இன்று என் மாணவன் யானை சிவா அழைத்திருந்தான் இரவு உணவின் போது. அவன் எப்போதும் ஏதேனும் அந்தரங்கமாக, முக்கியமாக  இருந்தாலே ஒழிய என்னை அழைக்க மாட்டான் கேரளாவின் ஏதோ ஒரு காட்டில் பணியிலிருக்கிறான். எப்போதாவது அசர்ந்தப்பமாய் கூப்பிடுவான் பரவசமாய், கருநாகமொன்று அறைவாசலில் படமெடுத்தபடி நின்றதையோ குருவி ஒன்று சிறு கடலையைப்போல  முட்டையிட்டிருப்பதையோ, சிறுத்தையை மிக அருகிலென கண்டதையோ, யானையொன்று தன் குட்டிக்கு இருளில் பழுத்த மாம்பழத்தை ஊட்டிக்கொண்டிருந்ததோ, அன்றி கண்ணீருடன் மின்சார வேலியில் சிக்கி இறந்த கர்ப்பிணி யானையை பிரேதப்பரிசோதனை செய்கையில் அதன் வயிற்றில் உறங்குவது போலிருந்த 8 அம்சங்களுடனான ஆண்குட்டியைகுறித்தோ சொல்லிக்கொண்டிருப்பான்

இன்றும் அழைத்தான்  இரவுணவாக கஞ்சியும் துவையலும் சாப்பிட்டுவிட்டு. ஒரு மர சாய்வு நாற்காலியில் சாய்ந்து  அவனின் காட்டுக்குடியிருப்பிற்கு வெகுதூரம் தள்ளி அடர் காட்டை கவியும் இருளில் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதாகவும் கொஞ்சம் முன்பு அவனைத்தாண்டி ஒரு அன்னைப்பன்றி தன் ஏழு குட்டிகளுடன் கடந்து சென்று தள்ளி இருக்கும் ஒரு புதரருகில் அமைதியாய் அமர்ந்திருக்க, தலைக்கு மேலே முழுநிலா பாலெனெ பொழிந்துகொண்டும்,நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்ணைச்சிமிட்டிக்கொண்டிருப்பதும் , மாலை அங்கிருக்கும் தோட்டத்திற்கு நீர் விட்டிருப்பதால்  பகலெல்லாம் வெயிலில் காய்ந்த் ஈரமண்ணிலிருந்து வரும் வெந்த வாசமும் தைமாதத்தின் கடும்பனி அந்த காட்டின் வெற்றுவெளியில் அவன்மீது இறங்கிக்கொண்டிருப்பதையும் கிறங்கிப்போய் சொல்லிக்கொண்டிருந்தான்.

காட்டின் சப்தங்கள் வெகுவாய் மாறிவிட்டதென்றான். மரங்களில் பெரும்பாலானவை இலைகளை உதிர்த்துவிட்டதால் மொட்டையாக எலும்புகளைப்போன்ற கிளைகளுடன் இருப்பதையும், சருகுகள் மெத்தைபோல கொட்டிக்கிடப்பதால் இரவின் ஓசைகள்  வெகுவாக மாறிவிட்டதையும்  மிகச்சிறிய நடமாட்டங்களும் துல்லியமாக கேட்கும் அளவிற்கு இப்போது இருப்பதையும் சொன்னான்

முன்பு போல பெரு விலங்குகள்  வருகையில் மட்டும் எச்சரிக்கையாய் இருக்காமல் இப்போது சிறு ஓசைகளுக்கும் புலன்கள் கூர்பெற்றுவிடுவதையும் இரவுகளே இப்போது வடிவம் மாறிவிட்டதென்றும் சொன்னான். அடர்ந்த இலைதழைப்புகள் ஓசையை வடிகட்டுமல்லவா அதுவுமில்லாமல் போகையில் இப்போது அவன் சொல்வது போலத்தான் இருக்கும் என்றெண்ணிக்கொண்டென்

காட்டில் வாழ்பவர்கள், பணிபுரிபவர்கள் பலரிருக்கலாம் எனினும் காட்டைக்கூர்ந்து கவனிப்பவர்கள்,  சிவாவைபோல அரிதானவர்கள், அதிலும் இவற்றையெல்லாம் ஆசிரியையிடம் தோழியிடம் சொல்வதுபோல பகிர்ந்துகொள்பவர்கள் மிக மிக அரிதல்லவா?

அவன் சொன்ன காட்சியை நினைத்துப்பார்த்துக்கொண்டேன், பெற்றோரும் மனைவியும் நாட்டிலிருக்க , இரவில் இருளில், நிலவும் பனியும் பொழிந்துகொண்டிருக்கையில், மென்வெளிச்சத்தில் ஏகாந்தமாய் சாய்வுநாற்காலியில்,  பன்றிக்குடும்பமொன்றின் அருகாமையை உணர்ந்தபடி காட்டின் ஓசைகளையும் இலைஉதிர்க்கும் மரங்களையும் ஈரக்காற்றையும் அனுபவித்துக்கொண்டு, அவனைப்புரிந்துகொண்ட அவனின்  ஆசிரியையிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளும் பெரும் பேறல்லவா அவனுக்கு கிட்டி இருப்பது?

அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் இயற்கையுடன் இயைந்த வாழ்வொன்றில் இணைந்திருக்கும்படி