ஊட்டி முகாமிலிருந்து  வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள் இருவரும் வருகையிலேயே முதல் அமர்வு துவங்கியிருந்தது, அப்போதிருந்து மூன்றாம் நாளின் நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவன் உட்பட, பல அகவைகளில் வரும் இருபாலரும் பங்குகொள்ளும் கூடுகையில் ஒரு பிழையுமின்றி திட்டமிட்டபடியே எல்லாம் நடைபெறுவது மிக அரிதான ஒன்று, இம்முறையும் அப்படியே நடந்து முடி ந்தது

சென்ற வருடத்தைக்காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் வந்திருந்தோம், பெண்களும் முன்பைவிட நிறையப்பேர் கலந்துகொண்டிருந்தோம்.

நாஞ்சில் நாடன்,P.A. கிருஷ்ணன், தேவ தேவன், லக்‌ஷ்மி மணிவண்ணன்,உள்ளிட்ட பல எழுத்தாளர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். கதை, கவிதை கம்பராமாயண அரங்குகள் அனைத்துமே வெகு சிறப்பாக இருந்ததென்றாலும் , எனக்கென்னவோ இம்முறை கவிதை விவாத அரங்கு    மிக மிக நன்றாக அமைந்திருந்தது என்று தோன்றியது. அத்தனை விரிவாகவும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்தும் வந்த கருத்துக்களாலும், விளக்கங்களாலும் கவிதை அரங்கு சிறப்பாக இருந்தது

கவிதைகளின் சிறப்பம்சங்களை சில  விவாதங்களில்  பேசினோம் என்றாலும் நாகப்பிரகாஷ் தெரிவு செய்திருந்த கவிதையைக்குறித்தான விவாதத்தில்,  எது நல்ல கவிதை என்பதற்கான விளக்கமும், எப்படி நல்ல கவிதையை இனம் காண்பதென்றும், எதை நாம் கவிதைவாசிக்கையில் கவனிக்கனுமென்றும் தெரிந்துகொண்டேன்.மூன்று நாட்களுக்கு முன்னரான என் கவிதை வாசிப்பிற்கும் இனிமேலான என் கவிதை வாசிப்பிற்கும், தெரிவிற்கும் நிச்சயம் நல்ல மாற்றமிருக்கும்.

திரு.மோகனரங்கன்

மோகனரங்கன் அவர்களின் ’முடிச்சு’ கவிதை விவாதம் ஆச்சர்யமளிக்கும் விதத்தில் விரிந்துகொண்டே போனது. அந்தக்கவிதையை முகாமிற்கு வரும்முன்னர் நான் தனிமையில் வாசிக்கையில் அது எனக்களித்த  உணர்வையும் புரிதலையும் விட விவாதத்தின் போது  ஜெ’வும் பங்கேற்பளர்களும் பிற எழுத்தாளர்களுமாய் அதை பல கோணங்களிலிருந்து அர்த்தப்படுத்துகையில் அது ஒரு மிக அழகிய நான் கொஞ்சமும் நினைத்திராத ஒரு வடிவிற்கு வந்து சேர்ந்தது. கலைடாஸ்கோப்பில் ஒவ்வொரு அசைவிற்கும் கோணங்கள் மாறி உள்ளிருக்கும் கண்ணாடிச்சில்லுகள் வேறு வேறு வண்ணச்சித்திரங்களைக் காண்பிப்பது போல. ஒரு சிறு புள்ளியாக என் மனதில் இருந்த அந்தக்கவிதையின் பொருள் விரிந்து விரிந்து மிக அழகிய சித்திரமானது

கரமசோவ் சகோதரர்களிலிருந்து ஜன்னல் வரை  ஆரோக்யமான விவாதங்களும், விளக்கங்களுமாய் நிறைந்திருந்தது  கதை அரங்கு

நெற்றியில் விபூதிப்பட்டை துலங்க வெண்கலக்குரலுடன் திருக்குறள் உரையாற்றிய திருமூலனாதனின் தமிழறிவை வணங்குகிறேன்.   ’’ தூண்டில் பொன்’’ என்பதற்கு ஜெ சொல்லிய அந்த  பட்டு நூலை தூண்டிலில் கட்டுவது குறித்தான  விளக்கம் இனி எப்போதும் நினைவிலிருக்கும்.

சிங்கை சுபாவும், திருமூலநாதனும்

வேளாவேளைக்கு சூடான சுவையான உணவும் , இடைவேளைகளில் தேனீருமாய் எல்லாம் கச்சிதமாக எப்போதும் போல நடந்தது

அரங்கில் அனைவரும் வசதியாக குடும்ப நிகழ்வொன்றில் அமர்ந்திருப்பது போல சாய்ந்தும் சம்மணமிட்டும் சிலர் நாற்காலிமாய் அமர்ந்துகொண்டிருந்தோம் எனினும் அரங்கு ஒரு கட்டுக்குள் இருப்பதையும் உணர்ந்திருந்தோம்.

இரவு 10 மணிக்கு மேலும் அரங்கில், ஆர்வமுடன் அமைதியாக அனைவரும் கலந்துகொண்டதும். பெருமழை வரப்போகும் அறிகுறிகளையும் யாரும் பொருட்படுத்தவில்லை என்பதையும்,வியப்புடன் நினைவு கூறுகிறேன்

14டிகிரி குளிரிலும் அனைவரும் அரங்கிற்கு சரியான நேரத்திற்கு வர அவசரமாய் குளித்து தயாராகி வந்தோம். எந்த குடும்ப நிகழ்விற்கும் இப்படி ஒரு மகிழ்ச்சியுடன் நாங்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.

நாஞ்சில் நாடன் அவர்களின் யுத்தகாண்ட உரை அத்தனைஅருமை, இன்னும் 1வாரம் தொடர்ந்து கம்பராமாயணமே அவர் தொடர்ந்து உரையாற்றுவாரெனினும் அமர்ந்து ஆர்வமாக கவனித்திருப்போம்

அரங்கிற்கு வெளியேயும் உணவுண்ணும் போதும்  பேகிக்கொண்டிருந்ததில் மற்ற எழுத்தளர்களிடமிருந்தும், ஜெ;விடமிருந்தும், பங்கேற்பாளர்களிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.

முகாமிற்கு வரும்பொழுது நான் சுத்தமாக துடைத்த வெற்றுக்கலமாகவே வந்தேன். ஊர் திரும்புகையில்  நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறேன்

3 நாட்களில் எத்தனை எத்தனை அறிதல்கள்?

இந்திய ஞானமரபில் தத்துவம்,  இந்தியச்சிற்பக்கலை குறித்தும் நிறைய அறிந்துகொண்டேன்

புதிதாக கலந்துகொண்ட இளம் வாசகர்கள் ஆர்வமிகுதியிலும் பதட்டத்திலும் கோர்வையாக பேசமுடியாமல் கேட்கநினைத்ததை துண்டு துண்டாக  கேட்கையில், ஜெ அதை சரியாக தொகுத்து அழகாக முன்வைக்கிறார். உண்மையில் அதை மறுகட்டமைப்புச்செய்து அவர் சொன்ன பிறகே எங்களுக்கு மட்டுமல்லாது கேள்வி கேட்டவருக்கே அவர் கேட்க நினைத்ததென்னவென்று  புரிந்தது

ஒரு நாளுக்கும் மற்றொன்றிற்கும், எந்த மாறறமுமில்லாத பணிச்சுமை எப்போதும் கூடி இருக்கும், மிகுந்த பரபரப்பான நாட்கள் நிறைந்த என் வாழ்வில் இந்த  3 நாட்களும் முழு ஓய்வு மட்டுமல்லாது, பற்பல புரிதல்களும், அறிதல்களும், தோழமையுமாய் நிறைந்திருந்தது

குருநித்யாவின் சமாதி இருக்கும் இடத்தில் எடுத்துக்கொண்ட குழுப்புகைப்படத்தை எனக்கு ஒரு தோழி பகிர்ந்திருந்தார். அதில் வாய்கொள்ளாச்சிரிப்புடன் இருக்கும் என்னை நானே வியப்புடன் பார்த்துக்கொண்டேன். இப்படி நான் மனம் விட்டுச்சிரிக்கும் ஒரு புகைப்படமும் வீட்டில் இல்லை ,ஏனெனில் அத்தகு தருணங்கள் இதுவரை வாய்த்ததில்லை.  இந்த 3 நாட்களைக்குறித்தான இத்தனை நீளக்கடிதத்தில் எழுதிய  அனுபவங்கள் அனைத்தையும் அந்தப்புகைப்படத்திலிருக்கும்  என் சிரிப்பு சொல்லிவிடும்

இப்படி  முற்றிலும் மகிழ்வான நிறைவான நாட்கள் வேறெந்த வகையிலும் எனக்கு கிடைத்திருக்காது என்பதை நிச்சயமாகச்சொல்லமுடியும் என்னால். இம்மூன்று நாட்களின் இனிய நினைவுகள்,  இன்னும் சில வருடங்களுக்கு  உற்சாகமாக நான் வேலை செய்யவும் , தளரும் தருணங்களில் என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்ளவும் உதவி செய்யும்.

திரு பி ஏ கிருஷ்ணன்

(மே 2018)