானவர்கள் என்று சொல்லப்படும் பெண்கள்தான் ஆண்களுக்கான உணவு, உடை அவர்களுக்கான பாதுகப்பான சுத்தமாக பரமரிக்கப்பட்டிருக்கும் வீடு ஆகியவற்றை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். மாத விலக்கு நாட்களில் பெண்களுக்கு தேவையானது கருணையோ இரக்கமோ அல்ல அப்படி ஒன்று இருக்கிறது எனும் புரிதல் மட்டுமே

பெண்களை பெரும்பாலும்  வெறும் உடலாக மட்டுமே அறிந்துகொண்டிருக்கும் இந்த ஆண்களுக்கானது என்று சொல்லப்படும் உலகில் இந்த உடல்ரீதியான ஒரு நிகழ்வு குறித்த புரிதல் இல்லாமலிருப்பது அநீதி. மளிகைக்கடையிலும் மருந்துக்கடையிலும் இந்த நாப்கின்களை பெண்களே வெட்கப்பட்டுக்கொண்டு கேட்பதும் கடைக்காரர் ஒரு நாளிதழில்  அதை  மறைவாக சுற்றிஎடுத்துக்கொண்டு வருவதும்  தேவையே இல்லை.

1960 இல் இருந்து  பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றும் மருந்துகளைக் கொண்டு மாதவிடாய் நேருவதையும் கருத்தரிப்பதையும் கூட தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத்துவங்கி இருக்கிறார்கள்.

உரக்க சொல்லப்படவேண்டியதுமில்லை, ரகசியமும் இல்லை, இந்த மாதவிடாய் எனும் உடலியல் நிகழ்வை.  ஒரு மருந்துக்கடையில் feminine hygienic  பொருளொன்றை நான் கேட்கையில் அங்கிருக்கும் பெண்கள் நமுட்டுச்சிரிப்புடன் அதை எடுத்துக்கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது, பெண்கள் முதலில் நமக்கு நிகழ்வதென்ன என்னும் புரிதலுடன் இருக்க   வேண்டும்

எல்லா நாளையும் போலவே குருதிக்கசிவு இருக்கும் இந்த நாட்களில் விளம்பரங்களில் காட்டுவது போல  விமானம் ஓட்டும் , குதிரை சவாரி செய்யும், நீளம்தாண்டும் பெண்கள் மட்டுமன்றி பேருந்தின் நெரிசலில் சிக்கி பயணிக்கும் பெண்களையும் ஓய்வின்றி குடும்பதிற்காக உழைக்கும் பெண்களையும், இது போல அவர்கள்  இயங்கும் பல தளங்களையும் ஆண்கள் கட்டாயம் எண்ணிப்பார்க்கவேண்டும். இந்த சில  நாட்கள் விலக்கி வைக்கப்படவேண்டியது அல்லவே அல்ல என்பதை இதுபோன்றதோர் சுழற்சியின் முட்டையிலிருந்து உருவான ஆண்களாலும் பெண்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்

உலகம் தொடர்ந்து இயங்க காரணமாயிருக்கும் மாதாந்திர முட்டை உற்பத்தி பெண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயமும் ஆண்கள் அருவருப்பு படவேண்டிய விஷயமும் ரசியமாய் வைத்துக்கொள்ள்ப்பட வேண்டிய விஷயமும் அல்ல இது சரியான புரிதலுடன் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. அதற்காக சுகாதாரமான நாப்கின்கள் பயன்படுத்துவோரின் முகங்கள் நிச்சயம் மறைக்க படவேண்டியதல்லவே அல்ல

இத்தனைக்கும் பிறகும்!

 

வீசி எறிந்துகொண்டிருக்கிறாய்

என்மீதான உன் வெறுப்பை அங்கிருந்தபடி,

முகத்திலறைந்தபடி விழுபவற்றையும்

மடிநழுவி சிந்தியவற்றையும் இருகைகளையும் விரித்து

அள்ளிப்பற்றி சேகரித்துக்கொள்கிறேன்

இன்னும் இன்னுமென நீ வாரி இறைப்பாயெனினும்

அள்ளிகொள்கிறேன் அவற்றையும்

முன்பு நீயளித்த முத்தங்களை ஏந்திக்கொண்டது போலவே

முழு மனதோடு,

 

முகாந்திரமற்றதும் யூகிக்கமுடியாததாகவும்  அதற்கான காரணமிருக்கலாம்

எனினும் எனக்கு புகாரேதுமில்லை

முன்னறிவிப்புகளேதுமின்றி  தேவன் தொட்டளித்ததோர் கணமொன்றில்

நீ எனக்கு கையளித்த துய காதலைப்போலவே

இதனையும்  மகிழ்வுடனே ஏற்றுக்கொள்கிறேன்

அள்ளி அள்ளி பூசிக்கொண்டதில் பரிசுத்தமாகியதென்னை உனது காதல்

இதோ இன்றென்னை முழுக்க நனைக்கும்

இவ்வெறுப்பினாலும் ஆசிர்வதிக்கவே பட்டிருக்கிறேன்

ஏனெனில்

வேறுயாறுமல்லவே, நீயல்லவா என்னை வெறுப்பது ?

 

எதற்கும் இன்னொரு முறை   கனவுகளிலும் நினைவுகளிலும்

எனது புன்னகைக்கசடுகள் ஏதேனும்

மிச்சமிருக்கிறதா என தேடிப்பார்த்து சுத்தமாக துடைந்தெறிந்து விடு

வெறுக்கமுடியும் அப்போதுதான் என்னை முழுமையாய்,

குவித்த ககைகளை வானோக்கி உயர்த்தி நன்றி சொல்கிறேன்

உன் வெறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் இதயத்தை எனக்கு படைத்தவனுக்கு,

 

எப்போழுதவது என்னைக்கொல்லும் இச்சை வந்தால் சொல்லியனுப்பு

உன் கையிலிருக்கும்  நச்சுதோய்ந்த கூர்நுனியில் கிழிபடவென

கழுத்தின் நீலநரம்பினை துல்லியமாய் தெரியும்படி

துடைத்துச்சுத்தமாக்கிக்கொண்டு வருகிறேன்

அப்போழுதும் எந்தப் புகாருமின்றி

 

இன்னுமிருக்கிறதோர் வேண்டுகோள்

இ்றுதிக்கணத்திலும் என் கண்களில் ததும்பும்  உனக்கானகாதலை

காண்பாயெனில்  தடுமாறலாம் நீ,

எனவே எனதன்பே,

முகத்தைத் திருப்பிக்கொள்   என் கழுத்தைக்கிழிக்கையில்!

கடைசிக்கணம்

காலடியில் விரைந்து நழுவிக்கொண்டிருக்கிறது   கணங்கள்

நீளும் இரவுகளின் மெளனம் உடைக்கின்றது கேவலின் மொழி

கண்ணீரின் உப்புச்சுவையை நாவைச்சுழற்றி

சுவைத்துக்கொண்டிருக்கிறது போர்த்தியிருக்கும் இருள்

படுக்கையறையெங்கும் இருக்கிறது

குருதியில் பதறியபடி  நடந்து நடந்து

நனைந்த என் காலடித்தடங்கள்

அவற்றிற்கிடையிலும் நீ வந்தால் காணலாம்

கடைசிக்கணத்தில் கைகளினின்றும் நழுவி விழுந்த

உனக்கென சேர்த்துவைத்திருந்த உலர்ந்த மகிழம்பூக்களை

பாசிபிடித்த கிணற்றுச்சுவர்களிலிருந்து

அசைவில்லா ஆழ்நீரை நோக்கி இறங்கிச்செல்லும்

படிக்கட்டுகளில் அமர்ந்து இறுதியாக   என்னிடம்

சொன்னவற்றை நினைத்துக்கொண் டே

இழந்துகொண்டிருக்கிறேன்  துளித்துளியாய்

என்னிடமிருந்து  என்னையே  என்றென்றைக்குமாய்

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑