உலகெங்கிலும் வெளியாகும் பன்மொழி திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் காலத்தை கடந்து என்றென்றைக்குமாக  நம்  மனதில் நிலைத்து நின்று விடும். அப்படியான எவர்கிரீன் திரைப்படங்களில் ஒன்று    ”கிரேமர் vs கிரேமர்’’. 1977ல் ஆவெரி கார்மென் (Avery Corman) எழுதிய இதே பெயரிலான நாவலை தழுவி ராபர்ட் பென்டன் (Robert Benton) இயக்கிய இத்திரைப்படம் அவ்வருடத்தின்  மிக அதிக வசூலை வாரிக் கொட்டிய திரைப்படம். மேலும் 1979ல் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது

 இதன் நடிக நடிகையர்கள் படப்பிடிப்பு துவங்கும் முன் பலமுறை மாற்றப்பட்டனர். பலர் அதில் இருந்து விலகினார்கள் பலர் நீக்கப்பட்டனர். பலர் விரும்பி மீண்டும் இணைந்தார்கள். இவற்றையே ஒரு கதையாக எழுதலாம் என்னும் அளவுக்கு மாற்றங்கள் படப்பிடிப்பு துவங்கின பின்பும் கூட நடந்துகொண்டிருந்தது

மணவிலக்கு கேட்கும் கணவன் மனைவி இருவரைப் பற்றியும் அவர்களது சிறு மகன் யாருடன் வாழ வேண்டும் என்பதும்தான் கதை. இதில் யார் மீது தவறு, யார் செய்தது சரி என்பதல்ல படம் பேசுவது, மனிதர்களுக்கு கிடைக்கும், அளிக்கப்படும் சந்தர்ப்பங்களை, அவர்கள் தத்தமது இயல்புப்படி எப்படி உபயோகிக்கிறார்கள், அதன் விளைவுகள் அவர்களை எங்கெங்கெல்லாம் கொண்டு செல்கின்றன, பிழைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்களா என்பதெல்லாம் தான் கதை

மணவுறவின் விரிசலை சொல்லுகையில், எதன் மீதும் புனித போர்வையை போர்த்தாமல்,  மனைவியின் பக்கமோ அல்லது கணவனின் பக்கமோ சாய்ந்தும் விடாமல் அவரவரியல்புகளின்படியே கதையை கொண்டு போயிருப்பதுதான் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் திரைப்படம் பல்லாயிரம் ரசிகர்களின் மனதில் அன்றைக்கிருந்த அதே பிரியத்துடன் இருப்பதன் முக்கிய காரணம்.

ஒரு குடும்பம் சிதைவதிலிருந்தே படம் துவங்குகிறது. மனைவியை குறித்து பெரிதாக ஏதும் நினைக்காமல் அவள் அன்னையாகவும் , இல்பேணுநராகவும் இருக்க விதிக்கப்பட்டவள் என்று நினைக்கும் கோடானு கோடி ஆண்களில் ஒருவரான கிரேமராக  டஸ்டின் ஹாஃப்மேனும், ஒன்றே போலான குடும்பவாழ்வின் நாட்களில் அலுத்து சலித்து களைத்து அன்னைமையை காட்டிலும் தன் சுதந்திரமும் தனக்கான. அங்கீகாரமும் முக்கியமென்று நினைக்கும் திருமதி கிரேமராக மெரில் ஸ்ட்ரீப்பும்,   அவர்களது சிறுமகனொருவனுமாக இம்மூவரும் திரையையும், நம் மனதையும் நிறைத்துவிடுகிறார்கள்.

 சேர்ந்து வாழ்கையில் செய்யத் தவறியதை, செய்திருக்க வேண்டியதை எல்லாம் பிரிந்திருந்து ஒற்றை பெற்றோராக இருக்கும் காலங்களில் இருவரும் தெரிந்துகொள்ளுவதும், இவற்றுக்கிடையில் மாட்டிக்கொள்ளும் குட்டிபையனுமாக கதை மெதுவாக, ஆனால் எந்த குழப்பமும் தொய்வுமின்றி செல்கின்றது

பொதுவான விவாகரத்து திரைப்படங்களைப் போல்  பெற்றோர் பிரிந்ததனால் பாதிக்கப்பட்ட குழந்தையை பற்றியல்ல கதை,  தங்கள் மீதான கவனத்திற்கும், அன்பிற்கும் ஏங்கிக்கொண்டிருக்கும்,  தனக்கேயான அடையாளத்தை தேடும் குழந்தைத்தனமான பெரியவர்களை பற்றிய கதை இது.

தனது பணியிலும் அதன் மேம்பாட்டிலும் அதீத அக்கறை கொண்டிருக்கும் கிரேமர் வீட்டுக்கு தாமதமாக வரும் ஓரிரவில் அவரது மனைவி வீட்டை விட்டு வெளியேற காத்திருக்கிறாள், அதை நம்ப கிரேமர் முயற்சிக்கையில் வெளியேறியே விடுகிறாள்.

எப்படி இப்படி அவள் செய்யலாம் குழந்தையைக் கூட விட்டுவிட்டு போகலாமா? என்று நம் மனம் இயல்பாக  அந்த பெண்ணை குற்றம் சொல்ல நினைத்தால்,  அடுத்த நாள் மகனிடம் அவன் எந்த வகுப்பில் படிக்கிறான் என்று கேட்கும் தந்தை அந்த இடத்துக்கு வந்து விடுகிறார்

 தந்தைக்கும் மகனுக்குமான  பந்தம் மெல்ல உருவாகிக்கொண்டிருக்கும், மெரில் அதிகம் வராத படத்தின் இடைக்காட்சிகளில்  தாயுமானவனாக இருக்க டஸ்டின் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் மெரிலின் இன்மை பூதாகரமாக தெரிகிறது.

பார்வையாளர்களுக்கு மட்டுமல்லாது, கிரேமருக்கும் பேருருவெடுத்து தெரிகிறார்  அவரது மனைவியாகவுமிருந்த  அன்னையொருத்தி.

  தந்தைக்கும் மகனுக்குமான பல உரையாடல்கள் ஒத்திகை பார்க்கப்படாமல், திரைக்கதையில் எழுதப்படாத,  காட்சிக்கு ஏற்ப அப்போது என்ன தோன்றியதோ அதையே வைத்து அமைக்கப்பட்டிருப்பதால் காட்சிகள் இயல்பாகவும் இயற்கையாகவும், சிறப்பாகவும் அமைந்திருக்கின்றன.

அன்னையாகவும் தந்தையாகவும் இருப்பவர்கள் உண்மையில் தங்களின் ஆழத்தில் யார் என்பதையும் இதில் பார்க்கலாம்.

டஸ்டின், மெரில் இருவருக்குமே இது அவர்கள் திரை உலக வாழ்வில் ஆகச்சிறந்த படமென்று சொல்லலாம் அத்தனை சிறப்பான நடிப்பு அத்தனை பொருத்தமான ஜோடியும் கூட.

கிரேமர் என்னும் ஆண் மனைவி பிரிந்த பிறகு மெல்ல மெல்ல ஒரு நல்ல மனிதனாகவும், சிறந்த தந்தையாகவும் உருமாறிக் கொண்டிருப்பதை அவர்களது தோழியின் பார்வை வழியே நமக்கு காட்டுகிறார்கள்.

கிரேமருக்கும் திருமதி கிரேமருக்குமான உரையாடல்களே திரைப்படத்தை அழகாக்குபவை அவர்கள் ஒருவருகொருவர் பேசிக்கொள்கையில், அதுநாள் வரை தங்களுக்கே தெரிந்திருக்காத  தங்களை அந்த உரையாடலில் அடையாளம் கண்டுகொள்வது மிக நுட்பமாக ஆனால் பார்வையாளர்களுக்கு புரியும்படி அமைந்திருக்கிறது.

 மகன் அந்த வகுப்பில் படிக்கிறான் என்பது கூட தெரியாத கிரேமர் மனைவியை பிரிந்திருக்கும் 15 மாதங்களில் மகனை பிரிய முடியாத, மகனின் பொருட்டு, வேலை உட்பட எதையும் இழக்க சித்தமாக இருக்கும் தந்தையாக மாறி இருக்கையில் திருமதி கிரேமர் மகன் தனக்கே வேண்டும் என வழக்கு தொடுக்கிறார்.

நீதிமன்ற வழக்கு விசாரணைகளும் , அப்போதைய கணவன் மனைவி இருவரின் உணர்வுமயமான நடிப்பும் வசனங்களும் மிக சிறப்பானவை.  மெரில் ஸ்ட்ரீப்  கண்கள் கலங்கி, மூக்கும் கன்னங்களும் கன்றிச்சிவக்க துக்கத்தை மறைக்க முயற்சிக்காமல் பேசும் காட்சிகளெல்லாம் நம்மையும் நெகிழ வைக்கும் அப்படியே மனைவியின் தரப்பை, அவளுக்கு தான் இழைத்திருந்த அநீதிகளை மனமார உணர்ந்துகொண்டு மெல்ல தலையசைப்பதும், கண் பார்வையிலேயே தன் குற்ற உணர்வையும் காதலையும், புரிதலையும் வெளிபடுத்தும் டஸ்டினுமாக அந்த காட்சிகளெல்லாம் வெகு சிறப்பு.

   இறுதித் காட்சியில் லிஃப்டில் நின்றுகொண்டே தன் கலைந்த தலை முடியை சரிசெய்துகொண்டு தான் எப்படி தோற்றமளிக்கிறேனென்று கேட்கும் காட்சியில் மெரில் ஸ்கோர் செய்கிறார் என்றால், விளையாடுகையில் கீழே விழுந்து அடிபட்டிருக்கும் மகனுடன் மருதுவமனையிலிருக்கும் டஸ்டின் அதற்கு மேலும் ஸ்கோர் செய்துவிடுகிறார்

இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். பல காட்சிகளை இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

 இவர்களின் மகனாக வரும்  ஜஸ்டின் ஹென்றியும்  பாராட்டுக்குரியவன். அத்தனை இளம்வயதில் அவனுடைய உணர்வுபூர்வமான நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.  இது அவனது அறிமுக படம் என்பது மேலும் வியப்பு

 அந்த பிரிவில் கிரேமருக்கும் திருமதி கிரேமருக்கும் முன்பு  முதன்மையாக இருந்தவைகள் மெல்ல மெல்ல இடம் மாறுவதும் அவற்றுக்கு பதிலாக குடும்பமும், காதலும் அந்த இடத்துக்கு வந்து சேர்வதும், அந்த மாற்றம் இருவரின் ஆளுமையிலும் மாற்றமேற்படுத்துவதுமாக படம் முடிகின்றது. மிக மிக அழகிய கவித்துவமான முடிவு

 ஒளி இயக்குனர் நெஸ்டெரின் (Nestor Almendros) காமிராக்கோணங்களும்  படத்தை மேலும் ம் அழகாக்குகின்றது

படப்பிடிப்பின் போது கதா நாயகன் டஸ்டினின்  முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது, மெரில் ஸ்ட்ரீப் தனது  கணவரை அப்போதுதான் நுரையீரல்  புற்றுநோயில் இழந்திருந்தார், கர்ப்பமாகவும் இருந்தார், எனவே இருவரும் தத்தமது அந்தரங்க துக்கங்களுடனும் திரையில் தோன்றுகிறார்கள்.  மெரில் கடைசி காட்சியில் நிறைமாத கர்ப்பிணி எனவே உடைகளுக்கு  மேல் ஒரு ஓவர்கோட்டும் போட்டுக் கொண்டிருப்பார். இப்படி பல காரணங்கள் சேர்ந்து இந்த படத்தை  சிறப்பான தாக்கி விட்டிருக்கிறது.

தாயுமாக இருக்க நேர்ந்த பின்பே தாயின் இடத்தையும் மனைவியின் இடத்தையும் அறிந்துகொண்ட ஒரு தந்தையின் கதையான இது  8 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு,  173 மில்லியன் வசூலித்து 1979 ன் மிக அதிக லாபம் கொடுத்த திரைப்படமாக இருந்தது.  சிறந்த இயக்கம் சிறந்த திரைக்கதை சிறந்த நடிப்பு,- (மெரில் மற்றும் டஸ்டின்)  சிறந்த திரைப்படம் என ஐந்து ஆஸ்கர் விருதுகளையும் பெற்றது

40 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட, பெண்கள் கணவரையும்  ஆண்கள் அலுவலகத்தையும் கலயாணம் செய்துகொண்டிருக்ககையில் நடக்கும் குடும்பத்தின் சிதைவு குறித்த திரைப்படமான இது இன்னும் கொண்டாடப்படுவதன் காரணம் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும் நடிக நடிகர்களின் தேர்வும், மிகச்சிறப்பான நடிப்பும், இயக்கமும் மட்டும் அல்ல, இன்றைக்கும் அதே புரிதலின்மையும் தன்னகங்காரமும் குடும்பங்களில் பிளவையும் சிதைவையும் உண்டாக்கி கொண்டிருப்பதும்தான் 

 உத்தியோகம் புருஷலட்சணம் என்னும் மரபு உடையத்துவங்கி குடும்ப வாழ்வில் பல மாற்றங்களும், பாலின சமத்துவமின்மை குறித்த ஆதங்கங்கள் உலகெங்கிலும் பேசப் பட துவங்கிய 1970களில் இந்த படம் வெளியானதும் மிக முக்கியமானதாக இருந்தது. அப்போதைய கலாச்சார மாற்றத்தை பிரதிபலித்த படமாகவும் இது முக்கியத்துவம் பெற்றிருந்தது

 தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரம் ஒருவரின் விவாகரத்தின் போது அவரது மகள் ’’கணவனும் மனைவியும் பிரிவதில் எனக்கு சொல்ல ஒன்றுமில்லை, அது அவர்களின் அந்தரங்கம்  ஆனால் அன்னையும் தந்தையும் பிரிவது பெரும் துயரளிப்பது  அதில் தனக்கு உடன்பாடில்லை’’என்றார் அதை இந்த படம் நினைவூட்டிக்கொண்டே இருந்தது.