அற்றைத்திங்களில்  பெளர்ணமி கடந்து இரண்டு நாட்களான அந்நிலவு முதல் அத்தியாயத்திலிருந்து இறுதியான  23 ஆம் அத்தியாயம் வரைக்குமே  தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது., நாம் பயணிக்கையில் நம்மைத்தொடரும் நிலவு அவ்வப்போது கட்டிடங்களிலும் மரங்களிலும் மறைவது போல இங்கும் சில அத்தியாயங்களில் அது மறைந்தாலும் இறுதியில் மீண்டும்  குட்டைகளுக்குள் நீர்ப்பிம்பமாக வெளிவந்து விடுகின்றது.  காடுகள் அடர்ந்திருந்ததிற்கும்,அதனுள் பூர்வகுடியினர் மகிழ்ந்திருந்ததற்கும், நாகரீகம் என்னும் பெயரில் அத்தனைக்கும் ஆசைபட்டவர்களால் மெள்ள மெள்ள அவையெல்லாம் அழிந்துகொண்டிருப்பதற்கும், அனைத்திற்கும்  யுகங்களைக்கடந்த  மவுனசாட்சியாய் அந்நிலவு இருக்கிறது .  அட்டைப்படத்திலுமிருக்கிறது ஓர் பாலெனப்பொழியும் நிலவு கனிமங்கள் சுரண்டப்படுவதை மேலிருந்து பார்த்தபடி.  நினைத்திருக்குமாயிருக்கும் நல்ல வேளையாய்  தன்மேல் கால்பதித்த மனிதன் இன்னும் கரைத்தழிக்க வரவில்லையென்று     

நல்ல கதை , கதையென்று தட்டச்ச தயக்கமாயிருக்கிறது ஏனெனில் இதில் புனைவெதுவுமே இல்லை பெயர்களும் சில இடங்களும் வேண்டுமானால் புனையப்பட்டவையாயிருக்கலாம் மற்றவையெல்லாமே கசக்கும் உண்மையல்லவா? குடியிருக்கும் வீட்டின் கூரையை ஓட்டையிடும் நம் முட்டாள்தனத்தைப்பதிவுசெய்திருக்கும் புத்தகம் இது.

அழகாக கட்டமைக்கபட்டிருக்கிறது நாவல், புதிய யுகத்தைச்சேர்ந்த கொதிக்கும் குருதியுள்ள ஒரு இளைஞன் , ஒரு யுவதி, மிக மெல்லிய கோடாக சொல்லப்பட்டிருக்கும் அவர்களுக்கிடையேயான காதல், இணைந்து பணியாற்றும் சூழலில், அசாதாரண நிகழ்வுகளில்  அவர்களின் நெருக்கம் கூடுவது, பூர்வகுடியினரின் இயற்கையோடு இணைந்த வாழ்வும், அவ்வாழ்விற்கு  மெல்ல,மெல்ல ஆனால் மிக வலுவாக வந்துகொண்டிருக்கும் ஆபத்தும்,  அதிகாரதுஷ்பிரயோகமும், பிரபலங்களின் ஆதிக்கமும் வெளிநாட்டுச்சக்திகளின் பேராசையும், காடுகளும், பூர்வகுடியினரின் வாழ்வும் அழிவதற்கு காரணமாவதும், மனச்சாட்சியுள்ள சிலரின் கையாலாகாத எதிர்ப்புமாக கதை சொல்லப்படுகிறது.

 விளிம்பு நிலை மக்களின் தேவைகளை ஆதிக்கச்சக்தியினர்  வேலைவாய்ப்பாகவும் வெள்ளித்தட்டாகவும்  நிறைவேற்றி பதிலுக்கு வாழ்வாதாரங்களை விலைபேசுவதையும் புரியவைக்கும் கதையோட்டம். நேர்க்கோட்டில் கதையைச்சொல்லிச்செல்லாமல், குடும்பத்தை, அங்கிருப்பவர்களின் உணர்வுகளை ஆசாபாசங்களை, அக்கறையை,   அன்னியசக்திகளின் திட்டங்களை, மின்னஞ்சலும் கடிதங்களும் இன்றைய செய்திகளுமாய் இடையிடையே காட்டுவது , இப்படி  சொல்லவந்ததை தெளிவாக முன்கூட்டியே கட்டமைத்து பின்னர் அதற்கேற்ப  கதையைக்கொண்டுசென்றிருப்பது நல்ல உத்தி

பரணியின் அம்மா ஒரு typical  அம்மா மற்றும் மாமியார். அவரது பாத்திரம் மிக உயிர்ப்புடன் சித்தரிக்கபப்ட்டிருக்கிறது. கணவன் என்ற ஒற்றைப்பிம்மத்திற்குள் வாழ்வை அடக்கவேண்டியிருப்பது, அம்புலி என்னும் விளி தேய்ந்து தற்போது  பேச்சுக்கள் மொட்டையாக எழும்பி அடங்குவது, மிக, மரநிழலில் வாகனத்தை நிறுத்துவது, இருவரின் சம்பாஷணை போய்க்கொண்டே இருக்கையில் எழுத்தின் வடிவத்தை கொஞ்சம் போல மாற்றிக்கொடுத்ததிலேயே அது தொழிலாளர்களின் போராட்டமுழக்கமென்றும், தொழிலாளர்கள் சார்பாக பேசும் ஒருவரின் மனக்குமுறலென்றும் வாசிப்பவர்களுக்கு புரியும்படி எழுதி இருப்பது, அழகாக அத்தியாயங்களை முடிப்பது இப்படி பல நுண்ணிய,  அழகியவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்

மரங்களைக்கட்டித்தழுவிக்கொண்டு அவற்றை காப்பாற்றிய சிப்கோ இயக்கத்தையும், மணலில் புதையும் போராட்டத்தையும் கூட தொட்டுச்சென்றிருக்கிறது நாவல். BUFFER ZONE,  MONOCULTURE, காப்புக்காடுகள், புலிகளின் அழிவு, யானைகளின் வழித்தடம் இப்படி என் துறை தொடர்பான பலவறையும் வாசித்ததில் நான் அற்றைத்திங்களுக்கு இன்னும் நெருக்கமானேன். (நானும் பரணி நட்சத்திரமென்பதாலும் சிறுமியாயிருக்கையில் வந்த பிரைமரிகாம்ப்ளெக்ஸுமாய், என்னையும் கதையின் நாயகியாய் பாவித்துக்கொண்டதில்  இன்னும் கூடுதல் அணுக்கமும்  கிடைத்தது.) ):

தேனடைகளை கொஞ்சம் மிச்சம் வைக்கும் பூர்வகுடியினரின்  sustainbale harvesting  முறைகளை நானும் அவர்களுடன் இருக்கையில் கவனித்திருக்கிறேன். கிழங்குகளை அகழ்ந்தெடுக்கையில் 3ல் ஒரு பங்கு மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். கிழங்குகளிலிருந்தே இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களை அழிவிலிருந்து காப்பாற்ற. டாப்ஸ்லிப்பின் 35 tribal settiment  களில்  பலவற்றில் நான் பல காலம் செலவழித்திருக்கிறேன்.

பெண்ணியம் தொடர்பான சில செய்திகளும் இதில் சொல்லி இருப்பது போலவே நடைமுறையில் இருப்பவைதான்.  மான்களின் கர்ப்ப காலத்தில் அவற்றை வேட்டையாட மறுக்கும் அவர்களின் இயற்கை சார்ந்த அறத்திற்கும் மதக்கலவரங்களின் போது மாற்று இனத்தைச்சேர்ந்த கர்ப்பிணியின் கருக்குழந்தையை கைவிட்டு எடுத்து வெளியே வீசிய  மனிதர்களின் வெறித்தனத்திற்கும் என்ன பிழையீடிருக்கிறது நம்மிடம்? காட்டுமிராண்டி என்னும்  சொல்லை வசையாக பயன்படுத்த தகுதியற்றவர்கள் நாம்

கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கில் ஒரு பயிற்சியின் பொருட்டு அடர்ந்த வனப்பகுதியிலிருந்த நாட்களில், அப்போது  காடு முழுவதும் பூத்திருந்த மூங்கில் பூக்களை, அது ஒரு அபூர்வ நிகழ்வென்பதால் என் மாணவர்களுக்கு காட்ட கொஞ்சம் எடுத்துச்செல்ல அனுமதி கேட்ட போது அங்கிருந்த பூர்வகுடியினைச்சேர்ந்த ஒரு இளைஞன் திட்டவட்டமாக மறுத்ததும், கீழே உதிர்ந்துகிடந்த சில மலர்க்கொத்துக்களை பெருமுயற்சியின் பேரில்  அங்கிருந்த என் ஆசிரியர் வாங்கித்தந்ததும் நினைவிற்கு வந்தது. அத்தனைக்கு அவர்கள் காடுகளை சொந்தமென்று நினைத்து வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இளைஞனின்  சின்னஞ்சிறிய 30/40 வீடுகளே இருக்கும் ஊரின் பெயர் கருவறை. எத்தனை பொருத்தமிது இல்லையா?

 இயற்கை அன்னையின் கருவறையிலேயே இன்னும் இருக்கும் படி அருளப்பட்டவர்களை விரட்டிவிட்டு கனிம வளக்கொள்ளையிலிறங்கியிருக்கும் பேராசைக்காரர்களின் கதையென்பதால் உணர்வுபூர்வமாகவே 2 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன் இதை.

ஒரு பகுதியில் குறிப்பிடிருந்ததைபோலவே பூர்வகுடியினர் என்றால் இலையாடைகளுடனிருப்பார்கள் என்று முதன் முதலாக என் ஆய்வினைத்துவங்கிய போது நினைத்துக்கொண்டு சோலையாறு வனப்பகுதிக்கு சில ஜெர்மானிய நண்பர்களுடன் காட்டில் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி புடவை கிழிந்து சோர்ந்து நாங்கள் அவர்களின் குடியிருப்பிற்குள் செல்கையில் அன்றைய தினம் அவர்களின் பண்டிகை என்பதால் மிக நேர்த்தியாக உடுத்திக்கொண்டு handbag  போட்டுக்கொண்டு நகச்சாயம் கூட பூசிக்கொண்டிருந்த அவர்கள் எங்களை பூர்வகுடியினரைப்போல வேடிக்கை பார்த்த கதையையும் நினைத்துக்கொண்டேன்Ecotourism போல இப்போது துவங்கப்பட்டு நல்ல லாபம் தந்துகொண்டிருக்கும் religious tourism  பற்றியும் ஆசிரியர் கலைச்செல்வி ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

வனத்துறை அதிகாரிகளே வனத்தை அழிக்க உடந்தையாயிருப்பதையும் பூர்வகுடியினரின் மொழியிலேயே சொல்லி இருப்பது சிறப்பு.வனத்துறையில் அதிகாரியாயிருக்கும் என் மாணவன் சொல்லுவான் காட்டுத்தீ பெரும்பாலும் அதிகாரிகள் ஏற்படுத்துவது என்று, மிக முக்கியமான விலைஉயர்ந்த மரங்களை வெட்டி கடத்திவிட்டு அந்த இடத்திற்கு தீ வைத்துவிட்டு சாம்பலாகிபோனதென்று கணக்கு காட்டப்படுவதை  எந்தக்கோடையிலும் சாதாரணமாகக்காணலாம்

            இறுதியில் பெற்றோரின் பாசத்தை இயற்கையுடன் ஒப்பிட்டது அழகு. பிணந்தின்னிக்கழுகுகளும் உடும்பைப்பிடித்த நரியும் படிமங்களாக எனக்குப்பட்டது. குணாவிடம் கதறி அழுத பரணியைபோல வாசித்து முடித்தபின்னர் மனம் கையலாகாத்தனத்தில் கதறியது. வேறேதும் செய்ய இயலாததால்.

சமூக அக்கறையுடன் சொல்லபட்டிருக்கும் ஒரு மிக அழகிய கதை அற்றைத்திங்கள் முழுக்கதைக்கும் சாரமாய் இருக்கிறது ‘’பெருங்காட்டின் ஒற்றைத்துளி’’ எனும் பசுமூங்கிலில்  முடையப்பட்ட முறத்தினை சொல்கையில். .

ஒரு சில தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன, மாக்கல்லுபந்தம் உக்கடத்தீ இவையெல்லாம் என்னவென்று எனக்குப்புரியவில்லை,  அப்படி பலருக்கும் புரியாமல் போயிருக்கும் வாய்ப்பிருப்பதால், அவற்றிற்கெல்லாம்  கதையிலேயே விளக்கம் சொல்லி இருந்திருக்கலாம். மரவள்ளிகிழங்கென்றே இதுவரை வாசித்திருக்கிறேன் ’’மரவல்லி’’ யென்றல்ல, ஒருவேளை அப்படியும் ஒரு வழங்கல் இருக்குமோ என்னமோ, பின்னர் ஒரு இடத்தில் புலி வேட்டைக்கு வரும் ஆங்கிலேயெ அதிகாரிகளைக்குறித்தான ஒரு பத்தியில் துரைசாணி என்று ஒரு ஆண் அதிகாரியை குறிப்பிடபட்டிருக்கிறது  பொதுவில் துரையின் மனைவியே துரைசாணி