கும்பளங்கி நைட்ஸ், 2019 பெப்ரவரி 7ல் வெளியான         மலையாளத் திரைப்படம். மது சி. நாராயணன் இயக்கத்தில் சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, பகத் பாசில் நடித்திருக்கின்றார்கள்

 திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன், பகத் பாசில், நஸ்ரியா நசீம் ஆகியோரின்  வர்க்கிங் க்ளாஸ் ஹீரோ என்னும் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸுஷின் ஷாம் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

திரைக்கதை கும்பளாங்கி என்னும் கொச்சியைஅடுத்துள்ள, தேவதை கதைகளில் வருவது போன்ற மிக அழகிய, ஒரு  கடற்காயல்(Back waters) கிராமத்தில் நடக்கிறது. அதிகம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருமிடமென்பதால் கதையிலும் சுற்றுலாப்பயணிகளும் அவர்களின் தங்குமிடங்களும் வருகின்றது

 முழுதாக கட்டி முடிக்காத, செங்கற்களாலான சுவர்களுடன் இருக்கும், எந்த ஒழுங்குமின்றி பல சாமான்கள் அடைந்த ஒரு வீட்டில் வசிக்கும் நான்கு சகோதரர்கள் அதில் ஒருவர் வாய் பேச இயலாதவர் இவர்களின் வாழ்வும் இடையே  எட்டிப்பார்க்கும் சில காதல்களுமே கதை. துவக்கத்தில் யார் யாருக்கு யார் யார் பெற்றோர் என்பதில் குழப்பமிருக்கிறது எனினும் பிற்பாடு மெல்ல மெல்ல ஒரு மலர் அவிழ்வது போல கதை அவிழ்கையில் நமக்கு ஒவ்வொன்றாக புரிகின்றது..

ஃபகத் ஃபாசில் எப்போதும் போல அசத்தியிருக்கிறார். முதல்காட்சியில் கண்ணை உருட்டி விழித்தபடிக்கு தன் அடர்ந்த மீசையை கண்ணாடியில் பார்த்து மீண்டும் மீண்டும் சரி செய்கையிலேயே என்னவோ ஒரு பிழையென்று நமக்கு சந்தேகம் வருகின்றது அப்பிழை என்னவென்று இறுதிக்காட்சியில்,  கயிறுகளால் கட்டி,கட்டிலுக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் ஃபகத்தின் மாமியார் வெளியே இழுக்கப்பட்டு வாயைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் கட்டுக்களை அவிழ்த்த உடனே சொல்கிறார்

மனைவியும்  கொழுந்தியும் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கையில் கதவோரம் நின்று என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கேட்கையில் ஃபகத்தின் உடல்மொழி அசத்தல், கடைசியில் அந்த பைத்தியக்காரத்தனமான சண்டையிலும் அப்படியே. மனைவி கோபித்துக்கொள்ளும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மணிக்கணக்காக சுவர் மூலையில் திரும்பி நின்று கொள்வதுமாக ஃபகத் கலக்கியிருக்கிறார்.  உன்னத உடைகளுடன் மிடுக்காக அவர் பைக்கில் புறபட்டு போகும் அந்த அந்தஸ்தான வேலை என்னவென்று தெரியவருகையிலும் வியப்பும் சிரிப்பும்  வருகின்றது.

ஃபகத்தை விட அதிகம் ஸ்கோர் பண்னுவது என்றால்  அது ஸாஜியாக வரும்  செளபின் தான்.  மேல் சட்டையிறி மீன் சோறும் கள்குடியுமாக  கேரளக்காரருக்கே உரித்தான இயல்பான உடல்மொழி, மனநல மருத்துவரின் சட்டை நனையும் அளவிற்கு கட்டிபிடித்து கதறுவது  திடீரென ஏற்பட்ட உணர்வெழுச்சியில் தூக்கிட்டுக்கொள்வது, இறந்த நண்பனின் மனைவியிடம் பரிவாக இருப்பது என்று அவரின் நடிப்பு மிளிர்கிறது. கேரளத்தின் மற்றொரு இணையில்லா நடிகன் செளபின்.  இறந்த நண்பனின் மனைவியையும் அவருக்கு பிறந்த பச்சிளம் சிசுவையும் மருத்துவமனையில் பார்க்கும் செளபினின் முகத்திலும் கண்களிலும் ஓராயிரம் உணர்வுகளை படிக்கலாம். அற்புதக்கலைஞன் இவர். திலீஷ் போத்தனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்யாம் புஷ்கரன் கும்பளாங்கிக்கு சென்றிருக்கையில் அங்கு நடந்த சில நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு இக்கதையை எழுதியிருக்கிறார். பல இடங்களில் வசனங்களும் அழகு. ’’அவங்கல்லாம் கிருஸ்துவங்களாச்சே’’ எனும் அக்காவிடம் ’’ஜீசஸ் நமக்கு தெரியாதவரா என்ன’’ என்கிறாள் தங்கை

 ரிசார்ட்டில் பணிபுரியும் பெண்ணின் காதலும் அமெரிக்க அழகி நைலா- போனி காதலும் அருமை. எனினும் பேபி- பாபி காதலே படத்தின் மையப்புள்ளி. ஷைஜு காலித்தின் காமிராவுக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டும் என்ன அழகு எத்தனைஅழகு! சைஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பு படத்திற்கு ஒளிப்பதிவிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது.

ஃபாசிலின் மனைவி சிம்மியாக வரும் கிரேஸும் அசத்துகிறார். பைக் ஹார்ன் திடீரென அடிக்கையில் திடுக்கிடுவது, பயந்துகொண்டே கணவனுடன் உள்ளறைக்கு போவது, தங்கையை கணவன் பேச்சில் இழிவு படுத்துகையில் மேசை மேலிருக்கும் கொசுஅடிக்கும் மட்டையை  ஒரே அடியில் அடித்து உடைத்தபடி கணவனை எச்சரிப்பது, திருமண விருந்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தங்கையின் திருமண பேச்சுவார்த்தை  நடக்கையில் அசெளகரியமக அமர்ந்திருப்பது என்று பிரமாதப்படுத்துகிறார். கண்கள்   அதிகம் பேசுகிறது அவருக்கு.

பேபி,பள்ளிப்பருவத்திலிருந்தே தான் காதலிக்கும் பாபியிடம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மீன் பிடிக்க வலை வீசி காண்பிக்க சொல்கையில் பாபி வீசுகிறார் ஒரக்கண்ணால் பேபியை பார்த்தபடிக்கே காதலெனும் மாயவலையையும். அவ்வலையில்  மீட்சியின்றி அகப்பட்டுக்கொண்டவர்களின்  கதையைத்தான் சொல்கிறது கும்ப்ளாங்கி இரவுகள்.

நான்கு பாடல்களில் ’’எழுதாக்கதை போல் இது ஜீவிதம்’’  மிக அருமையான மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். அக்குரலும் இசையும் உள்ளத்தை உருக்குகிறது. எழுதாக்கதையை கேட்கையில் இசையமைத்து பாடிய ஸுஷின் ஷாமின் கரஙகளை இறுக பற்றிக்கொள்ள  வேண்டும் போலிருக்கிறது.

காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறது அல்லது கண்களை ஈரமாக்குகிறது. இறைப்பணியில் இணைந்து விட்ட தாயை கல்யாணத்தின் பொருட்டு கொஞ்ச நாள் வந்து உடன் இருக்கசொல்கையில், தாய் ஒரு மகனின் கைகளைப்பற்றியபடிக்கு வர இயலாதென்றும் அவர்களுக்காக பிரார்த்தித்து கொள்வதாகவும் சொல்கையில் கண்கள் ஈரமாவதை தவிர்க்கவே முடியாது. மலர்த்திய அகலக்கண்களுடன் பேபி மோளாக வரும் அன்னாவும் சுட்டிப்பெண்தான்.

இத்திரைப்படம் காட்டும் கும்ளாங்கியின்  சில இரவுகள் மறக்க இயலாதவை. சாஜி தற்கொலை செய்ய முயன்று, எதிர்பாராவிதமாக நண்பன் இறக்கும் இரவு, நிலவு பொழிகையில் கடலில் போனியும் நைலும் களித்திருக்கும் இன்னுமொரு இரவு, விருந்துக்கு  ஃபகத்தும் மனைவியும் சிற்றப்பன் வீட்டுக்கு செல்லும் இரவு, காயல் நீரில் படகு ஒழுகிச்செல்லும் இரவு,காதலின் பொருட்டு சண்டை நடக்கும் அந்த இறுதியிரவு,  இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரும் முன்னடி எடுத்து வைத்திருக்கும் இத்திரைப்படம் காதலென்னும் ஒரு  எளிய, இயல்பான, சின்னஞ்சிறு புள்ளியை தொட்டு தொட்டு கடற்காயல் அளவிற்கே விரித்து   அழகாக்கியிருக்கிறது

கும்பளாங்கி கிராமம் அழகோ அழகு. காயலும் அதன் கரையிலிருக்கும் வீடும், நடுவில் இருக்கும் பசுந்திட்டும் அங்கு காதலர்கள் ஒரு சிறு படகில் சென்று சந்திப்பதும் அத்தனை அழகு. ஒரு காட்சியில்  அங்கு  கொண்டு வந்த பிளாஸ்டிக் தண்ணீர்பாட்டிலை  திரும்ப எடுத்துக்கொண்டு வரசொல்கிறார் காதலி. சூழல்பாதுகாப்பில் கேரளம் காண்பிக்கும் கவனம் திரைப்படம் வரை நீண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

முதல் பாதியைக்காட்டிலும் இரண்டாம் பாதி

kumbalangi nightsகூடுதலாக ஈர்க்கின்றது. பாபியாக வரும் ஷேன் நிகாமின் கன்னக்குழிகளும் காது வரை நீளும்புன்னகையும் வெகு வசீகரம்.

எந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகம், யார் கதநாயகன் என்னும் கேள்விகளெல்லாம் இன்றி கதையும் கதைக்களமும் கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிகளுமே கதையை நகர்த்திக்கொண்டு போகின்றன. நடிகர்கள்  திரையில் தங்களை பெரிய நடிகர்களாக காட்டிக்கொள்ளாமல் கதாபாத்திரங்களாக மட்டுமே மிளிர்கிறார்கள். எந்த காட்சியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படவில்லை. கதையினூடே அனைத்துக்காட்சிகளும் காயலில் படகு போல இயல்பாக  ஒழுகிச்செல்கின்றது

பலதரப்பட்ட உறவுகளை, அவற்றின் சிக்கலான பல அடுக்குகளை, இவற்றினிடையே முகிழ்க்கும் காதலை, உணர்வெழுச்சிகளை மனத்தடுமாற்றங்களை காயலின் பிண்ணனியில் குளிரக்குளிரச் சொல்லும், மிக அழகிய, உலகெங்கிலும் பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படத்தை தவறாமல் பார்ப்பதோடு கும்பளாங்கிக்கும் ஒருமுறை போய் வரவேண்டும்