2019 ல் ஜப்பானிய ஊடகங்கள் பலவற்றில்  டோக்கியோவின் சைதாமா நகரில் வசிக்கும் செஜிலிமுரா மற்றும் அவரது மனைவி ஃபுயூமி  வெளியிட்ட உணர்வுபூர்வமான விளம்பரம் பல நாட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது 

//எங்கள் துயரை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை எங்களின் பொக்கிஷங்களை இழந்திருக்கிறோம் அவற்றிற்கு நீர் அளிக்காவிட்டால் அவை இறந்து விடும் அபாயம் இருக்கிறது// 

என்று துவங்கும் அந்த விளம்பரம் மிக விரிவாக பல பராமரிப்பு வழிமுறைகளை சொன்னது. 3000’க்கும் அதிகமான போன்ஸாய் மரங்கள் இருக்கும் அவர்களின் மிகப்பெரிய தோட்டத்திலிருந்து 13 மில்லியன் யென் மதிப்புள்ள 7 போன்ஸாய் மரங்கள் திருட்டு போயிருந்தது. திருடர்களுக்கு அவர்கள் விடுத்த உருக்கமான வேண்டுகோள் தான் இந்த விளம்பரம். அந்த 7 மரங்களில் ஒன்றான  400 வருடங்களான ஷிம்பாகு ஜூனிபர் மரம் மட்டுமே 10 மில்லியன் யென் மதிப்புள்ளது.  ஒரு வாரம் நீரில்லா விட்டால் அது அழிந்துவிடும்

எடோ காலத்திலிருந்து(1603-1868) போன்ஸாய் வளர்ப்பில் ஈடுபட்டுவரும் அந்த குடும்பத்தில்  லிமுரா ஐந்தாம் தலைமுறை போன்ஸாய் கலைஞர். ஷிம்பாகு முன்னர் மலை உச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டு மெல்ல மெல்ல சிறிதாக்காப்பட்டு ஒரு மீட்டர் உயரத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது .’’எங்கள் குழந்தைகளைப்போல அந்த மரங்கள்’ என்று கண்கலங்கும் தம்பதியினர்  திரும்ப திரும்ப அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகளையே விளம்பரப்படுத்தினார்கள். இன்றைய தேதி வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. நிச்சயம் ஐரோப்பிய கள்ளச்சந்தையில் அவை விற்கப்பட்டிருக்கும் என்கிறார் பியூமி. 1

ஜப்பானுக்கு வெளியில் இருப்பவர்களுக்கு மரங்கள் திருட்டு போவதற்கு இவர்கள் இத்தனை கவலைப்படுவது வியப்பாக இருக்கலாம் ஆனால் ஜப்பானியர்களின் அனைவருக்கும் போன்ஸாய் மரங்கள் வெறும் அலங்கார மரங்கள் மட்டுமல்ல, அவர்கள் கலாச்சாரத்தோடும் வாழ்க்கையோடும் ஒன்றென கலந்தவை  அவை

ஜப்பானியர்களுக்கும் போன்ஸாய் மரங்களுக்குமான் பிணைப்பு மிக ஆழமானது. இம்மரங்கள் இவர்களின் அன்றாட வாழ்வில் மிக நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. இங்கு இக்கலை  இத்தனை முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், ’போன்ஸாய்’ என்னும் சொல் ஜப்பானிய மொழிச்சொல் தானென்றாலும் இந்தக் கலை ஜப்பானில் தோன்றியதல்ல,  சீனாவிலிருந்து ஜப்பானுக்கு வந்தது. 

பண்டைய சீனாவின்  துவக்ககால ஆய்வாளர்கள் மலை உச்சிகளில் வளர்ந்திருந்த குட்டையான  அழகான மரங்களை முதன் முதலாக  கண்டார்கள். மலைப்பகுதியின் அசாதாரணமான காலநிலை அவ்வாறு அம்மரங்களின் வளர்ச்சியை குறுகலாக்கி இருக்கலாமென அவர்கள் கருதினார்கள். சாதரண மரங்களைப்போல மரச்சாமான்களும், விறகுகளும் தராத இவற்றை மிக பரிசுத்தமானவைகளாகவும் புனிதமானவகளாகவும் கருதி அவர்கள்  வழிபட்டனர்.

இவ்வாறு குறுகிய மரங்களை தாமும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அவர்கள், தொடர்ந்து வளர் நுனிகளையும், வேர்களையும் கத்தரித்தும்,ஒளியை கட்டுப்படுத்தி, சிக்கனமாக நீர் அளித்து, கம்பிகளால் தண்டுகள் மற்றும் கிளைகளை விரும்பிய வடிவிற்கு மாற்றி, குறுகிய வடிவில் மரங்களை உருவாக்க முனைந்தனர். மேலும் மரங்களின் இறுதி வடிவம் பழமையையும், மிக வயதான தன்மையையும் காட்டுவதாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருந்தனர். 

சில தாவொயிஸ்டுகள் குட்டையாக்கும் முயற்சியின் போது, சீனாவின் டிராகன் மற்றும் நாகங்களைப்போல அம்மரங்களின் வடிவத்தை மாற்றி அமைக்கும் முயற்சியிலும் அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இன்னும் சில தோட்டக்கலை ஆர்வலர்கள் யோகா நிலைகளில் மரங்களை அமைக்க முயன்றார்கள் 

  கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் , இயற்கையின் அம்சங்களை குறுகிய அளவில் மறுஉருவாக்கம் செய்வது  மந்திர பண்புகளை அணுக  தங்களை அனுமதிப்பதாக தாவோயிஸ்டுகள் நம்பினர்.அப்போதுதான் சுடு மண்பாண்டங்களின் மீது குறுகிய நிலப்பரப்புகளின் சித்திரங்களை உருவாக்கும்  பென்ஜிங்  அல்லது பென் ஸாய் என்னும் கலை தோன்றியது .(Pen-jing/penzai,). முதலில் சமூகத்தின் உயரடுக்குகளில் இருந்தவர்கள் மட்டுமே  இக்கலையை கற்றுக்கொண்டிருந்தனர்.  

சீன மொழியின் பானை-  நிலப்பரப்பு  என்பதை குறிக்கும்  இந்த பென் ஜிங் “penjing.”  என்பதிலிருந்தே ஜப்பானிய சொல்லான தட்டு- தாவரம் எனப்படும் Bon sai ( Tray  -plant) உருவானது. 

சீனர்களின் இந்த குட்டை மர வளர்ப்பின் வரலாறு மிக நீண்டது.  பென், புன், அல்லது பேன் (pen, pun, pan) என்றழைக்கப்படும் குழிவான, சுடுமண்ணாலான அலங்கார தட்டுகள்  சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உருவாக்கப்பட்டன, ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் சீனாவின் வெண்கலக் காலத்தில் மதச்சடங்குகளுக்கென அதே குழிவான அகன்ற தட்டுக்கள் வெண்கலத்தில் உருவாக்கப்பட்டன

சுமார் 2300 வருடங்களுக்கு பின்னர் சீனாவின்’’ நீர், நெருப்பு, மரம் உலோகம், மண்’’ என்னும் ஐந்து பொருட்களை குறிக்கும் ஐந்துபொருட் கோட்பாடு உருவான போது தான் இயற்கையின் அம்சங்களை சிறிய அளவில் மறுஉருவாக்கம் செய்யும் கலையும் உருவானது.

பிறகு ஹான் வம்சத்தினரின் ஆட்சிக் காலத்தில் நறுமண பொருட்களும் வாசனை திரவியங்களும் அண்டை நாடுகளில் சந்தைப்படுத்தப்பட்டன.  அப்போது,  ஊதுபத்தி புகையும் மலையை போன்ற  வடிவங்கள் விற்பனைக்கு வந்தன. சமுத்திரத்தின் நடுவிலிருக்கும் ஒரு  மலையின் உச்சியிலிருந்து புகை அலையலையாக பரவி மேலே செல்வது இறவாமையையும், உடலிலிருந்து பிரிந்த  ஆத்மா பிரபஞ்சதில் கலப்பதையும் குறிப்பதாக நம்பப்பட்டது.

முதன்மையாக வெண்கலம், பீங்கான் அல்லது முலாம் பூசப்பட்ட வெண்கலத்திலிருந்து வடிவமைக்கப்பட்ட இம்மலை வடிவங்கள் கடலைப்போல சித்திரங்கள் வரையப்பட்ட  ஆழமான அகன்ற தட்டுகளின் நடுவில் வைக்கப்பட்டன.

 துளைகள் இருக்கும் உலோக மூடியால் மூடப்பட்ட இந்த அமைப்பின்  துளைகளிலிருந்து  நறுமணமிக்க புகை வெளியேறுவது மாயத்தன்மையுடன் இருப்பதாக கருதப்பட்டு இந்த வடிவங்கள் வெகுவிரைவில் நாடெங்கும் புகழ்பெற்றது

இந்த அலங்கார தட்டுக்களின் விற்பனை அதிகரித்த போது இவற்றில்  கடற்பாசிகளையும்,  சிறு தாவரங்களையும் இணைத்து இன்னும் இயற்கையாக காட்டும்  புதுமையான  விற்பனை முயற்சிகளும் துவங்கின

 தொடர்ந்த நூற்றாண்டுகளில் இதன் வடிவங்களில் பல மாற்றங்கள் உண்டாயின மரக்கைப்பிடிகளும், மரக்கால்களும் இணைக்கப்பட்டு சிறு தாவரங்கள் அவற்றில் வளர்க்கப்பட்டன அவை பெரிதாகாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு முறுக்கி அவற்றின்  வளர்ச்சி கட்டுப்படுத்த பட்டது. ஒரு வரி கவிதைகள் கூட அந்த தட்டுகளில் பொறிக்கப்பட்டன. மனித  வாழ்வு மிக சுருக்கமான வட்டங்களாக இவற்றில் வரையப்பட்டன 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வடிவங்கள்’”தட்டு செடி வளர்ப்பு’’  என பொருள்படும் புன் -ட்ஸாய் (pun tsai or “tray planting.) என அழைக்கப்பட்டன

  இந்த தட்டுச் செடி வளர்ப்பு கலை சீனாவிலிருந்து ஜப்பானுக்கு சுமார் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி இருக்கலாமென்று நம்பப்படுகின்றது.  ஆயிரம் வருடங்களுக்கு முன்பான ஒரு ஜப்பானிய   பதிவில்  ‘’இயற்கையாக மனிதர்களுக்கு தொலைவில் வளரும் மாபெரும் மரமொன்றை,  தங்கள் அருகில் வைத்துக் கொள்ள கைகளில் மனிதர்கள் தூக்கி செல்லும் அளவிலும், வடிவிலும் சிறியதாக அழகாக வளர்ப்பது’’ குறித்த வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது.

கடுமையான சிக்கன நடவடிக்கைகள் அடங்கிய  ஸென் புத்த மதம் ஜப்பானில் தோன்றிய போது ஸென் துறவிகள் இந்த தட்டுக்களில் வளரும் ஒற்றை மரத்தையே  பிரபஞ்சத்தின் குறீயீடாக காட்டினர். ஸென் குருக்கள், மாபெரும் வடிவங்களின் இந்த  மீச்சிறு வடிவங்களை உற்று நோக்குகையில்  அதன் மந்திர பண்புகளை நெருங்கி அறிய முடியும் எனவும் நம்பினர்.

 ஹான் வம்ச ஆட்சியின் போது, ஜப்பானிற்கும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் குடிபெயர்ந்த சீனத்துறவிகள் தாங்கள் உருவாக்கிய குட்டை மரங்களையும் அவர்களுடன் எடுத்துக் கொண்டனர்.அவர்களிடமிருந்து  ஜப்பானிய ஜென் புத்த பிக்குகள் குட்டை மரங்களை உருவாக்க தேவையான நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர், இதுவே பின்னர் போன்ஸாய் என்று அறியப்பட்டது. ஜப்பானியர்கள் சீனாவின்  குள்ளமான மரங்களிலிருந்து வேறுபடும் பல பாணிகளை தங்கள் சொந்த முறைகளில் உருவாக்கினர்,

 காமகுரா காலத்தில் ஜப்பான் சீன கலாச்சாரத்தை பின்பற்ற துவங்கியபோது  குட்டை மர வளர்ப்பு கலையும் ஜப்பானில் பிரபலமானது, ஜப்பானில் சீனக்கலையின் அடிப்படைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஸென் புத்த தத்துவங்களை பிரதிபலிக்கும் பாணிகள் புகுத்தப்பட்டு புதிதாக ஜப்பானின் பிரெத்யேக கலையாக போன்ஸாய் உருவானது,

 இந்தக் கலை ஜப்பானிலும் பரவியபோது  சீனாவின் தட்டுக்களை காட்டிலும் சிறிது அதிக ஆழம் கொண்ட ஜப்பானிய தட்டுகளில் மரங்களை சிறியதாக வளர்ப்பது ’கிண்ண மரம்’  என்னும் பொருள்படும் ஹாச்சி நோ கீ எனப்பட்டது (hachi-no-ki,the/bowl’s tree) இந்தக்கலை பரவலாக உயரடுக்குகளில் இருப்பவர்களால் பயிலப்பட்டது.

  1300 களின் பிற்பகுதியில்  கடுங்குளிரிலொன்றில்  ஒரு பயணத் துறவிக்கு அரவணைப்பை வழங்குவதற்காக தனது பிரியத்துக்குரிய மூன்று குள்ள கிண்ண மரங்களை நெருப்பிலிட்டு தியாகம் செய்த ஒரு இளம் சாமுராய் பற்றிய ஒரு நாட்டுப்புறக் கதை, ஒரு பிரபலமான நோ (Noh)  நாடகமாக மாறியது,  இக்கதையின் சித்திரங்கள் பல நூற்றாண்டுகளாக மர அச்சுகள் உட்பட பல ஊடக வடிவங்களில் சித்தரிக்கப்பட்டன.

1400ல் ஜப்பானின் ஒஸக்கா’வில் கூடிய சீன தோட்டக்கலை வல்லுநர் குழுவொன்று சீனாவின் புன்-ட்ஸாயின் ஜப்பானிய உச்சரிப்பான போன்ஸாய் என்பதை இந்த கலைக்கு பெயரிட்டு இதை கிண்ன செடி வளர்ப்பிலிருந்து வேறுபடுத்தியது.

  பிறகு போன் (Bon) எனப்படும் ஹாச்சி கிண்ணத்தை ஆழம் குறைவான  தட்டுக்களில்  குள்ள  மரங்களின் வளர்ப்பு  வெற்றிகரமாக நடந்தது, அதற்கு பிறகு  போன்சாய்  வடிவமைப்பு ஜப்பானிய பாரம்பரியத்தின் அணுகுமுறை என்பதிலிருந்து விலகி தோட்டக்கைவினைக் கலையாக புகழ்பெற்றது. அக்காலகட்டத்தில் ஜப்பானெங்கும் இக்கலை பிரபலமாகி இருந்தது.

ஜப்பானிய போன்ஸாய் மரங்கள் 1 அல்லது 2 அடி உயரத்தில் பல ஆண்டுகள் உழைப்பை கோரும் வடிவங்களாக இருந்தன. விரும்பிய வடிவங்களை மூங்கில் மற்றும் கம்பிகளை  இணைத்தும் கட்டியும், திருகியும் வரவழைத்தனர். வேறு  மரங்களிலிருந்து எடுக்கப்பட கிளைகளை,  வளரும் போன்ஸாய் மரங்களில் ஒட்டு வைத்தும் புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன.

  14’ம் நூற்றாண்டில் ஜப்பானில் மிக விலை மதிப்புள்ளவையாக இருந்த  போன்ஸாய் மரங்கள்  மடாலயங்களிலும்,  அரச மற்றும் பிரபுக்களின் குடும்பங்களிலும் சீனாவை போலவே செல்வத்தின், உயர்வின், கௌரவத்தின்  அடையாளமாக வீற்றிருந்தன. 

1600’ல் ஜப்பானிய போன்ஸாய் கலைஞர்கள் மரங்களின் அத்யாவசியமான பாகங்களை தவிர மற்றவற்றை நீக்கி புதுமையான போன்ஸாய் பாணியை உருவாக்கினார். இந்த பாணி ஜப்பானியர்களின் ’’குறைவே மிகுதி’’ என்னும் தத்துவத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. இக்கலையை பலரும் பரவலாக கற்றுக்கொள்ள துவங்கிய 1603 ல் போன்ஸாய் மரங்கள் சமூகத்தின் அனைத்து தளங்களிலும் இருப்போருக்கும் உரியதாக மாறியது. பெரும்பாலும் அனைத்து ஜப்பானிய வீடுகளிலும் போன்ஸாய்கள் இடம்பெற்றிருந்தன 

இராணுவத் தலைவர்களான ஷோகன்கள் முதல் சாதாரண விவசாயிகள் வரை அனைவரும் ஒரு பானையில் அல்லது  தட்டுக்களில் அல்லது உறுதியான அகன்ற சிவந்த நிறத்திலிருக்கும் அபாலோன் கிளிஞ்சல்களில் மரத்தை அல்லது பிரகாசமான அழகிய வண்ணங்களில் மலர்கள் அளிக்கும் அஸேலியா புதர் செடிகளை  வளர்த்தனர். பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தலைநகரான கியோட்டோவில் குள்ளமாக்கப்பட்ட பைன்  மரங்களுக்கான கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடைபெறத் தொடங்கியது.   போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது இரண்டு குள்ள பைன் மரங்கள் கொண்டு வருவார்கள்.  இந்த கண்காட்சிகளுக்கு எனவே அப்போது  பல கிராமங்களில் குள்ள பைன் மரங்களை  வித விதமான வடிவங்களில் மும்முரமாக பெரிய அளவில் வளர்க்க துவங்கினார்கள்.

 தொடர்ந்த நூற்றாண்டில் போன்ஸாயில் பல புதிய உத்திகளும், பாணிகளும் புகுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான  நூல்களும் கட்டுரைகளும் கவிதைகளும் பாடல்களும் போன்ஸாய் தட்டுக்களை, போன்ஸாய் வளர்ப்பை, போன்ஸாய் மரங்களின் வடிவமைப்பை குறித்து எழுதப்பட்டு பிரசுரமாயின. போன்ஸாய் கண்காட்சிகள் பரவலாக நடைபெற்றது. கிளைகளை முறுக்க அதுகாறும் பயன்படுத்தப்பட்ட செம்புக்கம்பிகளுக்கு பதிலாக சணல் கயிறுகள் பயன்படுத்தப்பட துவங்கின. சீனாவிலிருந்து இறக்குமதியான பல்லாயிரக்கணக்கான போன்ஸாய் தட்டுகளில் குள்ள மரங்களை வளர்க்கும் கலை ஒரு பொழுதுபோக்காக நாடெங்கும் பரவலாக இருந்தது.  

 1923’ல் டோக்கியோவில் பெரும் அழிவை உண்டாக்கிய கண்டோ (Kanto) பூகம்பத்துக்கு பிறகு பலர் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது  30 குடும்பங்களை சேர்ந்த போன்ஸாய் வளர்ப்பு நிபுணர்கள் அங்கிருந்து 20 மைல் தொலைவில் இருந்த ஒமியாவில்  தங்களது இருப்பிடங்களை மாற்றி ஜப்பானின் போன்ஸாய் மையமாக ஓமியாவை (Omiya) உருவாக்க தலைப்பட்டனர். 1930 களில் இருந்து ஒமியா போன்ஸாய் கிராமம் எனவே உலகெங்கிலும் புகழ் பெற்றிருக்கிறது. ஒமியாவின் போன்ஸாய் அருங்காட்சியகமும் பிரபலமானது.

9’ம் நூற்றாண்டிலேயே ஜப்பானியர்கள்  சீனாவிற்கு சென்றிருந்ததும் அங்கிருந்து திரும்பி வருகையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்க போன்ஸாய் மரங்களை கொண்டு வந்தற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.போன்ஸாய் செடிகளையும் மரங்களையும் பரிசளிக்கும் இந்த மரபு இன்றளவும் தொடர்கின்றது. போன்ஸாயை பரிசளிப்பதும் பெற்றுக்கொள்வதும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்னும் நம்பிக்கையும் ஜப்பானில் இருக்கிறது  

ஜப்பானிய பாரம்பரியமான இந்த போன்ஸாய் கலை, தேர்ந்த  தோட்டக்காரரால்  உரிய அளவுக்கு வளராமல்,, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி  ஆழம் குறைவான அழகிய தட்டுக்களில்  வளர மரங்களுக்கு   பயிற்சியளிக்கிறது,

நீரை தெளிப்பது, வளர்ச்சிக்கு ஏற்ப  தட்டுக்களை மாற்றுவது, மண்ணின் வளத்தை சரியான இடைவெளிகளில் பரிசோதிப்பது, வளர் நுனிகளையும் வேர்களையும் தொடர்ந்து கத்தரிப்பது, குறிப்பிட்ட அளவிலேயே சூரிய ஒளியை அனுமதிப்பது, மாறும் காலநிலைகளுக்கேற்ப பாதுகாப்பது என பொன்ஸாய்களை மீது கவனமாக பராமரிக்க வேண்டும்

 போன்ஸாயாக்கப்படும் மரத்திற்கு கூடுதல் கவனிப்பும், மிகுந்த பராமரிப்பும்  தேவைப்படும். இவ்வகைச் சிறிய மரங்கள், பெரிய வளர்ந்த மரங்களுக்கு உரித்தான அடிமரத்தடிமன், பட்டைகள், வேர்கள் இலைகள், மலர்கள், காய்கள் இவையனைத்தையுமே சிறிய அளவில், கொண்டிருக்கும். 

போன்ஸாய் மரங்கள் குட்டையாக இருப்பினும்  கனிகளை பெரிய மரங்களில் இருக்கும் அதே அளவில் உருவாக்கும். எனினும் இவற்றிலிருந்து பிற மரங்களிலிருந்து கிடைப்பதுபோல் ஏராளமான கனிகளை அறுவடை செய்யமுடியாது. ஒருசில கனிகளே உருவாகும். போன்ஸாய்  லாபமளிக்கும் மகசூலை கொடுக்கும் மரம் அல்ல இது ஒரு அழகுத் தோட்டக்கலை மட்டுமே. 

1937-1945 ல் நடைபெற்ற பசிபிக் போருக்கு பின்னர் ஜப்பானுக்கு வருகை தந்த வெளிநாட்டவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு போன்ஸாய் கலை உலகெங்கும் விரிவடைந்தது தாவரவியல் ஆய்வுகளில் நடைபெற்ற பல ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புக்களுக்கும்  பின்னர் பொன்சாய் வடிவமைப்பில் உபயோகிக்கப்பட்ட கருவிகளும் பல மாறுதல்களுடன் உருவாக்கப்பட்டு ஒரு கைவினைக்லை என்னும் நிலையிலிருந்து போன்ஸாய் வளர்ப்பு அசலான இயற்கை அழகு கலையாக மாறியது

  1604’ல் இருந்து இக்கலை பிற நாடுகளுக்கு பரவியது எனினும் ஜப்பான் மற்றும் சீனாவிலேயே இது அதிகம் கற்றுக்கொள்ளப்பட்டு வணிகமும் செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டில்தான்  மேற்கில் இக்கலை  பிரபலமாகியது.

 பண்டைய ஜப்பானின் போன்ஸாய் கலையிலிருந்து நவீன போன்ஸாய் கலை பல படிநிலைகளில் மாற்றமடைந்திருக்கிறது. கராத்தே கிட் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் போன்ஸாய் வளர்ப்பின் முக்கியத்துவம் பேசப்பட்ட பின்னர்  உலகெங்கிலும் இளையோரிடம் இக்கலை குறித்த ஆர்வம் அதிகமாயிருக்கிறது. 26 உலக மொழிகளில் தற்போது ஆயிரக்கணக்கான போன்ஸாய் வளர்ப்பு நூல்கள் உள்ளன.பலநூறு வார மாத, வருடாந்திர இதழ்கள் இணையப்பக்கங்கள் போன்ஸாய்க்கெனவே பிரெத்யேகமாக உள்ளன. போன்ஸாய் ஆர்வலர்களின் குழுமங்களும் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன

 போன்ஸாய் மரங்களின் பொருளானது ஒவ்வொருவரும் சார்ந்திருக்கும் கலாச்சாரம் அவர்களது நம்பிக்கைகள், கொண்டிருக்கும் விழுமியங்கள் ஆகிவயற்றை பொருத்து வேறுபடும். சிலருக்கு ஒத்திசைவின், பொறுமையின். எளிமையின் அதிர்ஷ்டத்தின் குறியீடாக இருக்கும் போன்ஸாய் பலருக்கு வெறும்  உயிருள்ள அழகு மரம் மட்டுமே! ஸென் புத்த துறவிகளுக்கு ஆழ்நிலை  தியானத்திற்கானதாக இருக்கிறது போன்ஸாய். இயற்கையின் முக்கிய மூன்று இயல்புகளான  சமனிலை. ஒத்திசைவு மற்றும் எளிமையை காட்டும் சிறுவடிவங்களாகவே போன்ஸாய்கள் உலகெங்கும் கருதப்படுகின்றன

வீட்டைச்சுற்றிலும் மரஞ்செடிகொடிகள் வளர்க்க, தோட்டம் அமைக்க இடம் இல்லையென்று கவலைப்படாமல் போன்ஸாயை சமையலறையிலும் மேசையிலும் ஜன்னலிலும் வைக்கலாமென்பதால் போன்ஸாய்களுக்கு எப்போதும் தேவையும் மதிப்பும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஜப்பானியர்கள்   அழகென்பதை மூன்று விதமாக சொல்கிறார்கள்.அருவிகள் விலங்குகள் போன்ற , மனிதர்களின்  குறுக்கீடு இல்லாத இயற்கை அழகு  முதலாவது, சிற்பங்கள்  ஓவியங்கள் போன்ற மனிதர்களால் உருவாக்கப்படும் அழகு இரண்டாவது,, மூன்றாவதாக மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான தொடர்புகளில் காணப்படும் அழகு. இதற்கு பொருத்தமான உதாரணமாக போன்ஸாயே முதலில்  சொல்லப்படுகின்றது

 எதற்கும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் விரைவு வாழ்க்கையில் போன்ஸாய்களின் நுணுக்கமான  தேவைகளை அறிந்து அவற்றை கவனித்து, பராமரித்து, வளர்ப்பது வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது எனவும் இயற்கையுடன் நெருங்கி இருக்கும் இந்த கலையை பொறுமையுடன், அன்புடன் முழுமனதாக செய்கையில் போன்ஸாய் நமக்கு   வாழ்வையும், வாழும் முறையையும், வாழ்வின் எல்லா பருவத்தையும் மதிக்கவும் ரசிக்கவும் கற்றுத்தரும் ஆசிரியராகி விடுகிறது  என்கிறார்கள் ஜப்பானியர்கள்.

 போன்ஸாய் வாங்குகையில் இளமையான கனிகள் நிறைந்திருப்பவற்றை விடவும் வயதான, பாசி படிந்து சுருக்கங்கள் நிறைந்திருக்கும், சாய்வான கோணங்க்களிலிருப்பவையே அதிகம் விரும்பப்படுகிறது  

இத்தாலியில், க்ரெஸ்பி எனப்படும் உலகின் முதல் போன்ஸாய் அருங்காட்சியகம் இருக்கிறது. அதில்,  ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான ’’கல் இத்தி’’(Ficus retusa) போன்ஸாய் மரம்தான் உலகின் மிகப் பழமையான போன்ஸாய் மரமாக கருதப்படுகின்றது  பல நூற்றாண்டுகளை கடந்து பல போன்ஸாய் ஆர்வலர்களின் உழைப்புக்கு சாட்சியாக அம்மரம் அங்கு இருக்கிறது.

 அமெரிக்காவின் தேசிய மரப் பூங்காவில் இருக்கும் கோஷின் எனப்படும் 11 ஜூனிபர் மரங்களின் போன்ஸாய்தான் உலகின் மிக புகழ்பெற்ற போன்ஸாயாக கருதப்படுகின்றது. இம்மரம் 1948 ல் பிரபல போன்ஸாய் கலைஞரும் ஆசிரியரும் எழுத்தாளருமான  ஜான் நாகாவினால் அவரது 11 பேரக்குழந்தைகளை குறிப்பிடும் விதமாக   உருவாக்கப்பட்டது , இம்மரம்  ஆன்மாவின் பாதுகாவலன் என்றும் அழைக்கப்படுகிறது  

 உலகின் மிக அதிக விலைக்கு விற்கபட்ட போன்ஸாயாக 300 வருடங்களான  ஜப்பான் தகாமட்ஷு’வில் நடைபெற்ற சர்வதேச போன்ஸாய் கண்காட்சியில் 1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்ட  வெள்ளை பைன் மரம் கருதப்படுகிறது. எனினும் அதை காட்டிலும் பல நூற்றாண்டுகளை கடந்த  மிக அதிக மதிப்புள்ள  பல போன்ஸாய்கள் பலரின் குடும்ப சொத்தாக விற்கப்படாமல்  இருக்கின்றன.  

ஜப்பானின் அட்டாமி நகரில் இருக்கும் 5 மீட்டர் உயரமுள்ள 600 வருடங்களான  சிவப்பு பைன் போன்ஸாய் மரமே உலகின் மிகப்பெரிய போன்ஸாயாக கருதப்படுகின்றது. இதுபோன்ற பெரிய வகை பொன்ஸாய்கள் இம்பீரியல் வகை எனப்படுகின்றன. மிக சிறிய போன்ஸாய் வகைகள்  கசகசா விதை வகை எனப்படுகின்றன இவை 3லிருந்து 8 செமீ உயரம் இருக்கும் .

 சிறிய மோதிர அளவில் இருக்கும் Acer momiji. என்னும் போன்ஸாய் மரமே உலகின் மிகச்சிறிய போன்ஸாயாக கருதப்படுகின்றது. கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இணைய காத்திருக்கிறது இந்த மீச்சிறு மரம். 

இவற்றைக்காட்டிலும் நுண்ணிய, விரல் நுனியில் வைத்துவிடும் அளவில் இருக்கும் சூப்பர் மினியேச்சர் வகை போன்ஸாய்களும் தனிப்பிரிவாக இருக்கின்றன,மண்ணே இல்லாமல் சிறு புட்டிகளில் வெறும் நீர்க்கரைசலில் வளரும் அக்வா போன்ஸாய்களும் கடந்த பத்து ஆண்டுகளில் உருவாகி இருக்கின்றன.  

ஒன்றுக்கு மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்படுகையில் அது போன்ஸாய் காடு என்று குறிப்பிடப்படுகிறது.

போன்ஸாய் வளர்ப்பில் மிஷோ எனப்படுவது (Misho) விதைகளிலிருந்து போன்ஸாய் மரங்களை வளர்க்கும் கலை. இது மிகச்சவாலானதும் சுவாரஸ்யமானதும் கூட. ஏனெனில் வளரும் மரம் முழுக்க முழுக்க துவக்கத்திலிருந்தே வளர்ப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும், முதன் முதலாக போன்ஸாய் வளர்ப்பில் ஈடுபடுவர்களுக்கானது மிஷோ

நறுக்கப்பட்ட தண்டுகளிலிருந்து போன்ஸாய் மரங்களை வளர்க்கும் சஷிகி  (Sashiki) முறையும் மிக பிரபலமானது. இது மிக சுலபமானதும் செலவு குறைந்ததும் கூட. ஒருசில ஆர்வலர்கள் மரக்கன்றுகளிலிருந்தும் போன்ஸாயை உருவாக்குவார்கள்

இயற்கையிலேயே சத்துக்குறைபாடு, அதீத சூழல் காரணிகள் இவற்றால் குட்டையாக வளர்ந்திருக்கும் மரங்களை ஜப்பானில் யமதோரி என்கிறார்கள்.(Yamadori). இவற்றை முறையான அனுமதியுடன் தோண்டி எடுத்து வந்தும் ஜப்பானியர்கள் போன்ஸாயாக வளர்ப்பதுண்டு

வளர்ந்து வரும் போன்ஸாய் மரத்தில் வேறொரு மரத்தின் பாகங்களை இணைந்து ஒட்டு வளர்ப்பு செய்வது  சுகிகி எனப்படுகின்றது (Tsugiki)

போன்ஸாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ பல இணைய தளங்களும் நிறுவனங்களும் வழிகாட்டுகின்றன. இந்தியா உள்ளிட்ட  உலகின் பல  நாடுகளில்  போன்ஸாய் வளர்ப்பு தாவரவியல் பிரிவில் ஒரு பாடமாக கல்லூரிகளில் கற்றுத்தரப்படுகிறது

 நவீன போன்ஸாய் கலை அல்லது போன்ஸாய் கலையின் வழித்தோன்றலாக கருதப்படும் சைகே (Saikei) என்பது மிக அகன்ற தட்டுக்களில் குட்டை மரங்களுடன் பாறைத்துண்டுகளும் தரையில் வளரும் சிறு படர்தாவரங்களும் இணைந்த ஒரு குறுகிய நிலக்காட்சியின் வடிவம் இதுவும் ஜப்பானில் போன்ஸாய்களை போலவே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

போன்ஸெகி (Bonseki) எனப்படும் மற்றொரு பிரிவு கருப்பு நிற தட்டுக்களில் வெண்மணலும் சிறு கற்கள், இறகுகள், மரக்கரண்டிகள் குச்சிகள் இவற்றைக்கொண்டு உயிருள்ள தாவரங்கள் இல்லாத நிலப்பரப்புக்களில், எரிமலை, மலை, கடற்கரை போன்ற காட்சிகளை உருவாக்கும் கலையும் பரவலாக ஜப்பானில் இருக்கிறது. 35 செமீ நீளம் இருக்கும்  இதன் தட்டுகளில் வீடுகள், கோவில்,பாலங்கள் ஆகியவையும் சிறிய வடிவில் அமைந்திருக்கும் 

ஜப்பானிய தேநீர் விருந்துக்கு புகழ்பெற்றவரான சென் நோ ரிகு  (Sen no Rikyū), மற்றும் அவரது மாணவரான  கொஸோகவா சென்சே  (Hosokawa Sansei), என்பவரும் போன்ஸெகிக்கெனவே ஒரு பள்ளியை உண்டாக்கி அதன்  அடிப்படைகளை விரிவாக  கற்றுக் கொடுத்தார்கள்.பண்டைய ஜப்பானில் பெண்களிடையே பிரபலமாக இருந்த இக்கலை மெல்ல பிரபல்யத்தை இழந்தது

பாறைத்துண்டுகள், காகித மற்றும் துணிக்கூழ்கள் இவற்றைக்கொண்டு தட்டுக்களில் நிலக்காட்சிகளை உயிருள்ள தாவரங்கள்,இல்லாமல் முப்பரிமாண வடிவங்களில் உருவாக்கும்  ஜப்பானிய முறை போன்கி (bonkei) எனப்படுகின்றது.  அரிதாக போன்கியில் சிறு நீரூற்றுகளும், குறுகிய வடிவில் மனிதர்கள்  விலங்குகள், பறவைகள் ஆகியவையும் அமைவதுண்டு

ஜப்பானின் போன்ஸாய் மற்றும் சீனவின் பென் ஜிங் இவற்றின் அடிப்படைகளை கலந்து உருவாக்கப்பட்டதுதான் வியட்னாமின் ஹோ நோ போ கலை. (Hòn Non Bộ ). ஹொ நொ போ என்பது வியட்னாமிய மொழியில் தீவு, மலை, நீர்நிலை மற்றும் காடுகளின் கலவை என பொருள்படுகிறது. ஒரு தீவின் தூரக்காட்சியைபோல குறுகிய வடிவங்களில் இது அமைக்கப்பட்டிருக்கும்

போன்ஸாய் உருவாக்கத்தில்  பொதுவான விதிகள் சிலவுண்டு.  ஒரு போன்ஸாயின் எந்த இடத்திலும் அதை உருவாக்கியவரை  பார்க்கக் கூடாது என்பது முதன்மையான விதி,  அதாவது கிளைகளை வெட்டிய தழும்போ இலைகளை கத்தரித்த தடமோ கம்பிகளோ எதுவுமே பார்வையாளர்களுக்கு  தெரியக்கூடாது. போன்ஸாய்கள் ஒரு மெல்லிய துயரை பார்ப்போரின் மனதில் உருவாக்கவேண்டும் என்பதும் இதன் விதிகளில் ஒன்று  இக்கலையின் அடிப்படை  ஜப்பானின் வாபி ஸாபி எனப்படும் நேர்த்தியற்றவைகளின் அழகு  பொன்ஸாய்களில் தெரியவேண்டும் என்பதுவும்தான்

மரம் முழுக்க எல்லா பாகங்களையுமே சிறிதாக்குவது, பருத்த அடித்தண்டுகளில் இலைகளை மட்டும் சிறிதாக்குவது நேராக இருப்பது, சாய்ந்திருப்பது, காற்றில் சாய்ந்த நிலையில் இருப்பவை, தட்டுக்களிலிருந்து வழியும் வடிவில் இருப்பது, ஒரே இனத்தை சேர்ந்த சில மரங்களின் கலவை, இரு வகை மரங்களின் இணைப்பு என போன்ஸாய்கள் பல வகைப்படும். 

போன்ஸாய்களின் அளவை ’கை’ அளவுகளில் குறிப்பிடுவார்கள். விரல் நுனி,  உள்ளங்கை, ஒரு கை,  இரண்டு கை,  நான்கு கை அளவு என்று.  அதாவது ஒரு போன்ஸாய் மரத்தை  தொட்டியுடன் சேர்த்து நகர்த்த எத்தனை மனிதர்கள் தேவை என்பதையே இந்த எண்ணிக்கை குறிக்கின்றது. இரு கை அளவென்றால் இரண்டு நபர்கள் சேர்ந்தே அதை நகர்த்த முடியும். 

ஜப்பானிய வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது   டொகொனொமோ  (Tokonoma)  எனப்படும் வரவேற்பறை சுவற்றிலிருக்கும் பிரெத்யேக திட்டுக்களில்  போன்ஸாய் மரங்கள் வைக்கப்பட்டிருக்கும்

 போன்ஸாய் ஒரு தோட்டக்கலை மட்டுமல்ல அந்தரங்கமான ஒரு அனுபவமும்  கூட. . ஒரு போன்ஸாய் மரத்தை நட்டுவைத்ததுமே அதை காப்பாற்ற வெண்டிய பொறுப்புணர்வும் நமக்கு வந்துவிடுகிறது உயிருள்ள ஒரு மனிதனை கையாளும் மருத்துவருக்கு இணையானவராக நாம் அந்த கணத்தில் மாறிப்போகிறோம்.  

ஒரு போன்ஸாய் வீட்டில் இருப்பது இயற்கையின் ஒரு சிறு துண்டு வீட்டினுள் இருப்பதை போலத்தான். ஸ்திரத்தன்மை, சமச்சீர், சமநிலை மற்றும் எளிமை ஆகியவற்றின் கலவையிலிருக்கும் ஒரு அழகிய குறுகிய வடிவிலிருக்கும் தாவரம் அதன் அனைத்து இயல்புகளுடனும் நன்கு ஒத்திசையும் ஒரு தட்டில் வளருவதும் அது நம் வீட்டில், நம் தோட்டத்தில், நம் அலுவலகத்தில் நம்முடனேயே வளர்வதும் அளிக்கும் நிறைவை போன்ஸாய் வளர்த்தால்தான் பெற முடியும்.போன்சாய்  கலையில் ஈடுபடுகையில் நமது   எல்லைகளை எண்ணற்ற வழிகளில் விரிவுபடுத்தும் அனுபவத்தை நாம் உணர முடியும்.

போன்ஸாயின் ஒவ்வொரு வளைவும், ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு கிளையும் பல ஆண்டுகளின் உழைப்பில் உருவானவை. போன்ஸாய் மரங்கள் நம்மை கடந்த காலத்துடன் ஆழமாக பிணைப்பவை, பல தலைமுறையினரின் நினைவுகளை சேகரித்து வைத்திருப்பவையும் கூட போன்ஸாய் வளர்ப்பது வரலாற்றை வளர்ப்பதுதான்.   

 மேலதிக தகவல்களுக்கு: