பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் போதுமானது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில், அளவுக்கு அதிகமாக, சுமார் 30 முறை வரை மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், அங்கு உள்ள இயற்கைச்சூழல் பாதிப்பு அடைகிறது. காற்றின் வழியாகவும், நிலத்தில் கலப்பதன் மூலமாகவும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால்தான், மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது.
பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தவுடன் வயல்களில் வேலை செய்வது, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகியவையே புற்றுநோய் ஏற்படக் காரணம்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் உள்ள ஆச்சார்யா துளசி மண்டல புற்றுநோய் சிகிச்சை, ஆய்வு மையத்தில் இலவசப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, இந்தியாவிலேயே முதன்முதலில் பசுமைப் புரட்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பஞ்சாபின் மால்வா பகுதியில் இருந்து அதிக கேன்சர் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்கள் வரும் ‘பத்தீண்டா’ (Bhatinda) ரயில், இப்பகுதி மக்களால் ‘புற்றுநோய் ரயில்’ என்றே அழைக்கப்படுகிறது. கேன்சர் நோயாளிகள் முற்றிலும் இலவசமாக இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள். சுமார் 350 கி.மீ. ரயிலில் பயணம் செய்து பிகானீரை வந்து அடைபவர்களில், மால்வா பருத்தி விவசாயிகள் 60 சதவீதம்.
ஐ.நா. அமைப்பு 1983ல் பூச்சிக்கொல்லிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது. உலக அளவில், ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 40,000 பேர் வரை இறக்கின்றனர்.
பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேரும், இறப்பவர்களில் முக்கால்வாசிப் பேரும் வளரும் நாடுகளில் வாழ்பவர்கள். அதேபோல், 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியின்படி, ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]