ஊரடங்கு காலத்தில் அமேசான் பிரைமில் பேகம் ஜான் பார்த்து முடித்தேன். காலையில் துவங்கி இடையிடையேஆன்லைன் வகுப்புக்களும் மதியம் கல்லூரியில் நடந்த ஒரு ஜூம் கூடுகையுமாய் இடைவெளிவிட்டு பார்த்ததில் என்னவோ நிறைவில்லாமல், கதையோட்டத்துடன் உணர்வுபூர்வமாக என்னை பிணைத்துகொள்ளமுடியாமல் இருந்ததால் மீண்டும் மாலை எல்லா முக்கிய வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு முழுதாக இடையூறுகளும் இடைவெளிகளும் இன்றி பார்த்தேன். என் மனதின் ரணங்கள் காய்ந்து  கெட்டிப்பட்டுவிட்டதென்று நினைத்திருந்தேன் ஆனால்  இன்னும் ஈரமிருக்கின்றது போல. கசிந்து அழுதே விட்டேன் இரண்டு முறை என்னையறியாமல்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையை இப்படி பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பார்வையில் திரைப்படமாக எடுக்க முடியுமென்பதே எனக்கு பெரும் வியப்பளித்தது. வித்யாபாலன் நல்ல தேர்வு அவரில்லாவிட்டால் தபு செய்திருப்பார். வித்யாவும் தபுவும் ஒன்றேபோலானவர்கள் என்பதுதான் என் அபிப்பிராயம் எனினும் தபுவுக்கு உடல்மொழியிலும் தோற்றத்திலும் கூடுதல் முதிர்ச்சி. வித்யாவில் எங்கோ ஒரு நெகிழும் தன்மை அல்லது ஒரு மென்மை இருப்பதை நம்மால் உணர முடியும் குறிப்பாக அவரது  அகலக்கண்கள். ஆண் பிள்ளைச்சட்டைபோல உடைகள், கால்களை அகலமாக வைத்து உட்காருவது, ஹூக்கா பிடிப்பது, முதுகுபிடித்து விடச்சொல்லி கட்டிலில் படுத்துக்கொண்டே பேசுவது, அறைவது, என்று எத்தனை ஆண்பிள்ளைத்தனங்களை வித்யா செய்துகொண்டிருந்தாலும் அவரது அகலக்கண்களில் பெண்மை மிளிர்கிறது. அதன் பொருட்டே அவரை இதில் தெரிவு செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

வலிமிகுந்த கதை

எனக்கு எப்போதுமே பாலியல் தொழில்செய்யும் பெண்களின் மீது கரிசனமும் பிரியமும் வாஞ்சையும் உண்டு. பாலுறவை ஒரு தொழிலாக செய்து உடலை, உயிரை, வயிற்றை, குடும்பத்தை  வளர்ப்பெதென்பது எத்தனை அவலம்?    எத்தனை வலி மிகுந்த வாழ்வு அவர்களுடையது இல்லையா?

நாஞ்சில் சார் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கேட்டார்,//உடலுறவு என்னும் சொல்லே அகராதியில் இல்லை மனம் பெரும் பங்காற்ற வேண்டிய ஒரு செயலை எப்படி வெறும் உடல்களின் உறவென்று சொல்ல முடியுமென்று///

இருளிலும் கண்களை மூடி சகித்துக்கொள்ளும் நிகழ்வாக இது நம்மைச்சுற்றியும் எத்தனையோ ஆயிரம் பெண்களுக்கு இருக்கிறதல்லவா?

இதிலும் உடலை ஒருவனுக்கு ஆளக்கொடுத்துவிட்டு விட்டத்தை வெறித்துக்கொண்டோ, விருப்பமானவனை நினைத்துக்கொண்டோ, ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டோ பெண்கள் படுத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.

வீட்டு உதவியாளனும் பாலியல்தொழிலுக்கு ஆள் பிடித்துவருபவனாகவும் வரும் அந்த ஆணின் காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது அவனும் அவளும் ஒரு மொட்டைப்பாறையில் மனதை திறந்து பகிர்ந்துகொள்ளும் காட்சி சிறப்பாக இருந்தது. உண்மையில் முதல் பாதியின் தீவிரம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இந்த திரைப்படம் இன்னும் நல்ல சிறப்பான  இடத்திற்கு வந்திருக்கும். அந்தப்பெண் ///மார்பும் யோனியும் எல்லாம் வெறும் சதைத்திரள், என் ஆத்மாவில் இருக்கிறது உன்மேலான காதலென்று// சொல்லும் காட்சி அத்தனை நெகிழ்சி.

அந்த மாஸ்டரை ஏன் திடீரென வில்லனாக்கினார்களென்று தெரியவில்லை  அவர் குலாபோவை ஏமாற்றும் காட்சி எனக்கு மிகவும் வலித்தது. அவளை அந்த ஜட்காவோ ரிக்‌ஷாவோ, அதில் ஏற்றிவிட்டு ’விபச்சாரிகளுக்கு கணவர்களல்ல, வாடிக்கையாளர்கள் தான் கிடைப்பார்கள்’ என்று சொல்லும் காட்சியில் நான் அழுதேன் . அந்த காட்சியின் தீவிரத்தினால் மட்டுமல்ல, எத்தனை புத்திசாலிகளாகவும் அழகிகளாகவும் முதிர்ச்சியுடனும் இருந்தாலும் அன்பின் பேரால் பெண்கள் யுகம் யுகமாக  எத்தனை எளிதாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறார்களென்னும் உண்மை எனக்கு வலித்ததினாலும் அழுதேன்.

அந்த பெண்ணை அங்கேயே அனுபவிக்கத்துவங்கிய அந்த ஆணுடன் அந்த வண்டி நகருகையில் குலாபோவின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கும்

சமீபத்தில் நான் இப்படி மனம் கலங்கியதில்லை .

அதுபோலவே ஒரு 10 வயதுபெண்ணின் தகப்பனான காவலதிகாரியின் முன்னால் அந்த சிறுமி தன் உடைகளை களைந்துவிட்டு நிற்கும் காட்சியும்

எங்கேயோ பார்த்து போலிருக்கிறாரே என்று நினைத்துக்கொண்டே இருந்து பின்னர் கண்டுபிடித்தேன் இலா அருணை. அந்த லுங்கியும் பனியனுமாக வரும் வில்லன் சஞ்சய் பாண்டே,  சஞ்சய்தத்தை போலவே தெரிந்தார் எனக்கு.

என் அபிமானத்துக்கு உரிய நஸ்ருதீன் ஷாவும் இருக்கிறார்.  படுக்கையில் சாய்ந்தவாறு நஸ்ருதீனும, அவரெதிரே வித்யாவும் இருக்கும் அந்த ஒரு காட்சியில் மங்கலான ஒளியில் மின்னும் ஆபரணங்களும் உடைகளும் உலோகப்பொருட்களுமாக அக்காட்சியின் பழமையை காட்டும்   ஒளியமைப்பு அத்தனை பிரமாதமாக இருந்தது.  வித்யாவுக்கு மட்டுமான கூடுதல் பிரகாசத்தில்   முகம் ஒளிர அவர் நயந்தும் சினந்தும் கெஞ்சியும் கொஞ்சியும் பேசுவது சிறப்பு

இரண்டாம் பாதியை மிக செயற்கையான நாடகத்தன்மையுடன்  எடுக்காமல் முன்பாதியைப்போலவே எடுத்திருக்கலாம் என்று ஆதங்கமாக இருந்தது. நல்லவேளையாக இது முழுவதும் உண்மைக்கதையல்லவென்பதும் ஆறுதலாக இருந்தது.

அவசியம் பார்க்கவேண்டிய படம்