சிவாலங்களில் விநாயகரை வணங்கிய பின் நந்தி பகவானை வணங்கிய பின்னரே ஈசனை வணங்கச் செல்வது வழக்கம். அதோடு நந்தியிடம் சிவ பெருமானை வணங்க அனுமதி கேட்டுவிட்டு, அவரிடம் வைக்கப்போகின்ற குறைகளையும் முதலில் சொல்ல வேண்டும். அவரின் அனுமதியை மானசீகமாக  வாங்கிய பின்னரே சிவனை வணங்க செல்ல வேண்டும்

 உடல் வலிமையும், ஞானமும், செல்வச் செழிப்பும் மேன்மையும் பெற்றவர்கள் நந்திகள் என்று  அழைக்கப்படுகின்றனர். அவர்களது கூட்டமே நந்தி கணம் என்று அழைக்கப்படுகிறது. உலகின் அனைத்து ஆற்றலுக்கும்,  ஞானத்திற்கும் முழுமுதற்  பொருளாக இருப்பதால், சிவபெருமான் நந்தி எனப்படுகிறார்.  அவரது பேரருளைப் பெற்றவர்களும், அவரைச்சார்ந்திருப்பவர்களும் நந்தி என்றே அழைக்கப்படுகின்றனர்.

அனைத்து சிவாலயங்களிலும் கருவறை இறைவனை நோக்கியபடி அமந்திருக்கும் நந்தி,  கணத்தினரில் முதன்மை பெற்றவராக இருப்பதுடன், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும் இருப்பவர். சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின்  வாகனமாகவும் கருதப்படுபவரும்  திருநந்தித் தேவரே ஆவார்

.  இவர் சித்தராகவும், சிவனுக்கு ஏற்ற வாகனமாகவும் கருதப்படுகிறார்.  நந்தி உருவம் பதித்த கொடி சைவ சமயத்தவரின் கொடியாகக் கருதப்படுகிறது.

 சிவன் கற்பித்த  அகமிக்  மற்றும் தான்ரீக  ஞானத்தின் தெய்வீக அறிவை பார்வதியிடமிருந்து நந்தி பெற்றார். நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடிகளாக அடையாளம் காணப்பட்ட சனக, சனாதன, சனந்தன, சனத்குமார,  திருமூலர், வியாக்ரபாகர், பதஞ்சலி , மற்றும் சிவயோக முனி ஆகிய   தனது எட்டு சீடர்களுக்கு அந்த தெய்வீக அறிவை அவர் கற்பித்தார். நந்தி என்பதற்கு வளர்வது என்பது பொருள் ஞானத்தாலும்,  செல்வச்செழிப்பாலும், வலிமையாலும், வளர்ந்து கொண்டே இருப்பதையே நந்தி எனும் சொல் குறிக்கின்றது.

சிவாயநம எனும் ஐந்தெழுத்தின் உருவத்தைக் கொண்டவரும், ஒப்பில்லாத நான்கு வேதங்களையும் நான்கு பாதங்களாகக் கொண்டவருமாவார் நந்திதேவர் என்கின்றன புராணங்கள்.

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில்  அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுகிறார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷப வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த தர்ம வடிவான நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.  இறைவனைத் தாங்கும் தர்மத்தின்  மூச்சுக்காற்றுதான் அவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்கள் நந்திக்கு உள்ளன.

 நந்தி வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகளான பாரம்பரியமாக இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சிவன் மற்றும் நந்தியின் வழிபாடுசிந்து பள்ளத்தாக்கு நாகரீக காலத்தில் இருந்திருக்கிறது. மேலும் மொகங்சதாரோ மற்றும்  ஹரப்பாவிலும் பல காளை முத்திரைகள் கண்டறியப்பட்டிருகின்றன..

 புராணங்களில் நந்தி, சிலாத  முனிவரின் மகன் என்று கருதப்படுகிறார். வீதஹவ்யர்  என்னும் முனிவர்,அறியாச்சிறு வயதில் சிவனடியாரின் அன்னப் பாத்திரத்தில் கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கி “சிலாத முனிவர்’ என்ற பெயர் பெற்றார். இவரது மனைவி சித்திரவதி.

 ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர், யாகம் புரிய அகழ்ந்தெடுத்த மண்ணிலிருந்து கிடைத்த மகவே செப்பேசன். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய செப்பேசன் ஈசனையே அகத்தில் நினைத்திருந்தார். இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்த செப்பேசுவரரின்   திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செப்பேசுவரரின் தவவலிமையையும் உறுதியையும் கண்டு மகிழ்ந்த இறைவன்,  அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிலைத்த பதினாறு பேறுகளையும் வரமாக அருளி,  செப்பேசனுக்கு நந்தீசன் என தீட்ச நாமம் சுட்டி தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு, தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும்  அளித்தார்.

அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமான ரிஷபமாகவும் ஆனார் செப்பேசர்.  சிவபெருமானே நேரடியாக சிவாகமங்களை நந்தி தேவருக்கு போதித்து அருள் செய்தார். இறுதியாக நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்திய இறைவன், நந்தீஸ்வரருக்கு வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை திருமணமும் செய்துவைத்தார். சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது. கயிலாயத்தில் சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். அதனால்தான் நாம் செய்துகொண்டிருக்கும் வேலையில் யாராவது தடையிட்டால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்கிறோம்.  

நந்திகேஸ்வரர்

நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்கிறார் சிவன் திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.


          சிவன் கோயில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்  ஐந்து நந்திகள்.

கைலாய நந்தி:

 அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே இருப்பவர். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாய நந்தி என்ற பெயர்.

அவதார நந்தி:

அவதார நந்தி சிவாலயங்களில் கைலாய நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமாலே நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.

அதிகார நந்தி:

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம்  உள்ளதால் இவருக்கு அதிகார நந்தி என்ற பெயர் வந்தது. இவர் உட்கோபுர வாயிலில் வடக்கு நோக்கி இருப்பார்

சாதாரண நந்தி;

சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருக்கும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.

மஹா (பெரிய) நந்தி:

பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் விஸ்வரூபத்தில் எந்நேரத்திலும்  காவலனாக இந்த நந்தி இருப்பார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.

லேபாக்‌ஷி

கொடிமரத்தருகில் இருப்பது ஆத்மநந்தி, கருவறை பின்புறம் இருப்பது விருஷப நந்தி ,  கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி  காட்சி தருவது பிரகார நந்தி இவையல்லாது இன்னும் பலவகை நந்திகள் சிவாலயங்களில் காணப்படுகின்றன.

சிவபெருமான் ஆலயங்கள்  என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும். பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன. இந்தியாவில், குறிப்பாக, தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு.        

ஐந்து  மிகப்பெரிய நந்திகள்:


1. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.


2. வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி

ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியும் இதுவே. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.


3. சாமுண்டி மலை, மைசூர்

மைசூரில் உள்ள சாமுண்டி மலையில்  1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.


4.  பசவனகுடி பெங்களூர்

பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயில் இருக்கும் இச்சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.

5. ஹோய்சாலேஸ்வரர் கோவில் ஹலேபீடு

 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. ஹோய்சாலேஸ்வரர் கோவிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.

 
நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து  வழிபடலாம். இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

இரட்டை நந்தி

   கோயில்களில் நந்தியை தரிசிக்காமல்  சிவபெருமானை தரிசிக்க முடியாது. ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும்.   

 ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பதால்தான்  கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு  குணங்களை வெளிப்படுத்தும் கால்களில், முன்பக்கத்து வலது கால் சற்றே உயர்ந்திருக்கும். அது  ஞானமார்க்கத்தை குறிக்கும். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கிக் கொண்டு நாலம் பாதமாகிய ஞானப்பாதத்தினால்  பரம்பொருளைக் கண்டு கொண்டிருக்கிறது என்கிறது ஆகம நூல்கள்.

  சில ஆலயங்களில் நந்தி நின்றகோலத்திலும் காட்சியளிக்கிறார். இன்னும் சில கோவில்களில்  கோவில் வாசலை நோக்கியபடி இருக்கும் நந்திகளும், காதற்ற. ஒரு காலற்ற, சற்றே ஈசனைவிட்டு விலகி நிற்கும்,  பக்தர்கள் தன் செவியில் குறைகளை சொல்ல ஏதுவாக தலையை சாய்த்தபடி, வாயிலிருந்து நீரூற்று வந்துகொண்டிருக்கும் நந்தி, இரட்டை நந்தி, ஒருபாதி மனித உருவிலும் பின்பாதி காளைவடிவிலும் இருக்கும் நந்தி, என பல்வேறு வடிவங்களிலும், அமைப்புக்களிலும், நிலைகளிலும் நதியை காணமுடியும்.

நின்ற நிலையில் நந்தி


    நந்தி இல்லாத சிவ ஆலயம் திருப்பெருந்துறையில் (ஆவுடையார் கோயில்) உள்ளது. இங்கு சிவனும் சக்தியும் கூட உருவமின்றி விளங்குகின்றனர். இத்தலம் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்டது. நாகப்பட்டினம் திருநாங்கூரில் இறைவன் திருமணத்திற்கு சீர் கொண்டு வரும்பொருட்டு திரும்பி நிற்கும் நிலையில் சுவேத நந்தியும் இறைவனை பார்த்தபடி இருக்கும் மதங்க நந்தியையும் ஒருசேரக் காணலாம்.

மதங்கீஸ்வரர் ஆலய நந்திகள்

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி. சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இத்தலத்திருக்கும் சுயம்பு  லிங்கத் திருமேனியில் பசுவின் குளம்படிகளை இன்றைக்கும் காணலாம். இந்த லிங்க மூர்த்தத்தின் அடிப்பகுதியில் சுரக்கும் தீர்த்தமே இத்தலத்தின் குளங்களில் நிரம்புவதாக நம்பிக்கை!

காநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில், விநாயக நந்தி, கருட நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்திகளுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது தலங்களும் ‘நந்தி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்திகளுக்கு நாயகனாக, மகாநந்தியில் உள்ள சிவன் மகாநந்தீஸ்வரர் திகழ்கிறார்.  

வழிபடும் முறை;  சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்  பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின்னரே சிவபெருமானை வழிபட வேண்டும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று,  இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும்.  

நந்தி தேவர் இசை அறிஞராய்ப் போற்றப்படுபவர். அதனால் நாட்டியம் பயில்வோரும், இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி  சிறந்து வளரும். நந்தி தேவனை வழிபடுபவர்க்கு சிறந்த பக்தியும் நற்குணங்களுடைய குழந்தைச் செல்வங்களும்,  சகல காரிய சித்தியும், உயர்ந்த பதவியும், நல்ல எண்ணங்களும் நல்லொழுக் கமும் கிடைக்கும். எல்லா வற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடு பேற்றையும் அவர்கள் அடைவர்.

’நந்திவழிபாடு நற்கதியளிக்கும்’