மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ (Jalisco) மலைப் பிரதேசமொன்றில், அட்டோடோனில்கோ நகரில், மிக வறிய குடும்பமொன்றின் தலைவர் திடீரென இறந்தபோது அன்னையையும் ஏழு சகோதர சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் குடும்பத்தின் மூன்றாவது மகனாக இருந்தாலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருந்த 15 வயதான ஹூலியோ ஏற்றுக்கொண்டான். (ஹூலியோ கொன்ஸாலெஸ் ஃப்ரௌஸ்டோ எஸ்ட்ராடா- Julio González-Frausto Estrada)1 தனது மாமாவின் கற்றாழை வயல்களிலும், வைன் திரவத்தைப் பழமையாக்கும் நிலவறைகளிலும் மிகக் கடுமையாக வேலைசெய்து ஹூலியோ பெற்ற வாரச் சம்பளமான ஒன்பது பேஸோக்கள் எட்டு நபர்களடங்கிய அவரது குடும்பத்தின் பசித்தீயை அணைக்கப் போதுமானதாக இல்லை.

மேலும் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில், தனிப்பட்ட முறையில் மெக்ஸிகோவில் அப்போது பிரபல பானமாக இருந்த கற்றாழை மதுவைச் சிறு மரப் பீப்பாய்களில் அடைத்து, அருகில் இருக்கும் நகரங்களுக்குக் குதிரையில் கொண்டுபோய் விற்கத் தொடங்கிய ஹூலியோவிற்கு ஒரு நாளைக்கு 9 பேஸோக்கள் கிடைத்தன. இந்தச் சிறு வணிக முயற்சியில் கற்றாழை மதுவிற்கு இருந்த தேவையும் அதன் சந்தைப்படுத்தலின் வெற்றிகரமான சாத்தியங்களும் அந்த சிறுவனுக்குத் தெளிவாக தெரிந்தன. எட்டு வயதிலிருந்தே மாமாவின் கற்றாழை வயல்களில் விவசாய வேலைகளில் உதவி இருந்த ஹூலியோ மெக்ஸிகோவின் நிலமும், மண்ணும், காலநிலையும் கற்றாழை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவை என்பதையும் அறிந்திருந்தான்.

எப்படியும் முன்னுக்கு வரவேண்டும் என்னும் அனல் உள்ளே எரிந்து கொண்டிருக்கையில் அந்த நகரின் பெரும் செல்வந்தரிடம் கையில் ஒற்றை பேஸோகூட இல்லாத ஹூலியோ தனக்கு 20 ஆயிரம் பேஸோக்கள் கடனாக கொடுத்தால் தானொரு கற்றாழை வடிசாலையை வாங்க முடியுமென்று சொன்னான். அச்சிறுவனின் அசாதாரணமான துடிப்பும், வேகமும் அவனுக்கு இருபதாயிரம் பேஸோக்களை அவரிடமிருந்து பெற்றுக்கொடுத்தன. நீரூற்று என்னும் பொருள் கொண்ட ‘La Primavera’ (‘Spring’) வடிசாலையை ஹூலியோ சொந்தமாக வாங்கியபோது அவருக்கு வயது 14தான்.

அன்று ஹூலியோ விதைத்த அசல் டெக்கீலாவின் விதைதான் இப்போது மெக்ஸிகோவில் விருட்சமாகி இருக்கிறது.

1942ல் வடிசாலையை வாங்கிய ஹூலியோ, 1951 லேயே மிகச்சிறந்த டெக்கீலா சந்தைப்படுத்தலுக்காகவும், டெக்கீலாவின் தரத்துக்காகவும் ’’டான்’’ என்னும் பட்டத்தை பெற்றார். அப்போதிலிருந்து அவர் பெயருக்கு முன்னால் 2012ல், அவரின் 87 ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து இறக்கும்வரை ’டான்’ என்னும் அடைமொழி இருந்தது .

நீலக்கற்றாழை சாகுபடியிலும் ஈடுபட்டிருந்த ஹூலியோ வயலில் ஒவ்வொரு நீலக்கற்றாழைகளையையும் தன் கையாலேயே நடவு செய்தார். அதற்கு முன்னதாக மெக்ஸிகோ வயல்களில் நெருக்கமாக நடவுசெய்தது போலல்லாது வரிசையாக நடப்படும் கற்றழைகளுக்கிடையேயான இடைவெளியைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக்கினார். இடையூறின்றி நன்கு பரவி விரிந்து பெரிதாக வளரத் துவங்கிய கற்றாழைகள் நன்கு முதிரவும் அவகாசமளித்துப் பின்னரே அறுவடை செய்தார்.

வயலில் ஆகப்பெரியதாக இருந்த நீலக்கற்றாழையின் சதைப்பற்றான அன்னாசிப் பழம் போன்ற அடிப்பகுதியை அறுவடைசெய்து, 76 மணி நேரம் சுழற்சி முறையில் வேகவைத்த பிறகு நொதிக்கச் செய்து தான் உருவாக்கிய டெக்கீலா பானத்தை (Tequila Reposado) தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே அளித்தார் ஹூலியோ. அந்த டெக்கீலா அதற்கு முன்னர் உலகம் கண்டிராத சுவையும், மணமும், குணமும் கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் மெக்ஸிகோவில் மதுபான விடுதிகளில் மேசையில் நடுவில் இருக்கும் டெக்கீலா பாட்டில்களின் உயரம் எதிரில் இருப்பவர்களை மறைத்துக் கொண்டு இருக்குமளவுக்கு இருந்தது. இதனால் டெக்கீலா அருந்துபவர்கள் பெரும்பாலும் பாட்டில்களை மேசைக்கடியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஹூலியோ டெக்கீலாவை நிரப்பும் பாட்டில்களின் வடிவமைப்பில் நூற்றாண்டுகளாக இருந்த மரபை உடைத்து, உயரமான பாட்டில்களுக்கு மாற்றாகச் சிறிய தட்டையான அழகிய வடிவங்களில் பாட்டில்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1985 ல் ஒரு குடும்ப விருந்தில் ஹூலியோ தனது சொந்தத் தயாரிப்பான டெக்கீலாவை, தட்டையான, சிறிய சதுர கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விருந்தினர்களுக்கு அளித்தார். அந்த டெக்கீலா அன்றைய விருந்தின் பேசுபொருளான அந்தக் கணத்தில் துவங்கியது வெற்றிகரமான டெக்கீலா சகாப்தம். விருந்தில் கலந்துகொண்ட பெரும் தொழிலதிபரொருவர் ஹூலியோவிடம் இரண்டு வெற்றுக் காசோலைகளை கொடுத்து ’’அதை எப்போது வேண்டுமானாலும் விரும்பிய தொகைக்கு பணமாக்கிக் கொள்ளலாம், ஆனால் தனக்கு ஒரு வருடத்துக்குள் 100 பீப்பாய்கள் அதே டெக்கீலா கொடுத்துவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். ஹூலியோவின் சொந்த தயாரிப்பான டெக்கீலாவும், அழகிய சதுர பாட்டில்களும் பின்னர் வெகு வெகுவாகப் பிரபலமடைந்தன.

மது விடுதிகளிலும் வீடுகளிலும் மேசைகளில் ஹூலியோ உருவாக்கிய அழகிய பாட்டில்கள் வீற்றிருப்பது பெரும் கௌரவமென்று எண்ணுமளவிற்கு அவை புகழ் பெற்றபோது, அந்நகரின் மிகப்பெரிய வடிசாலையை அமைத்தார் ஹூலியோ. அடுத்த 40 வருடங்களுமே டெக்கீலாவின் தரக் கட்டுப்பாட்டிலும் நீலக்கற்றாழை விவசாயத்திலுமே தமது முழுக் கவனத்தையும் செலவழித்தார் டெக்கீலா வர்த்தகத்தின் ’’டான் ஹூலியோ.’’

ஹூலியோவின் 60 வருட அயராத உழைப்பில் அவரது வடிசாலை உலகின் ஆகச்சிறந்த டெக்கீலா உற்பத்தி நிறுவனமாக இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது இளைஞனாக அவர் தொடங்கிய ‘லா ப்ரீமவேரா’ (’La Primavera’), இன்றும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜான் ஹூலியோ என்ற அவரது பெயரில் இருக்கும் டெக்கீலா மெக்ஸிகோவின் அடையாளங்களில் முதன்மையானது.

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் நகரொன்றில் 16ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட, மெக்ஸிகோவின் அடையாளங்களின் ஒன்றான டெக்கீலாவின் வரலாறும் சுவையானதுதான். 1666 வரை அதிகாரபூர்வமாக டெக்கீலா என்பது ஒரு நகரமாக நிறுவப்பட்டிருக்கவில்லை. அந்த நகரில்தான் முதல் முதலாக இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டது.

இந்த மது பானத்திற்கு, இரண்டு தெய்வங்களைக் கொண்டிருந்த மெக்ஸிகோவின் பழங்குடியினரான அஸ்டெக்குகள் ஏதேச்சையாக மின்னல் தாக்கிய கற்றாழைச் செடிகளிலிருந்து வடிந்த இனிப்பான திரவத்தைச் சுவைத்தார்கள். 1521ல் அந்த திரவத்தைப் புளிக்கவைத்து புல்கே (Pulque) என்னும் மதுவை அருந்திவந்தனர்.

ஆஸ்டெக்குகளின் தொன்மமொன்று கற்றாழை மதுபானங்களுக்கான பெண் தெய்வமான ‘மயாஹூவெல்’ (Mayahuel) தனது குழந்தைகளுக்கும், 400 முயல்களுக்கும் தனது ஏராளமான முலைகளால் டெக்கீலாவை அருந்தக் கொடுத்ததாக சொல்லுகிறது.

1519ல் மெக்ஸிகோவை ஆக்கிரமித்த ஸ்பெயின் தேசத்தினர், தாங்கள் கொண்டுவந்த பிராந்தியின் இருப்புக் குறையத் தொடங்கியபோது, மெக்ஸிகோவின் தாவரங்களிலிருந்து மது தயாரிக்க முனைந்தனர். அப்போது அவர்கள் கற்றாழைச் சாறைப் புளிக்கச்செய்து மெஸ்கால் (mezcal) என்னும் வைன் பானத்தை உருவாக்கினார்கள். மெக்ஸிகோவில் ஸ்பெயின் நாட்டினர் கற்றாழை மது உண்டாக்கியதற்கான ஆவணம் 1608ல் கிடைத்திருக்கிறது

17ஆம் நூற்றாண்டில் இந்தக் கற்றாழை மது தயாரிக்கப்பட்ட டெக்கீலா நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாகத் தொடங்கியது. 1750ல் முறையாக டெக்கீலா தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது ஸௌஸா குடும்பத்தினர் (Don Cenobio Sauza) 2 சாதாரண பச்சைக் கற்றாழைகளைவிட நீலக்கற்றாழைகளிலிருந்து தரமான டெக்கீலாவை உண்டாக்கலாமென்று கண்டறிந்த பின்னர் டெக்கீலா தயாரிப்பில் பெரிய புரட்சி உண்டானது.

நீலக்கற்றாழை டெக்கீலா மெக்ஸிகோவில் உள்ள குவானஹுவாடோவில் 1800ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முதல் முறையாகப் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டது.

1873ல் ஸௌஸா டெக்கீலாவின் நிறுவனரும் 1884-1885ஆம் ஆண்டுகளிலிருந்து டெக்கீலா நகராட்சித் தலைவராகவும் இருந்த டான் செனோபியோ ஸௌஸோ மூன்று பீப்பாய்களிலும், ஆறு சீசாக்களிலுமாக மெஸ்கால் டெகீலாவை மெக்சிகோவின் எல்லயைத் தாண்டி அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதுதான் டெக்கிலாவின் முதல் ஏற்றுமதி. டான் சினோபியோ ஸௌஸாவே டெகீலாவின் தந்தை எனக் கருதப்படுகிறார். அதன்பின்னர் டெக்கீலா உருவாக்குவதை அவர்களின் முக்கியக் குடும்பத் தொழிலாகக் கொண்டார்கள்:

டான் செனோபியோவின் பேரனான டான் பிரான்சிஸ்கோ ஹாவியர் “நீலக்கற்றாழைகள் இல்லாத இடத்தில் டெக்கீலா இல்லை!” என்பதை வலியுறுத்தியதற்காக சர்வதேச கவனத்தைப் பெற்றார். உண்மையான டெக்கீலா ஹாலிஸ்கோ மாநிலத்தில் இருந்து மட்டுமே வரமுடியும் என்ற நடவடிக்கைக்கு இவருடைய முயற்சிகள்தான் முக்கிய காரணமாயிருந்தன.

டெக்கீலா நகரில் தயாரிக்கப்பட்ட நீலக்கற்றாழை மது டெக்கீலா என்ற பெயரிலேயே 1890களில் இருந்து அழைக்கப்படலாயிற்று.

1902ல் அதிகாரபூர்வமாக நீலக் கற்றாழை மது டெக்கீலா என்றும் பிற கற்றாழை மது வகைகள் மெஸ்கால் (Mezcal) என்றும் தெளிவான பெயர்களில் வேறுபடுத்தப்பட்டன.. இப்போதைய அசல் டெக்கீலா 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மெக்ஸிகோவின் குவானாஹுவாடோவில் உருவாக்கப்பட்டது.

1974ல் டெக்கீலா மெக்ஸிகோவின் அறிவுசார் சொத்து (Intellectual Property of Mexico) என மெக்ஸிகன் அரசு அறிவித்தது அப்போதிலிருந்து டெக்கீலா மெக்ஸிகோவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்னும் விதியும் உண்டானது. பிற நாடுகள் டெக்கீலா தயாரிப்பது சட்ட விரோத செயலாகும்.

1994ல் தோற்றுவிக்கப்பட்ட டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில் (TRC- Tequila Regulatory Council) டெக்கீலாவின் தரம் சுவை மணம் குறித்த ,தளர்வுகளற்ற கூடுதல் நியதிகளையும் உருவாக்கியது. இந்த குழுமத்தில் மெக்ஸிகன் அரசு, நீலக்கற்றாழை விவசாயிகள்,டெக்கீலா தயாரிப்பாளர்கள், மற்றும் சந்தைப் படுத்துபவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 1377 டெக்கீலா வணிக முத்திரைகள் (பிராண்டுகள்) 137 தயாரிப்பாளர்களால் டெக்கீலா ஒழுங்குமுறை குழுமத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது

நூற்றாண்டுகளாக பிரபலமான, மெக்ஸிகோவின் அடையாளங்களில் ஒன்றான நீலக் கற்றாழை மதுவான டெக்கீலா இப்போதும் மெக்ஸிகோ நாட்டின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் லாஸ் ஆல்டோஸ் மேற்கு மலைத் தொடர்களில் வளரும் நீலக்கற்றாழையிலிருந்து மட்டும் பெறப்படுகிறது.

டெக்கீலா நகரைச் சுற்றியுள்ள பகுதியின் சிவப்பு எரிமலை மண் நீலக்கற்றாழையின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது, அங்கே ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட நீல கற்றாழைச் செடிகள் அறுவடை செய்யப்படுகின்றன. ஹாலிஸ்கோ மாநிலத்திலும், குவானாஹுவாடோ, மீச்சோகான், நய்யாரீத் மற்றும் டமாலிபாஸ் மாநிலங்களின் பகுதிகளில் மட்டுமே இவை தயாரிக்கப்பட வேண்டும் என்று மெக்ஸிகன் சட்டங்கள் குறிப்பிடுகின்றன

குவாடலஹாரா நகருக்கு வடமேற்கே உறங்கும் டெக்கீலா எரிமலையின் அடியிலிருக்கும் வறண்ட புழுதிக் காற்று வீசும் அந்த பள்ளத்தாக்கில் டெக்கீலா நகரம் அமைந்துள்ளது. மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த எரிமலை மண் நிறைந்த 35,019 ஹெக்டேர் பரப்பளவில் கூர் முள் கொண்ட இலைகளுடன் பல்லாயிரம் நீலக்கற்றாழைகள் வான் நோக்கி பச்சைப்பெருமலர்களாக விரிந்துள்ளன. இந்த வயல்கள் உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site) என்னும் அந்தஸ்தை 2006 ல் பெற்றுள்ளன.

நீலக்கற்றாழை வயல்

நீலக்கற்றாழையின் தாவர அறிவியல் பெயர் Agave Tequilana- Weber variety Azul. இவற்றின் இலைகளின் நீலப்பச்சை நிறத்தினால் ’’நீலக்கற்றாழை’’ என கள்ளிகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவரான ஐரோப்பிய தாவரவியலாளர் வேபரினால் (Frédéric Albert Constantin Weber) பெயரிடப்பட்டது..பச்சை நிறத்தில் சதைப்பற்றான, முட்கள் நிறைந்த இலைகளுடன் இருந்தாலும் இவை கள்ளி வகைகள் அல்ல பெருங்கற்றாழை வகை தாவரங்களே.. இச்செடிகளுக்கு அஸ்டெக்குகளின் தெய்வமான மயாஹூவெல்லை குறிக்கும் ’’மாஹே’’ (Maguey) என்றொரு வழங்கு பெயரும் மெக்சிகோவில் உண்டு.

8 ல் இருந்து 14 வருட வாழ்வை கொண்டிருக்கும் இந்த நீலக்கற்றாழைகளின் பேரினத்தின் அகாவெ என்பது கிரேக்க மொழியில் ’’உன்னதமான’’ என்ற பொருள் கொண்டது. சிற்றினத்தின் பெயரான டெக்கீலானா மெக்ஸிகோவின் டெக்கீலா நகரை சேர்ந்த செடி என்பதைக் குறிக்கிறது. ஆஸ்டெக்குகளின் நௌவாட் (Nahuatl) மொழியில் டெக்கீலா ’’அஞ்சலிக்கான இடம்’’ என பொருள்படுகிறது.. அகாவே பேரினத்தின் 166 சிற்றினங்களில் 125 சிற்றினங்கள் மெக்ஸிகோவில் 1964 ல் இருந்து செழித்து வளர்கின்றன.

பொதுவாக 5 அடி உயரம் வரை வளரும் இக்கற்றாழைகள் மெக்ஸிகோவின் கனிம வளம் மிக்க மண்ணில் 6 லிருந்து 7 அடி வரை வளரும். விளிம்புகளில் அடர் நிறத்தில் கூரிய முட்களை கொண்டிருக்கும், வாள் போன்ற, சதைப்பற்றான, சாம்பல் நீலப்பச்சை இலைகள் மலரடுக்கில் 4 அடி நீளம் வரை வளரும். 8 லிருந்து 12 வருடங்களில், 7 அடி உயரம் வரை வளர்ந்த கற்றாழைகள் அறுவடைக்கு தயாராகிவிடும். மலைப்பகுதிகளில் வளரும் நீலக்கற்றாழைகள் 8 வருடங்களிலும், தாழ்நிலங்களில் வளருபவை 12 வருடங்களிலும் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகின்றன.

8 வருடங்களான நீலக்கற்றாழைகளின் இலை அடுக்குகளின் மத்தியிலிருந்து 20 அடி உயரமுள்ள கியோட்டே எனப்படும் (Quiote) மஞ்சரித்தண்டு உருவாகி கிளைத்த மஞ்சரிகளில் பச்சை நிற மலர் கொத்துகள் தோன்றுகின்றன. பாலில்லா இனப்பெருக்கம் செய்யும் அகேவின் மலர்கள் இரவில் மலரும். அவை, மெக்ஸிகோவின் நீள மூக்கு வௌவால்களால் (Leptonycteris nivalis) மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு, கனிகளும் விதைகளும் உருவாகின்றன. மஞ்சரி உருவான பின்பு இலை அடுக்குகள் ஒவ்வொன்றாக அழிந்து பக்கக்கன்றுகளிலிருந்து புதிய தாவரங்கள் வளர தொடங்கும்.

கற்றாழை கருக்களான ஹிஹ்வேலோ (Hijuelo) எனப்படும் இந்த சிறு பக்கச்செடிகள் வேர்க்கிழங்குகளிலிருந்தும் செடிகளின் அடிப்பகுதியிலிருந்தும் வளருகின்றன. இவை எலுமிச்சை, ஆரஞ்சு, மற்றும் திராட்சை கனிகளின் அளவுகளைக் கொண்டு அளவிடப்படுகின்றன. இரண்டாவது வருடத்தில் இருந்து தாய்ச் செடிகளின் பக்கவாட்டில் வளரும் இவை, ஐந்தாம் வருடத்திலிருந்து எடுக்கப்பட்டு, வரிசையாக நடப்படுகின்றன. நீலக்கற்றாழையின் விதைகள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுவதில்லை

2.5 ஏக்கர்களில் சுமார் இரண்டாயிரத்தில் இருந்து நான்காயிரம் நீல கற்றாழைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. பிற பயிர்களைப் போலவே நீலக்கற்றாழைகளுக்கும் களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து பயிர்பாதுகாப்புக்களும் தேவை. நீலக்கற்றாழைகளின் அறுவடை என்பது இலைகளின் அடிப்பகுதியில் இருக்கும் கற்றாழை இதயமான, பெருத்த, எடை கூடிய அன்னாசிப்பழத்தை போன்றிருக்கும் பீன்யாக்கள்தான். (piña). பீன்யா என்பது அன்னாசிப்பழத்தின் ஸ்பானிஷ் பெயர். மாவுச்சத்தும், சிறிதளவு சர்க்கரை சத்தும். நிரம்பிய புதிதாக அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்கள் உருளைக்கிழங்குகளை போல மெல்லிய நறுமணத்துடன் இருக்கும்.

இனப்பெருக்கத்தில் தனது ஆற்றலை நீலக்கற்றாழைகள் செலவழிக்க துவங்கினால் டெக்கீலாவின் தரம் குறைந்துவிடும், எனவே மலர் மஞ்சரிகள் உருவாகும் முன்பே பீன்யாக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பீன்யாக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் இனிப்பு திரவமான அகுவாமியெலில் இருந்துதான் (aquamiel) டெக்கீலா தயரிக்கப்படுகின்றது. பீன்யாக்களின் அளவு பெரிதாகுதலும், . அடிப்பகுதியிலிருக்கும் பென்கா (Pencas) எனப்படும் இலைகள் வாடி உதிர்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

ஹிமாடொர்கள் (Jimadors) எனப்படும் மெக்ஸிகோவின் விவசாயிகளில் ஒரு வகையினர், ஒவ்வொரு செடியிலிருந்தும், இருநூறுக்கும் மேற்பட்ட,கற்றாழையின் இலைகளை கோஆ (Coa) எனப்படும் நீண்ட கைப்பிடி உள்ள, துடுப்பு முனை போன்ற வட்டக் கத்தியால் ஒவ்வொன்றாக செதுக்கி, பீன்யாக்களை எடுப்பார்கள். மிகுந்த உடலுழைப்பை கோரும் செயல் என்பதால் ஹிமாடொர்கள் 5 லிருந்து 6 மணி நேரம் மட்டுமே வேலை அதுவும், சுழற்சி முறையில் செய்வார்கள்.

கற்றாழை சாகுபடி குறித்தும், உரிய நேரத்தில் அவற்றை அறுவடை செய்வது குறித்தும் தலைமுறை அறிவைக்கொண்டு இருக்கும் ஹிமாடொர்களின் வேலை. பீன்யாக்களைச் செதுக்குவது மட்டுமே. செதுக்கிய பீன்யாக்களை சேகரித்து, வண்டிகளில் தொழிற்சாலைகளுக்கு கொண்டு போவதை பிற பணியாளர்கள் செய்வார்கள்.

அதிகாலையிலிருந்து முன்பகல் வரை பணியாற்றும் ஒரு தேர்ந்த ஹிமாடொர் ஒரு நாளில் 100 பீன்யாக்களை செதுக்கி எடுப்பார். விஷ சிலந்திகள், நீலக்கற்றாழைகளின் நெருக்கமான இலையடுக்குகளுக்குள் மறைந்திருக்கும் நச்சுப் பாம்புகளின் ஆபத்துக்களோடு, மிகத் தேர்ந்த ஹிமாடொர்களுக்கு கூரான ’கோஆ’’வினால் கால் விரலை துண்டாக்கி கொள்ளும் ஆபத்தும் நேரிடுகிறது.

செதுக்குதலை திறம்பட செய்யாவிட்டால் பீன்யாக்களில் ஒட்டியிருக்கும் இலைகளின் அடிப்பகுதியின் மெழுகுப்பூச்சு டெக்கீலாவின் தரத்தை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் மிகத்துல்லியமாக, இவை செதுக்கப்பட வேண்டும்.பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் டெக்கீலா தொழிலில் நூற்றாண்டுகளாக மாறாமல் இருப்பது ஹிமாடொர்களின் பணி மட்டுமே. ஹிமாடொர்கள் இல்லாவிட்டால் டெக்கீலா தொழிலே முடங்கிவிடும்.

வெட்டியெடுக்கப்பட்ட பீன்யாக்களில் வெட்டுக்காயங்களைப்போல இருக்கும் சிவப்புத்திட்டுக்களின் எண்ணிக்கை 5 லிருந்து 7 என்றால் அவை மிகச்சரியாக முதிர்ந்திருக்கிறதென்றும், 7க்கும் அதிகமான திட்டுக்கள் இருப்பது தேவைக்கும் அதிகமாக முதிர்ந்து, அழுகிப்போகும் பீன்யாக்களை குறிப்பதாகவும் கணக்கு உண்டு, மிகச் சரியான பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்களிலிருந்து 6 மாதங்களுக்குள் டெக்கீலா எடுக்கப்படவேண்டும்

பீன்யாக்களின் பழுத்தல் அல்லது முதிர்தல் அதிலிருந்து எடுக்கப்படும் டெக்கீலாவின் தரத்துடனும் சுவையுடனும் நேரடியாக தொடர்புடையது. சில நிறுவனங்கள் நன்கு பழுத்தவைகளையும், பிறர் பழுத்தலின் துவக்க நிலையிலும் பீன்யாக்களை பயன்படுத்துகிறார்கள். கூடுதலாகப் பழுத்த சோப்ரே மதுரோ (Sobre maduro) எனப்படும் பீன்யாக்களின் அமிலச்சுவை டெக்கீலாவுக்கு வினிகரின் சுவையை அளித்து விடுகின்றது.

பொதுவாகத் தொழிற்சாலைகளில் டெக்கீலா தயாரிக்க பீன்யாக்களில் இயற்கையாக 21 சதவீத சர்க்கரை அளவு தேவை அதற்கு அதிகமாக 45 சதவீதம் வரையிலும் கூடுதலாக சர்க்கரை அளவை கொடுக்கும் கற்றாழைச் செடிகள் உண்டு.

பீன்யாக்களின் எடை 10 லிருந்து நூறு கிலோக்கள் வரையிலும் இருக்கும். அதிகபட்சமாக 180 கிலோ எடையில் பீன்யா அறுவடை செய்யப்பட்டிருக்கிறது..தோராயமாக 7 கிலோ பீன்யாக்களிலிருந்து ஒரு லிட்டர் டெக்கீலா கிடைக்கும்

பெரும்பாலான நீலக்கற்றாழை செடிகள் மேற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் வளர்க்கப்பட்டு, நாள் முழுவதும் பெரும்பாலான சூரிய ஒளியைப் பெற அனுமதிக்கப்படுகின்றன. இந்தச் செடிகள் உயரமான, அகன்ற, அதிக சாறு நிரம்பியதாக இருக்கின்றன. தாழ்நிலங்களில் வளர்க்கப்படும் டெக்கீலாக்கள் மிகுந்த மண் வாசனையை பெற்றிருக்கின்றன

அறுவடை செய்யப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பீன்யாக்கள் ஒரே அளவாக கோடாலிகளால் பிளக்கப்பட்டு சீராக வேக வைக்கப்படுகின்றன. பழமையான ஹோர்னோ (Horno) எனப்படும் நீராவி அடுப்புகளில் வேக வைக்கப்படுகையில் இவற்றில் இருக்கும் இனுலின் (inulin) மாவுச்சத்து சர்க்கரையாக மாற்றப்படுகின்றது..இந்த சர்க்கரையே நொதித்தலின் போது ஆல்கஹாலாகின்றது.

.இப்போது ஹோர்னோ நீராவி அடுப்புக்களுக்கு பதிலாக நவீன பிரஷர் குக்கர்களும் ஆட்டோக்ளேவ் களும் கூட உபயோகத்தில் இருக்கின்றன

24 லிருந்து 48 மணி நேரம் மெதுவாக வேக வைக்கப்பட்ட பீன்யாக்கள் அடர் பழுப்பு நிறம் அடைகின்றன. பின்னர் இவை 16 லிருந்து 48 மணி நேரம் குளிர்விக்கப்படுகிறன. குளிர்ந்த பீன்யாக்கள் கழுதைகள் அல்லது கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் டாஓனா(Tahona) எனப்படும் வட்டக்கல் செக்குகளில் அரைக்கப்படுகின்றன.

தற்போது பல நவீன அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் மெக்ஸிகோவின் 6 பிரபல டெக்கீலா நிறுவனங்கள் இன்னும் இந்த கல்செக்கைத்தான் பயன்படுத்துகின்றன. நீர் சேர்ந்து அரைக்கப்ட்ட பீன்யாக்களின் குழம்பு மாஸ்டோ (mosto) எனப்படுகிறது மாஸ்டோவிலிருந்து இனிப்பு திரவம் சக்கைகளிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அரைத்த விழுதில் நீர் தெளித்து சக்கை பிழிந்து எடுக்கப்பட்ட திரவம் நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. சக்கைகளும் பயன்படுத்தப்பட்ட நீரும் கழிவுப்பொருட்களாக வெளியேறுகின்றன.

அஹுவாமியெல் (Aguamiel) எனப்படும் இந்த நீலக்கற்றாழைச் சாற்றின் சர்க்கரை அளவு துல்லியமாக கணக்கிடப்பட்ட பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட காடிச் சத்துகள் (Yeast) சேர்ககப்பட்டு திறந்த அல்லது மூடிய மரத்தொட்டிகளில் 24 லிருந்து 96 மணி நேரம் நொதித்தல் நடைபெறும். முதல் காய்ச்சி வடிகட்டுதல் முறை டெஸ்ட்ரொஸாமியெண்ட்டோ(Destrozamiento) என்று அழைக்கப்படுகிறது. அதில் கிட்டும் திரவம் 20லிருந்து 25 சதவீத ஆல்கஹால் அளவைக் கொண்டிருக்கும், இந்தத் திரவம் ஒர்தினாரியோ என்று அறியப்படுகிறது. இரண்டாவது முறை காய்ச்சி வடிகட்டும் முறைக்கு ரெக்டிஃபிகாசியோன் என்று பெயர். இப்படி காய்ச்சி வடிகட்டப்பட்ட 55 லிருந்து 75 சதவீத ஆல்கஹால் இருக்கும். இதுதான் டெக்கீலா என்று அழைக்கப்படக் கூடியது. அரிதாக சில நிறுவனங்கள் மூன்றாவது காய்ச்சி வடிகட்டலுக்கும் போவதுண்டு.

முதல் வடிகட்டலில் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகின்றது. இரண்டாம் வடிகட்டலில் மேலும் தூய்மையாக்கப்படும் திரவத்திலிருந்து கிட்டுவது ’ப்ளான்கோ’ டெக்கீலா என்று விற்பனையாகிறது. இத்தனை காய்ச்சி வடிகட்டிய பின்னரும் நீலக்கற்றாழையின் பிரத்யேக நறுமணமும் மண்ணின் மணமும் டெக்கீலாவில் அப்படியே இருக்கும்

.இறுதியாக கிடைக்கும் 100 சதவீத ஆல்கஹால் அளவிற்கு நொதிக்க வைத்த கடுமையான டெக்கீலாவில் தண்ணீரைக் கலந்து தேவையான ஆல்கஹால் அளவு நிர்ணயிக்கப்படுகிறது,. வடிசாலிகளில் கிடைக்கும் டெக்கீலா அப்படியே பாட்டில்களில் நிரப்பப்பட்டு இளமையான டெக்கீலா வாக விற்பனைக்கு வரும் அல்லது ஓக் மர பீப்பாய்களில் நிரப்பப்பட்டு பழமையாக்குதலுக்கு உட்படுத்தப்படும்.

பழமையாக்குதல் நடைபெறும் பீப்பாய்கள் உருவாக்கப்பட்ட ஓக் மரத்தின் தன்மை, இதற்கு முன்னர் அதில் நிரப்பப்பட்டிருந்த பானத்தின் இயல்பு, பீப்பாயின் வெப்பம், ஈரப்பதம், உள்ளே நிரப்பத்துவங்குகையில் டெக்கீலாவின் துவக்க ஆல்கஹால் அளவு ஆகியவை டெக்கீலாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கும். நெருப்பில் வாட்டி கருக்கிய ஓக் மரப்பட்டைகளை இணைத்து செய்யப்பட்ட பீப்பாய்களிலும் டெக்கீலா பழமையாக்கப்படும். இந்த வகை டெக்கீலா ‘ரெபொஸாடோ’ அல்லது ‘அன்யேஹோ’ என்று அறியப்படுகின்றன. [ரெபொஸாடோ =மென்மையான அல்லது அமைதியான; அன்யேஹோ= நன்கு பதப்பட்ட, முதிர்ந்த என்ற பொருள் தரும் சொற்கள்.)

பழமையாக்கப்பட்ட டெக்கீலாவில் ஓக், மரப்பட்டை சாறு, சர்க்கரை ஆகியவை பின்னர், பிரத்யேக நறுமணம் மற்றும் சுவையின் பொருட்டு சேர்க்கப்படுவது முண்டு

குறைந்தபட்ச ஆல்கஹால் அளவு 38 சதவீதமும் அதிகபட்சமாக 55 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்ட டெக்கீலா கரிச்சல்லடைகளில் வடிகட்டப்பட்டு உற்பத்தி நிலையத்திலேயே டெக்கீலா பாட்டில்களில் நிரப்பப்படவேண்டும் என்னும் சட்டத்தின்படி அங்கேயே விற்பனைக்கு தயாராகின்றன.

டெக்கீலாவில், 100 சதவீத ஆல்கஹால் அளவுடன் இருக்கும் அசல் டெக்கீலா மற்றும் மிக்ஸ்டோ எனப்படும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட 51 சதவீத ஆல்கஹால் அளவுள்ள மலிவான டெக்கீலா என இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . இவ்விரண்டில் பழமையாக்குதலின் அடிப்படையில் பிற வகைகள் உருவாகின்றன.

வெள்ளை (பிளான்கோ), ப்ளாட்டினம் மற்றும் வெள்ளி டெக்கீலாக்கள் (ப்ளாட்டா), இரண்டு மாதங்கள் மட்டும் பழமையாக்கபட்டிருக்கும். இவை பழமையாக்கப்பட்டிருக்காதவை, இளமையானவை (Blanco, White, Plata, Platinum, or Silver)

மிக்ஸ்டோ வகையை சேர்ந்த பொன், ஓடோ அல்லது ஹோவென் டெக்கீலாக்கள் செயற்கையாக மணமும் நிறமுமேற்றப்பட்டவை, இளமையானவை (Gold, Oro, or Joven)

ரெபோஸாடோ டெக்கீலாக்கள் 2 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை பழமையாக்கப்பட்டவை .(Reposado )

அன்யேஹோ வகை டெக்கீலாக்கள் குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்கள் ஓக் மரப்பீப்பாய்களில் பழமையாக்கப்பட்டவை. அன்யேஹோ என்றால் லத்தீன மொழியில் ஒரு வருடம் பழமையான என்று பொருள்.

எக்ஸ்ட்ரா அன்யேஹோ டெக்கீலாக்கள் 2006 லிருந்து தயாரிக்கப்படுகின்றன இவை குறைந்தது மூன்று வருடங்களுக்கு 600 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட ஓக் மரப் பீப்பாய்களில் வைத்து மித மிஞ்சி பழமையாக்கப்படுவது.

சில சமயம் டெகீலாவுடன் புதினா எலுமிச்சை ஆரஞ்சு மசாலா பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படும்

டெக்கீலாவை எவற்றுடன் கலக்கலாம், எவற்றுடன் கலக்கவே கூடாது டெக்கீலாவை எப்படி அருந்துவது. போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களை ’’டெக்கீலா சுவை சக்கரம்’’ என்னும் சித்திரத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த சித்திரம் டெக்கீலா விடுதிகளிலும் சுற்றுலா தளங்களிலும் கிடைக்கும்

பொதுவாக டெக்கீலா வைன் கோப்பைகளிலும் டம்ளர்களிலும் கூட அருந்தப்பட்டாலும் டெக்கீலாவுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட கோப்பைகளும் உள்ளன.

1924 லிருந்து டெக்கீலாவின் கற்றாழை மணத்தை போக்குவதற்காக உப்பும் எலுமிச்சை துண்டுகளும் பரப்பியிருக்கும் தட்டுக்களில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்படிருக்கும் கண்ணாடிக்கோப்பைகளை எடுத்து விளிம்புகளில் ஒட்டியிருக்கும் உப்புத்தூளுடனும் எலுமிச்சை சாற்றுடனுமே டெக்கீலா அருந்தப்பட்டது. நவீன தொழில்நுட்ப மாற்றங்களினால் இப்போதைய டெக்கீலாக்கள் அனைவரும் விரும்பும் சுவையும் பிரெத்யேக மணமும் கொண்டிருக்கின்றன’

265 வருடங்களாக குடும்ப தொழிலாக நவீன கண்ணாடிக்கோப்பைகளை தயாரிக்கும் பிரபல ரீடல் நிறுவனம் (RIEDEL ) டெக்கீலாவின் சுவையையும் மணத்தையும் நாவிற்கு அசலாக அளிக்கும் பிரத்யேக டெக்கீலா கோப்பைகளை பத்து டாலர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில் ரீடல் உருவாக்கிய இந்த உவர்ச்சர் டெக்கீலா கோப்பையை (Ouverture Tequila glass) 2002ஆம் ஆண்டில் “அதிகார பூர்வ டெக்கீலா கோப்பை” என்று அங்கீகரித்துள்ளது.

கூடுதல் சேர்மானங்கள் இல்லாத துல்லிய டெக்கீலா கவயீட்டோ (Caballito-ஸ்பானிஷ் மொழியில் “சிறிய குதிரை”) எனப்படும் குறுகலான கோப்பையில் நேர்த்தியாக பரிமாறப்படுகிறது, விளிம்புகளில் உப்பு அல்லது சர்க்கரை தடவப்பட்ட மார்கரீட்டா கோப்பைகள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன ( Margarita Glass)

2003 ஆம் ஆண்டில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முன்னர் மெக்ஸிகோவில் தயாரிக்கப்படும் டெக்கீலா அனைத்தும் மெக்ஸிகோவில்தான் புட்டிகளில் அடைக்கப்பட வேண்டும் என்பதைக் கோரும் முன்மொழிவை மெக்ஸிகோ வெளியிட்டது. .இந்தச் சட்டம் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறுகின்றன என்றும் உலகம் முழுவதிலுமான வழக்கமான ஏற்றுமதி நடவடிக்கைகளோடு உடன்படவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள மதுபான நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. எனினும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 17 ல், அமெரிக்காவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவிற்குள் அதிக அளவில் டெக்கீலா இறக்குமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.. இப்போது அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும், மெக்ஸிகோவின் மொத்த டெக்கீலா உற்பத்தியில் 75 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவில் ஜூலை 24 ஆம் தேதி டெக்கீலா தினமாக கொண்டாடப்படுகிறது

மெக்ஸிகோவில் மட்டுமே ஆண்டுக்கு 500 மில்லியன் கற்றாழைக்கள் சாகுபடி செய்யப்பட்டு, 500 மில்லியன் டாலர் .மதிப்புள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் லிட்டர்கள் டெக்கீலா ஆண்டுதோறும் தயாராகின்றது டெக்கீலா நகரில் மட்டுமே 20 டெக்கீலா வடிசாலைகள் அமைந்துள்ளன..

ஒவ்வொரு டெக்கீலா வடிசாலையும் அவர்களுக்கான் பிரத்யேக NOM எனப்படும் (Norma Oficial Mexicana) எண்ணை கொண்டிருக்கவேண்டும். இந்த எண்கள் அந்நிறுவனத்தின் எல்லா டெக்கீலா பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கவும் வேண்டும்

1997 லிருந்து டெக்கீலா நகரிலிருந்து சுற்றுலா பயணிகளை நீலக்கற்றாழை வயல்களுக்கும் வடிசாலைகளுக்கும் அழைத்துச்செல்ல அலங்கரிக்கப்பட டெக்கீலா விரைவு பேருந்துகளும் மெக்ஸிகோவில் உள்ளது..

2006 ம் வருடத்திலிருந்து மெக்ஸிகோவில் டெக்கீலா சுற்றுலா மிக பிரபலமாகி வருகிறது. மிகுந்த பொருட்செலவில் ஒரு சில நிறுவனங்கள் ஹெலிகாப்டரில் டெக்கீலா வடிசாலைக்க்கும், நீலக்கற்றாழை வயல்களுக்கும் அழைத்துச்செல்லும் சுற்றுலாக்ளுக்கும் நல்ல வரவேற்பிருக்கிறது. சுமாராக ஒரு நபருக்கு இவ்வகையான சுற்றுலாக்கள் இருபதாயிரம் டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது

மண்டை ஓடுகளை போல, கள்ளிச்செடிகளைப் போல, கண்ணீர்த்துளிகளை போல, இதய வடிவில் என பல வடிவங்களில் 928 வகையான டெக்கீலாக்களின் .1799 பாட்டில்களை வைத்திருந்ததற்காக , Nuestros Dulces என்னும் மெக்ஸிகோவின் டெக்கீலாவும் இனிப்புகளும் விற்பனை செய்யும் சிறிய கடை 2014ல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. தேசிய டெக்கீலா அருங்காட்சியகமும் டெக்கீலா நகரில் அமைந்திருக்கிறது

மெக்ஸிகோவில் தயாரிக்கப்பட்டது என்னும் வாசகமான “hecho en México” பாட்டில்களில் இருப்பவையே அசல் டெக்கீலாக்கள். சில குறிப்பிட்ட டெக்கீலா பிராண்டுகள் பலநூறு ஆண்டுகளாக குடும்ப தொழிலாக இருந்து வருகின்றன.

டெக்கீலாவை குறித்த ஒரு தவறான எண்ணம் அதில் புழுக்கள் இருக்கும் என்று நம்புவது. டெக்கீலாவில் புழுக்கள் இருக்காது கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகே டெக்கீலா சந்தைப்படுத்த படுகிறது. .ஒயாக்ஸகா மாநிலத்தில் இருந்து வரும் ஒரு சில மெஸ்கல்களில் மட்டுமே புழுக்கள் இருக்கும்.

2008 ஆம் ஆண்டில், மெக்ஸிகோவின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டெக்கீலாவிலிருந்து செயற்கை வைரங்களை உருவாக்கி இருக்கிறார்கள் டெக்கீலாவை ஆவியாக்குவதற்கான 800 டிகிரிகள் செல்சியசுக்கும் மேலாக (1,400 டிகிரி பாரன்ஹீட்) டெக்கீலா வெப்பபப்டுத்தப்படுகையில் அதன் உட்பொருட்கள் குளிர்ந்து ஒரு சமமான தூய அடுக்காக இரும்பு அல்லது சிலிக்கான் பாத்திரங்களில் வைரத்துகள்களாக படிகின்றன. 100–400 நானோ மீட்டர் விட்டம் கொண்டிருக்கும் இந்த வைரங்கள். ஆபரணங்களை உருவாக்க முடியாத அளவிற்கு நுண்ணியவை என்றாலும் இது செயற்கை வைரங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான முன்னெடுப்பு.

டெக்கீலாவின் வெற்றிகரமான அமெரிக்க சந்தையில் பல துறை பிரபலங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலர் டெக்கீலா வடிசாலைகளுக்கும் நீலக்கற்றாழை வயல்களுக்கும் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க பிரபல நடிகரும், மல்யுத்தவீரரும். கட்டுமஸ்தான உடலுக்கு உலகெங்கிலும் புகழ்பெற்றவருமான டுவேன் ஜான்சன் (Dwayne Johnson) உரிமையாளராக இருக்கும் ’’மண் மணம் கொண்ட பானம்’’ என்னும் பொருள் கொண்ட டெரிமானா (Teremana) 3 டெக்கீலா நிறுவனமும், அங்கு தயாராகும் டெக்கீலாக்களும் மெக்ஸிகோவின் முதல் தரமான டெக்கீலாக்களாக கருதப்படுகின்றன .மெக்ஸிகோவில் டெக்கீலா வடிசாலைகளில் உருவாகும் கழிவுப்பொருளான வினேஸ் (vinasse) சக்கையை பிற நிறுவனங்கள் எரித்து சூழல் மாசை உருவாக்குகையில் டுவேன் அவற்றை மட்க செய்து உரமாக்கி தனது நீல கற்றாழை வயலில் உரமாக உபயோக்கிக்கிறார்.. வடிசாலையின் நீர்கழிவுகளும் மறு சுழற்சி செய்யப்பட்டு இவரது வயலுக்கே பாய்கிறது.

ரெட் ராக்கர் என்று அழைக்கப்படும் அமெரிக்க பாடகரும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், தொழிலதிபருமான ராய் காஜர் அமெரிக்க எழுத்தாளரும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும், தொடர் உணவகங்களின் உரிமையாளருமான ’கை ராம்சே ஃபியெரியுடன் (Guy Ramsay Fieri) இணைந்து 1991 லிருந்து 30 வருடங்களாக டெக்கீலா வர்த்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. இவர்களின் கேபோ-வாபோ(Cabo Wabo) வணிகமுத்திரைகொண்ட டெக்கீலாவான ’’மெஸ்கீலா’’ (Mezquila) தான் உலகின் முதல் டெக்கீலா- மெஸ்கால் கலவை,

2020ல் துவங்கப்பட்ட ஓண்டா (Onda) என்னும் உலோக கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் டெக்கீலாக்களை தயரிக்கும் நிறுவனத்திற்கு பிரபல நடிகையும் மாடலுமான ஷேய் மிச்செலும் (Shay Mitchell) ஒரு பங்குதாரர்.

பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனி அவர் மனைவி அமல் க்ளூனி, தொழிலதிபர் ரெண்டே கெர்பர் மற்றும் சூப்பர் மாடல் சிண்டி க்ராஃபோர்ட் ஆகியோர் இணைந்து 2013 ல் துவங்கிய டெக்கீலா நிறுவனத்தின் காஸ்மிகோஸ் (Casamigos) டெக்கீலாக்கள் வெகு பிரபலம். மிக மென்மையான இந்த டெக்கீலாக்களை உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்காமல் அருந்தலாம். இந்த நிறுவனம் சுமார் 700 மிலியன் டாலர்களுக்கு 2017 இல் க்ளூனி, மற்றும் இதர பங்குதாரர்களால் விற்கப்பட்டிருக்கிறது.

’’வைன் மற்றும் பிற மதுபானங்களுக்கான சர்வதேச போட்டி” யில் 2020 ஆண்டுக்கான மிகச்சிறந்த டெக்கீலாவாக ஹாலிவுட் நடிகை கெண்டல் ஜென்னரின் (Kendall jenner) ‘’818 டெக்கீலா” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெக்கீலா பானத்தை குறித்தும், அதை அருந்தும் அனுபவங்களை குறித்தும் ஏராளமான புதுமொழிகளும், பாடல்களும் கவிதைகளும் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கிறது

உங்களுக்குள் இருக்கும் வெளித்தெரியாத திறமைகளை டெக்கீலா வெளிக்கொண்டு வரும்
வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சைகளை கொடுத்தால் நீங்கள் அதனுடன் டெக்கீலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
அனைவரையும் மகிழ்விக்க முயலாதீர்கள், நீங்கள் டெக்கீலா அல்லர்
இழந்த இளமையை மீட்டெடுக்க ஒரே வழி டெக்கீலா அருந்துவது
– ஆகியவை மிக அதிகமாகப் புழக்கத்தில் இருப்பவை.

டெக்கீலா குறித்த ஒரு பிரபல ஆங்கில பாடல் வரி ’’டெக்கீலா எனக்குள் சிறகடிக்கும் சிறு பறவை’’ என்கிறது. டெக்கிலாவின் சிறகடிப்பை இனி உணர்பவர்கள் டெக்கீலா பானம் கடந்து வந்திருக்கும் நீண்ட பாதையையும் நினைவில் கொள்ளலாம்.

மேல் தகவல்களுக்கு:

  1. The story of Don Julio Tequila – Master of Malt Blog
  2. Don Cenobio Sauza – Wikipedia
  3. Teremana Tequila 
  4. https://youtu.be/3ngId1AZ0TI
  5. http://uktequilaforum.co.uk/showthread.php?tid=258

சொல்வனம் தளத்தில்