அன்புள்ள மைதிலி  அவர்களுக்க
”அன்புள்ள” என்று ஒரு கடிதத்தை உங்களை அன்றி வேறு யாருக்கு எழுதுவதும் இத்தனை பொருத்தமானதாய் இருக்காது. அத்தனை அன்புள்ளவராக மாணவர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறீர்கள்.
சரண்,தருண் இந்த பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே அவர்களின் அன்பிற்கு உரியவராகவே இருக்கிறீர்கள் . அவர்களுக்கு மட்டுமன்றி இளம் மாணவர்கள் அனைவருக்குமே நீங்கள் பிரியமானவரே. ஏன் ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அவர்கள் வீட்டு குழந்தை இதே பள்ளியில் 2ஆவதோ 3ஆவதோ படிக்கிறது. அந்த பெண்ணும் உங்களை குறித்தே பேசுகிறது.
நானும் உங்களை கவனித்திருக்கிறேன் மைதிலி. வயதில் உஙகளை விட மூத்தவள் அன்பதாலும் அன்புமிகுந்தும் உங்களை பெயரிட்டே அழைக்கிறேன் . மன்னிக்கவும் மேடைகளில் பள்ளி முதல்வராய் அமர்ந்திருந்தாலும் , பெற்றோர்களிடன்  அறையில் அமர்ந்த்து பேசும் போதும் , பள்ளி வளாகத்தில் எங்கேனும் சந்த்திக நேர்கையிலோ அன்றி மாணவர்களை வகுப்பறை தவிர்த்து வெளியில் காண்கையிலோ உங்களின் உடல்மொழி மிக நம்பிகை ஊட்டக்கூடியதாகவும், நமக்கு வேண்டிய ஒருவராகவும், அடுத்த வீட்டுப்பெண்போன்ற,இயல்பான ஒருவராகவுமே இருக்கிறீர்கள்.
உங்களின் ஆங்கிலப்புலமை குறித்தும் மாணவர்களோடான உங்களின் அணுக்கம் குறித்தும் நிறைய கேட்டிருக்கிறேன் எனினும் என்னை பொருத்தவரை உங்கள் இந்த இயல்பான அன்பு ததும்பும் உடழ்மொழியே அனைத்திற்கும் அடிப்படை என் எண்ணுகிறேன்.
சரண் இந்த புதிய பள்ளியில் ஏதேனும் பேசும்படி சொல்லப்பட்டபோது அவன் வாழ்வில் அன்றும் இன்றும் என்றும் அவன் மனம் கவர்ந்த ஆசிரியையாக உங்களையே சொன்னான். சொல்லுகையிலேயே அவன் கண்கள் பனிப்பதையும் நான் கண்டேன். உண்மையில் மைதிலி ஒரு தாயாகவும் ஒரு ஆசிரியையாகவும் அந்த கணம் நான் பொறாமைதான் அடைந்தேன்.என்னிடம் மிகுந்த இஷ்டமுள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் எனினும் இதனை தூரம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். உங்களிடமிருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம்.
சரணின் பொதுத்தேர்விற்கு முன்னால் உங்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்குமான ஏதோ ஒரு கருத்து வேறுபாடின் காரணமாக நீங்கள் கடிந்து கொள்ளப்பட்டீர்களென்றும், கண்ணீர் சிந்தினீர்கள் என்றும் தெரிந்த அன்று இரவு நெடு நேரம் வரை எத்தனையோ தொலைபேசி அழைப்புகளில் இது குறித்தே பேசிய என் இரண்டு மகன்களையும் அவர்களின் நண்பர்களையும் கவனித்தேன், அது அன்றைக்கான அவர்களின் சொந்தத்துயரமானது, உஙகளுக்கானதல்ல நிச்சயம்
அவர்களுக்கு நீங்கள் கிடைத்தது ஒரு வரமெனில் உங்களுக்கும் இப்படியான கள்ளமில்லா உண்மை அன்புடனான மாணவர்களும் வரமே.
கோடை விடுமுறையில் நீண்ட நாட்கள் உங்களைப் பார்க்க முடியாத தருணின் கனவில் 3 முறை வந்த ஆசிரியர் நீங்களே. தேர்வு முடிவிற்குப்பின் அவன் அவன் தேர்ச்சி பெற்றதை அறிவிக்கும் கடிதத்தில் இருந்த உங்களின் கையெழுத்தை இரண்டு முறை மெல்ல தொட்டுப்பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். எத்தனை எத்தனை அன்பிருந்தால் இது நடக்கும்? ஒரு வேளை உங்களுக்கு இந்த நிர்வாகத்தில் ஏதேனும் சிறுகுறைகளிருப்பினும் கூட இந்த அன்பிற்கு முன்னால்  அவை உங்களால் பொருட்படுத்த அவசியமில்லதவையே
எனக்கும் உங்களை மிக இஷ்டம். எப்போது பார்த்தாலும் அழகிய சிரிபபுடன், இனிய குரலுடன், பளிச்சிடும் கண்களும் உற்சாகமாய் பேசுவீர்கள்.உங்கள் குழந்தையை ஒருமுறை பார்த்திருக்கிறேன். முன்பு  என் காரின் முன்னால் சில சமயம் நீங்கள் செல்கையில் எல்லாம் மகிழ்ச்சியில் கூச்சலிடும் என் மகன்கள் மூலம் உங்களைப்பற்றிய பெருமதிப்புடன்  இருக்கிறேன்.
ஆசிரியம் என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு வாழ்வு நெறியென்றே நானும் நீங்களும் நினைக்கிறோம் அதன் மூலமே இந்த இளம் உள்ளங்களில் என்றும் இருக்கிறீகள். இருப்பீர்கள்.  ஒரு ஆசிரியை வகுப்பறையில் நன்கு போதிப்பவர்மட்டுமல்ல. She or he should be good in all walks of their life.  மற்ற தொழில்களைவிட மிகுந்த சிறப்பானதோர் பணி இது, ஆசிரியரின் பால் ஈர்க்கப்பட்டு அப்படி தெய்வத்திற்கும் முன்பானதோர் இடம் பெற்று, கொடுக்கப்படிருக்கும் பணியை ஆத்மார்த்தமாக செய்பவர்களை அடையாளம் காட்டவேண்டுமெனில் அதற்கு உங்களைத்தவிர வேறு யாரையும் என்னால் இப்போதைக்கு உதாரணம் காட்ட இயலாது.
 Academic excellence  என்று சொல்லப்படும் பட்டங்களுடன் என்னுடன் பணிபுரிபவர்களில் பலர்  educated illiterates  ஆக இருப்பதை நான் கண்கூடாக காண்கிறேன். இந்த பள்ளியில் நீங்கள் மகிழ்வுடன் இருக்கிறீர்களா என்றறியேன் ஆயினும் நிறைவுடன் இருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மாணவர்களின் பிரியத்திற்குரியவள் என்னும் நிறைவில் பல இன்னல்களை நாம் மறக்கலாமல்லவா?
மிக அணுக்கமான ஒரு ஆசிரியரை பிரிந்த துயரில் இருக்கும் சரணைப்போன்ற பலரின் தவிப்பில் நீங்கள் எப்போதும்  உயிர்ப்புடன் இருக்கிறீர்கள் மைதிலி
அளிப்பதிலும் ஏற்பதிலும் இன்பமளிக்கும் இந்த ஆசிரியப்பணியில் நீங்களே அறியாத ஒரு இனிய தெய்வமொன்று உங்களுக்குள் குடியிருந்து உங்கள் மாணவர்களுக்கு காட்சிதருகிறது போலும். என் மகன்களின் வாழ்வில் மிக முக்கிய உளவியல் ரீதியான நல்ல மாற்றத்தை உண்டுபண்ணிய நீங்களே அவர்கள் இருவருக்கும் என்றென்றென்றைக்குமான மனமுவந்த ஆசிரியை. மாணவர்களின் வெற்றி ஆசிரியரின் வெற்றியே. சரண், தருண் எதிர்காலத்தில் என்னவாக இருந்தாலும் அந்த பெருமை அனைத்தும் உங்களுக்கே
வரும் டிசம்பரில் சரண் 1 மாத விடுமுறையில் வீட்டில் இருக்கயில் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வருவீர்களானால் அது பெரும் கெளரவமாக இருக்கும் எங்களுக்கு
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ என்றல்லவா சொல்லி இருக்கிறார்கள். இந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் உங்களின் அன்பினால் நலம் திகழட்டும் உங்களுக்கும் அனைவருக்கும்
அன்புடன்
லோகமாதேவி