கிராமங்களால்  சூழப்பட்டிருக்கும்   சிறு  நகர்களில்  மகப்பேறு  மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகளுக்கும் அருகிலிருக்கும் சின்ன  சின்ன  மருந்தகங்களில்  கர்ப்பிணி பெண்கள்  குங்குமச்சிமிழ்  போன்ற  சிறு   பெட்டிகளில்  700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம்  குங்குமப்பூ வாங்கி செல்லுவதை  சாதாரணமாக  காணலாம்.

உண்மையில்  இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் செல்லுவது  குங்குமப்பூவே  அல்ல, அவை பெரும்பாலும்  உலர வைக்கப்பட்ட பீட்ரூட் துருவல்களாகவோ அல்லது சாயமேற்றப்பட்ட பெருஞ்சாமந்தி மலரிதழ்களாகவோ தான் இருக்கும். அரிதாகவே அசல் என்று மேலும் அதிக விலைக்கு  விற்பனை செய்யப்படும் கடைகளில் கிடைப்பதில்,   குங்குமப்பூவின் சூலகமுடிகளின் அடிப்புகுதி சிறிதளவு இருக்கலாம்

 இப்படி போலிகளை  விற்பதும் வாங்குவதும் முட்டாள் தனம் என்றால்,   கர்ப்பிணிகள்   குங்குமப்பூ  சாப்பிட்டால்  குழந்தை குங்குமப்பூவின்  நிறத்தில் இருக்கும் என்னும் நம்பிக்கை அதைக்காட்டிலும்  முட்டாள் தனமானது.  குங்குமப்பூ  குறித்தும்,  அதன் நன்மைகளை, அதிகம் உட்கொண்டால் உண்டாகக்கூடிய உடல் உபாதைகளை,  ஆபத்துக்களை,  அசலையும்  போலியையும்  பிரித்தறியும் முறைகளையெல்லாம்  அறிந்து கொள்வது  அவசியமாகிவிட்டிருக்கிறது.

குங்குமப்பூ மிகவும் சுவாரஸ்யமான ஒரு தாவரம். இது ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக. அதன்  நிறம், சுவை, மணம், பயன்கள் மற்றும்  அறுவடைக்கு  செலவழிக்கபப்டும் நேரம் ஆகியவற்றின் பொருட்டு   உலக வரலாறு  முழுவதும்  போற்றப்படுகிறது.

 அகழ்வாய்வுகளில் 50 ஆயிரமாண்டுகளுக்கு முன்பு குங்குமப்பூ சாயமேற்றப்பட்ட பொருட்களின் எச்சங்கள் மேற்கு ஈரானில் கண்டறியப்பட்டுள்ளன. சுமேரியர்கள் குங்குமப்பூ கலக்கப்பட்ட  பானங்களை மந்திர தந்திரங்களுக்கும் , பூசனைகளுக்கும் சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர். பண்டைய பெர்சியாவில் தெய்வங்களுக்கும அரச குடும்பத்தினருக்குமான உடைகளனைத்தும் குங்குமப்பூ சாயமேற்றப்பட்டன.

மாவீரர் அலெக்ஸாண்டர் தனது போர் காயங்களுக்கு பெர்ஷியாவின் குங்குமப்பூவை மருந்தாக பயன்படுத்தியிருக்கிறார்.  கிளியோபாட்ரா  தன்  கன்ன  மேடுகளுக்கு   குங்குமப்பூக்களால் செம்மையூட்டியதையும், ரோமானியர்கள் குங்குமப்பூ இழைகளால் நிரப்பப்பட்ட தலையணைகளில் படுத்துறங்கியதையும், குளியல் தொட்டிகளில் குங்குமபூக்களிட்டு  செஞ்சிவப்பு நீரில்  குளித்ததையும்  வரலாறு  சொல்லுகின்றது.

பாலில் குங்குமப்பூ கலந்து அருந்துவது பாலுணர்வை தூண்டும் என்பதால் புதுமணத் தம்பதிகளுக்கு பல கலாச்சாரங்களில் இப்பானம் அளிக்கப்பட்டு வருகின்றது..

 மிகப்பழமையான, விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில்  ஒன்றான  குங்குமப்பூ      எனப்படும்  இந்த சாஃப்ரன் (saffron)  குரோக்கஸ் சடைவஸ்  (Crocus sativus),  என்னும்   இரிடேசீயே   (Iridaceae)  தாவரக் குடும்பத்தைச்  சேர்ந்த  பல்லாண்டுத் தாவரம்.   இது  சிவப்புதங்கம்,  (Red Gold)  எனவும்  அழைக்கப்படுகின்றது..  saffron என்னும் பிரெஞ்சு மொழி சொல்லின், வேர் அரபி மொழியில்  ’மஞ்சள்’  என  பொருள்படும்  லத்தீன் சொல்லான safranum என்பதில் இருக்கிறது

 மத்தியதரைக் கடல்   பகுதிகளிலும் அவற்றை ஒத்த , உலர்ந்த கோடைத் தென்றல் வீசும் பகுதியிலும் அதிகமாக வளரும் இவை உறைபனி களையும், குளிர் மிகுந்த  பனிக்கட்டி  மூடியிருக்கும் சூழலையும் தாங்கி வளரக்கூடியவை. 

குங்குமப்பூச் செடியின் சாகுபடி வரலாறு 3,000  ஆண்டுகளுக்கு முற்பட்டது.  காட்டு குங்குமப்பூ- wild saffron,  குரோக்கஸ் கார்ட்ரைட்டியானஸ்  (Crocus cartwrightianus)     செடியை  இனவிருத்தி மற்றும் கலப்பினம் செய்ததன் மூலம்  நீளமான சூலக முடிகளை (Style )  கொண்ட  இப்போது  அதிகம் பயிரிடப்படும் Crocus sativus  செடி  உருவாக்கப்பட்டது.  முன்னூறு அல்லது  நானூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  அரேபியாவிலும்  ஸ்பெயினிலும்  துவங்கிய குங்குமப்பூ சாகுபடி   பின்னர்  மெதுவாக  ஈரான்,   இந்தியா,  ஸ்வீடன்  நாடுகளுக்கு பரவியது.   

குங்குமப்பூ சாகுபடிக்கு உயர் கரிமப் பொருட்களை கொண்ட, தளர்வான, அடர்த்தி குறைந்த, நன்கு நீர் பாய்ச்சப்பட்ட,   சுண்ணாம்பு  நிறைந்த களி மண்  வகைகள் (clay-calcareous)  உகந்தவை.  நல்ல  சூரிய ஒளியில்  அவை மிகச்சிறப்பாக  வளர்வதால்,  சூரிய ஒளியை  நோக்கி சரிவாக  அமைந்த  நிலப்பகுதிகளில்  பாரம்பரியமான  மேட்டுப்பாத்தி  முறையில் இச்செடிகள் பயிர் செய்யப்படுகிறது   

குங்குமப்பூ சாகுபடிக்கு வளமான மழை நிறைந்த இளவேனில் காலமும் உலர்ந்த கோடைக்காலமும் மிக உகந்தவையாகும்.  இவற்றின் இள ஊதா நிறப் பூக்கள்  முளைக்கும் திறன் உள்ள  விதைகளை  உருவாக்குவதில்லை  அதனால்  நிலத்துக்குக்  கீழே இருக்கும்  பழுப்பு  நிறமான  4.5 செ.மீ   அளவுள்ள   குமிழ்  போன்ற  தண்டுக்கிழங்குகளைத் தோண்டி எடுத்து, சிறு துண்டுகளாக உடைத்து நட்டு வைப்பதன் மூலம் இவற்றை பயிரிட முடியும்.. ஒரு கிழங்கை உடைத்து, பிரித்து நடுவதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட  புதிய தாவரங்களைப் பெறலாம்

கோடை காலத்தில்  உறக்க  நிலையில்  உள்ள தண்டுக்கிழங்குகள்,  இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் தமது குறுகலான இலைகளைத் துளிர்த்து, மொட்டு விடத் தொடங்குகின்றன. இவை அக்டோபர் மாதத்தில்,பல மென் வரிகளைக்  கொண்ட சாம்பல்  கலந்த ஊதா நிறமுடைய  பூக்களை  உருவாக்கும்..  பூக்கும்  காலத்தில்  இந்தத்  தாவரங்களின்  சராசரி உயரம் 30 சென்டி மீட்டருக்கும்  குறைவாக  இருக்கும். பூப்பதற்கு சற்று முன்னர் வரும் மழைப் பொழிவு குங்குமப்பூவின் விளைச்சலை  ஊக்குவித்து அதிகமாக்குகிறது

இலையுதிர் காலத்தின் மத்தியப் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் எல்லாச் செடிகளும் பூக்கின்றன காலையில் மலரும் பூக்கள் மாலைக்குள் வாடத் தொடங்கிவிடுகின்றன என்பதால் அறுவடை மிக வேகமாக நடக்கும்.

 3 அல்லது 4 நாட்கள் வரையே   உதிராமல்  இருக்கும்  மலர்களை கைகளால் பறித்து,  கூடைகளில் சேகரித்து,  குறிப்பிட்ட வெப்ப நிலையிலிருக்கும் அறைகளின் கூரையிலிருந்து தொங்க விடுவார்கள். மலர்கள் உலர்ந்ததும் சூல் முடிகள்  கவனமாக  பிரித்தெடுக்கப்படும்.  இந்த தயாரிப்புக்களே ஏறக்குறைய ஒரு வாரகாலம் நடக்கும்

ஒவ்வொரு பூவிலிருந்தும் மூன்று நீட்சிகள் உடைய சூல் தண்டுகள்  (style)   உருவாகின்றன . அவை ஒவ்வொன்றின் முனையிலும் 25-30 மி.மீ  அளவில்  கருஞ்சிவப்பு  நிறமுள்ள  சூலகமுடிகள் (stigma)  காணப்படுகின்றன.  பூ  என  பொதுவில்  அழைக்கப்பட்டாலும்  உண்மையில் இந்த  சூல் முடிகளே  குங்குமப்பூ  என  அறியப்படுபவை.  தனித்த   உலர்ந்த  சூலகமுடியின்.  நீளம் சுமாராக 20 மி.மீ இருக்கும்.

 குங்குமப்பூவின், உலர்ந்த வைக்கோல் போன்ற மணத்திற்கும், நிறத்திற்கும், சுவைக்கும் மருத்துவ குணங்களுக்கும் எளிதில் ஆவியாகின்ற, நறுமணம் தருகின்ற 150 க்கும் அதிகமான சேர்மங்களும் பல ஆவியாகாத செயல்மிகு வேதிக் கூறுகள் உள்ளன.

 இவற்றில் ஜியாஸேந்தின் (zeaxanthin), லைக்கோப்பீன் (lycopene) மற்றும் பல்வேறு வகையான ஆல்ஃபா (α) மற்றும் பீட்டா-கரோட்டின்கள்  ஆகியவை  முக்கியமானவை.  குங்குமப்பூவின்  தங்கம் போன்ற மஞ்சள்-செஞ்சிவப்பு  நிறத்திற்கு   ஆல்ஃபா (α) குரோசினும்.   கசப்பான சுவைக்கு  குளுக்கோசைட்டு  பிக்ரோகுரோசினும் காரணமாகும்.  உலர்ந்த குங்குமபூவில்  65%  கார்போஹய்ட்ரேட்டுக்களும்,   6% கொழுப்பும்,  11% புரதமும் இருக்கும்.. உலர்ந்த குங்குமப்பூவை, வளிமண்ட ஆக்ஸிஜனுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு  காற்றுப் புகாத கொள்கலன்களில் சேமிக்க வேண்டும்

 150 பூக்களிலிருந்து 1 கிராம் உலர்ந்த குங்குமப்பூ இழைகள் மட்டுமே  கிடைக்கின்றன.  ஒரு பவுண்டு (454 கிராம்கள்) உலர் குங்குமப்பூவை உற்பத்தி செய்ய 50,000–75,000 பூக்கள்  தேவைப்படுகின்றது.  இது ஒரு கால்பந்து  மைதானத்தின்  பரப்பளவில்  மேற்கொள்ளப்படும்   பயிரிடுதலுக்குச் சமமானது மேலும் 150,000 பூக்களை கைகளால்  பறிப்பதற்கு  நாற்பது  மணிநேரம்  வேலை செய்ய வேண்டியுள்ளது.

 பிரகாசமான கருஞ்சிவப்பு நிறம், சிறிதளவு ஈரத்தன்மை, நெகிழ்த்தன்மை, உடைந்த இழைத் துகள்கள் இல்லாமல் இருப்பது ஆகியவையே  தரமான புத்தம் புது குங்குமப்பூவின் இயல்புகளாகும்.

உலகெங்கும் குங்குமப்பூவின் பல பயிர்வகைகள் வளர்க்கப்படுகின்றன. ஸ்பேனிஷ் சுபீரியர்’ (Spanish Superior) என்றும், ‘கிரீம்’ (Creme)  என்றும்  வணிகப்பெயர்களைக்  கொண்ட வகைகள் வண்ணம், சுவை, நறுமணம் ஆகியவற்றில் இனிமையானவை

அதிக சாஃப்ரானல்,, வழக்கத்துக்கு மாறாக நெடியுடைய நறுமணம் ,அடர் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பது இத்தாலியின் “அக்குய்லா” குங்குமப்பூ (zafferano dell’Aquila),  மற்றொன்று   காஷ்மீரி  “மாங்ரா”  அல்லது “லசா” குங்குமப்பூ (crocus sativus kashmirianaus).   குங்குமப்பூவில்  முதல்தரம்  சாகி,  என்றும் இரண்டாம்தரம்  மோக்ரா என்றும் மூன்றாம்தரப் பூ லாச்சா என்றும் அழைக்கப்படுகின்றது

ஈரான், ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், அஸர்பைஜன், மொரோக்கோ, இத்தாலி (உற்பத்தி அளவின் இறங்கு வரிசையில்) ஆகியவை குங்குமப்பூவை உற்பத்தி செய்யும் முக்கிய நாடுகள்.  ஈரான் உலகின் மொத்த குங்குமப்பூ உற்பத்தியில் 93.7 சதவீதத்திற்குப் பங்களிக்கிறது  நியூசிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலிருந்து இயற்கை உரமிட்டு வளர்க்கப்படும் பல்வேறு சிறப்புப் பயிர்வகைகளும் கிடக்கின்றன. அமெரிக்காவில், மண்வாசனையுடைய பென்சில்வேனிய டச்சுக் குங்குமப்பூ (Pennsylvania Dutch saffron)  சிறிய அளவுகளில் விற்கப்படுகிறது.

நன்கு காயவைக்கப்பட்ட ஒரு கிலோ குங்குமப்பூ சந்தையில் சுமார் மூவாயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது ( சுமார் 2 லட்சம் இந்திய ரூபாய்கள்).  

இந்திய குங்குமப்பூ

குறிப்பிடத்தக்க சுவை, நறுமணம், வண்ணமூட்டும் விளைவு ஆகியவற்றின் அடையாளமான மிக அடர்ந்த மெரூன்-ஊதா வண்ணம்  கொண்ட காஷ்மீர்  குங்குமப்பூ  வகை  உலகின்  அடர்நிற குங்குமப்பூ வகைகளில் ஒன்றாக விளங்குகின்றது . இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கு குங்குமப்பூ சாகுபடிக்குப் புகழ்பெற்றது. ஸ்ரீநகருக்கு 18 கிலோமீட்டர் தொலைவில் 1700 மீட்டர் உயரத்திலுள்ள  குங்குமபூ நகரமென்றூ அழைக்கபடும் பாம்போர் என்ற பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கங்களிலும் வண்டல் மண்மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகிறது.  இந்தியாவில் குங்குமப்பூ பயிரடப்படும் சுமார் 5,707 ஹெக்டேர் நிலபரப்பில்  ஆண்டுக்கு 16 ஆயிரம் கிலோ குங்குமப்பூ கிடைக்கின்றது. இதில்  4,496  ஹெக்டேர்கள்    ஜம்மு  காஷ்மீரில்  மட்டும் இருக்கின்றது.  

உலகெங்கிலும் குங்குமப்பூ சேர்க்கப்பட்ட உணவு வகைகளும் பானங்களும் இனிப்புக்களும் வெகு பிரபலம், காஷ்மீரில் குங்குமப்பூ, பட்டை, ஏலக்காய் கலந்து நறுக்கிய  பாதாமினால் அலங்கரிக்கபட்ட கெவா ( kehwa ) என்னும்  பச்சைத்தேநீர் வெகு பிரசித்தம்

kehwa

சீனாவிலும் இந்தியாவிலும் 2000 வருடங்களுக்கும் மேலாக மருந்தாகவும் வாசனையூட்டும்உணவுக்கலப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது குங்குமப்பூ ஆஸ்த்மா, இருமல், தூக்கமின்மை, இதய நோய் மற்றும் சருமப்பாதுகாப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

1959ல் மரகதம் என்னும் திரைப்படத்தில் அரிதான, விலைமதிப்பற்ற, தங்கத்திற்கு இணையான குங்குமபூவுடன் காதலியை ஒப்பிட்டு ஆர் பாலு வரிகளில் ’’குங்குமபூவே’’ என்னும் பாடலை சந்திரபாபு பாடியிருப்பார். தமிழ் சினிமாவில் அதற்குப் பிறகு குங்குமப்பூ எந்தப்பாடலிலுமே இல்லையென்றே நினைக்கிறேன். இந்திய தேசியக்கொடியின் மூவர்ணங்களிலொன்றூம், புத்த துறவிகளின் உடைகளும் குங்குமபூவின் காவி நிறமே.

  பெரும்பாலான நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் குங்குமப்பூவில் அதிகம் கலப்படமும் உள்ளது. மாதுளம் தோட்டின் உட்புறமிருக்கும் நார்களையும், சிலவகை  புற்களையும்,  பீட்ரூட் துருவல்களையும் சாயமேற்றியும் , marigold  எனப்படும்  துளிர்த்தமல்லியின்  இதழ்களை காயவைத்தும், கலப்படங்களும்,  குங்குமப்பூ போலிகளும் சந்தைப்படுத்தப் படுகின்றது.

குங்குமப்பூவின் கலப்படத்தை எளிதில் கண்டுகொலலாம். அசல் குங்குமப்பூ ஆழ்ந்த சிவப்பு நிறத்துடன்,   வைக்கோல் அல்லது மண் வாசனையும், மென் கசப்புச்சுவையும்   கொண்டிருக்கும்.  விரல்களுகிடையில்  வைத்து  சில  இழைகளை  நசுக்கி  தேய்க்கையில் விரல்களில் பொன் மஞ்சள் நிறம் படிந்தால், அது அசல் குங்குமப்பூ. தூய நீரில் எளிதில் கரைந்து நிறமிழந்து வெளிறிப்போகாமல்,  நீர்  பொன்மஞ்சளாக  மெல்ல மெல்ல நிறம் மாறூகையில் இழைகள் நிறமிழக்காமலிருப்பதும் அசலே. அசல் குங்குமப்பூவின் ஒவ்வொரு இழையின் நீளமும் ஒரே அளவில் இருக்காமல்  ஒரு நுனி சற்றுப் பெரிதாக இருக்கும்

கர்ப்பிணிகள் குங்குமப்பூ உட்கொண்டால் பிறக்கும் குழந்தையின் சரும நிறம் மேம்படும் (அதாவது சிவப்பாகும்) என்பது எந்த அறிவியல் ஆதாரமுமில்லாத,  தொன்று தொட்டு நம் சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் மூட நம்பிக்கை. குழந்தைகளின் சரும நிறம் பெற்றோர்களின் மரபணுக்களால் மட்டுமே தீர்மானிக்கபடுகின்றது.

குங்குமப்பூவில் இருக்கும் வேதிச்சேர்மங்கள் கருப்பையை சுருங்கி விரியச்செய்யும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துவங்கி  வைக்கும் குணம் கொண்டவை (oxytocic).  எனவே  குங்குமப்பூவை தொடர்ந்து அதிகமாக  உட்கொள்கையில் கருக்கலைப்பும் சிறுநீரக செயலின்மையும் ஒருநாளைக்கு 20 கிராமுக்கு  அதிகமாகையில்  உயிரழப்பும்   கூட  ஏற்படும் ஆபத்துள்ளது. குங்குமப்பூவுக்கு ISO தரக் கட்டுப்பட்டு நிரணயமிருப்பதால் அசலை கண்டறிந்து வாங்கவேண்டும்.(  ISO 3632)